1.4.08

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 3

இன்று பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், அசையாச் சொத்துகள் ஆகியவற்றில் மக்கள் முதலிடும் வழிகளை ஆட்சியாளர்கள் சராசரிப் பொதுமக்களுக்கு அடைத்து நுகர்வுப் பண்பாட்டை ஊக்கி நாட்டின் உள்நாட்டுப் பொருளியல் வளர்ச்சியை முடக்கி அயலவருக்கும் ஆட்சியாளருக்கும் அவர்களின் உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் வேட்டைக் காடாக நாட்டை ஆக்கி வைத்திருக்கும் அலங்கோலத்தைப் பார்க்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நம் நாட்டுப் பொருளியல் மீள என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பம் போல் வட்டி வீதங்களை நிறுவுவதையும் பணமதிப்பைக் குறைப்பதையும் கைவிட வேண்டும். நில உச்சவரம்பு, நகர்ப்புறச் சொத்து வரம்பு ஆகியவற்றையும் கைவிட வேண்டும். வட்டி வீதங்களை கடன்கொடுப்பவர், கடன் வாங்குபவர் ஆகியோரின் சொந்தப் பொறுப்புக்கு விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் கடன் கொடுப்போரின் நலன் காக்கப்பட வேண்டும். அதாவது ஒருவர் கடன் வாங்குவது என்று முடிவு செய்தால் அதன் தேவை, அதைத் திருப்பிச் செலுத்தும் தன்னுடைய ஆற்றல் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துத்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும்.

ஆனால் இப்போதுள்ள சட்டப்படி ஒருவருடைய வருமானத்தில் இத்தனை நூற்றுமேனிக்கு மேல் கடனுக்காக கடன் பெற்றவரைத் திரும்பச் செலுத்தப் பொறுப்பாக்க முடியாது என்று மாதத் தவணையில் திரும்பச் செலுத்துவதாகத் திருப்பிவிட்டு விடுகிறது நயமன்றம். எனக்குத் தெரிந்த ஓர் அரசு ஊழியர் பல்வேறு நுகர்வுப் பொருட்களைத் தன் சம்பளத்துக்கு ஒப்பிட மிகுந்த அளவில் வாங்கிக் குவித்தார். அப்புறம் சொன்னார், இவர்கள் வழக்கு மன்றம் சென்றால் என் சம்பளத்தில் 25% க்கு மேல் அதில் பிடித்தம் செய்ய முடியாது என்று. இப்படிப்பட்ட தராதரமற்ற சட்டங்களை ஒழிக்க வேண்டும். தான் செலுத்துவதாக ஒப்புக்கொண்டு பெற்றுக்கொண்ட கடனை அதே கட்டுறவுகளின்படி திரும்பச் செலுத்தாதவர்களின் அசையும் அசையாச் சொத்துகளை அக்கடன் தொகைக்கு ஈடாகப் பறிமுதல் செய்து அத்துடன் ஒப்பந்தத்தை மீறியதற்காகத் தண்டனையும் வழங்க வேண்டியது இன்றைய உடனடித் தேவை.

அரசுடைமை வங்கிகளின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்பட வேண்டும். அவற்றின் கடன் கொள்கைகளை அவற்றின் செயற்குழுக்களே முடிவு செய்ய வேண்டும். பொருளியலைக் கையாள்வதில் ஆட்சியாளர்கள் தலையீடு கூடாது. ஏமாற்றுகள் செய்வோரைத் தண்டிப்பதும் ஏமாற்றப்பட்டவர்களின் இழப்பை அதற்குக் காரணமானவர்களிடமிருந்து மீட்டுத் தருவதும் மட்டும் ஆட்சியாளரின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

வருமான வரி முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வருமான வரிக்கு அஞ்சிப் பதுங்கிக் கிடக்கும் நேர்மையான மக்களின் நேர்மையான செல்வத் திரட்சி மூலதனமாகப் புழக்கத்துக்கு வரும். இன்று வருமான வரி குறிப்பிட்ட முதலாளிகளுக்குப் போட்டியாக வளர்ந்து வருபவர்களை முடக்கிப் போடவும் அரசியல் எதிரிகளை மிரட்டவும் கட்சிக்கு ஆதரவாக ஆள்பிடிக்கவும் மட்டுமல்ல, உள்நாட்டு மூலதனம் வெளிவர அஞ்சிப் பதுங்கிக் கொண்டு, உள்நாட்டில் மூலதனம் இல்லை என்று சொல்லி வெளி மூலதனத்துக்கு இங்கு ஓர் வெற்றிடத்தை உருவாக்கவும் அரசியல்வாணர்களின் கொள்ளையடித்த பணத்தை வெள்ளைப் பணம் ஆக்கவும் நேர்மையாக ஈட்டிய குடிமக்களின் பணத்தைக் கருப்புப் பணமாக்கவும் பயன்படுகிறது. இதற்கு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உரூ.53 கோடியை வருமானத்துக்கு மிகுதியாக ஈட்டியிருந்தார் என்றது வருமான வரித்துறை. அதில் 17 கோடியை வரியாகப் பிடித்து விட்டு 36 கோடியை அவர் வைத்துக் கொள்ளவிட்டது அரசு. அப்போது ஆட்சியிலிருந்த கட்சியுடன் அவர் மாநிலக் கட்சியைக் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக இந்தப் பரிசு. வரியாகப் பிடித்த உரூ 17கோடி அன்று நடைமுறையிலிருந்த வருமானவரி விதிதத்தைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி வரவு – செலவுத் திட்டத்தில் காட்டப்படும் மொத்த வருவாயில் வெறும் 5% ஆக இருந்து இப்பொதுதான் 13% ஆகக் காட்டப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதி வெறும் கணக்குப் பணம். அதாவது, பெரும் பண முதலைகளுக்கு ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொடுக்கப்படும் ″மானியங்″களில் அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரி கழிக்கப்பட்டு அது வெறும் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். உண்மையான வருமான வரி செலுத்துவோர் மாதச் சம்பளம் வாங்குபவர்கள்தாம். அவர்களிடமிருந்து பறித்த பணத்தை வைத்துக்கொண்டுதான் நாடு முழுக்க கலக்கிக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. வருமான வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான இனங்களை நுணுகிப் பார்த்தால் ஒரு தேர்வு பணத்தை ஏதோ ஒரு வடிவில் உயிர் காப்பீட்டுக் கழகம் போன்ற அரசு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் திரும்ப வாங்கும் போது அவர்கள் தரும் வட்டிக்கும் சேர்த்து வரி செலுத்துவதிலிருந்து தப்ப முடியாது.

இதன் நிகரப் பயன் என்னவென்றால் மக்கள் தங்களிடம் சேரும் பணத்தின் ஒரு பகுதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கிறது என்ற பொய்யான நம்பிக்கையில் அதனை ஆட்சியாளர்களின் கையில் ஒரு நீண்ட காலத்துக்கு ஒப்படைத்து விடுகிறார்கள். ஆனால் அவர்களது அந்தப் பணத்துக்கான வருமான வரியிலிருந்து அவர்கள் தப்பவில்லை. தப்பவும் முடியாது. உரிய வரியை முதலிலேயே செலுத்தியிருந்தார்களானால் மீதியுள்ள பணத்தை நல்ல முறையில் முதலீடாவது செய்திருக்கலாம். அப்போது ஆட்சியாளர்கள் தாம் முதலிடுவதற்குள்ள எந்த வழியையும் திறந்து வைக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டிருப்பார்கள். அப்படி அவர்களை உணராமல் செய்வதும் ஆட்சியாளர்களின் நோக்கங்களில் ஒன்று. அத்துடன் தவறாமல் நம் நாட்டில் பண மதிப்பு இறங்கும் சூழலில் அரசிடம் ஒப்படைக்கும் போது இருந்ததை விடக் குறைந்த மதிப்புள்ள பணமே மக்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது.
இங்கு கையாளப்படும் உத்திக்கு பண மாயை(Money illusion) என்று பெயர். ஆட்சியாளர்கள் தங்கள் பொருளியல் நடவடிக்கைகளில் பெருமளவில் இதனைக் கையாள்கிறார்கள்.

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இன்னொரு தேர்வு வருமான வரித்துறை விலக்கு அளித்திருக்கும் அறக்கட்டளைகள், கோயில்கள் சார்ந்த பணிகள் போன்றவற்றுக்கு நன்கொடை அளித்தல். இந்தப் பணத்தால் விளைப்பு அல்லது பணி சார்ந்த பயன் எதுவும் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்.

வருமான வரியை ஒழிப்பதற்கான இன்னும் பல காரணங்களைச் சொல்ல முடியும். நாம் எடுத்துள்ள களத்திலிருந்து நெடுந்தொலைவு சென்றுவிடாமல் தவிர்ப்பதற்காக இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை இவை மட்டும் அல்ல.

வேளாண் விளைபொருள் விலை ஆணையம் ஒழிக்கப்பட வேண்டும். முடையிருப்பு என்ற பெயரில் ஏறக்குறைய 2 கோடிக்கும் மேல் டன்கள் உணவுப் பொருளை மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வாங்கி அரசே பதுக்கி வைக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும். உள்நாட்டுக்குள் உணவு தானிய நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். உணவு தானிய வாணிகத்தில் உரிம முறை கைவிடப்பட வேண்டும். விரும்பும் குடிமக்கள் யாரும் உணவு தானிய வாணிகத்தில் ஈடுபட உரிமை வேண்டும். நாட்டில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் குடிமைப் பொருள் வழங்கு துறை மூலம் வேளாண் பொருட்கள் குறைந்த விலையில் வழங்குவதை, அதாவது ரேசனை நிறுத்த வேண்டும். இவ்வாறு வேளாண்மையை ஆதாயமான தொழிலாக்கினால் அத்துறையில் மக்கள் முதலிட ஊக்கம் பிறக்கும்.

வீடமைப்புத் தொடர்பான அரசுசார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். நகர்ப்புறச் சொத்து வரம்புச் சட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். வீட்டு உடைமையாளருக்குச் சொத்துப் பாதுகாப்பும் அதே வேளையில் அவர்களின் கொடுங்கோன்மையிலிருந்து குடியிருப்போருக்குப் பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வீட்டு மனைகளாகும் விளை நிலங்களின் பரப்பும் நிலத்தடி நீர் வீணாவதும் குறையும்.

மொத்தத்தில் ஆட்சியாளர்களால் கையும் காலும் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்படும் வேளாண்மையும் தொழிலும் அவர்களது கொடும்பிடியிலிருந்து மீட்கப்பட வேண்டும். உள்நாட்டு மூலதனத் சுழற்சியால் விளைப்பும் வேலைவாய்ப்பும் அனைத்துத் துறைகளிலும் பெருகும். மக்களின் வாங்கும் ஆற்றலும் வாழ்க்கைத் தரமும் உயரும்.

எந்தத் துறையையும் முன்னுரிமைத் துறை என்று வரையறுத்து அரசு சலுகைகள் அளிக்கும் முறை முடிவுக்கு வர வேண்டும். குறிப்பாக சுற்றுலா, திரைப்படம் முதலிய துறைகளுக்கு சலுகைகள் வழங்கப்படக் கூடாது.

மக்களின் வருவாயைப் பாழாக்கும் கள்ளையும் சாராயத்தையும் பரிசுச் சீட்டையும் முற்றாக ஒழிக்க வேண்டும். வாணிகத்தில் இலவசங்கள், பரிசுகள், திடீர் விலைச் சலுகை முறைகள் ஒழிக்கப்பட வேண்டும். உண்மையான விலையையும் தரத்தையும் மட்டும் வைத்து மக்கள் முடிவு செய்ய வேண்டும். நுகர்வோர் அமைப்பு வலுப்பெற வேண்டும்.

மக்கள் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தித் தம் பொருளியல் நடவடிக்கைகளை முறைப்படுத்தப் பயில வேண்டும்.
வெளிநாட்டு மூலதனம் முற்றாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது போல் வெளிநாட்டுத் தொழில்நுட்பமும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்துக்கு முழு ஊக்கம் அளிக்க வேண்டும். செய்பொருள் முறையில் (Product Patent) காப்புரிமை வழங்குவதற்கு மாவட்ட அளவிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும். கோ.து.(ஜி.டி.)நாயுடுவுக்கும் எரிநீர் இராமருக்கும் இன்னும் வெளியில் அறியப்படாமலே அழிக்கப்பட்ட பல்லாயிரம் பேருக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகள் இனி யாருக்கும் இழைக்கப்படக் கூடாது.

பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தலையிடவோ அரசு என்பது ஒரு கருவியல்ல என்பது இந்தியாவின் இன்றைய நிலைமை மூலம் மீண்டுமொருமுறை வரலாற்றில் உறுதியாகிவிட்டது. மக்களின் வறுமைக்கு அரசே காரணமாக இருந்துகொண்டு அம்மக்களுக்கு வாழ்வழிக்கிறோம் என்ற பெயரில் பணத்தை வெளியிட்டு அதனை ஆட்சியாளர்களும் அவர்களது கூட்டாளிகளும் கொள்ளையடித்து விட்டு அதற்காக உலகெலாம் கடன் வாங்கி அதிலும் தரகு பெற்று அக்கடனை மக்கள் மீது சுமத்துகின்ற இந்தக் கயமைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஆனால் சிக்கல் இத்துடன் முடிந்துவிடவில்லை. வீழ்ந்துவிட்ட பங்குச் சந்தையை எப்படி உயிர்ப்பிப்பது என்ற கேள்வி எஞ்சியுள்ளது.

வருமான வரி, தொழில்களுக்கு உரிமம், மூலப்பொருள் ஒதுக்கீடு, முன்னுரிமைத் துறைகள் என்ற பெயரில் தொழில்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் குறிக்கோளும் வசதியும், பட்டறிவும் உள்ளவர்களின் முனைவுகளை நசுக்கிவிட்டு ஒரு வேலைவாய்ப்பையே குறியாகக் கொண்ட படித்த ஏழை அல்லது நடுத்தர இளைஞர்களுக்கு தன்(சுய) வேலைவாய்ப்பு வழங்குகிறேன் என்று கூறி பயிற்சி இது அது என்று இழுத்தடித்துக் கடன் கேட்க வைத்து கடன் மனுவை உருவாக்குவதற்கு அலைச்சலையும் செலவையும் ஏற்படுத்திப் பின் பாதித் தொகை முதலில் வை, மீதித் தொகைக்குக் சொத்து பிணை வை என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தக் கடன் வசதிகளை ஆட்சியாளர்களின் கூட்டாளிகள் பயன்படுத்தி அரசுடமை வங்கிகளில் பல இலக்கம் கோடி உரூபாக்களைக் கொள்ளையடித்துள்ளார்கள். ஆட்சியாளர்களின் சொல்லை நம்பிக் கடன் கொடுத்த சில வங்கி உயரதிகாரிகள் சிறைக் கூண்டையும் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் வங்கிக் கடன்கள் வழங்குவதென்பது ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாகத் தோன்றிய இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (ஐ.டி.பி.ஐ) போன்ற அரசுசார் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வாங்கினால் அவை பங்குகளில் முதலீடு செய்து வாடிக்கையாளருக்கு ஆதாயம் பெற்றுத் தரும் என்று ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால் இந்நிறுவனங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களின் தரமற்ற நிறுவனங்களில் முதலிட்டு அவை வைப்பாகப் பெற்ற தொகையை விட வாராக் கடன் அது தொடக்க முதல் ஆண்டிலேயே மிஞ்சிவிட்டது என்ற நிலைதான் மிச்சம்.

நாம் முன்பு குறிப்பிட்டது போல் பண அமைச்சகமே புரிந்து கொள்ள முடியாத பங்குச் சந்தைக் குறியீட்டு எண் உயர்வைக் கண்ட போதே, 25 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய ஏமாற்று மீண்டும் ஒருமுறை அரங்கேறப் போகிறது என்ற கலக்கம் சிலருக்கு ஏற்பட்டிருக்கும். அவ்வாறே நிகழ்ந்தும் விட்டது. எனவே பொதுமக்களின் பங்குச் சந்தை ஈடுபாட்டுக்கு மீண்டும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பலாம். அவர்களை முதலீட்டாளர்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து வெறும் நுகர்வோராக்க நம் ஆட்சியாளர்களும் அவர்களது உள்நாட்டு வெளிநாட்டுக் கூட்டாளிகளும் வைத்திருக்கும் திட்டம் வெற்றி பெறும். பங்குச் சந்தை நடவடிக்கைகள் இவர்களுடைய விளையாட்டுக் களமாகவே தொடரும்.

நம் நாட்டை அயல்நாட்டு நிறுவனங்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றும் நம் ஆட்சியாளர்களின் புதிய பொருளியல் கொள்கைகளையும் அவற்றை முறியடிக்க என்னென்ன நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதையும் இதுவரை பார்த்தோம். இதன் தொடர்ச்சியாகப் பங்குச் சந்தையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மூலதனம் தேவைப்படும் ஒரு தொழிலில் இறங்குவோர் பாதிக்கும் குறையாத அளவுக்கு மூலதனத்தைப் பங்குகளின் மூலமே திரட்ட வேண்டும்.

வங்கிகள் மூலதனக் கடன் வழங்கக் கூடாது. அவை சேமிப்பு, நகைக் கடன், ஊர்திக் கடன், வீட்டுக் கடன், பட்டியல்களைச் செல்லாக்குதல், வாடிக்கையாளர்களிடமிருந்து உள்ளாட்சிக் கட்டணங்கள், தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றை வாங்கிச் செலுத்துதல், வரைவோலை, உண்டியல்கள் போன்ற பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டால் போதும்.

நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் தனி மனிதர்களின் சொத்துகளின் இழப்புக்கு வாய்ப்பு இல்லாத, அதே வேளையில் பங்கு மூலதனத்தையும் பெறும் வகையில் ஒரு புதிய தொழில் முதலீட்டு உத்தியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். வங்கிகள் அல்லது பண நிறுவனங்கள் மக்களிடம் இருந்து வைப்புகளைப் பெறுவதற்கும் அதே வகை உத்தியை நாம் கையாளலாம். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பங்குகள் மூலமோ கடன் வடிவிலோ ஒருவர் முதலீடு செய்யும் போது அவர் முதலில் எதிர்பார்ப்பது இட்ட மூலதனம் திரும்பக் கிடைக்குமா என்பது. அடுத்தது, போட்ட முதலின் மீது எவ்வளவு ஆதாயம் அல்லது வட்டி கிடைக்கும் என்பது. முதலீட்டுக்குப் பாதுகாப்புக் கூடும் தோறும் வட்டி விகிதம் குறையும் என்பது பொதுவான பொருளியல் விதி. ஆனால் இன்றைய நிலையில் முதலீட்டுக்கான பாதுகாப்பே ஆதாயம் அல்லது வட்டியின் கணிப்பை விட முகாமை பெற்றுள்ளது. கடந்த காலத்தில் பங்குச் சந்தையில் நடைபெற்ற ஏமாற்றுகளும் விலைச் சரிவும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியுமே இதற்குரிய காரணங்கள்.

அடுத்து ஒரு தொழிலைத் தொடங்கவோ ஒரு நிதி நிறுவனத்துக்கோ கடன் அல்லது பங்குகளை பொது மக்களிடமிருந்து ஒரு நிறுவனம் பெற முயலும் போது, தான் அவ்வாறு பெற எண்ணியிருக்கும் தொகைக்குக் குறையாத அசையாச் சொத்தை அல்லது தங்கத்தை ஈடாக வைக்க வேண்டும். அந்த ஈட்டுச் சொத்து அல்லது தங்கத்தை ஏம வங்கி போன்ற ஓர் அமைப்பு தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்நிறுவனம் திரட்டும் மூலதனம் அந்த அடமான மதிப்புக்கு மிகாமல் கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நிறுவனம் தன் முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பெற்று விரிவாக்க வேண்டுமென்று விரும்பும் போதும் அத்தொகைக்குக் குறையாத கூடுதல் சொத்தை மேலே கூறிய நடைமுறைப்படி ஈடு கொடுக்க வேண்டும்.

தொழில் நிலைப்பட்டு ஆதாயம் ஈட்டும் நிலை வந்த பின்னர் அந்நிறுவனத்தைச் சார்ந்த சொத்துகளும் பிணைக்குத் தகுதியாக வேண்டும்.

இந்த முறை கடைபிடிக்கப்பட்டால் தகுந்த பொருளியல் அடிப்படையும் நேர்மையும் முயற்சியும் தன்னம்பிக்கையும் உடையோர் மட்டுமே புதிய தொழில்களில் ஈடுபடுபவர். தங்கள் சொந்தச் சொத்துகள் பிணைப்பட்டுள்ளதால் அதைக் காக்க வேண்டுமென்ற கவலையுடன் செயற்படுவர். ஏமாற்றுவோர் களத்தினுள் வருவது நிற்கும்.

தனியார் நிறுவனங்கள் செயற்படும் போது அதன் ஊழியர்கள் அரசு அல்லது அரசுசார் நிறுவனங்களில் போல் நாளை எண்ணிச் சம்பளம் வாங்குவோராகச் செயற்பட முடியாது. அவர்களது முழு ஆற்றலும் நாட்டுக்குப் பயன்படும்.

இந்த முறை மாவட்டங்கள், வட்டங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டும். நாட்டின் தொழில்துறை வேளாண்மை ஆகிய அனைத்தும் பங்கு மூலதனத்தின் கீழ் வரவேண்டும்.

இரண்டாம் நிலைச் சந்தை என்பதை ஒழித்து விடலாம். மாறாக முதலீட்டாளர் தன் பங்குகளை விற்க விரும்பினால் அதை அந்த நிறுவனமே முகமதிப்புக்குக் குறையாத விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கென்று ஒரு தனி நிதியை நிறுவனம் பராமரிக்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பங்குகளை மீண்டும் விற்கும்போது கூடுதல் விலைக்கு விற்றால் அதற்குரிய ஆள்வினைச் செலவுகளைக் கழித்துவிட்டு முதலில் பங்கை விற்ற முதலீட்டாளருக்கு அக்கூடுதல் தொகையைக் கொடுத்து விட வேண்டும். பங்கின் இப்புதிய விலையே அந்நிறுவனத்துக்குரிய அனைத்துப் பங்குகளுக்கும் விலையாகக் கணக்கிடப்பட வேண்டும். வழங்கப்படும் ஈவு விகிதம் இந்தப் புதிய முகமதிப்பின் படியே வழங்கப்பட வேண்டும். அதாவது பங்குகளின் முக மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைவெளி எதுவும் இருக்கக் கூடாது. இதன் மூலம் நிறுவனச் சொத்தின் மதிப்பு சரியான விகிதத்தில் முதலீட்டாளர்களிடையில் பங்கிடப்படும். பங்குகளை வாங்கி அவ்வகையில் முதலிடப்பட்ட தொகையைப் போல் பல மடங்கு மதிப்புள்ள நிறுவனங்களைப் பிறர் கைப்பற்றுவதும் இயலாமல் போகும்.

நிறுவனங்களின் ஆதாயத்தில் பெரும் பகுதியை ஏமநிதி(ரிசர்வு) என்று ஒதுக்கி தொழில் முனைவோர் ஏப்பம் விடும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏமநிதிக்கு திட்டவட்டமான வரம்பு நிறுவ வேண்டும்.

நிறுவனத்தின் ஆதாயத்தில் ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளாகக் கொடுத்து விட வேண்டும்.

இவ்வாறு தொழில்துறையும் வேளாண்மையும் முற்றிலும் பங்குகளின் அடிப்படையில் மாறும் போது சிறு உடைமைகள், அதனோடிணைந்த பொருளியலடிப்படையில் பயனற்ற சொத்து மாற்றங்கள், பங்குச் சண்டைகள், வழக்குகள், சட்டங்கள் அத்துடன் சீதனமாகத் தங்க நகைகள் போன்ற காலங்கடந்து போன நடைமுறைகள் முடிவுக்கு வரும்.

ஆனால் இப்போது நிகழ்ந்தது போல் முதலீட்டில் மாபெரும் வீழ்ச்சியும் மாபெரும் தீங்கு விளைவிக்கத்தக்கதும் எளிதில் தடுத்து நிறுத்த முடியாததுமான ஊதாரிப் பொருளியலின் தோற்றமும் அதன் விளைவாக வெளி மூலதனப் படையெடுப்பைத் தேவையாக்கும் மூலதன வெற்றிடமும் அயல் மூலதனத்தின் மூலமும் நுகர்பொருள் பண்பாட்டின் மூலமும் நம் நாட்டுச் செல்வங்கள் வெளியேறுவதும் இருக்காது.

இத்தகைய பங்கு மூலதனம் வளர்ச்சியடைந்து அது பெரும்பண்ணை வேளாண்மையிலும் தொழிற்துறையிலும் செயற்பட்டால் நாட்டில் விளைப்பும் வேலைவாய்ப்பும் பெருகி பெரும்பாலான மக்கள் தொழிலாளராகச் செல்வம் சேர்க்க முடியும். அத்தொழிலாளர்களும் பங்கு முதலீட்டில் ஈடுபட்டால் மறைமுகமாக அப்பெரும் தொழிற்சாலைகளுக்கும் பெரும் பண்ணைகளுக்கும் கூட்டு முதலாளிகளாவர். அத்தொழிலகங்கள், பெரும் பண்ணைகளின் ஆள்வினையில் மக்களாட்சி அடிப்படையில் அவர்கள் பங்கு கொள்ள முடியும். உடனடிப் பலன்களான ஊதியம் மற்றும் சலுகைகள், நெடுநாள் பயன் தரும் தொழிலகத்தின் பங்கு மூலதனம் ஆகியவற்றிற்கு இடையில் சீர்தூக்கிப் பார்த்து பகுத்தறிவுக்கு ஒத்த ஒரு செலவுப் பண்பாடு தொழிலாளர்களான குடிமக்களிடம் இதனால் வேர்கொள்ளும். அதோடு தொழிற்சாலையின் நடைமுறைகளில் ஒரு பங்கீட்டாளர் என்ற வகையில் பங்கு கொள்வதால் நாட்டின் உயிர்நாடியான பொருளியல் இயங்குதிசையைத் தடம்பிடித்து அரசியல் விழிப்புணர்வும் ஈடுபாடும் உள்ள ஒரு குடிமகனாக ஒவ்வொரு தொழிலாளரும் விளங்க முடியும்.

ஐரோப்பியர்கள் தோற்றுவித்த வாக்குச் சீட்டு அடிப்படையிலான பாராளுமன்ற ″மக்களாட்சி″ அது கடைப் பிடிக்கும் நாடுகளில் உள்ள வலிமையுள்ளவர்களின் குழுவாட்சியாக(Oligarchy)த் தொடங்கி உலக முழுவதையும் ஆட்டிப் படைக்கும் உலகளாவிய ஒரு குழுவாட்சி என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

மெல்ல மெல்ல ஒவ்வொரு நாட்டிலும் புதிய மன்னராட்சி மரபுகள் உருவாவதற்கான தடயங்கள் வெளிப்படுகின்றன. உலகில் மிக உயர்வான மக்களாட்சி மரபுள்ள நாடு என்று வெளியில் மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிலும் மன்னராட்சியின் உருவாக்கத்துக்கான சுவடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அது போன்றே அவர்கள் உருவாக்கிய பங்குச் சந்தை என்பதும் தனித் தனி நாடுகளிலும் உலகளாவிய நிலையிலும் இந்தப் பாராளுமன்ற ″மக்களாட்சி″க்கு இணையாகவும் இணக்கமாகவும் கூட்டாகவும் செயற்படும் இன்னொரு குழுவினரின் நடவடிக்கையாக வடிவம் பெற்றுள்ளது. அதனால் இழப்பை எய்தியுள்ள உலக நாடுகளின் பல்வேறு தேசிய மக்களிடமிருந்து முற்றிலும் புதிய, உண்மையான மக்களாட்சி நடைமுறையும் அதற்கு இசைய செயற்படும் ஒரு பங்கு முதலீட்டு முறையும் உருவாக வேண்டும் . அதை நாம் உருவாக்குவோம்.

(முற்றும்)

(இக்கட்டுரை தமிழினி மார்ச்சு-2008 இதழில் வெளிவந்துள்ளது.)

0 மறுமொழிகள்: