காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 2
முதலமைச்சராகக் காமராசரின் அருஞ்செயல்களில் சிறப்பாகக் கூறப்படுவது மக்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாம். ஆனால் அரசு வேலைவாய்ப்பை நோக்கிய நம் கல்வி முறையில் பொதுவாக வேலை வாய்ப்புகளும் சிறப்பாக அரசு வேலைவாய்ப்புகளுமின்றி கல்வித் கூடங்களைத் திறப்பதில் பயனில்லை என்பதோடு அது அனைத்து முனைகளிலும் தீங்கையே விளைவிக்கும் என்பது இன்று கண்கூடு. அந்த வகையில் காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கண்ட தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி அதற்கு முன்னரும் பின்னரும் இல்லாதது. வேலைவாய்ப்பு வளர்ச்சியைப் பொறுத்த வரையில் காமராசரின முன்முயற்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்களும் முகாமையான காரணம் என்பது ஒர் உண்மை. அதே வேளையில் பேரவைக் கட்சிக்குப் போட்டியாக விரைந்து வளர்ந்து வந்த தி.மு.க.வின் ''வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது'' முழக்கத்தைக் காட்டித் தமிழகத்துக்கு ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீடுகளில் கணிசமான பங்கைப் பெற்றுத் தந்தது காமராசரின் திறன் என்பதில் ஐயமில்லை. மேற்கு வங்கத்தின் பி.சி.இராய் போன்ற முதலமைச்சர்கள் வெளிப்படையாக நடுவணரசுக் கெதிராகப் போர்க் கொடியை உயர்த்திப் பெற்ற பயன்களை வளியே தெரியாமல் தி.மு.க.வைக் காட்டிக் காமராசரால் பெற முடிந்தது. அதே வேளையில் தமிழகத்தில் தி.மு.க. இருந்தது போல் தத்தம் மாநில மக்களின் நலனுக்காப் போராடுவதாகக் காட்டிக் கொள்ளும் இயக்கங்கள் பிற மாநலங்களில் இல்லாமையால் இங்கு தி.மு.க. மேற்கொண்ட உரிமைப் பங்குப் போராட்டத்தை அங்கு இராய் போன்ற பேரவைக் கட்சித் தலைவர்களே மேற்கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில். உளத்தூய்மையோடு இல்லையாயினும் தி.மு.க.வினர் முன் வைத்த குறிக்கோள்களால் தமிழக மக்கள் அடைந்த பயன்கள் அவர்கள் எதிர்க கட்சியாகவும் காமராசர் முதலமைச்சராகவும் இருந்த காலத்தில் தான்.
காமராசரின் எழுத்தறிவு ஊட்டும் பணி சிறப்புடையதாயினும் அதில் சில அடிப்படை நடைமுறைத் குறைபாடுகள் இருந்தன. அவரும் பெரியாரின் தொண்டரும் பள்ளிக் கல்வி இயக்குநருமான நெ.து. சுந்தரவடிவேலு அவர்களும் இணைந்து நடத்திய எழுத்தறிவு இயக்கத்துக்குப் பள்ளிகள் சீரமைப்பு இயக்கம் என்று பெயர். இத்திட்டத்தின் படி ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் மக்களிடமிருந்து நன்கொடையாகத் தண்டும் தொகைக்குச் சமமாக இணை நல்கைத் தொகையை அரசு வழங்கும். இதற்காகப் பள்ளித் தலைமையாசிரியர் நன்கொடை தண்ட வேண்டும். அப்படி அவரால் தண்ட முடியவில்லையாயின் தண்டியதாகப் பொய்க் கணக்கு எழுதியாவது அரசின் இணை நல்கையைப் பெற வேண்டும். பொய்க் கணக்கு எழுதி வரவு வைத்த இல்லாத தொகைக்குப் பொய்ச் செலவுக் கணக்கும் எழுத வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். இது தணிக்கையின் போதோ வேறு வகையிலோ வெளியாகிவிட்டால் அத்தலைமையாசிரியர் தண்டனையடைவதுடன் மக்கள் முன்பு இழிபெயரும் அடைய வேண்டும். தண்டனைக்கு அஞ்சியோ இழிபெயருக்கு இசைவின்றியோ நேர்மை நாட்டத்தாலோ இந்தப் பொய்க் கணக்கு உத்தியைக் கடைப்பிடிக்கத் தவறும் தலைமையாசிரியர்கள் அரசின் பார்வையில் திறமையற்றவர்களாகவோ முரண்டர்களாகவோ தோன்றுவர். இந்தக் காரணத்தால் கல்வி வளர்ச்சிக்காகக் காமராசர் கையாண்ட பொருளியல் உத்தியையும் அதனால் அவர் அறிவித்த பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தையும் காமராசரையும் குற்றம் கூறும் முதிய தலைமையாசிரியர்கள் இன்றும் வாழ்கின்றனர்.
கல்வி வளர்ச்சிக்குப் பணம் ஒதுக்குவதற்கு மக்களின் நன்கொடை பாதியும் அரசு நல்கை பாதியும் என்று திட்டம் வகுத்துப் பின் பொய் வரவும் அதற்கேற்பப் பொய்ச் செலவும் எழுதுமாறு ஆசிரியர்களை நெருக்கி அவர்களைப் பொய்யர்களாக உருவாக்கிவிட்டு உண்மையான அரசுப் பணத்தால் ஒராண்டில் 300 பள்ளிகள் கட்டுவதை விட இந்தப் பொய்க் கலப்பான திட்டத்தைக் கடைப்பிடிக்காமல் அரசே நேரடியாக ஒராண்டில் 150 அல்லது 200 பள்ளிகள் கட்டியிருந்தால் ஒரிரண்டு ஆண்டுகள் கூடுதல் சென்றிருந்தாலும் வருங்காலத்தின் குமுகத் தூண்களான மாணவர்களை உருவாக்கும் பள்ளியாசிரியர்களின் நேர்மையும் குமுகத்தின் ஒழுக்கச் சிறப்பும் பேணப்பட்டிருக்கும். குறைந்தது இன்று உருவாகியிருக்கும் சீர்கேடுகளின் விரைவாவது மட்டுப்பட்டிருக்கும்.
இன்று அதிகாரிகளையும் அலுவலகர்களையும் தெரிந்தே உண்மைக்குப் புறம்பான புலனங்களை(தகவல்களை)த் தரவைப்பதோடு மக்களுக்கும் அந்த நுணுக்கங்களை அலுவலர்களே சொல்லித் தருவனவாகவே அனைத்து ''மக்கள் நலத்'' திட்டங்களும் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக டிராக்டர் எனப்படும் இழுவுந்துக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தில் ''பயனாளி''யின் தகுதி பற்றிய வரையறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டால் இந்தியாவின் 100 கோடிப் பேரில் ஒருவர் கூடத் தேற மாட்டார். அதே நேரம் இவ்வளவு கடன் வழங்கியே தீர வேண்டும் என்ற குறியளவு கண்டிப்பா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அச்சுறுத்தலும் அலுவலர்களுக்கு உண்டு. எனவே வரையறைகளுக்கேற்ப பொய்ப் புலனங்கள் தரப்படுகின்றன. கடனுக்கு இழுவுந்துகள் வழங்கும் விழாவில் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் ஒர் இழுவுந்தின், அல்லது பணம் கொடுத்து ஏற்கனவே வாங்கப் பட்டு பதிவெண் பொறிக்கப்படாத ஒரு புது உழுவுந்தின் திறவுகோலை அமைச்சர் அல்லது ஆட்சியர் இதழாளர்கள் புகைப்படக் கருவிகளும் தொலைக்காட்சிப் படக் கருவியும் பதிவு செய்ய வழங்குவார். வழங்கப்படும் ''மானியம்'' உண்மையான பயனாளிகளாகிய அதிகாரிகளிடம் சென்று அதில் ஒரு பகுதி பேழைகள் மூலம் இந்திய ஆட்சிமைப்பின் உச்சி வரைக்கும் சென்று சேரும். இந்த ஆதாயம் தவிர ஆட்சியாளர்களுக்கு இன்னொரு பெரும் ஆதாயமும் உண்டு. பொய்ப் புலனங்கள் தந்ததன் மூலம் குற்றவுணர்வுக்கும் மேலிடம் நினைத்தால் என்று வேண்டுமாயினும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற அச்சத்துக்கும் ஆளாகும் அலுவலர்களும் அதிகாரிகளும் மேலிடங்கள் சொல்வதற்கெல்லாம் ஆட்டம் போடும் அடிமைகளாகிவிடுவர். மக்களுக்குக் குடும்ப அட்டை எனும் பங்கீட்டு அட்டை முதல் பள்ளிச் சான்று வரை அறிவிக்கப்பட்டுள்ள ''சலுகை''களுக்காக விதிவிலக்கின்றி அனைத்து மக்களும் பொய் கூற வைக்கப்பட்டுள்ளனர். அதாவது இன்றைய இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் ஒருவாய்ச் சோறுண்ண குறைந்தது மூன்று பொய்களாவது சொல்லியாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு நம் சலுகை, மானிய, ஒதுக்கீட்டு நலத்திட்டங்களால் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள குற்றவுணர்வும் தன்னிரக்கமும் தான் நம் ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனநிலையை அவர்களிடம் உருவாக்கி வைத்துள்ளது. கடுமையான பணியாயினும் இதை உடைத்தாக வேண்டும்.
(தொடரும்)
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக