காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 4
காமராசரின் கல்விப் பணியையும் அதனை நிறைவேற்றியதில் அவர் கடைப்பிடித்த உத்தியையும் பார்த்த நாம் அவரது தொடர்ந்த அரசியல் செயற்பாடுகளைப் பார்ப்போம்.
சென்னை மாகாணம் என்று ஆங்கிலர்களால் பெயர் வைக்கப்பட்டதும் தெலுங்கு, கன்னடம். மற்றும் மலையாளம் பேசும் மக்களைக் கொண்ட கணிசமான பகுதிகளைத் தன்னகத்தே கொண்டதுமான தமிழ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டு பிரிந்து சென்றதும் மலையாள, கன்னடப் பகுதிகள் பிரிக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சியோடு மலையாளப் பகுதிகளைச் சேர்த்துக் கேரளம் என்றும் மைசூர் மாகாணத்தோடு கன்னடப் பகுதிகளைச் சேர்த்து கர்னாடகம் என்றும் புதிய மாநிலங்களாக வடிவெடுத்த பின்னும் தமிழகம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்படுவதிலிருந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நியாயமான வேட்கை தமிழக மக்களுக்கு இருந்தது. அதனை ஒரு வேண்டுகையாக வைத்து காமராசரின் ஊராகிய விருதுநகரையும் அவரது சாதியாகிய நாடார் சாதியையும் சேர்ந்த சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு வேண்டுகை(கோரளிக்கை)ப் பட்டியல் போட்டுக் கொடுத்துப் பின்னணியில் நின்றவர்கள் பொதுமைக் கட்சியினர். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்ததும் முதன்மையானதும் தமிழ்நாடு பெயர் மாற்றமாயினும் பொதுமைக் கட்சியின் பொதுவான அனைத்துத் திட்டங்களின் நிறைவேற்றங்களும் அப்பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இது பொதுவாக எவருக்கும் தெரியாது.
சங்கரலிங்கனாரின் குடும்ப வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு துயர நிகழ்ச்சியின் விளைவாக அவருக்கும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், உறவினர்களுக்கும் பிளவு ஏற்பட்டு நெடுநாள் தனி வாழ்க்கையின் இறுதியில் நம் பண்டை மரபின் படி வடக்கிருத்தல் என்ற உத்தியாக இந்த உண்ணாநோன்புப் போராட்டத்தை அவர் மேற்கொண்டிருப்பார் என்பது மக்கள் செங்கோல் என்ற மாதிகை(மாத இதழ்)யின் சங்கரலிங்கனார் சிறப்பிதழில், குழந்தைப் பருவம் முதல் அவராடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சாலினி இளந்திரையனார் எழுதிய கட்டுரையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தமிழ்நாடு பெயர் வைப்பு வேண்டுகை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் அவர் பெரும்பாலும் எஞ்சிய வேண்டுகைகளுக்காகத் தொடர்ந்து ''வடக்கிருந்து'' உயிர் துறந்திருப்பார் என்று உறுதியாகக் கருத இடமிருக்கிறது. வெறும் பெயர் மாற்றங்களும் சிலை வைப்புகளும் மண்டபங்கள் கட்டுவதும் மொழிக்கு அரசியல் சட்டத்தில் சிறப்பிடம் கொடுப்பதிலும் அதனைச் செவ்வியல் மொழி என்று ஏற்றுக் கொள்வதிலும் மட்டும் ஒரு மக்கள் குழு மேம்பாடடைந்துவிடாது என்பது உண்மை தான். அதே நேரத்தில் பொதுமைக் கட்சியினர் வைத்திருந்த, இன்றும் வைத்திருக்கும் குறிக்கோள்கள் ஒரேயடியாக அல்லது ஒரே படியில் எய்தக் கூடியவையல்ல என்பதையும் அதற்குப் பல படிகளைக் கொண்ட சீரிய திட்டமும் தேவை என்பதையும் கருதியே அவ்வாறு கூறினோம்.
சங்கரலிங்கனாரின் தமிழ்நாடு பெயர் வைப்பு வேண்டுகை நிறைவேற்றப்பட்டு அவர் பிற வேண்டுகைகளை முன் வைத்து உயிர் துறந்திருந்தாலும் இன்று சங்கரலிங்கனாரின் சாவுக்குப் காரணமான கொலைகாரர் என்ற வரலாற்றுக் கறை காமராசருக்கு ஏற்பட்டிருக்காது. அவரது இந்தச் செயலுக்குக் காரணம் ஒரே ஊர், ஒரே சாதியினரிடையில் வழக்கமாக உள்ள நட்புணர்வு, பொறாமை உணர்வுகள் காரணமாயிருக்க முடியாது. இன்னொரு முகாமையான காரணமும் இருக்க வேண்டும். தூய நேரிய அரசியல் வாழ்வு வாழ்ந்தவரான காமராசரிடம் இருந்த மாபெரும் குறை அவரது கட்சி வெறியாகும். பொதுமைக் கட்சியினரின் பிடியில் இருந்த சங்கரலிங்கனாரை ஒருமுறை சந்தித்துப் பேசக் கூட முன்வராத காமராசரின் முரட்டுப் பிடிவாத்துக்கு அவரது இந்தக் கட்சிவெறியே காரணமாகயிருக்கக் கூடும்.
மொழியடிப்படையில் தமிழ்நாடு அமைக்கப்பட்ட போது திருவிதாங்கூரில் இருந்த தமிழ் மக்கள் தாய்த் தமிழகத்தோடு சேர வேட்கை கொண்டு போராடினர். திரவிதாங்கூர்-கொச்சியை ஆண்ட வெறியர்களின் கொடுங்கோன்மைக்கும் கொலைவெறிக்கும் ஈடுகொடுத்து வெற்றிக் கனியைப் பறிக்க இருந்த வேளையில் தேரிகுளம், பீர்மேட்டுப் பகுதியைப் பற்றி ''குளமாவது மேடாவது'' என்ற இழிபெயர் பெற்ற சொற்றொடர், அயல் மாநிலங்களைப் பேரவைக் கட்சி ஆண்டதாலும் தன்னால் மதிக்கப்படும் கட்சித் தலைவர்களை வங்கத்தின் பி.சி.இராய் போன்று எதிர்த்து நிற்கத் துணியாத, தலைமைக்குக் கட்டுப்பட்ட காமராசரின் மனநிலையின் வெளிப்பாடு தான் என்று தோன்றுகிறது. எல்லாம் இந்தியாவினுள் தாமே இருக்கின்றன என்பது வெறும் மூடுதிரை என்றே தோன்றுகிறது. வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. வெற்றி பெற்றதற்குக் காரணம் தன் அரசியல் போட்டியாளரான சத்தியமூர்த்தியின் மாணவரும் அவரைவிட வலிமையாகத் தன் நேரடி அரசியல் எதிரியாக வளர்ந்துவிட்டவருமான காமராசரின் போட்டியாளரும் தனது நம்பிக்கைக்குரிய தொண்டருமான ம.பொ.சி.யை அரசியலில் வளர்த்தெடுப்பதற்கு அப்போது முதலமைச்சாராயிருந்த ஆச்சாரியார் விரும்பியதே காரணமாகலாம் (ம.பொ.சி.யின் தன்வரலாறான எனது போராட்டங்கள் பார்க்க.)
கட்சியின் நலனுக்குக் கொள்கைகளைக் காவுகொடுப்பதோ, கட்சி நலன் என்ற ஒன்றைத் தவிர வேறு கொள்கை - கோட்பாடற்று இருப்பதோ அரசியல் தலைவர்களிடம் இயல்பாகக் காணக்கூடிய குறைபாடு தான். புரட்சிகரத் தலைவர்கள் எனப்படும் உலக வரலாற்றுப் பெருமக்களிடம் கூடக் காணக்கிடப்பது தான். கொள்கைப் போர் என்பதும் தனி மனிதப் போட்டி என்பதும் ஒன்றிலிருந்தொன்று பிரித்துணர முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடப்பதும் வரலாற்று இயல்பு தான். உலகில் அரும்பெரும் செயல்களும் வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்வுகளும் வரலாற்றுப் போக்கையே மாற்றும் புரட்சிகர நிகழ்வுகளும் உயர்ந்த நோக்கங்கள் இன்றி, தன்னலமும் தன்முனைப்பும் அதிகார வெறியும் கொலைவெறியும் மனப்பிறழ்ச்சியும் கொண்ட தலைவர்களால் நிகழ்ந்திருப்பதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும. இவ்வாறு காமராசரின் தவறான நிலைப்பாட்டின் விளைவால் தமிழகத்தின் நிலப்பரப்புகளை நாம் இழந்திருக்கிறோம்் குமரி மாவட்டத்தில் பத்மபாநபுரம் அரண்மனை, குமரி முனையில் இருக்கும் சுற்றுலா வளமனை ஆகியவற்றை இழந்துள்ளோம். கேரளத்தினர் எடுத்துச் செல்ல முயன்ற அரும்பொருட்களைசக் குமரி மாவட்டத் தலைவர்களின் வீரம் மிக்க எதிர்ப்பின்றி காப்பாற்றியிருக்க முடியாது. குமரி மாவட்டததைப் பொறுத்த வரை காமராசரின் அணுகல் பரிவுடன் இருக்கவில்லை என்பது காய்தல் உவத்தலின்றி அணுகுவார்க்குப் புலப்படும் உண்மை.
உலக வரலாற்றில் பொதுவாக, வேறொரு நாட்டு எல்லைக்குள் வரலாற்றுக் காரணங்களால் சிக்கிக் கொண்ட ஒரு மொழி, இனம், சாதி அல்லது சமயம் போன்ற பொருளியல் சாராதவையும் அடையாளங்களாக மட்டும் கொள்ளத் தக்கவையுமான உறவுகளைக் கொண்ட மக்கள் தங்கள் தாய் நிலம் என்று கருதி வேறொரு நிலப்பரப்புடன் இணைய முற்படும் போது அந்தத் தாய்நில மக்கள், அதிலும் அரசியல்வாணர்கள் அதை விரும்புவதில்லை. தங்கள் உறவுடைய மக்கள் தங்களோடு இணைய வருகிறார்கள் என்று மகிழ்வதற்குப் பகரம் தங்கள் வாய்ப்புகளுக்குப் போட்டியாக வருகிறார்கள் என்றே கருதுகின்றனர். விரும்பி இணையும் மக்களுக்குப் பழைய வாழ்க்கையை விட புதிய இணைவு உண்மையிலேயே நன்மையாக அமைந்தாலும் ''தாய்''நிலத்தின் காழ்ப்புணர்வு நெடுநாள் நீடிக்கவே செய்யும். இதற்கு எடுத்துக்காட்டாக பாக்கித்தானைக் கூறலாம். சமயத்தின் அடிப்படையில் நிலத்தொடர்பு, பொருளியல் அடித்தளம் ஆகியவற்றை மீறி, கிழக்கு வங்க மக்கள் பாக்கித்தானில் இணைந்தனர். மேற்குப் பாக்கித்தானியர்களே தலைவர்களாகவும் ஆளும் கணத்தவராகவும் தொடர்ந்த சூழ்நிலையில் வங்க மக்களின் மக்களாடசி உரிமைகள் பறிக்கப்பட்டதால் அவர்கள் தொடங்கிய சட்டத்துக்குட்பட்ட போராட்டம் ஆயுதந் தாங்கிய ஒன்றாக மாற, அன்றைய இந்தியத் துணைக் கண்ட,. உலக அரசியல் சூழலால் இந்திய அரசு இடையில் புகுந்து அதன் பயனாக புதிய வங்கதேசம் உருவாதை நாம் அறிவோம். இன்று எஞ்சியுள்ள பாக்கித்தானிலும் பஞ்சாபி முகம்மதியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சிந்து போன்ற மாகாண மக்கள் போராடுவதையும் இன்று இந்தியாவினுள்ளிருக்கும் பகுதிகளிலிருந்து இந்திய-பாக்கித்தானியப் பிரிவினையின் போது இடம்பெயர்ந்து சென்றோரின் வழி வந்தவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களால் நாள்தோறும் மக்கள் உயிர்ப் பலியாவதையும் இடைவிடாத வன்முறைகள் தொடர்வதையும் பார்க்கிறோம். ஆனால் தாய்த் தமிழகத்தோடு இணைந்ததனால் குமரி மாவட்ட மக்கள் எய்திய நன்மைகள் அளப்பரியவை என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் தொடக்க காலத்தில் குமரி மாவட்ட மக்கள் சென்னை மாகாணத்தவரை விடக் கல்வியறிவில் மேம்பட்டவர்கள்; வருவாய்த்துறை, கல்வித்துறை போன்ற அனைத்து அமைப்புகளும் மேம்பட்டவை. மேலதிகாரி-கீழ்நிலை அதிகாரிகளிடையில் உள்ள உறவு அடிமைத் தன்மையில்லாதது ஆகிய காரணங்களால் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் குமரி மாவட்ட இணைவை விரும்பவில்லை. அப்போது கல்வி அமைச்சராயிருந்த சி.சுப்பிரமணியம் குமரி மாவட்டத்தில் தொடரி இணைப்பு போல் அமைந்திருந்த பள்ளிகளைப் பார்த்து அசூயையடைந்து அவற்றில் பலவற்றை மூடிவிடலாம் என்று முடிவெடுத்ததாகவும் காமராசர் அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்பட்டதுண்டு. மக்களுக்குக் கல்வியளிப்பதில் காமராசருக்கிருந்த ஆர்வத்தின் ஒரு வெளிப்பாடு இது. அத்துடன் தமிழகத்தில் மக்களின் எழுத்தறிவை வளர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளிலும் அவரது மதிய உணவுத் திட்டத்திலும் குமரி மாவட்டத்தில் சி.பி. இராமசாமியார் மேற்கொண்ட கட்டாய இலவயக் கல்வித் திட்டத்தின் வெற்றிப் பட்டறிவுக்கு முகாமையான பங்கு இருக்க வேண்டும். அதனாலும் காமராசருக்குக் குமரி மாவட்டத்தின் மீது பரிவுணர்வு இருந்திருக்கலாம்.
(தொடரும்)
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக