24.7.16

பெருமாள் முருகனின் "மாதொருபாகன்"



பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்"
குமரிமைந்தன்
பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" புதினத்துக்குத் தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நயமன்றத் தீர்ப்பைக் கண்டு கொதிக்கிறார் பனியாக்களின் தமிழ்நாட்டுப் பேச்சாளரும் ஒருங்கிணைப்பாளரும் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) பெருச்சாளியுமான தணிக்கையாளர் எசு.குருமூர்த்தி.
இந்தப் புதினம் பற்றிய சிக்கலைக் கிளப்பியவர்கள் தமிழகத்ததுக்கு வெளியே உள்ளவர்களே. புதினம் வெளிவந்து 4 ஆண்டுகள் வரை எந்தச் சலசலப்போ குறுகுறுப்போ எங்கும் இல்லை. இது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னர்தான் சிக்கலைக் கிளப்பினார்கள். எங்கே பூசல்களையும் புகைச்சல்களையும் கிளப்பி தங்கள கால்களை ஊன்றலாம என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் காத்திருக்கும் சங்கக் குடும்பங்கள் இந்நூலைப் படித்து இதில் கவுண்டர்களைக் கிண்டிவிட வழியிருப்பதாகக் கணக்குப்போட்டனர். நமது குருமூர்த்திதான் தமிழகத்தில் சாதி அடிப்படையில்தான் தொழில் வளர்ச்சி முடியும் என்று கோவை, மதுரை பெருநகர்களில் கூட்டங்கள் போட்டு சாதிகளை மறந்து தமிழக மக்கள் ஒன்றிணைந்து பனியாக்களுக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காகப் பாடுபட்டவராச்சே. அதனால் வலுவான சாதிகளில் குறிப்பிடத்தக்க புள்ளிகள் பற்றிய கணக்கு அவரிடம் ஆயத்தமாக இருக்குமே, அப்படித்தான் இச்சிக்கல் கவுண்டர்களின் தன்மானச் சிக்கலாக வெளிப்படுத்தப்பட்டது. குருமூர்த்தி இந்தப் புதினத்தில் இல்லாத செய்திகளை இட்டுக்கூறுகிறார். அந்தக் கதையின் உச்ச கட்டத்தில் அங்கு வரும் இளைஞர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற குறிப்பு இருப்பதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இவர் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இருப்பதாக உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறார்.
புதின ஆசிரியர் ஒரு கருத்தை வலிமையாகப் பதிந்திருக்கிறார், அதாவது கதைத் தலைவி பாலியல் உணர்வைத் தீர்த்துக்கொள்ள அடுத்தவர் உறவை நாடவில்லை என்பது அது. அவள் திருமணத்துக்கு முன் பார்த்து விரும்பிய இளைஞனின் முகத்தோற்றத்தைக் கொண்டவனையும் தன் கணவனின் சாயலில் இருந்த இளைஞனையும் தவிர்த்து தனக்கு முற்றிலும் புதியவனாகத் தோற்றமளித்த ஒருவனையே தேர்ந்தெடுக்கிறாள். தான் அயலானைக் கூடுவது காம உணர்வைத் தணிப்பதற்கல்ல, பிள்ளை பெறும் ஒரே நோக்கத்துக்காகத்தான் என்பதை தெளிவாகவே புரியவைக்கிறார் ஆசிரியர்.
குருமூர்த்தியின் இன்னொரு குற்றச்சாட்டு ஆசிரியர் தான் களப்பணி செய்து கிடைத்த புலனங்களின்(தகவல்களின்) அடிப்படையில்தான் இந்தக் கதை நிகழ்வுகளை எடுத்துவைத்தேன் என்று நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அதே நேரத்தில் சாதிக்காரர்களிடம் பஞ்சாயம் பேசிய போது அவர் குறிப்பிட்ட சான்றுகளில் எதையுமே எடுத்துவைக்கவில்லை என்பது. இது ஏன் என்று குருமூர்த்திக்குத் தெரியாமல் இருக்காது. பெருமாள் முருகனுக்கு இந்தச் சிக்கலைக் கிளப்பிவிட்டவர்களின் இலக்கு என்னவென்று தெளிவாகவே தெரிந்திருந்தது, இந்த நூலை வைத்து கோவை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில், 1982இல் குமரி மாவட்டத்தில் போல் ஒரு கலவரத்தை உருவாக்கி அந்த வட்டாரத்தில் வலுவாகக் காலூன்றலாம், தாணுலிங்கம் போன்று காட்டிக்கொடுக்கும் இரண்டகர்களை அங்கும் உருவாக்கலாம் என்பது. அதற்கு இடம் கொடுக்காமல் மன்னிப்புக் கேட்டு தன் எழுத்துப் பணியையே ஈகம் செய்வதாக அறித்த செயல் பாராட்டுக்குரியது. அவருக்கு நம் வாழ்த்துகள்.
இனி, ஒரு பெண் தன் கணவனைத் தவிர பிறிதொரு மனிதனுடன் உறவு கொள்வது பற்றிய நம் மனப்போக்கு, மரபுகள் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்.
நம் குமுகத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்குப் பின் குறிப்பிட்ட காலத்துக்குள் குழந்தை இல்லாவிட்டால் அவள் படும் பாடு, அவளைப் பிறர் படுத்தும் பாடு சொல்லி மாளாது. முதலில் அவளுக்கு மலடி என்ற பட்டம், அவள் கணவனின் வளமை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. உடலுறவில் மனைவியை நிறைவு செய்ய இயலாத பேடிமையும் வளமை இன்மையும் ஒன்றல்ல. இதனால் கணவனின் வளமையில் ஐயுறும் பெண் அடுத்தவனை நாடுவதும் பல இடங்களில் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் நான் குடியிருந்த வீட்டின் பின் புறம் இருந்த வீட்டில் குடியிருந்த நடுப்பருவத்தை நெருங்கிய குழந்தை இல்லாத பெண் அண்டையில் குடியிருந்த இளைஞனுடன் இருந்ததைக் கணவன் கண்டுவிட அவள் தாய்வீட்டுக்குச் சென்று சில மாதங்கள் சென்று திரும்பி வந்தாள். மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். நாம் குறிப்பிடும் புதினத்திலும் இருவரது பாலியல் உறவில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நான் பணியாற்றிய காலத்தில் பல இடங்களில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன், அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் சோளப்பயிர் பொதி வந்திருக்கும் நிலையில் ஊரிலுள்ள இளம் பெண்களும் ஆண்களும் கொல்லைக்குள் புகுந்து ஒருவரை ஒருவர் துரத்திப் பிடித்துத் தமக்கு விருப்பமானவருடன், கூடத் தடைசெய்யப்பட்ட உறவுகள் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இன்றி உடலுறவுகொள்வர் என்பது. இதற்குக் கூறப்படும் விளக்கம், இவ்வாறு செய்வதால் பயிர்களின் விளைச்சல் பெருகும் என்பது. சொல்லாத விளக்கம் மகப்பேறு இல்லாத பெண்களுக்கு பிள்ளை பெறும் வாய்ப்பு என்பது.
விளைச்சல் கூடும் என்பது அறிவியல் சார்ந்தது. நெல், சோளம் போன்ற புல்வகைத் தவசங்களின் மகரந்தச் சேர்க்கை வண்டு, பூச்சிகள் போன்றவற்றால் நிகழ்வதில்லை, காற்றாலேயே தூள்களை கொண்டு சேர்க்கப்படுகின்றன. அதனால் வேளாண்துறையினர் ஒட்டு வகை தவசங்களை உருவாக்க ஒரு பொதியை இன்னொரு பொதியின் மீது மோதுவதுபோல் குலுக்குவார்கள். பொதி வரும் காலத்தில் உரிய காற்று இல்லை என்றால் விளைச்சல் மிகக் குறைந்து போகும்.1966ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் புயல் வீசி அழித்த போது குமரி மாவட்டத்தில் காற்று இன்றி நெல் பதராகிப்போனது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற பின்னணியில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் துரத்தி ஓடும் போது பயிர்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி மிக உயர்ந்த மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இன்றைய நிலையில் பெரும் பரப்பில் பயிர்கள் விளையும் இடங்கில் பொதி வரும் காலத்தில் உலுங்கு வானூர்திகளை(எலிகாப்டர்களை) அப்பரப்பின் மீது பறக்கவிட்டு மகரந்தச் சேர்க்கையை உறுதிப்படுத்தலாம்.
மதுரையில் கள்ளழகர் சித்திரை வெள்ளுவாவன்று வைகை ஆற்றில் இறங்குகிறார். அது போல் காஞ்சியில் வரதராசப்பெருமாள் பாலாற்றில் இறங்குகிறார். எண்ணற்ற இடங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவனந்தபுரம் பத்மநாதரும் குமரி மாவட்டம் பறக்கை மதுசூதனப்பெருமாளும் கடலுக்கு நீராடச் செல்வர், ஆனால் இவை ஆறாட்டுஎன்ற சொல்லாலேயே குறிக்கபடுகின்றன. ஆனால் இவை எவற்றிலும் கிடைக்காத செய்தி ஒரு மலைக் குடியிருப்பில் எனக்குக் கிடைத்தது. 1968இல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் ஓர் அணை கட்டுவதறகான புலனாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களுக்கு உதவியாக அந்த மலைப் பகுதியில் வாழும் மலையாளி என்ற வகுப்பு மலைவாழ் மக்களில் சிலர் பணியாற்றினர்(அவர்கள் தமிழர்கள்தாம், மலையாளிகள் என்பது ஒரு பழங்குடிப் பெயர். அவர்கள் வாழும் காட்டுப் பகுதிக்கு மலையாளக் காடுகள் என்றும் பெயர். சவ்வாது மலைத்தொடர் என்ற இந்த தொடர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்குக்கு மேற்கிலும் சேலம் மாவட்டத்துக்குக் கிழக்கிலும் 100 மைல் தொலைவுக்கு நீண்டு கிடக்கிறது. நான் குறிப்பிடும் காலத்தில் அங்கு அங்கிங்கெனாத படி எங்கும் சந்தன மரங்களாக இருந்தன, அதனால்தான் அதற்கு சவ்வாது மலை என்ற பெயர். அந்தப் பகுதி மக்கள்தாம் இப்போது செம்மரம் வெட்ட ஆந்திரம் சென்று உயிரை விடுகின்றனர்.) அப்போது சித்திரை வெள்ளுவா அன்று விடுமுறை வேண்டுமென்றனர். எனென்று கேட்ட போது அன்று இரவு சாமி ஆற்றில் இறங்குவதாகவும் அதற்கு ஊரார் அனைவரும் ஆற்றினுள் இரவு நெடுநேரம் இருப்போம் என்றும் கூறினர். அப்போது பேச்சோடு பேச்சாக அன்றிரவு ஆற்றினுள் ஆண்களும் பெண்களும் தாம் விரும்பும் எந்த ஒருவருடனும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடலுறவு கொள்வார்கள் என்ற செய்தி வெளிப்பட்டது. நான் விளையாட்டாக நாங்களும் வருகிறோமே என்றேன். அதெல்லாம் முடியாது எங்கள் மக்கள் தவிர பிறரை விடுவதில்லை என்று கூறினர். அப்படியானால் இந்த ஆறாட்டுகளும் சாமிகள் ஆற்றுக்குள் இறங்கும் நிகழ்வுகளும் என்றோ ஒரு நாள் குழந்தைப் பேறுக்கோ, திருமணத்தின் மூலம் முறை மாப்பிள்ளை, அகப்புற மணமுறைகளுக்கு அப்பால் ஒருவரை விரும்பி எண்ணம் நிறைவேறாமல் வாழ்வோரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வகைதுறையாக இது கடைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. (மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கூட சில ஒதுக்குப்புறங்களில் குறிப்பிட்ட சில குழுவினர் இது போன்ற மரபுகளைக் கடைப்பிடிப்பதாக ஒருவர் கூறினார்.)
இனி குழந்தைப் பேற்றுக்காக நம் பெண்கள் எத்தனை இன்னல்களை பட்டறிந்திருக்கிறார்கள் என்பதை நம் தொன்மங்கள் சொல்பவற்றிலிருந்து பார்ப்போம்.
தொன்மங்களுக்குள் நுழைவதற்கு முன் கழகத் தமிழ் இலக்கியங்களினுள்ளும் தொல்காப்பியத்தினுள்ளும் சிறிது நுழைந்து திரும்புவோம்.
குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் கூடல். இங்கு ஓர் ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்து இருவரும் புணர்முறையுள்ள குழுக்களைச் சேர்ந்தவர்களா என்பதை உடை, சூடும் பூக்கள் போன்ற அடையாளங்கக்ளை வைத்து தெளிந்து கூடிப்பிரிவது. அதே இணை மீண்டும் கூடுவது அரிது. அவளும் அவனும் வெவ்வேறு வேளைகளில் வெவ்வேறு இணைகளோடு இணையலாம். குழந்தைகள் பெண்ணின் குழுவுக்கு உரியதாயிருந்ததால் இதில் சிக்கல் இல்லை. முல்லை நிலத்தில் பெண் தான் சந்தித்து விருமபியவனை தோழி ஒருத்தியின் துணையுடன் பெற்றோருக்குத் தெரிவித்து தன் கூட்டத்துடன் சேர்த்துக்கொள்வது இருத்தல். ஆயர்களில் தாய்வழிப் பிரிவில் உள்ள பெண்டுக்கு மேய்க்கி என்ற முறையை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
மருத நிலத்தில் காட்சி முழுமையாக மாறுகிறது. இங்கு தோழி முல்லை நிலத்தைப் போல் தலைவிக்குச் சமமானவளல்லள், வேலைக்காரி போன்றவள். இங்கே நாம் தலைவியைப் பற்றிப் பேசப் போவதில்லை, தோழியைப் பற்றியே பேசப்போகிறோம். இந்தத் தோழி தலைவியின் செவிலியின் மகள். அந்தச் செவிலியோ தலைவியின் தாயின் தோழி. தாயின் பிள்ளைகளை வளர்ப்பவள். அவளுக்கு இந்தக் குடும்பம்தான் வீடு. இவளுக்குக் குழந்தைகள் எப்படிப் பிறக்கின்றன? அந்த வீட்டு ஆடவர்களினால்தான். குழந்தையை வளர்க்க இப்படி ஒரு செவிலியை வைத்துவிட்டு அந்த வீட்டின் தலைவி தன் பொழுதை எப்படிப் போக்குவாள்? விளையாடிப் போக்குவாளா? விளையாட்டுத் தோழிகள் யார்? வேலைக்காரிகளாக இருக்க வேண்டும், அல்லது வீட்டுத் தலைவனின் பிற மனைவிகளாக இருக்க வேண்டும். இந்த விடையைத் தேடுவது நமக்கு இங்கு தேவை இல்லையென்றாலும் நம் பண்டைக் குமுகத்தின்ன் இயங்குநிலையைப் பற்றிய ஒரு புரிதலுக்கு உதவும் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன். இந்தச் செவிலி என்பவள் தமிழில் வெள்ளாட்டி என்பவளுக்கு இணையானவள் என்று நினைக்கிறேன். வெள்ளாட்டி என்ற சொல்ல்லுக்கு வேலைக்காரி, வைப்பாட்டி என்ற இரு பொருட்களைத் தருகிறது அகராதி. இரு பொருள்களும் ஒருத்தியைக் குறிக்கிறதா, வெவ்வேறு ஆட்களைக் குறிக்கிறதா என்ற ஐயம் இருந்தாலும் ஒருவரைக் குறிப்பதாகக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். செவிலியின் ஆண்மகன் குடும்பத் தலைவியின் ஆண்மகனுக்குத் தோழன். பெரும்பாலும் அவனது விலைமகளிர்க்குத் தூதுவனாக, பிற்காலத்தில் பார்ப்பானாக திரிவாக்கம் பெற்றிருக்கலாம். அல்லது வீட்டு ஆள்வினையில் ஈடுபட்டு பிள்ளையாக - பாலகன் என்பது சமற்கிருத வடிவம் - மாறியிருக்கலாம். செவிலியின் மகள் அவளது தோழியாக அவளுடன் கணவன் வீட்டுக்கு விடப்படுகிறாள், அங்கு அவளது மக்களுக்குச் செவிலியாகவும் அவளது கணவனுக்கு வைப்பாட்டியாகவும் வாழ்கிறான்
நம் குமுகத்தில் இன்றும் சில பணக்காரக் குடும்பங்களில் தங்கள் சாதி அல்லது தங்களதை விட தாழ்ந்தது என்று கருதப்படும் சாதிகளைச் சார்ந்த ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளையும் வேளாண்மையையும் பார்த்துக்கொள்ள பெண்கள் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு வைப்பாட்டிகளாக வாழும் நிலை உள்ளது.
இது போன்ற நிகழ்முறையை இங்கிலாந்து கோமகன்கள்(பிரபுக்கள்) குடும்பத்திலும் பார்க்க முடிகிறது. நாம் பரவலாக அறிந்த "கல்லிவர் செல்கைகள்"(Gulliver’s Travels) புதினத்தின் ஆசிரியரான சொனாதன் சுவிப்டு(Jonathan Swift) ஒரு கோமகன் குடும்பத்தில் வீட்டு ஆள்வினைகளைப் பார்த்து வந்தவர். அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணும் அவரும் காதலித்து வந்தனர். ஒரு நாள் அவருக்குத் தெரிய வருகிறது, தான் இப்போதைய கோமகனின் தந்தைக்கு அவரது வேலைக்காரி மூலமாகப் பிறந்த கள்ளப்பிள்ளை(illegal child) என்று. அது மட்டுமல்ல தான் காதலிக்கும் பெண் இப்போதைய கோமகனின கள்ளப்பிள்ளை என்பதும் தெரிய வந்தது. அதாவது அந்தப் பெண்ணுக்குத் தான் முறைப்படி சிற்றப்பன் என்பது. அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. வேறொரு பெண்ணைக் காதலித்தார். இருப்பினும் முன்னவளைத் தன் பராமரிப்பிலேயே வைத்திருந்தார். அதனால் அவர்களுக்குள்ள உறவைக் கொச்சைப் படுத்தி அவர் காதலி கூற அதற்கு அவளைக் கண்டித்துக் கடுமையாக ஒரு மடலை இவர் எழுத அவள் தற்கொலையே செய்துகொண்டாளாம். அதன் பின் இறுதி வரை தன் முன்னாள் காதலியைத் தன்னுடன் வைத்துக்கொண்டு திருமணமே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். ஆங்கிலக் குமுகத்தின் மீதுள்ள அவரது வெறுப்பு அவரது நூலில் துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. ஆங்கிலக் குமுகத்தைக் கிண்டலடித்து கோல்டுசிமித்து எழுதிய உலகக் குடிமகன் (The Citizen of the World) புதினத்தைவிட மிகக் காட்டமானது இவரது இந்த நூல். அதன் சுருக்கத்தை குழந்தைகள் இலக்கியமாகப் படிப்பவர்களுக்கு இது புலப்படாது. குதிரைகள் ஆளும் நாட்டில் அரசனான குதிரையிடம் தன் பட்டறவுகளைப் பற்றி கல்லிவர் பேசும் போது குதிரை கேட்கும், நீங்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறதே என, ‘ஐய்யைய்யோ நான் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன், பெரிய குடும்பத்தவன் என்றால் இளம் அகவையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி சொத்தை எல்லாம் அழித்து உடலையும் கெடுத்து பணத்துக்காக ஒரு கிழட்டுச் சீமாட்டியைக் கட்டிக்கொண்டு அதில் பிறக்கும் பிள்ளை என்னைப் போல் கட்டுடலுடன் இருக்குமாஎன்று கேட்பான்.
கோவலன் போன்ற ஒருவனின் விளக்கமாக இது இல்லையா? கோவலனுக்கு சிறு அகவையிலே மணம் முடித்து வைத்ததுதான் வேறுபாடு.
இப்படி பெண்கள் திருமணமாகிக் கணவன் வீட்டுக்குப் போகும் போது இடம் பெயர்ந்த செவிலிகளின் மரபினர் நாடு முழுதும் பரந்தனர். சோழ நாட்டைப் பொறுத்த வரை களப்பிரர் படையெடுத்த போது இந்த நிலக்கிழார்கள் நொறுங்கிப்போக இந்த செவிலியர் மரபினர் ஒருங்கிணைந்து பிள்ளைகள் என்ற பட்டத்துடன் வெள்ளாளராகியிருக்கலாம்.
அது போலவே பாண்டிய நாட்டில் வெள்ள நாடான்கள் என்பவர்கள் வெள்ளாளப் பெண்களை பாலியலில் கொடுமையாகக் கையாள, அதை திருவிதாங்கூர் அரசன் இரு வெள்ள நாடான்களுக்கு எதிராகப் பிறப்பித்த பிடியாணையை இரண்டு கல்வெட்டுகள் மூலம் காட்டுகிறார் The Dravidian Lineage என்ற நூலின் ஆசிரியர் இம்மானுவேல் அவர்கள். அக்கல்வெட்டுகளில் ஒன்று நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ளது. அப்போது பாண்டிய அரசு பங்காளிச் சண்டைகளால் பெரும் நெருக்கடியில் இருந்ததால் வலுவிழந்து கல்லிடைக்குறிச்சி வட்டாரம் திருவிதாங்கூர் மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தது. பாண்டிய நாட்டின பகுதிகளாகிய நாடுகள் எனும் பகுதிகளின் ஆட்சியாளர்களாகிய நாடான்களும் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு. இதைப் பயன்படுத்தித்தான் அரியநாத பிள்ளை நாயக்கர்களுக்காகக் களத்தில் இறங்கி வெள்ளாளர்களுக்கு விடுதலை வழங்கியிருக்க வாய்ப்புள்ளது. மறவர் பாளையங்களாயிருந்து பின்னர் ஆங்கிலர் காலத்தில் இடைக்கிழாரியங்களாக(சமீன்தாரியங்களாக) மாறியவற்றில் உள் வீட்டுப் பணிகளைப் பார்த்தவராக இருந்து கிடைத்த கல்வியால் பிற்காலத்தில் மேன்மையடைந்த அகமுடையார்களும் இத்தகையவர்கள்தாமோ?

நாம் பிள்ளைப் பேறு பற்றிக்கூற வந்தோம். தொன்மங்களிலுள்ள செய்திகள் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
பண்டை மக்களில் நெருப்போம்பும் பூசகப் பெண்தான் குமுகத் தலைமை ஏற்றிருந்தாள். பின்னர் இந்திரன் என்ற பதவி உருவான பின்னும் தலைவியாக பெண் இந்திராணியாக நிலைத்திருக்க குறிப்பிட்ட தகுதியில் வெற்றி பெற்ற ஆடவன் இந்திரனாக மாறி மாறி வந்தனர் என்பது மகாபாரதத்தில் நகுசன் கதையில் தெரிகிறது. அடுத்த கட்டமாக மூத்த ஆண் மகனே ஆட்சிக்கு உரியவனானான். எனவே இருக்கும் அரசனுக்கு அடுத்து அரியாசனத்தில் அமரும் ஆண்மகவைப் பெற்றெடுக்கும் அரசி தெய்வமாகப் போற்றப்பட்டாள். பழையோள் குழவி என்று முருகனோ வேறு யாரோ போற்றப்படும் பழையோள் எனும் தெய்வம் குழந்தையைக் கையில் வைத்திருக்கும் இயக்கியாக நம் குமுகத்தில் வணங்கப் படுகிறாள். இதே தெய்வம்தான் கன்னி மரியாக உருமாற்றம் பெற்றுள்ளது. அதாவது அங்கு வழக்கிலிருந்த ஒரு கன்னித்தாயின் வழிபாட்டை மாற்ற முடியாமல் ஏசுவுக்கு இணையாக அவரது தாயையும் உயர்த்தி அந்த மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் அங்கு மத்ததை நிலைநிறுத்தச் சென்ற ஏசுவின் மாணவர்கள். நம் நாட்டில் வழிபடப்படும் இயக்கியின் குழந்தைக்கும் கன்னிமரியின் மகனுக்கும் தந்தை யார் என்ற கேள்விக்கே இடமில்லை.
அடுத்த கட்டமாக கணவனான அரசன் மூலம் ஆண் மகவே பிறக்கவில்லை என்றால் எனன செய்வது? அதைப் பற்றித்தான் தொன்மம், அதிலும் மகாபாரதம் விலைமதிப்பில்லா செய்தியைத் தருகிறது. ஓர் அரசனுக்கு ஆண்மகவு இல்லையென்றால் குல குரு, ஒரு பார்ப்பன மாணி(பிரம்மச்சாரி), யாராவது ஒரு பார்ப்பனன், கணவனின் உடன்பிறந்தார், எவனோ ஓர் ஆடவன் என்ற வரிசை முறையில் ஒருவனுடன் அவள் உறவு கொள்ளலாம் என்று அது வரையறுக்கிறது. இது அரசனுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் பொருந்தும்.
இதில் விந்தை என்னவென்றால் உடலுறவின் போது ஆண், பெண் இருவரில் எவருடைய விந்தணு அல்லது கரு முட்டை வலுவானதோ அதுதான் பிறக்கும் பிள்ளையின் பாலை முடிவு செய்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன் குமுதம் இதழில் படித்திருக்கிறேன். ஆணின் விந்தணு வலிமையாக இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும், பெண்ணின் கருமுட்டை வலிமை பெற்றிருந்தால் பிள்ளை ஆணாக இருக்கும் என்பது அது.
தசரதனின் மனைவிமார் தலைவெட்டப்பட்ட வேள்விக் குதிரையைப் புணர்ந்து பிள்ளை பெற்றனர் என்கிறது இராமாயணம். ஒரு வேளை இது பெருமை என்று அன்று கருதினரோ? விக்கிரமாதித்தன் எனும் அரசனைப் பெருமைப் படுத்துவதற்காக எழுதப்பட்டதாகக் கூறப்படும் விக்கிரமாதித்தன் கதையில் வழிநடையாக வந்த ஒரு பார்ப்பான் பசி மயக்கத்தில் ஒரு விலைமகள் வீட்டுத் திண்ணையில் படுத்திருக்க அதைப் பார்த்த விலைமகள் அவனை வீட்டுக்குள் அழைத்து அவனுக்குச் சோறும் போட்டு அவனுடன் படுத்துப் பெற்ற பிள்ளைகள்தாம் விக்கிரமாதித்தனும் அவன் தம்பி பட்டியும்.
மகாபாரதத்தில் சந்தனுவுக்குப் பிறந்த இரு மகன்களும் இறந்து போக பிறங்கடை வேண்டுமென்று தன் மகனான வேதவியாசனிடம் சந்தனுவின் மனைவியான பரிமளகந்தி ஆணையிட அவன் மூத்தவன் மனைவியைக் கூட அவள் துறவியான வியாசனின் தோற்றத்தைக்கண்டு கண்ணை மூடிக்கொண்டு படுக்க பிள்ளை குருடாயிருக்குமென்று சொன்னான் வியாசன். அவன்தான் திருதராட்டிரன். அப்படியானால் அடுத்த மருமகளோடு உறவுகொள்ளுமாறு ஆணையிட்டாள். அவளோ உடல் நடுங்கி மூடிக்கொண்டு படுத்தாள். பிறக்கும் குழந்தை நோயாளியாயிருக்குமென்றான். பாண்டு பிறந்தான். அவன் பெயரால்தானே பாண்டுரோகம் என்ற நோயே இருக்கிறது! அப்படி என்றால் இன்னொரு முறை இளையவளுடன் கூடச் சொல்லி மருமகளையும் கண்டித்தாள். அவளோ ஒரு வேலைக்காரியை ஒப்பனை செய்து அழகூட்டி விடுத்தாள். அவள் முனிவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாள், முனிவனும் மகிழ்ந்து குழந்தை நன்றாக இருக்கும் ஆனால் அம்மா இடம் மாறிவிட்டது, இனி இது போன்ற வேலையைக் கொடுக்காதே என்று விடைபெற்றான்.
வியாசனே வசிட்ட முனியின் மகனான பராசனால் பரிசல் ஓட்டி வந்த பருவமெய்தாத மச்சகந்திக்குப் பிறந்தவன். மீன் வயிற்றில் பிறந்தவளான மச்சகந்தியின் உடலில் மீன் நாற்றம் இருந்ததால் பராசன் நல்ல மணம் வீசச் செய்து அவளுக்கு பரிமளகந்தி என்று பெயரும் இட்டான். மீனவப் பெண்ணான அவளை சந்தனு மணந்துகொண்டான்.
பஞ்ச பாண்டவர்களும் கர்ணனும் அவர்களின் தாய்மாரின் கணவனுக்கா பிறந்தார்கள்?
இவர்களெல்லாம் ஆரியர்கள் அல்லது வடக்கத்திகள் என்று சிலர் வாதிடலாம். துரியோதனாதியர் நூற்றுவரும் சேரர்களின் முன்னவர் என்று புறநானூற்று 2ஆம் பாடல் கூறுகிறது. அவர்களுக்கு நீத்தோர் கடனாகிய பெருஞ்சோறு வழங்கினான் உதியஞ்சேரலாதன் என்கிறது அது. பரணரின் அகத்துறைப் பாடலும் சான்று கூறுகிறது. கண்ணன் இறந்த நாளிலிருந்து தொடங்கும் கலியூழி தமிழர்களுக்கு உரியது. கி.மு.3101இல் ஓர் ஆண்டுமுறையை, அதிலும் கதிராண்டு முறையை இந்தியாவிலென்ன உலகத்திலேயே யார் வகுத்திருந்தனர்?
ஆக, இந்தியாவில் என்ன, தமிழகத்திலும் கூட பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என இருந்தனர் என்பது ஒரு வெற்றுக் கற்பனை. இதைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.



தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பெண்களுக்கு மணவிலக்கு மறுமண, கைம்பெண்களுக்கு மறுமண உரிமைகள் நடைமுறையில் இருந்தன. குறிப்பாக, மறவர் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர்களுக்கு இருந்தன. அதிலும் மறவர்களிடையில் ஆண்களை விட பெண்களுக்கு இதில் முன்னுரிமையும் இருந்தது. ஆண் மணவிலக்கு கேட்டால் அறுப்புக்கூலி என்ற பெயரில் பெண்ணுக்கு ஒரு தொகை வழங்க வேண்டுமென்று தெரிகிறது. பெண்களுக்கு அத்தகைய கட்டுப்பாடு எதுவும் கிடையாது. “தாலியைக் கழற்றி கூரையில் எறிந்துவிட்டுப் போய்விடலாம்” என்பார்கள். அவள் பிள்ளைகளைப் பற்றியும் கவலை இல்லை. மறுமணம் செய்பவன் அவர்களை ஏற்றுக்கொள்வான், ஏனென்றால் மனைவி வேலை செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்குவாள், பிள்ளைகளும் வளர்ந்த உடன் வேலைக்குச் செல்வார்கள். இவ்வாறு ஏழு முறை மணம் செய்த ஒரு பெண்ணின் 27 குழந்தைகளால் ஓர் ஊரே உருவாகிவிட்டது என்று பறம்பை அறிவன் என்பவர் கூறினார்.{முகம்மதியர்களிடையில் பெண்ணுரிமையின் அடையாளம் என்று அவர்கள் கூறும் மணவிலக்கு உரிமை என்பது உண்மையில் பெண்ணுக்கெதிரான பெரும் கொடுமையாகும். பெண்ணே மணவிலக்கு கேட்டாலும் அது ஆணாகிய கணவனுக்கு இழுக்கு என்று கணவனை தலாக்கு சொல்ல வைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, தன் குழந்தைகளை அவள் தன்னுடன் அழைத்துச்செல்ல முடியாது. மறுமணம் செய்யும் முகம்மதியக் கைம்பெண்ணின் குழந்தைகள் தாய்மாமன் வீட்டிலோ தந்தையின் உடன்பிறந்த ஆண்களின் வீட்டிலோ ஏதிலி(அனாதை)களாகத்தான் வாழ வேண்டும். கணவன் இறந்தால் சிறு குழந்தைகள் உட்பட ஆண்கள் எவரும் அவள் இருக்கும் அறைக்குள் 41 நாட்கள் நுழையக் கூடாது. மணவிலக்குப் பெற்றிருந்தால் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் மறுமணம் செய்யக் கூடாது. அடுத்துப் பிறக்கும் குழந்தை பழைய கணவனுக்கா அல்லது புதுக் கணவனுக்கா என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப குழந்தையைக் கையாள்வதற்கே இந்த ஏற்பாடு.}     


பின்னர் இச்சாதியினரது செல்வநிலை உயர்ந்து கணவனின் வருமானம் மிகுந்து மனைவி வேலைக்கும் போகாமல் மக்களும் பள்ளிக்குச் செல்லும் நிலை வந்ததும் இந்த மணவிலக்கு மறுமண உரிமைகளைச் செயற்படுத்த முடியாத நிலை வந்தது. இந்தக் கட்டத்தின் வெளிப்பாடுதான் 1971இல் வெளிவந்த பட்டணமா பட்டிக்காடா திரைப்படம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பெண் கணவனிடம் சண்டை பிடித்து அல்லது கொடுமை தாங்காமல் தாய் வீடு வந்தால் அவளது பெற்றோர் கணவன் வீட்டுக்குச் சென்றுவிடத்தான் வலியுறுத்துவர். ஆனால் இன்றும் மதுரை மாவட்டத்தில் கணவனோடு முரண்பட்டுத் தாய்வீட்டிலிருக்கும் மகளைக் கணவன் அழைத்தும் விடாமல் அதனால் ஆத்திரமடையும் கணவன் மகளையும் அவளது தாய் உட்பட உறவினர்களையும் வெட்டுவதும் கொலை செய்வதும் அடிக்கடி நடைபெறுவது பழைய மறுமண உரிமை நினைவின் எச்சமாகவே தோன்றுகிறது. முன்பு மணவிலக்கு – மறுமணம், கைம்பெண் மறுமணத்தை இழிவாகக் கருதிய சாதியினரே இப்போது அதைக் கூச்சமில்லாமல் கடைப்பிடிப்பது போல் அவ்வுரிமைகளை இடையில் கைவிட்டவர்கள் மீண்டும் கடைப்பிடிப்பது காலத்தின் கட்டாயமாகத் தோன்றுகிறது.

கணவன் சிறு அகவையில் இறந்துவிட குழந்தைகளுடன் துன்புறும் இளம்பெண்ணின் கணவனின் தம்பி அல்லது திருமணம் ஆகாமல் இருக்கும் தமையன் பெண்ணையும் குழந்தைகளையும் பராமரித்து அதே நேரம் திருமணம் செய்யாமல் அவளுடன் வாழ்வது கிட்டத்தட்ட எல்லா சாதிகளிலும் நடைமுறையில் இருக்கிறது. தம்பியே அண்ணியைத் திருமணம் செய்வதும் நடைபெறுகிறது.

அடுத்து இரு சாதிகளில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதியினர் வீட்டுக்குள் நுழைந்து பெண்களோடு உறவு கொள்வது தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலம் வரை தட்டுத்தடங்கல் இல்லாமல் நடைபெற்ற ஒன்றாகும்.

எட்டயபுரம் அருப்புக்கோட்டை சாலையில் மேலக்கரந்தை என்ற ஊரில் ஓர் ஏரி அமைக்கும் பணியில்1965ஆம் ஆண்டில் இருந்தேன். அதிலிருந்து 5 மைல் வடக்கில் சாலைக்குக் கிழக்கில் இருக்கும் வெம்பூர் எனும் ஊரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து மனைவி, தாயாருடன் குடியிருந்தேன். அந்த வீடு இருந்தது ஒரு பாழடைந்த அக்கிரகாரம் எனப்படும் பார்ப்பனச் சேரியில். சுவரெங்கும் வெடிப்புகளும் தளமெல்லாம் உடைந்து பெருச்சாளியும் எலியும் குடியிருந்தன. வீட்டையடுத்து கரிசல்காடு. மழை பெய்தால் கரிசல் மண் வெடிப்புகளுக்குள் பதுங்கி வாழும் பாம்பு அரணை தவளை அனைத்தும் வீட்டை நோக்கிப் படை எடுக்கும் அந்த அக்கிரகாரத்தில் நான் குடியிருந்த வீட்டுக்கு எதிரில் ஒரு பார்ப்பன முதியவர் மட்டும் குடியிருந்தார். ஆய்வுநிலை அஞ்சலகம்(Experimental Post Office) அவர் பொறுப்பிலிருந்தது. அவரே சமைத்துக்கொள்வார். ஒரு பெண்ணும் அவள் கணவனும் அவ்வப்போது வந்து அவருக்குச் சிறுசிறு பணிகள் செய்து கொடுப்பர். அந்தப் பெண் நல்ல தோற்றமுள்ளவள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

பகல் வேளையில் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் ஓரிருவர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தாயாரிடமும் மனைவியிடமும் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது தம் பிள்ளைகளைக் காட்டி இது இந்த நாயக்கருக்குப் பிறந்தது, இது இந்த தேவருக்குப் பிறந்தது என்று கூறுவார்கள் என்று பின்னர் என் மனைவி சொல்லி கூச்சப்படுவாள். இந்நிலையில் ஒரு நாள் இரவு 7 மணி அளவில் எதிர்த்த வீட்டு ஐயர் வீட்டுக்கு அவர் வீட்டுக்கு வரும் ஆடவன் வந்தான். என்ன இப்போது வந்திருக்கிறாய் என்று அவர் கேட்க அவன், வீட்டுக்குச் சென்ற போது கதவு சாத்தியிருக்க வீட்டின் முன் செருப்பு கிடந்ததாகவும் அதனால் கொஞ்ச நேரம் ஐயர் வீட்டில் இருந்துவிட்டுப் போகலாம் என்று வந்ததாகவும் எந்த மாறுபட்ட உணர்ச்சியுமின்றி இயல்பாகக் கூறினான். இது போன்ற நிகழ்வுகள் ஒரு நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. நாயர்களின் ஒடுக்குமுறைக்கு சாணார்கள் ஆட்பட்டிருந்த காலத்தில் கருவுற்றிருக்கும் சாணார்ப் பெண்களைக் கலப்பையில் பூட்டி உழுதவர்கள் அப்பெண்களை பாலியலில் எப்படிக் கையாண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். கடற்கரைப் பெண்களை அடுத்திருந்த நாடார்கள் நடத்திய விதம் ஒன்றும் மெச்சத்தக்கதல்ல. பெரியகுளத்தில் 1978இல் பணியாற்றிய காலத்தில் திருமணமான ஒரு பார்ப்பனப் பெண்ணை அவ்வூரிலுள்ள ஒரு பணம்படைத்த மறவர் அனைவருமறிய தூக்கி வந்து தன் மனைவியாக்கிக் கொண்டதைக் கூறினார்கள். நான் அங்கு இருக்கும் போதும் அப்பெண் அவரது மனைவியாகத்தான் இருந்தாள்.

காஞ்சிபுரத்தில் நான் பணியாற்றிய போது எங்கள் துறையில் இன்னொரு அலுவலகத்தில் பணியபாற்றிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் பேசுவார். திருமணமாகாத அவர் ஒரு சில நாட்கள் விலைமகளிரிடம் செல்லவில்லை என்றால் சாப்பாடு இறங்காது, சாப்பிட்டால் வாந்தி எடுத்துவிடும் என்பார். இதற்காக அங்கு இன்று வாடிக்கையாளர்களை வைத்திருந்தார். அவர்களில் ஒருவர் விலைமகளிரை வைத்துத் தொழில் நடத்தும் மதுரை வட்டாரத்தைச் சேர்ந்த மறவர் சாதிப் பெண். அவளுக்கு மகள் ஒருத்தி படித்துக்கொண்டிருந்தாள். அவளை ஒரு முறை தருமாறு கெஞ்சிப் பார்த்திருக்கிறார். அவள் மசியவில்லையாம். இந்த நண்பர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்.

பெரிய குடும்பங்களில் தங்கள் பெண்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்த்ததாகப் பெருமை பேசுவர். பருவமடைந்த தங்கள் வீட்டுப்பெண் சாரளம் வழியாகத் தெருவைப் பார்த்ததாகவும் அவளை உயிரோடு சுவரில் வைத்துக்கட்டிவிட்டதாக, அல்லது வீட்டுக்குள் ஒரு குழியைத் தோண்டி அதனுள் ஏதாவது ஒரு பொருளைப் போட்டு அதை எடுத்துத்தரச் சொல்லி கீழே இறங்க வைத்து மண்ணைப் போட்டு மூடி உயிருடன் புதைத்து விட்டதாகவும் ஆன கதைகளை வட்டாரத்துக்கு வட்டாரம் கேட்கலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை குமரி மாவட்டத்தில் நாடார்களிடையில் பள்ளிக்குச் சென்ற ஒரு சிலரைத் தவிர பருவமடைந்த பெண்கள் திருமணம் வரை வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. திருமண உறுதி நிகழ்வில் கூட மணமகன் பெண் வீட்டுக்குச் செல்வதில்லை. நான் என் மனைவியை முதன்முதலில் மணமேடையில்தான் பார்த்தேன். இப்படித்தான் பெண்ணின் கற்பு பேணப்பட்டது. மற்றப்படி தமிழர்களுக்கென்று பிறவியிலமைந்த தனிக் கற்பு என்ற பண்பு இருந்ததில்லை. உலகின் எல்லா மக்களையும் போன்றவர்கள்தாம் நாம்.   


மனித வரலாற்றில் ஒரு கட்டத்தில் இரு வகையான ஆண் – பெண் உறவுகள் இருந்ததற்குத் தடயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நாயர்களிடையில் குடும்பத் தலைவன் ஒரு தாயின் மூத்த ஆண்பிள்ளை. சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும் அதன் ஆள்வினை காரணவன் எனும் மூத்த ஆண்மகன் தலைமையில்தான் இருந்தது. அவனுக்கு மட்டும் வெளியிலிருந்து பெண் எடுப்பர். அவள் கணவன் வீட்டுக்கு வந்து அவனுக்கு மட்டும் மனைவியாக இருப்பாள். வீட்டிலுள்ள பிற பெண்கள் ஒரு கணவனை மணந்திருந்தாலும் நம்பூதிரிகளுடன் அவர்கள் சம்பந்தம் என்ற பெயரில் உறவு வைத்திருப்பர். அது தவிர பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணமுடித்துக் கொள்வதும் ஆண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பதுமாக இது ஒரு வலைப்பின்னல் போல செயற்பட்டதாக ஐரோப்பிய ஆய்வாளர்களைச் சுட்டி ஏங்கல்சு தன் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த “வலைப்பின்னல்” இருந்ததா என்பதைக் களத்தில் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டுமென்பது என் எண்ணம்.
இது போல் தொடக்க காலக் குமுகங்களில் ஒவ்வொரு ஒன்றியும் ஒரு தலைவனின், பிறவற்றை விடப் பெரிய வீட்டை நடுவில் கொண்டதும் அதைச் சுற்றி வட்ட வடிவில் சிறு வீடுகள் அதைச் சூழ்ந்திருக்கவுமான அமைப்பைக் கொண்டிருந்தன என்று மாந்த நூலார் கூறுகின்றனர். இந்த அமைப்புக்குப் பெயர் கோட்டை என்றும் கூறுகின்றனர். இத்தகைய கோட்டைகளை உடைத்து அவற்றை ஒரே கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வேலையை 7 குக்குலத் தலைவர்களான முனிவர்கள் எனப்படுகின்ற பூசகத் தலைவர்கள் இந்திரன் என்ற தொடக்கநிலை அரசனுக்குக் கொடுத்தார்கள் என்று நம் வேதங்கள், தொன்மங்களுக்கு விளக்கம் சொல்கின்றனர். இவை ஆரியர்களுக்கு உரியனவல்லவா என்று கேட்காதீர்கள். இந்திரன் தமிழகத்தின் மருத நிலத் தெய்வம். நிலத்தொடர்பு என்பது வலிமையானது. தொல்காப்பியம் அத்தொடர்பை ஐயத்துக்கிடமில்லாமல் கூறுகிறது. இவ்வாறு தலைவன் மனைவியைப் பொறுத்த வரை அவன் ஒருவனுக்கு மட்டும் உரியவளாகவும் பிறரெல்லாம் பல ஆடவர்களுடனும் உறவு கொள்பவர்களாகவும் இருந்தனர் என்று கொள்ள முடிகிறது.
குழந்தை பிறப்பில் ஆணின் பங்கு அறியப்படாமல், அல்லது ஒரு ஆண் – ஒரு பெண் என்று இல்லாமல் கூட்டாக, பெண்ணின் தலைமையில் குடும்பம் அல்லது கூட்டம் இருந்ததோ அதுவரை பாலியல் உறவில் பெண்ணின் உரிமை பேணப்பட்டது. என்று பெண்ணின் தலைமை முறியடிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே அவள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. மகாபாரரதத்தில் ஐவருக்கும் ஒரே மனைவியாக வாய்த்த திரௌபதையை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு ஒரு முனிவன் அறிவுரை கூறுகிறான். அது போல் ஆண்டுக்கு ஒருவர் என்று முறை வைத்துக்கொள்கிறார்கள். அது போல் பஞ்சாபில் ஒரு தாய்க்குப் பிறந்த அத்தனை ஆண்பிள்ளைக்கும் ஒரே பெண்ணை மணமுடித்துவைத்தனர் என்று கூறப்படுகிறது. திருமணத்தின் போது பெண்ணின் முகத்தில் முக்காடு போட்டுவிடுவார்களாம். தனக்கு தாலி கட்டியவன் எவன் என்று அவளுக்குத் தெரியாதாம். ஒரு மருமகள் “மாமி எனக்குத் தாலி கட்டியது யார்?” என்று கேட்க, “போடி போக்கத்தவளே, எனக்குத் தாலி கட்டியவன் யாரென்றே எனக்குத் தெரியாது” என்று மோவாயில் இடித்தாளாம் என்று வேடிக்கையாகக் கூறுவார்கள்.
முன்னாள் தமிழகத்தின் கூட்டுக் குடும்பத்தில் கூட்டுக் குடும்பத்தின் மூத்த ஆண்மகனான தலைவன் வைத்ததுதான் சட்டம். அவன் அந்தக் குடும்பத்தை விரும்பியவாறெல்லாம் கையாள்வான். பாலியல் குறித்து பெண்களிடமும்தான். கூட்டுக் குடும்பம் போய்விட்டதே என்று படித்த ஒரு கூட்டம் தமிழகத்தில் புலம்பிக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கூட்டுக் குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பெரிய நிலவுடைமையில் உழைக்கும் ஆடவர்களும் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆக்கிப்போட்டு வீட்டைப் பராமரிப்போராகப் பெண்களும் இருந்தனர். செலவுக்கு என்று ஒரு தம்பிடி தேவைப்பட்டாலும் தலைவரிடம்தான் எவரும் கையேந்தி நிற்க வேண்டும், ஏனென்றால் ஒருவருக்கும் வேறு வரும்படிக்கு வழி கிடையாது. மூத்தவர் இறந்து போனால் இருப்பவர்களில் மூத்தவருக்கு அதிகாரம் கைமாறும். அவர்தான் இறந்தவரின் சடங்குகள் அனைத்தையும் செய்வார். மொட்டை அடிப்பதுதான் அப்போது அவருக்கு அடையாளம். ஏதம் கேட்க வருவோர் மொட்டையிட்டிருப்பவரைத்தான் கண்டு கேட்பார்கள். இந்து அவிபக்த குடும்பம் என்பதில் ஒருவன் இடம் பெயர்ந்தாலோ வேறு தொழிலில் ஈடுபட்டாலோ அவனது கணக்கைப் பிரித்து அவனுக்குக் கொடுத்துவிடுவார்கள் போலும். சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்த காதையில் தேவந்தியின் கணவனான சாத்தன் அவளை விட்டுப் பிரியும் போது தாயத்தார் எனும் கூட்டுக் குடும்ப உறுப்பினருடன் வழக்குரைத்து மனைவிக்குரிய பங்கைப் பெற்றுக்கொடுத்து தான் புண்ணிய ஆறுகளில் ஆடப்போவதாகக் கூறி வெளியேறுகிறான். தில்லை மூவாயிரவர் எனும் பூசகப் பார்ப்பனர்களிடையிலும் இந்த நடைமுறை இருப்பது போல் தெரிகிறது.
பிற குடும்பங்களில் ஒருவன் படித்து வேலைக்குப் போனால், அவன் தன் தேவைக்குக் குடும்பத் தலைவனிடம் கைகட்டி நிற்க வேண்டியதில்லை, அவ்வாறே அவன் மனைவியும். முன்பு கணவன் குடும்பத் தலைவனுக்கு அடிமையாக இருந்ததால் மனைவியும் அடிமையாக இருந்தாள். இப்போது கணவன் தன்னதிகாரம் பெற்றுவிட்டதால் மனைவியும் தன்னிச்சையாக நடக்கத் தொடங்கினாள். இது பிற பெண்களுக்கு, குறிப்பாக மாமியார், நாத்தனார்களுக்கு மட்டுமல்ல, பிற மருமகள்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தின. இதன் எதிர்வினை அதிக சீதனம் என்ற பெயரில் பெண்ணைத் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் நிகழ்ந்தன. சென்ற நூற்றாடில் தொடங்கிய மருமகள் எரிப்புகளுக்கு இதுதான் அடிப்படை. இப்போது கணவனும் மனைவியும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பெற்றோரைப் பேண முடியாத பல சூழல்கள் இருக்கின்றன, அவர்களின் சொத்துகள் தவிர வேறு கவர்ச்சி எதுவும் இல்லை. அதையும் பயன்படுத்த முடியாத நிலையில் நமது சொத்துடைமைச் சட்டம் உள்ளது. ஆண் வழியில் எத்தனையாவது தலைமுறையாக இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதற்கு மூத்தோர் சொத்தில் உரிமை வந்து விடுகிறது. ஒரு சொத்தை மக்களின் படிப்புக்காக என்று விற்றாலும் கூட அந்தப் பிள்ளைகள் அகவை அடைந்ததும் தன் தந்தை மனநிலை பாதிக்கப்பட்டு சொத்தை விற்றார் என்று நயமன்றம் செல்லும் நேர்வுகளுக்குக் கணக்கில்லை. இதற்கு ஒரே தீர்வு சொத்துகள் அதன் உடைமையாளருக்கு முழு உரிமைப்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அகவைக்குப் பின் பிள்ளைகள் பகுதி நேர வேலை பார்த்துத் தங்கள் படிப்பைத் தொடர வேண்டும். பெற்றோர் விரும்பினால் பிள்ளைகளுக்குச் சொத்தை வழங்கலாம் அல்லது காசாக வழங்கலாம், வழங்கித்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் இருக்கக் கூடாது என்பது எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழக நிலைப்பாடு. சொத்தில்லாதவர் ஒரு ஓய்வூதியத் திட்டத்தில் முதலிட்டு தங்கள் முதுமைக்காலச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் பெற்றோரின் சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது, அதே வேளையில் பிள்ளைகளின் திருமணத்தில் பெற்றோர் தலையிட முடியாது என்றும் பிரிட்டனில் பெற்றோரின் சொத்துக்கு பிள்ளைகள்தாம் உரிமையாளர் என்றும் ஆனால் பெற்றோர் சொல்லும் இணையைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் 19ஆம் நூற்றாண்டில் இருந்ததாகப் படித்திருக்கிறேன். இங்கும் பிள்ளைகளே தங்கள் இணைகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகள் பெருகி வரும் சூழலில் சொத்துடைமைச் சட்டத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
ஆண்பெண் உறவைத் தொடர்ந்தோமானால் இன்று வரை தமிழகத்தில் குமுக ஏற்றத்தாழ்வுள்ள  சாதிகள் என்ற அமைப்பால் பெண்களின் கற்புக்கு என்றுமே அச்சுறுத்தல் இருந்துவந்திருக்கிறது. இந்த உண்மைகளை அறிந்திருந்தும் அனைவரும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர்களின் பண்பாடு, கற்பில் தமிழ்ப் பெண்களுக்கு உலகில் ஈடிணையில்லை என்ற பொய்யைத் திரும்பத் திரும்ப நமக்குள் கூறி மகிழ்ந்துபோகிறோம். இதற்கு அடிப்படையாக இருப்பது கழக இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு எட்டுத்தொகைகள். தொகுப்பு என்னும் போதே சிலவற்றையாவது கழித்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையானால் உங்களை ஒரேயொரு கேள்வி கேட்கிறேன், தமிழகத்தில் பார்ப்பனர் முதல் கடைக்கோடி சாதி வரை குடும்ப நிகழ்ச்சிகளில் தாய்மாமன் ஏற்கும் முகாமையான பங்கு நம் எல்லோருக்கும் தெரியும். கழக இலக்கியத்தில் புறப்பொருள் குறித்தவற்றை வேண்டுமானால் விட்டுவிடலாம், அகத்துறைப் பாக்களிலாவது ஓர் இடத்திலாவது ஒரே ஓர் இடத்திலாவது தாய்மாமனைப் பற்றிய ஒரே ஒரு குறிப்பையாவது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?
ஆக, இந்தத் தொகுப்பை அதாவது கழிப்பை யார் செய்திருப்பார்கள்? பனியாக்களின் தமிழக முன்னோடிகளான, சந்திரகுப்த மௌரியன், கலிங்கத்துக் காரவேலன் விடுத்த அம்மண ஒற்றர்கள்தாமே! தொல்காப்பிய உரையில் அகத்துறைக்கு எடுத்துக்காட்டுப் பாடல் இல்லாததால் எழுதப்பட்டது கலித்தொகை, புறத்துறைக்கு எழுதப்பட்டது புறப்பொருள் வெண்பாமாலை. அந்த அளவுக்கு 5000 ஆண்டுகால செய்யுள்களை அழித்திருக்கிறார்கள். அதாவது 3700 ஆண்டுகள் இடைக் கழகம், 1850 ஆண்டுகள் கடைக் கழகம், தாங்கள் தமிழ்நாட்டினுள் நுழைந்த கி.மு.4ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள பாடல்களில் அவர்கள் கழித்தவை போக எஞ்சியவை நமக்குக் கிடைத்துள்ளன, கி.பி.150 வாக்கில் கழகம் முடிவுக்கு வந்துள்ளது. 3700 + 1850 = 5550 - 400 -150 = 5000. இடைக்கழக முடிவில் நூல்கள் அழியவில்லை, உயிரோடு மீண்ட அரசன் பாண்டியன் முடத்திருமாறன் அவற்றை மீட்டுவந்துவிட்டான். தொல்காப்பியம் இரண்டாம் கழகக் காலத்தில் உருவானது. அது கிடைத்திருக்கிறதில்லையா? அப்போது இருந்த இலக்கியங்களைக் கண்டல்லவா அவர் இலக்கணம் வகுத்தது? ஆக அந்த இலக்கியங்களும் பாடல்களும் எங்கே போயின? கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை இருந்த ஓர் அரண்மனையோ கோயிலொ வளமனையோ ஏன் ஒரு குட்டிச்சுவரோ இல்லாமல், களப்பிரர்களைக் கொண்டு வெறியூட்டி அழித்தவர்கள் அம்மண ஒற்றர்களன்றி வேறு யார்? இங்கிருந்த கல் தச்சர்கள் உட்பட ஐந்தொழிற் கொல்லர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு ஓட்டியவர்கள் வேறு யார்? இங்கிருந்து விரட்டப்பட்ட அவர்களல்லவா தாய்லாந்து, கம்பூச்சியா சென்று அங்கோர்வாட் போன்ற கோயில் நகரங்களை உருவாக்கியவர்கள்? கீழை நாடுகளிலும் வட இந்தியாவிலும் அமைந்திருப்பவற்றுக்கு இணையான தரமுள்ள கோயில்கள் தமிழகத்தில் மீண்டுள்ளனவா? எங்கோ ஊர்ப்புறங்களில் பதுங்கியிருந்தவர்களிலிருந்து தொடங்கிய மரபுதான் இன்று தமிழகத்தில் எஞ்சியுள்ளது. பல்லவர்கள் தொடங்கிய அது சோழர்கள் காலத்தில் மேம்பட்டிருக்கிறது.
தமிழகத்து இசை நாடகக் கலைஞர்களை நாட்டை விட்டே துரத்திவிட்டனர் அல்லது அடக்கிவைத்தனர். யாழ் மீட்டும் பாணர்கள் தையற்காரர்களாக முடக்கப்பட்டனர். இதை முன்னுணர்ந்துதான் கண்ணகி வரலாற்றைப் பயன்ப்படுத்தி இசை, நாடகம் மட்டுமல்ல தமிழர்களின் அனைத்துத் துறைகளையும் பற்றி எழுத்தில் பதியத்தக்கவற்றைப் பதிந்துவிட்டுப் போய்விட்டார் தமிழனின் தனிப்பெரும் பாவலர் இளங்கோவடிகள்.
இவ்வாறு ஆடல் பாடல்களுக்கு தமிழகத்தில் வேரே அற்றுப்போனதால்தான் இராசராசன் தன் தேவைகளுக்காக ஆந்திரத்திலிருந்து தேவரடியார்களை இறக்க வேண்டியதாயிற்று.
அன்றுவரை ஏழ்மையின் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒடுக்கி வந்த தமிழகத்தில் இப்போது கோட்பாட்டின் அடிப்படையிலும் அரசு அதிகாரத்தைக் கொண்டும் ஒடுக்கினர் அம்மண ஒற்றர்கள். உழவுத் தொழிலாளரை நிலங்களை உழுவதன் மூலம் மண்ணில் வாழும் புழு பூச்சிகளைக் கொல்பவர்களேன்றும் சராசரி மக்களை புலாலுண்பதால் இழிவானவர்களென்றும் ஒடுக்கினர். அதே வேளை இந்த உழவர்களை வைத்து பயிர் செய்வித்துப் பயனடைந்த புதிய சாதியினரான மதமாறிய வெள்ளாளராகிய புதிய காணியாட்சிகளையும் பெருநிலக்கிழார்களையும் உயர்த்தி வைத்தனர்.
தமிழர்களை ஆரியர்கள் ஏமாற்றிச் சாதிகளாகப் பிளந்துவிட்டனர் என்றனர் ஆரியர் – திராவிடர் கோட்பாட்டினர். இப்போது களத்திலிறங்கியிருக்கும் தமிழகத்தில் வாழும் பிறமொழியாளர் எதிர்ப்புக் கோட்பாட்டினர், வடுகர்கள் தமிழர்களை ஏமாற்றிச் சாதிகளாகப் பிரித்துவிட்டனர் என்கின்றனர். இரண்டும் உண்மையல்ல, ஆரியர் என்ற இனமே உலகில் இருந்ததில்லை என்பதே உண்மை. சாதி என்பது தமிழர்களின் உருவாக்கம்தான், அதற்கு கோட்பாட்டு விளக்கம் தந்து அரச அதிகாரத்தின் துணையுடன் இறுக்கமடையச் செய்தவர்கள் அம்மண ஒற்றர்கள்தாம். இன்றைய தமிழகச் சாதியப் பண்பாடு அம்மணர்கள் உருவாக்கியதே. அதை உடைக்க வேண்டுமாயின் புலால் உண்பது இழிவு எனும் கோட்பாடு உடைக்கப்பட வேண்டும். உயிர்க்கொலையின்றி உலகில் எந்த உயிரினமும் வாழவில்லை என்ற இயற்கை விதியை வலியுறுத்த வேண்டும். பனியாக்களாகிய மார்வாரி – குசராத்திகள் தமிழகத்தை நடுவரசு அதிகாரத்தின் மூலமும் நேரடியாகத் தமிழகத்தில் நுழைந்தும் நடத்தும் சுரண்டலுக்கு எதிராக தமிழக மக்கள் சாதி, சமய, மொழி, இன வேறுபாடின்றிப் போராடுவதன் மூலம் தமிழக மக்களிடையில் முழுமையான ஒற்றுமையை உருவாக்க முடியும். 
இது வரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொய்ம்மைக்கு மாறாக பெண்கள் ஆண்களின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வந்துள்ளனர். அவர்களுக்கு பாலியல் உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. இதற்கு ஒரே விதிவிலக்கு நாம் மேலே கூறியிருந்த மறவர் பெண்களின் பாலியல் உரிமைகள்தாம். நாம் அதனை வரையளவாக வைத்து எதிர்கால ஆண் – பெண் உறவுகளை வரையறுக்க வேண்டும். ஒரு பெண் விரும்பி மணவிலக்கு கேட்டால் அவளை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். அவள் குழந்தைகளைத் தன்னிடம் வைத்துக்கொள்வதற்கு உரிமை வேண்டும். இன்றைய நிலையில் கணவன் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் அவளது வருவாய் நிலையைக் கணக்கிலெடுத்து வாழ்க்கைப் பணம் தர வேண்டும். நாம் திட்டமிட்டிருக்கும் எதிர்காலத் தமிழ்நாட்டில் இத்தகைய குழந்தைகளுக்கு கல்வி முதலிய செலவுகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
இப்படிப்பட்ட திட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்கள் எடுத்ததற்கெல்லாம் மணவிலக்கு கேட்பார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படலாம். அது ஓரளவு உண்மைதான். புதிதாக உரிமைகளைப் பெறும் எவரும் தொடக்கத்தில் கொஞ்சம் ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்வது இயல்புதான். ஆனால் ஆண் – பெண் தனித்து வாழ்வதென்பது எளிதல்ல. மேலை நாடுகளில் மணவிலக்கு செய்வோர் உடனடியாக மறுமணம் செய்துகொள்வது அதனால்தான். குழந்தைகளைப் பொறுத்த வரையில் அங்கு அவர்களது கல்விமுறை குழந்தைகளது திறன்களை வெளிக்கொணர்வதாக இருப்பதால் இது அவர்கள் வீட்டிலிருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. அத்துடன் குறிப்பிட்ட அகவையில் எதிர்ப்பாலர் நட்பைப் பெறுவதும் இந்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொய்யைக் கூறிக்கொண்டு நம் மக்கள் அதை மறைவில் மீறுகிறார்கள் அல்லது மீற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் அவர்கள் தாங்கள் செய்வதையே தங்கள் மதிப்பீடாகவும் கொண்டுள்ளனர்.
ஆணுக்குச் சமமாக முழுவதும் பெண்ணுக்கு உரிமை வழங்குவதை ஆண்கள் விரும்பாமலும் ஆணின் மேலாளுமையை ஏற்க பெண்கள் மறுப்பதுமே ஒரே பாலின உறவுகளுக்குக் காரணமாகின்றன. இது மனித குடும்ப வாழ்வு வரலாற்றில் ஒரு முட்டுக்கட்டை நிலை. இது அந்நாடுகளில் மக்கள் தொகை குறைவுக்கும் வழிவகுக்கும். இதன் விளைவான மனிதவள வீழ்ச்சியால் வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து மக்கள் அந்நாடுகளில் குடியேறுவது மிகுந்து இன்று  பிரிட்டன் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டது போல் பணக்கார நாடுகள் ஒவ்வொன்றாக விலகும் சூழல் வரும். இன்று அமெரிக்காவில் நிகழ்பவை நாளை அங்கும் இந்த தனிமைப்படுத்தல் உருவாகலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும். நமக்குரிய வளங்கள் நமக்கு மட்டும் பயன்படுமாறு, நமக்குக் கிடைக்கும் மூலவளங்களைக் கொண்டு நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுமாறு ஓர் அறிவியல் – தொழில்நுட்ப மண்டலத்தை உருவாக்கி உலகுக்கு வழிகாட்டுவோம். முழுத் தன்னாட்சியும் பொருளியல் உரிமையும் உள்ள மாநிலங்களைக் கொண்டதாக இந்தியாவை உயர்த்தும் போராட்டத்தைத் தமிழகத்திலிருந்து தொடங்குவோம்.
தமிழகத்தில் ஆண்பெண் உறவு குறித்த அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்தி ஒரு புதினம் எழுதிய பெருமாள் முருகன் அவர்களுக்கும் அதைக் காரணமாக வைத்து தமிழகத்தில் 34 ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தைத் தூண்ட முயன்ற சங்கக் குடும்பப் பேச்சாளர் தணிக்கையாளர் குருமூர்த்திக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். தமிழகத்தின் ஆண்பெண் உறவு பற்றிய பொய்ம்மைகளைத் தோலுரித்துக்காட்ட வாய்ப்பளித்தமைக்காக இந்த நன்றி.
முற்றும்.    



0 மறுமொழிகள்: