17.6.16

பண்டைத் தமிழர்களின் வானியல் எய்தல்கள்பண்டைத் தமிழர்களின் வானியல் எய்தல்கள்:

07 - 06 - 2016 தினமணி நாழிதழில் 'இது உண்மையான மாற்றமே ....' என்ற ஓர் அருமையான கட்டுரையை விண்வெளி ஆய்வாளர் திரு. நெல்லை சு.முத்து அவர்கள் எழுதியுள்ளார்கள். அக்கினி நட்சத்திரம் என்ற கருத்தை மேலை அறிவியல் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நம்மூர் வானிலை ஆய்வுத்துறையினர் கூறிக்கொணடிருக்கையில் வானிலுள்ள உடு(விண்மீன்) கூட்டங்களான நாள்மீன்கள் (தமிழில் ஒற்றை மீனை விண்மீன் என்றும் விண்மீன் கூட்டங்களை 27 நாள்மீன்கள் என்றும் குறிக்க சற்கிருதத்தில் இரண்டையும் நட்சத்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். அது போல் இராசி எனப்படும் விண்மீன் கூட்டங்களை ஓரை என்கிறோம். ஓரை என்பதற்கு கூட்டம் என்றொரு பொருள் உண்டு. இந்த ஓரைகள், நாள்மீன்ககள், கதிரவன், நிலவு ஆகிய அனைத்தின் இயக்கங்களையும் தொடர்புபடுத்தி பஞ்சாங்கம் எனப்படும் ஐந்திறத்தை(ஐந்திரமல்ல) உருவாக்கியவர்கள் தமிழர்களே. 365 சொச்சம் நாட்களைக் கொண்ட கதிரவ ஆண்டுமுறையை முதலில் கண்டவர்களும் அவர்களே. அவர்களிடமிருந்தே அது எகிப்துக்கும அங்கிருந்து சூலியர் சீசரால் உரோமுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. தமிழர்கள் முதலில் கடைப்பிடித்த ஆண்டுமுறை திசம்பர் 21ஆம் நாள் கதிரவன் சுறவ(மகர) ஓரையிலினுள் நுழைவதிலிருந்து, அதாவது கதிரவனின் தென்வடல் செலவின் தென்கோடியாகிய மகரக் கோடு எனப்படும் சுறவக் கோட்டுக்கு வந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளில், தொடங்கியது. மாதப் பெயர்களும் ஓரைகளின் பெயர்களாகிய, சுறவம்(மகரம்), கும்பம என்றே இருந்தது. இன்றும் மலையாளக் கொல்லம் ஆண்டுமுறையில் இதைக் காணலாம். இன்றும் நம் ஐந்திறங்களில் ஒவ்வொரு மாதத்திலும் 7 முதல் 9ஆம் நாட்களுக்குள் ஒரு நாளுக்கு நேரே அடுத்த மாதத்துக்குரிய ஓரையின் பெயரைத் தந்திருப்பதைப் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக 2015 - 2016 திருநெல்வேலி வாக்கிய்ப் பஞ்சாங்கத்தில் தலைப்பில் சித்திரை மாதம் - மேச ரவி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கீழே 9ஆம் நாளுக்கு நேரே ரிசாயனம் என்று குறித்திருக்கிறார்கள். ரிசபம் அல்லது இடபம் எனப்படும் விடை ஓரை மேசம் எனப்படும் மேழ ஓரைக்கு அடுத்தது. ஆக, இதில் 23இலிருந்து 25 நாட்கள் வரை வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாடு, நிலநடுக்கோட்டிலிருந்த தென் மதுரை கடல் கொள்ளப்பட்டு தலைநகரம் அதற்கு வடக்கில கபாடபுரத்துக்குப் பெயர, அதற்கு நேர் மேலே கதிர்வன் வரும் நாளில் ஆண்டுப் பிறப்பை மாற்றியதன் விளைவாகும். இப்போது மாதங்களுக்கு ஓரைகளின் பெயர்கள் பொருந்தாமல் போனதால் ஓர் உத்தியைக் கடைப்பிடித்தார்கள். தமிழர்கள் சுறவக் கோட்டை ஒட்டி வாழ்ந்த காலத்தில் சுறவ மாதத்திலிருந்து தொடங்கிய ஆண்டுப் பிறப்பு நில நடுக்கோட்டில் இருந்த தென்மதுரையில் தலைநகரை அமைத்த போது நில நடுக்கோட்டுக்கு நேரே கதிரவன் வரும், அதாவது மேழ ஓரையில் நுழையும் மேழ மாதத்தில் தொடங்குவதாக மாற்றப்பட்டது.

அமைவாசை என்னப்படும் காருவா அன்று கதிரவனும் நிலவும் ஒரே ஓரையில் இருக்கும. மாறாக பௌர்ண்மி எனப்படும் வெள்ளுவா அன்று கதிரவன் இருக்கும் ஓரைக்கு நேர் எதிரில் இருக்கும் ஓரையில், அதாவது கோள்திற(சோதிர) மொழியில் கூறுவதாயின் ஏழாம் இடத்தில் இருக்கும். எடுத்துக்காட்டாக சித்திரை மாதத்தில் வெள்ளுவா அன்று கதிரவன் மேழ ஓரையில் இருக்கும். அநற்கு நேர் எதிரில் துலாம் எனப்படும் துலை ஓரை வருகிறது. நம் முன்னோர் 27 நாள்மீன்களையும் 12 ஓரைகளையும் இணைப்பதற்காக ஒவ்வொர்ரு நாள்மீனையும் நந்நான்கு கால் பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். கால் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளான பாதம் என்ற சொல்லை நம்மவர்கள் பயன்படுத்தி அதைச் சமற்கிருதம் போல் ஆக்கியுள்ளனர். இப்போது 27x4=108, 12ஆல் வகுத்தால் ஒவ்வொரு ஓரைக்கும் 9 கால்கள். அப்படிப் பார்த்தால் மேழ ஓரையில் அசுவதி நாள்மீனிலிருந்து தொடங்கி ஓரைக்கு 9 கால்கள் ஒதுக்கினால் நிலவு இருக்கும் துலை ஓரையின் முதல் நாள்மீன் சித்திரையாக இருக்கும். இப்படித்தான் கபாடபுரத்தில் நிறுவிய புதிய மாதங்களுக்கு நாள்மீன்களில் பெயர் அடிப்படையில் பெயர்களைக் கொடுத்துள்ளார்கள் நம் பண்டையர்கள்.

Related image
2.
தமிழிலுள்ள பல செய்திகளையும் சொற்களையும் கிரேக்கம், இலத்தீனம் அல்லது சமற்கிருதத்திலிருந்து வந்தவை என்று சொல்வதில் தமிழறிஞர் என்று அறியப்படும் உயர்திரு வையாபுரிப் பிள்ளை அவர்களை விட மிக மகிழ்ச்சியடைபவர் விண்வெளி ஆய்வாளர் திரு. நெல்லை.சு.முத்து அவர்கள். அந்த வகையில் கிறித்துவ ஊழிக்கு நூறே ஆண்டுகளுக்கு முன் பிறந்த சூலியர் சீசர் எகிப்திலிருந்து கொண்டு வந்து தமிழர்களின் ஆண்டுமுறையை அறிமுகம் செய்தது வரை திட்டவட்டமான மாதங்களின் பட்டியல் கூட இல்லாத கிரேக்கர், உரோமர்களிடமிருந்து வானிலுள்ள விணமீன்கள், நாள்மீன்கள் பற்றிய செய்திகளை கழகப் புலவர்கள் பெற்றார்கள் என்று கூறுவதற்கு மிகுந்த நெஞ்சுத் துணிச்சல் வேண்டும், அல்லது அறியாமை வேண்டும் அல்லது பிறரின் அறியாமை மீது அளவிறந்த நம்பிக்கை வேண்டும். அதனால்தான், 'சங்க இலக்கியத்திலும் கிரேக்கத்தின் தாக்கம் உண்டு. இங்கு வானியலும் வாழ்வியலும் சேர்ந்தே பதிவாகியது என்று ஓரையான் என்ற உடுக்கூட்டத்தைக் குறிப்பதாக நற்றிணைப் பாடல் ஒன்றைக் காட்டுகிறார். ஓரையான் என்பதை வில் ஏந்திய வேட்டைக்காரன் வடிவம் என்பர். இந்த ஓரையானைப் பற்றி பல ஆண்டுக்ளுக்கு முன்பு படித்த போதே கழக இலக்கியம் கூறும் வல்வில் ஓரியுடன் இந்த ஓரியானை இணைத்துப்பார்த்து ஓரியின் பெயரிலிருந்தே ஓரியானுக்கு கிரேக்கர்கள் பெயரிட்டிருக்கிறார்கள் என நான் நினைத்ததுண்டு. திரு.முத்து அவர்களும் இந்த ஒப்புமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

'இங்கு வானியலும் வாழ்வியலும் சேர்ந்தே பதிவாகியுள்ளது' என்று குறிப்பிடுவதன் மூலம் இலக்கியத்தில், அறிவியலாக மட்டுமல்ல வாழ்வியலில் சராசரி மக்களின் அன்றாட நடைமுறைகளிலும் கலந்திருந்தது என்பதிலிருந்து மக்களின் உன்னிப்புகளிலிருந்து அறிவியல் உருவானதைக் காட்டுகிறது.

கட்டுரையாளர் இங்கு கூறும் ஓரியான் வானியலில் பெருங்கரடி எனப்படும். சிறுகரடி என்று ஓர் உடுக் கூட்டமும் உண்டு அதை சப்தரிசி மண்டலம் என்று சமற்கிருதப் பிரியர்கள் கூறுவர். எங்கள் ஊரில் அதை "ஏழாங்கோட்டை வெள்ளி" என்று கூறுவர். நான் சிறுவனாக இருந்த போது என் தந்தை சந்தைக்குப் போக வேண்டிய நாள் இரவில் சிறுநீர் கழிக்க வெளியில் சென்று வந்தால் சில நாட்களில் ஏழாங்கோட்டை வெள்ளி உச்சியிலிருப்பதாகவும் விடிய இன்னும் நிறைய நேரம் ஆகும் என்று கூறி படுத்துக்கொள்வார். ஏழாங்கோட்டை வெள்ளி வேண்டிய அளவு மேற்கே சாய்ந்துவிட்டால் உடனே பல்தேய்த்துச் சந்தைக்குப் புறப்ட்டுவிடுவார். அப்போதே ஊளையிட்டு அவரோடு சந்தைக்கு வரும் கூட்டாளிகளுக்குக் குரல் கொடுப்பார். தந்தையார் தூங்கிவிட்டால் கூட்டாளிகள் அவர்கள் வீட்டிலிருந்து ஊளையிடுவார்கள். கட்டுரையாளர் ஓரியன் உடுக்கூட்டத்தைச் சிவன் என்று மக்கள் கன்னத்தில் போடுவதை வைத்துத்தான் வாழ்வியலில் கலந்திருந்தது என்கிறார். ஆனால் நான் மேலே கூறிய ந்டைமுறை வழிபாடு என்பதற்கு வெளியே பிழைப்போடும் பின்னிப் பிணைந்திருந்தைக் காட்டுகிறது.

வான் பொருட்களைப் பார்த்து கன்னத்தில் போடும் வேறு நிகழ்வுகளும் உண்டு. காருவா(அமைவாசை) முடிந்து இரண்டு நாட்களுக்கு நாம் நிலவைப் பார்க்க முடியாது, ஏனென்றால் நிலவின் ஒளிப்பகுதி மிக மிக மெல்லிதாக இருக்கும், அத்துடன் கதிரவனுக்கு மிக மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஒளிவீச்சினுள் இது மறைந்து போகும். மூன்றாவது நாள்தான் கதிரவன் மறைந்து நான்குக்கு மேல் ஆறு நாழிகைவரை, அதாவது 96 முதல் 144 நிமிடங்கள் வரை வான் விளிம்புக்கு வெளியே இருப்பதாலும் கணிசமான ஒளிப்பகுதி புவியை தோக்கி வந்துவிடுவதாலும் நிலவு ஓரளவு தெளிவாகத் தெரியும். இருந்தாலும் சிறிது நேரத்தில் மரங்களின் மறைப்புக்குள் சென்றுவிடும். அப்படித் தெரியும் அந்திப் பொழுதில் அதைப் பார்ப்பவர்கள் கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். இதுதான் தொடக்கத்தில் நம் முன்னோர்கள் வகுத்த மாதப்பிறப்பு. பின்னர் நிலவின் இயக்கதைக் கணித்தறிந்து காருவாவுக்கு அடுத்த நாளை மாதப் பிறப்பாக வைத்த பின் அந்த முறை வழக்கொழிந்து கன்னத்தில் போடும் மரபு மட்டும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை தோடர்ந்து இன்று அதுவும் மறைந்துவிட்டது. ஒரு வேளை 'வளர்ச்சி குன்றிய' பகுதிகளில் தொடர்கிறதோ என்னவோ. இவ்வாறு தமிழர்கள் கைவிட்ட மாதப்பிறப்பைத்தான் முகம்மது நபி அவர்கள் தன் சமயத்துக்குப் பரிந்துரைத்துப் போயுள்ளார். ஆனால் அங்கும் இசிரி ஆண்டு தொடங்குவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் பிறப்பைக் கொண்ட பசலி ஆண்டுமுறை இருந்து அதை அக்பர் காலத்தில் இங்கு வேளாண்மை ஆண்டாகப் புகுத்த அதை இன்றும் கடைப்பிடிக்கிறோம். ஏறக்குறைய ஆடி மாதத்தில் வரும் இந்த ஆண்டுப்பிறப்பை ஒட்டித்தான் சமாபந்தி எனும் நிலவரி, வேளாணமைத் தணிக்கைகள் நடைபெறுகின்றன. இதுவும்
தமிழர்களிடமிருந்து ்சென்ற 365 சொச்சம் நாட்களைக் கொண்ட ஒரு கதிரவ ஆண்டுமுறை. முகம்மதிய ஆண்டு பருவ காலங்களைத் தடம் பிடிக்க உதவாது. இந்த ஆண்டு முறை முகம்மதியர்களிடம் இருப்பதால் அவர்கள்தாம் ஆண்டுமுறையையே உருவாக்கினர் என்று உரிமைகொண்டாடுவதும் சரியில்லை.

3
சிவனும் குறியும்(இலிங்கமும்):
ஓரையான் உடுக்கூட்டம் பற்றிக் கூறிய திரு.நெல்லை சு.முத்து அவர்கள் கழகப் பாடலில் கூறப்படும் எழுமீன் ஏழாங்கோட்டை வெள்ளி அல்ல ஓரையானே, அதனையே சிவனாக மக்கள் தொழுததாகப் பாடல் கூறுகிறது என்கிறார். ஏழு விண்மீன்கள் கொண்ட ஓரையான் தொகுதியை அடிப்படையாகக் கொண்டே ஏழுக்கு செவன் என்ற ஆங்கிலச் சொல் வந்தது என்றும் சொல்கிறார். சவம் எனும் பிணம் எரியும் சுடலையில் ஆடுவதற்கும் சிவன் எனும் சொல்லுக்கும் இணைப்பு காட்டுகிறார். எகிப்தில் சிவக்குறி(இலிங்கம்) இருப்பதைக் காட்டிப் பெருமைப்படுகிறார். அதனால்தான் தமிழுக்கு இந்தச் சிறு சலுகை.

ஆனால் உண்மையில் சிவனுக்கும் குறி வழிபாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. குறி வழிபாடு மனித இனப்பெருக்கத்தின் குறியீடு. ஆண் மல்லாந்து படுத்திருக்க, பெண் அவனை மேவுவதன் குறியீடு.

தொடக்கத்தில் மனிதர்களுக்கு ஒரே ஒரு பெற்றோராக தாய் மட்டுமே அறியப்பட்டு இருந்தாள், பிள்ளைப் பேற்றில் ஆணின் பங்கு முதலில் மனிதர்களுக்குத் தெரியாதிருந்தது என்று மாந்த நூலார் கூறுகின்றனர். பல குட்டிகள் போடும் பன்றியின் பின்னால் பன்றிக்குட்டிகள் ஓடுவது போல் மூத்த தாயின் கட்டுப்பாட்டில் அனைவரும் இருந்தனர். குமுக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் ஆண்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தனர். எனவே கூட்டத்திலிருந்து வெளியேறி தனியாகக் காட்டில் வாழ்ந்தனர். ஆண் குழந்தைகள் வளர்ச்சியடையும் போது அவர்களையும் கடத்தித் தங்களுடன் வைத்துக்கொண்டனராம். இக்கூட்டங்களுக்கு தலைமறைவுக் குழுக்கள்(Secret Societies) என்று பெயர் வைத்துள்ளனர். ஆக இப்படி ஆடவரும் பெண்டிரும் பிரிந்து வாழ்ந்ததால் பாலுறவுச் சிக்கல்கள் ஏற்பட தன்னினப் புணர்ச்சி அப்போதுதான் தோன்றியது என்கின்றனர். இதன் அடுத்த கட்டமாக தங்கள் மூலக் குழு தவிர்த்த பிற குழுக்களிலிருந்து பெண்களைத் தூக்கி வந்து தங்களோடு வைத்துக்கொண்டார்களாம். இதிலிருந்துதான் புறமணப் பிரிவுகள் உருவாயின என்கின்றனர். இதன் பிறகுதான் குழந்தைப் பேற்றில் ஆணின் பங்கு அறியப்படடது என்பது மாந்த நூலார் கூற்று. அதற்கு முன் பெண்குறி வணக்கம் இருந்ததற்கு சிலைகளைச் சான்றுகளாகக் காட்டுகின்றனர். நம்மிடம் இருக்கும் குறி வழிபாட்டில் கீழே வட்டமான ஆவுடையார் எனப்படும் பெண்குறியும் நடுவில் மேல் நோக்கி ஆண்குறியும் தனித்தனியாகச் செய்து பொருத்தப்பட்டுள்ளன. ஆண்குறி முன்பு அதன் உண்மையான வடிவில் இருந்ததாகவும் அதை இன்றைய வழவழப்பான உருண்டை வடிவத்துக்கு மாற்றியமைத்தவன் பாணாசுரன் எனப்படும் பாணன் எனவும் அபிதான சிந்தாமணி கூறுகிறது. பழைய வடிவிலான குறிச் சிலைகள் இன்றும் காணப்படுகின்றன. இப்போதைய சிலைகளில் மேல் பகுதியில் ஆண்குறி்யின் மொட்டுப்பகுதியைக் காட்டும் கோடு ஒன்று சுற்றிலும் இருப்பதைக் காணலாம். ஆக குறி என்பது மனித இனத்துக்குப் பொதுவான இனப்பெருக்க அடையாளம் . அதைச் சிவனியர்கள் திருடிக்கொண்டார்கள் என்றே கூற வேண்டும்.

சிந்து வெளி முத்திரையில் ஓக நிலையில் இருக்கும் வடிவம் சிவனுடையது என்று கூறுகிறார்கள், ஆனால் அவ்வுருவத்தின் கால்கள் இருக்கும் நிலைமை எந்த ஓக இருக்கைக்கும் பொருந்தாது. இரு பாதங்களும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டிருக்கும் இந்த இருக்கை செருப்பு தைக்கும் செமமார்களுக்கே உரியது. செம்மார்களின் பெயரிலும் சிவனின் பெயரிலும் சிவப்பு எனும் நிறப்பெயர் இருப்பது ஓர் ஓப்புமை. இயற்கை முறையில் தோல் பதப்படுத்தப் பயன்படும் கரைசல்(பொன்னாவரைத் தோலிலிருந்து எடுக்கப்படுவது என்று கூறுகிறார்கள்) சிவப்பு நிறம் கொண்டதாய் இருப்பதால் அவர்களுக்கு செம்மார் என்ற பெயர் போலும்.

அது மட்டுமல்ல சுடலையில் ஆடியதும் சிவனல்ல என்பது சிலப்பதிகாரக் கூற்றால் தெரிகிறது.

பாரதியாடிய பாரதி அரங்கத்து என்ற கடலாடு காதை வரிக்கு பாரதி(பாரதி -- பைரவி) ஆடினமையால் பாரதி அரங்கமென பெயர்பெற்ற சுடுகாட்டிலே என்று நா.மு.வேங்கடசாமியார் பொருள் கூறுகிறார். ஆக காளியுடைய அணிகளையும் ஆட்டரங்கையும் கூடப் பிடுங்கி சிவனுக்குக் கொடுத்துள்ளனர். அவளைச் சிவனுக்குத் திருமணமும் செய்துவைத்துள்ளனர். ஆனால் எந்தக் கோயிலிலும் அவர்கள் இருவரையும் கருவறைக்குள் ஓருசேர அமர்த்த முடியவில்லை.

இப்போதைக்கு, சிவக்குறி எனப்படும் இந்த அடையாளம் இருப்பதால் மட்டும் எகிப்திலோ வேறெங்கோ சிவனியம் பரவி இருந்ததற்குச் சான்றாகாது. தமிழர்களின் நாகரிகம் அங்கெல்லாம் பரவியிருந்ததற்கு மட்டும் சான்றாகும் என்பதைக் கூறிவிட்டு பிற செய்திகளைத் தொடர்வோம்.

4
சிவனின் தோற்றம் புவியின் வட, தென் முனைகளில் வாழும் மஞ்சள் நிற மங்கோலியர்களுடையது. காளியின் தோற்றம் நிலநடுக்கோட்டை அடுத்த பகுதிகளில் வாழும் வேடர் அல்லது திராவிடர் என்று மாந்த நூலார் குறிப்பிடும் மனித வகையைச் சார்ந்தது.

புவியில் முதன்முதலில் உயிரினங்கள் தோற்றம் பெற்றதே தென்முனையைச் சுற்றி உருவான புவியின் நிலப்பரப்பின் தொகுதியான பாஞ்சியாவில்தான். அங்குதான் கொதிக்கும் குழம்பாக இருந்த புவி உயிரினங்களின் தோற்றத்துக்கு வாய்ப்பான குளிர் நிலையை முதலில் அடைந்தது. கதிரவனின் வெப்பம் அங்கு எட்டாததே அதற்குக் காரணம்.

ஏறக்குறைய 25 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய ஒரு வால்மீனால் பாஞ்சியா உடைந்து இன்று ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த யூரேசியாவில் இந்தியக் கண்டத்தட்டைக் கழித்தால் கிடைக்கும் நிலப்பரப்பாகிய லாரேசியா வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான் அன்றார்ட்டிக்காப் பகுதியில் இருந்த உயிர் வகைகளிலிருந்து மனிதனின் திரிவாக்கம் தொடங்கி முழுமை பெற்றது. முதன்முதலில் மனித நாகரிகம் தொடங்கியது அன்றார்ட்டிக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான்.

மண்டையோடுகள் கிடைத்ததாகவும் பானையோடுகள் கிடைத்ததாகவும் மரபணு ஆய்வுகள் என்றும் கூறி மனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான் என்று அமெரிக்கா தன் கையாட்கள் முலம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனிதப் பதிவுகளான நம் தொன்மங்கள் தரும் செய்திகளின் படி அன்றார்ட்டிக்காவை அடுத்துள்ள பகுதிகளில்தான் மனித நாகரிகம் தோன்றியது என்பது தெளிவாகிறது.

தக்கன் என்றும் தக்சன் என்றும் கூறப்படும் தெக்கன் தன் மகள்களாகிய 27 நாள்மீன்களையும் நிலவுக்கு மணமுடித்தான் என்கிறது தொன்மம். நாள்மீன்களின் நகர்வோடு நிலவின் இயக்கதைப் பொருத்தி வரையறுத்தான் என்பது தவிர இதற்கு வேறு என்ன பொருள்?

காலம் என்ற சொல்லின் அடிப்படையில் அழைக்கப்படுபவன் காலன். அவன் தென்றிசைக் கடவுள். யாமம் எனும் சிறுபொழுதுகளின் அடிப்படையில் அறியப்படுபவன் எமன். யாமதிசை என்பது தென்திசையைக் குறிப்பிடும். ஆக, இவர்களின் பெயர்களே வானியல் அடிப்படையில் அமைந்துள்ளன. நமது வானியல் அறிவின் தொடக்கமும் அங்குதான் நடந்துள்ளது.

தேவர்களுக்கு வியாழனான பிரகசுபதியும் அசுரர்களுக்கு வெள்ளியாகிய சுக்கிரனும் குருக்கள் என்கிறது தோன்மம். இவ்வாறு நம் கதிரவனைச் சுற்றிவரும் நம் புவியைப் போன்ற இரண்டு கோள்களைக் குருவாக இரண்டு மக்கள் குழுவினர் கொண்டுள்ளனர் என்பதற்கு என்ன பொருள்? அந்தந்த குறிப்பட்ட கோள்களின் இயக்கங்களின் அடிப்படையில் அந்தந்த மக்கள் குழுவினர் தங்கள் நாகரிகத்தை அமைத்துக்கொண்டுள்ளனர் என்பதுதானே? இந்த அடிப்படையில் ஏறக்குறைய 12 ஆண்டுகளில கதிரவனைச் சுற்றும் வியாழனின் 5 சுழற்சிகள் கொண்ட 60 ஆண்டுச் சுழற்சியில் வானிலையைக் கணிக்கும் ஓர் ஐந்திறத்தை நாம் அமைத்துள்ளோம். அப்படியானால் வெள்ளியின் சுழற்சியின் அடிப்படையில் ஆண்டுமுறையை அமைத்துக்கொண்டவர்கள் யார் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசு உருவானது. அவர்கள் சிந்து சமவெளியைக் கைப்பற்றி தங்கள் பேரரசின் 23ஆம் மாநிலமாக ஆக்கிக்கொண்டனர். தங்களை அசுரர் என அழைத்துக்கொண்ட அவர்கள் சிந்து சமவெளி மக்களைத் தேவர்கள் என்றனர். தேவர் என்ற சொல்லுக்கு அடிமைகள் என்றும் பொருள் கூறினர். ஒருவேளை பாரசீகர்கள் கடைப்பிடிக்கும் ஆண்டுமுறை வெள்ளியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டதாயிருக்குமோ என்று எண்ணினேன். ஆனால் அண்மையில் பாலித் தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்ற ஆதவன் என்பவர் இந்துத் தீவுஎன்ற தலைப்பில் இணையத்தில் இட்டிருந்த பதிவு என் தேடலுக்கு விடை தந்தது. பாலித்தீவில் 210 நாட்களைக் கொண்ட ஆண்டுமுறை இருப்பதாகவும் அதன் அடிப்படையில்தான் அங்கு வேளாண் நடைமுறைகளும் முகாமையான திருநாட்களும் கொண்டாடப்படுகின்றன என்ற செய்திகள் அந்த இடுகையிலிருந்து கிடைத்தன. வெள்ளிக் கோள் கதிரவனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 224 சொச்சம் நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலித்தீவு மக்கள் தங்களை அசுரர்கள் என்று கூறிக்கொள்வதில்லை, நம்மைப் போல் ஆனால் தீண்டாமை இல்லாத நால்வருண முறையை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். பூசகர் உட்பட அனைவருக்கும் புலாலுணவுதான் முகாமையானது. நம் குமுகத்தில் சமணக் கிறுக்கர்கள் செய்த பண்பாட்டுச் சீரழிவுகள் அங்கு இல்லை. இதில் முகாமையாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் சிலப்பதிகாரத்தில் வரும் கடற்கோள் பற்றிய செய்திக்கு உரை எழுதிய அடியார்க்குநல்லார் கடற்கோளில் முழுகியதாகக் கூறிய நிலப்பரப்புகளில் தென்பாலிமுகம்என்பதும் ஒன்று.

தக்கன்தான் சிவனின் வடிவங்களில் ஒன்றாகக் கூறப்படும் தச்சணாமூர்த்தி எனும் படிவத்தின் மூல வடிவம என்று கருத இடமுள்ளது. ஏற்கனவே இருந்த தக்கன் வழிபாட்டைச் சிவன் வழிபாட்டைக் கொண்டு அழிக்கத்தான் தக்கனை அவன் மகளே அழித்தாள் என்ற தொன்மக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவ்வழிபாடு அழியவில்லை. தக்கன் மாட்டுத்தலையுடன் மீட்கப்பட்டதாக குமரி நெல்லை மாவட்டங்களில் வழிபடப்படும் சுடலைமாடன் கதை கூறுகிறது. அது போல் சிவன் காலனை மிதித்ததாகக் கூறப்படும் கதையை மீறி இன்றும் அம்மாவட்டங்களில் காலன் வழிபாடு நடைபெறுகிறது. சிவனால் எரித்து அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் முப்புராதிகளை, அவர்களின் வளர்ப்புத்தாயான முப்புராதியம்மனை வழிபடுவதன் மூலம் தங்களை அறியாமலே அம்மாவட்ட மக்கள் வழிபடுகிறார்கள்.

லாரேசியா கண்டத்தட்டு வடக்கு நோக்கி நகர்ந்த நிலையில் வால்வெள்ளியின் தாக்குதலால் புவிக்குழம்பாகிய மக்மாவில் உருவான அலைவுகளால் தென் கண்டம் உடைந்து ஆத்திரேலிய இந்தியக் கண்டத்திட்டாக வடக்கு நோக்கி நகர்ந்தது. அதிலுள்ள மக்கள் நிலநடுக்கோட்டின் வெப்பத்தால் கருப்பு நிறமடைந்தனர். நாகரிகத்திலும் பிற்பட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் தென் கண்டத்திலுள்ளவர்கள் வடக்கிலிருந்த மக்களின் வளமான நிலப்பரப்பின் மீது கப்பல்களில் வந்து தாக்குதல்கள் நடத்தினர். வான் விளிம்பில் கடல் மீது கப்பல்களில் தோன்றி வெளிப்பட்டு வந்து அதேபோல் மறையும் இவர்களைப் பார்த்து வடக்கிலுள்ளோர் இவர்கள் பாதலத்திலிருந்து வருவதாகக் கருதினர். இந்திலையில் வடக்கிலிருந்த மக்களிடையில் வாழ்ந்த அகத்தியர் மரபினர் கடலில் மரக்கலம் செலுத்தும் தொழில்நுட்பத்தைப் புகுத்தினர். இந்த நிகழ்வுதான் அகத்தியர் கடல் நீரைக் குடித்து அசுரனை வெளிப்படுத்திக் கொன்றார் என்ற தொன்மக் கதையின் பின்னுள்ள வரலாறு.

இப்போது இவ்விரு நிலத்து மக்களும் கடலைக் கூட்டாக ஆண்டனர். உலகமெல்லாம் தம் ஆளுகையினுள் கொண்டுவந்தனர். இதன் மூலம் பல புதிய அறிவியல் தொழில்நுட்பங்களைப் படைத்தனர். இந்நிகழ்வை பால்கடலைக் கடைந்த தொன்மக் கதை தருகிறது.

திருமால் ஆமையாகப் படுத்துக்கொள்ள மந்தார மலையை அதன் முதுகு மீது வைத்து நிலவைக் கட்டுத் தறியாக்கி வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி ஒரு புறம் அசுரரும் மறுபுறம் தேவரும் இழுத்து பால்கடலைக் கடைந்தனராம். முதலில் நஞ்சும் பின்னர் நிலவு, திருமகளாகிய இலக்குமி என்று இறுதியில் அமுதமும் கிடைத்தனவாம். இதில் கட்டுத்தறியாகிய நிலவே கடையப்பட்ட கடலிலிருந்து வெளிப்பட்டது எப்படி? இதற்கு ஒரே விளக்கம்தான் கூற முடியும். இரவில் திசையை அறியவும் நாளை அறியவும் பயன்பட்ட நிலவின் மூன்றாம் பிறையிலிருந்து கணக்கிடப்பட மாதம் இப்போது முதல் பிறையிலிருந்தே கணக்கிடும் அறிவியலைப் புரிந்துகொண்டதுதான் இந்த இரு நிலவுகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு. முதலது முகம்மது நபி குப்பையிலிருந்து தோண்டியெடுத்த இன்றைய முகம்மதிய ஆண்டுமுறை. புதியது தமிழக மக்கள் 365 சொச்சம் நாட்கள் கொண்ட கதிரவ ஆண்டுமுறையை வகுத்த பின் குப்பையில் வீசிவிட்ட, இந்தியாவின் பிற பகுதிகளிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் கடைப்பிடிக்கும் பல்வேறு கதிர் நிலவாண்டு(lunisolar)முறைகள்.

5
முந்தைய இடுகையில் ஒரு முகாமையான செய்தி விட்டுப்போய்விட்டது. இராவணனின் தென்னிலங்கை சுறவக் கோட்டில் அல்லது அதை அடுத்து தெற்கில் இருந்தது. அதனாலதான் அவன் கதிரவனைத் தன் நாட்டில் வரவிடாமல் தடுத்தவன் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது. கதிரவன் சுறவக்கோட்டுக்குத் தெற்கில் செல்லால்லவா? அங்கிருந்த இராவணனை இங்கிருக்கும் தனுசுக்கோடியிலிருந்து பாலம் கட்டிக் கடலைக் கடந்து போர் புரிந்து வென்றார்களாம். கிரேக்கர்களும் புத்த, அம்மணங்களால் முடக்கப்பட்ட வடக்கத்திப் பார்ப்பனர்களும் தமிழகத்தின் மீதுள்ள தங்கள் காழ்ப்பை வெளிப்படுத்தக் கட்டிய கதை இராம இராவணப் போர். இராமன் சோழர்களின் மூலவனான சிபி எனப்படும் செம்பியன் வழி வந்த தமிழன். அவனுக்கும் இராவணனுக்கும் பெரும் கால இடைவெளி உள்ளது.

குறி வணக்கம் மனித இனப்பெருக்கத்தின் குறியீடு என்று சொன்னேனல்லவா? அதைவிட மேம்பட்ட, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஓர் இனப்பெருக்கக் குறியீட்டைத் தமிழர்கள் வகுத்திருக்கிறார்கள் தெரியுமா? அதுதான ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருக்கும் பாம்புகளின் புணையல். பாம்புகள் புணர்வதைப் பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் தொலைவுக்குச் சென்று இரண்டும் ஒன்றையொன்று நோக்கி ஓடி, அதாவது பாய்ந்து வந்து ஒன்றை ஒன்று சுற்றி நிமிர்ந்து நிற்கும், பின்னர் பழையபடி தொலைவுக்குச் சென்று திரும்பி வந்து பிணைத்துக்கொள்ளும். இப்படி இரண்டு மணி நேரத்துக்கு மேல் தொடரும். பெரும்பாலான பிற உயிரினங்களிலும் ஆண் பெண்ணைத் துரத்துவதும் பெண் தப்பி ஓட முயலுவதும்தான் நிகழும். பாம்பு இந்த விதிக்கு விலக்கானது. இதற்கு உயிரியல் விளக்கம் என்ன?

பாம்பின் உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பகுதி உடல், ஒரு பகுதி வால். உடல் பகுதி முடியும் இடத்தில் அன் புணர்வு உறுப்புகள் உள்ளன. அதனால் வால் பகுதியைத் தரையில் வைத்து உடலை அதனால் நேரே உயர்த்த முடியும். பெரும்பாலும் சுவர், மரம் போன்றவற்றில் தாங்குதல் இருந்தால் உடல் பகுதியை உயர்த்தி அந்த உயரத்துக்குள் படி அல்லது மரக்கிளை போன்ற பிடிமானம் ஏதாவது இருந்தால் அதைப் பற்றிக்கொண்டு மேலே ஏறும் அல்லது இறங்கிவிடும். கருநாகம் மட்டும் எந்தப் பிடிமானமும் இன்றி வால் பகுதியைத் தரையில் வைத்து உடல் பகுதி முமுவதையும் நட்டுக்குத்தாக நிறுத்தி படமெடுத்தாடத் தக்கது. இந்த வகையில் பாம்புகள் இரண்டும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு எழுந்து நின்று புணர்வுறுப்புகளைப் பொருத்த நடத்தும் போராட்டமே இந்த நீண்ட நேரச் செயற்பாடு. இந்த வகையில் பண்டைத் தமிழர் பிணைந்து நிற்கும் பாம்புகளின் உருவத்தை இனப்பெருக்கத்தின் குறியீடாகக் கொண்டு வணங்கினர். இன்றும் அரச மரங்களின் அடியில் இத்தகைய பாம்புகளின் கற்சிற்பங்கள் இருப்பதையும் அதை மக்கள் வழிபடுவதையும் காணலாம். இந்தக் குறி தமிழகத்தினுள் உள்ள ஒரு வழிபாடாக மட்டும் நின்றுவிடவில்லை, மருத்துவத்துறையின் அடையாளமாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் மனையறம்படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் தங்கள் முதலிரவின் போது நிகழ்ந்தவற்றை தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார் நாமம் தொலையாத இன்பமெல்லாம் துன்னினார்’ (சினத்தை உடைய பாம்புகள் ஒன்றுபட்டுத் தழுவினாற்போல விட்டு நீங்காராய் அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர்) என்கிறார் இளங்கோவடிகள். அதாவது கோவலன் கண்ணகியை விட்டு மாதவியை நாடியதற்கு காரணம் தேடிய சென்ற நூற்றாண்டு தமிழறிஞர்கள் கண்ணகிக்கு காம நாட்டம் குறைவு என்றெல்லாம் கூறினர். அத்தகைய கருத்துக்கு இடமில்லாமல் தெளிவாகக் கூறிவிட்டார் இளங்கோவடிகள். விலங்குகள் உடலுறவு கொள்வதை மனையாம் பொத்துதல்என்பர் குமரி மாவட்டத்தில். இந்த வழக்குக்கும் இளங்கோவடிகள் கையாண்டிருக்கும் மனையறம்படுத்தல்என்பதற்கும் ஒப்புமை இருப்பது போல் தோன்றவில்லை?

இனி காளி வழிபாட்டைச் சிவன் வழிபாட்டால் அகற்ற முயன்றதன் தோல்வியைப் பார்ப்போம். அனைத்துச் சிவன் கோயில்களிலும் சிவனின் அடையாளமாகக் கருதப்படும் குறிக்கு ஒரு திருமுன்னும்(சந்நிதி) காளி அல்லது பார்வதிக்கு தனியாக வேறொன்றும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் தில்லைச் சிற்றம்பலத்தில் இருவரையும் ஒரு திருமுன்னில் வைக்க முயன்றதன் தோல்வியாகத்தான் அங்குள்ள வெட்ட வெளி இருக்கிறது. அங்கு செய்யப்படும் விளக்கு அலங்காரம் இரு சிலைகளுக்குப் பொருந்துவதாக எஞ்சி நிற்கிறது, ஆனால் சிலைகள் மக்களின் எதிர்ப்பால் அகற்றப்பட்டு அங்கு இருக்கும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையைத்தான் சிதம்பர மறையம்(இரகசியம்) என்கிறார்கள். 2010ஆம் ஆண்டில் விசய் தொலைக்காட்சியில் ஓளிபரப்யாகிய நிகழ்ச்சி ஒன்றில்(நிகழ்ச்சியின் பெயர் நடந்தது என்னஎன்று நினைவு) கூறிய செய்திகளிலிருந்து என்னால் இந்த முடிவுக்கு வர முடிந்தது.

சீர்காளியில் கூட சிவன் கோயிலைச் சுற்றியிருக்கும் தெருக்களுக்கு பிடாரி வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்குத் தெருக்கள் என்றே பெயர். அதே வேளையில் அக்கோயிலின் சுற்றுச்சுவரின் வெளியே தென்மேற்கு மூலையில் இருக்கிறதுபுற்றடி மாரியம்மன்கோயில். பிடாரி என்பது பாம்பாட்டியான பிடாரனின் பெண்பால்தானே! புற்று பாம்புக்கு உரியதுதானே! ஆக, பிடாரியை அப்புறப்படுத்திவிட்டு சிவன் கோயிலை நிறுவியிருக்கிறார்கள். இந்த நடைமுறையை கீழக்கடற்கரை நெடுகிலும் பார்க்கலாம். குமரி மாவட்டத்தில் புத்தேரி என்ற ஊரின் உண்மையான பெயர் புற்றேரிதான். அங்குள்ள ஒரு கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சரக்கிகளில் செம்மண் அடித்து அதில் கொஞ்சம் எடுத்து ஒவ்வொருவரும் அங்கிருக்கும் மண்மேட்டில் பூசி வழிபடுகிறார்கள். நாகர்கோயில், நாகப்பட்டினம், நாகூர் போன்ற பெயர்களும் இதை உறுதி செய்யும். ஒரு வேளை குமரிக் கண்டத்திலிருந்து தமிழகத்தினுள் கரையேறிய சோழர்கள் அல்லது அவர்கள் வழி வந்தவர்கள் இதைச் செய்திருக்கலாம்.

தமிழகத்தில் சிவன் வழிபாடு மக்கள் வழிபாடாக திருமால் வழிபாட்டுக்குப் பின்னால்தான் தோன்றியது என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் நகரங்களிலும் அரண்மனைகளுக்குள்ளும்தான் சிவன் வழிபாட்டைக் காட்டுகிறார் அடிகள். ஆனால் மாங்காட்டு மறையோன் எனப்படும் மாலியன்(வைணவன், அவன் மங்களூரைச் சேர்ந்த நம்புதிரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது). திருவரங்கத்தில் படுத்த கோலத்திலும் வேங்கடத்தில் நின்ற கோலத்திலும் இருக்கும் திருமாலைக் கண்டு வணங்கச் செல்வதாகக் கூறுகிறான்.

தமிழகத்தில் சிவன் வழிபாடு மக்கள் வழிபாடாக சம்பந்தர், அப்பர் காலத்தில்தான் உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. மக்களின் வழிபாட்டுக்காக ஆங்காங்கே நிறுவப்பட்டு கைவிடப்பட்டிருந்த குறிகள் இருந்த இடங்களைச் சிவன் கோயில்களாக அவர்கள் அடையாளம் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சிவன் புல்லுக்குள் இருந்து கூப்பிட்டான், புதருக்குள் இருந்து கூப்பிட்டான் என்று கூறியிருப்பதன் பொருள் இதுதான். இப்படித்தான் குறியைத் திருட்டுத்தனமாக சிவக்குறியாக்கியிருக்கிறார்கள். இதற்கும் அவர்களுக்கு ஒரு ஞாயம் இருக்கிறது. அம்மண ஒற்றர்கள் களப்பிர ஆட்சியாளர்கள், பின்னர் பல்லவர்கள் காலங்களில் தமியகத்தை அளவற்றுச் சுரண்டியதால் அவர்களது சமய ஊடுருவலைத் தடுக்க தமிழ் மண் சார்ந்த ஒரு
சமயம் வேண்டுமென்பதற்காக வாணிகக் குலப்பெண்ணான காரைக்காலம்மையார் தொடங்கிவைத்த சிவ வழிபாட்டை விரிவுபடுத்த இத்திருட்டை அவர்கள் கையாண்டிருக்கலாம்.

கூடி விளையாடும் மகளிரை ஓரை மகளிர் என்று கூறுவது கழகக் காலத் தமிழ் வழக்கு. தற்போது ஆங்கில வழக்கில் டீம் என்பதற்கு இணையானது இது. அதனால்தான் விண்மீன் கூட்டத்தை ஓரை என்றனர். அந்த ஓரைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் காலப் பகுப்புகளையும் ஓரை என்றனர். அதுதான் hora என்று கிரேக்கத்தினுள் நுழைந்து ஆங்கிலத்தில் hour ஆகி நிற்கிறது. தமிழ்ஆறிஞர்கள் பலரும் horaவிலிருந்துதான் ஓரை வந்தது என்று தலைகீழ்ப் பாடம் படிக்க திரு.நெல்லை சு.முத்து அவர்கள் சரியாகத் தடம் பிடித்துள்ளார். ஓரை என்பதை நாழிகைகள் கொண்ட நாளில் 24 இல் ஒன்று கொண்ட இன்றைய ஒரு மணி நேரமாகவே அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஆக, ஓரையை ஓரியனிலிருந்து வரவழைத்து ஓரை சிவனின் வடிவம் எனக்காட்டி சிவன் வழிபாடு கழக இலக்கியக் காலங்களில் மக்களின் பொது வழக்காக இருந்தது என்பதற்காகவே இத்தனை விட்டுக்கொடுப்புகள்.

நான் முறையாக வானியல் படித்தவனல்ல, படித்தவற்றை விடப் பார்த்தவையே மிகுதி. கத்திரி வெய்யில் பற்றி எழுத வந்தவர் மேலே நான் குறிப்பிட்டவற்றைக் கூறிவிட்டு கத்திரி வெய்யில் காலத்தில் நேர் மேலே வரும் ஓரைகளில் இருக்கும் சில விண்மீன்கள்தாம் இந்த வெய்யிலுக்குக் காரணம் என்று கூறுகிறார். அந்த விண்மீன்களைப் பற்றி நான் அறியேன். ஆனால் அதைவிட இன்னொன்று எனக்குத் தெரியும். கதிரவன் ஏறக்குறைய 365¼ நாட்கள் கொண்ட ஆண்டுக்கு ஒரு முறை ஏறக்குறைய 23½
° வடக்கிலும் தெற்கிலும் சென்று திரும்புவது போல் நமக்குத் தோன்றுமாறு புவி ஒரு நாளுக்கு ஒருமுறை தனக்குத்தானே சுற்றவும் ஆண்டுக்கு ஒரு முறை கதிரவனைச் சுற்றவும் செய்கிறது. இவ்வாறு 365¼ நாட்களில் ஏறக்குறைய 94 பாகைகள் செல்கிறது. எனவே ஒரு பாகையைக் கடக்க அது எடுத்துக்கொள்ளும் ஏறக்குறைய நாட்கள் 3.89. நாகர்கோயில் 8° 11'இல் இருக்கிறது. மார்ச்சு 21ஆம் நாள் நிலநடுக்கோட்டை அடையும் கதிரவன் நாகர்கோயிலுக்கு வர ஏறக்குறைய 32 நாட்கள் எடுத்துக்கொள்ளும், அதாவது ஏப்பிரல் 22ஆம் நாள் வந்து சேரும். தமிழகத்தின் வடகோடியிலிருக்கும் பழையகாட்டின் அக்கக் கோடு 13°25'. இந்தத் தொலைவை எடுத்துக்கொள்ளும் காலம் 30 நாட்கள், அதாவது மே 22ஆம் நாள். ஆக தொடக்கத்தில் ஒரு 12 நாட்களும் முடிவில் ஒரு 4 நாட்களும் பிழை உள்ளது(இந்த ஆண்டு அக்கினி நட்சத்திரம் மே 4இல் தொடங்கி 27இல் முடிவடைந்தது.) இதே கால கட்டத்தில் கதிரவன் நுழையும் நளி(விருச்சிக) ஓரையில் இருக்கும் பெரிய விண்மீனான கத்திரி(சீரியசு)யும் கதிரவன் இப்போது புவிக்கு மிக நெருங்கி வருவதாலும் வெப்பம் மிகுகிறது என்கிறார் திரு.நெல்லை சு.முத்து அவர்கள். அது மட்டுமல்ல கழக இலக்கியங்களில் ஓரைகளிலும் நாள்மீன்களிலுமுள்ள விண்மீன்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதையும் எடுத்துக்கூறியுள்ளார். ஆக, வானியல் பற்றிய விரிவான நூல்கள் கி.மு.4இலிருந்து கி,பி.2ஆம் நூற்றாண்டுக் காலங்களில் வழக்கில் இருந்தது தெரிகிறது. அவை கடலால் கொள்ளப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை, பின்னால் வந்தவர்களால் பொதுமக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று சமற்கிருதத்தில் பெயர்க்கப்பட்டு மூலநூல்கள் அழிக்கப்பட்டிருக்கும். இதைச் செய்தவர்கள் பெரும்பாலும் அம்மணர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள்தாம் தமிழகத்தில் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஒரே ஒரு கட்டடம் கூட மிஞ்சாமல் அரண்மனைகள், கோட்டைகள், வீடுகள் என்று அனைத்தையும் அழித்து விளையாடியுள்ளார்கள். ஐந்திரத்தைக் கூட அவர்களது பரமாகத்தில் மறைத்துவிட்டிருப்பதாக சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் கவுந்தி அடிகள் வாய்மொஒழியாக இளங்கோவடிகள் பதிந்திருக்கிறார். 

கதிரவன் தமிழகத்தின் நேர் மேலே இருக்கும் கத்திரி காலத்தில் வட மாநிலங்களில் வெய்யில் தாங்காமல் சாகிறார்கள். தமிழகத்தின் இரு புறங்களிலும் உள்ள கடல்கள் வெப்பத்தைத் தணிக்க உள் மாநிலங்களில் வெப்பம் மிகுந்துவிடுகிறது, தமிழகத்து வெய்யிலூராகிய வேலூரில் போன்று.

6
கதிரவன் நில நடுக்கோட்டில் வரும் நாளான மார்ச்சு 21 அன்றும் அதற்கு முன் பின்னாக இரண்டு மூன்று நாட்களிலும் கருவறைச் சிற்பத்தில் கதிரவ ஒளி விழுமாறு தமிழகத்தின் பல கோயில்களில் கூரையில் ஓட்டை அமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல கதிரவன் கோயிலுக்கு நேர் மேலே வரும் நாளில் கருவறைச் சிலை மீது கதிரவன் கதிர்கள் படுமாறும் சில கோயில்களில் கூரை ஓட்டைகளை அமைத்திருக்கிறார்கள். இதற்கான வானியல் - தொழில்நுட்பங்களை கோயில் ஆகமங்களில் மொழிமாற்றிப் பதிந்துவைத்திருக்கிறார்கள். அவற்றைத் தமிழ்ப்படுத்தி வெளியிடுவது தமிழார்வமும் வசதி வாய்ப்புகளும் இருப்போர் கைக்கொள்ள வேண்டிய இன்றியமையாப்பணி.

நம்மில் படித்தவர்களுக்கு ஒரு மனக்கோளாறு. தமிழக மரபுகளில் பதிந்திருக்கும் அறிவியல் சார்ந்த செய்திகளை ஏற்க மறுப்பதும் அவற்றில் ஏதாவது குற்றங்குறை காண்பதும். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் முன் வரை தினமணி நாளிதழில் ஞாயிறு இணைப்பாக தினமணி சுடர் வந்துகொண்டிருந்தது. அதில் ஒருவர், சுந்தரம் என்று நினைவு, வானியல் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அதில் நம் நாட்டு நாள்மீன்கள் பகுப்பில் பிழைகள் இருப்பதாகக் கூறினார். பல நாள்மீன்களில் இருப்பனவாகக் கூறப்படும் விண்மீன்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இல்லை என்பது அவரது குற்றச்சாட்டு. இது பொருளற்ற ஒரு குற்றச்சாட்டு என்று அவருக்கே புரிந்திருக்கும், ஏனெறால் ஓரைகளிலும் நாள்மீன்களிலும் அடங்கியிருக்கும் விண்மீன்கள் இங்கிருந்து பார்க்கும் போது அவை ஒரே தளத்தில் சேர்ந்தியங்குபவையாகத்தான் தோன்றும். ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று எட்டாத தொலைவுகளில் வெவ்வேறு விரைவுகளில் சில நேர்வுகளில் எதிர்த்திசைகளில் கூட் நகர்ந்துகொண்டிருக்கும். அதனால் அவற்றில் சில இங்கிருந்து நோக்கும் போது அதனதன் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டதாகத் தோன்றத்தான் செய்யும். அதனால் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை. அவற்றை நம் முன்னோர்கள் வரையறுத்த நோக்கம் அறிவியல் வளர்ச்சியால் கருவிகளால் இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இடப்பெயர்ச்சிகளும் நகர்வுகளும் நமக்கு ஓர் இன்றியமையாச் செய்தி்யைத் தர முடியும். ஒரு விண்மீன் கூட்டத்திலுள்ள விண்மீன்களின் வானை வலம் வரும் திசையும் விரைவும் தெரியுமானால், இந்த இடப்பெயர்ச்சிகளுக்கு எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும் என்பதை அறியலாம். அதிலிருந்து நம முன்னோர்கள் இவற்றை இனங்கண்டு வரையறுத்த காலத்தைக் கணித்துவிடலாம்.. இன்றைய வானியல் வளர்ச்சி இத்தகைய விண்மீன்களின் இயக்க திசையுடன் விரைவையும் அறிந்து வைத்திருக்கிறதா என்ற செய்தி எனக்குத் தெரியவில்லை. அப்படி அறிந்து வைத்திருந்தால் இந்த அடிப்படையில் நம் பண்டையரின அக்கண்டுபிடிப்புகளின் காலத்தை வரையறுப்பதோடும் மனித வரலாற்று வரைவில் அது இன்றியமையாத ஓர் எல்லைக்கல்லாகவும் இருக்கும். இதற்கு வாய்ப்புள்ள விண்வெளி ஆய்வாளர் திரு.நெல்லை சு.முத்து அவர்களும் வாய்ப்புள்ள பிறரும் இத்தகைய ஆய்வில் ஈடுபட வெண்டும். .

ஒரு பிற்சேர்க்கை
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் தினமணி சிறுவர் மணியில் வந்த செய்தி, பண்டைச் சீனர்கள் தங்கள் கப்பல்களில் எண்ணெய்யில் மிதக்கும் ஆமை வடிவிலான திசைகாட்டிக் கருவிகளைப் பயன்படுத்தினர் என்பது. அதைப் படித்ததும் எனக்கு திருமாலின் கூர்ம, அதாவது ஆமைத் தோற்றரவு(அவதார)க் கதை நினைவுக்கு வந்தது. தமிழக முன்னோர்களும் எண்ணெய்யில் மிதக்கும் ஆமை வடிவ காந்த ஊசியைப் பயன்படுத்தியிருப்பர் என்ற முடிவுக்கு வந்தேன். பின்னாளில் ஒரிசா பாலு எனப்படும் திரு பாலசுப்பிரமணி அவர்களிடம் இந்தக் கருத்தைச் சொன்ன பின்னர் தன் களப்பணியில் உலகக் கடற்பாதைகள் எல்லாம் கடலாமைகள் செல்லும் தடங்களில்தான் அமைந்துள்ளதைக் கண்டதாக அவர் கூறினார்.

உரிய அணுகலுடன் ஆய்வு செய்தால் தொன்மங்களிலிருந்து வரலாற்றுச் செய்திகளையும் அறிவியல் எய்தல்களையும் கூத் தடம் பிடிக்கலாம். ஆனால் தல புராணம் எனப்ப்டுபவற்றில் இத்தகைய நம்பகத்தன்மை இல்லை. அவை வெறும் சந்தை விளம்பரங்களே. ஆனால் அவற்றிலும் சில வியப்பூட்டும் செய்திகள் இல்லாமல் இல்லை. கும்பகோணம் மகாமகம் பற்றிய தலபுராணத்தில் உலகம் பெரும் வெள்ளததால் அழிய இருப்பது அறிந்து அனைத்து உயிர்வகைகளின் விந்தணுக்களையும்(மரபணுக்களா?) அமுதத்தில் பாதுகாத்து கும்பத்தில் வைத்து கும்பகோணத்தில் பாதுகாத்ததாக்க் கூறப்பட்டிருக்கிறது. ஆக அமுதம் சாவா மருந்து என்ற விளக்கத்திலிருந்து உயிரணுக்களைப் பாதுகாக்கும் ஒரு நீர்மம் என்ற ஒரு புது விளக்கம் கிடைக்கிறது.. இன்று அமெரிக்கா உலகின் அனைத்து மரபணுக்களையும் திரட்டிவைத்துக்கொண்டு மரபணு மாற்றுப் பயிர்களால மரபுப் பயிர்களைக் களத்திலிருந்து அகற்றி உலகமக்களை மிரட்டுவது போல் முன்பும் யாரோ செய்திருப்பார்களோ, அதில் ஏற்பட்ட போட்டியில் அசுரரும் தேவரும் போட்டியிட இறுதியில் அசுரர்கள் அதை அழித்துவிட்டார்களோ என்றும் தோன்றுகிறது.

யூதர்களின் உலகத் தோற்றக் கதையில் சாவில்லாதவனாகக் கடவுள் படைத்த மனிதனுக்கு மறுக்கப்பட்ட கனியை பாம்பு வடிவத்தில் தோன்றிய சாத்தன் உண்ணவைத்து கடவுளின் திட்டத்தைத் தகர்த்தான் என்றிருக்கிறது. ஆனால இதற்கு மூலக்கதையாகச் சொல்லப்படும் கில்காமேசு காப்பியத்தின் தலைவன் கில்காமேசு உட்நாப்பிட்டிம் என்பவனிடமிருந்து பெற்றுவரும் சாவா மருந்தை நாகம் ஒன்று திருடிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. நம் தொன்மத்திலும் தேவர்களின் போட்டியாளர்களான அசுரர்கள் நாகங்கள்தாமே, நாகர்கள்தாமே!

அடுத்து குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு எனும் இடத்தில் கோயில் கொண்டிருக்கும் வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகளைப் பற்றியது. அவர் தான் திருச்செந்தூரில் கடலினுள் மூழ்கி மூன்று நாட்கள் தவமிருந்ததாகக் கூறியுள்ளார். அதற்கு மாறாக அவர் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் என்ற இடத்திலிருக்கும் திருமால் கோயிலில் சில ஆண்டுகள் தங்கி பார்ப்பனப் பூசாரிகளிடம் பாடங்கேட்டதாக அக்கோயில் தலபுராணத்தில் இருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார். அத்தலபுராணத்தைப் பெறுவதற்கு நான் கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இப்போதைய பதிப்பை ஒரு நண்பர் பெற்றுக்கொடுத்தார். அதில் இச்செய்தி இல்லை. பழைய பதிப்பு கிடைத்தால் இச்செய்தியிலுள்ள நம்பகத்தன்மை உறுதிப்படும்.

இவர் பின்னாளில் சாமிதோப்பில் ஒரு சிறு மண்டபம் கட்டி தான் திருமாலின் தோற்றரவு என்றும் கோயிலின் கிளைகளுக்கு நிழல்தாங்கல்கள் என்று பெயர் சூட்டியுள்ளதிலிருந்தும் இந்தச் செய்தியில் ஏதாவது உண்மை இருக்குமோ என்று தோன்றுகிறது.

அடுத்து மீண்டும் கும்பகோணத்துக்கு வருவோம். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப ஓரையில் மக நாள்மீனில் வெள்ளுவா வரும் நாளில் மகாமகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கங்கையும் எமுனையும் கற்பனையான சரசுவதியும் கூடும் இடமான திரிவேணி சங்கமத்தின் மீது வானில் மேற்படி அமுத கலயத்தைக் கொண்டுசென்ற போது அங்கு கொட்டிவிட்டதாம், அதனால் காருவாவில் மக விண்மீன் வரும் நாளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடுகிறார்கள். இது குமரிக் கண்டத்திலிருந்து சேர,சோழ பாண்டியர்கள் தமிழதகத்துக்கு வருவதற்கு முன் வடக்கில் குடியேறியவர்கள் கடைப்பிடித்த விழா. அதனால்தான் அவர்கள் காருவாவை அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கண்ட இடங்களிலெல்லாம் கும்ப மேளாக்களை கண்ட நாட்களிவெல்லாம் கொண்டாடுவதாகச் செய்திக்ள் சொல்கின்றன. ஐயப்பன கோயில் இருமுடிப் பழக்கம் இப்போது பிற சாமி கோயில்களிலும் கடைப்பிடிக்கப்படுவது போன்ற சந்தை உத்திகள்தாம் இவை எல்லாம்.

0 மறுமொழிகள்: