24.7.16

நீங்கள் மதம் மாற வேண்டாம், உங்கள் மதத்தை மாற்றுங்கள்



நீங்கள் மதம் மாற வேண்டாம், உங்கள் மதத்தை மாற்றுங்கள்
குமரிமைந்தன்

எல்லாவற்றையும் அரைகுறையாகத் தெரிந்துவைத்துக்கொண்டு அனைத்தையும் அறிந்தவர்கள் போல் பேசுகிறார்கள் இத்தலைமுறையினர். நம் ஆட்சியாளர்கள் அவர்களுக்குரிய கடமையாகிய நாட்டைப் பிறரிடமிருந்து காப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ன் நாட்டு மக்களில் எவரும் அரசு அதிகாரத்துக்கு அறைகூவலாக வந்துவிடக்கூடாது என்பதற்காக புதியவை புனைவோரை அழித்துவந்தனர். அதனால் குண்டுமிழியான பீரங்கியோடு வந்த துருக்கர்களை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. வெள்ளைக்காரன் வந்து இந்த நாட்டைக் கைப்பற்ற வரும் வரை வாள், வேல் தவிர நம் வீரர்கள் கையில் வேறு மேம்பட்ட ஆயுதம் என்ன இருந்தது? சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் மதுரைக் கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கருவிகளில் குண்டுமிழியின் தொடக்கநிலையைக் காண முடிகிறது. சந்திரகுப்த மோரியன், கலிங்கத்துக் காரவேல்ன் போன்ற பகைவர்களால் ஒற்றர்களாக விடப்பட்டவரான, அவிழ்த்துப் போட்டுக்கொண்டு தம் மயிரைத் தாமே பிடுங்கும் மனநோயாளிகளான அம்மணர்கள் முல்லை குறுஞ்சி மக்களிடையில் ஊடுருவி அவர்களை மூவேந்தர்களுக்கு எதிராகத் திரட்டி கள்ளர் பிறராகிய களப்பிரர் கூட்டமைப்பால் தமிழகத்தைக் கைப்பற்றினர். அது வரை தமிழகத்திலிருந்த ஒரே ஒரு கோட்டை, ஒரேவோர் அரண்மனை, ஏன் ஒரேவோரு குட்டிச்சுவர் கூட இல்லாமல் அழித்தனர். பின்னால் வந்தவர்களும் எந்த புதுக் கண்டுபிடிப்புக்கும் இடந்தராமல் ஐந்தொழில் கொல்லர்களை இடங்கையினராக்கிக் கொடுமை புரிந்தனர். இந்தச் சூழலில் புதிய ஆயுதங்களோடு வந்த வெள்ளையரைக் கண்டு இங்குள்ள ஆளும் கூட்டம் அஞ்சி நடுங்கியது. ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, குமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் எனும் ஊர். எண்ணெய் செக்காட்டிகளாகிய இவ்வூரார் ஏதோவொரு காரணததால் ஓர் ஆண்டில் தாங்கள் திருவிதாங்கூர் அரசனுக்குச் செலுத்த வேண்டிய ஊழிய்ம், தாவது இலவயமாக வழங்க வேண்டிய எண்ணெய், பிண்ணாக்கு போன்றவற்றைக் கொடுக்கவில்லை. இதற்காக அரசன் என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சிய அவர்கள் உடனே கத்தோலிக்கத்துக்கு மாறினர். அரசனும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டான்.

            தமிழகக் கடற்கரை மீனவர்களை கடல் மூலம் துருக்கர்களும் உள்நாட்டுக் கொள்ளைக்காரர்களும் செய்யாத கொடுமைகள இல்லை. இடங்கையினராகிய மீனவ்ர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளவும் தடை இருந்தது. இந்த நிலையில் போர்த்துக்கீசிய மதகுருக்கள் மீனவ மக்களை மதம் மாறச் சொல்லவில்லை, எங்கள் அரசரின் குடிமக்கள் ஆகிவிடுங்கள், உங்களுக்கு அவர் ஆயுதம் வழங்குவார் என்றனர் என்று தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் என்ற நூலில் கே.கே.பிள்ளை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிகழ்வுகளைப் பற்றி நாம் வெட்கப்பட வேண்டும். கையாலாகாத நம் அரசர்கள் அரேபியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வந்த மதமாற்றிகளையும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களையும் வரவேற்றார்கள். ஏனென்றால் இங்கு அவர்களுக்கு ஆசான் என்ற இடத்திலிருந்த பார்ப்பனர்கள் அடித்த கொட்டத்தை அடக்குவதற்கு வேறு வழி அவர்களுக்கத் தெரியவில்லை என்பதுடன் அவர்களின் ஆயுத வலிமையும் இவர்களைக் கிலிகொள்ள வைத்தது.

திருவிதாங்கூர் மன்னன் இராமவர்மன் தன் மரணப் படுக்கையில் தனக்குப்பின் தன் மகன்களுக்கு அரசுரிமையை வழங்கிவிட்டுப் போனான். ஆனால் அதற்கு மாறாக திருப்பாப்பூர் நாடான் அனந்தபத்மநாபன் என்பவன் அரசனின் மருமகனும் தன் உறவுக்காரனுமான மார்த்தாண்டன் என்பவனை அரசனாக்க முயன்றான். திருவிதாங்கூரின் 39 நாடான்களையும் அழைத்து தன் திட்டத்துக்கு உதவுமாறு அவர்களைக் கேட்டான். அவர்கள் நடப்பிலிருக்கும் மக்கள்வழிக்குப் புறம்பாகச் செயல்பட மறுத்துவிட்டனர். பின்னர் கன்னியாகுமரி அருகிலிருக்கும் பொற்றையடி நாடான் தாணுமாலயப்பெருமாளுடன் சேர்ந்து அரசனின் மகன்கள் இருவரையும் தந்திரமாகக் கொனறு மார்த்தாண்டனை அரசனாக்கினான். இவன் அரசனானதும் தங்களைத் தண்டிப்பான் என்று அஞ்சிய 39 நாடான்களும் கத்தோலிக்கத்துக்கு மாறி தங்களைக் காத்துக்கொண்டனர். அரசன் தன் பழியைத் தீர்த்துக்கொள்வதற்கு இட்ட ஆணைகளில் பெண்கள் இடுப்புக்கு மேல் எந்த ஆடையும் அணியக்கூடாது, தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைக்காமல் தலை மீதுதான் சுமக்க வேண்டும். பொனம(உலோக)க் கலன்களை(பாத்திரங்களை)ப் பயன்படுத்தக்கூடாது, தாளிதச் சமையல் செய்யக்கூடாது என்பன சில.

இந்தக் கட்டத்தில்தான் ஆங்கிலர்கள் இங்கு நுழைகிறார்கள். அரசன், நம்பூதிரிகள், நாயர் - குறுப்புகள் கூட்டணி ஆகியோர் கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி மேற்கு வட்டங்களில் சாணார்கள் மதம் மாறுகிறார்கள். இப்பெண்கள் முலையைத் திறந்து போட்டுத் திரிவதைக் கண்டு பொறுக்காத ஒரு மதகுருவின் மனைவி குப்பாயம் எனும் தளர்வான ஓர் இரவிக்கையைத் தைத்து மதம் மாறிய பெண்களுக்கு அணிவித்தார். இதை நாயர், நம்பூதிரி போன்றோர் எதிர்க்க போராட்டம் வெடிக்கிறது. மதகுருக்களுடன் பேசி கிறித்துவர்கள் மட்டும் அணிய ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் போராட்டத்தில் பங்கேற்ற மதம் மாறாதவர்களும் அணிய முற்பட்ட போது மதமாறிகள் எதிர்த்தனர். இது ஒரு கலவரமாக வெடித்து கிறித்துவக் கோயில்கள் தீவைக்கப்பட்டன, இடிக்கப்பட்டன. பின்னர் பேசித் தீர்வு கண்டனர், அனைவரும் மேலாடை அணியலாமென்று. இந்த நிகழ்வுகளை அறியும் போது தமிழர், இந்தியர்கள் எனும் நம் உடம்புகளில் சாக்கடைதான் ஓடுகிறதா என்ற ஐயம் வருகிறது. இது நிகழ்ந்தது சாணார்கள் நாயர் - குறுப்புகளுக்கிடையில் சிக்கிக் கிடந்த மேற்கு வட்டங்களில். ஆனால் கிழக்கு வட்டமான அகத்தீசுவரத்தில் நடைபெற்றது வேறு வகையானது.

குமரி மாவட்டத்தில் சாரல் எனப்படும் தென்மேற்குப் பருவ மழை சிறப்பானது. பாண்டி எனப்படும் நெல்லை மாவட்டத்தில் மாரி எனும் வடகிழக்குப் பருவ மழை சிறப்பு. எனவே பனையேற்றுக் காலம் இரு நிலப்பகுதிகளிலும் மாறி மாறி வரும். குமரி மாவட்டப் பனையேற்றுக் காலத்தில் உள்ளூர்ப் பனையேறிகளுடன் பாண்டிக் காட்டிலிருந்தும் பனையேறிகள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து பனையேறுவர். பாண்டிக் காட்டுப் பனையேற்றுப் பருவத்தில் பாண்டிக்காரர்கள் திரும்பிச் செல்ல குமரி மாவட்டக்காரர்கள் குடும்பத்தோடு அங்கு சென்று தங்கிப் பனையேறுவர். இந்த நிகழ்வில் இந்தத் தோள்சீலைச் சிக்கல் ஒரு பெரும் உறுத்தலாக இருந்தது. எனவே இங்குள்ள பெண்களும் தோள்சீலை அணியத் தொடங்கினர். இந்த வட்டாரத்தில் சாணார்கள் பிற சாதியினர் அதிகமில்லாமல் செறிந்து வாழ்ந்ததால் உடனடிச் சிக்கல் எதுவும் உருவாகவில்லை. ஆனால் கன்னியாகுமரிக்கு அருக்கிலிருக்கும் ஒரு சந்தையில் இச்சிக்கல் வெடித்தது.

இந்தச் சந்தை செட்டியார்கள் கைகளில் இருந்தது. இது நாடார்கள் செறிந்த பகுதி. இங்கு சில சாணார்ப் பெண்கள் தோள்சீலை அணிந்து வந்தார்கள். அது பொறுக்காத, தங்களை மேல் சாதி என்று நினைத்துக்கொண்ட செட்டியார்கள் சிலர் நீண்ட கழிகளில் துறட்டி அரிவாள்களைக் கட்டி தூரத்திலிருந்தே தோள்சீலைகளை அகற்றுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு செட்டியார் இவ்வாறு தோள்சீலை அகற்றும் போது ஒரு பெண்ணின் கழுத்ததிலிருந்த தாலியை அரிவாள் அறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து பெரும் கொந்தளிப்பும் கலவரமும் நிகழ்ந்தன. அன்றிலிருந்து சாணார்கள் சந்தைக்குள் நுழைவதில்லை என்று முடிவெடுத்தனர்.

சந்தையில் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் இந்தச் சாணார்கள் தங்கள் விளைநிலங்களிலிருந்து கொண்டுவந்து செட்டியார்களுக்கு விற்பவையே. எனவே ஒரு கையில் சாணார்களிடம் வாங்கி மறுகையில் அவர்களிடமே விற்கும் வேலையையே செட்டியார்கள் செய்தனர். எனவே சாணார்கள் சந்தைக்கு வெளியே ஓர் உழவ்ர் சந்தையை உருவாக்கினர். தாம் கொண்டுவந்த பொருட்களை விற்றுவிட்டுத் தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிச் சென்றனர். சந்தைக்குள் எவரும் நுழையாததால் செட்டியார்கள் சந்தையை விட்டு அகன்றனர். இப்போது சந்தை சாணார் கைகளுக்ககுள் வந்தது, தோள்சீலைப் போராட்டமும் வென்றது. இந்தச் சந்தையின் பெயர் தாலியறுத்தான் சந்தை என்ப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் அந்தப் பெயரிலேயே வழங்குகிறது.

இந்தச் செய்தியைச் சொன்னவர் சுகுமாரன் தம்பி என்ற அதிகம் அறியப்படாத சிறந்த ஆய்வாளர். என் முன்முயற்சியில் புலவர் கு.பச்சைமால் போன்றோரின் உதவியுடன் இயங்கிய தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் (தசவகம்) என்ற பெயரில் இயங்கிய அமைப்பின் ஆய்வுக் கூட்டங்களில் அவர் இது போன்ற பல அரிய செய்திகளைக் கூறியுள்ளார்.

அடுத்து சாணார்களின் விடுதலையில் வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகளின் பங்கு பற்றி மிக மிகைக் கருத்துகள் பெரும்பாலோர் உள்ளங்களில் பதிந்துள்ளன. அது தவறு.

முத்துக்குட்டி அடிகளுக்கு பெற்றோர் முடிசூடும்பெருமாள் என்று பெயரிட்டனர். இத்தகைய பெயரைச் சாணார் சூடக்கூடாது என்ற அரச ஆணைப்பபடி ஊர் நாடான் தடை செய்ததால் முத்துக்குட்டி என்று பெயரை மாற்றினர் பெற்றோர். அவரது பெற்றோரும் வீறுடையோராக இருந்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

இவரும் இயற்கையிலேயே போர்க்குணம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். எம் மதத்தில் இண்ணந்தால் மேல்சாதிக் கொடுமைகளிலிருந்து விடுவிப்போம் என்று சீர்திருத்த(புராட்டற்றன்று)க் கிறித்தவர்கள் பரப்பியதால் இவர் மதம் மாறியிருக்கிறார். கோட்டையடி என்ற ஊர்க் கோயிலில் கோயில் பிள்ளையாக(கோயில் குட்டி என்றும் கூறுவர், மணியடித்தல் போன்ற ஓர் எடுபிடி வேலை) இருந்திருக்கிறார். இவ்வாறு மதமாற்றம் வேகம் பெற்று வந்த போது சாணார்கள் மீதான அரசின் கொடுமைகளை எதிர்க்கும் குரல்களும் ஓங்கி ஒலித்தன. இதைக் கண்டு அரண்ட திருவிதாங்கூர் அரசர் தன் அரண்மனையில் இருந்த ஆங்கில உடனுறை அதிகாரி(ரெசிடென்று) மூலம், இங்கு விடையூழியர்(மிசனரி)களால் கலவரச் சூழல் உருவாகும் நிலை உள்ளது, அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகையை வைத்தார்.

திருவிதாங்கூர், ஐதராபாத்து போன்ற பகுதிகள் சமத்தானம்(சமம் + தானம்) எனப்படும். அதாவது பிரிட்டீசு இந்திய அரசுக்குச் சமமான அதிகாரம் உள்ள பகுதி என்பது இதன் பொருள். ஆனால் இங்குள்ள அரசருக்கு நிலைப்படை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. சொந்தமாக நாணயம், காவல்துறை, நயன்மைத் துறை, பல்கலைக் கழகம் எல்லாம் வைத்துக்கொள்ளலாம். இன்றைய மாநிலங்களை விட மிகுதியான பல அதிகாரங்கள் உண்டு. அதே வேளையில் அரசரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சமத்தானத் தலைநகரிலே ஓர் உறைவிட அதிகாரியை ஆங்கில அரசு வைத்திருந்தது. இன்றைய ஆளுநர் போன்ற பதவி என்று சொல்ல்லாம். திருவிதாங்கூரைப் பொறுத்தவரை உறைவிட அதிகாரி சென்னை அரசதானியின் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்தார். இப்போது நம் நேர்வில் சாணார்களைப் பற்றிய அரசரின் குறையை உடனுறை அதிகாரி சென்னை ஆளுநருக்குச் சொல்ல அவர் அங்கிருந்த கிறித்துவ விடையூழிய அதிகாரிகளுக்குச் சொல்லி திருவிதாங்கூர் தமிழர் பகுதி விடையூழியர்களுக்கு சாணாரைப் பொறுத்துக் கொஞ்சம் அடக்கி வாசிக்க அறிவுறுத்தினார். இதனால் இங்கு சாணார்க்கெதிரான் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வீரார்ப்பான போக்கை கிறித்துவ மதகுருக்கள் கைவிட்டு வெறும் கடவுள் வழிபாட்டோடு நிறுத்திக்கொண்டனர். இதனால் வெறுப்படைந்த முத்துக்குட்டியார் கிறித்துவத்துக்கு முழுக்குப்போட்டுவிட்டு வெளியேறினார்.

முத்துக்குட்டி அடிகளின் அன்பர்கள் சிலர் அவர் கிறித்துவத்தைத் தழுவியதையும் பின்னர் அதைக் கைவிட்டதையும் பற்றிய செய்திகளை மறுக்கின்றனர். ஆனால் அவருடைய ஒட்டுமொத்த நடவடிக்கைகளை ஆய்கையில் இந்த நிகழ்வு நடந்திருக்கும் வாய்ப்புகள் மிகுதியாகவே எமக்ககுத் தோன்றுகிறது.

அடுத்து அடிகள் திருச்செந்தூர் சென்று கடலினுள் மூன்று நாட்கள் தவமிருந்து அருளும் நுண்ணறிவும் பெற்றதாகக் கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு மாறான ஒரு செய்தி நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தது. முத்துக்குட்டி அடிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்திருக்கும் திருத்தங்கலில் இருக்கும் திருமால் கோயிலில் சில ஆண்டுகள் தங்கி அங்கு ஓர் பார்ப்பனரிடம் பாடம் கேட்டதாக அக்கோயில் தலபுராணத்தில் இருப்பதாகத் தன் நண்பர் ஒருவர் கூறியதாக பறம்பை அறிவன் என்ற நண்பர் ஒருவர் மடல் ஒன்றில் கூறியிருந்தார். இது பற்றி எழுத்தாள நண்பர் பொன்னீலன் அவர்களிடம் கூறிய போது தன் நண்பர் ஒருவர் அவ்வூரிலிருப்பதாகவும் அவர் மூலம் அந்தத் தலபுராண நூலைப் பெற்றுவிடலாம் என்றும் கூறினார். ஆனால் அது பற்றி எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. இன்னொரு நண்பர் மூலம் முயன்ற போது அவர் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய பதிப்பைப் பெற்றுத் தந்தார். அதில் முத்துக்குட்டி அடிகளைப் பற்றிய செய்தி எதுவுமில்லை. வாய்ப்பிருப்பவர் எவராவது பழைய பதிப்புகளை ஆய்ந்து இதுபற்றி முடிவு செய்துகொள்ளலாம்.

இனி தொடர்ந்து செல்வோம். திருச்செந்தூர்க் கடலுள் தவமிருந்து அருள் பெற்றாரோ அல்லது திருத்தங்கலில் பார்ப்பனரிடம் பயிற்சி பெற்றாரோ சில ஆற்றல்கள் வரப்பெற்று திரும்பிவந்தார் முத்துக்குட்டி அடிகள். இந்த ஆற்றல்கள் என்னவென்று பார்ப்போம்.

இதை வசிய ஆற்றல் என்று சுருக்கமாகக் கூறிவிடலாம். இந்த வசிய ஆற்றலை வைத்துத்தான் மோசே தொடங்கி இன்றைய அமிர்தானந்த மயீ உட்பட அனைவரும் தொழில் நடத்துகின்றனர். அது மட்டுமல்ல பெரும் அரங்கங்களில் மந்திர வித்தை நடத்தும் மந்திரவாதிகள் தொடங்கி தெருவில் செப்பிடு வித்தை என்றும் குறளி வித்தை என்றும் கண்கட்டி வித்தை என்றும் பிழைப்பு நடத்தும் அன்றாடங்காய்ச்சி வரை கடைப்பிடிப்பது ஒரே வித்தையைத்தான்.

தொடரும் முன் இந்த திருத்தங்கலைப் பற்றிய சில செய்திகளைக் கூறிவிடுகிறேன். சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் எனும் பார்ப்பான் சேரனிடம் சென்று தன்னை எதிர்த்தோரை வாதில் வென்று அரசன் அளித்த விலையுயர்ந்த அணிகலன்களோடு திரும்பும் வழியில் பார்ப்பனர் மட்டும் வாழும் தங்கால் எனும் ஊரில் களைப்பாறுவதற்காக ஓர் அரச மரத்தடியில் அமர்ந்தான். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த பார்ப்பனச் சிறுவர்களைப் பார்த்து என்னோடு சேர்ந்து நான் கூறும் மந்திரங்களை ஓதி இதோ இந்தப் பொதியிலிருப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான். வார்த்திகன் என்பவன் மகன் தக்கினன் என்பவன் ஒலி பிறழாமல் ஓதியதால் தான் கொண்டுவந்த தங்க அணிகளை அவனுக்கு அளித்துவிட்டுச் சென்றான். சிறுவன் இவ்வாறு வரவுக்கு மிஞ்சிய அணிகளுடன் திரிந்ததால் அழுக்காறுற்ற அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தெரிவித்தனர். அவர்கள் வந்து வார்த்திகனைப் பிடித்துச் சிறையிலிட்டனர். அது கண்டு ஆற்றாத அவன் மனைவி அழுது புரளவும் அம்மன் கோயில் கதவு அடைத்துக்கொண்டது. இச்செய்தி பாண்டிய அரசனுக்கு எட்டவும் இது பற்றி மூதலித்து உண்மையறிந்து வார்த்திகனை விடுவித்து அவனிடம் மன்னிப்புக்கேட்டு அவன் முன் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தான். அவனுக்கு தங்காலுடன் வயலூர் என்ற ஊரையும் இறையிலியாக வழங்கினான். இது சிலப்பதிகாரம் கட்டுரை காதை தரும் செய்தி. இன்று போல் காவலதுறை சரியாக மூதலிக்காமல் சிறையிலடைப்பதும் தலைமை நயமன்றம் வரை செல்வாக்குக்கு அடிபணிவதும் அன்றும் இருந்ததற்கான ஒரு தடயம்.

மேற்கூறிய கதை மூலம் ஓருண்மை புலப்படுகிறது. மூவேந்தர்களும் பார்ப்பனர்களுக்கு அளவுக்கு மீறிய சலுகைகளை வழங்கி அவர்களுக்கு அடிமைகளாகவே வாழ்ந்துள்ளனர் எனபது அது. தமிழ்நாட்டில் அம்மண சமயம் மன்னர்களுக்கு எதிரான பரப்பல்களுடன் வளர்ந்து வந்ததைக் கண்ட மூவேந்தர்களும் அந்த மதம் எந்த அடிப்படையில் மக்களை ஈர்க்கிறது என்பது குறித்து ஆய்ந்து அந்தக் காரணியை அகற்றுவது பற்றிச் சிந்திக்காமல், புத்த, அம்மண மதங்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தெற்கு நோக்கி ஓடி வந்த வடக்கத்திப் பார்ப்பனர்களுக்கு அளவுக்கு மிஞ்சிய செல்வாக்கை அளித்துள்ளனர். இன்று எப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி பிரிட்டன் மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்தியதோ அதே போல் 9 நூற்றாண்டுகளுக்கு முன் ஓர் அரசன் ஒரு வரிவிதிப்புக்கு ஆங்காங்குள்ள பெருமக்களை அழைத்து அவர்களது கருத்தைக் கேட்டுத் தன் நிலைமையை விளக்கினான். அதிலிருந்துதான் இன்றைய பாராளுமன்ற ஆட்சி முறை திரிவாக்கம் பெற்று வளர்ந்தது. ஆனால் நம் நாட்டில் மக்ககளாட்சி என்ற பெயரில் பாராளுமன்றத்தைக் காட்டி ஆள்வினையாளர்களும் அரசியல் தலைவர்களும் மக்களை மிதித்து நசுக்குகிறார்கள். இவ்வாறு மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் விலகிச் செல்லுந்தோறும் இந்த அரசு மட்டுமல்ல மக்களும் ஏன் மொத்த நாடும் நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து போகிறது.

இனி மேலே கூறிய சிலப்பதிகாரக் கதையில் தங்கால் என்று வரும் சொல்லுக்கு உரையாசிரியர் திருத்தங்கால் என்று பொருள் குறித்துள்ளார். ஆனால் சிவகாசி அருகில் இருக்கும் ஊர் திருத்தங்கல் ஆகும். இரண்டும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இனி, மீண்டும் முத்துக்குட்டி அடிகளுக்கு வருவோம். அவர் திருவிதாங்கூர் அரசால், அதாவது மேல் சாதியினரால் அவர்களிலும் உயர்ந்த நம்பூதிரிகளால் ஒடுக்கப்பட்ட 18 சாதியினரை இணைத்து கூட்டங்கள் நடத்தினார். அவர்களுக்குச் சம பந்திகள் நடத்தினார். இதற்காக அவர் அமைத்த இடங்களுக்கு நிழல்தாங்கல்கள் என்று பெயரிட்டார். இதில் திருத்தங்காலின் நிழல் இருப்பதைக் காணலாம். இவ்வாறு அவரது இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்தது. இதைக் கண்டு திருவிதாங்கூர் மன்னர் மிரண்டார். முத்துக்குட்டி அடிகளைப் பேச்சுக்கு அழைத்தார். இது பற்றி இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன.
           
ஒரு கூற்றின் படி அய்யாவை அரசரின் ஆட்கள் கட்டியிழுத்துச் சென்றனர் என்பது. இன்னொரு கூற்று அடிகள் தன் மாணவர்கள்(சீடர்கள்) துக்கிய பல்லக்கில் திருவனந்தபுரம் சென்றார் என்பது. அடிகளுக்கு 5 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் குமரி மாவட்டம் ஈத்தாமொழிக்குக் கிழக்கிலுள்ள புதூரை அடுத்திருக்கும் உடங்காட்டுவிளையைச் சேர்ந்தவர். அங்கு பழமை வாய்ந்த ஒரு நிழல்தாங்கலும் இருக்கிறது. அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என் தாயின் அன்னையார். அய்யாவை மாணவர்கள் பல்லக்கில் வைத்துத் திருவனந்தபுரத்துக்குச் சுமந்து சென்றதை அவர்கள் வாய்மொழியாகக் கேட்டிருக்கிறேன்.

            தன் வரலாறாக அடிகள் தன் மாணவர்களில் ஒருவராகக் கூறப்படும் அரிகோபால சீடர் என்பவரைக் கொண்டு எழுதுவித்த அகிலத்திரட்டு அம்மானையில் நீசன் என்ற சொல் மூலம் குறிப்பிடும் திருவிதாங்கூர் மன்னன் தன்னை புலிக்கூட்டில் புலியுடன் அடைத்ததாகவும் சுண்ணாம்புக் காளவாயில் வைத்துச் சுட்டதாகவும் அவற்றாலெல்லாம் தனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். இது திருநாவுக்கரசர் கதையின் மறுபதிப்பு அன்றி வேறில்லை என்பது என் கணிப்பு.

            நான் முன்னம் குறிப்பிட்ட தசவகம் என்ற தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் அமைப்பின் சார்பில் கன்னிமாகுமரியை அடுத்த வட்டக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மதமும் அரசியலும் என்ற தலைப்பில் நான் பேசினேன். அப்போது திருமாலாகிய பத்மநாபனின் தாசன் என்று தன்னை அறிவித்து அரசாளும் திருவிதாங்கூர் மன்னனை எதிர்த்து இயக்கம் நடத்திய வைகுண்டர் ஏன் தன்னை திருமாலின் தோற்றரவு(அவதாரம்) என்று அறிவித்தார் என்ற கேள்வியை முன்வைத்தேன். அப்போது அதற்கு விடை இல்லை என்றாலும் இன்னொரு செய்தியைக் கூறினார் நான் மேலே குறிப்பிட்ட சுகுமாரன் தம்பி. அய்யாவுக்கும் அரசனுக்கும் பேச்சு நடந்ததாகவும் அதில் அடிகள் ஒரு கோயில் கட்டி அதற்குள் சாணார்கள் தலைப்பாகை அணிந்து செல்லலாம் என்று உறுதியளித்தத்தாகவும் அதை அடிகள் ஏற்றுக்கொண்டதாகவும் இது குறித்த ஆவணங்களைத் தான் திருவனந்தபுரம் ஆவணக்காப்பகத்தில் பார்த்ததாகவும் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த புலவர் கு.பச்சைமால், அய்யா வெள்ளையரை வெறுப்பவர், ஆங்கிலர் ஒரு சமத்தானத்தில் கலவரச் சூழல் உருவானால் சமத்தானத்தைப் பிடுங்கி தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுவர் என்ற நிலைமையைச் சுட்டிக்காட்டியதால் அரசர் கூறியதை ஏற்றுக்கொண்டார் வைகுண்டர் என்று சற்று அடங்கிய குரலில் தலையைக் குனிந்துகொண்டே கூறினார். புலவர் கு.பச்சைமால் அய்யாவின் மாணவர் ஒருவரின் மரபில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, பெரும் ஆரவாரத்தோடு களமிறங்கிய அய்யா இறுதியில் திருவிதாங்கூர் அரசருடன் இணக்கம் கண்டு போராட்டத்தை நடுவில் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை. அத்துடன் திருத்தங்கல் பற்றி நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையானால் அவர் தன்னைத் திருமாலின் தோற்றரவு என்று அறிவித்ததற்கான இன்னொரு காரணமும் தெரிந்துவிடும்.

            இதன் பின்னர் அய்யா தென்தாமரை குளம் என்ற ஊரில் ஒரு சிறு மண்டபத்தில் அமர்ந்து தன்னை நம்பி வரும் மக்களுக்கு நாமக்கட்டியைப் பொடித்து அதைக் கொடுத்து நெற்றியில் நாமம் இட்டு அந்தப் பகுதியில் தோண்டப்பட்ட முத்திரிக் கிணறு என்ற கிணற்றிலிருந்து பெறப்பட்ட தண்ணீரைக் குடிக்க வைத்து நோய்களைக் குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல் போன்ற “இறும்பூதுகளை” (அற்புதங்களை)ச் செய்துவந்தார். இந்த இடத்துக்கு இப்போது சாமித்தோப்பு என்பது பெயர். அவர் அமர்ந்திருந்த, வடக்கு நோக்கிய மண்டபத்துக்கு வடக்கு வாசல் என்பது பெயர். இத்துடன் அவர் உருவாக்கிய 18 சாதிக் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கும். அவருக்குத் தோழர்களாக இருந்தவர்கள் விலகியிருப்பர். இதற்குச் சான்றாக எழுத்தாளர் நண்பர் பொன்னீலன் அவர்களின் அன்னையார் திருமதி அழகியநாயகி அம்மாள் எழுதியுள்ள அருமையான தன்வரலாற்று நூலான கவலை ஓர் அரிய செய்தியைத் தருகிறது.

அய்யா காலத்தில் வாழ்ந்த பொன்னீலனின் முப்பாட்டனார் ஒருவர் முத்துக்குட்டி அடிகளுடன் மிக நெருக்கமாக இயங்கி வந்துள்ளார். அவர் இடையில் பிரிந்து வந்து தங்கள் நிலத்திலிருந்த கைவிடப்பட்ட ஓர் அம்மன் கோயிலைப் புதுப்பித்து நாள்தோறும் மூன்று வேளை பூசையும் வழிபாடும் நடத்தியிருக்கிறார். நோய் தீர்த்தல், குறி சொல்லுதல், பேய் விரட்டுதல் என்று அந்தக் கோயில் அந்த வட்டாரத்தில் பெரும் ஈர்ப்பைப் பெற்றுள்ளது. பொன்னீலனின் பெரிய தந்தையார் காலம் வரை தொடர்ந்த இந்த வழிபாடு அவருக்குப் பின் அதைத் தொடர எவரும் முன்வராத நிலையில் மறைந்து போயிற்று. அடிகள் போராட்டத்தைக் கைவிட்டு சாமிதோப்பில் தங்கி திருமால் தோற்றரவு என்ற வடிவம் எடுத்ததனால்தான் அவரை ஒரு வழிபடு தெய்வமாக ஏற்றுக்கொள்ள விரும்பாமல் தன் மரபுத் தெய்வமான அம்மன் வழிபாட்டில் பொன்னீலனின் முப்பாட்டனார் இறங்கியிருக்கலாம் என்று கொள்ள வேண்டியுள்ளது.

அடிகள் மறைந்த பின் வடக்கு வாசல் மண்டபத்துக்குப் பின்புறம் அவரை அடக்கம் செய்து அந்த கல்லறையைச் சுற்றி கருவறையும் முன்னால் உள் மண்டபமும் வெளியே கொடிமரமும் உள்சுற்றும் மதிற்சுவரும் வெளிச்சுற்றுமாக ஒரு ஆகமக் கோயிலை அவரது மாணவர்கள் அமைத்தனர். இப்போது ஒரு சிக்கல் உருவானது.

முத்துக்குட்டி அடிகளுடன் ஏற்கனவே திருமணமாகி ஓர் ஆண் குழந்தையுடன் ஒரு பெண்மணி வந்து சேர்ந்தார். இறுதி வரை அவருடனேயே வாழ்ந்தார். அடிகள் கைம்பெண் மறுமணத்தைப் பரிந்துரைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே பரிந்துரைத்த பெரியாரின் தொண்டர்கள் அதைப் புறக்கணித்தது போலல்ல, அடிகளாரின் தொண்டர்கள் அதனை வெறுத்தனர், அதைக் கேட்டாலே முகஞ்சுளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட குமுக மாற்றம் ஒரு குறிப்பிட்ட பொருளியல் கட்டமைப்பில்தான் இயலும் என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். பெரியாரைப் பற்றியோ அவரது இந்தக் குறிப்பிட்ட நிலைப்பாடு பற்றியோ அறியாதவர்கள் இன்று மாறிவிட்ட பொருளியல் சூழலில் எவருடைய அல்லது எந்த ஓர் இயக்கத்தினுடைய பரப்பலுமின்றி தாமாகவே கைம்பெண் மறுமணங்களில் ஈடுபடுவதும் முன்பு அதைக் கடைப்பிடித்தவர்கள் அதைக் கைவிட்டு வருவதும் இதனால்தான்.

அடிகளார் இறந்த பின் அவரது மாணவர்களுக்கும் இந்த அம்மையாருக்கும் கோயில் உரிமை பற்றிய பூசல் உருவானது. வழக்கு நயமன்றத்துக்குச் சென்றது. அம்மையாருடைய மகன் அடிகளாருக்குப் பிறக்கவில்லை என்ற கருத்தை மாணவர்கள் தரப்பு முன்வைத்தது. திருவனந்தபுரத்தில் ஆங்கில நயவர் முன் கூண்டிலேறிய அம்மையார் குழந்தை அடிகளாருக்குப் பிறந்ததுதான் என்று கூறினார். ஓர் இந்தியப் பெண் இது போன்ற செய்திகளில் பொய் கூற மாட்டார் என்று கூறி அந்த ஆங்கில நயவர் அவருக்குச் சார்பாகத் தீர்ப்புக் கூறினார். இவ்வாறுதான் சாமிதோப்பு கோயில் இப்போதைய அறங்காவலர் குடும்பத்தினர் கைகளுக்கு வந்தது. (நாமறிந்து அம்மண சமயத்தின் மகாவீரர் தவிர உலகில் தோன்றிய அனைத்து மதத் தலைவர்களுக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அல்லது அவர்கள் இறந்த பின் அதிகாரப் போட்டிகள் வந்துள்ளன.

அய்யாவின் காலத்துக்குப் பின்:

இப்போதைய அறங்காவலர் குழுவினருக்குப் பாட்டனார் ஒருவர் ஒரு பெண்ணுக்கு கோயிலில் உரிமை கொடுத்து ஒரு பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டார். அது வழக்கு மன்றம் சென்றது. வழக்கு முடிவில் மொத்தம் இருந்த அறங்காவலர்கள் எழுவரோடு எட்டாவதாக அந்தப் பெண்ணின் மரபினருக்கு உரிமை கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் ஒவ்வோர் எட்டாம் ஆண்டும் இந்தப் புதிய அறங்காவலர் பொறுப்பில் கோயிலின் முழுச் செயற்பாடும் இயங்கும். ஆனால் அன்பர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ளத் தயக்கமாக இருந்தது போலும். அந்த ஆண்டுகளில் ஆள் வரத்து குறைவாக இருக்கும். வருவோரில் பலரும் காணிக்கையைத் தட்டில் போடாமல் பழைய அறங்காவலரை அவர் வீட்டுக்குச் சென்று செலுத்தியதும் உண்டு.

ஏழ்மை நிலையிலிருந்த இந்தப் புதிய அறங்காவலர் காலத்தில்தான் அன்பர்கள் சமைப்பதற்கு கற்களை அணைத்து அடுப்பேற்றி வந்த நிலைமையை மாற்றி நிலையான அடுப்புகளை அமைத்தது, அன்பர்கள் அமரவும் படுக்கவும் என இருந்த மண்டபத்தின் ஓலைக்கூரையை ஓட்டுக் கூரையாக மாற்றியும் கோயிலிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

கோயிலுக்குக் கணிசமான சொத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் வருமானம் நிறையவே வருகிறது. அதனால் இந்து அறநிலையத் துறை கோயிலைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கிறது. இதை எதிர்க்க அய்யா வழி எனப்படும் இந்த வழிபாட்டு முறை “இந்து” வழிபாட்டு முறைகளிலிருந்து மாறுபட்டது என்ற விளக்கத்தை முன்வைக்கின்றனர் அறங்காவலர்கள். அதனாலேயே பாலபிரசாபதி போன்றோர் அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துக்கொண்டு தானும் ஓர் அரசியல் சார்ந்த அமைப்பை வைத்துள்ளார். கோயிலுக்குப் பின்னாலிருக்கும் நாடார் சாதியினரின் செல்வாக்குக்கு அஞ்சி ஒதுங்கி நிற்கிறது அரசு. இல்லையென்றால அய்யா அரும்பாடு பட்டு உருவாக்கிய சாதி, சமயங்கள் கடந்த தாய்மொழி வழிபாட்டுக் கோயிலினுள் சமற்கிருத மந்திரங்களுடன் பார்ப்பனப் பூசகன் என்றோ நுழைந்திருப்பான். ஆகமக் கோயில்களினுள் எந்தப் பூசகனும் அன்பர்களைத் தொட்டுத் திருநீறோ சந்தனமோ பூச மாட்டான். ஒரு நடுவரசு அமைச்சரை நோக்கி திருச்செந்தூர்க் கோயில் நம்புதிரிப் பார்ப்பனப் பூசகன் திருநீற்றை மடித்து வீசினான் என்று 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் சிக்கல் எழுந்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால் சாமிதோப்பிலும் பிற அய்யாவழிக் கோயில்களிலும் பூசகர் மக்களைத் தொட்டு நெற்றியில் நாமம் இடுவதைப் பார்க்க முடியும்.


அய்யா உருவாக்கிய வழிபாட்டுமுறையில் கிறித்துவத்தின் தாக்கம் இருந்தது. நம் மரபு வழிபாட்டு முறையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரிக்கும் வகையில் மணியோசை, மேளங்களின் முழக்கம் என்று ஐம்புலன்களையும் அதிர வைக்கும் தன்மை உண்டு. ஆனால் கிறித்துவக் கோயில்களில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடவும் வேண்டுதல்களைக் கூறவும் செய்கின்றனர். இதனால் ஒன்றுபட்டுச் செயற்படும் ஒரு பயிற்சி அங்கு கிடைக்கிறது. அதைப் போலவே அடிகளார் உருவாக்கிய வழிபாட்டு முறையில் மதியம் நடைபெறும் வழிபாட்டில் மணியடித்தல், மேளதாளம் அனைத்தும் முடிந்ததும் உச்சிப் படிப்பு எனப்படும் ஒரு பாடல் வரிசையை அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ஒருவரும் பணிவிடைக்காரர் எனப்படுவோரில் ஒருவரும் சொல்ல அன்பர்கள் அதைத் திருப்பிச் சொல்ல ஏறக்குறைய 10 முறைகள் மீண்டும் மீண்டும் சொல்வர். அதைப் போல் முன்னிரவிலும் மணியடிப்பு, மேளதாளங்களை அடுத்து உகப்படிப்பு எனும் பாடல் வரிசை அறங்காவலர் குழுவினர் சொல்ல பிறரால் ஒப்புவிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை சிறப்பான நாள். அன்று இரவு ஒரு பல்லக்கு ஊர்தியில் (வாகனத்தில்) அய்யாவை அமர்த்தி கோயிலைச் சுற்றி வருவர். இது கிறித்துவர்களுக்குப் போட்டியா, அவர்களைப் போலச்செய்ததா, அல்லது கிறித்துவத்துக்குச் சென்றவர்களை ஈர்க்கும் முயற்சியா என்ற ஐயங்களை ஏற்படுத்துகின்றன.

உச்சிப் படிப்பு முடிந்ததும் வடக்கு வாயிலில் கஞ்சி ஊற்றுவார்கள். இரவில் கூட்டாஞ்சோறு போன்று சமைத்து வழங்குவார்கள், நல்ல சுவையாயிருக்கும்.

அய்யாவின் கல்லறை அமைந்திருக்கும் கோயில் கருவறையில் ஒரு வேலின் பின்புறத்தில் அகன்ற பக்கத்தை மேல் பகுதியில் கொண்ட இலை வடிவப் பலகையைப் பொருத்தி காவித்துணியால் போர்த்திய “மூலவர்” வடிவம் உள்ளது. அதன் பின்புறம் சுவரில் ஒரு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.  தேரிலும் ஊர்தியிலும் வைப்பதற்காக அதே வடிவிலான ஓர் “உற்சவர்” உருவமும் உள்ளது.

தை, வைகாசி ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் நடைபெறும். நாள்தோறும் இரவில் ஊர்தி உலா, பத்தாம் நாள் தேரோட்டம் எல்லாம் உண்டு. ஆகமக் கோயில் போன்ற கோயில் அமைப்பும் தேர், திருவிழாக்களும் அய்யா அறிவுரைப்படி அமைந்தனவா அல்லது அறங்காவலர்கள் தங்கள் விருப்பம் போல் சேய்த ஏற்பாடுகளா என்பது தெரியவில்லை. கருவறை உள்ளும் அனைவரும் சென்று வழிபட முடிவதைப் பார்த்தால் அய்யாவின் அறிவுரை இருக்க வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. அத்துடன் கோயிலுக்குள் தலைப்பாகை அணிந்து செல்வதும் அரசன் கொடுத்த உரிமைகளுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆனால் தேர், திருவிழாக்கள், காணிக்கை, கைக்கூலி கூடாது என்ற அய்யாவின் அறிவுரைகளுக்கு எதிரானவையாகவே இவை விளங்குகின்றன. காணிக்கையைக் கூட “விளக்கெண்ணெய்க் காசு”, அதாவது கோயில் பராமரிப்புக்கு, என்ற பெயரில்தான் குறிப்பிடுகிறார்கள்.  

அடிகளாரின் காலத்துக்குப் பின் அவர் உருவாக்கிய நிழல்தாங்கல்கள் கணக்கு(குறி) சொல்லும் நிலையங்களாக மாறின. புதிதாக பதிகளும் தோன்றின. அய்யா வழியினர் கோயிலைப் பதி என்றும் வீட்டைக் கூரை என்றும் கூறுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் நிழல்தாங்கல்கள் அனைத்திலும் கணக்குச் சொல்வதும் பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் உச்சிப்படிப்பு, வாகனம் எடுத்தல் முதலிய வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். திருவிழாக்களும் நடைபெறும். கார்த்திகை மாதம் சாமிதோப்பு தொடங்கி அனைத்துப் பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் அடிகளாரின் ஆணையில் எழுதப்பட்ட அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலைப் படித்து உரை விளக்கம் செய்யும் நிகழ்ச்சி ஏடு வாசிப்பு என்ற பெயரில் நடைபெறும். இந்த வாசிப்புக் காலத்தில் சாமிதோப்பிலிருந்தும் பிற பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் இருந்தும் குழு குழுவாக பிச்சை என்று அழைக்கப்படும் அரிசி, பணம் நன்கொடைகள் திரட்டுவர். இது பொதுவான நடைமுறை.

ஒரு 70 ஆண்டுகளுக்கு முன் அய்யா வழியினருக்கு மதிப்பு இருந்ததில்லை. அவர்கள் நெற்றியில் இடும் நாமத்தை கொக்கு பீச்சியிருக்கிறது என்று முகத்துக்கு நேராகவே கேலி செய்வார்கள். அப்போதெல்லாம் சாமிதோப்புக்கு வருவோரில் மிகுதி மேற்கு வட்டங்களில் நாயர்களின் கொடுமைகளுக்கு உள்ளாகும் நாடார் சாதியினரே மிகுதி. கிழக்கு வட்டமாகிய அகத்தீசுவரத்தில் அய்யாவின் மணவர்களாக இருந்தவர்களின் வழியினர் தவிர கோட்டாறு கூலக்கடைத் தெரு, வடசேரி கனகமூலம் சந்தை வெற்றிலை வாணிகர்களே மிகுதி. இவர்களில் பெரும்பாலோர் எங்கள் ஊர்க்காரர்கள். எங்கள் ஊர்க்காரர்கள் ஒரு காலத்தில் வெற்றிலை வாணிகர் சாதியினராகிய இலைவாணிகர்கள் எனப்படுவோருக்கு களியக்காவிளையிலிருந்து வண்டிகளில் வெற்றிலை ஏற்றி சந்தைக்குக் கொண்டுவந்தவர்களாகும். நாளடைவில் பெரும் பணக்காரர்களான இலைவாணிகர்கள் வாணிகத்தில் ஈடுபாட்டைக் குறைத்ததனால் வண்டிக்காரர்களே வாணிகர்களாயினர். இந்தப் புது வாணிகர்களின் உறவினர், நண்பர்களில் சிலரும் இவ்வாணிகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பாக்கு, அதாவது கமுகிலிருந்து பெறப்படும் பச்சைப் பாக்கு வாணிகத்திலும் ஈடுபட்டனர். இவ்வாறு புதிதாக சந்தையினுள் நுழைந்த இவர்கள் எந்தவிதமான சிக்கல்களை அச்சந்தைகளில் வாணிகம் செய்த பெரும்பான்மையினரான பிற சாதிகளிடமிருந்து எதிர்கொண்டனரோ, அனைவரும் சாமிதோப்புக்கு தவறாமல் வரும் அன்பர்களாக மாறினர். என் தந்தையாரும் அவ்வாறே. நகருக்குள் அவர் எதிர்கொண்ட சாதிய இழிவுகளாலும் ஊரில் ஊர்த்தலைவர்களான நாடான்களுடனான முரண்பாடுகளாலும் அவர் எங்கள் வட்டார திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரானார்.

இன்று அய்யாவின் பெயரைக் கூறி அவர்தான் நாடார்களின் எழுச்சிக்கு அடிகோலிய ஒரே விசை என்று ஓங்கி அடிப்பவர்களுக்கு உண்மையில் அவரது இயக்கத்தின் வரலாறு தெரியாது. அன்று நாமம் அணிந்திருந்தவர்களைப் பார்த்து கொக்கு பீச்சியிருக்கிறது என்று ஏளனமாகப் பேசி இழிவுபடுத்தியவர்களில் பணக்காரர்களின் வழி வந்தவர்பகளே இவர்கள். இன்று சாதி அடிப்படையில் ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற நாடார்களைத் தங்கள் பின்னால் அணிதிரட்டும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்தப் பரப்பல். வாக்கு வேட்டையாடிகளையும் இந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

அடிகளாரின் பணிகளால் சாணார்களின் மீட்சிக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தப் பயனும் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. போராட்டத்துடன் அவர் தொடங்கிய பணி அவராலேயே இடையில் கைவிடப்பட்டது. எந்தக் காரணத்தால் கிறித்துவ விடையூழியர்கள் தங்கள் பணியைப் பாதியிலேயே விட்டார்களோ அதைப் போன்ற, அதே இடத்திலிருந்து தோன்றிய ஓர் அழுத்தத்தினால் இவரும் தன் போராட்டத்தைப் பாதியிலேயே விட்டார். சாணார்கள் தங்கள் உழைப்பு, சிக்கனம், ஒற்றுமை ஆகியவற்றாலேயே விடுதலையும் மேம்பாடும் அடைந்தனர். அத்துடன் மாதவையா, சி.பி.இராமசாமி ஐயர் போன்ற முற்போக்குச் சிந்தனை உள்ள திருவிதாங்கூர் திவான்களுக்கும் இந்த எழுச்சியில் பங்குண்டு. திருவிதாங்கூர் அரசால் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை நீர் சாணார் பகுதிகளுக்குப் பாய்ந்து நெல்வயல்களையும் தென்னந்தோப்புகளையும் உருவாக்கியது அவர்களது செல்வநிலையை மிக மேம்படுத்தியது. இராமசாமியார் புகுத்திய கட்டாய இலவயக் கல்வி சாணார்களின் எழுத்தறிவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தி அரசுப் பணிகளில் அமர்த்தியது. இதனால் இப்போதிருக்கும் தலைமுறையினருக்குத் தங்களுக்கு முன்பிருந்த தலைமுறையினர் பட்ட அல்லல்கள் தெரியாது. சென்ற 1982ஆம் ஆண்டு சங்கக் குடும்பங்களும்(பரிவாரங்களும்) வல்லரசியமும் உருவாக்கிய கலவரம் சாணார்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தியது. இந்தக் கலவரத்தின் பின்னணியில் இந்து முன்னணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தாணுலிங்க நாடார் பாண்டிய அரச மரபில் கடைசியாக வள்ளியூரில் ஆட்சி செய்து கன்னடரால் அழிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியாக தெற்கு நோக்கி வந்து பொற்றையடி ஊரில் திருவிதாங்கூர் மன்னரால் நாடான் பட்டத்துடன் அமர்த்தப்பட்டவர்களின் வழிவந்தவர் என்று தெரிகிறது. அவர் மரபே முற்றிலும் திருவிதாங்கூர் அரசருக்கு இணக்கமாக சாணார்களுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் தீங்கு இழைப்போராகவே வாழ்ந்துவருகின்றனர். அந்த அடிப்படையில் இந்து நாடார் என்ற அடையாளத்தைக் காட்டி உலகெலாம் உள்ள பணக்கார இந்து நாடார்களிடமிருந்து சங்கக் குடும்பங்களுக்கு(சங்கப் பரிவாரங்களுக்கு) நிலையாகப் பணம் பாய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஆக, தமிழர்களின், குறிப்பாக நாடார்களின் வளர்ச்சியைத் தடுப்பது தமிழகத்திலுள்ள தனது நலன்களுக்கு உகந்தது என்று திட்டமிட்டு களத்தில் இறங்கிய எதிரியாகிய மார்வாரிகளிடம் பொருளியல் களத்தில் உள்ள ஒட்டுமொத்த நாடார்களுமே மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தை விட்டால் சென்னையில்தான் அய்யா வழி வழிபாடு பிற பகுதிகளை விட முனைப்பாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் செயலலிதாவின் தோழி சசிகலாவின் கூட்டம் நாடார்களின் பொருளியல் நிறுவனங்களை விழுங்க முயன்றதன் எதிர்வினையாகும். ஆனால் அங்கும் பூசை, திருவிழாக்களுக்கு அளிக்கப்படும் முகாமை மக்களை ஒன்றுப்படுத்துவதற்குக் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த வகையில் வழிபாட்டை அங்கு உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. சசிகலா கூட்டத்தின் படையெடுப்புகள் முழு வெற்றியுடன் தொடர்கின்றன என்றே தெரிகிறது. இது மார்வாரிகளின் படையெடுப்பின் முனைப்பை நாடார்களின் மட்டுமல்ல தமிழக மக்களின் கண்களிலிருந்தும் மறைக்கிறது.

மார்வாரிகள் தமிழக மக்களைப் போல் ஆண்டு 365 நாட்களும் கோயில்களில் ஆறு வேளை அல்லது மூன்று வேளை பூசை, வழிபாடு என்று நேரத்தையும் கவனத்தையும் செல்வத்தையும் வீண்டிப்பதில்லை. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு சிறப்பு நாட்களோடு தங்கள் சமய நடவடிக்கைகளை முடித்துக்கொள்கிறார்கள். அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். கடவுள் கோயில்களில் மட்டும் இல்லை எங்கும் நிறைந்தவன் என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு விரும்பினால் தான் இருக்கும் இடத்திலிருந்தே எந்த நேரச் செலவும் பணச் செலவும் இல்லாமல் வழிபடலாம். “கிழவி, சாமி இருக்கும் திசை நோக்கிக் காலை நீட்டாதே” என்று சொன்ன கோயில் ஊழியனை நோக்கி, “சாமி இல்லாத திசையைக் காட்டப்பா, அந்தத் திசையில் என் காலை நீட்டுகிறேன்” என்று ஔவை சொன்னதன் உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் மனிதனைப் போல் நாம் முன்வைக்கும் வேண்டுகைகளுக்காக கைக்கூலி கேட்பவர் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனம் ஒன்றி கடவுளிடம் நம் துன்ப துயரங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற விரும்புவோருக்கென்று வட்டார அடிப்படையில் வழிபாட்டுக் கூடங்களை அமைத்து அங்கு வருவோர் ஒன்றிணைந்து அதனைப் பராமரிக்க வேண்டும். அங்கு உருவம் என்ற ஒன்று கூடத் தேவையில்லை. மண்டபத்தைப் பேண ஒரே ஊழியர் மட்டும் போதும். அத்தகைய ஒரு சமயமாக வருங்காலத் தமிழகச் சமயம் அமையட்டும்.
நிறைவுற்றது.

0 மறுமொழிகள்: