24.7.16

"இந்துத் தீவு"(பாலித்தீவு)
“இந்துத்தீவு”(பாலித்தீவு)
குமரிமைந்தன்
நம் தொன்மங்க்ள் தேவர்களின் அரச குருவாக பிரகசுபதி எனும் வியாழனையும் அசுரர்களின் குருவாக சுக்கிரன் எனப்படும் வெள்ளியையும் குறிப்பிடுகின்றன. ஆனால் இவை இரண்டும் வெறும் கோள்கள், தேவர்கள் அல்லர். எனவே இக்கோள்களின் இயக்கத்தின் அடிப்படையில் தங்கள் பண்பாடுகளை அமைத்துக்கொண்ட இரு வெவ்வேறு மக்கள் குழுவினர் இவர்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். இந்நிலையில் சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதையில் "வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து புரிநூல் மார்பர்" என்ற வரிகளுக்குப் பொருள்காண நினைத்து பூணூல் தோன்றிய வரலாற்றை வரிசைப்படுத்த முயன்ற போது பண்டைத் தமிழ்க் கடற்கோள்களைப் பற்றிய செய்திகளில் வரும் தென்பாலி என்ற நிலப்பகுதி நினைவுக்கு வந்தது. இன்றைய பாலித்தீவைக் குடைந்துபார்ப்போமே என்று வலையினுள் நுழைந்தேன். அமுதன் என்பார் இட்டு வைத்திருந்த அருமையான தீனி கிடைத்தது. இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் அரசின் தலையீடு இல்லாமல் முழு உரிமையோடு "இந்து" சமயத்தைக் கடைப்பிடிக்கும் நிலப்பகுதி அது மட்டும்தானாம். அங்கு பார்ப்பனர்கள் பூசை மட்டும்தான் செய்வார்களாம் இந்தியாவில் போல் பணம் ஈட்டுவதற்காக அரசு வேலைகள் என்று சத்திரியத் தொழில், மாட்டிறைச்சி ஏற்றுமதி என்று வைசியத் தொழில், அழகு நிலையங்கள் என்று சூத்திரத் தொழில்களையும் செய்துவிட்டு நாங்கள் உயர்ந்தவர்கள் என்று முறுக்கிக்கொள்ளவும் மாட்டார்களாம்.

நான் பேச வந்த செய்தியைக் கூறிவிடுகிறேன். அங்கு நடைமுறையிலிருக்கும் ஆண்டுமுறை என்னை மகிழ்வுடன் கூடிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அது 210 நாட்களைக் கொண்ட ஓர் ஆண்டுமுறை. உடனடியாக கிளார்க்கு பட்டியலை(Clark"s Table)த் தேடி எடுத்தேன். வெள்ளி கதிரவனைச் சுற்றி ஒருமுறை வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள் 224சொச்சம். ஆகா, அசுரர்களைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று உள்ளம் குதித்தது 210 நாட்கள் கொண்ட இந்த ஆண்டுமுறையின் அடிப்படையில்தான் அவர்கள் வேளாண்மை செய்கிறார்களாம். அது போக நாம் கடைப்பிடிக்கும் 365 சொச்சம் நாட்களைக் கொண்ட தூய கதிராண்டாகிய தமிழ் ஆண்டுமுறை, 2 1/2 ஆண்டுகளில் ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்துவிட்டுத் தமிழாண்டுடன் ஓடிவந்து ஒட்டிக்கொள்வதும் யுகாதி என்ற நாளில் தொடங்குவதுமாகிய தெலுங்கு ஆண்டு எனப்படும் சுமார்த்த ஆண்டு(தமிழகம் தவிர பிற அனைத்து மாலங்களலும் இந்தக் கதிர்நிலவாண்டுமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது) , கிறித்தவ ஆண்டு ஆகியவற்றையும் கடைப்பிடிக்கிறார்களாம். வேளாண்மைக்குப் பயன்படுவதால் அந்த 210 நாட்கள் கொண்ட ஆண்டுதான் அவர்களுடைய ஆண்டு என்பது உறுதி. கடலில் முழுகியதாகக் கூறப்படுவது தென்பாலிமுகம் என்பதால் அது இந்தப் பாலித் தீவோடு தொட்டுக்கிடந்ததா அல்லது வேறொரு நிலப்பகுதியா என்பது தெரியவில்லை. பாலித்தூவு தொடர்புள்ளவர்கள் தமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம். இன்னொரு முகாமையான செயதி இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் தென் எல்லையில்தான் இந்தியக் கண்டத்திட்டு எனப்படும் குமரிக் கண்டத்திட்டு சந்திக்கிறது். முகம் என்ற பின்னொட்டு உடைந்த பகுதி குமரித் தட்டிலிருந்து, அதனோடு முழுகிப்போயிருக்க வேண்டும என்ற எண்ணத்தை நமக்கு உருவாக்குகிறது. அவர்களின் பண்பாடு வேறாக இருந்ததால்தான் அதைத் தனியாகக் குறிப்பிட்டிருக்கலாம்.

இந்த வெளிச்சத்தில் பார்த்தால் தேவர் – அசுரர் போர், தொடக்க கால மக்களிடையில் மொழியின் தோற்றம், அதன் பல்வேறு திரிவாக்கங்கள், மக்கள் மொழி, பூசகர் – ஆட்சியாளர் தொழில்நுட்பர்களின் குழூஉக் குறி மொழிகள் என்ற வகையில் இறுதியில் அகத்தியம், வேத மொழி, பாலி, பிராகிருதம், ஐந்திரம், தொல்காப்பியம் போன்றவற்றுக்கான வேர்களை இந்த வட்டாரத்தில் தேடுவதுதான் சரியாக இருக்கும்.

0 மறுமொழிகள்: