5.6.16

ஒழிப்போம் வருமாவ வரியை - 2 ஒழிப்போம் வருமான வரியை - 2

9. தேடுதல் வேட்டைக்குக் கூறப்படும் காரணம் ஒருவரின் வருமானத்தைக் கணக்கிடுவதற்கு வழி ஏதுமில்லை என்பதாகும். நில வரி தண்டல் நிலத்தின் தரம் குறித்த பல்வேறு கூறுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டு சிக்கலின்றி நடைபெறுகிறது. வருமான வரி அப்படியல்ல. சில ஆண்டுகளுக்கு முன் ஓர் எம்பி(பம்பு) பழுது பார்ப்பதற்காக நெல்லையிலிருந்து மதுரையில் உள்ள ஓர் நிறுவனத்துக்கு வந்திருந்தேன். அவர்கள் பழைய எம்பிகளைப் புதுப்பிப்பதுடன் புது எம்பிகள் செய்வதை மூலத் தொழிலாகக் கொண்டவர்கள். அந்நிறுவனத்தின் பொறுப்பிலிருந்த இளைஞரிடம் வருமான வரி பற்றி பேச்சுக் கொடுத்தேன். அவரது மிசை(மேசை) மீது கிடந்த மேற்கோள் (கொட்டேசன்) புத்தகத்தைக் காட்டி நிறுவனத்தின் வருவாயை மதிப்பிட வரும் வருமான வரித்துறை அதிகாரி அப்புத்தகத்தைக் கையிலெடுத்து இதுதான் உன் வருமானத்துக்கான ஆவணம் என்று அடாவடியாக நடந்துகொள்வதை மனம் நொந்து கூறினார். பத்துப் பேர் மேற்கோள் மடல் பெற்றுச் சென்றால் ஒருவர் திரும்பி வருவது கூட அரிது என்பது தொழில் – வாணிகத் துறையிலுள்ளோர், தொழில் நடத்துவோர், வாடிக்கையாளர் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், நாம் குறிப்பிடுவோர் யார்? அரசு அதிகாரிகளான கடவுள்களின் தோற்றரவுகள்(அவதாரங்கள்) அல்லரோ! எனவே அவர்கள் கூறுவதற்கு மாற்றுக்கருத்து உளவோ? அவர்களின் அருளைப் பெற நாம் நம் தெய்வங்களின் அருளைப் பெற செய்வது போல் காணிக்கை செலுத்துவதுதானே முறை!

            10. அவர் கூறிய இன்னொரு செய்தி மிக முகாமையானது. அவர்களுக்கு தமிழகத்திலுள்ள பல நகரங்களில் தொழிலகங்கள் வெவ்வேறு பெயர்களில் உளவாம். ஆனால் அவற்றை ஒரே நிறுவனப் பெயரில் நடத்தினால் வருமான வரித்துறை உட்பட பல்வேறு நடுவரசுத் துறைகள் புகுந்து உண்டு இல்லை என்று செய்து விடுவார்களாம். இப் பல்வேறு துறைகளின் சட்ட விதிகள் இருக்கும் போது பனியா - பார்சிகளால் மட்டும் எப்படி பெரிய பெரிய புதிய புதிய நிறுவனங்களை உருவாக்க முடிகிறது என்பது நம் முன் நிற்கும் கேள்வி. மேற்படி பனியா – பார்சிகளுக்குப் போட்டியாக மாநிலங்களில் வாழும் அந்தந்த தேசியங்களின் குடிகள் வளர்ந்துவிடக் கூடாது என்பதுதான் இச்சட்டங்களின் நோக்கமே என்பதுதான் நமக்குக் கிடைக்கும் ஒரே விடை.

            11. பனியா – பார்சி அல்லாத, ஆனால் அவர்களின் கேள்வி கேட்பாரற்ற கொள்ளைக்காக அவர்களின் ஏவல் நாயான இந்திய அரசினால் ஒடுக்கப்படும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுள் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் சராசரிக் குடிமக்கள் தங்கள் மிச்சம் மீதிகளைத் தங்கள் இன்றியமையாத எதிர்காலத் தேவைகளுக்கான சேமிப்புகளாக நம்பகமாகப் போட்டுவைக்க இன்று இருக்கும் வாய்ப்பு அரசுடைமை வங்கிகளும் வேறு சில உள்நாட்டு மக்களுடைமை வங்கிகளும் அயல்நாட்டுத் தனியார் வங்கிகளுமே. அவை தரும் வட்டியோ ஆண்டுக்கு 5 நூற்றுமேனியை மிஞ்சுவதில்லை. அதே நேரம் இந்தச் சேமிப்பை வங்கிகளுக்கு வழங்கும் மக்கள் நகைக் கடன், வீட்டுக்கடன் என்று உறுதியான பிணைகளை வைத்துப் பெறும் கடன்களுக்கு அவ்வங்கிகள் விதிக்கும் வட்டி 12 நூற்றுமேனிக்கும் மேலே. ஆனால் அதே சேமிப்புகளிலிருந்து இவ் வங்கிகள் பனியா - பார்சிகளின் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு ஏறக்குறைய 2½ நூற்றுமேனி வட்டியில் கடன் கொடுக்கின்றன. வட்டியைப் பெறும் நிறுவனங்களோ ஆண்டுக்குச் சராசரி 25 நூற்றுமேனிக்குக் குறையாத ஆதாயத்தைப் பதிவு செய்கின்றன. அதிலும் பல இலக்கம் கோடி உரூபாய்களை அவ் வங்கிகள் குறிப்பாக அரசுடைமை வங்கிகள் வாராக்கடனாகத் தள்ளுபடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அந் நிறுவனங்களின் முதலீட்டுப் பங்குகளின் உண்மை மதிப்பு நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் அடிப்படையில் பல ஆயிரம் உரூபாய்களை எட்டியிருந்தாலும் முகமதிப்பை வெறும் 10 உரூபாய்களாகக் குறுக்கிவைத்து அதன் வீதத்துக்கு மட்டும் ஈவுத்தொகை வழங்கி முதலீட்டார்களை அந் நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. புதிய பங்குகளை அறிமுகம் செய்யும் போதே முக மதிப்பைப் போல் 100 மடங்கு வரை வெளியீட்டு மதிப்பை நிறுவும் அருவருப்பூட்டும் கொடுமை நிறைந்த நடைமுறையை அரசு நிறுவனங்களே பின்பற்றுகின்றதைக் கேள்வி கேட்கத் துப்பற்ற படித்த அறிவிலிகள் நிறைந்ததாக இந்த நாடு இழிந்து போய் நிற்கிறது. அதற்கேற்றவாறே பங்கு முதலீடு குறித்த சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந் நிறுவனங்கள் கொள்ளை மலிவான வட்டியில் அந்த மக்களின் சேமிப்புகளிலிருந்து கடன் பெற்று கொள்ளை ஆதாயம் வைத்து மக்களுக்குத் தங்கள் பண்டங்களையும் பணிகளையும் வழங்குவதால் அந்த மக்களின் சேமிப்பின் பண மதிப்பு இன்றைய நிலையில் ஆண்டுக்கு 25லிருந்து 50 நூற்றுமேனி வரை கரைந்து போகிறது. அதாவது இன்று நீங்கள் ஓரிலக்கம் உரூபாய்களை ஒரு வங்கியின் சேமிப்புக் கணக்கில் செலுத்தினால் அடுத்த ஆண்டு வட்டியுடன் சேர்த்து உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொண்டு இப்போது அப்பணத்தால் வாங்க முடிவதில் முக்காலிலிருந்து பாதி அளவுதான் வாங்க முடியும். அதாவது பணத்தின் மதிப்பு அல்லது வாங்கும் ஆற்றல் அந்த அளவுக்குக் குறையுமாறு ஆட்சியாளர்களின் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளன. தங்கள் அருஞ்செயல்கள் என்று நம் பொதுமைத் தோழர்கள் ஆர்ப்பரிக்கும் பல்வேறு அரசுடைமை நிறுவனங்கள் ஆகிய சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள், மின் வாரியங்கள், கன்னெய்ய(பெட்ரோலிய) நிறுவனங்கள், நிலக்கரி நிறுவனங்கள், ஏற்கனவே அரசின் பிடியிலிருந்த தொடர்வண்டித் துறை ஆகியவை தங்களின் பணிகளுக்கும் பண்டங்களுக்குமான கட்டணங்களையும் விலைகளையும் உயர்த்துவதால் மக்கள் அரசுக்கும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் கூடுதல் விலைகளையும் கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது ஒவ்வொன்றாக வெளிப்படத் தோன்றியிருக்கும் வகைவகையான பலப்பல இலக்கங்களிலான கோடி உரூபாய்கள் ஊழல்களோடு நம் கவனத்துக்கு வராமல் இவர்களின் 60 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவர்கள் அடித்த கொள்ளைகளின் விளைவுகளும் நம் பண மதிப்பு வீழ்ச்சியில் முகாமைப் பங்கேற்றுள்ளதில் ஐயமில்லை. இவ்வாறு மக்களைக் கொள்ளையடித்த ஊழல் ஆட்சியாளர்களை மிரட்டி வல்லரசியம் தன் கைக்குள் போட்டுக்கொண்டு திணிக்கும் உலக வங்கி உட்பட பல்வேறு உலகப் பண நிறுவனங்கள் தங்கள் பிடியுனுள் இது போல் சிக்கிய பிற நாடுகளில் இது போல் வல்லந்தமாக(பலவந்தமாக) கொள்ளை மலிவு விலையில் பறித்த பண்டங்களையும் தங்கள் நாடுகளில் விளைக்கப்படும் போர்த் தளவாடங்களையும் உயர் தொழில்நுட்பக் கருவிகளையும் தாங்கள் நிறுவும் உயர் விலைகளில் இங்கு குவித்து இங்கு உருவாகும் பண்டங்களை குறைந்த விலைகளில் பறித்துச் செல்வதால் ஏற்றுமதிப் பண்டங்களை விளைக்கும் உள்நாட்டினரின் வருவாய் குறைதல், விலை கூட்டப்பட்ட நம் தேவைப் பண்டங்களின் இறக்குமதியால் விலைகளில் ஏற்றம், ஏற்றுமதியால் பண்டங்களின் கிடைப்பு குறைந்து அதனால் ஏற்படும் விலை ஏற்றம், அத்துடன் இந்திய ஏம(ரிசர்வு) வங்கி மூலம் அமெரிக்க டாலருக்கு எதிராக நாள்தோறும் இந்திய பண மதிப்பைக் குறைக்கும் இந்திய ஆட்சியாளரின் கொடுங்கோன்மை என்று இந்திய ஆட்சியாளர்களின் எண்ணிலடங்கா குற்றஞ்சார் நடவடிக்கைகளால் பண மதிப்பின் இந்த வீழ்ச்சி நடைபெறுகிறது. இதிலிருந்து தப்ப கூடுதல் வட்டி தருவோம் என்று வாக்களிக்கும் போலி நிறுவனங்களிடம் அரும்பாடுபட்டு வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி தாம் மிச்சம் பிடித்த பணத்தை மக்கள் போட்டுவைத்தாலோ ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. வரி தண்டுகிறோம் என்ற பெயரில் தனிமனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கிற, வீடுகளுக்குள் புகுந்து காவாலித்தனம் செய்கிற ஆட்சியாளர்கள் குடிமக்களின் பணத்தைக் கையாளும் நிறுவனங்கள் அல்லது தனியாள்கள் மீது எந்த விதமான கண்காணிப்புக்கும் ஆயத்தமாக இல்லை. எடுத்தால் களத்துக்குள் புகுந்து வழக்குகளை முன்வைக்கும் நம் நய(நீதி) மன்றங்களின் தலைவர்களின் கண்களில் தங்கள் அரிய சேமிப்புகள் இப்படிப் பறிபோவது பற்றி நாள்தோறும் தொலைக்காட்சிளின் முன் நின்று நெஞ்சிலடித்து அப்பாவி மக்கள் அலறுவது படவில்லை. மாறாக இம் மக்கள் அதிக வட்டிக்குப் பேராசைப் பட்டதன் விளைவு இது என்று வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுகிறார்கள். ஆனால் இன்று நாட்டில் மக்களிடையிலான கொடுக்கல் வாங்கலில் நிலவும் வட்டி விகிதத்தை விட இந்தப் “போலி” நிறுவனங்கள் அளிக்க முன்வரும் விகிதங்கள் மிக மிகக் குறைவு என்பதுதான் உண்மை நிலை. உண்மையில் மக்களின் சேமிப்புகள் பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணிக்குப் போட்டியாக வந்து விடக்கூடாது என்ற ஆட்சியாளரின் திட்டத்தின் ஒரு பகுதிதானே இவை அனைத்தும்? இந்தப் பகற்கொள்ளையை இந்தியக் குமுகத்தின் மாபெரும் வலிமை மரபு என்றும் மக்களின் “குடும்பச் சேமிப்பு மரபு” என்றும் இது தவிர வெளிநாட்டு மூலதனம் எதுவும் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றும் மாவட்டம் தோறும் அரங்குகள் அமைத்தும் இதழ்களில் கட்டுரைகள் வரைந்தும் முரசு கொட்டி வருகிறார் பனியா – பார்சிகளின் நெடுநாள் ஊதுகுழலான “தணிக்கையாளர்”(ஆடிட்டர்) குருமூர்த்தி. உண்மையில் இன்று பெருந்தொழில் நிறுவனங்கள் குவிக்கும் மாபேரும் ஆதாயங்கள் நம் “பாட்டாளிகளின் கூட்டாளிகள்” கூறுவது போல் பாட்டாளிகளைச் சுரண்டுவதன் விளைவல்ல, சராசரி குடிமக்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் குருமூர்த்தி விதந்து கூறும் “குடும்பச் சேமிப்பு மரபை”ப் பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவுதான் என்பதையும் இந்தச் சுரண்டலில் தங்கள் பங்குக்காகத்தான் நம் “பாட்டாளியரின் கூட்டாளிகள்” அவர்களைத் திரட்டிப் “போராடுகிறார்கள்” என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

             மேலே குறிப்பிட்ட போர்த் தளவாடங்கள், உயர் தொழில்நுட்பக் கருவிகளை இந்தியக் குடிமக்கள் கண்டுபிடித்துக் களத்தில் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகளைக் கருவறுக்க பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணியுடன் இந்தியப் மார்க்சியப் பொதுமைக் கட்சியின் கள்ளக் கூட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கண்காணிக்கிறது.

            அடி மட்டத்து மக்களின் சேமிப்புகளின் நிலை இது என்றால் நடுத்தர மக்களில் அடி மட்டத்திலும் இடை மட்டத்திலும் உள்ளவர்களின் நிலை நாட்டின் வளம் அனைத்தையும் முடக்கிப் போடுவதாக உள்ளது. தம் கைகளில் திரளும் சட்டத்துக்கு உட்பட்டு தாம் ஈட்டும் பணத்தை வருமான வரிக் கொள்ளைக்கு அஞ்சி வீட்டுமனைகளில் மறைக்கிறார்கள். கட்டடங்களின் மதிப்பை உரிய வாய்பாடுகளால் எளிதில் கணித்துவிட முடியும். அதே வேளையில் நிலத்தின் மதிப்புக்கு அத்தகைய வாய்பாடு எதுவும் இல்லை. குமுகத்தின் பணப் புழக்கத்துக்கும் அதனைச் சட்டப்படி முதலிடுவதற்கு அக் குமுகத்தின் சராசரி குடிமகனுக்கு உள்ள வாய்ப்புகளுக்கும் உள்ள உறவுதான் நிலத்தில், அதிலும் குறிப்பாக வீட்டுமனையின் விலையை முடிவு செய்கிறது எனலாம். இங்கு நிலத்தின் பண மதிப்பு என்பது பணத்தாளின் பண மதிப்பு போன்றே செயல்படுகிறது. வேளாண்மைக்குத் தேவையான குறிப்பிடத்தக்க பரப்புள்ள நிலம், நம் ஆட்சியாளர் வேளைண்மை மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கணக்கில்லா பல்திசைத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் வருமான வரிக்கு அஞ்சி ஒரு மறைவிடத்தைத் தேடிக்கொண்டிருந்த “கருப்பு”ப் பணத்துக்கு ஒரு பாதுகாப்பான மறைவிடமாக மாறிவிட்டது. ஆனால் இதிலுள்ள மாபெரும் துயரம் என்னவென்றால் குத்தகை முறை சிற்றுடைமையினுள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முடங்கித் தேங்கிக் கிடந்த நம் வேளாண்மை தன் தளைகளை அறுத்துப் பெரும்பண்ணை வேளாண்மையாக, புதுப் புதுத் தொழில்நுட்பங்களைப் படைத்து வளர்வதற்குப் பயன்பட்டிருக்க வேண்டிய மக்களின் பணத் திரட்சி அந் நிலங்களை சிறு சிறு மனைகளாக உடைத்து எதற்கும் உதவாத தரிசாக மாற்றப் பயன்பட்டிருக்கிறது. இவ் இழிநிலைக்கு ஒரே காரணம் வருமான வரிதான்.

            இன்று நிலத்தின் உண்மையான கள மதிப்பு பத்திரப் பதிவு மூலம் கணக்குக்கு வரும் மதிப்பைப் போல் நான்கு மடங்காகும். இதனால் உண்மையாக வீடுகட்ட விரும்பும் சராசரிக் குடிமகனுக்கு அது எட்டாத கனவாகிவிட்டது. அதே வேளையில் வெளிநாட்டில் பணி அல்லது உள்நாட்டில் அயல் பணி அல்லது ஊழல் செய்யும் அரசூழியர், அரசியல்வாணர், வாணிகர் போன்றோரைக் குறிவைத்து பனியாக்கள் உருவாக்கும் மனைப்பிரிவுகளுக்கும் வீடுகளுக்கும் அவர்கள் வைக்கும் விலைகளை இந்தக் கள மனை விலை நயப்படுத்துகிறது. இந்த வகையிலும் வருமான வரி மறைமுகமாக பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணிக்கே வலுச் சேர்க்கிறது.

நிலம் வாங்குவது போன்ற புதிய முதலீடுகளுக்காக பிற அசையாச் சொத்துகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை வருமான வரிக் கொடுமைக்கு அஞ்சி மிக நெருங்கிய உறவினர்களிடம் கொடுத்துவைத்து பிணத்தையும் வாயைப் பிளக்க வைக்கும் பணத்தைப் பார்த்தவர்கள் அதை ஏப்பம் விட்டுவிட ஏங்கித் துடித்து அந்த ஏக்கத்தின் பலதரப்பட்ட விளைவுகளையும் பட்டறிவோர் எண்ணற்றோர். இவ்வாறு மக்கள் மன அமைதியுடன் தங்கள் பண வரவு – செலவுகளைப் பாதுகாப்புடன் கையாளும் அடிப்படை உரிமையையே இந்த வருமான வரி பறித்துவிட்டிருக்கிறது.

            12. வருமான வரி கணக்கீட்டுக்கு மொத்த வருமானத்திலிருந்து கழிப்பதற்கென்று வருமான வரித்துறை ஒதுக்கியுள்ள இனங்களை அலசினால் ஆட்சியாளர்களின் நோக்கம் வரி தண்டுவதல்ல, மக்களின் வருமானம் முதலீட்டு வடிவம் பெறுவதைத் தடுப்பதே என்பது தெளிவாகும்.

அ.  சில ஆண்டுகளுக்கு முன் இந்திரா விகாசு பத்திரம், கிசான் விகாசு பத்திரம் என்பவற்றை இந்திய ஆட்சியாளர்கள் வெளியிட்டார்கள். இவற்றில் செய்யும் முதலீடு 5 ஆண்டுகளில் இரு மடங்காகும். அத்துடன் முதலிடும் ஆண்டின் வருமான வரிக் கணக்கீட்டிலிருந்து அத்தொகை கழிக்கப்படும். ஆனால் முதிர்வடைந்து பணம் கைகளுக்கு வரும் போது மொத்த முதிர்வுத் தொகையும் வருமான வரிக்கு உட்படும். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் மொத்தத் தொகையையும் மீண்டும் அப்பத்திரங்களில் ஒன்றில் முதலிடுவது ஒன்றே வழி.                      
           
ஆ. இரண்டு, உயிர்க் காப்பீட்டுக் கழகத்துக்குச் செலுத்தும் காப்பீட்டுத் தவணைத் தொகை. உயிர்க் காப்பீட்டுக் கழகத்துக்குச் செலுத்தும் மொத்தத் தொகையைப் போல் பல மடங்காக இத்தனை ஆண்டுகளுக்குப் பின் திருப்பித் தரும் வாக்குறுதி காப்பாற்றப்பட்டாலும் வங்கி சேமிப்புக் கணக்கைப் போல் இதனை நினைத்த நேரம் திரும்பப் பெற முடியாது. தவிர்க்க முடியாத சூழலில் கேட்டால் கணிசமான ஒரு பகுதியைப் பிடித்துவிட்டுத்தான் தருவார்கள். முதிர்வடைந்த பின்னர் கூட கிடைக்கும் பணத்தின் உண்மை மதிப்பு நாம் செலுத்திய பணத்தின் மதிப்பில் 10 நூற்றுமேனி கூடத் தேறாது. முகவர்களுக்கென்றும் ஊழியர்களுக்கென்றும் மிக மிகத் தாராளமாக காப்பீட்டுக் கழகம் அள்ளி அள்ளிக் கொடுக்கும் பணத்தை நாம் செலுத்துவதிலிருந்துதானே கொடுக்க வேண்டும்? இருப்பினும் எதிர்பாரா உயிரிழப்புகள், உறுப்பிழப்புகளின் பின்னர் எஞ்சுவோர் உயிரைப் பிடித்து வாழ இன்று இருக்கும் ஒரே வழி என்ற நிலையில் இந் நிறுவனத்தை அணுகுவோரைக் குறை சொல்ல வழியில்லை. ஆனால் இதில் வாடிக்கையாளர்களின் நலனுக்கு முன்னுரிமை வேண்டிப் போராட வேண்டியது ஒரு நிலை என்றால் வருமான வரியிலிருந்து போலியான ஒரு தப்பிப்பு என்று வருமான வரித்துறை நெருக்குவதையே இங்கு சுட்ட வேண்டியுள்ளது.

 இ. அடுத்து வீட்டுக் கடன். வீடு கட்டுவதற்கு எடுத்த கடனுக்குத் திரும்பச் செலுத்தும் தவணைத் தொகையும் வரி கணக்கிடுவதற்கான வருமானத்திலிருந்து கழிக்கப்படும்.
     
      பொருளியல் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் வீடு கட்டுவதில் இடப்படும் முதலீடு இழப்பைத் தரும் ஒன்றாகும். மாதச் சம்பளம் வாங்குவோருக்கு மாதாமாதம் தமக்குக் கிடைக்கும் பணத்தை அந்தந்த மாதமே கரைத்துவிடும் நடைமுறைக்குத் தடை போட்டு ஒரு கட்டாயச் சேமிப்பை ஊக்குவதாக வீட்டில் செய்யும் முதலீடு அமையும். ஆனால் தொழில் -  வாணிகத் துறையில் உள்ளோர் சொந்தமாக வீடு கட்டுவதை விட வாடகை வீட்டில் வாழ்வதே ஆதாயம். சொந்த வீட்டின் காலமுறைப் பராமரிப்புச் செலவு, ஆண்டுதோறும் கட்டடத்தின் மதிப்பில் ஏற்படும் இறக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிட வாடகைச் செலவு மிகக் குறைவே ஆகும். அத்துடன் கட்டடச் செலவுக்கு வட்டிக் கணக்குப் பார்த்தால் வாடகை மதிப்பு ஒன்றுமே இல்லை எனும் அளவுக்குக் குறைவாக இருக்கும். இந்தப் பொருளியல் கணிப்பின் பின்னணியில் வருமான வரியிலிருந்து ஒரு சிறிய தொகைக்கு விலக்கு கிடைக்கும் என்பதற்காக ஒரு பெருந்தொகையை வீடு கட்டுவதற்காகத் திருப்புவது என்பது ஒரு பொருளியல் தற்கொலை முயற்சியாகும். அத்தகைய ஒரு முயற்சியை தொழில் - வாணிகர்களிடையில் தூண்டும் வருமான வரித் துறையின் முயற்சி சராசரிக் குடிமகனின் பணத்திரட்சி பனியா – பார்சி – வல்லரசியத்துக்குப் போட்டியாக உருவாகாமல் திசைதிருப்பி விடுவதுதான் என்பது தெளிவாகும்.

      மேலே நாம் விளக்கிய இரு நேர்வுகளிலும் மக்களின் பணத் திரட்சியை ஆட்சியாளர்கள் தங்கள் ஆளுகையுள் கொண்டுவரும் ஓர் உத்தியாகவும் வருமான வரியைக் கையாள்வதைக் காணலாம்.

      கோயில்கள் கட்டுவதற்கும் அறக்கட்டளைகளுக்கும் வழங்கும் நன்கொடைகள் வருமான வரி விதிப்புக்கான தொகையிலிருந்து கழிக்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளும் கழிக்கப்படும். ஆனால் புதிய தொழில்களில் முதலிடும் தொகையையும் கழிக்க வேண்டும் என்ற வேண்டுகை இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

      ஆக மொத்தத்தில் இந்திய ஆட்சியை ஆட்டிவைக்கும் பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணிக்கு அப்பால் எந்தச் சராசரி இந்தியக் குடிமக்களுக்கும் தங்கள் வருமானத்தை ஆக்க வழியிலான முதலீடாக மாற்றுவது பற்றிய சிந்தனை எழாதவாறு வருமான வரித்துறையின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.  
  
            13. இவ்வளவு கெடுபிடிகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணமான இந்த வருமான வரியின் அளவுதான் என்ன? 1993-94 ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மட்டும் இது மொத்த வருமானத்தில் 6 நூற்றுமேனியாக உயர்ந்துள்ளது. அதற்கு முன் தொடர்ந்து 5 நூற்றுமேனியாகவே இருந்து வந்தது. அதன் பின்னர்தான் ஆண்டைய வரவு – செலவு அறிக்கையில் வருவாய் மதிப்பீட்டில் 15 நூற்றுமேனி அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் மொத்த தண்டல் சராசரியாக அதில் மூன்றில் ஒரு பகுதிதான், அதாவது ஏறக்குறைய 5 நூற்றுமேனி அளவுதான் என்பது அண்மையில் வெளிப்பட்ட ஒரு செய்தி.

            இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் சம்பளப் பட்டியலில் கையெழுத்திட்டுப் பெறும் ஊழியர்களிடமிருந்து வருவதுதான். பெரும் முதலாளிகளிடமிருந்து வருவது புத்தகக் கணக்கில்தான். ஏற்றுமதி - இறக்குமதி உதவித்தொகைகள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளைக் கணக்கிட்டால் இந்த முதலாளிகளுக்கு நிகரமாக அரசே ஆண்டுதோறும் பணம் வழங்குவதாக முடியும். இவ்வாறு சென்ற ஆண்டில் பெரும் அசுர நிறுவனங்களுக்கு “நம்” அரசு கொட்டிக் கொடுத்துள்ள தொகை 5.7 இலக்கம் கோடி உரூபாய்கள் என்பது மார்க்சீயப் பொதுமைக் கட்சியின் தமிழகச் செயலர் திரு. இராமகிருட்டினன் தந்துள்ள செய்தி. அது போகக் கணக்கிலெடுக்க முடியாத மிகச் சிறு அளவுதான் சராசரிப் பணக்காரர்களிடமிருந்து கிடைக்கும்.

            வருமான வரித்துறையின் மொத்த நடவடிக்கையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் செயற்படும் வருமான வரித்துறையை பனியா – பார்சி – வல்லரசிய முதலாளிகள், அரசியல்வாணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நலன்களுக்காக இந்தியா என்ற சிறைக்கூடத்துக்குள் காந்தியால் அடைக்கப்பட்ட பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த, மாநிலங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் பொதுமக்களையும் பனியா – பார்சி – வல்லரசியம் சாராத பணக்காரர்களையும் அச்சுறுத்துவதற்காகவும்,  அவர்களின் அனைத்துத் தொழில்முனைவுகளையும் கருவறுக்கவும் தங்கள் அதிகார ஆதிக்கத்தை மக்கள் மீது நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாகவே முடிகிறது. இதன் விளைவாக மக்களின் சேமிப்பு மனப்பான்மையும் முதலீட்டு மனப்பான்மையும் புதியன படைக்கும் சிந்தனையும் அழிக்கப்படுகிறது. உள்நாட்டு மூலதனம் துரத்தப்பட்டு ஒளிந்து கொள்வதால் உள்நாட்டுத் தொழில்நுட்பமும் வளர வழியற்றுப் போகிறது.

            வரி தண்டவும் கண்காணிக்கவும் பேணப்படும் ஒரு பெரும் ஊழியர் படையின் சம்பளம், படிகள், கட்டட வாடகை போன்ற ஆள்வினைச் செலவுகள், தேடுதல் வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகள் “கருப்புப் பணம்” பற்றிய துப்பு தரும் துப்பாளிகளுக்கு வழங்கப்படும் கைக்கூலி ஆகியவற்றை மொத்த தண்டலில் கழித்தால் கிடைக்கும் நிகர வருவாய் வெட்கப்படத்தக்கதாய் இருக்கும்
எனவே, வருமான வரித்துறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நமக்கிருக்கும் அயல்நாட்டுக் கடன்களைப் போல் பல மடங்கு மதிப்புள்ள, கருப்புப் பணம் என்று வருமான வரித்துறையால் முத்திரை குத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள பணம் மூலதனமாகப் பொருளியல் களத்தில் இறங்க வழி ஏற்பட வேண்டும். மக்களின் (தனியார் எனும் போது அது வெளிநாட்டவரைப் பிரித்துக் காட்டாது, மக்கள் என்றால் உள்நாட்டவரை மட்டும் குறிப்பிடும்)  பொருளியல் நடவடிக்கைகள் பல்கிப் பெருகும். இதன் விளைவாகச் சுங்கவரி போன்ற வரி வரவுகள் ஒழிக்கப்பட்ட வருமான வரியை விடப் பல மடங்கு உயரும். மக்களின் வேலை வாய்ப்புகளும் வாழ்க்கைத் தரமும் உயரும். மக்களின் முனைவுகளின் விளைவாக நம் சொந்தத் தொழில்நுட்பமும் நம் பொருளியல், தொழில்நுட்ப அடிமைத்தனம் நீங்கும்.

            ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக்கு.............. மக்கள் பொதுவாகத் தாம் திரும்பிய இடமெல்லாம் சாவையோ வரிகளையோ எதிர்பார்க்க வேண்டியதில்லை என்று உணரும் நிலை வேண்டும் என்றார் நாகரிகத்தின் கதை என்ற புகழ் பெற்ற வரலாற்று நூலை எழுதிய வரலாற்று மேதை வில் டூராண்ட். இன்றைய இந்திய நிலைமைக்கு எவ்வளவு துல்லியமான விளக்கமாக இது அமைந்துள்ளது!

2

            சில ஆண்டுகளுக்கு முன் ஈரோடையில் ஓர் அரங்கில் பேசிய திரு.ப.மணியரசன் அவர்கள் இன்றைய பொருளியல் கட்டத்திலிருந்து பொதுமைக் கட்டத்துக்குப் போகும் முன் நாம் இடையில் ஒன்றிரண்டு பொருளியல் கட்டங்களைக் கடக்க வேண்டும் என்றார். அடுத்து பேசிய நான் திரு.மணியரசன் சொல்லாமல் விட்ட அந்த “ஓரிரு” பொருளியல் கட்டங்கள் முதலாளிய பொருளியல் கட்டமே என்று மார்க்சு கூறியிருப்பதை விரிவாக எடுத்துரைத்தேன்.  வருமான வரியை ஒழித்து கருப்புப் பணத்துக்கு விடுதலை கொடுத்து மூலதனமாக அது பொருளியல் களத்தினுள் நுழைந்தால் அதனால் விளையும் பொருளியல் விடுதலை, நிலக்கிழமைப் பண்பாடாகிய சாதியத்தின் முடிவு போன்ற நன்மைகளைப் பற்றியும் விரித்துரைத்தேன். நான் பேசி முடித்த பின் பேசிய மாபெரும் படிப்பாளியும் ஒரு காலத்தில் தமிழ் மொழி உணர்வு, தமிழ்த் தேசியம் ஆகியவை பற்றி எல்லையின்றி பகடி செய்தவரும் பின்னர் மாபெரும் தமிழ்த் தேசிய வீரராக வடிவெடுத்தவருமான கோவை திரு.ஞானி அவர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சியும் கந்து வட்டி வாங்கியும் சேர்ந்த பணத்தை முதலீடாக்குவது குமுகப் பகை நடவடிக்கை என்பதுடன் எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் முதலாளியம் வளர விடமாட்டோம் என்று அறைகூவலும் விடுத்தார். 1982இல் வெங்காளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நான் முதன்முதல் அவரைச் சந்தித்த போது நடந்த தனி உரையாடலில் 17 – 19 நூற்றாண்டுகளில் கீழை நாடுகளைக் கொள்ளையடித்து ஐரோப்பிய நாடுகள் வளர்த்த முதலாளியம் உண்மையில் வல்லரசியமே என்றும் ஒரு தேசிய மக்கள் தங்கள் சொந்த மூலதனத்தில் சொந்த மூல வளங்களையும் சொந்தத் தொழில்நுட்பங்களையும் கொண்டு தம் சொந்தத் தேவைகளுக்காக வளர்த்தெடுக்கும் முதலாளியம்தான் மார்கசு கூறிய புரட்சிகரமான பெருமரபு முதலாளியம்(Classical Capitalism) என்றும் அதுதான் பொதுமைப் பொருளியலுக்கு இட்டுச் செல்லும் என்று மார்க்சு கூறியிருப்பதாகவும் கூறினார் என்பதை இங்கு பதிய வேண்டியவனாக உள்ளேன்.

            ஈரோடையில் திரு.ஞானி அவர்கள் முன்வைத்த, கள்ளச் சாராயம் வடிப்போனும் கந்து வட்டிக்காரனும் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை மூலதனமாக்குவது இழிவு என்பது குறித்துப் பேசுவோம். வரலாறு எங்கும் இத்தகைய பணமே மூலதனமாக முகிழ்த்து இன்றைய வல்லரசியத்துக்கு முந்திய முதலாளியத்தை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவில் யூதர்கள் என்றால் இந்தியாவின் தரகு முதலாளிகளான பனியா – பார்சிகள் கந்துவட்டிக்காரர்களாக இருந்தோரே; இன்றும் இருப்போரே. இன்று புதிது புதிதாக உலகப் பொருளியல் களத்தில் நுழையும் எண்ணற்ற பன்னாட்டு முதலைகளின் மூலதன அடித்தளம் மக்களை அழிக்கும் போர்க் கருவிகளையும் நச்சுப்பொருட்களையும் விளைத்து உருவானதுதானே! பிரிட்டனின் எட்டாம் என்ரி தன் மனைவியை மண விலக்கு செய்ய போப்பாண்டவர் இசைவு தரவில்லை என்பதற்காக வாட்டிக்கனின் சமய மேலாளுமையைத் தூக்கி எறிந்து தன்னையே இங்கிலாந்தின் சமயத் தலைவராக அறிவித்து கத்தோலிக்க மடங்களைக் கலைத்து அவற்றின் சொத்துகளைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அதிலிருந்துதானே அங்கு முதலாளியத்தின் விதை விழுந்தது!

            தனி மனிதர்களிடம் எந்த விதமான குமுகப் பயன்பாடுமின்றிக் குவிந்திருக்கும் பணம், அது எந்த வகையில் ஈட்டப்பட்டிருந்தாலும் எப்போதுமே குமுகப் பகை நடவடிக்கைகளில்தான் பயன்படும். அதுவே விளைப்புத் துறையில் இறங்கினால் மேலை நாடுகளில் போல் அடிப்படையான குமுக மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயர்த்தும்.

            அன்று நான் முன்வைத்த கருத்து பற்றி திரு.மணியரசன் அவர்கள் இன்றுவரை தன் மறுப்பையோ விளக்கத்தையோ கூறவில்லை.

            தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இன்று கள்ளச் சாராய விளைப்பிலிருந்தும் கஞ்சாத் தோட்டங்களிலிருந்தும் கந்துவட்டித் தொழிலிலிருந்தும் கோடிக்கணக்கான கோடி உரூபாய்கள் பணம் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் போக்கிடமின்றி பதுங்கிக் கிடக்கிறது.

            தமிழகத்தின் உழுகுடிகளில் பெரும்பான்மையரான தாழ்த்தப்பட்ட மக்களிடம் உள்ள குத்தகை நிலங்களை உடைமையாளர்கள் விற்க முயன்ற போது குத்தகை ஒழிப்புச் சட்டப்படி தங்களுக்கு வர வேண்டிய பங்கை உழவர்கள் கேட்டனர். உடைமையாளர்கள் அதை    அடியாட்களை வைத்து எதிர்கொள்ள முனைந்ததால் உருவாயின ஊருக்கு ஊர் உழவர் சங்கங்கள். இந்த சங்கத் தலைமைகள் நாளடைவில் உடைமையாளருக்கும் உழுகுடியினருக்கும் இடையில் கட்டைப் பஞ்சாயம் செய்பவையாய் மாறி அவ் வருவாயைக் குடித்து அழிக்காதவர்கள் கந்துவட்டிக்கு விட்டுப் பெரும் பணம் திரட்டி வைத்துள்ளனர். குத்தகை ஒழிப்பின் மூலமும் அவர்கள் மீது சாதியம் பூட்டி வைத்துள்ள பண்பாட்டுத் தளைகளால் திணிக்கப்பட்டுள்ள சிக்கனத்தின் மூலமும் கடும் உழைப்பினாலும் அரசு அவ்வப்போது அறிவிக்கும் அரைகுறைச் சலுகைகளாலும் கைக்குழந்தை உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பெயரிலெல்லாம் நிலங்களை வாங்கி வேளாண்மையிலும் வட்டித்தொழிலிலும் பணம் திரட்டி வைத்திருப்போரும் உள்ளனர்.    

                        ….நாளது சின்மையும் இளமையது அருமையும்
                                தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
                                இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
                                அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
                                ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்…
            1.தன் வாழ்நாட்கள் எல்லைக்குட்பட்டவை; 2.இளமை மீண்டும் கிடைக்காத அரிய ஒன்று; 3.அவரவர் முயற்சிக்கு உரிய பங்கு உண்டு; 4.அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவர்க்கு பங்கு உண்டு; 5.வறுமை என்பது இழிவானது; 6.இருக்கும் தமது செல்வச் செழுமையின் சிறப்பை, அதாவது அதன் போதுமை பற்றிய மன நிறைவு; 7.குடும்பத்தார், நண்பர்களோடு கலந்து வாழும் அன்பின் விரிவு, 8.அவர்களைப் பிரிந்து வாழ்வதால் வரும் மனத் துயர் என்ற வாழ்க்கையின் எட்டு வகை அடிப்படைகளையும் புறக்கணித்துவிட்டுப் பொருள் சேர்ப்பது ஒன்றே குறியாகக் கொண்டவர்களைப் பற்றியது மேலே தரப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பா(பொருள். 44).

            இப்படிப்பட்டவர்களால்தான் வரும் செல்வத்தைச் சிந்தாமல் சிதறாமல் சேர்த்து வைப்பதுடன் ஒன்றைப் பலவாகப் பெருக்கவும் முடியும். இப்படிப் பணத்தை அளவில்லாமல் சேர்த்து வைத்துச் சாவது ஒருவகை மனப்பிறழ்வு என்று கூடச் சொல்லலாம். யாருக்கும் பயனின்றி, மிகப் பெரும்பாலும் ஊதாரிப் பிள்ளைகளால் தடமின்றிப் போகும் செல்வத்துக்கு ஒரு குமுகத் தன்மை ஏற்பட்டதே முதலாளிய விளைப்பு ஊழியில்தான். பணத் திரட்சி குமுக மாற்றத்தையும் பெருங்கொண்ட மக்கள் திரளினரின் வாழ்க்கைத்தர உயர்வையும் கொண்டுவந்தது அது தொழில் முதலீடாக உருமாற்றம் பெற்ற பின்னர்தான். இத்தகைய ஆக்க வழியிலான ஒரு மாற்றம் வந்துவிடக் கூடாது; தங்களுக்கு மலிவாக உழைத்துத் தர வாழ்க்கைத் தரத்தில் தாழ்ந்த ஒரு அடிமை மனிதக் கூட்டம் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நோக்கத்தை நிறைவேற்றும் முதன்மைக் கருவியாக வல்லரசியமும் அவர்களின் கால் தொட்டுச் செல்லும் பனியா பார்சி கூட்டமும் இவ்விரண்டு வகையறாக்களுக்கு அடிமை செய்யும் அதிகார அரசியல் கும்பலும் இந்தக் கூட்டணியைக் குறை கூறிக்கொண்டே கீழறுப்பு வேலையில் தெரிந்தே ஈடுபடும் தலைமைகளையும் பெரும்பான்மை அறியாமலே உழைப்பை நல்கும் தொண்டர்களையும் கொண்ட இடங்கை” அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் வருமான வரியை ஆட்சியை நடத்தத் தேவையான பண வரவுக்கான இன்றியமையாத ஓர் வருவாய் இனம் என்றும் இதுதான் பணக்காரர்களை ஒழித்து ஏழைகளுக்கு நல்வழி தரும் ஒரே வழியென்றும் ஏமாற்றி வருகின்றனர். இந்தப் பொய்ம்மையை உடைக்க வேண்டும். மாநிலங்களுக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு தேசிய மக்களின் பணத் திரட்சி அவர்களின் பண்பாட்டு மட்டத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் நெம்புகோலாக வேண்டும். தங்களிடம் அடிமைப்பட்டுள்ள இந்தியத் தேசியங்களின் மக்கள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அண்டை மாநில மக்களிடையிலும் பகைமையை வளர்த்து மாநிலகளுக்குள் வாழும் மக்களிடையில் பகைமையை வளர்த்துவிடும் “மரு.”இராமதாசு போன்றோரை ஊக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக அத் தேசியங்களின் மக்கள் ஒன்றிணையவும் அண்டை மாநிலங்களிடையிலுள்ள பிணக்குகளை தாங்களே தீர்த்துக்கொள்வதற்கான மனநிலையை உருவாக்கவும் ஒரு தொடக்க முயற்சியாக வருமான வரிக்கு எதிரான போராட்டம் அமைய வேண்டும். அது தமிழகத்திலிருந்து வெடித்தெழ வேண்டும். ஏனென்றால் இந்திய விடுதலைப் போராட்டத் தொடக்கதிலேயே பொருளியல் விடுதலை பற்றிய எல்லையற்ற தெளிவோடு ஓர் உள்நாட்டுக் கப்பல் குழுமத்தை உருவாக்கி ஆங்கிலரை அலறவைத்து ஆங்கிலரின் உள்நாட்டுக் கைக்கூலிகளின் உதவியால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு கடும் தண்டனை பெற்ற வ.உ.சிதம்பரனார் பிறந்த தமிழகத்தைக் குறிவைத்தே காந்தி உருவாக்கிக் கொடுத்துள்ள பனியா – பார்சி இந்திய அரசு செயல்படுகிறது. அது மட்டுமல்ல அன்று ஆர்.கே.சண்முகமு(செட்டியாரு)ம் இன்று ப.சிதம்பரமும் ஆகிய தமிழ்நாட்டில் பிறந்தவரே தத்தம் இந்தியப் பண அமைச்சர் பதவிக் காலங்களில் தமிழகம் மட்டுமல்லை இந்திய மக்கள் அனைவரின் பொருளியல் அடித்தளத்தையும் தகர்த்து அதனை பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணிக்கு தளமாக்கிக் கொடுத்தவர்கள் என்ற வகையில் அந்த இரண்டகத்துக்குக் கழுவாய் தேடும் கடமையும் தமிழகத்துக்கு உண்டு.

எனவே தமிழகத் தேசிய மேம்பாட்டில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட அனைவரும் வருமான வரி என்ற மாபெரும் பொருளியல் ஒடுக்குமுறைக் கருவிக்கு எதிராகப் போராட அணி திரள்வீர் என்று அறைகூவல் விடுக்கிறோம்!
தமிழக மக்களே ஒன்று திரள்வீர்!
வருமான வரிக் கொடுமைக்கு முடிவுகட்டுவோம்!
இந்திய உரூபாய் மதிப்பை அமெரிக்க டாலருக்குச் சமமாக்குவது வரை இந்திய ஆட்சியாளருக்கு இடைவிடாத நெருக்குதல் கொடுப்போம்!
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்.
தொடர்புக்கு:
94439 62521     97893 04325     97906 52850

0 மறுமொழிகள்: