சேணுயர் சிலம்பில்....
செந்தமிழ் நாடாக இருந்த சேர நன்னாடு இடைக்காலத்தில் வல்லரசுச் சோழர்களின் அதிகாரத்தின் எதிர்வினையாகத் தமிழ் மொழியைக் கைவிட்டு, கலப்புத் தமிழாக இருந்ததற்கு எழுத்தச்சன் என்பவர் வகுத்துத் தந்த அகர வரிசையை ஏற்றுக்கொண்டு இன்றைய மலையாள மொழியை உருவாக்கிக் கொண்டது. அந்தப் புதிய மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான போராட்டம் அவை இரண்டும் சந்திக்கும் நில எல்லை நெடுகிலும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வரலாற்றில், வெள்ளையர் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன்புள்ள இறுதிக் காலத்தில் கொள்ளையையே நோக்கமாகக் கொண்டு இடைவிடாத போர்களை அரசர்கள் என்ற பெயர் தாங்கிய கொள்ளையர்கள் நடத்தியதால் ஒரே மொழி பேசும் மக்கள் பல்வேறு அரசுகளின் எல்லைகளுக்குள் சிதறிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறுதான் தமிழகத்தின் பல பகுதிகள் திருவிதாங்கூர், கொச்சி, ஆந்திரம், கன்னடம் ஆகிய மாநிலங்களில் சிக்கிக் கொண்டன.
இது தமிழ் மொழி பேசுவோர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் உரிய சிக்கல் அல்ல. மலையாளிகள், தெலுங்கர்களை மட்டும் கொண்ட பகுதிகள் முன்பு பழைய சென்னை மாகாணத்துக்குள் சிக்கிக் கிடந்தன.
விடுதலைப் போராட்ட காலத்தில் மொழிவழி மாகாணங்கள் அமைப்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களின் ஆதரவைத் திரட்டியது காந்தியின் பேரவைக் கட்சி. அதன் அடையாளமாகத் தன் கட்சிக் கிளைகளுக்கு எதிர்கால மொழிவழி மாகாணங்களின் பெயரை விடுதலைக்கு முன்பே வைத்து விட்டது. அவ்வாறு தெலுங்கர்களின் பகுதிக்கு ஆந்திரப் பைதிர(பிரதேச)ப் பேரவைக் குழு என்றும் தமிழர்களின் பகுதிக்கு தமிழ் நாடு பேரவைக் குழு என்றும் பெயர் கொடுத்திருந்தது.
ஆனால் விடுதலைக்கும் பின்னர் பேரவைக் கட்சி தன் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது. அதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்கள் ஆந்திர மக்கள். பொட்டி சீறி இராமுலு என்பவர் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டதன் விளைவாக உருவான புரட்சிகரமான மக்கள் எழுச்சிக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அதில் சென்னை மாகாணப் பகுதிகளுடன் ஐதராபாத் போன்ற சமத்தானங்களும் சேர்ந்திருந்தன. தமிழகத்துக்குரிய சித்தூர், புத்தூர், நல்லூர், திருத்தணி, திருப்பதி என்னும் பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. தமிழக மக்களிடமிருந்து உருவாகிய எதிர்ப்பைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை. ம.பொ.சி. மட்டும் திருப்பதிக்கும் திருத்தணிக்கும் போராடி திருத்தணியை மட்டும் மீட்டார்.
அவ்வாறு வெள்ளையருக்கு முந்திய கொள்ளைப் போர்களின் விளைவாகத் திருவிதாங்கூருக்குள் சிக்கிக் கொண்டவை தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, நெடுமங்காடு, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்கள். இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பகுதி தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று போராடத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற மேற்கு வட்டங்களில் வாழ்ந்த மக்கள் மலையாளிகளின் கொடுமைகளினாலும் கிழக்கு வட்டங்களில் வாழ்ந்தவர்கள் அரசுப் பணிகளில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் இந்தப் போராட்டத்தைத் தனித்தனியாகத் தொடங்கி வைத்தனர். இந்தப் போராட்டம் இந்த 6 அல்லது 7 மாவட்டங்களில் மட்டும் கூர்மை அடைவதற்கு ஒரு சிறப்பான காரணம் உண்டு.
திருவிதாங்கூர் சமத்தானத்தை விடுதலைக்கு முன் ஆண்ட மன்னர்களுக்குத் திவானாக இருந்தவர்களில் நடைமுறையில் இறுதியாக இருந்தவர் சி.பி. இராமசாமி ஐயர். (இவருக்குப் பிறகு உன்னித்தான் என்பவர் மிகக் குறுகிய காலம் பதவியில் இருந்தார்.) இவர் தமிழ் நாட்டில் வந்தவாசியைச் சேர்ந்த அத்துவைதப் பார்ப்பனர். அத்துவைதக் கோட்பாட்டின் படியே சாதி வேறுபாடுகளைப் புறக்கணித்துச் செயற்பட்டவர். ஆனால் தமிழர்கள் மேல் பரிவுகொண்டவர். திருவிதாங்கூர் சமத்தானத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த தெற்கு வட்டங்களில் ஆய்வு முன்னோடி என்ற பெயரில் கட்டாய இலவயக் கல்வித் திட்டம், மதுவிலக்கு, கன்னியாகுமரி -திருவனந்தபுரம், நாகர்கோயில் - ஆரல்வாய்மொழி சிமென்றுச் சாலைத் திட்டம் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தினார். நாகர்கோயில் நகரமைப்புத் திட்டம் என்ற பெயரில் நாகர்கோயிலை நடுவாக வைத்து இரண்டு சுற்றுச் சாலைகள் அமைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்து நிலம் கையகப்படுத்தி முடித்து வேலை தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ″விடுதலை″ வந்தது. பொதுமைத் தோழர்களின் கடுமையான எதிர்ப்பினால் சி.பி. இராமசாமியார் அகற்றப்பட்டார், திட்டம் கைவிடப்பட்டது. இன்றைய ஆட்சியில் வருவாய்த் துறையினர் பட்டையம் போட்டு விற்றது போக சுற்றுச் சாலைகளுக்காகக் கையகப்படுத்தியதில் பெரும்பான்மை நிலங்களும் இன்றுவரை புறம்போக்காகத்தான் கிடக்கின்றன. கன்னியாகுமரி -திருவனந்தபுரம், திருநெல்வேலி - திருவனந்தபுரம் போன்ற புறவழிச் சாலைகளுக்கு மிக வசதியாக இந்த நிலங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஆட்சியாளர்கள் ஏனோ புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த முனைந்துள்ளனர் என்று தெரிகிறது.
சி.பி. இராமசாமியார் திட்டமிட்ட இன்னொன்று பெருஞ்சாணி அணை. அதுவும் வேலை தொடங்கப்பட்டு அடிப்படை தோண்டிய நிலையில் ″விடுதலை″ பெற்றோம். காட்டு நிலத்தைக் கைப்பற்றிப் பெருந் தோட்டம் போட்டிருந்த ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்காக அணை மேல் நோக்கி நகர்த்தப்பட்டு ஒரு குளமாக முடிந்துள்ளது. முன்பு தோண்டிய அணை அடிப்படையை(வாணத்தை) இப்போது கூட நாம் பார்க்க முடியும்.
இங்கு நாம் கூற வந்தது சி.பி. இராமசாமியாரின் கட்டாய இலவயக் கல்வியைப் பற்றித்தான். 1946 - 47 கல்வியாண்டுத் தொடக்கத்தில் அந்தந்தப் பள்ளிகளுக்கு அண்மை இடங்களில் வாழும் ஐந்து அகவை நிரம்பிய குழந்தைகளை உடனடியாகப் பள்ளியில் சேர்க்குமாறு ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று பெற்றோர்களை வலியுறுத்தினர். சேர்க்காத பெற்றோர்க்குத் தண்டனை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் காலையில் 1, 2 வகுப்புகளுக்கும் மாலையில் 3 - 5 வகுப்புகளுக்கும் என்று மாற்று முறை வகுக்கப்பட்டது. முன் 3 + 2 = 5 மணியாக இருந்த பள்ளி நேரம் 3 + 3 = 6 என்று கூட்டப்பட்டது. கூடுதல் கட்டடங்களைக் கட்டி புதிய ஆசிரியர்களை அமர்த்தியது வரை இந்த நடைமுறை செயல்பட்டது.
ஏழைக் குழந்தைகளுக்கு நண்பகல் தேங்காய்த் துருவல் இட்ட செழுமையான உளுந்தங்கஞ்சி தேங்காய்த் துவையலுடன் வழங்கப்பட்டது. தாய்மொழியில் கல்வி கற்ற தமிழ்ப் பகுதி மக்கள் விரைந்து கல்வியில் சிறந்த மக்களாக உயர்ந்தார்கள். 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு மொழியாக கற்பிக்கப்பட்டது. கல்லூரிகளில் ஆங்கிலம் பாட மொழியாக இருந்தது.
திருவிதாங்கூரில் ஆட்சி மொழி மலையாளம். அதனால் புதிதாகப் பயின்று வந்த மாணவர்களுக்குத் திருவிதாங்கூரில் வேலைவாய்ப்பு கிடைக்காது. அடிமனதில் பதுங்கியிருந்த இந்த உள்ளுணர்வுதான் தென் திருவிதாங்கூர் மக்களைத் தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்ற உறுதியான போராட்டத்துக்கு உந்தித் தள்ளிய அடிப்படைக் காரணமாகும்.
இதற்கு மாறாக ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்த இலங்கையிலும் கர்னாடகத்திலும் வாழ்ந்த தமிழர்கள் அப்போது போலவே எப்போதும் தாம் வாழும் இடங்களில் தொடர்ந்தும் அதிகாரிகளாக இருப்போம் என்று மெத்தனமாக இருந்தனர். இலங்கை அரசு நேரடியாகவே ஒடுக்குமுறையில் இறங்கியதாலும் அவர்களுக்கு நல்ல தலைமைகள் அமைந்ததாலும் காலம் கடந்தாவது களத்தில் இறங்கினர். கர்நாடகத்தில் அரசு அடியாட்களை ஏவி விட்டு கண்டு கொள்ளாமல் இருந்தது, தமிழ் மக்களுக்கு வீரார்ப்புள்ள ஒரு தலைமை கூட அமையாதது ஆகிய காரணங்களால் அவர்கள் கன்னடரிடம் மிதிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலும் வளர்ச்சி தடைப்பட்ட நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் படித்த ஒட்டுண்ணி வகுப்புகளாலேயே தொடங்கப்படுகின்றன. அவை மொழி, பண்பாடு என்ற களங்களிலேயே இயங்குகின்றன. நல்ல வேலை கொடுத்து விட்டால் இந்த வகுப்பு யார் எவர் என்று பார்க்காமல் அவர்கள் காலில் எந்தக் தயக்கமும் இன்றி விழுந்துவிடும்.
நிலம் அதன் வளம், அதில் உழைக்கும் மக்கள் அவர்களது உழைப்பு வளம், அவர்களால் உருவாக்கப்படும் செல்வப் பெருக்கம், அந்தச் செல்வப்பெருக்கத்தை மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்து கொடுத்தல் என்று பொருளியல் உரிமைகளுக்கான போராட்டம்தான் நிலையான பயனை மக்களுக்குத் தரும்.
பொருளியல் உரிமைகள் என்றவுடன் நம் பொதுமைத் தோழர்கள் பாட்டாளியம் அதாவது கூலி உயர்வு பற்றி மட்டும் பேசுவார்கள். மாட்டுக்குத் தீனி போட்டு வளர்த்துச் செழுமையாக்கி பாலைக் கறந்து குடிப்பதற்குப் பகரம் பால் மடியை அறுத்துச் சுவைப்பதில் குறியாக இருப்பவர்கள் இவர்கள்.
இந்தப் பின்னணியில்தான் கண்ணகி கோயிலான பத்தினிக் கோட்டமும் பெரியாற்று அணையும் ஏலம், மிளகு, தேயிலை, காப்பி, கிராம்பு, இலவங்கம் என்று எண்ணற்ற விலை மதிப்பு மிக்க பண்டங்கள் விளையும் தோட்டங்களும் அமைந்திருக்கும் பகுதியாகிய தமிழர்கள் மிகுந்து வாழும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களை அடக்கிய இடுக்கி மாவட்டத்திலிருந்து உரிமைக்குரல் உரிய வலிமையோடு எழும்பவில்லை. இங்கு உழைப்பவர்கள் அனைவரும் உள்ளூர்த் தமிழர்கள். நில உடைமையாளர்களில் கம்பம் போன்ற அண்மையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் தொலைவிலிருக்கும் பெருந்தோட்ட முதலாளிகளும் பெரும்பான்மை. இவ்விரு சாரருக்கும் இம்மாவட்டம் தமிழகத்தில் சேர வேண்டும் என்பதில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு பொறியாளனாக, பெரியாற்று அணையில் 1980 இல் ″பழுது″ ″பார்க்கும்″ பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்து 6 மாதங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் 172 அடி உயரமுள்ள அணையில் அடி முனையில் சிறிது ஈரமும் கொஞ்சம் பாசியும் மட்டும் படிந்திருந்தது, அந்த அணை நாட்டிலுள்ள வேறெந்த அணையையும் விட உறுதியானது என்ற உண்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க கேரள - தமிழக ஆட்சியாளர்கள் முறையே தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகவும் சொந்த ஆதாயங்களுக்காகவும் தமிழக மக்களின் வேளாண்மையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல தமிழக - கேரள எல்லை நெடுகிலும் மலை முகட்டுக்கு மேற்கே சிறு சிறு அணைகளைக் கட்டித் தண்ணீரைத் திருப்பித் தமிழகத்துக்குப் பாய்ச்சி வசதி ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர் தமிழகச் சிற்றரசர்களும் பாளையக்காரர்களும் இடைக்கிழார்களும்(சமீன்தாரகளும்). எனவே அந்த அணைப் பகுதி ஒவ்வொன்றும் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆனால் மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு கேரள ஆட்சியாளர்கள் பழைய எல்லைக் கற்களைப் பிடுங்கி இந்த அணைகளுக்குக் கிழக்கே நட்டு வைத்திருப்பதுடன் அணைகளை உடைத்துத் தண்ணீரை மேலைக் கடலுக்குள் கொண்டு விடுகின்றனர். அந்தந்தப் பகுதி மக்கள் தங்கள் ச.ம.உ.., பா.உ.., கட்சிக்காரர்கள், பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் குறிப்பாகத் ″தமிழ்த் தேசிய″த் தலைவர்களிடமெல்லாம் முறையிட்டுப் பார்த்துவிட்டனர். காவிரி, பெரியாற்று அணைச் சிக்கல்களில் போல் குரல் எழுப்பிவிட்டு கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு அவர்கள் அமைந்துவிட்டனர். இவ்வாறு செல்வதறியாமல் திகைத்து நிற்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற அன்று பாண்டிய மன்னனின் கொடும்பிடிக்குள் சிக்கிக் கிடந்த மக்களை மீட்க சிலம்பைக் கையிலேந்திய கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் நெடுவேள் குன்றத்தில் எடுப்பித்த கோயிலுக்கு அவள் திருமுன் எங்கள் மனக்குறைகளை எடுத்துரைக்கச் சென்றிருந்தோம்.
பாண்டியனாகிய கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள் போல் தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லான் நின்னாட் டகவையின் அடைந்தனள் நங்கையென்று(காட்சிக் காதை 87 – 90) சாத்தனார் செங்குட்டுவனை நோக்கி, தவறிழைத்த பாண்டியனைத் தண்டிக்குமாறு வேண்டிய போது சிக்கலைத் திசை திருப்பி கண்ணகிக்குக் கோயில் எடுத்தது போல் இன்றி மதுரையில் செய்தது போல் எமக்குத் தலைமை தாங்கி இழந்தவற்றை மீட்டுத்தர வழிகாட்டுவாய் என்று கேட்கச் சென்றிருந்தோம்.
இந்த ஆண்டு சித்திரை வெள்ளுவா அன்று (20-04-2008) காலையில் கம்பத்திலிருந்து குமுளி வழியாக மங்கல மடந்தைக் கோட்டத்துக்குச் சென்று அங்கிருந்து மறுபுறம் தமிழக எல்லை வழியாகக் கம்பத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் சென்ற ஆண்டு சென்ற பட்டறிவு இருப்பதாகவும் கூறி நண்பர் தமிழினி வசந்தகுமார் 18-04-2008 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தொலை பேசினார். கண்ணகிக் கோட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் என்றால் இதுவரை நேரில் சந்தித்திராத வகுவைப் பார்த்துப் பேச முடியும் என்பது மறுபுறம். அத்துடன் தமிழினியுடன் தொடர்புடைய இலக்கியவாணர்கள் பத்துப் பேருக்கு மேல் வருகிறார்கள் என்பது என் ஆர்வத்தை மேலும் கூட்டியது. நண்பர் எட்வின் பிரகாசுடன் அவர் குறிப்பிட்டவாறு காலை 5.00 மணிக்குக் கம்பத்தில் இருப்பேன் என்று உறுதி கூறிவிட்டு எட்வினுக்கும் கூறினேன்.
நேரடியாக கம்பம் செல்லும் பேருந்தில் இடம் கிடைக்குமா, எத்தனை மணிக்குப் புறப்படும் என்ற கேள்விகள் எழுந்ததால் 19-04-2008 மாலை 6.45க்குப் புறப்பட்ட சேலம் பேருந்தில் ஏறினோம். இரவு 12.15க்கு திருமங்கலம் வந்தோம். அங்கிருந்து இரவுப் பணி பேருந்தில் ஏறி ஆரப்பாளையம் சென்று போடி வண்டியில் ஏறி அது புறப்பட 02-00 மணி ஆனது. இந்த ஒன்றே முக்கால் மணி நேர இழப்பும் இரவுப் பேருந்தில் இரட்டைக் கட்டணம் தண்டி நம்மிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் பண வெறியால் ஏற்பட்டதுதான். தடமில்லா(ஓம்னி)ப் பேருந்துகள் சுற்றுச் சாலையில் செல்லாமல் நகருக்குள் செல்லும் போது ஏற்படாத இரவு சாலை நெருக்கடி அரசுப் பேருந்துகளால் மட்டும் ஏற்படுமா? சுற்றுச் சாலைச் சுங்கம் தடமில்லாப் பேருந்துகளுக்குக் கிடையாதா? மக்களின் காலத்தின் மதிப்பை மதியாத அரசுப் பொறி என்று ஒழியும்?
காலை 5.00 மணிக்குத் திட்டமிட்டபடி கம்பம் சென்று சேர்ந்துவிட்டோம். காலைக்கடன்களை முடித்த பின் மொத்தம் பதின்மூன்று பேர் அங்கிருந்து புறப்பட்டு 9.00 மணி அளவில் குமுளியில் சிற்றுண்டியை முடித்துவிட்டோம். மலையுந்துகள்(சீப்புகள்) கோயிலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்றன. 12 பேர் கட்டாயம் ஏற வேண்டும் என்று அங்கு ஒரு குழு நின்று கண்காணித்தது. ஒவ்வொரு நடைக்கும் அக்குழுவுக்குத் தரகு உண்டாம். ஒரே வண்டியில் செல்ல முடியாது என்பதுடன் கூட்டமும் நெருக்கியடித்தது. எப்படியோ வெவ்வேறு வண்டிகளில் சென்று சேர்ந்தோம். கல் பாவிய தடம். எதையும் பார்க்க முடியாத பெரும் புழுதிச் செம்மல். உடம்பு, உடைகள், வைத்திருந்த பொருட்கள் என எல்லாமே அடையாளம் தெரியாமல் புழுதி நிறம் கொண்டன. கோயில் சென்றதும் இறங்கி உடலையும் உடைகளையும் உதறியவுடன் தூசி அகன்றது. மக்களின் நீண்ட வரிசை கோயில்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த கோயிலின் சிதைந்து கிடந்த வளாகத்தினுள் நுழைந்தோம்.
இரண்டு கோயில்கள் இருந்தன. ஒரு மூலையில் நாகர் பீடம் ஒன்று ஏறக்குறைய 5′×5′×5′ அளவுள்ள கோயிலுக்குள் இருந்தது. பிற இரண்டு கோயில்களினுள்ளும் காத்திருந்து நுழைந்து பார்க்க நேரம் போதாது என்பதால் பார்க்கவில்லை .
கல்லால் ஆன சிதைந்த நிலையிலிருந்த சுற்றுச் சுவரில் ஒரு கல்வெட்டு. 12ஆம் நூற்றாண்டில் பாண்டியன் பொறித்த கல்வெட்டு என்று கூறினார்கள். கோயில்களில் ஒன்று இராசராசன் கட்டிய சிவன் கோயில் என்றும் இன்னொன்று கண்ணகி கோயில் என்றும் ஒருவர் இல்லை என்றும் கூறினர். தினமணி(21-04-08) இதழ் வளாகத்தினுள் இருக்கும் கேரள மாநிலப் பகுதியில் இருப்பது துர்க்கைக் கோயில் என்றும் தமிழ்நாட்டுப் பகுதிக்குள் இருப்பது கண்ணகி கோயில் என்றும் கூறுகிறது.
தமிழன்பர் ஒருவர் இமயமலையில் உறுதியான கல்லே கிடையாது என்றும் தான் நேபாளம் சென்றிருப்பதாகவும் அங்கே சுக்காம்பாறை கற்கள்தாம் இருப்பதாகவும் அடித்துக் கூறிக் கொண்டிருந்தார். எனவே சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கொண்டு வந்த கல் சிலை செய்யப் பயன்பட்டிருக்க முடியாது, வெறும் புடைப்புச் சிற்பம் செய்யத்தான் பயன்பட்டிருக்கும். எனவே இங்கு அவன் நிறுவிய சிலை சிதைந்து போயிருக்கும் என்று முடிவு கூறினார். கடவுள் எழுதவோர் கல் என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டதற்கு இதுதான் பொருள் என்றும் கூறினார்.
ஆனால் அவர் கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. உலகிலுள்ள பாறைகளை உருகு பாறைகள், உருமாற்றப் பாறைகள், அடுக்குப் பாறைகள் என்று இன்றைய நூலோர் வகைப்படுத்தியிருந்தாலும் எவ்விடத்திலும் தூய்மையான ஒரே வகைப்பாட்டினுள் எந்தப் பகுதியின் பாறைகளும் வரமுடியாது. புவியின் கடந்த 450 கோடி ஆண்டுகள் வாழ்வில் நிகழ்ந்த இடையறா புவியியங்கியல் மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள் வான் வெளியின் தாக்கங்கள் ஆகியவற்றின் விளைவாக உருகுபாறை உருமாற்றப்பாறையாகி இருக்க முடியும். உருமாற்றப் பாறையிலிருந்து அடுக்குப் பாறை உருவாகியிருக்கலாம். அத்துடன் இமயமலையின் உருவாக்கம் ஏறக்குறைய 8½ கோடி ஆண்டுகளுக்குள் என்று புவியியங்கியல் இன்று கணித்துக் கூறினாலும் அதிலுள்ள பாறைகள் அதற்கு எத்தனை கோடி ஆண்டுகள் முந்தியவை என்று வரையறுத்துக் கூறும் அளவுக்கு அதன் பரப்பு சிறியதல்ல. எனவே காலநிலையை எதிர்த்து நிற்கும் கல்லே இமயமலையில் கிடையாது என்று கூறுவது தீர ஆராயாத ஒரு அரைகுறை முடிவு.
கருங்கல்லுக்குப் பெயர் பெற்றதாகக் கூறப்படும் தமிழகத்தில் மாமல்லபுரம் கற்கோயில்களும், சென்னை உயர் நீதி மன்றக் கட்டடமும் இன்னும் எத்தனையோ காலத்தை வென்று நிற்கும் இயற்றங்களும் உள்ளன. ஆனால் நேற்று கட்டப்பட்ட குமரி முனை விவேகானந்தர் மண்டபத்தின் வெளிப்புறத் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் பரவலாக கடற்காற்றால் அரிப்பேற்பட்டுள்ளது. ஏன், புகழ் பெற்ற கணபதிச் சிற்பியால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வடிக்கப் பயன்பட்டிருக்கும் கல்லே தரமானதாக இல்லை. அண்டையிலுள்ள மைலாடியில் உலகின் சிறந்த கருங்கல் இருந்தும் அம்பாசமுத்திரத்தை ஏன் தேடிச் சென்றனர் என்று தெரியவில்லை. குமரி அம்மன் கோயிலின் கிழக்கு வாயிலை எப்போதுமே அடைத்து வைத்திருப்பதற்கு அம்மன் சிலையிலுள்ள மூக்குத்தியிலுள்ள வைரத்தின் ஒளிர்வால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை திரும்பி பாறைகளில் மோதுவதைத் தவிர்க்க என்று காரணம் சொல்லப்பட்டாலும் கடற்காற்றைத் தாங்கும் தன்மையுள்ள கல்லால் சிலை செய்யப்படாததுதான் உண்மையான காரணமா என்றொரு ஐயமும் எமக்கு உண்டு. ஆனால் கண்ணகிக் கோட்டம் என்று அடையாளம் காணப்பட்ட கட்டுமானத்தில் கல் தேர்வு மிகச் சிறப்பாக உள்ளது.
கண்ணிகியின் சிலை புடைப்புச் சிற்பம் இல்லை முழுமையான சிலையே என்பதற்கு,
மேலோர் விழையும் நூனெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமயச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டி....
என வரும் சிலப்பதிகார வரிகள் (நடுகற்காதை: 224 - 230) தெளிவான சான்றாகும்.
கோயில்களின் பக்கத்திலே நின்ற போது அவை அமைந்திருப்பது அந்தப் பகுதியிலுள்ள மலை உச்சிகளில் மிக உயர்ந்தது என்பது புரிந்தது. ஆனால் சிலப்பதிகாரம், பத்தினிக் கோட்டம் அமைந்திருந்ததை விட உயர்ந்த ஒரு மலை உச்சி இருந்ததான குறிப்பைத் தருகிறது.
வரந்தரு காதையில் தேவந்தி மீது பாசண்டச் சாத்தன் தெய்வமேறி மாடல மறையோனை நோக்கிக் கூறிய,
மங்கல மடந்தைக் கோட்டத் தாங்கண்
செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற்
பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய
ஆணிகயம் பலவுள ...
இவ்வரிகள்(53 - 56) கண்ணகிக் கோட்டம் மலை உச்சியில் இருக்கவில்லை அதாவது கண்ணகி கோட்டம் இருந்த இடத்தை வேறாகவும் மிக உயர்ந்த மலைஉச்சியாகிய சேணுயர் சிலம்பை வேறாகவும் கூறுகிறது என்ற குறிப்பைத் தருகிறது.
கோயில்களை மலை உச்சிகளில் கட்டுவது ஓர் அரசியல் நடவடிக்கை. குறிஞ்சித் தெய்வம் முருகன். ஆதலால் மலை உச்சிகளில் முருகன் கோயில்கள் இருப்பது இயற்கை. ஆனால் மலை உச்சிகளில் உள்ள பெருமாள் கோயில்கள் திட்டவட்டமான அரசியல் நடவடிக்கையே. அதுபோல் முகம்மதியப் பெருமக்களின் சமாதிகளையும் சிலுவைகளையும் மலை உச்சிகளில் நிறுவுவதும். அந்தக் கண்ணோட்டத்தில்தான் இராசராச சோழன் நிறுவியதாகக் கூறப்படும் இன்றைய பத்தினிக் கோட்டத்தையும் அணுகத் தோன்றுகிறது.
திரும்பி கீழே இறங்கும் போது எதிர்ப்பட்ட ஒருவரிடம் இங்கு வேங்கை மரம் உள்ளதா என்று கேட்டபோது இன்னும் தாழ்ந்த மட்டத்தில் தான் உள்ளது என்று கூறினார். அவர் மலையாளி என்பது தெரிந்தது. அவரிடம் கண்ணகி வேங்கை மரத்தின் அடியில் அமர்ந்திருந்த வரலாற்றைக் கூறிய போது இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு அப்பால் சற்றுப் பள்ளமான இடத்தில் ஒரு காட்டுப் பகுதி இருக்கிறது, அங்கு வேங்கை மரங்கள் இருக்கலாம், அங்கு கட்டடம் இடிந்த கற்கள் கிடக்கின்றன என்று கூறினார். எனவே இப்போதைய கோயிலுக்கு அண்மையில் உள்ள காடடர்ந்த பகுதிகளை ஆய்வுக்குட்படுத்துவது தேவை. அடுத்த ஆண்டு வரும்போது அதற்குரிய ஆயத்தங்களுடன் வரவேண்டும் என்று வகு அவர்களிடம் வேண்டியுள்ளேன்.
திரும்பும் போது குமுளி செல்லாமல் தமிழ்நாட்டுக்குள் இறங்க வேண்டும் என்பது முதல்முறை என்னை இது தொடர்பாகத் தொடர்பு கொள்ளும் போதே வகு கூறியது. உடன்வந்தவர்கள் என்னை மலையுந்தில் குமுளி வழியில் விடுத்து விடலாம் என்று கூறினர். வகுவுக்கு அதில் உடன்பாடில்லை என்பதைத் தெரிந்ததால் மட்டுமல்ல, அந்த அறைகூவலான வழியில் நடந்து பார்த்து விட வேண்டும் என்ற ஒரு விருப்பமும் என்னுள் இருந்ததால் ஒரு மலை உச்சியை ஏறி இறங்கும் போது குத்தான வழியைத் தவிர்த்து சிறிது மென்சாய்வான வழியைக் கண்டு நடந்தோம். அது போல் மூன்று மலைகளை ஏறி நான்காவது மலையின் முன் மார்புப் பகுதியில் ஒரு சாய்வான இடத்தில் தாண்டி அங்கிருந்த மலை மாளிகைப் பகுதியிலிருந்து பார்த்த போது ஓர் அரிய காட்சியைக் கண்டோம். நான்கு மலை முகடுகள் ஒன்று தாண்டி ஒன்றாக அதே நேரத்தில் அந்த இடத்திலிருந்து பார்க்கும் போது தொடர்ச்சியான ஒரே நீண்ட மலைபோல் சிறு வளைவுகளுடன் தோன்றியது. அதில் முதல் வளைவுக்கும் இரண்டாம் வளைவுக்கும் இடைப்பட்ட பகுதி யானையின் தலையும் பிடரியும் போன்ற தோற்றம் தந்தது. அதைத்தான், பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை என்று அடிகள் சொல்லோவியமாக்கியுள்ளார். இந்தப் பிடர்த்தலைத் தோற்றத்தை நாங்கள் நிலத்தில் இறங்கிப் பேருந்திலிருந்து மலையைப் பார்த்த போதும் காண முடிந்தது. இங்கு காணப்படும் ஐந்து மலை உச்சிகளையும் அஞ்சுமலை என்று இப்பகுதியினர் வழங்குகின்றனர் என்ற செய்தியையும் அறிந்துகொள்ள முடிந்தது.
காட்சிக் காதையில் இந்த மலை முகடுகளை வைத்துத்தான் போலும் நூற்று நாற்பது யோசனை பரப்புள்ள யானை மீது இந்திரன் பெயர்வது போன்ற பெரியாற்றின் கரை என்று (வரிகள் 10 - 30) விளக்குகிறார் அடிகள்.
திரும்பும் போது எங்கள் கருத்தைக் கவர்ந்தது மலை மீது மரங்கள் அருகிக் காணப்பட்டதும் அதே நேரத்தில் மரமாக வளரத் தக்க பல மரங்கள் மிஞ்சிப் போனால் 5 அடிகள் உயரத்துக்குள் குறுகிப் போய் ஆங்காங்கே சிறு சிறு தொகுப்பாகக் காணப்பட்டதும் எஞ்சிய இடங்களில் உள்ள புல்வெளியில் அண்மையில் பெய்துள்ள மழையில் மண் கரைந்து புல்லுடன் பாறையிலிருந்து பெயர்ந்து உதிரும் நிலையில் இருந்ததும்தான். இதைப்பற்றி சிந்தித்த போது நமக்குக் கிடைத்த விடை அவ்வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் யானை, காட்டெருமை மற்றும் தழையுண்ணிகளின் பெருக்கத்துக்கு ஈடு செய்யும் வகையில் அங்கு தேவையான பரப்பிலும் அடர்த்தியிலும் காடுகள் இல்லை என்பதுடன் நிலைத்திணைகளையும் தழையுண்ணிகளையும் சமன் செய்யும் எண்ணிக்கையில் ஊனுண்ணிகளான கொல்விலங்குகளும் இல்லை என்பதுமாகும்.
முன்பு கேரள மாநிலத்தில் ஓரளவு நிலவுடைமை வைத்திருந்த அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட யானைகளை, குறிப்பாக சுமை தூக்குவதற்காகப் பயன்படுத்தி வந்தனர். இன்று சரக்கூர்திகள் அந்தத் தேவையை நிறைவு செய்துவிடுவதால் இப்போது மலைகளிலிருந்து யானைகளை ″அறுவடை″ செய்வதில்லை. முன்பு அறுவடை செய்யப்பட்ட யானைகளின் தீவனத்தை மனிதர்கள் திரட்டிக் கொடுத்ததால் காட்டு யானைகள் அழிக்கும் அளவுக்கு தழைவளம் அழியவில்லை. இன்று தானாகக் காட்டினுள் மேயும் யானைகளால் அழிவு பெருமளவில் இருக்கும். யானையின் இந்த இயல்பை விளக்கும்,
காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்.....
என்ற பிசிராந்தையாரின் புறனானூற்று 184ஆம் பாடல் கூற்று சூழியல் நோக்கிலும் அரசியல் நோக்கிலும் தமிழகம் எண்ணிப் பெருமைகொள்ளத்தக்கது.
கண்ணகி கோயில் பகுதியில் புலிகள் காப்பகம் இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இயற்கைச் சமநிலை குலைந்துள்ளது தெரிகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து காட்டுப் பரப்புக்கும் தழையுண்ணிகளுக்கும் ஊனுண்ணிகளுக்குமான விகித முறையை அறிவியல் அணுகலில் நிறுவி அதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது மாநில - நடுவரசுகளின் சூழியல், கானியல் துறைகளின் பொறுப்பு.
தமிழக எல்லையைப் பொறுத்தவரை இந்த மலைப் பகுதியில் மட்டுமல்ல, பெரும்பாலான பிற இடங்களிலும் கான் பகுதியில் பெருமளவு நீலகிரி மரங்களே உள்ளன. அவை நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி அதனை எண்ணையாக மாற்றி வானில் விடுபவை. அந்த எண்ணெய் ஆவி மீண்டும் மழையாக நிலத்தில் இறங்குவதில்லை. இது தமிழக நீர்வளத்தைப் பெருமளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நீலகிரி மரங்களை அகற்றிவிட்டு நமக்குரிய காட்டு மரங்களை உடனடியாக வளர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
புவி வெப்பமாதல் என்ற பெயரில் வல்லரசிய தொழில் நுட்பங்களை சந்தைப் படுத்துவதற்காக இன்று உலகளாவிய அளவில் பெரும் கூக்குரல் எழுப்பும் சூழியல் ″சிங்கங்களு″க்கு புவி வெப்பமடைவதற்கு இதுவும் ஒரு முகாமையான காரணம் என்பது தெரியுமா?
பொதுப் பணித்துறைப் பொறியாளனாக குமரி மாவட்டம் முதல் வேலூர் மாவட்டம் வரை காடுகளுக்குள் அலைந்த காலத்தில் அங்கு நான் உணர்ந்து மகிழ்ந்த குளுமையை இந்தச் சேணுயர் சிலம்பு சென்று திரும்புவது வரை ஓரிடத்தில் கூட உணரவில்லை.
குருதி அடைப்பால் சிறிது தொலைவு நடந்தாலும் நெஞ்சுவலியுடன் வாழ்ந்துவரும் நான், ஒரு கிலோ மீற்றர் கூடத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நடப்பதைத் தவிர்த்து வந்திருக்கும் நான் ஒரே மூச்சில் ஏறக்குறைய 8 கிலோ மீற்றர் தொலைவுக்கு குத்துச் சரிவுடனும் நல்ல தடம் இல்லாமலுமிருந்த மலைச்சரிவில் இறங்கி பளியங்குடியில் சமநிலத்துக்கு வருவதுவரை தொடர்ந்து ஊக்கிய திரு. வசந்தகுமார் அவர்களுக்கும் மகன் போல் தோள் தந்த தோழர் எட்வின் பிரகாசுக்கும் துணையாக வந்த சீனிவாசன் அவர்களுக்கும் நன்றி.
சமநிலத்துக்கு வந்து கால் ஊன்றி நின்றதும் என் உடல் சுமையைத் தாக்குப் பிடித்து நின்று என்னைக் காத்த என் கால் செருப்புகளைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற உணர்வு எற்பட்டது.
எமது மனதை மிகவும் வருத்தியது தமிழ் பேசிய மக்களைக் குறிவைத்து குடிநீர் கொண்டுசென்ற ஞெகிழிக் குப்பிகளை சூழல்கேடு என்ற காரணம் சொல்லி நீருடன் பறித்து எறிந்த, குமுளி வழியில் கீழிறங்கிய தமிழ் மக்களை மலையுந்தில் ஏறவிடாமல் தடுத்து மலையாளிகளை மட்டும் ஏற்றிவிட்ட, தமிழகப் பகுதியில் இருக்கும் கோயிலில் கட்டியிருந்த தோரணங்களையும் பெயர்ப் பலகைகளையும் மட்டும் அறுத்தெறிந்த கேரளக் காவல்துறையினருடையவும் அரசுடையவும் காட்டுவிலங்காண்டித்தனமும் தமிழக ஆட்சியாளர்களின் நாட்டை விற்றுச் சுருட்டும் இயல்பை அறிந்திருந்தும் அவர்கள் நம் சிக்கல்களைத் தீர்த்துவைக்கட்டும் என்று நாம் காத்திருப்பதும்தான்.
(இக்கட்டுரை தமிழினி மே-2008 இதழில் வெளிவந்துள்ளது.)