1.4.08

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 2

நகர்ப்புற உச்சவரம்பு ஒருபுறம், வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின் விளைவாகப் போக்கிரிகளாலும் அல்லது போக்கிரிகளைக் கூலிக்கமர்த்த முடிந்தவர்களாலும்தான் வீடுகளை நேர்மையற்ற சில குடியிருப்போர்களிடமிருந்து பாதுகாக்க முடியும் என்ற நிலை.

ஒருவர் ஒரு வீட்டில் 12 ஆண்டுகள் வாடகைக்குக் குடியிருந்தால் அந்த வீடு அவருக்குச் சொந்தம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாம். அத்துடன் வீட்டு உரிமையாளர் குடியிருப்பவரைக் காலி செய்யச் சொன்னால் நயமன்றம் அவருக்குத் தடையாணை வழங்கிவிடுகிறது.

வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதன்படி பொதுப்பணித்துறை ஆண்டுதோறும் பல்வேறு வகைக் கட்டுமானங்களுக்கு நிறுவும் விலை வீதத்தின் அடிப்படையில் கட்டடத்தின் அகவை(வயது)க்கு ஏற்றவாறும் கட்டடத்தின் வகைக் கேற்றவாறும் கழிவுகள் செய்து வரும் தொகையில் ஆண்டுக்கு 6 முதல் 9 நூற்றுமேனி வரை வாடகை கொடுக்கலாம் என்பது போன்ற ஒரு நடைமுறையின்படி தான் வாடகை செலுத்த வேண்டுமென்று அதற்கேற்ப எந்த ஒரு கட்டடத்துக்கும் வாடகையை நிறுவி ஆணையிட முடியும்.

ஒரு குமுகத்தின் வட்டி விகிதம் அக்குமுகத்தின் சராசரி மீத்த மதிப்பு(Surplus Value) உருவாக்கத்துக்கு இசைந்ததாக இருக்க வேண்டும். ஒரு கட்டடத்தில் போடும் முதலீட்டுக்கு அதிலும் நடுத்தர மக்கள் முதலிடும்போது அந்த வீதத்துக்குக் குறையாமல் வட்டி கிடைக்குமாறும் ஆண்டுதோறும் அதற்குள்ள மதிப்பிறக்கத்தையும்(Depreciation) பழுது பார்க்கும் செலவுகளையும் ஈடுசெய்யும் வகையிலும் அதன் வாடகை இருக்க வேண்டும். அப்போதுதான் வாடகைக்கு விடுவதற்கென்று கட்டடம் கட்ட முதலிடுவதில் பயன் இருக்கும். அதற்கு வழி இல்லாததால் நடுத்தர மக்கள் அத்துறையிலும் முதலிட முடியவில்லை.

போக்கிரிகளை நாடுவோர்க்கு அப்போக்கிரிகளாலும் பின்னர் தீங்கு. வீட்டுமனைகளில் முதலிடலாமென்றால் பதிவுத்துறையின் கொடுங்கோன்மை ஒருபுறம் என்றால் வீடமைப்பு வாரியம் மற்றும் அரசுத்துறைகளின் கையகப்படுத்தும் மிரட்டல் மறுபுறம்.

நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பு நிறுவி அதற்கேற்ப பதிவுக் கட்டணம் தண்டுவதற்கென்று 1970 வாக்கில் ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தது. அது வழக்கம் போல் ஆட்சியாளர்கள் ஆதாயம் பெறுவதற்கான ஓட்டைகளுடனேயே உருவாக்கப்பட்டது. இதில் 47 ஏ என்ற பிரிவின் படி மறுப்புப் பத்திரம் என்ற பெயரில் பதிவு செய்தால் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசி கைக்கூலி கொடுத்து ஒரு சிறு தொகையை மட்டும் அரசுக்குச் செலுத்தி பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதையே வளர்த்தெடுத்து, இப்படிப் பகரம் பேசுவதற்கென்றே உதவி ஆட்சியர் பதவியொன்றை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமர்த்தினர். வழிகாட்டி மதிப்பை ஆண்டுதோறும் கண்டமேனிக்கு உயர்த்தினர். இதனால் ஆட்சியாளர்களுக்குக் கோடி கோடியாக மனை வாணிகர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கொட்டியது.

ஒருவர் அந்த வட்டாரத்து நிலவரத்தின் படி மனைப்பிரிவு செய்து தவணை முறையில் ஆள் சேர்த்து பணமும் வாங்கிப் பத்திரப் பதிவுக்குச் சென்றார். அந்த தரிசு நிலத்துக்கு ஏக்கருக்கு உரூ 12,00,000/ (பன்னிரண்டு இலட்சம்) என்று வழிகாட்டி மதிப்பு இருந்தது. என்னவென்று நுணுகிப் பார்த்ததில் 12,000.00 என்பதில் புள்ளிவிட்டுப் போனதால் ஏற்பட்ட தவறு இது என்று தெரிந்தது. நம் அரசு அலுவலகங்களில் ஒரு தவறு நடந்து விட்டால் அவர்கள் என்றாவது வருத்தம் தெரிவித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாம் ஏதோ தவறு செய்து விட்டது போன்ற வகையில் பேசுவார்கள். இந்த வழிகாட்டி மதிப்பு அரசு வரை சென்று ஒப்புதல் ஆகி விட்டது; எனவே எங்களால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லி விட்டனர். பெரும் செலவு செய்தும் அந்த நிலத்துக்குரிய ஞாயமான வழிகாட்டி மதிப்பை நிறுவ முடியவில்லை. இறுதியில் அவருக்கு இழப்பு. இது இந்தக் குறிப்பிட்ட சிக்கலின் ஒரு சிறு துணுக்கு. முழுமையையும் கூறுவதனால் ஆயிரம் பக்கத்தில் ஒரு நூலே எழுதி விடலாம்.

வீடமைப்பு வாரியம் என்பது முதலில் அரசுழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் தலைமையகங்களில் அவர்கள் வாடகையின் அடிப்படையில் குடியிருக்க என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். ஆனால் இதில் வேலையை ஒப்பந்தத்துக்கு விட்டதில் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ″ஆதாயத்தை″ப் பார்த்ததும் ஆட்சியாளருக்கு நாக்கில் ஆறு ஓடியது. எனவே பொதுமக்களுக்கும் வீடுகட்டிக் கொடுக்கிறோமென்று தொடங்கினார்கள். கட்டுமானத்தில் கொள்ளை அடிப்பதிலிருந்து நிலம் கையகப்படுத்தலிலேயே நில உடைமையாளர்களை மிரட்டும் நோக்கத்துடன் 4(1) அறிவிக்கைகளை விடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு விடுவித்தார்கள். இதில் பொதுமக்கள் மட்டுமல்ல மனை வாணிகர்களும் பெருமளவில் ஆட்சியாளர்களுக்குப் பணம் அழவேண்டியிருந்தது. கட்டுமானத்தின் தரம் சந்தி சிரிக்க வைத்த பின்னும் இந்தக் கொள்ளை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆதாயம் தரும் நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பகற்கொள்ளையைத் தட்டிக் கேட்கத்தான் யாருமில்லை.

ஆனால் இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு தலைவிதியே என்று மக்கள் முதலிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது ஊக்கமான, ஆர்வமான செயலாக இல்லை. பொருளியல் நடவடிக்கைகளில் இருக்கும் மக்களுக்கு தங்கள் நிலையை(Status que)ப் பேணும் அளவுக்குத்தான் ஆதாயம் கிடைக்கும். மீதி எல்லாவற்றையும் ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு வகையில் பறித்துக் கொள்வார்கள் என்பதுதான் உண்மை.

இந்தச் சூழ்நிலையில்தான் பார்வைக்கு மிகப் பெரிதாகத் தெரிந்தாலும் வெளியில் நிலவும் கந்துவட்டி விகிதத்துடன் ஒப்பிட மிகக் குறைந்த வட்டியே தருவதாக அறிவித்த நிதி நிறுவனங்களை மக்கள் நம்பியதில் தவறில்லை. அவர்களைப் படித்த முட்டாள்களென்றும் பேராசைக்காரர்களென்றும் இழிவுபடுத்தி வெந்த புண்ணில் பழுக்கக் காய்ச்சிய வேலைப் பாய்ச்சினர் அறிவில் மேம்பட்டவர்களாகத் தம்மைக் கருதிக்கொண்ட சிலர். இவ்வாறு ஆட்சியாளர்களால் துரத்தியடிக்கப்பட்டு பாதுகாப்பானது என்று கருதி முதலிட்ட நிறுவனங்கள் அனைத்தும் எமாற்றியதாகக் கூற முடியாது. மக்கள் எல்லாப் பணத்தையும் முதலீடு செய்வது வரை காத்திருந்துவிட்டு நம்பத் தகாத நிறுவனங்கள் என்று பட்டியலிட்டு விளம்பரம் செய்துவிட்டு ஏம(ரிசர்வு) வங்கியும் ஆட்சியாளர்களும் கைகட்டியிருந்தது கடைந்தெடுத்த பொறுப்பின்மை அல்லது கயமை. உண்மையில் இது திட்டமிட்ட அழிம்பு வேலை.

குறிப்பாகத் தமிழகத்தில்தான் பண நிறுவனங்கள் மிகுதியாக இருந்தன. அவற்றில் 36 நிறுவனங்கள் பாதுகாப்பற்றவை என்று தாளிகைகளில் ஏம வங்கி விளம்பரம் கொடுத்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்தால் உலகில் எந்த வங்கியின் முன்னால்தான் அதில் பணம் போட்ட மக்கள் அனைவரும் அடுத்த நாளே அணிவகுத்து நிற்கமாட்டார்கள்? எந்த வங்கிதான் திவாலாகாமல் தப்பும்? இந்த உண்மைகள் நம் படித்த முட்டாள்கள் மண்டையில் ஏறவில்லை. ஞாயமாக ஏம வங்கியின் மீது வழக்குத் தொடுத்திருக்க வேண்டும்.

சீராம் சீட்டு நிறுவனம் இதற்கு ஓர் அசைக்க முடியாத சான்று. அந்த நிறுவனத்தை அழிக்கும் வேலையை ரிசர்வு வங்கி தொடங்கிய உடனே அவர்கள் ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டித் தங்கள் நிறுவனம் உறுதியான நிலையில் இருப்பதை மக்களுக்கு விளங்க வைத்துத் தங்கள் நிறுவனத்தைக் காத்துக் கொண்டனர். கோவையில் ஒரு பண நிறுவனத்தில் ஒரு காவல்துறை உயரதிகாரி ஒரு கோடி உரூபாய் கைக்கூலி கேட்டதாகவும் தராவிட்டால் அந்த நிறுவனம் திவலாகப் போவதாகப் பரப்பப்போவதாக மிரட்டியதாகவும் அந்த நிறுவனத்தார் சொன்னதாகத் தாளிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இதே போல் காவல் துறையால் சிறை செய்யப்பட்ட ஒரு பெண்ணும் கதறி அழுதார்.

இன்று மக்களுக்கு முதலிட எந்த வழியுமில்லை. சிறு நகரங்களிலுள்ளவர்களுக்காவது அண்மையில் கிடக்கும் விளைநிலங்கள் அனைத்தையும் வீட்டுமனைகளாக்கி அவற்றில் ஊக வாணிகம் செய்து வேளாண்மையை அழித்துக் கொஞ்ச நாள் சூதாட முடியும். ஆனால் சென்னை போன்று காலிமனைகளிலிருந்து நெடுந்தொலைவில் இருப்போரும் இந்த ஊகவாணிகத்துக்குத் துணியாதவரும் என்ன செய்வர்? வங்கி வட்டி விகிதமும் ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறதே. பொருளியலின் அனைத்து விதிகளும் ஆட்சியாளர்களால் மக்களுக்குத் தீங்கு பயக்கும் வகையில் சிதைக்கப்படுகின்றனவே. இந்தச் சூழலில் மக்களுக்கு ஒரே வழிதான் உண்டு. சேமிப்பின் மூலம் பணத்தின் மதிப்பு ஆவியாகி விடுவதை விட அப்பணத்தைக் கொண்டு வாழ்வின் ″இன்பங்கள்″ எனக் கருதப்படுபவற்றை நுகர்ந்துவிடுவது, நுகர்பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது, குடித்துத் தீர்ப்பது, உணவுச் சாலைகளுக்குச் செல்வது, பரிசுச் சீட்டுகள் வாங்குவது, திரைப்படம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கையரங்குகள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, பிறந்த நாள், திருமண நாள், சுற்றுலா, கோயில் விழாக்கள், கோயில்களுக்கு நன்கொடைகள், ஆடம்பரத் திருமணங்கள், ஆளுக்கு ஒர் இருசக்கர ஊர்தி, வீட்டுக்கு ஒரு மகிழுந்து என்று வாங்கிப் பயன்படுத்துவது என்று பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பது என்ற வழிதான் அது. இப்படி மக்கள் செலவு செய்யும் ஒவ்வொரு உரூபாயிலும் அதை விற்கும் நிறுவனங்களிலிருந்து ஆட்சியாளருக்குத் தரகு கிடைக்கும் என்பது தனிக் கதை. இவ்வாறு மக்கள் தங்களை அறியாமலே ஓர் ஊதாரிப் பொருளியல் (Spendthrift economy) பண்பாட்டினுள் தள்ளப்பட்டுவிட்டனர்.

இது தான் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கும் விளைவு. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கொண்டு வந்து குவிக்கும் நுகர்பொருட்கள் செலவாகும். உள்நாட்டு மக்கள் முதலிட வழியின்றிப் போவதால் அயல் மூலதனத்தை இங்கு புகுத்துவதற்கான வெற்றிடமும் கிடைக்கும். அதனால்தான் அயல் நிறுவனங்களுக்கு நடைபாவாடை வரவேற்பும் அயல் மூலதனத்தை ஏதோ பெறற்கரிய நற்பேறு என்று ஆட்சியாளர்களும் அவர்களது அனைத்து செய்திப் பரப்பு வாயில்களும் பேரிகை கொட்டுவதும்.

இவ்வளவு இடையூறுகளுக்கும் நடுவில் வெளிநாடுகளில் பணியாற்றுவோர் நம் நாட்டுக்குப் பணம் அனுப்புவது, ஓய்வூதியங்கள் மூலமும் உயிர்க் காப்பீட்டு முதிர்வு போன்றவற்றாலும் வேறு வகையிலும் உள்நாட்டில் உயர்ந்திருக்கும் பணப்புழக்கம் ஆகியவற்றால் மக்கள் கைகளில் சேமிக்கத்தக்க பணம் வந்துகொண்டே இருக்கிறது. அத்துடன் நடுவரசின் விருப்ப ஓய்வுத் திட்டத்தினால் பல இலக்கம் உரூபாய்களைப் பெற்ற அரசுழியர்கள் வங்கிகளில் கிடைக்கும் குறைந்த வட்டியால் தம் சேமிப்பின் மதிப்பு கரைந்து போகும் என்று அஞ்சி அவர்களும் குறைந்த வட்டியில் கந்துவட்டிக்காரர்களுக்குப் போட்டியாக இறங்கினார்கள். அத்துடன் கந்துவட்டிக்காரர்களின் சந்தையும் ஓர் உச்சத்தை எட்டித் தேங்கியது. இந்த வேளையில் அரசு உருவாக்கிய உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில் கந்துவட்டிக்காரர்கள் முதலிடத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்தக் கட்டமைப்புகள் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ளவை. ஆக இங்கும் அவர்களின் கொள்ளை நடக்கிறது.

இவர்களிடம் தேங்கிக் கிடக்கும் மூலதனத்திலிருந்து ரிலையன்சு, வால்மார்ட் போன்ற கொள்ளைக்கும்பல்கள் கூறுவது போன்ற அங்காடிகளைத் தமிழகமெங்கும் உருவாக்க முடியும். சாக்கடை ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் கால் வைக்கக் கூசும் உள்ளாட்சிகளின் வசமிருக்கும் நாளங்காடிகளிலும் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் நம் மக்களுக்கு தூய்மையான சூழலில் நிறுவப்பட்டு பேணப்படும் அங்காடிகளைப் பயன்படுத்தும் தேவையும் உரிமையும் உண்டு. ஆனால் ரிலையன்சு போன்றவற்றின் நுழைவைத் தடுக்கிறோம் என்று சொல்லி சில்லரை வாணிகர்களின் பெயரால் போராட்டம் நடத்தும் வாணிகர் சங்கத் தலைவர்களும் ″தமிழ்″த் தலைவர்களும் செங்கொடித் தோழர்கள் செய்வது போல உள்ளூர்க்காரனைத் தடுத்து தேவையான ஒரு வசதி மக்களுக்குக் கிடைக்காமல் செய்து அது வெளியிலிருந்து வரும்போது அதற்கு ஆதரவான மனநிலையைப் பொதுமக்களிடம் உருவாக்கவே செயற்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

இப்படிப் போக்கிடமின்றித் தவிக்கும் மக்களின் பணத்திரட்சி வேறு வழியின்றி அரசுடைமை வங்கிகளிடம் குவிந்தது. இதற்கு மிகக் குறைந்த வட்டியைக் கொடுத்தாலும் அதை வாடிக்கையாளருக்குக் கொடுக்க வங்கிக்கு வருவாய் வேண்டுமே. அதனால் ஒரு பெரும் புரட்சியே நடைபெற்றுள்ளது.

முன்பு நகைக் கடன் பெற வேண்டுமானால், இன்ன நாட்களில் தான் தருவோம் என்பார்கள், இன்ன நோக்கத்துக்குத் தான் தருவோம் என்பார்கள், வங்கிக்குக் தெரிந்தவரைக் கூட்டி வாருங்கள் என்பார்கள், வங்கி ஊழியருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள். மதிப்பீட்டாளர் வரவில்லை என்பார்கள். இப்போது அடையாளம் சரியாகக் காட்டப்பட்டால் போதும். உடனே கடன் கிடைக்கும். அதுவும் வேளாண் கடனென்று நூறு உரூபாவுக்கு மாதத்துக்கு 58 காசு வட்டிக்குக் கிடைக்கும். ஒருவருக்கு மூன்றிலக்கம் உரூபாய்கள் வரை கிடைக்கும்.

வீட்டுக்கடன் என்றால் முன்பு உள்ளாட்சி ஒப்பளித்த வரைபடத்திலிருந்து ஒரு சன்னலை மாற்றி வைத்தாலே திருந்திய வரைபடம் வாங்கிவா என்பார்கள்.

இந்தக் கெடுபிடிகளுக்கு ஊடாகவே இந்திய அரசு வீடமைப்பு வளர்ச்சி பணமளிப்புக் கழகம் – HDFC – என்ற ஒன்றைத் தொடங்கியது. இதில் தொடக்க முதலீடு இந்திய அரசு உரூ.45 கோடி, உலக வங்கி உரூ.250 கோடி, அதாவது மொத்த முதலீட்டில் உலக வங்கியின் பங்கு ஏறக்குறைய 85%.

இந்த நிறுவனத்தில் கடன் பெறுவது மிக எளிது. கடன் பெறுபவரின் திரும்பச் செலுத்தும் திறனை மட்டுமே பார்த்தனர். பிற எல்லாம் பெயருக்குத்தான். அந்த நிறுவனம் சில முகவாண்மை நிறுவனங்களை அமர்த்தியிருந்தது. அவர்கள் சில பால்வினை நோய் மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு தொழில் செய்பவர்களைப் போல் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட விடுதிக்கு வந்து வாடிக்கையாளர்களைச் சந்திப்பர். பெரும்பாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது சந்திப்பிலையே முதல் தவணைக்கான காசோலையைப் பெற்று விடலாம். அரசுசார் வீட்டுக் கடன் வழங்கு நிறுவனங்கள் தங்களை அணுகுபவர்கள் அவர்கள் வீடுகட்டுவதற்குத்தான் அந்தப் பணத்தைச் செலவிடுவார்களா என்று கடன் வழங்கும் முன்னும் அப்படித்தான் செலவு செய்தார்களா என்று கடன் பெற்ற பின்னரும் உறுதிப்படுத்துவதறகாக அவர்களைப் படுத்திய பாடும் அலைக்கழிப்பும் சொல்லி மாளாது. ஆனால் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒருவன் செய்வது போல் தான் கொடுக்கும் பணத்தைக் கடன் பெற்றவரிடமிருந்து தரும்பப் பெறத் தேவையான உறதிப்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தியது.

இந்த நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு நடுவண் வரவு செலவுத் - திட்டத்தில் வீட்டுக் கடன் திரும்பச் செலுத்தும் தொகை வருமான வரி கணக்கீட்டிலிருந்து கழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய அரசு மக்களிடமிருந்து அனைத்து பொருளியல் நடவடிக்கைகளையும் நிறுவனங்களையும் பிடுங்கித் தன் கையில் வைத்துக்கொண்டு எந்தத் திசையில் செல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டும் ஒரு சுட்டி இது.

இன்றோ எல்லா அரசுப் பண நிறுவனங்களின் நிலைப்பாடும் கட்டடத்தின் அதாவது ஈடுவைக்கப்படும் சொத்தின் பரப்பளவு குறையாமலிருக்க வேண்டும் அவ்வளவுதான். சில கடைக்காரர்கள் போல் தெருவில் நின்று வாடிக்கையாளர்களைக் கூவி அழைக்க வேண்டியதுதான் பாக்கி.

வேளாண் கடன் என்று அதற்கென்று நடுவரசு நிறுவியுள்ள மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறுபவர்களில் உண்மையில் வேளாண்மைக்காகப் பெறுபவர் ஒரு நூற்றுமேனிக் கூடத் தேறாது. தங்க நகைகள் வேண்டிய அளவில் இல்லாதவர்களுக்கு இதனால் எந்தப் பயனுமில்லை. இது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல. இந்த நிலையில் வரும் ஆண்டில் உரூ 2,35,000 கோடியை வேளாண் கடனுக்காக ஒதுக்கப் போவதாக நடுவண் பண அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதன் உண்மையான பொருளியல் குறிதகவு என்ன வென்றால் நாட்டுமக்களில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரைத் தவிர பிறர் அனைவரின் பொருளியல் நடவடிக்கைகளையும் பிடுங்கி ஆட்சியாளர்கள் தங்கள் கைகளில் கொண்டுவந்துவிட்டனர். அதன் ஒரு விளைவாக அரசுடைமை வங்கிகள் அழிந்து போகும் நிலை உருவாகிவிட்டது. இதைச் சரிக்கட்ட கட்டுப்படியாகாத வட்டியில் கடன்களைக் கொடுக்க வங்கிகளுக்குச் சொல்லிவிட்டு அதில் வரும் இழப்பை அரசு வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. அதாவது மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை பறித்ததால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அதே மக்களின் வரிப்பணத்தையே பயன்படுத்துகிறது.

இதற்குப் பிறகும் மக்கள் கைகளில் மூலதனமாகத் தக்க பணதிரட்சி இருந்தது.

இதை உணர்ந்து நம் அம்பானி வகையறா நடத்திய திருவிளையாடலால் நிதி அமைச்சகமே புரிந்துகொள்ள முடியவில்லை என்னும் அளவுக்கு பங்குகளின் சந்தை மதிப்பு கடும் விரைவில் உயர்ந்து இப்போது முதலீட்டாளர்களுக்கு கிலியூட்டும் அளவுக்குத் தடுமாறிக்கோண்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய அதிர்ச்சி அலைகள் ஓய்ந்து மீண்டும் பங்கு முதலீட்டுப் பக்கம் போகலாம் என்று நினைக்கத் தொடங்கிய மக்களுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சி. இந்த விளையாட்டைச் செய்தவர்களின் நோக்கமும் பொதுமக்கள் பங்குச் சந்தைப் பக்கம் வரக்கூடாது என்பதாகவே இருக்கவும் கூடும்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: