1.4.08

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 1

ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆட்சியாளர்கள் அரசின் பொருளியல் அணுகலில் தாராளவியம் என்றொரு முழக்கத்தை வைத்தனர். அதை நம்பி பலர் புதிதாகத் தொழில் துறையில் புகுந்த போது பங்கு முதலீடும் சூடு பிடித்து வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியது. நடுத்தர மக்கள் தங்கள் சிறு பணத் திரட்சியையும் நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீடு செய்தனர். இதழ்கள் ஒவ்வொன்றும் பங்குச் சந்தை பற்றி மக்களுக்கு வகுப்புகள் நடத்தின. இதற்கென தனியிதழ்களும் தோன்றின.

பங்குச் சந்தை முறை ஐரோப்பாவில் தொழிற்புரட்சியுடன் தொடங்கியது. தனி மனிதர்களும் கூட்டாளிகளும் சேர்ந்து தொழில்களைத் தொடங்கி அவை இழப்பெய்திய போது பலரும் ஓட்டாண்டிகளாயினர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைகள் உருவாயின. அந்நிலையில் தொழில்முனைவோருக்குப் பாதுகாப்பளிப்பதாக மட்டுப்பட்ட கடப்பாடுகளுடன் மட்டிட்ட குழுமங்கள் (Limited Companies with limited liabilities) உருவாயின. இதன் மூலம் ஒரு குழுமம் இழப்பெய்தினால் அதற்குரிய இழப்பை அந்நிறுவனத்துக்குரிய சொத்துகளிலிருந்துதான் ஈடு செய்ய முடியுமே ஒழிய நிறுவனர்களின் பிற சொத்துகளைப் பொறுப்பாக்க முடியாது. இதன் மூலம் பங்கு முதலீட்டு முறை தோன்றியது. அதோடு பங்கில் ஊக வாணிகம் செய்யும் பங்குச் சந்தையும் உருவானது. இதற்கு இரண்டாம் நிலைப் பங்கு வாணிகம் என்று பெயர்.

இரண்டாம் நிலைப் பங்கு வாணிகம் என்பது உண்மையில் முதலீடே அல்ல. தொழில்துறைக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. எத்தனை கோடிப் பணம் இந்த இரண்டாம் நிலைபங்குச் சந்தையில் புரண்டாலும் அந்தப் புரளலில் ஒரேயொரு தம்பிடி கூட எந்தவொரு நிறுவனத்துக்கும் முதலீடாகக் கிடைக்காது. பணம் வைத்திருப்போர் அதைச் சுழலச் செய்வதற்கான ஓர் உத்தியாகவும் சூதாட்டமாகவுமே இதனைப் பயன்படுத்தினர். இதற்கு இந்தியா போன்ற குடியேற்ற நாடுகளிலிருந்து அங்கு பாய்ந்த மாபெரும் செல்வம் துணையாக நின்றது. இந்த ஊக வாணிகர்களின் செயற்பாடு உண்மையில் பங்கு முதலீட்டுக்குப் பெரும் ஊக்கியாக விளங்கியது. தாங்கள் முதலிடும் பங்குகளுக்கு தொழில் நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் ஆதாயத்தை விட பங்குச் சந்தை ஊக வாணிகர்களுக்கு அவற்றை விற்பதில் கூடுதல் ஆதாயம் கிடைக்குமென்ற உறுதிப்பாட்டில் மக்கள் பங்குகளில் முதலிட்டார்கள். ஊக வாணிகத்தில் பலர் திடீரென்று ஓட்டாண்டியாகி விடுவதுண்டு, குதிரைப் பந்தயங்களில் போல். ஆனால் சூதாட்டத்திற்கேயுரிய சுவையும் விறுவிறுப்பும் அதனை நிலைநிறுத்தி வைத்துள்ளன.

இந்த இரண்டாம் நிலைப் பங்குச் சந்தையால், மக்கள் தொழில் நிறுவனங்களுக்கு முதல் நிலைப்பங்கு வெளியீட்டின் போது செலுத்திய பங்கு மூதனத்தைப் பெற்றுக் கொண்ட தொழில் முனைவோர் அந்தப் பணத்தை எந்த வகையில் கையாளுகின்றனர் என்ற கவலை எதுவும் இன்றி இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் தம் கையிலிருக்கும் பங்குகளின் விலை எப்படி இயங்குகிறது என்று கவனிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இது தொழில் முனைவோர் தங்களது ஆதாயத்தை உரிய முறையில் பங்கு முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்காமல் ஏமாற்ற வழி செய்கிறது.

நம் நாட்டில் பங்குச் சந்தை என்பது அண்மைக் காலம் வரை ஒரு சிறு வட்டத்துக்குள் மட்டுமே அடங்கியிருந்தது. தொழில் துறையும் ஆட்சியாளரின் அன்புக்குரிய ஒரு சிறு குழுவின் ஆதிக்கத்திலிருந்தது.

ஆனால் தாராளமாக்கல் என்ற பொய் முழக்கத்துடன் ஆட்சியாளர்களின் தூண்டுதலில் ஊடகங்கள் விரித்த வலையில் மயங்கி புதிதாகப் பலர் பங்கு வெளியீட்டில் இறங்கினர். மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தாராளமாக்கல் என்பது உண்மையில் அயல் நாட்டினர்க்கே என்பது புதுத் தொழில்முனைவோருக்குப் புரியத் தொடங்கியது. சரியான முகவரியே இல்லாத ஆயிரம் போலி நிறுவனங்கள் இந்தியப் பங்குப் பரிமாற்ற நடுவண வாரியத்தின்(செபி) ஒப்புதல் பெற்று பங்குப் பத்திரங்களை வெளியிட்டு உரூ. 5000/- கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டன. இது ஒரு புறமிருந்தாலும் நேர்மையான நிறுவனங்கள் ஆதாயம் காண முடியவில்லை. பலரால் அரசிடமிருந்து தொழில் தொடங்குவதற்கான இசைவைக் கூடப் பெற முடியவில்லை. அத்துடன் அரசு வங்கிகளின் துணையோடும் ஆட்சியாளரின் அரவணைப்போடும் அர்சத் மேத்தா நடத்திய திருவிளையாடல்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் 10,000 கோடிக்கு மேல் இருக்கும். எவ்வளவுக்கென்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

பங்குப் பத்திரங்கள் காணாமல் போனாலோ ஏதங்களில் அழிந்து போனாலோ புதிய நகல் பங்குப் பத்திரங்கள் வழங்குவது உண்டு. ஆனால் ஆட்சியாளரின் செல்லப் பிள்ளையான அம்பானி வகையறாக்கள் ஏற்கனவே விற்கப்பட்டு பாதுகாப்பாக இருந்த பங்குகளுக்கே நகல் பத்திரங்களை விற்றார்கள். செபியும் ஆட்சியாளரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை அனைத்தும் சேர்ந்து பங்குச் சந்தை ஊக வாணிகத்திலிருந்து சராசரி குடிமக்களை வெளியேற்றின.

இந்த அம்பானிகள் வளர்ந்ததே ஒரு தனிக்கதை. இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடி நிலை அறிவித்த காலத்தில் தன்னை எதிர்த்துக் களமிறங்கிய பெரும் முதலாளிகளை ஒடுக்குவதற்கென்றே 97½% உம்பர் வருமான வரி(Super Income Tax) என்ற ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தக் கால கட்டத்தில்தான் வெறும் ஆளாக இருந்த திருபாய் அம்பானியின் சொத்துமதிப்பு உரூ 5000/- கோடியாக வளர்ந்தது. அதே கால கட்டத்தில்தான் இன்று உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் பல வட இந்தியப் பணக்காரர்கள் உருவானார்கள். ஆனால் அன்றோடு பணம் படைத்த எவரும் அரசையும் அதன் செயற்பாடுகளையும் குறை கூறி ஒரு மூச்சுக்கூட விடுவதில்லை. குமுகத்தின் வலிமையான மக்கள் அடுக்குகளின் குரல்வளையை நெரித்துத்தான் இன்று இந்திய ″மக்களாட்சி″ பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நேர்மையுள்ளோர் அனைவரும் அரசியல், பொருளியல் களங்களை விட்டு விலகிவிட்டனர். கயவர்களின் ஆளுகையில் அனைத்தும் வந்து விட்டன.

இந்நிலையில் முகமதிப்பைப் போல் பல மடங்கு உயர்மதிப்பில் பங்குகளை விற்கும் பழக்கம் தொடங்கியது.

பங்குப் பத்திரம் என்பது பொதுவாக பத்து உரூபாய்கள் அல்லது நூறு உரூபாய்களை முகமதிப்பாகக் கொண்டிருக்கும். அதாவது ஏழைக் குடிமகனும் நாட்டின் பொருளியல் வளர்ச்சியில் தன் பங்களிப்பைத் தர வேண்டும் என்பது இந்த முறையைப் புகுத்திய பெருமக்களின் நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் குறைந்தது ஆயிரம் அல்லது அதற்கும் மேலே பங்குகளை வாங்கினால்தான் பங்குகள் வழங்கப்படும் என்று கட்டுறவு விதிப்பது வழக்கம். பங்கு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பெருகினால் கணக்கு வைப்பது, பங்கு முதலீட்டாளர்களின் கூட்டங்களை நடத்திக் கொள்கை முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் உள்ள இடர்பாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

முகமதிப்பு என்பது இவ்வாறு பங்கு வெளியீட்டின் போது ஒவ்வொரு பங்குக்கும் நிறுவும் விலையாகும். இது நிலையான ஒரு மதிப்பாகும். சந்தை மதிப்பு என்பது அந்தப் பங்குக்கு இரண்டாம் நிலைப் பங்குச் சந்தையாகிய ஊக வாணிகத்தில் அந்நிறுவனப் பங்குக்கு இருக்கும் மதிப்பாகும். உரூ. 10/- முகமதிப்புள்ள பங்குக்கு உரூ. 500/-, உரூ.5000/- என்று கூட சந்தை மதிப்பு இருக்கலாம்.

இவ்வாறு உயர் சந்தை மதிப்புள்ள பங்குகளுக்குரிய நிறுவனத்தின் உண்மையான சொத்து மதிப்பும் அது வெளியிட்டிருந்த பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பும் அதிக ஏற்றத் தாழ்வின்றி இருந்தால் அது ஒரு சிறந்த நிறுவனம் என்று சந்தையில் அறியப்படும். ஆனால் உண்மையில் இதன் பொருளியல் பொருள் என்னவென்றால் மொத்தப் பங்குகளின் முகமதிப்புக்கும் இந்தச் சொத்து மதிப்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை அந்நிறுவனத்தினர் அதன் பங்கு மூதலீட்டாளர்களுக்கு அந்தந்தக் காலத்தில் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர் என்பதே.

சில நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பின் அடிப்படையில் அதன் சொத்தின் சந்தை மதிப்பு அதன் உண்மையான சொத்து மதிப்பைப் போல் பல மடங்குகள் இருந்தாலும் சந்தையில் அதன் செல்வாக்கு கொடிகட்டிப் பறப்பதுண்டு. நாராயணமூர்த்தியின் இன்போசிசு நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு அந்நிறுவனத்தின் உண்மையான சொத்து மதிப்போடு ஒப்பிட ஏறுமாறாக இருந்த போதும் அந்த ஆள் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்களைக் கையில் போட்டுக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சில நிறுவனங்கள் முகமதிப்பு ஒன்றாகவும் விற்பனை விலை அதைப் போல் பல மடங்காகவும் அறிவித்துப் பங்குகளை விற்றன. அரசுடைமை வங்கிகளே இத்தகைய வெளியீட்டில் இறங்கின. இப்போது இந்த முகமதிப்புக்கும் பத்திர விற்பனை விலைக்கும் உள்ள வேறுபாட்டை அதாவது கூடுதல் பணத்தை முனைவோர் என்ன செய்வார்? அந்தக் கூடுதல் பணத்தை எவ்வாறு கணக்கில் எடுப்பார்? வரி முதலியவற்றை எந்தத் தொகைக்குக் கணக்கிடுவார்? இன்னும் விடை காண முடியாத கேள்விகள் எத்தனையோ எழுகின்றன. கொடுத்த, “பங்கு முதலீட்டாளர்” என்று அறியப்பட்ட குடிமகனுக்குத் தான் முகமதிப்புக்குக் கூடுதலாகச் செலுத்திய பணத்துக்கு என்ன உரிமை என்ற கேள்விகளுக்கு நாம் பகுத்தறியத்தக்க ஒரு விடையைக் காண வேண்டியவர்களாகவும் உள்ளோம்.

உரூ. 10/- முகமதிப்புள்ள ஒரு பங்குப் பத்திரத்துக்கு உரூ. 5000/- சந்தை மதிப்புக்கு இருந்தாலும் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஈவுத் தொகை அதன் முகமதிப்பின் நூற்றுமேனியில்தான். எடுத்துக் காட்டாக அந்த நிறுவனம் 100% ஈவு வழங்குவதாக இருந்தால் அந்த முதலீட்டாளருக்கு பங்குக்கு உரூ.10/-தான் கிடைக்கும். அதாவது உரூ. 5000/- இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் செலுத்தி ஒரு பங்குப் பத்திரம் வாங்குபவருக்கு அப்பத்திரத்தை வெளியிட்ட நிறுவனம் ஓராண்டில் வெறும் உரூ. 10/- ஐத்தான் ஆதாயப் பங்காக அளிக்கும். ஆனால் உண்மையில் கம்பெனிக்குக் கிடைத்தது அந்த உரூ. 5000/- க்கும் உரிய தகுதியான ஆதாயமாகக் கூட இருக்கலாம். இந்த இடைவெளியை, அதாவது நிறுவனத்தை நடத்துவோர் கொள்ளை அடிக்கும் இந்தப் பணத்தை இரண்டாம் நிலைப் பங்குச் சந்தையில் புரளும் பணம் ஈடு செய்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் பங்கு முதலீட்டில் ஈடுபட்டு அந்த நிறுவனம் தான் உருவாகக் காரணமாக இருந்தவர்களை ஏமாற்றி அசுரத்தனமாக வளர்ந்து அவர்கள் மீது பொருளியல் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த இரண்டாம் நிலை பங்குச் சந்தை உதவுகிறது. அதில் புரளும் பல கோடி கோடியான நாட்டின் செல்வம் எந்த விளைப்பு அல்லது பணிப் பயனும் (Produdctive or service function) இன்றி பயனற்ற சுழற்சியில் உள்ளது.

முகமதிப்பைப் போல் பல மடங்கு உயர்மதிப்பில் பங்குகளை விற்கும் இந்த நடவடிக்கைகளுக்கு பங்குப் பத்திர பரிமாற்றக் கட்டுப்பாட்டு வாரியம் உடந்தையாயிருக்கிறது.

இரண்டாம் நிலைச் சந்தையாகிய ஊக வாணிகம் வீழ்ந்துவிட்டதால் முகமதிப்பில் வாங்கியவர்களுக்கும் உயர்மதிப்பில் வாங்கியவர்களுக்கும் இழப்புதான் ஏற்பட்டது. தாராளமாக்கல் என்பது உள்நாட்டினர்க்கல்ல என்பது புரிந்துவிட்டதால் புது முனைவோரும் தோன்றவில்லை.

அதே வேளையில் தமிழகத்தில் புற்றீசல்களாகப் புறப்பட்ட நிதி நிறுவனங்களில் மக்கள் முதலிட்டு கணக்கற்ற பணத்தை இழந்தனர். இவ்வாறு மக்களின் முதலீட்டு ஆர்வம் வளர்ந்ததற்கும் ஒரு பின்னணி உண்டு.

இந்தியாவில் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதற்கு ஓர் அரசியல் பின்னணி உண்டு. சவகர்லால் நேரு இறந்த பின் காமராசரின் முன்முயற்சியால் இலால்பகதூர் சாத்திரி தலைமை அமைச்சர் ஆனார். மொரார்சி தேசாயின் போட்டியை முறியடித்துத்தான் காமராசர் இதை இயலச் செய்தார். சாத்திரி திடீரென்று மரணமடைந்ததும் மீண்டும் மொரார்சி போட்டியிட்டார். அவரை மீண்டும் முறியடித்து இந்திரா காந்தியை தலைமை அமைச்சர் ஆக்கினார் காமராசர். இந்தச் சூழலில் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் ஐயத்துக்குரியவையாக மாறின. குறிப்பாக இந்திய உரூபாயின் மதிப்பை அமெரிக்க டாலரோடு ஒப்பிட 57% குறைத்த நடவடிக்கை காமராசர் உட்பட பழம்பெரும் தலைவர்களிடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்சியிலோ அமைச்சரவையிலோ எவரையும் கலந்து கொள்ளாமலேயே இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார். இதன் மூலம் அவருக்குத் தனிப்பட்ட ஆதாயம் இருக்க வாய்ப்புள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகளால் கட்சித் தலைவர்களுக்கும் அவருக்கும் முரண்பாடுகள் முற்றின. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சி நிறுத்திய சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து வி.வி.கிரியை இந்திரா நிறுத்தினார். கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் “மனச்சாட்சிப்படி”(!!) வாக்களிக்க வேண்டுமென்று அறிக்கை விட்டார். ஆட்சியில் இருப்பவர்களின் செல்வாக்கு கொடிகட்டிப் பறப்பது இயல்புதானே! கிரி வெற்றி பெற்றார். கட்சி உடைந்தது. இந்த நிலையில் தன் படிமத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அறிவித்த “புரட்சிகரத் திட்டங்”களில் வங்கிகளை அரசுடைமையாக்குவது முகாமையானது.

இது மாநில மக்களின் மூலதனத்தை, குறிப்பாக இந்தியாவில் வலிமை வாய்ந்த வங்கிகளாக இருந்த இந்தியன், இந்தியன் ஒவர்சீசு ஆகிய வங்கிகளை நடுவரசு, அதைச் சார்ந்து நிற்கும் பொருளியல் விசைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு சேர்த்தது. முன்பு நேரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய உயிர் காப்பீட்டு நிறுவனமான இந்திய உயிர் காப்பீட்டு நிறுவனத்தை(எல்.ஐ.சி.) அதன் உரிமையாளரான தமிழகத்து முத்தையா செட்டியாரிடமிருந்து பறித்ததும் தமிழக மக்களின் மூலதனத் திரட்சியைத் தில்லி சார்ந்தவர்கள் கைப்பற்றித்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும். இதில் நம் நாட்டுச் செங்கொடித் தோழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

இந்தியாவின் 50 ஆண்டுகால “விடுதலை” வரலாற்றில் திவாலாகிக் கவிழ்ந்து போன வங்கிகளால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம்தான். ஆனால் வாராக்கடன் என்று அரசியல் பொறுக்கிகள் கொள்ளையடித்த தொகைக்கு அவை தூசு பெறுமா?

இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாதென்று அலகபாத் நயமன்றம் 1974இல் ஒரு தீர்ப்பு சொன்னது. பதவியிலிருந்து கீழிறிங்க வேண்டிய தேவையைத் தவிர்ப்பதற்காக அம்மையார் நாட்டில் ″நெருக்கடி நிலை″யை அறிவித்ததுடன் மீண்டும் “புரட்சிகர” நடவடிக்கைகளில் இறங்கினார். அதில் ஒன்றுதான் கடன் தள்ளி வைப்புச் சட்டம். அதன்படி தங்க ஈட்டுக் கடன்களை எல்லாம் செல்லாதவை ஆக்கினார். அடகுக் கடைக்காரர்களிடமிருந்து வருவாய்த் துறையினர் துணையுடன் ஈட்டுப் பணத்தையும் வட்டியையும் கொடுக்காமலே நகைகள் பிடுங்கப்பட்டன.

பிராமிசரி நோட்டு எனப்படும் வாக்குத்தத்தப் பத்திரம் பணம் வைத்திருக்கும் எவரும் ஏதாவது ஒரு தாளில் வாங்குபவர் கொடுப்பவர் பெயர்களையும் தொகையையும் வட்டியையும் எழுதி ஒரு வருவாய்த் தலையை ஒட்டிக் கையெழுத்து இட்டு பணம் பெற்றுக் கொள்ளும் வழியாகும். மூன்று ஆண்டுகளுக்குள் பத்திரத்தைச் செல்லாக்கவில்லை எனில் வழக்கு மன்றத்துக்குப் போக வேண்டும். இல்லையெனில் பத்திரம் காலாவதியாகிப் போகும். இந்தக் கடனைத் திரும்பச் செலுத்துவதைத் தள்ளிப் போட்டு பாதிப் பணம் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றும் அம்மையார் ஆணையிட்டார். எனவே கடனாகக் கொடுத்த தொகைக்கு எந்த உறுதிப்பாடும் இல்லை, அரசு என்று வேண்டுமானாலும் சட்டம் போட்டுக் கடனைச் செல்லாததாக்கலாம் என்ற அச்சம் வட்டித் தொழிலில் ஈடுபட்டவர்களிடையில் ஏற்பட்டு அத்தொழிலை விட்டு அனைவரும் ஒதுங்கினர்.

முதலாவதாக, வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் பின்விளைவாகவும் கடன் விடுதலைச் சட்டங்களாலும் சட்டப்படி அமைந்த கடன் பெறும் வாயில்கள் அடைபட்டன. எனவே கந்துவட்டிக்காரர்களாகிய அடியாள் கும்பலிடம் கடன் வழங்கு துறை சிக்கியது. நாட்டு நடப்பில் வட்டி விகிதம் மிக எளிதாக ஆண்டுக்கு 240 நூற்றிமேனியைத் தாண்டி நிற்கிறது. இது தனி வட்டி விகிதம்தான். நாள், கிழமை, மாதக் கூட்டு வட்டியாக நடைமுறையிலிருப்பதை எண்ணிப் பார்த்தால் வட்டி வீதம் நம் கற்பனைகளையும் தாண்டிவிடும். அந்நிலையில் வங்கிகள் அளிக்கும் 10 நூற்றுமேனிக்கும் குறைந்த வட்டியை யார் நாடுவர்?

அடுத்து, நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல வளர்ச்சி குன்றிய, வளர்ச்சி தடுக்கப்பட்ட மக்கள் பொன், நிலம், வீடு போன்ற பருமையான முறையில் முதலிடுவதுதான் பாதுகாப்பானது. ஆனால் தாரளமாக்கல் என்ற பெயரில் தங்கம் தாரளமாக இறக்குமதி செய்யப்பட்டதால் தங்கத்தின் விலை வீழ்ந்தது அல்லது அதன் விலை உயர்வு பண மதிப்பின் வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது எதுவுமில்லை என்றாகிப் போய்விட்டது. நிலத்தில் முதலீடுவதற்கு நில உச்சவரம்பும் பசுமைப் புரட்சியின் விளைவான வேளாண்மை வீழ்ச்சியும் தடைகள்.

சில “புரட்சிகர” நடவடிக்கைகளுக்கு செங்கொடித் தோழர்கள் மீது குற்றம் சொல்வதற்காக எம்மை நேயர்கள் பொறுத்தருள வேண்டும். உண்மையில் அவர்களது “புரட்சிகர” முழக்கங்களும் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நிகர்மை அனைத்துலகியத்தின் (Socialist International) முழக்கங்களும் ஒன்றே. தோழர்கள் தெருக்களில் முழங்குவர். அமெரிக்காவின் ஒற்றர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்துகொண்டு கமுக்கமாக நிறைவேற்றுவர். பெயரைத் தோழர்கள் தட்டிக்கொள்வர். ஆட்சியாளர்களுக்குக் குத்துக் குத்தாகப் பணம். தோழர்கள் உண்டியல் தூக்கியும் மகமை(சந்தா) தண்டியும் அவ்வப்போது ஆளும் கட்சிகளுடன் கூட்டணி பேரம் பேசியும் காலங்கழித்துக் கொள்வர். உண்மையில் தோழர்களின் பங்கு, மக்களின் பொருளியல் உரிமைகளைப் பறிக்கும் போது மக்களிடையில் இருந்து எதிர்ப்புகளோ வெடிப்புகளோ உருவாகாமலிருக்கத் தக்க உளவியலை மக்களிடையில் உருவாக்கி அந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களைச் செயலிழக்க வைப்பதாகும்.

நாம் ஏன் இந்த முன்னுரையை முன்வைக்கிறோம் என்றால், தோழர்கள் வைத்த கோரிக்கையின் பெயரால் கொண்டு வரப்பட்ட நிலவுச்ச வரம்புச் சட்டத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். அதில் உணவுப் பொருள் வேளாண்மைக்குத்தான் உச்சவரம்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான பயிர்களை இடுவதற்கு விதிவிலக்கு உண்டு. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரையில் டாட்டா நிறுவனம் உப்பளம் அமைப்பதற்கென்று 20,000 ஏக்கர் வாங்கிப் போட்டது. இதற்கு எல்லாம் சட்டத்தில் விலக்கு உண்டு. (இந்த உப்பைக் கொண்டுதான் அயோடின் உப்பு செய்து விற்கிறார்கள். அதை விற்கத்தான் உலகிலுள்ள பொய்களை எல்லாம் அள்ளி வீசி விளம்பரங்களையும் பரப்பல்களையும் செய்து அரசுப் பொறி முழுமூச்சாகச் செயற்பட்டது. கலப்படத் தடைச் சட்டத்தையும் பயன்படுத்தியது. எவ்வளவு முன்னேற்பாடுகளுடன் அரசும் அந்த நிறுவனமும் செயற்பட்டுள்ளன பார்த்தீர்களா?)

இந்தச் சட்டத்துடன் குத்தகை ஒழிப்பு என்ற பெயரில் குத்தகை நிலைப்புக்காகவும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தனர். இவ்வாறு பெரு நில உடைமைகள் உடைந்து அல்லது செயலிழந்து துண்டு துக்காணி நில உடைமைகள் எஞ்சின. இந்த வேளையில் 1965இல் ஒரு வறட்சி வந்தது. அதுவரை நாம் நம் மொத்த நுகர்வில் கணிசமான ஒரு பகுதியை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். அப்போது ஆண்ட இலால் பகதூர் சாத்திரி அதையும் நிறுத்தி விட்டு மக்களை வாரத்துக்கு ஒரு நாள் பட்டினி கிடக்கச் சொன்னார். செய் கிசான், செய் சவான் என்று முழங்கிக் கொண்டே உழவர்களின் மீது கொடுங்கோன்மையான ஒடுக்குமுறையை ஏவினார். அறுத்த நெல்லை வீட்டுக்குக் கொண்டு செல்லத் தடை, வீட்டில் இருப்பு வைத்திருக்கத் தடை, கடையில் விற்கத் தடை, ஆட்சியாளர்கள் சொல்லும் “உரிமம் பெற்ற” வாணிகனுக்கு அல்லது அரசே திறந்து வைத்திருக்கும் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் சொல்லும் விலைக்கு விற்க வேண்டும். அவர்கள் சமயத்தில் சாக்கைக் கட்டுவதற்கு சணல் இல்லை, எனவே இப்போது நெல்லை எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்வார்கள். இந்த நிலைமைகள் இன்று கூடத் தொடர்கின்றன.

உழவர்களின் மீது இப்படித் தொடங்கிய தாக்குதல் இன்று ஒரு கிலோ அரிசி உரூ. 2/-க்கு விற்பது வரை சென்றுள்ளது. 1967 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு உரூபாவுக்கு ஒரு படி அரிசி என்று செயற்படுத்திய போது அது கிலோவுக்கு 60 காசுகளாகவும் ஆண்களுக்குக் கூலி அன்று 75 காசுகளாகவும் இருந்தன. இன்று கூலி உரூ. 120/- முதல் 200/- வரை. உழவனும் வேளாண்மையும் எப்படி உருப்படுவர்?

இந்தத் துண்டு துக்காணி உழவர்களுக்கு வேளாண்மை செய்ய மூலதனம் கிடையாது. அப்படியே வைத்திருந்தாலும் ஆட்சியாளரின் இந்த ஒடுக்குமுறை, வழிப்பறி நடவடிக்கையில் போட்ட முதல் தான் மீண்டு கைக்கு வருமா? (ஏதோ ஆங்காங்கே பணம் படைத்த ஒவ்வொருவர் ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக வயலிலிருந்து நெல்லை வீட்டுக்குக் கொண்டுவந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.) வட்டிக் கடைகளை அடைத்தாயிற்று. இப்போது என்ன செய்வது? கூட்டுறவு வங்கிகளையும் பண்டகசாலைகளையும் திறந்தார்கள். அங்கே பணம் கொடுக்க மாட்டார்கள். உரமும் பூச்சி மருந்தும் விதையும் தான் கொடுப்பார்கள். அடியுரம் வேண்டும்போது மேலுரம் கொடுப்பார்கள், மேலுரம் வேண்டும்போது அடியுரம் கொடுப்பார்கள். கிடைத்ததைக் குறைந்த விலையில் விற்றுவிட்டு கூடுதல் விலைக்கு வேண்டியதை அதே கடையில் வாங்க வேண்டும். நிலவுச்ச வரம்புச் சட்டம் குத்தகை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றால் ஏறக்குறைய முற்றிலும் தாழ்த்தப்பட்டவர்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களிலும் ஏழைகளே நேரடியாகச் சிறிதும் குத்தகையாகப் பெரும்பாலும் நெல் வேளாண்மையில் ஈடுபட்டு வந்ததால் காலங்காலமாகக் குனிந்து கொடுத்தே பழக்கப்பட்டுவிட்ட அவர்களிடமிருந்து எதிர்ப்பு எதுவும் பெரிதாக உருவாகவில்லை. ஆனால் புன்செய் உழவர்களை ஒருங்கிணைத்த நாராயணசாமி(நாயுடு) தலைமையில் உருவான இயக்கத்தையும் அமெரிக்க ஒற்றன் வினோத் மிசிராவின் தலைமையில் இருந்த இந்திய மக்கள் முன்னணியின் புரட்டல்காரர்கள் உள்புகுந்து அழித்தனர். சிறை சென்ற போராட்டக்காரர்களிடம் இப்போது பணக்கார உழவர்களின் போராட்டம் முடிந்துள்ளது, அடுத்து சிறு குறு உழவர்களின் போராட்டம் தொடங்க வேண்டும் என்று சொல்லி உழவர்களின் அணிச்சேர்க்கையை உடைத்து அழித்தார்கள்.

உழவனுக்குக் கொடுக்கப்படும் இந்தக் குறுகிய காலக் கடனைச் சரியாகப் பத்து மாதங்களில் செலுத்தியாக வேண்டும். இல்லையென்றால் அடுத்த பூ(போகம்)வுக்குப் பயிரிடக் கடன் கிடைக்காது. அப்போது தானே உழவன் வைத்திருந்து விலை ஏறுவது பார்த்து விற்க முடியாது, உரிமம் பெற்ற வாணிகனை வைத்துப் பறித்துக் கொள்ள முடியும்? இந்தச் சூழலிலும் வட்டித் தொழில் அழிக்கப்பட்டுவிட்டதாலும் கந்துவட்டிக்காரரிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து கடன் பெற்றனர் உழவர்கள். நிலைமை இப்படி இருக்க பணம் வைத்திருப்பவர்கள் எப்படி வேளாண்மையில் முதலிட முன் வருவர்?

(தொடரும்)

2 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

ARUMAIYO ARUMAI IYAA. SUPERB WELDONE.

சொன்னது…

Nice info,

follow my classified website - indian latest online classiindia classified - www.classiindia.in