31.3.08

தமிழினி பிப்ருவரி இதழ் ஒரு பார்வை

நாகர்கோயில்,
15.02.2008.

அன்புள்ள வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் கேட்டுள்ளப்படி தமிழினி பிப்ருவரி இதழின் ஆக்கங்கள் பற்றிய என் கருத்துகளைத் தருகிறேன். குறையை மட்டுமே சுட்டியுள்ளேன். பிற வகையில் சிறப்பானவை என்று பொருள் கொள்ளவும்.

ஆசிரியவுரையில் இராமதாசும் சரி, பிற தமிழ்நாட்டுத் தலைவர்களும் சரி, உண்மையான சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கும் ″அறிவாளி″களின் பரிவை எளிதில் ஈட்டவும்தான் பண்பாட்டுச் சிக்கல்களைக் கையிலெடுக்கின்றனர் என்பது பட்டறிவு.

திரு. இராமதாசு அவர்களின் கடந்த கால, தட்டியில் நுழைந்து கோலத்தினுள் நுழைந்து கட்சி வளர்த்த கதையெல்லாம் நமக்கு இவ்வளவு எளிதில் மறக்க வேண்டுமா?

ஆமாம்! புலால் உண்பது அவ்வளவு கேடா? அல்லது இழிவா? தமிழ்நாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுக்கு அளவுகோலாயிருக்கும் பண்பாட்டு அடையாளங்களில் புலால் உணவு தலையானதல்லவா? இது போன்ற சாதி உயர்வு சார்ந்த அளவுகோல்களை அடித்துத் தகர்ப்பது குமுக மேம்பாட்டுக்கு இன்றியமையாததல்லவா?

சல்லிக்கட்டை சுற்றுலாத்துறையிடமிருந்து விடுவித்து விளையாட்டுத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது சரியான வேண்டுகையாயிருக்கும் என்பது என் கருத்து.

சபர்மதி ரயில் எரிப்பு ″சங்கக் குடும்பம்″ திட்டமிட்டுச் செய்ததாக தெகல்கா கண்டுபிடித்ததை நம் செய்தித் தாள்களில் நான் படிக்கவில்லை. அதை ″நீதியின் தொலைதூர ஒளி″யில் படித்தேன். என் கணிப்பும் சரியாக இருந்தது. இதே போன்ற வேலையைக் குமரி மாவட்டக் கலவரத்தின் போதும் அவர்கள் செய்துள்ளனர்.

″உண்ணற்க கள்ளை″க் கட்டுரை மது அருந்துவதைக் குறை கூறவில்லையாயினும் பண்பாட்டுக்கு அதுவும் ஆட்சியாளரின் ″தொழில் பண்பாட்டுக்கு″ மிகச் சிறப்பான சான்றிதழைத் தந்துள்ளது பாராட்டுதற்குரியது.

″வாளிலும் வலிய பேனா″, மறைமுகமாகக் கல்வி மறுக்கப்பட்டு வரும் நம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் மேலடுக்குக்கும் உள்ள இடைவெளி விரிவது மனதில் தைக்கிறது.

″ஏறுதழுவல்″ செய்திகள் நன்றாகவே இருக்கின்றன. உழவு முதலில் செயற்கையாகப் பாசனம் செய்து முல்லை நிலத்தில் உழவின் மூலம் மண்ணைப் பண்படுத்திய, கலப்பையைக் கொடியாகவும் ஆயுதமாகவும் கொண்ட நாக மரபைச் சேர்ந்த பலதேவனி(பலராமன்)டமிருந்தே உருவானது. அதற்கும் பொதி சுமக்கவும் மாட்டை வசக்கியது கண்ணனின் பங்களிப்பு. அங்கிருந்து தான் உழவு மருத நிலத்துக்குச் சென்றிருக்கும். அதற்கு முன் ஆற்று வண்டலில் தான் நேரடியாகப் பயிரிட்டிருப்பர்.

மகாபாரதக் கிட்ணன் ஆடுகளை வளர்த்தவர்களைச் சார்ந்தவனோ என்றொரு ஐயம். ஏனென்றால் இந்திரன் ஏவிய மழையிலிருந்து ஆநிரையைக் காக்க குடையாகப் பிடித்ததாகக் கூறப்படும் மலையின் வடிவத்தில் தான் ஆட்டிடையர்கள் கையாளும் ″கூடு″ இருக்கிறது. அத்துடன் குமரி மாவட்டத்தில் இருக்கும் கிட்ணவகையினர் எனப்படும் குறுப்புகளும் குறும்பர்களாக இருக்கலாம். இப்போது அத்தொழிலை விட்டிருக்கலாம்.

சிலப்பதிகாரம் கண்ணனை ″அசோதை பெற்றெடுத்த″(ஆய்ச்சியர் குரவை) என்றே கூறுகிறது. ஆயர் குலத்தில் பிறந்த கண்ணனைச் சத்திரியன் என்று காட்டவே தேவகி - வாசுதேவன் மகன் என்ற கதை புனையப்பட்டிருக்கலாம்.

″தமிழுக்கு எதிரான தமிழ்ப் பற்றாளர்கள்″ கட்டுரை தமிழ்ப் பற்றாளர்கள் போலவே அடிப்படையை நழுவ விட்டுவிடுகிறது. பெட்டிச் செய்தியில் வருவது போல் எழுதுகோலும் கடிகாரமும் தமிழ்நாட்டில் செய்தால் தமிழ்ப் பற்றாளர்களின் நோக்கம் தவறாகத் தோன்றாது. ஆனால் தமிழ்ப் பற்றாளர்களில் பலரும் இந்தச் சிந்தனையிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்பவே பயன்படுகிறார்கள் என்பது உண்மை. இவர்களுடைய தூய்மை முயற்சியில் உண்மையில் தமிழ் வேர் கொண்ட பல சொற்களைத் தமிழில்லை என்று பிடிவாதமாக ஒதுக்கிவிடுகின்றனர். சல்லிக் கட்டு ஜல்லிக் கட்டு என்று மாறியது போல் பல சொற்கள் உள்ளன.

″மனித உடலும் அன்பும் ஞானமும்″ என்ற கட்டுரையாளரால் எவ்வாறு இப்படிச் சிந்திக்க முடிகிறது? ″உடம்பார் அழியின் உயிரார் அழிவார்″ என்றால் உயிர் தனியானது, வெளியேறுகிறது என்றா பொருள்? அழிந்து இல்லாமல் போகிறது என்பது தானே பொருள்? உயிரும் உடலும் ஒன்றின் இருவேறு வெளிப்பாடுகள் தாமே. மனிதன் இணக்கமாக வாழ வேண்டுமென்பது வேறு, இப்படிப் பொருளற்ற கூற்றுகளை அதற்கு வழியாக வைப்பது வேறு. கடவுள் மனிதனுக்கு கட்டுப்பட்டதல்ல, சமயத்துக்கும் கடவுளுக்கும் எந்த உறவும் கிடையாது. அது ஒரு குமுகியல் கோட்பாட்டைக் கொண்டு உருவான அரசியல் நிறுவனம். கடவுள் அந்தக் கோட்பாட்டுக்குத் துணையாக, மக்களை நம்ப வைக்க முன்வைக்கப்படும் ஒரு மனக்கோளே (assumption).

″கானகத்தில் ஒரு கலைஞன்″ நல்ல படைப்பு. ″தமிழறிஞர் வரிசை″யும் சிறப்பாக இருக்கிறது.

″புதிய சாதனை - தன்வரலாற்று நாவல்கள்″ படித்தேன். கவலை மட்டும் படித்துள்ளேன். அதை நாவல் என்று வரையறுத்திருப்பது பொருத்தமாகப் படவில்லை. அத்துடன் நூலாசிரியருடைய மனக்கொதிப்பே, பருவமடைந்ததும் பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டும் தந்தையின் ஊக்குவிப்பால் நிறைய நூலறிவு பெற்று, தன்னைச் சுற்றியிருந்த பெண்களுக்கும் எழுத்தறிவைப் புகட்டி, ஆசிரியப் பணியில் திருமணத்துக்கும் முன்பே ஈடுபட்டிருந்த தன் ஆற்றல் எவராலும் கண்டுகொள்ளப்படாமல் கணவன் வீட்டின் இருட்டறைக்குள் புதைக்கப்பட்டுவிட்டதே என்று அவரே குறிப்பிட்டிருப்பதைக் கட்டுரை ஆசிரியரால் இனம் காண முடியவில்லை. பெண்களின் இந்தத் திறனழிப்புகள் இன்றும் இந்த வட்டாரத்தில் திட்டமிட்டு நடைபெறுகின்றன.

″தாரகைகள் தரை மீது″, ″என் மாணவன் லியோ பூன் கோய்″ என்ற இரு கட்டுரைகளுக்கும் ஓர் ஊடு இழை உள்ளது. வெறும் ஏட்டுக் கல்வியை எல்லா உள்ளமும் ஏற்றுக் கொள்வதில்லை. உள்ளங்களை இனங்கண்டு அதற்கேற்ப கல்வியை கற்பிக்க வேண்டும். அதற்குப் பொருத்தமாக, தொடக்கக் கல்வி ஆசிரியர் பிற நிலைக் கல்வி ஆசிரியரை விட மிகுந்த திறன்களுடன் உருவாக்கப்பட்டு அவர் மூலம் ஒவ்வொரு மாணவனின் கல்வி என்ற விதை ஊன்றப்பட வேண்டுமென்பது எமது புதுமையர் அரங்கம் (INNOVATORS FORUM) என்ற அறக்கட்டளையின் கல்வி சார்ந்த திட்டம். இப்பொருள் பற்றி எம் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான ஆசிரியர் திரு. ம. எட்வின் பிரகாசு தொடர்ந்து கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளார்.

″உண்ணற்க கள்ளை″ ″மல்லுக்கட்டு″ என்ற இரண்டு கட்டுரைகளையும் படிக்கும் போது குடித்தலுக்கும் கண்ட பெண்களோடு உறவு கொள்வதற்கும் தமிழினி ஒரு குமுக ஏற்பு வழங்க நினைத்துள்ளதா என்று தெரியவில்லை. ஆசிரியவுரையில் வரும் புலால் உணவு பற்றிய கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தடம் தலைகீழாக அமைந்திருப்பது போல் தோன்றுகிறது. கட்டுரைகளின் உண்மையான நோக்கம் என்னவென்று புரியவில்லை.

″மல்லுக்கட்டில்″ கூறியுள்ளது போல் சுக்கிரனின் மாணவன் யயாதி அல்ல. தேவ குரு வியாழனின் மகனான கச்சனே. இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வந்த இவனிடம் சுக்கிரனின் மகள் தேவயானை காதல் கொண்டாள். அவன் திரும்பிப் போகும் போது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தேவயானை வேண்ட அவன் அற நூல்களைக் காட்டி குருவின் மகள் தங்கை என்று கூறி மறுத்துவிடுகிறான். அசுர அரசனின் மகள் சன்மிட்டையும் தேவயானையும் கிணற்றுக்குத் குளிக்கச் செல்லும் போது ஏற்பட்ட ஒரு சிறு பூசலில் தேவயானையைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுப் போய்விடுகிறாள் சன்மிட்டை. வேட்டைக்கு வந்த யயாதி தன் குழுவினரிடமிருந்து பிரிந்து வந்தவன் கிணற்றில் ஒரு வேரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த தேவயானையின் முனகலைக் கேட்டு கை கொடுத்துக் கரையேற்றினான். தன்னைத் தொட்ட அவனையே திருமணம் செய்வேனென்று அவனைத் திருமணம் செய்து கொண்டாள் தேவயானை. சன்மிட்டை செய்த தவற்றுக்காக அவளைத் தேவயானைக்கு வேலைக்காரியாக அனுப்பினர்.

தன் குருவின் மகள் ஏமாந்தால் வளைத்துப் பார்க்கலாம் என்ற அடிமன ஓட்டம்தான் கதையைத் தலைகீழாக கட்டுரை ஆசிரியரின் மனதில் பதிய வைத்துள்ளதோ?

சரி, குருவின் மகள் மாணவனுக்கு உடன் பிறப்புக்குச் சமம் என்று அற நூல்கள் சொல்லலாம், தந்தையின் மாணவன் பெண்ணுக்கு உடன் பிறப்புக்குச் சமமானவன் என்று கூறியிருக்கின்றனவா?

செயமோகன் இலக்கியத்துக்கு குமுகக் கவலை தேவையில்லை என்று கருதுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது படைப்புகளில் அது உள்ளது. செங்கொடித் தோழர்களுடன் அவருக்குள்ள மனத்தாங்கலில் அவரது நரம்பு மண்டலம் சார்ந்த பகுத்தறிவு அப்படி நினைக்கலாம். ஆனால் அந்த மண்டலத்துக்கும் புறத்தே உடலினுள் நின்று அதனுடன் இடைவினைப்படும் அவரது உள்மனது அப்படி நினைக்கவில்லை என்பது அவரது படைப்புகளில் வெளிப்படுவது போலவே தேவதேவனுடைய பகுத்தறிவு இலக்கியத்தில் அரசியலைப் புறக்கணிக்கலாம். ஆனால் அவரது உள்மனது (நினைவிலி?) அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறது என்பது அவரது கவிதைகளில் செயமோகன் காட்டியுள்ள முரண்பாட்டிலிருந்து தெரிகிறது.

இந்த முரண்பாடு உண்மையில் மரபு - தகவமைப்பு (Heridity and Adaption) என்ற இயங்கியல் எதிரிணைகளின் செயற்பாடு. மரபு என்பதைத் தான் பிறக்கும் போது கொண்டுவந்த பிறவிக் குணம் எனலாம். தன்னை மட்டும் நினைப்பது - பிறரைப் பற்றிக் கவலை கொள்வது, உடனடி நலன்களை மட்டும் சிந்திப்பது - நெடுநாள் நோக்கில் சிந்திப்பது என்ற வகையில் இது இருக்கலாம். தகவமைப்பு தான் வளர்ந்து வாழும் சூழலுக்கேற்ப பிறவிக் குணங்களை மிகுக்கவோ மட்டுப்படுத்தவோ அல்லது முற்றிலும் மாற்றவோ செய்வது. இது ஒருவேளை ஒவ்வொருவரின் உடலின் வேதியியலின் தன்மைக்கேற்பச் செயற்படலாம். தான் பகுத்தறிந்து வெளிப்படுத்தும் சிந்தனைக்கு மாறான ஒரு வெளிப்பாடு உணர்ச்சி வயப்பட்ட சூழலில் ஒருவரிடமிருந்தால் அவரது பகுத்தறிவை பிறவிக் குணம் வென்றுவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.

″எனது கவிதைப் கோட்பாடும் சங்கக் கவிதையும்″ என்ற சீரங்கம் மோகனரங்கனின் கட்டுரை கவிதை மொழிபெயர்ப்பைப் பற்றியது என்பது தெரிகிறது. ஆனால் எழுதியிருக்கும் முறையாலோ என்னவோ அதனுள் என்னால் புக இயலவில்லை. பொறுத்தருள்க. பாதசாரியின் ″மனநிழலி″ல் ஒதுங்கும் போது மிக வியர்க்கிறது, தாங்க முடியவில்லை. அதில் ஒன்றேவொன்றுக்கு விளக்கம் சொல்லலாம். நத்தை தாழ்ந்த தூண்டலில்(கீயரில்) போவதால் கூடுதல் சுமை இழுக்கிறது போலும். பின் குறிப்பு சுவையாக இருந்தது.

ஓர் இதழின் தொடக்கத்தில் இவ்வாறு பல்கலப்பான ஆக்கங்கள் இருப்பது நல்லதுதான். அதுவும் எல்லாக் கோட்பாடுகளும் குறிக்கோள்களும் ஒன்றுக்குள் ஒன்று மயங்கி அடுத்துச் செல்லவேண்டிய திசையோ இலக்கோ தெரியாமல் தடுமாறி, தடம் மாறி நிற்கும் இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் கூடும். ஒரு மரக்கன்று வளர்ந்து நிலத்திலிருந்தும் வெளியிலிருந்தும் உரத்தையும் ஊட்டத்தையும் ஈர்த்துத் தன்னை மண்ணில் உறுதியாக ஊன்றிக் கொண்ட பின்னர் வேண்டாத கிளைகளைக் களைவது போல் இதழ் தன்னை உறுதியாக நிலைநிறுத்திய பின் தான் விரும்பும் தடத்தில் உறுதியாகச் செல்லலாம். ஆனால் தங்களுக்கு என்று ஒரு குமுகக் குறிக்கோள் இருந்து இதழ் நிலைப்பட்ட பின்னரும் தடம் மாறாமல் அந்தத் திசைநோக்கில் உறுதியாக நிற்பீர்களா என்பது காலம் உங்கள் முன் வைக்கும் கேள்வி, ஏனென்றால் விதிவிலக்கானவர்கள்தாம் வரலாற்றில் இந்தக் கட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறார்கள்.

எனவே தொடக்கத்திலேயே உறுதியான தடத்தை இனங்கண்டு பற்றிக் கொள்வதே, அதில் உறுதியுடன் நடை பயில்வதே சிறப்பு.

அன்புடன்,
குமரிமைந்தன்.

0 மறுமொழிகள்: