28.3.08

தமிழ்த் தேசியம் ... 28

மனந்திறந்து... 18

ஒரு கட்டுரைக்கு எழுதிய முன்னுரை அதைவிட நீண்டதாய் அமைந்துவிட்டது விதிவிலக்கான ஒரு நிகழ்ச்சி. தமிழ்த் தேசியம் என்ற தலைப்பு மிக விரிவான பார்வையைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகியதாக, அரசியல் அரங்குக்குள் அதன் எல்லை சுருங்கி விட்டது. அதன் முழுப் பரிமாணங்களையும் படிப்போர் முன் வைக்க வேண்டிய கடமையை மனதில் தாங்கித்தான் என் சொந்தப் பட்டறிவுகளை எடுத்து வைத்ததன் இன்னொரு பயனாக அதை நிறைவேற்றியுள்ளேன். இன்று பலர் நினைப்பது போல மொழியும் பண்பாடும் மட்டும் தேசியமல்ல, மொழி தேசியத்தின் அடையாளமாகச் சில இடங்களில் பயன்படக்கூடும், பயன்படாமலும் போகும். ஆனால் பண்பாடென்பது பொருளியல் அடித்தளத்தைப் பொறுத்து மாறத்தக்கது. இவை தவிர்த்த பிற தேசியக் கூறுகளை இம்முன்னுரையில் ஓரளவு நான் சுட்டிக் காட்டியுள்ளேன், சுருக்கமாக.

மொழிவளர்ச்சிக்கு அதைப் பேசும் மக்களின் பொருளியல், அதாவது அறிவியல் - தொழில்நுட்பம், பண்ட விளைப்பில் வளர்ச்சி முதலியவை இன்றியமையாதவை. அதே வேளையில் எந்த மொழியைக் கொண்டும் பொருளியல் வளர்ச்சியை எய்தலாம். இந்தியாவிலும் ஏழை நாடுகளிலும் பொருளியல் வளராமல் போனதற்கு மொழிச் சிக்கலல்ல காரணம். வல்லரசியப் பொருளியல் ஒடுக்குமுறையே காரணம். எனவே உண்மையும் நேர்மையுமுள்ள மொழி உணர்வாளர்கள் பொருளியல் உரிமைப்படையில் முன்னணிப் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் பொருளியல் வளர்ச்சிக்கு மொழி ஈடுகொடுக்க முடியாமல் போகும்.

இங்கே நான் பொதுவாழ்வில் ஈடுபட்ட, ஈடுபட்டுள்ள எத்தனையோ பேரைப் பற்றிய கடுமையான திறனாய்வுகளை முன்வைத்துள்ளேன். அவர்களில் பலருடன் நான் நெருங்கிப் பழகியுள்ளேன். பொதுவாழ்வில் எனக்கு முதலடி எடுத்துக் கொடுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் என் ஆக்கங்கள் அச்சு வடிவம் பெறச்செய்து பெருமைப்படுத்திய குணாவும் அவர்களைப் போன்று பல்வேறு அளவுகளில் என் பொதுவாழ்வுப் பணியில் உதவியவர்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டவன். ஆனால் அவர்களும் நானும் மேற்கொண்டுள்ள பணி முழுமை எய்த வேண்டும் என்ற உறுதியின் முன் என் நன்றியுணர்ச்சி நிற்க முடியவில்லை. அதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று தமிழுணர்வு, தமிழ்த் தேசிய உணர்வு உடையவர்கள் அதற்காகப் பாடுபடுவர்கள் என்று அறியப்பட்டவர்களில் என்னுடன் ஏதோவொரு வகையில் உறவு கொண்டவர் அனைவரையும் பற்றிய திறனாய்வுகளை எழுதும் போது இப்படி அனைவர் மீதும் குறை சொல்கிறோமே, அது நம் பணியில் எதிரான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ, நம் பக்கம் வரத்தக்கவர்களை எதிரணியில் நிறுத்தி விடுமோ, நம் இயல்பு பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி விடுமோ என்ற மயக்கமும் தயக்கமும் இருந்தது. இருப்பினும் நமது பட்டறிவுகளை நமக்குத் தெரிந்த உண்மைகளை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதலைத் தவிர்க்கவும் முடியவில்லை. இந்த தவிப்புக்கான காரணத்தை அறியும் தேடலைத் தொடங்கினேன். அதன் விளைவாகக் கிடைத்த உண்மை இது தான்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் அயல்மொழியினரின் ஆதிக்கத்தின் எதிர்ப்பாகத் தமிழர் நாகரிகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்களில் தமிழ் பேசும் பார்ப்பனரின் பங்கு முகாமையானது; அது விரிவடைந்து பார்ப்பன எதிர்ப்பாகத் திரிபடைந்து பார்ப்பனர் தவிர்த்த மேற்சாதியினரின் கோட்பாடாக நயன்மைக்கட்சி அரசியல் தோன்றியது. அதில் மும்பை மார்வாரி மூலதனத்தின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த தமிழகப் பொருளியல் விசைகளின் பங்கும் ஊடு இழையாக, ஆனால் வெளிப்படத் தெரியாமல் மறைந்திருந்தது. பெரியாரின் முனைப்பான பார்ப்பன எதிர்ப்பில் அது களத்திலிருந்து அகன்றது. ஆனால் அவரது இந்திப் போராட்டத்தில் தமிழகத் தேசிய உணர்வுகள் திட்டவட்டமான வடிவில் வெளிப்பட்டன. ஆனால் பெரியார் அதனை நேர்மையாகக் கையாளவில்லை. பொருளியல் ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்து வைத்த அண்ணாத்துரையும் அதனைத் திசைதிருப்பி இந்திய அரசின் முதலீடுகளில் பங்கு என்று மாற்றினார். இதனால் தமிழ்த் தேசியப் பொருளியல் விசைகளுக்கான அரசியல் அரங்கமே இல்லாமல் போய்விட்டது. எனவே தமிழ்த் தேசியம் என்றது ஒரு சிறு ஒட்டுண்ணி வகுப்பின் அரசு வேலைவாய்ப்புகள், அரசியல் மூலம் கிடைக்கும் ஊழல் ஆதாயங்கள் அவற்றுக்காகப் பார்ப்பனரை எதிர்ப்பதும் தாங்களே போட்டிக் குழுக்களாக மாறித் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தில்லி அரசின் முன் மண்டியிட்டுக் கிடப்பது என்றும் முடங்கிப்போய்விட்டது. அதனுடன் ″மார்க்சிய″த்தின் பெயரால் செயற்பட்டவர்களின் குறுக்கீடு. இன்று இந்த இரண்டு இயக்கங்களும் மயங்கிச் சேர்ந்த ஒரு விரிவான ஒட்டுண்ணிக் கும்பலின் கையில் தமிழகத் தேசியம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி வகுப்புகளின் முழக்கம் தான் மொழி - பண்பாடு குறித்த தமிழ்த் தேசியம்.

தேசிய ஒடுக்குமுறையின் உண்மையான நோக்கம் பொருளியல் சுரண்டலே. அது மக்களின் மொழி - பண்பாடுகளை அழித்தும் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மொழி - பண்பாடுகளைக் காக்கிறோம் என்று கூறி உள்நுழைந்ததும் அதைச் செய்ய முடியும். மார்வாரிகளும் இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.) இயக்கத்தினரும் சேர்ந்து காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கியது, அண்மையில் சென்னையில் நடைபெற்ற பா.ச.க. மாநாட்டில் திருவள்ளுவர் பெயரில் அரங்கம் அமைத்தது போன்ற செயற்பாடுகளையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில ஆய்வாளர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் தூக்கிப் பிடித்ததையும் இன்று சப்பானியர் மொழி அடிப்படையில் உறவு கொண்டாடுவதும் இது போன்ற மொழி - பண்பாட்டு ஆர்வலர்கள் மூலம் மக்களின் பரிவுணர்வைப் பெற்றுத் தம் சுரண்டல் கொள்ளைக்கான எதிர்ப்பைத் திசைதிருப்பத்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அயலாரின் பொருளியல் ஆதிக்கம் முழுமை பெற்றபின் நாம் என்ன பாடுபட்டாலும் மொழியைப் பாதுகாக்க முடியாது, மேம்பட வேண்டிய பண்பாடு தரம் தாழ்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே இந்த மொழி - பண்பாட்டுத் தேசிய விசைகளின் முற்றுகையை உடைத்து அடித்தள மக்களின் பொருளியல் உரிமைகள் மீது வேர்கொண்ட ஓர் உண்மையான தேசியப் போராட்டத்தினுள் தமிழகத்தை இட்டுச் செல்ல வேண்டிய உடனடித் தேவை உள்ளது. இந்த அடிப்படைப் பொருளியல் வகுப்புகள் இன்று நேற்றல்ல, தொல்காப்பியக் காலத்திலிருந்தே தமிழகத்து ஒட்டுண்ணி வகுப்புகளால் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஒதுக்கல், ஒடுக்கல் அடிப்படையில்தான் தமிழக - இந்தியப் பண்பாடே நிலைகொண்டுள்ளது. பொருளியல் உரிமை, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் உருவான ஆங்கில - ஐரோப்பிய ஆதிக்க காலத்தில் இந்தியப் பண்பாட்டில் ஏற்பட்ட சிறுசிறு அசைவுகளைக் கூட ″விடுதலை″க்குப் பின் வந்த பிற்போக்குக் கும்பல்கள் தடுத்து நிறுத்திவிட்டன. எனவே இந்த எதிர் விசைகளை உடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பார்க்கும்போதுதான் தமிழ்மொழி - பண்பாடு ஆகியவற்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு தமிழ்த் தேசியப் போராட்டக் களத்தில் நிற்கும் விசைகள் மீது நம் திறனாய்வு வெளிப்படுகிறது. இந்த விசைகளில் குணா போன்ற நேர்மையும் உண்மையான ஈடுபாடும் கொண்டவர்களும் உண்டு; நெடுமாறன் போன்று ஆதாயம் தேடும் தன்னல விசைகளும் உண்டு. தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட எல்லைகளுக்குள் நின்றுகொண்டு எம்மால் இயன்றதைச் செய்கிறோம் என்று அரைக்கிணறு தாண்டும் பேரா. தொ.பரமசிவம் போன்றோரும் உண்டு. 100 பேர் சேர்ந்து அரைக் கிணறு தாண்டினாலும் 50 கிணறு தாண்ட முடியாது அரைக்கிணறு தான் தாண்ட முடியும். அரைக்கிணறு தாண்டுவது தாண்டாமலே வாளாயிருப்பதைவிடத் தீங்கு பயப்பது. அதற்குப் பகரம் தன் முழு வலிமையையும் திரட்டி முழுக்கிணறு தாண்டுவோருக்குப் பக்கத்துணை நின்று வலுச்சேர்க்க வேண்டும். அதுதான் அவர்கள் மனதில் ஏற்றுக் கொண்ட குறிக்கோளுக்கு நாணயமாகச் செயற்படுவதாகும். இவர்களைத் தவிர கடலாழம் கண்டாலும் மன ஆழம் காணமுடியாத ஆழம் மிக்க ந. அரணமுறுவல் போன்றோரும் உண்டு. அரணமுறுவல் ஒருவேளை தீங்கற்றவராயிருக்கலாம். ஆனால் நாம் மிகக் கண்காணிப்பாக இருக்க வேண்டியவர்கள் இவர் போன்றோர் நிறைய உண்டு.

இந்த வகையில் தமிழகத் தேசியப் போராட்டத்தின் இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் ஒட்டுண்ணிகளாகிய நடுத்தர வகுப்புச் சிந்தனையாளர்களிடமிருந்து அதனைப் படைப்புச் செயலில் ஈடுபட்டு நம் பொருளியல் வலிமையைப் பெருக்கி தமிழக மக்களின் வாழ்நிலையும் பண்பாடும் மேம்படப் பாடுபடவேண்டிய முதலாளிகள், தொழிலாளர்கள், வாணிகர்கள் ஆகியோரின் தளத்துக்கு இட்டுச்செல்லும் நிகழ்முறையில் இந்தத் திறனாய்வு வெளிப்பட்டுள்ளது என்ற தெளிவு எனக்கு ஏற்படுகிறது. நான் உணராமலே செய்திருக்கும் இப்பணியின் வரலாற்று முகாமையும் சிறப்பும் இப்போது எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தெளிவில் எனக்குள் தோன்றிய தயக்கங்களும் மயக்கங்களும் நீங்கிப் பெருமிதத்துடன் இந்த முன்னுரையை முடித்துக்கொள்கிறேன்.

மேலே குறிப்பிட்ட நிலையில்லா வகுப்புகளிடம் ஓர் அடிப்படை இயல்பு முனைப்பியமாகும்(தீவிரவாதமாகும்). அதாவது தமிழகத்தை ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து விடுவிக்கவேண்டுமென்று முழங்குவர். அடித்தள மக்களுடன் ஒன்றிணையும் மனப்பாங்கு இல்லாமையால் அவர்களைத் திரட்டி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த இயலாமையின் வெளிப்பாடு தான் இந்த முழக்கம். அதே நேரத்தில் கருணாநிதி போன்ற பச்சை இரண்டகர்களைக்கொண்டு ஓர் ஆணையை வெளியிடவோ ஒரு சிலையைத் திறக்கவோ வைத்து அவர்களை வானளாவப் பாராட்டித் தம்மைப் பின்பற்றுவோரைக் குழப்புவர். (வெங்காலூரில் நெடுமாறனை வைத்து, அங்குள்ள தமிழர்களைத் திரட்டித் திருவள்ளுவர் சிலையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். அது நெடுமாறனின் ஒரு வெற்றியின் அடையாளமாக அவர் கழுத்தில் விழுந்த மாலையாக்கப் போகிறாரா அல்லது திருவள்ளுவர் சிலையை ஓர் அடையாளமாகக்கொண்டு அதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஒன்றுதிரளும் மக்களைக் கொண்டு கருநாடகத் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை வளர்த்தெடுக்கிறாரா குணா என்பதைக் காலம் காட்டட்டும்.[1] இவர்களிடையில் சிக்கித் தமிழ்த் தேசிய உணர்வு படைத்தவர்கள் திணறுவதை, ஓடி ஓடி உருக்குலைவதை, இளைத்துக் களைத்துச் செயலிழப்பதைக் கடந்த ஒன்றிரண்டு தலைமுறைகளாகக் கண்டுவருகிறோம்.

எம்மைப் பொறுத்த வரையில் அரசியல் விடுதலை மூலமே தமிழக மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. ″இந்திய விடுதலை″ மூலம் இந்திய மக்கள் ஒடுக்கப்படுவதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே! தமிழக மக்களுக்குப் பொருளியல், மொழியியல் உரிமைகள் கிடைப்பது இந்தியக் கட்டமைப்புக்குள் இயலுமானால் அதுவே தமிழகம் அரசியல் விடுதலை பெறுவதை விட நல்லது என்று கருதுகிறோம். அது இந்தியக் கட்டமைப்புக்குள் முடியுமா அல்லது அரசியல் விடுதலைதான் தீர்வா என்பதை யாமோ தமிழக மக்களோ முடிவு செய்ய முடியாது. அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் இந்திய ஆளும் கணங்கள்தாம். இந்தியக் கட்டமைப்புக்குள் தேசியங்கள் தங்கள் பொருளியல், மொழியியல் விடுதலையைப் பெற முடியாது என்பதை ஆளும் கணங்கள் தங்கள் செயல்கள் மூலம் காட்டிவிட்டார்களாயின் அதன் பின் தமிழகத்திலும் இந்தியாவின் பிற தேசங்களிலும் அரசியல் விடுதலைப் போர்களை எந்த விசையாலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே நாங்கள் திறந்த மனதுடன் உள்ளோம். அதாவது தமிழகம் அரசியல் விடுதலை பெற்றுத்தான் ஆக வேண்டுமா என்பதோ அல்லது இந்தியா முழுமையாகத் தொடரத்தான் வேண்டுமா என்பதோ இன்று எமது விடையைத் தேடி நிற்கும் கேள்விகளல்ல. இருக்கும் கட்டமைப்புக்குள் தமிழக மக்களின் பொருளியல் - மொழியியல் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டக்களத்தில் இறங்குவதைத்தான் எமது உடனடிப் பணியாகக் கொண்டுள்ளோம்.

என் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. எனக்கு மார்க்சியத்தின் இயங்கியலில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. ஒரு அமைப்பு அல்லது இயக்கம் வளர்ச்சிக் கட்டத்தைத் தாண்டி மூப்படையும் போதே அதை அழித்து அந்த இடத்தைப் பிடிக்கும் அதனுடைய பின்னடி அதன் உள்ளேயே உருவாகிவிடும் என்பது அது. அதனடிப்படையில் என் கருத்துகளைப் பதிந்து வெளிப்படுத்தி வருகிறேன். அந்த கருத்து விதைகள் தனக்காகக் காத்திருக்கும் பக்குவப்பட்ட மண்ணில் விழும் வரை காத்திருப்பேன். நான் மறைந்து விட்டாலும் அந்த விதைகள் தனக்குத் தேவையான களத்தைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதுவரை நீங்கள் படித்த, தனிமனிதனான என் கணிப்புகளில் குற்றங்குறைகளும் தவறுகளும் இருக்கலாம். அவற்றை என்னைப் போல் திறந்த மனதுடன் திறனாய்ந்து தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வேன். பிறவற்றுக்கு விளக்கம் கூறி என் கடமையை நிறைவேற்றுவேன். அவ்வாறு என்னுடைய பணி ஒட்டுமொத்தக் குமுகத்தின் பணியாக மேம்பட உதவுங்கள்.

கட்டுரையை முழுமையாகப் படிக்க வாய்ப்பின்றி குணாவின் நூல் மூலம் மட்டும் அறிந்தவர்கள் முழுக் கட்டுரையையும் படித்தபின் என் மீது கொண்டிருந்த தவறான கருத்துகளைக் கைவிட்டு என்னைப் பாராட்டியுள்ளனர். அவ்வாறு பாராட்டியதுடன் நில்லாது அதனை நூலாக வெளியிட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்து உதவ முன்வந்த அவர்களுக்கும் ஊக்கமளித்த இயக்கத் தோழர்களுக்கும் சிறப்புற அச்சிட்டுத் தந்த அச்சகத்தாருக்கும் என் நன்றி. [2] தன் நூலின் மூலம் இக்கட்டுரை அச்சாகும் முன்பே அதன் மீது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த குணாவுக்கும் நான் அனைவருக்கும் மேலாகக் கடமைப் பட்டுள்ளேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(முற்றும்)

அடிக்குறிப்புகள்:

[1] நாம் ஐயுற்றவாறே நடந்தது. திட்டமிட்டவாறு சிலையைச் சுற்றிக் குழுமினார்கள். கர்னாடகக் காவல்துறையினர் அவர்களைத் தளையிட்டுச் சிறையிலடைத்துவிட்டு மாலையில் விட்டுவிட்டனர். நாம் கணித்தவாறே ஒரு கிழமை சென்று அவர் நடத்திய போராட்டத்தின் வெற்றிக்காக வெங்காலூர்த் தமிழர்கள் அவருக்கு உண்மையிலேயே ஒரு மாபெரும் வெற்றிவிழா நடத்திச் சிறப்பித்தனர். வெங்காளூர்த் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு அவர்களது அணுகல்தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குணாவைப் பொறுத்தவரை அவரைப் பற்றிய நம் எதிர்பார்ப்புகள்தாம் மிகையானவையேயன்றி அவர் மீது பிழையில்லை. அவர் அறைக்குள்ளிருந்தும் சிறைக்குள்ளிருந்தும் படித்த நூல்கள் தந்த செய்திகள் மற்றும் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் தமிழக மக்களுக்கும் வெங்காலூர்த் தமிழர்களுக்கும் உள்ள சிக்கல்களைப் பார்த்து நூல்கள் எழுதினாரேயொழிய அவர் நிலத்தின் மீது ஏறிநின்றதில்லை; அப்படி ஏறிநிற்பது பற்றி அவர் சிந்தித்ததுமில்லை என்பது அண்மையில் அவரைச் சந்தித்த போது நான் புரிந்துகொண்டது.

[2] தமிழ்த் தேசியம் கட்டுரையை நூலாக வெளியிடுவதற்கு நண்பர் ஒருவர் விரும்புவதாக தோழர் தமிழ்மண்ணன் கூறியதை அடுத்து இந்த முன்னுரையை நான் எழுதினேன். இதை அந்த நண்பர் படித்தபின் நூலை வெளியிட மறுத்துவிட்டார். எனவே உண்மைகளை எந்தப் புனைவுமின்றி ஏற்றுக்கொள்ளும் அகநிலை தமிழக மக்களுக்கு ஏற்படும் காலத்தை அல்லது அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் ஒருவரை எதிர்பார்த்து இப்படைப்பு காத்திருக்கிறது.

0 மறுமொழிகள்: