28.3.08

தமிழ்த் தேசியம் ... 27

மனந்திறந்து... 17

திருவள்ளுவர், திருக்குறள் ஆகிய பெயர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளும் தனியாள்களும் செயற்படுகின்றனர். அவற்றுக்கு திருவள்ளுவருக்காகவும் திருக்குறளுக்காகவும் தங்கள் ஆற்றலுக்கு மிஞ்சி செலவு செய்யவும் ஆயத்தமாக பல நூறாயிரம் பேர் உள்ளனர். இது 2007ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் நாள் குமரிமுனையில் நடைபெற்ற விழாவில் தெரிந்தது. (எண்ணற்ற போலிகளும் நடமாடுகின்றனர். சான்றுக்கு குமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் திருச்சபை என்ற அமைப்பின் பெயரில் புலவர் கு. பச்சைமாலுக்கும் ஆதிலிங்கம் என்பவருக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழாயடிச் சண்டையைக் கூறலாம்.) இவ்வாறு திரளும் பணத்தைக் கொண்டு தமிழகத்துக்குத் தேவையான மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், மூலப்பொருட்களின் இயல்புகளைத் தெரிந்து அவற்றிலிருந்து பண்டங்கள் செய்வதற்கு அடித்தளமான தரவுகளைத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வகம் முதலியவற்றைத் தொடங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அவர்கள் திருவள்ளுவரை ஒரு கடவுளாக்கி முற்றோதுதல், சிலைகள், படங்களின் வாணிகம் என்று தங்கள் செயற்பாடுகளைச் சுருக்கிக் கொள்கின்றனர். தமிழ் பெயரில் இயங்கியவர்கள் இறந்தால் இழவு, பதினாறு கொண்டாட்டங்களுக்குக் கூட்டமாகப் போய்ச் செலவு செய்கின்றனர். தொடக்கத்திலேயே பணக் கணக்கு வைத்துக் கொள்வதில் பணப் பொறுப்பாளராக இருப்பவர்க்கும் மா. செ. தமிழ்மணி – அரணமுறுவல் கூட்டணிக்கும் கடும் மோதல். இப்போது சரிக்கட்டிக்கொண்டார்கள்.

மா.செ. தமிழ்மணியைப் பொறுத்த வரையில் அதி முனைப்பிய இறைப்பற்றாளர். கேரளம், கருநாடகம் என்றெல்லாம் கோயில்களுக்குச் சுற்றுவார். அவரை தனித்தமிழ் பேசும் இரா. சே. ச. (ஆர்.எசு.எசு.) என்று அழைப்பதுவே பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

குமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை பற்றி தாறுமாறான செய்திகள் வந்து கொண்டிருந்த ஒரு சூழலில் குமரி மாவட்டத்தில் புலவர் திரு. பச்சைமால் தலைமையில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் நானே பொறுப்பேற்றுக் கொண்டு நாகர்கோவிலில் இயங்கும் தென்பாண்டித் தமிழர் பேரவையின் திரு.சொ.நன்மாறனின் உதவியோடு திருவள்ளுவர் சிலையை விரிவாகப் புகைபடங்கள் எடுத்து விளக்கமாக ஒரு கட்டுரையும் எழுதினேன். அதனை அவருடைய வழக்கம் போல் பயன்படுத்தாமல் நடுவில் விட்டுவிட்டுப் போய்விட்டார் பச்சைமால். அந்த நிலையில் தோழர் ம.எட்வின் பிரகாசுவின் உதவியுடன் ஒரு புத்தகமாக அதை வடிவமைத்தேன். அதனை மிகத் தயக்கத்தின் பெயரில் வெளியிட்டது அறக்கட்டளை. ஆனால் திரு.பொன்.மாறன் வண்ணத்தில் அடித்துத்தர ஒப்புக் கொண்ட தொகைக்குக் குறையாத செலவில் (சரியாக எவ்வளவு செலவு செய்தனர் என்று தெரியவில்லை) கறுப்பு- வெள்ளையில் வெளியிட்டனர்.

குறள் போல் சிலையும் காலத்தை வெல்லும் என்ற தலைப்பிலான அந்த வெளியீட்டில் திருவள்ளுவர் சிலையை அடையாளமாகக் கொண்டு தமிழக மக்களுக்காக எந்தெந்த வகையில் செயல்படலாம் என்று சில குறிப்புகளைக் காட்டியிருந்தேன்.

என் இடையறாத வற்புறுத்தல்களின் பயனாகவும் திரு.அரணமுறுவல் அவர்களுக்குள் பதுங்கியிருக்கும் முற்போக்கு எண்ணங்களாலும் திருவள்ளுவர் அறக்கட்டளை நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு களத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பாக கொஞ்சம் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். தடுமாற்றம் இன்றி தடம் மாறாமல் நடை பயில வாழ்த்துகள்.

மா.செ.தமிழ்மணி பெருஞ்சித்திரனார் குடும்பத்தை விட்டு அரணமுறுவல் பக்கம் வந்துவிட்டார் என்றால் பறம்பை அறிவன் பெருஞ்சித்திரனார் குடும்பத்தில் போய் ஒட்டிக்கொண்டார்.

தன் பிள்ளைகள் சொந்தக்காலில் நின்று தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளியலை ஈட்டவென்று எந்த முறையான முயற்சியையும் பெருஞ்சித்திரனார் எடுக்கவில்லையா அல்லது தனித்தமிழ் ஆர்வலர்களின் பொதுவான நடைமுறையாகிய ″தமிழ்க் குடும்பம்″ என்று அவர்களுக்குள்ளேயே அடங்கிக்கொள்ளும் கோட்பாட்டை அவர்தான் தொடங்கி வைத்தாரா என்று தெரியவில்லை. அவரது மக்கள், மருமக்கள் என்று அனைவரும் ″தமிழால் வாழ்வது″ என்ற கொள்கையையே கடைப்பிடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தந்தையாரின் செல்வாக்குக்கு ஆட்பட்ட வசதி படைத்த ஆர்வலர்களை அணுகி பணம் திரட்டி செந்தமிழ் அடுக்ககம் கட்டி முடித்தனர். அடுத்து அவரது ஆண் மக்களுக்குள் புகழ்பெற்ற எல்லாக் குடும்பங்களுக்குள்ளும் கட்டுப்படுத்தும் மூத்தோர் காலத்துக்குப் பின் பிள்ளைகளிடையில் வரும் பங்குச் சண்டை போல் வந்தது போலும். பெருஞ்சித்திரனாரின் மூத்த மகன் பூங்குன்றன் தந்தையார் விட்டுச் சென்ற தமிழ் நிலம் இதழைத் தொடர்ந்து நடத்த ஆசிரியர் குழுவில் பணியாற்ற வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் தொலைபேசியில் என்னைக் கேட்டார். (தமிழ் நிலம் அவர் பங்காக ஒதுக்கப்பட்டிருந்தது போலும், பறம்பை அறிவன் முன்பு சொல்லி இருக்கிறார்.) நானும் ஒப்புக்கொண்டேன். அப்புறம் பேச்சு மூச்சில்லை. ஆனால் அதுவரை பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகன் இறைக்குருவனார் தென்மொழியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது மாறி ஆசிரிய உரையில் பூங்குன்றனின் பெயர் இடம் பெற்றது. சரிதான் பங்கு படிந்துவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

பூங்குன்றன் அறிவியல் மன்றம் என்ற பெயரில் ஒன்று வைத்திருந்தார். எரிநீர் இராமரைத் தமிழக ஆட்சியாளர்கள் சிறையிட்டு வாட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமம் வழங்குவது என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை அவரது மன்றத்தின் மூலம் நடத்துமாறு கேட்டேன். ஒப்புக் கொண்டுவிட்டு நழுவி விட்டார்.

பாட்டாளியர் கோட்பாட்டைப் பற்றிக் கொண்டு ″புரட்சிகர″மாகப் பேசி எழுதி வருபவர் பெருஞ்சித்திரனாரின் இன்னொரு மகன் பொழிலன். கொள்கை அறிக்கை என்றெல்லாம் குறுநூல்கள் வெளியிடுவார். தவறாமல் எனக்கும் விடுப்பார். அவர் தந்தையார் இயற்கை எய்தியபோது துயரம் கேட்கச் சென்றிருந்தேன். என் ஆக்கங்களின் ஒரு தட்டச்சுப்படியை அவரிடம் கொடுத்து வந்தேன். நான் கூறியவற்றை மெல்லிய புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த பொழிலன் இன்றுவரை அவற்றிலிருந்த கருத்துகள் பற்றி ஒரு சொல் கூடக் கூறியதில்லை.

அவர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்று ஓர் அமைப்பையும் அதன் சார்பில் உழைக்கும் மக்கள் தமிழகம் என்ற இதழையும் நடத்தினார். பின்னர் தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் உரிமை முழக்கம் என்ற ஓரு இதழையும் தொடங்கினார். இடையில் அந்த இதழ் தொய்வடைந்தது. தென்மொழியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் அவை தொடங்கப்பட்டுள்ளன, இனி தொடர்ந்து வெளிவரும் என்ற அறிவிப்புடன்.

பொழிலனுடைய அணுகல் மார்க்சிய-பெரியாரிய–அம்பேத்காரிய–மாவோயியம் என்ற கலப்பில் உருவான ஒரு மாய மை. அந்த மையை நீங்கள் பூசிக் கொண்டால் உங்களைப் பார்ப்பவர்களுக்கு உங்கள் ஒரு கையில் ஏ.கே. 47 வரிசையில் மீ இற்றை(நவீன) துப்பாக்கியையும் இன்னொரு கையில் குண்டுமிழி செலுத்தியையும்(Rocket launcher) உடல் முழுவதும் மாலைகளாகத் தோட்டாக்களையும் உடைகளிலெல்லாம் வகை வகையான எறிகுண்டுகளையும் வைத்துக் கொண்டு அரசுப் படைகளை அழிப்பதற்காகக் களத்தில் நிற்பவராகத் தோற்றமளிப்பீர்கள். உங்களுக்கே அப்படித் தோன்றும். இந்த மாய மையுடன் இப்போது சூழலியல் உட்பட்ட ″தொண்டு″ நிறுவனங்களின் வாடையையும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, நாள்தோறும் பெரும் படகுகள் சென்றுகொண்டிருக்கும் போது கேடுறாத சேதுக் கால்வாய்ப் பகுதி கடலின் சூழல் அவற்றை விடப் பெரிய சிறு கப்பல்கள் செல்வதற்காக 5 மீட்டர்வரை ஆழம் தோண்டுவதால் எல்லாமே அழிந்து போகும் என்று கூக்குரலிடுகிறது அவரது உழைக்கும் மக்கள் தமிழகம். அங்கே இருக்கிற மணல் திட்டுதான் ஓங்கலையிலிருந்து கேரளத்தைக் காத்தது என்று ஒரு வாதம். தினமலர் வகையறாக்கள், நமக்கு சாலையும் இருப்புப் பாதையும் போதுமே, கப்பல் வழி எதற்கு என்று கேட்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து செல்லும் அடிமாடுகள் கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு கொச்சித் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்து மணல், சல்லி போன்றவையும் நாகை, திரூவாரூர் மாவட்டக் கடற்கரையிலுள்ள மீன் கூட அங்கே கொண்டுசெல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகக் கடற்கரை துறைமுகங்கள் இணைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றால் கேரளமும் கொழும்பும் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்துக்காக, பெரியாற்று நீரையும், பொள்ளாச்சித் தொடர்வண்டிப் பாதைப் பகுதியைப் பறித்துக் கொண்டது போல் தமிழகத்துக் கப்பல் போக்குவரத்து வளர்ச்சியையும் தடுக்கும் நோக்கத்துடன் வைக்கப்படுவதே இந்தச் சூழல் கேடு பூச்சாண்டி.

தமிழகத்தில் மீன் பிடித் தொழில்நுட்பம் மேம்பட்டால் தமிழகக் கடற்கரை வரை வந்து மீன் வளத்தை அள்ளிச் செல்லும் அயல்நாட்டுக் கப்பல்களுக்கு இழப்பு என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். கட்டுமரம், தோணி இவற்றுடன் பழங்குடியினராக தமிழகக் கடற்கரை மீனவர்களை அமிழ்த்தி வைக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா சார் தொழிற் சங்க அமைப்புகள் ஓங்கலையில் உருவான குழப்பத்தைப் பயன்படுத்தி உள் நுழைந்து மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினரென்று அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகையை வைத்துப் பண்டைக் காலத்தைப் போலவே அவர்களை உள்நாட்டு மக்களிடமிருந்து அயற்படுத்துகின்றன. அவ்வாறுதான் மலைவாழ் மக்கள் சமநிலத்துக்கு வந்து பிறரைப் போல் கல்வி கற்று மேம்படுவதைத் தடுத்து அவர்களை மலைசார் பழங்குடிகள் என்று வகைப்படுத்த வேண்டும் என்று அவர்களையும் அயற்படுத்த இந்த அயல் விசைகள் முயன்று வருகின்றன. மலையில் அயலவன் அமர்ந்துவிடுவான், கடற்கரையில் வெளிநாட்டான் புகுந்து விடுவான் என்று கூறுகிறவர்கள் உள்நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டியதுதானே! இவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு உதவுகிறவர்கள் இதை அவர்களுடைய பணியாகப் வைக்கவில்லை. உண்மையில் அயல் நாட்டானின் ஆட்கள்தாமே இவர்கள்!

பெருஞ்சித்திரனாரின் இறுதிக் காலத்தில் அவரைச் சிறையில் அடைக்கக் காரணமாயிருந்த மாநாட்டில் ″தன் தீர்மானிப்புரிமைத் தீர்மானம்″ உருவாக்கிய ″அறிவுசீவி″களில் முதன்மையானவர் அ.மார்க்சு எனப்படும் பேராசிரியர். இவர் மார்க்சிய–லெனினிய சிந்தனையாளர் என்று சொல்லப்படுபவர். எசு. வி. இராசதுரைக்கு நிலையான பணி எதுவும் இல்லை. ஆனால் இவர் கல்லூரிப் பேராசிரியர். துணைவியாரும் பேராசிரியர் என்று தெரிகிறது. இந்த வருமானங்களோடு ″தொண்டு″ பக்கத் தொழில். ″விளிம்பு நிலை″, ″பின் இற்றையியம்″(பின் நவீனத்துவம்) என்று புதிது புதிதாகப் புகுத்தப்படுபவற்றைப் பயன்படுத்தி ஏழைகளுக்காகப் பரிந்து பேசுவதாகக் காட்டி மக்களிடையில் பிளவுகளை ஏற்படுத்தப் பணியாற்றுபவர். அவ்வாறுதான் பல்வேறு சாதிக்குழு மக்களிடையில் பேச்சு வழக்கில் உள்ள மொழி வேறுபாடுகளை வைத்து ″பல தமிழ்கள்″ என்று ஒரு கருத்தைத் தென்மொழியில் முன்வைத்தார். கடும் எதிர்ப்பு வந்ததோ என்னவோ, பின்னர் அவரது ஆக்கங்கள் அதில் இடம் பெறவில்லை. இப்போது புது கட்டமைப்புகளுடன் இதழ்கள் அந்தக் குடும்பத்திலிருந்து வெளிவரும் சூழலில் அண்மையில் வந்துள்ள உரிமை முழக்கம் இதழில் அவருடைய கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. அத்துடன் ″தீராநதியில் .... அ.மார்க்சு″ என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனாரின் வழியில் சிறந்த ″வாரிசு″ பொழிலன் என்று கொடைக்கானல் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றிருப்பதைக் காட்டிச் சான்று வழங்கியிருக்கிறார். இவற்றிலிருந்து பெருஞ்சித்திரனார் குடும்பம் செல்லும் திசையை ஒருவாறு உய்த்தறிய முடிகிறது. மக்களிடமிருந்து அயற்பட்ட கோட்பாடுகளுடன் களத்தில் இறங்குவோர் இறுதியில் பிழைப்புக்காக மண்டியிட வேண்டிய இடம் அயல்நாட்டுப் பணத்தைப் புழக்கத்தில் விடும் ″தொண்டு″ நிறுவனங்கள் என்ற எமது கருத்துக்கு இன்றைய பெருஞ்சித்திரனார் குடும்பம் இன்னொரு சான்று.

அறியா விடலைப் பருவத்தில் முற்போக்கு இளைஞர் அணி(R.Y.L.) போன்ற மா.லெ. குழுக்கள் ஏற்றிய வெறியால் கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுரக் குண்டுவெடிப்பில் சிறைப்பட்டு ″உரூ3000/- அளவுக்குத்தானே இழப்பு, அதற்கு 10 ஆண்டுகள் சிறையா?″ என்று கேட்கும் இரங்கத்தக்க நிலைக்கு வந்து, பாவலர் கலியபெருமாள், ″தோழர்″ தியாகு போன்றோர் சென்ற தடத்தில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுபோன்ற ஒரு சூழலில் திரு. பறம்பை அறிவன் அந்தக் குடும்பத்தில் சேர்ந்திருக்கிறார்.

திரு. அ.மார்க்சு பற்றிய என் ஒரு பட்டறிவையும் இங்கு பதிந்து கொள்வது நலம். முகிழ் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய மார்க்சு, சோழர் காலத்தில் தமிழகத்தில் தனியார் உடைமையே கிடையாது. கோயில்களுக்கு நிலம் வழங்கிய ஆவணங்களில் ″பொது நீக்கி″ என்றே காணப்படுகிறது. பொது உடைமையாக இருந்த நிலங்களிலிருந்து மக்களைத் துரத்திவிட்டு அவற்றைக் கோயில்களுக்கு அரசர்கள் வழங்கினர் என்றார். தமிழகம் மிகக் காலந்தாழ்ந்தே நாகரிகத்தினுள் நுழைந்தது என்பதை வலியுறுத்தும் ″மார்க்சியர்″களின் ஒரு வித்தை இது.

அவர் பேசி முடித்த பின் நான் கேட்டேன், சொத்துகளை அயல்படுத்தல்(alienation) அதாவது பிறருக்கு வழங்குதல் என்ற நடைமுறை தனிச் சொத்துடைமையின் இலக்கணம்; அவ்வாறு தனியாட்கள் கோயில்களுக்கு நிலங்களைக் கொடையாகக் கொடுத்ததைக் காட்டும் ஆவணங்கள் ஏராளமாக உள்ளனவே; இவை தனியார் சொத்துடைமையைக் காட்டவில்லையா என்று. அவர் தடுமாறி ஆமாம் ஆமாம், அப்படியும் இருந்தது, இப்படியும் இருந்தது என்றார். இவ்வாறு அறியாத மக்கள் முன் பொய் பேசும் ″அறிவு சீவி″களில் அவரும் ஒருவர்.

என்னுடன் இணைந்திருந்த காலத்திலும் திரு.பறம்பை அறிவன் பல சூழ்நிலைகளில் ″தொண்டு″ நிறுவனங்களிடம் இட்டுச் சென்றுள்ளார். எனக்கு அது ஒரு நெருடலாகவே இருந்தது. அவருக்கு அவர்களுடன் நெருக்கமான உறவிருந்தது உண்மை. இப்போது அவருக்கு உணவும் உறையுளும் கிடைக்கக் கூடிய ஒரு அமைப்பு கிடைத்துவிட்டது. வாழ்க!

அவரது நடவடிக்கையால் ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் பொருளியல் உரிமை என்றொரு இதழைத் தொடங்கி 20 இதழ்கள் வெளிவரத் தூண்டுதலாக இருந்த அவரது தொடர்புக்கு நன்றி கூற வேண்டும். புதியவர்கள் பலருக்கு நான் அறிமுகமானேன்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: