14.11.16

கருப்புப் பணமும் கள்ளப்பணமும்



கருப்புப் பணமும் கள்ளப்பணமும்.
குமரிமைந்தன்.
            பனியா – பார்சி – வல்லரசியர்களால் இயக்கப்படும் இந்திய அரசு வருமான வரித்துறை என்ற அரக்கர் கூட்டத்தைப் பயன்படுத்தி சராசரி இந்தியக் குடிமகனைக் காலங்காலமாகக் கொடுமைப்படுத்தி வருகிறது. பணம் படைத்தவர்களிடமிருந்து ஏழை உழைக்கும் மக்களைக் காப்பதற்கு இது ஒன்றுதான் வழி என்று பொதுமைக் கட்சியினர் ஆளும் கொள்ளைக் கூட்டத்துக்குக் கோட்பாட்டுத் துணை வழங்கி வருகின்றனர். இதனால் மனம் பேதலித்த இந்தியக் குடிமகன் வருமான வரியின் பெயரால் நடைபெறும் தேசிய ஒடுக்குமுறைகளைக் கண்டும் காணாமலும் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறான். அவனது கண்களைத் திறக்கவைக்க வேண்டுமென்பதற்காகவே மோடி அரசு திடீரென 09 – 11 – 2016 அன்று காலை உரூ.500, 1000 பணத்தாள்கள் செல்லாவென்றும் குறிப்பிட்ட கெடுவுக்குள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் இந்த வகைப் பணத்தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல ஓர் ஆள் ஒரு நேரம் உரூ.4000க்கு மேல் மாற்ற முடியாது என்பது மட்டுமல்ல ஆட்சியாளர்கள் கூறும் அடையாள ஆவணங்களையும் காட்ட வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது. ஆங்கிலன் இந்நாட்டை விட்டுப் போன போது ஒரு உரூபாவுக்குக் கிடைத்த அதே தரமுள்ள பண்டத்தை இன்று ஆயிரம் உரூபாவுக்குக் கூடப் பெற முடியாதபடி ஆக்கி வைத்துள்ளீர்களே, இந்நிலையில் இம்மக்கள் தங்கள் அன்றாடச் செலவுகளுக்கு நூறு உரூபாக்களுக்கும் அதைவிடக் குறைந்த சில்லரைகளுக்கும் எங்கே போவார்கள்? உங்கள் வங்கிப் பட்டரைகளில் அமர்ந்திருக்கும் திமிர் பிடித்த ஊழியர்கள் 500, 1000 உரூபாக்களுக்குக் குறைந்த பணத்தாள்களை வழங்க மறுத்து வாடிக்கையாளர்களான இந்நாட்டின் குடிமக்களை, தங்களுக்குச் சம்பளம் என்ற பெயரில் கூலி வழங்கும் முதலாளிகளை இழிவாகப் பேசி விரட்டுகிறார்களே, இந்நிலையில் உங்களை நம்பி ஆட்சியில் அமர்த்திய அன்றாடங்காய்ச்சிகள் தங்கள் அன்றாடச் செலவுகளுக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கு மின்னணுவியல் பொறியில் குமிழை அழுத்தி நாட்டிலுள்ள கடைகெட்ட கயவாளிகளைச் சட்டமன்றங்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் விடுத்துவைக்கத்தான் தெரியுமே ஒழிய தெருவிலிறங்கிப் போராடத் தெரியாதே, அந்தப் போராட்டத்துக்கான பயிற்சியைத் தொடங்கவே இந்திய பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டரசாகிய காட்டரசு அரக்கத்தனமான இந்தக் கொடுமையை அரங்கேற்றியுள்ளது.

கருப்புப் பணமும் கள்ளப் பணமும்.
ஒருவன் சட்டப்படி நேர்மையாக உழைத்துச் சேர்த்த பணத்தில் அதில் பத்தில் மூன்று பங்கை அதாவது 30%ஐ வருமான வரி எனப் பறிகொடுக்க விரும்பாமல் மறைக்கும் வருமானம் கருப்புப் பணம் என்ற பொல்லாப்பெயரைப் பெற்றுள்ளது. அதே வேளையில் கொள்ளையடித்தோ திருடியோ ஊழலிலோ சேர்த்த பணத்தில் உரிய வருமான வரியைக் கட்டிவிட்டால் அதை வெள்ளைப் பணமாக்கிக் கொடுத்துவிடுவார்கள். எடுத்துக்காட்டாக பேரவை(காங்கிரசு) ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராயிருந்த சுக்ராம் என்பவர் வருவாய்க்கு மிஞ்சிய சொத்து சேர்த்திருப்பதான குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது. பின்னர் பா.ச.க. ஆட்சியின் போது அவரது மாநிலக் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டதால் அவரது வழக்கை வருமான வரி வழக்காக மாற்றி அவர் வருவாய்க்கு அதிகமாக ஈட்டியிருந்த 53 கோடி உரூவாக்களுக்கு 17 கோடியைக் கழித்துவிட்டு எஞ்சிய 36 கோடியை அவருக்கு வழங்கியது வாசுபாய் அரசு. பிடிக்கப்பட்ட பணம் அன்றைய வருமான வரி விகித்ததை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இது வருமான வரித்துறையைப் பயன்படுத்தி கள்ளப்பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கும் நேர்மையாக ஈட்டிய பணத்தை கருப்புப் பணம் என்ற கொடும் பெயர் சூட்டி மக்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதற்கும் சிறப்பான ஒரு சான்று.

வருமான வரித்துறையின் உண்மையான நோக்கம் என்ன?
            வட இந்தியாவில் பனியா – பார்சிகளின் உண்மையான போட்டியாளர்கள் அங்குள்ள முகம்மதியர்கள். அவர்களை அகற்றுவதற்காகவே, தன்னாட்சி அதிகாரமுள்ள மாநிலங்களின் கூட்டாட்சியாக விடுதலை பெற்ற இந்தியா இருக்க வேண்டும், இல்லையென்றால் தனி பாக்கித்தான் வேண்டும் என்று முகமதலி சின்னா கேட்ட போது பேரவைக் கட்சி பாக்கித்தானைப் பிரித்துக் கொடுத்தது. இனி எஞ்சியுள்ள இந்திய மக்களிலிருந்து புதிய பொருளியல் போட்டியாளர்கள் உருவாகிவிடாமல் தடுக்க இந்த பனியா – பார்சிக்களுடன் ஐரோப்பிய – அமெரிக்க வல்லரசியமும் இணைந்து பயன்படுத்தும் துறைகளில் முதன்மையானது வருமான வரித்துறை.

            வருமான வரித்துறை பனியா – பார்சிகளைத் துன்புறுத்துவதில்லை. பணத்தாள் கட்டுகளைத் திணித்த மெத்தை மேல் சாய்ந்திருந்து துணிச்சலாகத் தொழில் செய்ய உரிமை பெற்றவர்கள் அவர்கள். ஆனால் எந்த மாநிலத்தின் குடிமகனையும் நினைத்த நேரத்தில் அவன் வீடு, அலுவலகம், கடை, அல்லது தொழிலகத்தினுள் புகுந்து பறிக்கவும் அவனது பணத்தை வங்கிகளில் முடக்கிக் கொடுமை செய்யவும் வருமான வரித்துறை தயங்குவதில்லை. அண்டை அயலாரும் இந்தப் பகற்கொள்ளையைக் கண்டுகொள்ளாமல் ஏதோ ஏழைகளிடமிருந்து சுரண்டிய பணத்தைத்தானே பறிக்கிறார்கள் என்று மனநிறைவு கொண்டுவிடுகிறார்கள். இதில் சம்பளத்துடன் சொத்துத் தரகு, திருமணத் தரகு, கைக்கூலிகள் பெற்றுப் பணம் குவிக்கும் அரசு ஊழியர்களும் கிழமைக்கு இரண்டு மணிநேரம் வேலைக்கு ஓரிலக்கம் உரூபாய்கள் சம்பளத்துடன் பல்வேறு இருக்கைக் கட்டணங்கள், ஆய்வு நல்கைகள், தனிப்பயிற்சிகளுடன் மேலே கூறிய தரகு வேலைகள், கையூட்டுகள் பெறும் கல்லூரிப் பேராசிரியர்களும் அடக்கம். இவர்கள்தாம் மாதம் இருபதினாயிரம் உரூபாய் ஈட்டுவதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு குடும்ப, சுற்ற உறவுகளையும் பேண முடியாமல் தத்தளிக்கும் ஒரு சில்லரைக் கடைக்காரனைப் பார்த்துச் சுரண்டல்காரன் என்று வாய் கூசாமல் திட்டுபவர்கள். ஆனால் இந்த அரசூழியர்களையும் வருமான வரித்துறை விட்டுவிடுவதில்லை. ஆண்டுக்கு இரண்டு முறை வகைவகையான படிவங்களைக் கேட்டு வறுத்தெடுத்துவிடுவார்கள். ஆக, இந்த அனைவரையும் பதம் பார்க்க வந்துள்ளது மோடி அரசின் இன்றைய நடவடிக்கை.

            கருப்புப் பணத்தை வெளிக்கொணர என்று ஆட்சியாளர்கள் அறிவிக்கும் திட்டங்கள் என்றுமே முழு மனதுடன் செய்யப்படுவதில்லை. அண்மையில் அருண் சேட்லி முன்வைத்த திட்டத்தின் படி அறிவிக்கப்படும் பணத்தில் 45% வருமான வரியாகப் பிடிக்கப்படும் என்றால் தான் நேர்மையாக ஈட்டிய பணத்தில் பாதியை இந்தக் கொள்ளைக்காரர்களுக்கு எவன் அள்ளிக்கொடுக்க முன்வருவான்?

            இந்தியா “விடுதலை” அடைந்து நரசிம்மராவு ஆட்சி வரும் வரை வருமான வரிக்கு மறைக்கப்பட்ட பணம் பெரும் பண முதலைகளாலும் அரசியல்வாணர்  - அதிகாரிகள் கும்பலான ஆட்சியாளர்களாலும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கப்பட்டது. ராவு காலத்தில் புகுத்தப்பட்ட உலகளாவுதல் திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு விடுக்கப்பட்ட, ஆட்சியாளர்கள், அவர்களுக்கு நெருக்கமான பண முதலைகளின் நெருங்கிய உறவினர்கள் மூலம் கள்ளப்பணமும் கருப்புப்பணமும் வெளிநாட்டுத் தொழிலகங்களில் முதலிடப்பட்டு அயல் நேரடி முதலீடாக இந்தியாவினுள் பல திசைகளிலுமிருந்தும் பாய்கின்றது. சுவிசு வங்கிகளில் பதுங்கியிருந்த பணத்தில் கிட்டத்தட்ட 90% காணாமல் போய்விட்டது. அதே வேளையில் இந்திய அரசின் செல்லப்பிள்ளையாகவும் அதை இயக்கும் விசைகளிலொன்றாகவும் செயல்படும் அம்பானி போன்றவர்களும் அயல்நாட்டு முத்திரையோடு இறங்கியிருக்கும் ஆட்சியாளர்களின் போலிகளும் சில்லரை விற்பனையில் இறங்கி ஊர்ப்புறங்களில் நிலங்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் உள்ளூர் மக்களில் பணம் வைத்திருப்போர் வெளாண் தொழிலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதால் அவர்களது முனைப்புகளை முடக்கவும் பிற உள்ளூர்த் தொழில் துறையினர் வராமலும் வளராமலும் தடுக்கவுமே மோடி அரசின் இந்த நடவடிக்கை.

அரசின் வருமானத்தில் வருமான வரியின் பங்கு.
          படித்தவர்கள் உட்பட வருமான வரி குறித்து அனைவரும் கேட்கும் கேள்வி, வருமான வரியை ஒழித்துவிட்டால் தன் செலவுகளுக்கான வருவாயை அரசு எவ்வாறு பெறும் என்பது. உண்மையில் வருமான வரி வரவு அரசின் மொத்த வருவாயில் 5%ஐ என்றுமே  தாண்டியதில்லை என்பதே இதற்கு விடை. 1990களின் தொடக்கத்தில் நடுவரசின் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் மொத்த வருவாயில 5%ஆக மதிப்பிடப்பட்டிருந்த வருமான வரி இந்த ஆண்டு 15ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால் எந்த ஆண்டிலும் மதிப்பீட்டின் மூன்றிலொரு பங்குதான் தண்டப்பட்டுள்ளது. இதில் ஊழியர் சம்பளம், தேடுதல் வேட்டைகளுக்கான செலவுகள், துப்புக் கொடுப்போருக்கான தரகுத் தொகை ஆகியவற்றைக் கழிக்க வேண்டும். முன்னாள் பண அமைச்சர் ப.சிதம்பரம் முதல் இன்றைய அருண் சேட்லி வரை தங்கள் குறிக்கோள் வருமான வரித் தொகை அல்ல, ஒவ்வொரு குடிமகனும் வருமான வரி வட்டத்துக்குள் வர வேண்டும் என்பதே என்று கூறியுள்ளனர். அதாவது சராசரிக் குடிமகனின் பண வரவு – செலவுகள் ஆட்சியாளரின் கண்காணிப்பிலும் அதன் மூலம் அவனது பொருளியல் நடவடிக்கைகள் தங்கள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இந்தத் திசையில் மோடி அரசின் நடவடிக்கைகள் முந்திய அரசுகளின் நடவடிக்கையைப் போல் பன்மடங்கு விரைவுடனும் முனைப்புடனும் செயற்படுகின்றன. இதை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். நாட்டின் பொருளியல் நடவடிக்கைகளில் ஒவ்வொரு குடிமகனும் ஈடுபடும் உரிமை வேண்டும். அதுதான் அடிப்படையான மக்களாட்சியின் நோக்கமாக இருக்க முடியும்.

இன்றைய நிலையில் வருமான வரிக்கு விலக்களிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு கடந்த மூன்றாண்டுகளாகவே மாற்றமின்றி ஆண்டுக்கு உரூ.2,25,000/- (இரண்டேகால் இலக்கம்) ஆக இருக்கிறது. இது மாதத்துக்க உரூ.18750/-க்கும் நாளுக்கு உரூ.616/-க்கும் சமமாகும். அதாவது 4 உறுப்பினர்களுடன் வருவாய் ஈட்டும் ஒரே உறுப்பினர் கொண்ட கொத்தனாரின் கையாள் போன்ற கூலித்தொழிலாளியும் வருமான வரி செலுத்தும் நிலைக்குக் கொண்டு சேர்த்துள்ளது. மோடி அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு, எவ்வளவு உயர்த்தியிருக்கிறது பார்த்தீர்களா?

            வருமான வரியை ஒழித்து தொழில் தொடங்க உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஊராட்சி ஒன்றிய அளவில் விரிவாக்கி அறிவியல் – தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமம் வழங்கும் அலுவலகங்களை வட்டங்கள் அளவுக்கு அமைத்தால்தான் மோடி அடிக்கடி கூறும் உண்மையான வளர்ச்சி கைகூடும். வருமான வரியைப் போல் பல மடங்கு மறைமுக வரிகள் அரசின் கருவூலத்தில் கொட்டும். இன்றைய நிலை தொடர்ந்தால் அயல்நாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் ஆட்சியாளர்களும் அவர்களின் கூட்டாளிகளும் அயல்நாடுகளில் பதுக்கிவைத்து இங்கு நேரடி அயல் முதலீடு என்ற பெயரில் இறக்கும் கள்ளப்பணம்தான் இந்திய மக்களை ஆளும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இனிமேலாவது ஆட்சியாளர்கள் கைகாட்டும் திசைகளில் செம்மறி ஆட்டுக் கூட்டமாய் ஓடாமல் நின்று நினைத்து களத்திலிறங்கி இக்கயவாளிகளின் கொடுமைகளை எதிர்த்துப் போராட முன்வர வேண்டுமாய் அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

ஒழிப்போம் வருமான வரியை!
பாதுகாத்து வளர்ப்போம் உள்நாட்டு மூலதனத்தை!
தடுத்து நிறுத்துவோம் அயலிலிருந்து பாயும் கள்ளப்பணத்தை!
காண்போம் பொருளியல் வளர்ச்சியையும் மக்களின் நல்வாழ்வையும்!
                                                                     தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்,
                                                                                   மதுரை, பேசி: 9790652850

0 மறுமொழிகள்: