17.11.16

சிலப்பதிகாரப் புதையல் - 13 - மதுரைக் காண்டம் - காடுகாண் காதைசிலப்பதிகாரப் புதையல்
மதுரைக் காண்டம்
11. காடுகாண் காதை
         திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
5.      கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தி லரங்கத் தகன்பொழிலகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறையவிடத் தல்கின ரடங்கித்
10.    தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று
வைகறை யாமத்து வாரணங் கழிந்து
வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற
வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமரக் கானத் திருக்கை புக்குழி
15.    வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
20.    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
25.    பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
30.    தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்         
35.    நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரித் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
40.    திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
         விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
45.    மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பொலிந்து தோன்றிய
50.    பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்கட் டுள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
55.    கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின்
வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
தீத்திறம் புரிந்தோள் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
60.    கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனுலகம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
65.    நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்
70.    நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்
வலம்படக் கிடந்த வழிநீர் துணியின்
75.    அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும்
பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
நீர்தசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமுங் கடந்தால்
80.     ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும்
கொய்பூந் தினையுங் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
85.    தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்
அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்
அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
90.    கடம்பல கிடந்த காடுடன் கழிந்து
         திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோ
95.    டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
         விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
         முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
         புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
         விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
100.  பவகா ரணிபடிந் தாடுவி ராயிற்
         பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்
          இட்ட சித்தி எய்துவி ராயின்
          இட்ட சித்தி எய்துவிர் நீரே
         ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்
105.  ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது
         சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
         வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்
          நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
         பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
110.  கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்
         தொடிவளைத் தோளி யொருத்தி தோன்றி
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர் இவ்
115.  வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன
120.  ஒட்டுப் புதவமொன் றுண்டத னும்பர்        
         வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
இறுதியல் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்
உரையீ ராயினும் உறுகண செய்யேன்
125.  நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும்
உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
130.  ஒருமுறை யாக உளங்கொண் டோதி
         வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்
135.  உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன்
புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்
தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை
ன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்புடை மரபின்   மதுரைக் கேகுமின்
140.  காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்
         கந்நெறிப் படரீ ராயின் இடையது
         செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்
145.  நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி
         இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும்
          மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
          நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
          தாள்தொழு தகையேன் போகுவல் யானென
150.  மாமறை யோன்வாய் வழித்திறங் கேட்ட
         காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
நலம்புரி கொள்கை நான்மறை யாள
         பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை
         கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
155.  மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்
இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்
கியாவது முண்டோ எய்தா அரும்பொருள்
160.  காமுறு தெய்வங் கண்டடி பணிய
நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக்
குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்
165.  பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட்
         கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
170.  நீர்சைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக்
         கானுறை தெய்வம் காதலிற் சென்று
         நயந்த காதலின் நல்குவன் இவனென
         வயந்த மாலை வடிவில் தோன்றிக்
         கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
175.  அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
180.  மேலோ ராயினும் நூலோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
          பிணியெனக்  கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
185.  வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்
 தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
          துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
          மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
         திர்வழிப் பட்டோ ரெனக்காங் குரைப்பச்
190.  சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்
          பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
          மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ்
195.   ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக்
கோவலன்  நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
200.  எண்திறம் உரையா தேகென் றேகத்
         தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்தாங்கு
         அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத்
தீதியல் கானஞ் செலரி தென்று
205.  கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும்
மாதவத் தாட்டியும் மயங்கத ரழுவத்துக்
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய விருக்கை
ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
210.  மாரி வளம்பெறா வில்லேர் உழவர்
         கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
விழிதுநற் குமரி விண்ணோர் பாவை
215.  மையறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்.
பொழிப்புரை
மூன்று திங்களை அடுக்கி வைத்தது போன்ற அழகிய முக்குடையின் கீழ் சிவந்த கதிர்களை உடைய ஞாயிற்றின் ஒளியிலும் மிகுந்து விளங்கும் மாலையாக மலர்ந்து தொங்கும் அசோகின் அடர்த்தியான நிழலில் எழுந்தருளிய தன்னை விட முந்தி வேறொன்றுக்கும் இல்லாத தோற்றத்தை உடைய அருகதேவனைத் தொழுது, அதாவது அனைத்துக்கும் முந்திய தோற்றத்தை உடைய அருக தேவனைத் தொழுது

நிக்கந்தனுடைய பள்ளியிடத்திலுள்ள முனிவர் யாவருக்கும் ஆற்றிடைக் குறையாகிய அவ் விடத்தில்,தாவது திருவரங்கத்தில் உள்ள பரந்த சோலையிடத்து சாரணர் அருளிச் செய்த தகுதியமைந்த அறவுரையை கவுந்தியடிகளும் இனிமையுற மொழிந்து அன்று அம் முனிவர்கள் உறைவிடத்தில் தங்கி

தென்திசையை நோக்கிச் செல்ல விரும்பி உறையூரை வைகறை யாமத்தில் விட்டு நீங்கி கதிரவன் கிழக்குத் திசையிலே விளக்கமுற்றுத் தோன்ற நீர்வளம் மிக்க வயல்ளும் குளங்களும் பொலிவு பெற்ற இளமரக்காவிலுள்ள மண்டபத்தினுள் புகுந்தனர். அப்போது,

மன்னர் யாரினும் பெரிய தகையை உடையோனாகிய எம் மன்னன் வாழ்க, வருகின்ற     ஊழிகளில்  அவனே இவ் வுலகினைக் காப்பானாக,

அடியினைக் காணமுடியாத தனது ஆழமாகிய பெருமையினை அரசர்களுக்கு உணர்த்தி வடித்த வேலால் எறிந்த பெரிய பகையினைப் பொறுக்காது பஃறுளி ஆற்றுடனே பல பக்க மலைகளையுடைய குமரி மலையினையும் கொடிய கடல் கொண்டதனால் வடதிசையிலுள்ள கங்கை ஆற்றினையும் இமய மலையையும் கைக்கொண்டு தென்திசையை ஆண்ட தென்னவனாகிய பாண்டியன் வாழ்க,

திங்களின் மரபாகிய பாண்டியனுடை திருக்குலம் விளக்கமுற ஆயிரம் கண்ணினை உடைய இந்திரன் பூட்டிய வலிமையுள்ள ஆரத்தை பொலிவுற்று விளங்கிய தன் மார்பில் பூண்ட    பாண்டியன் வாழ்க,

தங்கள் தலைவனான இந்திரனின் தலையிலுள்ள மணிமுடியிலே உள்ள வளையைப் பாண்டியன் உடைத்தான் என்று இடியுடன் கூடிய பெருமழைகள் பெய்யாது போக, தப்பாத விளைச்சலையுடைய பெருவளம் சுரக்கும் வண்ணம் மழை நீரைக் கட்டி ஆண்ட மன்னன் வாழ்க என்று வாழ்த்தி வந்து தங்கியிருந்த குற்றமற்ற பெருமையினையினையுடைய சிறந்த முதிய அந்தணனை நோக்கி

உமது ஊர் யாது, இங்கு நீர் வந்ததற்குரிய காரணம் என்ன என்று கோவலன் கேட்டான்.
           
மிக்க சிறப்பினை உடைய அம் மறையோன்  தன் வரவின் பொருட்டை விளக்கினான்.

உயர்ந்த பொன்மலையின் மீது நீலமேகம் பக்கங்களில் விரிந்து அகலாது டிந்த தன்மையை ஒப்ப விரித்து எழுந்த ஆயிரம் தலைகளை உடைய அரிய வலிமை பெற்ற பாம்பணையாகிய பள்ளி மீது  பலரும் வணங்கிப் போற்ற அலைகள் விரியும் மிகப் பெரிய காவிரி ஆற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையோன் கிடந்த கோலத்தையும்

பெருகிவரும் அருவி நீரை உடைய வேங்கடம் எனப்படும் மிக உயர்ந்த மலையின் உச்சி மீதே இரு மருங்கிலும் விரிந்த கதிர்களை உடைய ஞாயிறும் திங்களும் விளங்கி உயர்ந்த இடைப்பட்ட நிலத்தே நல்ல நீல நிறத்தினை உடைய மேகம் மின்னலாகிய புது ஆடையை உடுத்து விளங்குகின்ற இந்திரவில்லாகிய பணியைப் பூண்டு நின்றது போல் பகைவரை வருத்தும் சக்கரத்தினையும் பால் போலும் வெளி சங்கினையும் அழகிய தாமரை போலும் கையில் ஏந்தி அழகு விளங்கும் ஆரத்தை மார்பில் பூண்டு பொன்னால் ஆன பூப்பதித்த ஆடையோடு விளங்கித் தோன்றிய சிவந்த திருக் கண்களை உடைய நெடியோன் நின்ற கோலத்தினையும்

கட்டுவாயாக என்று என் கண்கள் என் உள்ளத்தைத் தொந்தரவு செய்ததனால் இங்கு வந்தேன். குடகுமலையின் பக்கத்தில் உள்ள மாங்காடு எனும் ஊரில் உள்ளேன்.

பாண்டியனுடைய நாட்டின் சிறப்பையும் அவன் நடவடிக்கைகளையும் கண்கள் குளிரும் வகையில் கண்டேன் ஆதலால் அவனை நாவால் வாழ்த்தி வந்திருந்தேன். இதுவே என் வரவின் காரணமாகும் என்று முத்தீயில் தொழில் செய்வோனான மாறையவன் சொல்லக் கேட்டு,

அவனை நோக்கி பெரிய வேத முதல்வனே மதுரைச் செல்வதற்குச் சிறந்த வழியினைக் கூறுவாய் என்று கேட்ட கோவலனுக்கு அவன் விடை கூறத் தொடங்கினான்.

கோத்தொழிலாளர்களாகிய அரசூழியர்களோடு கொற்றவனாகிய அரசன் முரண்பட்டதனால் அரசியல் இழந்த அதாவது அராசகம் நிலவும் அகன்ற நிலத்தைப் போல வேனிலாகிய அரசுழியர்களோடு கதிரவன் ஆகிய வேந்தன் நலன் வேறுபடுதலால் தனது இயற்கை கெட்டு முல்லை, குறிஞ்சி எனும் இரு நிலப் பிரிவுகளும் தமது நல்ல இயல்புகளை இழந்து தம்மைச் சேர்ந்தோரை நடுங்கும் வண்ணம் துன்பத்தை அளித்த பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும் இக் காலத்தில் இக் காரிகையோடு இங்கு வந்தீர்கள்.

கற்பாறையும் சிறுமலையும் அரிய வழிகளின்(கொடிவழிகளின்) கலப்பும் நிறைந்த, நீருக்கு வேலியாக உள்ள ஏரிக்கரையும் ஆகிய இவை ஒன்று மாற்றி ஒன்று கிடக்கும் மிக நீண்ட இந்தப் பாதையை முயன்று கடந்து சென்று

கொடும்பாளூரிலுள்ள நெடுங்குளத்தின் கரையில் புகுந்தால் தலை மீது பிறையை பூங்கொத்தாகச் சூடிய பெரியோனாகிய இறைவன் ஏந்திய முக்கூறாக அறுக்கப்பட்ட சூலம் போன்று மூன்று வழிகள் பிரியும்.

அங்ஙனம் பிரியும் வழிகளில் வலப்பக்கத்தில் செல்லும் வழியில் நீங்கள் போகத் துணிவீராயின்,

விரிந்த தலையினை உடைய வெண்கடம்பும் காய்ந்த தலையினை உடைய மாமரமும் பொரிந்த தண்டினை உடைய வாகையும் தண்டிலுள்ள புல்காய்ந்த மூங்கிலும் வரிகளையுடைய கற்றாழை(மரல்) நீரின்மையால் சுருங்கிக் கரிந்து கிடக்கும் இடங்களும் நீர்தவித்து அவ் வேட்கையால் மான்கள் நின்று ஒலியெழுப்பும் காடும் எயினர் ஊரை அடுத்த வழியுமாய் உள்ளன. இவற்றைக் கடந்து சென்றால் மலைச் சாரலில் விளையும் ஐவனமாகிய வெண்மையான மலை நெல்லும் இலை அற்ற கணுக்களை உடைய  கரும்பும் கொய்யும் பருவத்தினையுடைய பொலிந்து காணும் தினையும் செழுமையான புனத்தில் விளைந்த வரகும் வெள்ளாங்காயம், ஈராங்காயம் எனப்படும் வெள்ளுள்ளியாகிய வெள்ளைப் பூண்டும் ஈருள்ளியாகிய வெங்காயமும் மஞ்சளும் அழகிய கொடியினையுடைய கவலைக் கிழங்கும் வாழையும் கமுகும் தாழ்ந்த குலையினை உடைய தெங்கும் மாவும் பலாவும் ஆகியவை ஒன்றினை அடுத்து ஒன்று சூழப்பெற்று உயர்ந்த பாண்டியனுடைய சிறுமலை திகழ்ந்து தோன்றும். அம் மலைக்கு வலப்பக்கத்து வழியாலே மதுரைக்குச் செல்லலாம்.

அந்த வலப்பக்கத்து வழியால் செல்லவில்லை என்றால் இடப்பக்கத்தே, சிறகினையுடைய வண்டுகள் செவ்வழிப் பண்ணைப் போல் பாடுகின்ற குளங்களோடும் தாழ்ந்த வயல்களோடும் குளிர்ந்த பூஞ்சோலையோடும் பாலை வழிகள் பலவும் இடையில் கிடக்கும் காட்டுவழியையும் கடந்து அழகர் திருமலைக்குச் செல்வீராயின் அங்கே மிகுந்த மயக்கத்தினைக் கொடுக்கும் பிலம் ஒன்று உண்டு.

அப்பிலத்தினுள்ளே,

தேவர்கள் போற்றி வணங்கும் வியக்கத்தக்க மரபினையுடைய புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்ற பெயரையுடைய புகழ்பெற்ற இடையறா சிறப்பினை உடையனவாய் மூன்று   பொய்கைகள் உள்ளன.

அவற்றுள்,

புண்ணிய சரவணம் என்ற பொய்கையில் ஆடுவீராயின் விண்ணவர் தலைவனான இந்திரன் இயற்றிய ஐந்திரம் எனும் உயர்ந்த நூலை அடைவீர்,

பவகாரிணி என்னும் பொய்கையில் மூழ்கி ஆடுவீராயின் இப் பிறப்புக்குக் காரணமான முற்பிறவியினை உணர்வீர்கள்

இட்ட சித்தி எனப்படும் பொய்கையினுள் மூழ்குவீராயின் உங்கள் உள்ளத்துள் எண்ணிய எல்லாம் நீங்கள் அடைவீர்கள்.

அங்கே அந்தப் பிலத்தினுள் நுழைய வேண்டுமென்று விரும்பினீர்களாயின்,

மிக உயர்ந்து நிற்கும் அம் மலையின் மீது எழுந்தருளியிருக்கும் மேலோனான திருமாலை வணங்கி உள்ளத்தில் அவனது சிவந்த திருவடிகளின் அழகை எண்ணி வணங்குதலோடு மலையை மூன்று முறை வலம் வந்தால்,

நிலத்தைப் பிளக்கும் வகையில் ஆழமுள்ள சிலம்பாற்றின் அகன்ற கரையில் மணமுள்ள மலர்கள் விரிந்த கோங்க மரத்தின் கீழ்ப் பொற்கொடி போன்ற ஒளியினையும் மேகத்தைப் போன்ற ஐங்கூந்தலினையும் உடைய  வளையல் அணிந்த தோளினை உடைய ஓர் மாது வெளிப்படுவாள்.

இப் பிறப்பிற்கு இன்பமும் மறுபிறப்புக்கு இன்பமும் இம்மையும் மறுமையும் என்ற இரண்டும் இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையில் நிலைத்திருப்பதுவும் ஆகிய பொருள்களைப் பற்றி சொல்லுங்கள், நான் இம் மலையடியில் வாழ்பவள், என் பெயர் வரோத்தமை, இம் மூன்று உண்மைகளையும் உரைத்தோருக்கு நான் எத் தொழிலுக்கும் உரியவள். உரைத்தீர்களாயின் இப் பிலத்தின் கதவைத் திறந்து விடுவேன் என்பாள்.

நாம் அவள் கேட்ட கேள்விக்கான விடையைச் சரியாகக் கூறினால் அவள் காட்டும் நல்ல வழி செல்லும் நீண்ட  இடைகழியில் பல கதவுகள் உள்ளன. அவற்றைக் கடந்து சென்றால் இரட்டைக் கதவுடைய வாயில் ஒன்று உள்ளது. அதன் மீது சித்திரப் பூங்கொடி போன்ற பெண் ஒருத்தி தோன்றி முடிவில்லாத இன்பது யாது என்பதனை இவ்விடத்தில் எனக்கு உரைத்தால் நீங்கள் விரும்பிய பொருளை அடையலாம்.

நான் கேட்டதற்கு நீங்கள் விடை கூறவில்லை என்றாலும் நான் தீங்கு எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் செல்ல வேண்டிய பாதையில் நான் திருப்பி விட்டு விடுவேன் என்பாள்.

அவ்வாறு கேட்ட கேள்விக்கு விடை கூறியவர்களை முன்பு கூறிய மூன்று பொய்கைகளின் கரைகளைக் காட்டி அகல்வாள்.

அரிய வேதத்தில் உள்ளதாகிய ஐந்தெழுத்தாகவும் எட்டெழுத்தாகவும் வரும் இரண்டு மந்திரங்களையும் ஒரு முறையாக மனத்தில் கொண்டு வாயால் ஓதி நீங்கள் விரும்பிய ஒரு பொய்கையில் நீங்கள் ஆடினால் வேறெதுவும் அதற்கிணையான பயனைத் தரா.

இதைப் பற்றி எல்லாம் நினையாது மலை மீது நின்றோனாகிய திருமாலின் பொன்னாலான தாமரை போன்ற அடிகளின் மீது உள்ளத்தைப் பொருந்தச் செய்யுங்கள். அவ்வாறு செய்வீர்களாயின் அத் திருமாலின் கலுழன் எழுதிய அழகிய நீண்ட கொடிமரம் பொருந்திய கோயில் புலப்படும். அவ்வாறு புலப்பட்ட அளவிலே அவனுடைய இணைந்த மலர்போலும் இரண்டு திருவடிகளும் உங்களை ஏற்றுக்கொண்டு உங்கள் துன்பங்களைத் தீர்த்து வைக்கும்.

அவ்வாறு துன்பம் திர்ந்ததால் இன்பமுற்று பெருமையான மரபுடைய மதுரை நகர்க்குச் செல்லுங்கள்.

கண்கூடாகத் தோன்றும் பிலத்தின் தன்மை இத்தகையது.
       
இவ் விருவகைப்பட்ட வழிகளையும் விரும்பவில்லையாயின் இரண்டுக்கும் இடையிலுள்ளது செம்மையான பாதையாகும். அதில் தேன் ழுகும் சோலை சூழ்ந்த ஊர்களின் இடையிடையே காடுகள் பலவற்றைக் கடந்து சென்றால் அவ் வழியின் இடையில், மிகுந்த துன்பத்தைத் தரும் தெய்வம் ஒன்று உள்ளது. நடுங்க வைக்கும் உருவம் எதுவும் இன்றி இனிய வடிவில் தோன்றி செல்வோருக்கு துன்பம் செய்யாது தடுக்கும். அதனைத் தப்பி வந்தால் மதுரைச் சென்று சேரலாம். நீங்கள் செல்லுங்கள், நெடிய உலகைத் தாவி அளந்த நெடுமுடி அண்ணலாகிய திருமாலின் திருவடிகளை வணங்கும் நோக்கத்தை உடையவனாதலால் நானும் செல்கிறேன் என்று கூறினான்.

பெருமை பொருந்திய அம் மறையோன் வாயால் செல்ல வேண்டிய பாதையின் தன்மைகளைக் கேட்ட கவுந்தி அன்னை பொருளுரை ஒன்று கூறினார்:

நல்லொழுக்கத்தினைப் பின்பற்றும் நான்மறை வல்லோனே நீ கூறிய பிலத்தினுள் நுழைய வேண்டிய தேவை எமக்கு இல்லை. கற்காலத்தில் (ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்) இந்திரன் இயற்றிய இலக்கணத்தை மெய்ப்பாட்டியற்கையாகிய அருக தேவனின் பரமாகமத்தில் தோன்றக் காணலாம். கழிந்த பிறப்புகளில் நிகழ்ந்த எல்லாவற்றையும் இப் பிறவியிலேயே காண்பதில்லையா? உண்மையான வழிகளிலிருந்தும் பிசகாது பிற உயிர்களைப் பேணுவோர் அடையக் கூடாத அரும் பொருள் ஏதாவது உண்டா? நீ விரும்பும் தெய்வமாகிய திருமாலைக் கண்டு அவன் திருவடிகளில் வழிபட நீ செல்வாய். நாங்கள் எங்களது நீண்ட பாதையில் செல்வோம் என அந்த மறையோனுக்குப் பொருந்தும் இசைவான சொற்களைக் கூறி குறிக்கோளில் குன்றாத கோவலனுடனும் கண்ணகியுடனும் அன்றைய பகலில் ஓர் சிறந்த ஊரில் தங்கினார்.

தொடர்ந்தும் அப் பாதையில் செல்லும் போது மறுநாள் கரிய கண்ணினையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளும் வழிச் செல்லும் வருத்தத்தில் பாதை ஓரத்தில் இருக்க முன்னர்க் கூறிய இடையில் கிடக்கும் வழியின் பக்கத்தில் உள்ள ஒரு கிளை வழியில் சென்று ஒரு பொய்கைக் கரையிலே உள்ள துறையில் நீர் அருந்துவதற்காகக் கோவலன் நின்றான்.

அப்போது முன்பு மறையோன் கூறிய காட்டில் வாழும் தெய்வம் அவனிடம் விரும்பிச் சென்று மாதவியிடம் விருப்பமுள்ள காதலினால் இவன் வசப்படுவான் என்று கருதி மாதவியின்  தோழியாகிய வசந்தமாலையின் வடிவில் தோன்றி பூங்கொடி நடுக்கமுற்றது போல அங்கேயே அவன் காலில் வீழ்ந்து நிறைய கண்ணீர் சொரிந்தாள்.

மணம் வீசும் மாலையில் நான் எழுதிய செய்திகளில் தவறுதல் இல்லை, நீதான் தவறான சொற்களைக் கூறியிருக்கிறாய், அதனால்தான் கோவலன் எனக்குக் கொடுமை செய்தான் என்று கூறி மயங்கி விழுந்து மாதவி மிக்க துயரத்தை அடைந்தாள்,

உயர்ந்த மனிதர்களும் கற்றறிந்தோரும் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் திறனுள்ளோரும் கேடுதரும் நோய் எனக் கருதி புறக்கணித்து ஒதுங்கும் கணிகையரது வாழ்கை மிக இழிவானது என்று கூறி சிவந்த வரி படர்ந்த செழுமையான கடையினை உடைய குளிர்ந்த கண்களால் வெண்முத்துகள் போலும் நீரைச் சொரிந்து வெண்மையான நிலவைப் போலத் தோன்றும் முத்துக்களை உடைய  ஒற்றை வடத்தைத் தன் கையால் அறுத்து எறிந்து வெகுண்டு என்னையும் கைவிட்டாள். ஆகையால் நீங்கள் மதுரை  என்னும் பழம்பதி நோக்கிச் சென்றதை வழியில் எதிரிலே வந்தவர் எனக்குத் சொல்லக் கேட்டு வாணிகச் சாத்தோடு வந்து தனிமையால் துன்புற்று இங்கு வந்து சேர்ந்தேன். குறைவில்லாத பண்பினை உடைய தாங்கள் எனக்கிடு்ம் கட்டளை யாது என்று கேட்டாள்.

இந்தக் கடுங்காட்டில் அறிவை மயங்க வைக்கும் தெய்வம் உண்டென்று வியக்கத்தக்க அவ் வேதியன் கூறியிருந்தான்.

ஆதலால் வஞ்சனையைப் போக்கும் மந்திரத்தால் ஐவகைப்பட்ட கூந்தலை உடைய இவளது உண்மையை அறிவோம் என்று எண்ணி கோவலன் ஓதிய மந்திரம் பாய்ந்து செல்லும் கலையாகிய அரிமாவை ஊர்தியாகவுடைய கொற்றவையின் மந்திரமாதலின், நான் வனத்தின் உள்ளே திரிபவள், உனக்கு குழப்பம் ஏற்படுத்த எண்ணினேன். கான மயில் போலும் மென்மையை உடைய கண்ணகிக்கும் தவநெறியில் நிற்கும் கவுந்தி அடிகளுக்கும் என் நடத்தையைக் கூறாமல் சென்றுவா என்று தானும் சென்றுவிட்டாள்.

தாமரையின் பசும் இலையில் தண்ணீரைக் கொண்டுவந்து கோவலன் அங்கே சோர்ந்து அமர்ந்திருந்த கண்ணகியின் அரும் துன்பத்தினைப் போக்கினான்.

            குரவமும் வெண்கடம்பும் கோங்கும் வேங்கையும் கலந்து நிற்கும் பொலிவுடைய சோலை சூழ்ந்து விளங்கிய இடத்தில் அரிய இடங்களின் இடைப்பட்ட வழிகளில் செல்வோர் தவிர்த்து மழையினால் கிடைக்கும் வளத்தினைப் பெற முடியாத, வில்லாகிய  ரினை உடைய  மறவர்கள் கூற்றத்தினை ஒத்த வலிமையுடன் வளைந்த வில்லைக் கையிலேந்தி பகைவர் முனையிடம் செல்லும் போது அவர்களுக்கு நல்ல வெற்றியைக் கொடுத்து அதற்கு விலையாக மிக்க ஆண்மைத் தன்மையை உடைய காணிக்கையை எதிர்பார்க்கும் நெற்றியில் கண்ணை உடைய குமரியும் தேவர் போற்றும் பாவையும் குற்றமற்ற சிறப்பினையுடைய வான நாட்டை உடையவளுமாகிய கொற்றவையின் கோயிலைச் சென்றடைந்தனர்.

இந்தக் காதையிலுள்ள சிறப்புகள்

1.   சமணச் சாரணர், முனிவர் போன்ற வரிசையில் சாரணர் கூறிய அறவுரைகளை துறவியாராகிய கவுந்தி அடிகள் கடவுளர் எனப்படும் தவர்த்தோர்க்குக் கூறுகிறார்.
2.   கந்தன் என்று நிக்கந்தனாகிய, அம்மணனாகிய அருக தேவனைக் குறிப்பிடுகிறார். ஆடையின்றி தாழ்ச் சீலையூடன் குறிய(குறுகிய)முண்டு[1]டன் - கோவணத்துடன் நிற்பவனாக வடிவம் பெற்றிருப்பவனும் ஆண்டி என்று கூறப்படுபவனாகிய பழனி ஆண்டியே நிக்கந்தன் என்று சமணத்தில் வணங்கப்படும் அருகதேவன் என்று கூறலாம். ஆதியில் தோற்றத்து அருகன் என்பது தொடக்கத்தைத் தடம் பிடிக்க முடியாத என்றும் கூறலாம். அம்மணமாக இருப்பதனால் மனித நாகரிக வளர்ச்சிக் கட்டங்களில் எல்லாவற்றுக்கும் முந்தியதாகிய ஆடையில்லா நிலையை என்றும் கூறலாம். முகம்மது நபி பருவ காலங்களைத் தடம் பிடிக்கும் புதிய ஆண்டுமுறைகள் இருந்தும் பிறரெல்லாம் குப்பையில் வீசி எறிந்து காலங்கடந்துபோன மூன்றாம் பிறையிலிருந்து மாதத் தொடக்கத்தைத் தடம் பிடிக்கும் ஆண்டுமுறையைக் குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்து அரியணையில் அமர்த்தியது போல மனித இனமே கைவிட்டுவிட்ட அம்மண நிலையைத் தேர்ந்தெடுத்து மத அடையாளம் ஆக்கியுள்ளதையும் இது குறிப்பதாகக் கொள்ளலாம். நம் மக்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு வல்லரசியத்தின் போட்டியை எதிர்கொண்டுவிடாமல் இன்றும் தாழ்ச்சிலையுடன் (கோவணத்துடன்) தொழில் செய்யும் மக்களைப் படம் பிடித்து இணைய வெளிகளிகளிலும் முகநூலிலும் பதிவிட்டுப் பெருமைப்படுத்தி வல்லரசியத்துக்குப் பணியாற்றுவது போன்றதுதான் அன்றும் தமிழகத்தில் அம்மண சமயத்தின் பணி இருந்தது.
3.   கடலை எளிதாக எண்ணி தமிழ்வேந்தர் அதைக் கலக்கித் திரிய அது அளவிட முடியாத ஆழத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டுமென்று நிலத்தை விழுங்கிற்று என்று கூறுவதன் மூலம் தமிழர்கள் கடல் மீது செலுத்திய ஆட்சியை நயமாக மாங்காட்டு மறையோன் வாய்மொழியாக வெளிப்படுத்துகிறார். வடிவேல் எறிந்த வான்பகை பொறாது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் கடல்வழி வாணிகமும் போர்களும் செய்தனர் பாண்டிய மன்னர்கள் என்பது பெறப்படுகிறது.
4.   குமரிக் கண்டத்தை கடல் கொண்ட போது குமரி மலையும் பஃறுளி ஆற்றையும் கடல் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்பது உரையாசிரியர்கள் கூற்றுக்குப் பொருந்தி வருவதையும் காண முடிகிறது. பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடு, மலைகளின் பல அடுக்குகளைக் கொண்ட குமரி மலை உச்சி(கோடு) என்று தெளிவாகவே அடிகள் கூறியிருக்க கோடு என்ற சொல்லைத் தனிமைப்படுத்தி அச் சொல்லின் பல பொருள்களில் ஒன்றான ஆற்றங்கரை என்ற பொருளை வைத்து குமரியாற்றின் கரை என்று யார் யாரோ கூறியவற்றை திரு.சு.கி.செயகரன் என்பார் காட்டி இந்த குமரிக்கோடு ஆற்றின்கரையையே குறிப்பிடுவதாகக் கூறுகிறார்(பார்க்க, குமரி நிலநீட்சி, காலச்சுவடு பதிப்பகம், 2002,பக்.135). ஆனால் அடிகள், குமரிக் கோட்டையும் பஃறுளி ஆற்றையும் தனித்தனியாகக் குறிப்பிட்டுள்ளதுடன் அவற்றுக்கு ஈடாக இமயம் என்ற ஒரு மலையையும் கங்கை என்ற ஆற்றையும் பாண்டியன் கைப்பற்றியதாகவும் தெளிவாகக் கூறுகிறார்.
மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவுன்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்  
      என்பது இன்னொரு கடற்கோள் பற்றிய பதிவாகும். அதற்கு விளக்கமாக, “அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் வாழ்வானாக என அடியார்க்குநல்லார் உரைப்பார் என்று வேங்கடசாமியார் காட்டியுள்ளது இதற்கே பொருந்தும். உரையாசிரியர்கள் குழம்பியுள்ளனர் என்பது தெளிவு. இரண்டு கடற்கோள் பற்றிய செய்திக்கு முறையே இவ்விரண்டு பதிவுகளும் பொருந்திவருவதைப் பார்க்கலாம்.
      
5.   இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் நடைபெற்ற போரில் இந்திரன் தன் மாலையை பாண்டியனிடம் பறிகொடுத்தான். அது பாண்டியனின் மார்பில் இடம் பிடித்தது என்ற செய்தியையும் தருகிறார். தொன்மர்கள் இது பற்றிக் கூறுவது, போர்களின் போது இந்திரன் தன் மாலையை எதிரியின் கழுத்தில் வீசி எறிவான், அதன் பாரம் தாங்க முடியாமல் எதிரி வீழ்ந்துவிடுவான் என்பதாகும். அதைத் தாங்கி நின்றான் பாண்டியன் என்றும் கூறுவார்கள்.
     
      முடியில் உள்ள உறுப்புகளில் ஒன்று கிம்புரி எனும் வளை. முடியின் ஐந்து உறுப்புகளாக திவாகர நிகண்டு தரும்
                        1.தாமம்,
                        2.முகுடம்,
                        3.பதுமம்,
4.கோடகம்,
5.கிம்புரி
ஆகியவற்றின் பட்டியலையும் தருகிறார்.

      அரசர்களின் தலையில் அணியும் முடி என்ற சொல்லே ஓர் அரிய செய்தியைத் தருகிறது. தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலில் நாகர்கள் தங்கள் தலையில் அரசர் ஐந்தும் இளவரசர்களும் அரசிகளும் மூன்றும் குடிமக்கள் ஒன்றும் தலைகொண்ட நாக அணிகளை அணிந்திருந்தனர் என்று கூறுகிறார். அதன் தொடர்ச்சிதான் மலையாளிகளின் முன்குடுமி என்று தோன்றுகிறது. முன்குடுமிச் சோழியர் என்ற தமிழ்ச் சாதியினரும் உள்ளனர். முன் குடுமி ஒரு காலத்தில் குடித் தலைமையின் அடையாளமாக இருந்திருக்கலாம். குடுமி முடிதானே! எனவே அரசன் என்ற பதவி உருவான போது தங்கத்தால் செய்யப்பட்ட தலையணியை உருவாக்கி அதற்கு மணிமுடி என்ற பெயர் சூட்டியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.
             
6.   குமரிக் கண்டம் முழுகியதால் புதிய இடத்துக்குப் பெயர்ந்த பாண்டியர்கள் அங்கு மழைவளம் குறைந்திருந்தால் ஆறுகளிலுள்ள மழை நீரைத் திருப்பியும் குளங்களை அமைத்துத் தேக்கியும் தங்கள் நிலவளத்தைப் பாதுகாத்தனர் என்ற உண்மையை மழை பிணித்தாண்ட என்ற சொல் மூலம் தருகிறார் அடிகள். மழை பிணித்தல் என்பது மழை நீரைக் கட்டித் தேக்கிவைத்தல் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆனால் உரையாசிரியர்கள் தொன்மக் குட்டையில் விழுந்து குழப்பியுள்ளனர். திருக்குறள் கடவுள் வாழ்த்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் முதல் அதிகாரமான வான்சிறப்பு எதைக் குறிக்கிறது? இன்றைய தமிழகத்தின் நிலக்கிடக்கையில் மழையின் அருமையை, அது நாம் நினைத்த நேரத்திலெல்லாம் பெய்யாது என்பதுடன் அதன் இன்றி அமையாமையையும் விளக்கி அது தரும் நீரை வீணாக்கக் கூடாது என்பதைத்தானே மறைமுகமாகச் சுட்டுகிறது. இந்த உண்மையை அன்றைய பாண்டிய மன்னர்கள் கண்டு வானமாரி(மானாவாரி) குளங்களையும் நீரோடைகளைத் திருப்பி அவற்றின் குறுக்கேயும் குளங்களை  அமைத்த செய்தியை இவ் வரி மூலம் அடிகள் நமக்குச் சொல்லுகிறார். ஒரு நிலப் பரப்பில் கிடைக்கும் மொத்த மழைநீர் போதுமாயிருந்து ஆனால் நீர் தேவைப்படும் காலங்களில் பெய்யும் மழை போதாததாயிருந்தால் மழை பெய்யும் காலங்களில் கிடைக்கும் மிகுதியை நீர்நிலைகளில் தேக்கிவைத்து மழைப் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்துவதை தேக்கப் பாசனம் என்று கூறுவர். உலகில் மிக அடர்த்தியாகக் குளங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழகமே. அதற்கு அடுத்து வருவது எகிப்து. குளக்கரைகளை அமைப்பதில் எகிப்தில் கடைப்பிடிக்கும் உத்தியை விட தமிழக உத்தி, அதாவது கரையின் வெளிப்பக்கச் சாய்வை உள்பக்கத்துச் சாய்வை விட மென்மையாக வைப்பது சிறந்தது என்பது பாசன வல்லுநர்களின் முடிவு. பயிர்களுக்குத் தேவைப்படும் நீர் மொத்த மழைப்பொழிவால் நிறைவு செய்ய முடியாத போது தொலைவிலுள்ள ஆற்றிலிருந்து நீரை வாய்க்கால் மூலம் திருப்புவது பாய்தல் பாசனம் எனப்படும். தமிழர்களின் பழந்தெய்வமான பலதேவன் கலப்பையான தன் ஆயுதத்தால் யமுனையாற்றைத் தன் பக்கம் திருப்பினான் என்பது பாய்தல் பாசனத்தின் தோற்றத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இன்று நம்மை ஆள்பவர்கள் இந்த இரு பாசன முறைகளின் அடிப்படைகளைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் உத்திரத்தை உடைத்து அடுப்பெரித்துக்கொண்டிருக்கிறார்கள். குளஙங்ளைத் தூர்த்து அரசு அலுவலகங்களையும் பல்வேறு துறை அலுவலர்களுக்காகவும் சேரி மாற்று என்றும் வீடமைப்புத் துறையைக் கொண்டும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள். அவர்களோடு சேர்ந்தும் போட்டியாகவும் பொதுமைக் கட்சித் ‘தோழர்’களும் குளங்களும் வாய்க்கால்களும் ஆன பாசனப் புறம்போக்குகளைப் பட்டயம்(பட்டா) போட்டு அழிக்க படாதபாடுபட்டு இதைவிடாத முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தையும் அதன் நீர் வளத்தையும் வேளாண்மையையும் அழிக்கவென்று பல முனைகளிலும் முனைந்து நிற்கும் இவர்களின் பின்னணியிலுள்ளவர் யார்?  
 
7.   கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே திருவரங்கமாகிய காவிரி ஆற்றிடைகுறையில் திருமாலின் கிடந்த படிமத்துடன் கோயில் இருந்தது என்பதற்கு அது பற்றிய அடிகளாரின் விளக்கம் தெளிவாகவே உள்ளது.

      21-02-2007 தினமணியில் கங்கை - காவிரி இணைப்பு - பலிக்குமா பாரதியின் கனவு? என்ற தலைப்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தொலையுணர்வு மைய இயக்குனர் திரு. இராமசாமி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் தந்துள்ள விந்தையான செய்தி, கொள்ளிடம் ஆற்றின் இன்றைய தடம் சுமார் 750 ஆண்டுகளுக்கு முற்பட்டதுதானாம். இவர்களின் காலக் கணிப்பு நாசமாகப் போக. சிலப்பதிகாரக் காலத்திலேயே கூறப்படும் திருவரங்கமும்(அரங்கம் = ஆற்றிடைக்குறை, இரண்டு ஆற்றுப்பிரிவுகளுக்கிடையே உள்ள இடம்) அதில் பள்ளிகொண்ட பெருமாளும் கி.பி. சுமார் 1257 ஆம் ஆண்டுக்கு முன் அங்கு இல்லையாம்.

      கல்லணை வரலாற்றை அறிந்திருந்தால் கட்டுரையாளர் இவ்வாறு எழுதியிருப்பாரோ என்னவோ? (தம் அறியாமையும் பிறர் அறியாமையும்தாமே அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மூலதனமே என்கிறீர்களா?)

      கரிகாலன் காலத்தில் இன்றைய கொள்ளிடமே காவிரியாறாக இருந்திருக்கிறது. திருவரங்கத்துக்க மேற்கிலிருக்கும் வாய்த்தலை என்னுமிடத்தில் அது இரண்டாகப் பிரிந்து ஒரு தடம் தெற்கில் முதன்மை ஆற்றுக்கு இணையாகச் சென்று கோயிலடி என்னுமிடத்திற்குக் கிழக்கே மீண்டும் வடக்கு நோக்கித்திரும்பி முதன்மை ஆற்றோடு கலந்திருக்கிறது. வாய்த்தலைக்குத் தெற்கில் ஆற்றுச் சாய்வு குறைவாக இருந்து அதனால் ஆற்றின் அகலம் மிகுந்து நடுவில் மண்குதிர்கள் தோன்றி அவற்றில் காடு வளர்ந்து அது விரிவடைந்து ஆற்றிடைக்குறையாகிய அரங்கம் உருவாகி அதனால்தான் இந்தப் பிரிவினை உருவாகியிருக்க வேண்டும். இந்நிலையில் கோயிலடிக்குக் கிழக்கில் மூல ஆறு நோக்கிக் கிளை திரும்பும் இடத்தின் வலது புறத்தில், அதாவது தெற்குக் கரையில் உடைத்துக்கொண்டு அன்றைய புன்செய் அல்லது தரிசு நிலங்களை அவ்வப்போது அழித்து வந்திருக்கிறது. இவ்வாறு ஒரு புதிய ஆற்றுத்தடத்தையும் இந்த வெள்ளங்கள் காட்டியுள்ளன. எனவே கிளையாறு மூல ஆற்றை நோக்கித் திரும்பும் இடத்தில் கிளையாற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்டி கூடுதல் தண்ணீரைப் புதிய தடத்தில் திருப்பி இன்றைய காவிரியை உருவாக்கினான் கரிகாலன். பழைய காவிரியாகிய இன்றைய கொள்ளிடத்தை நோக்கிப் பாயும் பழைய காவிரியின் தெற்குக் கிளை, அதாவது இன்றைய காவிரி இந்த அணைக்குக் கீழே உள்ளாறு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. புதிய தடத்தில் ஓடிய ஆறு தான் ஒடிய வழியில் விரிந்து சென்றதைக் கரைகள் அமைத்துக் கட்டுப்படுத்தவே இலங்கை மீது படையெடுத்து 12,000 பேரை வீரர்களும் மக்களுமாகப் பிடித்து வந்தான் கரிகாலன். புதிய ஆறு பாய்ந்த பகுதிகளில் நன்செய் வேளாண்மை செய்ய முனைந்த போது புன்செய் நிலங்களில் வாழ்ந்த பனையேறிகளும் தரிசில் ஆடு மேய்த்து வந்த குறும்பர்களும் எதிர்த்திருக்கிறார்கள். பனையேறிகளின் எதிர்ப்பு நாடார்களின் வரலாற்றிலும் குறும்பர்களின் எதிர்ப்பு கழக இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளன.

கல்லணையைக் கட்டுரையாசிரியர் பார்த்திருப்பார் என்பதில் ஐயமில்லை, ஏனென்றால் திருச்சி வட்டாரத்திலுள்ள கல்வி நிலையங்களில் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் கைக்கெட்டிய தொலைவில் இருப்பது கல்லணைதானே! ஒருவேளை அவர் காவிரி, வெண்ணாறு ஆகியவற்றுக்குத் குறுக்கே உள்ள முறைப்படுத்தி(Regulator)களைப் பார்த்துவிட்டு அதைத்தான் கரிகாலன் கட்டியது என்று கருதிவிட்டாரா? அல்லது நமது பல்கலைக் கழகங்கள், ஐராவதம் மகாதேவன் ஆகியோர் வழியில் நின்று கரிகாலனே இன்றிலிருந்து 750 ஆண்டுகளுக்கு உட்பட்டுத்தான் வாழ்ந்தான் என்று கருதிவிட்டாரோ?

      இன்று காவிரி,  வெண்ணாறு ஆகியவற்றின் குறுக்கேயும் காவிரி ஆற்றின் இடது கரையில் உள்ளாறு முகப்பிலும் உள்ள சீப்பு பொருத்திய முறைப்படுத்திகளைக் கட்டியவர்கள் வெள்ளைக்காரர்கள் என்பதைக் கட்டுரை ஆசிரியர் அறிவாராக. பொதுப்பணித் துறையில் ஆறிவியலார் (Scientist) குமாரசாமி என்று மதிப்புணர்வோடு அறியப்படுகிற பொறியாளர் எழுதிய கல்லணை பற்றிய வரலாற்றுக் குறிப்பை (Monograph) பார்த்தால் அது பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

      கரிகாலன் காலத்துக்குப் பின் காவிரியில் சிறுகச் சிறுக மணல் சேர்ந்து மேடுதட்டி தண்ணீர் கொள்ளிட முகப்பிலேயே திரும்பிவிட்டது. அதை நிறுத்த தலையணையைக் கட்டினர் ஆங்கிலர்கள். அதன் விளைவாகக் காவிரியில் வெள்ளங்கள் ஏற்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் தீர்வாகத் தலையணையிலும் கல்லணையிலும் முறைப்படுத்திகள் கட்டப்பட்டு இன்றைய வடிவம் பெற்றன. காவிரி - மேட்டுர் திட்டத்தின்படி அமைந்த கல்லணைக் கால்வாயின் தலைமதகு காவிரியின் வலது புறத்தில் பின்னால் சேர்க்கப்பட்டது.

      கட்டுரையின் அடிப்படைக் கரு ஆறுகளை இணைத்தல். காவிரி நீரை மதுரை இராமநாதபுரம் மாவட்டம் வரை, அதாவது வையையாறு தாண்டி நெல்லை மாவட்டத்து மணிமுத்தாறு வரை தண்ணீர் கொண்டு வரலாம் என்பதுதான். உள்ள தண்ணீருக்கே பெப்பே காட்டிவிட்டது நடுவர் மன்றம் மாவீரன் பழ. நெடுமாறன் புண்ணியத்திலே. காவிரி உழவர்கள் உச்ச நய மன்றத்தில் போட்ட வழக்கை தமிழீனத் தலைவர் தன் மீதுள்ள ஊழல் வழக்குகளைத் தவிர்ப்பதற்காகத் திரும்ப வாங்க வைத்தார். அடுத்து போராட அணிதிரண்டுகொண்டிருந்த உழவர் பெருமக்களைத் திசைதிருப்பி நடுவர் மன்றத்தை வேண்டுகையாக மாவீரன் வைக்க அதை ஈனத்தலைவர் புண்ணியத்தால் வி.பி.சிங் அமைக்க அதன் பின்னரும் பதினெட்டு ஆண்டுகள் சென்று பெப்பே காட்டிவிட்டார்கள். அதற்குள் வேண்டிய எண்ணிக்கையில் அணைகளைத் தங்கள் எல்லைக்குள் கன்னடர்கள் கட்டிக்கொண்டார்கள், ஈனத் தலைவர் குறைந்தது மூன்று தொலைக்காட்சி வாய்க்கால்களையாவது கர்நாடகத்தில் தோண்டிவிட்டார். மாவீரனுக்கு எப்படியெப்படி எங்கெங்கு என்னென்ன கிடைத்தது என்று தெரியவில்லை. ஒருவழியாக நடுவர் மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதை அரசிதழில் வெளியிட நடுவரசு விரும்பவில்லை. பின்னர் ஆட்சிக்கு வந்த அம்மையார் நய மன்றத்தில் போராடி அரசிதழில் வெளியிட வைத்தார். ஆனால் அதனடிப்படையில் அமைக்க வேண்டிய கண்காணிப்புக் குழுவையோ மேலாண்மைக் குழுவையோ அமைக்க உரியவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் அம்மையார் வெற்றி விழாவெல்லாம் கொண்டாடிவிட்டார். அரசிதழை வைத்துக்கொண்டு எல்லோரும் நாக்கு வழிப்போம், அல்லது குமரி மாவட்டத்தில் கூறுவது போல் கூப்பனி (பதனீர் காய்ச்சும் போது வரும் கூழ்ப்பதனீர்) கோரி(வழித்து)க் குடிப்போம்!

கட்டுரையாளருக்குத் தான் நினைத்த செய்தியைச் சொல்லத் தெரியவில்லை, அல்லது வழக்கம் போல் வெறும் பட்டத்தை வாங்கி வந்துவிட்டு இந்த இருக்கையில் அமர்ந்து விட்டார் போலும். (இதழில் தரப்படும் இடத்துக்குள் கட்டுரையை அடக்க வேண்டும் என்பதற்காகப் பொறுப்பிலுள்ள துணையாசிரியர் வெட்டிக் குறைப்பதிலுள்ள குறைபாடுகளையும் நாமறிவோம்) சென்னைப் பகுதி உயர்ந்து விட்டதால் அங்கு பாய்ந்து கொண்டிருந்த காவிரி திசை திரும்பிவிட்டதாம். நாம் அறிந்த வரை தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையும் முட்டம் வரை மேற்குக் கடற்கரையும் ஒரே மட்டத்தைக் கொண்ட இடை நிலை கடல் மட்டத்திலிருந்து திடீரென்று, அதுவும் ஒரு ஆற்றின் போக்கை மலைகளிலேயே திருப்பும் அளவுக்கு (சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை அய்யா!) உயரமாக இல்லை.

      காவிரி பாய்ந்த 5 பாதைகளிலும் இப்போதைய ஆறுகள் பின்னால் ஆக்கிரமித்துக் கொண்டனவாம். அப்படியானால் இந்த ஆறுகள் அதற்கு முன் இல்லையா? அவற்றுக்கு இப்போது தண்ணீர் வழங்கும் பரப்பிலிருற்து முன்பு மழைநீர் வரத்து இல்லையா? அல்லது காவிரியின் குடகில் மட்டும் மழை பெய்ததா? என்னய்யா இது? தொலையுணர்வுத் துறை தவிர வேறு துறை தெரியாதென்றால் அவ்வத்துறை சார்ந்தோரையாவது கலந்திருக்கலாமே! அவர்களுக்கும் தங்கள் தங்கள் துறை பற்றி எதுவுமே தெரியவில்லை என்கிறீர்களா? உண்மைதான். இன்றைய உண்மையான நிலையும் அதுதான்.

      மக்கள் பக்கத்தில் இது வென்றால் அறிவு சார் பம்மாத்து கங்கையையே இங்கே கொண்டு வருகிறோம் என்ற எம். எசு. உதயமூர்த்தியின் வீர வச்சனம். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தததும் புதிய பிலாக்கணத்தை திரு. இராமசாமி தினமணியில் தொடங்கி வைத்துள்ளார், பல்கலைக் கழகங்களின் வழக்கமான காலக்கணிப்பு உத்திகளுடன். இந்தத் தொலையுணர்வு சித்து வேலைக்கு, யார் யார் மூலமாக யார் யாருக்கு எப்படியெப்படி எங்கெங்கு என்னென்ன கிடைத்ததோ, நல்லாயிருங்க!

      திரு. இராமசாமி எழுதிய கட்டுரைக்குப் பல ஆண்டுகள் முன்னரே தினமணியில் வேலூர் மாவட்டத்துக் காவேரிப்பாக்கம் வழியாகக் காவிரி ஓடியதற்கான தடம் தொலையுணர்வு செயற்கைக்கோள் மூலம் தெரியவந்ததாக ஒரு கட்டுரை வெளியானது. காவிரி இன்று ஓடிய இடத்தில் எப்போதுமே ஓடவில்லை, பெருவெள்ளங்களின் போது அப்புறமும் இப்புறமுமாகத் திரும்பி ஓடுவது போன்றதல்ல அது. அடிப்படையான பாதை மாற்றமாகவே அது இருந்துள்ளது.

காவிரி ஆறு 5 பாதைகள் வழியே ஓடியிருக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இன்றைய பாதை தவிர வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக ஓடியது ஒன்று. இன்னொன்று காவிரி வரும் வழியில் மலையிலுள்ள ஒரு புழை (சுரங்கம் போன்று இயற்கையாக உருவாகும் அமைப்பு. நீரில் கரையும் அல்லது அரிப்புக்குள்ளாகும் பொருள்கள் அகல்வதால் இத்தகைய புழைகள் உருவாகும்) ஒன்றினுள் புகுந்து ஏற்காடு மலையின் ஒரு குகை போன்ற திறப்பின் வழியாக வெளிப்பட்டதென்று ஏற்காடு மலைப் பகுதியில் செவிவழிச் செய்தி உள்ளது. சோழ மன்னர்கள் அப் புழை வாயிலை அடைத்து காவிரியை இன்றைய பாதைக்குக் திருப்பியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மணிமேகலையின் காந்தமன் கதை அதைத்தான் சொலகிறது(காந்துதல் – கரிதல், காந்தமன் – கரிகாலன்?) அல்லது, மேலை கொள்ளிடமாகிய பழைய காவிரியிலிருந்து இன்றைய காவிரியை அமைத்ததைத்தான் இக்கதை கூறுகிறதா?

      கி.பி. 1257 (2007-750) ஆம் ஆண்டிற்கு முன் அங்கு திருவரங்கப் பெருமாள் இருந்ததில்லை என்ற வரலாற்றுப் புதுமையின் பின்னணியில் இன்னொரு அரசியலும் உண்டு.

      தமிழகத்திலுள்ள பெரும்பாலான பழைய நகரங்களில் கோயிலைச் சுற்றியுள்ள பார்ப்பனச் சேரிகளாகிய அக்கிரகாரங்கள் எனப்படும் அகரங்களில் கன்னடப் பார்ப்பனர் ஓரிருவராவது இருப்பர். திருவரங்கத்தில் அவர்கள் எண்ணிக்கை மிகுதி.

      நான் காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போது என்னுடன் லட்சுமிபதி என்ற பார்ப்பனர் பணியாற்றினார். திருவரங்கத்தைச் சேர்ந்தவர். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். திருவரங்கத்தில் கன்னடப் பார்ப்பனர்கள் மிகுதி என்றும் அவர்கள் இந்திய அளவில் செல்வாக்கு மிக்கவர்களென்றும் சொல்லியிருக்கிறார். திரைநடிகர் செயசங்கர்[2] திருவரங்கத்து கன்னடப் பார்ப்பனர் என்பதும் அவர் சொல்லிய செய்திகளிலொன்று.

      கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்களில் போசாளர்கள் எனப்படும் மரபைச் சேர்ந்த கன்னட அரசனான இரண்டாம் நரசிம்மன் தலையிட்டான். அவனது மகன் கி.பி. 1234 முதல் 1263 வரை திருச்சியை அடுத்த கண்ணனூரில் தங்கியிருந்து சோழர்கள் ஆட்சியில் தலையிட்டுவந்தான். இந்தக் காலகட்டத்தில்தான் கன்னடர்கள் பெருமளவில் திருவரங்கத்தில் குடியேறினர் போலும். அதனால் அவர்கள் தாங்கள்தாம் திருவரங்கத்தையே உருவாக்கியவர்கள், தங்களுக்கே அது உரியது என்று திருவரங்கத்துத் தமிழ்ப் பார்ப்பனர்களுடன் மல்லுக்கு நிற்கிறார்களோ என்றொரு ஐயம் நமக்கு எழுகிறது. திருவரங்கத்து ஐயங்கார் தானென்று உரிமை கொண்டாடும் கன்னட நாட்டில் பிறந்த செயலலிதா அதே திருவரங்கம் தொகுதியிலிருந்து தேர்வாகி முதலமைச்சரான பின் இந்த சமன்பாடு என்னாயிற்றோ நாமறியோம்.

8.   கதிரவனும் திங்களும் எழுவதும் மறைவதுமா உள்ள காட்சிகளை காணும் வண்ணம் மலையின் மீது திருவேங்கட மலையின் திருமாலின் நின்ற கோலத்துடன் மட்டுமல்லாது கடவுள் படிமத்தின் அமைப்பையும் தெளிவாக விளக்குகிறார் அடிகள். அந்தப் படிமத்தை இன்று போல் அன்றும் விலை மதிப்புள்ள அணிகளும் ஆடைகளும் அழகு செய்ததைப் படிக்கும் போது வியப்பாயிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை அக் கோயிலை அண்டியிருக்கும் பூசகர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இக் கோயில் ஒரு தங்கச் சுரங்கமாகவே இருந்திருக்கிறது.

8.   குடமலை என்பது இன்றைய கன்னட மாநிலத்திலுள்ள குடகுப் பகுதியாகும். இந்த மலையில்தான் காவிரி தோன்றுகிறது. இந்த வட்டாரத்தில்தான் நம்பூதிரிப் பார்ப்பனர்களின் செல்வாக்கு மிகுதி. இங்கிருந்து பார்ப்பனர்கள் மாலியத்தை(வைணவத்தை)ப் பரப்புவதன் மூலம் பார்ப்பனர்களிடையில் ஒன்றிணைவை ஏற்படுத்தித் தம் வலிமையைப் பெருக்க முயன்றனர் என்று கொள்ள வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மாலியக் கோயில்கள் நாடு, காடு மலை என்று அனைத்துப் பகுதிகளிலும் இடம் பெற்று மாலியம் அமைப்பாகச் செயற்படத் தொடங்கியதையும் நாம் காண்கிறோம்.

9.   கோத் தொழிலாளர் என்பதற்கு அமைச்சர்கள் என்று உரையாசிரியர்கள் - வேங்கடசாமியார் - கூறியிருப்பது பொருத்தம் இல்லை. அரசுப் பணியாளர்கள் என்று பொதுவாகக் கூறும் வகையில்தான் அச் சொல் இடம் பெற்றுள்ளது. ஒரு தொகுதியினராக இளங்கோவடிகள் அரசூழியர்களைக் கூறுவதைப் பார்த்தால் ஆள்வினைத் துறை ஒரு சீரான கட்டமைப்பை அவர் காலத்தில் பெற்றுவிட்டது என்று தெரிகிறது. அத்துடன் அரசனுக்கும் ஆட்சிப் பணியாளர்களுக்கும் இடையில் முற்றிய முரண்பாடுகள் நிலவிய சூழல்களும் இருந்தன என்பதை மறைமுகமாகக் காட்டும் குறிப்பாக இதைக் கொள்ளலாம்.

10.                                முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
என்ற இவ் வரிகள் தொல்காப்பியம் தரும் ஐந்நிலப் பாகுபாடு பற்றி பெரும் குழப்பத்தைப் பலரிடம் ஏற்படுத்தக் காரணமாகிவிட்டன. முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் கோடை காலத்தில் கொள்ளும் வறண்ட நிலைதான் பாலைநிலம் என்று பலர் அடித்துச் சொல்கின்றனர். ஆனால் பாலை நிலத்தின் இயல்பு வெறும் வெப்பமும் வரட்சியும் மட்டுமல்ல. முதற் பொருள் கருப்பொருள், உரிப்பொருள் என்பவற்றில் கருப்பொருளைப் பொறுத்தவரை பெரும் வேறுபாடுகள் முல்லை, குறிஞ்சி, பாலை ஆகியவற்றுக்கிடையில் உண்டு.
கருப்பொருட்கள்:
1
  தெய்வம்
  வழிபாட்டு முறை
2
  உணவு
  வேளாண்மை நிலை
3
  மா
  ஊனுணவுக்கு உரிய அல்லது விலக்கப்பட்ட விலங்கு
4
  மரம்
  குடியிருப்பு நிலை, இயற்கை வளங்கள் முதலியன
5
  புள்
  அந் நிலத்தில் வாழும் சிறப்பான பறவை
6
  பறை
  தோல் இசைக் கருவி
7
  தொழில்
  தொழில்நுட்பமும் செய்பொருட்களும்
8
  யாழ்
  நரம்புக்கருவி
9
  பூ

10
  நீர்

குறிஞ்சி, முல்லை, பாலை ஆகியவற்றின் கருப்பொருள்கள்
 எண்
    கருப்பொருள்
குறிஞ்சி
முல்லை
பாலை
1           
     தெய்வம்                          
மு  முருகன்
    கண்ணன்
        கொற்றவை
2    2
     உணவு
தி   தினை, ஐவனம், வெதிர்நெல்   
   வரகு, முதிரை
 ஆறலைத்தலால் வரும் பொருள்
3    3
     விலங்கு  
      யானை, புலி, பன்றி, கரடி
       மான், முயல்
      வலியழிந்த யானையும் புலியும் செந்நாயும்
      4
     மரம் 
      வேங்கை, கோங்கு
      கொன்றை, குருந்து, புதல்
      பாலை, இருப்பை(இலுப்பை), கள்ளி, சூரை
      5
     பறவை
      மயில், கிளி
      கானாங்கோழி
      எருவை(கழுகு), பருந்து   
      6
     பறை
      வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை
     ஏறுகோள்
     (நிரைகவர்தல்)                                                        பறை
     ஆறலைத்தல் பறை,
     சூறை கொண்ட பறை    
      7
      தொழில்  
      தேனழித்தல்
      நிரை மேய்த்தல்
      ஆறலைத்தல்
      8
      யாழ்(பண்)
      குறிஞ்சி  
      சதாரி
      பாலை
      9
      பூ
      வேங்கை, காந்தள், குறிஞ்சி
      முல்லை, பிடவு, தளவு 
      மராம்பூ
      10
      நீர்
      சுனை, அருவி, மற்றும் பிற
      காட்டாறும் பிறவும்
      அறுநீர்க் கூவல்(கிணறு), அறுநீர்ச் சுனை, பிற
இந்தச் செய்திகள் உரையாசிரியர்கள் தந்துள்ளவை[3]. கோடைக் காலத்தில் வறட்சி வருவதாக வைத்துக்கொண்டாலும் மேலே தரப்பட்டுள்ள கருப்பொருள்களெல்லாம் மழைக்காலத்துக்கு ஒன்று கோடைக்கு ஒன்று என்று மாறி மாறி வருமா?

இன்றைய தமிழகத்தில் கோடை காலத்தில் இடைநிலத்திலுள்ள மலைகளும் புல்வெளிகளும் பாலையின் சில தன்மைகளைப் பெறலாம். இன்றைய தமிழகத்தின் நிலக்கிடக்கை மிக ஒடுங்கிய ஒன்றாகும். அதுவும் தென்மேற்குப் பருவக் காற்றைப் பொறுத்தவரை அது மழை மறைவுப் பகுதியாகும். ஆனால் ஐந்திணைப் பாகுபாடு ஓர் ஆறு மலையில் உருவாகி நிலத்தின் குறுக்கே நெடுந்தொலைவு பாய்ந்து கடலைச் சென்றடையும் வகையிலான நிலக்கிடக்கைக்கு உரியது. கங்கையைப் பொறுத்த வரையில் இமயத்தின் அடிவாரத்தை அடைந்த பின் இன்னொரு பக்கம் விந்திய மலையைக்கொண்டு நேரே கடலைச் சென்றடைகிறது. அதனால் அது பாலை நிலத்தைக் கடக்க வாய்ப்பில்லை. இந்த அடிப்படையில் ஐந்நிலங்களையும் தன் காப்பியத்தில் காட்ட வேண்டுமென்பதற்காக அன்றிருந்த(இன்றும் இருக்கும்) தமிழகத்தினுள் பாலைத் தன்மையுடன் விளங்கும் கோடைகால குறிஞ்சி – முல்லை நிலத் திரிபுகளைக் காட்டியுள்ளார். அதைப் புரிந்துகொள்ளாமல் பலரும் தெரிந்தாலும் குமரிக் கண்ட கோட்பாட்டை மறுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலரும் பாலைநிலமென்பது குறிஞ்சி – முல்லை நிலங்களின் கோடைத் திரிபு என்று கிளிப்பாடமாக ஒப்புவிக்கின்றனர். தொல்காப்பியம் காட்டும் ஐந்நிலப் பிரிவு நிலப்பரப்பு அகன்ற நிலமாகிய குமரிக் கண்டமாகும். அங்கு உயர்ந்த மலைகளைக் கொண்ட குறிஞ்சி நிலத்தில் தாராளமான மழைப்பொழிவும் அதை அடுத்த மலையடிவாரமான முல்லை நிலத்தில் மலையிலிருந்து சமவெளி நோக்கிப் பாயும் நெருக்கமான கானோடைகளால் தாராளமான நீர்வளமும் உண்டு. அவை இன்னும் கீழ் நோக்கிப் பாய்ந்து பல கானோடைகள் இணைந்து பேராறுகளாக நிலத்தை அறுத்துக்கொண்டு ஒன்றுக்கொன்று நெடுந்தொலைவு இடைவெளிகளில் பாயும் போது இவ் விடைவெளிகள் பாலைநிலங்களாகின்றன. மழைக் காலங்களில் மலைகள் தமக்குள் தேக்கிவைத்திருக்கும் நீர் கோடை காலங்களில் கசிந்து முல்லை நிலத்துக்கும் பாலையைக் கடந்து மருத நிலத்துக்கும் நீர் வழங்கும். இது பற்றிய விரிவுக்கு எமது பாலைத்திணை விடு(வி)க்கும் புதிர் என்ற கட்டுரையைக் காண்க[4].

தமிழக மன்னர்கள் சம்பளத்துடன் நிலையான வீரர்களைக் கொண்ட நிலைப்படை வைத்திருந்தார்களா என்று தெரியவில்லை. வஞ்சிக் காண்டம் தரும் செய்திகளைப் பார்த்தால் நிலைப்படை இருந்ததாகவே தெரிகிறது. ஆனால் போர்களின் போது பயன்பட்ட பண்டை மரபுகளின் தொடர்ச்சியாக இந்தப் ‘பாலை’ நிலத்து மக்களை வழிப்பறி செய்யவிட்டார்களா என்பது புரியவில்லை. போரின் தொடக்கமாக நிரை கவர்தல் இருந்த காலத்தில் இவர்கள் முன்னோடிப் படையினராகச் செயற்பட்டனர் என்பது உறுதி. படை எடுத்து வருவதை மடலெழுதி பிற அரசர்களுக்குத் தெரிவிப்பதற்குப் பகரம் தலைநகரத்தில் பறையறிந்து அதனை அந் நாடுகளின் ஒற்றர்கள் தங்கள் அரசர்களுக்குத் தெரிவிக்கும் முறையை அழும்பில்வேள் மூலம் இளங்கோ வெளிப்படுத்துவதன் மூலம் போர் நடைமுறைகள் பெருமளவு மாறிவிட்ட அளவில் இந்த வழிப்பறியாளர்களை நம் அரசர்கள் ஏன் வைத்திருந்தனர் என்று தெரியவில்லை. வழிப்போக்கர்கள், குறிப்பாக வாணிகர்கள் தாங்களே தங்கள் பாதுகாப்பைப் பேணிக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்களா என்றும் தெரியவில்லை. 19ஆம் 20ஆம் நூற்றாண்டு சீனத்திலும் வழிப்பறியாளர்களை அரசர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பது பேர்ல் எசு பக்கு எனும் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் எழுதியுள்ள பியோனி(Peony) என்ற புதினத்தின் மூலம் தெரிகிறது. தன் அழைப்பின் பேரில் தன்னைப் பார்க்க வரும் ஒரு யூதக் குடும்பம் இடையூறின்றிச் செல்ல வகை செய்யுமாறு வழிப்பறியாளர் தலைவனுக்கு அரசர் மடலெழுதுகிறார். முத்துப்பட்டன் கதை என்ற கதைப்பாடலைப் பதிப்பித்த பேரா.வானமாமலை அவர்கள் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் வழிப்பறியைக் குத்தகைக்கு விட்டிருந்தனர் என்ற செய்தியைத் தருகிறார்.        

இந்த வழிப்பறி, வலங்கை – இடங்கைச் சண்டைகள் உள்ளிட்ட நாட்பட்ட நம் குமுக நோய்கள் பலவற்றுக்குத் தீர்வு கண்டமைக்காக ஆங்கிலருக்கு நன்றி சொல்வது நம் கடமை. ஆனால் நாம் அவர்களின் அவ் வருஞ்செயல்களை மறைப்பது மட்டுமல்ல இன்னும் தொடரும் எண்ணற்ற மரபுக் கோளாறுகளை ஒழிப்பதைப் பற்றிச் சிந்திப்பதில்லை என்பதை விட அவற்றைத் தொடர்வதற்கு ஏதோ சாக்குப்போக்குகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்பது பெரும் அவலம்.

11.                                அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்
நெடும்பேர் அத்தம்   
      என்ற வரிகளைப் படிக்கும் போது நம் கால்கள் கூசுகின்றன. அதை மிகுவிப்பது போல் நீந்திச் சென்று என்று வேறு கூறி நம்மைக் கலங்கவைக்கிறார் அடிகள். ஆனால அங்கெல்லாம் நிறைநீர் வேலிகளாகிய ஏரிகள் இருந்ததைக் கூறி மழைபிணிந் தாண்ட பண்டை பாண்டியரின் அருஞ்செயலின் அருமையைப் புரியவைக்கிறார்.

12. இனி மாங்காட்டு மறையோன் விளக்கிய மூன்று பாதைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம். இன்றைய திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழிகளில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அம்பாத்துறைக்கும் கொடைக்கானல் சாலைக்கும் இடையில் இடது புறம் உள்ளது சிறுமலை. அதாவது சிறுமலையின் வலது புறமாகச் செல்கிறது திண்டுக்கல் மதுரைச் சாலை. அதைத்தான்
                  தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்
அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்
      என்று வலதுபுறப் பாதையைக் குறிப்பிடுகிறார். அந்த வழியைப் பற்றிய
அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும்
பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
நீர்தசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமுங் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும்
கொய்பூந் தினையுங் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
என்ற விளக்கம் பாலைத் தன்மையுள்ள நிலமும் அதை அடுத்து இரு புறமும் உயர்ந்த மலைகளுக்கிடையில் செழுமையான நிலமுமான இன்றைய நிலையை அழகாகப் படம்பிடித்துக்காட்டுகிறது.

இடையிலிருக்கும் இந்த நிலப்பரப்பின் வரண்ட நிலை இயற்கையானது என்று கூற முடியாது. பெரும்பாலும் பண்டை அரசர்கள் நிலையான படைகளைப் பராமரிக்காமல் எல்லைகளைக் காக்கவும் அண்டை அரசனைச் சண்டைக்கு இழுக்க நிரை கவரவும் எயினர்(எய்யுனர் – வில்லோர்?) ஆகிய வழிப்பறியாளர்களை அமர்த்தியுள்ளனர். இவர்கள் வழிப்பறிக்கு வாய்ப்பில்லாத வேளைகளில் அண்டையில் உள்ளோர் பயிரிடும் தவசங்களைத் திருடி எடுத்துக்கொள்வர். அதனால் அந்தப் பகுதியில் புன்செய் வேளாண்மை கூட தங்காமல் போய்விடும். இவ்வாறு மனிதத் தவறுகளால் பாலைத் தன்மை பெற்றவை தமிழக நிலப்பரப்பில் பெரும் விகிதத்தில் உள்ளன. வேளாண்மைக்கும் பண்டப் போக்குவரத்துக்கும் மாடு தேவைப்படாத இன்றைய நிலையில் மாடு வளர்ப்பு வேளாண்மை சாராதார் கைகளுக்குச் சென்றுவிட்டது. அவர்களது மாடுகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை அழிப்பதால் பல இடங்களில் நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன. அந் நிலங்கள் மேய்ச்சலால் முற்றிலும் பசுமையை இழந்து விட்டன. அதனால் நிலம் வெப்பமுற்று அதைத் தொட்டிருக்கும் காற்றும் வெப்பமடைந்து குறிப்பிட்ட ஈரப்பதத்தில் மழை உருவான நிலை உடைந்து மழை பொழிய இப்போது உயர்ந்த ஈரப்பதம் தேவைப்படுவதால் நீண்ட வரட்சியும் தொடர்ந்து குறுகிய காலப் பேய்மழையுமாகச் சிதைந்துள்ளது. அதனால் இந்த மழைகளால் கூட நீர் நின்று நிலத்தில் இறங்கவில்லை. இதனால் தொடர்ந்து நிலத்தடி நீர் கீழ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் தம் தாய்நாட்டில் குடியிருப்பதற்கு குடிநீர் வேண்டுமென்பதற்காகவாவது சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது உடனடித் தேவை. திறந்தவெளி மேய்ச்சலைத் தடைசெய்து ஓரளவு நீர்வளம் உள்ள இடத்திலிருந்து தொடங்கி பெரும் ஒருங்கிணைந்த பண்ணைகளை உருவாக்கி அவற்றில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையுடன் குறைந்தது 10% பரப்பிலாவது காடு வளர்ப்பும் ஒரு சிறு குளமும் மட்காத குப்பைகளால் ஒரு குன்றும் என்று அமைத்தால் தொடக்க முதலீட்டை ஒப்பிட நல்ல வருவாயுடன் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்த முடியும். சாணத்திலிருந்து இயற்கை வேளாண்மை, எரிவளியுடன் கதிரவ, காற்று ஆற்றல் என்று வெளி இடுபொருட்களின் தேவையே இல்லையெனுமளவுக்குக் குறைத்துவிடலாம். பின்னர் அதைத் தொட்டிருக்கும் அதைவிட நீர்வளம் குறைந்த இடத்தைக் கையாண்டு சிறுகச் சிறுக விரிவாக்கி இன்று சிதைந்துவிட்ட மழைப்பொழிவுச் சீர்மையை மீட்க முடியும்.
          
      உங்களை நடுவில் நிகழ்காலத்திற்குள் கொண்டுவந்து விட்டதற்காகப் பொறுத்தருள்க. இப்போது அடிகள் காட்டுவது அழகர் மலை வழியாகச் சல்லும் வழியை. அதற்கு முன் அவர் கூறும்   
               கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூல் தருநெறி கவர்க்கும்
      இடம் எதுவென்பது. மணப்பாறைக்கு வடக்கில் குளத்தூர், மணிகண்டபுரம் ஆகிய ஊர்களுக்கு அருகில் இருக்கும் கொடும்பாளூர் ஆகிய கொடும்பையிலிருந்து பாதை எதுவும் அழகர்கோயிலுக்கோ நடுவிலிருக்கும் சிறுகுடிக்கு வடக்கிலிருக்கும் செந்துறைக்கோ வரவில்லை. ஆனால் மணப்பாறைக்குத் தெற்கிலிருந்து கிளைக்கும் பாதை செந்துறைக்கு வருகிறது. அது போல் விராலிமலை வழியாக அழகர் மலைக்கு வரலாம்.
     
      அழகர் மலையைப் பற்றிய வியப்பான செய்திகளைத் தருகிறார் அடிகள். அவற்றுள் சிறப்பானது.
                        புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
                        விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
      புண்ணிய சரவணம் எனும் பொய்கையில் நீராடினால் இந்திரன் இயற்றிய ஐந்திரம் எனும் இலக்கண அறிவு உங்களுக்கு வரும் என்பதை அங்கு முன்பு இந்திரன் கோயில் இருந்ததற்கான தடயமாகக் கொள்ள முடியுமா? இந்திரன் கோயில்கள் பிற தெய்வங்களின் கோயில்களாக மாறியதற்கான சான்றுகள் பிற இடங்களிலும் உள்ளன. குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் ஒரு வலுவான சான்று. ஊரின் பெயரே இந்திரனைக் கொண்டுள்ளது. ஊர்த் தொன்மத்திலும் இந்திரன் வருகிறான். குமரியம்மன் தன்வரிப்பு(சுயம்வரம்) அறிவித்தாளாம். கலந்துகொள்வோர் விடியு முன்னே வந்துவிட வேண்டு கட்டுறவாம். பிரமன், திருமால், சிவன் ஆகிய மூவரும் புறப்பட்டு வந்தனராம். இந்தத் திருமணத்தை விரும்பாத இந்திரன் வழியில் ஒரு சேவலாக நின்று கூவினானாம். உடனே விடிந்துவிட்டதென்று நினைத்து மூவரும் திரும்பி பக்கத்திலிருந்த சுசீந்திரத்தில் அமர்ந்துவிட்டார்களாம். இம் மூவருக்கும் இந்திரனின் யானை ஐராவதம் தன் கொம்பால்(கோட்டால்) மலையில் குத்தி அதில் பெருகிய கோட்டாறாகிய ‘தந்தநதி’யிலிருந்து நீர் மொண்டு திருமுழுக்காட்டியதாம். அதனால் அந்த ஆற்றுக்கு கோட்டாறு என்று பெயராம். மலையாகிய கோட்டிலிருந்து வருவதால் மலையாறு என்று பொருள்படும் கோட்டாறு என்ற பெயர் அவ் வாற்றுக்கு வந்தது என்று நீங்கள் கருதினால் தவறாம்.  இந்தக் ‘கோயில்தொழில்’ துறையினர் நம் தெய்வங்களை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இழிவுபடுத்தியுள்ளனர் என்பது ஒரு புறம் இருக்க, நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி நிலங்கள் முறையே ஒன்றன் பின் ஒன்றாக நாகரிக வளர்ச்சி பெறப் பெற முன்பிருந்த தெய்வ வழிபாடுகளை ஒழித்துத் தம் நிலத்துத் தெய்வ வழிபாடுகளை நிறுவியதற்கான தடயங்களைக் களத்திலும் நம் தொன்மங்களிலும் நிறையவே காணலாம். திருப்பதியிலும் அழகர் கோயிலிலும் இருக்கும் முருகன் கோயில்கள் செல்வாக்குப் பெற முடியாமல் இருப்பதற்கு மாலியர்களின் அரசியல் செல்வாக்கை முருகன் வழிபாட்டார் எதிர்கொள்ள முடியாமையே காரணம். இது குறித்து எமது பஃறுளி முதல் வையை வரை என்ற நூலில் விரிவாகக் காணலாம்.
   
      மாங்காட்டான் கூறியதற்கு மறுப்பாக கவுந்தியடிகள்,
                        பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்
      என்கிறார். அதாவது அருகதேவன் இயற்றிய பரமாகமத்தில் ஐந்திரம் உள்ளது என்கிறார். அப்படியானால் அம்மணர்கள் ஐந்திரத்தை அழித்துவிட்டு அதைத் தங்கள் சமய நூலில் திருடி வைத்துள்ளனரா?
     
      பண்டைத் தமிழர்களின் ஐந்திணை ஆட்சிக் காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வழங்கிய மொழி, குமுக வழக்குகளைத் தொகுத்து அகத்தியர் அகத்தியம் என்ற இலக்கணத்தை யாத்தார், பின்னர் ஐந்நிலங்களையும் அடக்கிய அரசு உருவாகி அறிவியல் – தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மட்டுமீறிய வளர்ச்சியை அடைந்த போது அறிவியல் – தொழில்நுட்பச் செய்திகளைப் பதிவதற்கென்று தனி இலக்கணமும் சராசரி குடிகளின் வழக்குக்கென்று தனி இலக்கணமும் வகுத்து அறிவியல் – தொழில்நுட்பச் செய்திகளைக் கொண்ட ஐந்திரம் என்ற பெயரில் இந்திரரில் ஒருவன் யாத்தான் என்பது எம் கருத்து. 2006இல் சுனாமி எனப்படும் ஓங்கலைப் பணிக்காக காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது அங்கு தங்கியிருந்த ஒரு சமற்கிருத அறிஞருடன் பேசக் கிடைத்த வாய்ப்பில் நான் இந்தக் கருத்தைக் கூறிய போது அவர் வியப்புடன் குறிப்பிட்டது ‘அதனால்தான் சமற்கிருதத்திலுள்ள அனைத்துத் துறை பண்டை நூல்களும் ஐந்திரத்தைக் குறிப்பிட்டுத் தொடங்குகின்றனவோ?’ என்பது. ஆக, அம்மணர்களின் பரமாகமத்தைத் தோண்டிப் பார்க்க வேண்டிய இன்றியமையாப் பணி நம்க்கு உள்ளது.
          
      முதல் பாதையை விளக்கியது போலவே இப்பாதையிலும்,
               செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து
எனக் குறிப்பிட்டு வளமான நிலப் பரப்புகளுக்கு இடையில் வழிப்பறியாளர்களின் அருஞ்சுரங்களும் இருப்பதைப் பதிவுசெய்கிறார்.
                  நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை
என்று ஐந்திரத்தை அறியவைக்கும் பொய்கை இருக்கும் பிலத்துள் புகும் இடத்தையும் குறிப்பிடுகிறார். சிலம்பு என்ற சொல்லுக்கு, ஒலி, காற்சிலம்பு, பூசாரிகள் கைச்சிலம்பு, மலை, பக்க மலை, மகளிர் காலணி வகை, குகை, சிலம்பென்னேவல் என்ற பொருள்களை கழகத் தமிழ் அகராதி தருகிறது. மலை என்ற பொருளோ நிலம்பக வீழ்ந்த(நிலம் பிளக்கும்படி வீழ்ந்த) என்று குறிப்பிடுவதால் ஒலி என்ற பொருளோ பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த சமற்கிருதக் கோமாளிகள் வழக்கம் போல் எந்தப் பொருத்தமும் இல்லாமல் காற்சிலம்பு என்ற பொருள் தரும் நூபுர கங்கை என்று பெயர்த்துள்ளனர்.
    
      இவ்விரண்டு பாதைகளுக்கு நடுவில் இருக்கும் பாதையைப் பொறுத்தும்
                           ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
      என்று வழிப்பறியாளர்கள் வாழிடங்கள் இடையிடையே உள்ளமையை அடிகள் மாங்காட்டான் மூலம் புலப்படுத்துகிறார். அத்துடன் அவனது திருமால் பற்றினை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவதில் உயர்வான வெற்றியையும் பெற்றுள்ளார்.

      இப்போது சமயவாணர்களின் போட்டியின் பதமொன்றனையும் இச் சூழலைப் பயன்படுத்தி அடிகளார் தந்துள்ளார்.

      புண்ணிய சரவணம் எனும் பொய்மையில் மூழ்கினால் ஐந்திரம் அறியலாம் என்று கூறிய மறையோன் மற்றொன்றான பவகாரணியில் மூழ்கினால் இப் பிறப்புக்குக் காரணமான பழம்பிறப்பின் வினைகளை அறியலாம் என்றும் மூன்றாம் பொய்கையாகிய இட்ட சித்தியில் மூழ்கினால் விரும்பியவற்றை விரும்பியவாறே அடையலாம் என்றும் கூறியதற்கு எதிர்ப்பாகத் தன் சமயத்தின் உத்தியைக் கவுந்தியடிகள் கூறுகிறார். பரமாகமத்தில் ஐந்திரத்தில் கூறியவற்றைக் காணலாம் என்று கூறியவர் இந்தப் பிறப்பில் நடப்பவற்றிலிருந்து முந்திய பிறப்பில் நாம் செய்தவற்றை அறியலாம் என்றும் வாய்மை தவறாது பிறர் நலம் பேணுவோர்க்கு அடையக் கூடாதது ஒன்றும் இல்லை என்ற ஒப்புரவுக் கோட்பாட்டை முன் வைக்கிறார். உண்மையில் ‘இந்து’ சமயம் என்று கூறப்படும் நம் மரபு வழிபாட்டுமுறை அன்றிலிருந்து இன்று வரை ஒரு மாபெரும் சந்தை நடைமுறையையே கொண்டுள்ளது. இன்னின்ன கோயிலுக்குச் சென்று வேண்டுதல் செய்தால், காணிக்கை வைத்தால் இன்னின்ன பலன்கள் கை மீது கிடைக்கும் என்ற விளம்பரத்தை மறைத்து ஆன்மிகம் என்ற பெயரில் வரும் கட்டுரைகள் இன்றைய தாளிகைகள் அனைத்திலும் இடம்பெறுவதை நம் கண்முன் நிறுத்துகிறது மாங்காட்டு மறையோனின் அழகர் மலை பற்றிய விளக்கம். நம் நாட்டில் மக்கள் கைகளில் திரளும் பணத்தில் குறிப்பிடத்தக்க நூற்றுமேனி(சதவிதம்) இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் வீணாக்கப்படுகின்றன என்பதை குமுக ஆர்வம் உள்ளவர்கள் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதே நேரத்தில் பொது நலனில் அனைவரும் நாட்டம் கொண்டு செயற்பட்டால் அனைவரின் நயமான விருப்பங்களும் நிறைவேறும் என்ற கவுந்தியடிகளின் விளக்கம் பகுத்தறிவின் பால்பட்டது. பாசத்தை ஒழி என்று நிலத்தில் கால் பதியாத சமயத் தலைவர்கள் கூறியதற்கு மாறாக மண் மீது நின்று கவுந்தியடிகள் முன்வைக்கும் கருத்து எந்த மதவாதியின் கருத்துமல்ல, ஒரு மனித நேயரின் கூற்று.                               

      காட்டுத் தெய்வம் மாதவியின் தோழி வசந்தமாலையின் தோற்றம் கொண்டு கோவலனைக் குழப்ப முயன்றதை அவன் முறியடித்ததும் அந்த நிகழ்ச்சியைக் கவுந்தியடிகளிடம் கூறிவிட வேண்டாம் என்று வேண்டியதுடன் கண்ணகியிடமும் கூற வேண்டாமென்று அவ் வனசாரிணி வேண்டியதாகிய ஒரு காட்சியை இவ் விடத்தில் அடிகள் அமைத்துள்ளது தவறு செய்வோரைக் கண்ணகி பொறுத்துக் கொள்ளாமல் சினமடைவாள் என்பதைக் காட்டுவதற்காகவோ?

      இவ் வனசாரிணி நிகழ்ச்சியை இன்னொரு கோணத்திலும் பார்க்கத் தோன்றுகிறது. வழிச் செலவின் சோர்வினிடையில் மாதவியின் நினைப்பு வந்து, வனசாரிணி பற்றி மாங்காட்டான் கூறிய செய்தியும் சேர்ந்து ஒரு உருவெளித்தோற்றமாக வசந்தமாலையை அவன் கண்டதாக அடிகளார் காட்டுகிறாரா?

      வெய்யில் கடுமை ஏறும் போது மரங்கள் சூழ்ந்த சோலைகள் தென்பட்டால் அதில் தங்கியிருந்து செல்லும் நம் கதைமாந்தர் மூவரும் அத்தகைய ஒரு சோலையில் இருக்கும் ஐயை கோயிலை அடைந்தனர் என்று காதையை முடிக்கிறார் அடிகளார். அதற்கு முன் ஐயையை விளக்குமுகமாக,
                           ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர்
                                    கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
தெய்வம் என்ற செய்தியைத் தருகிறார். இதன் பொருள் பொழிப்புரையில் உள்ளது. மாரி வளம்பெறா வில்லேர் உழவர் என்பதற்கு விளக்கம் தர முனையும் வேங்கடசாமியார் அகநானூறு 186, 193 ஆகியவற்றிலிருந்து முறையே வானம் வேண்டா வறனில் வாழ்க்கை நோன்ஞாண் வினைஞர், கானுயர் மருங்கிற் கவலை யல்லது வானம் வேண்டா வில்லே ருழவர் ஆகிய வரிகளைக் காட்டுகிறார். இவர்களைப் பற்றி மேலே நாம் குறிப்பிட்ட கருத்துக்கு இவை அரண் செய்வதைக் காணலாம். 


[1] குமரி மாவட்ட வழக்கு
[2] அவர் நெல்லையைச் சேர்ந்தவர் என்பது அண்மையில் நான் இதழ் ஒன்றில் படித்த செய்தி. அவர் கன்னடப்பார்ப்பனர் என்று சொன்னதை சீரங்கத்தோடு தொடர்புபடுத்தி நான் புரிந்துகொண்டேனோ என்னவோ தெரியவில்லை.
[3] தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரையுடன், பகுதி – 1, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், வெளியீடு எண் 129, பக்.14 
[4] இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், வேவகை பதிப்பகம், மதுரை, 625 001, 2004, பக். 52

0 மறுமொழிகள்: