27.7.16

திசைமாறிய கலவி.



திசை மாறிய கல்வி:
குமரிமைந்தன்
உச்ச நய மன்றத்திலிருக்கும் அறிவு பேதலித்த தலைமை இரண்டு நாட்களில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டுமென்று "ஆணை" இட்டிருக்கிறது. உண்மையில் இந்த நுழைவுத்தேர்வு என்பதுதான் என்ன என்பதை இறுதியில் பார்ப்போம். அதற்கு முன் கல்வி என்றால் என்ன பார்ப்போம்..

கல்வி என்பது கரையிலா ஒரு பெருங்கடல், 'கல்வி கரையில' என்றார் பண்டைப் புலவர். ஒரு குழந்தையாகப் பிறந்து முதுமையாகிச் சாவது வரையிலும் தொடர்வது கல்வி. அப்படியானால் கல்வி என்ற பெயரில் கட்டடங்களில் இருந்து பெறப்படுவது யாது? அது எழுத்தறிவின் மூலம் கற்பது. இவ்வாறு் எழுத்தறிவின் மூலம் கற்பதை செயலறிவின் மூலம் மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இன்றைய கல்வி முறையில் உள்ளதா? இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். பல்லாயிரக்கணக்கில் வானூர்திகள் செயற்படும் இந்தியாவில் ஒரு வானூர்தியைக் கழுவிவிடுவதற்கு(சர்வீசு என்கிறார்களே அந்தப் பராமரிப்புக்கு)க் கூட ஓர் அமைப்பு இல்லை என்பது இழிவுகூர் அண்மைச் செய்தி. அப்புறம் வானூர்தியியல்(aeronautics) படிப்பு என்று வைத்து அங்கு என்னதான் கிழிக்கிறார்கள்? புத்தகங்களில் இருந்து பாராமல் படித்து தேர்வில் கக்குகின்றனர். இதில் எவன் புத்தகத்தில் இருப்பதை எழுத்து பிசகாமல் தாளில் எழுதித் தருகிறானோ அவன் அறிவாளி. படித்ததைச் சிந்தனையில் வாங்கி சொந்தச் சொற்களில் எழுதுகிறன் அறிவு குறைந்தவன். இதில் கொடுமை என்னவென்றால், மதிப்பெண் வழங்குபவனுக்கும் செய்திகள் சிந்தனையில் ஏறியிருக்காது, அவனும் பாராயணம் பண்ணி வந்தவனே. கோயில்களில் மந்திரம் சொல்வதில் அத்யயனம் என்று ஒன்று உண்டு. அதன் பொருள், ஒன்றன் பொருள் புரியாவிடினும் அதனை ஒலிப்பு மாறாமல் ஓதுதல் என்பதாகும். இதுதான் இன்றைய கல்விமுறையின் உள்ளடக்கம்.

உடலுழைப்பவரும் கைத்தொழில் வல்லோரும் இழிபிறவிகள் என்பது பண்டைத் தமிழக, இந்திய மரபு. தொல்காப்பியமே அதைத்தான் கூறுகிறது. பார்ப்பனர் என்றும் வெள்ளாளர் என்றும் கூறப்படுவோர் உச்சியில் அமர்ந்துகொண்டு மடங்கள் மூலமாகவும் கோயில்கள் மூலமாகவும் இலவய உணவு, உடை, உறையுள் வசதிகளுடன் படித்து ஆள்வினை(நிர்வாக)ப் பதவிகளிலும் படையணித்தலைவர்களாகவும் ஆட்சி புரிந்தது மட்டுமின்றி மக்களின் தாய்மொழிகளை இழிக்கவும் ஒழிக்கவும் செய்தனர்.

அத்துடன் பார்ப்பனர்கள் தாங்கள் பூசை செய்த கோயில்களிலிருந்த தேவதாசிகளைப் பயன்படுத்தி எளிதில் பதவிகளைப் பிடிக்க முடிந்தது. ஆங்கிலர் காலத்திலும் அதுதான் நடந்தது. வடக்கத்தி பனியாக்கள் முன்னாள் சென்னை மாகாணத்தின் பொருளியலைக் கைப்பற்ற முனைந்த காலகட்டத்தில் இங்குள்ள மேற்குடியினர் தாங்களும் தொழில்முனைவுகளில் ஈடுபட முயன்று அரசின் ஒப்புதல்களைப் பெற அலுவலகங்ககளுக்குச் சென்ற போது அலுவல்கங்கள் முழுவதையும் தம் கைப்பிடிக்குள் வைத்திருந்த பார்ப்பனர்களின் ஆடிய பேயாட்டம்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் வித்தானது. பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரசு எனப்படும் பேரவைக் கட்சியின் வளர்ச்சியால் கவலை அடைந்திருந்த ஆங்கில அரசு கொடுத்த வாய்ப்பால் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகிய நயன்மை(நீதி)க் கட்சி பல பெருந்தொழில்கள் தமிழகத்தில் உருவாக வழியமைத்தது மட்டுமின்றி கல்வியிலும் அரசுப் பணியிலும் ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, தேவதாசி முறையை ஒழித்தது.

காலவோட்டத்தில் நயன்மைக் கட்சி செல்வாக்கிழக்க அது பெரியார் கைக்கு வந்தது. பார்ப்பன - பனியா எதிர்ப்பு என்று கூறிவிட்டு பார்ப்படன எதிர்ப்பை மட்டுமே கையிலெடுத்துக்கொண்டார் பெரியார். ஆக பார்ப்பனியம் எனப்படும், உடலுழைப்பையும் தொழில்வல்லாரையும் இழிவுபடுத்தும் தமிழ் - இந்தியப் பார்ப்பனியம் இன்று முழு வலிமையுடன் தமிழகத்தை வேறு எந்த மாநிலத்தையும் விட பிடித்தாட்டுகிறது. அதன் உச்ச கட்டமாக வேலை இல்லாமல் கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் போது சில்லரை வேலைகளைச் செய்யக்கூட அயல் மாவட்டத்தினர் இங்கு சிற்றூர்கள் வரை இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது இங்கு யார் கண்களையும் உறுத்தவில்லை, எவர் கருத்திலும் தைக்கவுமில்லை. ஏற்கனவே இங்கு நுழைந்து அனைத்து வாணிகத் துறைகளையும் பிடித்துவிட்ட மார்வாரிகளோடு இந்தப் புது வந்தேறிகளும் சேர்ந்து எதிர்காலத் த்மிழகத்தில் உருவாகப் போகும் சிக்கல்கள் அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை.

இது இப்படி இருக்க, இதற்குத் தீர்வுதான் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

கல்வி வாழ்க்கை முழுவதும் தொடர்வது என்றால் இன்றைய கல்வி நிலையங்களில் புகட்டப்படும் எழுத்தறிவால் பயனே இல்லையா என்ற கேள்வி எழும். எழுத்தறிவுக்கு மனித வரலாற்று வளர்ச்சியில் முதன்மையான பங்கு உண்டு. அது என்ன? ஒவ்வொரு தலைமுறையும் தன் பட்டறிவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுதல் என்ற இன்றியம்மையாத பணியை எழுத்தறிவு செய்கிறது. நம முன்னோர் தாம் பட்டறிந்தவற்றை நமக்கு இட்டுச் செல்ல அவற்றை அடுத்த கட்டத்துக்கு நாம் உயர்த்தி எழுதி வைக்க, வரும் தலைமுறையினர் அதை உள்வாங்கி நாம் எய்தியதை விட ஓர் உயர்ந்த கட்டத்துக்கு தாம் மேலெழ என்றவாறு மனிதக் குமுகத்தை எழுத்தறிவு உயர்த்துகிறது. ஆனால் இந்தத் தொடர்நிகழ்வு எழுத்தறிவால் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே அதன் விடையாக இருக்கிறது. ஏனென்றால் நமது கல்விமுறையின் அமைப்பு அத்தகையது.

மனப்பாடம், பாராமல் படித்தல், பாராயணம் என்ற சொற்களால் குறிக்கப்படும் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இப்படிப்பட்டவர்களின் மூளை அமைப்பு ஒரு சரக்கறை எனப்படும் கிடங்கு போன்றது. நீங்கள் ஒரு பொருளை உள்ளே போட்டால் அதை எந்த மாற்றமும் இன்றி மீண்டும் எடுத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

வேறு சிலரின் மூளையமைப்பு பாராயணம் செய்யப் பொருத்தமற்றதாக, ஆனால் படித்ததன் உள்ளடக்கத்தை உள்வாங்கும் திறன் பெற்றதாக இருக்கும். மூளையினுள் சென்ற சரக்கு வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு தளங்க்ளில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும். ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவைப்படும் போது திரட்டப்பட்டிருக்கும் செய்திகள் கருத்துகளின் இணைவு(association of ideas) என்ற நிகழ்முறையில் செயற்பட்டு விடை கிடைக்கும். இது மேலே சொல்லப்பட்ட மனப்பாடத் திறனைவிட மேம்பட்டது. இன்று கணக்கு விடையின் ஒவ்வொரு அடியையும் கூட பாராமல் படித்து கக்குவோராகிய முதல் வகையினர் முன் அவர்களைவிட திறன்மிக்கோராகிய இரண்டாம் வகையினர் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றனர். இந்த இரு திறன்களும் ஒருவரிடமே வாய்க்கப்பெறுவது மிக அரிது.

இனி, இவ்விரு வகையினரும் வேலை வாய்ப்புத் தேர்வுகளுக்குச் செல்லும் போது பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள் பொது அறிவு என்ற தலைப்பில் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டவையே. ஆக இங்கும் மனப்பாடக்காரர்கள்தாம் வெற்றி பெறுவார்கள். இவர்களுக்குத் தங்கள் வலுக்குறைவு, அதாவது சொந்த சிந்தனைக் குறைவு நன்றாகவே தெரியும். அதனால் மேலே உள்ளவர்கள், அதிகாரிகளாயினும் அரசியல்வாணர்களாயினும் அவர்களுக்கு இசைந்து தலையாட்டித் தங்களுக்குச் சிக்கல் இல்லாமல் மட்டுமல்ல நல்ல பலன்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். அதாவது பதர்களைப் பானையில் போட்டு அவித்து நெல் குத்திக்கொண்டிருக்கிறது இந்தியக் குமுகம்.

சொந்தச் சிந்தனை உள்ளவன் தன்னம்பிக்கை உள்ளவனாக இருந்தால் மேலே உள்ளவர்கள் தவறான செயல்களில் தங்களை ஈடுபடச் சொல்லும் போது அது குறித்த உண்மையான செய்திகளைக் கூறி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டு வாழ்க்கையில் பின்தங்கிப் போகிறார்கள். உண்மையான திறமையுள்ள தனிமங்களெல்லாம் புறந்தள்ளப்பட்ட தமிழக, இந்தியக் குமுகம் உலகின் கடைக்கோடியை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சிக்கலை ஆங்கிலர் எப்படி எதிர்கொண்டனர் என்று பார்ப்போம்.

ஆங்கிலராட்சிக் காலத்தில் பொறியாளர்களுக்கும் தொழில்நுட்பத்துறையினருக்கும் தனிச் சிறப்பு அளித்து பொது ஆள்வினைத்துறையாகிய வருவாய்த்துறையை ஒதுக்கி வைத்திருந்தனர். ஊருக்கு ஊர் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக இருந்த I.B. எனும் ஆய்வு மாளிகையில் ஒரு மாவட்ட ஆட்சியர் இருந்தாலும் பொதுப்பணித்துறைப் பொறியாளர் வந்தால் காலிசெய்து கொடுக்க வேண்டும். இன்று அந்த வளமனைகள் அனைத்தும் வருவாய்த்துறையினரிடம் அமைச்சர்களும் அரசியல்வாணர்களும் வைப்பாட்டிகளுடன் கும்மாளம் அடிக்கும் இடங்களாக மாறிவிட்டன. இப்போது ஆட்சியர் அலுவ்லகத்தில் நடக்கும் பாசன மாநாடு அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியாளர் அங்கு வந்து கலந்துகொள்வார்.

அன்று பாசன மூலங்களான ஆறுகள், ஓடைகள், குளங்கள் கால்வாய்கள் அணைகள் போன்றவற்றை ஆய்வுசெய்து வரைபடங்கள் பதிவேடுகள் உருவாக்கும் பொறியாளர்களுக்கு எண்ணற்ற வசதிகள் செய்துகொடுத்தனர். ஆங்கிலர் 150 ஆண்டுகளில் உருவாக்கித் தந்த அளப்பரிய மலைக்க வைக்கும் ஆவணங்களைப் பாதுகாக்கக் கூட மகா எத்தன் காந்தியின் வழிவந்தவர்களுக்குத் துப்பில்லை. மார்வாரிகள் - குசராத்தியர் தவிர பிறர் அனைவரும் இராட்டை சுற்றியும் வரட்டி தட்டியும வாழ வேண்டும் என்றுதான் சொல்லிவிட்டானே அந்தக் கொடியவன்.

இன்று இத்தகைய ஆவணங்கள் உருவாக்கத் தேவைப்பட்டால் ஊழல் செய்து மேலிடத்துக்குக் காசு பெற்றுக் கொடுக்காத நேர்மை, அல்லது கிடைத்தது அனைத்தையும் தானே சுருட்டிவிட்டு மேலே எதுவும் தராதவர்கள் என்று கழித்துப்போட்டவர்களைத்தான் அப்பதவிகளில் அமர்த்துவர். எந்த வசதியும் செய்து கொடுக்கமாட்டார்கள், பயணப்படி கூட ஒழுங்காகக் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் உருவாக்கும் ஆவணங்கள் அனைத்தும் போலியாகத்தான் இருக்கும். இது போன்ற பின்னணிதான் இத்தனூண்டு சிறிய இங்கிலாந்து இம்மாம் பெரிய இந்தியாவை இங்குள்ள போர்வீரர்களைக் கொண்டே கைப்பற்றியதன் கமுக்கம்.

படிப்பினை: உடலுழைப்புக்கும் உள்நாட்டு அறிவியல் - தொழில்நுட்பத்துக்கும் மதிப்பளித்து ஊக்கமூட்ட வேண்டும். ஆங்கிலன் இதில் தன்னாட்டான அடிமை நாட்டான் என்று வேற்றுமை பாராட்டவில்லை. இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வாழந்து நோபல் பரிசை ஆங்கிலன் காலத்தில்தான் சி.வி.இராமனால் வாங்க முடிந்தது. பெரும் அணைகளையும் கட்டுமானங்களையும் ஆங்கிலர் காலத்தில் வாழ்ந்த இந்தியரான பொறியாளர் விசுவேசரையாவால்தான் இயற்ற முடிந்தது . பின்னுள்ளவை எல்லாம் அயலவனுக்குப் பணம் கொடுத்து அதில் தரகு பெற்ற பொறுக்கி அரசியல்வாணர்களின் கைவண்ணமே. பள்ளி இறுதித் தேர்வில் தோற்ற தமிழகத்து இராமானுசத்தின் மேதைமை வெள்ளையர்கள் இல்லையென்றால் இந்தக் குமுகக் குப்பையினுள் புதையுண்டு போயிருக்குமே!

இவ்வாறு நமது கல்வி முறை தரகு பெறும் கூட்டத்திடம் சிக்கி திசை அறியாமல் திகைத்து நிற்கிறது. இந்த முட்டுக்கட்டையிலிருந்த எப்படி மீள்வது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது குறிப்பிட்ட திறன்களோடும் குறைகளோடும் பிறக்கின்றன. திறன்களை வளர்த்து குறைகளைக் களைந்து குமுகத்துக்கு மிக அதிகமாகப் பயன்படும் ஒரு குடிமகனாக அக்குழந்தையை உருவாக்க வேண்டியது கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த குறிக்கோளை மனதில் கொண்டு பார்த்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர் மிகத் திறமையான குழந்தை உளவியல் வல்லுநராக இருக்க வேண்டுமென்பது விளங்கும். ஒரு குமுகத்தின் அனைத்துக் குழந்தைகளின் திறமைகளையும் வளர்த்து குறைபாடுகளை, குறிப்பாக நடத்தை மற்றும் உளவியல் குறைபாடுகளை நீக்குவது அக்குமுகத்துக்கு ஒரு மீ உயர்வான மனித வளத்தை வழங்கும். அதனை உருவாக்க அக்குமுகம் தன் வருமானத்தில் எவ்வளவு கூடுதலான விகிதத்தைக் கூடச் செலவிடலாம்.

ஆசிரியப் பணி என்பது அயர்வூட்டும் ஒரு பணி. பிற வேலைகளில் வீட்டிலிருந்து புறப்பட்டோம் அலுவலகம் அல்லது வேலைக்களம் சென்றோம் வேலை செய்தோம் திரும்பினோம் என்று முடிந்துவிடும். ஆனால் ஆசிரியர் பணி, குறிப்பிட்ட அகவை உடைய வெவ்வேறு தொகுப்பிலான மாணவர்களைக் குறிப்பிட நேரம் கட்டுப்படுத்தி கற்பித்தல் என்ற தொழிலைச் செய்வது மிக எரிச்சலூட்டும் பணியாகும். எனவே படித்து வேறு வேலை கிடைக்காதவர்கள் நாடும் பணியாக ஆசிரியர் பணி உள்ளது. அதே நேரத்தில் அந்தந்த அகவைக் குழந்தைகளின் உளவியலில் நல்ல தெளிவுள்ளவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களுக்கு உளவியல் அழுத்தங்கள் கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது உளவியல் கலந்துரைகள் வழங்கி உளவியல் அழுத்தங்கள் ஏதாவது இருந்தால் அதைத் தளர்த்த வேண்டும்.

ஆனால் இன்றைய நிலையில் வெளிப்படையான உளவியல் கோளாறுகளுக்கு உட்பட்டவர்களுக்கே கலந்துரை மூலம் பண்டிதம்(சிகிச்சை) செய்யும் உளவியல் மருத்துவர் நம் நாட்டில் ஒருவர் கூடக் கிடையாது. நோயாளியின் உணர்வுகளை மரத்துப்போக வைக்கும், அதாவது சிக்கல்களிலிருந்து தப்பி ஓட வைக்கும் மனநிலையை உருவாக்கும் ஒரு வகை மயக்கம் தரும் மாத்திரைகளையே அவர்கள் தருகிறார்க்ள். இந்தப் பின்னணியில் நம் உளவியல் மருத்துவத்துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரவும் வேண்டியுள்ளது. இந்த ஆயத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தொடக்கக் கல்வியிலிருந்து எப்படி கல்வித் துறையைச் சீரமைக்கலாம் என்று பார்ப்போம்.

குழந்தை தாயின் மடியிலிருந்து இறங்கி உட்காரத் தொடங்கியதும் இயற்கையோடு உறவாடத் தொடங்குகிறது. தன் சிறுநீரையே தொட்டும் தரையில் தேங்கி நற்கும் சிறுநீரைக் கையால் தப்பியும் வாயில் வைத்துச் சுவைத்தும் பார்க்கிறது.(இப்போது சிறுநீரை உறிஞ்சவென்று பஞ்சு அட்டைகள் வந்துவிட்டதால் இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது). அதைப் போலவே மலத்துடனும் குழந்தைகள் விளையாடுகின்றன.

குழந்தை தவழ்ந்து வாயில்படி வழியாக இறங்கி வெட்டவெளிக்கு வந்து அங்கிருக்கும் அனைத்து வகைப் பொருள்களையும் தொட்டும் சுவைத்தும் தன் அறிவை வளர்த்துக்கொள்கிறது. குழந்தையின் இச்செயல்களைக் கூர்ந்து கவனித்தோமாயின் மனிதன் குரங்கு நிலையிலிருந்து மேல் நோக்கி நகர்ந்த போது தன்னைச் சுற்றியிருந்த உலகை எவ்வாறு அணுகி நுணுகி ஆய்ந்து இயற்கையில் உள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்திருப்பான் என்பது நம் மனக்கண் முன்னால் ஓடும். சித்தர்கள் எனப்படும் செயல்வீரர்கள்(குண்டிலினி எனப்படும், உட்கார்ந்து உலகை அளப்பது பற்றிக் கூறியுள்ள போலிகளை அல்ல, மருத்துவம், வானியல் பற்றிய நம் அறிவியல்களைத் தோற்றுவித்தவர்கள் பற்றி) காடு மேடுகளெல்லாம் அலைந்து மூலிகைகளின் வேர் முதல் விதைவரை ஆய்வு செய்தவர்களும், இடுகாடு, சுடுகாடுகளுக்குச் சென்று பிணங்களை அறுத்துக் கூறுபோட்டு உடலியல், நரம்பியல், எலும்பியல் என்று வகுத்தறிந்தவர்களும் இன்றைய மேலையர் நாகரிக வளர்ச்சியில் ஆப்பிள் பழம் வீழ்வதைக் கண்டு ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன் முதற்கொண்டு புளோரின் என்ற வளியின் மணத்தை அறிய உயிரை விட்ட அறிவியலாளர் வரை நம மனக்கண் முன்னால் வருவர். எனவே குழந்தைகளின் இந்த ஆய்வுகளுக்கு நாம் வாய்ப்பளிக்கும் அதேவேளையில் அவர்களின் இந்த விளையாட்டை பாதுகாப்பு எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தவும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குழந்தைகள் உரிய பருவம் எய்தும் போது மண்ணில் விளையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும். மாசு மிகுந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்க்கும். அது போல் பள்ளியிலும் குழந்தைகளை இயற்கைச் சூழலில் நடமாட விட்டு அவர்கள் இயற்கையோடும் தன்னையொத்த பிள்ளைகளோடும் ஆசிரியர்களோடும் நடந்துகொள்ளும் முறைகளை வைத்து அவர்களின் ஆர்வங்கள், திறமைகள், மனச்சாய்வுகள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். உரிய அகவையில் மொழிப்பயிற்சியும் அளிக்க வேண்டும்.

மொழிப்பயிற்சியில் எந்த முறை சிறந்ததென்று பார்ப்போம்.

ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்வரை குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன் வீட்டில் ஓர் ஆசிரியரை வரவழைத்து அவர் பூசை செய்து ஒரு பனை ஓலை ஏட்டில் எழுத்துகளை எழுதி தரையில் உமியை அல்லது மணலைப் பரப்பி குழந்தையின் விரலைப் பிடித்து ஒன்றிரண்டு எழுத்துகளை எழுதுவார். இதற்கு ஏடு தொடங்கல் என்று பெயர். அந்த ஏட்டை துப்பாக்கியைத் தோளில் சார்த்திச் செல்வதைப்போல் குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டு செல்வர். அங்கு முதலில் ஆனா, ஆவன்னா சொல்லித்தருவர். குறிலுக்கு 'னா'வும் நெடிலுக்கு 'வன்னா'வும் பின்னிணைப்புகளாக வரும். உயிரெழுத்துகள் ,பின்னர் மெய்யெழுத்துகள், இறுதியில் உயர்மெய் எழுத்துகள் ஆகியவை சொல்லித்தரப்படும். அதனோடு கூடவே ஒன்று, இரண்டு என்று எண் வரிசையும் கற்பிக்கப்படும். எழுத்துகளுக்கு அரிச்சுவடி என்றும எண்ணுக்கு எண்சுவடி என்றும் சிறு புத்தகங்கள் உண்டு. எண்சுவடியில் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் என்று வாய்பாடுகள் உண்டு. அவை அனைத்தையும் ஏளக்குறைய அனைத்துப் பிள்ளைகளும மனப்பாடம் செய்துவிடுவர். மழலைப் பருவத்தில் படித்த அவ்வாய்பாடுகளும் அரிச்சுவடியும் நினைவு ஆற்றலை இழக்கும் முதுமையில் கூட மூளையில் பதிந்திருக்கும். இதன் அடுத்த கட்டமாகத்தான் அணில், ஆடு போன்று எழுத்துக்கும் சொல்லுக்கும் உள்ள உறவுகள் பயிற்றுவிக்கப்படும்.

நாள் செல்லச் செல்ல, பிரிட்டனின் செல்வாக்கு இந்தியாவில் குறைந்து அமெரிக்கச் செல்வாக்கு ஏறியது. எனவே 'புரட்சி'கர மாற்றங்களை அமெரிக்காவின் கையாட்களான ஆட்சியாளர்கள் புகுத்தினர். ஒரு குழந்தையின் இயற்கை ஆற்றல்களை அழிக்கும் ஒரு விரிவான திட்டத்தின் தொடக்கமாகும் இது. இப்போது மனப்பாடம் செய்யும் குழந்தையின் ஆற்றல் முழுவதும் செயலுக்கு வராமல் முடக்கப்பட்டது. அணில், ஆடு என்பதிலிருந்தே எழுத்துக கல்வி தோடங்கப்பட்டது.

இப்பொழுது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. பாராமல் படித்தல் அல்லது மனப்பாடம் செய்தல் என்பது சிந்திக்கும் ஆற்றலைச் சிதறடித்துவிடும் என்றாயே இப்போது அது ஓர் ஆற்றல் அதைப் பேண வேண்டும் என்கிறாயே என்பது அது. அதற்கான விடை இதோ:

ஒரு குழந்தை பேசத் துவங்கும் போது முதலில் அம்மா என்ற சொல்லைக் கற்றுக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கட்டத்தில் அக்குழந்தை ஓயாமல் அம்மா, அம்மம்மம்மா என்று கூறிக்கொண்டே இருக்கும். திடீரென்று உரக்க அம்மா என்று கத்தும் ஓடிப்போய்ப் பார்த்தால் அது சொல்பயிற்சிதான் என்பது புரியும். ஒரு அவயல்கிளவி(கெட்ட வார்த்தை) அதற்குக் கிடைத்தாலும் அதையும் அவ்வாறே கையாளும். ஆக இது மூளை பயன்பாட்டு வளர்ச்சியில் ஒரு கட்டம். அதை நாம் பயன்படுத்தாமல் போனால் பயன்பாட்டுக்கு வராத அந்தத திறன் நமக்கு வாய்க்காமலே போகும். இப்போது ஒரு சராசரி கூட்டலையே செய்து முடிக்க குழந்தைகள் படும்பாடு பார்க்க முடியவில்லை. சிறிது மேல் வகுப்புகளுக்குப் போகும் போது கணித்தான்(கால்குலேட்டர்) போன்ற கருவிகளைக் கையாளத் தொடங்கிவிடுகின்றனர். இந்தக் கருவிகளைச் செய்து சந்தைக்கு விடும் அயல்நாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களால்தான் கல்வி முறையில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன். இந்த மாற்றங்கள் நம் நாட்டு நிலைமைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப நாம் மேற்கொண்டவையல்ல.

அடுத்து கல்விக்கூடம் அமைய வேண்டிய சூழலைப் பார்ப்போம்.:

இன்று உலகளவில் கல்வி என்பது உடலுழைப்பின்றி இருக்கையில் அமர்ந்து செய்யும் "வேலை" ஒன்றைப் பெறுவதற்காகத் தம்மைத் தகுதி பெறச் செய்வதாகவே கருதப்படுகிறது. அண்மையில் சத்துணவுப் பணியாளராகிய ஒரு பெண்ணிடம் பேசும் போது பத்தாவது படிக்கும் தன் மகளை இ.ஆ.ப. தேர்வுக்கு ஆயத்தப்படுத்தப் போவதாகக் கூறினார். பொதுவாக இது போன்ற பட்டங்கள் இப்போது மரபு வழி வருவது இயல்பாகிவிட்டது. அதற்கு அடுத்தபடி அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு. அங்கொன்றும் இங்கொன்றும் ஏழைகளில் ஒருவர் வந்துவிட்டால் நாட்டிலுள்ள ஊடகங்கள் அனைத்தும் அதனை ஊதிப் பெருக்கி முயற்சியுள்ள அனைவருக்கும் இது போன்ற பட்டங்கள் காத்திருப்பது போன்ற பொய்த்தோற்றத்தை உருவாக்குகின்றன. மகளை தொழிற்பயிற்சி எதிலாவது சேர்க்குமாறு நான் கூறிய போது அந்தப் பெண் தன்னை நான் இழிவுபடுத்தியது போல் உணர்ந்தாள். இதற்காக நான் அவளைக் குறைகூறுவதற்கில்லை. இன்றைய நிலை அது.

இன்று நம் நாட்டில் எல்லாமே கலைந்து ஒரு புதிய மறுசீரமைப்புக்காகக் காத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து பெரும் நிலக்கிழார்களின் நிலங்கள் அங்கு குத்தகைக்குப் பயிரிட்ட குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவர்களுக்குக் கிடைத்த துண்டுதுக்காணி நிலங்களில் பயிரிட்டு தங்கள் வயிற்றுப்பாட்டை பார்க்க முடியாமல் வயல்களை விற்றுவிட்டு நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த தொழிற்சாலைகளை நோக்கிச் சென்றனர் அக்குடியானவர்கள். நிலங்களை வாங்கிய புதுப்பணக்காரர்கள் பெரும் பண்ணைகளை உருவாக்கி கருவிகள் மூலமும் புதிய தொழில்நுட்பங்கள் மூலமும் வேளாண்மையை வளர்த்தனர். பழைய இருப்பிடங்கள் கலைந்து புதிய நகரமைப்பு உத்திகளில் புதிய நகரங்கள் உருவாயின.

இங்கிலாந்தில் நிலக்கிழார்கள் பண்ணையாள்களைத் துரத்திவிட்டு கம்பிளி ஆட்டுப்பண்ணைகளை உருவாக்கினர். உணவு அமெரிக்காவிலிருந்து வந்தது. பண்ணைகளிலிருந்து வெளியேறிய பண்ணையாட்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கும் புதிய தொழில் நகரங்களும் குடியிருப்புகளும் உருவாயின.

ஆனால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில இருந்தது அழிந்திருக்கறது புதியது உருவாகவில்லை. உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் இங்கு எவருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. அதை உருவாக்கவும் அதன் உருவாக்கத்திலேயே புதிய கல்வி முறையை, உண்மையான கல்விமுறையை வளர்த்தெடுக்கவும் ஆன உத்தியை வகுக்க முயல்வோம்.

கல்வியில் மாற்றம் கொண்டுவர நாம் எங்கிருந்து தொடங்குவது?

எந்த உயிரும் வாழ்வதற்கு முதல் தேவை உணவு, அது நிறைவேறிய பின் அடுத்துத்தான் மானம் காக்கும் உடையும் உடலைக் காக்கும் உறைவிடமும். இவை நிறைவேறினால்தான் மனிதன் சிந்திப்பான். மனிதன் வயிறு நிறைந்தால்தான் சிந்திப்பான் என்றார் மார்க்சு. ஆனால் தமிழகத்தானுக்கு பட்டினி அச்சம் இன்றும் அகலவில்லை, அதனால்தான் அவனது சிந்தனை பணம் சேர்ப்பதில் மட்டும் நிலைத்துவிட்டது. அறிவுசீவிகள் என்போரும் அறிவை விற்பதற்காகவே சீவிவிடுகிறார்கள்.

1917இல் நடைபெற்ற உருசியப் புரட்சிக்குப் பின் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான ஐரோப்பியர்கள் அவற்றைப் பூட்டிவிட்டு ஓடிவிட தொழிலாளர்கள் திக்கு தெரியாமல் திகைத்து நின்றனர். லெனின் அவர்களை அணுகி தொழிற்சாலைகளை அவ்வவற்றின் தொழிலாளர்களே கூட்டாக எடுத்து நடத்த அறிவுரை கூறினார். அவர்களுக்கு உணவுக்கு என்ன செய்வது? உழவர் பெருமக்களை அணுகி தங்கள் விளைபொருட்களில் ஒரு பகுதியை நகரத்திலுள்ள தொழிலாளருக்கு அரசு நிறுவும் விலைக்குக் கொடுத்துவிட்டு மீதியை வெளிச்சந்தையில் விற்றுக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். தொழிற்சாலைகள் அவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் என்றும் கூறினார். இவ்வாறுதான் அங்கு நிலைகுத்திப்போன பொருளியல் நடவடிக்கைகள் மீட்கப்பட்டன. இந்தப் பின்னணியில் நாமும் உணவை உருவாக்கும் வேளாண்மையிலிருந்து தொடங்குவோம்.

நம் நாட்டில் பாட்டாளிகளின் கட்சி எனப்படும் பொதுமைக் கட்சி நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்பு என இரண்டு முழக்கங்களை முன்வைத்தது(1962க்கு அப்புறமே இரண்டாக அக்கட்சி உடைந்தது. வலது கட்சி உருசிய கைக்கூலி, இடது கட்சி சீனத்தின் அதன் மூலம் அமெரிக்காவின் கையாள்). அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட நிகர்மை(சோசலிச) அனைத்துலகியம் என்ற அமைப்பின் கீழ் இயங்கிய கட்சி இந்தியாவில் இருந்த ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளான நிகர்மைக் கட்சி. பொதுமைக் கட்சிக்கும் நிகர்மைக் கட்சிக்கும் செயல்திட்டத்தில் எந்த வேறுபாடும் கிடையாது.

இந்த இரண்டு கட்சிகளும் வைத்த குத்தகை ஒழிப்பை அரசு ஏற்றுக்கொண்டு ஒரு சட்டம் இயற்றியது. அதன் படி ஒரு குத்தகை உழவன் ஒழுங்காக வாரம் அளந்துவந்தால் அவனிடமிருந்து நிலத்தைப் பிடுங்க முடியாது. மூன்று முறை தகுந்த காரணமின்றி வாரம் செலுத்தவில்லை என்றால் பிடுங்கிவிடலாம் எனபதாகும். அத்துடன் உ்டைமையாளன் நிலத்ததை விற்றால் விற்ற பணத்தில் 50%ஐ குத்தகை உழவனுக்கு வழங்கிவிட வேண்டும், அல்லது பாதி நிலத்தை அவனுக்க வழங்க வேண்டும் அல்லது பாதி நிலத்துக்குப் பண்த்தை வாங்கிவிட்டு மொத்த நிலத்தையும் உழவனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது. நிலத்தில், செலவுகள் அனைத்தையும் தானே நேரடியாக ஏற்றுக்கொண்டு வேளாண்மை செய்பவனுக்கே நிலம் உரிமையாக இருக்க வேண்டும் என்பது குத்தகை ஒழிப்பின் அடிப்படை நோக்கம். அப்படியானால்தான நிலத்தின் முழு விளைதிறனும் செயலுக்கு வரும் என்பது அடிப்படை. ஆனால் இங்கு குத்தக்கை ஒழிப்புச் சட்டம் என்பது குத்தகை நிலைப்புச் சட்டமாகவே பிறவி எடுத்தது.

அடுத்து நில உச்சவரம்பு. நன்செய் நிலங்கள் 12½  ஏக்கர்களும் புன்செய் நிலங்கள் 25 ஏக்கர்களும் என வரம்பு நிறுவப்பட்டது. அதற்கு மிஞ்சிய நிலங்களை இனங்கண்டு கைப்பற்ற என்று வருவாய்த்துறையில் தனிப்பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் குளங்களில்தாம் கட்டப்பட்டனவே அன்றி நில உச்சவரம்பில் கைப்பற்றியவை என்று ஒரு சதுர அடி கூட சுட்டப்படவில்லை. நம் பொதுமைக் கட்சித் தோழர்களோ, ஏழைகளுக்கென்றும் தொழிலாளர்களுக்கென்றும் இலவய வீட்டுமனைகளுக்காக குளங்கள், வாய்க்கால்கள், சாலைப் புறம்போக்கு நிலங்களைத்தான் காட்டினார்களே அன்றி தங்கள் அருஞ்செயலாக மார்தட்டிக்கொண்ட நில உச்சவரம்புச் சட்டத்தின் படி மீட்கப்பட்ட நிலம் என்று ஒரு காலடி தடத்தைக்கூடக் காட்டவில்லை.

இந்தப் போலி குத்தகை ஒழிப்பு, நில உச்சவரம்பு நடைமுறையில் நிலங்கள் பொருளியல் வலிமையற்ற ஏழை பாழைகளிடம் துண்டுதுக்காணி நிலங்களாக வந்த சூழலில்தான் அமெரிக்காவின் போர்டு அறக்கட்டளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 13 மாவட்டங்களை எடுத்துக்கொண்டு அங்கு இலவயமாக, வீரிய வகைகள் என்ற பெயரில் கலப்பு நெல்கள், சீமை உரம், பூச்சி மருந்துகளை இலவயமாக வழங்கி கொஞ்சம் கூடுதல் விளைச்சலைக் காட்டியது. இந்தத் திட்டத்துக்கு "முனைப்பான ஊரக வளர்ச்சித் திட்டம" (I.R.D.P. - Intensive Rural Development Programme) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. அடுத்த கட்டமாக போர்டு அறக்கட்டளை வெளியேறிவிட நாடு முழுவதும் அரசே மானிய விலையில் விதை, உரங்கள், பூச்சி மருந்துகள் வழங்கும் "முனைப்பான வேளாண்மை வளர்ச்சித் திட்டத்"தை(I.A.D.P.) நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

காவிரிப் படிகைப் பகுதி முழுவதும் தஞ்சை என்ற ஒரே மாவட்டமாக இருந்த அந்தக் காலகட்டத்தில்(1950 - 60களில்) கிட்டத்தட்ட 90,000 ஏக்கர்கள் நன்செய் நிலங்கள் கொண்ட குன்னியூர் சாம்பசிவ ஐயர், அதற்கடுத்து, இன்றைய சி.கே.வாசனின் தந்தையான சி.கே.மூப்பனார் ஆகிய கருப்பையா மூப்பனார் என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்த பெருநில பூதங்களுக்குத் தங்கள் நிலங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதே தெரியாது. இன்று வி.ஏ.ஓ. எனப்படும் ஊர்க் கணக்குப்பிள்ளையாகிய கர்ணத்துக்கு இணையாக ஒவ்வொரு வருவாய் ஊரிலும் ஒவ்வொரு கோயில் நிலங்களுக்கும் ஒவ்வொரு பண்ணையார் நிலங்களுக்கும் தனித்தனி கணக்குப்பிள்ளைகள் உண்டு. நிலங்கள் குத்தகை, உள்குத்திகை என்று ஒன்றுக்கு மேற்பட்ட கைகளுக்குச் சென்று இறுதியில் பயிர் செய்யும் உழவன் கையில் ஓர் ஏக்கர், அரை ஏக்கர் அளவுக்கு வந்து சேரும்.

நில உச்ச வரம்புச் சட்டத்தை ஏமாற்ற போலிப்பெயர்களில் நிலத்தை மாற்றினார்கள் இப்பெரும் பண்ணையார்கள்.(பிற்காலத்தில் இப்போலி உடைமைகளை இனங்கண்டு மீட்பதற்காக ம.கோ,இரா. காலத்தில் கொண்டு வந்த சட்ட்ததுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் பார்த்துக்கொண்டார் வாசனின் தந்தை கருப்பசாமி மூப்பனார்.)

இந்தக் கால கட்டத்தில் 50, 100 ஏக்கர்கள் நிலம் வைத்துச் சொந்தப் பயிர் செய்த சிறு பண்ணையார்கள் வேளாண்மையில் அறிவியலைப் புகுத்தும் அவாவில் அப்போதுதான் புதிதாகத் தொடங்கியிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர். படிப்பு முடிந்து வெளியே அவர்கள் வந்த போது நிலங்கள் சிதறடிக்கப்பட்டு அவர்கள் கைகளை விட்டுப்போயிருந்தன. அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேளாண் வளர்ச்சி அதிகாரிகள் என்ற பெயரில் சீமை உர, பூச்சி மருந்து நிறுவனங்களின் படைப்புகளைப் பரிந்துரைக்கும் முகவர்களாக முடக்கப்பட்டனர்.

இதற்கு அடுத்த கட்டமாகத்தான் கொடுங்கோலன் லால் பகதூர் சாத்திரி வேளாண் விளைபொருள் நடமாட்டத்துக்கும் இருப்பு வைக்கவும் நல்ல விலை தருவோருக்கு விற்கவும் தடை விதித்து வேளாண்மையை ஒரு தீண்டத்தகாத தொழிலாக்கினான்.

வயலுக்குப் போகாத பெரும் பண்ணையார்கள் சென்னையில் இசை அரங்குகளிலும் பரத்தையர் ஆட்டங்களிலும் கூட்டங்களிலும் கூத்தடிக்க இந்த சிறு பண்ணையார்களின் வருமானம் சென்னையில் முதலீடாக, பனியாக்களுக்குப் போட்டியாக நுழைந்ததைப் பார்த்த பின்தான் நம் பாட்டாளியப் புரட்சியாளர்களான பொதுமைக் கட்சியினரும் அமெரிக்க முகவர்களான நிகர்மைக் கட்சியின்ரும் நில உச்சவரம்பு, குத்தகை ஒழிப்புப் போராட்டங்களில் இறங்கினர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஆக தாழ்த்தப்பட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினரில் ஏழைகள் கைகளில் இன்று வேளாண்மை சிக்கி ஆட்சியாளர்களின் வகைவகையான கொடுமைகளால் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த அழகில் நம் பொதுமைப் புரட்சியாளர்கள் வேளாண் தொழிலாளர்களைத் திரட்டி கூலி உயர்fவுப் போராட்டங்களை நடத்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்

இன்று நிலம் வைத்திருக்கும் உழ்வன் கூலி வேலைக்குப் போகாமல் தன் அன்றாடப் பாட்டை ஓட்ட முடியாது. கணிசமாக நிலம் வைத்திருக்கும் வசதியுள்ளவர்களும் வேறு தொழில் ஒன்றில் ஈடுபடாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது. வயலிலிருந்து வீட்டுக்கு நெல் வரும் பெருமைக்காகவே இவர்கள் வயல் வைத்திருக்கின்றனர். இன்று அவர்களும் அருகி வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் முதலில் வயிற்றுக்குச் சோறிடும் வேளாண் தொழிலை மீட்கும் ஓர் உத்தியை முன்வைத்து அதைச் சார்ந்து தோன்றி கிளைத்து வளரும் ஒரு கல்வி முறையைச் சிந்திப்போம்..

நில உச்ச வரம்பு தவச(தானிய) வேளாண்மைக்கு மட்டுமே. பெருந்தோட்டங்களுக்கும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட வாணிகப்பயிர்களுக்கும் பொருந்தாது என்ற உண்மையை நம் பாட்டாளியப் புரட்சியாளர்கள் சட்டத்தினுள் புகுந்து அறிந்துகொள்ள முடியாத எளிய மக்களிடமிருந்து மறைத்தார்கள். இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாலிநோக்கம் பகுதியில் டாட்டாக்கள் அந்தக் காலத்திலேயே 20,000 ஏக்கர்கள் வாங்கி உப்பளம் நடத்தி தமிழக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் மக்களின் உடல் நலத்துக்க் கேடுதரும் அயோடின் உப்பை மக்களின் தலைகளில் கட்டுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் 100 அல்லது 200 ஏக்கர்களுக்குக் குறையாத பண்ணைகளை உருவாக்க வேண்டும். ஆடு மாடுகள் புக முடியாத அளவில் சுற்றி வலிமையான வேலி அமைக்க வேண்டும். அவற்றில் குறைந்தது 10%க்குக் குறையாத பரப்பில் ஓர் ஓரத்தில் காடு வளர்க்க வேண்டும். ஒன்றை ஒட்டி ஒன்றாக பண்ணைகள் அமையும் போது அவற்றிலுள்ள காட்டுப்பகுதிகள் ஒன்றையொன்று தொட்டுக்கிடக்குமாறு அமைய வேண்டும். பாறை மிகுதியாக உள்ள இடங்களில் ஆல், அத்தி அரசு, முருங்கை, முள்முருங்கை, உசிலை போன்ற பசும் மரங்களை நட்டால் அவற்றின் வேர்க்ள் பாறைகளைப் பிளந்து மண்ணை மெனமையாக்கும்.

பண்ணையில் ஆடு மாடுகளுக்குத் தொழுவங்கள் அமைக்க வேண்டும். தொழுவங்களில் நாட்டுவகை கால்நடைகளைத்தான் வளர்க்க வேண்டும். அவற்றின் தீவன்த்துக்கு அங்கேயே தீவனப் புற்களையும் மரங்களையும் வளர்க்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல் ஒன்றோ பலவோ கிணறுகள் அமைக்க வேண்டும். மாட்டுச் சாணத்திலிருந்து எரிவளி எடுத்து அடுப்புக்கும் விளக்குக்கும் முடிந்தால மின்சாரம் எடுக்கவும் பயன்படுத்தலாம்.

நிலக்கிடப்புக்கு ஏற்றாற் போல் ஒரு சிறு குளம் அமைக்க வேண்டும். அண்டை ஊர்களில் சேரும் மட்காத குப்பைகளால் ஒரு சிறு குன்றையும் அமைக்கலாம். அதிலும் காடு வளர்க்கலாம் இவை அனைத்தும் அந்நிலத்தில் விழும் மழை நீரை நிலத்தின் மேலும் அடியிலும் பிடித்துவைத்து மண்ணின் நில நீர் வளத்தைப் பெருக்கும்.

எஞ்சியுள்ள நிலத்தில் நீர் வளத்துக்கு ஏற்ப நன்செய்யோ புன்செய்யோ பயிர் வளர்க்க வேண்டும். நன்செய் நிலங்களில் கூட அவ்வப்போது புன்செய்ப் பயிர்களை மாற்றுப்பயிராக இட வேண்டும்.

கிடைக்கும் விளைபொருட்களை அப்படியே சந்தைக்கு விடுக்கக் கூடாது. முடிந்த அல்லது பகுதி முடிந்த பொருளாகவோதான் விடுக்க வேண்டும். பண்ணையின் ஒட்டுமொத்த அணுகல், அதில் பணியாற்றுவோர் ஆண்டு முழுவதும் வேலை செய்வதாக இருக்க வேண்டும். அதனால் ஊழியர்களுக்கு,  பண்ணையில் மிகக் குறைந்த இடம் பிடிக்கக் கூடிய அதே வேளையில் தூய்மையான சூழலில் பராமரிக்கத்தக்க அடுக்ககம் போன்ற வீடுகள் அமைக்க வேண்டும்.

இது போன்ற ஒரு திட்டம் தொடங்குவதானால் முதலில், நம்பகமான நீர்வளமும் வளமான மண்ணும் உள்ள இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னோடியான இத்திட்டம் தோல்வியில் முடிந்து பிறர் எவரும் இம்முயற்சியில் ஈடுப்படுவதைத் தடுப்பதாக அமைந்துவிடக்கூடாது.

உடனடியாக ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த முன்னோடித் திட்டத்துக்குப் பொருத்தமானவர்களல்ல. இதை வெற்றியுடன் நிறைவேற்றுவதன் மூலம் பிறரையும் இது போன்ற முயற்சிகளில் இறங்க ஊக்கமூட்டுவதை ஒரு குமுகப் பணியாக மேற்கொள்ளும், பொதுப்பணியில் நாட்டமும் பொருளியல் வலிமையும் உள்ளவர்கள்தாம் ஈடுபட முடியும். ஒத்த கருத்துட்டைய பலர் ஓன்று சேர்ந்து ஒரு பங்கீட்டு நிறுவனமாக அமைந்தும் செயல்படலாம்.

வெளிநாடுகளிலிருந்து தன்னார்வத்தொண்டு என்ற பெயரிலோ அரசுகளிடமிருந்தோ பணம் பெற்று இத்திட்டத்துக்கு முயலக்கூடாது. அயலகத்தில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த, தமிழக நலம் நாடுவோர் இம்முயற்சியில் பங்கேற்பவராக இருப்பதை வரவேற்கலாம்.

இந்த இயற்கைக் களத்தின் பின்னணியில் மழலைகளின் கல்வியை, அதாவது மழலைகள் இயற்கையையும் அவர்களை நாமும் அறிந்துகொள்ளும் "தொடக்க"க் கல்வியைத் தொடங்க வேண்டும்.2222222

திசை மாறிய கல்வி - 12

மழலையர் பள்ளி தொடங்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மேலே, பக்.4இல் குறிப்பிட்டுள்ளது போல் சிறந்த குழந்தை உளவியல் வல்லுநர்களாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு விளையாட்டே கல்வியாக, வேலையாகத் தொடக்கக் கல்வி அமைய வேண்டும். வீட்டைச் சுற்றிலும் நிலமும் அவற்றில் மரங்கள், செடிகளை வளர்ப்பதுமாக உள்ள வீட்டுக் குழந்தைகள் ஒரு பருவத்தில் மூத்தோர் குடங்கள், வாளிகளில் நீர் ஊற்றுவதைப் பார்த்துத் தாமும் அதைச் செய்ய அடம் பிடிக்கும். அப்போது அவர்களுக்குச் சிறு குடங்களோ வாளிகளோ வாங்கிக் கொடுத்து தண்ணீர் பிடித்து ஊற்ற விடுவது உண்டு. அது போல் பெரியவர்கள் மண்வெட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவதைப் பார்த்து தாமும் அதே மண்வெட்டியைப் பிடித்து வெட்ட முயல்வர். கால்களில் மண்வெட்டி காயங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக, சிறு மண்வெட்டிகளான களைக்கொத்திகளை வாங்கிக் கொடுத்து விளையாட விடுவது உண்டு. அதைப் போல் இந்தப் பருவத்தில் எண்ணையும் எழுத்தையும் கொஞ்ச நேரம் சொல்லிக்கொடுத்துவிட்டு சிறிது நேரம் வேலைகள் நடக்கும் இடத்தில் நடமாட விட்டு அவரவருக்குப் பிடித்த வேலைகளை விளையாட்டுப்போல் செய்ய விட வேண்டும். பாடவும் ஆடவும் நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் செயற்படும் போது அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அவர்க்ளது திறன்கள், மனச்சாய்வுகள், அடுத்தவரோடு பழகுதல், சேர்ந்து இயங்குதல் போன்ற இயல்புகள் என்று அனைத்தையும் அளவிட்டு மதிப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு அகவை ஏற ஏற கொஞ்சம் கொஞ்சமாகக் கனத்த கருவிகளைக் கையாண்டு கனத்த வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டும். எழுத்தறிவைப் பொறுத்த வரை, எண்ணுக்கும் எழுத்துக்கும் அடுத்தபடி அக்குழந்தைகள் வாழும் வட்டாரம், மாவட்டம் குறித்த புவியியல், நிலவளம், வேளைண்மை, தொழில்கள், வரலாறு குறித்த பாடங்களை நடத்த வேண்டும். சுவையான கதைகள், விடுகதைகள், செய்யுள்களுக்கு உரிய இடம் வேண்டும். விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

அக்கம் பக்கங்களில் இத்தகைய பண்ணைகள் பெருகப் பெருக பண்ணைகளில் பயன்படும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிமனைகள் உருவாகும். மாணவர்களை அப்பணிமனைகளில் பயிற்சி பெற விடுத்து அதில் ஈடுபாடு காட்டுவோரை அத்துறையில் திருப்பிவிட்டு அதற்குரிய கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும். குடியிருப்புகள் பெருகும் போது மருத்துவ வசதி தேவைப்படும். அதற்கு உருவாகும் மருத்துவ மனைகளில் மாணவர்களைப் பயிற்சி பெற விடுத்து அதில் சிறப்பு ஈடுபாடு உள்ளோரை அந்தத் துறைக்குத் திருப்பி விட வேண்டும். அது போல்தான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு காடு வளர்ப்பு என்று ஒவ்வொரு துறைக்கும். ஒட்டுமொத்தத்தில், ஒரு கட்டடப் பொறியாளன், கட்டட வேலையில் கையாளாக இருந்து அத்துறையில் சான்றுப் படிப்பு படித்து அடுத்து கொத்தனாராக, கம்பி கட்டுவோனாக, தச்சனாக, மின்னியல் பணியாளனாக, வெள்ளையடிப்பானாகக் களத்தில் பயிற்சி பெற்று தான் விரும்பும் துறையில் பகுதி நேரப் படிப்பு படித்து நுழைவுத் தேர்வெழுதி அத்துறையில் பட்டயப்படிப்பு படித்து முடித்து, களத்தில் மேற்பார்வையாளனாகப் பயிற்சி பெற்று தான் விரும்பும் சிறப்புத்துறையில் பகுதி நேரப் படிப்பு படித்து நுழைவுத் தேர்வெழுதித் தான் பட்டப் படிப்பினுள் நுழைய வேண்டும்.
அதைப்போல் ஒரு மருத்துவரிடம் குறைந்தது துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றியவர்தான் உரிய படிப்பு படித்து ஒரு செவிலியருக்கான நுழைவுத்தேர்வு எழுது செவிலியராகி அப்படித்தான் படிப்படியாக மருத்துவப் பட்டப் படிப்புக்குள் நுழைய வேண்டும்.

பணத்தையும் செல்வாக்கையும் வைத்து 22 அகவைக்குள் பொறியாளராகவும் மருத்துவராகவும் வேளாண் பட்டந்தாங்கியாகவும் இ.ஆ.ப. ஆகவும் வரும் அறப்பிஞ்சுகளால் நாட்டை நிரப்பும் இன்றைய நடைமுறை முடிவுக்கு வர வேண்டும். எழுத்துப் படிப்பில் நாட்டமின்றி ஆனால் தொழிலில் ஆர்வமும் திறமையும் உரியோரை இனங்கண்டு அவர்களுக்கு உயர் கல்வி அல்லது பயிற்சி அளித்துப் சான்று, பட்டயம், பட்டம் முதலியன வழங்குவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். வெவ்வேறு பணிநிலைகளில் உள்ளோருக்கான சம்பள வேறுபாடு எல்லைப்படுத்த வேண்டும். அப்படியானால்தான் சம்பளத்துக்காகப் பட்டங்கள் பெற முயல்வோரின் மறைமுகத் தலையீடுகள் இரா.

நாடு முழுவதுமுள்ள வேளாண்மை, காடுவளர்ப்புக்குள்ள நிலங்கள் இவ்வாறு முழுப் பயன்பாட்டுக்கு வரும் போது பெரும் பணிமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என்று உருவாவது தவிர்க்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் மின்னணுவியலையும் அவற்றுக்குத் துணையாக, இணையாக வளர்த்தெடுக்க வேண்டும். அவற்றைத் திட்டமிட்டு கண்டிப்பான வரைமுறைகளின் கீழ் வடிவமைக்க வேண்டும். பண்ணைகளுக்குள் அமையும் கட்டடங்கள் தவிர எந்தக் கட்டடமும் உரிய நகரமைப்பு உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் அமைய வேண்டும். தமிழகத்தில் தகுந்த மண்டல தலைநகரங்களை உருவாக்க வேண்டும். அவை மழைநீரை எளிதில் வழிய விடக்கூடிய உயர்ந்த இடங்களில் அமைய வேண்டும்.

இந்த நகரங்களை வளைவுகளற்ற நேர்ச்சாலைகளால் இணைக்க வேண்டும். இதனால் இடப்பெயர்ச்சி அதாவது செல்கைகளுக்கு(பயணங்களுக்கு) எடுத்துக்கொள்ளும் நேரம் குறைவதுடன் எரிபொருளும் மிச்சமாகும். இணைப்புச் சாலைகளும் நேர்ச்சாலைகளாகவே இருக்க வேண்டும்.

இந்தச் சாலைகளை ஒட்டிக் குடியிருப்புகள் இருக்கக் கூடாது. குறைந்தது இரண்டு கிலோமீற்றர் தொலைவுக்குக் காடுகளாக இருக்க வேண்டுமென்ற நகரமைப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள். நாம் அதை 500 மீற்றர்கள் என்று வரையறுக்கிறோம். இந்தக் காடுவளர்ப்பு சாலைப் பரப்பில் உருவாகும் வெப்பத்தைத் தணித்துச் சூழலை இனிமையாக்கும்.

பொதுவாக எந்தச் சாலையையும் தொட்டுக் குடியிருப்புகள் அமைவது நல்லதல்ல. அது குடியிருப்போருக்கும் சாலையில் சொல்வோருக்கும் இடர்களைத் தரும். தெருக்களில் வாயில்களைக் கொண்ட வீடுகள், கடைகள் கூட இருக்கக் கூடாது. வளாகங்களுக்குள் வீடுகளும் அவற்றுக்கு உடனடித் தேவைகளுக்கான கடைகளும் அமைந்து வெளிச்செல்வழி மட்டும் தெருவில் அமைய வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் பாதிவரை சாலைகளை ஒட்டிய குடியிருப்புகள் குறைவாகவே இருந்தன. முற்காலங்களில் ஊர்கள் சாலைகளிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவு உள்ளடங்கியே இருந்தன. அதனால்தான் வழிச் செல்வோருக்கு உணவுக்கும் உறைவிடத்துக்கும் சத்திரங்களைப் பண்டை ஆட்சியாளர்கள் அமைத்துப் பேணினர். இன்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் அவற்றின் இடிபாடுகளைக் காணலாம். அது போல் நெடுஞ்சாலைகளில் இது போன்ற ஊட்டல்கள்(ஓட்டல்கள்) விடுதிகள் போன்ற கட்டமைப்புகளை குறிப்பிட்ட தொலைவு இடைவெளிகளில் உருவாக்க வேண்டும். இன்னும் நெருக்கமான இடைவெளிகளில் வழி நெடுக கழிவறைகளை உருவாக்கி முறையாகப் பேண வேண்டும்.

திசை மாறிய கல்வி - 13

பழைய நகரங்களில் பாளையங்கோட்டையின் நகரமைப்பை என்னால் இனங்காண முடிந்தது. தென்மேற்கு மூலையில் கட்டபொம்மன் சிலையிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை வடக்கே திரும்பி யோவான் கல்லூரி முன்புறம் வழியாக நேரே திருச்செந்தூர் சாலையில் சேர்கிறது. கட்டபொம்மன் சிலையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் சாலை சித்த மருத்துவக் கல்லூரியை ஒட்டி மேற்குப் புறமாகச் செல்லும் தெரு வழியாகத் திருச்செந்தூர்ச் சாலையைச் சென்றடைகிறது. இதுதான் பாளையங்கோட்டையின் நான்கு எல்லைகளும். இந்தச் சாலையை ஒட்டி மேற்கில் உயிர்க் காப்பீட்டுக் கழக அலுவலகம், வ.உ.சி. விளையாட்டரங்கம், நகராட்சி அலுவலகம், கண்காட்சித் திடல், சித்த மருத்துவக் கல்லூரி என்று தோடரும் பகுதி முன்பு காடுகளாகப் பராமரிக்கப்பட்டவை. அவ்வாறே பாளையங்கோட்டைச் சந்தையிலிருந்து கிழக்கேயும் மேற்கிலும் உள்ள பகுதிகளும் காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து தெற்கே செல்லும் சாலையிலிருந்து யோவான் கல்லூரிச் சாலைக்கு இடையிலுள்ள பகுதிகளும் தெற்கில் தூய சேவியர் பள்ளியைத் தொடர்ந்து கட்டபொம்மன் சிலை வரை உள்ள பகுதியும் காடுகள். சேவியர் பள்ளிக்குப் பின்புறம் இருக்கும் திடல்கள் இடுகாடுகள், கிறித்துவக்கோயில், அஞ்சலகம் என்று மேற்கே வரை மாடுகள் தங்கும் மந்தைவெளி, அதற்கு வடக்கே ஆயர்கள் குடியிருப்பு. அதறகு வடக்கே ஒரு சிவன் கோயில், ஒரு பெருமாள் கோயில், அவற்றுக்குரிய தேர் வீதிகள், மாடத்தெருக்கள், இரண்டுக்கும் நடுவே ஒரு சந்தை(அந்தச் சந்தை இப்போது தெருவாகிவிட்டது). நகரின் ஒரு பக்கச்சாலையிலிருந்து எதிர்ப் பக்கச்சாலைக்குச் செல்வதற்கு நேரான இரண்டிரண்டு குறுக்குச்சாலைகளும்.   

திருச்செந்தூர் சாலைக்கு வடக்கே கிழக்கில் கசாப்புத் தொழில் செய்வோரான சீவு இடையர்கள், பள்ளர் – பறையர் குடியிருப்புகள், மேற்கில் செம்மார் குடியிருப்புகள், வட கிழக்கில் சக்கிலியர் குடியிருப்புகள் என்று இனம்காண முடிகிறது. இதில் இந்தக் காட்டுப் பகுதி நகரைச் சுற்றிலும் பாதுகாத்ததையும் நெடுஞ்சாலைக்கும் நகருக்கும் இடையில் காடு நான்கு பக்கச்சாலைகளிலும்  இருந்ததையும் சுட்டுவதற்காகவே இதை விரிவாகக் கூறினேன். இது போன்று சாதி அடிப்படையிலோ தோழில் அடிப்படையிலோ சமய அடிப்படையிலோ இன்றி ஒரு நகரமைப்பை நாம் உருவாக்க வேண்டும். முதலாளிய அமைப்பில் தொழிலாளி தொழிற்சாலையினுள்ளும் பண்ணைகளினுள்ளும்தான் அவன் ஒரு தொழில் தொடர்பானவன். அதைவிட்டு வெளியில் வந்தவுடன் அவன் ஒரு சராசரி குடிமகன். இந்த அடிப்படையை மனதில் கொண்டு நாம் நகரங்களை அமைக்க வேண்டும்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.


 

24.7.16

"இந்துத் தீவு"(பாலித்தீவு)




“இந்துத்தீவு”(பாலித்தீவு)
குமரிமைந்தன்
நம் தொன்மங்க்ள் தேவர்களின் அரச குருவாக பிரகசுபதி எனும் வியாழனையும் அசுரர்களின் குருவாக சுக்கிரன் எனப்படும் வெள்ளியையும் குறிப்பிடுகின்றன. ஆனால் இவை இரண்டும் வெறும் கோள்கள், தேவர்கள் அல்லர். எனவே இக்கோள்களின் இயக்கத்தின் அடிப்படையில் தங்கள் பண்பாடுகளை அமைத்துக்கொண்ட இரு வெவ்வேறு மக்கள் குழுவினர் இவர்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். இந்நிலையில் சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதையில் "வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து புரிநூல் மார்பர்" என்ற வரிகளுக்குப் பொருள்காண நினைத்து பூணூல் தோன்றிய வரலாற்றை வரிசைப்படுத்த முயன்ற போது பண்டைத் தமிழ்க் கடற்கோள்களைப் பற்றிய செய்திகளில் வரும் தென்பாலி என்ற நிலப்பகுதி நினைவுக்கு வந்தது. இன்றைய பாலித்தீவைக் குடைந்துபார்ப்போமே என்று வலையினுள் நுழைந்தேன். அமுதன் என்பார் இட்டு வைத்திருந்த அருமையான தீனி கிடைத்தது. இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் அரசின் தலையீடு இல்லாமல் முழு உரிமையோடு "இந்து" சமயத்தைக் கடைப்பிடிக்கும் நிலப்பகுதி அது மட்டும்தானாம். அங்கு பார்ப்பனர்கள் பூசை மட்டும்தான் செய்வார்களாம் இந்தியாவில் போல் பணம் ஈட்டுவதற்காக அரசு வேலைகள் என்று சத்திரியத் தொழில், மாட்டிறைச்சி ஏற்றுமதி என்று வைசியத் தொழில், அழகு நிலையங்கள் என்று சூத்திரத் தொழில்களையும் செய்துவிட்டு நாங்கள் உயர்ந்தவர்கள் என்று முறுக்கிக்கொள்ளவும் மாட்டார்களாம்.

நான் பேச வந்த செய்தியைக் கூறிவிடுகிறேன். அங்கு நடைமுறையிலிருக்கும் ஆண்டுமுறை என்னை மகிழ்வுடன் கூடிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அது 210 நாட்களைக் கொண்ட ஓர் ஆண்டுமுறை. உடனடியாக கிளார்க்கு பட்டியலை(Clark"s Table)த் தேடி எடுத்தேன். வெள்ளி கதிரவனைச் சுற்றி ஒருமுறை வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள் 224சொச்சம். ஆகா, அசுரர்களைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று உள்ளம் குதித்தது 210 நாட்கள் கொண்ட இந்த ஆண்டுமுறையின் அடிப்படையில்தான் அவர்கள் வேளாண்மை செய்கிறார்களாம். அது போக நாம் கடைப்பிடிக்கும் 365 சொச்சம் நாட்களைக் கொண்ட தூய கதிராண்டாகிய தமிழ் ஆண்டுமுறை, 2 1/2 ஆண்டுகளில் ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்துவிட்டுத் தமிழாண்டுடன் ஓடிவந்து ஒட்டிக்கொள்வதும் யுகாதி என்ற நாளில் தொடங்குவதுமாகிய தெலுங்கு ஆண்டு எனப்படும் சுமார்த்த ஆண்டு(தமிழகம் தவிர பிற அனைத்து மாலங்களலும் இந்தக் கதிர்நிலவாண்டுமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது) , கிறித்தவ ஆண்டு ஆகியவற்றையும் கடைப்பிடிக்கிறார்களாம். வேளாண்மைக்குப் பயன்படுவதால் அந்த 210 நாட்கள் கொண்ட ஆண்டுதான் அவர்களுடைய ஆண்டு என்பது உறுதி. கடலில் முழுகியதாகக் கூறப்படுவது தென்பாலிமுகம் என்பதால் அது இந்தப் பாலித் தீவோடு தொட்டுக்கிடந்ததா அல்லது வேறொரு நிலப்பகுதியா என்பது தெரியவில்லை. பாலித்தூவு தொடர்புள்ளவர்கள் தமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம். இன்னொரு முகாமையான செயதி இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் தென் எல்லையில்தான் இந்தியக் கண்டத்திட்டு எனப்படும் குமரிக் கண்டத்திட்டு சந்திக்கிறது். முகம் என்ற பின்னொட்டு உடைந்த பகுதி குமரித் தட்டிலிருந்து, அதனோடு முழுகிப்போயிருக்க வேண்டும என்ற எண்ணத்தை நமக்கு உருவாக்குகிறது. அவர்களின் பண்பாடு வேறாக இருந்ததால்தான் அதைத் தனியாகக் குறிப்பிட்டிருக்கலாம்.

இந்த வெளிச்சத்தில் பார்த்தால் தேவர் – அசுரர் போர், தொடக்க கால மக்களிடையில் மொழியின் தோற்றம், அதன் பல்வேறு திரிவாக்கங்கள், மக்கள் மொழி, பூசகர் – ஆட்சியாளர் தொழில்நுட்பர்களின் குழூஉக் குறி மொழிகள் என்ற வகையில் இறுதியில் அகத்தியம், வேத மொழி, பாலி, பிராகிருதம், ஐந்திரம், தொல்காப்பியம் போன்றவற்றுக்கான வேர்களை இந்த வட்டாரத்தில் தேடுவதுதான் சரியாக இருக்கும்.

நீங்கள் மதம் மாற வேண்டாம், உங்கள் மதத்தை மாற்றுங்கள்



நீங்கள் மதம் மாற வேண்டாம், உங்கள் மதத்தை மாற்றுங்கள்
குமரிமைந்தன்

எல்லாவற்றையும் அரைகுறையாகத் தெரிந்துவைத்துக்கொண்டு அனைத்தையும் அறிந்தவர்கள் போல் பேசுகிறார்கள் இத்தலைமுறையினர். நம் ஆட்சியாளர்கள் அவர்களுக்குரிய கடமையாகிய நாட்டைப் பிறரிடமிருந்து காப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ன் நாட்டு மக்களில் எவரும் அரசு அதிகாரத்துக்கு அறைகூவலாக வந்துவிடக்கூடாது என்பதற்காக புதியவை புனைவோரை அழித்துவந்தனர். அதனால் குண்டுமிழியான பீரங்கியோடு வந்த துருக்கர்களை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. வெள்ளைக்காரன் வந்து இந்த நாட்டைக் கைப்பற்ற வரும் வரை வாள், வேல் தவிர நம் வீரர்கள் கையில் வேறு மேம்பட்ட ஆயுதம் என்ன இருந்தது? சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் மதுரைக் கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கருவிகளில் குண்டுமிழியின் தொடக்கநிலையைக் காண முடிகிறது. சந்திரகுப்த மோரியன், கலிங்கத்துக் காரவேல்ன் போன்ற பகைவர்களால் ஒற்றர்களாக விடப்பட்டவரான, அவிழ்த்துப் போட்டுக்கொண்டு தம் மயிரைத் தாமே பிடுங்கும் மனநோயாளிகளான அம்மணர்கள் முல்லை குறுஞ்சி மக்களிடையில் ஊடுருவி அவர்களை மூவேந்தர்களுக்கு எதிராகத் திரட்டி கள்ளர் பிறராகிய களப்பிரர் கூட்டமைப்பால் தமிழகத்தைக் கைப்பற்றினர். அது வரை தமிழகத்திலிருந்த ஒரே ஒரு கோட்டை, ஒரேவோர் அரண்மனை, ஏன் ஒரேவோரு குட்டிச்சுவர் கூட இல்லாமல் அழித்தனர். பின்னால் வந்தவர்களும் எந்த புதுக் கண்டுபிடிப்புக்கும் இடந்தராமல் ஐந்தொழில் கொல்லர்களை இடங்கையினராக்கிக் கொடுமை புரிந்தனர். இந்தச் சூழலில் புதிய ஆயுதங்களோடு வந்த வெள்ளையரைக் கண்டு இங்குள்ள ஆளும் கூட்டம் அஞ்சி நடுங்கியது. ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, குமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் எனும் ஊர். எண்ணெய் செக்காட்டிகளாகிய இவ்வூரார் ஏதோவொரு காரணததால் ஓர் ஆண்டில் தாங்கள் திருவிதாங்கூர் அரசனுக்குச் செலுத்த வேண்டிய ஊழிய்ம், தாவது இலவயமாக வழங்க வேண்டிய எண்ணெய், பிண்ணாக்கு போன்றவற்றைக் கொடுக்கவில்லை. இதற்காக அரசன் என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சிய அவர்கள் உடனே கத்தோலிக்கத்துக்கு மாறினர். அரசனும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டான்.

            தமிழகக் கடற்கரை மீனவர்களை கடல் மூலம் துருக்கர்களும் உள்நாட்டுக் கொள்ளைக்காரர்களும் செய்யாத கொடுமைகள இல்லை. இடங்கையினராகிய மீனவ்ர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளவும் தடை இருந்தது. இந்த நிலையில் போர்த்துக்கீசிய மதகுருக்கள் மீனவ மக்களை மதம் மாறச் சொல்லவில்லை, எங்கள் அரசரின் குடிமக்கள் ஆகிவிடுங்கள், உங்களுக்கு அவர் ஆயுதம் வழங்குவார் என்றனர் என்று தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் என்ற நூலில் கே.கே.பிள்ளை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிகழ்வுகளைப் பற்றி நாம் வெட்கப்பட வேண்டும். கையாலாகாத நம் அரசர்கள் அரேபியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வந்த மதமாற்றிகளையும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களையும் வரவேற்றார்கள். ஏனென்றால் இங்கு அவர்களுக்கு ஆசான் என்ற இடத்திலிருந்த பார்ப்பனர்கள் அடித்த கொட்டத்தை அடக்குவதற்கு வேறு வழி அவர்களுக்கத் தெரியவில்லை என்பதுடன் அவர்களின் ஆயுத வலிமையும் இவர்களைக் கிலிகொள்ள வைத்தது.

திருவிதாங்கூர் மன்னன் இராமவர்மன் தன் மரணப் படுக்கையில் தனக்குப்பின் தன் மகன்களுக்கு அரசுரிமையை வழங்கிவிட்டுப் போனான். ஆனால் அதற்கு மாறாக திருப்பாப்பூர் நாடான் அனந்தபத்மநாபன் என்பவன் அரசனின் மருமகனும் தன் உறவுக்காரனுமான மார்த்தாண்டன் என்பவனை அரசனாக்க முயன்றான். திருவிதாங்கூரின் 39 நாடான்களையும் அழைத்து தன் திட்டத்துக்கு உதவுமாறு அவர்களைக் கேட்டான். அவர்கள் நடப்பிலிருக்கும் மக்கள்வழிக்குப் புறம்பாகச் செயல்பட மறுத்துவிட்டனர். பின்னர் கன்னியாகுமரி அருகிலிருக்கும் பொற்றையடி நாடான் தாணுமாலயப்பெருமாளுடன் சேர்ந்து அரசனின் மகன்கள் இருவரையும் தந்திரமாகக் கொனறு மார்த்தாண்டனை அரசனாக்கினான். இவன் அரசனானதும் தங்களைத் தண்டிப்பான் என்று அஞ்சிய 39 நாடான்களும் கத்தோலிக்கத்துக்கு மாறி தங்களைக் காத்துக்கொண்டனர். அரசன் தன் பழியைத் தீர்த்துக்கொள்வதற்கு இட்ட ஆணைகளில் பெண்கள் இடுப்புக்கு மேல் எந்த ஆடையும் அணியக்கூடாது, தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைக்காமல் தலை மீதுதான் சுமக்க வேண்டும். பொனம(உலோக)க் கலன்களை(பாத்திரங்களை)ப் பயன்படுத்தக்கூடாது, தாளிதச் சமையல் செய்யக்கூடாது என்பன சில.

இந்தக் கட்டத்தில்தான் ஆங்கிலர்கள் இங்கு நுழைகிறார்கள். அரசன், நம்பூதிரிகள், நாயர் - குறுப்புகள் கூட்டணி ஆகியோர் கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி மேற்கு வட்டங்களில் சாணார்கள் மதம் மாறுகிறார்கள். இப்பெண்கள் முலையைத் திறந்து போட்டுத் திரிவதைக் கண்டு பொறுக்காத ஒரு மதகுருவின் மனைவி குப்பாயம் எனும் தளர்வான ஓர் இரவிக்கையைத் தைத்து மதம் மாறிய பெண்களுக்கு அணிவித்தார். இதை நாயர், நம்பூதிரி போன்றோர் எதிர்க்க போராட்டம் வெடிக்கிறது. மதகுருக்களுடன் பேசி கிறித்துவர்கள் மட்டும் அணிய ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் போராட்டத்தில் பங்கேற்ற மதம் மாறாதவர்களும் அணிய முற்பட்ட போது மதமாறிகள் எதிர்த்தனர். இது ஒரு கலவரமாக வெடித்து கிறித்துவக் கோயில்கள் தீவைக்கப்பட்டன, இடிக்கப்பட்டன. பின்னர் பேசித் தீர்வு கண்டனர், அனைவரும் மேலாடை அணியலாமென்று. இந்த நிகழ்வுகளை அறியும் போது தமிழர், இந்தியர்கள் எனும் நம் உடம்புகளில் சாக்கடைதான் ஓடுகிறதா என்ற ஐயம் வருகிறது. இது நிகழ்ந்தது சாணார்கள் நாயர் - குறுப்புகளுக்கிடையில் சிக்கிக் கிடந்த மேற்கு வட்டங்களில். ஆனால் கிழக்கு வட்டமான அகத்தீசுவரத்தில் நடைபெற்றது வேறு வகையானது.

குமரி மாவட்டத்தில் சாரல் எனப்படும் தென்மேற்குப் பருவ மழை சிறப்பானது. பாண்டி எனப்படும் நெல்லை மாவட்டத்தில் மாரி எனும் வடகிழக்குப் பருவ மழை சிறப்பு. எனவே பனையேற்றுக் காலம் இரு நிலப்பகுதிகளிலும் மாறி மாறி வரும். குமரி மாவட்டப் பனையேற்றுக் காலத்தில் உள்ளூர்ப் பனையேறிகளுடன் பாண்டிக் காட்டிலிருந்தும் பனையேறிகள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து பனையேறுவர். பாண்டிக் காட்டுப் பனையேற்றுப் பருவத்தில் பாண்டிக்காரர்கள் திரும்பிச் செல்ல குமரி மாவட்டக்காரர்கள் குடும்பத்தோடு அங்கு சென்று தங்கிப் பனையேறுவர். இந்த நிகழ்வில் இந்தத் தோள்சீலைச் சிக்கல் ஒரு பெரும் உறுத்தலாக இருந்தது. எனவே இங்குள்ள பெண்களும் தோள்சீலை அணியத் தொடங்கினர். இந்த வட்டாரத்தில் சாணார்கள் பிற சாதியினர் அதிகமில்லாமல் செறிந்து வாழ்ந்ததால் உடனடிச் சிக்கல் எதுவும் உருவாகவில்லை. ஆனால் கன்னியாகுமரிக்கு அருக்கிலிருக்கும் ஒரு சந்தையில் இச்சிக்கல் வெடித்தது.

இந்தச் சந்தை செட்டியார்கள் கைகளில் இருந்தது. இது நாடார்கள் செறிந்த பகுதி. இங்கு சில சாணார்ப் பெண்கள் தோள்சீலை அணிந்து வந்தார்கள். அது பொறுக்காத, தங்களை மேல் சாதி என்று நினைத்துக்கொண்ட செட்டியார்கள் சிலர் நீண்ட கழிகளில் துறட்டி அரிவாள்களைக் கட்டி தூரத்திலிருந்தே தோள்சீலைகளை அகற்றுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு செட்டியார் இவ்வாறு தோள்சீலை அகற்றும் போது ஒரு பெண்ணின் கழுத்ததிலிருந்த தாலியை அரிவாள் அறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து பெரும் கொந்தளிப்பும் கலவரமும் நிகழ்ந்தன. அன்றிலிருந்து சாணார்கள் சந்தைக்குள் நுழைவதில்லை என்று முடிவெடுத்தனர்.

சந்தையில் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் இந்தச் சாணார்கள் தங்கள் விளைநிலங்களிலிருந்து கொண்டுவந்து செட்டியார்களுக்கு விற்பவையே. எனவே ஒரு கையில் சாணார்களிடம் வாங்கி மறுகையில் அவர்களிடமே விற்கும் வேலையையே செட்டியார்கள் செய்தனர். எனவே சாணார்கள் சந்தைக்கு வெளியே ஓர் உழவ்ர் சந்தையை உருவாக்கினர். தாம் கொண்டுவந்த பொருட்களை விற்றுவிட்டுத் தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிச் சென்றனர். சந்தைக்குள் எவரும் நுழையாததால் செட்டியார்கள் சந்தையை விட்டு அகன்றனர். இப்போது சந்தை சாணார் கைகளுக்ககுள் வந்தது, தோள்சீலைப் போராட்டமும் வென்றது. இந்தச் சந்தையின் பெயர் தாலியறுத்தான் சந்தை என்ப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் அந்தப் பெயரிலேயே வழங்குகிறது.

இந்தச் செய்தியைச் சொன்னவர் சுகுமாரன் தம்பி என்ற அதிகம் அறியப்படாத சிறந்த ஆய்வாளர். என் முன்முயற்சியில் புலவர் கு.பச்சைமால் போன்றோரின் உதவியுடன் இயங்கிய தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் (தசவகம்) என்ற பெயரில் இயங்கிய அமைப்பின் ஆய்வுக் கூட்டங்களில் அவர் இது போன்ற பல அரிய செய்திகளைக் கூறியுள்ளார்.

அடுத்து சாணார்களின் விடுதலையில் வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகளின் பங்கு பற்றி மிக மிகைக் கருத்துகள் பெரும்பாலோர் உள்ளங்களில் பதிந்துள்ளன. அது தவறு.

முத்துக்குட்டி அடிகளுக்கு பெற்றோர் முடிசூடும்பெருமாள் என்று பெயரிட்டனர். இத்தகைய பெயரைச் சாணார் சூடக்கூடாது என்ற அரச ஆணைப்பபடி ஊர் நாடான் தடை செய்ததால் முத்துக்குட்டி என்று பெயரை மாற்றினர் பெற்றோர். அவரது பெற்றோரும் வீறுடையோராக இருந்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

இவரும் இயற்கையிலேயே போர்க்குணம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். எம் மதத்தில் இண்ணந்தால் மேல்சாதிக் கொடுமைகளிலிருந்து விடுவிப்போம் என்று சீர்திருத்த(புராட்டற்றன்று)க் கிறித்தவர்கள் பரப்பியதால் இவர் மதம் மாறியிருக்கிறார். கோட்டையடி என்ற ஊர்க் கோயிலில் கோயில் பிள்ளையாக(கோயில் குட்டி என்றும் கூறுவர், மணியடித்தல் போன்ற ஓர் எடுபிடி வேலை) இருந்திருக்கிறார். இவ்வாறு மதமாற்றம் வேகம் பெற்று வந்த போது சாணார்கள் மீதான அரசின் கொடுமைகளை எதிர்க்கும் குரல்களும் ஓங்கி ஒலித்தன. இதைக் கண்டு அரண்ட திருவிதாங்கூர் அரசர் தன் அரண்மனையில் இருந்த ஆங்கில உடனுறை அதிகாரி(ரெசிடென்று) மூலம், இங்கு விடையூழியர்(மிசனரி)களால் கலவரச் சூழல் உருவாகும் நிலை உள்ளது, அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகையை வைத்தார்.

திருவிதாங்கூர், ஐதராபாத்து போன்ற பகுதிகள் சமத்தானம்(சமம் + தானம்) எனப்படும். அதாவது பிரிட்டீசு இந்திய அரசுக்குச் சமமான அதிகாரம் உள்ள பகுதி என்பது இதன் பொருள். ஆனால் இங்குள்ள அரசருக்கு நிலைப்படை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. சொந்தமாக நாணயம், காவல்துறை, நயன்மைத் துறை, பல்கலைக் கழகம் எல்லாம் வைத்துக்கொள்ளலாம். இன்றைய மாநிலங்களை விட மிகுதியான பல அதிகாரங்கள் உண்டு. அதே வேளையில் அரசரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சமத்தானத் தலைநகரிலே ஓர் உறைவிட அதிகாரியை ஆங்கில அரசு வைத்திருந்தது. இன்றைய ஆளுநர் போன்ற பதவி என்று சொல்ல்லாம். திருவிதாங்கூரைப் பொறுத்தவரை உறைவிட அதிகாரி சென்னை அரசதானியின் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்தார். இப்போது நம் நேர்வில் சாணார்களைப் பற்றிய அரசரின் குறையை உடனுறை அதிகாரி சென்னை ஆளுநருக்குச் சொல்ல அவர் அங்கிருந்த கிறித்துவ விடையூழிய அதிகாரிகளுக்குச் சொல்லி திருவிதாங்கூர் தமிழர் பகுதி விடையூழியர்களுக்கு சாணாரைப் பொறுத்துக் கொஞ்சம் அடக்கி வாசிக்க அறிவுறுத்தினார். இதனால் இங்கு சாணார்க்கெதிரான் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வீரார்ப்பான போக்கை கிறித்துவ மதகுருக்கள் கைவிட்டு வெறும் கடவுள் வழிபாட்டோடு நிறுத்திக்கொண்டனர். இதனால் வெறுப்படைந்த முத்துக்குட்டியார் கிறித்துவத்துக்கு முழுக்குப்போட்டுவிட்டு வெளியேறினார்.

முத்துக்குட்டி அடிகளின் அன்பர்கள் சிலர் அவர் கிறித்துவத்தைத் தழுவியதையும் பின்னர் அதைக் கைவிட்டதையும் பற்றிய செய்திகளை மறுக்கின்றனர். ஆனால் அவருடைய ஒட்டுமொத்த நடவடிக்கைகளை ஆய்கையில் இந்த நிகழ்வு நடந்திருக்கும் வாய்ப்புகள் மிகுதியாகவே எமக்ககுத் தோன்றுகிறது.

அடுத்து அடிகள் திருச்செந்தூர் சென்று கடலினுள் மூன்று நாட்கள் தவமிருந்து அருளும் நுண்ணறிவும் பெற்றதாகக் கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு மாறான ஒரு செய்தி நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தது. முத்துக்குட்டி அடிகள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்திருக்கும் திருத்தங்கலில் இருக்கும் திருமால் கோயிலில் சில ஆண்டுகள் தங்கி அங்கு ஓர் பார்ப்பனரிடம் பாடம் கேட்டதாக அக்கோயில் தலபுராணத்தில் இருப்பதாகத் தன் நண்பர் ஒருவர் கூறியதாக பறம்பை அறிவன் என்ற நண்பர் ஒருவர் மடல் ஒன்றில் கூறியிருந்தார். இது பற்றி எழுத்தாள நண்பர் பொன்னீலன் அவர்களிடம் கூறிய போது தன் நண்பர் ஒருவர் அவ்வூரிலிருப்பதாகவும் அவர் மூலம் அந்தத் தலபுராண நூலைப் பெற்றுவிடலாம் என்றும் கூறினார். ஆனால் அது பற்றி எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. இன்னொரு நண்பர் மூலம் முயன்ற போது அவர் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய பதிப்பைப் பெற்றுத் தந்தார். அதில் முத்துக்குட்டி அடிகளைப் பற்றிய செய்தி எதுவுமில்லை. வாய்ப்பிருப்பவர் எவராவது பழைய பதிப்புகளை ஆய்ந்து இதுபற்றி முடிவு செய்துகொள்ளலாம்.

இனி தொடர்ந்து செல்வோம். திருச்செந்தூர்க் கடலுள் தவமிருந்து அருள் பெற்றாரோ அல்லது திருத்தங்கலில் பார்ப்பனரிடம் பயிற்சி பெற்றாரோ சில ஆற்றல்கள் வரப்பெற்று திரும்பிவந்தார் முத்துக்குட்டி அடிகள். இந்த ஆற்றல்கள் என்னவென்று பார்ப்போம்.

இதை வசிய ஆற்றல் என்று சுருக்கமாகக் கூறிவிடலாம். இந்த வசிய ஆற்றலை வைத்துத்தான் மோசே தொடங்கி இன்றைய அமிர்தானந்த மயீ உட்பட அனைவரும் தொழில் நடத்துகின்றனர். அது மட்டுமல்ல பெரும் அரங்கங்களில் மந்திர வித்தை நடத்தும் மந்திரவாதிகள் தொடங்கி தெருவில் செப்பிடு வித்தை என்றும் குறளி வித்தை என்றும் கண்கட்டி வித்தை என்றும் பிழைப்பு நடத்தும் அன்றாடங்காய்ச்சி வரை கடைப்பிடிப்பது ஒரே வித்தையைத்தான்.

தொடரும் முன் இந்த திருத்தங்கலைப் பற்றிய சில செய்திகளைக் கூறிவிடுகிறேன். சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் எனும் பார்ப்பான் சேரனிடம் சென்று தன்னை எதிர்த்தோரை வாதில் வென்று அரசன் அளித்த விலையுயர்ந்த அணிகலன்களோடு திரும்பும் வழியில் பார்ப்பனர் மட்டும் வாழும் தங்கால் எனும் ஊரில் களைப்பாறுவதற்காக ஓர் அரச மரத்தடியில் அமர்ந்தான். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த பார்ப்பனச் சிறுவர்களைப் பார்த்து என்னோடு சேர்ந்து நான் கூறும் மந்திரங்களை ஓதி இதோ இந்தப் பொதியிலிருப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான். வார்த்திகன் என்பவன் மகன் தக்கினன் என்பவன் ஒலி பிறழாமல் ஓதியதால் தான் கொண்டுவந்த தங்க அணிகளை அவனுக்கு அளித்துவிட்டுச் சென்றான். சிறுவன் இவ்வாறு வரவுக்கு மிஞ்சிய அணிகளுடன் திரிந்ததால் அழுக்காறுற்ற அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தெரிவித்தனர். அவர்கள் வந்து வார்த்திகனைப் பிடித்துச் சிறையிலிட்டனர். அது கண்டு ஆற்றாத அவன் மனைவி அழுது புரளவும் அம்மன் கோயில் கதவு அடைத்துக்கொண்டது. இச்செய்தி பாண்டிய அரசனுக்கு எட்டவும் இது பற்றி மூதலித்து உண்மையறிந்து வார்த்திகனை விடுவித்து அவனிடம் மன்னிப்புக்கேட்டு அவன் முன் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தான். அவனுக்கு தங்காலுடன் வயலூர் என்ற ஊரையும் இறையிலியாக வழங்கினான். இது சிலப்பதிகாரம் கட்டுரை காதை தரும் செய்தி. இன்று போல் காவலதுறை சரியாக மூதலிக்காமல் சிறையிலடைப்பதும் தலைமை நயமன்றம் வரை செல்வாக்குக்கு அடிபணிவதும் அன்றும் இருந்ததற்கான ஒரு தடயம்.

மேற்கூறிய கதை மூலம் ஓருண்மை புலப்படுகிறது. மூவேந்தர்களும் பார்ப்பனர்களுக்கு அளவுக்கு மீறிய சலுகைகளை வழங்கி அவர்களுக்கு அடிமைகளாகவே வாழ்ந்துள்ளனர் எனபது அது. தமிழ்நாட்டில் அம்மண சமயம் மன்னர்களுக்கு எதிரான பரப்பல்களுடன் வளர்ந்து வந்ததைக் கண்ட மூவேந்தர்களும் அந்த மதம் எந்த அடிப்படையில் மக்களை ஈர்க்கிறது என்பது குறித்து ஆய்ந்து அந்தக் காரணியை அகற்றுவது பற்றிச் சிந்திக்காமல், புத்த, அம்மண மதங்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தெற்கு நோக்கி ஓடி வந்த வடக்கத்திப் பார்ப்பனர்களுக்கு அளவுக்கு மிஞ்சிய செல்வாக்கை அளித்துள்ளனர். இன்று எப்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி பிரிட்டன் மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்தியதோ அதே போல் 9 நூற்றாண்டுகளுக்கு முன் ஓர் அரசன் ஒரு வரிவிதிப்புக்கு ஆங்காங்குள்ள பெருமக்களை அழைத்து அவர்களது கருத்தைக் கேட்டுத் தன் நிலைமையை விளக்கினான். அதிலிருந்துதான் இன்றைய பாராளுமன்ற ஆட்சி முறை திரிவாக்கம் பெற்று வளர்ந்தது. ஆனால் நம் நாட்டில் மக்ககளாட்சி என்ற பெயரில் பாராளுமன்றத்தைக் காட்டி ஆள்வினையாளர்களும் அரசியல் தலைவர்களும் மக்களை மிதித்து நசுக்குகிறார்கள். இவ்வாறு மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் விலகிச் செல்லுந்தோறும் இந்த அரசு மட்டுமல்ல மக்களும் ஏன் மொத்த நாடும் நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து போகிறது.

இனி மேலே கூறிய சிலப்பதிகாரக் கதையில் தங்கால் என்று வரும் சொல்லுக்கு உரையாசிரியர் திருத்தங்கால் என்று பொருள் குறித்துள்ளார். ஆனால் சிவகாசி அருகில் இருக்கும் ஊர் திருத்தங்கல் ஆகும். இரண்டும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இனி, மீண்டும் முத்துக்குட்டி அடிகளுக்கு வருவோம். அவர் திருவிதாங்கூர் அரசால், அதாவது மேல் சாதியினரால் அவர்களிலும் உயர்ந்த நம்பூதிரிகளால் ஒடுக்கப்பட்ட 18 சாதியினரை இணைத்து கூட்டங்கள் நடத்தினார். அவர்களுக்குச் சம பந்திகள் நடத்தினார். இதற்காக அவர் அமைத்த இடங்களுக்கு நிழல்தாங்கல்கள் என்று பெயரிட்டார். இதில் திருத்தங்காலின் நிழல் இருப்பதைக் காணலாம். இவ்வாறு அவரது இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்தது. இதைக் கண்டு திருவிதாங்கூர் மன்னர் மிரண்டார். முத்துக்குட்டி அடிகளைப் பேச்சுக்கு அழைத்தார். இது பற்றி இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன.
           
ஒரு கூற்றின் படி அய்யாவை அரசரின் ஆட்கள் கட்டியிழுத்துச் சென்றனர் என்பது. இன்னொரு கூற்று அடிகள் தன் மாணவர்கள்(சீடர்கள்) துக்கிய பல்லக்கில் திருவனந்தபுரம் சென்றார் என்பது. அடிகளுக்கு 5 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் குமரி மாவட்டம் ஈத்தாமொழிக்குக் கிழக்கிலுள்ள புதூரை அடுத்திருக்கும் உடங்காட்டுவிளையைச் சேர்ந்தவர். அங்கு பழமை வாய்ந்த ஒரு நிழல்தாங்கலும் இருக்கிறது. அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என் தாயின் அன்னையார். அய்யாவை மாணவர்கள் பல்லக்கில் வைத்துத் திருவனந்தபுரத்துக்குச் சுமந்து சென்றதை அவர்கள் வாய்மொழியாகக் கேட்டிருக்கிறேன்.

            தன் வரலாறாக அடிகள் தன் மாணவர்களில் ஒருவராகக் கூறப்படும் அரிகோபால சீடர் என்பவரைக் கொண்டு எழுதுவித்த அகிலத்திரட்டு அம்மானையில் நீசன் என்ற சொல் மூலம் குறிப்பிடும் திருவிதாங்கூர் மன்னன் தன்னை புலிக்கூட்டில் புலியுடன் அடைத்ததாகவும் சுண்ணாம்புக் காளவாயில் வைத்துச் சுட்டதாகவும் அவற்றாலெல்லாம் தனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். இது திருநாவுக்கரசர் கதையின் மறுபதிப்பு அன்றி வேறில்லை என்பது என் கணிப்பு.

            நான் முன்னம் குறிப்பிட்ட தசவகம் என்ற தமிழகச் சமூக வரலாற்றுக் கழகம் அமைப்பின் சார்பில் கன்னிமாகுமரியை அடுத்த வட்டக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மதமும் அரசியலும் என்ற தலைப்பில் நான் பேசினேன். அப்போது திருமாலாகிய பத்மநாபனின் தாசன் என்று தன்னை அறிவித்து அரசாளும் திருவிதாங்கூர் மன்னனை எதிர்த்து இயக்கம் நடத்திய வைகுண்டர் ஏன் தன்னை திருமாலின் தோற்றரவு(அவதாரம்) என்று அறிவித்தார் என்ற கேள்வியை முன்வைத்தேன். அப்போது அதற்கு விடை இல்லை என்றாலும் இன்னொரு செய்தியைக் கூறினார் நான் மேலே குறிப்பிட்ட சுகுமாரன் தம்பி. அய்யாவுக்கும் அரசனுக்கும் பேச்சு நடந்ததாகவும் அதில் அடிகள் ஒரு கோயில் கட்டி அதற்குள் சாணார்கள் தலைப்பாகை அணிந்து செல்லலாம் என்று உறுதியளித்தத்தாகவும் அதை அடிகள் ஏற்றுக்கொண்டதாகவும் இது குறித்த ஆவணங்களைத் தான் திருவனந்தபுரம் ஆவணக்காப்பகத்தில் பார்த்ததாகவும் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த புலவர் கு.பச்சைமால், அய்யா வெள்ளையரை வெறுப்பவர், ஆங்கிலர் ஒரு சமத்தானத்தில் கலவரச் சூழல் உருவானால் சமத்தானத்தைப் பிடுங்கி தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுவர் என்ற நிலைமையைச் சுட்டிக்காட்டியதால் அரசர் கூறியதை ஏற்றுக்கொண்டார் வைகுண்டர் என்று சற்று அடங்கிய குரலில் தலையைக் குனிந்துகொண்டே கூறினார். புலவர் கு.பச்சைமால் அய்யாவின் மாணவர் ஒருவரின் மரபில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, பெரும் ஆரவாரத்தோடு களமிறங்கிய அய்யா இறுதியில் திருவிதாங்கூர் அரசருடன் இணக்கம் கண்டு போராட்டத்தை நடுவில் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை. அத்துடன் திருத்தங்கல் பற்றி நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையானால் அவர் தன்னைத் திருமாலின் தோற்றரவு என்று அறிவித்ததற்கான இன்னொரு காரணமும் தெரிந்துவிடும்.

            இதன் பின்னர் அய்யா தென்தாமரை குளம் என்ற ஊரில் ஒரு சிறு மண்டபத்தில் அமர்ந்து தன்னை நம்பி வரும் மக்களுக்கு நாமக்கட்டியைப் பொடித்து அதைக் கொடுத்து நெற்றியில் நாமம் இட்டு அந்தப் பகுதியில் தோண்டப்பட்ட முத்திரிக் கிணறு என்ற கிணற்றிலிருந்து பெறப்பட்ட தண்ணீரைக் குடிக்க வைத்து நோய்களைக் குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல் போன்ற “இறும்பூதுகளை” (அற்புதங்களை)ச் செய்துவந்தார். இந்த இடத்துக்கு இப்போது சாமித்தோப்பு என்பது பெயர். அவர் அமர்ந்திருந்த, வடக்கு நோக்கிய மண்டபத்துக்கு வடக்கு வாசல் என்பது பெயர். இத்துடன் அவர் உருவாக்கிய 18 சாதிக் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கும். அவருக்குத் தோழர்களாக இருந்தவர்கள் விலகியிருப்பர். இதற்குச் சான்றாக எழுத்தாளர் நண்பர் பொன்னீலன் அவர்களின் அன்னையார் திருமதி அழகியநாயகி அம்மாள் எழுதியுள்ள அருமையான தன்வரலாற்று நூலான கவலை ஓர் அரிய செய்தியைத் தருகிறது.

அய்யா காலத்தில் வாழ்ந்த பொன்னீலனின் முப்பாட்டனார் ஒருவர் முத்துக்குட்டி அடிகளுடன் மிக நெருக்கமாக இயங்கி வந்துள்ளார். அவர் இடையில் பிரிந்து வந்து தங்கள் நிலத்திலிருந்த கைவிடப்பட்ட ஓர் அம்மன் கோயிலைப் புதுப்பித்து நாள்தோறும் மூன்று வேளை பூசையும் வழிபாடும் நடத்தியிருக்கிறார். நோய் தீர்த்தல், குறி சொல்லுதல், பேய் விரட்டுதல் என்று அந்தக் கோயில் அந்த வட்டாரத்தில் பெரும் ஈர்ப்பைப் பெற்றுள்ளது. பொன்னீலனின் பெரிய தந்தையார் காலம் வரை தொடர்ந்த இந்த வழிபாடு அவருக்குப் பின் அதைத் தொடர எவரும் முன்வராத நிலையில் மறைந்து போயிற்று. அடிகள் போராட்டத்தைக் கைவிட்டு சாமிதோப்பில் தங்கி திருமால் தோற்றரவு என்ற வடிவம் எடுத்ததனால்தான் அவரை ஒரு வழிபடு தெய்வமாக ஏற்றுக்கொள்ள விரும்பாமல் தன் மரபுத் தெய்வமான அம்மன் வழிபாட்டில் பொன்னீலனின் முப்பாட்டனார் இறங்கியிருக்கலாம் என்று கொள்ள வேண்டியுள்ளது.

அடிகள் மறைந்த பின் வடக்கு வாசல் மண்டபத்துக்குப் பின்புறம் அவரை அடக்கம் செய்து அந்த கல்லறையைச் சுற்றி கருவறையும் முன்னால் உள் மண்டபமும் வெளியே கொடிமரமும் உள்சுற்றும் மதிற்சுவரும் வெளிச்சுற்றுமாக ஒரு ஆகமக் கோயிலை அவரது மாணவர்கள் அமைத்தனர். இப்போது ஒரு சிக்கல் உருவானது.

முத்துக்குட்டி அடிகளுடன் ஏற்கனவே திருமணமாகி ஓர் ஆண் குழந்தையுடன் ஒரு பெண்மணி வந்து சேர்ந்தார். இறுதி வரை அவருடனேயே வாழ்ந்தார். அடிகள் கைம்பெண் மறுமணத்தைப் பரிந்துரைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே பரிந்துரைத்த பெரியாரின் தொண்டர்கள் அதைப் புறக்கணித்தது போலல்ல, அடிகளாரின் தொண்டர்கள் அதனை வெறுத்தனர், அதைக் கேட்டாலே முகஞ்சுளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட குமுக மாற்றம் ஒரு குறிப்பிட்ட பொருளியல் கட்டமைப்பில்தான் இயலும் என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். பெரியாரைப் பற்றியோ அவரது இந்தக் குறிப்பிட்ட நிலைப்பாடு பற்றியோ அறியாதவர்கள் இன்று மாறிவிட்ட பொருளியல் சூழலில் எவருடைய அல்லது எந்த ஓர் இயக்கத்தினுடைய பரப்பலுமின்றி தாமாகவே கைம்பெண் மறுமணங்களில் ஈடுபடுவதும் முன்பு அதைக் கடைப்பிடித்தவர்கள் அதைக் கைவிட்டு வருவதும் இதனால்தான்.

அடிகளார் இறந்த பின் அவரது மாணவர்களுக்கும் இந்த அம்மையாருக்கும் கோயில் உரிமை பற்றிய பூசல் உருவானது. வழக்கு நயமன்றத்துக்குச் சென்றது. அம்மையாருடைய மகன் அடிகளாருக்குப் பிறக்கவில்லை என்ற கருத்தை மாணவர்கள் தரப்பு முன்வைத்தது. திருவனந்தபுரத்தில் ஆங்கில நயவர் முன் கூண்டிலேறிய அம்மையார் குழந்தை அடிகளாருக்குப் பிறந்ததுதான் என்று கூறினார். ஓர் இந்தியப் பெண் இது போன்ற செய்திகளில் பொய் கூற மாட்டார் என்று கூறி அந்த ஆங்கில நயவர் அவருக்குச் சார்பாகத் தீர்ப்புக் கூறினார். இவ்வாறுதான் சாமிதோப்பு கோயில் இப்போதைய அறங்காவலர் குடும்பத்தினர் கைகளுக்கு வந்தது. (நாமறிந்து அம்மண சமயத்தின் மகாவீரர் தவிர உலகில் தோன்றிய அனைத்து மதத் தலைவர்களுக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அல்லது அவர்கள் இறந்த பின் அதிகாரப் போட்டிகள் வந்துள்ளன.

அய்யாவின் காலத்துக்குப் பின்:

இப்போதைய அறங்காவலர் குழுவினருக்குப் பாட்டனார் ஒருவர் ஒரு பெண்ணுக்கு கோயிலில் உரிமை கொடுத்து ஒரு பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டார். அது வழக்கு மன்றம் சென்றது. வழக்கு முடிவில் மொத்தம் இருந்த அறங்காவலர்கள் எழுவரோடு எட்டாவதாக அந்தப் பெண்ணின் மரபினருக்கு உரிமை கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் ஒவ்வோர் எட்டாம் ஆண்டும் இந்தப் புதிய அறங்காவலர் பொறுப்பில் கோயிலின் முழுச் செயற்பாடும் இயங்கும். ஆனால் அன்பர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ளத் தயக்கமாக இருந்தது போலும். அந்த ஆண்டுகளில் ஆள் வரத்து குறைவாக இருக்கும். வருவோரில் பலரும் காணிக்கையைத் தட்டில் போடாமல் பழைய அறங்காவலரை அவர் வீட்டுக்குச் சென்று செலுத்தியதும் உண்டு.

ஏழ்மை நிலையிலிருந்த இந்தப் புதிய அறங்காவலர் காலத்தில்தான் அன்பர்கள் சமைப்பதற்கு கற்களை அணைத்து அடுப்பேற்றி வந்த நிலைமையை மாற்றி நிலையான அடுப்புகளை அமைத்தது, அன்பர்கள் அமரவும் படுக்கவும் என இருந்த மண்டபத்தின் ஓலைக்கூரையை ஓட்டுக் கூரையாக மாற்றியும் கோயிலிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

கோயிலுக்குக் கணிசமான சொத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் வருமானம் நிறையவே வருகிறது. அதனால் இந்து அறநிலையத் துறை கோயிலைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கிறது. இதை எதிர்க்க அய்யா வழி எனப்படும் இந்த வழிபாட்டு முறை “இந்து” வழிபாட்டு முறைகளிலிருந்து மாறுபட்டது என்ற விளக்கத்தை முன்வைக்கின்றனர் அறங்காவலர்கள். அதனாலேயே பாலபிரசாபதி போன்றோர் அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துக்கொண்டு தானும் ஓர் அரசியல் சார்ந்த அமைப்பை வைத்துள்ளார். கோயிலுக்குப் பின்னாலிருக்கும் நாடார் சாதியினரின் செல்வாக்குக்கு அஞ்சி ஒதுங்கி நிற்கிறது அரசு. இல்லையென்றால அய்யா அரும்பாடு பட்டு உருவாக்கிய சாதி, சமயங்கள் கடந்த தாய்மொழி வழிபாட்டுக் கோயிலினுள் சமற்கிருத மந்திரங்களுடன் பார்ப்பனப் பூசகன் என்றோ நுழைந்திருப்பான். ஆகமக் கோயில்களினுள் எந்தப் பூசகனும் அன்பர்களைத் தொட்டுத் திருநீறோ சந்தனமோ பூச மாட்டான். ஒரு நடுவரசு அமைச்சரை நோக்கி திருச்செந்தூர்க் கோயில் நம்புதிரிப் பார்ப்பனப் பூசகன் திருநீற்றை மடித்து வீசினான் என்று 40 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் சிக்கல் எழுந்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால் சாமிதோப்பிலும் பிற அய்யாவழிக் கோயில்களிலும் பூசகர் மக்களைத் தொட்டு நெற்றியில் நாமம் இடுவதைப் பார்க்க முடியும்.


அய்யா உருவாக்கிய வழிபாட்டுமுறையில் கிறித்துவத்தின் தாக்கம் இருந்தது. நம் மரபு வழிபாட்டு முறையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரிக்கும் வகையில் மணியோசை, மேளங்களின் முழக்கம் என்று ஐம்புலன்களையும் அதிர வைக்கும் தன்மை உண்டு. ஆனால் கிறித்துவக் கோயில்களில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடவும் வேண்டுதல்களைக் கூறவும் செய்கின்றனர். இதனால் ஒன்றுபட்டுச் செயற்படும் ஒரு பயிற்சி அங்கு கிடைக்கிறது. அதைப் போலவே அடிகளார் உருவாக்கிய வழிபாட்டு முறையில் மதியம் நடைபெறும் வழிபாட்டில் மணியடித்தல், மேளதாளம் அனைத்தும் முடிந்ததும் உச்சிப் படிப்பு எனப்படும் ஒரு பாடல் வரிசையை அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ஒருவரும் பணிவிடைக்காரர் எனப்படுவோரில் ஒருவரும் சொல்ல அன்பர்கள் அதைத் திருப்பிச் சொல்ல ஏறக்குறைய 10 முறைகள் மீண்டும் மீண்டும் சொல்வர். அதைப் போல் முன்னிரவிலும் மணியடிப்பு, மேளதாளங்களை அடுத்து உகப்படிப்பு எனும் பாடல் வரிசை அறங்காவலர் குழுவினர் சொல்ல பிறரால் ஒப்புவிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை சிறப்பான நாள். அன்று இரவு ஒரு பல்லக்கு ஊர்தியில் (வாகனத்தில்) அய்யாவை அமர்த்தி கோயிலைச் சுற்றி வருவர். இது கிறித்துவர்களுக்குப் போட்டியா, அவர்களைப் போலச்செய்ததா, அல்லது கிறித்துவத்துக்குச் சென்றவர்களை ஈர்க்கும் முயற்சியா என்ற ஐயங்களை ஏற்படுத்துகின்றன.

உச்சிப் படிப்பு முடிந்ததும் வடக்கு வாயிலில் கஞ்சி ஊற்றுவார்கள். இரவில் கூட்டாஞ்சோறு போன்று சமைத்து வழங்குவார்கள், நல்ல சுவையாயிருக்கும்.

அய்யாவின் கல்லறை அமைந்திருக்கும் கோயில் கருவறையில் ஒரு வேலின் பின்புறத்தில் அகன்ற பக்கத்தை மேல் பகுதியில் கொண்ட இலை வடிவப் பலகையைப் பொருத்தி காவித்துணியால் போர்த்திய “மூலவர்” வடிவம் உள்ளது. அதன் பின்புறம் சுவரில் ஒரு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.  தேரிலும் ஊர்தியிலும் வைப்பதற்காக அதே வடிவிலான ஓர் “உற்சவர்” உருவமும் உள்ளது.

தை, வைகாசி ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் நடைபெறும். நாள்தோறும் இரவில் ஊர்தி உலா, பத்தாம் நாள் தேரோட்டம் எல்லாம் உண்டு. ஆகமக் கோயில் போன்ற கோயில் அமைப்பும் தேர், திருவிழாக்களும் அய்யா அறிவுரைப்படி அமைந்தனவா அல்லது அறங்காவலர்கள் தங்கள் விருப்பம் போல் சேய்த ஏற்பாடுகளா என்பது தெரியவில்லை. கருவறை உள்ளும் அனைவரும் சென்று வழிபட முடிவதைப் பார்த்தால் அய்யாவின் அறிவுரை இருக்க வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. அத்துடன் கோயிலுக்குள் தலைப்பாகை அணிந்து செல்வதும் அரசன் கொடுத்த உரிமைகளுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆனால் தேர், திருவிழாக்கள், காணிக்கை, கைக்கூலி கூடாது என்ற அய்யாவின் அறிவுரைகளுக்கு எதிரானவையாகவே இவை விளங்குகின்றன. காணிக்கையைக் கூட “விளக்கெண்ணெய்க் காசு”, அதாவது கோயில் பராமரிப்புக்கு, என்ற பெயரில்தான் குறிப்பிடுகிறார்கள்.  

அடிகளாரின் காலத்துக்குப் பின் அவர் உருவாக்கிய நிழல்தாங்கல்கள் கணக்கு(குறி) சொல்லும் நிலையங்களாக மாறின. புதிதாக பதிகளும் தோன்றின. அய்யா வழியினர் கோயிலைப் பதி என்றும் வீட்டைக் கூரை என்றும் கூறுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் நிழல்தாங்கல்கள் அனைத்திலும் கணக்குச் சொல்வதும் பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் உச்சிப்படிப்பு, வாகனம் எடுத்தல் முதலிய வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். திருவிழாக்களும் நடைபெறும். கார்த்திகை மாதம் சாமிதோப்பு தொடங்கி அனைத்துப் பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் அடிகளாரின் ஆணையில் எழுதப்பட்ட அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலைப் படித்து உரை விளக்கம் செய்யும் நிகழ்ச்சி ஏடு வாசிப்பு என்ற பெயரில் நடைபெறும். இந்த வாசிப்புக் காலத்தில் சாமிதோப்பிலிருந்தும் பிற பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் இருந்தும் குழு குழுவாக பிச்சை என்று அழைக்கப்படும் அரிசி, பணம் நன்கொடைகள் திரட்டுவர். இது பொதுவான நடைமுறை.

ஒரு 70 ஆண்டுகளுக்கு முன் அய்யா வழியினருக்கு மதிப்பு இருந்ததில்லை. அவர்கள் நெற்றியில் இடும் நாமத்தை கொக்கு பீச்சியிருக்கிறது என்று முகத்துக்கு நேராகவே கேலி செய்வார்கள். அப்போதெல்லாம் சாமிதோப்புக்கு வருவோரில் மிகுதி மேற்கு வட்டங்களில் நாயர்களின் கொடுமைகளுக்கு உள்ளாகும் நாடார் சாதியினரே மிகுதி. கிழக்கு வட்டமாகிய அகத்தீசுவரத்தில் அய்யாவின் மணவர்களாக இருந்தவர்களின் வழியினர் தவிர கோட்டாறு கூலக்கடைத் தெரு, வடசேரி கனகமூலம் சந்தை வெற்றிலை வாணிகர்களே மிகுதி. இவர்களில் பெரும்பாலோர் எங்கள் ஊர்க்காரர்கள். எங்கள் ஊர்க்காரர்கள் ஒரு காலத்தில் வெற்றிலை வாணிகர் சாதியினராகிய இலைவாணிகர்கள் எனப்படுவோருக்கு களியக்காவிளையிலிருந்து வண்டிகளில் வெற்றிலை ஏற்றி சந்தைக்குக் கொண்டுவந்தவர்களாகும். நாளடைவில் பெரும் பணக்காரர்களான இலைவாணிகர்கள் வாணிகத்தில் ஈடுபாட்டைக் குறைத்ததனால் வண்டிக்காரர்களே வாணிகர்களாயினர். இந்தப் புது வாணிகர்களின் உறவினர், நண்பர்களில் சிலரும் இவ்வாணிகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பாக்கு, அதாவது கமுகிலிருந்து பெறப்படும் பச்சைப் பாக்கு வாணிகத்திலும் ஈடுபட்டனர். இவ்வாறு புதிதாக சந்தையினுள் நுழைந்த இவர்கள் எந்தவிதமான சிக்கல்களை அச்சந்தைகளில் வாணிகம் செய்த பெரும்பான்மையினரான பிற சாதிகளிடமிருந்து எதிர்கொண்டனரோ, அனைவரும் சாமிதோப்புக்கு தவறாமல் வரும் அன்பர்களாக மாறினர். என் தந்தையாரும் அவ்வாறே. நகருக்குள் அவர் எதிர்கொண்ட சாதிய இழிவுகளாலும் ஊரில் ஊர்த்தலைவர்களான நாடான்களுடனான முரண்பாடுகளாலும் அவர் எங்கள் வட்டார திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரானார்.

இன்று அய்யாவின் பெயரைக் கூறி அவர்தான் நாடார்களின் எழுச்சிக்கு அடிகோலிய ஒரே விசை என்று ஓங்கி அடிப்பவர்களுக்கு உண்மையில் அவரது இயக்கத்தின் வரலாறு தெரியாது. அன்று நாமம் அணிந்திருந்தவர்களைப் பார்த்து கொக்கு பீச்சியிருக்கிறது என்று ஏளனமாகப் பேசி இழிவுபடுத்தியவர்களில் பணக்காரர்களின் வழி வந்தவர்பகளே இவர்கள். இன்று சாதி அடிப்படையில் ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற நாடார்களைத் தங்கள் பின்னால் அணிதிரட்டும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்தப் பரப்பல். வாக்கு வேட்டையாடிகளையும் இந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

அடிகளாரின் பணிகளால் சாணார்களின் மீட்சிக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தப் பயனும் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. போராட்டத்துடன் அவர் தொடங்கிய பணி அவராலேயே இடையில் கைவிடப்பட்டது. எந்தக் காரணத்தால் கிறித்துவ விடையூழியர்கள் தங்கள் பணியைப் பாதியிலேயே விட்டார்களோ அதைப் போன்ற, அதே இடத்திலிருந்து தோன்றிய ஓர் அழுத்தத்தினால் இவரும் தன் போராட்டத்தைப் பாதியிலேயே விட்டார். சாணார்கள் தங்கள் உழைப்பு, சிக்கனம், ஒற்றுமை ஆகியவற்றாலேயே விடுதலையும் மேம்பாடும் அடைந்தனர். அத்துடன் மாதவையா, சி.பி.இராமசாமி ஐயர் போன்ற முற்போக்குச் சிந்தனை உள்ள திருவிதாங்கூர் திவான்களுக்கும் இந்த எழுச்சியில் பங்குண்டு. திருவிதாங்கூர் அரசால் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை நீர் சாணார் பகுதிகளுக்குப் பாய்ந்து நெல்வயல்களையும் தென்னந்தோப்புகளையும் உருவாக்கியது அவர்களது செல்வநிலையை மிக மேம்படுத்தியது. இராமசாமியார் புகுத்திய கட்டாய இலவயக் கல்வி சாணார்களின் எழுத்தறிவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தி அரசுப் பணிகளில் அமர்த்தியது. இதனால் இப்போதிருக்கும் தலைமுறையினருக்குத் தங்களுக்கு முன்பிருந்த தலைமுறையினர் பட்ட அல்லல்கள் தெரியாது. சென்ற 1982ஆம் ஆண்டு சங்கக் குடும்பங்களும்(பரிவாரங்களும்) வல்லரசியமும் உருவாக்கிய கலவரம் சாணார்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தியது. இந்தக் கலவரத்தின் பின்னணியில் இந்து முன்னணித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தாணுலிங்க நாடார் பாண்டிய அரச மரபில் கடைசியாக வள்ளியூரில் ஆட்சி செய்து கன்னடரால் அழிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியாக தெற்கு நோக்கி வந்து பொற்றையடி ஊரில் திருவிதாங்கூர் மன்னரால் நாடான் பட்டத்துடன் அமர்த்தப்பட்டவர்களின் வழிவந்தவர் என்று தெரிகிறது. அவர் மரபே முற்றிலும் திருவிதாங்கூர் அரசருக்கு இணக்கமாக சாணார்களுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் தீங்கு இழைப்போராகவே வாழ்ந்துவருகின்றனர். அந்த அடிப்படையில் இந்து நாடார் என்ற அடையாளத்தைக் காட்டி உலகெலாம் உள்ள பணக்கார இந்து நாடார்களிடமிருந்து சங்கக் குடும்பங்களுக்கு(சங்கப் பரிவாரங்களுக்கு) நிலையாகப் பணம் பாய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஆக, தமிழர்களின், குறிப்பாக நாடார்களின் வளர்ச்சியைத் தடுப்பது தமிழகத்திலுள்ள தனது நலன்களுக்கு உகந்தது என்று திட்டமிட்டு களத்தில் இறங்கிய எதிரியாகிய மார்வாரிகளிடம் பொருளியல் களத்தில் உள்ள ஒட்டுமொத்த நாடார்களுமே மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தை விட்டால் சென்னையில்தான் அய்யா வழி வழிபாடு பிற பகுதிகளை விட முனைப்பாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் செயலலிதாவின் தோழி சசிகலாவின் கூட்டம் நாடார்களின் பொருளியல் நிறுவனங்களை விழுங்க முயன்றதன் எதிர்வினையாகும். ஆனால் அங்கும் பூசை, திருவிழாக்களுக்கு அளிக்கப்படும் முகாமை மக்களை ஒன்றுப்படுத்துவதற்குக் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த வகையில் வழிபாட்டை அங்கு உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. சசிகலா கூட்டத்தின் படையெடுப்புகள் முழு வெற்றியுடன் தொடர்கின்றன என்றே தெரிகிறது. இது மார்வாரிகளின் படையெடுப்பின் முனைப்பை நாடார்களின் மட்டுமல்ல தமிழக மக்களின் கண்களிலிருந்தும் மறைக்கிறது.

மார்வாரிகள் தமிழக மக்களைப் போல் ஆண்டு 365 நாட்களும் கோயில்களில் ஆறு வேளை அல்லது மூன்று வேளை பூசை, வழிபாடு என்று நேரத்தையும் கவனத்தையும் செல்வத்தையும் வீண்டிப்பதில்லை. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு சிறப்பு நாட்களோடு தங்கள் சமய நடவடிக்கைகளை முடித்துக்கொள்கிறார்கள். அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். கடவுள் கோயில்களில் மட்டும் இல்லை எங்கும் நிறைந்தவன் என்பதை மனதில் ஏற்றுக்கொண்டு விரும்பினால் தான் இருக்கும் இடத்திலிருந்தே எந்த நேரச் செலவும் பணச் செலவும் இல்லாமல் வழிபடலாம். “கிழவி, சாமி இருக்கும் திசை நோக்கிக் காலை நீட்டாதே” என்று சொன்ன கோயில் ஊழியனை நோக்கி, “சாமி இல்லாத திசையைக் காட்டப்பா, அந்தத் திசையில் என் காலை நீட்டுகிறேன்” என்று ஔவை சொன்னதன் உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் மனிதனைப் போல் நாம் முன்வைக்கும் வேண்டுகைகளுக்காக கைக்கூலி கேட்பவர் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனம் ஒன்றி கடவுளிடம் நம் துன்ப துயரங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற விரும்புவோருக்கென்று வட்டார அடிப்படையில் வழிபாட்டுக் கூடங்களை அமைத்து அங்கு வருவோர் ஒன்றிணைந்து அதனைப் பராமரிக்க வேண்டும். அங்கு உருவம் என்ற ஒன்று கூடத் தேவையில்லை. மண்டபத்தைப் பேண ஒரே ஊழியர் மட்டும் போதும். அத்தகைய ஒரு சமயமாக வருங்காலத் தமிழகச் சமயம் அமையட்டும்.
நிறைவுற்றது.