14.4.16

தமிழில் வழிபாடு - 6



தமிழில் வழிபாடு - 6

ஆகம வழிபாடு வருண முறையிலமைந்த வழிபாடாகும். கோயில் கருவறை பார்ப்பனர்களுக்கும் தேவதாசிகளுக்கும் உரியது. உள்மண்டம் அரசன், அதிகாரிகள், சிற்றரசர்கள், நாட்டுத் தலைவர்களுக்கு, அதாவது சத்திரியர்களுக்கு உரியது. வெளிமண்டபம் வாணிகர்களுக்கும் பண்ணையார்களுக்கும் உரியது. கோயிலின் அனைத்து வரும்படிக்கும் காரணமான கோயிலைக் கட்டுவோரும் கோயில் நிலங்களில் பயிரிடுவோருமான சூத்திரர்களும் பஞ்சமர்களும் கோயிலினுள் நுழைய முடியாது. சூத்திரர்கள் கோபுர வாசலுக்கு நேரே நின்று நந்தி அல்லது மூஞ்சுறு போன்ற ″இறைவனின்″ ஊர்தி(வாகன)ச் சிலையின் பின்புறத்தையும் கொடிமரத்தின் அடியையும் பார்த்து வணங்கலாம். ″மூலவர்″ எனப்படும் கருவறைப் பொம்மையை ஒரு போதும் கண்ணால் பார்க்கவே முடியாது. இவர்களால் ″இறைவன்″ தெருவுலா வரும்போது ″உற்சவர்″ எனப்படும் விழா நாயகர் பொம்மையைத் தொலைவிலிருந்து பார்த்து வணங்கலாம். பஞ்சமர்கள் இந்தப் பொம்மையைக் கூடப் பார்க்கக் கூடாது. பார்த்தால் இறைவனுக்கு ″தீட்டு″ ஏற்பட்டுவிடும்.

            ஆகமச் கோயில்கள் வருண முறையில் அமைந்தவை என்ற உண்மையையும் சாதி ஏற்றத்தாழ்வுக்கும் தீண்டாமைக்கும் பார்ப்பனர்கள் மட்டும்தான் காரணம் எனும் பொய்ம்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றினைப் பார்ப்போம்.

பார்ப்பனர்களுக்கு ஆதரவு மாலியம் மட்டுமல்ல, சிவனியமும் தானென்று சிவனியர்களைப் பெரியார் தாக்கிய செய்தியை முன்பு பார்த்தோம். இதனால் கலவரமடைந்த சிவனிய வேளாளர்களிடம் பெரும் கலக்கம் உருவானது. இரு மாநாடுகளை நடத்தினர். முடிவில் ″பழைய மரபுகளை″ப் பேணுவது என்று தீர்மானித்தனர். பழைய மரபுகள் என்றது ஆகம மரபுகளைத்தான். இம்மாநாட்டில் குறிப்பாக வெளியிடப்பட்ட கருத்து ″தூய்மையற்ற″ ″இழி சாதியினர்″ கோயிலினுள் நுழையக் கூடாது என்பதாகும்.

இதே ″ஆகம″ முறையை மீட்பதென்ற பெயரில் மீண்டும் ஆலய நுழைவு மறுக்கப்படலாம் என்று அஞ்சுகிறோம். ஏனென்றால், கோயில் நிலங்கள் ″மீட்பு″ என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்கள் மிரட்டப்படுகிறார்கள்; கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இதனை எவரும் கண்டுகொள்ளவில்லை. தேவதாசி முறையை மீட்கவேண்டும் என்று நா.மகாலிங்கம் பேசுகிறார். ஒரு முணுமுணுப்பு கூட எவரிடமிருந்தும் வெளிப்படவில்லை. தமிழ் இசை, நடனம் ஆகியவற்றை மீட்பதென்ற பெயரில் மாவட்டந்தோறும் இசைப்பள்ளிகளும் பண்பாட்டுக் கூடங்களும் தமிழ்க்குடிமகனின் முயற்சியில் செயற்படுகின்றன. இவற்றிலிருந்து வெளிவரும் மாணவிகளைத்தான் கோயில் தாசிகளாகப் பயன்படுத்த வேண்டுமென்று மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஆக இவர்களெல்லோரும் ஒருங்கிணைந்து செயற்படுவது உறுதியாகிறது. இன்றிருக்கும் அரிதான வேலைவாய்ப்புச் சூழலில், முன்பு நடந்தது போல் பெண்கள் தங்களையும் தங்கள் பெண்மக்களையும் கோயில்களுக்கு அடிமைகளாய், தேவரடியார்களாய், தேவடியாள்களாய், தேவதாசிகளாய் விற்க வரும் வாய்ப்புகள் மிகுதி. கோயில்களுக்கு அதற்குத் தேவையான பொருளியல் வலிமையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தாம் மும்முரமாக நடைபெறுகின்றனவே! வீட்டுப் பணிப் பெண்னென்றும் வேறு வேலையென்றும், ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்திருந்தும் எத்தனை பெண்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பரத்தைமைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை மும்பையிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களிடமிருந்து அறிந்தோமே! அதைவிடக் ″கவுரமான″ பிழைப்புதானே ″கோயில்″ தாசித் தொழில் என்று அமைதி கூறிக்கொள்ளலாமே! மக்களை வறுமையின் பிடியில் வைத்திருப்பதில் எத்தனை பேருக்கு எத்தனை வகையான ஆதாயங்கள்? இவற்றுக்கெல்லாம் இறுதிக் கட்டமாகத் தாழ்த்தப்பட்டோரைக் கோயில்களுகுக்குள் நுழையக்கூடாது என்று தடுக்கத்தான் போகிறார்கள். அப்போது அச்சாதித் தலைவர்கள் கொதித்தெழுவார்கள் என்று கூறுகிறீர்களா? உறுதியாகச் சொல்கிறோம். அந்தத் தடுப்பு ″இயக்கத்தில்″ இவர்கள்தாம் முன்னணியில் நிற்பார்கள். இப்போது இவர்கள் பள்ளர், பறையர், சக்கிலியர் இல்லை. இப்போதே தேவேந்திரகுல வேளாளர், ஆதித் தமிழர், அருந்ததியினர் என்று பிள்ளைமாரில் ஒரு பிரிவினராக மாறிக் கொண்டிருக்கின்றனர்.

            ″பள்ளர், பறையர், கனத்த சக்கிலியர் மெள்ள மெள்ள வெள்ளாளரனார்″ என்ற புதுச் சொலவடை உருவாக வேண்டியதுதான் பாக்கி. இப்போதே படித்த மேற்தட்டினர் அனைவரும் பூணூல் அணியாத பார்ப்பனராக, வெள்ளாளராக, வெள்ளாளக்கட்டை மேற்கொண்டுவிட்டனர். படிக்காத, உடலுமைப்பில் உழலும் பிறர் இவர்களுக்கு எப்போதும் போல் பள்ளர், பறையர், சங்கிலியர்தாம்.

            இதுவொன்றும் புதிதாக நடைபெறப்போவதில்லை. தமிழகத்தில் பலமுறை நடந்ததுதான். சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுவதும் அதில் தலைமை தாங்குவோரை உள்ளிழுத்துத் தங்கள் சாதியில் ஓர் உட்பிரிவாக மேற்சாதியினர் சேர்த்துக் கொள்வதும் இருவரும் சேர்ந்து எஞ்சியோரை ஒடுக்குவதும். திட்டவட்டமான சான்று இராமானுசரின் இயக்கம். புகைவண்டியில் ஏறுவதற்காக முண்டியடுக்கும் கூட்டத்தில் வாய் உள்ளவன் வெளியில் நிற்போரின் இடர்கள் பற்றி முழங்குவான். உள்ளே நுழைந்ததும் உள்ளே இருப்போரின் இடர்கள் பற்றி முழங்குவான். அதே நடைமுறைதான். சங்காராச்சாரி ″கிராமக் கோயில்″ பூசாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். ஒருவேளை அவர்களுக்குப் பூசணூலை அணிவித்துக் கோயில்களுக்குள் நுழைய விட்டு இந்தச் சூழற்சியை முடித்து வைக்கவும் கூடும்.

இவை எல்லாவற்றையும் விட இன்று பா.ச.க., இந்து முன்னணி ஆகியவற்றின் அணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களில் நாம் மேலே கூறியவாறு வெள்ளாளக்கட்டு மேற்கொண்ட குழுவினர் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களும் தங்கள் சாதியினரில் தங்களைப் போல் முன்னேற்றம் காணாதவர்களை ஒடுக்கி வைக்க முயல்வார்கள் என்பது உறுதி.

            இவை மட்டுமல்ல, தன்னார்வ ″ஒற்று″ நிறுவனங்களும் வாளாவிருக்கவில்லை. ″மங்கி வரும்″ நமது பண்டை ″மரபுகளை″ மீட்பதற்கென்று வெளிநாட்டு உதவிபெறும் ஒற்று நிறுவனங்கள் மிக விரிவான திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க போர்டு அறக்கட்டளையால் நடத்தப்படும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை சனங்களின் சாமிகள் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்தி நாட்டுப்புறக் கோயில்களின் இருப்புக்கு மதிப்புச் சேர்த்துள்ளது(சங்கராச்சாரியின் கிராமப் புறப் பூசாரிகள் பயிற்சித் திட்டத்துடன் இது இணைந்து வருவதையும் நாம் பார்க்க வேண்டும்). அடுத்து தாமரபரணித் திருவிழா என்ற பெயரில் ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு அத்துறை ஏற்பாடு செய்தது. இதன் நோக்கமாக, தாமிரபரணி ஆற்றின் கரையில் காலங்காலமாக இடம் பெற்று வந்த பண்பாட்டு வடிவங்களை மீட்பது என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடலின் போது ஆற்றின் கரையிலுள்ள எண்ணற்ற கோயில் மண்டபங்கள், படித்துறைகள் போன்றவற்றை மீட்பது, அந்த மண்டபங்களில் நடைபெற்ற வழிபாடுகள், குறிப்பாக மந்திரங்கள் ஒதுவது போன்றவற்றை மீட்பது பற்றிப் பேசப்பட்டது. அவர்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ள இன்னொரு செய்தி முகாமையானது. அதாவது, ″மங்கி வரும்″ பழைய ″மனித உறவுகளை″ மீட்பது என்ற ஒன்று இடம் பெற்றுள்ளது. மங்கிவரும் பழைய ″மனித உறவு″ என்பது சாதிய உறவுதானே, அதற்குத்தானே இப்போது அறைகூவல் எழுந்துள்ளது அதை மீட்பது என்பதுதான் இவர்கள் நோக்கமா? அதன் வெளிப்பாடுதான் தாமிரபரணிக் கரையில் நடைபெற்ற 17 பேர் படுகொலையா? என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன.
            இந்தத் திட்டத்தின் செயலாளர் நாட்டார் வழக்காற்றியல் துறையின் இயக்குநர். அவரது அறிவுரையின் படிச் செயற்படும் ஒருங்கிணைப்பாளர் யார் தெரியுமா? மாவட்ட ஆட்சியர்! இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற்றோரில் மிகப்பெரும்பாலோர் அண்மைக் காலம் வரையிலும், ஏன் இன்றும் கூட ″முற்போக்கு″, ″புரட்சி″ முகமூடிகளை அணிந்தவர்கள், அணிந்திருப்பவர்கள். அறிவு ″சீவி″கள் என்று மதிக்கப்படுபவர்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசு சாரா நிறுவனங்கள் எனப்படும் ஒற்று நிறுவனங்களில் ஏதாவதொன்றின் சம்பளப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்.

            வெளிநாட்டு ஒற்று நிறுவனங்களுக்கு நம் கோயில்களையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் மீட்பதில் என்ன ஆதாயம்? அத்துடன் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் கிறித்துவ நிறுவனங்களும் கோயில் சொத்துகள் பற்றிய கல்வெட்டாய்வுகளை ஏன் மேற்கொள்கின்றன? இவற்றுக்கான விடையை நாம் இறுதியில் பார்ப்போம்.

            விசயநகர ″இந்து″ப் பேரரசு தொடங்கப்பட்ட காலத்தில் செல்வாக்குப் பெற்று வந்த சமய சீர்திருத்த இயக்கங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளும் புதைந்து போய், பார்ப்பனியக் கொடுங்கோன்மையுடன் ″இந்து″ சமயம் மீண்டதற்கான சூழ்நிலையை முகம்மதியத்தின் பெயரால் ஆண்டவர்கள் செய்த கொடுமைகள் உருவாக்கித் தந்தன. அதே போல் இன்று இந்தியாவினுள்ளிருந்தும் பாக்கித்தானின் தூண்டலுடனும் பின்லேடன் போன்றோர் வழங்கும் பொருளியல் உளவியல் வலிமைகளாலும் பூதமென வெடித்துக் கிளம்பியுள்ள முகம்மதிய மத அடிப்படையியம் இன்றும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையுடன் ″இந்து″ சமய மீட்சிக்குக் களமமைத்துக் கொடுக்கும் பேரிடர் உள்ளது. இவ்வாறு அனைத்துத் திசைகளிலிருந்தும் பார்ப்பனிய ″இந்து″ சமயக் கொடுங்கோன்மையும் காட்டு விலங்காண்டிகளாக மக்கள் மீண்டும் இழியும் அச்சுறுத்தலும் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலை நாம் எப்படி எதிர்கொள்வது? 20 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டையும் அங்கிருந்து 11 ஆம் நூற்றாண்டையும் நோக்கி நம்மைத் திருப்பும் இவ்விசைகளை எப்படி முறியடிப்பது?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் முன் நாம் ஆகம முறையின் இன்னொரு தன்மையைப் பார்ப்போம். ஆகமங்கள் என்பவை கோயில்களில் பூசை செய்யும் முறையைப் பற்றி விரிவான வழிகாட்டுதல்களையும் கட்டளைகளையும் கொண்டவை. தேவதாசி முறை, வருணங்களுக்கேற்ப மக்களைப் பிரித்து வைத்தல், தமிழ் மொழியை வழிபாட்டிலிருந்து ஒதுக்கி வைத்தல், கோயிலில் நுழைவு மறுக்கப்பட்ட மக்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோயில் பெருச்சாளிகள் வயிறு வளர்ப்பதற்கு வழி கூறுபவை என்பவற்றோடு எண்ணற்ற தொழில்நுட்பச் செய்திகளையும் உள்ளடக்கியவை. கோயில்களின் கட்டுமானத்தில் மண்ணின் தன்மையறிதல், அடிப்படை அமைத்தல், கட்டுமானப் பொருட்களைத் தேர்வு செய்தல், கல்தூண்கள், உத்திரங்கள் அமைத்துக் கூரை அமைத்தல், கோபுரங்கள், மதிற்சுவர்கள், கோயில் சுவர்கள் அமைத்தல், தளமிடுதல், வெளியே தெரியாமல் வடிகால்கள் அமைத்தல், நீர் ஆதாரமாகிய கிணற்றுக்கு நீரோட்டம் பார்த்தல், நீர் வரவும் அதிலிருந்து வெளியேறவுமான அமைப்புகளை வெளியே தெரியாதவாறு அமைத்தல் என்று கட்டுமானப் பொறியியலும் கற்சிலைகள் செய்வதற்கான கற்களைத் தேர்வு செய்தல், சிற்பங்களின் பல்வேறு வகைகளுக்கான அளவு விகிதங்கள், சிற்பங்களின் பகுதிகளை ஒட்டுதல், சிலைகளை நிறுவுதல் என்று சிற்பக்கலை நுணுக்கங்களையும் மரச்சிற்பங்கள், தேர்கள், ஊர்திகள்(வானங்கள்) ஆகியவற்றைச் செய்வதற்கான மரச் சிற்பக்கலை, தச்சுக் கலைகளையும் சுதைச் சிற்பம் செய்யும் நுட்பங்களையும் பொன்ம(உலோக)ச் சிலைகளைச் செய்யும் பொன்மம் மற்றும் வார்ப்படத் தொழில்நுட்பங்களையும் ″இறைவனுக்கு″ப் படைப்பதற்கென்று நெய்யிலும் பிறவற்றிலும் வகைவகையான உணவு வகைகளைச் சமைக்கும் சமயற்கலை, இசை, நாடகம் ஆகியவற்றை விளக்கும் இசைக்கலை, நடனக்கலை நுணுக்கங்களையும் அவற்றுக்குத் தேவைப்படும் எண்ணற்ற கருவிகள் செய்யும் நுட்பங்களையும் ″இறைவனின்″ ″திருவுருவத்துக்கு″ மஞ்சள் நீராட்டுதல் தொடங்கி ஒப்பனை செய்யும் ஒப்பனைக் கலையையும் அதற்குத் தேவைப்படும் நறுமணப் பொருட்கள் செய்வதற்கான நறுமணப் பொருள் தொழில்நுட்பத்தையும் தேர்களையும் ஊர்திகளையும் அலங்கரிப்பதற்கான வெளி அலங்காரக் கலைநுட்பத்தையும் என்று அரச வாழ்வுக்குரியனவும் அன்றாட வாழ்வில் பயன்படத் தக்கனவுமான அனைத்துக் கலை மற்றும் தொழில்நுட்பங்களும் ஆகம நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. அதாவது தமிழக வரலாற்றில் நாம் எய்திய மிக உயர்வான அனைத்துத்துறை அறிவும் நுட்பமும் சராசரி மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்டு அவற்றின் மீது ஆன்மீகப் பொய்ப் போர்வை போர்த்தப்பட்டு ஆகமங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

            ஆகம விதிகளின் இலக்கணமே அவற்றை இம்மியும் மீறக்கூடாது என்பது. எனவே கலைகள் என்று நாம் பொதுவாகப் பட்டியலிடும் இசை, நடனம் போன்றவை கூட இறுகிப் போய் வெறும் தொழில்நுட்பங்களாகிவிட்டன. கலையாயினும் தொழில்நுட்பமாயினும் அதற்கு நெகிழ்வும் விடுதலையும் இல்லையாயின் அது தேங்கி மறைந்து விடும். கோயில் எனும் பெரும் பொருளியல் பின்னணி இருப்பதால்தான் இவை இன்றும் அதையும் மீறி அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் தொழில் செய்வோருக்கு எழுத்தறிவு இல்லாமல் போனதும் நூல்கள் மக்கள் மொழியில் இல்லாமல் போனதும் ஒட்டுமொத்தக் குமுக வளர்ச்சியைத் தடுத்துத் தேக்கிப் பின்னோக்கி நகர்த்திவிட்டன. இந்தத் தேக்க நிலையையும் நம் அறியாமையையும் பயன்படுத்தி மேலை நாட்டார் இவற்றையெல்லாம் மாந்த நூல் (மானிடவியல் ) ஆய்வென்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வென்றும் நாட்டுப்புறக் கலை ஆய்வென்றும் கோயிற்கலை ஆய்வென்றும் சமய ஆய்வென்றும் கூறித் திரட்டிச் சென்று அவற்றில் அடங்கியுள்ள அடிப்படை அறிவியலைப் பிரித்தெடுத்து அதனைப் பயன்படுத்திப் புதுப்புதுப் தொழில்நுட்பங்களைப் படைத்து அவற்றின் மூலம் நம் பொருளியல், தொழில்நுட்ப அடித்தளங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டு வைத்துள்ளனர். இந்த ஆய்வுகளுக்குத் தேவைப்படும் கருப்பொருட்களான தரவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கு நம் அரசும் பல்கலைக் கழகங்களும் படித்த பல ″அறிஞர்களும்″ ″அறிவு சீவி″களும் பெருந்துணை புரிகின்றனர்.

ஆகம நூல்கள் சமற்கிருதத்திலிருந்தாலும் அவற்றிலுள்ள பெரும்பாலான கலைச் சொற்களுக்குத் தமிழன்றி வேறு வேர் இல்லை என்று புகழ்பெற்ற ஆய்வாளர்கள் நிறவியுள்ளனர். நாம் முன்பு ஓரிடத்தில் கூறியுள்ளவாறு தமிழ் மக்கள் தங்களுக்கென்று உருவாக்கிய அறிவியல், தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்துத் தாங்கள் மறைத்து வைத்துக்கொண்டு மூலநூல்களை அழித்து விட்டதற்கு இது அசைக்க முடியாத சான்றாகும். தங்கள் குறுகிய நலன்களுக்குகாக ஒட்டுமொத்தக் குமுகத்தின் அறிவு மட்டத்தையும் அதனால் அதன் வலிமையையும் அழித்த பெருங்குற்றத்தை இந்தக் கோயில்களுக்குள் பதுங்கி வாழும் பெருச்சாளிகள் செய்து வந்துள்ளனர்.

            இவ்வாறு திருடப்பட்டனவும் அழிக்கப்பட்டனவுமான நம் அறிவுச் செல்வங்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டுத் தமிழுக்குக் கொண்டு வருவதை நோக்கமாக வைத்து, தமிழகம், தமிழக மக்கள், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது பற்றுடையார் சமற்கிருதத்தை ஆய்வு நோக்கோடு கற்று அம்மொழியையும் அதிலடங்கியுள்ள செய்திகளையும் புதிய கண்ணோடு நோக்கி இதுவரை சரியாக விளங்காதவற்றையும் தவறாகப பொருள் கொள்ளப்பட்டவற்றையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

            குமரிக் கண்ட காலம் தொடங்கி தமிழ் மக்களுக்குள் நடைபெற்ற போராட்டங்களையும் பிற வரலாற்று நிகழ்வுகளையும் மறைத்து ஒரு சிறு காலகட்டத்தினுள் ஒரு சிறு குழுவினரை முதன்மைப்படுத்திய பாடல்களின் தொகுப்பாகவே கழக(சங்க)ச் செய்யுள்கள் உள்ளன. அதனால் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னுள்ள தமிழரின் வரலாற்றுச் செய்திகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் தமிழகத்துக்கு வெளியே கி.மு. 40,000 ஆண்டு வரை உலகெலாம் தமிழர்களின் நாகரிகத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டுமாயின் நாம் இன்று வரை ″ஆரிய″ இனத்துக்குரியனவென்று விலக்கிவைத்த வேதங்களையும் தொன்மங்களையும் பிற அறிவுத்துறை நூல்களையும் புதுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஆன்மீகம், பார்ப்பனியம் ஆகிய போர்ப்புகளை அகற்றி நம் வரலாற்றையும் அறிவியலையும் மீட்கவேண்டும். இந்தப் பணியைத் தங்கள் நலன்களுக்கேற்றவாறு மேற்கொள்வதற்காகப் பார்ப்பனச் சார்புடைய ″இந்து″ சமய இயக்கங்கள் மாபெரும் அரசு மற்றும் மார்வாடிகளின் பொருளியல் அரசியல் பின்னணியுடன் களத்திலிறங்கி முடுக்கமாகச் செயற்படுகின்றன. அவர்களை நாம் முந்தியாக வேண்டும்.

            நிலம் தான் ஒரு நாட்டின், நாட்டு மக்களின் அனைத்து வளங்களுக்கும் வாழ்வின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் ஊற்றுக்கண். அந்த ஊற்றுக்கண்ணை ஆகமச் கோயில்களின் காலடியில் வைத்து நம் நாட்டின் வளத்தையெல்லாம் உறிஞ்சிக் கரியாக்கி நம் நாட்டுக்கு நேர்ந்த என்புருக்கி நோயாக ஆகம வழிபாட்டை வைத்துக் கொண்டிருக்கிறோம். மீதி சொத்துக்களையும் குத்தகை உழவர்களின் உழைப்பை உறிஞ்சி அழிக்கும் நிலக்கிழார்கள், பண்ணையார்களின் கைகளில் விட்டு வைத்துள்ளோம். இன்று அந்தக் குத்தகை உழவனையும் சொந்தப் பயிர் செய்வோரையும் உறிஞ்சி அழிக்கும் அரக்கனாக அரசு நிற்கிறது. அதன் படைக்கலமாக நிகர்மையை(சோசலிசத்தை) வழங்கியுள்ளனர் பொதுமைப் ″புரட்சியாள″ரும் பிற ″இடங்கை″க் கட்சியினரும். அதற்கு ஊக்கமூட்டுகின்றனர் படித்த அறிவுச் ″சீவி″ ஒட்டுண்ணிகளும் அயல்நாட்டு ஒற்றர்களும். ″தாமரபரணித் திருவிழா″க்களும் கிறித்துவ நிறுவனங்களின் கல்வெட்டாய்வுகளும் இதே நோக்கம் கொண்டவைதாம்.

நிலத்திலிருந்து உருவாகும் செல்வத்தில் மக்கள் நுகர்ந்தது போக எஞ்சியதுதான் ஒரு குமுகத்தின் வளர்ச்சிக்கான மூலப்பொருள். நம் கடந்த கால வரலாற்றைப் பேசும் ″முற்போக்கு″ எழுத்தாளர் அனைவரும் இந்த மிகுதிச் செல்வம் நம் நாட்டில் கோயில்களாலும் நிலக்கிழார்களாலும் அரசர்களாலும் உறிஞ்சி அழிக்கப்பட்டதும் உழைக்கும் மக்களும் அவர்களது உழைப்பும் கூட இழித்துரைக்கப்பட்டதும்தாம் நம் குமுகம் வளர்ச்சியற்றுத் தேங்கிப் போய்ப் பின்னோக்கிய நிலை உருவானதற்கும் அடுத்தடுத்து அயலவர்கள் முன் வீழ்ந்து அடிமையானதற்கும் காரணம் என்று சரியாகக் கூறுகிறார்கள். ஆனால் நிகழ் கால வரலாற்றுக்கு வரும்போது இந்த மிகுதிச் செல்வம் சேர்வதையே சுரண்டல் என்று கூறிப் பழிக்கின்றனர். அந்த மிகுதிச் செல்வம் விளைப்புச் செயல்முறையில் பயன்படுவதைத் தடுக்கின்றனர். முதலிடுவதே சுரண்டலை வளர்த்துவிடும் என்று உள்ளூர் மக்களின் மூதலீட்டுக்குத் தடையாக நிற்கின்றனர். வெளியிலிருந்து பாய்ந்து நம் செல்வங்களனைத்தையும் அடித்துச் செல்லும் வல்லரசு மூலதனத்துக்குத் தாம் அறிந்தோ அறியாமலோ களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.

             நாம் இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆகம வழிபாட்டு முறைக்கு முடிவு கட்டியாக வேண்டும். கோயிற் கருவறையாகிய இருட்டறையிலிருந்து ″கடவுளை″ விடுவிக்க வேண்டும். ″இறைவனை″க் கட்டி வைத்திருக்கும். பூசாரியின் பூணூல் அகற்றப்பட வேண்டும். எங்கும் நிறைந்தவனாக நாம் கூறும் கடவுள் அனைவருக்கும் உரியவனாக வேண்டும். மக்களை அடுக்கடுக்காகப் பிளவுபடுத்தி வைத்திருக்கும் ஆகமக் கோயிலிலிருந்து அவர் வெளிச்சத்துக்கு வரவேண்டும். வரலாற்று மனிதர்களும் மனிதனுக்கு அச்சத்தை ஊட்டியனவும் பயன் அளித்தனவுமாகிய விலங்குகளையும் மரங்களையும் பறவைகளையும் தெய்வமாக மாற்றிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொம்மைகளை வைத்துச் சுமந்தும் தேர்களில் வைத்து இழுத்தும் பொம்மைகளை வணங்கியும் பொம்மை விளையாட்டு விளையாடும் நாம் நம் குழந்தைப் பருவப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு மேம்பட வேண்டும். மனித உடலும் தும்பிக்கையும் மருப்பும் (தந்தமும்) கலந்த விந்தையான விளையாட்டுப் பொம்மையைக் கடவுளாகப் பாவித்து அதைத் தண்ணீரில் கரைக்கும் குழந்தை விளையாட்டுக்காகத் தெருக்களில் வெறிபிடித்தாடும் இளைஞர்களை அவர்களின் சிறுபிள்ளைத் தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

            மக்களைச் சாதிகளாகப் பிரிக்காததும் மனிதனுக்கும் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் கண்கண்ட தெய்வமும் ஆண்டு, மாதம், நாள், நாழிகை, என்று உயிர்வாழ்வின் அனைத்தையும் இயக்குவதுமான சூரியனைக் கடவுளாகக் கொண்டு உருவங்களில்லாத அகன்ற அரங்கத்தையே கோயிலாகக் கொண்ட ஒரு சமயத்தை உருவாக்க வேண்டும். நுணுக்கமான சடங்குகள் தேவையில்லை. காதைப் பிளக்கும் இசைக் கருவிகள் தேவையில்லை. சிறப்புத் தகுதி பெற்ற பூசகர் தேவையில்லை. வழிபாட்டுக்கு வரும் எவரும் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அது எளிமையாயிருக்க வேண்டும். அச்சமும் அடிபணிதலும் தேவையில்லை. மண்டியிட்டோ கீழே விழுந்தோ வணங்கத் தேவையில்லை. மன மகிழ்ச்சியை அளிக்கும் நல்ல உடையுடன் காலணி அணிந்து மக்கள் வழிபாட்டிடத்துக்குச் செல்ல வேண்டும். புலாலூணவோ பெண்கள் மாதவிடாய்க் காலமோ தடையாயிருக்கக் கூடாது. நாள்தோறும் வழிபாடு தேவையில்லை. வாரத்துக்கு ஒரு நாள் போதும். கோயிலுக்கு வருவதற்காக எவரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டாயப்படுத்தக் கூடாது. சமய நிகழ்ச்சிகள் கோயில்களுக்கு வெளியில் இடம்பெறக் கூடாது. அதாவது சமயம் கோயிலுக்குள்ளேயே தன்னை அடக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் எந்தச் சமய அடையாளத்தையும் அணியக்கூடாது. கோயில்கள் பொது வாழ்வுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறில்லாத இடங்களில் எளிமையாக அமைக்கப்பட வேண்டும்.

இந்தக் கடவுளுக்கு என்று ஒரு சொந்த ஊர், சொந்த நாடு கிடையாது. எனவே அவன் எல்லாத் தேசத்தவருக்கும் தேசியக் கடவுளாகத் தக்கவன்.

சமயம் என்பது வழிபாடு என்ற எல்லைக்கு வெளியே குமுக வாழ்க்கையில் வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. மொத்தத்தில் ஒரு மக்களாட்சிக் குமுகத்துக்கு ஏற்றவாறு நம் சமயம் அமைய வேண்டும். சமயத்தின் நோக்கம் மக்கள் அன்றாடம் தாம் சந்திக்கும் இன்னல்கள், இடர்களின் விளைவாக உருவாகும் உளவியல் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதாகவும் மக்கள் தங்கள் பொதுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதாகவும் இருக்க வேண்டும். கோயில் விழாக்களாலும் பூசைகளாலும் பெருநாள்களாலும் நோன்புகளாலும் நிரம்பியிருக்கும் நாட்காட்டிகளையும் பஞ்சாங்கங்களையும் மாற்றியமைக்க வேண்டும். வான்பொருட்களின் இயக்கங்களையும் அவற்றால் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களையும் சுட்டிக்காட்டும் அறிவியல் வழிகாட்டிகளாக அவை மாறவேண்டும்.

இத்தகைய ஒரு சமயம் அமைய வேண்டுமாயின் அதற்கேற்ப மக்களாட்சிக் குமுகம் அமைய வேண்டும். இன்று நடைபெறும் பாராளுமன்ற மக்களாட்சி ஒரு போலி. இங்கு வாக்குச் சீட்டு என்ற ஏமாற்றத்தை தவிர வேறு எதுவும் இல்லை. பண்டைக் கால அரசர்களும் குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் நிலக்கிழார்களும் பண்ணையார்களும் சமயத் தலைவர்களும்தாம் இன்று அயல்நாட்டு ஆண்டைகளின் கூட்டோடு புதிய பெயர்களில் நம்மை ஆள்கின்றனர். எந்த வகையிலும் மக்களின் மதிப்புக்குத் தகுதியில்லாத கழிசடைகளின் காலில் மேடைபோட்டு விழுந்து வணங்கும் மானங்கெட்டவர்களைத்தான் நாம் நம்மை ஆள்பவராகத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இந்தக் கீழ்மக்களிடமிருந்து இலவயங்கள் என்ற பெயரிலும் மானியங்கள் என்ற பெயரிலும் தங்களிடமிருந்தே திருடப்பட்ட செல்வத்தை இரவலர்கள் போல் கையேந்தி வாங்கும் அறிவற்ற மக்களைக் கொண்டதாகத்தான் இந்த நாடு உள்ளது. அப்படி இரப்பதற்கும் கைக்கூலி வழங்கும் அறிவிலிகளாக, தன்மானமும் தன்னுணர்வும் அற்றவர்களாக நம் மக்கள் உள்ளனர். மக்களாட்சி நடைமுறை என்பதே மக்களுக்கும் அரசுக்குமிடையிலான ஒரு அதிகாரப் போட்டி, ஆதிக்கப்போர் என்ற உண்மை இங்கு மிகப் படித்த மேதைகளின் மூளையில் கூட உறைக்கவில்லை. இந்த அதிகாரப் போட்டியில் மக்களே தலைமை எய்த வேண்டும் என்பதுதான் மக்களாட்சித் கோட்பாட்டின் அடிப்படை என்பதும் அந்தத் தலைமைப் பொறுப்பை எய்துவதற்குக் குடிமக்கள் தன்மானம் உள்ளவர்களாகவும் தற்சார்புடையவராகவும் விளங்கவேண்டுமென்பதும் ஆட்சியாளர்கள் முன்பு இரவலர்களாகக் கையேந்துவது முடிவுக்கு வரும் வரை அவர்கள் இந்தத் தகுதியைப் பெற முடியாது என்பதும் இந்த அறிவு ″சீவி″களுக்குத் தெரியவில்லை. வாக்களிப்பது ஒன்றிலேயே அனைத்து மக்களாட்சி நடைமுறைகளும் முடிந்து போகின்றன என்று மேடைகளிலும் செய்தி ஊடகங்களிலும் இந்த ″மேதைகள்″ முழங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்நாட்டின் செல்வங்களனைத்தையும் வல்லரசுகளும் அவர்களின் தரகர்களாக ஆட்சியாளர்களும் பங்கு போட்டுக்கொண்டிருக்கையில் சிறுவுடைமை, குத்தகை வேளாண்மை , மரபுத் தொழில்கள் எனும் பாறாங்கல்களைக் கழுத்தில் சுமந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையினரான எளிய மக்கள் உணவு தேடும் விலங்கின் மட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் துயர்களுக்குக் காரணத்தை அறியாத மக்கள் வேறுபாடின்றிக் கண்டதை எல்லாம் வணங்குகிறார்கள். எத்தர்களை எல்லாம் ″மகான்கள்″ என்றும் ″அவதாரங்கள்″ என்றும் காலில் விழுந்து எழுகிறார்கள். தங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் அள்ளிக் கொடுக்கிறார்கள். கடன்பட்டுக் கோயில்களுக்குச் செலவழிக்கிறார்கள். எந்த சமயம் என்று பாராமல் அனைத்துத் தெய்வத்தையும் வணங்குகின்றனர்.

            ″அஞ்சியஞ்சித் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே″ என்று பாரதி நெஞ்சு பொறுக்காமல் பாடிய அவலநிலை இன்று முனைப்படைந்திருக்கிறதேயன்றித் தெளிவடையவில்லை.
மக்களின் கழுத்தில் தொங்கும் பொருளியல் வளர்ச்சியின்மை என்ற பாறாங்கல்லை அகற்ற வேண்டும். மக்களின் பங்கு மூலதனத்தால் இயங்குபவையாக தொழில் துறையும் வேளாண்மையும் இயங்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் தன்னுரிமையுள்ள தொழிலாளர்களாகவும் பங்கு மூதலீட்டின் மூலம் முறைமுக முதலாளிகளாகவும் மாற வேண்டும். அதற்கு முதலில் தேவைப்படுவது பெரும் பண்ணைகளும் தொழிலகங்களும். இவை உள்ளூர் மூலதனம், உள்ளூர் மூலப் பொருட்கள், உள்ளூரில் உருவாகும் தொழில்நுட்பம், உள்ளூர் மக்களின் உழைப்பிலிருந்து இயங்க வேண்டும். இன்று வருமான வரிக்கு அஞ்சிப் பதுங்கிக் கிடக்கும் மூலதனம் விடுதலை பெற வேண்டும். மக்களை ஏமாற்றாது பங்குச் சந்தை நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மக்களே வகுத்து நெறிப்படுத்தும் அமைப்புகளை அமைத்துக் கண்காணிக்க வேண்டும். குத்தகை முறை ஒழிக்கப்படவேண்டும். கோயில் நிலங்களும் பயிரிடுவோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையில் உராய்வைக் குறைக்கும் வகையில் இடைக் குத்தகையாளருக்கும் ஒரு சிறு பங்கு தரலாம். அவ்வாறு கிடைக்கும் பங்கில் அவர்கள் சொந்தப் பயிர் செய்யாவிடில் அவற்றை விற்றுவிட வேண்டும். நில உச்சவரம்புகள் ஒழிக்கப்பட வேண்டும். உழவர்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு பெரும்பாலான மக்கள் நேரடியாகவும் பங்கு மூலதனத்தின் மூலமும் விளைப்புச் செயல்முறையிலும் அதன் ஆள்வினையிலும் ஈடுபடும் போது அதில் கிடைக்கும் கள அறிவும் பட்டறிவும் உண்மையான மக்களாட்சியின் அடிப்படையாக அமையும். தங்கள் கடமைகள் பற்றிய தெளிவும் தங்களுக்கு வேண்டியது என்ன என்பது பற்றிய புரிவும் தங்கள் உரிமைகள் பற்றிய கட்டுப்பாடும் அவர்களுக்கு ஏற்படும். அவ்வாறு மனித வாழ்வின் முகாமையான கூறுகள் குமுகத்தின் கட்டுக்குள் வரும். சமயத்தின் தேவை சுருங்கும். பூசகர்களின் செல்வாக்கு குறையும். மக்களாட்சித் தன்மையுள்ள சமயம் அமையும்.

            உண்மையான தேசிய முதலாளியப் புரட்சி மூலம்தான் நாம் இதை எய்த முடியும். ஐரோப்பாவில் நிலக்கிழமைப் பொருளியல் நிலவிய காலத்தில் வழிபாட்டிலும் ஆட்சியிலும் மக்களுக்குப் புரியாத இலத்தீனும் கிரேக்கமும் ஆதிக்கம் செலுத்தின. முதலாளியத்தின் தோற்றமும் சமய ஆதிக்கம் உடைந்து கோயில் சொத்துகள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதும் இணைந்து நடைபெற்றன. அதன் உடனடி விளைவாக ஆட்சியிலும் வழிபாட்டிலும் மக்களின் மொழி இடம் பெற்றது. இன்று நம் நாடும் பொருளியலில் நிலக்கிழமைத் தன்மையில்தான் உள்ளது. அதற்கேற்பவே நம் அரசியலிலும் சாதி - சமயப் பிளவுகளும் உள்ளன. இந்த நிலக்கிழமைப் பொருளியலை உடைத்தெறிந்து தேசிய முதலாளியப் பொருளியலை எய்துந்தோறும் ஆட்சியிலும் வழிபாட்டிலும் நம் தாய்த் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்.

            எனவே கோயில் சொத்துகளைப் பயிரிடுவோர்க்குப் சொந்தமாக்கப் போராடுவோம்! இறைவனை வழிபடுவோரே கோயிலைப் பராமரிக்கும் செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முழங்குவோம்! தம் வழிபாட்டிடத்தைப் பராமரிக்க முடியாதோருக்கு இறைவழிபாடு செய்யும் தகுதியில்லை என்று உரத்துக் கூறுவோம்! நிலத்தில் பயிரிட இயலாதோருக்கு நிலத்தை வைத்துக் கொள்ளும் தகுதியில்லை என்றும் கூறுவோம்!

            தமிழைத் தமிழர்களின் அனைத்துத் துறைகளிலும் தலைமை தாங்கச் செய்யும் மூல முழக்கங்களாகும் இவை. இப்போராட்டங்களில் பங்கு கொள்ளுமாறு தமிழக மக்களை அறைகூலி அழைக்கிறோம். உங்களுக்கு முன்னணிப் படையாகத் தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகமும் அதன் போர்க்கருவியாகிய பொருளியல் உரிமை இதழும் துணை நிற்கும்!

வாழ்க தமிழகம்!
வெல்க தமிழ்!!

0 மறுமொழிகள்: