14.4.16

தமிழில் வழிபாடு - 3









தமிழில் வழிபாடு -  3

ஏற்றுமதிக்குத் தேவைப்படும் பண்டங்களைப் பயனில்லாக் கள்ளுக்குப் பண்டமாற்றம் செய்து மக்களின் வறுமை நிலையை நிலைப்படுத்த உதவிய கள்ளுக்குப் பெரும் பயன்மதிப்பு இருந்திருக்க வேண்டும். கள் இறக்குவது கடினமான ஒரு தொழில். மரத்தின் முள்போர்த்தது போன்ற கரடு முரடான தண்டைப் பற்றி ஏறும் போது உடலில் காய்ப்பு ஏற்பட்டுப் புற்றுப் போல் வளர்ந்து அரிவாளால் சீவி ஏறியும் அளவுக்கு அருவருப்பூட்டும் தோற்றத்தைத் தந்துவிடும். இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு நல்ல வருவாய் வாய்ப்பிருந்திருக்க வேண்டும்; அல்லது அடிமைகளாய்க் கட்டாயத்தினால் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். இது பற்றிய தடயங்கள் கிடைக்கின்றனவா என்று ஆய்வு செய்யலாம். எப்படியோ கள்ளைக் கையாண்டோர் நல்ல செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பர். மாதவி போன்று வளமையானவர்கள் தாழை மடலில் செம்பஞ்சு(செம்பருத்தி)க் குழம்பால் எழிதினராம். இது கழுகு இறகால்(தூவலால்) எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் நிலையான ஆவணங்களும் நூல்களும் பனை ஓலையில் எழுத்தாணி கொண்டே எழுதப்பட்டன. இன்று வெற்றிலை பாக்குக் கடைகளில் வெள்ளைத் தாள் கிடைப்பது போல் அன்று பனை ஓலை(இலக்கு அதாவது ஏடு) கிடைத்தது என்று கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது. எனவே ஏடு உருவாக்குவது ஒரு பெருந்தொழிலாக இருந்திருக்க வேண்டும். அதனாலும் பனைத் தொழில் வருவாய் மிகுந்த ஒன்றாய் இருந்திருக்கும். இன்றைய திருப்பதி மலைப் பகுதயில் வாழ்ந்த ஓர் அரசன் பெயர் களவர்கோன்புல்லி. அவன் கள்ளைக் கொடுத்து யானைக் குட்டிகளை வாங்கி மூவேந்தர்களுக்கும் விற்றுப் பெருஞ்செல்வம் ஈட்டியுள்ளான். மலையமான் திருமுடிக்காரி என்ற குறிநில மன்னனின் பெயரிலுள்ள காரி என்பது கரிய கடவுளைக் குறிக்கும். மதுரை மாவட்டத்து அழகர்மலை கள்ளர்கள் செறிந்த பகுதியாகும். இங்குள்ள அழகர் கோயிலில் கருப்பணசாமியின்18 படிகள் கொண்ட பீடம் ஒன்று உள்ளது. இவை திருமால் என்ற கரிய கடவுளுக்கும் கள்ளர்களுக்கும் உள்ள உறவைக் காட்டுவனவாகக் கொள்ளலாம். மலைகளில் ஆண்ட குறுநில மன்னர்கள் மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட போது வாழ்விழந்த கள்ளர்கள் களவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம்.

            இவ்வாறு மூவேந்தர்கள் மீதும் வாணிகர்கள் மீதும் வெறுப்புற்றிருந்த மக்கள் திருப்பதி முதல் குமரி வரை ஒன்று திரண்டு ஒரே நேரத்தில் மூவேந்தர்களையும் தாக்கி அவர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியிருக்க வேண்டும். மலைக் குகைகளில் தங்கியிருந்த அம்மணத் துறவிகள் இவர்களை ஒருங்கிணைத்திருக்க வேண்டும். இவர்களில் கள்ளர்கள் முதன்மை பெற்றிருந்தால் கள்ளரும் பிறரும் என்பது திரிபடைந்து களப்பிரர் என்றாகியிருக்க வேண்டும். ஏற்கனவே அரண்மனையிலும் கோவில்களிலும் நுழைந்துவிட்ட சமற்கிருதம் மேலும் விரிவான பயனுக்கு இவர்கள் காலத்தில் வந்திருக்க வேண்டும். களப்பிரர்கள் முதலில் மாலியர்களாகவே இருந்திருக்க வேண்டுமென்பது அவர்களது பெயர்களிலிருந்து தெரிகிறது. மூவேந்தர்கள் வழங்கிய முற்றூட்டு மற்றும் இறையிலி நிலங்களைப் பறித்து அவர்கள் கொடுத்த புதியவர்களின் பெயர்களும் இதைத் தெளிவாக்குகின்றன. கள்ளர்களின் கரிய தெய்வமும் ஏற்கனவேயிருந்த திருமாலின் கரிய வடிவத்தோடு ஒப்புமைப்படுத்தப்பட்டு அவர்கள் சமய அடையாளமாக மாலியத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பின்னர் யாரை எதிர்த்து ஆட்சியைப் பிடித்தார்களோ அவர்களின் அடியாளாய்ப் போய்விடும் இன்றைய ஆட்சியாளர்களைப் போலவே அவர்களும் முதலில் தமிழக வாணிகர்களுக்கும் பின்னர் அம்மணம் மூலமாக நுழைந்த அயல் வாணிகர்களுக்கும் அடிமை புரிந்திருக்க வேண்டும். அம்மண சமயத்தையும் தழுவியிருக்க வேண்டும். இவ்வாறு கைவிடப்பட்ட மாலியர்கள் பின்னர் உருவான களப்பிரர் அல்லது புத்த - அம்மண எதிர்ப்பலையில் உருவான சிவனிய இயக்கத்தின் போட்டி அணியாக உருவாயினர் எனக் கொள்ளலாம்.

            ஒரு வால்பகுதி. மூவேந்தரில் சேரரின் மாலை பனம்பூ மாலை. நாட்டுப் பனையின் பாளையிலிருக்கும் நுண்ணிய பூவை மாலையாக்க முடியுமா என்பது ஒரு கேள்வி. ஆனால் அதைப் போன்ற மெல்லிய வேப்பம் பூ மாலையைப் பாண்டியன் சூட முடிந்ததென்றால் இதுவும் இயலும்தான். ஆனால் பனம்பூவை வெளியிலெடுத்து மாலை தொடுப்பது கடினம்தான். பனையில் நாட்டுப் பனை, தாளிப்பனை, சளப்பனை, உலத்திப்பனை, கூந்தல்பனை என்று பலவகையுண்டு. இவற்றில் சேரனின் மாலையாயிருந்தது எதன் பூ என்று ஆயலாம். சேரன் பனம்பூ மாலை அணிந்திருந்ததால் அவன் நாடாகிய மலைநாட்டில் பனை மிகுதியாக இருந்ததென்று கொள்ளலாம். எனவே அங்கு கள்ளும் நிறையக் கிடைத்திருக்கும்.

            திருமாலுக்கு நெடுமால் என்றொரு பெயருண்டு. மால் என்ற சொல்லுக்கு கருமைப் பொருளும் உண்டு. எனவே நெடுமால் என்பது நெடிய கரிய பனையையும் குறிக்கலாம். இருப்பினும் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டது போல் சொற்களை வைத்துக் கொண்டு மட்டும் நாம் திடமான முடிவுகளை எய்த முடியாது. பலமுனை ஆய்வுகள் தேவை. எனவே இத்திசையில் ஆய்வு செய்வதில் ஆர்வமுடையோர் ஈடுபட வேண்டும்.

தமிழக மூவேந்தர்களை வீழ்த்திய களப்பிரர்கள் எனப்படும் மக்கள் குழுவினரில் கள்ளர்கள் முதன்மையாக இருந்திருக்கலாமென்று முன்பு குறிப்பிட்டோம். குறிஞ்சி நிலத்திலுள்ள குறவர்களும் அவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு இணையான செல்வாக்குள்ள மக்கள் குழுவினரான சிவனிய வேளாளர்கள் இந்தக் காலகட்டத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும்.

            சிவனிய வேளாளர்கள் சிவனை வழிபடுவோராகத் தோற்றமளித்தாலும் உண்மையில் அவர்களிடையில் முருகன் வழிபாடும் பிள்ளையார்(கணபதி) வழிபாடும் தாம் முதன்மை பெற்றுள்ளன. முருகனும் பிள்ளையாரும் குறிஞ்சி நிலத் தெய்வங்கள்.

            முருகனைக் குமரன் என்ற பெயரில் திருமணமில்லாதவனாக வட இந்தியாவில் வழிபடுகின்றனர். தமிழகத்தில் முருகன் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த குறமகள் வள்ளியின் கணவனாகக் குறிப்பிடப்படுகிறான். முருகன் ஐந்திணைகளில் குறிஞ்சித் திணையின் தெய்வமுமாவான். வடநாட்டின் குமரனுக்கு இணையான தெய்வம் பழனியில் உள்ள துறவி(பண்டாரம்)தான், ஆனால் குமரன் - முருகன் இணைப்பு மிகப் பழங்காலத்திலேயே நிகழ்ந்து விட்டது போலும். முழுகிப் போன குமரிக் கண்டத்தில் கபாடபுரத்தில் விளங்கிய இரண்டாம் தமிழ்க் கழகத்தில் இடம் பெற்ற அரசர்களில் ஒருவன் குமரவேள்.

            இந்த இடத்தில் ஓர் ஆர்வமூட்டும் குறிப்பு. துவரைக் கோமான் எனப்படும் கண்ணனும் இரண்டாம் கழகத்தில் ஆட்சி புரிந்த ஓர் அரசனாகும். துவரை எனப்படும் துவாரகை கபாடபுரத்தின் இன்னொரு பெயர்(கபாடம் = கதவு; துவாரம் = கதவு). கண்ணன் இயற்கை எய்திய நாளில் கலியூழி தொடங்குகிறது. கண்ணன் ஓக உறக்கத்தில் ஆழ்ந்து தன் உயிரை ஒடுக்கி கால் கட்டைவிரலில் தேக்கி வைத்திருந்ததாகவும், அவனுடைய கட்டை விரல் மட்டும் ஆடிக்கொண்டிருந்ததாகவும் தொலைவிலிருந்து அதைப் பார்த்த வேடன் ஒருவன் அதனை ஒரு குருவி என்று கருதி அம்பெய்ததாகவும் அது கண்ணனின் உயிரைப் பறித்ததாகவும் தொன்மக் கதை கூறுகிறது. எனவே பாண்டிய நாட்டு ஆட்சி முல்லை நில மக்களிடமிருந்து குறிஞ்சி நில மக்களுக்கு மாறிய நிகழ்ச்சியே, அதாவது கி.மு. 3101 தான் கலியூழியின் பிறப்பு என்று கொள்ளலாம். கலியூழியை இரும்பு ஊழி என்று கூறுவர். ஒரு வேளை இரும்பைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் குறிஞ்சி நிலமக்கள் என்பதையும் இந்நிகழ்ச்சி காட்டுகிறது என்று கொள்ளலாம். குமரன் - முருகன் இணைப்பின் காரணமாகவே குமரவேள் என்ற பெயரை அவன் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிற்காலத்தில் மூன்று கழகங்கள் பற்றிய செய்திகளைத் தந்த உரையாசிரியர்கள் முருகனைக் குமரவேள் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

            சிலப்பதிகாரக் காலம் வரை வள்ளி ஒருத்தியையே மனைவியாகக் கொண்ட முருகனுக்குப் பின்னர் தெய்வ யானையும் மனைவியாகிறாள். அவளோ இந்திரனின் மகளென்று கூறப்படுகிறாள்.

முருகனின் ஊர்தி(வாகனம்) மயில் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் பெயர் பிணிமுகம். பிணிமுகம் என்பதற்கு மயில் என்றும் யானை என்றும் வெவ்வேறு உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். பரிபாடல், பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் முருகனுக்கு யானையும் ஊர்தியாக இருந்ததைப் புலப்படுத்துகின்றன. குறிஞ்சி நிலத்தின் முரட்டு விலங்கான யானையை வசக்கி(பழக்கி) அதனைக் குறிஞ்சி நிலத்தின் மதிப்பு மிக்க செல்வமாக்கிய அருஞ்செயலைச் செய்தவனாகவும் நாம் முருகனைக் கருதலாம். இவ்வாறு முருகனின் ஊர்தியான யானையைத் தெய்வயானை என்ற பெயரில் இந்திரனின் மகளாக்கி அவனுக்கு மனைவியாக்கி இருக்கின்றனர் பின்னாளில். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.

            வினாயகர் என்று வணங்கப்படும் பிள்ளையார் பிற்காலத்தில் செல்வாக்கு பெற்ற தெய்வமாகும். அதற்கு முன்பு பிள்ளையார் என்பது முருகனையே குறித்தது. யானை முகத்துப் பிள்ளையாரைப் பிரித்துணர்த்துவதற்கு அவனை மூத்த பிள்ளையார் என்றனர். நாளடைவில் பிள்ளையார் என்பது ஆனைமுகனைக் குறிப்பதாக மாறிற்று. ஆனைமுகன் வழிபாடு உண்மையில் போர்யானை வழிபாட்டிலிருந்து வந்ததாகும். போர் யானைகள் சாராயம் ஊட்டப்பட்டு எதிரியின் கோட்டையை உடைக்கப் பயன்படுத்தப்பட்டன. அதில் கொம்பு உடைந்த யானைகள் பெரிதும் போற்றப்பட்டன என்பது கழகப் பாடல்கள் தரும் செய்தி. கொம்பொடிந்த யானை வழிபாட்டிலிருந்து தான் யானைமுகன் வழிபாடு வந்திருக்க வேண்டும். வேத வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல, யானைமுகன் கொம்புகளிலொன்றை ஒடித்து அதை எழுத்தாணியாகவும் மேருமலையை ஏடாகவும் கொண்டு அதனை எழுதினான் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து தொன்மங்கள் புனைவதில் தமிழகமும் வடநாடும் எவ்வளவு நெருக்கமாகச் செயற்பட்டுள்ளன என்று அறியலாம். இந்த யானைமுகனை, வாதாபி மீது போருக்குத் தலைமை தாங்கிச் சென்ற நரசிம்ம பல்லவனின் படைத்தலைவன். பரஞ்சோதி அந்நகரத்தின் கோட்டை வாயில் கதவிலிருந்து பெயர்த்தெடுத்து வந்தார் என்பது பொதுக்கருத்து. ஆனால் அதற்கு முன்பே பிள்ளையார்ப்பட்டியில் யானைமுகன் கோயில் இருந்தது என்பது ஐராவதம் மகாதேவன் அவர்கள் கருத்து. ஒரு வேளை வாதாபிப் போருக்குப் பின் யானைமுகன் வழிபாடு பரவலாகியிருக்கலாம். தொன்மங்களின்படி முருகனின் மூத்தோனாக யானைமுகன் தனிக் கடவுளாகிய பின் யானையை முருகனின் ஊர்திப் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டனர் போலும். அந்த வெற்றிடத்தில் தேவயானையை அவன் மனைவியாக்கி வைத்துவிட்டனர் போலும்.

            இந்திரன் ஒரு தமிழ்த் தெய்வம். ஐந்நிலங்களில் ஒன்றான மருதநிலத் தெய்வம். இந்திரன் சோழரோடு நெருங்கிய நட்புறவு கொண்ட புரவலர் நிலையிலிருந்தவன். பாண்டியர்களுக்குப் பகையானவன். சேரர்களும் அவர்களுடன் உறவுடையவனான அதியமானும் இந்திரன் நாட்டிலிருந்து கரும்பில் ஒரு வகையைப் பெற்றுத் தம் நாட்டில் பியிரிட்டனர் என்று கழகப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சாவகம், சாலித்தீவு என்றெல்லாம் அழைக்கப்படும் சாவகத்தீவில் அவன் வாழ்ந்ததாகப் பாவாணர் கூறுவார். நெல்லிலும் கரும்பிலும் செழித்தவை இத்தீவுகள். அத்துடன் இந்திரனின் ஊர்தியாகக் கூறப்படும் வெள்ளை யானை உலகில் அங்குதான் உண்டு என்பவற்றைச் சான்றாக அவர் கூறுவார். இவ்வளவு தெளிவான சான்றுகளைக் காட்டும் அவர் இந்திரனைப் பற்றிய விரிவான செய்திகளைத் தரும் வேதங்கள் எங்கோ நடு ஆசியாவிலிருந்து வந்தவர்களென்று கூறப்படும் கற்பனையான ″ஆரியர்″களின் படைப்பு என்பதை ஏற்றுக்கொண்டிருந்தது ஒரு முரண்பாடு.

            இந்திரன் மீது அவுணர்கள் என்ற அநாகரிக மக்கள் படையெடுத்த போது அவர்களோடு போரிட அவன் தன் தலைநகரை விட்டுப் போக வேண்டி வந்தது. எனவே சோழ மன்னன் முசுகுந்தன் என்பவனை அழைத்துத் தலைநகரை அவன் பொறுப்பில் விட்டுச் சென்றான். சோழன் செய்த இந்த உதவிக்குக் கைம்மாறாக ஐந்து மன்றங்களை அவனுக்கு இந்திரன் அளித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்திரன் அவையில் அகத்தியரால் சாபம் பெற்ற ஊர்வசி சோழன் தலைநகருக்கு நாடு கடத்தப்பட்டாள். அவளது வழியில் வந்தவள்தான் மாதவி என்ற செய்தியையும் அது தருகிறது. தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே இந்திரவிழா நடைபெற்றது இரு நகர்களில் தான். ஒன்று சோழர்களின் தலைநகரான பூம்புகாரில், இன்னொன்று தொண்டை மண்டலத்திலுள்ள பெருநகரில். தொண்டைமான் இளந்திரையனும் சோழரோடு உறவுடையவன் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். இச்செய்திகளிலிருந்து நிலநடுக் கோட்டிலிருக்கும் இந்தோனேசியத் தீவுக்கூட்டங்கள்தாம் பண்டைய இந்திரனின் இருக்கை என்று கொள்ளலாம். அவனுடைய ஆளுகையிலிருந்து கடற்கோளால் வெளியேறித் தமிழகத்துக்கு வந்தவர்கள் சோழர்கள். அவர்களது தலைநகரான பூம்புகாரின் காவல் தெய்வம் சம்பாபதி என்று மணிமேகலை கூறுகிறது. சம்பாபதி என்றொரு நகரம் தாய்லாந்தில் உள்ளது. சாலி என்ற சொல்லுக்கு நெல் என்ற பொருளும் உள்ளது. எனவே சம்பா என்ற நெல்வகையைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தவர்கள் சோழர்கள் என்று கூறலாம்.

வேதங்களில் இந்திரனுடன் மருத்துகள் என்றொரு மக்கள் குழுவினர் எப்போதும் இணைத்துக் கூறப்படுகின்றனர். மருத நில மக்கள் என்பதன் திரிபாக இச்சொல் இருக்க வேண்டும். இவர்கள் உழவர்களாக இருக்க வேண்டும். தமிழகத்தில் வந்தேறிய சோழர்களுடன் இந்த மருத்துகளும் வந்தார்களா அல்லது உள்நாட்டு மக்களே உழவர்களாக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. இந்த உழவர்களுடன் பிற்காலத்தில் படையெடுத்து வந்த குறவர்களும் கலந்து ஒரு புதுத் தலைமுறை உருவாகியிருக்க வேண்டும். அவர்களில் போர் வெற்றிகளுக்காக நிலங்களைப் பெற்ற நிலக்கிழார்கள் பின்னர் சிவனியத்தைத் தழுவி சிவனிய வெள்ளாளர்களாயிருக்க வேண்டும். இந்தக் கலப்பின் குறியீடாகத்தான் முருகன் தெய்வயானைத் திருமணக் கதை உருவாகியிருக்கிறது. சிவனிய வேளாளரான திருநாவுக்கரசர் அம்மணத்திலிருந்து சிவனியத்துக்கு மாறியதை ஒரு சான்றாகக் காட்டலாம்.

            அத்துடன் அரண்மனையில் உட்படு கருமத்தாரான அகம்படிகளுக்குப் பாலகன் என்பது பதவிப் பெயர். பாலகன் என்பதற்கு இணையான சொல் பிள்ளை என்பதாகும். எனவே உட்படு கருமத்தவராயிருந்து நிலக்கிழமை பெற்றோரின் பட்டத்திலிருந்து பிள்ளை என்ற சாதிப் பட்டம் உருவாகியிருக்கும். பின்னர் உட்படு கருமத்தோருக்கு அகம்படியர் என்ற பெயர் புதிதாகத் தோன்றியிருக்க வேண்டும்.

            களப்பிரர்களால் துரத்தப்பட்ட சோழ மரபு தெலுங்கு நாட்டில் தெலுங்குச் சோடர் என்ற பெயரில் சிற்றரசர்களாக இருந்து மீண்டும் தமிழகத்துக்கு வந்து பல்லவர் காலத்தில் விசயாலயன் என்ற அரசனால் கால்கோளப்பட்டது. அதன் வளர்ச்சியில் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் சிவனிய வெள்ளாளர்களான நிலக்கிழார் நிலையிலிருந்த நாங்கூர் வேள், பழவேட்டரையர்கள், சம்புவரையர் போன்ற சிற்றரசர்கள். இராசராசன் காலம் வரையில் இச்சிற்றரசர்கள் மரபிலிருந்து சோழ அரசர்கள் பெண்ணெடுத்தனர். இவர்கள் அரசனின் நடவடிக்கைகளில் தலையிட்டு வந்தனர். இவர்களின் செல்வாக்கை உடைக்க இராசராசன் வகுத்த திட்டம்தான் எண்ணற்ற புதிய கோயில்களைக் கட்டியதும் அதற்காகப் பூசாரியரையும் திருக்கோயிற் பெண்டிரான தேவதாசிகளையும் அரக்கப் பரக்க வெளியிருந்து அழைத்து வந்ததும் கோயில்களில் நிலப்படைகளை நிறுத்தியதும் காவல் கூடங்களாக மாடக் கோபுரங்களைக் கட்டியதும் மூவர் தேவாரப் பாடல்களைத் தில்லை நடவரசர் கோயில் நிலவறையிலிருந்து மீட்டுக் கோயில்களில் ஓதுவார் என்ற வகுப்பினரை உருவாக்கி ஓதுவித்ததும் இவையனைத்துக்கும் தேவைப்படும் செல்வத்துக்காகக் கோயில்களுக்குப் பெரும் நிலப்பரப்புகளை எழுதி வைத்ததும். இவ்வாறு இறைவனின் பெயரால் நிலங்கள் தங்களிடமிருந்து பறிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகத்தான் சிவனிய வேளாளர்கள் இதே இறைவனின் பெயரால் மடங்களைப் புதிது புதிதாக உருவாக்கினர் போலும். கோயில்களைக் கட்டி அவற்றுக்குத் தங்கள் நிலங்களை எழுதி வைத்துத் தாங்களே ஆளும் உத்தியை அவர்கள் வகுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்று கோயில்களுக்கு நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்திக் கோயில்களைக் கட்டி அவற்றின் மேல் நிலங்களை எழுதி வைத்துத் தம் குடும்பத்தினரை மரபு அறங்காவலர்களாக அமர்த்தும் நடைமுறையின் முன்னோடிகளாக இந்த மடங்களைக் கூறலாம். இன்று கோயில் கட்டுவதற்குச் செலவாகும் பணத்துக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டின் பொருளியல் வலிமையைக் கோயில்களில் கொட்டி அழிக்கும் உத்தியில், தாம் நேரடியாக ஈடுபடாமல் மக்களைப் பங்கேற்க வைத்ததில் நம் இன்றைய ஆட்சியாளர்கள் இராசராசனையும் மிஞ்சிவிட்டனர். இவ்வாறு சோழர் காலத்தில் உருவான மடங்களில் மிகப் பெரும்பாலானவை சிவனிய வேளாளர்களுக்குரியவை.

கோயில்கள் கட்டுவதற்கும் படையெடுப்புகளுக்கும் தேவைப்படும் பணத்தைப் பெற எண்ணற்ற வரிகளை மக்களின் அனைத்துத் தரப்பினர் மீதும் விதித்துக் கொடுமை புரிந்தனர் சோழ மன்னர்கள், எனவே அரசர்கள் மீதும் ஆகமக் கோயில்கள் மீதும் பார்ப்பனர்கள் மீதும் மக்களிடையில் பெரும் வெறுப்பு உருவாகி வளர்ந்து வந்தது. நிலங்களைக் கோயில்களுக்குப் பறிகொடுக்க வேண்டிய நிலையிலிருந்த வெள்ளாளர்களுக்குத் துணையான ஒரு கோட்பாடு சித்தர்களின் பெயரில் உருவானது.

            சித்தர்கள் என்று அறியப்படுவோர் உண்மையில் சிறந்த அறிவியல் வல்லுநர்களாவர். வானியல், மருத்துவம், இயற்பியல், வேதியல், நிலைத்திணையியல், விலங்கியல், உடற்கூற்றியல் என்று பல்வேறு அறிவியல் துறைகளில் சிறந்தவர்கள். காடுமேடுகளில் அலைந்து பல்லாயிரக்கணக்கான மூலிகைகளை அவற்றின் வேர் முதல் விதை வரையில் நுணுக்கமான ஆய்வுக்குட்படுத்திப் பட்டியலிட்டவர்கள். அம்மூலிகைகளையும் பொன், செம்பு, இரும்பு, நாகம், பாதரசம் போன்ற எண்ணற்ற தனிமங்களையும் வைத்து ஆய்வகங்களில் வேதியல் ஆய்வுகள் மூலம் மருந்துகள் செய்து மருத்துவத் துறையை வளர்த்தவர்கள். மனித உடலமைப்பின் அனைத்துக் கூறுகளையும் தெரிந்து கொள்வதற்காக இடுகாடுகளிலும் சுடுகாடுகளிலும் மயானங்களிலும் சுடலைகளிலும் சுடலையாண்டிகளாக அலைந்து திரிந்தவர்கள். வான் பொருட்களுக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் புவியிலுள்ள மனிதர், விலங்குகள், நிலைத்திணைகள் ஆகியவற்றுக்கும் உள்ள உறவையும் இடைவினைப்பாட்டையும் இனங்கண்டு அதைப் பயன்படுத்தி நோய்களுக்கும் மூலிகைகளுக்குமான உறவை முடிவு செய்து மருத்துவத்தை செழுமைப்படுத்தியவர்கள். சித்தர்களில் பெரும்பாலோர் ஒருவரே மருத்துவ நூல்களையும் கணிய(சோதிட) நூல்களையும் எழுதியுள்ளனர். வானியல் என்பது கதிரவனை நடுவாகக் கொண்டு வான்பொருட்களின் இயக்கத்தை விளக்குவது. கணியம் என்பது புவியை நடுவாகக் கொண்டு அதனை விளக்குவது.

            இவ்வாறு மக்களின் அன்றாட வாழ்வுடன் இரண்டறக் கலந்த சித்தர்கள் பட்டியலில் குமரிக் கண்ட வரலாற்றுடன் தொடர்புடைய அகத்தியர் தொடங்கி பிற்காலத்துப் போகர், தேரையர் வரை இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு மக்களுக்கு நன்கு அறிமுகமானவையும் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவையுமான சித்தர்களின் பெயர்களில்தான் ″சித்தர் மெய்யியல்″ என்ற போலிக் கோட்பாடு உருவானது. அவர்களின் பெயரில் பாடல்களும் எழுதப்பட்டன. இக்கோட்பாட்டின் உள்ளடக்கம் ஆகம வழிபாட்டை மறுப்பது. இன்னொரு பக்கம், வினையற்றிருப்பதே உய்வுக்கு வழி என்றும் கூறும் ″குண்டலினி″க் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் மூலம் ஆகம வழிபாட்டின் பெயரால் மக்களின் சொத்தை ஆட்சியாளர்கள் பறிப்பதற்கும் கோயில்கள் கட்டுவதற்காக மக்களிடமிருந்து வரிகள் விதித்துக் கொடுமைப்படுத்துவதற்கான எதிர்ப்பை மக்களிடையில் உருவாக்க முடியும்; அதே வேளையில் உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் அருமை பெருமைகளைப் புரிந்து கொண்டு உரிமைகளைக் கேட்டுக் குரலெழுப்பாமல் தடுக்கும் உளவியல் உத்தியாகக் ″குண்டலினி″க் கோட்பாடு செயற்படும்.

            ″குண்டலினி″ என்பது மனித உடலின் ஆசனவாயின் அருகே, அதாவது ″மூலம்″ என்றும் ″குண்டி″ என்றும் குறிப்பிடப்படும் பகுதியில் பாம்பு போல் சுருண்டு கிடக்கிறதாம்! (குண்டி குண்டிலினி குண்டலினி?) அது மிகப்பெரும் ஆற்றலைத் தன்னுள் அடக்கியுள்ளதாம்! அதனை மேல்நோக்கி எழுப்பி, அது தலைப்பகுதியை அடையும் போது அந்த மனிதன் அளப்பரிய ஆற்றலைப் பெறுவானாம்! இந்த பேரண்டமே அவன் கட்டுக்குள் வந்து விடுமாம்! அவனே பேரண்டமாக, கடவுளாக மாறி கடவுளுடன் இரண்டறக் கலந்து விடுவானாம்! இந்த நிலைக்குச் ″சித்தி″ அடைதல் என்று பெயராம்! ″சித்தி″யை அடைந்தவர்கள் சித்தர்களாம்! சித்தர்கள் இத்தகைய ஆற்றலை அமர்ந்த நிலையிலேயே பெற்று அந்நிலையிலேயே வானியல், மருத்துவம் என்று அனைத்து அறிவியல் நுட்பங்களையும் அறிந்தனராம்!!

            இந்தக் ″குண்டலினி″ ஆற்றலை எழுப்புவது எப்படி? அதில்தான் இருக்கிறது நுணுக்கம்! ″குண்டலினி″யை எழுப்புவதற்கு நாம் நம் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டுமாம்! நம் மூச்சு குறிப்பிட்ட வேளைகளில் வலது அல்லது இடது மூக்குத் துளை வழியாகச் செல்லுமாம். இவற்றுக்கு முறையே வலநாடி(பின்கலை) இடநாடி(இடகலை) என்று பெயர். இந்த இரண்டு மூச்சுகளும் மூக்குக்கு மேல் சுழிநிலை என்ற இடத்தில் ஒன்றிணையுமாம்! இவ்வாறு ஒன்றிணைந்த மூச்சைக் கீழ் நோக்கிச் செலுத்தினால் தலை உச்சியை அடைந்தவுடன் நாம் மேலே விளக்கிய ″சித்தி″ கிடைக்குமாம்!

            இவ்வாறு மூச்சைக் கட்டுப்படுத்திக் கீழ்நோக்கிச் செலுத்துவதற்கு புலி அல்லது மான் தோலின் மீது ″ஆசனமிட்டு″ அமர்ந்து மூச்சைக் கண்காணித்துப் ″பயிற்சி″ எடுக்க வேண்டும். பல ஆண்டுகள் தொடர்ந்து இடைவிடாமல் இப் ″பயிற்சி″யை மேற்கொண்டால்தான் ″சித்தி″ கிடைக்குமாம்!

            இந்த முயற்சியிலும் பயிற்சியிலும் ஈடுபடுபவருக்குத் தன் பொருளியல் மற்றும் பிறவகைத் தேவைகள் பற்றிய கவலை இருக்கக் கூடாது. அதாவது பண்ணையடிமை தான் உழைத்து விளைக்கும் நெல்லையும் பிற பண்டங்களையும் தான் உழைக்கும் நிலத்தின் உடைமையாளரான நிலக்கிழாருக்கு அவர் வீட்டில் கொண்டு வந்து கொடுப்பான். தன் உழைப்பினால் நல்வினைகளையும் தீவினைகளையும் செய்து அவற்றின் பயன்களை நுகர மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து உழலப்போகும் அவன் இழிபிறவி. பண்ணையார் வீட்டுக்கு நெல்லையும் பிற பண்டங்களையும் கொட்டிக் கொடுக்கும் அவன் அவர் வீட்டுத் தொழுவத்தில் நின்று அவர் வீட்டு வேலைக்காரி ஊற்றும் பழங்கூழைப் பணிந்து பெற்றுக் குடிப்பான். அவருக்குச் சோறு சமைப்பது முதல் அனைத்துப் பணிவிடைகளையும் செய்து கொடுக்கும் அவரது மனைவியோ அவரை விட இழிந்த பிறவியாகத் தன்னைக் கருதிக் கொள்வாள். இந்தப் பண்டங்கள் மற்றும் பணிவிடைகளின் பயன் அனைத்தையும் எந்த உழைப்புமின்றிப் பெற்று அமர்ந்த நிலையில் தான் விடும் மூச்சைக் கண்காணித்துக் கொண்டிருப்பவன் ″கடவுளாகும் தகுதி″யைப் பெற்றுக் கொண்டிருப்பான். இத்தகைய ஒப்பற்ற ஓர் ஓட்டுண்ணிக் கோட்பாட்டை உருவாக்கிய நம் ″ஆன்றோர்களின்″ ″திறனை″ப் பார்த்து மேலை ″அறிஞர்கள்″ வாய் பிளந்து நிற்கிறார்கள். தங்கள் மக்களிடமும் விற்க முயன்று கொண்டிருக்கிறார்கள். உழைப்பவர்களின் மூளையை மழுங்கடிக்க எவ்வளவு எளிய வழி!

            இவ்வாறு உருவான ″குண்டலினி″க் கோட்பாடும் சித்தர் மெய்யியலும் குலோத்துங்கனுக்கு முந்திய சோழ நாட்டில் அரசனுக்கும் கோயில்களும் பார்ப்பனர்களுக்கும் எதிராக மக்களைக் கிளர்ந்தெழுச் செய்வதற்குக் கோட்பாட்டுப் பின்னணி தந்து உதவின.

            தமிழக அரசர்கள் சிவனியத்துக்கு அளித்த அளவுக்கு மாலியத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே மாலியம் சோர்ந்து கிடந்தது. இந்தச் சோர்வைப் போக்கி அதற்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார் இராமானுசர். தீண்டத் தகாதவர்களாகவும் கோயில்களுக்குள் நுழைய உரிமையற்றவர்களாவுமிருந்த வேளாண்மை, கைவிணைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த ″கீழ்ச்சாதி″ மக்களுக்கு திருக்குலத்தார் எனப் பெயரிட்டு (காந்தியார் கடவுளின் மக்கள் எனப் பொருள்படும் அரிசனம் என்றும் முகமதியர்கள் அதே பொருள்படும் லெப்பை என்றும் பெயர்களிட்டதைப் போல்) அவர்களுக்குப் பூணூலும் அணிவித்து மாலியக் கோயில்களில் பூசகர்களாகும் தகுதியை அளிக்கும் இயக்கத்தைத் தொடங்கினார். பார்ப்பனராகப் பிறந்தவர்கள்தான் வீடுபேறடைய முடியும் என்ற பார்ப்பனியக் கொள்கைக்கு எதிராகத் திருமாலடியவர் எப்பிறப்பினராயிருந்தாலும் வீடுபேறடைய முடியும் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். தமிழகம் முழுவதும் இந்தச் ″சாதி மாற்ற″ இயக்கத்தை அவர் நடத்தினார்.

குலோத்துங்கனையும் அவனது பின்னடி(சந்ததி)யினரையும் போலிச் சோழர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். இராசராச சோழனின் மகள் குந்தவை சாளுக்கிய இளவரசன் விமலாதித்தனை மணந்தாள். அவர்களுக்குப் பிறந்தவன் கீழைச் சாளுக்கிய மன்னன் முதல் இராசராசன் ஆவான். இராசராச சோழன் மகன் இராசேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவியை அவன் மணந்தான். அவர்களுக்குப் பிறந்தவன்தான் குலோத்துங்கன்.

            சோழநாட்டில் இராசராசனின் நேர்வழியில் வந்த வீரராசேந்திரன் காலமானதும் அவனது மகன் அதிராசேந்திரன் அரசனானான். ஒரு மாதத்துக்குள் நாட்டில் உருவான மக்கள் கிளர்ச்சியில் அவன் கொல்லப்பட்டான். இந்தக் கலவரம்தான் முன்பு நாம் குறிப்பிட்டது.

            குலோத்துங்களின் தாய் சோழ இளவரசியாதலால் அவன் சோழ அரண்மனையில்தான் பிறந்தான். அவன் பிறந்தவுடன் இராசேந்திர சோழனின் மனைவியாகிய இவனது பாட்டி இவனுக்குச் சோழ அரசனாகும் உடற்குறிகள் இருப்பதாகக் கூறினாள் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. அவனைச் சோழ அரசனாக்க வேண்டும் என்ற திட்டமொன்று சோழ அரண்மனையிலேயே உருவாகிவிட்டதென்பதற்கு இதனை ஒரு தடயமாக்க் கொள்ளலாம். சோழ, அரண்மனையிலேயே அவன் தன் இளமைக் காலத்தைக் கழித்திருக்க வேண்டும். சோழ பேரரசின் அதிகார அமைப்புடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு இருந்தது. அத்துடன் மக்களிடையில் உருவாகியிருந்த கொந்தளிப்பு நிலையையும் அவன் புரிந்து கொள்ள முடிந்தது.

            கி.பி. 1060இல் தன் தந்தையாகிய சாளுக்கிய மன்னன் முதலாம் இராசராசன் காலமானதும் அந்நாட்டை இரண்டாம் இராசேந்திரன் என்ற பெயரில் 10 ஆண்டுகள் இவன் ஆண்டான். 1070இல் சோழ அரசனாகப் பட்டமேறிய அதிராசேந்திரன் கலவரத்தில் கொல்லப்பட்டதும் குலோத்துங்கன் என்ற பெயரோடு இந்தப் போலிச் சோழ மரபை அவன் தொடங்கி வைத்தான்.

            மேற்படி கலவரத்தில் வலங்கை, இடங்கை என்ற இரு வகுப்பு மக்களும் இணைந்து நின்றனர். இடங்கையினருக்குப் பொதுவாகப் பொற்கொல்லர்கள் முதன்மைப் பங்காற்றியுள்ளனர். கண்ணகி மதுரையை எரித்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சியின் பின்னணியில் நடந்த பெரும் புரட்சியின் பின் அரியணையேறிய வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைக் கண்ணகியின் சீற்றத்தைத் தணிப்பதற்காகப் பலிகொடுத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பொற்கொல்லர்கள் இப்புரட்சியில் பெரும் பங்காற்றியிருப்பது இதிலிருந்து புலனாகும். கழகக் காலத்தின் இறுதியலமைந்த சிலப்பதிகாரக் காலத்தில் தமிழகத்திலிருந்து பெருமளவில் பொன்னகை ஏற்றுமதியாகிருக்க வேண்டும். அதனால்தான் கோவலனைத் திருடனென்று கூறிய பொற்கொல்லன் நுண்வினைக் கம்மியர் நூற்றுவர் பின்வர நடந்தான் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். அத்துடன் யவனத்து இறக்குமதியாகிய சட்டை (மெய்ப்பை)யை அவன் அணிந்திருந்தானென்று கூறுவதிலிருந்து அவனது வெளிநாட்டுத் தொடர்பும் சார்பும் தெரிகிறது.

            பொற்கொல்லர்கள் கைவிணை வல்லவர்கள். கைவிணை வல்லாரும் அடிமைகளும் இழிமக்கள் எனவும் அவர்களுக்கு ஐந்திணை ஒழுக்கம் பொருந்தாது என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. எனவே அக்காலத்திலிருந்தே பொற்கொல்லர்கள் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. பொன்னகை ஏற்றுமதியால் செல்வ நிலையில் உயர்ந்த அவர்கள் தங்கள் குமுக மதிப்பு உயர்வதற்காகப் போராடியது இயல்புதான். சிலப்பதிகாரக் காலத்தில் வேளாளர்களோடு இணைந்து மூன்றாம் வருணமாக இருந்த தாங்கள் தனி வருணமாக உயரவேண்டும் என்று விரும்பிய வாணிகர்களுடன் சேர்ந்து பொற்கொல்லர்களும் மதுரைக் கலவரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் தலைவர்கள் பிடிபட்டு அரசனால் கொல்லப்பட்டதைத்தான் கண்ணகிக்கு இட்ட பலி என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

            அதே போல் சோழப் பேரரசின் காலத்திலும் பொன்தொழில் சிறப்புற்றிருந்திருக்கிறது. ஊருக்கு ஒரு பொன்மாற்று வாரியம் செயற்பட்டதாக சோழர்காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவ்வாரிய உறுப்பினர்களாகப் பொற்கொல்லர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. படைவீரர்களும் வாணியர் (செக்கார்)களும் இருந்திருக்கின்றனர். ஒதுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த இடங்கை வகுப்புகளில் இடம் பெற்றிருந்த பொற்கொல்லர்கள் இப்போதும் தங்கள் செல்வச் செழிப்புக்கேற்ற குமுக மதிப்புக்காக மீண்டும் போராடினர். தலைமை தாங்கியிருக்கவும் கூடும். இவர்களோடு குலோத்துங்கன் தொடர்பு வைத்திருக்கிறான். அதனால் தான் சோழ அரசனாகப் பதவியேற்றதும் அவன் பொற்கொல்லர்களுக்கு ஊர் ஆள்வினை(நிர்வாக)ப் பதவிகளை வழங்கினான்.

            வலங்கை - இடங்கைக் குலங்களின் அடிப்படை முரண்பாடே வலங்கையினருக்கு இருக்கும் அரசியல் உரிமைகள் இடங்கையினருக்குக் கிடையாது என்பதாகும். அத்தகையவர்களுக்கு ஊர் ஆள்வினைப் பதவி கிடைப்பது ஒரு பெரும் உயர்வுதானே! (இந்தப் பதவி பின்னாளில் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. விசயநகரப் பேரரசைத் தோற்றுவித்த அரிகரன் புக்கன் உடன் பிறந்தவர்களில் இளையவனான புக்கனால் இப்பதவி பறிக்கப்பட்டுப் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது. பொற்கொல்லர் சாதிப் பெண் ஒருத்தியால் வந்த பகையால் இது நிகழ்ந்ததாம்.)

            குலோத்துங்கன் என்ற பெயரில் மூன்று மன்னர்கள் போலிச் சோழ மரபில் ஆண்டுள்ளனர். நீலகண்ட சாத்திரியின் தென்னிந்திய வரலாறு இக்கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் எவை எவர் காலத்தில் நிகழ்ந்தன என்று வரலாற்றாசிரியர்களால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்று கூறுகிறது.

            கம்பராமாயணம் குலோத்துங்கன் காலத்தில்தான் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கம்பனுக்கும் அவனுக்கும் நல்லுறவு இருந்து, பின்பு அது கசப்பாக மாறியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இராமானுசரை முதலாம் குலோத்துங்கன் நாடு கடத்தினான். இரண்டாம் குலோத்துங்கன் தில்லை நடவரசர் கோவிலிலிருந்த கோவிந்தப் பெருமாள் திருவுருவச் சிலையை எடுத்துக் கடலில் வீசினான். இச்சிலை ஒரு வேளை களப்பிரர் அல்லது பல்லவர் காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம். வெள்ளாளர்களின் உடைமையாயிருந்த சிவனிய மடங்களை ஒரு குலோத்துங்கள் உடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனை எதிர்த்து அவர்கள் குகைப் போராட்டங்கள் என்று அறியப்படும் போராட்டங்களை நடத்தித் தம் மடங்களை மீட்டனர் என்று தெரிகிறது. சேக்கிழார் என்ற வெள்ளாளரை அமைச்சராக்கி அவரைக் கொண்டு பெரியபுராணம் என்ற, சிவனியர்கள் இன்று போற்றும் நூலை இயற்றச் செய்தவனும் ஒரு குலோத்துங்கனே.

            ஆனால் ஒன்று மட்டும் உறுதி. சாளுக்கியனான குலோத்துங்கனைத் தமிழக மக்களும் அதிகாரிகளும் உள்ளூராட்சித் தலைவர்களும் படைகளும் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்ட அவனது ″அருளை″ப் பெறுவதற்காக அவனை ஆதரித்த குழுக்களும் எதிர்த்த குழுக்களும் ஒன்றோடொன்று மோதின. இறுதியில் வென்ற அரசு சார்பான குழுக்கள் தம் மேலாதிக்கத்தை நிலைநாட்டின. எதிர்த்த குழுக்கள் வெளியேறின அல்லது அடக்கி ஒடுக்கப்பட்டன.

            சோழராட்சியில் ஆட்சியின் அலகுகள் நாடுகள் எனப்பட்டன. அவற்றின் ஆள்வினைப் பதவியிலிருந்தோர் நாட்டார்கள் எனப்பட்டனர். களப்பிரர் காலத்திலேயே சோழ மண்டலத்தில் நுழைந்து விட்ட கள்ளர்களில் நாட்டார் பதவியிலிருந்தவர்கள் நாட்டார் கள்ளர்கள் எனப்பட்டனர். இவர்களில் புதிய அரசனுக்கு அடங்கிப் போனவர்கள் பல்வேறு பதவிகளையும் நிலக்கொடைகளையும் பெற்றனர். எதிர்த்தவர்களில் ஒரு பகுதியினர் தோல்வியுற்று வெளியேறினர். மதுரை மாவட்டத்தில் மேலூர்ப் பகுதியில் வாழும் நாட்டார் கள்ளர்கள் இவ்வாறு வெளியேறியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் ஒடுக்கப்பட்டு பண்ணையடிமைகளாக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் பள்ளர்களாக, ஊரைவிட்டு ஒதுங்கிய சேரிகளுக்குத் துரத்தப்பட்டிருக்க வேண்டும்.

            பள்ளர் என்ற பெயரில் உள்ள சாதி மேலோட்டமான பார்வையில் ஒன்றாகத் தெரிந்தாலும் அதில் எண்ணற்ற உட்பிரிவுகள் உள்ளன. ″நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது″ என்றொரு சொலவடை உண்டு. (தமிழகத்திலுள்ள அனைத்துச் சாதிகளிலும் இத்தகைய உட்பிரிவுகள் உண்டு.) இந்த உட்பிரிவுகளுக்கும் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் காரணமாயிருக்கலாம். மருத நிலத்தினரான சோழர்களுடன் தமிழகத்தில் குடியேறிய மருதநில மக்கள் அவர்களிடையில் இருக்க வாய்ப்புள்ளது. மருத நிலத்தில் உருவான கோட்டைகளுக்கு வெளியே அவர்கள் உரிமையில்லா மக்களாக ஒதுக்கப்பட்டிருக்கலாம். குமரிக் கண்டத்திலிருந்து சோழ, பாண்டியர்கள் இன்றைய தமிழகத்தில் குடியேறிய போது அவர்களை எதிர்த்துத் தோல்வி கண்ட பறையர், துடியர், பாணர், கடம்பர் ஆகியோர் அவர்களுக்குள் இருக்கலாம். கள்ளரும் பிறருமான களப்பிரர்கள், பல்லவர்கள் ஆகியோர் சோழ மண்டலத்தைக் கைப்பற்றிய போது எதிர்த்து நின்று தோற்றோரில் இடம்பெயர்ந்தோரில் எஞ்சியோரும் இடம் பெயர்ந்தோரும் கூட ஒடுக்கப்பட்டுப் பள்ளர்களின் தனிப்பிரிவாக இடம் பெற்றிருக்கலாம். குலோத்துங்கன் காலத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பத்தின் முடிவில் அவன் சார்பானோர் வெற்றிபெற்ற போது பெருமளவிலான கள்ளர்கள் பள்ளர்களாக ஒடுக்கப்பட்டிருக்கலாம்.

            இவ்வாறு படையெடுப்புகளின் போது வெற்றி பெறும் அயலாரோடு உள்நாட்டு மக்கள் மேற்கொள்ளும் நிலைப்பாடுகளுக்கேற்ப அவர்களது குமுக நிலை அமைவது தமிழகத்தில் பொதுவிதியாகச் செயற்பட்டிருக்கிறது. இறுதிவரை எதிர்த்து நின்றோர் ஒடுக்கப்பட்டனர். அடங்கிப் போனவர்கள் இடைநிலையில் நின்றனர்.. எதிரிக்குத் துணை நின்ற மேல்மட்டத்தினர் தங்கள் பழைய உயர்நிலையைப் பேணினர். இவ்வாறு இன்றைய அனைத்துச் சாதிகளின் அடுக்கு வரிசையையும் அவை அனைத்திலும் இன்றியமயாகக் கூறாக உள்ள உட்பிரிவுகளையும் நாம் முயன்றால் தடம் பிடித்துவிடலாம்.

            இறுதிவரை எதிர்த்து நின்றோர் ஒடுக்கப்படுவதற்கும் அடிபணிந்தோர் சலுகை பெறுவதற்கும் நம் கண்கண்ட சான்று சுபாசு சந்திரபோசு உருவாக்கிய இந்தியப் தேசியப் படையினராவர். சப்பானியர் வீழ்ந்து கிழக்காசிய நாடுகளில் ஆங்கிலப் படை கையோங்கிய நிலையில் ஆங்கிலப் படையும் பேரவை (காங்கிரசு)க் கட்சியும் இ.தே.ப. வீரர்களை அடிபணியுமாறு எச்சரித்தனர். பெரும்பாலோர் ஆயுதங்களை ஒப்படைத்து அடிபணிந்தனர். ஆங்கில அரசையும் பேரவைக் கட்சியின் இரண்டகத்தையும் முற்றாக வெறுத்த உண்மையான விடுதலை உணர்வாளர்கள் தலைமறைவாயினர். அடிபணிந்தோர் மன்னிக்கப்பட்டனர். பின்னர் போர் ஈகி(தியாகி)கள் என்ற பெயரில் ஒன்றன் பின் ஒன்றாகச் சலுகைகள் பெற்றனர், பெற்று வருகின்றனர். தங்கள் போர்ப் பணி பற்றி பெருமையுடன் பேசி மகிழ்கின்றனர். அவர்கள் ஒரு வேளை அப்பெருமைக்கு ஒரளவு தகுதியானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களை விடத் தாய்நாட்டுப் பற்றிலும் விடுதலை உணர்விலும் விட்டுக்கொடாத வீரத்திலும் சிறந்தவர்களான அடிபணியா வீரர்களின் நிலை என்ன? அவர்கள் இன்று போர்க் குற்றவாளிகள்! அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டால் உடனே தளை (கைது) செய்யப்படுவார்கள். சுபாசு சந்திர போசு மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றவாளிக் குற்றச்சாட்டு கூட இன்றுவரை விலக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்காக இந்தப் போர் ஈகிகள் எந்த முயற்சியும் செய்ததாகவும் தெரியவில்லை. இன்று நேதாசியின் பெயரால் இதழ்களும் இயக்கங்களும் நடத்துவோர் அடிபணியா வீரர்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? அவர்களைப் போர்க் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஏதாவது முயற்சி மேற்கொண்டுள்ளனரா? இல்லை. தங்களுக்குக் கிடைத்த சலுகையும் பெருமையும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்றே விரும்புவர்.

            இன்றைய ஆட்சியாளர்கள் இந்த ″போர்க் குற்றவாளிகளை″ச் சிறையிலடைக்க முடிவு செய்ததற்கு மாறாக அன்றைய ஆட்சியாளர்கள் அவர்களைப் பண்ணையடிமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் மாற்றினர்.

            பண்டைத் தமிழகத்தில் வெளியிலிருந்து வந்தேறிய ஆட்சியாளர்கள்தாம் தாய்நாட்டைக் காக்க இறுதி வரை போராடியவர்களை ஒடுக்கினர். ஆனால் உள்நாட்டு மக்களால் அமைக்கப்பட்டதாக நாம் கருதும் ″இந்திய″ அரசு ஏன் இந்த உண்மையான விடுதலை வீரர்களைக் குற்றவாளிப் பட்டியலில் வைத்துள்ளது? இது ஒன்றே போதாதா. ″இந்திய″ அரசு இந்திய மக்களுக்கு எதிரான, வெளிநாட்டினர்க்குச் சார்பான அரசு என்று கூறுவதற்கு?

அயலவர் படையெடுப்புகள் எனும் போது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவர் மீதொருவர் மேற்கொண்ட படையெடுப்புகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய படையெடுப்புகளின் போதும் பிற படையெடுப்புகளின் போதும் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலரும் அவர்களுக்குத் துணை நின்று பரிசாக விருதுகளையும் நிலங்களையும் பெற்றுள்ளனர். அந்த விருதுகளைக் காட்டித்தான் சாதி வரலாற்றாசிரியர்கள் தாங்கள் மூவேந்தர் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். மக்களின் பொருளியல் வாழ்வை நசுக்கிய மூவேந்தர்களின் மரபில் வந்தவர்கள் என்று கூறிக்கொள்வதில், அதிலும் மக்களாட்சியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் நாம் பெருமைப்பட எதுவுமில்லை என்பதை நாம் உணர வேண்டும். செத்துப்போன மூவேந்தர்களின் பிணங்களைச் சுமந்து திரியும் அனைத்துச் சாதி வரலாற்றாசிரியர்களின் பிடியிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். பண்டைய அரசர்களிடமிருந்து விருதுகளும் வசதிகளும் பெற்றவர்களின் வழிவந்தவர்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், இன்று தங்கள் நலன்களுக்காகத் தங்கள் தங்கள் சாதியினரை அணிதிரட்டித் தங்களுக்கும் புதியவர் சிலருக்கும் சில சலுகைகளைப் பெற்ற பின்னர் அந்தச் சிலரைச் சேர்த்துக் கொண்டு நாங்கள் பள்ளரில்லை. பறையரில்லை என்று தங்களுக்குப் புதுச் சாதிப் பெயர்கள் சூட்டி ஒதுங்குகின்றனர்; தாங்கள் அணி திரட்டிய மக்களை ஒதுக்குகின்றனர். இவ்வாறு அணிதிரட்டப்பட்டு இன்று கைவிடப்பட்டு நிற்கும் அடித்தள மக்கள் மனம் சோர்ந்துவிடாமல் இத்தலைவர்களைக் கைகழுவி விட வேண்டும். தங்கள் உண்மையான பொருளியல் விடுதலைக்கும் அதன் மூலம் குமுகியல் விடுதலைக்கும் போராடத் தம்மைப் போல் பொருளியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பிறசாதி மக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். தங்களை ஒருங்கிணைத்து அரசியல் களத்துக்குக் கொண்டு வந்தவர்களாக மட்டும் இந்தத் தலைவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். முன்னொரு நாள் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்தனால் அவர்கள் பெற்ற பயன் அன்று அவர்களால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு இன்று பயன்பட்டிருக்கிறது என்ற இயங்கியல் உண்மையை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

            குலோத்துங்கனால் நாடு கடத்தப்பட்ட இராமானுசர் கன்னட நாட்டுக்குச் சென்றார். தலைக் காவிரியிலிருந்து தொடங்கி காவிரிக் கரையிலேயே நடந்து தன் சமயப் பணியைத் தொடர்ந்தார். ஒய்சாள அரசனைத் அம்மணத்திலிருந்து மாலியத்துக்கு மாற்றினார். ஒய்சாளர் என்பவர் புலிகடிமால் என்ற கழகக் கால அரச மரபினர் என்று தெரிகிறது. புலியைக் கொடியாகக் கொண்ட சோழர்களைத் தண்டிப்பவர் என்ற பொருளியல் இந்தப் பட்டத்தை அவர்கள் சூட்டிக்கொண்டனர். காவிரி நீர் உரிமை பற்றி இவர்களுக்கும் சோழர்களுக்கும் தீராப்பகை இருந்து வந்தது. தமிழகம் வலுவிழந்த பிற்காலத்தில் இவர்கள் பலமுறை தமிழகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

            இராமானூசர் தமிழகத்தில் மேற்கொண்ட சமயப் பணியால் பார்ப்பனரல்லாத அடித்தளத்து மக்கள் பார்ப்பனராகி மாலியம் வலிமை கொண்டது. இந்தக் காலத்தில்தான் மாலியக் கோயில் கருவறையினுள் ஆழ்வார்கள் பாடிய தமிழ்ப் பாசுரங்களைப் பார்ப்பனப் பூசாரிகள் பாடி இறைவனை வழிபடும் முறை தோன்றியது.

            கொஞ்ச காலத்திலேயே புதிய கோட்பாடு ஒன்று உருவானது. வேதாந்த தேசிகர் என்ற மாலிய ஆசாரியர் இராமானுசரின் கோட்பாட்டை மறுத்தார். திருமாலிடம் அடைக்கலமாகும் எச்சாதியினரும் வீடுபேறு(வைகுண்ட பதவி) அடைய முடியும் என்ற இராமானுசரது கோட்பாட்டுக்கு மாறாகப் பார்ப்பனராகப் பிறந்த திருமாலடியவர்கள் மட்டுமே வீடுபேறடைய முடியும் என்று இவர் கூறினார். இந்தப் புதுக் கோட்பாடு உருவான பின் தமிழகத்து மாலியர்கள் இரு பிரிவினராகப் பிளவுண்டனர். அடித்தள மக்களை இராமானுசர் பார்ப்பனராக்கியதற்கு முன்பிருந்த பார்ப்பன மரபினர் வடகலையினரென்றும் பிறரனைவரும் தென்கலையினரென்றும் அழைக்கப்பட்டனர். ஆங்கில ′யு′(U) எழுத்து வடிவம் கொண்ட ″மொட்டை″ நாமத்தை வடகலையினரும் ஆங்கில″ஓய்″(Y) எழுத்து வடிவிலான ″பாத நாமத்தை″த் தென்கலையினரும் அணிவர். ஆக, சம்பந்தருக்கும் ஆதிசங்கரருக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவனியத்தில் நடந்த அதே நிகழ்முறை இராமானுசருக்கும் வேதாந்த தேசகருக்கும் இடைப்பட்ட காலத்தில் மாலியத்தில் நடைபெற்றது. அதாவது நெருக்கடி காலங்களில் மேற்சாதியினர் கீழ்ச்சாதியினரைத் தம்மோடு இணைத்துக் கொள்வதும் நெருக்கடி நீங்கியதும் நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று ஒதுங்கிக் கொள்வதும் ஒதுக்கி விடுவதும்.

            சென்ற (இருபதாம்) நூற்றாண்டு நிகழ்வாகச் சிவனியத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இங்கு கூறலாம். கோயில்களில் ″அன்பர்கள்″ திருத்தொண்டு″ புரிவதே கோயிலின் பெயரால் கொள்ளையடிப்பதற்கு என்பது பெரும்பாலோர் அறிந்த ஒன்றே. அதனால் சிவன் சொத்தில் கைவைப்பவர்களின் குலம் அழிந்துபோகும் என்று மாலியர்களால் ஒரு கருத்து பரப்பப்பட்டது. அத்துடன் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்த இறைமறுப்புக் கருத்துகளாலும் சிவன் கோயில்கள் சீண்டுவாரற்றுப் போயின. இது பற்றி மு.வ. அவர்கள் கூட ஒரு புதினத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நெருக்கடியை எதிர்கொள்ளச் சிவனிய வேளாளர்கள், பிற அடித்தளச் சாதிகளிலுள்ள கல்வி, செல்வம், செல்வாக்குள்ளோரை, புலாலுண்ணாதவரெல்லாம் சிவனியர்கள்தாம் என்று கூறி ஊரூருக்கும் இருந்த சைவ சபை என்ற அமைப்புகளில் சேர்த்தனர். பல கீழ்ச்சாதிப் பெரியவர்கள் பெருமையுடன் சீவன் கோயில்களின் மீட்சிக்கு உதவினர். ஆனால் திடீரென்று ஒரு நாள் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், மரபு வழியான மரக்கறி உணவினர்தாம் உண்மையான சிவனியர்கள், பிறரெல்லாம் ″சபை″யிலிருந்து விலகிவிட வேண்டுமென்றனர் வேளாளர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் சைவ சித்தாந்த சபை என்ற போட்டி அமைப்பில் இணைந்தனர்ர். இப்போது சிவன் கோயில்களின் மீட்சி வேகம் பெற்று விட்டதால் வேளாளர்கள் ″சைவ சபை″களையும் கைவிட்டுவிட்டனர். ″சைவ சித்தாந்த சபை″கள் வலிமை பெறவே இல்லை.

0 மறுமொழிகள்: