4.7.15

"கட்டாய மதமாற்றம்"

கட்டாய மதமாற்றம் என்ற கூக்குரல் நாலாபக்கமும் இன்று ஒலிக்கிறது. ‘இந்து’ மதம் என்ற பெயரில் அழைக்கப்படும் பலபட்டரைச் சமயத்தில் பிற சமயங்களைப் போல் ஒரு திட்டவட்டமான மெய்யியலோ வழிபாட்டு முறையோ சமயக் கட்டமைப்போ தெய்வமோ கிடையாது. அதன் கட்டமைப்பைப் பெரும்போக்கில் இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று பார்ப்பனரைக் கொண்டு சமற்கிருதத்தில் மக்களுக்கும் பூசகருக்கும் புரியாத மந்திரங்களை முழங்கி மக்களுக்குப் பயன்படத்தக்க எண்ணற்ற பொருள்களை வேள்வி என்ற பெயரிலும் வகைவகையான முழுக்குகள் என்ற பெயரிலும் அழித்தும் திருவிழாக்கள் என்ற நிகழ்ச்சிகளில் தேர் என்ற பெயரில் பல நூறு தன்கள் மரக்கட்டைகளாலான ஒன்றில் சாமி என்ற ஒரு பொம்மையை வைத்து சாதியடிப்படையில் முதல் ‘வரிசை’(மரியாதை) இரண்டாம் வரிசை என்று மக்களைப் பாகுபடுத்தி ஊரைச் சுற்றி இழுத்துவிடும் குழந்தை விளையாட்டைக் கொண்டது. இன்னொன்று மக்களின் வட்டாரம், தொழில், குமுக அடுக்கு போன்ற அடிப்படைகளில் அவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ற வகையில் வடிவம் பெற்ற விழாக்களில் தாங்கள் தெய்வம் என்று வழிபடும் உருவையோ பிற பொருள்களையோ தங்கள் தாய் மொழிகளில் வாழ்த்தி வழிபடுவதாகும். இவற்றில் முதலாவதைப் பெருந்தெய்வ வழிபாடென்றும் இரண்டாவதைச் சிறுதெய்வ வழிபாடென்றும் வகைப்படுத்தியுள்ளனர். வழிபாட்டினர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் வகைப்பபாட்டைத் தலைகீழாக்க வேண்டும். பெருந்தெய்வ வழிபாடென்பதை ஆகம வழிபாடென்றும் குறிப்பிடுவர். தெய்வஙங்ளின் எண்ணிக்கை நம்மைத் திகைக்க வைத்திடும் அதனால்தான் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற கூற்று உருவாகியிருக்கிறது.

. இந்த இரு முறைகளுக்கும் இன்று உள்ள அடிப்படையான வேறுபாடு முதலதில் உயிர்ப்பலி கிடையாது, இரண்டாவதில் உண்டு என்பதாகும். அடுத்த வேறுபாடு முதலதில் தெய்வம் மக்களிடம் பேசுவதில்லை, பார்ப்பனப் பூசகன் இடைத்தரகனாகச் செயற்படுவான். இரண்டாவதில் தெய்வங்கொண்டாடி என்ற சாமியாடி தன் மேல் சாமி ஏறியதற்கு அடையாளமாக தன்னிலை மறந்தவன் போன்று ஆடும் நிலையில் மக்கள் தங்கள் குறைகளைக் கூறும் போது அதற்கான ஆறுதலையோ அச்சுறுத்தலையோ செய்து தனக்கு இன்னின்ன நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டுமென்பான். அது போல குறிப்பிட்ட வேண்டுதல்களுக்கு ஒவ்வொரு சாமிக்கும் குறிப்பிட்ட நேர்ச்சைகள், எடுத்துக்காட்டாக, பிள்ளைப் பேற்றுக்கு தொட்டிலில் பொம்மை செய்து தொங்கவிடுதல் போன்றவை வரையறுக்கப்பட்டுள்ளன. 


பெருந்தெய்வக் கோயில்களில் இதே வேண்டுதலுக்கு ஒரு தனிப் பூசையை இறைவனுக்கு நடத்த வேண்டுமென்று பார்ப்பனப் பூசகன் சொல்லி சில ஆயிரங்களுக்கு ஒரு மதிப்பீடு வழங்குவான். பணத்தை அவனிடம் ஒப்படைத்தால் பூசை நடத்தப்படும். இவை எல்லாம் பலிக்குமா என்று கேட்கிறீர்களா? அப்படிப் பலிப்பதாயிருந்தால் ஊருக்கு ஊர் கருவூட்டும் சிறப்பு மருத்துவர்கள் இவ்வளவு விரிவாகக் கடை நடத்துவார்களா? இயற்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் போன்று மகப்பேறும் தற்செயலும் விதிகளும் இணைந்த ஒன்றே, ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை முட்டையும் ஒன்றுகூட வேண்டுமென்பது விதியென்றால் அந்த இணைவு ஒரு தற்செயல் நிகழ்வு. முன்பு இந்த இணைவு ஆண் – பெண் புணர்ச்சியால் நிகழ்ந்தது என்றால் இன்றைய மருத்துவத்தில் புணர்வு இன்றி கூடுதல் வாய்ப்பைப் பெறுகிறது. இதில் நம் தெய்வங்களின் பங்கு எதுவும் இல்லை. இது நம் இருவகைத் தெய்வங்களுக்கும் கடவுள் என்ற கருத்துருவத்துக்குமான கேள்வியினுள் நம்மை இழுத்துக்கொண்டுவிடுகிறது. இதினுள் இப்போது நுழையாமல் மதமாற்றம் என்ற சிக்கல் பற்றிய அலசலைத் தொடர்வோம்.


இந்த இரண்டு வழிபாடுகளுக்கும் இடையில் குறிப்பிட்ட வகுப்பு வேறுபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. அரசர்கள், அவர்களுக்குக் கல்வியும் அறிவுரையும் வழங்குவோருமாகத் தம்மை வைத்துக்கொண்ட பூசகர்களான பார்ப்பனர்களுடன் சற்சூத்திரர் எனத் தங்களைக் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டுக்கொள்ளும் சிவனிய வெள்ளாளர்களும் ஆகமக் கோயில்களில் செல்வாக்குள்ளோராகவும் வைசியர்கள் எனப்படும் வாணிகர்களும் உடலுழைப்பாளர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோரும் ஊர்க்கோயில்களை நாடுவோராகவும் இருந்தனர். ஆகமக் கோயில்கள் வருண அடிப்படையில் அமைந்தவை. பார்ப்பனப் பூசாரியும் அவர்களின் ஒட்டுச் சாதியும் கோயில் பரத்தைகளுமான தேவதாசிகளும் மட்டும் மூலத்தானம் எனப்படும் கருவுறைக்குள் நுழையலாம். அரசர்கள், சிற்றரசர்கள், படைத்தலைவர்கள், அதிகாரிகள் போன்ற ‘சத்திரிய’ வருணத்தார் மட்டும் மண்டபம் வரை நுழையலாம். வைசிய வருணத்தவர் உள் பிரகாரம் எனப்படும் உள்சுற்றைத் தாண்டிச் செல்ல முடியாது. அவர்கள் மூலவர் எனப்படும் கருவறைத் தெய்வப் படிமத்தைப் பார்க்க முடியாதபடி கொடிமரமும் பலிபீடமும் மறைத்திருக்கும். சூத்திரர்கள் எனப்படும் உழைக்கும் மக்கள் மதிள் சுவருக்கு வெளியே வாயிலில நின்று கொடிமரத்தையும் நந்தி, கருடன் போன்ற இறைவனின் ஊர்தியின் பின்புறத்தையும் பார்த்து வழிபடுவதோடு மனநிறைவடைய வேண்டியதுதான். ஐந்தாம் வருணமென வகைப்படுத்தப்பட்டிருக்கும் பஞ்சமர்கள் தேரோடும் வீதிக்குள் கூட நுழைய முடியாது. ஊர் எல்லையில் நின்று கோபுரத்தைப் பார்த்து கையைத் தலைமேல் வைத்து நிறைவுகொள்ள வேண்டியதுதான்.


ஆகமக் கோயில்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் உயிர்ப்பலி கொள்ளாதவையல்ல. அம்மண சமயம் வரும் வரை பலி ஏற்றவைதாம். முருகன் உயிர்ப்பலி ஏற்றதைத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அதன் அடையாளமாகத்தான் அனைத்து ஆகமக் கோயில்களிலும் பலிபீடம் நிறுவப்பட்டு அதில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி குங்குமத்தில் தோய்த்துப் பலிபீடத்தில் குருதியின் குறியீடாகப் பிழிகிறார்கள். இந்தத் தெய்வங்களை வழிபட்ட மக்கள் செல்வத்திலோ செல்வாக்கிலோ மேம்பட்ட காலங்களில் அவற்றின் வழிபாட்டை ஆகம வழி சார்ந்ததாக ஆக்கிக் கொண்டனர் என்பதே உண்மை.

இந்தக் கட்டமைப்பில் மேலிரண்டு வகுப்புகளுக்கும், அதாவது அரசர்களுக்கும் பார்ப்பன அமைச்சர்களுக்கும் முரண்பாடுகள் முற்றும் காலங்களில் இங்கு அயல் மதத்தவரான அயலவர்கள் அரசர்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளனர். பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கொலு மண்டபத்தில் முகம்மதிய அறிவுரையாளர்கள் இருந்துள்ளதாக கே.கே.பிள்ளையவர்கள் கூறியுள்ளனர். அயல்நாட்டு முகம்மதியர்களின் வலிமையை அறியும் வாய்ப்புடைய இடத்தில் இருந்த பார்ப்பனர்கள் முதலில் மதம் மாறினர். இதற்குச் சான்றாக அய்யூர் இ.அப்பாசு மந்திரி என்ற பொறியாள நண்பர் கூறிய செய்தி உள்ளது. நாகூர் தர்காவிலுள்ள பூசகர்கள் அய்யங்கார்கள் என்றும் அவர்கள் தங்கள் பழைய சாதி உறவுகளை இன்றும் பேணுகின்றனர் என்றும் அவர் கூறினார். மதுரையில் சில முகம்மதியப் பெரியோர்கள் அன்றாடம் நடை பயிலும் சாக்கில் மீனாட்சியம்மன் கோயிலை வலம் வருகின்றனர் என்று சில ஆண்டுகளுக்கு முன் பெரியவர் ஒருவர் கூறினார். நெல்லை மாவட்டத்தின் தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தின் கொங்கராயக் குறிச்சி வட்டாரங்களிலுள்ள முகம்மதியர்கள் சிவனிய வெள்ளாளர்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்று ஒரு பெரியவர் கூறினார். இவர்கள் கட்டில்தான் நெல்லையில் செயல்படும் முசுலிம் அனாதை நிலையம் உள்ளது. அவர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை.


பாமினிப் பேரரசு உடைந்து உருவான ஐந்து சுல்தானியங்களில் இரண்டின் சுல்தான்கள் மதம் மாறிய பார்ப்பனர்கள். விசயநகரப் பேரரசை அமைத்த அரிகரனும் புக்கனும் பதவிக்காக மதம் மாறி தில்லிப் பேரரசரிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றியவர்கள். தெற்கே ஒரு கலகத்தை அடக்க வந்த அவர்கள் இங்கே வித்தியாரண்யர் என்ற பார்ப்பனரின் அறிவுரையால் புகுந்த மதத்திலிருந்து வெளியேறியவர்கள். அவர்களின் நோக்கம் முழுமையாக முகம்மதியத்தை எதிர்ப்பதில்லை. அரசராவது முதன்மை நோக்கமென்றால், அந்த வட்டாரத்தில் வேதங்களையும் சாதியத்தையும் அம்மணர்களையும் எதிர்த்து தன் அக்காள் கணவனான அம்மண அரசனைக் கொன்று பதவியேற்ற பார்ப்பனனான பசவன் என்பவன் உருவாக்கிய வீர சிவனியம் எனப்படும் லிங்காயதம் என்ற சமயம் வளர்ந்துவந்ததுடன் ஒடுக்கப்பட்ட மக்களாகிய சக்கிலியர்கள் தோல் தொழிலின் வளர்ச்சியால் வலிமை பெற்று ஓர் அரசையும் அமைத்த காலகட்டமாகும் அது. அதனால் முகம்மதியத்தை எதிர்ப்பதை விட ‘இந்து’க்களுள் பார்ப்பனிய மேலாளுமையை நிலைநிறுத்துவதாகவே இருந்தது அவர்களின் நோக்கம். விசயநகரத்தார் அவ்வப்போது முகம்மதிய அரசர்களுடன் கூட்டணி சேரத் தயங்கியதில்லை.


இவ்வாறு மதம் மாறிய மேல் சாதியினர் தாங்கள் புதிதாகப் புகுந்த சமயத்தின் வலிமையைப் பெருக்குவதற்காகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களைத் தம் புதிய சமயத்தினுள் இழுத்தனர். அப்படி மாற்றப்பட்டவர்கள்தாம் லெப்பைகள் என்று அழைக்கப்படுகின்றனர். மேல் சாதியினர் மரைக்காயர்கள் என்றும் இராவுத்தர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். 1970களில் நான் கடையநல்லூரில் இருந்த போது இராவுத்தர்களுக்கென்றும் லெப்பைகளுக்கென்றும் தனித்தனி பள்ளிவாசல்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இங்குள்ள லெப்பைகள் அனைவரும் நெசவாளர்கள். புளியங்குடி, கடையம், மேலப்பாளையம், பகுதிகளிலும் குமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலோரும் லெப்பைகள்தாம். குமரி மாவட்டத்தின் ஒரு கோடியில் புகழ் பெற்ற பள்ளம் துறைக்கு அருகிலுள்ள ஒரு முகம்மதியக் குடியிருப்பின் பெயர் குறுஞ்சாலியன் விளை. பள்ளர்களில் சாலியப் பள்ளர்கள் எனப்படுவோர் நெசவாளர்களாகும். குறுஞ்சாலியன்விளைக்குச் செல்லும் பேருந்துத் தடங்களில் ஒன்றில் அமைந்துள்ள தெங்கம்பதூரில் நெசவுத்தொழில் செய்யும் சாலியப் பள்ளர்கள் இருப்பதும் அவர்களை அடுத்து சாலைக்கு இப் புறம் நெசவுத்தொழில் செய்த முகம்மதியர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பெரும்பாலான முகம்மதியக் குடியிருப்புகளின் வீதிகளும் நெசவுக்கான பாவு ஆற்றும் வகையிலேயே அமைந்துள்ளதைக் காணலாம். இவர்களைத் தவிர தோல் பதனிடும் தொழிலில் கூட பெரும்பாலும் தமிழகத்தில் முகம்மதியர்கள் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். சவளியும் தோலும் தமிழகத்தில் ஏற்றுமதிப் பொருள்கள், அயல்நாட்டு முகம்மதியர்கள் கடல் வாணிகத்தில் முன்னணியில் உள்ளவர்கள் என்பதோடு இங்கு உடலுழைப்போரை இடங்கையினர் என்று ஒதுக்கி ஒடுக்கி வைத்திருந்த சூழலில் மதம் மாறிய மேற்சாதியினருடன் அயல் முகம்மதியரும் இணைந்து இந்த மத மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மத மாற்றத்தால் ‘இந்து’க்களின் இழிவுபடுத்தல்களிலிருந்து விடுபட்டார்களையன்றி முகம்மதியத்தினுள்ளும் முழுமையான சமத்துவம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தமிழகத்தில் பட்டாணி என்ற பொதுப் பெயரில் அறியப்படும் அயல்நாட்டு முகம்மதியர்கள் மிகக் குறைவு. வடக்கிலோ அவர்கள் மிகுதி. அவர்கள்தான் பனியாக்களான மார்வாரி – குசராத்திகளின் உண்மையான போட்டியாளர்கள். அவர்களின் வலிமையை உடைப்பதும் வெளியேற்றுவதும்தான் குசராத்தி பனியாவான காந்தியின் குறிக்கோளாக இருந்தது. எஞ்சியவர்களின் வலிமையை உடைப்பதைத்தான் குசராத்தியான மோடியின் அரசின் பின்னணியில் ‘இந்து’க் குடும்ப(பரிவார்) அமைப்புகள் செய்கின்றன.


நாயக்கர் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக, அரசி மங்கம்மா, திருமலை ஆகியோரின் காலத்தில் அவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான முரண்களால் ஐரோப்பாவிலிருந்து மதம் பரப்ப வந்த கிறித்துவ மதகுருக்களுக்கு மதிப்பளித்துப் பாதுகாப்பும் வழங்கியிருக்கிறார்கள். முகம்மதியர்களின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் அவர்களின் உதவி தேவை என்று கருதியிருக்கக் கூடும். வேணாட்டரசர்கள் ஐரோப்பியர்களுக்கு அஞ்சியிருக்கின்றனர். குமரி மாவட்டத்தின் ஆசாரிபள்ளம் என்ற ஊரிலுள்ள செக்காட்டிகளான வாணிகர்கள் ஆண்டு தோறும் அரசுக்குச் செய்ய வேண்டிய ஊழியத்தை(இலவயமாக வழங்கப்படும் பண்டங்கள்) ஓர் ஆண்டில் ஏதோவொரு காரணத்தால் செலுத்தத் தவறிவிட்டதால் அரசனின் சீற்றத்திலிருந்து தப்புவதற்காக போர்ச்சுக்கீசியரிடம் மதமாற்றம் பெற்றுத் தப்பியுள்ளனர். மார்த்தாண்ட வரமன் என்பவன் தன் மாமனுக்குப் பின் அவனது மகன்களுக்குச் செல்ல வேண்டிய அரசுரிமையைக் கைப்பற்ற நினைத்த போது சாணார்களின் ஊர்த்தலைவர்களான 39 நாடான்களில் இருவர் தவிர அனைவரும் உதவ மறுத்துவிட்டனர். இறுதியில் அரசனின் மகன்களைக் கொன்று ஆட்சியமைத்த பின் அவன் அந்த நாடான்களின் அதிகாரத்தைப் பறிக்க முற்பட்டான். அதிலிருந்து தப்ப மேற்கு வட்டங்களிலுள்ள நாடான்களில் ஏறக்குறைய அனைவரும் கத்தோலிக்கத்துக்கு மாறித் தம் சொத்துகளைக் காப்பாற்றிக்கொண்டனர். குமரி மாவட்டம் தொடங்கி இராமநாதபுரம் கடற்கரை வரை உள்நாட்டில் அரசர்கள் கொடுமைகளாலும் கடல் வழியாக முகம்மதியர்களின் சூறையாடல்களாலும் அல்லலுற்ற மீனவர்களுக்கு, போர்த்துக்கீசிய அரசர்களின் குடிமக்களானால் அவர் ஆயுதங்களும் பாதுகாப்பும் வழங்குவார் என்ற உறுதி மொழியின் பெயரில் மதம் மாறியிருக்கின்றனர். ஒரே நாளில் 3500 பேர் கத்தோலிக்கத்தைத் தழுவியதாக கே.கே.பிள்ளையவர்கள் தெரிவிக்கிறார். குமரி மாவட்டத்தில் நாடார்கள் கிழக்கு வட்டங்களில் ஓரளவும் மேற்கு வட்டங்களில் பெருமளவிலும் மதம் மாறியுள்ளனர். கிழக்கே அரசர்களின் கெடுபிடிகளாலும் கல்வி வாய்ப்பு போன்றவற்றாலும் மதம் மாறியுள்ளனர். ஆனால் மேற்கு வட்டங்களில் நாயர்கள், குறுப்புகளின் கொடுமைகளிலிருந்து தப்பவே மாறியுள்ளனர். ஆங்கிலராட்சிக் காலத்தில் குமரி மாவட்டத்திலும் தொட்டுக்கிடக்கும் நெல்லை மாவட்டத்திலும் ஊர்த் தலைவர்களான நாடான்களல்லாத சாணார்கள் பெருமளவில் மதம் மாறியுள்ளனர். அவர்களுக்கு கல்வியளித்து ஆங்கில மதகுருக்கள் ஆற்றியுள்ள பணிகள் போற்றத்தக்கன. குறிப்பாக, கால்டுவெல் ஐயர் இது குறித்து இங்கிலாந்திலுள்ள தலைமையகத்தினரின் உதவியைப் பெறுவதற்காக எழுதியுள்ள திருநெல்வேலிச் சாணார்கள் எனும் நூல் ஒரு வரலாற்று ஆவணமாகும். நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் சீர்திருத்தக் கிறித்துவத் திருநெல்வேலித் திருமண்டலத்தால் நடத்தப்படும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டும் 300க்கு மேல் உள்ளன. ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் விடுவிக்கவென்று அவர் பணியாற்றிய காலத்தில் களத்திலிறங்கி இயக்கங்கள் நடத்திய வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டியடிகளும் இராமலிங்க வள்ளலாரும் தங்களை கடவுளின் தோற்றரவு என்றோ ஒப்பற்ற தெய்விக ஆற்றல் பெற்றவர்கள் என்றோ காட்டவும் மக்களுக்குச் சோறு போடவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஒரு துளியளவு கூட கல்விக்கோ தொழில் வளர்ச்சி குறித்தோ எடுக்கவில்லை. ஆனால் இவர்கள் அனைவருக்கும் பின் கேரளத்தில் ஈழவர்களுக்காகச் செயல்ப்பட்ட நாராயண குரு கல்வி நிலையங்கள் நிறுவியும் தகுந்த மாணவர்களை அயல்நாடுகளுக்கு விடுத்தும் ஆற்றிய பணிகள் அவர்களை அம் மாநிலத்தில் அசைக்க முடியாத ஆற்றலாக வளர்த்துவிட்டிருக்கினறன. அவரது மாணவர்களான குமரன் ஆசான் போன்றோரின் உயர்தரச் செயற்பாடுகளையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் மேலே குறிப்பிட்ட தமிழ்நாட்டுச் சீர்திருத்தர்களின் பெயரைக் கூறிக்கொண்டு அன்றும் இன்றும் திரிந்த, திரிகின்றவர்களின் செயற்பாடுகள் வெட்கித் தலைகுனியத் தக்கவை.


முகம்மதியம் போலவே கிறித்துவத்துக்கு, குறிப்பாக கத்தோலிக்கத்துக்கு சிவனிய வேளாளர்களே முதலில் மாறியுள்ளனர். புதுச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளைக்குப் போட்டியாளராக அத்தகைய ஒருவரே செயற்பட்டுள்ளார். அதனால் இன்றும் கத்தோலிக்க நிறுவனங்களில் அவர்களுக்கும் பிற சாதியினருக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் என்ற ஊரில் உருவான கத்தோலிக்கக் கோயிலினுள் நாடார்கள் நுழைய வெள்ளாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் வெள்ளைக்கார மதகுருக்களின் இணக்க முயற்சிகள் பலனளிக்காமல் இரு சாதியினரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு மண்டபத்தில் V வடிவச் சுவரை எழுப்பியதும் பழைய கதை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளாளரான ஆறுமுக நாவலர் என்பவர்(இவர் யாழ்ப்பணத்து ஆறுமுக நாவலர் அல்லர்) வடக்கன்குளத்து நாடார்களில் பெரும்பான்மையரை ‘தாய்’ மதத்துக்குத் திருப்பியதும் பின்னர் நடந்தவை. பணக்காரர்கள் நிறைந்த இந்தத் தாய் மதத்தினரால் ஒரு திருமண மண்டபத்தை அமைக்கும் அளவுக்குப் பொது உணர்வோ தன்மானமோ இல்லாததால் தங்கள் திருமணங்களை கத்தோலிக்க வெள்ளாளரான ‘சர்தார்’ ராசாவின் மண்டபத்தில் கூடி அங்கு ‘இந்து’ மணச் சடங்குகளுக்குத் தடை உள்ளதால் பின்னர் கோயிலில் சென்று தாலி கட்டும் இழிநிலையில் உள்ளனர்.


கத்தோலிக்கத்தில் மேற்சாதியினருக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு கத்தோலிக்கம் உரிய வகையில் வழங்கவில்லை. பெரும்பாலும் அரசுப் பள்ளிகள்தாம் அவர்களுக்குக் கல்வியை வழங்குகிறது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடலுக்கும் நகர்ப் பகுதிகளுக்கும் உள்ள தொலைவு குறைவானதால் நடந்தே கூட அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியும். அதிலும் நாகர்கோயில் நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் கார்மெல் என்ற கத்தோலிக்கப் பள்ளி சென்ற நூற்றாண்டில் பேருந்து மூலம் கடலோர மாணவர்களை இலவயமாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் இருந்த போதும் மேல் சாதியினரே அவற்றால் பயனடைந்தனர். பா.ச.க.வின் பெருந்தலைகளில் முதன்மை பெற்ற அத்துவானி கிறித்துவக் கல்வி நிறுவனங்களில் கற்றவரென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அண்மைக் காலமாக குமரி மாவட்டத்தில் படித்த மீனவர்களிடையில் யூதச் சார்புள்ள, பெந்தகோத்தே எனப்படும் ஐம்பதாம் நாள் விழாவினர் மிகுந்த செல்வாக்குப் பெற்று வருகின்றனர். தாழ்த்தப்பட்டோரில் நெல்லை மண்டலம் தவிர கிறித்துவத்துக்கு மாறிய பள்ளர்கள் குறைவாகவே உள்ளனர். கத்தோலிக்கத்துக்கு மாறியோரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இல்லை. பறையர்களைப் பொறுத்தவரை ஆங்கிலரிடம் வீட்டுப் பணியாளராக இருந்த வாய்ப்பால் மதமாற்றமும் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றவர்கள் மிகுதி. அதே போல் நெல்லை குமரி மாவட்டங்களில் இரட்சண்ணிய சேனை என்ற சீர்திருத்தக் கிறித்துவப் பிரிவு பறையர்களை மட்டும் கொண்டதாகும். இந்த உண்மையின் உறுத்தலால்தான் பட்டியல் சாதியினர் என்ற தாழ்த்தப்பட்டோரில் பறையர்கள் தங்களை விட மிகுந்த வாய்ப்பைப் பெற்றுவிட்டார்கள் என்றும் அதனால் அந்தப் பட்டியலில் தாங்கள் இருக்க விரும்பவில்லை என்று பேரா.தங்கராசு, ப-ர்.குருசாமிச் சித்தர் போன்ற பள்ளர் தலைவர்கள் பரப்பல் செய்து வருகின்றனர். அத்துடன் நில்லாமல், மாட்டிறைச்சியை உண்ணும் அவர்களோடு ஒரே பட்டியலில் தாங்கள் இருப்பது இழுக்கு என்றும் கூறுகின்றனர். செந்தில் மள்ளர் என்பவர் எழுதி அண்மையில் வெளிவந்த மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற நூலில் அவர் பறையர்களை மட்டுமீறிப் பழித்துக் கூறியுள்ளார். பறையர்களின் ஒரு பிரிவினர் என்று கூறப்படும் வள்ளுவர்கள் தமிழர்களின் அனைத்து அறிவியல்களையும் வகுத்தவர்கள் என்று பொருந்தாப் புகழுரைத்துக்கொண்டிருக்கும் ‘ஆய்வறிஞர்’ குணா அவர்கள் இந் நூலை வானளாவப் புகழ்ந்து அணிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் விந்தை. இவ்வாறு எங்கு ஓடினாலும் எந்தச் சமயத்தில் அடைக்கலம் புகுந்தாலும் சாதியக் கொடுமைகளும் ஒதுக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் மக்களை விடாமல் துரத்தும் ஒரு மிக மிக இழிந்த குமுகமாக இந்தியாவும் அதிலும் மிக மிக இழிவானவர்களாகத் தமிழர்களும் உள்ளனர்.


அண்மைக் காலமாக பல்வேறு பெயர்களில் முளைக்கும் கிறித்துவ நிறுவனங்கள் மக்களிடம் ஒருவகையான வசிய உத்தியைக் கையாண்டு நம்பிச் செல்வோரிடம் பணம், நகைகள் போன்றவற்றைப் பறிக்கின்றன என்று கூறப்படுகிறது. ஒரு பெண்மணி இவர்களால் ஈர்க்கப்பட்டு தன் தங்க நகைகள் அனைத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டதாகவும் கணவன் நண்பர்களுடன் சென்று அவற்றை மீட்டுவந்ததாகவும் கூறினர். நெல்லையில் கந்துவட்டிக்காரர்களும் முன்னாள் கள்ளச் சாராய பெருந்தலைகளும் இந் நிறுவனங்கள் மூலம் மதம் மாறி வீட்டுமனைத் துறையில் நுழைந்து சமயப் பரப்புரையாளர்கள் அம் மனைகளை ‘கர்த்தரின் ஆசீர்வாதம்’ பெற்றவை, அவற்றில் குடியேறினால் வாழ்வின் உச்சியையே தொட்டுவிடலாம் என்று குருக்கள் ‘அருள்வாக்கு’ கூறத் தொழில் ஓகோவென்று நடத்துகிறார்களாம்.


வெளியில் எதிரிகளாகக் காட்டிக்கொடள்ளும் சமயத் தலைமைகள் தங்களுக்குள் மறைமுகமான ஒருங்கிணைப்புடன் மத மோதல்களை நிகழ்த்துகின்றன. 1982இல் நடைபெற்ற குமரி மாவட்டக் கலவரத்துக்கான ஆயத்தப் பணிகள் பல ஆண்டுகளாகவே நடைபெற்றதை அப்போதே உணர முடிந்தது. ஒரு புறம் எங்கு பார்த்தாலும் நாளுக்கொரு ‘நற்செய்திக் கூட்டம்’, விவேகானந்தர் நடுவத்தினரின் வழிகாட்டலில் முன்னாள் ஊர் நாடான் வழியினரும் தங்களுக்குக் கிடைக்காத வேலை வாய்ப்புகள் தங்களுக்குச் சமமான கல்வித் தகுதியுள்ள கிறித்தவர்களுக்கு அவர்களின் கல்வி நிலையங்களிலும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்களிலும் கிடைத்துவிடுவதாலும் படிப்புத் தகுதியுள்ள தங்கள் பெண்மக்களுக்குக் கிடைக்கத்தக்க மாப்பிள்ளைகளை அதே கல்வித் தகுதியுள்ள கிறித்துவப் பெண், வெளி உலகில் இயல்பாகப் பழகும் பண்பாட்டுப் பின்னணியில் கவர்ந்து சென்று விடுவதாலும் ஏற்பட்ட கசப்புணர்வில் பலவேறு பெயர்களில் கடை விரித்த ‘இந்து’ இயக்கங்களில் மொய்த்தனர். இதைப் பின்னணியாக வைத்து வல்லரசியமும் பனியா – பார்சிகளும் திட்டமிட்டதே அக் கலவரம்.


ஆங்கிலருக்கு எதிராக பார்ப்பனிய முனைப்பியர்கள் தொடங்கிய போராட்டத்தில் சாதி சமய வேறுபாடுகளிலிருந்து விடுபட்டு இந்திய மக்கள் ஆயுதம் தாங்கியதையும் தமிழரான வ.உ.சி. கப்பல் குமுகம் அதைத்து ஆங்கிலரின் போட்டியை வெற்றியுடன் எதிர்கொண்டதையும் கண்டு நடுங்கிய ஆட்சியாளர்கள் பனியா – பார்சி நலன்களை மனதில் தாங்கிய காந்தியை இனம் கண்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவந்து களத்தில் இறக்கி முனைப்பியர்களைக் ‘களையெடுத்து’ ஆங்கிலரான, இறையியற் கழகத்தின்(பிரம்மஞான சபை) அன்னி பெசன்றுடன் ஒரு போட்டி நாடகம் நடத்தி இருவரும் இந்திய விடுதலை இயக்கத்தினுள் சமயத்தைப் புகுத்தி நாட்டை உடைத்து பனியா – பார்சிகளின் போட்டியாளர்களில் மிக வலியவர்களான முகம்மதியர்களை பாக்கித்தானத்துள் அடைத்து வெளியேற்றிவிட்டார், பிறரை எண்ணற்ற மந்திர – தந்திர ஏமாற்று - எத்துவாளித் தனங்களைக் கையாண்டு எமாற்றி இந்தியாவை பனியா – பார்சி – வல்லரசியர்களின் வேட்டைக்காடாக்கும் ஒற்றையாட்சியை நிறுவி தன் வகுப்பினரான பனியாக்களுக்காக உயிரையும் ஈந்து அனைவருக்கும் உயிர்விட்டவராகப் புகழையும் பெற்றுக்கொண்டார்.


முகம்மதியத்தில் முதன்மையாக மரக்காயர்கள், இராவுத்தர்கள், லெப்பைகள், பட்டாணிகள், என நான்கு பிரிவுகள் தமிழகத்தில் உள்ளன. மரக்காயர்கள் முன்னாள் தமிழகக் கடல் வாணிகர்களான மரக்கலராயர்களின் வழி வந்தவர்கள். கடலில் செல்வோரை இழிவானவர் என ஒதுக்கி வைத்த ‘இந்து’ மரபின் விளைவான குமுறலினால் கடல் வாணிகர்களான அயல் முகம்மதியர்களால் மதமாற்றம் பெற்றுள்ளனர். இராவுத்தர் என்பவர் பெரும்பாலும் இந் நாட்டுக் குதிரைப் படை வீரர்களாக இருக்க வாய்ப்புள்ளது. குதிரையின் உடலை முறைப்படி தேய்த்து விடுவதே குதிரைப் பராமரிப்பில் முதன்மையானது. சிவனையும் இராவுத்தன் என்ற பெயரால் அடியார்கள் குறித்துள்ளனர். இவர்களுடன் மேற்சாதி மதம் மாறிகளும் ஒக்க வகைப்படுத்தப்பட்டுள்ளனர். கைவன்மைத் தொழிலாக தகர வேலை செய்வோர் கிட்டத்தட்ட அனைவரும் முகம்மதியர்களே. கைத்தொழில் செய்வோர் அனைவரும் இடங்கைச் சாதியினர் என்று வகைப்படுத்தப்பட்டதால் இவர்கள் மதம் மாறி சாலியப் பள்ளர்கள், பறையர்களுடன் லெப்பைகளாகியுள்ளனர். இவர்களில் லெப்பைகள் தந்தையை வாப்பா என்றும் இராவுத்தர்கள் அத்தா என்றும் பட்டாணிகள் பாவா என்றும் மரக்காயர்கள் அப்பே என்றும் அழைக்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனோ என்னவோ கடந்த 1980களில் உருது பேசுபவனே உண்மையான முகம்மதியன் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. அதில் பெரும் பலன் கிட்டவில்லை. சிலர் உருது பேச முயன்றதைக் காண முடிந்தது. பின்னர் 1990களின் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வட்டாரத்தில் ஒரு மாபெரும் மாநாடு நடைபெற்றது. அங்கு செய்தியாளர்கள் செல்லத் தடை இருந்தது. பாதுகாப்புக்குக் காவல்துறையினரையும் உள்ளே விடவில்லை. உணவு, தேநீர் என்று அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொண்டனர். அங்கு, ‘முகம்மதியர்களுக்கென்று தனி நாடு கிடையாது, உலக முகம்மதியர்கள் அனைவருமே ஒரே தேசியத்தை, முகம்மதியத்தை, சேர்ந்தவர்கள்’ என்று வலியுறுத்தப்பட்டது. உள்நாட்டு மரபு என்று கண்டிப்பான முகம்மதியத்துக்கு எதிரான எதையும் கடைப்பிடிக்கக் கூடாது என்றெல்லாம் ‘மார்க்க’ அறிஞர்கள் சென்றிருந்தோரின் உள்ளங்களில் உருவேற்றினர். அங்கு சென்று வந்தவர்களில் பெரும்பாலோர் பின்னர் தாடி வைத்தனர், தொழுகைகளைத் தவிர்த்தோர் பலர் தவறாமல் தொழுகைக்குச் சென்றனர். பெண்கள் கருப்புத் துணியில் உடலை மூடும் முக்காடுகளை அணியத் தொடங்கினர்.


இந்த முக்காட்டு வரலாறு சுவையானது. சென்னையில் பட்டாணிகள் எனப்படும் பழைய அரசர் மரபினர் கண்களுக்கு மட்டும் வலைபோன்ற ஓட்டைகளைக் கொண்ட, முழுமையாக உடலை மறைக்கும் கருப்பு முக்காடுகள் அணிந்திருப்பதை 60களில் கண்டுள்ளேன். தஞ்சை மாவட்டம் பாவநாசம், குத்தாலம், கூத்தாநல்லூர் பகுதிகளில் முகத்தைத் திறந்து வைக்கும் வசதியுள்ள வெள்ளை நிற முக்காட்டைப் பார்த்துள்ளேன். மற்றப்படி தமிழகத்தில் நான் பார்த்தது பெரும்பாலும் முந்தானையால் தலைமுடியை மட்டும் மறைப்பதையே. இதில் ஒரு சுவையான நடைமுறையை நான் கடையநல்லூரில் கண்டுள்ளேன். அங்கு யாரும் திரைப்படம் பார்க்கக் கூடாது என்ற கட்டு லெப்பைகளிடையில் இருந்தது. தாழ்த்தப்பட்டோருக்கும் அத்தகைய கட்டுப்பாடு இருந்தது. இந்த மக்களை நம்பி மங்கள சுந்தரி திரையரங்கைக் கட்டிய இராவுத்தராகிய, நான் அங்கு இருந்த போது பல உதவிகளைச் செய்து நட்பு பேணிய முதலாளி இந்தத் தடையைச் சுட்டிக்காட்டி வருந்துவார். இந்த லெப்பைகளில் படித்து வெளியூர்களில் வேலை பார்ப்போர் ஊருக்கு வரும் போது இந்தத் தடையைத் தவிர்க்க மனைவியுடன் தென்காசி செல்வர். பேருந்து சிறிது தொலைவு சென்றதும் மனைவியின் தலைமீது போர்த்திய முந்தானை நழுவித் தோளில் விழும். தென்காசியில் திரைப்படம் பார்த்துப் பொழுது போக்கி திரும்பி வரும் வழியில் கடையநல்லூர் எல்லையைப் பேருந்து நெருங்கும் போதுதான் முந்தானை மீண்டும் தலைக்குத் திரும்பும்.


பாளையங்கோட்டையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வீட்டுக்கு மாடி கட்டும் பணியில் இருந்த போது அவரது மகள் எதிர்வீட்டுப் பெண்ணுடன் ஈருருளியில் செல்வாள். சுடிதார், சால்வை மட்டுமே அணிந்திருப்பாள். பெரும்பாலோர் முக்காடு அணிந்திருக்கும் போது உங்கள் மகள் இப்படிச் செல்கிறாளே என்று பெண்ணின் தாயிடம் கேட்டேன். பணம் வந்ததும் மினுக்குகிறார்கள் என்று குறைகூறுவார்கள் என்பதால் முக்காடு அணியவில்லை என்று அந்த அம்மையார் விடை கூறினார். அன்று செல்வநிலையின் குறியீடாக இருந்த முக்காடு இன்று அனைவருக்கும் பொதுவானதாக மாறிவிட்டது தெளிவு. இருப்பினும் கடும் வறுமையிலிருப்போரும் முதியோரில் பலரும் முந்தானையைத் தலையில் போர்த்தியே செல்கின்றனர்.


மதம், சமயம் என்பவற்றுக்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது முற்றும் முழுமையுமான அரசியல் நிறுவனமாகும். ஒரு குமுகத்தில் ஒரு காலகட்டத்தில் நிலவும் முரண்களுக்குத் தீர்வாய் ஒரு மேதைமை உள்ளம் முன்வைக்கும் குமுகம் - இயற்கை பற்றிய கோட்பாடு மதம் எனப்படுகிறது. அக் கோட்பாட்டை முன்வைக்கும் போது தவிர்க்க முடியாமல் உளதாகிய குமுக அமைப்பால் ஆதாயம் பெற்றுக்கொண்டிருக்கும் பூசகர் கூட்டம் முன்னிறுத்தும் எதிர்ப்பை எதிர்கொள்ள ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆக, ஒரு புதுக் கடவுள் உருவாகிறார். புத்தர், மகாவீரர் போல் தாம் எடுத்துக்கொண்ட சிக்கல்களுக்குள் கடவுள் வரவே இல்லை என்றும் கூறலாம். ஆனாலும் ஏசு உட்பட அனைத்து மத முன்னவர்களையும் இறை மறுப்பாளர்களென்று குற்றம் சாட்டியதை நாம் அறிவோம். ஆக கடவுளே தன்னைப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு மக்களுக்குத் தோற்றம் காட்டி அவர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்டுத் தம்மைத்தாமே அழித்துக்கொள்ள விடுகிறார் என்று நம்பும் எவரும் கடவுளுக்கும் மதங்ளுக்கும் தொடர்பிருப்பதாகக் கருதிக்கொள்ளலாம்.


வெளிப்படையான அரசியலை முன்வைத்துப் போராடுவதை விட கடவுளின் பெயரைக் கூறி அரசியல் நடத்துவதில் பெரும் ஆதாயங்கள் உண்டு. இதில் உணர்வுகள் மட்டுமே பங்கேற்பதால் பொருளியல் பங்கு குறித்த எதிர்பார்ப்புகள் பொதுமக்களிடமிருந்து வருவதில்லை. வெளிப்படையான அரசியல் நடத்துவோராக நம்பப்படுவோரான இன்றைய தேர்தல் கட்சிகளும் பொருளியல் கோட்பாடுகளைக் கையிலெடுக்காமல் மொழி, பண்பாடு, சாதி போன்றவற்றை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுவதைக் கூறலாம். திருவள்ளுவரையும் திருக்குறளையும் கையிலெடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் தருண் விசய்யும் அவர் பின்னால் ஓடும் சில ‘தமிழ்’ப் பெரிய மனிதர்களும் இன்றைய எடுத்துக்காட்டுகள். தமிழர் மனங்களில் ஆழ வேரூன்றி இருக்கும் தாழ்வுணர்ச்சிக்கும் இதில் முதன்மைப் பங்குண்டு


மதமும் சமயமும் துல்லியமாகப் பார்த்தால் வெவ்வேறானவை. மதம் என்பது கொள்கை, கோட்பாடு, மெய்யியல் எனப்பொருள் தரும் சொல். தமிழ் இலக்கணமான நன்னூல் கொள்கைகளைக் கையாளும் வகைகளை ஏழு மதங்கள் என்று கூறுவதைக் காணலாம்.


எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே


சமயம் என்பது அக் கொள்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும், சமைக்கப்படும் அதாவது அமைக்கப்படும் அமைப்பைக் குறிப்பதாகும். இத்தகைய ஒரு சொல் வேறுபாடு ஆங்கலத்திலோ சமற்கிருதத்திலோ இல்லை என்பது, நாம் அறியாத ஒப்புயர்வற்ற நம் மீப் பழம் நாகரிக உச்சத்தைக் காட்டுகிறது.


எந்த மதத்தினரும் தத்தம் சமய முன்னவர்களை விட்டுத் தூய கடவுளை மட்டும் வழிபடுவதே இல்லை. மோசே இன்றி யூதர் யகோவாவை வழிபடுவதில்லை. இயேசு இன்றி அவரது தந்தையான கடவுள் இல்லை. முகம்மதியர்கள் அல்லாவை ஒருமையில் அழைப்பதைப் பொறுத்துக்கொள்வர். ஆனால் நபியை ஒருவர் அவ்வாறு குறிப்பிட்டுத் தப்பிக்க முடியுமா? ஆதன்(ஆன்மா) இல்லாதவை(அனாத்ம மதங்கள்) என்று கூறப்படும் புத்த, அம்மண சமயத்தினர் கூட தத்தம் சமய முதல்வர்களைத் தெய்வங்களாகத்தானே வழிபடுகின்றனர்?


‘இந்து’ மதத்திலுள்ள எண்ணற்ற தெய்வங்களும் ஏதோவொரு வகையில் மனிதர்களாகிய தலைவர்கள், அரசர்கள், அருஞ்செயலாற்றியோரின் குறியீட்டு வடிவங்களே. பிள்ளையார் போன்று போர் யானை போன்றவையும் தெய்வமாகியுள்ளன (வைணவமாகிய மாலியத்தில் ஆனைமுகனை சேனைமுதலி என்றே அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது). அரக்கர்கள் அல்லது இராக்கதர்கள் என்று பழிக்கப்படுவோரில் பெரும்பாலோர் தெய்வங்களாக வழிபடப்பட்டு, வழிபட்டவர்கள் வெல்லப்பட்டு ஓடுக்கப்பட்டதால் அல்லது வரலாற்றுச் சூழல்களால் புறக்கணிக்கப்பட்ட பழங்காலத் தெய்வங்களே. எடுத்துக்காட்டுக்குத் தக்கன், மாவலி(மகாபலி) பாணாசுரன் ஆகியோரைக் கூறலாம். இயமன் வழிபாடு சிவன் வழிபாட்டால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒன்று(இன்றும் தென் மாவட்ட மக்களிடையில் இயமன் – காலசாமி வழிபாடு தொடர்கிறது). இங்கும் தெள்ளத்தெளிவான அரசியலைக் காணலாம்.


இன்றைய நிலையில் ஊர்ப்புற ‘சிறுதெய்வ’க் கோயில்கள் விரிவுபடுத்தப்பட்டு பார்ப்பனப் பூசாரியைக் கொண்டு பெரிய அளவில் குடமுழக்கு, ‘சம்ரோச்சணம்’ ஆகியவை நிகழ்த்தப்பட்டாலும் இன்னும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை திருவிழா என்ற பெயரில் ஊர் மக்களிடம், வீட்டிலுள்ள ஆடவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரக் கணக்கில் கட்டாயத் தண்டல் செய்து குடித்துக் கூத்தடிக்க ஊருக்கு ஓர் இளைஞர் படை கச்சை கட்டி நிற்கிறது. குடிக்கும் கஞ்சிக்கே அல்லாடும் ஏழைகள் கூட்டம் வகை வகையான நல்வாழ்வுத் திட்டங்களுடன் வெளிநாட்டுப் பணத்துடனும் கோயில் ஆட்சி எல்லைக்குட்பட்டோர் கோயில்களுக்குக் காணிக்கையாகச் செலுத்தும் பத்திலொரு வருவாய் பணத்தையும் கையாளும் கிறித்தவர்களின் பக்கம் சாய்வதை எப்படிக் குறை சொல்ல முடியும்? பெரும்பாலும் தாயால் தெருவில் அல்லது குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படும் குழந்தையை எடுத்து வளர்க்க குழந்தைப் பேறில்லா ‘இந்து’ப் பெற்றோர் விரும்பினாலும் என்ன சாதியோ என்ற கேள்வியுடன் அகன்றுவிட கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அத்தகைய குழந்தைகளை ஆர்வத்தோடு எடுத்து வளர்த்துத் தங்கள் சமயத்தார் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்வதையும், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி முதலியவற்றுக்குப் பொறுப்பேற்று வளர்த்துத் தம் மதத்தில் சேர்த்துக்கொள்வதை பணம் படைத்த முகம்மதியர்கள் குமுகக் கடமையாகச் செய்கிறார்கள் என்பதையும் எத்தனை பேர் அறிவர்?


பணத்தினவு எடுத்து குமரி முனையிலிருந்து திருப்பதி சென்று இலக்கம் இலக்கமாக உண்டியலில் கொட்டி மொட்டையும் போட்டுத் திரும்பும் பெரியோரிடம் அப் பணத்தை உங்களை அடுத்திருக்கும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு நல்வாழ்வு அமைக்கும் விதத்தில் செலவிட்டு மக்கள் அயல் மதங்களில் அடைக்கலம் புகுந்து அயலவர் கட்டுக்குள் போய்விடாமல் தடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்க ஒரு கணமாவது நம் ‘இந்து’த் தலைவர்கள் நினைத்ததுண்டா? சாதிகளை மறந்துவிடுங்கள், அனைத்து ‘இந்து’க்களையும் ஒன்றாக நடத்துங்கள் என்று ‘கவுரவக் கொலை’ செய்வோரிடம் எடுத்துரைப்பீர்களா? கலப்பு மணத்துக்கு எதிராக அணி திரட்டும் மரு.ச.இராமதாசு வகையறாக்களுக்க எதிராகக் கருத்துக் கூறுவீர்களா? கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பார்ப்பனர் ஆகிய சம்பந்தர் வாணிகப் பெண்ணை மணக்க முன்வரும் அளவுக்கு சாதிக்கு எதிரான கருத்து உருவாகியிருந்தது. ஆனால் அவர்கள் சமயப் பரப்பலின் பின்னணியில் ஆட்சியமைத்த பேரரசுச் சோழர்களைப் பற்றிக்கொண்டு நம் ‘இந்து’ப் பெரியவர்கள் முன்னைவிடக் கொடுமையான சாதி, வருண வகைப்பாட்டைப் புகுத்தவில்லையா? 12ஆம் நூற்றாடில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பூணூல் அணிவித்து சமற்கிருதமும் கற்பித்து தமிழ் வேதம் எனும் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களை மாலியக் கோயில் கருவறைக்குக் கொண்டு சென்றதை பின் வந்த வேதாந்த தேசிகர் கலைத்துப் போடவில்லையா? பனியா – பார்சி – வல்லரசியச் சுரண்டல்களால் அடித்தள மக்கள் என்றுமில்லா வறுமைக்குள் வீழ்ந்து கிடக்கும் இன்றைய சூழலில் சிலரை மீண்டும் ‘தாய்’ மதத்துக்குக் கொண்டுவந்துவிட்டதாகப் பிதற்றிக் கொள்வதில் பெருமையில்லை. நாளைக்கு உங்கள் பிறங்கடையினர்(சந்ததிகள்) முன் போலவே அவர்களை கொடுமைப்படுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?


இன்று இத்தகைய ‘மத’ மாற்றங்களில் ஆர்வத்துடன் ஈடுபடும் கவடறியாத பெரியோர்களுக்கு ஓர் உண்மையைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம். நம் இன்றைய ஆட்சித்தலைவர்கள் நாட்டை முற்றமுழுதாக அயலவர் கூட்டோடு தாம் பதுக்கிவைத்திருக்கும் கள்ளப் பணத்தை அயல் நேரடி முதலீடு என்றும் ‘இந்தியாவில் செய்வோம்’ என்றும் புதுப்புது முழக்கங்களடன் உள்ளிறக்கி நம் நாட்டின் விளைநிலங்களையும் காடுகளையும் மலைகளையும் எண்ணற்ற இயற்கை வளங்களையும் முந்தைய ஆட்சியாளர்களை விட முனைப்பாகக் கொள்ளையடிப்பதிலிருந்து சராசரிக் குடிமக்களின் கவனத்தைத் திருப்புவதறகே இந்த ‘மத’ மாற்றச் சிக்கலைக் கையிலெடுத்திருக்கிறார்கள், மதம் சார்ந்த கட்சிகள் தொடங்கி முற்போக்கு நாடகம் ஆடும் கட்சிகள் வரை அதற்குப் பின்னணி வழங்குகின்றனர் என்பதே அது. எனவே இவர்கள் கிளப்பும் புழுதி நம் பார்வையை மறைத்துவிடாமல் நம் நாட்டின் அனைத்து வளங்களும் நமக்கே உரிமை என்ற கண்ணோட்டத்திலிருந்து நழுவாமல் விழிப்புடனிருக்க வேண்டும் என வேண்டுகிறோம்.


சமயம் என்பது அரசியல் இயக்கம் என்றோம். அதை நம் முன்னோர் தெளிவாகவே வரையறுத்திருந்தனர். வருணன், இந்திரன், கொற்றவை, திருமால், முருகன் என்ற ஐந்து தெய்வங்களை வணங்கும் ஐந்து நிலங்களாகப் பண்டைத் தமிழகம் இருந்த போது ஒரு தெய்வத்தை வணங்கும் நிலப் பரப்பில் இன்னொரு நிலத்துக்குரிய தெய்வத்தை யாராவது வழிபடுவது தெரிந்தால் அங்கு ஆளுவோரின் அதிகாரிகள் சென்று அதற்கு முடிவு கட்டுவர் என்கிறது தொல்காப்பியம்,


மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே
-- தொல்., பொருள்., அகத்திணையியல், 30


நால்வகை நிலத்திலும் மக்களையல்லாத தேவரது பூசையும் விழவும் முதலாயினவும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்களும் முறைமையில் தப்பிய வழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும் செய்யப்பட்ட ஒள்ளிய பொருள் காரணமாகவும்(தலைவனின்)பிரிவுஉளதாம் என்று இளம்பூரணரால் இதற்குப் பொருள் கூறப்பட்டுள்ளது.


சமயங்களின் இந்த அரசியல் தன்மையைத் தெளிவாகப் புரிந்து செயல்பட்டவர் இந்திய அரசர்களில் மாமன்னர் அக்பர்தான். ஆப்கானியரான செர்சா சூரி உண்மையான சமயம் நடுநிலை தவறாத நயன்மைதான் என்று சமயச்சார்பின்மையைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தாலும் பிள்ளைப் பருவத்தை ஈரான் அரண்மனையில் தந்தையுடன் ஏதிலியாகக் கழித்த காலத்தின் பட்டறிவாலோ என்னவோ இந்த நாட்டுக்கு வெளியே திருத்தலத்தைக் கொண்டிருந்த அயல் மதமான முகம்மதியத்தை அவர் விரும்பவில்லை. மெக்கா செல்வதைத் தடை செய்ததுடன் தீன் இலாகி என்ற புதிய சமயத்தையும் அறிமுகம் செய்தார். அவருடைய இந்தச் செயலால் வெறுப்புற்றிருந்த முகம்மதியப் பூசகர்கள் பின்னாளில் ஔரங்கசீப்புக்குக் கல்வியளிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை ஒரு மத வெறியராக்கினர்.


சீனத்தில் மத மாற்றங்கள் நிகழவில்லை. அங்கு பிறப்படிப்படையிலான சாதிகள் இல்லை. அரசுப் பணியை யார் வேண்டுமானாலும் உரிய தேர்வை எழுதிப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு குத்தகை உழவன் பணம் சேர்த்தால் பண்ணையாரின் நிலத்தை வாங்கித் தானும் பண்ணையாராகலாம்.


சப்பானியர்கள் அயலவர்களையும் மத மாற்றங்களையும் பொறுத்துக்கொள்வதே இல்லை. போர்ச்சுக்கீசியர்கள் தமிழகத்தில் மத மாற்றம் செய்த அதே வேளையில் சப்பானிலும் குறுகிய காலத்தில் ஓரிலக்கத்துக்கும் அதிகமானோரை மத மாற்றினர். உள்ளூர்க் கோயில்களை இடித்தனர். அங்கு ஆட்சிக்கு வந்த ஒருவன் மத மாறிய ஓரிலக்கம் பேருக்கு மேற்பட்டோரை ஒரே நேரத்தில் கொன்றொழித்தான்.


19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கப் போர்க் கப்பல் ஒன்று சப்பானியத் துறைமுகம் ஒன்றில் குண்டுவீசி துறைமுகத்தைத் திறந்துவிட ஆணையிட்டது. அங்குள்ள சிற்றரசர்கள் ஒன்றுகூடி அப்போதைக்கு துறைமுகத்தைத் திறந்து அமெரிக்கர்கள் திணித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். அடுத்த கட்டமாக அங்குள்ள போர்ச் சாதியான சாமுரையைச் சேர்ந்த இருவர் அதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிற்றரசர்களில் வலிமையான ஒருவரின் கட்டுப்பாட்டிலிருந்த பேரரசருக்கு உண்மையான அதிகாரம் கிடைக்குமாறு சிற்றரசர் பதவிகளை ஒழித்து அங்கிருந்த நால் வருண முறையைச் சட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து பேரரசு மீட்பியக்கம் என்ற ஒன்றைத் தொடங்கினர். ஓக(தியான) மதமான சென் புத்த மதத்தைக் கைவிட்டு பண்டை வீர வழிபாட்டு மதமான சிண்டோயியத்தைப் புகுத்தினர். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று அங்கு பல துறைகளிலுமுள்ள வளர்ச்சி நிலைகளைக் கண்டு அவற்றில் தங்கள் நாட்டுக்குத் தேவையானவற்றைக் கடைப்பிடித்து மாணவர்களை அங்கெல்லாம் சென்று கல்வி கற்கச் செய்து இருபதே ஆண்டுகளில் சப்பானை ஓர் இற்றை(நவீன) நாடாக்கினர். பழைய ஒப்பந்தத்தை மாற்றி இருவரும் சம நிலையில் இருக்குமாறு புதிய ஒப்பந்தம் உருவாக்க அமெரிக்காவை வலியுறுத்தினர்.


நம் நாட்டுச் சிற்றரசர்களோ ஒரு சிறு துணிச்சலியர் கூட்டத்துடன் பாபர் நுழைந்த போது, கசினி முகம்மது போல் கோயில்களைக் கொள்ளையடித்துப் போய்விடுவான், தில்லியின் பாதுசாவின் கொட்டம் அடங்கிவிடும் போன்ற கணிப்புகளில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இங்கு சாதி ஒழிப்பிற்காகப் பாடுபட்ட பசவனின் புதிய இயக்கமாகிய இலிங்காயதத்தையும் சக்கிலியர்கள் அமைத்த ஓர் அரசையும் அழிக்கவே முகம்மதிய அரசில் மதம் மாறி படையில் இருந்த அரிகரன் புக்கனைப் பயன்படுத்தினார் இங்கிருந்த பார்ப்பனக் குரு வேதாரண்யர். இலிங்காயதர்களையும் சக்கிலியர்களையும் பயன்படுத்தி அயலவரும் அயல் மதத்தினருமான தில்லி ஆட்சியாளருக்கு எதிராக அவர்களைத் திருப்பியிருந்தால் இந்தியாவில் முகம்மதிய ஆட்சி அன்றே அழிந்திருக்கும். இன்று இங்கு மதப் பூசல் நம் வலிமைக்கு அறைகூவலாக இருந்திருக்காது. அது போல் இங்குள்ள போர்ச் சாதித் தலைமைகளும் தங்கள் குழு நலன்களுக்காக எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து உள்நாட்டுக்கு இரண்டகம் செய்வார்களே ஒழிய உள்நாட்டு மக்களோடு இணக்கம் கண்டு அயல் எதிரிகளைத் துரத்த முன்வரமாட்டார்கள். இந்த அவலம் இன்றும் தொடர்கிறது.


நம் ஆகமப் பூசகர்களும் ஒன்றும் குறைந்தவர்களில்லை. எந்த நாடு, மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் ஆட்சியில் அமர்ந்தவர்களுக்குப் பரிவட்டம் கட்டி ‘பூரண கும்ப மரியாதை’ செலுத்துவதற்குத் தயங்கியதில்லை. கோயில் பரத்தையர்களைக் கூட்டிக் கொடுத்தும் தங்கள் சாதி நலன்களைக் காத்துக்கொண்டனர்.


சப்பானைப் போல் தமிழகத்துள் மட்டும் அடங்கிய ஒரு வழிபாட்டுமுறை இன்று தமிழகத்தில் இல்லை. சிவனும் திருமாலும் முருகனும் காளியும் தமிழர்களின் தெய்வங்கள் என்று நாம் பெருமையடித்துக்கொள்ளலாம். ஆயினும் அவை அனைத்தையும் இமயத்தோடும் கங்கையோடும் யமுனையோடும் தொடர்பு காட்டிக் கதை எழுதி வைத்துள்ளனர். எனவே முற்ற முழுக்க தமழக எல்லைக்குள் அடங்கியதாகிய ஒரு புதிய சமயம் நமக்குத் தேவை. அதை மட்டுமே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது நம் தேசிய நலன்களுக்கு இன்றியமையாதது என்று தோன்றுகிறது. சப்பானைப் போல் சாதி, மொழி, இன வேறுபாடின்றி அனைவரையும் இணைப்பதும் தமிழகத்துள் மட்டும் அடங்கியதுமான ஒரு சமயம் உருவாகாதா என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.


பிற நாடுகளைப் பிடிக்கவும் மதம் மாற்றவும் என்றும் ‘இந்து’க்கள் முயன்றதில்லை என்றும் இரா.சு.சே.(ஆர்.எசு.எசு.) என்று பெருமையாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் குருமூர்த்தி 21 - 12 – 2014 தினமணி கட்டுரையில்(விவாதிப்போம் வாருங்கள்) என்று கூறுகிறார். அயோத்தியில் பாபர் பள்ளிவாசலை இடித்ததை எந்தக் கணக்கில் சேர்ப்பது? 8000 அம்மணர்களைத் தமிழ்நாட்டில் கழுவேற்றியதைப் போன்ற ஈவிரக்கமற்ற செயல் உலகில் எந்த மதத்தினர் பிற மதத்தினர் மீது நிகழ்த்தியுள்ளனர்? புலன்கள் வழியாக நாம் அறியும் அனைத்துமே மாயை என்று சாதியத்துக்குச் சப்புக்கொட்டிய ஆதிசங்கரன் புத்தக் கோயில்களை அழித்ததை எந்தக் கணக்கில் சேர்ப்பது? ஆமக வழிபாட்டுக்கு எதிராக வேதத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளும் வேதிய(வைதிக சமய)த்தை நிலைநிறுத்தப் போவதாகக் கிளம்பி இழிவான தோல்வியை அவன் சந்தித்த அவலத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பது? உள்நாட்டுச் சமயம் என்று இவர் உரிமை கொண்டாடும் புத்தத்தையும் அம்மணத்தையும் மட்டுமல்ல விரிவான வகைப்பாட்டில் பார்ப்பனியச் சார்பான ஆகம வழிபாட்டையே பொறுத்துக்கொள்ளாத இவர்கள், காஞ்சிபுரத்தில் வரதராசப்பெருமாள் தேர்வலத்தின் போது தடிகள் கொண்டு தாக்கியும் கல்வீசியும் கொலைத்தாக்குதல்களில் ஈடுபட்ட, நாமம் போடும் உரிமைக்காக நய மன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி மானமிழந்த ‘மொட்டை’ நாமக்காரர்களும் ‘பாத’ நாமக்காரர்களுமான(வடகலை, தென்கலை)ப் பார்ப்பனர்களாகிய ஐயங்கார்கள், உலகின் தலைசிறந்த சமயப் பொறையாளர்களாம்! உலக வரலாற்றிலேயே மாறா இழிவைப் பதிய வைத்துள்ள இவர்கள் எவ்வளவு துணிச்சலாக இந்தப் பொய்களைக் கூறுகிறார்கள் பார்த்தீர்களா? இவர்களின் நாவுக்குக் கூச்ச உணர்வு கிடையாது என்பதற்கு இதுவன்றி வேறு சான்று எதுவும் தேவையில்லை.


‘இந்து’க்கள் என்றுமே அயல் நாடுகளைக் கைப்பற்ற விரும்பியதில்லையாம்! ‘இந்து’ என்ற சமயப் பெயரும் இந்தியா என்று ஓர் அரசியல் நிலப்பரப்பும் அயலவனான ஆங்கிலன் காலத்துக்கு முன்பு வரை உலகில் எங்கே இருந்தது? இந் நிலப்பரப்பின் மீது அவ் வப்போது படையெடுத்துக் கொள்ளையடித்தவர்களும் நாடு பிடித்தவர்களும் வாணிகக் கொள்ளையடித்தவர்களும் தங்கள் வசதிக்காக வைத்த பொதுப் பெயர்கள்தாமே அவை. (கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து ஆற்றுப் படிகைப் பரப்பைக் கைப்பற்றிய பேரரசுப் பாரசீகர்களுக்கு தங்கள் மொழி மரபுக்கேற்ப வைத்த பெயரே இந்து என்பது.) இங்குள்ள எண்ணற்ற ‘தேசங்கள்’(56 தேசங்கள்) ஒன்றுக்கொன்று ஓயாமல் போட்ட சண்டைகள்தானே ‘இந்திய’ வரலாறு. அப்படியிருக்க அயலவர் ஒரு ‘தேசத்’தின் மீது படையெடுக்கும் போது அடுத்த ‘தேசத்’தவர் வேடிக்கை பார்த்ததும் படையெடுப்பாளர்களுக்கு உதவியதும்தானே இயல்பாக இருந்தது? வெள்ளையர் ஒவ்வொருவராக இங்கு நாடு பிடித்த போதும் இறுதியில் ஆங்கிலர் அனைத்தையும் விழுங்கிய போதும் நிகழ்ந்தவை விலாவாரியாக அதைத்தானே விளக்குகின்றன!


‘இந்து’ ஒற்றுமை பற்றி வாய் கிழியக் கூச்சல் போடும் பெரியவர்களிடம் இறுதியாக ஒரேயொரு கேள்வி, ‘இந்து’ ஒற்றுமைக்கு ஒரே இடையூறாக இருக்கும் சாதியத்தின் அடையாளமான பூணூலை அதை அணிந்திருக்கும் ‘ஒற்றுமைப் போராளிகள்’ மக்கள் முன் மேடை போட்டு கழற்றி எறிந்து பிறருக்கு முன்னோடிகளாக இருப்பார்களா? சங்கராச்சாரியாரோடு நாற்காலியில் சமமாக உட்கார்ந்திருக்கும் சுப்பிரமணியம் சாமி போல் நடுவமைச்சர் பொன். இராதாகிருட்டினன் உட்காருவாரா?
.

0 மறுமொழிகள்: