4.5.09

முதலாளியமும் வல்லரசியமும் .....4

பெருமரபு முதலாளியம் (Clasical Capitalism)

முதலாளியம், வல்லரசியம் என்ற இந்த வகைப்பாட்டைப் பற்றிய ஓர் உரையாடல் 1982 இல் வெங்காளூரில் குணாவின் தோழர்களின் முயற்சியில் நடைபெற்ற ″தேனீக்கள் பட்டறை″ என்ற நிகழ்வில்ர நான் அப்போதுதான் முதன்முதல் சந்தித்த சத்தியமங்கலம் எசு.என்.நாகராசன் (இவர் தமிழகப் பொதுமை இயக்கத்தினுள் தமிழகத் தேசிய விடுதலைக் கருத்தை முதன்முதலில் முன்வைத்தவன் தான்தான் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்), கோவை ஞானி ஆகியோரின் தனி உரையாடலில் வெளிப்பட்டது. வல்லரசியத்துக்குப் புறம்பான முதலாளியத்தை பெருமரபு முதலாளியம்(Classical Capitalism) என்ற சொல்லால் குறிப்பிடுவதை நான் அங்குதான் அறிந்தேன். ஆனால் பின்னால், எசு.என். நாகராசனின் நடவடிக்கைகள் அணைத்துக் கொடுப்பவை என்று தெரிந்தது. ஞானி அவர்களோ இன்று வல்லரசியத்தையும் முதலாளியத்தையும் ஒன்றாகவே காட்டி தான் முதலாளியத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ″தமிழ்″ மேடைகளில் முழங்கிவருகிறார். நாகராசனைத் தன் கொள்கை ஆசான் என்று தான் கருதுவது போல் எனக்குத் தோற்றம் தந்துள்ளார்.

தமிழ்ப் பற்று காட்டுபவர்களைப் பெருமளவில் பகடி பேசியவர் இவர். இன்று இவரும் பெருஞ்சித்திரனார் குடும்பமும் அ.மார்க்சும் சேர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகவும் தமிழுக்காகவும் உயிரை விடப்போவதாகச் சொல்ல வேண்டியதுதான் குறை.

″மார்க்சியர்″களைப் பொறுத்தவரை, மார்க்சோடு பொருளியல் சிந்தனைகள் முற்றுப்பெற்றுவிட்டது. அதனால் மனித வரலாறும் அத்துடன் தேங்கிப்போய்விட வேண்டியதுதான். வேறெதாவது நடந்திருந்தாலும் அது வெறும் மாயை. எனவே கெயின்சு என்று ஒருவர் அவர்களைப் பொறுத்தவரை உலகில் பிறக்கவுமில்லை, வாழவுமில்லை.

ஆக, இதுவும் ஒரு சமயமாக இறுகிப் போய் விட்டது. முகம்மதியத்தில் ஒரு புதிய கிளையாக அகமதியம் என்பது பற்றி நாம் குறிப்பிட்டோம் (அக்டோபர் 2008 தமிழினி). அது பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சி. நெல்லையில் வாழ்ந்த ஒரு முகம்மதியர் சென்னை சென்றிருந்தாராம். அண்ணா சாலையில் சென்ற போது நண்பகல் தொழுகைக்கான அழைப்பொலி கேட்டு ஒலிவந்த பள்ளிவாசலில் சென்று தொழுகையில் ஈடுபட்டாராம். சிறிது நேரத்தில் அவருக்குப் புரிந்துவிட்டது, தாம் அகமதியா பள்ளிவாசலுக்கு வந்திருப்பது. தொழுகை முறையிலுள்ள வேறுபாட்டை அவர் உணர்ந்தது போல் அங்கிருந்தவர்களும் இவரைப் பொறுத்து உணர்ந்து கொண்டனர். அரக்கப் பரக்கத் தொழுகையை முடித்து வெளியே வந்தவர் பள்ளிவாசலைத் திரும்பிப் பார்த்திருக்கிறார். அங்கே அவர் அமர்ந்து தொழுகை நடத்திய இடத்தை மட்டுமல்ல முழுப்பள்ளிவாசல் தளத்தையும் விறுவிறுவென்று கழுவிக் கொண்டிருந்தார்களாம். அவ்வளவு பெரிய ″தீட்டு″

நம் மார்க்சியர்களும் கெயின்சை இவ்வாறுதான் பார்க்கின்றனர் என்று நம்மால் கூற முடியாது. அவர்களின் எத்தனை பேர் அவரை அறிந்திருக்கிறார்களோ நாம் அறியோம். அப்படி அறிந்தால் நாம் மேலே முகம்மதியம் - அகமதியம் போன்ற வெறுப்புணர்ச்சியுடன்தான் பார்ப்பர். கெயின்சு மார்க்சைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் என்ன கூறினார் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் மார்க்சைப் போலவே அவரும் ″இயற்கை தன் வழியில் செல்லட்டும்″(Laisses-faire)கோட்பாட்டை எதிர்த்தார். அதே வேளையில் மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின்படி மீந்து போகும் பண்டங்களாலும் அதன் விளைவான பட்டினிச் சாவுகளாலும் எதிர்பார்க்கப்பட்ட பொதுமைப் புரட்சியின் வாய்ப்பு கெயின்சால் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் வேறு வழிகளில் அதற்கான சூழல் உருவாகியது என்னவோ உண்மை.


வல்லரசு நாடுகளில் முதலாளியத்தின் அடிப்படைக் கட்டமைப்பான பெருந்தொழில்கள், பெரும் பண்ணைகள், அவற்றுக்குள் மிகப் பெரும்பான்மை மக்களும் தொழிலாளர்களாக ஒன்று திரளுதல் என்ற நிகழ்முறையில் தொழிலாளர்களுடைய பகரம் பேசும் திறன் அளவின்றிப் பெருகியது. பங்குச் சந்தை முறையால் தனிப்பட்ட முதலாளி முகமிழந்துவிட்டான். இயக்குநர் குழுவும் மேலாளர்கள், அதிகாரிகள் என்ற நிலையில் முதலாளி ஒரு அருவமாக மாறிக்கொண்டிருந்தான். இந்தச் சூழலில் தொழிலாளர்கள் தங்களுக்குத் தொழிற்சாலைகளில் பங்குகள் வடிவிலான பங்கேற்பைக் கேட்டனர். அது செயலுக்கும் வந்துகொண்டிருந்தது. மார்க்சு கூறிய பொதுமை நெருங்கிக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்கான வல்லரசுகளின் முயற்சிக்குத் தோதாக இருந்தது ″ஏழை″நாடுகளிலிருந்து அவற்றின் தலைவர்களும் அதிகாரிகளும் பதுக்கி வைத்திருந்த பணமும் வல்லரசு நிறுவனங்களில் இட்டிருந்த மூலதனமும். அவைதாம் உலகளாவுதல் என்ற நடைமுறைக்குத் தோற்றுவாயாகவும் நேரடி அயல் முதலீடு என்பதன் உட்கருவாகவும் இருக்கின்றன. இப்படிக் கூறுவதனால் ″ஏழை″ நாடுகளின் தலைவர்களுக்கு என்று தனித்தன்மையுடன் கூடிய முதலீடுகளும் தொழில்முனைவுகளும் இருப்பதாகப் பொருளாகாது. அவர்கள் அனைவரும் உலக வல்லரசியத்துடன் இரண்டறக் கலந்துள்ளார்கள். இருப்பினும் வல்லரசுகளை இருப்பிடமாகக் கொண்ட பொருள் வல்லரசுகளுக்கும் நம் ஆட்சியர்களாகிய ஊழல் வல்லரசியர்களுக்கும் முரண்பாடுகள் இல்லாமல் இல்லை. அவை ″வாணிக″ மாநாடுகளில் ஒவ்வொரு முறையும் ஒலிப்பதை நாம் காணலாம். தெற்கு உலகம் என்றும் கீழை உலகம் என்றும் மூன்றாம் உலகம் என்றும் வளரும் நாடுகள் என்றும் அவற்றுக்கான உரிமைகள் என்றும் அந்நாடுகளில் ″நம்″ தலைவர்கள் முழங்குவதே தங்கள் நலன்களுக்காகத்தான். தங்கள் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அயல்நாடு சென்று மாநாடுகளில் கலந்துகொண்டு தங்கள் நலன்களுக்காக இவர்கள் வாதாடி வருகின்றனர். இந்த உண்மையை எந்த அரசியல் கட்சியும், குறிப்பாக ″புரட்சி″ பொங்கிவழியும் பொதுமைக் கட்சியின் அனைத்து வகையினரும் கூட வெளிப்படுத்துவதில்லை. முதலாளியத்தின் கைக்கூலிகள், வல்லரசியத்தின் அடிமைகள், நாட்டை விலை பேசிவிட்டார்கள் என்று பொதுப்படையாகவே பேசுகின்றனர்.

சிறப்புப் பொருளியல் மண்டலம் என்பது உட்பட நம் நாட்டின்(சீனத்திலும்தான்) தொடங்கப்படும் பல்வேறு வளாகங்களில், அவற்றில் கையெழுத்திடும்போது நம் ஆட்சித் தலைவர்களுக்குக் கிடைக்கும் பங்கு மூலதனத்துடன் அந்த நிறுவனத்தில் ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் பங்குகளும் சேர்ந்துகொள்கின்றன. ″புரிந்துணர்வு″ ஒப்பந்தங்களின்படி இந்த வளாகங்களுக்குத் தடை இல்லாத மின்சாரம், குடிநீர் தரத்திலான தண்ணீர் எல்லாம் வழங்க வேண்டும். இவ்வாறு நாட்டின் சராசரி குடிமகனுக்கு எட்டாத அளவுக்கு நிலப்பரப்பு, முதலீட்டு வாய்ப்புகள், அவர்களது தேவைப்பாடுகளைப் பறித்துக் கட்டமைப்புகளையும் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் தமக்கு மட்டுமே பயன்படுத்தல் என்று பொருளியல் மற்றும் ஊழல் வல்லரசியம் நம் ஒவ்வொருவரின் வீட்டினுள்ளும் புகுந்து மடிபறித்து நிற்கிறது.

பங்கு முதலீட்டில் முற்றாளுமை:

பங்கு முதலீடு என்பது நாம் குறிப்பிட்டது போல் பங்காளிகள் சேர்ந்து தொழில்களைத் தொடங்கி அவை நொடித்துப்போனால் தம் மொத்தச் செல்வத்தையும் இழக்கும் நிலையைத் தவிர்க்க, தம் முதலீட்டு அளவுக்கு இழப்பை எல்லைப்படுத்தி அதனைப் பங்கீட்டாளருடன் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் முதலாளியத்தின் வளர்ச்சியோடு தோன்றி வளர்ந்தது. அவ்வாறு முதலிட்டவர்களில் ஒருசிலருக்கு உடனடியாகப் பணம் தேவைப்படும் போது அவர் தொழில் முனைவாளரிடம் போய் நின்றால், அல்லது போட்டியாளர் ஒருவர் பங்கீட்டாளர்களைத் தூண்டிவிட்டால் அல்லது நிறுவனத்துக்கு ஒரு சிறு இடையூறு நேர்ந்தவுடன் பங்கீட்டாளர்கள் தங்கள் தங்கள் முதலீட்டைக் கேட்டு வரிசையில் வாசலில் நின்றால் என்னாவது? அதனால்தான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற தரகாண்மை உருவானது. அதாவது நிறுவனத்தின் உள் நிகழும் சிறு சிக்கல்கள் பங்கு முதலீட்டாளர்களிடையில் ஏற்படுத்தும் எதிர்வினையால் நிறுவனத்தை முற்றிலும் வீழ்த்துவதாக மாறிவிடக் கூடாது என்பதுதான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை தோன்றியதன் பின்னணி.

ஆனால் முதலீட்டாளர்களின் பதற்றங்களிலிருந்து நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கென்று உருவான இந்தப் பங்குச் சந்தை, பங்கீட்டாளர்களுக்கு உரிய ஆதாயப் பங்கை நிறுவனங்கள் பெருமளவில் சுருட்டுவதற்கும் பங்கு முதலீடு என்ற கோட்பாட்டுக்குப் புறம்பாக குமுகச் செல்வத்தை நிறுவன முனைவாளர்கள் தங்கள் கைப்பற்றுக்குள் கொண்டுவருவதற்கும் அதைவிடப் பல மடங்கு குமுகச் செல்வம் பங்கு வாணிகம் எனும் சூதாட்டத்தினுள் சென்று விழுவதற்கும் வழியமைத்தது.

ஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் எத்தனை மடங்கு விலைக்கு நீங்கள் வாங்கியிருந்தாலும் உங்களுக்கு நிறுவனம் தரும் ஆதாயப் பங்கு அதன் முகவிலையின் நூற்றுமேனியில்தான். 10 உரூபாய் பங்கு உரூ 500/க்குச் சந்தையில் விற்கலாம். ஆனால் 100% ஈவு வழங்குவதாக நிறுவனம் அறிவித்தால் உங்களுக்கு உரூ10/-தான் கிடைக்கும். எனவே நீங்கள் கொடுத்த விலைக்கு உரிய வட்டி அல்லது ஆதாயம் வேண்டுமென்றால் விலை கூடும்போது சந்தையில் உங்கள் பங்கைக் விற்க வேண்டும். தொடர்ந்து வாங்கி விற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது பண நெருக்கடி என்றால் அப்போதைய சந்தை விலையில் உங்கள் தேவைக்கேற்ற பகுதியை விற்றுக் கிடைத்தது ஆதாயம் என்று அமைய வேண்டியதுதான்.

உங்கள் பங்குக்குரிய நிறுவனமோ தன் ஆண்டைய நிகர ஆதாயத்தில் கிட்டத்தட்ட 80%க்கும் குறையாத அளவுக்கு ஒதுக்கம் அல்லது ஏமம் (Reserve) என்ற பெயரில் தன் கையில் வைத்துக்கொள்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்கள், எதிர்பாரா இழப்புகள், வளர்ச்சி என்ற பெயர்களில் அது ஒதுக்கும் தொகை முதலீட்டாளர்களை ஏமாற்றி முனைவாளர்கள் சுருட்டிக் கொள்வதாகும். மொத்தப் பங்குகளின் முகமதிப்புக்கும் நிறுவனத்தின் மொத்தச் சொத்துக்கும் ஒரு இயைபு இருக்க வேண்டும். இல்லை என்றால் பங்கீட்டாளர்களுக்கு உரிய பங்கைப் பணமாகவோ இலவயப்பங்குளாகவோ வழங்கி அதைச் சரிக்கட்ட வேண்டும் ஆனால் இரண்டுமே நடைபெறுவதில்லை.

இதைவிடப் பெரிய கொடுமை ஒரு குறிப்பிட்ட முகமதிப்புள்ள பங்குகளை அதைப் போல் பல மடங்கு விலைக்கு நிறுவனமே பட்டியலிடுவது. ஒரு இந்திய அரசுடைமை வங்கி சில ஆண்டுகளுக்கு முன் உரூ10/- முகமதிப்புள்ள பங்குகளை உரூ 70/- விலைக்கு வெளியிட்டது பங்கு ஒன்றுக்கு முகமதிப்புக்கும் வெளியீட்டு மதிப்புக்குமான இந்த உரூ60/- வேறுபாடு எந்த வகையில் எப்படி கணக்கு வைக்கப்படும்? அது யார் யாருக்குப் போய்ச் சேரும்? இந்தக் கேள்வியே எங்கும் எவரும் எழுப்பவில்லை. நம் மக்களின், குறிப்பாகப் பங்குச் சந்தையிலே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கும் வல்லுநர்கள் கூட எதுவும் கூறவில்லை. தொடக்கத்தில் 7 மடங்காக இருந்த இந்த விகிதம் பிற நிறுவனங்களால் உயர்ந்து கொண்டே போகிறது.

நம் பொதுமைத் தோழர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. ″ஓம் மார்க்சாய நமக″, ″ஓம் லெனினாய நமக″ ″ஓம் மாவோயாய நமக″, ″ஓம் காசுட்டுரோவாய நமக″, ″ஓம் சேகுவராய நமக″,″ஓம் தமிழரசனாய நமக″, ″ஒம் அம்பேத்காராய நமக″, ″ஓம் திருவள்ளுவராய நமக″, ″ஓம் திருக்குறளாய நமக″, ″ஓம் பெரியாராய நமக″, ஓம் பாவாணராய நமக″, ″ஓம் பெருஞ்சித்திரனாராய நமக″ ″ஒம் பக்தவத்சலமாய நமக″, ″ஓம் சிறுபான்மையினராய நமக″ (இந்தச் சிறுபான்மையினரில் பார்ப்பன - பனியாக்கள் அடக்கப்பட்டுள்ளார்களா என்பது மந்திர உச்சடனம் செய்கிறவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை), ″ஓம் பண்பாட்டுப் புரட்சியாய நமக″.

இந்த நாமாவளியில் ஏங்கெல்சின் பெயரை மட்டும் நம் புரட்சி பொங்கி வழியும் தோழர்கள் கூறுவதில்லை. ஏனென்றால் மார்க்சை நேரடியாகக் குறைசொல்லத் துப்பற்றவர்கள் ஏங்கல்சின் மூலமாகத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். இதை லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் மார்க்சும் ஏங்கல்சும் தங்கள் ஒவ்வொரு ஆக்கத்தையும் இருவரும் கலந்து முடிவெடுத்துத்தான் அச்சுக்குக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை.

17 ஆண்டுக்காலம் நூல் நிலையத்திலேயே அடைந்து கிடந்த மார்க்சின் பணத் தேவைகளை நிறைவேற்றியவர் ஏங்கெல்சு. எண்ணற்ற படைப்புகளை மார்க்சுடன் இணைந்தும் தனித்தும் எழுதியுள்ள அவர் போர்க் களத்திலும் இருந்துள்ளார், பணமும் ஈட்டியுள்ளார். மார்க்சுக்குத் தேவைப்படும் நூல்களையும் ஆவணங்களையும் திரட்டியும் தந்துள்ளார். பல்வேறு திறன்கள் கைவரப் பெற்ற ஒரு மாபெரும் வரலாற்று மனிதர் அவர்.

பங்கு முதலீட்டின் இந்தச் சிக்கல்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எம்மைப் பொறுத்தவரை முன்வைக்கும் தீர்வு என்னவென்றால், ஒரு தொழிலைத் தொடங்க விரும்பும் முனைவாளர் தான் பட்டியலிடத் திட்டமிட்டிருக்கும் தொகைக்குச் சமமாக, அல்லது பட்டறிவிலிருந்து அக்குமுகம் எய்தும் ஒரு விகிதத்தில் ஒரு நிலை வைப்பை, அரசு நிறுவும் ஒரு நிலையான அமைப்பில் ஈடுசெய்ய வேண்டும். நிறுவனம் ஆண்டுதோறும் ஈட்டும் ஆதாயத்தில் உரிய பங்கைப் பணமாகவோ இலவயப் பங்குகளாகவோ வழங்கி நிறுவனத்தின் உண்மையான சொத்துக்களை விட பங்குகளின் மொத்த விலை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலவயப் பங்குகள் வழங்கும்போது அவற்றுக்கு ஈடாக நாம் மேலே கூறிய நிலை வைப்பில் செலுத்த வேண்டிய தொகைக்கு முன்னமைவு செய்த பின்னர்தான் வழங்க வேண்டும். புதிய பங்குகள் வெளியிடும் போதும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இரண்டாம் நிலை பங்குச் சந்தை தேவையில்லை. தேவையானால் தொழில் நிறுவனங்கள் தம் நிறுவனப் பங்குகளை விற்க வருவோருக்கும் வாங்க விரும்புவோருக்கும் அவற்றில் உதவுவதற்கான துணை நிறுவனங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலை வைப்புகளுக்கான பணம் செயற்படாத மூலதனமாகத் தேங்கிக்கிடக்காதா என்றொரு கேள்வி எழலாம். இன்று மூலதனப் பங்குகளை வெளியிட்டு மூலதனம் சேர்த்துச் செயற்படும் உலகின் அனைத்து நிறுவனங்களினதும் மொத்தச் சொத்து மதிப்புக்கும் கூடுதலான பணம் இரண்டாம் நிலை பங்குச் சந்தை என்ற சூதாட்டத்தில் புழங்குகிறதே, அதை இவ்வகையில் திருப்பி விடலாமே. எந்த நோக்கத்துக்காக இந்த இரண்டாம் நிலை பங்குச் சந்தை உருவானதோ அதற்கு எதிரானதொரு திசையில் அது சென்று கொண்டிருப்பதால் வரலாற்றிலிருந்து பாடம் பெற்று இப்புதிய முறையைக் களத்தில் இறக்கலாமே!

இவை தவிர, ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வரம்புக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மொத்த மதிப்பில் பாதிக்கும் கூடுதலான முதலீட்டைப் பங்கு முதலீடாகவே திரட்ட வேண்டும் என்று வரையறுக்க வேண்டும்.

வங்கிகளைப் பொறுத்தவரையில் அது தொழில்களுக்கு முதலீட்டுக் கடன் கொடுப்பது கூடாது. சேமிப்புகள், சிறுவைப்புகள், பட்டியல் செல்லாக்குதல், பணத்தை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்றுதல், நகைக்கடன், வீட்டுக் கடன், ஊர்திக் கடன் போன்ற சிறு கடன்கள் வழங்குதல், உள்ளூராட்சிகளுக்கான கட்டணங்கள், மின்கட்டணம், தொலை பேசிக் கட்டணம் போன்றவை செலுத்துதல் என்ற அளவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது நாம் சில ஆண்டுகளுக்கு முன் வரையறுத்த ஒரு திட்டம். அமெரிக்காவில் தொடங்கிய இன்றைய நெருக்கடியைப் பற்றி அலசும் ஒரு கட்டுரை தரும் சில செய்திகள் இதனோடு ஒத்துப் போவதைப் பார்க்கலாம்.

"It is just as impartant that business keep out of government as that government keep out of business"

Herbert Hoover, Republican President of America between 1929, and 1933, the era of notorious in history as the Great Depression. (Quotation in Business Economy, 19 September to 2 October P.64)

(தொழில்-வாணிகத்துறை அரசில் தலையிடாமலிருப்பது எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது அரசு தொழில் - வாணிகத்துறையில் தலையிடாமலிருப்பது. சொன்னவர் பெரும்பெயர் பெற்ற மாபெரும் பொருளியல் வீழ்ச்சி ஊழியாகிய 1929 முதல் 1933 வரை அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கடியரசுத் தலைவர் எர்பர்ட்டு ஊவர்)

ஒருவேளை, அரசு தொழில் - வாணிகத்தில் தலையிடாமலிருக்கலாம். ஆனால் தொழில் - வாணிகம் அரசில் தலையிடாமல் இருப்பது கிடையாது என்பது உண்மை. எனவே மேலேயுள்ள இந்த முழக்கமே தொழில் - வாணிக குழுக்களின் முழக்கம் என்பது உறுதி.

ஊவரின் இந்தக் கருத்தை உடைத்து, கெயின்சின் தலையிடும் கொள்கையை ஏற்றுச் செயற்பட்டு, உலகப் பொருளியலில் ஒரு புதிய பார்வை பரவலான ஏற்பைப் பெற வழிவகுத்தவர் அவரை அடுத்து பதவிக்கு வந்த பிளங்கிளின் டி.ருசுலெட்டு. கிளாசு டீகால் சட்டம் (Glass - Steagall Act) மூலம் வாணிக வங்கிளையும் முதலீட்டு வங்கிளையும் தனித்தனியாகப் பிரித்தார். ஒரே வங்கி இரு பணிகளிலும் ஈடுபடுவதைச் சட்டம் தடைசெய்தது.

அதை உடைக்க 1988, 1996 ஆண்டுகளில் குடியரசுக் கட்சி இருமுறை முயன்று தோற்றது. ஆனால் 1990இல் அமெரிக்க ஏம வங்கித் தலைவர் ஆலன் கீரிசுப்பான் என்பவர் ஒரு வாணிக வங்கிக்கு உறுதி ஓலைகளை (Securities) வழங்கும் அதிகாரம் வழங்கி இதை உடைத்தார். பின்னர் 1999இல் கிராம் - லீக் - பில்லி சட்டம் வந்து கிளாசு டீகால் சட்டத்தின் பகுதிகளை அகற்றிய பின் அனைத்துமே மாறின. இந்தச் சட்டத்தின்படி, ″வீழ்ச்சியடைய முடியாத அளவுக்குப் பெரிய பண நிறுவனங்களி″டமிருந்து பணவியல் கட்டமைப்பையும் பண்டுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அடிப்படுத்தபட்ட கடன்களைப் பயன்படுத்தலாம்.
[1] அடிப்படுத்தப்பட்ட கடன் என்றால் ஈடு -> மறுஈடு -> மறுஈடு என்று செல்வது. எடுத்துக்காட்டாக, செருமன் மக்களில் பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை அல்லது ஓய்வூதியப் பலன்களை அமெரிக்கப் பண நிறுவனங்கள் வழங்கிய சான்றுகளின் மீது பணம் கொடுத்து உறுதிச் சான்றுகளைப் பெற்று ஏமாந்துள்ளனர்.

பணம் என்பது ஒரு நிழல். பண்டங்கள் அல்லது பணிகளின் நிழல். ஒருவனிடம் ஒரு மாடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரு செங்கல் சூளைக்காரரிடம் கொடுத்து 5 வண்டி செங்கல் வாங்குகிறான். செங்கல் சூளைக்காரன் தன் மனைவிக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டும் என்பதற்காக ஒரு பட்டுச் சேலை நெய்வோனிடம் மாட்டைக் கொடுத்துவிட்டுச் சேலையைப் பெற்றுச் செல்கிறான். இவ்வாறு மாடு கைமாறிக் கொண்டே இருக்கும்.

மாடானதால் அதுவாகவே நடந்து சென்று விடும். மாறாகச் செங்கல் சூளைக்காரனுக்குப் பட்டுச் சேலை வேண்டுமானால் அவன் 5 வண்டிகளில் செங்கல்லை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். பட்டுச் சேலைக்காரனுக்கு நெல் வாங்க வேண்டுமென்றால் அந்தச் செங்கல்லை அவன் வண்டியிலேற்றிக் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு சந்தை இருந்தால் இந்தக் கொடுக்கல் வாங்கல், அதாவது பகருதல்((Barter) எளிதாக இருக்கும். ஆனால் பணம் போன்று சுமை குறைந்த ஒரு பொருள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

மாடு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்ற பொருளுண்டு. மாடல்ல மற்றயவை என்ற வள்ளுவர் சொல்லாட்சியும் உள்ளது.

உப்பு ஒரு காலத்தில் பண்டமாற்று ஊடகமாக இருந்தது என்ற கருத்து உள்ளது. ஆனால் கொண்டு செல்லும் வழியில் மழை வந்து நனைந்தால் அது கரைந்து இல்லாமல் போய் விடுமே! அதைத் தவிர்க்க எந்த உத்தி கையாளப்பட்டிருக்கும் என்ற பெருங்கேள்வி அந்த வாய்ப்பை மறுதலிக்கிறது.

இறுதியில் பொன் அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. அதன் சந்தை விலைக்கும் பண்டமாற்று மதிப்புக்கும் முதலில் தொடர்பிருந்தது. நாளாவட்டத்தில் அந்தத் தொடர்பு அறுந்து நாணயம் ஒரு அடையாளமானது. அப்போதே பணம் அல்லது நாணயம் பண்டங்களின் அல்லது பணிகளின் நிழலாகியது.

பணத்தைப் பண்டங்களின் பண்டம்(Commodity of commoditive) என்பார் மார்க்சு. நாணயம் தாள்பணமாக மாறிய போது முழுமையான நிழலாகப் பணம் மாறிவிட்டது. இந்தப் பணத்தை ஒரு வங்கியில் கொடுத்து அதற்கு ஒரு சான்றிதழைப் பெற்றுக் கொண்டால் அந்தச் சான்றிதழ் நிழலின் நிழலாகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம் உடைந்து போனால் அந்தச் சான்றிதழ் வெறும் தாளாகிப் போகிறது. பணத்தாளுக்கு நாட்டின் அரசு பொறுப்பேற்றுள்ளது போன்ற பொறுப்பேற்பு அரசின் பொறுப்பேற்றைப் பெறாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களுக்கு இல்லை என்றால் இதுதான் முடிவு. அமெரிக்க அரசு அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை.

அங்கே பெரும் சிக்கலை உருவாக்கியுள்ள வீட்டுக் கடன்கள் இது போன்ற சான்றிதழ்களைப் போன்றவை அல்ல. வீடுகளை விற்றுப் பணத்தை உடனடியாக மீட்க முடியாமைதான் உண்மையான சிக்கல். ஆனால் அத்தகைய பத்திரங்களையும் குறைந்த விலைக்கு வாங்கி ஆதாயம் பார்க்கச் சில பண நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம். இவை நீண்டகால அடிப்படையில் செயற்படும் நிறுவனங்களாக இருக்கலாம். அல்லது பணத்தின் உடனடித் தேவை இல்லாத பெரும் பணம் படைத்தவர்களின் முதலீட்டில் இயங்குபவையாக இருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டுதானே! அப்படி மதிப்பிடப்பட்ட வங்கிகள்தாம் வீழ்ந்துள்ளன.

நீண்ட கால முதலீடு என்றதும் நாம் கேள்விப்பட்ட வரையில் பிரான்சிலுள்ள சேம்பெய்ன் எனும் சீமைச் சாராய நிறுவனம்தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் சாராயம் வடிப்பதற்கான ஊறலை (குமரி மாவட்டத்தில் இதனைக் கோடை போடுதல் என்பார்கள்) நூறாண்டுகள் நொதிக்க வைப்பார்களாம். மரப்பறைகளில் (பீப்பாய்களில்) கோடையை நிரப்பி மண்ணைத் தோண்டிப் புதைத்து மேலே நாளைக் குறித்து விடுவார்களாம். அவர்களது முதலீடு 100 ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட ஒன்று.

நம் நாட்டிலும் பனை நடுவோர்களைப் பற்றிக் கூறுவார்கள், பனை, நட்டதிலிருந்து பலன் தர 40 ஆண்டுகள் ஆகுமாம். ஆனால் பின்னர் தொடர்ந்து நூறாண்டுகளுக்கு மேல் பலன் தந்துகொண்டிருக்கும். தென்னை மரத்தின் பழைய வகைகளும் அத்தகையவே. பயன்தர 20 வருடங்கள் வரை ஆகும். தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும். ஆனால் தேங்காய் வெட்டுகிறவர்கள் அவ்வளவு உயரம் ஏற மாய்ச்சல் படுகிறார்கள். எனவே அதற்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது 5 ஆண்டுகளில் காய்த்து 10 ஆண்டுகளில் ஓய்ந்துவிடும் குறுகிய கால குட்டை வகை. இது காய்க்கத் தொடங்கியதும் மரங்களுக்கு நடுவில் புதிய கன்றுகளை நட்டுவிட வேண்டும். கன்றுகள் காய்க்கத் தொடங்கியதும் முதியவற்றை வெட்டி அகற்றிவிட்டுப் புதிய கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு இடைவிடாத வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பாருங்கள், இப்போது உடலுழைப்புக்கு ஆள் கிடைக்கவில்லை.

உடனடிப் பலன் என்று இப்போது எங்கும் வாழை பயிரிடுகிறார்கள். ஆனால் வாழைக்காயை அறுவடை செய்வது, வண்டியில் ஏற்றுவது, பழுக்க வைப்பது, சந்தைக்குக் கொண்டுபோவது, அங்கிருந்து சில்லரைக் கடைக்கு வருவது, சில்லரைக் கடையிலிருந்து நுகர்வோரின் வீட்டுக்கு வருவதுவரை அதை மென்மையான, பக்குவமாகக் கையாள வேண்டிய பொருள் என்று எவருமே கருதாமல் குப்பை கூளத்தைக் அள்ளிக் கொட்டுவது போலவே கையாளுகின்றனர்.

சரக்கி(லாறி)களில் பண்டங்களை ஏற்றி இறக்கும் ″சுமை தூக்கும்″ தொழிலாளர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு முட்டைகளை அந்தந்தப் பொருளுக்கேற்ற பக்குவத்துடன் கையாண்டதைக் காண முடிந்தது. ஆனால் இன்று, ″பாட்டாளியக் கோட்பாடு″ வலுப்பெற்று சங்கங்களும் அமைந்த பின் அவர்களது கொடியே கொக்கிப் படத்தைக் கொண்டதாக மாறிவிட்டது. கொக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருக்கும் சரக்கையே ஒற்றைக் கையால் கொக்கியை ஓங்கி ஒரு குத்துக் குத்தி ஒற்றைக் கையாலேயே இழுத்துப் போடும் இந்தப் பொறுப்பற்ற செயலைப் பார்க்கும் போது அந்தக் கொக்கி நம் நெஞ்சில் குத்தியது போன்ற நொம்பலத்தை உணர்வோம்.

பாளையங்கோட்டையிலிருக்கும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு அலுவலர் ஒரு முறை ஒரு கனத்த சிலையை ஒரு கை வண்டியில் ஏற்றி அலுவலகத்துக்கு விடுத்தார். வண்டிக்காரன் அலுவலகம் வந்ததும் வண்டியின் முன்பக்கத்தைத் தூக்கி சிலையை உருட்டிவிட்டான். சிலை இரண்டாக உடைந்துவிட்டது அலுவலர் கேட்டார், என்னப்பா சிலையை உடைத்துவிட்டாயே என்று, ஆமாம், உடைந்துவிட்டது, அதற்கு இப்போது என்ன செய்ய? இது விடை.

நாம் மேலே கூறிய வாழைக் குலையின் நேர்வுக்கு வருவோம். அதிகக் கேடு இல்லாமல் ஒப்பேறிய 20 நூற்றுமேனியும் வெளிநாட்டினருக்கும் நாட்டின் உயர் அடுக்கிலிருக்கும் ஒரு மிகச் சிறுபான்மையினருக்கும் போகும். இறுதியில் ஏழைகளாகிய சுமை தூக்கிகள் போன்றவர்களுக்கு அழுகல்கள்தானே வந்து சேரும்! இவர்கள் கொக்கியால் சாக்கைக் கிழிக்கும் போது சிந்தும் சீனியும் மாவும் அரிசியும் கோதுமையும் போன்ற பண்டங்களைக் கூட்டிப் பெருக்கி அவையும் இந்தக் கடைக்கோடி மக்களுக்குத்தானே போய்ச் சேரும்? இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார்? அவர்கள் தங்களது அடையாளமாக வைத்திருக்கும் கொக்கி இறுதியில் குத்துவது அவர்களது வயிறுகளைத்தான் என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது? ″பாட்டாளி″க் கட்சிகளின் தலைவர்கள் கூறுவார்களா? மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். பாட்டாளிகள் அனைவரிடமும் இருந்தும் மகைமை தண்டுவதும் தேவைப்படும் போது ஆர்ப்பாட்டம் செய்யவும் ஊர்வலம் போகவும் குறைந்த அளவில் ஒரு ″தொண்டர் படை″ யும் போதுமே அவர்களுக்கு.

பாட்டாளி என்பவன் கலைந்த தலை, அழுக்கேறிய கிழிந்த உடை, குளிக்காத உடம்பு, குடித்துச் சிவந்த கண்கள், பொறுப்பற்ற கொச்சையான பேச்சு, அடிதடி, வன்முறை, ஊதாரித்தனம் இப்படித்தான் பாட்டாளியக் கட்சியரும் ஊடகங்களும் அவனது படிமத்தைப் படைத்து உலவவிட்டுள்ளன. அவனும் அதைப் பார்த்து அவ்வாறே தன்னைத் ″தகவமைத்து″க் கொள்கிறான்.

இந்த நிலையை எப்படி மாற்றுவது?

ஈடு வைக்கப்பட்ட சொத்துகளை விற்பது என்பதை எடுத்துக் கொண்டால் நாம், இந்தியர்கள், இதில் கைதேர்ந்தவர்கள். நம் நாட்டுப் பெருமக்கள் வாங்கிய பல இலக்கம் கோடி உரூபாய்களை இந்திய அரசுடைமை வங்கிகள் ″வாராக்கடன்″களாகக் அறிவித்துள்ளன அல்லவா? அதன் உள்ளரங்கம் என்ன?


அரசியல் கட்சிப் பெருமக்கள் தங்கள் சொத்துகளை அடமானமாகக் கொடுத்துப் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பார்கள். திரும்பச் செலுத்த மாட்டார்கள். வங்கி முறைப்படி அடமானச் சொத்தைத் திறந்த ஏலத்துக்குக் கொண்டுவரும். பெருமகனாருடைய சொத்தை எவரும் ஏலம் கேட்கப் போக மாட்டார்கள், கேட்க முடியாது, கேட்டால் கேட்டவர் உயிருடன் இருக்க மாட்டார். அதுதான் வாராக்கடனின் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கடன் வாங்கியவரும் கொடுத்தவரும் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது, இராயப் பேட்டை ″ஒருவருக்கொருவர்″ (பரசுப்பர) பணப் பண்டு போல்.

இப்படிப்பட்ட வாராக்கடன்கள் அந்த வங்கியில் பணம் சேமிக்கும் அல்லது வைப்பில் இட்டிருக்கும் பொதுமக்களை வெளிப்படையாகப் பாதிப்பதில்லை. இந்த இழப்புகளைத் தள்ளுபடி செய்வதில் உருவாகும் இழப்பு அனைத்துக் குடிமக்களையும் பாதிக்கும்.

இவ்வாறு பண்டத்தின், பணியின் நிழலாகிய பணம், பணத்தின் நிழலாகிய பல்வேறு பத்திரங்கள், சான்றிதழ்கள் என்று மெய்ம்மையிலிருந்து விலக விலக மக்களின் பண முதலீடுகளுக்குப் பாதுகாப்பு குறைகிறது. இவ்வாறு நிழல்களின் அடுக்கு கூடும் தோறும் அரசின் பொறுப்பு பெரிதாகிறது. எனவே அத்தகைய ஆவணங்களை வழங்குவதனை எல்லைப்படுத்தி அதற்கு இணையான பணத்தை அத்தகைய நிறுவனங்கள் நாம் முன்பு குறிப்பிட்டது போல நிலையான கண்காணிப்பு நிறுவனத்திடம் செலுத்தும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.


(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] None too big to fall, Business world, 13 october 2008, P.32.

0 மறுமொழிகள்: