4.5.09

முதலாளியமும் வல்லரசியமும் .....3

தேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சிறு நில உடைமைகளை ஒன்றிணைந்து பெரும் பண்ணைகள் உருவாவதற்குத் தடங்கலாக இருக்கும் நிலவுச்சவரம்புச் சட்டங்களைக் கைவிட வேண்டும். குத்தகை வேளாண்மைக்கு முடிவுகட்ட வேண்டும். குத்தகைப் பயிரிடுவோருக்கு தாங்கள் பயிரிடும் நிலத்தில் பாதியை உரிமையாக்க வேண்டும். நேரடியாகப் பயிரிட முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் நிலங்களை விற்றுவிட வேண்டும். அல்லது அரசு அவற்றை விலைக்கு வாங்கிப் பண்ணையாளர்களுக்கு ஏலத்தின் மூலமோ தன்வரைவுகள் (டெண்டர்கள்) மூலமோ விற்றுவிட வேண்டும்.

சிறுதொழில்களுக்கான ஊக்குவிப்புகளைக் கைவிட வேண்டும். உள்ளூர்த் தொழில்முனைவோருக்கு ஊக்குவிப்பு வேண்டும். பாதிக்கப்படும் சிறுதொழில் முனைவோருக்கு உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பணியைப் பெருந்தொழில்கள் பயன்படுத்த வகை செய்ய வேண்டும்.

அது போல் கைவினைத் தொழிலில் ஈடுபட்டிருப்போரையும் பெருந்தொழில்களில் பங்கேற்கத் தேவையான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கும் மீட்பு உதவிகள் செய்ய வேண்டும். இவ்வாறு நாட்டின் அனைத்து மக்களையும் முதலாளிய நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அதன் பயன்கள் அனைவரையும் சென்றடையச் செய்ய வேண்டும்.

ஏழை நாடுகளில் மனித உறவுகள் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளன. உழைப்பவர்களை எவ்வளவு இழிவாகவும் கொடுமையாகவும் நடத்த முடியுமோ அவ்வளவு இழிவாக நடத்துவது இங்கு மரபு. எனவே தொழில்நுட்ப உயர்வால் தொழிலாளர்களின் உடலுழைப்பின் கடுமை குறைவதை நம் ஒட்டுண்ணி வகுப்பினர் வெறுக்கின்றனர்.

குமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரத்தில் ஒரு மாட்டுச் சந்தை வரவிருந்ததை நாட்டார்கள் எனப்படும் ஊர்த்தலைர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாக ஒரு குறிப்பு உள்ளது. (நாஞ்சில் நாடு, ப-ர் தே.வேலப்பன் 2000, பக்.19, மேற்கோள், குமரிமாவட்டம் பிறந்த வரலாறு, புலவர். கு.பச்சைமால், 2001, பக்.38.) அதாவது மனிதனை வைத்து கலப்பையை இழுக்கும் போது உண்டாகும் கிளுகிளுப்பு இல்லாமல் போகும் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. மாடு செத்துப் போனால் இன்னொன்று வாங்கப் பணம் செலவாகும். மனிதன் செத்தால் செலவில்லாமல் இன்னொருவன் தானாகவே வந்து நிற்பான். நோய் நொடி என்றும் தீவனம், தொழுவம், அதைப் பராமரித்தல் என்றும் செலவுகள் கிடையாது. எல்லாவற்றையும் விட பெரும்பான்மை மக்களை அடக்கி வைக்க இது தவிர அவ்வளவு எளிய வழி வேறு இல்லை.

இன்று மட்டும் என்னவாம்? ″நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கு உடலில் குறைவான ஆடையுடன் வேலை செய்வதுதான் உகந்தது″ என்று கூற ஒரு படித்த கூட்டம், ஒட்டுண்ணிக் கூட்டம், எந்தச் சாதியிலிருந்து வந்ததாயிருந்தாலும் நிலையாக நம்மிடையில் உள்ளது. ஆனால் இந்தக் கூட்டம் காலில் உறையணி(சூ), முழுக்கால் சட்டை, முழுக்கைச் சட்டை, முகத்தில் கருப்புக் கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து நிழலில் பணியாற்றும் கூட்டம்.

உண்மையில் எந்த தட்பவெப்பமாக இருந்தாலும் காற்று, மழை, வெயில், புழுதி, சேறு, வானிலிருந்து இறங்கும் பல்வேறு கதிர்வீச்சுகள் ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வெட்ட வெளியில் பணி புரியும் ஒவ்வொருவரும் தங்கள் உடலை உரிய போர்ப்பினால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த மேதாவிகளின் ″அறிவுரைகளை″ எவரும் ″சட்டை″ செய்யவில்லை என்பது மகிழ்ச்சி. முன்பு வெற்றுடம்புடன் வேலை பார்த்த பணிகளிலெல்லாம் ஆடவரும் பெண்டிரும் சட்டை, தொப்பிகளுடன் வேலை பார்க்கின்றனர்.

முன்பு மேலே துப்பட்டாவைச் சுற்றிக்கொண்டு, உடன் வரும் கையாள் ஒருவன் குடை பிடிக்க வரும் பண்ணையாரைக் கண்டதும் வயலிலோ வெளியிலோ வேலை செய்யும் கூலியாள் தலையிலிருக்கும் தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு அல்லது முன்னங்கையில் தொங்கப் போட்டுக்கொண்டு குனிந்து வணங்கினான். இன்று தொழிலாளர்கள் அருகிப் போய் உழுவுந்தில் ஓட்டுவோன் உயரத்தில் சட்டை தொப்பியுடன் அமர்ந்திருக்க முன்னாள் பண்ணையாரின் பிறங்கடைகள் இன்று கீழே நின்று அவனை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறதென்றால் அதனைச் செய்தது புதிய தொழில்நுட்பம்தானே?

மலை உச்சிகள் வரை இந்த வளர்ச்சி எட்ட வேண்டும். அப்போதுதான் மனிதனை மனிதன் மதிக்க வேண்டிய கட்டாயம் நம் மேற்குடியினருக்கும் படித்த ஒட்டுண்ணிகளுக்கும் வரும்.

இதே மனப்பான்மையிலிருந்து வந்தவர்கள்தாம் நம் பொதுமைத் தோழர்கள். இவர்கள் பின்னால் கைகட்டி நிற்பவர்களாக வேளாண் கூலிகள், ஒருங்கிணைவு பெறாத பல்வேறு தொழிலாளர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்காக இலவய மனைப்பட்டா என்ற பெயரில் தோழர்கள் அசையாகச் சொத்து வாணிகம் செய்ய வேண்டும் அல்லது அதில் தரகு பார்க்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தொழில்களில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டிருந்தால் அங்கு வேலை நிறுத்த நெருக்கடியை உருவாக்கி பனியாக்களுக்கும் பார்சிகளுக்கும் நுழைய வழியமைத்துக் கொடுக்க வேண்டும்.

முதலாளியத்தின் வளர்ச்சியை ஊக்கி நிலக்கிழமைப் பொருளியலின் மனித நேயமற்ற உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பாட்டாளியக் கட்சியினர் பழைய நிலக்கிழமைப் பொருளியலையும் குமுக அமைப்பையும் சாதி சார்ந்த தொழில்களையும் நிலைப்படுத்துவதற்காக செம்மார்களுக்கும் சக்கிலியர்களுக்கும் செருப்புத் தைக்கும் கருவிகளை இலவயமாக வழங்கவும் வண்ணார்களுக்கு தேய்ப்புப் பெட்டி இலவயமாக வழங்கவும் முன்முயற்சிகளை எடுத்துள்ளனர்.

இது போதாதா, பார்ப்பனர்களுக்கு அடுத்த சாதியிலிருந்து வந்த கருணாநிதிக்கு? மக்கள் தாங்களாகவே ஊர்ப்புறங்களிலிருந்து, சாதி சார்ந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேறி நகர்களிலும் புதிய குடியிருப்புகளிலும் கலந்து வாழத் தொடங்கி சாதியத்தின் ஒரு முகாமையான கூறு நொறுங்குவது பொறுக்காமல், தோழர்களின் துணையோடு நெசவாளர்களின் குடியிருப்பு என்றும் விசுவகர்மர்களின் குடியிருப்பு என்றும் தாழ்த்தப்பட்டோருக்கான குடியிருப்பு என்றும் இலவயங்களைக் காட்டி மீண்டும் சாதி சார்ந்த குடியிருப்புகளை அமைத்துக் கெடுத்து வைத்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு வீடுகள் கட்டுவதில் கைக்கூலி. ஆளும் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் தோழர்களுக்கும் மக்களிடமிருந்து ″அன்பளிப்பு″. புரட்சி ஓங்குக!

1953இல் தாலின் காலமானார். அவருக்குப் பின் உலகில் மூத்த பொதுமைத் தலைவரான தனக்குத்தான் உலகப் பொதுமை இயக்கத்தின் தலைமை கிடைக்கும் என்று மா சே துங் எதிர்பார்த்தார். ஆனால் தாலினுக்குப் பின் வந்த குருச்சேவ் தனக்கே அப்பொறுப்பை வைத்துக்கொண்டார். அத்துடன் தாலினை மனிதத் தன்மையைக் கைவிட்டு நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தினார். பாடம் செய்து வைத்திருந்த அவர் உடலை எடுத்துப் புதைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரில் இட்லருக்கு இறுதி அடி கொடுத்ததிலும் அவரது படையெடுப்பிலிருந்து சோவியத்தின் தொழில் துறையைக் காப்பதற்காக ஐரோப்பாவை ஒட்டி மேற்கு எல்லை அருகில் செறிந்திருந்த தொழிலகங்களை முழுமையாகப் பெயர்த்தெடுத்து கிழக்கிலிருந்த தேசங்களுக்குக் கொண்டு சென்று சோவியத் நாட்டின் கட்டமைப்பை, உலகப் பொதுமை இயக்கத்தின் மதிப்பை நிலைநாட்டியவர் என்று உலகப் பொதுமை இயக்கத்தின் பெரும்பான்மையினர் தாலின் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். எனவே குருச்சேவ் மீது உலகப் பொதுமை இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதியினர் வெறுப்புற்றனர். இதைப் பயன்படுத்தி மா சே துங் உருசியத் தலைமை மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். இவ்வாறு சோவியத்துக்கும் சீனத்துக்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படையாக வெடித்தது.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்த திட்டமிட்டது அமெரிக்கா. மா சே துங்கை ஒரு கடவுள் போலவும் பொதுமைச் சீனத்தை ஒரு தேவருலகமாகவும் தீட்டிக் காட்டியது. இந்தப் பரப்பலில் சியார்சுத் தாம்சன் போன்ற அறிவுசீவிகள் முன்நின்றனர். சீனத்தில் ஈரும் பேனும் மூட்டைப்பூச்சியும் பரத்தைமையும் முற்றாக ஒழிந்து போயின என்றெல்லாம் கூட நம் நாட்டுத் தாளிகைகள் செய்திகளைத் தாங்கி வந்தன ஒரு காலகட்டத்தில்.

இந்தக் காலகட்டத்தில் காதல் பாக்கள் யாத்துக் கொண்டிருந்த மா சே துங்கை அவரது அரசியல் எதிரிகள் கிட்டத்தட்ட சுற்றி வளைத்த நிலையில் அவர் தன் சொந்த மாநிலத்துக்குத் தப்பி ஓடினார். பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் தன் ஆதரவாளர்களைத் திரட்டித் தன் அரசியல் எதிரிகளை ஒடுக்கினார்.

இந்த நேரத்தில்தான் ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்த முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சீனத்துக்குச் செலவு மேற்கொண்டு மா சே துங்குடன் உரையாடினார்.

இந்தப் பின்னணியில் உருவானவர்கள்தாம் மூன்றாம் அணி என்று கூறப்படும் அறிவு ″சீவி″களும் நக்சலிய வடிவிலான ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களும்.

முரண்பாடுகள் பற்றி ஏற்கனவே மா சே துங் எழுதியிருந்த கருத்துகளுக்கு முரணாக எப்போதும் அக முரண்பாடுகளே முதன்மையானவை என்ற கருத்து அவர் பெயரால் முன்வைக்கப்பட்டது. ″முதல்″ உலகப் போரின் பின்னணியில் உருசியப் புரட்சியும் இரண்டாம் உலகப் போரின் தொடர்சசியாக உருசிய உதவியுடன் சீனப் புரட்சி நடைபெற்றதும் ஆன உலகப் பொதுமை இயக்கத்தின் மீமுகாமையான பட்டறிவுக்கும் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பட்டறிவதற்கும் முற்றிலும் எதிரான முன்வைப்பாகும் இது.

இதன்படி ஏழை நாடுகளில் நிலவுவது அரை நிலக்கிழமையியமும் அரை முதலாளியமுமே; அவற்றை அழித்தால்தான் அதாவது உள் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தால்தான் பொதுமைக் குமுகத்தை அமைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே புரட்சியாளர்களின் பணி உள்நாட்டிலுள்ள நிலக்கிழார்களையும் சிறு முதலாளிகளையும் அழித்தொழிப்பதுதான் என்று புகட்டப்பட்டது. இங்கிருந்த நிலக்கிழமையாளர்களும் சிறுதொழில் முனைவோரும் பெரும்பாலும் உயர்சாதி மற்றும் பிற்பட்ட சாதியினராக இருப்பர். அவர்களது குமுகியல் - பொருளியல் ஒடுக்குதல்களால் கொதிப்புற்றிருந்த அடித்தள மக்களிலிருந்து வெளிவந்த படித்த நல்லுணர்வுள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்கள் கையில் துப்பாக்கியையும் கொடுத்தது அமெரிக்காவின் ந.உ.மு. (நடு உளவி முகவாண்மை - சி.ஐ.ஏ.) சீனத்தின் வழியாக.

இந்தியாவில் சாரு மசூம்தார் தொடங்கி வைத்த நக்சலிய அமைப்பு, இலங்கையில் சனதா விமுக்தி பெரமுன, அர்சென்றீனாவில் ஒளிரும் பாதைகள் போன்றவை பெருமளவில் வளர்ச்சியடைந்தவை. உள்நாட்டு வளங்களில், மக்களில் வேர்கொள்ளாமல் அயல்விசையாகிய ந.உ.மு.வால் ஊட்டப்பட்டுச் செயற்பட்ட இந்த இயக்கங்கள் இயல்பாகவே தேசியங்களின் வலுமிக்க விசைகளிடமிருந்து அயற்பட்டே நின்றன. தேசிய விடுதலைக்குப் பின்னணியில் நிற்க வேண்டிய சிறு உடைமை, சிறு முதலாளிய விசைகளுக்கு எதிராக அதே தேசியத்திலுள்ள உணர்வும், அறிவும் நேர்மையும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களை நிறுத்தினர். அவர்களுக்குப் பதுங்க இடமில்லை. அவர்களுக்குக் காட்டப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் சேரிகள் வலுக்குறைந்தவை. அடுத்த வேளை கஞ்சிக்காக ஒடுக்குவோரின் வாயிலில் கையேந்தி நிற்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். ஆக, மொத்தத்தில் வெட்ட வெளியில் அமைந்திருந்த கட்டபொம்மன் கோட்டை போன்று இந்த இளைஞர்களைஅவ்கள் நாட்டு காவல்துறைகள் தெரு நாய்களைப் போல் சுட்டுவீழ்த்தின. தமிழ்நாட்டுத் தமிழரசன், போலி மனித நேயத்தால் உயிரைப் பறிகொடுத்தார்.

தமிழகத்தில் இந்த இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்காகத் திராவிட இயக்கத்திலிருந்தும் தனித்தமிழ் இயக்கத்திலுமிருந்து கவடில்லாத இளைஞர்களைப் பொறுக்கி எடுத்துக் களத்தில் விட்டுக் களையெடுப்பது போல் களைந்தனர்.

இலங்கையில் ஒன்றரை இலக்கம் இளைஞர்களை இரண்டு கட்டங்களில் இலங்கைக் காவல்துறையும், போர்ப்படையும் கூலிப்படைகளும் அழித்து ஒழித்தனர். அந்தக் காலகட்டங்களில் இந்தியப்படை இலங்கையின் பாதுகாப்புக்காகப் பயன்பட்டது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் உலக மூன்றாம் அணியின் செயற்பாடு ஏழை நாடுகளின் தேசியத் தற்கொலை என்றே கூற வேண்டும்.

ஆயுதம் தாங்கி மட்டுமல்ல, பேனா தாங்கிய கூட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அறிவு″சீவி″கள் மார்க்சின் நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டியே மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர். இருத்தலியம்(Existentialism), அமைப்பியம்(Structuralism), அயலாதல்(Alienation) போன்ற கருத்துகளை முன்வைத்தனர். தமிழகத்தில் எசு.வி.இராசதுரை, வெங்காளூரைச் சேர்ந்த தமிழவன் என்போர் இக்கருத்துகளைத் தங்கள் மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் மூலம் தமிழில் வழங்கினர். இது தவிர ந.உ.மு. மூலம் எண்ணற்ற தாளிகைகளுக்குப் பணம் வழங்கப்பட்டு அவை பாட்டாளியக் கோட்பாடுகளை இளைஞர்களுக்கும் படித்தவர்களுக்கும் இலவயமாக வழங்கிவந்தன. இந்த இதழ்களை நடத்தியோர் வேறு பணிகளை நாடாமல் இந்த அயல் பணத்தை நம்பித் திருமணம் செய்து பிள்ளை குட்டிகள் என்று ஆன நிலையில் திடீரென்று ஒரு நாள் அவர்களுக்குப் பணம் வழங்கிய ந.உ.மு.வின் நிழல் நிறுவனங்கள், ″இனி நீங்களே உங்கள் இதழை நடத்திக் கொள்ளுங்கள்″ என்று பண உதவியை நிறுத்திவிட்டன.

இதழாளர்களில் ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர பிறரனைவரும் திகைத்துத் திண்டாடிவிட்டனர். நல்ல வாய்ப்புகள் கிடைத்த ஓரிருவர் தவிர பிறரனைவரும் செய்வதறியாமல் தெருவுக்கு வந்த நிலையில் அவர்களை நாடித் ″தொண்டு நிறுவனங்களை″ அமைக்கும் பணியில் ந. உ.மு. ஈர்த்தது. அமெரிக்காவின் அட்டுழியங்களைத் திட்டுவதற்கென்று அமெரிக்காவே கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்தத் ″தொண்டு நிறுவனங்கள்″, குறிப்பாக பழஞ்சபை (கத்தோலிக்க), சீர்த்திருந்த சபைக் கிறித்துவம் சார்ந்தவை, பாட்டாளியக் கோட்பாட்டை இளைஞர்கள் நடுவிலும் பொதுவாக ஏழைகள் நடுவிலும் பரப்புவதைத் தங்கள் நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றாகக் கொண்டுள்ளன. நாம் அக்டோபர் 2008 தமிழினியில் குறிப்பிட்டிருந்த மதுரை இறையியல் கல்லூரியின் தியாபலசு அப்பாவு என்ற பரட்டடைச் சாமியார் கலை வடிவங்களில் பாட்டாளியக் கோட்பாட்டைப் பரப்புவதைப் பணியாகக் கொண்டவர். ஏசுவே ஒரு பொதுமைப் போராளி என்பது இவர்களது பரப்பல்.

இந்தத் ″தொண்டு″ நிறுவனங்கள், சமய வடிவிலும் பிறவழியிலும் ″ உலகில் ஏழைகள் நிறைந்த பெரும் பணக்கார நாடான″ இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் நுழைந்துள்ளன. 2004 திசம்பர் 26 ஆம் நாள் தமிழகத்தை உலுக்கிய சுனாமி எனப்படும் ஓங்கலைப் பேரழிவை அடுத்து கிறித்துவர்கள் அல்லாத மீனவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நுழைந்து படகு வைத்திருப்போருக்கும் அதில் பணியாற்றுவோருக்கும் இடையில் பகைமையை வளர்த்துவிட்டுள்ளது அமெரிக்க சார்பான தொழிற்சங்க அமைப்பு. இந்த அமைப்புதான் முதன்முதலில் ″அமைப்பு சாரா″த் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நல வாரியங்கள் அமைப்பதில் தமிழக அரசுக்கும் ″இந்திய″, ″இந்திய மார்க்சிய″ பொதுமைக் கட்சிகளுக்கும் வழிகாட்டியது.

இப்பொழுது இந்த ″வழிகாட்டிகள்″ பரப்பிவரும் ″கொள்கை″ கடற்கரையிலுள்ள மீனவர்களுக்கு கடல்சார் பழங்குடிகள் என்றும் மலையில் வாழும் மக்களுக்கு மலைசார் பழங்குடிகள் என்றும் பெயரிட்டு அவர்களைப் பிற மக்களிலிருந்து பிரித்து அவர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதிகளும் சிறப்புரிமைகளும் வழங்க வேண்டுமாம். அவர்களுடைய வாழ்க்கைமுறை, அதாவது ″பண்பாடு″ பேணப்பட வேண்டும் என்பது, அதாவது அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு மக்களுடனுள்ள உறவு முறைகளையும் மாறாமல் பேண வேண்டுமாம். என்னென்ன வகைப்பாடுகளாகப் பிரித்துத் தனித்தனிச் சிற்றறைகளில் நாட்டு மக்கள் அனைவரையும் பிரித்து வைக்கத் திட்டமிட்டுள்ளார்களோ தெரியவில்லை. வின் தொலைக்காட்சியில் டி.எசு.எசு.மணியின் நிகழ்ச்சிகளை ஊன்றிப் பாருங்கள் தெரியும்.

குமரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் வாழும் காணிக்காரர்களிடையிலிருந்து படித்து கிறித்துவத்தைத் தழுவி சாமியாராக இருக்கும் ஒருவர் ஓர் அரங்கில் உரையாற்றினார். அவர் தங்கள் மக்களின் சிக்கல்களை எடுத்துரைத்தார். அவர் தொண்டு நிறுவனம் மூலம் தம் சாதி மக்களுக்குத் ″தொண்டுகள்″ செய்து வருவதாகக் கூறினார். நான் கேட்டேன், உங்களைப் போலவே படித்து நல்ல உடையணிந்து சமநிலத்தில் வாழ்பவர்கள் போலவே அவர்களும் மேம்பட அவர்களைப் சமநிலத்துக்குக் கொண்டுவர ஏன் முயலக் கூடாது என்று. அவர் விடை கூறத் திணறிக் கொண்டிருந்த போது அரங்குக்குள் இருந்த மேல்சாதிப் பெரியவர்கள் ஒரே குரலாக, ″அவர்களது பண்பாடு என்னாவது?″ என்று எனக்கு விடையிறுத்தனர், இவர்கள் என்னவோ தங்கள் அப்பன்களும் பாட்டன்களும் கட்டிக்காத்த பண்பாடுகளை இம்மி பிசகாமல் கடைப்பிடிப்பது போலவும் இவர்களது மக்களும் பிறங்கடைகளும் இவர்கள் மேடைகளில் போற்றிவரும் "பண்பாடுகளை"க் காப்பதற்காகவே அமெரிக்காவுக்கும் ஆத்திரேலியாவுக்கும் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை பறந்து திரும்புவதையும் போல.

ஆக, "பண்பாட்டைப் பாதுகாப்பது" என்ற இந்த முழக்கமும் சாதி உயர்வு பறிபோய்விடக் கூடாது என்ற தவிப்பின் வெளிப்பாடுதான். இது போன்று எத்தனையோ தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டுவர முடியும்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: