முதலாளியமும் வல்லரசியமும் .....1
... நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப் பொருள்வாயின் ஊக்கிய பாலினும்..... தொல். பொருள்.41
வாழ்க்கையின் எட்டுவகை அடிப்பபடைகளையும் புறக்கணித்துவிட்டுப் பொருள் சேர்ப்பது ஒன்றையே குறியாகக் கொண்டவர்களைப் பற்றியது மேலே தரப்பட்டுள்ள நூற்பா பகுதி
"Capitalism is the astounding belief that the most wickedest of men will do the most wickedest of things for the greatest good of everyone."
-John Maynard Keynes, Economist and founding father of IMF and World Bank
ஒவ்வொருவரினதும் மீப்பெரிய நன்மைக்காகவே மீக்கொடிய வஞ்சகர்கள் மீக்கொடிய வஞ்சகச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற திகைக்கவக்கும் நம்பிக்கைதான் முதலாளியம் என்பது மேலே தரப்பட்டிருக்கும் ஆங்கில மேற்கோளின் பொருள்.
அமெரிக்க அரசு 70,000 கோடி (700பில்லியன், 1000 மில்லியன் 1 பில்லியன். ஒரு மில்லியன் 10 இலக்கம்; 1 பில்லியன் = 100 கோடி) டாலர் கொடுத்து அந்நாட்டின் மிகப்பெரிய பண நிறுவனங்களை அவற்றின் செல்லாக்கல் சிக்கல்களை ஓரளவுக்குச் சீரமைப்பதற்கான ஒரு முன்வரவை அதன் பேராளர் அவையில் முன்வைத்தது. ஆனால் அதனைப் பேராளர் அவை ஒப்பவில்லை
இந்தச் சிக்கல் தொடங்கியதே மீளச் செலுத்தும் திறன் உறுதிப்படாத இனங்களை ஈடாகப் பெற்று கடன் கொடுத்ததிலிருந்து உருவானது. அமெரிக்க ஏழை அடித்தட்டு மக்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்குவதற்கென்று பண வழங்கு நிறுவனங்கள் ஈடாகப் பெற்ற ஈட்டு ஆவணங்களைப் பணம் கொடுத்து இந்தப் பெரும் நிறுவனங்கள் வாங்கின. ஆனால் வீடு கட்டியவர்களால் கடன் தவணைகளைச் செலுத்த முடியவில்லை. அதனால் நிறுவனங்களில் பணம் கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு கடன்கள் கொடுத்து வட்டியும் பெற முடியாத நிலைக்கு வங்கிகளை இது தள்ளியது. ஊழியர்களுக்குச் சம்பளம் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்குதல் என்று நெருக்கடிகள் உருவாயின.
இதில் ஒரு விந்தை என்னவென்றால், சரியாக ஓராண்டுக்கு முன்னால் (2007இல்) இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு இந்த ஆவணங்களைக் கொள்முதல் செய்ததை ஆதாயமாகக் காட்டி 3600 கோடி டாலர்கள் அளவுக்கு நல்லூதியம்(போனசு) வழங்கியுள்ளன. பொருளியல் அடிப்படை விதிகளுக்கு இது பொருந்திவரலாம். நிறுவனம் செலுத்திய தொகையை விட அதற்கு ஈடாகக் கிடைத்த வீடுகளின் மதிப்பு கணிசமான மிகுதியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வீடுகளாகிய சொத்துகளை விற்று முதல் கைக்கு வந்தால்தான் பண நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் அங்கு ஏற்கனவே உருவாகிவிட்ட பொருளியல் மந்த நிலையில் இது இப்போது நடைபெற வாய்ப்பில்லை.
இப்போது நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் மதிப்பு இறங்கிப் போயின. எனவே அப்பங்குகளில் முதலிட்ட எளிய மக்களும் தங்கள் ஓய்வுகாலப் பயன்களை முதலிட்ட முதியவர்களும் பெரும் இழப்புக்குள்ளாகியுள்ளனர். கடனை வாங்கி வீடுகட்டி, கொஞ்சம் கடனைத் திருப்பியும் செலுத்திய அடித்தள மக்கள், அமெரிக்காவில் உருவாகி வரும் தொழில் மந்தத்தால் வேலைகளை இழந்ததாலும் உயர்ந்துவரும். விலைவாசியால் பணத்தை மிச்சம் பிடிக்க முடியாததாலும் கடன் தவணைகளைச் செலுத்த முடியாமலே போனதால் கட்டிய வீட்டையும் செலுத்திய தவணைப் பணத்தையும் இழந்து நிற்கின்றனர்.
அமெரிக்காவில் பணப்புழக்கத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு நுகர்வு மிகவும் குறைந்துள்ளது. எனவே அமெரிக்காவுக்கு பண்டங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் பொருளியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. அமெரிக்காவில் இந்தக் கடன் விழாக்கள் நடந்த காலத்தில் அங்கு முதலிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பொருளியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளன. அங்குள்ள அரசுகள் நலிவுற்ற வங்கிகளை அரசுடைமையாக்கி பங்கு முதலீட்டாளர்களைப் பாதுகாத்துள்ளன. ஆனால் அமெரிக்கா, இது போன்ற நிகர்மை(சோசலிச) நடவடிக்கைகளைத் தவிர்ப்பதைக் கொள்ளையாகக் கொண்ட, கட்டற்ற, அரசின் தலையீடற்ற பொருளியலைக் கடைப்பிடிக்கிறதாம்; எனவே நலிவுற்ற பண நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீட்டாளர்கள் நலன்களைக் காப்பதற்குப் பகரம் செல்லாமல் போன ஈட்டுப் பத்திரங்களை விலை கொடுத்து வாங்கி வங்கிகளுக்குத் தற்காலிக மீட்பு வழங்கப்போகிறதாம். முதலீட்டாளர்களுக்கும் வீடுகட்டிய அடித்தள மக்களுக்கும் பயன்படாத திட்டம் என்றுதான் கட்சி வேறுபாடுகளைக் கைவிட்டு அமெரிக்கப் பேரவைப் உறுப்பினர்கள் இத்திட்டத்தை ஏற்க மறுத்துள்ளனர்.
இதைக் காட்டி முதலாளியம் தோற்றுவிட்டது என்றும் படைப்பாக்கமுள்ள முதலாளியம் வேண்டும் என்றும் கட்டுப்பாடற்ற முதலாளியம் செத்துவிட்டது, கிழட்டு முதலாளியம்தான் உயிருடன் இருக்கிறது என்றும் பல்வேறு வகையான திறங்கூறல்கள் வெளிப்பட்டுள்ளன.
மனித வரலாற்றில் பெரும்பாலான அறிவியல் - தொழில் நுட்பங்களும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளின் பல்வகை வடிவங்களும் பண்பாட்டுக் கோலங்களும் இயற்கையில் மனிதக் குமுகத்துக்கு வெளியிலும் குமுகத்தினுள்ளும் நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து இறுத்தெடுத்து பதப்படுத்தி மேம்படுத்தப்பட்டவையே. அவ்வாறு ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் உருவானதே முதலாளியம்.
சிலுவைப் போர்களால் சோர்ந்திருந்த ஐரோப்பாவில் துருக்கியர்கள் புகுந்து ஆதிக்கம் பெற்றதும் காண்டாண்டிநோபுளைக் கைப்பற்றியதால் ஐரோப்பியரின் கீழைநாட்டு வாணிகம் பறிபோனதும் போப்பரசரின் சமய அடக்குமுறைகளுக்கு எதிராக உருவான சீர்திருத்த இயக்கங்களும் ஐரோப்பிய மூலதனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அறிவியல் வெளிச்சத்தில் உலகை வலம் வர வைத்தது. அதில் கிடைத்த செல்வப் பெருக்கு அறிவியல் - தொழில்நுட்பங்களை வளர்த்து வாணிகத்திலும் படைவலிமையிலும் ஐரோப்பாவைப் பூதமாக வளர்த்தன. இவ்வாறு உருவான முதலாளியம் பண்டைய இருண்ட கால ஐரோப்பியப் பண்பாட்டிலிருந்து முற்போக்குடைய ஒரு குமுகத்தை உருவாக்கியது என்பதை காரல் மார்க்சும் பிரடரிக் ஏங்கெல்சும் தாம் வடித்த பொதுமைக் கட்சியின் கொள்கை அறிக்கையில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.
பொதுவாக, தனியுடைமையின் அனைத்து வடிவங்களையுமே முதலாளியம் என்ற வகைப்பாட்டினுள் வைத்து நாம் பார்க்கிறோம். ஆனால் பொருளியல் கண்ணோட்டத்தில் முந்தியல் பொதுமை(Primitive Communism) என்று அநாகரிக மனிதன் எனும் கட்டத்தில், உடைமைகளைக் குழு முழுவதற்குமான பொதுச் சொத்தாக வைத்திருந்த நிலைமையிலிருந்து தனி மனிதர்களுக்குச் சொத்துகளுடன் அடிமைகள் என்ற நிலை வந்ததிலிருந்து தனியுடைமை தொடங்குகிறது. முதலில் அடிமைக் குமுகம் அடுத்து நிலக்கிழமைக் குமுகம் அடுத்துத்தான் முதலாளியக் குமுகம் என்று மார்க்சு வரையறுத்தார்.
நமக்குத் தெரிந்த வரலாற்றில் கிரேக்கத்திலும் உரோமிலும் அடிமை முறை இருந்தது. உரோமிலிருந்த அடிமைகள் கிளர்ந்தெழுந்து கிறித்துவ சமயம் நிலைப்பட்டபின் நிலக்கிழமைக் குமுகம் உருவானது. முன்னாள் அடிமைகளில், மேனிலை அடைந்தவர்கள் தவிர ஏனையோர் கொத்தடிமைகள், அதாவது குத்தகை உழவர்கள் ஆனார்கள்.
நிலக்கிழார் ஆகிய படைமானியத் தலைவர்களுக்கு நிலங்கள் சொந்தமானவை. அவர்களது நிலங்களில் உழுது பயிரிட்டு நிலக்கிழார்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு எஞ்சியதில் வாழ வேண்டியது கொத்தடிமையாகிய உழவனின் நிலை. அந்த நிலத்திலிருந்து வெளியேற அவனுக்கு உரிமை கிடையாது. இந்த கொத்தடிமைகளின் கிளர்ச்சியிலிருந்துதான் பிரெஞ்சு புரட்சி நிகழ்ந்தது.
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய மக்களிடமிருந்து பெற்ற உணவுத் தவசங்களால் இங்கிலாந்தில் வேளாண்மை தேவையற்றுப் போய்விட்டது. எனவே அங்கிருந்த நிலங்களில் பயிரிட்டுக்கொண்டிருந்த உழவர்களை வெளியேற்றி வேலியிட்டு பெரும்பண்ணைகளை உருவாக்கினர் அங்கிருந்த மேட்டுக்குடியினர். அதில் கம்பளி ஆடுகளை வளர்த்தனர்.
அங்கிருந்து வெளியேறிய மக்கள் நகரங்களில் உருவாகிக் கொண்டிருந்த தொழிற்சாலைகளில் கூலிகளாகச் சேர்ந்தனர். அவர்கள் பட்ட துன்பங்களை மார்க்சு தன் மூலதனம் முதல் மடலத்தில் விளக்கியுள்ளார்.
பிரான்சில் குத்தகை முறை ஒழிக்கப்பட்டது. உழவர்களுக்கு, அதாவது கொத்தடிமைகளாகிய குத்தகைப் பயிர் செய்வோருக்கு நிலம் சொந்தமானது. இப்போது நிலத்தை விற்றுவிட்டு அவர்கள் வெளியேறலாம். இது சிறு சிறு உடைமைகளாக, மூலதனம் போன்று எந்த வலிமையும் இல்லாத, கையாலாகாத கொத்தடிமைகளிடமிருந்த நிலங்கள் புதிய தொழில்நுட்பத்தில் செயற்படும் முதலாளியப் பெரும்பண்ணைகளாக மாற வழியமைத்தது. வெளியேறிய முன்னாள் கொத்தடிமைகள் இப்போது தொழிலகக் கூலிகளாக மாறினர். வெளிநாட்டு வாணிகத்தில் செல்வம் சேர்த்திருந்தவர்கள் பண்ணை முதலாளிகளாயினர்.
இவ்வாறுதான் தனி உடைமையின் ஒரு வடிவமான நிலக்கிழமையிலிருந்து அதைவிட மேம்பட்ட வடிவமான முதலாளியம் உருவானது.
இந்த முதலாளியத்தில் புதிய தொழில்நுட்பங்களும் கருவிகளும் புகுத்தப்பட்டு மிகுந்த விரைவுடன் பண்டங்கள் பெருமளவில் படைக்கப்பட்டன. அவற்றுக்கு மூலப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகள் ஆசியாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கைப்பற்றியிருந்த நாடுகளில் இருந்து இறங்கின. படைக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கான சந்தையாகவும் அவை பயன்பட்டன.
நிலக்கிழமைப் பொருளியலில் வேளாண்மை தவிர கைவினைஞர்களும் சிறு பட்டறைகளும் பண்டப்படைப்பில் ஈடுபட்டிருந்தனர். சிறு வாணிகர்கள், சில்லரை வாணிகர்கள், கூவி விற்பவர்கள் படைத்த பண்டங்களைக் கொள்முதல் செய்து விற்றுப் பங்கீட்டு(விநியோக)ப் பணியை மேற்கொண்டனர். கந்துவட்டிக்காரர்கள் இரு சாரரிலும் தேவைப்படுவோருக்கு மூலதனத்தை வழங்கினர். விரிவான வாணிகம் செய்வோர் முன்பணம் கொடுத்துப் பண்டங்களைப் பெறுவதும் உண்டு. ஒரு பட்டறையில் பணியாற்றும் கூலித் தொழிலாளரின் எண்ணிக்கைக்கு வரம்பு இருந்தது.
முதலாளியம் இந்த வரையறைகளை உடைத்தது. சிறுதொழில் முதலாளிகளும் வாணிகர்களும் புதிய பெருந்தொழிலகங்களில் மேற்பார்வையாளர்களாகவும் பிற வேலைகளுக்கும் மாறினர். மூலதனம் முதலில் கூட்டு நிறுவனங்களாகப் பலர் சேர்ந்து முதலிடுவதிலிருந்து தொடங்கியது. இழப்புகள் வந்த போது பங்காளிகள் அனைவரும் தங்கள் சொத்துகளை இழந்தனர். தற்கொலைகளும் நிகழ்ந்தன. அதன் அடுத்த கட்டமாகத்தான் ″எல்லைப்பட்ட கடப்பாடுடைய″ முதலீட்டு முறை (Investment with limitted liabilities) உருவானது.
புதிய தொழிலகங்களில் தொடக்கத்தில் வேலை நேரத்துக்கு எல்லை கிடையாது. தொழிலாளி உயிர்வாழ்வதற்குப் போதிய அளவு கூடக் கூலி கிடைக்கவில்லை.
புதிய தொழிலகங்களின் சிறப்புக்கூறு என்னவென்றால் ஒரே முதலாளியின் ஒரு கட்டமைப்புக்குள் ஒரே கூரையில் பல தொழிலாளர்கள் தங்கள் பணியின் தேவைக்காக இணைந்து வேலை செய்யும் சூழல் ஆகும். எனவே அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் குறைகளை முதலாளியிடம் எடுத்துச் சொல்ல முடிந்தது. இதனால் எடுத்த எடுப்பில் பயன் எதுவும் இருக்கவில்லை. ஆனால் பல்வேறு தொழிலகங்களிலுள்ள தொழிலாளர்கள் இணைந்து போராடும் போது அதற்கு வலிமை மிகுதி. இவ்வாறுதான் தொழிற்சங்கங்கள் உருவாயின. ஆயினும் தொழிலாளர்களின் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.
இங்கிலாந்தில் ஒரு சிறப்புச் சூழல் நிலவியது. அமெரிக்காவில் பெரும் பண்ணைகளைக் கொண்டவர்களும் இங்கிலாந்தில் பெரும் தொழிலகங்களைச் சேர்ந்தவர்களும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் நடைபெற்ற மோதல்களால் அங்குள்ள தொழிலாளர்கள் பயனடைந்தனர். 1838இல் தங்கள் உரிமைகளுக்கான பட்டயத்தை பெரும் போராட்டத்தின் முடிவில் அரசரிடமிருந்து பெற்றனர்.
செருமனியில் பிறந்த மார்க்சு பயின்றது சட்டம். வெவ்வேறு பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களில் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தடம் பிடித்ததிலிருந்துதான் விளைப்புப் பாங்குக்கேற்ப குமுகத்தின் சமயம், மண உறவுகள், அறிவியல் - தொழில் நுட்பங்கள், சட்டம், அரசியல், கலை போன்ற ″குமுகத் தன்னுணர்வு″ அமைகிறது என்ற முடிவுக்கு அவர் வந்தார். அவர் வாழ்ந்த காலத்து ஐரோப்பாவில் நிகழ்ந்துவந்த முதலாளிய வளர்ச்சியால் உருவான குமுக முரண்பாடுகளிலிருந்து பாட்டாளியரே வரலாற்றின் அடுத்த கட்டத்தில் உலகில் மேலோங்கிய வகுப்பினராக இருப்பர் என்று கணித்து பாட்டாளியரின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான கருத்தியலை முன்வைத்தார். அதனால் அவரைச் செருமனி அரசு நாடு கடத்தியது. அவர் பிரிட்டனில் குடியேறினார்.
பிரிட்டன் அன்று உலகில் மிக மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் முதலாளியத்திலும் முழுமை பெற்றிருந்தது. எனவே பொருளியல், பாட்டாளியர்களின் நிலை, முதலாளியத்தின் வளர்ச்சி நிலைகள் ஆகியவற்றைத் தடம்பிடிக்க அந்நாடு மார்க்சுக்கு மிக உதவியாக இருந்தது.
மார்க்சின் கண்ணோட்டத்திலிருந்து மாறுபடாத ஒரு கண்ணோட்டத்தை அதே செருமானியைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கெல்சு என்பாரும் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்தே இறுதிவரைச் செயற்பட்டனர்.
ஒவ்வொரு குமுகமும் பொதுமைக் குமுகத்தை எய்துமுன் குக்குலம் -> அடிமை -> நிலக்கிழமை -> பொதுமை என்ற வரிசையில்தான் முன்னேற முடியும். இந்த வரிசையிலிருந்து எந்தக் கட்டத்தையாவது தொடாமல் மேம்பட்ட இன்னொரு கட்டத்தினுள் தாவிச் செல்ல முடியாது என்று தன் நூலான மூலதனம் முதல் மடலத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் கூறியவர், ஏங்கல்சோடு சேர்ந்து தான் படைத்த பொதுமைக் கட்சி அறிக்கையின் உருசிய மொழி பெயர்ப்பின் முன்னுரையில் உருசியாவிலிருக்கும் ஊரகப் பொது நில உடைமையிலிருந்து மேம்பட்ட பொதுமைக் குமுகத்தை எய்த முடியுமோ என்றொரு ஐயத்தைத் கிளப்பி இருந்தார்.
....And even when a society has got upon the right track for the discovery of the natural laws of motion - and it is the ultimate aim of this work, to lay bare the economic law of motion of modern society - it can neither clear by bold leaps, nor remove by legal enactments, the obstacles offered by the successive phases of its normal development. But it can shorten and lessen its birth - pangs.[1]
....The country that is more developed industrially only shows, to the less developed, the image of its own future.[2]
........Now the question is: can the Russian obshchina(Village community), though greatly undermined, yet a form of the primeval common ownership of land, pass directly to the higher form of communist common ownership? Or, on the contrary, must it first pass through the same process of dissolution as constitutes the historical evolution of the West?[3]
மார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.
(தொடரும்)
அடிக்குறிப்புகள்:
[1] Preface to the first German Edition, Capital, Vol.Ⅰ,Progress Publishers, Moscow,p.20.
[2] ibid. P.19.
[3] Karl Marx and Frederick Engels, Manifesto of the Communist Party, Progress Publishers Moscow, 1973, P.12
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக