11.11.07

தமிழ்த் தேசியம் ... 10

பிற்சேர்க்கை – 2

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் பார்ப்போம்.

அண்ணாத்துரையும் அவரது தோழர்களும் வழித்தோன்றல்களும் அவ்வப்போது கூறும் ஒரு சொற்றொடர், "நாங்கள் திராவிடநாட்டுக் கோரிக்கையை விட்டுவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் நிலவுகின்றன" என்பது.

இந்தச் சொற்களை அன்று அண்ணாத்துரையும் இன்று அவரது தம்பிகளும் மேடைகளில் பேசும் பொழுது மக்கள் ஆரவாரமிட்டு தம் உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்துவர்.

ஆனால் இச்சொற்றொடரின் உண்மையான பொருள் யாது?

திராவிட நாடு விடுதலை (அவர்கள் சொல்லில் பிரிவினை) கேட்பதற்கான காரணங்கள் அகலவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் சொந்த நலன்களுக்காக (இதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?) அக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்பதல்லவா?

இந்தச் சொற்றொடருக்காக மக்கள் கொதிப்படைந்திருக்க வேண்டும். "அட கயவாளிகளே! எங்களை இந்நாள்வரை ஏமாற்றி ஆதரவைப் பெற்றுக் கொண்டு இப்போது எங்களை நட்டாற்றில் விட்டதுமல்லாமல் பெருமை வேறு பேசுகிறீர்களே" என்று கேட்டிருக்க வேண்டும். ஏனோ இன்றுவரை எவரிடமிருந்தும் இந்தக் கேள்வி எழவில்லை. ஒருவேளை தேசியம் என்ற சரியான உணர்வு இன்னும் தமிழக மக்களிடம் உருவாக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அல்லது இந்த இயக்கத்தில் உண்மையான தேசிய உணர்வை ஊட்டத்தக்க ஆற்றல் உள்ள தலைவன் ஒருவன் இதுவரை உருவாகாதது காரணமாக இருக்கலாம். அல்லது தமிழகத்தில் ஓர் உண்மையான தேசியச் சிக்கலே இல்லாமலிருக்கலாம். ஆனால் தமிழகத்திலுள்ள மக்களின் உணர்வுக் காற்றை நுகரும் திறனுள்ள மனச்சாட்சியுள்ள எவரும் இங்கு ஒரு தேசியச் சிக்கல் இல்லை என்று கூறத் துணியமாட்டார்.

இவர்களின் இந்தக் கூற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. "நாங்கள் எங்களை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டு ஏமாற்றி வைத்திருக்கிறோம். அதற்குரிய எங்கள் பலனை நாங்கள் அடைவதில் குறுக்கிடாதீர். அப்படிக் குறுக்கிட்டால் அதன் விளைவுகளுக்கு நீங்கள் ஆளாக வேண்டியிருக்கும்" என்று தில்லியுடன் பகரம் பேசுவதற்கான எச்சரிக்கையாக இச்சொற்றொடார் பயன்பட்டது.

இவ்வாறு எச்சரிக்கை விடும் நிலையில் எந்தத் திராவிடத் தலைவரும் இல்லை என்பது தான் இன்றைய நிலை.

இந்திரா காந்தி ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்து ஒரேயொரு முறை ஆட்சியைத் கலைத்த உடனேயே இந்த மிரட்டல் உத்தி ஆவியாகிப்போய்விட்டது. தில்லித் தலைமையின் காலைப் பற்றிய கைகள் இன்னும் நகரவில்லை. மொரார்சி தேசாய் "இந்திரா காந்திக்குத் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆதரவளிக்கப் போகிறாயா" என்ற ஒரே கேள்வியிலேயே ம.கோ. இராமச்சந்திரனின் அனைத்து நாடிகளும் ஒடுங்கிப்போய்விட்டன.

இன்று சுப்பிரமணியம்சாமி ஊழலைப் பற்றியும் ஆட்சிக் கலைப்பைப் பற்றியும் மிரட்டிக்கொண்டேயிருக்கிறார். அம்மையார் அவ்வப்போது தில்லி சென்று உயரிடங்களில் "பாத தரிசனம்" செய்து வருகிறார்.

தமிழக வரலாற்றில் நினைக்க நினைக்க மனதில் ஆழமான துயரத்தையும் நம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் கழிவிரக்கத்தையும் ஏமாற்றையும் இரண்டகத்தையும் பற்றிய குமுறலையும் நம் நாட்டுக்கு ஏற்பட்ட இழுக்கு பற்றிய ஆத்திரத்தையும் கடுஞ்சினத்தையும் எழுப்பும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. மதுரையை ஆண்ட நாயக்கர் மரபைச் சேர்ந்த அரசி மீனாட்சியின் வரலாறே அது. ஆர்க்காட்டு நவாபின் மருமகன் சந்தா சாகிப்பின் தாக்குதலிலிருந்து தன் ஆட்சியைக் காப்பற்ற அவள் ஒரு கோடி உரூபாய் கையூட்டாக அவனுக்கு வழங்கினாள். (முகலாயர்களிடமிருந்து தன் ஆட்சியைக் காத்துக்கொள்ள புகழ் பெற்ற அரசி மங்கம்மாள் இந்தப் பழக்கத்தைத் தொடங்கி வைத்தாள். 18 ஆம் நூற்றாண்டில் ஒரு கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரும் தொகை. ஐரோப்பாவில் மக்களிடம் திரண்ட பணம் தொழிற்புரட்சி மூலம் வளர்ந்து உலகைக் கைப்பற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நம் மக்களின் உழைப்பும் வியர்வையும் தேடிய செல்வம் ஆட்சியாளர்களால் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணும்போது நம் குருதி கொதிக்கிறது. இன்னும் நிலைமை மாறவில்லை. எனவே தான் நம் நாட்டில் மக்களுக்குக் குருதிக்கொதிப்பு நோய் மிகுதி). அப்பணத்தைப் பெற்றுக் கொண்ட விலங்கினும் கொடிய கயவன், சமயத்தின் பெயரைக் கூறிக்கொண்டு இந்நாட்டின் செல்வமனைத்தையும் உறிஞ்சிக் கரியாக்கிக் குருதியாறுகளை ஓடவிட்ட கும்பலின் கடைகெட்ட ஒரு பேராளனான சந்தா சாகிபு அப்பேதையை ஏமாற்றிச் சிறைசெய்ய அவள் மனமுடைந்து சிறைக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டாள்.

இன்றும் தில்லிக்குப் பேழைகள் பறக்கின்றனவோ என்ற ஐயம் தோன்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதுரை மீனாட்சிக்கு நேர்ந்த நிலை சென்னை மீனாட்சிக்கும் ஏற்படுமா?[1]

திராவிட இயக்கம் தமிழ்த் தேசியத்தை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டதுதான் வரலாற்று உண்மை. எவ்வளவு ஆழத்தில் தோண்டிப் புதைத்திருந்தாலும் அது முளைவிட்டு மண்ணைப் பிளந்து வெளிவருவதற்கு ஒருவேளை அதிக நாளாகலாம். ஆனால் கட்டாயம் வெளிவந்தே தீரும். இது உலக வரலாறு இடைவிடாது மெய்ப்பித்துக்கொண்டிருக்கும் உண்மையின் சாரம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] இது கட்டுரை எழுதிய காலகட்டத்து அரசியல் சூழலை வைத்துக் கூறிய கருத்தாகும்.

1 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

குமரி மைந்தன் அய்யா,

எனக்கு தனி சோழ நாடு,தனி பல்லவ நாடு தோன்றி தழைக்க வேண்டும் என்று ஆசை.நிறைவேறுமா அய்யா என் ஆசை?