19.11.17

சிலப்பதிகாரப் புதையல் - 17 அடைக்கலக்காதை

15. அடைக்கலக் காதை

நிலத்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண் டுருட்டுங் கெளரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
5 பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்
கறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து
தீதுதீச் மதுரையும் தென்னவன் கொற்றமும்
10 மாதவத் நாட்டிக்குக் கோவலன் கூறுழித்
தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
15 குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து
தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க
20 நாவ லந்தணன் தானவின் றுரைப்போன்
வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
25 மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட்டாங்
கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்
30 புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்
நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
35 துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென
விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
40 மங்கல மடந்தை மாதவி தன்னொடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
45 வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்
பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள
ஒய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
50 பொய்பொரு முடங்குகை வெண்கோட்ட டடங்கி
மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
55 எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரு மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தல்நல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
60 பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
65 மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
70 ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவ டன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
75 நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ
பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்
80 பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
85 பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
90 பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்
இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவக்
95 கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்
100 பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்
மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி யறவோன் றன்முன்
மணிமே கலையை மாதவி யளிப்பவும்
105 நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதீங் குறுமென
அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
110 உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக்
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவத் தாட்டியும் மாமாறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை
115 அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்ண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி யையையைக் கண்டடி தொழலும்
120 ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலன் முதுமகள் செவ்வியன் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி
125 மாதரி கேளிம் மடந்தைதன் கணவன்
தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
130 இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன்
மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
135 ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே யாகித் தாங்கிங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
140 நடுங்கதுய ரெய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
145 வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ
தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும்
150 மிகப்பே ரின்பம் தருமது கேளாய்
காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
155 தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்
160 பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்
சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன் றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
165 மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
170 தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி
எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்திதுநின்
மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பிக்
175 காதற் குரங்கு கடைநா ளெய்தவும்
தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்
உத்தர கெளத்தற் கொருமகனாகி
180 உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப்
பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்
பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்
185 தற்காகத் தளித்தோள் தானச் சிறப்பெனப்
பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொருபாகத்துக் கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தானத் தன்னால்
ஆயினள் இவ்வடிவு அறிமி னோவெனச்
190 சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத்
தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
195 தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்
இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்
கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு
நீட்டித் திராது நீபோ கென்றே
200 கவுந்தி கூற உவந்தன ளேத்தி
வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள்
முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப
205 மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு
செறிவளை ஆய்ச்சியர் சிலர்புறஞ் சூழ
மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
210 காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
215 எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்
வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால்
கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென்.
பொழிப்புரை
நிலத்திலிருந்து கிடைக்கும் செல்வத்துக்கு பாதுகாப்பு வாய்ந்த ஆணையை கடமையாகக் கொண்டு செலுத்தும் பாண்டியர்களுடைய பெருஞ் சிறப்புடைய செங்கோலும் குடையின் குளிர்ச்சியும் வேலினுடைய வெற்றியும் விளங்கிக் கொண்டிருக்கும் மக்கள் அப் பதியை விட்டு நீங்க நினைக்காத தன்மை மேம்பட்ட மதுரை மாநகராகிய பழம்பதியைக் கண்டு அங்கு அறத்தினை பிறர்க்கு அறிவுறுத்தும் நோக்கம் கொண்ட முனிவர்கள் நிறைந்த மதிலின் புறத்தே உள்ள மூதூர்ச் சோலையில் புகுந்து,

குற்றமற்ற மதுரையின் சிறப்புகளையும் பாண்டியனது கொற்றத்தையும் கவுந்தியடிகளுக்குச் கோவலன் கூறினான் அப்போது,

தாழ்ந்த நீரை வேலியாகவுடைய தலைச்செங்காடு(செங்கானம்) எனும் ஊரில் உள்ளவனும் நான்கு வேதங்களையும் முற்ற உணர்ந்தவனும் நன்மை செய்யும் கொள்கை உடையவனுமான மறையவர் தலைவனாகிய மாடலன் என்பவன்,

பெருந்தவ முனிவனாகிய அகத்தியனின் பொதிகை மலையை வலங்கொண்டு, குமரியின் பெரிய துறைக்கண் முறைப்படி நீராடி தம் சுற்றத்தார் இருக்கும் இடத்துக்கு மீண்டும் செல்வோன் வழி நடந்த வருத்தத்தால் உண்டான மிகுந்த தளர்ச்சியைக் தணிக்க கவுந்தியடிகள் இருந்த நிழல் படிந்த சோலையினுள் புகுந்தவனை கோவலன் சென்று அவன் அடிகளை வணங்க,

அரசன் அளித்த சிறப்பான தலைக்கோல் பட்டத்தால் சிறந்த புகழினைப் பெற்ற மாந்தளிர் போலும் மேனியை உடைய மாதவியாகிய மடந்தை நல்ல விதிவாய்க்கப் பெற்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள். தீட்டு நாட்கள் 5ம் கழிந்த பின்னர் அகவையில் முதிர்ந்த கணிகையர் மாதவியின் மகளுக்கு நல்ல புகழ் அமைந்த பெயரை இடுவோம் என்று தாங்கள் மகிழ்ச்சியுறும் வகையில் ஒரு நல்ல பெயரைக் கேட்ட போது கோவலன்,

இருள் நிறைந்த நடுச் சாமத்தில் அலைமோதும் பெரிய கடலில் மரக் கலம் உடைபட்ட எம் முன்னோன் முற்காலத்தில் முற்பிறப்பில் அறத்திணையும் தானத்தினையும் செய்தோன் ஆகையால் கரை கிட்டும் வாய்ப்பு கிட்டாமல் சில நாட்கள் நீந்திச் செல்ல, இந்திரன் கட்டளையால் இப் பகுதியில் வாழ்பவள் நான், என் பெயர் மணிமேகலை, நீ அஞ்ச வேண்டியதில்லை, உன்னைக் காக்கவே வந்தேன், உனது பெரிய தானங்களின் பயன் உன்னைவிட்டு அகலாது, எனவே துயரத்தைக் கைவிட்டு துன்பக் கடலை விட்டு வெளியே வா எனக் கூறி மந்திரத்தால் அவனைக் கொண்டு சென்று கரை சேர்த்த எம் குலத் தெய்வமான மணிமேகலையின் பெயரைக் குழந்தைக்கு இடுக என்று நீ சொன்னாய்.

மேகலையை அணிந்த ஆயிரம் கணிகையர் கூடி மணிமேகலை என்று பெயரிட்டு அக் குழவியை வாழ்த்திய அன்று மங்கலம் பொருந்திய மடந்தையாகிய மாதவியோடு சிவந்த பொன்னாகிய மழையினை சிவந்த கையாலே நீ பொழிந்தாய். அப்போது,

ஞானத்தின் நல்ல நெறிக்குச் சிறந்த எல்லையாக உள்ளவன், தானம் பெறும் நோக்கத்தோடு தளர்ந்த நடையோடு ஊன்றுகோலாகிய காலை ஊன்றி வந்த கூனிய உடலை உடைய அந்தணனை, பாகர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கும் பறை கொட்ட மதம் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்த யானை சினத்துடன் கைப்பிடிக்குள் கொண்டது.

அப்போது ஓய் எனக் குரல் கொடுத்து விரைந்து அங்கு அவ் வுயர் சாதியானை, யானையின் கைப்பிடியினின்றும் விலக்கி அதன் கையினுள் புகுந்து அதன் துளையுள்ள தும்பிக்கையினுள் அடங்கி போரிடும் கொம்புகளுக்குள்ளும் அடங்கி கரிய பெரிய குன்றின் மீது விஞ்சையன் இருப்பது போல் அதன் பிடரியிலிருந்து பெருஞ்சினம் குறையாத நிலையிலிருந்த யானையை அடக்கிய கருணை மறவனே!

தன் பிள்ளையைக் காத்த கீரியைத் தவறாக உணர்ந்து தன் மனைவி கொன்றுவிட அவளை இகழ்ந்து ஒதுக்கிவிட்டு வடக்கே கங்கையாற்றில் குளிக்கப் புறப்பட்டு விட்ட பெரும் மறையாளனின் பின்னே அவன் மனைவி வர உன் கையிலிருந்து உணவு பெற்று வாழும் வாழ்க்கை முறையானதாகாது, ஆதலால் வடமொழியில் எழுதிய இந்த ஏட்டிலுள்ள செய்தியை அறியத் தக்கவர்களிடம் நீ கொடு என்று சொல்லிப் போய்விட்டான். அவளும் கடைத்தெருவிலும் பெருங்குடி வாணிகர் வாழும் மாடங்கள் நிறைந்த வீதியிலும் வீடு வீடாக அலைந்து பாவத்தினைப் போக்கி அதனுடைய பலனைப் பெறுங்கள் என்று கூறிச் சென்றுகொண்டிருந்த பார்ப்பனியை அருகில் அழைத்து நீ உற்ற துன்பம் யாது, உன் கையில் இருப்பது என்ன என்று கேட்க, அப் பெண் தான் அடைந்த பெரும் துன்பத்தினை எடுத்துக் கூறி இச் செய்தி எழுதிய ஏட்டினை வாங்கி கைப் பொருளைக் கொடுத்து என் கொடிய துன்பத்தைக் களைந்திடு என்று கூற அஞ்சாதே, உன் துன்பத்தைக் களைவேன், மனதிலுள்ள துயரத்தை விடு என்று அப்பொழுதே வேதத்தினை உடைய முனிவர்கள் கூறிய அறநூல்களில் சொல்லியுள்ளபடி தவறு செய்த பார்ப்பனியின் துயரம் நீங்குமாறு தானம் செய்து அவளது துயரத்தைப் போக்கி காட்டுக்குச் சென்ற கணவனை அழைத்து வந்து குறையாத தன் செல்வத்திலிருந்து வேண்டிய பொருளைக் கொடுத்து நல்வழியில் நிறுத்திய தொலையாத செல்வமுடையவனே !

ஓர் பத்தினி பொய்ப் பழியினைச் சுமப்பதற்கு வறியவன் ஒருவன் அவள் கணவனுக்கு தான் காணாததைக் கண்டதாகப் பொய்ச் சான்று கூறியதால், அறுவகைத் தவறு செய்வோரை அறைந்து உண்ணும் பூதத்தின் கையிலிருக்கும் குருதிபடிந்த பாசத்தில் அகப்பட்டான். அவனது தாய் படும் துயரத்தைக் கண்டு அவனை கட்டிய பாசத்தினுள் தான் விரைந்து சென்று அடைந்து என் உயிரை எடுத்துக் கொண்டு இவனுடைய உயிரைத் தந்துவிடு என்று நீ கேட்டாய். நல்ல பெரிய பூதம் அவ்வாறு தராததுடன் கீழ்மகன் ஒருவன் உயிருக்காக நல்ல ஓர் உயிரைப் பறித்து உயர் நிலையை இழக்கும் பண்பு எனக்குக் கிடையாது, எனவே உன் கருத்தை மாற்றிக்கொள் என்று அவன் முன்னாலேயே அவனை அடித்து உண்டது. வருந்திய உள்ளம் கொண்ட அவளுடன் சென்று அவன் சுற்றத்தாருக்கும் தொடர்பு கொண்ட கிளைகளுக்கும் அன்பால் பற்றிய சுற்றத்தார் போல் கருதிப் பசியாகிய நோயை அகற்றி பல ஆண்டுகள் காத்த வறியோர் தலைவனே!

அறிவால் முதிர்ந்த கோபாலனே, நான் அறிய இந்தப் பிறப்பில் நீ செய்தவை அனைத்தும் நல்வினைகளே. இணை கூற முடியா தனிமையில் உழன்று திருமகளை ஒத்த இந்த மாணிக்கத் தளிருடன் இங்கு வந்தது முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனோ என்று கேட்டான் மாடலன்.

அதற்குக் கோவலன், ஒரு கீழ் மகனால் புரத்தலில் வல்ல பாண்டிய மன்னனுடைய காவலை உடைய இம் மதுரை நகரின் மணக்கும் ஐவகைக் கூந்தலையுடைய இவள் கண்டால் நடுங்கத்தக்க துன்பத்தினை அடைய உடுத்த ஆடை பறிக்கப்பட்டு எருமை மீது நான் ஏறிச் செல்லவும் அழகுடைய பின்னப்பட்ட கூந்தலையும் ஆராய்ந்த அணிகலன்களையும் உடைய இவளோடு பற்றினை அறுத்த மேலோர் பெறும் பேற்றினை யான் பெறவும் மலர் அம்புகளை வெறு நிலத்தில் வீசி மன்மதன் செயலற்று ஏக்கங் கொள்ளும் வண்ணம் அழகு விளங்கும் போதியில் விளங்கும் அறவோனாகிய புத்தனிடத்து மணிமேகலையை மாதவி கொடுக்கவும் நனவினில் போலச் செறிந்த இருளினை உடைய நடுயாமத்தில் கனவு கண்டேன். எனவே பொல்லாங்கு ஒன்று விரைவில் வந்து சேரும் என்று சொன்னான்.

துறவறத்தை மேற்கொண்ட முனிவர்களுக்கு அன்றி கோட்டைக்கு வெளியிலுள்ள இந்த இருப்பிடம் ஒவ்வாது ஆதலாலும் கோட்டையின் உள்ளே வாணிகர் உன் புகழால் உன்னை அறிந்து எதிரேற்றுக் கொள்வார் ஆதலாலும் நீ இவ்விடத்து இருப்பை அகற்றிவிடு. கதிரவன் மறையும் முன்பாக உன் மனைவியோடு மாடங்களையுடைய மதுரை நகரத்தினுள் சென்று விடு என்று கவுந்தியடிகளும் மறையோனாகிய மாடலனும் கூறினர் அப்போது,

அறத்தையே நினைக்கும் நெஞ்சையுடைய முனிவர்கள் நிறைந்த கோட்டைக்கு வெளியிலுள்ள பழம் பதியில் உள்ள பூப்போன்ற கண்களை உடைய இயக்கிக்கு முறையாக பால் சோறு படைத்து மீள்பவளாகிய ஆயர் குடியில் பிறந்த முதியவளான மாதரி என்பவள் கவுந்தி அடிகளைக் கண்டு அவரது அடிகளை வணங்கினாள்.

பசுக்களைப் பிணி முதலியவற்றிலிருந்தும் காப்பாற்றி புல், நீர் முதலியவை அளித்துப் பேணி அதன் பயனை யாவருக்கும் கொடுக்கின்ற ஆயர்களுடைய வாழ்க்கையில் தீமை இல்லை, ஆகவே இவள் தீங்கு செய்யமாட்டாள். இவள் முதியவள், நல்லவள், அன்புள்ள எளியவள். எனவே இம் மாதரி இடத்தில் கண்ணகியை இருத்துவதில் தப்பு ஒன்றும் இல்லை என்று எண்ணினாள்.

மாதரியே கேள், இப் பெண்ணின் கணவனது தந்தையின் பெயரைக் கேட்பாராயின் அவன் குலத்தில் பிறந்த இந் நகரத்தில் வாழ்வோர் பெறுதற்கரிய செல்வத்தினைப் பெற்றோர் போன்று தமது விருந்தினராக எதிர்கொண்டு அழைத்துக் இக் கரிய பெரும் கண்களை உடையவளோடு தமது காவலை உடைய இல்லத்தில் வைத்துக்கொள்வர், அங்ஙனம் அப் பெரும் செல்வம் உடையார் இல்லத்தில் புகும் வரைக்கும் இடைக்குலப் பெண்ணாகிய உனக்கு இவளை அடைக்கலமாகக் கொடுத்தேன்.

மங்கலமுள்ள இந்தப் பெண்ணை தூய நீரால் குளிப்பாட்டி சிவந்த கயல் போலும் நீண்ட கண்களில் மை எழுதி தேன் பொருந்திய மெல்லிய கூந்தலில் சில மலர்களைச் சூடி தூய புடவையை உடுத்தி நல்ல அணிகலன்கள் அமைந்த இவளுக்கு முன்னோர் கூறிய சிறப்புடைய தோழியரும் காவல் பெண்டும் நற்றாயும் நீயே ஆகிக் காப்பாற்று.

இங்கு என்னோடு வந்த இளங்கொடி போலும் இக் கண்ணகியின் அழகிய சிறிய அடிகள் நிலமகளும் கண்டதில்லை.

கதிரவனின் கொடிய வெய்யிலினால் தன் கணவனுக்காக நடுங்கத்தக்க துயரத்தை எய்தியும் நாவும் உலர வாட்டமடைந்தும் தனது துயரை உணராத உயர்வான குணம் கொண்ட பூங்கொடியைப் போன்ற இவள் கணவனுக்கு இனிய துணையாகிய மகளிருக்கு இன்றியமையாத கற்பாகிய இக் கடமையை மேற்கொண்ட இந்தத் தெய்வத்தை அன்றி பொலிவினை உடைய வேறு தெய்வத்தை நாம் இதுவரை கண்டதில்லை. பத்தினிப் பெண்கள் வாழும் நாட்டில் வான் மழை தவறாது, வளங்கள் குறையாது, பெரும் நிலத்தினை ஆளும் மன்னரின் வெற்றியிலும் சிதைவு தோன்றாது என்னும் பெரியோரின் அத்தகைய நல்லுரையை நீ அறியாயோ?

தவமுடையோர் தரும் அடைக்கலப் பொருள் சிறிதாயினும் அது மிகப் பெரும் இன்பத்தினை தரும். இது குறித்து நான் கூறுவதைக் கேள்:

தோட்டங்கள் நிறைந்த காவிரிப்பூம்பட்டினத்தில் மலர் விரிந்த அசோகின் சிறப்பான அழகிய நிழலில் சாவகர் (சமணர்) பலர் ஒன்று சேர்ந்து இட்ட ஒளி விளங்கும் சிலாவட்டத்தின் மேல் எழந்தருளி அறவுரை கூறும் சாரணர் முன்பு,

வானவில்லைப் போன்று ஒளிவிடும் மேனியுடன் பூமாலை, மணிமாலை, பொன் அணிகள் ஆகியவற்றை அணிந்த இவ் வுலக மக்கள் காண முடியாத தேவர் பலரும் வணங்கும் தெய்வ வடிவினை உடையவனும் ஒரு பக்கத்துக் கை கரிய விரலையுடைய குரங்கின் கையாக உடையவனும் ஆன பெரும் வெற்றியுள்ள தேவனொருவன் வந்து நின்றான். அவனை,

உலக நோன்பிகள் (சாவகர் - இல்வாழ் சமணர்) யாவரும் சாரணரை வணங்கி இங்கு இத் தேவனது வருகை எதனை முன்னிட்டு என்று கேட்டனர். அதற்குச் சாரணர் தலைவன்,

எட்டிப் பட்டத்துடன் இல்லறத்தில் ஈடுபட்ட சாயலன் என்பான் பட்டினி விட்டு உண்ணும் நோன்பிகள் பலரும் வந்து சேர்கின்ற இல்லத்தில் பெரிய தவத்தன்மையுள்ள ஒருவனை சாயலன் மனைவி தன் தீவினை நீங்க எதிர்கொண்ட போது,

அவ் வூரிலுள்ள சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி அவ் வீட்டினுள் நுழைந்து அருளறத்தைக் கடைப்பிடிக்கும் அத் தவமுனிவன் திருவடிகளை சேர்ந்திருந்து அவன் உண்டு மிஞ்சிய எச்சிலையும் ஊற்றிய நீரையும் பெரு விருப்போடு சிறிது உண்டு தன் முகத்தை நோக்கிய இன்பம் தரும் காட்சியைக் கண்ட நிலையான குறிக்கோள் உடைய மாதவன் மகிழ்ந்து இல்லத்துத் தலைவியை நோக்கி உன் மக்களைப் போன்று இக் குரங்கினைக் காத்திடுக என்றனன்.

அத் தவமிக்கோன் கூறிய உண்மையான சொற்களைக் கடைப்பிடித்து அன்பு நிறைந்த அந்தக் குரங்கு இறந்த பின்னரும் தானம் செய்யும் போது அக் குரங்குக் கென்று ஒரு பங்கை அதன் இழிந்த பிறவி ஒழிக என்று கருதிச் செய்து வந்தாள் ஆதலால், நடுநாட்டில் வாரணவாசி என்ற நகரில் உத்தர கெளத்தன் என்னும் ஒருவனுக்கு மகனாகப் பிறந்து அழகிலும் செல்வத்திலும் அறிவிலும் மேம்பட்டு விளங்கி பெருவிறல் தானங்கள் பலவற்றையும் செய்து அப் பிறவியில் முப்பத்திரண்டாம் ஆண்டில் இறந்த பின்னர் தேவர் வடிவத்தினைப் பெற்றான்.

ஆகையால் தான் பெற்ற செல்வத்தின் பெரிய பயன் யாவும் தன்னைக் காத்து ஊட்டி வளர்த்தவளின் தானத்தின் சிறப்பினால்தான் என்பதை நினைத்து முன் பிறவி முதல் குரங்காய் இருந்த போதுள்ள கையை ஒரு பாகத்தில் கொண்டு தானம் செய்யும் கொள்கையின் படி வாழ்ந்த சாயலன் மனைவியின் தானத்தால் இவ் வடிவை எய்தினான் என்று சாவகர்களுக்குச் சுட்டிக் காட்டி அறிவுரை கூற இத் தெய்வ குமரன் இங்ஙனம் தோன்றினான் என்று கூறினார்.

சாரணர் மொழிந்த நல்ல அறவுரையை அந் நாளில் தெய்வ வாக்காகக் கொண்டு அறத்தின் வடி செயல்பட்டோரும் அந் நகரத்தில் உள்ள அரிய தவமுடையோரும் தனக்கென வாழாத சிறப்புடைய இல்வாழ் துறவிகளும் தானம் செய்த எட்டியும் அவன் மனைவியும் முடிவில்லா இன்பத்தினை உடைய வீட்டுலகத்தினை எய்தினர்.

நான் கூறிய இவற்றைக் கேட்டு மனங்கொண்டாய் ஆயின் மலர் சூடிய கூந்தலை உடைய இவளோடு காலந்தாழ்த்தாது நீ செல்வாய் என்று கவுந்தியடிகள் கூற அதைக் கேட்ட மாதரி மகிழ்வெய்தி கவுந்தி அடிகளைப் போற்றினாள்.

வளர்கின்ற இளமையான அழகிய முலைகளையும் மூங்கில் போன்று வளைந்த பெரிய தோளினையும் இளைய நாணல் முளை போன்ற வெண்மையான பற்களையும் கொண்ட பேரறிவுடைய கண்ணகியோடு கதிரவன் மறைந்த பின் உள்ள ஒளி மங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், கன்றினை நினைத்து வரும் ஆக்களின் கனத்த குரல் ஒலிக்க - ஆட்டு மறியையும் கோடரியையும் உறியையும் சுமந்த தோளை உடைய இடையர்களோடு நிறைய வளையலை அணிந்த ஆய்ச்சியர் சிலர் அம் மூவரையும் சூழ்ந்து வந்தனர்.

காவற்காடும் அகழியும் வளைந்து தானே எய்யும் வில் பொறியும் கரிய விரலை உடைய கருங்குரங்கு போன்ற பொறியும் கல்லினை வீசுகின்ற கவணும் அண்டினாரைத் துன்புறுத்தும் வெம்மை மிக்க நெய்யையும் சாணத்தையும் செம்பையும் உருக்கும் குழிசிகளும் இரும்பைப் பழுக்கக் காய்ச்சி உருக வைக்கும் உலைகளும் கல் இடப்பட்டு நிறைந்த கூடைகளும் தூண்டில் கருவிகளும் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலியும் கயிறும் ஆண்டலைப் புள் அதாவது கோழியின் வடிவமாக அல்லது தலை ஆண்மகனுடையதும் உடல் பறவையினுடையதாகவும் உள்ள வடிவில் இருக்கும் அடுப்பும் அகழியிலிருந்து ஏறுகிறவர்களைத் தள்ளும் கவையும் கழுக்கோல் ஊசியும் அம்புக் கூடுகளும் ஏவறைகளும் (கொத்தளங்களும்) நெருங்கினார் தலையை நெருக்கித் திருகும் மரங்களும் (புறவாயிலிலே கதவுக்கு காவலாகத் தூக்கப்படும் மரம் என்றும் அம்புகள் கட்டும் கயிற்றைத் தூக்கி போகவிடும் விட்ட மென்றும் சாணம்புக்கூடு என்றும் சிற்றம்புகள் வைத்து எய்யும் பொறி என்றும் பொருட்கள் உண்டு) மதிலை பிடித்து ஏறுவோரின் கையை நடுங்கச் செய்யும ஊசி வடிவப் பொறியும் பகைவர் மேல் சென்று தாக்கும் சிச்சிலிப் பறவை வடிவான பொறியும் மதில் மேல் ஏறினாரைக் கொம்பால் கிழிக்கும் பன்றிப் பொறியும் மூங்கில் வடிவில் அடிப்பதற்காக நிறுவியுள்ள பொறிகளும் கதவிற்கு வலிமையாக உள்வாயிலில் நிலத்தில் நிறுத்தப்பட்ட மரங்களும் வலிமை மிக்க கணைய மரங்களும் எறி கோலும் சிறு ஈட்டியும் வேலும் சூட்டுகளும் மதிலுக்குரிய பிற பொறி முதலியனவும் சிறப்புற்று

நாள்தோறும் உயர்த்தப்படும் கொடிகள் அசையும் மதில் வாயிலைக் கடந்து இடையர் மகளாகிய மாதரி தன் வீட்டினுள் அடைக்கலம் கொண்ட கோவலன் கண்ணகியோடு புகுந்தாள்.

இக் காதையின் சிறப்புகள்:

1. உலகின் மாபெரும் இலக்கியப் படைப்பாளியான இளங்கோவடிகளின் சிறப்புகளிலொன்று கதையை நேர்கோட்டில் நகர்த்திச் செல்லாது திடீர்த் திருப்பங்களில் கொண்டுநிறுத்தி நம்மை அதிர வைத்தல். யாமறிந்த வரை கி.பி.19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன் உலகில் எவரும் கையாளாதது இந்த உத்தி. கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்து திரும்பிய சூழலில்தான் அவ்வப்போது அவளுடன் ஊடல் செய்து கண்ணகியிடம் வருவதும் அவன் மறுநாள் காலையில் ஊடல் தணிந்து திரும்பாவிட்டால் இவளே கண்ணகியிடம் சென்று இரந்து அவனை மீட்டுவருவதுமான செய்தியை எளிதில் புரிந்துகொள்ளாத வகையில் சொன்னாரென்றால், முற்றா மழலையில் சொல்லிச் சொல்லி காதல் மடல் எழுதியவளாகக் காட்டப்பெறும் மாதவிக்கு ஒரு மழலைச் செல்வம் இருக்கிறது என்று கற்பனையே செய்ய முடியாதவாறு கதையை நகர்த்திச் சென்று மாதவியுடன் தன் நகரையும் நட்பு, உறவுகளையும் விட்டு அயல்நாட்டுத் தலைநகரை அடைந்த இடத்தில் தன்னை அறிந்தவனான மாடல மறையோன் மூலம் ஏற்கனவே மாதவிக்குக் குழந்தை பிறந்திருந்த செய்தியை படிப்போருக்கு எடுத்துவைத்திருக்கும் உத்தி நம்மை மலைக்க வைக்கிறது.
2. பேறுகாலத் தீட்டு இன்று 41 நாட்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அடிகள் “வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்” என்பதன் மூலம் அதை 5 நாட்கள் என்கிறார்.
3. அடுத்து வருவது மிக முகாமையான ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. அதாவது மாதவியின் மகளுக்கு மணிமேகலை என்ற பெயர் சூட்டியமைக்கு அவர் சொல்லும் காரணம் பண்டைத் தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு உயர்நிலையை எட்டி இருந்தது என்பதைக் காட்டும் இன்றியமையாச் சான்றாக விளங்குகிறது. இது பற்றிச் சிறிது விளக்கமாகக் கூற வேண்டியுள்ளது. கோவலனின் மூதாதையர்களில் ஒருவர் கப்பலில் சென்ற போது கப்பல் கவிழ்ந்தது. ஊக்கமிழக்காமல் நாள் கணக்கில் ஒரு கட்டையைப் பிடித்து நீந்திக்கொண்டிருந்தவரை மணிமேகலைத் தெய்வம் காப்பாற்றி கரைசேர்த்த நன்றியால் அத்தெய்வத்தின் பெயரைத் தன் மகளுக்குக் கோவலன் சூட்டினான் என்று மாடல மறையோன் கூறுகிறான்.

இந்தக் கதை புத்தரின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட முற்பிறப்புகளில் நிகழ்ந்தவாகக் கூறப்படும் கதைகளாகிய புத்த சாதகக் கதைகளில் ஒன்று. காவிரிப்பூம் பட்டினத்தில் வாணிகராக ஒரு பிறவியில் பிறந்த புத்தர் கப்பல் கவிழ்ந்துவிட பிறரெல்லோரும் மனம் தளர்ந்து முயற்சியின்றி மூழ்கி இறந்துவிட இவர் மட்டும் உடைந்த ஒரு மரக்கட்டையைப் பிடித்து நீந்திக்கொண்டிருக்க மனம் கனிந்த மணிமேகலைத் தெய்வம் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்ததாகச் சொல்கிறது.

இதே கதை தாய்லாந்து நாட்டு அரசன் ஒருவனைப் பற்றியும் கூறப்படுகிறது. காவிரிப்பூம் பட்டினத்து வாணிகனை மணிமேகலைத் தெய்வம் தாய்லாந்து கடற்கரையில் விட்டுச் செல்கிறது. அங்கு அரசன் பிறங்கடை(வாரிசு) இல்லாமல் இறந்துவிட மக்கள் யானை ஒன்றின் கையில் மாலையைக் கொடுத்து அழைத்து வருகிறார்கள். யானை காவிரிப்பூம் பட்டினத்து வாணிகன் கழுத்தில் மாலையைப் போட அவன் அரசனாகிறான். இந்நிகழ்ச்சியைச் சில ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்து தலைநகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுநாளில் விளையாட்டுத் திடலையே அரங்காக வைத்து நீல ஞெகிழி(பிளாட்டிக்)ப் படலை கடலாக்கி அழகுற நடித்துக்காட்டினர்.

மணிமேகலைத் தெய்வம் பற்றிய புதிர் இத்துடன் விடுபடவில்லை. மயனின் சூரிய சித்தாந்தம் எனும் நூல் மேகலா நகரங்கள் என்பவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் லங்காபுரி என்பதும் ஒன்று. இந்த லங்காபுரி எதுவென்று ஆய்ந்த போது மூன்று இலங்கைகள் பற்றிய செய்திகள் கிடைத்தன. ஒன்று இன்றைய இலங்கை, இன்னொன்று சுறவ(மகர)க் கோட்டில் இருந்த இராவணனின் இலங்கை. மூன்றாவது நில நடுக்கோட்டில் இன்றைய உச்சையினி நகர் இருக்கும் அதே நிரைவரையில்(தீர்க்க ரேகையில்) இருந்த நிரட்ச லங்கை எனப்படும் துறைமுக நகரம்.

மனோன்மணி விலாச சுத்தவாக்கிய பஞ்சாங்கத்தில் காணப்படும் ”லங்கோஜ்யையினி மத்திய ரேகையிலிருந்து தேசாந்திரம் 34 வினாடிக்கு யோசனை 46 கிழக்கில் தஞ்சாவூர் அமைந்திருக்கிறது” என்ற குறிப்பு எம்மைத் தேடுதலுக்கு இட்டுச் சென்றது.

இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள உச்சயினி நகரம், கிரீன்வீச் நிரைவரை கிழக்கு 75°41′ யிலும், வடக்கு நேர்வரை(latitute) 23°11'யிலுமாக அமைந்துள்ளது. அது போல் இன்றைய சிறிலங்கா (Ceylon)வின் தலைநகரமும் மேற்குக் கரை நகரமுமான கொழும்பு, கிரீன்வீச் நிரைவரை கிழக்கு 79°.56' யிலும், வடக்கு நேர்வரை 6°.57'யிலுமாக அமைந்துள்ளது. அதாவது லங்கோச்சயினி மைவரை'(meridian)யிலிருந்து கிட்டத்தட்ட 5°கிழக்கில்தான் சிறீலங்கா அமைந்துள்ளது. ஆகவே ′லங்கோச்சயினி மத்தியரேகை′ என்றக் குறிப்பில் காணப்படும் ′லங்கா′ இன்றைய சிறீலங்கா அல்ல என்பது தெளிவு.

பஞ்சாங்கத்தின் மற்றொரு குறிப்பில் நிரட்சலங்கை என்ற இடம் 0°யில் (நிலநடுக்கோடு) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரட்சம் என்ற சொல்லிற்கு “பூகோள சமரேகை” என்று தமிழ்மொழி அகராதி பொருள் கூறுகிறது. அதாவது அட்சம் இல்லாத இலங்கை என்பது நேர் மொழிபெயர்ப்பு.


தமிழ்மொழி அகராதி “லங்காபுரி”யை மேகலா நகரங்கள் நான்கினுள் ஒன்று என்று கூறுகிறது. லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்ற நான்குமே மேகலா நகரங்களாகும்.

“பத்ராசுவ கண்டத்தில் கதிரவன் உச்சியில் இருக்கும் போது, பரத கண்டத்தில் எழுகிறது. கேதுமால கண்டத்தில் நள்ளிரவும், குரு கண்டத்தில் கதிரவன் மறைவும் நிகழ்கிறது. நண்பகல், கதிரவன் எழுச்சி, நள்ளிரவு மற்றும் கதிரவன் மறைவு என்றிந்த சுழற்சி பரத கண்டத்தை மையமாகக் கொண்டு உலக முழுவதும் கணக்கிடப்படுகிறது” என்று சூரிய சித்தாந்தம் 2001-70-71 விளக்குகிறது.

″புவிக் கோளத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒரே வீதத்தில் கதிரவன் ஒளிர்வதில்லை. எனவேதான் இடத்திற்கு இடம் கால வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதை விளக்க, மயன் 90 பாகை இடைவெளிகளில் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தான். இந்நான்கு இடங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவை கிழக்கிலிருந்து துவங்கி பத்ராசுவ கண்டத்தில் ஏமகூடம், பரத கண்டத்தில் லங்காபுரி, கேதுமால கண்டத்தில் ரோமகபுரி குரு கண்டத்தில் சித்தபுரிஎன நான்காகும். (சூரிய சித்தாந்தம் 2001- 38-39-40). இச்செய்திகளை டாக்டர். ஆர், ஆர், கார்னிக் தன்னுடைய ‘Mayan and Surya Siddhantha, Mayans on the high seas’ என்றக் கட்டுரையில் தருகிறார்.

மேகலா நகரம் என்ற இந்தப் பெயர் தமிழ் இலக்கியப் பின்னணியில் நம்மை நெடுந்தொலைவுக்கு இழுத்துச் செல்கிறது. கடலில் செல்லும் கலன்கள் கவிழ்ந்தால் அங்கு தத்தளிப்பவர்களைக் காக்க மணிமேகலை என்றொரு தெய்வம் இருந்ததாக சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்கள் குறிப்பிடுவதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது, பார்க்கத் தூண்டுகிறது. இந்த நான்கு நகரங்களும் துறைமுக நகரங்கள் என்ற செய்தியுடன் மேகலை என்பது அரையில் அதாவது நடுவில் அணியப்படும் ஓர் அணியுமாகும். இவற்றை இணைத்துப் பார்க்கும் போது இந் நான்கு துறைமுக நகர்களும் ஏதோவொரு பொறியமைப்பு மூலம் கடலில் செல்லும் கலன்களைக் கண்காணித்து, தேவையானால் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இன்றுள்ளது போன்ற ஓர் உயர்ந்த தொழில்நுட்பம் இருந்தால்தான் இது இயலும். என்ன நம்பக் கடினமாக இருக்கிறதா? ஆனால் என்ன செய்ய, தடயங்கள் காட்டும் தடத்தைப் பின்பற்றுவதுதானே உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் சரியான வழியாக இருக்கும்?

4. கோவலனின் ஒரு பக்கத்தை, அதாவது அதன் தீய பக்கத்தை மட்டும் இதுவரை காட்டிய அடிகள் இன்னொரு பக்கத்தை மாடல மறையோன் மூலம் காட்டுகிறார். அதாவது அவனது ஈகையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒன்று இப்போது வெளிப்படுகிறது. இதுவும் நேர்கோட்டில் இல்லாத கதைசொல் உத்தியில்.

மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவில் மாதவியும் கோவலனும் இணைந்து வந்தவர் எல்லோர்க்கும் பொன் வழங்கிய போது தள்ளாத அகவையடைந்த பார்ப்பனன் வர, மதம் பிடித்த யானை அவனைப் பிடிக்க கோவலன் யானை மீதேறி கிழவனைக் காத்தது ஒரு நிகழ்ச்சி. நம் கேள்வி, உழைப்பை இழிவென்று கூறி இரப்பதை உயர்வாகக் கருதும் பார்ப்பன நெறியைக் குத்திக்காட்டுகிறாரா அடிகள்?

5. மனைவி அறியாமல் செய்த பிழையைப் பொறுக்காத பார்ப்பான் அவள் கையில் சீட்டெழுதிக் கொடுத்து இரந்து தீட்டுக் கழிக்குமாறு தெருக்களில் அலைய விட்ட அரக்கத்தனத்தையும் இரக்கமும் வெட்கமும் கெட்ட அவர்களின் இயல்பையும் அடுத்தவன் தேட்டில் பொருளற்ற சடங்குகளைச் செய்து அதனால் தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காட்டும் திமிரையும் கயமையையும் சுட்டிக்காட்டத்தான் இந்நிகழ்ச்சியை அடிகள் இங்கு கூறுகிறார் போலும். உழைப்பெதுவும் இன்றி அடுத்தவர் உழைப்பில் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதில் பெருமைப்படும் இந்தக் கூட்டத்தைத் திருத்தினாலன்றி அந்த மண்ணுக்கு மீட்சி இல்லை.

6. இயக்கி எனும் தெய்வம் சமணர் – புத்தர்களின் காவல் தெய்வங்களுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஐயனார் எனப்படும் சாத்தனும் அவ்வாறே. மெத்தப் படித்தவர்களென்று கருதப்படும் பலரும் இதே கருத்தைக் கூறி தங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறார்கள். தமிழர்களின் வரலாற்றுத் தொடக்க காலத்தில் 7 குக்குலங்கள் இருந்துள்ளன. அவை ஒன்றாக இணையும் நிகழ்முறையில் ஒரு கட்டத்தில் இயக்கர்கள் எனப்படுவோர் நெய்தல் நிலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். சுறவம் எனப்படும் மகரக் கோட்டுப் பகுதியின் தெற்கில் ஆண்ட இராவணனும் ஓர் இயக்கனே. அவன் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் ஆண்டான் என்பதைப் புவியியங்கியலாளரின் முடிவுக்கு விட்டுவிட்டு இன்றைய தமிழகத்தில் அவர்களின் நிலை பற்றிப் பார்ப்போம். குமரி மாவட்டம் தவிர வடக்கில் எங்கும் நான் இயக்கி கோயில்களைக் கண்டதில்லை. அதே வேளையில் நெல்லை மாவட்டத்தில் இயக்கிக் கோயில்கள் இருப்பனவாகத் தெரிகிறது.

இயக்கியைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. கணிகையின் மகளாகப் பிறந்த பெண்ணின் மீது காதல் கொண்டு அவளுக்குத் தன் சொத்துகள் அனைத்தையும் மட்டுமல்ல தான் பூசகனாக இருந்த கோயிலிலுள்ள நகைகளையும் கொடுத்துவிட கணிகையின் தாய் பணமின்றி வரத் தடைவிதித்ததால் மனம் குலைந்து திரும்ப அதை அறிந்து கணிகை வாழ்வை விரும்பாமல் அவனையே மணந்து வாழக் கனவு கண்டிருந்த கணிகை அனைத்துச் செல்வங்களையும் எடுத்துக்கொண்டு அவனைப் பின்தொடர, தன்னைச் சந்தித்த அவளை மடி மீது கிடத்தி தூங்கவைத்து அளைக் கொன்றுவிட்டுச் செல்வங்களை எடுத்துச் சென்றுவிட செத்தவள் அவனைப் பழிவாங்கக் காத்திருக்க அவன் மறுபிறவியில் வாணிகனாக அவ்வழியில் வர கணிகையின் ஆவி பெண் வடிவெடுத்து கள்ளிச் செடியின் இணுக்கு ஒன்றைக் கிள்ளிப் பிள்ளையாக்கித் தூக்கிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்து அடுத்த ஊர் மக்களிடம் முறையிட காலையில் மூதலிக்கலாம்(உசாவலாம்) என்று ஒரு வீட்டில் தங்க வைக்க இரவில் வாணிகனைக் கொலை செய்துவிட்டுப் போய்விட்டாள் என்று இக்கதை கூறுகிறது இது நெல்லை மாவட்டத்திலுள்ள பழவூரில் நடந்ததால் இவளைப் பழவூர் இயக்கி என்று கூறுவர்.

இதே கதையைப் பழையனூர் நீலி என்ற பெயரிலும் கூறுவர். இன்றைய வேலூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு என்ற இடத்தில் இது நிகழ்ந்ததாகவும் வாணிகன் இவள் பேய் என்றும் தன்னைக் கொன்றுவிடுவாள் என்றும் கூறியதற்கு அவன் உயிருக்குத் தாங்கள் 70 பேரும் பிணை என்று இவ்வூர் வேளாளர்கள் கூறியதாகவும் அவ்வாறே பேய் வாணிகனைக் கொன்றுவிட 69 போர் தீக்குளித்துச் சாக தப்பி ஓடிய ஒருவனை நீலியே கொன்றதாகவும் இக்கதை கூறுகிறது. தனது அண்ணன் குடியிருந்த மரத்தை வெட்டி அகற்றியதால் அவர்களைப் பழிவாங்கினாள் நீலி என்பது கதையின் அடக்கம். வெள்ளாளர்களின் வாக்குத் தவறாமைக்காகப் புனையப்பட்டதாகவும் தோன்றுகிறது.

இது இவ்வாறிருக்க குமரி மாவட்டம் மணக்குடியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் கடற்கரைச் சாலையில் மங்காவிளை எனுமிடத்தை ஒட்டிய நெடுவிளை எனும் இடத்தில் சாலைக்குத் தெற்கில் இருக்கும் ஒரு கோயில் பொன்னாயுதமுடைய இயக்கியம்மன் கோயில் இதை பொன்னாருமடை இயக்கி கோயில் என்பர்.

நிறை சூலியான ஒரு பெண் கணவனுடன் சண்டையிட்டு நள்ளிரவில் தாய்வீடு நோக்கிச் சென்றாள். வழியில் பேற்றுவலி வரவும் பக்கத்தில் விளக்கு எரிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தாள். அங்கு பல பெண்கள் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். இவளைக் கண்டதும் அனைவரும் அவளுக்குப் பேறு பார்த்து அவளைத் தூங்க வைத்தனர். காலையில் கண் விழித்த அப்பெண் தான் இருப்பது ஆலமரத்தடியில் ஓட்டை உருவங்கள் எனப்படும் இயக்கியின் சிலைகளுடன் இருக்கும் பொன்னாயுதமுடைய இயக்கி கோயில் என்பதை அறிந்து பதறி கோயிலைக் கழுவி துப்புரவு செய்துவிட்டு ஊருக்குச் சென்று பின்னர் அம்மனுக்குக் கொடை நடத்தினாள் என்று ஒரு கதை உள்ளது. சிவன் இதே போன்று சென்ற பெண்ணுக்கு வழியில் பேற்று வலி வந்துவிட பெண்ணின் தாயாய்த் தோன்றி பேறு பார்த்ததனால் தாயுமானவன் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படும் கதை போலிருந்தாலும் இயக்கி ஒரு கொடுந் தெய்வம் என்ற கருத்தை உடைப்பதாக இது இருக்கிறது.

சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்த இயக்கியம்மன் கோயில் சிலைகள் மண்ணால் செய்யப்படும் ஓட்டை உருவங்கள் எனப்படுபவையாகும். இவற்றின் உட்புறம் பொள்ளலாக இருக்கும். முன்புறத் தோற்றம் திரைப் படங்களில் காட்டுவிலங்காண்டிகளைக் காட்டுவது போல் தலையில் தழைகளும் பூக்களும் பறவைகளின் இறகுகளும் கொண்ட தலை அணியும் இடையில் முழங்காலுக்கு மேலே நின்றுவிடும் பாவாடையுடனும் இருக்கும். கைகள் மணிக்கட்டோடு முடிந்துபோயிருக்கும். ஒரு கை குழந்தையை வைத்திருக்கும் தோற்றத்திலும் இன்னொரு கையில் ஓர் ஆயுதத்தை ஓங்கிய தோற்றத்திலும் இருக்கும். தலையின் பின்புறம் ஓட்டையாக இருக்கும். வைக்கோலை சிலைக்கேற்றாற் போல் கட்டி அதன் மீது குழைத்த குயவர் மண்ணைப் பூசி சிலைக்கு இறுதி வடிவம் கொடுத்து சூளையில் சுட்டால் வைக்கோல் கருகிவிட சிலை கிடைக்கும். இன்றைய சிலைகளில் ஓட்டை இருப்பதில்லை. ஒருவேளை ஓட்டைகளைத் தனித் துண்டுகள் கொண்டு அடைக்கிறார்கள் போலும்.

இயக்கி பற்றி 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வழங்கிய சில மரபுகள்: அழகிய பெண்களாக இவள் திரிவாளாம். தனியாகச் செல்லும் ஆடவர்களை மயக்கி அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுவிடுவாளாம். வண்டியில் செல்வோரிடம் சுண்ணாம்பு கேட்பாளாம். வெறும் கையிலோ வெற்றிலையிலோ கொடுத்தால் இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றுவிடுவாளாம். கத்தி அல்லது வேறு இரும்புப் பொருட்களில் வைத்துக் கொடுத்தால் அரண்டு ஓடிவிடுவாளாம். இந்த விளக்கங்களிலிருந்து எனக்குத் தோன்றிய சில கருத்துகளை இங்கு பதிகிறேன்.

மூவேந்தர்கள் தெற்கிலிருந்து இன்றைய தமிழகத்துக்குள் நுழைந்த போது இங்கிருந்த மூலக்குடிகள் பாணர், பறையர், துடியர், கடம்பர் ஆகியோர். இவர்கள் நெல் நாகரிகத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் முந்திய நிலையிலிருந்தனர். மாடு வளர்த்தும் புன்செய்த் தவசங்களைப் பயிரிட்டும் மாட்டிறைச்சியுடன் அவற்றை உண்டும் வாழ்ந்தனர். வந்தேறி மூவேந்தர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இரும்பைப் பிரித்தெடுக்கும் உத்தியில் தேவைப்படும் சுண்ணாம்புத் தேடுதலில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் கொள்ள முடியும். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைப் பகுதிகளில் தொலைவிலிருந்து பார்த்தால் காய்ந்த சாணம் போல் பரவலாகக் கிடக்கும் பொருள் நெருங்கிச் செல்லும் போது கொல்லர்களின் பட்டறைகளில் வெளியேற்றப்படும் கழிவாகிய கொல்லங்கட்டி போல் இருப்பது புலப்படும். இவை வானிலிருந்து வீழும் விண்கற்களின் சிதறல்கள் என்றும் இவற்றிலிருந்துதான் தமிழ் முன்னோர் இரும்பைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தை அறிந்தனர் என்றும் கூறுகின்றனர். அண்மையிலிருக்கும் ஆதித்தநல்லூர் மக்கள் இங்கு தாராளமாகக் கிடைத்த இந்த விண்கல் சிதறல்களிலிருந்துதான் இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தினர் என்றும் சொல்லப்படுகிறது.

குமரி. நெல்லை. தூத்துக்குடி மாவட்டங்களில் மிகுதியாக வணங்கப்படும் தெய்வமான சுடலைமாடன் கதையில் குமரியம்மன் கோயில் காவலனாக இருந்த சுடலைமாடனை ஏமாற்றி கோயிலைப் பெரும்புலையன் கொள்ளையடித்ததற்குப் பழிவாங்க அவனது கோட்டைக்குள் எறும்பாக நூழைந்து அவன் மகள் மா இயக்கியைக் கற்பழித்தானாம். பெரும்புலையனுடன் பகரம் பேசி, கொள்ளையடித்த பொருட்களை அவனே வைத்துக் கொள்ளலாமென்றும் அவன் மகள் மா இயக்கியைத் தன்னிடம் ஒப்படைத்து விடுமாறும் கேட்டு வாங்கி சுடலைமாடன் அவளைக் கொன்றானாம். இந்தக் கதை பற்றி கடலாடு காதையில் விரிவாகக் கூறியிருக்கிறோம்.

மக்கள் குக்குல நிலையிலிருந்து ஐந்நில நாடுகளை அமைத்து பூசகராட்சி தொடங்கி அது அரசர்களின் ஆட்சியாக மலர்ந்த காலகட்டத்தில் இந்திரனைப் பற்றி நம் தொன்மங்கள் குறிப்பிடுவது போல் பெண் வழியில் இந்திராணி நிலைத்திருக்க தவம் என்பது போன்ற போட்டிகளில் வெற்றி பெறுவோரே குறிப்பிட்ட கால அளவுகளில் இந்திரன் மாற்றப்பட்ட நிலை உருவானது. இந்த நிகழ்முறையில் பெரும் குழப்பங்களும் கொலைகளும் சூழ்ச்சிகளும் புகுந்துவிடும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு இந்திர பதவிக்காகத் தவம் இருப்போரைக் கலைக்க இந்திரனின் ஒற்றர் குழுவான நாரதன், இந்திரன் அவையின் ஆடல் அரம்பையர் ஆகியோரை விடுத்து அவர்களின் தவத்தைக் கெடுத்த கதைகளாலும் நம் தொன்மங்கள் நிறைந்துள்ளன. தென்னிந்தியாவில் உருவான விசயநகரப் பேரரசின் வரலாறே இருக்கும் ஆட்சித் தலைவன் இறந்ததும் அடுத்த தலைமைக்கான போட்டியாளர்கள் அனைவரையும் அகற்றி ஒருவன் பதவியைப் பிடிக்கும் போதே அவன் முதுமை எய்தி குறுகிய காலத்தில் இறந்துவிட மீண்டும் அதே பதவிப் போட்டி உள்நாட்டுப் போர் என்று வலிமை இழப்பதைத் தவிர்க்கத்தான் மரபு வழி ஆட்சி முறை உருவானது. இப்போது அரசுரிமைக்குரிய ஓர் ஆண்மகவைப் பெற்றுத்தர வேண்டிய கட்டாய குமுகக் கடமை பட்டத்தரசியின் தலைமேல் விடிந்தது. இதில் அவள் மலடியா என்ற கேள்வியை விட அவள் கணவன் மலடனா என்ற கேள்வியே முதலிடம் பெற்றது. அந்த அடிப்படையில் அவள் ஓர் ஆண் மகவைப் பெறுவதற்காக கணவனின் உடன்பிறந்தவர்கள் குல குரு, எவனாவது ஒரு பார்ப்பன மாணி(பிரம்மச்சாரி) அல்லது எவனாவது ஓர் ஆடவனுடன் கூடலாம் என்று வரையறுக்கப்பட்டது, இதில் அடிப்படை என்னவென்றால் அரசுரிமை தாய்வழியில் இருந்த காலத்தில் உருவாகப்பட்ட இந்த நடவடிக்கையின் தொடர்ச்சி தந்தை வழியிலும் தொடர்ந்ததுதான். குதிரையைக் கொன்று வேள்வி செய்து செத்த குதிரையின் ஆண்குறியை பட்டத்தரசியின் பெண்குறிக்குள் நுழைக்கும் பித்துக்குளித்தனமும் நம் தொன்மங்களின் மூலம் வெளிப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தும் மகப்பேறு கிட்டாத தசரதனைப் போன்ற மலடர்களாகவும் அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் குழந்தையை இடுப்பில் அணைத்தும் ஓங்கிய இன்னொரு கையில் ஆயுதத்துடனும் காட்சி தரும் இயக்கியின் சிறப்பு புரியும். அவளுடன் அவள் குழந்தையையும் இணைத்துத்தான் பழையோள் குழவி என்று பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவளுடன் கன்னியாய் தமிழர்களின் முதல் அரசியாய் வாழ்ந்த குமரி அம்மனையும் இணைத்த ஒரு வடிவமே ஏசுநாதரின் தாயாகிய கன்னிமேரி. கிறித்தவர்கள் கொண்டாடும் ஈசுத்தர் பண்டிகையைப் பற்றி CHAMBERS TWENTIETH CENTURY DICTIONARY கூறுவது: (O.E. ester; Ger.ostern. Bede derives the word from Eostre (Eastre), a goddess whose festival was held at the spring equinox). அதாவது இளவேனில் காலத்தில் கொண்டாடப்படும் இயோத்த அல்லது ஈத்த என்ற தாய்த்தெய்வத்தின் வழிபாட்டின் தொடர்ச்சி இது என்கிறது அகராதி. இன்றும் தமிழகம் முழுவதும் முத்தாரம்மன், முத்தாலம்மன், முப்புராதியம்மன், முப்பிடாதியம்மன் என்ற பெயர்கள் கொண்ட அம்மன் கோயில்களில் இளவேனிற் காலமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதைக் காண்கிறோம். இயக்கியம்மன் கோயில்களில் பிள்ளை வரம் வேண்டுவோர் நேர்ச்சையாக தோட்டில்களைக் கட்டுவதையும் காண முடியும். இப்படி பிள்ளை உரிய காலத்தில் பேறடையாத பெண்களுக்குப் பிள்ளை வரம் தரும் ஒரு அருள்மிக்க தெய்வமான இயக்கியம்மனை வழியில் செல்வோரை மயக்கிக் கொல்லும் கொலைத் தெய்வமாக வந்தேறித் தமிழர்கள் ஆக்கி வைத்திருந்த கொடுமையைச் சுட்டத்தானோ பூங்கண் இயக்கி என்ற அடைமொழியை அடிகளார் வழங்கியுள்ளார்.

7. ஒவ்வொரு சமயத்தாருக்கும் அல்லது வழிபாட்டினர்க்கும் தகுந்தாற் போல் ஒரு நிகழ்ச்சியை வைத்திருக்கும் அடிகளார் அம்மண சமயத்துக்காக ஒரு கதையைக் கவுந்தியடிகள் வாய்மொழியாகக் கூறுகிறார். எட்டி சாயலன் என்ற அம்மண வாணிகன் வீட்டில் அளிக்கப்பட்ட உணவை உண்ட அம்மணத் துறவி வைத்த எச்சிலை உண்ட குரங்குக்கு என்றும் உணவூட்டுமாறு துறவி ஆணையிட அதனைக் கடைப்பிடித்த பெண் வீடுபேறடையவும் குரங்கு அரச குமாரனாகப் பிறந்து தேவனாக மாறுவதும் குறித்த கதை எப்போதும் கொடுப்பவனை விட இரப்பவனுக்கே நம் பண்பாட்டில் உயர்ந்த இடம் என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது. மாடலன் வாய்மொழியாகவும் கவுந்தியடிகள் வாயிலாகவும் இந்த இழிவான கருத்தைக் குத்திக் காட்டுகிறாரா அடிகளார் என்ற ஐயம் எமக்கு. இரப்பது இழிவு என்ற வள்ளுவர் அறவுரைக்கு மாறாக இரப்போர் உயர்நிலை அடைவர் என்ற இழிவான கருத்தை மதவாணர்கள் புகுத்தி தமிழகப் பண்பாட்டையே சீர்குலைத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

8. இடைக்குல மாதரியுடன் அவள் குடியிருப்புக்குள் கோவலனும் கண்ணகியும் நுழையும் போது அந்திக் கருக்கலில் மேய்ச்சலிலிருந்து கன்றுகளை நினைத்துக்கொண்டே திரும்பும் ஆக்களையும் அவற்றோடு வரும் இடையர்கள் சுமந்து வரும் சாப்பாட்டு உறிகள், மாடுகளுக்கு உணவூட்ட கிளைகளை வெட்டப் பயன்படும் சிறு கோடரிகள் பற்றிக் குறிப்பிட்ட அடிகள் மதுரைக் கோட்டைக்குள் நுழையும் போது கோட்டையில் பொருத்தப்பட்டுள்ள எண்ணற்ற கருவிகளின் விளக்கத்தையும் தருகிறார். கிரேக்க – உரோமர் காலக் கதைகளைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படங்களில் காட்டப்படும் போர்களில் கோட்டைகளிலும் வெளியிலும் பயன்படுத்தப்படுபவற்றுக்கு ஒப்பவும் அவற்றை மிஞ்சுவனவாகவும் உள்ள ஒரு நீண்ட கருவிகளின் பட்டியலைத் தருகிறாரே அடிகளார் இவை அவரது கற்பனையில் உருவானவையா அல்லது கிரேக்க – உரோமர்கள் சொல்லக் கேட்டு பதிந்துள்ளாரா? தன் தாய்மண்ணைப் பற்றிய காப்பியம் எழுதிய அடிகளார் தன் நாட்டின் வழக்கிலிருந்தவற்றைப் பற்றித்தான் எழுதியிருப்பார். அத்துடன் இது கிரேக்க – உரோமர்களிடமிருந்து கற்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் போலில்லாமல் நேரடியாக அவர்கள் ஆட்சி செய்த வட இந்தியாவில் இவை பயன்படுத்தப்பட்டிருக்குமே. அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லையே. அப்படியாயின் இவை தமிழர்களின் புனைவுகள்தாமா, இங்கிருந்துதான் மேலையர்கள் இதைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுசென்றார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆம் என்று விடை சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை அப்படியாயின் அத்தகைய கோட்டைகளும் கருவிகளும் எங்கே, எப்படி, தடமற்றுப் போயின என்ற அடுத்த கேள்விகள் எழுகின்றன. இங்குதான் அம்மண ஒற்றர்கள் தமிழகப் பண்பாட்டின் மீது நிகழ்த்திய அரக்கத்தனமான அழிப்பு நடவடிக்கைகள் வெளிப்படுகின்றன. தமிழக மக்களாகிய முல்லை குறிஞ்சி நிலங்களைச் சேர்ந்த கள்ளரையும் பிறரையும் களப்பிரர்களாக்கித் திரட்டி இங்கிருந்த கோட்டை கொத்தளங்கள், கோயில்கள், அரண்மனைகள், வளமனைகள் மட்டுமின்றி ஒரு குட்டிச்சுவரைக் கூட மிச்சம் வைக்காமல் அழித்திருக்கிறார்கள். ஆடல் பாடல்களைத் தடைசெய்து அவற்றை நிகழ்த்திய மக்களை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கிறார்கள். கட்டிடக் கலை உட்பட்ட ஐந்தொழில் கொல்லர்களையும் நாட்டிலிருந்து அகற்றியுள்ளனர். தொல்காப்பியத்தில் இசை சார்ந்த செய்யுளியலை எடுத்துவிட்டு வரட்டுச் செய்யுளியல் ஒன்றையும் புகுத்தியுள்ளனர். இவற்றை முன்னறிந்துதான் இளங்கோவடிகள் இயன்றவரை செய்திகளைப் பதிந்து நமக்குத் தந்துள்ளார்.
★ ★ ★

27.10.17

பணத்தோட்டம் – மதிப்புரை.



பணத்தோட்டம் – மதிப்புரை.
குமரிமைந்தன்
          பணத்தோட்டம் என்ற அழகிய, பொருத்தமான தலைப்பைக் கொண்ட இந்த நூல் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழகத்திலும் இந்தியாவிலும் உரத்தொலித்த திராவிட நாடு பிரிவினை என்ற முழக்கத்தின் பால் தமிழகத்து மக்களின் அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒரு கணிசமான பகுதியினரை ஈர்த்த ஒன்றாகும். இந்நூலில் தரப்பட்டுள்ள செய்திகளும் புள்ளிக் கணக்குகளும் காந்தி உயிருடன் இருக்கும் போதே வடக்கில் ஆலைகளின் வளர்ச்சியையும் தெற்கே அவற்றை நசுக்கும் பணியையும், வெள்ளையன் வெளியேறும் முன்பே பேரவைக் கட்சியினர் தொடங்கிவிட்டதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இன்றைய ப.சிதம்பரம் போலவே அன்றைய ஆர்.கே.சண்முகம்(செட்டியார்) தமிழகப் பொருளியலை அழிப்பதில் முனைப்புடன் செயற்பட்டிருப்பது வெளிப்படுகிறது. மாபெரும் ஆலை முதலாளியான பிர்லா வளமனையில்(மந்திர், அதாவது கோயிலில்) அமர்ந்து கைராட்டை சுற்றி, மரபுத் தேசியப் பொருளியலை வளர்க்கிறேன் என்று மனமறியப் பொய் சொல்வதற்கு காந்திக்கு நம் மக்களின் மழுமண்டைத்தனத்தின் மீது முழு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை அண்ணாத்துரைக்கும் இருந்தது. அதனால்தான் 1953இல் தி.மு.க. நடத்திய மும்முனைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட மூன்று சிக்கல்களில் ஒன்று கூட பொருளியல் குறித்ததாக இருக்கவில்லை. அவற்றில் ஒன்று ஆச்சாரியார் என்றும் குல்லூகபட்டர் என்றும் மூச்சுக்கு முன்னூறு முறை வசவும் கிண்டலும் செய்யும் இராசகோபாலாச்சாரியை நேரு நான்சென்சு என்று இழிவுபடுத்திவிட்டதற்கு எதிராக, இன்னொன்று வடக்கத்தி மார்வாரி சிமென்றுத் தொழிற்சாலை அமைத்துள்ள திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் அமைந்துள்ள தொடர்வண்டி நிலையத்துக்கு டால்மியாபுரம் என்று வைத்திருக்கும் பெயரைக் கல்லக்குடி என்று மாற்ற வேண்டுமாம். அந்தச் சிமென்றுத் தொழிற்சாலையைத் தமிழக மக்களுக்கு மாற்ற வேண்டும் என்று கூற அண்ணாத்துரைக்கு அறிவில்லையா என்ன? நம் மக்களின் மழுமண்டைத் தனத்தின் மீதான அளவில்லா நம்பிக்கைதான் காரணம். இன்னொன்று இந்தி எழுத்துக்கள் அழிப்புப் போராட்டம்.

            தமிழகத்தின் தாமசு ஆல்வா எடிசன் கோ.து.(சி.டி.)நாயுடு அவர்கள் வடிவமைத்த கரிசி(முகம் மழிக்கும் பிளேடு), வானொலிப் பெட்டி போன்றவற்றுக்கு காப்புரிமம் தர நேருவின் பனியா அரசு மறுத்ததுடன் அவர் மீது வருமான வரித்துறையையும் ஏவி விட்டது. அவர் தன் வாழ்வின் இறுதி வரை வருமான வரிக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தார். அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு இந்திய பனியா அரசு காப்புரிமம் வழங்கவில்லை என்பதை மேடைக்கு மேடை பேசித் தன் கட்சிக்கு மக்களின் கருத்தைத் திருப்ப முயன்ற அண்ணாத்துரை அதற்கு எதிராக ஒரு சிறு ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லை.

            இந்த நூலில் தமிழகத்தின், அதாவது அன்றைய சென்னை இராசதானி மீது பனியாக்களின் பொருளியல் பிடி இறுகுவதற்கு எதிராக “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்று வைத்த முழக்கத்தை பின்னர் நடப்புக்கு வந்த ஐந்நாண்டுத் திட்டங்களில் தமிழகத்துக்கு உரிய பங்கு வேண்டும் என்று ஓசைப்படாமல் மாற்றினார்.

            இடைவிடாத எண்ணற்ற பரப்பல் உத்திகளுடன் கொள்கையில்லாக் கூட்டணி அமைத்து இந்தியாவுக்கே வழிகாட்டி ஆட்சியைப் பிடித்த பின் அண்ணாத்துரை செய்ததென்ன? உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சியைப் பயன்படுத்தி சென்னை கடற்கரைச் சாலை நெடுகிலும் சிலைகள் அமைத்ததும் சென்னை என இருந்த மாநிலப் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதும் தவிர பொருளியலில் என்ன செய்தார்? உரூபாவுக்கு மூன்று படி அரிசி போடுவதாகத் தெரிந்தும் பொய் வாக்குறுதி அளித்துப் பதவியைப் பிடித்த அண்ணாத்துரை சென்னையிலும் கோவையிலும் தொடங்கிய உரூபாவுக்கு ஒரு படி அரிசித் திட்டத்தைத் தொடர முடியாமல் “கிடைத்தால் வீட்டுக்கு கிடைக்காவிட்டால் நாட்டுக்கு” என்ற அடுக்குமொழியுடன் பரிசுச் சீட்டுத் திட்டத்தைத் தொடங்கி ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் சூதாடவிட்டு தமிழக மக்களின் வாழ்க்கையைச் சீரழித்தது தவிர?

            அண்ணாத்துரை முதலமைச்சராகப் பதவியேற்ற போது முதன்முதலில் அவருக்கு பரிவட்டம் கட்டி வாழ்த்துச் சொன்னவர்கள் மார்வாரிகள் என்ற செய்தி சுட்டிக்காட்டுவது பணத்தோட்டம் என்ற இந்த நூலை எழுதிய உடனே மார்வாரிகளுக்கும் இவருக்கும் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதை அல்லவா? அவர்கள் தந்த பின்னணியில்தான் இவர் துணிந்து பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தாரா? எது எப்படி இருந்தாலும் நமது உண்மையான சிக்கல்களைக் காட்டிப் பதவியைப் பிடித்தவர்கள் அமைத்த அரசுகளின் ஆட்சிக் காலத்தில் அந்தச் சிக்கல்கள் ஆயிரம் மடங்கு முனைப்படைந்துள்ளன என்ற உண்மை இந்த நூலைப் படிப்போருக்குப் புரியும். மார்வாரிகள் தரும் பண்டங்களை வாங்கி விற்று வயிறு வளர்த்த தமிழர்களுக்கு இன்று மார்வாரியே ஊரூருக்கும் கடைகள் வைத்து மார்வாரிகள் சீனத்திலிருந்து இறக்குமதி செய்து குறைந்த விலைக்குத் தரும் பண்டங்களை விற்று உள்ளூர் சிறு வணிகர்களைக் களத்திலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும் அளவுக்கு சிக்கல் முற்றிப்போயிருக்கிறது. எனவே நாம் உடனடியாக மண் சார்ந்த நம் உரிமைகளை நிலைநாட்ட களத்திலிறங்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம் என்பதாலேயே தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் இந்தூலை மறுபதிப்புச் செய்து உங்கள் முன் வைக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

            இந்திய அரசு உருவாக்கியதாக நூல் கூறும் இண்டசுட்டிரியல் பைனான்சு கார்ப்பரேசனில் எப்படி பெரும்பான்மைப் பொறுப்புகளையும் இந்திய அரசு ஏற்றுக்கொண்டு வழிநடத்தல் குழுவில் மட்டும் ஓரிரண்டு தவிர அனைத்து இடங்களையும் பனியா முதலாளிகளிடம் கொடுத்ததோ அப்படித்தானே அண்ணாத்துரை பரிந்துரைக்கும் அரசுடைமை நிறுவனங்களிலும் நடக்கின்றன. உழவர்கள் அரசுக் கடன் நிறுவனங்களின் தொல்லைகள் தாங்காமல் நாடு முழுவதும் தற்கொலை செய்வது தொடர்கதையாக இருக்கும் போது பனியா முதலாளிகளிடம் குறைந்தது 8 இலக்கம் கோடிகள் வாராக்கடன்கள் நிற்பதாகச் செய்திகள் கூறுகின்றன். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் போராட்டத்துக்கு இந்நூல் தரும் செய்திகள் பயன்படும் என்று நம்புகிறேன்.
குமரிமைந்தன்
திருமங்கலம்,
13 – 05 – 2017

பிற்சேர்க்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்சாமி துரைசாமி நாயுடு

18.11.16

சிலப்பதிகாரப் புதையல் - 16 - ஊர்காண் காதை



15 .ஊர்காண் காதை

புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும்
இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப்
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர்பொதி யவிழ்ந்த வுலகுதொழு மண்டிலம்
5       வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன்
ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப
நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
10      கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்பக்
15.     கோவலன் சென்று கொள்கையி னிருந்த
காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த
அறியாத் தேயத் தாரிடை யுழந்து
20      சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான்
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்
கென்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்
ஏத முண்டோ அடிகளீங் கென்றலும்
25      கவுந்தி கூறுங் காதலி தன்னொடு
தவந்தீர் மருங்கின் தனித்துய ருழந்தோய்
மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
30      யாப்பறை மாக்கள் இயல்பிற்  கொள்ளார்
தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்
ஒய்யா வினைப்பயன்  உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
35      பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்
உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்
புரிகுழன் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்லது
ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகிற்
40      கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்
கண்டன ராகிக் கடவுளர் வரைந்த
காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்
கேமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் இறந்தோர் பலரால்
45      தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின்
          தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
50      வல்லா டாயத்து மண்ணர சிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவிக் கானகத் தாயிழை தன்னை
55      இடையிருள் யாமத் திட்டு நீக்கியது
வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்
சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ
அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே
60      வருந்தா தேகி மன்னவன் கூடல்
         பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும்
          இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
65      சுருங்கை வீதி மருங்கிற் போகிக்
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்
காயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்
70  குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகின்
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரோடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்
75      பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து
தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும்
கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழூநீர்த் தாதுவிரி பிணையல்
   80   கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு
தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப்
பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு
எற்படு பொழுதின் இளநிலா முன்றில்
தாழ்தரு கோலந் தகைபா ராட்ட
85      வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்
கரத்தப் பூம்பட்ட டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
90      குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு
         மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக்
95      கலிகெழு கூடற் செவ்வணி காட்டக்
காரர சாளன் வாடையொடு வரூஉம்
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில் தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
100    நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு
குறுங்கண் அடைக்குங் கூதிர்க் காலையும்
வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை
105    அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும்
ஆங்க தன்றியும் ஓங்கிரும பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலுந் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
110    கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்
கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்
காவும் கானமும் கடிமல ரேந்தத்
115    தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து
மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று
உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலைக்
120    கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
125    ஒசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள்
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
130    பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
135    நறுமலர் மாலையின் வறிதிடங்  கடிந்தாங்
கிலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
140    அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன
செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
         திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
         செவ்வி பார்க்குழு செழுங்குடிச் செல்வரொடு
145    வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்
         சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
         முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை
         வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
         மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
150    ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
155    வாரம் பாடுந் தோரிய மடந்தையும்
தலைப்பாட்டுக் கூத்தியு மிடைப்பாட்டுக் கூத்தியும்
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தென்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
160    தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு
அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்
தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்
165    ஏம வைகல் இன்றுயில் வதியும்
பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
170    அதள்புனை அரணமும் அரியா யோகமும்
வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்
ஏனப் படமும் கிடுகின் படமும்
கானப் படமும் காழூன்று கடிகையும்
செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்
175    வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்
வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்
180    காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
185   பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்
பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச வுருவின் பொலந்தெளித் தனையவும்
தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்
190    இருள்தெளித் தனையுவும் இருவே றுருவவும்
         ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்
195    சந்திர குருவே அங்கா ரகனென       
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
200    பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஒங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்
205    நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
210    கால மன்றியுங் கருங்கறி மூடையொடு
கூலங் குவித்த கூல வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும், திரிந்து
215    விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப்
பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்
காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக்
கோவலன் பெயர்ததனன் கொடி மதிற் புறத்தென்.
பொழிப்புரை
அங்ஙனம் புகுந்த புறஞ்செரியிலுள்ள சோலையிலும் நீர் நிறைந்த பண்ணைகளிலும் வளைந்த கதிர்களை உடைய வயல்களிலும் பறவைகள் துயில் நீங்கி ஒலி எழுப்ப,  புலர்கின்ற வைகறைப் பொழுதில் குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்தே உலகிலுள்ளோர் யாவரும் வணங்கும் கதிரவன் பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம் வாளினை ஏந்திய பாண்டியனது ஓங்கி உயர்ந்த மாட மதுரை நகரத்தினைத் துயில் எழுப்ப,

நெற்றியில் விழித்த கண்ணையுடைய சிவபெருமானுடைய கோயிலும்
கருடச் சேவலைக் கொடியாக ஏந்திய திருமாலின் கோயிலும்
வெற்றி தரும் கலப்பையை ஏந்திய வெள்ளையனாகிய பலதேவனுடைய கோயிலும்
சேவல் கோழிக் கொடியை உடையவனான முருகனின் கோயிலும்
அறத்தின் துறைகளைப் பலரும் அறியக் காரணமான முனிவர்களுடைய பள்ளிகளும்
மறம் குறித்த செயற்பாடுகள் சிறந்து விளங்கும் அரசனது கோவிலும் ஆகிய இவ் விடங்களில்

தூய வெண்மையான சங்கோடு கொடை முரசு, வெற்றி முரசு, முறை முரசு என்று மூன்று வகைப்பட்டு ஓங்கி ஒலிக்கும் காலை முரசம் கனைக்கும் உரத்த குரலோடு ஒலியெழுப்ப

கோவலன் சென்று தவநிலையில் இருந்த கவுந்தி அடிகளைக் கையால் தொழுது நாவால் போற்றி

நல்லொழுக்கத்திலிருந்து தவறியோரின் தன்மையை உடையனாகி நறிய மலர் போலும் மேனியை உடைய இவள் நடுக்கந்தரும் துன்பங்களை அடைவதற்குக் காரணமாக,  முன்பின் தெரியாத நாட்டினில் கடுமை மிகுந்த பாதையில் நடந்து வருந்தி தவங்களைச் செய்த தாயே நான் இழிவுற்றேன்,

பழமையான இந் நகரத்திலுள்ள வாணிகர் குலத்தவருக்கு எனது நிலைமையை அறிவித்து நான் திரும்பி வரும் வரைக்கும் பசிய தொடியினை உடை இவள் உங்களது திருவடிகளாகிய காவலை உடையவள் அதனால் அவளுக்கு நேரும் தீங்கு ஒன்றுமில்லை என்று கூறினான்.

அதற்குக் கவுந்தியடிகள, காதலையுடைய மனைவியுடன் அறத்துக்குப் பொருந்தாத செய்கையாலே இணைகூற முடியாத துயரத்தைப் பட்டவனே என்று கூறி,

மறம் சார்ந்த செயல்களிலிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் வலிய வினை வந்து உங்களை நுகர வைக்கும் என்று அறத்துறை சார்ந்த பெரியோர் அவரவர் திறமைக்கு ஏற்ப, நாவைக் கோலாகக் கொண்டு வாயாகிய பறையில் அறைந்து அறைந்து கூறினும் உறுதியான அறிவில்லாத மக்கள் அதனை தம் இயல்பினுள் சேர்த்துக் கொள்ளமாட்டார். அவற்றின் பயனாகிய தீயவினைகள் வந்து நெருக்கும் காலத்தில் தம் அறியாமையால் மிகவும் கலங்கிப் போய்விடுவார்,

தீவினையின் விலக்க முடியாத பயன்களை நுகரும் காலத்தில் செயலற்று நிற்கமாட்டார் அறநூல்களைக் கற்றறிந்த பெரியோர்,

பெண்களைப் பிரிவதால் வரும் துன்பமும் அவர்களைப் புணர்வதால் வரும் துன்பமும் அக் காலங்களில் காமன் நம் மீது செலுத்தும் நெருக்கடிகளான துன்பமும் பின்னிய கூந்தலை உடையவராகிய பெண்களைப் புணர்ந்தவர்களுக்கு அல்லாமல் ஒப்பற்றதாகிய தனித்த வாழ்க்கையை உடைய பெரியோர்களுக்கு இல்லை.  உலகில் பெண்களும் உணவும் இன்பம் என்று கொண்டு வாழ்பவர்கள் அடையும் தாங்க முடியாத துன்பத்தினைக் கண்டுணர்ந்தவர்களாகி தவிர்த்த, காமத்தைச் சார்ந்து கரைகாண முடியாத துன்பத்தை அடைந்தவர்கள் இக் காலத்தில் மட்டுமின்றி கடந்த காலங்களிலும் பலருண்டு. இது காலங்காலமாக நடக்கும் பழமையான நிகழ்ச்சி.

எனவே, தந்தையின் ஆணைப்படி தன் மனைவியோடு சென்று அவள் பிரிந்ததாலே மிகுந்த துன்பத்தை அடைந்தவன் வேதத்தை அருளிய பிரமனைப் பெற்றவனாகிய திருமால் என்பதை நீ அறிந்ததில்லையா அது எவர்க்கும் தெரிந்த செய்தியல்லவா?

சூதாடும் வட்டிலில் நிலத்தின் ஆட்சியை இழந்து மெல்லியளாகிய தமயந்தியுடன் வெம்மையான காட்டை அடைந்த நளன் விரும்பி அவளைப் பிரியவில்லை, அவளும் குற்றம் செய்யும் தன்மை உடைய சிறுமை கொண்டவளும் அல்லள். அடர்ந்த காட்டுக்குள் இருள் நிறைந்த நடுயாமத்தில் அவளை விட்டு நீங்கச் செய்தது வல்லமை கொண்ட வினை அன்றோ? அது தமயந்தியின் பிழையே காரணம் என்று சொல்வது உண்டாயின் எனக்கு அதை நீ சொல் பார்க்கலாம்.

நீ அவர்களைப் போன்று இல்லை. உன் மனைவியோடு பிரியா வாழ்க்கை வாய்க்கப் பெற்றிருக்கிறாயே.

எனவே நடந்தவற்றை நினைத்து வருந்தாமல் மன்னனது மதுரையில் சேரத்தக்கவரைக் கண்டறிந்து இங்கு திரும்புவாய் என்று கூறினார்.

கட்டுவேலி சூழ்ந்த காவல் காட்டுடன் சேர்ந்து நீர்ப்பரப்பு விளங்கும் வளைந்து கிடந்த வலிமையான அகழியில் பெரிய யானைகளின் கூட்டம் சென்று வரத்தக்க சுரங்க வீதியின் ஓரத்தில் சென்று,

அச்சம் தரும் தோற்றத்தையுடைய மதில் வாயிலில் காவல் செய்வதில் புகழ் பெற்றவர்களும் கொல்லும் வாளை ஏந்தியவர்களுமாகிய யவனர்களைப் பொருட்படுத்தாது புகுந்து,

ஆயிரம் கண்களை உடையவனாகிய இந்திரனுடைய அரிய அணிகலன்களை வைத்திருக்கும் மேழையின் வாயைத் திறந்து வைத்தது போன்ற அந் நகரத்து எல்லையாகிய மதில் வாயிலில்,

மேலைக் காற்று வீசி கொடிகள் அலைகின்ற தெருவில் உள்ள, வரம்புகளை மீறிய பெண்களாகிய பரத்தையர் தம் மீது காதல் கொண்ட செல்வர்களுடன் இடைவிடாது நீர் பாயும் வையை ஆற்றின் மருத மரங்கள் ஓங்கிய திரு மருதத்துறை முன்னர் பரந்து பொலிவுற்ற ஆற்றிடைக் குறையின் வெண்மையான மணலைக் கொண்ட கரையில் உயர்ந்த பள்ளியோடத்தோடு தோணிகளைச் செலுத்தியும் பொலிவு பெற்ற தெப்பங்களைத் தழுவி நீந்தியும் புனலாடினர்.

குளிர்ந்த மணமுள்ள முல்லை மலரும் ஆழமான நீரில் பூத்த குவளை மலரும் கண்போல் மலர்ந்த நெய்தல் மலரும் ஆகிய இவற்றை கன்னத்தைத் தொடுமளவு செறியச் சூடி வெண்மையான மல்லிகைப் பூக்களாலான மாலையோடு குளிர்ந்த செங்கழுநீரின் விரிந்த இதழ்களையும் கொண்டு கட்டிய மாலையை கொற்கைத் துறையில் உண்டான முத்துவடத்துடன் பூண்டு  தென்திசையிலுள்ள பொதியமலையில் பிறந்த சந்தனக் குழம்பை உடல் முழுவதும் பூசி அழகிய கொடிகள் ஆடும் பழைமை பொருந்திய நகரத்தை அடுத்துள்ள சோலையில் விளையாடினர்.

கதிரவன் மறையும் பொழுதில் இளநிலா ஒளி வீசும் முற்றத்தில் தாங்கள் புனைந்த, தங்கள் மனதுக்குப் பிடித்த கோலத்தைத் தம் காதலர்கள் பாராட்ட பூக்கள் சொரிந்த கட்டிலின் மேல் இனிதாக இருந்தார்கள்.

பூப்பின்னலிடப்பட்ட செம்பட்டை, அரையில் உடுத்தி தலையில் வெட்பாலையின் பூங்கொத்துகளைக் கூந்தலில் சூடி சிறுமலை என்று அழைக்கப்படும் மலையில் பூத்த செந்நறுந்தாளிப் பூவுடன் குறிஞ்சியின் மணமுள்ள புதிய பூவைத் தலையில் சூடி குங்குமம் போன்ற வண்ணமுடைய செஞ்சந்தனத்தை (மஞ்சள் நெய்) கொங்கை மீது பூசி செங்கொடுவேரியின் வளமான செழுமையான பூவால் கட்டப்பட்ட மாலையைச் சிவந்த சுண்ணம் பூசிய மார்பிலே அழகிய பவள வடமாகிய அணியுடன் அணிந்து மலைகளின் சிறகை அரிந்த இந்திரனுக்கு ஆரவாரம் பொருந்திய கூடல் நகரத்திலே செவ்வணியைக் காட்டவென்று கார்காலத்தை ஆளும் அரசன் வாடைக் காற்றோடு வரும் காலம் அல்லாமலும்

சிற்ப நூல்  வல்லோரால் சிறப்புறச் செய்யப்பட்ட மேகம் தவழுமாறு உயர்ந்த மாடங்களில் அகில் மரத்தின் விறகால் மடமகளிர் உடலை வருடி விடும் நெருப்பின் பக்கத்தில் அமர்ந்து மணமுள்ள சாந்தை மார்பில் பூசிய மைந்தர்களோடு குறுகிய கண்களை உடைய சரளரங்களை அடைக்கும் கூதிர் காலமும்

வளமனைகளில் வாழும் மகளிரும் ஆடவரும் இளநிலாவை நுகர்வதற்கேற்ற முற்றத்தில் இளவெயிலை நுகருமாறு விரிந்த கதிரையுடைய கதிரவன் மண்டலம் தெற்கில் இயங்கும் வெண்முகில் அரிதாகக் தோன்றும் முன்பனிக் காலமும்

மிகப் பெரும் பரப்பையுடைய கடலில் உள்ள கப்பல்களின் கூட்டத்தால் தொண்டியின் அரசர்கள் திறையாகத் தந்த அகில், பட்டு, சந்தனம்,வாசம், கற்பூரம் என்பவற்றின் மணத்தைச் சுமந்து வந்த கீழைக் காற்றோடு அரசனது தலைநகரான கூடலில் புகுந்து காமனது கொடிய வில் வெற்றிவிழாக் காணும் பங்குனி மாதம் முடியும் பின்பனிக் காலமாகிய அரசன் எங்குள்ளான்,

மாலை போல் பூக்கும் குருக்கத்தி அழகிய கொடியை எடுக்கவும் இளமரக்காவும் பூங்காடுகளும் மணமுள்ள மலர்களை ஏந்தவும் பாண்டியனது பொதிய மலையின் தென்றலோடு அம் மன்னவனது கூடல் மாநகரில் புகுந்து தான் விரும்பும் துணைகளைத் தழுவுமாறு தூண்டும் இனிய இளவேனில் என்பவன் எங்கு உள்ளான் என்று,

பூங்கொடி போன்ற உருவினையுடைய மகளிர் தம்மைக் கொண்ட ஆண்மகன்களோடிருந்து அப் பருவங்களை எண்ணிப் பார்க்கின்ற துன்பம் முடிகின்ற காலமாகிய,

யானைப் பிடியின் கூட்டத்தோடு யானைக் குட்டிகள் அடங்கிய பெண் யானைக் கூட்டத்தோடு அவற்றுக்குத் துணையான ஆண்யானைகளும் நடுங்குமாறு வெய்யில் நிலைபெற்ற  மலை சார்ந்த நல்ல நாட்டில் காடு தீப்பற்றி யெரியுமாறு செறிவான தீயை மூட்டி மேலைக் காற்றோடு வந்து புகுந்து கூடலை ஆட்சி செய்த வேனிலாகிய வேந்தன் வேற்றிடங்களுக்குச் செல்ல ஆயத்தமாகும் வெய்யில் மிக்க முதுவேனிலின் இறுதி நாட்களில்,

கூடார வண்டியும் பல்லக்கும் மணிகள் இழைத்த கால்களையுடைய கட்டிலும் நீராவிச் சோலையில் வந்து சேர்ந்த துணைவர்களுடன் இன்பம் காண்பதும் சாமரையால் ஆன கவரியும் பொன்னால் செய்த வெற்றிலைப் பெட்டியும் கூர் முனையுடைய வாளும் தம் அரசன் கொடுக்க அங்ஙனம் பெற்ற விருதுகளாகிய செல்வம் எக் காலத்தும் மாறாத பொன்வளையலை அணிந்த பெண்கள் புதிய ஆடவருடன் (நித்திய கல்யாணம்) பொருந்தி,

ஏவல் பெண்கள் பொன் கிண்ணத்தில் ஏந்திய அழகிய இனிய கள்ளின் தெளிவை அருந்தி மயங்கி புள்ளிகளையுடைய, வரிபாடுகின்ற வண்டினத்தை அவை இருக்கின்ற இடங்களை விட்டு இல்லாத இடங்களில் பூமாலை கொண்டு விரட்டி இலவம்பூவின் இதழ் போன்ற சிவந்த வாயில் இளம் முத்துப் போன்ற பற்கள் தோன்ற முறுவலித்து ஊடலின் போது வாய்க்கு வந்தவாறு பேசிய நீலோற்பலம் போன்ற கண்களை உடையோர் சொல்பிறக்கும் எட்டு இடங்களில் இறுதியிலுள்ள நாவால் சொல்லாமல் சிரிப்பால் கூறும் கலவிப் பொருள் பொதிந்த சொற்களையும் அழகிய செங்கழுநீரின் அரும்பை நெகிழவைத்துப் பார்த்தாற் போன்ற சிவந்த கயலினை ஒத்த நீண்ட கண்ணின் கடை சிவந்து காட்டிய பூசலையும் கொலைத் தொழில் செய்யும் வில் போன்ற புருவத்தின் அழகிய கோடிகள் உள்வளைய திலகம் அணிந்த சிறிய நெற்றியில் அரும்பிய வியர்வையையும் அழகு பார்க்கும் வளமான குடியில் பிறந்த செல்வர்களோடு நாட்டைக் காக்கும் அரசர்க்கும் உயரதிகாரிகளுக்கும் இன்பத்தைத் தரும் வீதியும்

முடிசூடிய அரசரும் பிறர் அறியாதவாறும் பாதுகாப்புடனும் தங்கி இருப்பதற்கேற்ற பெரிய மனையில் வாழும் செங்கல் தலையில் ஏற்றப்பட்டுப் பழி பெறாத சிறப்பினையுடைய வேத்தியல் பொதுவியல் எனும் இருவகைக் கூத்தின் இயல்புகளை அறிந்து அவை தம்முள் மயங்காத வகையில் ஆடும் ஆடலும் பாடலும் தாளங்களும் அவற்றின் வழி வரும் எழுவகைத் தூக்குகளும் அவற்றுடன் கூடி இசைக்கும் தோல்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி ஆகிய குயிலுவர் கருவிகளையும் உணர்ந்து

குற்றல், இயங்கல், இழுத்தல், கடத்தல் எனும் நான்கு வகைகளையுடைய அவிநயத துறையிலும் குரல் முதலாகிய எழுவகை நிலத்திலும் பொருந்திய ஆடல் பாடல்களை விரிவாகச் செய்யும் நிலைமாறாச் சிறப்பினை உடைய தலைக்கோல் பட்டமெய்திய கணிகையும் வாரப் பாட்டினைப் பாடும் தேரிய மடந்தையும் உகம் எனப்படும் தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும் ஒளகம் எனப்படும் இடைப்பாட்டைப் பாடும் இடைப்பாட்டுக் கூத்தியும்

நான்கு வெவ்வேறு வகையில் விரும்பத்தக்க முறைமையில் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னிலும் குறையாது நாள்தோறும் பெறும் முறைமையிலிருந்து பிறழாத தீண்டி வருத்தும் தேவதை போன்றவளுடைய கண்ணாகிய வலையில் அகப்பட்டு, 

            பெறுதற்கரிய அறிவும் தம்மை விட்டு நீங்க தவம் புரிந்தோராயினும் மலர் தோறும் சென்று அவற்றின் தேனைப் பருகும் வண்டு போல் அவர்களின் சிரிப்பின் தன்மையறிந்து புதியவர்களை புணரும் இளைஞர்களாயினும் புணர்ச்சி இன்பத்தை நுகர்ந்து அறியாத புதியோராயினும் அவர்களோடு நாள்தோறும் இன்பமாக உறக்கத்தில் கிடக்கும் பண்ணினையும் கிளியினையும் பழிக்கும் இனிய சொல்லையுடைய அறுபத்து நான்கு கலைகளை வல்ல பதியிலாருடைய இரு பெரும் வீதிகளையும்

            கூண்டு வண்டியும் இரண்டு உருளை உடைய சகடமும் (சக்கடா வண்டி) அழகிய தேர் மொட்டும் உடலைப் புகுத்தத் தக்க கவசமும் மனதைக் கவரும் வகையில் மணிகள் பதித்த அங்குசமும் தோலால் செய்யப்பட்ட கைக் கவசமும் அரைப்பட்டிகையும் வளைதடியும் மிகுவெண்மையான கவரிச் சாமரையும் பன்றி முகக் கேடயமும் சிறு கேடயமும் காடெழுதின கேடயமும் குத்துக் கோல்களும் செம்பால் செய்யப்பட்டவையும் வெண்கலத்தால் செய்யப்பட்டவையும் கயிற்றில் முடிபவையும் மாலையாகத் தொடுப்பவையும் மரம் அறுக்கும் வாள் முதலிய கருவிகளும் தந்தத்தைக் கடைந்து செய்த தொழில்கள் உடையவும் தந்தத்தைத் கடையும் கருவிகளும் மணப் புகைக்குத் தேவைப்படுபவையும் உடம்பில் பூசும் சாந்துக்குத் தேவைப்படுபவையும் பூவால் செய்யப்பட்டவையும் ஆகிய வேறுபாடு தெரிவதற்கு இயலாத வளங்கள் கலந்து கிடக்கிற அரசரும் பெற விரும்பும் செல்வத்தை உடைய அங்காடி வீதியும்

            பன்னிரண்டு குற்றங்களில் மிகவும் தீயனவாகிய காகபாதம், களங்கம், விந்து, இரேகை என்னும் நான்கும் நீங்கி தன்மையில் குறைவில்லாத நூலோர் கூறிய மிக நுண்மையான கோடியையும் நால்வகை நிறத்தையும் நலமான ஒளியையும் உடைய வைர வகைகளும்

            கீற்றும் தாரும் எனும் குற்றங்களையும் இருள் என்னும் குற்றமும் நீங்கிய பசுமை நிறைந்த உடலுடைய பசிய கதிரொளி பரந்த மரகத வகைகளும்

            நூல்கள் விதித்த முறை தவறாத பதுமம், நீலம், விந்தம், படிதம் எனும் நால்வகை மாணிக்க வகைகளும்
           
பூச நாள்மீனின் உருவினையுடைய பொன்னைத் தெளித்தது போன்ற புருசராக வகையும்

            குற்றமற்ற கதிரவன் ஒளியும் தெளிந்த தேன்துளியின் நிறமும் உடைய வைடூரிய வகைகளும்

            இருளைத் தெளித்து வைத்தது போன்ற நீல மணி வகைகளும் 
           
மஞ்சளும்  சிவப்பும் கலந்தது போன்ற கோமோதக வகைகளும்

            ஒன்றுபட்ட பிறப்பினையும் ஐந்து வேறுபட்ட வனப்பினையும் உடைய விளங்கும் ஒளியை உமிழும் நலம் பொருந்திய மாணிக்கம், புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதகம் என்னும் மணிகளும்

            காற்று, மண், கல், நீர் ஆகியவற்றால் உண்டாகும் குற்றம் சிறிதும் இன்றி தெளிந்த ஒளியுடையவையும் வெள்ளியும் செவ்வாயும் போல் வெண்மை, செம்மை நிறங்களுடையனவும் திரட்சியுடையவையும் ஆன முத்துவகைகளும்

            நடுவே துளைபட்டவையும் கல்லிடுக்குக்குள் புகுந்து வளைந்தவையும் திருகியவையும் எனும் இக் குற்றங்கள் அற்ற சிவந்த கொடிப் பவள வகைகளும் என்று

            இவ் வொன்பது வகை மணிகளின் பிறப்பு முதல் இறப்புவரை இயல்புகள் அனைத்தையும் தெரியவல்ல வாணிகர் கூட்டத்தால் உயர்வு பெற்று பகைவர் நெருக்கல் இல்லாத பயன்மிக்க கடைத்தெருவும்.

            சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் எனும் நான்கு சாதிகளாய் ஒங்கிய இயல்பினை உடைய பொன்னின் வகை தெரிந்த பொன்வாணிகர் எப்பொன் எவ்விடத்தில் உள்ளதென்று கலங்கும் துன்பத்தைத் தவிர்க்க அங்கங்கே கொடி நட்டு இருக்கும் நலமிக்க காசுக்கடைத் தெருவும்

            நுண்ணிய பருத்தி நூலிலும் கம்பிளியாலும் பட்டு நூலாலும் நெய்யப்பட்ட அதனதன் வகை துணிவகைகள் தெரிய நூற்றுக் கணக்காக அடுக்கி வைக்கப்பட்ட அடுக்குகள் நூற்றுக்கணக்காக உள்ள துணிக் கடைத் தெருவும்

நிறுக்கும் துலாக்கோலை உடையோராயும் பரிய அரையையும் இரும்பால் வாய்மட்டாகக் கட்டிய கண்ணையுடைய பறையினை உடையோராகவும் அளக்கும் மரக்காலை உடையுடையோராகவும் தரகு செய்வார் ஓரிடத்தில் நில்லாமல் எவ்விடத்தும் நாள் முழுவதும் திரியும், பெரிய மிளகு மூடைகளோடு கூலங்களும் குவித்த கூலக்கடைத் தெருவும் 

            பகுதி வேறுபாடுகள் தெரிந்த நால் வருணங்களுக்குரிய நான்கு தெருக்களும் முச்சந்தியும் நாற்சந்தியும் கடைத் தெருக்களும் மன்றுகளும் பல பாதைகள் கூடும் முடுக்குகளும் குறுந்தெருக்களும் உலாவி வானின் நடுவிலே வெம்மை முறுகி நிற்கும் கதிரவனின் கதிர்கள் நுழையாத பசுமையான சிறுகொடிகளும் பெருங்கொடிகளும் எனும் இவற்றின் பந்தலின் நிழலில் பாண்டிய மன்னனது பெரிய நகரினைக் கண்டு மகிழ்ந்து கொடிகளையுடைய மதிலுக்கு வெளியே  மீண்டும் சென்றான் கோவலன்.

இக் காதையின் சிறப்புகள்:
1.   முன் காதையிறுதியில் வைகறைப் பொழுதில் மதுரையின் வட எல்லையில் ஓடும் வையையாற்றுக்கு வடக்கில் இருந்து மதுரை மாநகரில் எழும் காலை ஓசைகளைக் கேட்ட கோவலன் முதலியோர் பின்னர் ஆற்றைக் கடந்து நகரை வலம் வந்து புறநகரில் உள்ள அறவோர் உறையும் சேரியை அடைந்தனர் என முடித்து இந்தக் காதையையும் வைகறைப் பொழுதின் விளக்கத்துடன் தொடங்குவது ஒரு கேள்வியை எழுப்புகிறது.
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு
பின்னையு மல்லிடைப் பெயர்ந்தனர்
என்று முன் காதையில் குறிப்பிட்டிருப்பது போல் இரவில் விடிவது வரை நடந்தவர்கள் அறவோர் பள்ளியில் ஓய்வெடுத்த பின் அடுத்த நாள் காலையில் நடந்தவற்றையே சொல்லத்தொடங்குகிறார் அடிகளார் என்பது பெறப்படுகிறது. இது போன்ற சிறு சிறு செய்திகளைச் சொல்லாமல் இன்றைய ஆப்ப இற்றையியர்கள்(Post modernists – அப்பம் = உடனே, ஆப்பம் = அப்புறம் – மாவு புளித்த பின்) கூறுவது போல் படிக்குநர்களின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அடிகளார் வாய்ப்பளித்துள்ளார்.

2.   இந்திரவிழவெடுத்த காதை, கனாத்திறமுரைத்த காதை, நாடுகாண் காதை ஆகியவற்றில் புகார் நகரத்திலுள்ள, நாடுகாண் காதையில் நாம் பட்டியலிட்டுக் காட்டிய 12 கோயில்களுக்கும் அறவோர் பள்ளிகளுகளுக்கும் மாறாக இங்கு சிவன், திருமால், பலதேவன், முருகன் ஆகியோரின் கோயில்களுடன் அறவோர் பள்ளிகளும்தாம் கூறப்பட்டுள்ளன.

      இதைக் கூறும் போது ஓர் ஐயம் எழுகிறது. பிற கோயில்களிலிருந்து வேறுபட்டவையாக புத்த, அம்மண வழிபாட்டிடங்களைப் பள்ளிகள் என்று பிரித்துக் காட்டுவது, சென்ற மூன்று நூற்றாண்டுகளாக கிறித்துவ சமயம் கல்வி நிறுவனங்களை அமைத்து மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்புகளும் வழங்கி மதமாற்றம் செய்து வருவது போல், அன்று புத்த, அம்மண சமயங்கள் கல்வியுடன் பல்வேறு உதவிகளை வழங்கி மக்களைக் கவர்ந்திருக்குமோ என்பதுடன், “நம்” உள்நாட்டுக் கோயில்கள் இன்று போல் அன்றும் திருவிழாக்கள் பெயரில் மக்களிடையில் காணிக்கை தண்டியும் பல்வேறு வேள்விகள், முழுக்குகள் போன்றவற்றில் விலை மதிப்புள்ள, மக்களுக்குப் பயன்படத்தக்க எண்ணற்ற பொருள்களை அழித்தும் கோயில் பூசகர்களை உயர் சாதியராக்கி மக்களைக் கோயில்களிலிருந்து அயற்படுத்தியும் இருக்கும் என்று தோன்றுகிறது.

      இத்தனை நூற்றாண்டுகளாக, இத்தனை முறைகள் பட்டும் தமிழர்களின் மர மண்டைகளுக்குள் இந்த உண்மை புக முடியவில்லை, இன்றைய இந்த சமயக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்ற முனைப்பான சிந்தனை இன்றுவரை உருவாகவில்லை.

      தமிழர்களின் இந்த குருட்டுத்தனமான கண்ணோட்டத்திலிருந்துதான் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் என்ற தொடருக்கு உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் கீழ்க்கண்டவாறு விளக்கம் தந்துள்ளதை வேங்கடசாமியார் குறிப்பிடுகிறார்:      
      அறமும் அதன் துறைகளும் விளங்குவதற்குக் காரணமாகிய அறவோர்களின் இருப்பிடங்களும்; ஈண்டுப் பள்ளி என்றது அவ்விடங்களை. அறத்துறை – அறமும் அறத்தின் துறையுமும் என உம்மைத் தொகை. அறமாவது இரு வகைத்து: இல்லறமும் துறவறமும் என. அவற்றுள் இல்லறமென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கணிருந்து செய்யும் அறம். அதன் துறையாவன: தன்னை யொழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் பிறர்க்கும் துணையாதலும் வேள்வி செய்தலும், சீலங்காத்தல் முதலியனவும் அருளும் அன்பும் உடையனாதலும் பிறவும்.

        இனித் துறவறமாவது, நாகம் தோலுரித்தாற் போல அகப்பற்றும் புறப்பற்றும் அற்று இந்திரிய வசமறுத்து முற்றத் துறத்தல்.

        அதன் துறையாவன: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவற்றுள், சரியை அலகிடல் முதலியன: கிரியை பூசை முதலியன;

யோகம் எண்வகைய; அவை: இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என்பன;

அவற்றுள் “பொய் கொலை களவே காமம் பொருணசை இவ் வகை யைந்து மடக்கிய தியமம்” எனவும் “பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு பயனுடை மரபினி யமமைந்தே” எனவும் “நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையொடு டின்பம் பயக்குஞ் சமய முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும்” எனவும் “உந்தியொடு புணர்ந்த விருவகை வளியும் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை” எனவும் “பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமை ஒருநிலைப் படுப்பது தொகைநிலை யாமே” எனவும் “மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறைநிலை” எனவும் “நிறுத்திய அம்மன அந்நிலை தெரியாமற் குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே” எனவும் “ஆங்ஙனங் குறித்த அம்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி எனவும் வருவனவற்றான்றிக.

        மேலே தரப்பட்டுள்ள பட்டியல்களில் இல்லறத்தார்தாம் தம் வாழ்வின் செயற்பாடுகளில் பிறருக்குப் பெருமளவில் உதவுவோராக நம் பண்பாட்டு மரபுகளிலிருந்து தெரிய வருகிறது. துறவறம் என்று விளக்கப்பட்டுள்ள செயற்பாடுகளின் பயன்கள் மனிதக் குமுகத்துக்கு எந்த வகையில் உதவுகிறது என்ற கேள்விக்கு தன்னலத்துக்காக, அதாவது சாவுக்குப் பின் மறுபிறவி என்ற கற்பனைத் துன்பத்திலிருந்து தப்ப அல்லது செத்த பின் கிடைக்கும் என்று நம்பப்படும் கற்பனையான முடிவில்லா இன்பம் நிறைந்த தேவருலக வாழ்க்கைக்காக அரிய மனித வாழ்க்கையைச் செயலற்றதாக்கி வீணாக்குவது என்ற விடை கிடைக்கிகிறது. அப்படி ஏதாவது ஆதாயத்தை அவர்கள் இவ் வுலகில் பெறுவதாயிருந்தால் அது வசியம் போன்ற திறன்களை வளர்த்து பிறர் மனங்களின் மீது மேலாண்மை செய்து மிகப் பெரும்பாலும் பிறர்க்குக் கேடு செய்வதாகவுமே முடிகிறது. இவ்வாறு வாழ்க்கையை வீணடிக்கும் இந்தக் கோட்பாடு நம் குமுகத்தில் நிலைப்படாமல் இருந்திருந்தால் மேலை நாடுகளில் போல் அறிவியல் ஆய்வுகளிலும் படைப்புகளிலும் இங்கு வாழ்ந்த மனிதர்களில் அறிவும் ஆற்றலும் வாய்ந்தவர்களாக எண்ணற்றோர் உருவாகியிருப்பர்.

      இன்றும் அம்மண சமயத்தவராகிய பனியாக்களின் வாணிகம் தொடர்ந்து செழிக்க வேண்டுமாயின் உள்நாட்டு மனித ஆற்றல் செயல்படக் கூடாது என்ற அடிப்படையில் கல்விக் கூடங்களிலிருந்து வெளிவரும் திறன் மிக்கோரை வெளிநாட்டுக்குத் துரத்துவதிலும் எஞ்சியோருக்கு மதவெறியூட்டி தியானம், யோகம் என்ற பெயர்களில் ஆற்றலை வீணாக்கும் மனநிலையை வல்லரசியத்தின் துணையுடன் உருவாக்குகின்றனர். மனதை ஒருமுகப்படுத்தும் சரியான உத்தி, தனக்கு உண்மையான ஆர்வமுள்ள துறையிலும் தொழிலிலும் மனம் ஒன்றி ஈடுபடுவதுதான். பணத்துக்காகவும் பதவிக்காகவும் தனக்கு ஆர்வமும் இயற்கையான திறனும் இல்லாதவர்கள் செயற்கையான கல்வித் திட்டங்களில் தேறி பிடிக்காத வேலைகளில் ஈடுபடும் போதே மன அழுத்தங்கள் ஏற்படுகின்றன. எனவே ஆர்வத்துக்கும் இயற்கைத் திறனுக்கும் ஏற்ற கல்வியும் பெரும் ஏற்றத்தாழ்வில்லாத வருவாயும் அமைந்தால் இந்த “துறவற”க் கோட்பாடும் அதன் மீதான நாட்டமும் நம் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்துவிடும். அதை எய்துவதற்கு நாம், நம் மக்களின் தேவைக்கான பண்டங்களையும் பணிகளையும் நாமே உருவாக்கி செயற்படுத்தி ஏற்றுமதி – இறக்குமதி வாணிகர்களையும் பனியாக்களின் பொருளியல் முற்றதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதாகிய ஓர் இலக்கை நோக்கி நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும்.

3.   நகருக்குள் சென்று வாணிகர்களைக் கண்டு தன் நிலை உணர்த்தி வரப்போவதாக கவுந்தியடிகளிடம் கூறிய போது கோவலன் தன் கடந்த காலத் தவறுகளைக் கூறுவது அவன் மனதளவில் மீட்சியடைந்துவிட்டான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதற்கு மறுமொழியாக கவுந்தியடிகள் கூறுகின்ற கோட்பாடு உயிர்களின் தற்காப்பு, இனப்பெருக்கம் என்ற இயங்கியல் எதிரிணைகளில் ஒன்றான இனப்பெருக்கத்தை அதன் பின் விளைவுகளைக் காட்டி மறுப்பதாக உள்ளது. உயிரினங்களின், குறிப்பாக இயங்குதிணைகளின்(நடமாடும் உயிரினங்களின்) காம உணர்வுகள் வெளியிலிருந்து அவற்றை எப்போதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பகைகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இயற்கையாகவே குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் கிளர்ந்தெழும் கட்டுப்படுத்த இயலா காம உணர்வால்தான் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மனிதனுக்கும், நம் நாட்டு காம நூல்கள் கூறுவது போல், காம உணர்வு உச்சத்தை எட்டும் காலமுறைச் சுழற்சி ஒன்று உள்ளது. ஆனால், விலங்குகளைப் போலன்றி, காடுகளை அழித்து தன் இருப்பிடத்தை கொல்விலங்குகளின் தாக்குதல்களிருந்து காத்துள்ளதாலும் உணவு தேடும் வேலை விலங்குகளை விட எளிதாக முடிந்துவிடுவதாலும் உடலுறவு என்பது மனிதனுக்கு ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது.

      விலங்குகளின் காம எழுச்சிக் காலத்தில் ஆண் வகுப்புக்கிடையில் உருவாகும் போட்டிகள் கொலையில் முடிவதில்லை. ஆனால் ஒரு கூட்டத்தில் ஆண் வகையில் ஒன்று மட்டும் இருக்க மற்றவை தனியாகத் துரத்தப்படும் விலங்கினங்கள் உண்டு. இந்தப் போட்டிகள் கொலையில் முடிவதில்லை. ஆனால் மனிதனிடம் கொலையில் முடியும் மோதல்கள் இயல்பாதலால் அதன் தீர்வாகத்தான் பல்வேறு திருமண முறைகள் உருவாயின. அவை பெண் ஆணுக்கு அடிமையாகும் நிலைக்கு இட்டுச் சென்றது. செல்வம், செல்வாக்கு, அதன் பக்க விளைவான ஏழ்மை என்ற காரணிகள் உருவான போது உடலுறவும் ஒரு விற்பனைப் பண்டமாகியது. அதன் விளைவுதான் விலைமகளிரின் தோற்றம். அவ்வாறு உடலுறவை விலை கொடுத்து வாங்கும் ஆடவர்களின் வாழ்க்கை சீரழிந்தது. அதன் எதிர்வினைதான் கவுந்தியடிகள் வெளிப்படுத்தும் மண வாழ்க்கை, அதாவது உடலுறவு வெறுப்பு.

      17ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ஆலய நடைமுறையில் கத்தோலிக்க நடைமுறைகளைக் களைவதையும் ஒழுக்கத்தில் கட்டுப்பாடுகளையும் நோக்கமாகக் கொண்டு உருவான தூய்மைக் கோட்பாடு(Puritanism), விடுதலைப் போரில் அயர்லாந்து ஈடுபட்டதால் ஆங்கில அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி அமெரிக்காவுக்குச் சென்றவர்களால் அங்கு செல்வாக்குள்ள மதப்பிரிவாக உள்ளது. உடலுறவு என்பது இனப்பெருக்கத்துக்காகவே அன்றி இன்பத்துக்காக அல்ல என்பது அதன் நிலைப்பாடு (உடலுறவு பற்றிய காந்தியின் நிலைப்பாடும் இதுதான்). இன்று உடலுறவு பற்றி அமெரிக்கர்களின் நிலைப்பாடு நமக்குத் தெரியும். ஆனால், அங்குள்ள தளர்வான இன்றைய பாலியல் உறவு நிலைப்பாடு விலைமகளிரின் செல்வாக்கை மட்டுப்படுத்தி கோவலர்களின் உருவாக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். நம் நாடும் சிறுகச் சிறுக அத்திசை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

      உடலுறவு, குடும்ப வாழ்வு பற்றிய எதிரியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கவுந்தியடிகள் பிறர்க்கு உதவுவது பற்றியோ மனித வாழ்க்கையின் குறிக்கோள் பற்றியோ ஒரு சொல் கூடக்  கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிறருக்கு, குறிப்பாக கோவலன் – கண்ணகிக்கு, உதவுவதைத் தவிர்க்குமாறு சமயப் பெரியோர்கள் குறிப்பாக உணர்த்திய அறிவுரையை அவர் புறக்கணித்தது அவருக்கு இயற்கையில் அமைந்த கருணை உள்ளத்தால்தானே ஒழிய சமயக் கோடுபாட்டுத் தாக்கத்தால் அல்ல.

      அறவோர் பள்ளி என்று குறிப்பிடப்படும் இடங்கள் முன்பு ஒரு கட்டத்தில் மக்களுக்கு கல்வியளித்தல் போன்ற அறப்பணிகளில் ஈடுபட்டு சிலப்பதிகாரம் காட்டும் காலத்தில் பெயர் மட்டும் மிஞ்சி செயல் நின்றுபோயிருக்க வேண்டும். அவ்வாறுதான் மதுரைக் கலவரத்தில் வினைப்பாட்டுடன் செயல்பட்ட சீத்தலைச் சாத்தனாரின் புத்தம் இலங்கைக் கயவாகுவின் உதவியுடன் மணிமேகலையை மக்கள் பணியிலீடுபடுத்தி புகாரிலிருந்த சோழ அரசை அழித்தது.

4.                                 பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி
என்ற தொடர் குறிப்பிடும் சுருங்கை எனப்படும் சுரங்கப் பாதை, அதுவும் யானைகள் கூட்டமாகச் செல்லும் அளவுக்குப் பெரியதாக, அகழியின் கீழாகச் சென்றதைக் குறிப்பதாயின் அத்தகைய ஒரு சுரங்கப் பாதையை அமைத்து நீர் கசியாமல் அதைப் பராமரிக்கும் தொழில்நுட்பம் அன்று இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகிறது.

5.   மதிலாகிய கோட்டை வாயிலில் யவனர் எனப்படும் வெளிநாட்டார் காவலிலிருந்தார் என்ற செய்தி அரசன் உள்நாட்டு மக்களை நம்பாத அளவுக்கு அவனுக்கும் மக்களுக்குமான உறவு கெட்டிருந்ததன் ஒரு குறியீடாக இருக்குமா?

6.   கோட்டை வாயிலைத் தாண்டியதும் கடைகழி மகளிர் எனப்படும் விலைமகளிரைக் காட்டி அவர்களது அரசியல் செல்வாக்கைக் கூறும் முன்னதாக அவர்கள் வெவ்வேறு பருவ காலங்களில் மேற்கொள்ளும் ஒப்பனைகளையும் தொழில் முறைகளையும் வரிசைப்படுத்துகிறார்.
      1.குட காற்று எனப்படும் ஆடிக் காற்றுக்கு முன்னோடியான முதுவேனிற் காலம்:
காலைப் பொழுது: வையையாற்றின் மருதந்துறை முன்னர் ஆற்றிடைக் குறையின் கரையில் இருந்து உயர்ந்த பள்ளியோடம், தோணி ஆகியவற்றை ஓட்டியதுடன் அழகிய தெப்பங்களைப் பிடித்து நீந்தவும் செய்தனர்.
நண்பகல்: குளிர்ந்த முல்லை மலர், நீரில் பூத்த செங்குவளை மலர், கண் போன்று தோன்றும் நெய்தல் மலர் ஆகியவற்றை கன்னத்தை அடைக்குமாறு கூந்தலில் சூடியும் மல்லிகை மாலையுடன் செங்கழுநீர் மாலையை கொற்கையில் விளைந்த முத்து வடத்துடன் அணிந்து பொதிய மலைப் பிறந்த சந்தனத்தின் குழம்பை உடலெங்கும் பூசி ஊரையடுத்த சோலையில் விளையாடினர்.
மாலைப் பொழுது : நிலா முற்றத்தில் தம் காதலர் பாராட்டத்தக்க கோலத்தைப் புனைந்து படுக்கையில் இனிதாக இருந்தனர்.
      2.வாடைக் காற்றோடு வரும் கார் காலம்: அரையில் செம்பட்டு உடுத்தி தலை மீது வெட்பாலைப் பூவுடன் சிறுமலையில் பூக்கும் செங்கூதாளப் பூவையும் குறிஞ்சிப் பூவையும் சூடி குங்கும வண்ணத்தை மார் மீது எழுதி சிந்துரப் பொடி பூசிய உடலில் பவளம் பதித்த அணியைப் பூண்டு கார்காலத்தை எதிர்கொண்டனர்.

      3. கூதிர் காலம்: மேகம் தழுவுமாறு அமைந்த உயர்ந்த மாடங்களில் குறுகிய கண்களையுடைய சாரளங்களை அடைத்து அகிலை விறகாகக் கொண்ட நெருப்பின் அருகில் இருந்து நறிய சாந்து பூசிய மார்பை உடைய ஆடவர்களோடு கூடி இருந்தனர்.

      4. முன்பனிக் காலம்: விரிந்த கதிர்களையுடைய கதிரவன் தென் அரைக்கோளத்தின் மீது இயங்குவதால் வெண்முகில் கூட அரிதாகவே வானில் தோன்றும் முன்பனிக் காலத்தில் வள மனைகளில் வாழும் மகளிரும் ஆடவரும் இளநிலவை நுகரவென்று அமைந்த நிலா முற்றத்திலிருந்து இளவெயிலை நுகர்ந்தனர்.
                 
        5. பின்பனிக் காலம்: கப்பல்கள் சோழ நாட்டுத் தொண்டியில் இறக்கிய அகில், பட்டு, சந்தனம், வாசம், கருப்புரம் ஆகியவற்றின் மணத்தைச் சுமந்து வந்த கீழ்க் காற்றாகிய கொண்டலோடு பாண்டியனின் மதுரையில் புகுந்து காமனது கொடிய வில் வெற்றியைக் காணும் பங்குனி மாதத்து இறுதியில் வரும் பின் பனிக்காலம் எங்குள்ளது என்றும்
        6. மாலை போல் பூக்கும் குருக்கத்தி அழகிய கொடியை எடுக்கவும் இளமரக் காவும் நந்தவனமும் நறிய மலர்களை ஏந்தவும் பொதிய மலைத் தென்றலோடு கூடல் நகருள் புகுந்து தாம் விரும்பும் துணைகளைத் தழுவுவிக்கும் இனிய இளேனில் எனும் அரசன் எங்குளான் என்றும்,
கொடி போன்ற பொது மகளிர் தம்மோடிருக்கும் பெரிய துணைவர்களுடனிருந்து பருவங்களின் வருகையை எண்ணும் காலம் என்று கூறி பருவங்களின் இயல்புக்கேற்றவாறு அணிகள், மலர்கள், உடைகள், ஒப்பனைகள், களங்கள் என்று மாற்றிக்கொண்டு தொழில் செய்வதை விளக்கிக் கூறுகிறார் அடிகளார்.
                                    வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலுந் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
என்ற வரிகளில் வரும் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் ஆகியவற்றின் வகைகள் பற்றி அடியார்க்கு நல்லார் தந்துள்ள பட்டியல் ஒன்றையும் நமக்குக் காட்டுகிறார் வேங்கடசாமியார் அவர்கள்.
       
        அகில்:           1.     அருமணவன்,                    3.     கிடாரவன்,
                                2.     தக்காலி,                             4.     காரகில்.
       
        துகில்:           1.     கோசிகம்,                           13.  சித்திரக்கம்மி,                    25.  கவற்றுமடி,           
                                2.     பீதகம்,                                14.  குருதி,                                 26.  நூல்யாப்பு,
                                3.     பச்சிலை,                            15.  கரியல்,                               27.  திருக்கு,
                                4.     அரத்தம்,                            16.  பேடகம்,                             28.  தேவாங்கு,
                                5.     நுண்டுகில்,                        17.  பரியட்டக்காசு,                 29.  பொன்னெழுத்து, 
                                6.     சுண்ணம்,                           18.  வேதங்கம்,                         30.  குச்சரி,
                                7.     வடகம்,                               19.  புங்கர்க் காழகம்,               31.  தேவகிரி,
                                8.     பஞ்சு,                                  20.  சில்லிகை,                          32.  காத்தூலம்,
                                9.     இரட்டு,                              21.  தூரியம்,                             33.  இறஞ்சி,
                                10.  பாடகம்,                             22.  பங்கம்,                               34.  வெண்பொத்தி,
                                11. கோங்கலர்,                        23.  தத்தியம்,                            35.  செம்பொத்தி,        
                                12.  கோபம்,                              24.  வண்ணடை,                      36.  பணிப்பொத்தி.
                           
        ஆரம்:            1.     மலையாரம்,                      3.     கீழான்பச்சை,                    5.     அரிசந்தனம்,                                                                         2.                தீமுரன்பச்சை,                                   4.     பச்சைவேட்டை,                6.     வேரச்சுக்கொடி.
       
        வாசம்:           1.     அம்பர்,                               6.     குங்குமம்,                           11.  இலவங்கம்,
                                2.     எச்சம்,                                7.     பனிநீர்,                              12.  சாதிக்காய்,           
                                3.     கத்தூரி,                              8.     புழுகு,                                 13.  வசுவாசி,
                                4.     சவாது,                               9.     தக்கோலம்,                        14.  நிரியாசம்,
                                5.     சாந்து,                                10.  நாகப்பூ,                              15.  தைலம்.

        கருப்பூரம்:            1.                                         மலைச்சரக்கு,                            6.     ஆரூர்க்கால்,          11.          உருக்குருக்கு,
                                2.     கலை,                                 7.     கையொட்டுக்கால்,           12.  வாறோசு,
                                3.     அடைவுசரக்கு,                  8.     மார்ப்பற்று,                       13.  சூடன்,
                                4.     மார்பு,                                 9.     வராசரன்,                          14.  சீனச்சூடன்.
                                5.     இளமார்பு,                         10.  குமடெறிவான்,
        இவற்றில் இன்று ஐரோப்பியர்கள் மூலமாக செய்யப்பட்டு அல்லது காப்புரிமம் பெற்று இறக்குமதியாகவோ உள்நாட்டார் கட்டணம் கொடுத்து இசைவுபெற்றோ சந்தையில் விற்கும் பல்வேறு வகைப் பண்டங்களுக்கு இணையாக அன்றும் விற்றிருப்பது பெறப்படுகிறது. இவற்றில் தமிழகத்தின் ஒரு பகுதியில் செய்யப்பட்டு துறைமுகங்கள் மூலம் பிற பகுதிகளுக்குள் இறக்கப்பட்ட பண்டங்களும் இருக்கலாம். அவற்றை இனங்காணுதல் பயனுள்ளதாக இருக்கும்.

7.     நடுத்தர வகுப்பு ஆடவர்க்கு காம இன்பம் அளிக்கும் விலை மகளிரைப் பற்றிக் கூறிய அடிகளார் இப்போது உயர் வகுப்பினருக்கு, குறிப்பாக அரசன், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்ற, இன்று மிக முகாமையான மனிதர்கள் (வி.வி.ஐ.பி.க்கள்) என்று அழைக்கப்படும் ஆளும் வகுப்பினருக்கும் பெருஞ்செல்வர்களுக்கும் இன்பமளிக்கும் சிறப்புரிமை பெற்ற விலைமகளிரைப் பற்றி விளக்குகிறார். அதற்குத் தொடக்கவுரையாக கதையின் இந்தக் கட்டத்தில் நிலவும் காலநிலையான(பெரும்பொழுதான) இரு வேனிற்பருவத்துங்களிலும் பொதுவான, எளிய மக்களும் நாட்டிலும் காட்டிலும் வாழும் நிலைத்திணைகள் உட்பட அனைத்துயிர்களும் படும் பாட்டை அவருக்கே உரிய வகையில்,
                                கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
                        ஒசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள்
        என்ற வரிகளில் எடுத்துரைக்கிறார். இன்று கோடை காலத்தில் குடிக்க நீரின்றி யானை உட்பட அனைத்து விலங்குகளும் இடம் பெயர்வதும் மக்கள் வாழிடங்களுக்குள் நுழைவதும் போன்று அன்று நிகழ்ந்த குறிப்பில்லை எனினும் இடம் பெயரும் விலங்குகள் அங்கு வாழும் விலங்குகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். காடு தீப்பற்றி எரிவதாலும் விலங்குகள் வாழிடங்களை விட்டுப் பெயர வேண்டியிருந்திருக்கும்.

        இனி உயர்தர விலைமகளிரின் நிலை பற்றிப் பார்ப்போம்:
        1. கூடார வண்டியும் பல்லக்கும் மணிகள் இழைத்த கால்களையுடைய படுக்கையும் நீராவிச் சோலையில்  குளத்தில் துணையாக அமைந்த செல்வக்குடிகளில் பிறந்த ஆடவரோடு நாட்டைக் காக்கும் ஆட்சியாளரோடும் மகிழ்வோடிருக்கவும் கவரிச் சாமரமும் பொன்னால் செய்த வெற்றிலைப் பெட்டியும் கூரிய வாளும் ஆகிய சிறப்புரிமைகளாகிய விருதுகளாக அரசன் கொடுக்க பொன்வளை அணிந்த மகளிர் வாழும் சிறுதனம் பெறுவார் வீதி எனப்படும் தெருக்களும்
        2. சுடுமண் ஏறா(தவறிழைத்ததற்குத் தண்டனையாக தலையில் செங்கல்லைச் சுமந்து ஊரைச் சுற்றி வராத என்று ஒரு பொருளும் ஓடு வேயாமல் பொற்றகடு வேய்ந்த வீடு என்றொரு பொருளும் கொள்ளலாம் என்கிறார் வேங்கடசாமியார். செங்கல் இன்றி முழுவதும் கல்லால் கட்டப்பட்டதாகவும் இருக்கலாமல்லவா?) பெருமை பெற்ற, முடியரசரும் தங்கியிருக்கத் தக்க பாதுகாப்புள்ள வளமனையில் ஆடல், பாடல், நாடகம் என்ற அனைத்துக் கலைகளையும் நிகழ்த்தும் வசதிகளுடன் நாளுக்கு ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் பெறும் கணிகையர் வாழும் தெருக்களும் என்ற விளக்கத்தின் போது முடியரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறார் அடிகள். அதாவது அரசன் மீது இக் கணிகையர் மிகுந்த செல்வாக்குச் செலுத்தினர் என்பதை இச் சொல் மூலம் நமக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்காறார் என்பது உறுதி. பின்னர், கொலைக்களக் காதையில் அரசன் தேவியின் ஊடலுக்கு இதுவே காரணமாயிருப்பது அறியப்படும். இவர்கள் வாழ்ந்த வீதி பெருந்தனம் பெறுவார் வீதி என்று அழைக்கப்பட்டது என்று வேங்கடசாமியார் குறிப்பிடுகிறார்.

8.     நுழைவாயிலில் பரத்தையர் வாழும் தெருதான் முதலில் இருந்ததா அல்லது கோவலன்தான் அத் தெருக்களைத் தேடி முதலில் பார்த்தானா என்பது தெரியவில்லை. கோயிலை நடுவாகக் கொண்ட தமிழகத்து நகரங்களில் கோயில்களின் மதிலை அடுத்து நாற்புறமும் இருந்த மாடத் தெருக்கள் எனப்படும் ஒற்றைவாடைத் தெருக்களில் 20ஆம் நூற்றாண்டு வரை பரத்தையரே வாழ்ந்தனர். ஆனால் மதுரையில் அரசன் இருந்ததால் மன்னவன் கோயில் எனப்படும் மனையரணாகிய அரண்மனையைச் சுற்றி அரசனின் பாதுகாவற்படையினரின் பல அடுக்குகள் இருக்குமாதலால் பரத்தையர் நகரின் நுழைவாயில் பகுதியிலோ அரமண்மனையை அடுத்தோ இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவன் அதனைத் தேடித்தான் சென்றிருக்க வேண்டும். நான் காஞ்சியில் பணியாற்றிய போது அங்கு எமது துறையான பொதுப்பணித் துறையில் இன்னொரு பணியில் ஈடுபட்டிருந்த திருமணமாகாத நண்பருக்கு பரத்தையர் இன்பத்தில் பெரு நாட்டம். அதைப் பற்றிக் கூறிய அவர், அவ் வூருக்கு முதன்முதலில் பணியில் சேர வந்து பேருந்திலிருந்து இறங்கிய போது, இத்தகையவர்களை பார்வையிலேயே இனம்காணும் இயல்புடைய தரகனான ஒரு மிதி நரவண்டி(சைக்கிள் ரிக்சா) ஓட்டி பரத்தையர் வீட்டுக்குப் போக வேண்டுமா என்று கேட்க அவர் அங்கு சென்று திரும்பித்தான் பணியில் சேர்ந்தாராம். அது போல் கோவலனுக்கு புகார் நகரப் பழக்கத்தைக் கைவிட முடியாமல் வேட்கையைத் தணித்துக்கொள்ள அத் தெருக்களில் நடந்தான் போலும்.

9.     இப்போது கோவலன் பல்வேறு தொழில்கள் நடைபெறும் அங்காடி வீதியினுள் நுழைகிறான்.
        தொழில்களின் ஒரு பட்டியல்:
        1.     கூடார வண்டி,                          9.     வெண் சாமரம்,                     17.  மாலையாகச் செய்தவை,
        2.     ஈருருளைச் சக்கடா வண்டி,     10.  பன்றிமுகக் கேடயம்,            18.  ஈர்வாள்[1] முதலிய கருவிகள்,
        3.     தேர் மொட்டு,                           11.  சிறு கேடயம்,                         19.  தந்தத்தைக் கடைந்து செய்தவை,
        4.     முழு உடல் கவசம்,                    12.  காடெழுதிய கேடயம்,          20.  வாசப் புகை மூலப் பொருள்கள்,
        5.     யானைத் துறட்டி,                     13.  குத்துக் கோல்கள்,                 21.  சாந்து மூலப் பொருள்கள்,
        6.     தோல் கைக் கவசம்,                  14.  செம்பில் செய்தவை,             22.  பூவாலான மாலை முதலியன,
        7.     அரைப்பட்டிகை,                       15.  வெண்கலத்தில் செய்தவை, 23.  இன்னும் கணக்கிலடங்காதவை.
        8.     வளைதடி,                                   16.  கயிற்றால் செய்தவை,                     
        இவற்றில் காடெழுதிய கேடயம் என்பது காடுகளுக்குள் மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் போது பயன்படும் ஒரு கேடயமாக இருக்குமோ?                                                   
       
10. ஒன்பான்(நவ)மணிகள்:                                
        அ. வைரம்:
            ௧. வயிரங்களில் உள்ள குற்றங்கள் 12:
                1. களங்கம்,                                                5.     துளைகரி,                       9.     கோடிகளில்லாமை,
                2. கீற்று,                                                     6.     விந்து,                             10.  முரிதல்,
                3. சப்படி,                                                    7.     காகபாதம்,                     11.  தாரை,
                4. பிளத்தல்,                                                8.     இருத்து,                         12.  மழுங்கல்.
            ௨. இவற்றில் அணிவோர்க்கு மிகுந்த கேடு தரும் நான்கின் தீய விளைவுகளின் பட்டியல்:
                1. காகபாதம்………………..திறமை குறையும்,                        3. விந்து…………….மன உறுத்தல்,          
                2. களங்கம்………………….உறவினருடன் முரண்பாடு         4. கீற்று……………..மரணம்.
            ௩. வைரத்தின் குணங்கள்:
                1. பலகை எட்டு,                                        2. கோணம் ஆறு,                  3. தாரை,
                4. சுத்தி,                                                      5. தராசம்.
        ஆ. மரகதம்:
         ௧.    மரகதத்ததின் வகைகள்:
                1. காடம், அது 2 சாதியாகும்:
                    1. சகுணம், அதன் வகைகளும் தன்மைகளும்:
                        1. காடம்            -       புல்லைப் போன்ற பச்சை நிறம்,    
                        2. உல்லசிதம்    -       மென்மை
                        3. பேசலம்          -       செந்நெல் நிறம்,
                        4. பித்தகம்         -       பச்சைக் கிளியின் நிறம்,
                        5. முத்தம்            -       துளசியின் நிறம்,
                        6. பிதுகம்           -       தாமரை இலையின் நிறம்.
                    2. சதோடம், அதன் வகைகளும் தன்மைகளும்:
                        1. தோடலோசஞ்சிதம்     -       எலுமிச்சை இலையின் திறம்,
                        2. துட்டம்                          -       அலரி(அரளி) இலையின் நிறம், கருங்குவளை நிறம்,
                        3. தோட மூர்ச்சிதம்          -       புல்லின் நிறம்,
                        4. தோடலேசம்                 -       தாமரை இலையின நிறம்,
                        5. மந்ததோடம்                 -       கலாப மயிலின் நிறம்.                 
         ௨. மரகதத்தின் குற்றங்கள்:
            1. கீற்று,                         3. வெள்ளை,              5. மணல்,                       7. தராசம்,
                2. கருகல்,                       4. கல்,                         6. பொரிவு,                    8. இறுகுதல்.
            ௩. அணிவோர்க்குக் கேடு தருவன:
                1. கீற்று,                                                     2. கருகல்,                               3. தராசம்.
            ௩. குணங்கள்:
                1. நெய்த்தல்கிளி,                          4. பொன்மை,                    7. பொன்வண்டின் வயிறொத்தல்,
                2. மயிற்கழுத் தொத்தல்,              5. பசுத்தல்,                         8. தெளிதல்.
                3. பைம் பயிரிற் பசத்தல்,             6. பத்தி பாய்தல்,
        இ. மாணிக்கம்:
         சாதி:   1.     பதுமம்,                           3.     விந்தம்,                           4.     படிதம்.
                        2.     நீலம்,
                1. பதுமம் – பதுமராகம், சதுரங்கம் எனவும் படும். இவை:
                    1.     தாமரை,                             5.     கோபம்,                          8.     விளக்கு,                                 
                    2.     கழுநீர்,                               6.     மின்மினி,                       9.     மாதுளைப் பூவிதை
                    3.     சாதகம்,                              7.     கொடுங்கதிர்,                10.  வன்னி.
                    4.     புட்கண்,                                        
                2. நீலம் – நீலகந்தி, சௌகந்தி எனவும் படும்.
                    1.     கோகிலக்கண்,                  3.     கொய்ம்மலர்ப் பலாசம்,           5.     மணிமலர்க் குவளை,               
                    2.     செம்பஞ்சு,                         4.     அசோக பல்லவம்,                    6.     இலவத்தலர்கள்.
                3. விந்தம் – குருவிந்தம், இரத்தவிந்து எனவும் படும்.
                    1.     திலகம்,                               4.     கவிர்மலர்,                                 7.     சிந்துரம்,
                    2.     உலோத்திரம்,                   5.     குன்றி,                                        8.     குக்கிற்கண்.
                    3.     செம்பருத்திப்பூ,                 6.     முயலுதிரம்,
                4. படிதம் – கோவாங்கு எனப்படும்.
                    1.     கோவை,                            3.     குராமலர்,                                  4.     மஞ்சள்
                    2.     செங்கல்.           
ஈ. புருடராகம்: இது பற்றிய பூச வுருவின் பொலந்தெளித் தனையவும் என்ற வரிக்கு ‘பூச மீனின் உருவினை உடைய பொன்னைக் களங்கமறத்தேய்த்தா லொத்த புருடராகம்’ எனப் பொருளுரைத்துள்ள வெங்கடசாமியார், ‘பூனைக் கண் போன்று பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பத வுரையாசிரியர்’ என்ற குறிப்பையும் கொடுத்துள்ளார். இணையத்தில் விக்கிபீடியா கலைக்களஞ்சியம், ‘இவை வெள்ளை, வெளிர் பச்சை, நீலம், தங்க நிறங்களிலும், அரிதாக வெளிர் சிவப்பு நிறத்திலும்’ கிடைப்பதாகக் கூறுகிறது. இவற்றில் பூனைக்கண் வெளிர் பச்சையையும் பொன்னைத் தேய்த்தாற் போன்றவை என்பது தங்க நிறமென்றும் கூறுவதுடன் பொருந்தி வருகிறது. சிலப்பதிகாரக் காலத்தில் இவ் விரண்டு வகைகள்தாம் இங்கு புழக்கத்தில் இருந்தன போலும்.
உ.  வைடூரியம்: தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும் என்பதற்கு ‘குற்றமற்ற பரிதியி னொளியும் தேன் துளியின் நிறமும் உடைய’து என உரை கூறுகிறார் வேங்கடசாமியார். ஆங்கிலத்தில் விக்கிபீடியா cats eye, lapiz lazli என்ற சொற்களைத் தந்து தருகிறது. ஆங்கில விக்கிபீடியாவினுள் நுழைந்தால் முதலதற்கு இளம் பச்சைக் கல்லையும் இரண்டாவதற்கு அடர் நீலக் கல்லையும் காட்டுகிறது. வைடூரியத்திக்கான தமிழ்ப் பதிவு அழிக்கப்பட்டதான குறிப்பு உள்ளது. கோமேதகம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது மேலேயுள்ள இளங்கோவடிகளின் விளக்கத்துக்குப் பொருந்தி வருகிறது. காட்டப்பட்டுள்ள படிகப் படத்தில் நடுநடுவே வெண்பகுதிகள் உள்ளன. வைடூரியத்தைக் கோமேதகம் என்று அரும்பத வுரையாசிரியர் குறிப்பிடுவதாக வேங்கடசாமியார் கூறுகிறார். மூங்கில் இலையும் மயிலின் கழுத்தும் பூனையின் கண்ணுமாகிய இவற்றின் நிறத்தை உடையதாய்… வலத்தினும் இடத்தினும் மேலும் கீழும் வீசுகின்ற ஒளியை உடையது இவை முறையே அந்தணர் முதலாக நான்கு வருணத்தார்க்கும் உரிய..வாம் என்று வரத்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள, பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத்தின் மாணிக்கம் விற்ற படலத்தின் உரை கூறுகிறது.
   ஊ. நீலம்:
      க. நீலத்தின் வகைகள்:
      1. இந்திர நீலம்,
      2. மா நீலம், அதன் வகைகள்:
         1. வெள்ளை,
         2. பச்சை,
         3. சிவப்பு,
         4. கருமை.
      என்ற செய்யுளை வேங்கடசாமியார் தந்து ‘சாதிகள் நான்கும் குணம் பதினொன்றும், குறை எட்டுமெனக் கொள்க’ என்று நிறத்தைக் குறிப்பிடும் வண்ணம் என்ற சொல்லுக்குச் சாதி என்ற பொருளையும் கொண்டுள்ளார்.
எ.  கோமேதகம்: மஞ்சளும் சிவப்பும் கலந்த உருவை உடையது கோமேதகம் என்ற வேங்கடசாமியார் விளக்கத்துக்கு மேல் செய்தி கிடைக்கவில்லை. வைடூரியத்தைக் கோமேதகம் என்றும் தலைமாறாகவும் அரும்பத உரையாசிரியர் பொருள் கூறியுள்ளதையும் காட்டியுள்ளார். நெய்யின் துளியும் தேனின் துளியும் ஆமாவின்(பசுவின்) மோளும் ஆகியவற்றை ஒத்துச சிவந்த உயர்ந்த பசிய பொன்னிறத்தைப் பெற்றது என்கிறது மேலே குறிப்பிட்ட  திருவிளையாடற் புராணத்தின் உரை. மாட்டு மோள் போல் இருப்பதால்தான் கோமேதகம் எனப்படுகிறதோ! மேதை என்ற சொல்லுக்கு இறைச்சி, கள், தோல், நரம்பு, நிணம் என்ற பொருள்களும் உள்ளன. கழகத் தமிழ் அகராதி பார்க்க.
ஏ. முத்து:
         ௧. முத்தின் பிறப்பிடமும் நிறமும்:
            1. சிப்பியிலும் சங்கிலும தோன்றுபவை          -     வெண்மை,
            2. மேகம் ஈன்ற முத்து                                   -     சூரியன் போன்ற செந்நிறம்,
            3. மூங்கில் ஈன்ற முத்து                                 -     மழைக்கட்டி(ஆலங்கட்டி?) போன்றது,
            4. பாம்பு ஈன்ற முத்து                                    -     நீல நிறம்,
            5. பன்றிக கொம்பு முத்து                               -     குருதி நிறம்,
            6. வெண் நெல்லின் முத்து                             -     பசுமை,
            7. மீன் தலையின் முத்து                                -     பாதிரி மலர் போன்ற நிறம்
            8. யானைக் கொம்பு, கரும்பு ஆகியவற்றில்
                  தோன்றுபவை                                       -     பொன்னிறம்,
         ௨. தெய்வங்களோடுள்ள தொடர்பு:
            1. வெண்மை                                               -     வருணனுக்கு உரியவை,
            2. சூரியன் போன்ற செந்நிறம்                        -     சூரியன்,
            3. நீல நிறமுடையவை                                  -     திருமால்,
            4. குருதி போன்ற சிவந்த நிறம்                       -     வாயுவுக்கு,
            5. பசுமை நிறம்                                            -     எமன்,
            6. பொன் போன்ற நிறம்                                -     இந்திரன்.
      முத்தைப் பற்றி மேலே தரப்பட்டுள்ளவை முன் குறிப்பிட்டுள்ள திருவிளையாடற் புராணத்தின் உரையில் உள்ளவை.
     
முத்தைப் பற்றிக் கூறுகையில் அடிகளார் சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் என்று குறிப்பிட்டுள்ளதற்கு விளக்கம் கூறவந்த வேங்கடசாமியார், “சந்திரகுரு – வெள்ளி, வியாழன் என்றல் புராணத்துக்கொத்தது” என்று கூறுகிறார். இதைக் குறிப்பிட்டு சிலப்பதிகாரப் புதையல் – புகார்க் காண்டம், நாடுகாண் காதையில்
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
என்ற வரிகளை விளக்கும் போது கூறியுள்ளோம்.

      முத்து உருவாகும் இடங்களாக 8 இடங்களைக் குறிப்பிடுகிறது மேற்குறிப்பிட்டுள்ள திருவிளையாடற் புராணம். அவையன்றி கோழி எலும்பினுள் முத்தைக் கண்டது என் பட்டறிவு. 1991இல் சென்னையில் ஒரு புலாலுணவகத்தில் கோழிப் புலவுச்சோறு(பிரியாணி) உண்டேன். இறைச்சிக் கோழியின் மென்மையான எலும்பைக் கடித்த போது கல் கடிபட்டது. எடுத்துத் தட்டில் வைத்தேன். கோழி எலும்பில் கல் வந்த விதமென்ன என்ற கேள்வி மனதில் தோன்ற “கல்”லை எடுத்துப் பார்த்தேன். அது நீள் உருண்டையாக மிகு வெளிர் சாம்பல் நிறத்தில் மொச்சைக் கொட்டை அளவில் இருந்தது. தங்க நகைகளில் பொருத்தப்பட்டிருக்கும் பீங்கானைத் தீட்டிய கற்களைத் தவிர வேறெதையும் பார்த்திராத நான் அப்போது நானிருந்த பாளையங்கோட்டையில் எனக்குத் தெரிந்த பொற்கொல்லரிடம் காட்டினேன். முற்றாத முத்து அது என்று உறுதிப்படுத்தினார். கோழி எலும்பிலிருந்து பெற்றேன் என்பதைக் கேட்டு அவரும் வியப்பெய்தினார். பணப்பையினுள் நெடுநாள் வைத்திருந்தேன். பை தையல் பிரிந்து அது எங்கோ விழுந்து காணாமல் போயிற்று. அதை உரிய இடத்தில் வைத்துப் பாதுகாக்காத என் முட்டாள்தனத்தை நினைத்து இன்றும் வருந்துகிறேன். ஆக, கோழி எலும்பும் முத்து தொன்றும் ஒரு களம் என்பது என்னைப் பொறுத்தவரை உறுதி.
      ஐ. பவளம்:
       ௧. பவளத்தின் நிறங்கள்:
            1. முள் முருங்கைப பூ,
            2. கிளியின் மூக்கு,
            3. செவ்வரத்தம் பூ,
            4. மொவ்வைக் கனி
         ஆகிவற்றின் நிறங்கள்.
         ௨. பவளத்தின் குற்றங்கள்:
            1. திருகிக் கோணுதல்,
            2. புழு அரித்தல்,
            3. முகம் ஒடிதல்
      ஆகியவை. பவளம் பற்றிய இந்தச் செய்திகளும் மேலே சுட்டியுள்ள திருவிளையாடற் புராண உரையில் உள்ளவை.

      மேலே தரப்பட்டுள்ள ஒன்பான் மணிகளின் விரிவகைப் பட்டியல் எனக்கு முழு மனநிறைவைத் தரவில்லை. வைரம், மரகதம், மாணிக்கம் ஆகியவற்றுக்குப் போல் வகைகள், குற்றங்கள் போன்ற விரிவான செய்திகளைத் திரட்ட முடியவில்லை. வேங்கடசாமியார் சுட்டியுள்ள இன்னுமொரு திருவிளையாடல் புராணமான திருவாலவா யுடையார் திருவிளையாடல் புராணத்தின் மாணிக்கம் விற்ற திருவிளையாடலில் உள்ள விளக்கங்களையும் பார்த்தால் ஏதாவது செய்தி கிடைக்கக் கூடும். வேறு மூலங்கள் உண்டா என்றும் தேடலாம்.

      ஒன்பான் மணிகளைப் பற்றி வலைதளத்திலிருந்து பெறப்பட்ட ஒரு செய்தி
தலை மணிகள் :- வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்.
இடை மணிகள் :- நீலம், புஷ்பராகம், வைடூரியம்.
கடை மணிகள் :- கோமேதகம், பவளம்.

      ஒன்பான் மணிகளிள் தோற்றம் பற்றி சுருக்கமாக வேங்கடசாமியார் குறிப்பிட்டுள்ள தொன்மக் கதையை மேற்கூறிய திருவிளையாடற் புராணம் விளக்கமாகத் தருகிறது:
     
      வலன் என்னும் அரக்கன் முன்னாளில் மும்மூர்த்திகளில் சிறந்தவராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் அர்ச்சனை செய்து வந்த திருத்தொண்டால் அப்பெருமான் மகிழ்ந்து, யாது வேண்டும் என்று கேட்டார்.  

      உடனே ‘வலன்’ தாழ்ந்து நின்று “யான் போரில் யாராலும் பிளவுண்டு இறக்காத வரத்தை அருள்க. ஊழ்வினை சூழ்ந்து இறந்தால் என் உடம்பு துறவிகளும் விரும்பும் ஒன்பான் மணிகளாக வேண்டும்” என்று வேண்டினான்.

      இவ்வாறு வரம் கேட்க, இறைவன் அங்ஙனமே அருளினான். அப்பொழுதே போரினை செய்யக் கருதி, தேவேந்திரனோடு எதிர்த்துப் போரிட்டான். அத்தேவேந்திரன் நேர் நின்று போர் செய்யும் ஆற்றல் இல்லாமல் புறம் கொடுத்து ஓடினான்.

      இவ்வாறு தோல்வியுற்ற இந்திரன், இறவாத வரம் பெற்றவன் ஆகையால், திரும்பவும் வந்து இவனோடு போரிட்டாகலும் வெல்ல முடியாது. ஆகையால் சூழ்ச்சியால் வென்று எமன் உலகு அனுப்ப வேண்டும் என்று கருதினான்.

      நஞ்சுமிழும் போர்க்கருவிகள் ஏதுமின்றி தேவர்கள் அனைவரும் சூழ்ந்து வர, தேவயானை போல், போர்க்களத்தை அடுத்து அசுரனாகிய சிங்கம் போன்ற ‘வலனை’ அழைத்துக் கூறத் தொடங்கினான்.

      வெற்றியையுடையவனே! உன்னுடைய தோள் வலிமையும் வெற்றிப் பெருக்கும் எல்லாத் திசைகளிலும் பரவி விட்டது. அந்தப் புகழ்ச்சியை எண்ணி, உன் உள்ளத்துக்கு விருப்பம் தரும் ‘வரம்’ அளிப்பேன். நீ விரும்பும் வரம் யாது? அதனைக் கூறுவாய்” என்று கூறினான்.

      மணம்மிக்க கற்பக மரத்தையுடைய தேவர் உலகத்தின் தலைவனாகிய இந்திரன் இதனைக் கூறவும் அச் செய்தி அவுணன் காதுகளில் விழுந்தவுடன், அவன் தன் நீண்ட கைகளை ஒன்றோடொன்று மோதும்படி தட்டி இடியோசை கேட்பது என்று சொல்லும்படி பேசத் தொடங்கினான்.

      “யாரும் நகைப்படுமாறு நல்லதாகிய இந்த வார்த்தையை கூறினாய். என்னை நீ புறங்கண்ட வெற்றியும் அந்த வெற்றியினால் அடைந்த புகழும் உன்னுடைய பெருமிதம் இன்று என்னோடு நீ செய்த போரில் காணப்பட்டதே. புகழானது எங்கும் சென்று நிலை பெற்றது. இதே போல் உன் வள்ளன்மையும் நிலை பெறும் அல்லவா?

      “சிவபெருமான் அருளிய நல்ல வரங்கள் எனக்கு இருக்கவும், அதற்கும் மேலாக நான் உன்னிடம் பெறக் கூடியது ஏதேனும் உண்டோ? என்னிடம் உனக்கு வேண்டியது யாது? அதனை நீ சொல். இப்போதே கொடுக்கிறேன். அப்படி நான் தரவில்லை எனில் பருந்துகள் வீழ்கின்ற இப்போர்க் களத்தில், உன்னைப் போல் தோல்வியுற்ற பழியைப் பெறுவேன்” என்று கூறினான்.
   
      அசுரனது இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் மகிழ்ந்து,”மேருமலையை வில்லாக வளைத்துக் கொடிய அவுணர்களின் திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானுடைய வெள்ளி மலையை அடைந்து, அங்கு ஒரு வேள்வியினை நான் செய்வேன். அப்போது தேவர்களுக்கு அவியூட்ட நீ வேள்விப் பசுவாகி வருவாயாக” என்றான்.

      உடனே, “அக்காலத்தில் தவத்தில் சிறந்த ததீசி முனிவன் முதுகுத் தண்டு ஒன்று மட்டுமே வச்சிரப் படை ஆகுமாறு மனம் விரும்பிக் கொடுத்த கொடையினால் பெற்ற புகழ் உடம்பு ஒன்றேயாகும். பிறரை வெல்லும் வெற்றியினாலும் பிறரால் அழியாத உடல் முழுவதும் நவமணிகள் ஆகுமாறும் என்னைப் போல, அம்முனிவனுக்கு புகழுடம்பு இரண்டு உண்டோ? (அதாவது முனிவருக்குப் புகழ் கொடையால் மட்டுமே! ஆயின் எனக்கு கொடை, வெற்றி இரண்டாலும் புகழ்). 

       “நீ எனக்குப் பகைவன் இல்லை. நீயே நண்பன். தேவர்களின் உண்ணும் இயல்பினால், புண்ணியமும் புகழும் எனக்கே உண்டாகும். பசுவின் உருவாகி வருவாய் என்றாய். அவ்வாறே செய்வேன்” என்று வலன் கூறினான். எக்காலத்தும் பிறர்க்குக் கொடுப்பதே பெருமை அல்லாமல், யாசித்தல் இழிவு அல்லவா?

      அவ்வாறு பசுவாய் வர உடன்பட்ட அவுணர் தலைவனான ‘வலன்’ இந்திரனை முன்னே அனுப்பிவிட்டு மதர்த்த கொடுமையான கண்களையுடைய தன் மகனுக்கு அரச உரிமையைத் தந்துவிட்டு, கலைகளுக்கெல்லாம் முதன்மையான வேத நெறியிலே கூறிய முறைப்படி இலக்கணம் அமைந்த பசுவாகித் தேவர்களுக்கு அவியுணவு ஆக்கும் வேள்விச் சாலையின் அருகில் வந்து நின்றான்.

      “சொன்ன சொல் தவறாது நடந்து கொள்ளும் மாட்சிமையும் வள்ளல் தன்மையும் உடையோர் உன்னைப் போல் யார் உள்ளார்கள்?” என்று இந்திரன் வியப்புடன் கூறினான். மிகுந்த ஆணவத்தோடு மேரு மலையோடு பகை கொண்ட விந்த மலை போல் நிமிர்ந்து நின்று, “வேள்விக்காக என்னை தூபத் தம்பத்தோடு கட்டுங்கள்” என்று சொல்லி அதன் அருகில் நின்றான் வலன்.

      தருப்பைக் கயிற்றால் கட்டி, தானே தான் கொடுத்த வாக்குறுதிக்காக அடங்கி நின்ற ஆண் சிங்கம் போன்ற வலனது வாயைப் பொத்தி, மூச்சு அடங்கத் தேவர்கள் அவனைக் கொன்றனர். இறந்த வள்ளலாகிய வலனும் கற்பக மலர் பொழிய விமானத்தில் ஏறிப் பிரமன் உலகை அடைந்தான்.

      மணிகள் பதித்த முடிகளை அணிந்த மலைகளின் சிகரங்களை எல்லாம் அரிந்த இந்திரன், பிணித்து உயிர் போக்கப்பட்ட வள்ளன்மையும் பெருந்தகுதியும் உடைய “வல”னாகிய பசுவினிட மிருந்து வச்சிரப் படையினால் வேதம் விதித்த வபையினை(வயிற்று நாபிக்குள் வெண்துகில் போன்று புரை – மடிப்பு – ஆகிய நிணம்) எடுத்து, படர்ந்த வேள்வித் தீயானது சுவை பார்க்க இட்டு, தேவர்களுக்கு உண்பித்துக் குற்றமற்ற வேள்வியைச் செய்து முடித்தான்.

      அந்தப் பசுவினது குருதி மாணிக்கமாம். பற்கள் முத்துக்களாம். மயிர் வைடூரியமாம். எலும்பு வைரமாம். பித்தம் மரகதமாம். நிணம் கோமேதகமாம். தசை பவளமாம். நீண்ட கண்டம் நீலமாம். இளைத்தற்கு ஏதுவாகிய கோழை புருடராகமாம். இவையே நவமணிகள் தோன்றிய முறையாகும்.

      மேலேயுள்ள கதை நவமணி வாணிகனாக வந்த சிவபெருமான் கூறியதாக வருகிறது.

      எந்தெந்த மணிகள் எங்கெங்கே கிடைக்கும் என்று தெளிவாகக் கூறும் மேற்படி திருவிளையாடற் புராணத்தில் இத்தகைய இழிவான ஒரு கதையை ஏன் கூறியிருக்கிறது என்பது புரியவில்லை.

      தம்மைப் பணிவது போல் பாசாங்கு செய்வோரிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுரையா? வாமனனிடம் மாவலியும் இந்திரனிடமும் கண்ணனிடமும் கர்ணனும் போல் ஏமாறக் கூடாது என்பதை அறிவுறுத்தவா? இடையெழு வள்ளல்களில் பெரும்பாலோர் மகாபாரதப் போரில் துரியோதனன் பக்கமிருந்து கண்ணனின் சூழ்ச்சிகளால் கொல்லப்பட்டவர்கள் என்பது கருதத்தக்கது. அல்லது வள்ளன்மையிலும் வலிமையிலும் எவ்வளவு மேம்பட்டவர்களாயிருந்தாலும் எங்கள் தந்திரங்களை உங்களால் எதிர்கொள்ள முடியாது என்ற மிரட்டலா? அமெரிக்கக் கொடும் வல்லரசு தன் நடுவண் ஒற்று முகாமை (சி.ஐ.ஏ.) தாங்கள் எங்கெங்கு எந்தெந்தக் கலவரங்களைத் தூண்டினோம், எவரெவரை எப்படி யெப்படிக் கொலை செய்தோம் என்று நூல்கள் மூலம் கூறி முழு உலகையும் மிரட்டுவது போல் நம் ஆட்சியாளர் – பூசகர் கூட்டணியின் மிரட்டலா?

      தமிழர்களின், குமரிக் கண்ட வரலாற்றின் ஒரு பகுதியைக் கொண்ட மகாபாரதம் (விரிவுக்கு பெருஞ்சோற்று உதியஞ்சேரல் என்ற எமது கட்டுரையைக் காண்க – இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், வேங்கை பதிப்பகம், மதுரை, 2004 ) தரும் பகவத் கீதை கூறுவது போல் தனிமனித உறவுகளை விட நாம் ஏற்றுக்கொண்ட குறிக்கோள்கள்தாம் நமக்கு முதன்மையானது என்பதை நம் அடிப்படை அணுகலாகக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் இன்றைய சூழலில் நாம் திருக்குறளைச் சிறிது காலம் அப்புறம் வைத்துவிட்டு போராட்ட காலங்களில் உறவுகளைப் பற்றிய பகவத் கீதைப் படிப்பினைகளை – வருணங்களைப் பற்றிய கருத்துகளைப் புறக்கணித்து – கையிலெடுக்க வேண்டும் என்ற தெளிவினை இக் கதை நமக்குத் தருகிறது.

      மாட்டிறைச்சியைப் பற்றிப் பெருங்கூச்சலைப் பார்ப்பனத் தலைமையில் செயற்படுவோர் எழுப்பும் இன்றைய சூழலில் இவர்கள் புனிதமானதாகக் கூறும் ஆமாட்டின் வாயைப் பொத்தி மூச்சுமுட்டவைத்துக் கொன்ற கொடுமையையும் அதனை அறுத்து கொப்புளைச் சுற்றியிருக்கும் கொழுப்பை நெருப்பிலிட்டு வேகவைத்து உண்டதையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பார்களாக. இவற்றில் எது இவர்கள் கூறும் ‘இந்து தர்மம்’? ஆமாட்டை மூச்சுமுட்டவைத்துக் கொன்று கொப்புளைச் சுற்றியிருக்கும் கொழுப்பை மட்டும் எடுத்து தீயில் உருக்கி நெய்யெடுத்து உண்டுவிட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்வதாக இருக்குமோ?
                
      இந்தக் கதையைப் படித்த பின் நவமணிகளை அணிவதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.
ஆங்கிலத்தில் கீழ்க்காணும் பட்டியலிலுள்ள 9 மணி வகைகளும் சிறப்பானவையாகக் கூறப்பட்டுள்ளன.
மொத்தத்தில் கீழ்க்காணும் 130 மணிகளின் வகைகளாகக் கூறப்பட்டுள்ளன.
There are over 130 types of minerals that have been used as gemstones. These include:
A-B


C - F


G – L
M - Q


R - Z


         இவற்றில் நம் மரபில் ஒன்பான் மணிகளின் பல்வேறு வகைகளில் எவையெவை பொருந்திவருகின்றன என்பதை இத்தொழிலில் பட்டறிவுடையோர் இனம் கண்டு பட்டியலிடவேண்டுமென்பது நம் அவா.
11.  சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்ற நான்கு வகை பொன் வணிகர்களும் வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம் வராத வகையில் தங்கள் கடைகளில் அறிவிப்புக் கொடிகளைப் பறக்க விட்டிருந்தனர் என்கிறார் அடிகள். இந்த ஒரு நடைமுறை வாணிகர்கள் தமக்குள்ளேயே வகுத்துக்கொண்டதா அல்லது ஆட்சியாளர்கள் முறைப்படுத்தியதா என்ற கேள்விக்கு, அரசனும் அவனை அண்டியிருப்பவர்களும் செய்தவையாக நாம் பின்னால் காண இருப்பவை இந்த ஏற்பாடுகள் வாணிகர்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்டவை என்ற விடையைத் தரும். ஒரு வேளை மதுரை நகர வாணிகர்களின் ஒருமையான இந்த நாணயம் பற்றி அறிந்துதான் அண்டை நாடுகளிலிருந்து நலிந்த வாணிகர்கள் மதுரைக்கு வரவும் இங்குள்ள ஆட்சியாளர்கள் அவர்களைக் கொல்லவுமான கதைகள் பண்டைக் காலங்களில் பதிவாகியிருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.
                                                                               
ஒன்பான் மணிகளைப் போன்றே தங்கத்தின் நான்கு வகைகளின் தோற்றத்துக்கும் சிவனைத் தொடர்புபடுத்தி அருவருப்பூட்டும் இரண்டு கதைகள் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன. சிவனின் விந்தை(வீர்யத்தை) காற்று(வாயுவு)ம் நெருப்பு(அக்கனியு)ம் கங்கையில் விட்டதால் பிறந்தது, இதனால் பொன்னுக்கு காங்கேய மெனவும் ஒரு பெயருண்டு என்பது ஒரு கதை. இன்னொன்று சிவபிரான் விந்தை மேனோக்கிய காலத்துச் சிறிது பூமியில் விழ அது நெருப்பை(அக்னியை)ச் சென்றடைந்தது. ஒளியுடன் ஒளி கூடிப் பொன்னாயிற்று. நெருப்பும் நிலவும்(சந்திரனும்) கூடியதே பொன், இது இன்னொரு கதை. இவையன்றி பொன்னின் உண்மையான தன்மைகளைப் பற்றிய செய்திகளையும் அது தருகிறது.

வலைதளத்தில் இறங்கிப் பார்த்தால் ஆங்கிலத்தில் நான்கு நிறங்களைக் கொண்ட பொன்வகைகள் கிடைக்கின்றன. தூய்மையான வடிவில் அது தங்கம் எனப்படும். தகதகப்பதால் தங்கம் என்ற பெயர் வந்தது என்பார் பாவாணர். எளிதில் வளைந்து நெளியும் தன்மை கொண்டது, எனவே பயனுள்ள எந்தப் பண்டமும் செய்யப் பொருத்தமில்லாதது. எனவே ஏதாவது ஒரு பொன்ம(உலோக)த்துடன் கலந்துதான் தங்கம் பயன்படுகிறது. கலப்புத் தங்கத்தின் பெயர்தான் பொன். இரு வகைத் தங்கத்துக்கும் gold என்ற சொல்தான் ஆங்கிலத்தில் உள்ளது.

தங்கத்தின் ஒளிரும் மஞ்சள் நிறம் கொண்டது தூய தங்கம் என்கிறது.

செம்முளரி(ரோரா)ப் பொன்(Rose gold) என்பது இன்னொன்று. இது சிறிது செம்மை நிறம் கலந்ததாக இருக்கும் என்கிறது மேற்படி வலைப்பதிவு. செம்புச் சேர்மானத்தால் இவ் வண்ணம் அதற்குக் கிடைக்கிறது என்கிறது. நம்மிடையில் செம்பைக் கலந்துதான் தங்கத்தைப் பொன்னாக்கும் வழக்கம் உள்ளது. அதில் சிவப்பு நிறக் கலப்பு இருப்பதை இதுவரைக் கவனித்ததில்லை. ஆடகம் என்ற சொல்லுக்கு துவரை என்ற ஒரு பொருள் உள்ளது. துவர் என்ற சொல்லுக்கு சிவப்பு என்ற பொருளும் உள்ளது. துவரை என்ற சொல்லுக்கு செம்பு என்று ஒரு பொருளிருப்பதாகப் பாவாணர் கூறியிருக்கிறார். துவாரகை என்பது செம்பு என்பதன் அடிப்படையாக வந்தது என்ற அவரது முடிவுக்குத் துணையாக இதைக் கூறியள்ளார். அந்த வகையிலும் சிவப்பு என்ற பொருள் இருப்பதை வைத்தும் ஆடகப் பொன் என்பதைச் செம்பு கலந்த தங்கம் என்று முடிவு கட்டலாம்.

அடுத்து வருவது வெள்ளைப் பொன்(white gold). இது ஏறக்குறைய வெள்ளியின் நிறமுடைய தங்கமாக வெளிறலாக இருக்கும் என்கிறது. நிக்கலைக் கலப்பதால் தங்கம் இந்நிறம் பெறுகிறது என்கிறது அது. சாதரூபம் என்பது இதுவாகுமோ? சாதம், அதாவது சோற்றின் நிறம் வெண்மைதானே!

அடுத்து வருவது பச்சைப் பொன், அதாவது பசும்பொன். இது தங்கத்துடன் செம்பையும் வெள்ளியையும் கலப்பதால் பெறப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் கிளிச்சிறை -  கிளியின் சிறகு எனப்படுவது, கிளியின் சிறகு பச்சைதானே?

இறுதியான நான்காவது வகை நீலப் பொன். இது இரும்பைக் கலப்பதால் கிடைப்பது. இதுதான் சாம்பூநதமோ? சம்பு என்பது நாவல் மரமாகும். நாவல் பழத்தின் நிறம் கறுப்பை ஒக்கும் மிக மிக அடர் நீல நிறமென்று சொல்ல்லாமா?[2]

இவை சாதகும்ப மென்னும் சாதரூபம், சதகும்பமென்கிற பர்வத்தத்தில் பிறத்தலாலும், கிளிச்சிறை சற்றுப் பசுமை நிறமுடைமையாலும் ஆடகம் மிக்க ஒளி கொண்டிருத்தலாலும் சாம்பூநதம் என்பது மேருவிற்கருகில் நாவற்பழ ரசத்திலுண்டான நதியிற் பிறத்தலானும் நால்வகை ஆயின என்கிறது அபிமான சிந்தாமணி. தொழில் வல்லாரை இழிவானவர்களாக ஒதுக்கும் தமிழ் – பாரதப் பண்பாட்டின் காவலர்களான புராணிகர்கள் தங்கள் கற்பனை போனபடி பாலியல் கற்பனைகளையும் கலந்து எழுதி வைத்த இத்தகைய புளுகு மூட்டைகளை விட்டால் உண்மையான செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் கிடைப்பது நம் பண்பாட்டில் அரிதாக இருக்கிறது. மேலே வலைதளத்திலிருந்து இறக்கிய செய்திகள் தமிழகத்திலுள்ள சிறீ இலக்குமி நகையாளர்களால்(Sri Lakshmi Jewellers) தங்கள் வலைதள வாணிகத்துக்காக 2009இல் வெளியிட்ட ஒன்றாகும். ஆக, இது தமிழக பொற்கொல்லர்களால் பேணிவரப்பட்ட தொழில்நுட்பச் செய்தியாகத்தான் இருக்க முடியும். தமிழகத்தில், அண்மைக் காலமாக பொன் நகைகளில் தங்கத்துக்கு வலுவூட்ட செம்பும் பற்றவைக்க கியாட்மியம் எனும் பொன்மம் பயனுக்கு வரும் வரை நாமறிய செம்பு – வெள்ளிக் கலவைதான் பயன்பட்டது.

எனக்கு 10 அல்லது 12 அகவை இருக்கும் போது என் தாயாருக்கு நகை செய்ய வேண்டுமென்று ஒரு பொற்கொல்லரை ஏற்பாடு செய்தார்கள். பக்கத்திலுள்ள பெருங்குளம் என்ற ஊரிலிருந்து ஓர் ஏழைப் பொற்கொல்லர் வந்தார். அவர்கள் தங்கத்தைத் திருடி விடுவார்கள் என்ற எண்ணத்தில் மிகவும் தயக்கத்துடன்தான் அக் காலத்தில் பொற்கொல்லர்களைத் தேர்வு செய்வார்கள். அதனால் அவர் எங்கள் வீட்டுக்கு வந்துதான் வேலை செய்தார். நான் அவர் பக்கத்தில் இருந்து அவர் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே கேள்விளாகக் கேட்டுத் துளைத்து எடுத்துவிடுவேன். அவர் விரட்டினாலும் நகர மாட்டேன். அந்தக் காலத்து வகை நகைகள் இப்போது இல்லை என்பதால் நான் கண்டவற்றைப் பதிவது நல்லது என்ற எண்ணத்தில் இவற்றைப் பதிகிறேன்.

குமரி மாவட்ட நாடார்களிடையில் தாலி கட்டுவதைக் குறிப்பிட பொன்பூட்டுதல் என்றொரு சொல்லும் வழக்கில் உள்ளது. மணமகனின் உடன் பிறந்தாள் அல்லது உடன்பிறந்தாள் முறையுடைய பெண்தான் தாலிகட்டும் நடைமுறையில் உதவுவாள். அவளுக்குப் பொன்பூட்டுக்காரி என்ற சொல் வழக்கிலிருக்கிறது. அது பொய்ம்பூட்டுக்காரி என்று மருவி வழங்குகிறது. அதாவது தாலி கோர்த்த தொடரி(சங்கிலி)யின் இரு முனைகளிலுமுள்ள கொளுவிகளை ஒன்றோடொன்று இணைப்பதுதான் பொன் பூட்டுவது. இங்கு தாலி என்பது ஒற்றை உருப்படியல்ல.(நகையை உருப்படி எனும் வழக்கு குமரி மாவட்டத்தில் நிலவுகிறது.) தாலியை நடுவில் வைத்து இரு புறங்கிலும் பக்கத்துக்கு 10, 13 என்று உருப்படிகளை தொடரியில் கோர்த்து பூட்டுவதுதான் வழக்கம். தாலியையும் சேர்த்து 21, 27 என்ற எண்ணிக்கையில் உருப்படிகள் தேறும். உருப்படிகளைக் கோர்க்கும் தொடரி பெரும்பாலும் வெள்ளி இழைகளைப் பின்னிச் செய்யப்பட்டதாக இருக்கும். ஏழைகள் நூல் கயிற்றைப் பயன்படுத்துவர். அதில் மூன்று முடிச்சுகள் இடப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை[3].

தாலி தவிர்த்த இந்த 20 அல்லது 26 உருப்படிகள் பன்னீர்ச் செம்பு, மாங்காய், பூசணிக்காய் எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையில் 8 பட்டைகள் கொண்ட மணி எனப்படும் ஒவ்வோர் உருப்படி இருக்கும். ஊர்ப்புறங்களில் குழந்தைகள் கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிந்திருக்கும் சிறு நகைகளின் இருபுறங்களில் இத்தகைய மணிகளை இப்போதும் பார்க்கலாம். இந்த மணிகளின் நடுவில் ஒரு சிறு செப்புக்குழாயைப் பொருத்தியிருப்பார்கள்.  மாங்காய் போன்ற பெரிய உருப்படிகளின் மீது ஒரு பொன் வளையம் பொருத்தியிருப்பார்கள். இவற்றின் ஊடேதான் கோர்க்கும் தொடரி அல்லது கயிறு செல்ல வேண்டும்.
உருப்படி, மணி ஆகியவற்றைப் பொன் தகட்டில் செய்ய வேண்டும். அதற்கென்று அச்சுகள் உண்டு. இந்த அச்சுகள் இரும்பால் செய்யப்பட்டவை. இந்த அச்சுகளைப் பழுக்கக் காய்ச்சி எருமைக் கொம்பில் அழுத்தி இந்த அச்சுக்கு இணையான ஒரு குழிவை உருவாக்குவார்கள். இப்பொழுது இந்தப் பள்ளத்தில் தங்கத் தகட்டை வைத்து அதன் மேல் அச்சை வைத்து சுத்தியலால் அடித்தால் உருப்படியின் பாதி கிடைத்துவிடும். அவ்வாறு இரண்டு செய்து ஒவ்வொன்றிலுமுள்ள பிசிறுகளை அதற்கென்று இருக்கும் கத்திரிக்கோலால் வெட்டி இரண்டையும் இணைத்தால் உருப்படி கிடைத்துவிடும். இப்போது இந்த இரண்டு பாதிகளையும் பற்ற வைத்து இணைக்க வேண்டும். இதற்காக செம்பையும் வெள்ளியையும் சேர்த்து உருக்கி அதை அடித்து மெல்லிய தகடாக்கி சிறிய துணுக்குகளாக நறுக்கிக் கொள்வார்கள். குன்றிமணியின் தோலை அகற்றி கூழ்போல் தேய்த்தெடுத்து அதனுடன் கட்டிச்சன்னாறு என்று நினைக்கிறேன், பெயர் சரியாக நினைவில்லை, ஒரு காரத்தைச் சேர்த்து பட்டறை மீது வைத்து சுத்தியலால் நன்றாகத் தேய்த்துக் குழப்புவார்கள். இதுதான் பசை. இதனுடன் வெட்டிய செம்பு, வெள்ளிக் கலவைத் துணுக்குகளைக் கலந்து ஒரு கைப் பெருவிரலின் பின்புறத்தில் வைத்துக்கொள்வார்கள். இப்போது ஒட்ட வேண்டியவற்றை இணைத்துப் பிடித்துக்கொண்டு படத்தில் காட்டியுள்ள இடுக்கியால் அந்தத் துணுக்குகளை எடுத்து இணப்பின் நெடுகிலும் ஒட்டி உலரவிடுவர். உலர்ந்த பின் அகல் விளக்கை ஏற்றி[4] அதன் சுடரினுள் அதற்கென்று உள்ள, நுனிப் பகுதியில் வளைந்து திரும்பும் முனையையுடைய குழாயின் முனைப்பகுதியை வைத்து மறுமுனையை வாயில் வைத்து ஊதுவார்கள். விளக்கின் மஞ்சள் ஒளி உண்மையில் எண்ணெய் சூடாகி கரியாகச் சிதைய அதில் தீப்பற்றி எரியும் போது எரியாத கரித்துகள்கள் பழுத்து செந்நிறம் கொடுப்பதால் வெளிப்படுவதே. எரிந்த கரித்துகள்களிலிருந்து வெளிப்படுவதே சுடரின் அடிப்பாகத்திலுள்ள நீலப் பகுதி. இதுவே சுடரிலுள்ள மிகு வெப்பப் பகுதி.[5] சுடரைச் சுற்றியுள்ள வளி மண்டவலத்திலிருந்து கிடைக்கத்தக்க பிராண வாயு எனப்படும் உயிர்வளியில்(தீயகம் என்பது நான் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது திருவிதாங்கூர் அரசு பாடத்திட்டத்தில் இருந்த சொல்) எரிந்த இந்தப் பகுதி போக எஞ்சிய பகுதி நமக்கு வெளிச்சத்தைத் தந்துவிட்டு மேலே புகையாகச் சென்றுவிடுகிறது.   
   

பழுத்த அந்தக் கரிப்புகையினுள் வாய் வைத்து ஊதும் காற்றிலுள்ள உயிர்வளி செல்லும் போது அது கரித்துகள்களை எரித்து நீலச் சுடராக்குகிறது. அந்த வெப்பத்தில் தங்கத்தை விடத் தாழ்ந்த உருகுநிலையுடைய வெள்ளி – செம்புக் கலவைத் துணுக்குகள் உருகி இரு பக்கமும் இருக்கும் பொன்தகடுகளை இணைக்கின்றன. இந்த முழுச் செயல்முறையையும் பொடி வைத்து ஊதுதல் என்பர். பின்னர் முழு வடிவம் பெற்ற தகட்டாலான உருப்படியில் துணுக்குகளின் துருத்திக்கொண்டி- ருக்கும் பகுதிகளை அரம் கொண்டு தேய்த்து அகற்றுவார்கள். அப்போது விழும் கலவைப் பொன்மத் தூளை அடியில் தாள் போன்ற ஏதாவதொன்றை வைத்து அதில் திரட்டி மெழுகால் ஒற்றி எடுத்து பின்னர் மெழுகை சிரட்டைக் கரி மீது உலையில் வைத்து ஊதினால் மெழுகு எரிந்துவிட பொன்மக்கலவை கிடைக்கும். இவ்வாறு பற்றவைப்பு இன்றி உள்ள பொன் பகுதிகளைத் தேய்க்கும் போது விழும் தூளைச் சேர்த்தெடுத்து இதரம் எனும் பாதரசத்தை ஊற்றினால் அதில் தூள் கலந்துவிடும். அந்தக் கலவையைத் தீயில் வைத்துச் சூடாக்க இதரம் ஆவியாகிவிட பொன் கிடைக்கும்.

தங்கத் தகட்டால் பொள்ளலான இந்த உருப்படிகளில் மெழுகை நிரப்புவர். இதற்காக வச்சிரம் எனும் மெழுகு வகையை தீயில் காயவைத்து நூல் போன்று இழுத்து ஒடித்து வைத்துக்கொள்வர். உருப்படியில் சிறு ஓட்டையிட்டு நெருப்பில் வைத்து இந்த மெழுகுக் கம்பிகளை இத் துளையினுள் நுழைப்பார்கள். அது உருகி கொஞ்சம் கொஞ்சமாக உருப்படியை நிரப்பி வெளியே துறுமத் தொடங்கியதும் நிறுத்தி உருப்படியை வெளியிலெடுத்து ஆறிய பின் வெளியே மெழுகு ஏதாவதிருந்தால் சுரண்டி எடுத்துவிடுவார்கள். இந்த ஓட்டையை அடைக்கமாட்டார்கள். அணிந்த பின் பொதுப்பார்வைக்குக் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருக்குமாறு இந்த ஓட்டை போடப்படும். வடிகாதில் அணியப்படும் பாம்படம் எனப்படும் பாம்பு படம், தண்டட்டி எனப்படும் தண்டொற்றி போன்ற உருப்படிகள் இப்படி மெழுகு அடைக்கப்பட்டவையே. முடிச்சு எனப்படும் வடிகாதணி மட்டும் மெழுகு இன்றி நூண்ணிய பொன் கம்பியால் பின்னப்பட்டிருக்கும்.

இவ்வாறு பொற்கொல்லரை வீட்டில் வைத்து நகை செய்ய வைப்பது தங்கத்தில் கலப்படம் செய்யாமல் கண்காணிக்கத்தான். அவர்களைப் பற்றிய மக்களின் கணிப்பு அன்று அப்படித்தான் இருந்தது. ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட கடையில் வாங்கிவந்த விலைச் சீட்டை வழியில் ஓரிடத்தில் அமர்ந்து திருத்திய இருவரைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு அந் நாட்களில் வழங்கிய செய்கூலி குறைவாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். தொழில் போட்டியில் அவர்களே செய்கூலியைக் குறைத்து இந்த உத்தியைக் கையாண்டிருக்கலாம். பொதுவாக சாதியடிப்படையில் தொழிலில் நெடுநாள் புழங்குவோர் தொழிலில் தந்திர உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது இயல்பு என்று தோன்றுகிறது. குயவர்களாகிய குலாலர்கள் நடத்தும் செங்கல் சூளைகளில் இதை நான் பாத்திருக்கிறேன். புதிதாக அத் துறையில் நுழைந்திருக்கும் நாடார்களும் பள்ளர்களும் தொழிலில் குலாலர்களை விட நாணயத்துடன் இருக்கிறார்கள்.

இன்று சொந்தமாகத் தொழில் செய்யும் பொற்கொல்லர்கள் அருகிவிட்டனர். பெரும்பாலும் மொத்தமாக வேலைகளை எடுத்துக்கொண்டு கூலிக்கு பொற்கொல்லர்களை வைத்து நகைசெய்து நகைக்கடைகளுக்கு வரும் ஆணைகளுக்கு மட்டுமல்ல கடைகளின் விற்பனைக்கும் மார்வாரிகள் நகை செய்து கொடுக்கும் வழக்கம்தான் நிலவுகிறது. தங்கம் வாங்கிக் கொடுத்து விளக்கப்பட்டியலில்(கியாட்டலாகு) காட்டப்பட்டிருக்கும் உருப்படிகளுக்கு ஆணை கொடுத்தால் நமக்குக் கிடைப்பது மிகப் பெரும்பாலும் வேறொன்றாகத்தான் இருக்கும். எனவே கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பவற்றில் ஒன்றைத் தேர்வதுதான் வாடிக்கையாளர்களின் தலைவிதி.

மேலே விளக்கப்பட்டிருக்கும் பழைய முறையில் நானறிந்த வரை சேதாரம் என்று எதுவும் கழிக்கப்படவில்லை. ஆனால் பற்றவைப்பதற்கு சேர்க்கப்பட்ட வெள்ளி – செம்புக் கலவையும் சேர்த்து பொன்னாகத்தான் எடைபோடப்பட்டது. கல் என்ற பெயரில் பொருத்தப்படும் பட்டை தீட்டப்பட்ட கண்ணாடிகளைக் அகற்றிவிட்டுத்தான் எடை போட்டார்கள். மெழுகடைத்த நகை வைக்கப்பட்டிருக்கும் தராசின் தட்டை நகையுடன் தண்ணீரில் மூழ்கவைத்து எடைபோடுவார்கள்.

அண்மைக் காலம் வரை கல்லையும் சேர்த்து பொன்னாக எடை போட்டு கல்லுக்கும் விலை சேர்த்து சேதாரம் என்று 20 நூற்றுமேனி வரை சேர்த்து கறந்து வந்தார்கள் இன்றைய நகைக் கடைக்காரர்கள். இப்போது அதில் கொஞ்சம் நீக்குப்போக்கு காட்டுகிறார்கள் போலும். ஆனால் புதுப்பணம் வந்தவர்கள் இவை எவற்றையும் கணக்கிலெடுக்காமல் பெரும்பெயர் கொண்ட கடைகளுக்குச் சென்று அவர்கள் தங்களைக் கொள்ளளையடிக்க விடுகின்றனர். இதில் பொற்கொல்லர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வயிற்றுப்பாட்டுக்குக் கூலிவேலை செய்வோராகவே அவர்கள் வாழ்கின்றனர்.

12.                 நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
                     அம்பண வளவையர்
      என்ற வரிகளில் மூன்று வகை அளவுக் கருவிகளைப் பற்றி அடிகள் கூறுகிறார். நிறுத்தலளவைக்கான துலாக்கோல், முகத்தல் அளவுக் கருவியாகிய பறை, தவசங்களை அளக்கும் மரக்கால் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இவற்றில் இரண்டாவதாகிய பறையை தமிழகத்தில் நான் கண்டதில்லை. முன்னாள் திருவிதாங்கூரில் தவசங்கள் கூட பறை எனப்படும் அளவுக் கலனால்தான் அளக்கப்பட்டன. இது ஆங்கிலத்திலுள்ள barrel என்ற சொல்லுக்கு இணையானது. தோல் இசைக் கருவியான பறைக்கு இணையாகவும் இவ் வாங்கிலச் சொல் கையாளப்படுகிறது.

13.  பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் என்ற வரி வெவ்வேறு வருணத்தாரும் தனித்தனித் தெருக்களில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் காட்டுகிறது. அந்நாள் நகரமைப்பும் இந்த அடிப்படையில்தான் அமைந்திருந்தது என்பதும் தெரிகிறது. கோவலன் கண்ணகி மதுரை வந்தடைந்த போது மதுரையை ஆண்டவன் எனக் கருதப்படும் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியதாகிய புறநானூறு 183ஆம் பாடலில் வரும்
                                 வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
                                 கீழ்ப்பா லொருவன் கற்பின்
                          மேற்பா லொருவனு மவன்கட் படுமே
      என்ற வரிகள் பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டும் வருண முறை கடைப்பிடிக்கப்பட்டதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

14.  அந்தி – மூன்று தெருக்கள் கூடும் முச்சந்தி, சதுக்கம் – நாற்சந்தி, கவலை – பல பாதைகள் கூடும் முடுக்கு, மறுகு – குறுந்தெரு என்ற வகைப்பாடு கவனிக்கத் தக்கது

15.  சிறுகொடிகளாலும் பெருங்கொடிகளாலும் கொடும் வெய்யில் தாக்காதவாறு மூடிய மதுரையின் தெருக்கள் என்பது புதிய செய்தியாக உள்ளது. திருநெல்வேலி போன்ற நகரங்களில் சித்திரை, வைகாசி ஆகிய இரு கடுங்கோடை மாதங்களில் கடைத் தெருக்களின் இரு பக்கங்களிலுமுள்ள கடைக்காரர்கள் கால்கள் நட்டு பந்தல் அமைத்து சாலைகளில் நிழல் விழுமாறு காக்கும் வழக்கம் உண்டு. இதற்கு நகராட்சியும் பொது இசைவு வழங்கியுள்ளது. அதனோடு ஒப்பிடும் போது இது மேம்பட்ட ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு பந்தல் அமைப்பை இன்றைய உள்ளாட்சி அமைப்பினர் ஒழுங்காகப் பராமரிப்பார்களா என்பதே கேள்விக்குறி. 
     
16.  தன் வகுப்பினரான வாணிகர்களைக் கண்டு தன்னிலையை விளக்கி வரும் வரை கண்ணகியைப் பாதுகாக்குமாறு கவுந்தியடிகளை வேண்டி நகருக்குள் புகுந்த கோவலன் மதுரை மாநகரின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெறுமெனே திரும்பியதைப் பார்த்தால் எதிலும் கவனம் கொள்ளாத, பொழுதுபோக்கில் மட்டும் ஈடுபாடு கொண்டவனோ அவன் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அல்லது தன் வகுப்பாரிடம் சென்று தன் இழிநிலையைக் கூற அவன் கூசினானா என்ற கேள்வியும் எழுகிறது. ப.சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால் என்ற புதினத்தில் கீழைத் தீவு ஒன்றில் வட்டிக்கடை வைத்திருக்கும் நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியாரான தன் தாய்மாமனிடம் வேலை பார்க்கும் கதைத் தலைவன் உலகப் போர்ச் சூழலில் அரசியலில் ஈடுபடுவதால் வெறுப்புற்று அவனை வெளியேற்றி எந்த நல்ல பண்பும் இல்லாதவன் என்று தான் புறக்கணித்த இன்னொரு முறைமாப்பிள்ளைக்குத் தன் பெண்ணை மணமுடித்துக் கொடுக்க முடிவு செய்யவும் கதைத் தலைவனை உயிருக்குயிராய்க் காதலித்த மகளும் ஒரு மறுப்பும் கூறாமல் அதை ஏற்றுக்கொண்டதும் பணத்துக்கு வெளியே பொது நோக்கில் எதிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கும் அவர்களது மனப்பான்மையைக் காட்டுவதாக அக் கதையின் போக்கு உள்ளது. ஒருவேளை அதுவே கோவலனின் தயக்கத்துக்கும் காரணமாகலாம். ஆனால் பொதுவாக, நகரத்தார், மார்வாரிகள், முகம்மதியர்கள், நாடார்கள் போன்றோர் வாணிகத்தில் இழப்பெய்திவிட்ட தம் வகுப்பாருக்கு ஒரு முறை உதவுவதுண்டு. அதை மனதில் தாங்கி மதுரை வந்த கோவலன் இழிவுணர்ச்சிக்கு ஆட்பட்டு அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு வகையில் அவனது தன்மான உணர்வை வெளிப்படுத்துவதாகவும் இதைக் கொள்ளலாம்.
★                               ★                          ★

       



[1] மரம் அறுக்கும் வாள் – கழகத் தமிழ் அகராதி
[2] Pure gold is bright golden yellow in colour. Other metals are alloyed with gold to give strength to the gold.
Rose gold – Rose gold is slightly reddish shade. This colour change is due to mixing of copper.
White gold – It looks pale because it is almost silver coloured gold. It causes due to nickel.
Green gold – Green gold is slight greenish in colour. It is due to mixing of copper and silver.
Blue gold – Blue gold with slight bluish shade. This is caused by iron.
The purity of gold metal depends upon the percentage of mixing of other metals (alloyed). The high karat measurement is undesirable for jewelry because it is bendable and soft. The measurement is gold in international is in troy ounce.
[3]   இந்த “மூன்று முடிச்சை”ப் பற்றி காலஞ்சென்ற திருவாரூர் புலவர் த.ச.தமிழனார் கூறிய விளக்கம் மிகப் பொருத்தமானது. நான் கோயில்பட்டியில் பணியாற்றிய போது கழுகுமலையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் தமிழ் முறைப்படி திருமணம் நடத்துவதற்காக வரும் வழியில் என்னோடு ஒரு நாள் தங்கி அடுத்த நாள் இருவரும் சென்றோம். மணமகன் பெண் கழுத்தில் மூன்று மஞ்சள் சரடுகள் கட்டினார். இந்த மூன்று சரடுகள்தாம் மூன்று முடிச்சுகளாகச் சுருங்கியுள்ளன என்று திரு.தமிழனார் கூறினார். அந்த மூன்று கயிறுகளையும் மூன்று பேர் கட்டுவதாக இருந்து பின்னர் மணமகன் கட்டுவதான வடிவம் பெற்றுள்ளதாகவும் விளக்கினார். இந்த மணமகனுக்குப் பெண்ணை மணம் செய்து கொடுக்க பெண்ணுக்கு முதல் உரிமை கொண்ட தாய் மாமன் தன் ஒப்புதலைத் தருவதாக ஒரு கயிற்றை அவர் கட்ட அடுத்து மணமகன் கட்ட பின்னர் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக அரசின் சார்பில் ஊர்த் தலைவரான நாட்டாண்மை போன்றவர் மூன்றாவது கயிற்றையும் கட்டுவதாக அவர் விளக்கினார். குமரி மாவட்ட நாடார்களிடையில் இந்த மூன்று வகை உரிமை நடவடிக்கைகளின் வடிவம் பற்றி எமது ஆக்கமான பஃறுளி முதல் வையை வரை நூலில் பார்க்கலாம்.       


[4] . அப்போது மண்ணெய் விளக்குகள் புழக்கத்துக்கு வரவில்லை.
[5] . சிவக்குறி(லிங்கம்) என்பது தீச்சுடரின் வடிவம் என்று நாட்ட முயன்ற மறைமலையடிகள் இந்த நீலப் பகுதியைச் சுடரின் குளிர்ச்சியான பகுதி என்றும் உமையொருபாகனான சிவபெருமானுடன் ஒன்றியிருக்கும் பெண்மையை அது குறிப்பதாகவும் விளக்குவார்.