19.11.17

சிலப்பதிகாரப் புதையல் - 17 அடைக்கலக்காதை

15. அடைக்கலக் காதை

நிலத்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண் டுருட்டுங் கெளரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
5 பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்
கறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து
தீதுதீச் மதுரையும் தென்னவன் கொற்றமும்
10 மாதவத் நாட்டிக்குக் கோவலன் கூறுழித்
தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
15 குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து
தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க
20 நாவ லந்தணன் தானவின் றுரைப்போன்
வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
25 மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட்டாங்
கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்
30 புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்
நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
35 துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென
விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
40 மங்கல மடந்தை மாதவி தன்னொடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
45 வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்
பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள
ஒய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
50 பொய்பொரு முடங்குகை வெண்கோட்ட டடங்கி
மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
55 எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரு மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தல்நல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
60 பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
65 மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
70 ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவ டன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
75 நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ
பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்
80 பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு
கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
85 பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
90 பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்
இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவக்
95 கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்
100 பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்
மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி யறவோன் றன்முன்
மணிமே கலையை மாதவி யளிப்பவும்
105 நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதீங் குறுமென
அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
110 உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக்
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவத் தாட்டியும் மாமாறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை
115 அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்ண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி யையையைக் கண்டடி தொழலும்
120 ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலன் முதுமகள் செவ்வியன் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி
125 மாதரி கேளிம் மடந்தைதன் கணவன்
தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
130 இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன்
மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
135 ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே யாகித் தாங்கிங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
140 நடுங்கதுய ரெய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
145 வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ
தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும்
150 மிகப்பே ரின்பம் தருமது கேளாய்
காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
155 தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்
160 பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்
சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன் றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
165 மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
170 தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி
எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்திதுநின்
மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பிக்
175 காதற் குரங்கு கடைநா ளெய்தவும்
தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்
உத்தர கெளத்தற் கொருமகனாகி
180 உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப்
பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்
பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்
185 தற்காகத் தளித்தோள் தானச் சிறப்பெனப்
பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொருபாகத்துக் கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தானத் தன்னால்
ஆயினள் இவ்வடிவு அறிமி னோவெனச்
190 சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத்
தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
195 தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்
இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்
கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு
நீட்டித் திராது நீபோ கென்றே
200 கவுந்தி கூற உவந்தன ளேத்தி
வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள்
முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப
205 மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு
செறிவளை ஆய்ச்சியர் சிலர்புறஞ் சூழ
மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
210 காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
215 எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்
வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால்
கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென்.
பொழிப்புரை
நிலத்திலிருந்து கிடைக்கும் செல்வத்துக்கு பாதுகாப்பு வாய்ந்த ஆணையை கடமையாகக் கொண்டு செலுத்தும் பாண்டியர்களுடைய பெருஞ் சிறப்புடைய செங்கோலும் குடையின் குளிர்ச்சியும் வேலினுடைய வெற்றியும் விளங்கிக் கொண்டிருக்கும் மக்கள் அப் பதியை விட்டு நீங்க நினைக்காத தன்மை மேம்பட்ட மதுரை மாநகராகிய பழம்பதியைக் கண்டு அங்கு அறத்தினை பிறர்க்கு அறிவுறுத்தும் நோக்கம் கொண்ட முனிவர்கள் நிறைந்த மதிலின் புறத்தே உள்ள மூதூர்ச் சோலையில் புகுந்து,

குற்றமற்ற மதுரையின் சிறப்புகளையும் பாண்டியனது கொற்றத்தையும் கவுந்தியடிகளுக்குச் கோவலன் கூறினான் அப்போது,

தாழ்ந்த நீரை வேலியாகவுடைய தலைச்செங்காடு(செங்கானம்) எனும் ஊரில் உள்ளவனும் நான்கு வேதங்களையும் முற்ற உணர்ந்தவனும் நன்மை செய்யும் கொள்கை உடையவனுமான மறையவர் தலைவனாகிய மாடலன் என்பவன்,

பெருந்தவ முனிவனாகிய அகத்தியனின் பொதிகை மலையை வலங்கொண்டு, குமரியின் பெரிய துறைக்கண் முறைப்படி நீராடி தம் சுற்றத்தார் இருக்கும் இடத்துக்கு மீண்டும் செல்வோன் வழி நடந்த வருத்தத்தால் உண்டான மிகுந்த தளர்ச்சியைக் தணிக்க கவுந்தியடிகள் இருந்த நிழல் படிந்த சோலையினுள் புகுந்தவனை கோவலன் சென்று அவன் அடிகளை வணங்க,

அரசன் அளித்த சிறப்பான தலைக்கோல் பட்டத்தால் சிறந்த புகழினைப் பெற்ற மாந்தளிர் போலும் மேனியை உடைய மாதவியாகிய மடந்தை நல்ல விதிவாய்க்கப் பெற்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள். தீட்டு நாட்கள் 5ம் கழிந்த பின்னர் அகவையில் முதிர்ந்த கணிகையர் மாதவியின் மகளுக்கு நல்ல புகழ் அமைந்த பெயரை இடுவோம் என்று தாங்கள் மகிழ்ச்சியுறும் வகையில் ஒரு நல்ல பெயரைக் கேட்ட போது கோவலன்,

இருள் நிறைந்த நடுச் சாமத்தில் அலைமோதும் பெரிய கடலில் மரக் கலம் உடைபட்ட எம் முன்னோன் முற்காலத்தில் முற்பிறப்பில் அறத்திணையும் தானத்தினையும் செய்தோன் ஆகையால் கரை கிட்டும் வாய்ப்பு கிட்டாமல் சில நாட்கள் நீந்திச் செல்ல, இந்திரன் கட்டளையால் இப் பகுதியில் வாழ்பவள் நான், என் பெயர் மணிமேகலை, நீ அஞ்ச வேண்டியதில்லை, உன்னைக் காக்கவே வந்தேன், உனது பெரிய தானங்களின் பயன் உன்னைவிட்டு அகலாது, எனவே துயரத்தைக் கைவிட்டு துன்பக் கடலை விட்டு வெளியே வா எனக் கூறி மந்திரத்தால் அவனைக் கொண்டு சென்று கரை சேர்த்த எம் குலத் தெய்வமான மணிமேகலையின் பெயரைக் குழந்தைக்கு இடுக என்று நீ சொன்னாய்.

மேகலையை அணிந்த ஆயிரம் கணிகையர் கூடி மணிமேகலை என்று பெயரிட்டு அக் குழவியை வாழ்த்திய அன்று மங்கலம் பொருந்திய மடந்தையாகிய மாதவியோடு சிவந்த பொன்னாகிய மழையினை சிவந்த கையாலே நீ பொழிந்தாய். அப்போது,

ஞானத்தின் நல்ல நெறிக்குச் சிறந்த எல்லையாக உள்ளவன், தானம் பெறும் நோக்கத்தோடு தளர்ந்த நடையோடு ஊன்றுகோலாகிய காலை ஊன்றி வந்த கூனிய உடலை உடைய அந்தணனை, பாகர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கும் பறை கொட்ட மதம் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்த யானை சினத்துடன் கைப்பிடிக்குள் கொண்டது.

அப்போது ஓய் எனக் குரல் கொடுத்து விரைந்து அங்கு அவ் வுயர் சாதியானை, யானையின் கைப்பிடியினின்றும் விலக்கி அதன் கையினுள் புகுந்து அதன் துளையுள்ள தும்பிக்கையினுள் அடங்கி போரிடும் கொம்புகளுக்குள்ளும் அடங்கி கரிய பெரிய குன்றின் மீது விஞ்சையன் இருப்பது போல் அதன் பிடரியிலிருந்து பெருஞ்சினம் குறையாத நிலையிலிருந்த யானையை அடக்கிய கருணை மறவனே!

தன் பிள்ளையைக் காத்த கீரியைத் தவறாக உணர்ந்து தன் மனைவி கொன்றுவிட அவளை இகழ்ந்து ஒதுக்கிவிட்டு வடக்கே கங்கையாற்றில் குளிக்கப் புறப்பட்டு விட்ட பெரும் மறையாளனின் பின்னே அவன் மனைவி வர உன் கையிலிருந்து உணவு பெற்று வாழும் வாழ்க்கை முறையானதாகாது, ஆதலால் வடமொழியில் எழுதிய இந்த ஏட்டிலுள்ள செய்தியை அறியத் தக்கவர்களிடம் நீ கொடு என்று சொல்லிப் போய்விட்டான். அவளும் கடைத்தெருவிலும் பெருங்குடி வாணிகர் வாழும் மாடங்கள் நிறைந்த வீதியிலும் வீடு வீடாக அலைந்து பாவத்தினைப் போக்கி அதனுடைய பலனைப் பெறுங்கள் என்று கூறிச் சென்றுகொண்டிருந்த பார்ப்பனியை அருகில் அழைத்து நீ உற்ற துன்பம் யாது, உன் கையில் இருப்பது என்ன என்று கேட்க, அப் பெண் தான் அடைந்த பெரும் துன்பத்தினை எடுத்துக் கூறி இச் செய்தி எழுதிய ஏட்டினை வாங்கி கைப் பொருளைக் கொடுத்து என் கொடிய துன்பத்தைக் களைந்திடு என்று கூற அஞ்சாதே, உன் துன்பத்தைக் களைவேன், மனதிலுள்ள துயரத்தை விடு என்று அப்பொழுதே வேதத்தினை உடைய முனிவர்கள் கூறிய அறநூல்களில் சொல்லியுள்ளபடி தவறு செய்த பார்ப்பனியின் துயரம் நீங்குமாறு தானம் செய்து அவளது துயரத்தைப் போக்கி காட்டுக்குச் சென்ற கணவனை அழைத்து வந்து குறையாத தன் செல்வத்திலிருந்து வேண்டிய பொருளைக் கொடுத்து நல்வழியில் நிறுத்திய தொலையாத செல்வமுடையவனே !

ஓர் பத்தினி பொய்ப் பழியினைச் சுமப்பதற்கு வறியவன் ஒருவன் அவள் கணவனுக்கு தான் காணாததைக் கண்டதாகப் பொய்ச் சான்று கூறியதால், அறுவகைத் தவறு செய்வோரை அறைந்து உண்ணும் பூதத்தின் கையிலிருக்கும் குருதிபடிந்த பாசத்தில் அகப்பட்டான். அவனது தாய் படும் துயரத்தைக் கண்டு அவனை கட்டிய பாசத்தினுள் தான் விரைந்து சென்று அடைந்து என் உயிரை எடுத்துக் கொண்டு இவனுடைய உயிரைத் தந்துவிடு என்று நீ கேட்டாய். நல்ல பெரிய பூதம் அவ்வாறு தராததுடன் கீழ்மகன் ஒருவன் உயிருக்காக நல்ல ஓர் உயிரைப் பறித்து உயர் நிலையை இழக்கும் பண்பு எனக்குக் கிடையாது, எனவே உன் கருத்தை மாற்றிக்கொள் என்று அவன் முன்னாலேயே அவனை அடித்து உண்டது. வருந்திய உள்ளம் கொண்ட அவளுடன் சென்று அவன் சுற்றத்தாருக்கும் தொடர்பு கொண்ட கிளைகளுக்கும் அன்பால் பற்றிய சுற்றத்தார் போல் கருதிப் பசியாகிய நோயை அகற்றி பல ஆண்டுகள் காத்த வறியோர் தலைவனே!

அறிவால் முதிர்ந்த கோபாலனே, நான் அறிய இந்தப் பிறப்பில் நீ செய்தவை அனைத்தும் நல்வினைகளே. இணை கூற முடியா தனிமையில் உழன்று திருமகளை ஒத்த இந்த மாணிக்கத் தளிருடன் இங்கு வந்தது முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனோ என்று கேட்டான் மாடலன்.

அதற்குக் கோவலன், ஒரு கீழ் மகனால் புரத்தலில் வல்ல பாண்டிய மன்னனுடைய காவலை உடைய இம் மதுரை நகரின் மணக்கும் ஐவகைக் கூந்தலையுடைய இவள் கண்டால் நடுங்கத்தக்க துன்பத்தினை அடைய உடுத்த ஆடை பறிக்கப்பட்டு எருமை மீது நான் ஏறிச் செல்லவும் அழகுடைய பின்னப்பட்ட கூந்தலையும் ஆராய்ந்த அணிகலன்களையும் உடைய இவளோடு பற்றினை அறுத்த மேலோர் பெறும் பேற்றினை யான் பெறவும் மலர் அம்புகளை வெறு நிலத்தில் வீசி மன்மதன் செயலற்று ஏக்கங் கொள்ளும் வண்ணம் அழகு விளங்கும் போதியில் விளங்கும் அறவோனாகிய புத்தனிடத்து மணிமேகலையை மாதவி கொடுக்கவும் நனவினில் போலச் செறிந்த இருளினை உடைய நடுயாமத்தில் கனவு கண்டேன். எனவே பொல்லாங்கு ஒன்று விரைவில் வந்து சேரும் என்று சொன்னான்.

துறவறத்தை மேற்கொண்ட முனிவர்களுக்கு அன்றி கோட்டைக்கு வெளியிலுள்ள இந்த இருப்பிடம் ஒவ்வாது ஆதலாலும் கோட்டையின் உள்ளே வாணிகர் உன் புகழால் உன்னை அறிந்து எதிரேற்றுக் கொள்வார் ஆதலாலும் நீ இவ்விடத்து இருப்பை அகற்றிவிடு. கதிரவன் மறையும் முன்பாக உன் மனைவியோடு மாடங்களையுடைய மதுரை நகரத்தினுள் சென்று விடு என்று கவுந்தியடிகளும் மறையோனாகிய மாடலனும் கூறினர் அப்போது,

அறத்தையே நினைக்கும் நெஞ்சையுடைய முனிவர்கள் நிறைந்த கோட்டைக்கு வெளியிலுள்ள பழம் பதியில் உள்ள பூப்போன்ற கண்களை உடைய இயக்கிக்கு முறையாக பால் சோறு படைத்து மீள்பவளாகிய ஆயர் குடியில் பிறந்த முதியவளான மாதரி என்பவள் கவுந்தி அடிகளைக் கண்டு அவரது அடிகளை வணங்கினாள்.

பசுக்களைப் பிணி முதலியவற்றிலிருந்தும் காப்பாற்றி புல், நீர் முதலியவை அளித்துப் பேணி அதன் பயனை யாவருக்கும் கொடுக்கின்ற ஆயர்களுடைய வாழ்க்கையில் தீமை இல்லை, ஆகவே இவள் தீங்கு செய்யமாட்டாள். இவள் முதியவள், நல்லவள், அன்புள்ள எளியவள். எனவே இம் மாதரி இடத்தில் கண்ணகியை இருத்துவதில் தப்பு ஒன்றும் இல்லை என்று எண்ணினாள்.

மாதரியே கேள், இப் பெண்ணின் கணவனது தந்தையின் பெயரைக் கேட்பாராயின் அவன் குலத்தில் பிறந்த இந் நகரத்தில் வாழ்வோர் பெறுதற்கரிய செல்வத்தினைப் பெற்றோர் போன்று தமது விருந்தினராக எதிர்கொண்டு அழைத்துக் இக் கரிய பெரும் கண்களை உடையவளோடு தமது காவலை உடைய இல்லத்தில் வைத்துக்கொள்வர், அங்ஙனம் அப் பெரும் செல்வம் உடையார் இல்லத்தில் புகும் வரைக்கும் இடைக்குலப் பெண்ணாகிய உனக்கு இவளை அடைக்கலமாகக் கொடுத்தேன்.

மங்கலமுள்ள இந்தப் பெண்ணை தூய நீரால் குளிப்பாட்டி சிவந்த கயல் போலும் நீண்ட கண்களில் மை எழுதி தேன் பொருந்திய மெல்லிய கூந்தலில் சில மலர்களைச் சூடி தூய புடவையை உடுத்தி நல்ல அணிகலன்கள் அமைந்த இவளுக்கு முன்னோர் கூறிய சிறப்புடைய தோழியரும் காவல் பெண்டும் நற்றாயும் நீயே ஆகிக் காப்பாற்று.

இங்கு என்னோடு வந்த இளங்கொடி போலும் இக் கண்ணகியின் அழகிய சிறிய அடிகள் நிலமகளும் கண்டதில்லை.

கதிரவனின் கொடிய வெய்யிலினால் தன் கணவனுக்காக நடுங்கத்தக்க துயரத்தை எய்தியும் நாவும் உலர வாட்டமடைந்தும் தனது துயரை உணராத உயர்வான குணம் கொண்ட பூங்கொடியைப் போன்ற இவள் கணவனுக்கு இனிய துணையாகிய மகளிருக்கு இன்றியமையாத கற்பாகிய இக் கடமையை மேற்கொண்ட இந்தத் தெய்வத்தை அன்றி பொலிவினை உடைய வேறு தெய்வத்தை நாம் இதுவரை கண்டதில்லை. பத்தினிப் பெண்கள் வாழும் நாட்டில் வான் மழை தவறாது, வளங்கள் குறையாது, பெரும் நிலத்தினை ஆளும் மன்னரின் வெற்றியிலும் சிதைவு தோன்றாது என்னும் பெரியோரின் அத்தகைய நல்லுரையை நீ அறியாயோ?

தவமுடையோர் தரும் அடைக்கலப் பொருள் சிறிதாயினும் அது மிகப் பெரும் இன்பத்தினை தரும். இது குறித்து நான் கூறுவதைக் கேள்:

தோட்டங்கள் நிறைந்த காவிரிப்பூம்பட்டினத்தில் மலர் விரிந்த அசோகின் சிறப்பான அழகிய நிழலில் சாவகர் (சமணர்) பலர் ஒன்று சேர்ந்து இட்ட ஒளி விளங்கும் சிலாவட்டத்தின் மேல் எழந்தருளி அறவுரை கூறும் சாரணர் முன்பு,

வானவில்லைப் போன்று ஒளிவிடும் மேனியுடன் பூமாலை, மணிமாலை, பொன் அணிகள் ஆகியவற்றை அணிந்த இவ் வுலக மக்கள் காண முடியாத தேவர் பலரும் வணங்கும் தெய்வ வடிவினை உடையவனும் ஒரு பக்கத்துக் கை கரிய விரலையுடைய குரங்கின் கையாக உடையவனும் ஆன பெரும் வெற்றியுள்ள தேவனொருவன் வந்து நின்றான். அவனை,

உலக நோன்பிகள் (சாவகர் - இல்வாழ் சமணர்) யாவரும் சாரணரை வணங்கி இங்கு இத் தேவனது வருகை எதனை முன்னிட்டு என்று கேட்டனர். அதற்குச் சாரணர் தலைவன்,

எட்டிப் பட்டத்துடன் இல்லறத்தில் ஈடுபட்ட சாயலன் என்பான் பட்டினி விட்டு உண்ணும் நோன்பிகள் பலரும் வந்து சேர்கின்ற இல்லத்தில் பெரிய தவத்தன்மையுள்ள ஒருவனை சாயலன் மனைவி தன் தீவினை நீங்க எதிர்கொண்ட போது,

அவ் வூரிலுள்ள சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி அவ் வீட்டினுள் நுழைந்து அருளறத்தைக் கடைப்பிடிக்கும் அத் தவமுனிவன் திருவடிகளை சேர்ந்திருந்து அவன் உண்டு மிஞ்சிய எச்சிலையும் ஊற்றிய நீரையும் பெரு விருப்போடு சிறிது உண்டு தன் முகத்தை நோக்கிய இன்பம் தரும் காட்சியைக் கண்ட நிலையான குறிக்கோள் உடைய மாதவன் மகிழ்ந்து இல்லத்துத் தலைவியை நோக்கி உன் மக்களைப் போன்று இக் குரங்கினைக் காத்திடுக என்றனன்.

அத் தவமிக்கோன் கூறிய உண்மையான சொற்களைக் கடைப்பிடித்து அன்பு நிறைந்த அந்தக் குரங்கு இறந்த பின்னரும் தானம் செய்யும் போது அக் குரங்குக் கென்று ஒரு பங்கை அதன் இழிந்த பிறவி ஒழிக என்று கருதிச் செய்து வந்தாள் ஆதலால், நடுநாட்டில் வாரணவாசி என்ற நகரில் உத்தர கெளத்தன் என்னும் ஒருவனுக்கு மகனாகப் பிறந்து அழகிலும் செல்வத்திலும் அறிவிலும் மேம்பட்டு விளங்கி பெருவிறல் தானங்கள் பலவற்றையும் செய்து அப் பிறவியில் முப்பத்திரண்டாம் ஆண்டில் இறந்த பின்னர் தேவர் வடிவத்தினைப் பெற்றான்.

ஆகையால் தான் பெற்ற செல்வத்தின் பெரிய பயன் யாவும் தன்னைக் காத்து ஊட்டி வளர்த்தவளின் தானத்தின் சிறப்பினால்தான் என்பதை நினைத்து முன் பிறவி முதல் குரங்காய் இருந்த போதுள்ள கையை ஒரு பாகத்தில் கொண்டு தானம் செய்யும் கொள்கையின் படி வாழ்ந்த சாயலன் மனைவியின் தானத்தால் இவ் வடிவை எய்தினான் என்று சாவகர்களுக்குச் சுட்டிக் காட்டி அறிவுரை கூற இத் தெய்வ குமரன் இங்ஙனம் தோன்றினான் என்று கூறினார்.

சாரணர் மொழிந்த நல்ல அறவுரையை அந் நாளில் தெய்வ வாக்காகக் கொண்டு அறத்தின் வடி செயல்பட்டோரும் அந் நகரத்தில் உள்ள அரிய தவமுடையோரும் தனக்கென வாழாத சிறப்புடைய இல்வாழ் துறவிகளும் தானம் செய்த எட்டியும் அவன் மனைவியும் முடிவில்லா இன்பத்தினை உடைய வீட்டுலகத்தினை எய்தினர்.

நான் கூறிய இவற்றைக் கேட்டு மனங்கொண்டாய் ஆயின் மலர் சூடிய கூந்தலை உடைய இவளோடு காலந்தாழ்த்தாது நீ செல்வாய் என்று கவுந்தியடிகள் கூற அதைக் கேட்ட மாதரி மகிழ்வெய்தி கவுந்தி அடிகளைப் போற்றினாள்.

வளர்கின்ற இளமையான அழகிய முலைகளையும் மூங்கில் போன்று வளைந்த பெரிய தோளினையும் இளைய நாணல் முளை போன்ற வெண்மையான பற்களையும் கொண்ட பேரறிவுடைய கண்ணகியோடு கதிரவன் மறைந்த பின் உள்ள ஒளி மங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், கன்றினை நினைத்து வரும் ஆக்களின் கனத்த குரல் ஒலிக்க - ஆட்டு மறியையும் கோடரியையும் உறியையும் சுமந்த தோளை உடைய இடையர்களோடு நிறைய வளையலை அணிந்த ஆய்ச்சியர் சிலர் அம் மூவரையும் சூழ்ந்து வந்தனர்.

காவற்காடும் அகழியும் வளைந்து தானே எய்யும் வில் பொறியும் கரிய விரலை உடைய கருங்குரங்கு போன்ற பொறியும் கல்லினை வீசுகின்ற கவணும் அண்டினாரைத் துன்புறுத்தும் வெம்மை மிக்க நெய்யையும் சாணத்தையும் செம்பையும் உருக்கும் குழிசிகளும் இரும்பைப் பழுக்கக் காய்ச்சி உருக வைக்கும் உலைகளும் கல் இடப்பட்டு நிறைந்த கூடைகளும் தூண்டில் கருவிகளும் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலியும் கயிறும் ஆண்டலைப் புள் அதாவது கோழியின் வடிவமாக அல்லது தலை ஆண்மகனுடையதும் உடல் பறவையினுடையதாகவும் உள்ள வடிவில் இருக்கும் அடுப்பும் அகழியிலிருந்து ஏறுகிறவர்களைத் தள்ளும் கவையும் கழுக்கோல் ஊசியும் அம்புக் கூடுகளும் ஏவறைகளும் (கொத்தளங்களும்) நெருங்கினார் தலையை நெருக்கித் திருகும் மரங்களும் (புறவாயிலிலே கதவுக்கு காவலாகத் தூக்கப்படும் மரம் என்றும் அம்புகள் கட்டும் கயிற்றைத் தூக்கி போகவிடும் விட்ட மென்றும் சாணம்புக்கூடு என்றும் சிற்றம்புகள் வைத்து எய்யும் பொறி என்றும் பொருட்கள் உண்டு) மதிலை பிடித்து ஏறுவோரின் கையை நடுங்கச் செய்யும ஊசி வடிவப் பொறியும் பகைவர் மேல் சென்று தாக்கும் சிச்சிலிப் பறவை வடிவான பொறியும் மதில் மேல் ஏறினாரைக் கொம்பால் கிழிக்கும் பன்றிப் பொறியும் மூங்கில் வடிவில் அடிப்பதற்காக நிறுவியுள்ள பொறிகளும் கதவிற்கு வலிமையாக உள்வாயிலில் நிலத்தில் நிறுத்தப்பட்ட மரங்களும் வலிமை மிக்க கணைய மரங்களும் எறி கோலும் சிறு ஈட்டியும் வேலும் சூட்டுகளும் மதிலுக்குரிய பிற பொறி முதலியனவும் சிறப்புற்று

நாள்தோறும் உயர்த்தப்படும் கொடிகள் அசையும் மதில் வாயிலைக் கடந்து இடையர் மகளாகிய மாதரி தன் வீட்டினுள் அடைக்கலம் கொண்ட கோவலன் கண்ணகியோடு புகுந்தாள்.

இக் காதையின் சிறப்புகள்:

1. உலகின் மாபெரும் இலக்கியப் படைப்பாளியான இளங்கோவடிகளின் சிறப்புகளிலொன்று கதையை நேர்கோட்டில் நகர்த்திச் செல்லாது திடீர்த் திருப்பங்களில் கொண்டுநிறுத்தி நம்மை அதிர வைத்தல். யாமறிந்த வரை கி.பி.19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன் உலகில் எவரும் கையாளாதது இந்த உத்தி. கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்து திரும்பிய சூழலில்தான் அவ்வப்போது அவளுடன் ஊடல் செய்து கண்ணகியிடம் வருவதும் அவன் மறுநாள் காலையில் ஊடல் தணிந்து திரும்பாவிட்டால் இவளே கண்ணகியிடம் சென்று இரந்து அவனை மீட்டுவருவதுமான செய்தியை எளிதில் புரிந்துகொள்ளாத வகையில் சொன்னாரென்றால், முற்றா மழலையில் சொல்லிச் சொல்லி காதல் மடல் எழுதியவளாகக் காட்டப்பெறும் மாதவிக்கு ஒரு மழலைச் செல்வம் இருக்கிறது என்று கற்பனையே செய்ய முடியாதவாறு கதையை நகர்த்திச் சென்று மாதவியுடன் தன் நகரையும் நட்பு, உறவுகளையும் விட்டு அயல்நாட்டுத் தலைநகரை அடைந்த இடத்தில் தன்னை அறிந்தவனான மாடல மறையோன் மூலம் ஏற்கனவே மாதவிக்குக் குழந்தை பிறந்திருந்த செய்தியை படிப்போருக்கு எடுத்துவைத்திருக்கும் உத்தி நம்மை மலைக்க வைக்கிறது.
2. பேறுகாலத் தீட்டு இன்று 41 நாட்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அடிகள் “வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்” என்பதன் மூலம் அதை 5 நாட்கள் என்கிறார்.
3. அடுத்து வருவது மிக முகாமையான ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. அதாவது மாதவியின் மகளுக்கு மணிமேகலை என்ற பெயர் சூட்டியமைக்கு அவர் சொல்லும் காரணம் பண்டைத் தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு உயர்நிலையை எட்டி இருந்தது என்பதைக் காட்டும் இன்றியமையாச் சான்றாக விளங்குகிறது. இது பற்றிச் சிறிது விளக்கமாகக் கூற வேண்டியுள்ளது. கோவலனின் மூதாதையர்களில் ஒருவர் கப்பலில் சென்ற போது கப்பல் கவிழ்ந்தது. ஊக்கமிழக்காமல் நாள் கணக்கில் ஒரு கட்டையைப் பிடித்து நீந்திக்கொண்டிருந்தவரை மணிமேகலைத் தெய்வம் காப்பாற்றி கரைசேர்த்த நன்றியால் அத்தெய்வத்தின் பெயரைத் தன் மகளுக்குக் கோவலன் சூட்டினான் என்று மாடல மறையோன் கூறுகிறான்.

இந்தக் கதை புத்தரின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட முற்பிறப்புகளில் நிகழ்ந்தவாகக் கூறப்படும் கதைகளாகிய புத்த சாதகக் கதைகளில் ஒன்று. காவிரிப்பூம் பட்டினத்தில் வாணிகராக ஒரு பிறவியில் பிறந்த புத்தர் கப்பல் கவிழ்ந்துவிட பிறரெல்லோரும் மனம் தளர்ந்து முயற்சியின்றி மூழ்கி இறந்துவிட இவர் மட்டும் உடைந்த ஒரு மரக்கட்டையைப் பிடித்து நீந்திக்கொண்டிருக்க மனம் கனிந்த மணிமேகலைத் தெய்வம் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்ததாகச் சொல்கிறது.

இதே கதை தாய்லாந்து நாட்டு அரசன் ஒருவனைப் பற்றியும் கூறப்படுகிறது. காவிரிப்பூம் பட்டினத்து வாணிகனை மணிமேகலைத் தெய்வம் தாய்லாந்து கடற்கரையில் விட்டுச் செல்கிறது. அங்கு அரசன் பிறங்கடை(வாரிசு) இல்லாமல் இறந்துவிட மக்கள் யானை ஒன்றின் கையில் மாலையைக் கொடுத்து அழைத்து வருகிறார்கள். யானை காவிரிப்பூம் பட்டினத்து வாணிகன் கழுத்தில் மாலையைப் போட அவன் அரசனாகிறான். இந்நிகழ்ச்சியைச் சில ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்து தலைநகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுநாளில் விளையாட்டுத் திடலையே அரங்காக வைத்து நீல ஞெகிழி(பிளாட்டிக்)ப் படலை கடலாக்கி அழகுற நடித்துக்காட்டினர்.

மணிமேகலைத் தெய்வம் பற்றிய புதிர் இத்துடன் விடுபடவில்லை. மயனின் சூரிய சித்தாந்தம் எனும் நூல் மேகலா நகரங்கள் என்பவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் லங்காபுரி என்பதும் ஒன்று. இந்த லங்காபுரி எதுவென்று ஆய்ந்த போது மூன்று இலங்கைகள் பற்றிய செய்திகள் கிடைத்தன. ஒன்று இன்றைய இலங்கை, இன்னொன்று சுறவ(மகர)க் கோட்டில் இருந்த இராவணனின் இலங்கை. மூன்றாவது நில நடுக்கோட்டில் இன்றைய உச்சையினி நகர் இருக்கும் அதே நிரைவரையில்(தீர்க்க ரேகையில்) இருந்த நிரட்ச லங்கை எனப்படும் துறைமுக நகரம்.

மனோன்மணி விலாச சுத்தவாக்கிய பஞ்சாங்கத்தில் காணப்படும் ”லங்கோஜ்யையினி மத்திய ரேகையிலிருந்து தேசாந்திரம் 34 வினாடிக்கு யோசனை 46 கிழக்கில் தஞ்சாவூர் அமைந்திருக்கிறது” என்ற குறிப்பு எம்மைத் தேடுதலுக்கு இட்டுச் சென்றது.

இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள உச்சயினி நகரம், கிரீன்வீச் நிரைவரை கிழக்கு 75°41′ யிலும், வடக்கு நேர்வரை(latitute) 23°11'யிலுமாக அமைந்துள்ளது. அது போல் இன்றைய சிறிலங்கா (Ceylon)வின் தலைநகரமும் மேற்குக் கரை நகரமுமான கொழும்பு, கிரீன்வீச் நிரைவரை கிழக்கு 79°.56' யிலும், வடக்கு நேர்வரை 6°.57'யிலுமாக அமைந்துள்ளது. அதாவது லங்கோச்சயினி மைவரை'(meridian)யிலிருந்து கிட்டத்தட்ட 5°கிழக்கில்தான் சிறீலங்கா அமைந்துள்ளது. ஆகவே ′லங்கோச்சயினி மத்தியரேகை′ என்றக் குறிப்பில் காணப்படும் ′லங்கா′ இன்றைய சிறீலங்கா அல்ல என்பது தெளிவு.

பஞ்சாங்கத்தின் மற்றொரு குறிப்பில் நிரட்சலங்கை என்ற இடம் 0°யில் (நிலநடுக்கோடு) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரட்சம் என்ற சொல்லிற்கு “பூகோள சமரேகை” என்று தமிழ்மொழி அகராதி பொருள் கூறுகிறது. அதாவது அட்சம் இல்லாத இலங்கை என்பது நேர் மொழிபெயர்ப்பு.


தமிழ்மொழி அகராதி “லங்காபுரி”யை மேகலா நகரங்கள் நான்கினுள் ஒன்று என்று கூறுகிறது. லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்ற நான்குமே மேகலா நகரங்களாகும்.

“பத்ராசுவ கண்டத்தில் கதிரவன் உச்சியில் இருக்கும் போது, பரத கண்டத்தில் எழுகிறது. கேதுமால கண்டத்தில் நள்ளிரவும், குரு கண்டத்தில் கதிரவன் மறைவும் நிகழ்கிறது. நண்பகல், கதிரவன் எழுச்சி, நள்ளிரவு மற்றும் கதிரவன் மறைவு என்றிந்த சுழற்சி பரத கண்டத்தை மையமாகக் கொண்டு உலக முழுவதும் கணக்கிடப்படுகிறது” என்று சூரிய சித்தாந்தம் 2001-70-71 விளக்குகிறது.

″புவிக் கோளத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒரே வீதத்தில் கதிரவன் ஒளிர்வதில்லை. எனவேதான் இடத்திற்கு இடம் கால வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதை விளக்க, மயன் 90 பாகை இடைவெளிகளில் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தான். இந்நான்கு இடங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவை கிழக்கிலிருந்து துவங்கி பத்ராசுவ கண்டத்தில் ஏமகூடம், பரத கண்டத்தில் லங்காபுரி, கேதுமால கண்டத்தில் ரோமகபுரி குரு கண்டத்தில் சித்தபுரிஎன நான்காகும். (சூரிய சித்தாந்தம் 2001- 38-39-40). இச்செய்திகளை டாக்டர். ஆர், ஆர், கார்னிக் தன்னுடைய ‘Mayan and Surya Siddhantha, Mayans on the high seas’ என்றக் கட்டுரையில் தருகிறார்.

மேகலா நகரம் என்ற இந்தப் பெயர் தமிழ் இலக்கியப் பின்னணியில் நம்மை நெடுந்தொலைவுக்கு இழுத்துச் செல்கிறது. கடலில் செல்லும் கலன்கள் கவிழ்ந்தால் அங்கு தத்தளிப்பவர்களைக் காக்க மணிமேகலை என்றொரு தெய்வம் இருந்ததாக சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்கள் குறிப்பிடுவதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது, பார்க்கத் தூண்டுகிறது. இந்த நான்கு நகரங்களும் துறைமுக நகரங்கள் என்ற செய்தியுடன் மேகலை என்பது அரையில் அதாவது நடுவில் அணியப்படும் ஓர் அணியுமாகும். இவற்றை இணைத்துப் பார்க்கும் போது இந் நான்கு துறைமுக நகர்களும் ஏதோவொரு பொறியமைப்பு மூலம் கடலில் செல்லும் கலன்களைக் கண்காணித்து, தேவையானால் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இன்றுள்ளது போன்ற ஓர் உயர்ந்த தொழில்நுட்பம் இருந்தால்தான் இது இயலும். என்ன நம்பக் கடினமாக இருக்கிறதா? ஆனால் என்ன செய்ய, தடயங்கள் காட்டும் தடத்தைப் பின்பற்றுவதுதானே உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் சரியான வழியாக இருக்கும்?

4. கோவலனின் ஒரு பக்கத்தை, அதாவது அதன் தீய பக்கத்தை மட்டும் இதுவரை காட்டிய அடிகள் இன்னொரு பக்கத்தை மாடல மறையோன் மூலம் காட்டுகிறார். அதாவது அவனது ஈகையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒன்று இப்போது வெளிப்படுகிறது. இதுவும் நேர்கோட்டில் இல்லாத கதைசொல் உத்தியில்.

மணிமேகலையின் பெயர் சூட்டு விழாவில் மாதவியும் கோவலனும் இணைந்து வந்தவர் எல்லோர்க்கும் பொன் வழங்கிய போது தள்ளாத அகவையடைந்த பார்ப்பனன் வர, மதம் பிடித்த யானை அவனைப் பிடிக்க கோவலன் யானை மீதேறி கிழவனைக் காத்தது ஒரு நிகழ்ச்சி. நம் கேள்வி, உழைப்பை இழிவென்று கூறி இரப்பதை உயர்வாகக் கருதும் பார்ப்பன நெறியைக் குத்திக்காட்டுகிறாரா அடிகள்?

5. மனைவி அறியாமல் செய்த பிழையைப் பொறுக்காத பார்ப்பான் அவள் கையில் சீட்டெழுதிக் கொடுத்து இரந்து தீட்டுக் கழிக்குமாறு தெருக்களில் அலைய விட்ட அரக்கத்தனத்தையும் இரக்கமும் வெட்கமும் கெட்ட அவர்களின் இயல்பையும் அடுத்தவன் தேட்டில் பொருளற்ற சடங்குகளைச் செய்து அதனால் தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காட்டும் திமிரையும் கயமையையும் சுட்டிக்காட்டத்தான் இந்நிகழ்ச்சியை அடிகள் இங்கு கூறுகிறார் போலும். உழைப்பெதுவும் இன்றி அடுத்தவர் உழைப்பில் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதில் பெருமைப்படும் இந்தக் கூட்டத்தைத் திருத்தினாலன்றி அந்த மண்ணுக்கு மீட்சி இல்லை.

6. இயக்கி எனும் தெய்வம் சமணர் – புத்தர்களின் காவல் தெய்வங்களுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஐயனார் எனப்படும் சாத்தனும் அவ்வாறே. மெத்தப் படித்தவர்களென்று கருதப்படும் பலரும் இதே கருத்தைக் கூறி தங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறார்கள். தமிழர்களின் வரலாற்றுத் தொடக்க காலத்தில் 7 குக்குலங்கள் இருந்துள்ளன. அவை ஒன்றாக இணையும் நிகழ்முறையில் ஒரு கட்டத்தில் இயக்கர்கள் எனப்படுவோர் நெய்தல் நிலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். சுறவம் எனப்படும் மகரக் கோட்டுப் பகுதியின் தெற்கில் ஆண்ட இராவணனும் ஓர் இயக்கனே. அவன் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் ஆண்டான் என்பதைப் புவியியங்கியலாளரின் முடிவுக்கு விட்டுவிட்டு இன்றைய தமிழகத்தில் அவர்களின் நிலை பற்றிப் பார்ப்போம். குமரி மாவட்டம் தவிர வடக்கில் எங்கும் நான் இயக்கி கோயில்களைக் கண்டதில்லை. அதே வேளையில் நெல்லை மாவட்டத்தில் இயக்கிக் கோயில்கள் இருப்பனவாகத் தெரிகிறது.

இயக்கியைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. கணிகையின் மகளாகப் பிறந்த பெண்ணின் மீது காதல் கொண்டு அவளுக்குத் தன் சொத்துகள் அனைத்தையும் மட்டுமல்ல தான் பூசகனாக இருந்த கோயிலிலுள்ள நகைகளையும் கொடுத்துவிட கணிகையின் தாய் பணமின்றி வரத் தடைவிதித்ததால் மனம் குலைந்து திரும்ப அதை அறிந்து கணிகை வாழ்வை விரும்பாமல் அவனையே மணந்து வாழக் கனவு கண்டிருந்த கணிகை அனைத்துச் செல்வங்களையும் எடுத்துக்கொண்டு அவனைப் பின்தொடர, தன்னைச் சந்தித்த அவளை மடி மீது கிடத்தி தூங்கவைத்து அளைக் கொன்றுவிட்டுச் செல்வங்களை எடுத்துச் சென்றுவிட செத்தவள் அவனைப் பழிவாங்கக் காத்திருக்க அவன் மறுபிறவியில் வாணிகனாக அவ்வழியில் வர கணிகையின் ஆவி பெண் வடிவெடுத்து கள்ளிச் செடியின் இணுக்கு ஒன்றைக் கிள்ளிப் பிள்ளையாக்கித் தூக்கிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்து அடுத்த ஊர் மக்களிடம் முறையிட காலையில் மூதலிக்கலாம்(உசாவலாம்) என்று ஒரு வீட்டில் தங்க வைக்க இரவில் வாணிகனைக் கொலை செய்துவிட்டுப் போய்விட்டாள் என்று இக்கதை கூறுகிறது இது நெல்லை மாவட்டத்திலுள்ள பழவூரில் நடந்ததால் இவளைப் பழவூர் இயக்கி என்று கூறுவர்.

இதே கதையைப் பழையனூர் நீலி என்ற பெயரிலும் கூறுவர். இன்றைய வேலூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு என்ற இடத்தில் இது நிகழ்ந்ததாகவும் வாணிகன் இவள் பேய் என்றும் தன்னைக் கொன்றுவிடுவாள் என்றும் கூறியதற்கு அவன் உயிருக்குத் தாங்கள் 70 பேரும் பிணை என்று இவ்வூர் வேளாளர்கள் கூறியதாகவும் அவ்வாறே பேய் வாணிகனைக் கொன்றுவிட 69 போர் தீக்குளித்துச் சாக தப்பி ஓடிய ஒருவனை நீலியே கொன்றதாகவும் இக்கதை கூறுகிறது. தனது அண்ணன் குடியிருந்த மரத்தை வெட்டி அகற்றியதால் அவர்களைப் பழிவாங்கினாள் நீலி என்பது கதையின் அடக்கம். வெள்ளாளர்களின் வாக்குத் தவறாமைக்காகப் புனையப்பட்டதாகவும் தோன்றுகிறது.

இது இவ்வாறிருக்க குமரி மாவட்டம் மணக்குடியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் கடற்கரைச் சாலையில் மங்காவிளை எனுமிடத்தை ஒட்டிய நெடுவிளை எனும் இடத்தில் சாலைக்குத் தெற்கில் இருக்கும் ஒரு கோயில் பொன்னாயுதமுடைய இயக்கியம்மன் கோயில் இதை பொன்னாருமடை இயக்கி கோயில் என்பர்.

நிறை சூலியான ஒரு பெண் கணவனுடன் சண்டையிட்டு நள்ளிரவில் தாய்வீடு நோக்கிச் சென்றாள். வழியில் பேற்றுவலி வரவும் பக்கத்தில் விளக்கு எரிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தாள். அங்கு பல பெண்கள் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். இவளைக் கண்டதும் அனைவரும் அவளுக்குப் பேறு பார்த்து அவளைத் தூங்க வைத்தனர். காலையில் கண் விழித்த அப்பெண் தான் இருப்பது ஆலமரத்தடியில் ஓட்டை உருவங்கள் எனப்படும் இயக்கியின் சிலைகளுடன் இருக்கும் பொன்னாயுதமுடைய இயக்கி கோயில் என்பதை அறிந்து பதறி கோயிலைக் கழுவி துப்புரவு செய்துவிட்டு ஊருக்குச் சென்று பின்னர் அம்மனுக்குக் கொடை நடத்தினாள் என்று ஒரு கதை உள்ளது. சிவன் இதே போன்று சென்ற பெண்ணுக்கு வழியில் பேற்று வலி வந்துவிட பெண்ணின் தாயாய்த் தோன்றி பேறு பார்த்ததனால் தாயுமானவன் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படும் கதை போலிருந்தாலும் இயக்கி ஒரு கொடுந் தெய்வம் என்ற கருத்தை உடைப்பதாக இது இருக்கிறது.

சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்த இயக்கியம்மன் கோயில் சிலைகள் மண்ணால் செய்யப்படும் ஓட்டை உருவங்கள் எனப்படுபவையாகும். இவற்றின் உட்புறம் பொள்ளலாக இருக்கும். முன்புறத் தோற்றம் திரைப் படங்களில் காட்டுவிலங்காண்டிகளைக் காட்டுவது போல் தலையில் தழைகளும் பூக்களும் பறவைகளின் இறகுகளும் கொண்ட தலை அணியும் இடையில் முழங்காலுக்கு மேலே நின்றுவிடும் பாவாடையுடனும் இருக்கும். கைகள் மணிக்கட்டோடு முடிந்துபோயிருக்கும். ஒரு கை குழந்தையை வைத்திருக்கும் தோற்றத்திலும் இன்னொரு கையில் ஓர் ஆயுதத்தை ஓங்கிய தோற்றத்திலும் இருக்கும். தலையின் பின்புறம் ஓட்டையாக இருக்கும். வைக்கோலை சிலைக்கேற்றாற் போல் கட்டி அதன் மீது குழைத்த குயவர் மண்ணைப் பூசி சிலைக்கு இறுதி வடிவம் கொடுத்து சூளையில் சுட்டால் வைக்கோல் கருகிவிட சிலை கிடைக்கும். இன்றைய சிலைகளில் ஓட்டை இருப்பதில்லை. ஒருவேளை ஓட்டைகளைத் தனித் துண்டுகள் கொண்டு அடைக்கிறார்கள் போலும்.

இயக்கி பற்றி 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வழங்கிய சில மரபுகள்: அழகிய பெண்களாக இவள் திரிவாளாம். தனியாகச் செல்லும் ஆடவர்களை மயக்கி அழைத்துச் சென்று அடித்துக் கொன்றுவிடுவாளாம். வண்டியில் செல்வோரிடம் சுண்ணாம்பு கேட்பாளாம். வெறும் கையிலோ வெற்றிலையிலோ கொடுத்தால் இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றுவிடுவாளாம். கத்தி அல்லது வேறு இரும்புப் பொருட்களில் வைத்துக் கொடுத்தால் அரண்டு ஓடிவிடுவாளாம். இந்த விளக்கங்களிலிருந்து எனக்குத் தோன்றிய சில கருத்துகளை இங்கு பதிகிறேன்.

மூவேந்தர்கள் தெற்கிலிருந்து இன்றைய தமிழகத்துக்குள் நுழைந்த போது இங்கிருந்த மூலக்குடிகள் பாணர், பறையர், துடியர், கடம்பர் ஆகியோர். இவர்கள் நெல் நாகரிகத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் முந்திய நிலையிலிருந்தனர். மாடு வளர்த்தும் புன்செய்த் தவசங்களைப் பயிரிட்டும் மாட்டிறைச்சியுடன் அவற்றை உண்டும் வாழ்ந்தனர். வந்தேறி மூவேந்தர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இரும்பைப் பிரித்தெடுக்கும் உத்தியில் தேவைப்படும் சுண்ணாம்புத் தேடுதலில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் கொள்ள முடியும். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைப் பகுதிகளில் தொலைவிலிருந்து பார்த்தால் காய்ந்த சாணம் போல் பரவலாகக் கிடக்கும் பொருள் நெருங்கிச் செல்லும் போது கொல்லர்களின் பட்டறைகளில் வெளியேற்றப்படும் கழிவாகிய கொல்லங்கட்டி போல் இருப்பது புலப்படும். இவை வானிலிருந்து வீழும் விண்கற்களின் சிதறல்கள் என்றும் இவற்றிலிருந்துதான் தமிழ் முன்னோர் இரும்பைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தை அறிந்தனர் என்றும் கூறுகின்றனர். அண்மையிலிருக்கும் ஆதித்தநல்லூர் மக்கள் இங்கு தாராளமாகக் கிடைத்த இந்த விண்கல் சிதறல்களிலிருந்துதான் இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தினர் என்றும் சொல்லப்படுகிறது.

குமரி. நெல்லை. தூத்துக்குடி மாவட்டங்களில் மிகுதியாக வணங்கப்படும் தெய்வமான சுடலைமாடன் கதையில் குமரியம்மன் கோயில் காவலனாக இருந்த சுடலைமாடனை ஏமாற்றி கோயிலைப் பெரும்புலையன் கொள்ளையடித்ததற்குப் பழிவாங்க அவனது கோட்டைக்குள் எறும்பாக நூழைந்து அவன் மகள் மா இயக்கியைக் கற்பழித்தானாம். பெரும்புலையனுடன் பகரம் பேசி, கொள்ளையடித்த பொருட்களை அவனே வைத்துக் கொள்ளலாமென்றும் அவன் மகள் மா இயக்கியைத் தன்னிடம் ஒப்படைத்து விடுமாறும் கேட்டு வாங்கி சுடலைமாடன் அவளைக் கொன்றானாம். இந்தக் கதை பற்றி கடலாடு காதையில் விரிவாகக் கூறியிருக்கிறோம்.

மக்கள் குக்குல நிலையிலிருந்து ஐந்நில நாடுகளை அமைத்து பூசகராட்சி தொடங்கி அது அரசர்களின் ஆட்சியாக மலர்ந்த காலகட்டத்தில் இந்திரனைப் பற்றி நம் தொன்மங்கள் குறிப்பிடுவது போல் பெண் வழியில் இந்திராணி நிலைத்திருக்க தவம் என்பது போன்ற போட்டிகளில் வெற்றி பெறுவோரே குறிப்பிட்ட கால அளவுகளில் இந்திரன் மாற்றப்பட்ட நிலை உருவானது. இந்த நிகழ்முறையில் பெரும் குழப்பங்களும் கொலைகளும் சூழ்ச்சிகளும் புகுந்துவிடும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு இந்திர பதவிக்காகத் தவம் இருப்போரைக் கலைக்க இந்திரனின் ஒற்றர் குழுவான நாரதன், இந்திரன் அவையின் ஆடல் அரம்பையர் ஆகியோரை விடுத்து அவர்களின் தவத்தைக் கெடுத்த கதைகளாலும் நம் தொன்மங்கள் நிறைந்துள்ளன. தென்னிந்தியாவில் உருவான விசயநகரப் பேரரசின் வரலாறே இருக்கும் ஆட்சித் தலைவன் இறந்ததும் அடுத்த தலைமைக்கான போட்டியாளர்கள் அனைவரையும் அகற்றி ஒருவன் பதவியைப் பிடிக்கும் போதே அவன் முதுமை எய்தி குறுகிய காலத்தில் இறந்துவிட மீண்டும் அதே பதவிப் போட்டி உள்நாட்டுப் போர் என்று வலிமை இழப்பதைத் தவிர்க்கத்தான் மரபு வழி ஆட்சி முறை உருவானது. இப்போது அரசுரிமைக்குரிய ஓர் ஆண்மகவைப் பெற்றுத்தர வேண்டிய கட்டாய குமுகக் கடமை பட்டத்தரசியின் தலைமேல் விடிந்தது. இதில் அவள் மலடியா என்ற கேள்வியை விட அவள் கணவன் மலடனா என்ற கேள்வியே முதலிடம் பெற்றது. அந்த அடிப்படையில் அவள் ஓர் ஆண் மகவைப் பெறுவதற்காக கணவனின் உடன்பிறந்தவர்கள் குல குரு, எவனாவது ஒரு பார்ப்பன மாணி(பிரம்மச்சாரி) அல்லது எவனாவது ஓர் ஆடவனுடன் கூடலாம் என்று வரையறுக்கப்பட்டது, இதில் அடிப்படை என்னவென்றால் அரசுரிமை தாய்வழியில் இருந்த காலத்தில் உருவாகப்பட்ட இந்த நடவடிக்கையின் தொடர்ச்சி தந்தை வழியிலும் தொடர்ந்ததுதான். குதிரையைக் கொன்று வேள்வி செய்து செத்த குதிரையின் ஆண்குறியை பட்டத்தரசியின் பெண்குறிக்குள் நுழைக்கும் பித்துக்குளித்தனமும் நம் தொன்மங்களின் மூலம் வெளிப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தும் மகப்பேறு கிட்டாத தசரதனைப் போன்ற மலடர்களாகவும் அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் குழந்தையை இடுப்பில் அணைத்தும் ஓங்கிய இன்னொரு கையில் ஆயுதத்துடனும் காட்சி தரும் இயக்கியின் சிறப்பு புரியும். அவளுடன் அவள் குழந்தையையும் இணைத்துத்தான் பழையோள் குழவி என்று பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவளுடன் கன்னியாய் தமிழர்களின் முதல் அரசியாய் வாழ்ந்த குமரி அம்மனையும் இணைத்த ஒரு வடிவமே ஏசுநாதரின் தாயாகிய கன்னிமேரி. கிறித்தவர்கள் கொண்டாடும் ஈசுத்தர் பண்டிகையைப் பற்றி CHAMBERS TWENTIETH CENTURY DICTIONARY கூறுவது: (O.E. ester; Ger.ostern. Bede derives the word from Eostre (Eastre), a goddess whose festival was held at the spring equinox). அதாவது இளவேனில் காலத்தில் கொண்டாடப்படும் இயோத்த அல்லது ஈத்த என்ற தாய்த்தெய்வத்தின் வழிபாட்டின் தொடர்ச்சி இது என்கிறது அகராதி. இன்றும் தமிழகம் முழுவதும் முத்தாரம்மன், முத்தாலம்மன், முப்புராதியம்மன், முப்பிடாதியம்மன் என்ற பெயர்கள் கொண்ட அம்மன் கோயில்களில் இளவேனிற் காலமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதைக் காண்கிறோம். இயக்கியம்மன் கோயில்களில் பிள்ளை வரம் வேண்டுவோர் நேர்ச்சையாக தோட்டில்களைக் கட்டுவதையும் காண முடியும். இப்படி பிள்ளை உரிய காலத்தில் பேறடையாத பெண்களுக்குப் பிள்ளை வரம் தரும் ஒரு அருள்மிக்க தெய்வமான இயக்கியம்மனை வழியில் செல்வோரை மயக்கிக் கொல்லும் கொலைத் தெய்வமாக வந்தேறித் தமிழர்கள் ஆக்கி வைத்திருந்த கொடுமையைச் சுட்டத்தானோ பூங்கண் இயக்கி என்ற அடைமொழியை அடிகளார் வழங்கியுள்ளார்.

7. ஒவ்வொரு சமயத்தாருக்கும் அல்லது வழிபாட்டினர்க்கும் தகுந்தாற் போல் ஒரு நிகழ்ச்சியை வைத்திருக்கும் அடிகளார் அம்மண சமயத்துக்காக ஒரு கதையைக் கவுந்தியடிகள் வாய்மொழியாகக் கூறுகிறார். எட்டி சாயலன் என்ற அம்மண வாணிகன் வீட்டில் அளிக்கப்பட்ட உணவை உண்ட அம்மணத் துறவி வைத்த எச்சிலை உண்ட குரங்குக்கு என்றும் உணவூட்டுமாறு துறவி ஆணையிட அதனைக் கடைப்பிடித்த பெண் வீடுபேறடையவும் குரங்கு அரச குமாரனாகப் பிறந்து தேவனாக மாறுவதும் குறித்த கதை எப்போதும் கொடுப்பவனை விட இரப்பவனுக்கே நம் பண்பாட்டில் உயர்ந்த இடம் என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது. மாடலன் வாய்மொழியாகவும் கவுந்தியடிகள் வாயிலாகவும் இந்த இழிவான கருத்தைக் குத்திக் காட்டுகிறாரா அடிகளார் என்ற ஐயம் எமக்கு. இரப்பது இழிவு என்ற வள்ளுவர் அறவுரைக்கு மாறாக இரப்போர் உயர்நிலை அடைவர் என்ற இழிவான கருத்தை மதவாணர்கள் புகுத்தி தமிழகப் பண்பாட்டையே சீர்குலைத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

8. இடைக்குல மாதரியுடன் அவள் குடியிருப்புக்குள் கோவலனும் கண்ணகியும் நுழையும் போது அந்திக் கருக்கலில் மேய்ச்சலிலிருந்து கன்றுகளை நினைத்துக்கொண்டே திரும்பும் ஆக்களையும் அவற்றோடு வரும் இடையர்கள் சுமந்து வரும் சாப்பாட்டு உறிகள், மாடுகளுக்கு உணவூட்ட கிளைகளை வெட்டப் பயன்படும் சிறு கோடரிகள் பற்றிக் குறிப்பிட்ட அடிகள் மதுரைக் கோட்டைக்குள் நுழையும் போது கோட்டையில் பொருத்தப்பட்டுள்ள எண்ணற்ற கருவிகளின் விளக்கத்தையும் தருகிறார். கிரேக்க – உரோமர் காலக் கதைகளைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படங்களில் காட்டப்படும் போர்களில் கோட்டைகளிலும் வெளியிலும் பயன்படுத்தப்படுபவற்றுக்கு ஒப்பவும் அவற்றை மிஞ்சுவனவாகவும் உள்ள ஒரு நீண்ட கருவிகளின் பட்டியலைத் தருகிறாரே அடிகளார் இவை அவரது கற்பனையில் உருவானவையா அல்லது கிரேக்க – உரோமர்கள் சொல்லக் கேட்டு பதிந்துள்ளாரா? தன் தாய்மண்ணைப் பற்றிய காப்பியம் எழுதிய அடிகளார் தன் நாட்டின் வழக்கிலிருந்தவற்றைப் பற்றித்தான் எழுதியிருப்பார். அத்துடன் இது கிரேக்க – உரோமர்களிடமிருந்து கற்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் போலில்லாமல் நேரடியாக அவர்கள் ஆட்சி செய்த வட இந்தியாவில் இவை பயன்படுத்தப்பட்டிருக்குமே. அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லையே. அப்படியாயின் இவை தமிழர்களின் புனைவுகள்தாமா, இங்கிருந்துதான் மேலையர்கள் இதைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுசென்றார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆம் என்று விடை சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை அப்படியாயின் அத்தகைய கோட்டைகளும் கருவிகளும் எங்கே, எப்படி, தடமற்றுப் போயின என்ற அடுத்த கேள்விகள் எழுகின்றன. இங்குதான் அம்மண ஒற்றர்கள் தமிழகப் பண்பாட்டின் மீது நிகழ்த்திய அரக்கத்தனமான அழிப்பு நடவடிக்கைகள் வெளிப்படுகின்றன. தமிழக மக்களாகிய முல்லை குறிஞ்சி நிலங்களைச் சேர்ந்த கள்ளரையும் பிறரையும் களப்பிரர்களாக்கித் திரட்டி இங்கிருந்த கோட்டை கொத்தளங்கள், கோயில்கள், அரண்மனைகள், வளமனைகள் மட்டுமின்றி ஒரு குட்டிச்சுவரைக் கூட மிச்சம் வைக்காமல் அழித்திருக்கிறார்கள். ஆடல் பாடல்களைத் தடைசெய்து அவற்றை நிகழ்த்திய மக்களை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கிறார்கள். கட்டிடக் கலை உட்பட்ட ஐந்தொழில் கொல்லர்களையும் நாட்டிலிருந்து அகற்றியுள்ளனர். தொல்காப்பியத்தில் இசை சார்ந்த செய்யுளியலை எடுத்துவிட்டு வரட்டுச் செய்யுளியல் ஒன்றையும் புகுத்தியுள்ளனர். இவற்றை முன்னறிந்துதான் இளங்கோவடிகள் இயன்றவரை செய்திகளைப் பதிந்து நமக்குத் தந்துள்ளார்.
★ ★ ★

0 மறுமொழிகள்: