பணவீக்கம் என்ற சொல் பொருளியல் குறித்த செய்திகளில் அடிக்கடி வருவது, கொஞ்சம் அச்சத்தை ஊட்டுவதும் கூட. ஆனால் உண்மையில் அது அவ்வளவு அஞ்சத்தக்கதன்று, உரிய வழியில் கையாளப்பட்டால் ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த தூண்டுகோலாக அமையக் கூடியது.
பணவீக்கம் என்பது ஒரு நாட்டிலுள்ள விற்கத்தக்க பொருளாகிய பண்டங்களுக்கும் அவற்றை வாங்கக் கிடைக்கும் பணத்துக்குமிடையிலுள்ள ஒரு குறிப்பிட்ட உறவைக் குறிப்பதாகும். பண்டங்கள் குறைவாகவும் பணக்கிடைப்பு கூடுதலாகவும் இருந்தால் பொருட்களின் தேவையும் விலையும் ஏறும். இதனைப் பணவீக்கம் என்பர். பணிகளுக்கும் இது பொருந்தும். பண்டங்கள் மிகுதியாகவும் பணக்கிடைப்பு குறைவாகவும் இருந்தால் பணப் பற்றாக்குறை என்பர். ஒரளவு பணவீக்கம் இருந்து கொண்டே பண்டவிளைப்பு உயர்வுக்கான வாய்ப்புகளும் சிறப்பாக இருந்தால் அது பண்ட விளைப்பு வளர்ச்சியை ஊக்கும். மக்கள் விரும்பும் பண்டங்களின் விளைப்புதான் முனைப்படையும் என்பதையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். பணக்கிடைப்பு தாராளமாக இருந்து மக்களுக்குக் கிடைக்கத் தக்க பண்டங்களின் அளவு கூடாமலிருந்தாலோ அல்லது குறைந்தாலோ பணவீக்கம் வாங்கும் ஆற்றலைக் குறைத்து மக்களை வறுமைப்படுத்தும்.
நம் நாட்டில் பணவீக்கம் என்பது நிலையான ஒன்றாகும். அதே வேளையில் அது உள்நாட்டு விளைப்பை ஊக்குவதாகவும் இல்லை. இது எவ்வாறு என்று பார்ப்போம்.
பண வழங்கல் கூடுவதாலோ பண்ட வழங்கல் குறைவதாலோ அல்லது இவ்விருவழிகளிலுமோ பணவீக்கம் ஏற்படலாம். நம் நாட்டில் இரு வழிகளிலும் ஏற்படுகிறது. இங்கு பண்ட விளைப்பு ஊக்கப்படுவதில்லை. மாறாகத் தொழிலிலும் வேளாண்மையிலும் எண்ணற்ற கட்டுப்பாடுகளினால் தடுக்கவேபடுகிறது. அதே வேளையில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளாலும் வேளாண் மற்றும் கட்டடத் தொழிலாளர்கள் போன்ற அமைப்பு சாராத் தொழிலாளர்களாலும் சம்பள விகிதங்கள் உயர்ந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் வேளாண் பண்டங்களின் விலை10 மடங்கும் சாப்பாட்டு விலை ஏறக்குறைய 35 மடங்கும் உயர்ந்துள்ளன. ஆனால் கூலி 120 மடங்கு உயர்ந்துள்ளது. இது பெரும் பணவீக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. தொழிலாளர்களின் வருமானம் சாராயம், திரைப்படம், குடும்ப நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள் அடிப்படைத் தேவைகள் அல்லாத பல்வேறு வகைச் செலவுகள்,என்று கரைந்து போகின்றன. மாதச் சம்பளம் வாங்குவோர் தொ.கா.பெட்டி என்று தொடங்கி உடல்நலத்துக்கு உதவாத நறுமணப் பொருட்கள், பெப்சி போன்ற குடிநீர்கள், இனிப்புப் பொருட்கள் என்று வெளிநாட்டுப் பொருட்கள், சுற்றுலா, குழந்தைகளுக்கு வரம்பு மீறித் தண்டப்படும் பள்ளிச் செலவுகள், பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள், திருமணம், பூப்பு போன்ற சடங்குகள் ஆகியவற்றில் திருப்பி விடுகின்றனர். கையூட்டு என்ற வகையிலும் பெரும் பணம் சுழல்கிறது. இவ்வாறு பொருளியல் வளர்ச்சியை ஊக்காத ஒரு பணச் சுழற்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை மேலும் கெடுக்கும் வகையில் பொது வழங்கல் முறை மூலம் நெல், கரும்பு உழவர்களின் வயிற்றிலடிக்கும் விலைக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்த வெற்றுச் சுழற்சியை விரிவுபடுத்துகின்றனர். முடையிருப்பு என்ற பெயரில் நெல்லையும் கோதுமையையும் வாங்கி கிடங்குகளிலில் கெட்டுப் போக்கி அழித்தும் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றனர் ஆட்சியாளர்கள். வாக்கு வேட்டைக்காகவும் ஊழலில் கொழுப்பதற்காகவும் இலவயங்கள், மானியங்கள் என்ற பெயரில் வீட்டு மனைகள், தொகுப்பு வீடுகள், தொழிற் கருவிகள் (செருப்பு தைத்தல், சலவை, முடிதிருத்தல் போன்ற தொழில் சார்ந்த சாதியினருக்கு இலவயக் கருவிகளை வழங்கித் தொழிலடிப்படையிலமைந்த சாதிகளை நிலை நிறுத்துகின்றனர்.) சேலை, வேட்டி, அரிசி, மண்ணெண்ணெய், சீனி, தொ.கா. பெட்டி, வளி அடுப்பு, மிதிவண்டி என்று மக்களை மயக்கத்திலாழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக வேளாண்மை(உணவு), சவளி(உடை), கட்டுமானம்(உறையுள்) துறைகள் உரிய வளர்ச்சியின்றித் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குமாறாக ஏற்றுமதிக்குகந்த பணப்பயிர்களையும் துண்டுகள், உள்ளாடைகளையும் தோல் பொருட்களையும் மட்டும் நாம் விளைத்துக் கொண்டிருக்கிறோம். நகர - ஊரமைப்புத் துறை மற்றும் உள்ளூராட்சிகளின் பகுத்தறிவுக் கொவ்வாத விதிகளின் மூலமாகவும் வருமான வரித்துறையின் அச்சுறுத்தல் மூலமும் மக்கள் கட்டுமானத் துறையில் வளர்சசியடைவதைத் தடுத்து ஊழல் மிகுந்த வீடமைப்பு வாரியங்கள், குடிசை மாற்று வாரியங்கள் மூலம் ஆட்சியாளர்கள் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். தம் சொந்த உழைப்பில் சிக்கனமாக பகுத்தறிவுக்கு ஒத்த வகையில் முன்னுரிமைகளை வகுத்துச் செலவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் மக்களிடமிருந்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளது; தமக்கு உரிமையில்லாதவற்றின் மீது உரிமை கொண்டாடும் தீக்குணம் படியவிடப்பட்டுள்ளது. அதனை அகற்றி மக்களை நல்லவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, தம் செயல்களைப் பகுத்தறிவுடன் வரைமுறைப்படுத்துபவர்களாக மாற்றியமைக்க வேண்டிய பெரும் பணி ஒரு மக்கள் நலம் நாடுவோருக்கு உள்ளது.
1974இல் அறிவிக்கப்பட்ட ″நெருக்கடி நிலை″யின் போது இந்திரா காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று பணப் புழக்கத்தைக் குறைப்பது.அதன் மூலம் மக்களின் வாங்கும் ஆற்றலைக் குறைத்து ஏற்றுமதிக்கான பண்டங்களை மிச்சப்படுத்துவது. இந்த நோக்கத்தை எய்த சம்பள உயர்வுகளைத் தவிர்த்தல் அகவிலைப்படியை முடக்கல் போன்ற நடவடிக்கைகளை அவர் எடுத்தார். இது மக்களிடையில் பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தியது. தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பற்றவே அவர் திடீரென்று தேர்தலை அறிவித்தார் என்று ஒரு கருத்து உண்டு.
பணப் புழக்கத்தைக் குறைத்தல் என்ற உத்தி சோவியத் ஆட்சியாளர்கள் வகுத்துக் கொடுத்ததாம். 1979இல் இந்திரா புது அரசு அமைத்த போது அமெரிக்கா மாற்றுவழி ஒன்றைப் பரிந்துரைத்தது. பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் அரசின் கையிலிருந்த கன்னெய்யம், இரும்பு, அளமியம், நிலக்கரி போன்ற அடிப்படைப் பண்டங்களின் விலைகளையும் தொடர்வண்டி, பேருந்து, மின்சாரம் போன்ற அடிப்படைப் பணிகளின் கட்டணங்களையும் உயர்த்திவிட்டால் பணமதிப்பு வீழ்ச்சியடைந்து அதனால் மக்களின் வாங்கும் ஆற்றல் சுருங்கி அரசின் நோக்கம் ஈடேறிவிடும்.பொதுமை, நிகர்மைத் தோழர்களை வைத்து ஒரு விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்ட நாடகம் நடத்திவிட்டால் போதாதா? மக்களை ஏமாற்றும் இந்த உத்திக்குப் பொருளியலில் பணமாயை (Money Illusion) என்று பெயர். அரசுடைமை என்ற கோட்பாடு மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்க ஆட்சியாளர்களுக்கு எத்தனை வகைகளில் உதவுகிறது என்பது இப்போது புரிகாறதா?
ஓர் அரசு மக்களின் வாங்கும் ஆற்றலை, அதன் மூலம் அவர்களது வாழக்கைத் தரத்தை வீழ்த்துவது, அதாவது அவர்களை வறுமையில் ஆழ்த்துவதுதான் தனது பொருளியல் கோட்பாடு என்று அறிவித்துச் செயற்படுத்துவதும் அதனை எந்தவோர் அரசியல் கட்சியோ அறிவு″சீவி″யோ பொருளியல்″மேதை″யோ கேள்வி கேட்காததும் ″ஞானத்″தின் ஊற்றுக்கண் என்று பெருமையடித்துக்கொள்ளும் ″பாரதத்″தில்தான் நடக்க முடியும்.
இவ்வாறு உள்நாட்டுப் பொருளியல் வளர்ச்சியின் வேரையே அழித்து விட்டனர் 50 ஆண்டுக்கால ″விடுதலை″ இந்தியாவின் ஆட்சியாளர்கள். இவ்வளவு அழிம்புகளை மீறியும் இந்நாட்டின் வளமான மண்ணிலிருந்து இங்கு வாழும் மக்களின் கடுமையான உழைப்பாலும் அறிவாற்றலாலும் உருவான செல்வத்தை வருமானவரியாலும் அரசுடைமைப் பண நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களாலும் முடக்கியும் முடமாக்கியும் அழித்தும் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கியும் உள்நாட்டில் தேர்தல்கள், பிற அரசியல் நடவடிக்கைகளில் பாழாக்கியும் உள்ளனர். மக்களிடமிருந்து உருவாகும் அறிவியல் - தொழில்நுட்பக் கருத்துகள் கண்டுபிடிப்புகளைக் செயற்பட விடாமல் தடுத்தும் அழித்தும் வந்துள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம் வல்லாரை வெளிநாடுகளுக்கு ஓடும் வகையில் இழிவுபடுத்திக் கொடுமைப்படுத்தினர். இவ்வளவு கேடுகளையும் செய்து நம் நாட்டின் வளர்ச்சியாற்றலை அழித்து விட்டு ″நம்மிடம் மூலதனமில்லை; தொழில்நுட்பமில்லை″ என்று காரணம் கூறி நம் துறைமுகங்கள், சாலைகள், வானூர்தி நிலையங்கள் இருப்புப் பாதைகள், மின்துறை ஆகியவற்றை உருவாக்கவும் பராமரிக்கவும் அயலவர்களிடம் விட்டு விட்டு நம் நாட்டு மக்களை நம் நாட்டிலேயே அயலவருக்கு அடிமை செய்ய விட்டுள்ளனர் ″நம்″ தலைவர்கள். அதுபோல் பாசனக் குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள், வயல்கள், காடுகள் என்ற அனைத்தும் உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.
இந்தச் சூழலில் நாம் சில கேள்விகளுக்கு விடைகாண வேண்டியவர்களாகவுள்ளோம். வருமானவரியை ஒழித்தும் தொழில் தொடங்குவதற்கு இன்றிருக்கும் தடங்கல்களை அகற்றியும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளரும் வகையில் காப்புரிமப் பதிவு அலுவலகங்களை மாவட்டந்தோறும் நிறுவியும் பொருளியல் வளர்ச்சியைப் பாய்ச்சல் நிலைக்குக்கொண்டு வருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடிப்படைக் கட்டமைப்புகளான தரமான அகன்ற, நேரான சாலைகள், தடங்கலற்ற மின்வழங்கல், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு வகைதுறைகள் முதலியவற்றை அமைப்பதற்கும் பாசன அமைப்புகளைச் சிறப்புறப் பாராமரிப்பதற்கும் மக்களே முதலீட்டு அவற்றிலிருந்து வருவாய் ஈட்டிக் கொள்ளலாமென்று திட்டமிட்டால் கூட அதற்கு உடனடியாகத் தேவைப்படும் மாபெரும் முதலீட்டுக்கு என்ன செய்வது? அரசே இத்தேவைகளை நிறைவேற்றலாமென்றாலும் அவ்வளவு பெருந்தொகையை வரியாக விதித்தால் மக்களால் இன்றைய நிலையில் தாங்கமுடியுமா? இந்த நிலையில் உலக வங்கி போன்ற பண நிறுவனங்களிடம் கடன் வாங்குவதையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் நம் அடிப்படைக் கட்டுமானங்களை ஒப்படைப்பதையும் தவிர வேறு வழி உண்டா?
உண்டு என்பதுதான் நம் விடை. இந்த விடை நம்மால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. 75 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் கேயின் என்பவர் பரிந்துரைத்து அமெரிக்க அரசாலும் உலகின் பிற அரசுகளாலும் கடைப்பிடிக்கப்படுவதாகிய பணத்தாளை அச்சிட்டுப் புழங்கவிடும் உத்திதான் அது..
இந்த உத்தி பற்றி நம்மில் பலருக்கு தெரியும். வரவு செலவுத் திட்டத்தில் வரவை மிஞ்சிய செலவைத் திட்டமிட்டுவிட்டு நிலுவையாக நிற்கும் பற்றாக்குறையைப் புதிய அல்லது கூடுதல் வரி விதிப்பு, கடன்கள் அல்லது அவற்றுடன் பணத்தாள்களை அச்சிடுவதன் மூலம் ஈடுகட்டுவதற்குப் பற்றாக்குறை வரவு - செலவுத் திட்டமுறை என்பர். இவற்றில் பணத்தாள்களை அச்சிட்டு ஈடுகட்டும் முறையை பற்றாக்குறைப் பணமுறை என்பர்.
இந்த உத்தியை ஆச்சாரியார்(இராசாசி) போன்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆளும் கட்சி இந்த உத்தியைக் கையாளப்போவதாக அறிவிக்கும் போதெல்லாம் எதிர்க் கட்சிகள் கூச்சலிடுவதுண்டு. அத்தகைய ஒரு திட்டத்தை நாம் இப்போது எப்படிப் பரிந்துரைக்கிறோம்? இதற்கு விடையளிக்கும் முன் மனித உழைப்பு பற்றிய ஓர் உண்மையைத் தெரிந்து கொள்வோம்.
ஒரு மனிதன் தன் உழைப்பின் மூலம் தன் தேவையைப் போல் பல மடங்கு பண்டங்களைப் படைக்க முடியும். தானே பண்டத்தைப் செய்து அவன் சந்தையில் விற்க முனையும் போது அதை அவனிடம் வாங்கி விற்கும் வாணிகன் அவனால் படைக்கப்பட்ட பண்டத்தில் அவனது தேவைக்குப் போதிய அளவுக்கு மட்டும் விலையாகக் கொடுத்துவிட்டு அதன் எஞ்சிய மதிப்பைப் பறித்துக்கொள்கிறான். பண்டத்தைப் படைப்பதற்கு மூலப் பொருட்களைக் கடனாகவோ மூலப்பொருள் வாங்கக் கடனாகப் பணமோ வாங்கியிருந்தால் அந்த வாணிகன் அல்லது வட்டிக்காரனுக்கும் அந்த மீத மதிப்புச் செல்கிறது. கடன் வாங்கித் தொழில் நடத்தும் சிறுதொழில் ″முதலாளி″யின் நிலையும் ஏறக்குறைய இதுதான். ஆனால் பெருந்தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளியின் உழைப்பில் உருவாகும் மீத மதிப்பு அத்தொழில் முதலாளியிடம் சேர்கிறது. நாடு முழுவதும் இது போல் வாணிகர்களாலும் வட்டிக்காரர்களாலும் பெருமுதலாளிகளாலும் கைப்பற்றப்படும் மீத மதிப்பு அவர்களிடம் பணமாகத் தேங்கிப் போவதால் விளைக்கப்பட்ட பண்டங்களை வாங்கத் தேவையான பணம் மக்களிடமில்லாமல் பண்டங்களும் தேங்கிப் போகின்றன. இதனால் தேவை குறைந்து பண்ட விளைப்பு குறைகிறது; இதனால் பெரும்பான்மை மக்களான உழைப்பாளிகளின் வருமானம் குறைந்து பண்டங்களின் தேவை மேலும் குறைகிறது. இறுதியில் வேலையில்லாப் பட்டினி நிலை உருவாகி உழைப்பாளி மக்கள் செத்து மடிகிறார்கள்.
இதே நேரத்தில் நாடெல்லாம் அனைத்துப் பண்டங்களும் தேங்கிக் கிடக்கின்றன. இது 1933 க்கு முன்பு இரண்டு நூற்றாண்டுகளாக பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்ந்த கொடிய நிகழ்ச்சி. இந்தப் பட்டினி நிலையில் பணம் படைத்தோரின் நுகர்வினால் தேங்கிக் கிடந்த பண்டங்கள் சிறிது சிறிதாகச் செலவாக, விளைப்புச் செயல்கள் மீண்டும் தொடங்கி வேகம் பெற்று உச்சத்தை அடைந்து மீண்டும் தேக்கத்தை நோக்கி நகர்வதாகச் சுழன்றது. இதனைப் பெரும் வீழ்ச்சி(கிரேட் டிப்ரசன்) என்றும் பொருளியல் நெருக்கடி என்றும் கூறுவர். இந்த நெருக்கடிகளிலிருந்துதான் உலகில் பொதுமைப் புரட்சி ஏற்படும் என்று காரல் மார்க்சு கூறினார். அது அமெரிக்காவில் மெய்ப்பட இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு 1933 இல் தோன்றிய நெருக்கடியால் அமெரிக்காவில் பட்டினிச் சாவுகள் நேரிடத் தொடங்கின. கஞ்சித் தொட்டிகளை நிறுவி பட்டினி கிடந்த மக்களைக் காப்பாற்றியது அரசு. அப்போதுதான் பொதுமைக் கட்சியும் அங்கே வலுப்பெற்றது. ஆனால் பொருளியல் வல்லார் கெயின் வகுத்த புதிய உத்தி அங்கு மட்டுமல்ல உலகில் எங்குமே பொதுமைப் புரட்சி நடைபெறாமல் தடுத்து நிறுத்தியது. அது என்னவென்று பார்ப்போம்.
மனித உழைப்பு இருவகைகளில் செயற்படுகிறது. ஒன்று பண்டங்களைப் படைக்கும் விளைப்புத் துறை, இன்னொன்று பண்டங்களைப் படைக்காத பணித்துறை. விளைப்புத் துறையில், எடுத்துக்காட்டாகச் சவளித் துறையை எடுத்துக்கொண்டால் விதையையும் உரத்தையும் பயன்படுத்தி பருத்தி விளைக்கும் வேளாண்மை, பருத்தியிலிருந்து துணி செய்யும் நெசவாலை, துணியிலிருந்து ஆடை செய்யும் தையலகங்கள் என்ற பல கட்டடங்கள் வரும். அது போல் பணித்துறையில் உடுத்த துணியைச் சலவை செய்யும் சலவைத் துறை வரும். மண்ணில் சாலைகள் அமைப்பதும் சல்லி, மணல், கீல்(தார்) பயன்படுத்திச் சாலை போடுவதும் அதனை முறையாகப் பாரமரிப்பதும், பாசன அமைப்புகளைக் கட்டுவதும் பராமரிப்பதும், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்களைக் கட்டுவதும் பராமரிப்பதும், வீடுகளைக் கட்டுவதும் பராமரிப்பதும், கல்வி நிலையங்களைக் கட்டுவதும் பராமரிப்பதும் போன்றவை பணித்துறையில் வரும். திரைப்படம், நாடகம், போன்ற கலைத்துறைகள், தாளிகைகள் போன்றவை பணித்துறையின் கீழ்வரும். விளைப்புத் துறையில் உருவாகும் பண்டங்களில் சில இத்துறைகளில் நேரடியாகப் பயன்படுகின்றன. அதைவிடப் பெருமளவில் இத்துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு வழங்கப்படும் சம்பளம்தான் விளைப்புத் துறையின் படைப்புகளை நுகர்ந்து தீர்க்க உதவுகிறது. எனவே பொருளியல் நெருக்கடிகளைத் தவிர்க்க விளைப்புத் துறையில்லாத பணித் துறைகளின் மூலம் மக்களிடம் பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கெயின் பரிந்துரைத்தார். இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய அரசுகள் எதுவும் அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பனிக் காலத்தில் சாலைகளிலிருந்து பனிச் சேற்றை அகற்றுவது போன்ற எளிய பணிகளில் தொடங்கி நாடெங்கும் நேரிய அகன்ற சாலைகளை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு அந்த நெருக்கடியை எதிர்கொண்டார். அதற்கு, பணத் தாள்களை அச்சிடும் பற்றாக்குறைப் பணமுறை உலகில் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக நாடுகளும் இவ்வுத்தியைப் பின்பற்றின. அன்றிலிருந்து இன்று வரை முன் போன்ற பட்டினிச் சாவுகள் உலக மக்களை அச்சுறுத்தவில்லை. சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பட்டினிச் சாவுக்குக் காரணம் உலக வாணிகத்தில் தம்மை முழுமையாக ஒப்படைத்து உள்நாட்டுத் தேவைகளிலிருந்து தம் வேளாண்மையை அயற்படுத்தி அவை ″தற்கொலை″ செய்து கொண்டதுதான்.
நம் நாட்டில் இந்த உத்தி கடைப்பிடிக்கப்பட்டதா? அதன் விளைவுகள் என்ன என்ற கேள்விகளுக்கு இப்போது விடை காண்போம்.
நம் நாட்டில் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் நடைமுறையிலுள்ளது. பற்றாக்குறையை வரிவிதிப்பாலும் ஓரளவு பணத்தாளை அச்சிட்டும் சரிப்படுத்தும் முறைய முன்பு கடைப்படித்ததுண்டு. இப்போது உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்கள்தாம் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த உத்தியைக் கையாள வேண்டுமாயின் மக்களின் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்யும் அளவுக்குப் பண்டங்கள் தேவை. பண்டம் இருந்து பணம் இல்லாத நிலைதானே முன்பு பொருளியல் நெருக்கடிக்குக் காணரமாக இருந்தது. பணம் இருந்து பண்டங்களின் இருப்பு மிகக் குறைவாக இருந்தாலும் அதே போன்ற நெருக்கடி உருவாகும்.
நாம் ″விடுதலை″ பெற்ற போது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அளவில் உணவு விளைச்சல் இல்லை. அரிசியையும் கோதுமையையும் இறக்குமதிதான் செய்துகொண்டிருந்தோம். எனவே ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பெரும் பாசனத் திட்டங்களை நிறைவேற்றிப் பாசனப் பரப்பை விரிவாக்கினோம். வேளாண் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவில்லை. நெல் நாற்றுகளை வரிசையாய் நடும் சப்பானிய உத்தியை மட்டும் கடைப்பிடித்தோம். இந்தக் காலகட்டத்தில் நேரு கடைப்பிடித்த போக்கு நம் வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாய் இருந்தது. நம் நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிட ஓர் ஐரோப்பியர், ஓர் அமெரிக்கர் ஆகிய இருவரை அவர் அமர்த்தினார். உள்நாட்டில் இப்பணிக்குத் தகுதியானவர்களை கிடைக்கவில்லையா? தேடினால் கட்டாயம் கிடைத்திருப்பர். ஆனால் ″இந்திய மரபு″ப்படி தன் நாட்டினரை மதியாமையும் அயல் நாட்டினரை வழிபடலும் அவரது குருதியில் ஊறுயிருந்தன. பல்துறைத் தொழில்நுட்பத்திலும் மேதையாக விளங்கிய கோ.து.(சி.டி.)நாயுடுவின் படைப்புகளான கரிசி(பிளேடு), வானொலிப் பெட்டி போன்றவை தனக்கு நெருக்காமன தொழில் முதலாளிகளுக்குப் போட்டியாக வருமென்று நேரு அஞ்சியிருக்கலாம். ஆனால் அவரது வேளாண் தொழில்நுட்பங்களையும் புறக்கணித்தது ஏன்?
கோ.து.நாயுடுவை மட்டுமா? நாடு முழுவதிலும் தோன்றிய எண்ணற்ற தொழில்நுட்பர்களையும் புறக்கணித்தார். அறிவியல் – தொழில்நுட்பர்களைப் புறக்கணித்து இழிவுபடுத்தும் கேடுகெட்ட நடைமுறையை ″விடுதலை″க்குப் பின் தொடங்கி வைத்த புண்ணியரே நேருதான். தன் படிமம் மட்டும் தனித்து ஒளிர வேண்டும். தனக்கு அருகில் கூட எவரும் வந்து விடக் கூடாது என்பது அவரது எண்ணம். உலகமெல்லாம் தன் பெயர் பரவ வேண்டும் என்பதற்காகவே உலக அரங்குகளில் உரைகள் நிகழ்த்தியதும் அமெரிக்க, சோவியத் தலைவர்களுக்கு இணையாகத் தானும் பேசப்படவேண்டும் என்பதற்காகவே அணிசாரா நாடுகள் அமைப்பைத் தொடங்கி நடத்தியதில் பங்கு கொண்டதும் சீனத்தோடு சேர்ந்து ″பஞ்சசீலக்″க் கோட்பாட்டைப் பறைசாற்றி மூக்கறுபட்டதும். இலங்கையில் வாழும் இந்திய மரபினரின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இலங்கை அரசுத் தலைவர்களுடன் தன் மகளும் தானும் கேளிக்கை ஆட்டங்கள் நடத்திய இந்திய நீரோ அவர். கூட்டிக் கொடுத்த ஊழல் பெருச்சாளிகளை ஊட்டி வளர்ந்த உயர்குடிச் செம்மல் அவர். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சுருண்டு போன சப்பானை ஒரு பொருளியல் வல்லரசாகத் தூக்கி நிறுத்தும் வரை ஒரே ஒரு உலக வரலாற்றுக் கருத்தரங்கில் கூடக் கலந்துகொள்ளாமல் தேசிய மீட்சியில் தம் முழு ஆற்றலையும் செலுத்திய சப்பானியத் தலைவர்களுடன் ஒப்பிட்டால்தான் சட்டையில் செம்முளரி (ரோசா)ப் பூவைச் சொருகிக்கொண்டு மேனா மினுக்கியாக உலகின் முன் படங்காட்டித் திரிந்த நேருவைப் புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தின அண்ணாத்துரை, கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன் ஆகியோர் தமிழ் மொழியில் உண்மையான புலமை பெற்ற அனைவரையும் மிதித்து அழுத்தியது போன்று அனைத்துத் துறைகளிலும் உள்ள புத்திளம் படைப்பாளிகளை அழுத்தி அழித்ததுடன் கேடுகட்ட குடும்ப ஆட்சியெனும் கொடும் பிணியை இந்தியாவுக்கு வழங்கிவிட்டுச் சென்றவர் அவர். பெயருக்கேனும் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ″மக்களாட்சி″யின் குரல்வளையை நெரிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 356ஐ முதன் முதலில் பயன்படுத்திய கொடியவரும் அவரே!
இந்தப் பின்னணியில் வேளாண் தொழில்நுட்பத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் பொறுப்பை லால்பகதூர் சாத்திரி, சி. சுப்பிரமணியம், மா. சா. சாமிநாதன் ஆகியோர் மீது வரலாறு சுமத்தியது, ஆனால் உழவர்கள் மீது எண்ணற்ற விலங்குகளைப் பூட்டியோராக லால்பகதூரும் சுப்பிரமணியமும் தரம் தாழ்ந்தனர். உள்நாட்டு மரபு விதைகளைத் திரட்டித் திருட்டுத்தனமாக அமெரிக்கர்களுக்கு வழங்கி அவர்கள் அமெரிக்காவில் பதிவுசெய்ய உதவி உள்நாட்டில் அவற்றைத் துடைத்தழித்து இரண்டகம் செய்தார் சாமிநாதன்.
இவர்களது நடவடிக்கைகளால் உணவுப் பொருள் இறக்குமதி குறைந்தது. ஆனால் உரங்களும் பூச்சி மருந்துகள் அல்லது அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
நமது பழைய வேளாண் தொழிலுறவான குத்தகை வேளாண்மையை நிலைநிறுத்தும் ″குத்தகை ஒழிப்பு″ச் சட்டத்தையும் பெரும் முதலாளியப் பண்ணைகள் உருவாகி வேளாண் தொழில் மேம்படுவதைத் தடுக்கும் வகையில் நில வரம்புச் சட்டத்தையும் நிறைவேற்றச் செய்து சோவியத் நலனுக்குப் பாடுப்பட்ட, இன்று சீன - உருசிய நலன்களுக்குப் பாடுபடும் பொதுமைக் கட்சிகளும் அமெரிக்க நலன்களுக்குப் பாடுபட்ட, பாடுபடும் நிகர்மை(சோசலிச)க் கட்சிகளும் இன்று நிலமில்லாதோர்க்கு நிலத்தைப் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டுமென்று அதிகாரத் தரகுப் பணி செய்து ஏழை மக்களிடையில் ஒரு பண்பாட்டுச் சீரழிவை உருவாக்கி விட்டுள்ளனர். இந்தத் தடங்கல்களை அகற்றினால் பெரும் பண்ணைகள் உருவாகி மூலதனம், சந்தைப்படுத்தல், தொழில் நுட்பம் ஆகியவற்றுக்காக அரசையோ அயலவரையோ நாடாமல் நாமே நம் வேளாண்மையை மேம்படுத்த முடியும்.
ஒவ்வோர் ஆண்டும் பல கோடி தன் நெல்லும் கோதுமையும் அரசின் கிடங்குகளில் முடையிருப்பாகப் பதுங்கிக் கிடக்கின்றன. அவற்றில் பெருமளவு களஞ்சியக் கோளாறுகளால் கெட்டு அழிக்கப்படும். கெட்டதாகவும் அழிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டப்பட்டு கொள்முதல் செய்யாமலே நடைபெறும் ஊழலும் பெருமளவு உண்டு. இன்னொரு பக்கம் பல இலக்கம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே வெளையில் பற்றாக்குறை என்ற பெயரில் பல இலக்கம் தன் கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இந்தக் குழப்படிகளால் உணவுத் தவசங்களின் தன்னிறைவு பற்றி நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவ்வாறு தான் சவளித்துறையும். பருத்தி, நூல், துணி ஆடைகள் என்று அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன. அனைத்துப் பண்டங்களிலும் நம் ஆட்சியாளர்கள் இதே குழப்படியைக் வேண்டுமென்றே செய்கின்றனர். எனவே வெளிவாணிகத்தில் அரசுக்குள்ள அதிகாரத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிற தேவை இருக்கிறது.
இன்று நம் மக்களிடையில் குடி, சமய, குடும்ப நிகழ்ச்சிகளில் அளவு மீதிப் பணத்தையும் பண்டங்களையும் வீணாக்குதல் போன்ற தீய வழக்கங்களுக்கு முடிவு கட்டி மூன்று வேளைக்கும் உணவு என்ற முதன்மை அடிப்படைத் தேவையை நிறைவேற்றும் திசையில் அவர்களது வருவாயைத் திருப்பினால் அதற்கு இன்றைய உணவு விளைப்பு போதவே போதாது. இந்நிலையில் இப்போது பணத்தாளை அச்சிட்டு மேலே சுட்டிக்காட்டியுள்ள அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க முனைந்தால் உணவுத் தட்டுபாடு ஏற்பட்டு விலை கட்டுக் கடங்காமல் உயர்ந்து பெரும் சிக்கல்களை உருவாக்கும். எனவே முதலில் உணவுப் பொருள் விளைப்பில் நாம் தன்னிறைவு எய்தும் அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தோராயமாக அவை பின்வருமாறு இருக்க வேண்டும்
1) வருமான வரியை ஒழித்தல்
2) நிலவுச்ச வரம்பை ஒழித்தல்
3) குத்தகை முறையை ஒழித்தல்
4) உணவுப் பொருள் நடமாட்டம், கையிருப்பு வைத்தல், விற்பனை, விலை நிறுவுவதல் ஆகியவை குறித்து அரசு நடைமுறைப்படுத்தும் அனைத்துக் கட்டுபாடுகளையும் ஒழித்தல்.
5) வேளாண் நடைமுறையிலுள்ள அனைத்து உடலுழைப்புப் பணிகளையும் பாடத் திட்டமாகவும் பயிற்சித் திட்டமாகவும் கொண்ட கல்வி நிலையங்களை வேண்டிய எண்ணிக்கையில் உருவாக்கல்.
6) முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் உயிரிப் பொருட்கள் வேதிப் பொருட்களைக் கொண்டு உரங்கள், பயிர்ப் பாதுகாப்புப் பொருட்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை அமைத்தல்.
இவ்வாறு உணவுப் பொருள் வேளாண்மை பாய்ச்சல் நிலையடையத் தேவையான அடிப்படைகளை உருவாக்கிய பின் அடிப்படைக் கட்டுமானத் தேவைகளை நிறைவேற்றப் பணத்தாளை அச்சிடும் உத்தியைச் சிறிது சிறிதாக விரிவுப் படுத்த வேண்டும். வேளாண் விளைபொருள் விற்பனை மூலமாக நாட்டுப்புறங்களில் பாயும் பணம் அங்கு மட்டுமல்ல அம்மக்களின் பிற தேவைகளையும் நிறைவுசெய்யும் தொழில் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும். அனைவருக்கும் இலவயத் தொடக்கக் கல்வியளித்தல். சாலைகளை அமைத்தல், விரிவுபடுத்தல், சிறப்புறப் பராமரித்தல், பாசன அமைப்புகளை மேம்படுத்தல், சிறப்புறப் பராமரித்தல் என்று தொடங்கி களத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தால் விரிவான வேலை வாய்ப்பையும் பண்டங்களின் தேவைகளையும் உருவாக்கி அனைத்துத் துறைகளிலும் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும். இன்றைய தேங்கிப் போன பொருளியல் – குமுகியல் அடிப்படைகளும் உறவுகளும் உடைந்து ஒரு மேம்பட்ட மட்டத்துக்கு உயரும்.
இதில் உள்ள ஒரு பக்க விளைவையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும். அரசு அச்சிட்டுப் பழக்கத்தில் விடும் பணத்தில் மக்கள் சேமிப்பாகப் பிடித்து வைத்தது போக எஞ்சியதில் ஒரு பகுதி வேளாண்மை மற்றும் தொழில் நிறுவனங்கள், ஒப்பந்த நிறுவனங்கள், வாணிக நிறுவனங்களிடம் திரளும். இந்நிறுவனங்களிடையில் நலமிக்க ஒரு போட்டியை உருவாக்கிவிட்டால் இப்பணத்திரட்சி ஆய்வு – மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் அனைத்துப் பரிமானங்களையும் மேம்படுத்தும். தொழில் புரட்சிக் காலத்தில் அடிமை நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கும் இன்று ஏழை நாடுகளிலிருந்து வல்லரசு நாடுகளுக்கும் பாய்ந்த, பாயும் அளவற்ற செல்வம் அந்நாடுகளின் பொருளியல், தொழில்நுட்ப, அரசியல் - குமுகியல் உறவுகளில் எத்தகைய பாய்ச்சல் நிலையை உருவாக்கியதோ உருவாக்குகின்றதோ அதே பணியை நாம் மேலே சுட்டிக் காட்டிய வகையில் செயற்பட்டால் அரசு அச்சிட்டு வெளியிடும் பணத்தாள் செய்ய முடியும்.
தற்சார்புடைய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நாம் மேலே பரிந்துரைத்த பணவீக்கத்தின் ஆக்கத் தன்மையுடன் நம் ஆட்சியாளர்கள் உலக வங்கியுட்பட உலகெல்லாம் கடன் வாங்கி மேற்கொள்ளும் ″வளர்ச்சிப் பணிகளை″ ஒப்பிட்டுப் பார்ப்போம்.
உலக வங்கி உட்பட வெளியிலிருந்து பெறப்படும் கடன் எதுவும் பணமாக வழங்கப்படுவதில்லை. பண்டங்களாகவும் பணிகளாகவுமே வழங்கப்படுகின்றன. கடன் தொகை நம் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அந்தத் தொகைக்கு வெளியிலிருந்து நாம் பண்டங்களை அல்லது பணிகளை இறக்குமதி செய்து செலவெழுதிக் கொள்ள வேண்டும். அவற்றைப் பெறும் உள்நாட்டு மக்கள் அல்லது அரசு அதன் விலைக்கு ஈடான பணத்தை உரூபாயில் வெளியிடுகின்றனர். அதனைக் கொண்டு அரசு தன் ″வளர்ச்சி″த் திட்டங்களை நிறைவேற்றுகின்றது. சில வேளைகளில் அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான கருவிகளையும் பிற பணிகளையும் நேரடியாக இறக்குமதி செய்கிறது. பாசனத் திட்டங்கள், குடிநீர் - வடிகால் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு மூலப்பொருட்கள், தொழில்நுட்பம், பணியாட்கள் எதிலும் வெளி உதவி தேவையில்லை. வேறு எங்கோ தேவைப்படுவது உழவர்கள் உட்பட அனைத்து மக்கள் மீதும் சுமத்தப்பட்டு ″உலக வங்கித் திட்டம்″ போன்ற பொய்ப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் கப்பல்கள், வானூர்திகள், வகைவகையான போர்க்கருவிகள் கூட பிற திட்டங்களின் பெயரில் பற்று வைத்து வாங்கப்படுகின்றன.
இத்திட்டங்களின் இன்னொரு பக்கம், இவ்வாறு பெறப்பட்ட கடனை அடைப்பதென்ற பெயரில் இந்நாட்டிலுள்ள வேளாண் பொருட்கள் போன்று திரும்பப் பெறத்தக்க பொருட்களும் கனிமப் பொருட்கள் போன்று திரும்பப் பெற முடியாத பொருட்களும் நமக்கே எதிராகப் பயன்படுத்தப்படும் மனித வளம் என்ற நம் நாட்டு மக்களின் அறிவாற்றலும் ஏற்றுமதி செய்யப்படுவது. ஒரு பக்கம் பணப்புழக்கத்தைத் தூண்டிவிட்டு இன்னொரு பக்கம் பண்டங்களை வெளியேற்றிப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதால் தீங்குதரும் செயற்கையான ஒரு பணவீக்கம் உருவாக்கப்படுகிறது. விலையேற்றம் ஏற்பட்டு உள்நாட்டுப் பணத்தின் மதிப்பு குறைகிறது. அத்துடன் வெளிநாட்டினருடன் கள்ள உடன்பாடு கொண்டு உள்நாட்டு நாணயத்தின் வெளிச்செலவாணி மதிப்பைக் குறைப்பதினால் புதிதாகக் கடனெதுவும் பெறாமலே உரூபாய் மதிப்பில் கடன் உயருகிறது. ஒவ்வொரு டாலருக்கும் நாம் செலுத்த வேண்டிய பண்டங்களின் அளவு கூடுகறது. வட்டியால் குட்டி போடுவதுடன் வட்டியோ முதலோ இல்லாமலும் கடன் தொகை கூடும் விந்தையான கந்து வட்டி வலையிலும் மக்கள் சிக்கியுள்ளனர். அத்துடன் கடன் கணக்கில் வழங்கப்படும் பண்டங்கள் உலகச் சந்தை விலையை விடக் கூடுதலாகவும் நாம் ஏற்றமதி செய்யும் பண்டங்கள் உலகச் சந்தை விலையை விடக் குறைவாகவும் கணக்கிடப்படுகின்றன. அதனால் நம் வெளிவாணிக நிலுவை எப்போதும் நமக்கு எதிராகவே நின்று கடன் வலை நம் கழுத்தை மேலும் மேலும் இறுக்குகிறது.
உருபாயின் மதிப்பு இறங்கிக் கொண்டே இருப்பதால் ஏற்றுமதி இறக்குமதி வாணிகர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை டாலர்களாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்க முயல்கின்றனர். அதற்கு விலைப்பட்டியல் உத்தி (உயர்பட்டியல் - தாழ்பட்டியல்) பயன்படுத்தப் படுகிறது. இதனாலும் நம் வெளிவாணிகப் பற்றாக்குறை உயர்கிறது. இதனால் மேலும் ஏற்றுமதி – இறக்குமதி – வெளிவாணிகப் பற்றாக்குறை உயர்வு என்று என்று இந்த நச்சு வளையம் வளர்ந்து கொண்டே போகிறது. இந்த வெளி நாணயப் பதுக்கலிலிருந்து அவாலா எனப்படும் வெளிநாணயக் கடத்தல் நடை பெறுகிறது. அதில் நம் ஆட்சியாளர்களின் பங்குதான் முதன்மையானது.
அயல் வாணிகத்தின் இன்னுமொரு பக்கமும் உள்ளது. இறக்குமதியாகும் பண்டங்களின் மதிப்பில் குறைந்தது 20 நூற்றுமேனித் தரகு இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யும் ஆட்சியாளருக்கு உண்டு. போபர்சு குண்டுமிழி(பீரங்கி) ஊழல் தொடர்பாக ஒரு தொழில் நிறுவனம் கூறிய உண்மை இது. அதுபோல் ஏற்றுமதியிலும் கணிசமான தரகு உண்டு.
இந்த ஊழல்களைப் பற்றிய முழுச் செய்திகளும் அமெரிக்க நடுவண் நுண்ணறிவு முகமை (சி.ஐ.ஏ.) போன்ற உளவு நிறுவனங்களிடம் உள்ளன. அவை நம் நாட்டு ஆட்சியாளர்களை தம் விருப்பம் போல் ஆட்டி வைக்கின்றன. அமெரிக்க அமைச்சர்கள் உலகவலம் வரும் போது உலகின் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் அவர்கள் முன் மண்டியிடுவதன் நுட்பமே இதுதான். அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் போபர்சு பொன்ற ஊழல்கள் அம்பலத்துக்கு வரும். எனவே நம் ஆட்சியாளர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ஏற்றுமதி - இறக்குமதி நச்சு வளையத்திலிருந்து மீள முடியாது. அயல்நாட்டு நெருக்குதல் ஒரு பக்கமென்றால் நிலையான ஆட்சியாளர்களாகிய உயரதிகாரிகள் இன்னொரு பக்கம் நெருக்குவார்கள். புதிதாக ஆட்சியைக் கைப்பற்றும் தலைவர்கள் கூட இந்தப் பொறியிலிருந்து தப்பமுடியாது. ஏனென்றால் இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாயிருக்கும் போதே இந்தக் கொள்ளைகளில் பங்கேற்றுவிடுகின்றனர். தங்களுக்காக இல்லாவிட்டாலும் தங்கள் கட்சி பா.உ.க்களை ஓடாமல் நிறுத்தி வைப்பதற்காகவாவது அவர்களுக்கு இது தேவைப்படுகிறது. எதிர்க் கட்சியினருக்கு உரிய பங்கைச் செலுத்துவதற்காகவே பல்வேறு பாராளுமன்றக் குழுக்களும் அமைக்கப்படுகின்றன.
இச்சூழல்களால் ஆட்சியாளர்களின் முன்முயற்சியால் நாட்டை இந்த நச்சுச் சுழலிலிருந்து மீட்க முடியாது. மக்களின் முன்முயற்சியால்தான் முடியும். ஆட்சியாளர்களின் அதிகாரங்களைப் பறித்து அவர்களை மக்கள் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலம்தான் இதற்கு முடிவுகட்ட முடியும்.
இன்றும் திடீரென்று விலைகளும் கட்டணங்களும் சராசரிக் குடிமகனால் தொட முடியாத உயரத்தில் ஏறி நிற்கின்றன. தமிழகத்தின் பண அமைச்சர் மக்களிடம் பணப் புழக்கம் கூடிவிட்டதுதான் காரணம் என்கிறார். எதிர்க்கட்சித் தலைவரோ ஆண்லைன் எனப்படும் இணையப் பேரச் சூதாட்டம்தான் காரணம் என்கிறார். நடு பண அமைச்சரோ ஏம வங்கி ஆளுநருடன் சேர்ந்துகொண்டு பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர் இப்போது கடைசியாக, பணவீக்கம் இருந்தாலும் ″நாம்″ 8 நூற்றுமேனி வளர்ச்சியை எட்டிவிட்டோம் என்று மகிழ்ந்திருக்கிறார். அந்த ″நாம்″ யார் என்பதுதான் நம் கேள்வி. இணையப் பேரச் சூதாட்டத்தில் ஆட்சியாளர்களின் பங்கு என்ன என்பதும் ஒரு கேள்வி. பண்டங்களை மக்கள் நுகர முடியாமல் செய்து அவர்களிடமிருந்து பறித்து ஏற்றுமதியில் திருப்பி விடுவதற்காகச் செய்யப்படும் உலகளாவிய சூழ்ச்சியா இது?
வருமானவரி தொடங்கி வேளாண்மை மீதான கட்டுப்பாடுகளையும் பிற பொருளியல் விலங்குகளையும் உடைப்பதற்கும் ஆட்சியாளர்களின் ஏற்றுமதிப் பொருளியல் நடைமுறைகளை முடிவு கட்டுவதற்குமான போராட்டத்தை நாம் உடனே தொடங்கவேண்டும். மக்களிடையில் உறைந்துவிட்ட பல்வேறு ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகளை அகற்றிப் பகுத்தறிவுக்கு உகந்த முன்னுரிமைகளுடன் தங்கள் வருமானத்தைச் செலவு செய்யும் பண்பாட்டை வளர்க்கவேண்டும். இவற்றை நிறைவேற்றும் போது நலன்தரும் ஒரு பணவீக்கத்தை நம் முன்னேற்றத்துக்கு வழியமைப்பதாக உருவாக்க முடியும்.
ஒரு வால் பகுதி:
ஆக்கவழிலான பற்றாக்குறைப் பணமுறையை ஒடுக்கப்பட்ட நாடுகள் கடைப்பிடிப்பதை அமெரிக்காவின் தலைமையில் அமைந்த வல்லரசியம் தடை செய்துள்ளது என்று தோன்றுகிறது, பொருளியல் தடைகளுக்கு உள்ளான ஈராக்கு பற்றாக்குறைப் பணமுறையைப் பயன்படுத்தி மேலெழ முயன்றதுதான் அமெரிக்காவும் அதன் தோழர்களும் அதைத் தாக்கியதற்கான உடனடிக் காரணமாகுமோ என்று எமக்கொரு ஐயம்.
முதல் உலகப் போருக்குப் பின்னர் கடுமையாக நசுக்கப்பட்ட செருமனியை இட்லர் இந்தக் கோடபாட்டைப் பயன்படுத்தித்தான் அன்றைய உலக வல்லரசான பிரிட்டனை அழிக்கும் அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் வளர்த்திருப்பார் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பொசுக்கப்பட்ட சப்பானுக்கு இந்தப் பொருளியல் கோட்பாட்டைப் பயன்படுத்தி அமெரிக்கா தன் அரவணைப்பில் வளரத் துணை புரிந்திருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்த உள்ளரங்கங்களை ஆட்சியாளர்களோ பல்கலைக் கழகங்களோ வெளியே கசிய விடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
(இக்கட்டுரை தமிழினி சூன்-2008 இதழில் வெளிவந்துள்ளது.)