7.1.08

தமிழ்த் தேசியம் ... 25

மனந்திறந்து... 15

குணாவின் ″திராவிட″ எதிர்ப்பு, அதாவது தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் மக்கள் மீதான எதிர்ப்பை ஓரளவுக்கு மேல் பெருஞ்சித்திரனாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறுதி நாட்களில் குணாவின் கோட்பாட்டை அவர் எதிர்த்தார் என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் திருமண உறவுகளில் இரு தலைமுறைகளில் பிறமொழியாளர் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதும் காரணமாகலாம். இதில் வியப்பதற்கொன்றுமில்லை. தனித்தமிழ் இயக்கத்தில் தெலுங்கையும் கன்னடத்தையும் தாய்மொழியாகக் கொண்ட தமிழக மக்கள் ஆற்றியுள்ள தொண்டைப் பெருஞ்சித்திரனாரைத் தவிர வேறெவர் முழுமையாக உணர்ந்திருக்க முடியும்? தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தில் தமிழ் மொழியை ஒரு தேசிய அடையாளமாகக் கொண்டு இவர்களெல்லாம் இயங்கினர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. இன்று அந்தத் தேசியப் போராட்டம் தொய்வடைந்து திசைமாறிப் போனதால் அம்மக்களும் தடம் மாறி நிற்கின்றனர்.

தமிழகத்தின் உட்பகுதியிலும் எல்லைகளிலும் வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் கொஞ்ச காலமேனும் பிற மக்கள் மீது அரசியல் வழி ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்த ஆதிக்கவுணர்வு இன்றும் தொடர்கிறது. தமிழ் பேசும் மக்களிடையில் நிலவும் சாதி சார்ந்த ஆதிக்க உணர்வுக்கு ஒப்பானதாக இதைச் சொல்லலாமாயினும் மொழி அடிப்படையில் சாதி ஆதிக்கத்தை விட இது கூடுதல் வலிவுடையதுதான். அது போன்றே முகம்மதிய, கிறித்துவ சமயங்களைச் சார்ந்த ஆதிக்க உணர்வும். இவற்றையும் எதிர்க்க வேண்டியது தான். ஆனால் அது நம் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த முகாமையான உள்முரண்பாடு ஒரு தீர்வை எய்தும்.

குணாவின் நடைமுறை இந்த வகையில் திசைதவறிப் போய்விட்டதாகத் தெரிகிறது. கர்நாடகத் தமிழர் சிக்கல் முற்றத் தொடங்கிய காலத்தில் அவரிடம் இது பற்றி நான் பேசியிருக்கிறேன். அப்போது, வெங்காலூருக்கு வெளியே கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் வாழ்கிறார்களா என்று கேட்டேன். மாநிலம் முழுவதும் உழுதொழிலாளர்களாக நிறையப்பேர் இருப்பதாக அவர் கூறினார். ஏன் அவர்களையும் இணைத்துக்கொண்டு நீங்கள் போராடக்கூடாது என்று கேட்ட போது ″அது எங்கள் வேலையில்லை″ எனப் பட்டென்று அவர் கூறியதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியாயிருந்தது.

வெங்காலூர்த் தமிழர் சிக்கலையும் ஈழத்தமிழர் சிக்கலையும் திருவிதாங்கூர்த் தமிழ் மக்கள் சிக்கலையும் ஒப்பிட்டுக் குணாவுக்கு ஒரு மடல் எழுதினேன். திருவிதாங்கூரில் மலையாளம் ஆட்சிமொழி. குமரி மாவட்டப் பகுதியில் கட்டாய இலவயக் கல்வி மூலம் ஏறக்குறைய எல்லோரும் தமிழ் வழியில் எழுத்தறிவு பெற்று வந்தனர். எனவே வேலைவாய்ப்புக்குத் தமிழகத்தோடு இணைவது ஒன்றே தான் வழி என்ற உள்ளுணர்வின் உந்தலில் தான் அவர்கள் உரிய வேளையில் போராடி ஓர் அரைகுறை வெற்றியையாவது பெற்றார்கள். ஈழத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாயிருந்ததாலும் ஆங்கிலம் படித்த தமிழ் மேட்டுக்குடியினரே இலங்கை முழுவதும் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளிலும் பெரும் பதவிகளில் இருந்ததாலும் அவர்கள் ஆங்கிலர் அகன்ற பின்னரும் இந்நிலை தொடரும் என்ற மிதப்பில் தமிழர்களின் உரிமைகளைக் காக்க உரிய வகையில் முயலவில்லை என்பது மட்டுமல்ல தங்களுக்கு உற்ற துணையாய் விளங்கத்தக்க ″இந்திய″மரபுவழித் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கக் காரணமாயிருந்து தம் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர். இறுதியில் தரப்படுத்தல் என்ற நேரடித் தாக்குதல் வரவில்லையெனில் இன்றைய போர் உருவாகியிருக்க முடியாது. அது போல் கர்நாடகத்திலும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. வெங்காலூர் மற்றும் தங்க வயல் தமிழர்கள் நல்ல பதவிகளில் இருந்தனர். மாநிலச் சீரமைப்புக்குப் பின்னும் அதே நிலை நீடிக்கும் என்ற மிதப்பில் வெங்காலூர் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் இருந்துவிட்டனர். வெங்காலூரில் பெருகிவந்த கன்னடக் குடியேற்றத்தையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்று சிறுபான்மை நிலையை எய்திவிட்ட பின் தமிழகத்தோடு இணைக்கக் கேட்பதும் பயன்தராது. எனவே மாநிலத்திலுள்ள தமிழர்களை அணிதிரட்டி கர்னாடகத் தேசியப் போராட்டத்தின் மூலம் மொழிச் சிறுபான்மையர் உரிமைகளைக் காத்துக் கொள்வதே சிறந்த தீர்வு என்று நான் எழுதினேன். இந்திய மாநிலங்களின் தேசிய உரிமைப் போராட்டக் கோட்பாட்டை அவர் வலியுறுத்தி வந்த நேரம் அது.

முகம்மதியத்துக்கும் கிறித்துவத்துக்கும் தமிழக ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறியமை புரட்சிகரமான நடவடிக்கைகள், இன்றும் மதமாற்றம் அத்தகைய புரட்சிப் பங்கை ஆற்ற முடியும் என்று ஒரு நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார். மதமாற்றத்தை முதன்முதலில் ஏற்றுக் கொண்டவர்கள் மேட்டுக்குடியினர்தாம். மதத்தைக் கொண்டுவந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் முன்பும் கைப்பற்றிய பின்பும் தங்கள் பிடியை வலுப்படுத்திக் கொள்ளத்தான் ஒடுக்கப்பட்ட மக்களை மதம் மாற்றினர். உண்மையில் நம் மக்களிடையில் உள்ள சாதிய ஒடுக்குமுறையினால் நாம் வலுவிழந்து அயலார் முன் வீழ்ந்நு விட்டதால் ஏற்பட்ட மாறாத வடுக்களே, சீழும் குருதியுமாகப் பொங்கி வழிந்து நம் உள்ளாற்றலை உருக்கி அழிக்கும் புண்களே அயல் சமயங்களாக நம் மக்களிடையில் நிலவுகின்றன. நம் தேசிய உரிமைப் போராட்டத்தின் ஊடாக நம் மெலிவுக்குக் காரணமான சாதியக் கொடுமையை ஒழித்து இந்த அயல் சமயத் தொடர்புகளை உதறித்தள்ள வேண்டுமென்று நான் எழுதினேன்.

இவையனைத்தும் குணாவுக்குப் பிடிக்கவில்லை போலும். மறுப்பு மடல்கள் என்று எப்போதும் அவர் எனக்கு எழுதியதில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் எனக்கு மடல் எழுதுவதையே நிறுத்திவிட்டார். தான் எழுதிய நூற்படிகளை விடுப்பதையும் நிறுத்திவிட்டார். ஆனால் நான் எழுதும் கட்டுரைகளில் அவர் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் கருதுவனவற்றை வழக்கம் போல் அவருக்கு விடுத்துவந்தேன். சில மடல்களும் எழுதினேன். திராவிடத்தால் வீழ்ந்தோம் நூற்படியை எனக்கு விடுத்ததுதான் நெடுநாட்களுக்குப் பின் அவரிடமிருந்து எனக்கு வந்த ″தொடர்பு″. திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் என் கட்டுரையை மேற்கோள் காட்டியது பெரியார் மீது தான் வைக்கும் திறனாய்வு குறித்து என்னை ஒரு கவசமாகக் கருதித்தான் என்று நினைக்கிறேன்.

குணா வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெறுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததுண்டு. பஃறுளி முதல் வையை வரை நூல் வெளியீட்டிலும் அத்தகைய பணம் பயன்பட்டிருப்பதாகத் தெரிகிறது. குணா இக்குற்றச்சாட்டை மறுப்பதில்லை. தமிழகத் தேசிய விடுதலைக்கு எத்தகைய உதவி கிடைத்தாலும் ஏற்பதில் தவறில்லை என்பது அவரது கருத்து. ஆனால் தேசிய விடுதலைப் போர்களுக்குத் தடங்கலாக ஏதோவொரு வழியில் அவரது அணுகல்கள் உதவும் என்ற நம்பிக்கையில்லாமல் இந்த உதவிகள் கிடைக்கா.

குணா உணர்ச்சி வேகம் மிக்கவர். தமிழகத் தேசிய விடுதலையை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற துடிப்பு, வெறி அவருக்கு இருந்தது. நாடார்கள் தமிழகத் தேசிய முதலாளிகள் என்ற எண்ணத்தில் பணம் படைத்த நாடார்களை அணிதிரட்ட முடியுமா என்று ஒருமுறை கேட்டார். இவை போன்ற முயற்சிகள் வெற்றிபெறாத பதற்றத்தில் அவர் இருந்தபோதுதான் கர்நாடகத் தமிழர்களின் இன்னல்கள் அவரை நிலைதடுமாற வைத்தன. இன்று, தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற ஓர்மையை அவர் இழந்து நிற்பதாக எனக்குப் படுகிறது.

பதற்றத்தில் அவர் மேற்கொண்டுள்ள அணுகல் கர்னாடகத் தமிழர்களுக்கோ தமிழக மக்களுக்கோ நன்மை தருவதாக இல்லை. கர்நாடகத் தமிழர்கள், குறிப்பாக வெங்காலூர்த் தமிழர்கள் தாங்கள் இழந்துவிட்ட பெரும்பான்மையை மீட்க முடியுமா?[1] மீட்டுத் தங்கள் நிலப்பரப்பைத் தமிழகத்துடன் இணைக்க முடியுமா? அவ்வாறு மீட்க வழியிருந்தால் அதை எவ்வாறு திட்டமிடுவது? மீட்க வழியில்லையாயின் கர்னாடக மாநிலத்தினுள் தங்கள் உரிமைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? அதற்கு மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் துணையை அல்லது தமிழக மக்களின் துணையை எவ்வாறு பெறுவது? தமிழக மக்களோடு கர்னாடக மக்கள் எவ்வாறு உறவு கொள்வது? அந்த உறவு எப்போதும் ஒரே சீராக இருக்குமா? காவிரி நீர்ச் சிக்கல் போன்று இரு மாநிலங்களுக்கும் இடையிலான சிக்கல்கள் மேலெழுந்து வரும்போது கர்நாடகத் தமிழர் இவ்விரு மாநிலங்களில் எம்மாநிலத்து நலன் சார்ந்து நிற்பது அவர்களது நலன்களுக்கு உகந்தது? அது போன்ற சமயங்களில் தமிழக மக்களுக்கும் கர்நாடகத் தமிழர்களுக்கும் இடையிலான உறவில் மாற்றம் நிகழாதா? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.

குணா சொன்னவற்றில், தமிழக மக்களுக்கும் கர்நாடகத் தமிழர்களுக்கும் திராவிட இயக்கம் இரண்டகம் செய்து விட்டது என்ற கருத்து சரிதான். அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் கூறாமல் கர்னாடக மாநிலம் தமிழர்களின் நிலமாக இருந்தது என்ற ஆய்வினுள் புகுந்துவிட்டார். வரலாறு தேவைதான். அப்போதுதான் தங்கள் உரிமைப் போராட்டத்துக்கான ஞாயத்தை அம்மக்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கருநாடகத்துக்கான அதே ஆய்வைத் தமிழகத்தினுள் புகுத்தும்போது சிக்கல்கள் வருகின்றன. இங்கு தமிழ் பேசுவோரும் பிறரும் இணைந்து நின்று போராட வேண்டிய தேசியத் தேவை உள்ளது. நிலவுகின்ற ஆதிக்கங்களை ஒழிக்க வேண்டிய ஒரு போராட்டத்தை அதனூடாகவே நடத்த வேண்டியுள்ளது. ஆனால் குணாவின் அணுகலைப் பிடித்துக்கொண்டு இங்கு ஏற்கனவே மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திவரும் சில தமிழ் பேசும் குழுக்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை மறைத்து மக்களைத் திசை திருப்ப முயல்வதுடன் தமிழகத் தேசிய உரிமைப் போராட்டத்தைத் திசைதிருப்பி தேசிய மக்களிடையில் மொழி அடிப்படையிலான கலவரமாக மாற்ற முயல்கின்றன. முன்பு ஆரிய ″இன″க் கோட்பாட்டை வைத்து பெரியார் தமிழகத் தேசியப் போராட்டத்தை எப்படி திசைதிருப்பினாரோ, எப்படி அவர் முதுகின் பின்னே மறைந்து நின்று பார்ப்பனரில்லா மேல்சாதியினர் தங்கள் சாதிவெறிக்கு ஆரியச் சூழ்ச்சிதான் காரணமென்று கதையளந்தார்களோ அதுபோல இன்று பிற்பட்ட சாதிகளைச் சார்ந்த சில சாதிவெறியர்களுக்குத் தங்கள் சாதிவெறிக்கு வந்தேறி திராவிடரின் சூழ்ச்சிதான் காரணம் என்று சொல்வதற்கு வரலாற்று- கோட்பாட்டுத் துணைநின்று தமிழகத் தேசியப் போராட்டத்தைத் திசைதிருப்புகிறார் குணா. அன்று ஒரு கூட்டம் ஆரியர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறியது; இன்று இன்னொரு கூட்டம் திராவிடர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறது. இந்த இரு கூட்டங்களும்தாம் உண்மையில் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அத்துடன் தமிழர்கள் எவரிடமும் எளிதில் ஏமாந்துவிடுபவர்கள் என்று அவர்களை நகையாடும் நோக்கமும் கொண்டவை. தோழர் குணா இந்த உண்மைகளை உணர்ந்திருக்கிறாரோ இல்லையோ நமக்குத் தெரியாது பெரியாரைக் குறைகூறிக் கொண்டு அவர் செய்த அதே இரண்டகத்தை அல்லது கேட்டை இவரும் செய்கிறார் என்பது மட்டும் உறுதி.

ஒரு தேசியத்தின் மீது அயல்விசைகள் தொடுக்கும் தாக்குதல்களை அத்தேசியத்தின் உச்சியிலுள்ள குழுக்களே முதன்முதலில் உணர்கின்றன. அவ்வாறு தான் தமிழ் பேசும் பார்ப்பனர்கள் வரலாற்று ஆய்வு மூலம் தமிழ்த் தேசிய உணர்வுக்கு அடியெடுத்துக் கொடுத்தனர். அதைப் பின்பற்றிக் கீழேயுள்ள விசைகள் அணிதிரளும்போது மேலடுக்கு தன் ஆதிக்க நிலையைப் பேணிக் கொள்வதற்காக எதிரிகளுடன் இணக்கம் காணுகின்றன. ஆனால் அங்குள்ள புரட்சிகரத் தனிமங்கள் தம் குறிக்கோளில் உறுதியாக நின்று கீழ் அடுக்குகளின் செயற்பாடுகளை முன் நோக்கி நகர்த்துகின்றன. எதிரிகளுடன் இணைந்துவிட்ட பிற்போக்கு விசைகளின் ஆற்றலைச் சமன் செய்கின்றன. இவ்வாறு பார்ப்பனர்களிடையிலிருந்து கிடைத்திருக்கத்தக்க புரட்சிகரத் தனிமங்கள் பெரியாரின் திட்டமிட்ட முரட்டுத்தனமான பார்ப்பன எதிர்ப்பால் செயலிழந்து போயின அல்லது பார்ப்பனப் பிற்போக்கோடு சேர்ந்து தேசிய இயக்கத்துக்குத் தீங்கு செய்தன. தமிழகத்திலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் பார்ப்பனர்களின் அடுத்த அடுக்கிலிருந்தனர். அதனால் அவர்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயற்படுவது இயல்பே. அதனால்தான் அவர்களது துணையுடன் பார்ப்பன எதிர்ப்பை எளிதாக பெரியாரால் செய்ய முடிந்தது. அவர்களுக்குக் கீழடுக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் அரசியல் அரங்கினுள் செல்வாக்குப் பெறும் நிலையில் அவர்களும் எதிரணியில் சேர்வது இயல்பே. ஆனால் அவர்களிடையிலுள்ள புரட்சிகரத் தனிமங்கள் புதிதாக நுழைந்துள்ள கீழடுக்கினருடன் இணைந்து நின்று தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதுடன் எதிரணியில் இணைந்து விட்ட தம் வகுப்பினரின் எதிர்ப்பைச் சமன் செய்ய முடியும். இந்த வாய்ப்பை குணாவின் அணுகலால் நாம் இழந்து அவர்கள் அந்த பிற்போக்கினருடன் கூட்டுச் சேர்ந்துவிடும் பேரிடர் உள்ளது.

நானறிந்த வரை குணா ஒரு நேர்மையாளர், அதாவது தான் உறுதியாக நம்புவதையே பேசுபவர், எழுதுபவர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இயல்புடையவரல்லர் என்பது என் கருத்து. தன்னுடைய பதற்றமான அணுகலைக் கைவிட்டுத் தன் சிந்தனையாற்றலுக்கு முழு வாய்ப்புக் கொடுப்பாராயின் கர்நாடகத் தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் அவரது பணி ஒரு மாபெரும் கொடையாக அமையும்.

குணாவுடன் பழகியதிலிருந்து நான் தெரிந்து கொண்டது அவர் சில வகைகளில் நிலக்கிழழைக் கண்ணோட்டமுடையவர் என்பது. தமிழ்ப் பண்பாடென்ற பெயரில் தமிழகத்தில் நிலவும் நிலக்கிழமைப் பண்பாடாகிய வெள்ளாளப் பண்பாட்டைக் குறைசொல்வதை அவர் விரும்புவதில்லை. ″ஒழுக்கம்″ என்ற பெயரில் அவர் பெண்ணுரிமைக் கோட்பாடுகளைப் புறக்கணிப்பவர். இது போன்ற நிலைப்பாடு அவரது அண்மைக்கால ஆய்வுகளிலும், குறிப்பாக வள்ளுவத்தின் வீழ்ச்சியிலும் காணக்கிடக்கிறது. தமிழகத்தின் அறிவியல் குறிப்பாக வானியல் வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட சாதியினரே காரணம் என்பது அத்தகைய கண்ணோட்டத்திலிருந்தே வந்துள்ளது. எந்தவோர் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்ட மக்கட் குழுவினரிடமிருந்து தான் தோன்றின என்பது சரியான அணுகலாகாது. ஒரு குழுவினர் அந்த அறிவியல் – தொழில்நுட்பங்களை ஒரு கட்டத்தில் கையாண்டனர் என்பது சரியாயிருக்கலாம். அது தொழிலடிப்படையிலமைந்த சாதியத்தின் இயல்பு. அத்தகைய சாதிகளாக மக்கள் உறைந்து போவது நீடித்த அறிவியல் - தொழில்நுட்பம், விளைப்புப்பாங்கு ஆகியவற்றில் தேக்கத்தின் விளைவு. அத்துடன் நம் நாட்டில் சாதியமைப்பு வெறும் தொழிலடிப்படையில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அதில் அரசியல் ஆதிக்கத்தின் பங்குதான் மிகுதி. அது மட்டுமல்ல, சாதிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. சாதிப் பெயர்கள் தொடர மக்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறார்கள். மக்கள் தொடர சாதிப் பெயர்கள் மாறியிருக்கின்றன. முன்பிருந்த சாதிப் பெயர்கள் மறைந்துள்ளன, புதியவை தோன்றியுள்ளன. இந்த உண்மைகள் குணா அறிந்தவை தாம். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட சாதிதான் தமிழக வானியலை உருவாக்கியது என்ற குணாவின் கூற்று சிவனிய வேளாளர்கள் தாம் உண்மையான தமிழர்கள் எனும் மறைமலையடிகளின் நிலைப்பாட்டை ஒத்துள்ளது. கர்னாடகத்தில் வெங்காலூருக்கும் தங்கவயலுக்கும் வெளியிலுள்ள தமிழர்களைப் புறக்கணிக்கும் குணாவின் போக்கும் அவரது நிலக்கிழமைக் கண்ணோட்டத்தின் விளைவுதான். திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் சக்கிலியர்களை மொழியின் அடிப்படையில் எதிரிகளாகத் காட்டியுள்ளது குணாவின் முதல் வீழ்ச்சி என்றால் வள்ளுவத்தின் வீழ்ச்சி இன்னொரு வீழ்ச்சி என்று கூறலாம்.

தமிழர்களின் பண்பாட்டுப் பிழைகளை, அதாவது சாதிகள், பெண்ணடிமைத்தனம், மக்களை இழிவுபடுத்தி அவர்களை உறிஞ்சிச் சாகடிக்கும் சமய அமைப்பு ஆகியவற்றைத் திறனாய்ந்து அவற்றைத் தூக்கியெறிந்து நமக்கு வலுவூட்டிக்கொள்ள வேண்டும் என்ற என் கருத்துகள் தமிழக மக்களின் ஒற்றுமைக்கு வேட்டுவைத்துவிடும், உள்ள உறுதியைக் குலைத்துவிடும், தன்னம்பிக்கையை அழித்துவிடும், எதிரிகள் முன் நம்மைத் தலைகுனிய வைத்துவிடும், அவர்கள் நம்மை இழிவாகவும் எளிதாகவும் கருத இடம் கொடுத்துவிடும் என்று குணாவும் அவரது ஆதரவாளர்களும் வாதிடுகின்றனர். நம்மிடமுள்ள இத்தீங்குகளுக்குக் காரணம் என்று பார்ப்பனர்களை, அதாவது ″ஆரியர்களை″ வைத்திருந்த இடத்தில் இப்போது திராவிடர்களைக் கொண்டு நிறுத்துகிறார்கள் அவர்கள். ஆனால் இந்தப் பண்பாட்டுக் கூறுகள் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே தமிழர்களிடையில் ஊறிப் போனவை என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. இவ்வாறு நம்மோடு, நம் குருதியோடு, பண்பாட்டோடு மண்ணோடு மண்ணாக நெடுங்காலம் நிலைத்து நின்று இறுகிப்போன இத்தீமைகளை அகற்றிவிடப் பெரும் முயற்சியும் கடும் உழைப்பும் நின்று நிலைத்துப் போராடும் உறுதியும் தேவைப்படுகிறது. அதற்கு மாறாக இலக்கையே திசை திருப்பி நமக்குள் மறைந்திருக்கும் எதிரியை, நம் நிழலைக் கற்பனை எதிரியாக்கி நம் முன் நிறுத்தி அதற்குப் புதுப்புதுப் பெயர்களிட்டுச் சண்டையிடுவதைப் போன்ற கேடு வேறு என்ன இருக்க முடியும்? இவ்வாறு குறிதவறிப் போராடிப் போராடி நாம் நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து போகிறோம். நம் மீது புதிய புதிய எதிரிகள் ஆதிக்கம் செலுத்த வருகிறார்கள்.

குணாவின் படைப்புகளில் ஓர் அடிப்படைக் குறைபாடு இருப்பதைப் பலரும் உணர்ந்துள்ளனர். அதாவது மிகச் செறிவாக அவர் கொடுக்கும் சான்றுகளை நிரல்படுத்தித் தன் கருத்தை அவர் தெளிவுபடுத்துவதில்லை என்பதாகும் அது. மேற்கோள்களின் அல்லது சான்றுகளின் தொகுப்பாக ஒவ்வொரு மேற்கோளின் நோக்கம் என்ன என்பதைக்கூட இனம்காண முடியாமல் ஆசிரியர் சொல்ல வருவது மேற்கோள்களினுள் அமுங்கிப்போய்விடுவதுதான் இந்தக் குறைபாடு. தமிழர் மெய்யியிலில் தொடங்கிய இந்தப் போக்கு வள்ளுவத்தின் வீழ்ச்சியில் பெருவளர்ச்சி பெற்றுள்ளது. மலைக்க வைக்கும் அளவுக்கு மேற்கோள்களையும் சான்றுகளையும் திரட்டும் அவர் அவற்றை நிரல்படுத்தி தான் சொல்லவரும் கருத்தைத் திட்டவட்டமாக வெளியிட்டால் அவரது உழைப்பின் பயன் தமிழக மக்களுக்கு முழுமையாகக் கிடைத்திருக்கும்.

ஆரியர் என்று ஓர் இனம் இருந்ததில்லை என்ற என் கருத்தைச் சில காலம் எற்றுக்கொண்டவர் குணா. பின்னர் ஒரு கால கட்டத்தில் அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படையாக மாறவில்லையாயினும் நழுவுகிறார். திராவிடர்தாம், (அதாவது ஆந்திரரும் கன்னடரும்) ஆரியர்கள் என்று ஆரியர் யார் என்ற கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார். வள்ளுவத்தின் வீழ்ச்சியில் பேரா. நெடுஞ்செழியன் அவர்களின், இருக்குவேதம் தமிழர்களின் பஞ்சாங்கம் போல் இருக்கிறது என்ற கூற்றைச் சுட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். அந்நூலில் அவர் செலவிட்டுள்ள உழைப்பை முறைப்படி நெறிப்படுத்தியிருந்தால் தமிழர்களின் பண்டை வானியல் செய்திகளை நிரல்படுத்திக் கூறும் ஒரு கையேடாக அது மலர்ந்திருக்கும். வேதங்கள், தொன்மங்கள் மற்றும் சமற்கிருத நூற்களில் பதுங்கிக் கிடக்கும் தமிழர்களின் வரலாற்றையும் அறிவியல் - தொழில்நுட்பங்களையும் தேடிப்பிடித்து மீட்க வேண்டும் என்ற ஊக்கம் படிப்போருக்கு ஏற்பட்டிருக்கும்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] காவிரி நீர்வரத்து குறைந்ததால் வேலையிழந்த கர்நாடக எல்லை சார்ந்த தமிழக மாவட்டங்களிலுள்ள தமிழக மக்கள் இப்போது வெங்காலூரில் குவிந்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது. கன்னட வெறியர்களின் செயல்களின் விளைவு அதற்கு எதிர்விளைவுகளுக்கு அடிப்படையை உருவாக்கிவிட்ட இயங்கியல் செயற்பாட்டைப் பார்க்கிறோம் இங்கு. வெங்காலூர்த் தமிழர் தலைவர்கள் இதை எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

1 மறுமொழிகள்:

சொன்னது…

நண்பர் குணா அவர்கள் 28-08-2008 அன்று நண்பகலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நான் "தமிழ்த் தேசியம்" பிற்சேர்க்கையாக "மனந்திறந்து" என்ற தலைப்பில் எழுதியிருந்த சில நிகழ்ச்சிகள் குறித்துத் தன் மன ஆற்றாமைமை வெளியிட்டார். "பஃறுளி முதல் வையை வரை" நூலை அச்சிடும் பொறுப்பை ஏற்றிருந்த திரு. அரணமுறுவல்தான் ஒருமுறை கேட்டார், குணாவும் தோழர்களும் சேர்ந்து செயற்படுத்தும் ஆய்வரணுக்கு அயல்நாட்டுப் பணம் வருகிறது தெரியுமா உங்களுக்கு என்று. இதுபற்றி குணா அவர்களிடம் ஒருமுறை குறிப்பிட்டபோது அவர் கூறியது ″அதனாலென்ன?″ என்பதாகும். அவர் எந்த மனநிலையில் அப்போது அதைக் கூறினார் என்று தெரியவில்லை. அதனால்தான் ″மனந்திறந்து...15″ பகுதியில் அத்தகைய ஒரு குறிப்பை நான் எழுதினேன். இதில் என் மனமறிந்து எந்தப் பிழையும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. நண்பர் குணா தொலைபேசியில் கூறியவற்றைக் கேட்டபின் நான் மிகுந்த வருத்தமடைகிறேன்.

இந்திய ஏம வங்கி வெங்காளூர்க் கிளையில் பணியாற்றிய அவர் தன் அலுவலகத்திலிருந்து உரூ.16,000/- (பதினாறாயிரம்) கடன் வாங்கித்தான் பஃறுளி முதல் வையை வரை நூலை வெளியிட்டதாக அவர் இந்த தொலைபேசி உரையாடலில் கூறினார். அதுபோல விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற என் குறுநூலையும் கடன்பட்டே வெளியிட்டார் என்பதைத் தன் ″அரணுரை″யில் ″கடன் உடன்பட்டு″ என்று குறிப்பிட்டுள்ளார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். முதலில் அவர் கூறிய ″அதனால் என்ன?″ என்ற சொற்கள் நாங்கள் அப்போது ஈடுபட்டிருந்த உரையாடல் தொடர்பில் அங்கிருந்த மனநிலையின் வெளிப்பாடாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேர்ந்துவிட்ட இந்தத் தவறுக்காக நான் மிக வருந்துகிறேன். இதன் வழியாக அவரிடமும் என் பதிவை ஏற்கனவே படித்தவர்களிடமும் என் வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.