6.1.08

தமிழ்த் தேசியம் ... 23

மனந்திறந்து... 13

தமிழ்த் தேசியம் என்று அறியப்படும் களத்தில் ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்களிடம் என் பட்டறிவையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகச் சமூக வரலாறு - வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற என் நூலைப் படித்து என்னை முதலில் தொடர்பு கொண்டவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சியார்சு விருமாண்டி என்பவர். வினாப்படிவத்தின் அடிப்படையில் செய்திகள் திரட்ட இருப்பதாகவும் அது பற்றி விளக்க வேண்டுமென்றும் கேட்டார். அவர் குடியிருந்த வையை அணைப்பகுதிக்கு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன். அங்கு அவரிடம் பணிபுரியும் ஊக்குவிப்பாளர்கள் என்போருக்கும் விளக்குமாறு கேட்டுக்கொண்டார். அடுத்த முறை அவர்கள் சில செய்திகளைத் திரட்டி வந்திருந்தனர். அவர் ஏற்கனவே திரட்டி வைத்த செய்திகளிலிருந்து எனக்குத் தெரியவந்தது, அந்த வட்டாரத்திலுள்ள ஊர்களின் சாதி - சமய அமைப்பு, பொருளியல் அமைப்பு, தொழில்கள், இயற்கை வளங்கள், மக்கள் தொகை, கால்நடைச் செல்வம் என்று அனைத்துச் செய்திகளையும் திரட்டி ″உதவி″ வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விடுக்கின்றனர். எந்த வகை உதவி, எவ்வளவு உதவி தேவை என்பதை முடிவு செய்ய இந்தச் செய்திகள் தேவைப்படுவதாக அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தொலைதூர நாட்டில் இருந்துகொண்டே தமிழகத்தில் அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் ஒரு சாதி அல்லது சமய மோதலைத் தூண்டி விடலாம், எந்தத் தொழிலை முடக்கலாம், எந்த மூலப் பொருளைக் கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட முடியும். இது போன்ற செய்திகள் இறுதியில் பெரும்பாலும் அமெரிக்க அயலுறவுத் துறையைச் சென்றடைகின்றன. அவற்றை வைத்து நம் நாட்டுக்கு அல்லது மாநிலத்துகுரிய ″வளர்ச்சி உத்தியை″ அவர்கள் வகுக்கிறார்கள். இந்த உண்மையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த இலத்தீன் அமெரிக்காவில் குமுக மாற்றங்கள் என்ற ஆங்கில நூலைப் படித்ததிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. திறன்மிக்க மாந்தநூல், குமுகவியல் வல்லுநர்களைக் கொண்டு ஏழை நாடுகளான தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டு அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அந்நூல் அமைந்திருந்தது. அந்நாடுகளின் ″வளர்ச்சிக்கு″ அமெரிக்கா அதுவரை செய்திருந்த ″உதவிகள்″, அவற்றால் அந்த நாடுகளில் ஏற்பட்டிருந்த குமுக மாற்றங்கள், அந்த மாற்றங்கள் அமெரிக்க நலன்களுக்கு உகந்தனவா, அல்லவா? உகந்தனவாயின் இன்று மாறியுள்ள புதிய சூழ்நிலையில் அந்த ″உதவி″ உத்தியில் தேவைப்படும் மாற்றங்கள் யாவை? அல்லவாயின் எந்தப் புதிய உத்தியை வகுக்க வேண்டும் என்பன போன்ற கருத்துரைகளைக் கூறுவது தான் அந்த நூலின் நோக்கம். ஒரு நாட்டில் நடுத்தர வகுப்பை விரிவுபடுத்தி வலுப்படுத்திவிட்டால் அங்கு ″புரட்சிகள்″, அதாவது தங்களால் கணித்தறிய முடியாத அல்லது தங்கள் நலனுக்கு எதிரான திடீர்த் தலைகீழ் மாற்றங்கள் நிகழாது என்ற அடிப்படையிலும் அந்த ஆய்வின் அணுகல் அமைந்திருந்தது. தன் அருகிலிருப்பதால் தன் விருப்பம் போல் ஆட்சிகளை எளிதில் மாற்றிக்கொள்ள வசதியாயிருக்கும் இந்தத் தென்னமெரிக்க நாடுகளிலும் தன் கட்டுப்பாட்டிலிருக்கும் பிலிப்பைன்சு போன்ற நாடுகளிலும் கையாண்டு கள ஆய்வு செய்து பார்த்த பின்னர் தான் அமெரிக்கா ஏழை நாடுகளுக்கான உலகளாவிய ″உதவி உத்திகளை″ வகுக்கிறது என்பது நான் பொதுவாக அறிந்துகொண்ட உண்மை.

இதுபோன்ற தேவைக்குத் தான் ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்கள் பயன்படுகின்றன என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் வையை அணைப் பகுதியில் இறுதியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி மிகப் பெரும் திருவிழாப் போல நடந்தது. பல்லாயிரம் எண்ணிக்கையில் ஊர்ப்புறத்துப் பெண்களைத் திரட்டி ஒரு நிகழ்ச்சியை அவர் நடத்திக் காட்டினார். வெளிநாட்டுப் பணம் நம் நாட்டில் என்னவெல்லாம் செய்ய முடியும்? நம் மக்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அயலார்கள் நினைத்தபடி அவர்களை ஆட்டிவைக்க முடியும் என்ற இந்தப் பட்டறிவு என்னை மலைக்க வைத்துத் திகைக்க வைத்துத் திடுக்கிட வைத்தது. அத்துடன் அவருக்கும் எனக்குமிருந்த தொடர்பு விட்டுப்போனது. தொடர்ந்து அவர் செயல்பட்டாரா என்பது தெரியவில்லை. அண்மையில் கந்துவட்டியை எதிர்த்து ஓர் இயக்கம் நடத்துவது குறித்த அறிக்கை ஒன்று அவரிடமிருந்து வந்துள்ளது.[1]

இந்தப் பட்டறிவின் போது தான் வினாப்பட்டியலின் அடிப்படையில் திரட்டப்பட்ட செய்திகள் எனக்குக் கிடைத்தன. செய்தி திரட்டியவர்கள் பல செய்திகள் தமக்கே தெரியும் என்ற எண்ணத்தில் தாங்களாகவே நிரப்பிக் கொண்டுவந்தனர். அவர்களைச் சில குறுக்குக் கேள்விகள் கேட்ட போது தான் தாங்கள் பொதுவாக நம்புவதற்கு மாறான செய்திகள் இருப்பது அவர்களுக்கே உறைத்தது. வினாப்பட்டியலின் அடிப்படையில் செய்தி திரட்டுவோருக்கு விரிவான பயிற்சியும் வகுப்புகளும் இன்றியமையாதவை என்பது புரிந்தது. அத்துடன் இந்தப் பணி எவ்வளவு மாபெரும் பரிமாணம் கொண்டது என்று ஏற்கனவே நான் அறிந்திருந்த கருத்து உறுதியானது. ஒரு மாபெரும் மக்களியக்கப் பின்னணியில் தங்கள் வாழ்நாளை இந்த ஆய்வுக்கென்றே காணிக்கையாக்கிவிட்ட ஒரு தொண்டர்படையால் தான் இந்த மலைப்பூட்டும் பணியை நிறைவேற்ற முடியும்.

″தொண்டு″ நிறுவனங்களுடனான என்னுடைய குறிப்பிடத்தக்க இன்னொரு பட்டறிவு மதுரையிலுள்ள இறையியல் கல்லூரியில் ஏற்பட்டது. மதுரை இறையியல் கல்லூரி தென்னிந்தியத் திருச்சபை எனும் சீர்த்திருத்தக் கிறித்துவப் பிரிவின் சமய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனமாகும். ஒரு சமயத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்களின் ஒருங்கிணைப்பகமாக அது செயற்பட்டது. இப்போது அந்த ஒருக்கிணைப்புப் பணியில் மிகப் பெரும் பகுதியை அரசே எடுத்துக்கொண்டுவிட்டது. அந்த இறையியல் கல்லூரியில் பணியாற்றுவோரில் ஒருவர் தியாபிலசு அப்பாவு. அவர் பரட்டைச் சாமியார் என்றோரு பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். அந்நேரத்தில் வெளிவந்திருந்த பதினாறு வயதினிலே என்ற திரைப்படத்தில் ரசனிகாந்த் ஏற்றிருந்த போக்கிரிக் கதைமாந்தனின் பெயர் பரட்டை. கலை - இலக்கியங்கள் மூலம் மக்களுக்கு ″விழிப்பூட்டுவது″ என்ற பெயரில் இந்தக் கவர்ச்சிப் பெயரை அவர் சூடிக் கொண்டார். அவர் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார். கழக(சங்க) இலக்கியங்கள், தொல்காப்பியம் ஆகியவற்றின் காலத்தை நிறுவுவதற்கான கருத்தரங்காக அது அறிவிக்கப்பட்டது. ஏதோ சில கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் உள்ள சில சொல்லாட்சிகளை வைத்துக் கழக இலக்கியங்களும் தொல்காப்பியமும் கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியவை என்று முடிவு செய்யலாமா என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. கருத்தரங்கின் நோக்கம் பற்றி நான் கேள்வி கேட்டுச் சண்டையிட்டேன். ஆனால் அங்கு வந்திருந்த பிற அறிஞர் பெருமக்கள் எந்தப் பதட்டமும் பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தனர். தமிழ், தமிழ்த் தேசியம் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்கள் என்று அறியப்பட்டோரும் மார்க்சியச் சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்டோரும் அங்கு இருந்தனர். அவர்களில் க.ப. அறவாணனார் தான் திரும்பிச் செல்வதற்கான முதல் வகுப்புத் தொடர்வண்டிப் பயணச் சீட்டுக்காக அதிகாரத்துடன் ஆணையிட்டது கண்டு நான் வியந்து வாயடைத்துப்போனேன். இத்தகைய ″தன்னார்வ″ அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்கள் தரும் பணத்திற்குப் பற்றுச்சீட்டுகளில் ஒட்டிக் கையொப்பமிடுவதற்கென்று கையில் வருவாய் முத்திரை வில்லைகளுடன் அலையும் ஓர் அறிஞர் திருக்கூட்டத்தை அங்கு கண்டு நான் அதிர்ந்தேன். இவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டவர் போல் கருத்தரங்கு மேடைகளில் மோதிக்கொள்வர். ஆனால் அது நாடக மேடையில் நடிகர்கள் போடும் சண்டையைப் போன்றது தான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இறையியல் கல்லூரி வளாகத்தில் பணிபுரியும் சில இளைஞர்களோடு நான் பேசிப்பார்த்ததில் ஓர் உண்மையைத் தெரிந்து கொண்டேன். தமிழகத்திலுள்ள தலைசிறந்த, அறிவுத்திறனும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து எந்தச் சூழ்நிலையையும் கேள்வியையும் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியளித்து வைத்துள்ளனர். நம் நாட்டு வளர்ச்சிநிலைக்குப் பொருந்தாத கல்வி முறையும் உயர்கல்வி அமைப்பும் அதற்கு ஈடுகொடுக்கத்தக்க வேலைவாய்ப்பின்மையும் இந்த ஆற்றல் மிக்க இளைஞர்களை அயல் விசைகளுக்குப் பணியாற்றுவதற்கு உள்நாட்டிலும் துரத்துகின்றன, வெளிநாடுகளுக்கும் துரத்துகின்றன.

இந்த இளைஞர்களுக்கு ″மார்க்சியம்″ அதாவது பாட்டாளியக் கோட்பாடு கற்பிக்கப்படுகிறது. அதனை அவர்கள் மக்களிடையில் பரப்புகிறார்கள். திருமண்டலங்களின்(டயோசிசன்களின்) மூலமாகவும் இந்தக் கருத்தைப் பரப்புகிறார்கள். உள்நாட்டில் மூலதனம், பணம் வைத்திருப்போர், அவர்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் கருத்தை உருவாக்குவது தான் இதன் நோக்கம். வெளியிலிருந்து கொட்டும் மூலதனத்தையும் தொழில்களையும் தடுத்து நிறுத்த இம்மக்களால் எதுவும் செய்ய முடியாது என்பது இதன் மறுபக்கம். கலை இலக்கியத்தால் குமுக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற பொய்ம்மையைப் பரப்பிக் கலைஞர்களை உருவாக்கிக் கலை நிகழ்ச்சிகளையும் இவர்கள் நடத்துகிறார்கள். மார்க்சியம் என்ற பெயரில் பாட்டாளியக் கோட்பாட்டையும் மாவோயியத்தின் பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் வெறும் கலை இலக்கிய முயற்சிகளையும் புரட்சிகரமானவை என நம்பும், வெளியிலுள்ள, முற்போக்கு, குமுக மாற்றம் ஆகியவற்றில் நாட்டமுள்ள இளைஞர்களையும் இவர்களால் எளிதில் வயப்படுத்திவிட முடிகிறது.

இவையன்றி, திடீரென்று புதுப்புதுப் பெயர்களில் தற்காலிகக் கூடாரங்கள் போன்ற அமைப்புகள் தோன்றி மறையும். தமிழகம், தமிழ்த் தேசியம் தொடர்பான ஒரு தலைப்பு பற்றிக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் நடத்திவிட்டுக் கலைந்து போகும். அவர்கள் வலியுறுத்திக் கேட்பது பேச்சாளர்கள் தங்கள் உரையைக் கட்டுரையாகச் ″செழுமைப்படுத்தி″க் கொடுக்க வேண்டுமென்பது. அவற்றை அச்சிட்டு வெளியிடுவதாகக் கூறுவார்கள். கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிடுவதாகக் கூறுவோரும் உண்டு. கட்டுரை எழுதாதவருடைய உரை ஒலிப்பேழையில் பதிவு செய்யப்படும். நிகழ்ச்சி நடத்துவோர் தாம் பெறும் பணத்துக்கு ஈடாக இக்கட்டுரைகளையும் ஒலிப் பேழைகளையும் கொடுப்பர். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பண உதவி செய்து அவற்றைப் பெறுவோரின் நோக்கம் நம் நாட்டில் ஒவ்வொரு துறை குறித்தும் அவ்வப்போது நிலவும் சிந்தனை ஒட்டங்களை அறிந்து அவற்றுக்கேற்பத் தங்கள் உத்திகளை மாற்றியமைத்துக் கொள்வது தான். நானறிந்த வரையில் இத்தகைய கருத்தரங்குக் கட்டுரைத் தொகுப்புகள் பொது விற்பனைக்கு வந்ததில்லை.[2]

இவை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தாலும் நான் கலந்து கொள்வதில்லை. ஒரு முறை மதுரையில் தமிழ்த் தேசியம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பெயர் கொடுத்துவிட்டு இறுதியில் செல்லாமலே இருந்து விட்டேன். என் இசைவைப் பெற்றுச் சென்ற பேரா.தொ.பரமசிவம் அவர்களுக்கு மிக வருத்தம்.

இறுதியாக நான் கலந்து கொண்ட இத்தகைய கருத்தரங்கு தமிழகப் பொருளியல் தற்சார்பை நோக்கி .... பெயரில் முகிழ் என்று அழைக்கப்பட்ட தற்காலிக அமைப்பு மதுரையில் நடத்தியதாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அழைப்புக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றும் அவர்கள் பொய்முகத்தை அவர்கள் கண்ணெதிரிலேயே உரித்துக்காட்ட வேண்டும் எனவும் எண்ணியே கலந்துகொண்டேன். கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை பற்றிப் பேசிய கோ. நம்மாழ்வார் அசோசுப் பைரில்லமும் உயிரித் தொழில்நுட்பங்களும் மண்புழுத் தொழில்நுட்பமும்[3] நம் மரபுத் தொழில்நுட்பங்கள் என்றார். அவை நமக்குரியனவையல்ல; அண்மையில் பிறர் புகுத்தியவை என்று சுட்டிக் காட்டி நாமே புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டுமேயோழிய அயலார் தொழில்நுட்பங்களை நம் மரபுத் தொழில்நுட்பங்கள் என்று பொய் கூறி அவற்றுக்கு நாம் உரிமக் கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கக் கூடாது என்றும் நம்மிடம் அனைத்துமே உள்ளன என்ற தவறான கருத்தை இளைஞர்கள் மனதில் விதைத்து அவர்களைச் செயலறச் செய்வது தவறு என்றும் இடித்துரைத்தேன். அவர் எந்த மறுமொழியும் மறுப்புரையும் கூறவில்லை. சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிப் பேசியவர்களிடம் அதற்குத் தீர்வு கூறுங்கள் என்று கேட்ட போது நிகழ்ச்சியின் முடிவில் கூறப்படும் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் கூறவில்லை. பார்வையாளர் ஒருவர் கலந்துரையாடலின் போது தான் கருவிகளையே வெறுப்பதாகக் கூறினார். உங்கள் உணர்வுகள் நேர்மையாயிருந்தால் திரும்பிச் செல்லும் போது நடந்து தான் செல்ல வேண்டியிருக்கும், ஏனென்றால் கட்டை வண்டி கூட ஒரு கருவிதான் என்றேன். இவ்வாறு தமிழகப் பொருளியல் தற்சார்பு என்ற பெயரில் அதற்கு எதிரான கருத்துகளையே பெரும்பாலோர் முன்வைத்தனர். அவற்றை அவ்வப்போதே மறுத்தேன்.

எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட தலைப்பு தமிழகப் பொருளியலில் தரகு வாணிகர்களின் பங்கு என்பதாகும். அது தமிழகத்தில் தேசிய முதலாளியம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும் தலைப்பு என்பதால் உலக வாணிகமும் உள்நாட்டுத் தரகர்களும் என்று தலைப்பை மாற்றுமாறு எழுதினேன். ஆனால் நிகழ்ச்சி நிரலில் இந்த மாற்றம் இடம் பெறவில்லை. ஒவ்வோரு பேச்சாளரும் பேசி முடித்த பின் என் எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு என் உரைமுறை வந்தபோது உலக வாணிக வரலாற்றையும் அது உலக நாடுகளிலுள்ள அடித்தள மக்களைச் சுரண்டி உலகளாவிய ஒரு மேட்டுக்குடியினருக்கு பணிபுரிந்து வந்துள்ளதையும் விளக்கிவிட்டு அதை முறியடிப்பதற்குத் தேசிய முதலாளியப் புரட்சி தான் தீர்வு என்று கூறினேன். பாட்டாளியக் கோட்பாட்டாளரும் பல்வேறு சிக்கல்களை எடுத்துவைத்துச் செயற்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தாம் அயல்விசைகளின் நலனுக்குப் பாடுபடும் உள்நாட்டுத் தரகர்கள் என்று கூறினேன். அதையே விரிவாக்கி நீண்ட கட்டுரை எழுதி விடுத்தேன். இதில் பல்வேறு ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்களின் செயற்பாடுகளை விரிவாகக் காட்டியிருந்தேன். அந்தக் கட்டுரைத் தொகுப்பு இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. என் கட்டுரையையும், ″இன்று தமிழகத்தில் நிலவும் சிந்தனையோட்டங்களில் ஒன்று″ என்று இத்தகைய கருத்தரங்குகளின் பின்னணியிலுள்ளோர் பயன்படுத்தும் வாய்ப்புள்ளதையும் மறுப்பதற்கில்லை.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] இதன் பின்னர் அவர் அழைப்பின் பேரில் நானும் தோழர் வெள்ளுவனும் ஒருமுறை அவரை வையை அணையில் சந்தித்து உரையாடினோம். அவர் சாதியரான பிரான்மலை (பிறமலை)க் கள்ளர்களிடம் கந்து வட்டி மூலம் திரண்டுள்ளதாக அவர் குறிப்பிட்ட கோடிகோடியான பணத்திரட்சியை அவர்கள் முதலீட்டுக்காகத் திருப்பமாட்டார்கள் என்று அவர் விடப்பிடியாகக் கூறிவிட்டார். அதே நேரத்தில் கந்துவட்டிக்கு எதிராக அவர் நடத்தும் இயக்கத்தின் மூலம் வட்டி கொடுத்த தன் சாதியினருக்கும் கடன் பெற்றோருக்கும் ″கட்டப் பஞ்சாயம்″ நடத்தி அவர் காலங்கழிப்பதாக எனக்குப் புரிந்தது. அவரது ″கந்து வட்டி எதிர்ப்பியக்கத்″தின் பின்னணியில் ஒரு மார்வாரி இருப்பதாகவும் எனக்குப்பட்டது. ஒரு சுவரொட்டியிலிருந்த ஒருவரின் பெயர் பற்றிக் கேட்டபோது நேரடியாக விடை சொல்லாமல் அவர் மழுப்பினார். இந்திரா காந்தியின் கடன் தள்ளுபடிச் சட்டத்தினால் முறையான வட்டித்தொழிலிலிருந்து நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அகன்ற இடத்தில் அவர்களது அடியாட்களாக அதுவரை செயற்பட்ட முக்குலத்தோர் சட்டத்துக்குப் புறம்பான கந்துவட்டித் தொழிலில் நுழைந்தனர். இப்போது அவர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தையும் கைப்பற்ற சியார்சு வருமாண்டியைக் கருவியாக்குகிறார்களோ மார்வாரிகள் என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. இன்னொரு புறம் தங்கள் சாதியினரான பிறமலைக் கள்ளர்கள் தொடர்ந்து அயல் படையெடுப்புகளை எதிர்த்து வந்தவர் என்றும் வறுமையில் வாடும் அவர்களுக்கு கஞ்சா வளர்க்க உரிமை கேட்டு அவர்களைத் திரட்டிப் போராடப் போவதாகவும் கூடக் கூறினார்.

[2] பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனார் திரு.பொழிலன் அண்மையில் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கும் தமிழக அரசியல் ஆய்வு நடுவம் என்ற அமைப்பின் செயல்பாடு பற்றிய அவரது விளக்கம் இத்தகையதே. காலமுறையில் கருத்தரங்குகள் நடத்தி கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுவர். ஆனால் பல்வேறு கருத்துகளிலிருந்து தமிழக மேம்பாட்டுக்கான தங்கள் கருத்தை எடுத்துவைக்கவோ அலசவோ செய்யப்போவதில்லை. படிப்போரின் முடிவுக்கே அதை விட்டுவிடுவர். தொகுப்பை வெளியிடுவது தான் பிறரிடமிருந்து இங்கு வேறுபாடு.

[3] எல்லா நாட்டு மண்ணிலும் இருப்பது போல் நம் நாட்டு மண்ணிலும் மண்புழு(குமரி மாவட்டத்தில் முன்பு நிலப்புழு என்றும் கூறுவர்) உண்டு. ஆனால் அதை நாம் நிலவளத்தை உருவாக்கும் ஒரு ஊக்கியாகக் கருதிச் செயற்பட்டதில்லை. காசு வாங்கிக்கொண்டு வாத்துகளை மேயவிட்டு அழித்தது தான் நாம் செய்தது.

0 மறுமொழிகள்: