பிற்சேர்க்கை - 1
திராவிட இயக்கம் ஒரு தமிழ்த் தேசிய இயக்கம் என்பது ஒரு மாயை. ஒரு காலகட்டத்தில் அது தமிழகத்தின் அரசியல் - பொருளியல் மீட்சிக்காகக் குரல் கொடுத்தது உண்மை தான். ஆனால் அதன் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை காய்தல் உவத்தலன்றி ஒரு மீள்பார்வையிட்டால் (மிகை நாடி மிக்க கொண்டால்) கிடைக்கும் விடை:
1. பெரியார் தமிழர்களின் உரிமை என்று சொன்னது பார்ப்பனர்களுக்கு எதிரானதேயொழிய நில எல்லைக்கு வெளியே இருந்து நம் மீது மேலாண்மையும் சுரண்டலும் நிகழ்த்துகிறவர்களுக்கு எதிரானதல்ல. எப்போதாவது தமிழக விடுதலை (இதைக் கூட பிரிவினை என்ற தவறான சொல்லால் தான் அவர்கள் குறிப்பிட்டனர், குறிப்பிடுகின்றனர். சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்களுக்கு அதில் உண்மையான ஈடுபாடு இல்லை) பற்றிப் பேசினால் அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான மிரட்டலாகத்தான் இருக்கும். நிலம், அதன் அடிப்படையிலான பொருளியல் அடிப்படையில்லாமல் இனம் என்ற அடிப்படையிலேயே திராவிடர்கழகம் இயங்கியதால் அதனை ஒரு தேசிய இயக்கம் என்பது தவறு. தமிழினம் என்ற திராவிட இயக்கத்தின் சொல்லாட்சியே இது நிலம் தழுவிய ஒரு தேசிய இயக்கம் அல்ல என்பதற்குச் சான்று கூறும்.
கிறித்துவர்கள் வீட்டிற்குச் சென்றால் ″ஏசு கிறித்து இந்த வீட்டின் தலைவர்″ என்பது போன்ற எழுத்துக்களை வாயிலில் பதித்திருப்பார்கள். முகம்மதியர்களின் வாயில்களில் அரபு எழுத்துக்கள் இருக்கும். சில இந்துக்களின் வாயிலில் ″ஓம்″ இருக்கும். அதுபோல் திராவிடர் கழகத்தவர் வீடுகளின் முகப்பில் ஒரு காலத்தில் ″திராவிட நாடு திராவிடருக்கே″ என்றும் பின்னர் ″தமிழ்நாடு தமிழருக்கே″ என்றும் சொற்களைப் பார்க்க முடிந்தது. இதுவும் நம்மை ஏமாற வைத்தது. இந்தச் சொற்றொடர்களின் உண்மையான பொருள் திராவிடர் அல்லது தமிழர் என்ற சொல் நில அடிப்படையில் அமைந்ததல்ல, இன அடிப்படையில் அமைந்தது என்பதாகும். ஆரியர் எனும் ஆரிய நாட்டை(ஆரிய வர்த்தத்தை)ச் சேர்ந்த அயலவர்களுக்கு எதிரான திராவிடர் அல்லது தமிழர்களைக் குறிக்கவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவரும், தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட, ஆனால் ஐரோப்பியரின் வரலாற்று வரைவுக் குளறுபடிகளினால் உலக வரலாற்றில் காலத்தின் கோலமாக இடம்பெற்றுவிட்ட ஆரிய இனத்தவரென்று தவறாகக் கருதப்படும் தமிழகப் பார்ப்பனர்க்கு எதிரானதாக அச்சொற்றொடர் அமைந்தது.
ஒரு தேசிய இயக்கத்தின் முகாமையான இயல்பு நிலம் சார்ந்து நின்று அந்த நிலத்தின் மேம்பாட்டில்தான் தம் வாழ்வையும் வளத்தையும் கொண்டவர்களும் அவ்வாறு நம்பிச் செயற்படுகிறவர்களுமாகிய மக்களைச் சிதறாமல் ஒன்று திரட்டுவதில் ஈடுபடுவதாகும். அத்தகைய ஒரு வலிய சூழல் திராவிடர் கழகம் உடைவதற்கு முன்பு உருவானது. அப்போது குமுகத்தின் பிற்போக்கு விசைகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சில தலைவர்களின் மூலம் அறைகூவல்களை விடுத்தன. அன்றைய நிலையில் நம் சமுகத்தின் வரலாற்று வகைப்பட்ட இப்பிற்போக்கு விசைகளின் இறுதி முயற்சியான அதை எளிதில் முறியடிக்கும் வலிமை அன்றைய திராவிட இயக்கத்துக்கு இருந்தது. ஆனால் திராவிடர் கழகத்தின் கோழைத் தலைமை பின் வாங்கி எண்ணிக்கையிலும் வன்முறை எதிர்ப்பிலும் வலிமையற்றவர்களாகிய பார்ப்பனர்கள் பக்கம் கை காட்டிக் கொண்டு வரலாற்றின் ஒரு நல்வாய்ப்பைக் கைவிட்டுப் பெரும் இழப்புக்கு வழிகோலியது.
பின்னர் அதே திராவிடர் கழகம் அதே பிற்போக்கு விசைகளைத் தன்னுள் சேர்த்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது முன்பு பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் பிற சாதியினர் மீது என்னென்ன ஒடுக்குமுறைகளைக் கையாண்டார்களோ அதே ஒடுக்குமுறைகளை இயக்கத்தினுள்ளும் நடத்தியது. அதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிட இயக்கத்திலிருந்து மட்டுமல்ல தமிழக மண்ணிலிருந்தே அயற்பட்டுப் போனார்கள். அதன் அடையாளம் தான் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் அம்பேத்கார் சிலைகள்.
தீமை இத்துடன் நின்றுவிடவில்லை. தங்களுக்கு மற்றவர்களுடன், குறிப்பாகத் தங்களை எல்லாத் திசைகளிலும் அடுத்து வாழும் பிற்படுத்தப்பட்டோருக்கு இணையான உரிமைகள் - பொதுக் கிணறு அல்லது குடிநீர்க் குழாயில் நீரெடுக்கும் உரிமை, சுடுகாடு இடுகாடுகளுக்குச் செல்லும் பாதை உரிமை ஆகியவற்றுக்காகப் போராடும் ஒர் அறிகுறியாக நாட்டுப்புறக் கோயில்களில் மோதல்கள் உருவாயின. அதன் அடுத்த கட்டமாக மிகுந்த ஆரவாரத்துடனும் ஆர்வத்துடனும் நாட்டுப்புறக் கோயில்களில் விழாக்கள் அளவின்றிப் பெருகி வருகின்றன. இதன் பொருளியல் - பண்பாட்டியல் இழப்பை அதைப் பற்றிய விழிப்புணர்வும் குமுக முனனேற்றம் பற்றிய தெளிவும் பொருளியல் துறையில் ஈடுபாடும் உள்ளவர்களால் தான் உணர முடியும்.
பகுத்தறிவு இயக்கம் என்ற பெயரில் கடவுள் சார்ந்த அனைத்து நிறுவனங்களின் செல்வாக்கையும் கிட்டத்தட்ட அழித்து வெற்றிவாகை சூடி மக்களின் தலைவனாக இருந்த திராவிட இயக்கம் தன் குற்றத்தினால் இன்று தமிழகத்தில் பகுத்தறிவு நிலையைக் கற்பனை செய்ய முடியா அழிவு நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது. இந்த அழிவிலிருந்து தமிழகத்தை மீட்க இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்தது போன்ற இன்னுமொரு நல்வாய்ப்பு என்று கிடைக்குமோ என்று தெளிவான சிந்தனை படைத்தோரை மலைக்க வைத்துத் திகைக்க வைத்து ஏங்க வைத்துள்ளது.
தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் திராவிடர் கழகம் தமிழக மண்ணிலிருந்து அயற்படுத்தவில்லை. அரசு வெள்ளை வேட்டி வேலையை மட்டும் நோக்கமாகக் கொண்ட கல்வி, அடிமை ஒட்டுண்ணி அரசுப் பணியில் இடம்பெறுவது என்ற அடிமைக் கோட்பாட்டுக்கு அளவுக்கு மீறிய பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் செல்வாக்கிலும் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க சாதியினர் பலர் தமிழகத்துக்கு வெளியிலும் தோழமைச் சாதிகளைச் சேர்த்து இயங்கி அயற்பட்டு நிற்கின்றனர். இப்படித் தனித்தனிச் சாதியினர் மட்டும் அயற்பட்டுப் போகவில்லை. திராவிடர் கழகமே தமிழ் மண்ணிலிருந்து அயற்பட்டுத்தான் நிற்கிறது.
தமிழகம் என்ற எல்லையை விட்டுத் தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியப் பணிகளிலும் ஒதுக்கீடு வேண்டும் என்று தொடங்கி பின்னர் தமிழகத்துக்கு வெளியேயுள்ள பிற்படுத்தப்பட்டோர் பெயரையும் சேர்த்துக்கொண்டு மண்டல் ஆணையத்துக்குப் பாடுபட்டு அதன் பின் ஆணைய அறிக்கையைச் செயற்படுத்துவதற்காகவும் போராடித் தான் ஒரு தமிழ்த் தேசிய இயக்கமல்ல என்பதை வெளிப்படுத்திக்கொண்டதுடன் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனையோ அவர்களுடைய நல்லெண்ணத்தையோ ஒத்துழைப்பையோ பற்றிக் கவலைப்படாத இயக்கம் என்பதையும் பறைசாற்றி நிற்கிறது. இதில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற திரு.ஆனைமுத்துவும் வீரமணியோடு போட்டி போட்டுக் களத்தில் நிற்கிறார். அவர் தான் கன்சிராம் போன்றோரின் துணையை நாடிச்சென்று இதைத் தொடங்கிவைத்தவர்.
எல்லாவற்றை விடவும் மிகப் பெரிய தீங்கு தமிழகத்தில் வேரோடிப்போயிருக்கும் "பிற்படுத்தப்பட்ட மனநோய்". தாமே தம் சொந்த முயற்சியால் போராடி உழைத்து வெற்றிபெற்று தம் நிலையை உயர்த்தித் தமிழகக் குமுக மக்களிடையில் மட்டுமல்ல உலகக் குமுகவியல் ஆய்வாளர்களின் மனதிலும் சிறப்பிடம் பெற்றுவிட்ட நாடார் சாதியினர் கூட தங்களை முற்பட்ட சாதியராக்க வேண்டுமென்று கேட்டுப் பெருமிதமடைய வேண்டிய ஒரு காலகட்டத்தில் தங்களை மிகப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பதற்காகப் பெரும் உழைப்பில் உறுப்பினர் சேர்த்துப் பெருமிதமிழந்து நிற்கிறார்களென்ற ஒரே ஒரு நிகழ்வே இக்குமுகச் சீரழிவின் தெள்ளத் தெளிவான சான்றாகும்.
தமிழகத்திலும் தமிழகத்துக்கு வெளியிலும் இருந்துகொண்டு தமிழக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியாளர்களும் பிற விசைகளும் ஒரு உண்மையைத் தெளிவாகத் தெரிந்துவைத்துக் கொண்டுள்ளனர். பண்டைக் கால மரக்கலங்கள் கடலில் செல்லும்போது கூனிகள் எனும் இறால் வகையைச் சேர்ந்த மிகச் சிறிய மீன்கள் மிகப் பெருங்கூட்டமாக வந்து மரக்கலத்தையே மறித்துக் கொள்ளுமாம். அப்போது மாலுமிகள் இதற்கென்றே ஆயத்தமாக வைத்திருக்கும் உமியை அல்லது தவிட்டை அள்ளிக் கடலில் வீசுவார்களாம். உடனே அந்தக் கூட்டம் கலைந்து சிதறிக் கப்பலுக்கு வழி விட்டுவிடுமாம். அது போல் நம்மை ஆளுவோரும் தமிழக மக்களின் கவனத்தைக் சிதறடிக்க வேண்டிய வேளைகளில் ஒதுக்கீட்டில், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டில் ஒரு சிறு கோளாறைச் செய்துவிட்டால் போதும் கொஞ்ச நாளைக்குக் கவலையற்றுத் தம் வேட்டையையும் தேட்டையையும் தொடரலாம் என்பது அவர்களுக்குத் திராவிட இயக்கத்தினர் அமைத்துக் கொடுத்திருக்கும் ஒரு நல்வாய்ப்பு.
உண்மையில் நின்று தெளிந்து பார்த்தால் ஒதுக்கீடு என்பது இன்னும் தேவை தான். யாருக்கு? இன்று கல்வியையோ அரசு அதிகாரத்தையோ கண்டறியாத மலைவாழ் மக்கள், நடோடிப் பிழைப்பு நடத்துவோர், துப்புரவுத் தொழிலாளர் ஆகியோருக்குக் கட்டாயம் அது தேவை. அவர்களை வரலாற்று வகைப்பட்ட காரணங்களால் மனிதன் என்ற உயிர் வகையிலிருந்து தாழ்ந்ததாகிய ஒர் உளவியல், பண்பாட்டியல் நிலைகளிலிருந்து விடுவித்து தம் குமுகச் சிறைக்கூடங்களிலிருந்து வெளிப்படுத்தி திறந்த வெளிச்சத்தையும் காற்றையும் கண்டு பிறருக்கு இணையான குடிமக்களாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தேவையும் இக்குமுகத்துக்கு உண்டு. அரசு வேலைவாய்ப்புகள் அருகி வரும் இந்நிலையில் இனி வரும் வேலைவாய்ப்புகள் அனைத்தையுமே அவர்களுக்கு ஒதுக்கிவிடலாம். அதற்கு முழுக் குமுகத்திலுமிருந்து உருவாகும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு மக்களை வழிநடத்திச் செல்லக் கூடிய ஒரு மாபெரும் இயக்கம் தேவை. அதைச் செய்யும் அடிப்படை ஆற்றல்களுடன் தோன்றிய திராவிட இயக்கம் உண்மையில் மாண்டுவிட்டது பெருந்துயரம். உண்மையான ஓரியக்கத்தை மீண்டும் தொடங்குவது உண்மையான தமிழ்நில உணர்வுடையோரின் கடமையாகும்.
(தொடரும்)