29.3.06

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 4. திருமண உறவுகள்

திருமண உறவுகள் எனும் போது நாம் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளையே அளவுகோலாகக் கொள்கிறோம். மேற்சாதியினரிடையில் பெண்ணுக்கு மணவிலக்குரிமையோ மறுமணவுரிமையோ கிடையாது. அது மட்டுமல்ல, மணமகனுக்குப் பெருமளவில் சீதனம் கொடுப்பது அங்கு தவிர்க்க முடியாதது. ஆனால் கீழ்ச்சாதிகளில் பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமண உரிமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஆடவனை விடப் பெண்ணுக்கு இதில் அதிக உரிமை உண்டு. அது மட்டுமல்ல, நாட்டுப் புறங்களில் கீழ்ச்சாதி மக்களிடையில் நகர்ப்புறத்து மக்களிடை நிலவுவது போன்று பெண்ணின் “கற்பு” பற்றிய அவ்வளவு “பதற்றம்” இல்லை. சீதனம் அவர்களிடையில் பெரும்பாலும் வேண்டிய அளவு வசதி படைத்தோரிடையே மட்டுமே உண்டு. மணப்பெண்ணுக்கு மணமகன் பரியம் கொடுப்பது இன்றும் பெருவழக்காக உள்ளது.

திருமண உறவுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள ஏற்றத்தாழ்வு நம் குமுகத்தில் குறிப்பிடத்தக்க அளவு நிலவுகிறது. மேற்சாதிகளில் பெண் பொதுவாக இரண்டே வகைக் கடமைகளை நிறைவேற்றுகிறாள். ஒன்று, ஆடவனின் சொத்துகளுக்கு உரிமை பெறத்தக்க அவனுக்கே உரிய மக்களைப் பெறுவது; இன்னொன்று வீட்டில் அடிமைத் தொழில் புரியும் “இல்லத்தரசி”யாகவும் அவனுக்கு இன்பம் அளிக்கும் கேளிக்கைப் பொருளாகவும் இருப்பது. அவன் விரும்பும் வகை இன்பத்தை அவளால் வழங்க முடியவில்லை என்று அவன் கருதினால் வேறு பெண்களிடம் அதை அவன் நாடுவதை அவள் தடுக்க முடியாது. ஆனால் அதே பெண் தன் கணவனிடமிருந்து தனக்கு வேண்டிய இன்பத்தைப் பெற முடியாத போது இன்னொரு ஆடவனை அவள் நாட முடியாது (திருட்டுத்தனமாக உறவுகள் உரிமைகளாகா). அதே நேரத்தில் “கணவனுக்கே உரிய” குழந்தைகளைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படும் பெண் தன் திருமணத்துக்கு முன்போ அல்லது கணவனைச் சாவிலோ சச்சரவிலோ பிரிந்த பிறகோ கூட இன்னொரு ஆடவனுடன் உறவு கொள்ளக்கூடாது.

ஆனால் கீழ்ச்சாதிப் பெண் இத்தகைய கொடிய ஒடுக்குமுறைக்கு ஆளாவதில்லை. அவளுக்குப் பிடிக்கவில்லையெனில் மணவிலக்குச் செய்து கொள்ளலாம். சாதியார் பஞ்சாயம் கூடி மணவிலக்குச் செய்து வைப்பர். மணவிலக்குப் பெற்ற பெண்ணும் கைம்பெண்ணும் மீண்டும் மணம் செய்து கொள்ளலாம். முந்திய திருமணத்தில் பிறந்த குழந்தைகளை அவள் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம்.

கீழ்ச்சாதிகளில் ஓரளவு சொத்துடைமை இருந்தாலும் அவர்களுக்குச் சோறு போடுவது அவர்களது உழைப்பு தான். திருமணத்தால் ஆடவனுக்குக் குடும்பத்தில் வரும் அதிகச் செலவை மனைவியாக வருபவள் உழைத்து ஈட்டி விடுகிறாள். அத்துடன் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பேணுவதும் பெரும்பாடல்ல, ஏனென்றால் மிக இளம் பருவத்திலேயே அக்குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் உழைத்து ஈட்டத் தொடங்கி விடுகின்றனர். அதனால் கீழ்ச்சாதிகளிடையில் திருமணம் நடத்தப் பெரும்பணம் திரட்ட வேண்டும் என்பதற்காகக் காலங்கடத்தத் தேவையில்லாததால் ஆணும் பெண்ணும் பருவமடைந்த உடனேயே மணம் முடித்து விடுகின்றனர். அத்துடன் மணப்பெண் ஏற்கனவே மணமானவளா, குழந்தைகள் உள்ளவளா என்பதும் பெரும் கேள்வியல்ல, ஏனென்றால் குழந்தைகளோ மனைவியோ அவனுக்குத் தனிச் சுமை எதையும் கொடுக்கப் போவதில்லை. அது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு விட்டுச் செல்வதற்கென்று பெரும் செல்வம் எதுவும் இல்லாததால், ஆண் தனக்கேயுரிய குழந்தை வேண்டுமென்று பெரிதும் எதிர்பார்ப்பதில்லை.

மாறாகப் பணம் படைத்தோராகிய மேல் சாதியினரிடையில் மேலே கூறப்பட்டது போல் சொத்துரிமைக்காகக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதோடு மனைவி ஆடவனுக்குப் புதிய சுமைகளைக் கொண்டு வருகிறாள். நம் குமுகத்தில் ஒருவனுடைய வாழ்க்கைத் தரம் அவன் மனைவியிடம் காணப்படும் ஆடம்பரத் தோற்றத்தைக் கொண்டே மதிப்பிடப் பெறுகிறது. இந்தத் “தோற்றத்தை”ப் பேணி வருவதற்கும் குழந்தைகளை “நல்ல நிலைமைக்கு”க் கொண்டு வருவதற்கும் தேவையான அடித்தளம் உருவாவதுவரை ஆடவன் காத்திருக்க வேண்டியுள்ளது. பெண்ணிடமிருந்து முடிந்த அளவு சீதனத்தைக் கறப்பதற்காகப் பல பெண்களைப் பார்த்துத் தெரிவுசெய்ய வேண்டியிருக்கிறது. அக்கம் பக்கத்தில் பெண்ணே இல்லாதது போல் நாடு நகரம் கடந்து பெண் தேட வேண்டியுள்ளது. இதனால் ஆண், பெண் இருவர் திருமணங்களுக்கும் காலம் கடந்து கொண்டே போகிறது. (இதனால் ஏற்படும் உடன் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்).

கீழ்ச்சாதிகளில் மணவிலக்கு மற்றும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருப்பதால் மணப் பொருத்தத்துக்கென்று சோதிடம் போன்ற மிக நுணுக்கமான பொருத்தங்கள் பார்த்துக் காலத்தை வீணாக்குவதில்லை. கோயில்களில் “பூக்கட்டிப் போட்டு”த் திருவுளம் அறிவதோடு சரி. “பூவா, தலையா” பார்ப்பதற்கு இணையானதே இது. ஆனால் மேற்சாதிகளில் மணமக்களுக்குள் முறிவோ, கணவன் சாவோ பெண்ணை நிலையான வாழாவெட்டியாக்கிவிடும். எனவே பன்னிப் பன்னிப் பொருத்தம் பார்க்க வேண்டியிருக்கிறது.

கீழ்ச் சாதிகளில் மணவிலக்கு, மறுமணம் ஆகிய உரிமைகள் இருந்தாலும் அவர்களில் பொருளியலில் உயர்ந்து விட்டவர்களிடையில் பெண் இந்த உரிமைகளைக் கொண்டாட முடிவதில்லை. ஏனென்றால் இங்கு பெண் கணவனுக்குச் சுமையாகிறாள். எனவே “கைபடாத கனிகள்” கிடைக்க வாய்ப்பிருக்கும் போது அவன் ஏன் “எச்சிற் கனிகளை” நாட வேண்டும்? அதே நேரத்தில் இருக்கிற வளவாழ்வை விட்டு ஏழ்மை நிலையிலுள்ள ஒரு கணவனையே நாட வேண்டி வரும் என்பதால் பெண் தன் மணவிலக்கு-மறுமண உரிமைகளைப் பயன்படுத்துவதில்லை. எனவே இங்கு பார்ப்பனியம் எனப்படும் “வெள்ளாளக் கட்டு” தன் முழு வலிமையோடு செயற்படுகிறது.

எனவே பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்புவோர் அதனை இன்றும் நம் குமுகத்தில் கடைப்பிடித்து வரும் கீழ்ச்சாதியினரின் பண்பாட்டைப் பற்றிக் கொண்டே அப்பணியைத் தொடங்க வேண்டும்.

பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமண உரிமைகள் பற்றிக் கூறும்போது அது வரைமுறையில்லாத புணர்ச்சியைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் வரைமுறையில்லாமல் பெண் யாருடனும் எப்போதும் தன் விருப்பம் போல் உறவு கொள்ளலாம் என்பது இதன் பொருளில்லை.

பெண்ணுரிமை என்பதற்கு “ஒரு பெண் ஓர் ஆடவன் மேல் ஏற்பட்ட விருப்பம் தவிர்த்த வேறெந்தப் பொருளியல் அல்லது குமுகச் சூழலாலும் அவனோடு உறவு கொள்ளக் கட்டாயத்துக்கு உள்ளாகாமலிருப்பதே” என்றார் லெனின். விலைமகளிர் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பல பெண்கள் பெற்றோரின் நெருக்குதலுக்குப் பணிந்தும் பல பெண்கள் வளமான வாழ்வுக்காகவும் தம் விருப்பத்துக்கு மாறான ஆடவர்களுடன் உறவு கொள்ள நேரிடுகிறது. அதே போல் மனம் ஒன்றாத கணவனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிலையிலும் பல பெண்கள் உள்ளனர்.

மறுபுறம் திருமணமாகாத ஒரு பெண்ணுடன் ஓர் ஆடவன் தொடர்புறும் போது அதன் விளைவு ஆடவனை உலகுக்குக் காட்டிக் கொடுப்பதில்லை. பெண் மட்டும் அதன் விளைவுக்குப் பலியாகிறாள். தாய்மையே பெண்மையின் சிறப்பு என்று மேலுக்குப் பறைசாற்றும் நம் குமுகம் மணமாகாத பெண்ணின் தாய்மையை எண்ணிப்பார்க்க முடியாத அளவு இழிவுபடுத்துகிறது. இந்த நிலையை மாற்ற சோவியத்து நாட்டு அரசு திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற பெண்களைத் “திருமணமாகாத அன்னையர்” என்று அழைத்து அவர்களுக்கு வாழ்க்கைப் பணமும் வழங்குகிறது. இருந்தாலும் அங்கு அத்தகைய பெண்களைப் பற்றிய பழைய கருத்துகள் இன்றும் வலிமையாக இருப்பதால் சில கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டிருப்பனவாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன் கருவுறும் பெண்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளத் துணியாமல் அடிக்கடிக் கருக்கலைப்புச் செய்து கொள்வதால் மலடாகி விடுவதாகவும் அதனால் அங்கு, அதிலும் குறிப்பாகத் தொழில் வளர்ச்சி மிகுந்த உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பெண்களுக்குப் பாலியல் உறவில் ஆண்களோடு சரிசமமான உரிமை தேவை என்பது, குறிப்பாகப் பெண்கள் மனதில் பதியும் படியாக உணர்த்தப்பட வேண்டும்.
[1]

இன்று பல பெண்கள் படித்து மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போனாலும் கூட பெண்ணின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது. பெண்ணின் வாழ்வு மேம்பட வேண்டுமென்பதிலோ பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதிலோ சிறிதும் கவலை கொள்ளாதவரும் எதிர்ப்பவர்களும் கூட படித்த, வேலை பார்க்கும் பெண்களையே மணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். படிக்கும் பெண்களைப் பற்றியும் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் நையாண்டி செய்து கொண்டே தன் தங்கை, மனைவி அல்லது மகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தம் தங்கை, மனைவி, மகள் ஆகியோரைப் பணத்திற்காகப் பிறரின் காட்சிப் பொருளாகவோ, விலைமகளிராகவோ பயன்படுத்தினால் என்ன மனநிலையிலிருப்பார்களோ அதே மனநிலையில் தான் அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார்கள். நாளுக்கு நாள் நஞ்சு போல் ஏறிவரும் கொடும் விலைவாசியும் அணைபோட்டுத் தடுக்கமுடியாத ஆவலாதிகளும் குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதில் ஏற்படும் கட்டுக் கடங்காச் செலவுகளும் கட்டாயப் படுத்தி ஆடவர்களை இந்நிலைக்கு இட்டுச் செல்கின்றன. படித்த பெண் இதனால் உண்மையில் விடுதலை பெறவில்லை. மாறாக முன் எப்போதையும் விட அதிகத் தளைகளால் பிணைக்கப்பட்டுள்ளாள். கல்வி பெற்று வேலை வாய்ப்புகளும் பெற்று விட்டால் பெண் விடுதலை பெற்று விடுவாள் என்று திரு.வி.க.வும், மு.வ.வும் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நிகழ்வுகள் அமைந்துள்ளன. கல்வியும் வேலை வாய்ப்பும் இன்று உரிமைகளாயில்லை, சலுகைகளாகவே உள்ளன. இச்சலுகைகளைப் பெற அவளது பெண்மை முன்னிலும் பன்மடங்கு பல வேளைகளில் இழிவுபடுத்தப்படுகிறது. படித்து வேலை பார்க்கும் பெண் தன் வேலை, தன் குடும்பம் என்ற இரண்டு சிறைகளினுள் அடைக்கப்பட்டுத் தன் பண்பாட்டு வளர்ச்சி முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையில் நிற்கிறாள். இதிலிருந்து அவளை விடுவிக்கப் பெண் விடுதலை என்ற பெயரில் செயற்படும் இயக்கங்கள் தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகின்றன.

மாறாக, நாட்டுப்புறத்திலும் நகர்ப்புறங்களிலும் வாழும் படிப்பால் பிழைக்காத கீழ்ச்சாதிப் பெண்களில் ஏறக்குறைய எல்லோருமே உழைக்கிறார்கள். வேளாண்மை, கட்டுமானத் தொழில், நெசவு, பீடிசுற்றுதல், தீப்பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில், பனைஓலைத் தொழில், பாய்முடைதல் மற்றும் எண்ணற்ற வகை வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ளோரில் ஆண்களை விடப் பெண்களே மிகுதி. இவ்வகைக் குடும்பங்கள், பெரும்பாலானவை பெண்ணின் உழைப்பாலேயே வயிற்றைக் கழுவுகின்றன. இன்று பெரும்பாலான ஊர்ப்புறத்து ஆடவர்களுக்கு வேலைவாய்ப்பு அருகி வருகிறது. எனவே பெண் ஈட்டும் பணத்தில் தான் குடிப்பதற்கும் சூதாட்டத்துக்கும் திரைப்படத்துக்கும் ஆடவன் செலவு செய்கிறான். பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டு ஆடவன் மட்டும்தான் இவ்வாறு செய்கிறான் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு விதியாகவே செயற்படுகிறது என்பது பெண்களுக்குத் தெரிவதில்லை. பெண்ணின் இந்த அறியாமையினால் இன்னொரு வகைத் தீமைக்கும் அவள் ஆளாகிறாள். தன்னுடைய ஓய்வு நேரத்தில் ஏதோவொரு தொழில் செய்து குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்குவதாக அவள் கருதுவதால் தன் உழைப்பின் உண்மையான மதிப்பை உணராமல் ஏதோ கிடைத்தவரை ஆதாயம் என்று நினைக்கிறாள். எனவே அவளது உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுகிறது. தன் உழைப்பினால்தான் குடும்பமே நடைபெறுகிறது என்பதை உணராததால் அவள் தன் உரிமைகளுக்காகப் போராடுவதிலிருந்தும் தடுக்கப்படுகிறாள். குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் ஆணுக்கு அடங்கியவள் என்று அவள் காதில் ஓதப்பட்டவை, அவள் பார்க்கும் திரைப்படங்கள், எப்போதாவது அவள் படிக்கும் அல்லது கேட்கும் கதைகள் இவையனைத்தும் சேர்ந்து அவளைத் தன் உரிமைக்காகப் போராடாமல் தடுத்து வைத்துள்ளன. குடும்பப் பொருளியலில் அவள் ஆற்றும் பங்கைப் புலப்படுத்தி, தான் உள்ளாக்கப்படும் சுரண்டலுக்கெதிராகப் போரிட அவளை ஆயத்தப்படுத்தும் போது தான் தன் அடிமை விலங்கனை உடைத்தெறியத் தேவையான தெளிவு அவளுக்குப் பிறக்கும். படிப்பால் பிழைக்கும் பெண்களின் விடுதலைக்கும் வழி பிறக்கும்.

ஒரு குமுகத்திலுள்ள ஆண்-பெண் உறவுநிலைக்கும் அக்குமுகத்திலுள்ள மக்களின் ஒற்றுமைக்கும் ஒரு தொடர்புண்டு. தனிக் குடும்பத்தின் வளர்ச்சி பற்றி ஆய்ந்த ஏங்கல்சு குமுகியல் ஆய்வாளர்களின் ஒரு முடிவைச் சுட்டிக் காட்டுகிறார்.[2] இவ்வாய்வாளர்கள் விலங்குகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து எந்த ஒரு இனத்தினுள்ளும் கூடி வாழ்தலும் பாலியல் பொறாமையும் எதிர்விகிதத்தில் அமைந்துள்ளன என்பதே அது. பாலியல் பொறாமை குறைவாக உள்ள இனங்கள் பெருங்கூட்டங்களாக வாழ்கின்றன; பொறாமை மிகுந்த இனங்கள் தனித்தனிக் குடும்பங்களாக வாழ்கின்றன என்பது இதன் பொருள். பெரும்பாலான மனித இனங்களும் இன்று தனித்தனிக் குடும்ப அமைப்பில் இருந்தாலும் பலவற்றில் அக்குடும்பங்கள் நெகிழ்ச்சி உள்ளனவாய் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பியர்களிடையில் மணவிலக்கு, மறுமணம் போன்ற இறுக்கமில்லாத திருமண விதிகள் மட்டுமல்ல திருமண உறவை மீறிய பாலியல் உறவுகளும் இயல்பானவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கூட்டுணர்வு அவர்களின் வலிமைக்கு ஒரு முகாமையான காரணமாகும்.

அதே நேரத்தில் நம் நாட்டிலும் திருமண உறவை மீறிய பாலியல் உறவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தப் பாலியல் ‘உரிமம்’ சில குறிப்பிட்ட சாதிகளின் உள்ளே மட்டுமே கிடைக்கிறது. இது அந்தச் சாதியின் ஒற்றுமை உணர்வை வளரச் செய்கிறது. அதே நேரத்தில் அந்தச் சாதியினர் பிற சாதியினருடன் தமக்குள்ள பிரித்துணர்வையும் இது இறுக்குகிறது. இப்படிச் சில சாதிகளில் தமக்குள் அடங்கிய இந்தப் பாலியல் உரிமம் நாடு அல்லது தேசியம் என்ற அளவிலான ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறது. எனவே பெண்ணுக்கு நாம் விரும்பும் பாலியல் ‘உரிமம்’ என்பது சாதி வரம்புகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான தேசியம் என்ற வலிமையான உணர்வு தோன்றி வளர வழி ஏற்படும்.

இந்த இடத்தில் புலாலுணவு, பெண்ணுரிமை என்ற இரு பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் பெரியார் மேற்கொண்ட நிலையையும் அவற்றை அவர் அணுகிய முறையையும் நாம் சற்று நோக்க வேண்டும். புலாலுணவுக்கு மேற்சாதியினர் காட்டிய எதிர்ப்பை முறியடிக்கும் முறையில் தான் நடத்திய தீமிதிப்பு (பூக்குளி) நிகழ்ச்சிகளில் பன்றி இறைச்சியை அவரது தொண்டர்கள் உண்டார்கள். பெண்ணடிமையின் அடையாளமாகிய தாலியை அகற்றுவதை அவர் ஓர் இயக்கமாக நடத்தினார். ஆனால் புலாலுணவின் மேன்மையையும் எளிமையயும் பற்றியோ நாட்டுப் புறங்களில் பெண்களுக்கிருக்கும் உரிமைகள் பற்றியோ மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துப் பரப்பலை அவர் செய்யவில்லை. அவரது அணுகல் ஒருவகை “அடாவடி” அல்லது மறுப்பியல் (Nihilist) அணுகலாகவே இருந்தது. அவரது இயக்கம் மேற்சாதியினரை அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரை நோக்கியதாகவே அமைந்தது.

ஆண்-பெண் உறவுகளில் சீதனம், வரதட்சினை என்பவற்றைப் பற்றி ஒரு விரிவான ஆய்வு செய்யவில்லையெனில் அது முழுமையாகாது.

குமுகம் உடையாமல் இயற்கையிலிருந்து நேரடியாக உணவுப் பொருட்களைத் திரட்டி நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த நாட்களில் பெண்ணே குடும்பத் தலைவியாயிருந்தாள். ஆடவர் இரண்டாம் நிலையிலிருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல மனிதனின் அறிவியலும் தொடர்புகளும் விரிவடைந்த நிலையில் இந்தக் குமுகக் கூட்டுழைப்பிலிருந்து ஆடவன் விடுபட்டான். வாணிகம், படைப் பணி, அரசுப் பணி போன்றவற்றுக்காக ஆடவர்கள் குமுகத்திலிருந்து பிரிந்தபோது பெண்ணும் அவனுடன் செல்ல வேண்டியவளானாள். எனவே குடும்பத்திலுள்ள அவளது சொத்தின் பகுதிக்கு இணையாக அசையும் சொத்துக்கள் சீதனமாக, பெண்ணின் சொத்தாக அவளுக்கு வழங்கப்பட்டன. அவை பெரும்பாலும் வீட்டுப் புழக்கப் பொருட்களாகவும் அணிகலன்களாகவும் இருந்தன. நாள் செல்லச் செல்ல பணமும் இதனோடு வழங்கப்பட்டதுண்டு. இந்தப் பொருட்களெல்லாம் என்றுமே அவளுக்குரியனவே. ஒருவேளை மகப்பேறில்லாமல் அவள் இறந்து விட்டால் அவை அவளது பிறந்தகத்துக்கு உரிமையாகும். இது பார்ப்பனர் உட்பட அனைத்துச் சாதிகளிலும் இன்றுவரை நடைமுறை.

பெண்ணின் சீதனத்துடன் பணம் கொடுக்கப்பட்டால் அதற்கு ஈடாக ஏதாவதொரு சொத்தைப் பெண்ணின் பெயருக்கு எழுதிவைப்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை பல கீழ்ச்சாதிகளில் நடைமுறையாக இருந்தது. ஆனால் அம்முறை இன்று வழக்கிழந்துவிட்டது. இன்று அது வரதட்சிணை (மணமகனுக்கு அளிக்கும் காணிக்கை) என்ற பெயரில் மணமகன் வீட்டாரால் கைக்கொள்ளப்பட்டு விடுகிறது.

வரதட்சிணை என்பது இன்றைக் குமுகக் கொடுமைகளில் மிக இழிவான ஒன்றாக நிலவுகிறது. கூடுதல் வரதட்சிணைக்காக மனைவியைக் கணவனும் அவனது உறவினர்களும் கொடுமைப்படுத்துவதும் அவளைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணை மணம்செய்து வரதட்சினை பெறுவதும் இன்று அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. படித்து வேலை செய்தாலும், சீதனமும் வரதட்சிணையும் கொண்டு சென்றாலும் பெண்மகளின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. அத்துடன் கணவன் தன் பெற்றோர்களுடனும் உடன் பிறந்தோருடனும் சேர்ந்து வாழும் குடும்பங்களில் கணவனின் அன்பை அல்லது அவன் மீது ஆதிக்கத்தைப் பெறுவதில் மனைவிக்கும் அவனது தாய், உடன்பிறந்தோர் ஆகியோருக்கும் இடையில் ஏற்படும் போட்டியில் பெண் தன் கணவன் குடும்பத்துப் பெண்களாலேயே இரக்கமற்ற கொடுமைக்காளாகிறாள். இதன் விளைவாகக் கணவனும் மனைவியும் தனிக்குடித்தனமாகின்றனர். எனவே பெரும்பாலான நேர்வுகளில் கணவனின் பெற்றோர் கைவிடப்படுகின்றனர். ஆண்மகன் பொறுப்பிலேயே பெற்றோர் விடப்படுவதாலும் பெண்கள் கணவனோடு சென்று விடுவதாலும் இச்சூழ்நிலை தாய்தந்தையரை ஆதரவற்றவர்களாக்கி விடுகிறது. இது நம் நாட்டில் மிக இயல்பான நிகழ்ச்சியாகிவிட்டது. அரசூழியம் செய்து ஓய்வூதியம் பெறுவோர்க்குக் கொஞ்சம் பணமாவது கிடைக்கும். மற்றையோருக்கு அதுவும் கூட இல்லையாதலால் அவர்கள் இரவலர்களாக வேண்டியுள்ளது.

வரதட்சிணை எதிர்ப்பு என்பது பெண்ணுக்கு அவள் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பங்கை இழக்கச் செய்யும் வகையில் ஆண்மக்களுக்கு ஆதாயம் தரும் முழக்கமாக மாறிவிடக்கூடாது. அதே நேரத்தில் அவளுக்கு அவ்வாறு கிடைக்கும் பங்கு அவளுக்கு உதவாமல் கணவனுக்கும் அவள் குடும்பத்தாருக்குமாகப் பறிபோய்விடவும் கூடாது. எனவே அவளது பணம் மணமகனுக்குக் கொடுக்கப்பட்டால் முன்பு கீழ்ச்சாதியினரிடையில் வழங்கியது போல் அதற்கிணையான ஈட்டாவணம் அவளுக்கு வழங்கப்பட வேண்டும்.

முதியவர்களுக்கான பராமரிப்புக்கு வேறொரு ஏற்பாடு செய்யலாம். பெண்கள் தத்தம் வீடுகளிலிருந்து கொண்டு மனைவி வீட்டுக்குக் கணவன் வாழவரலாம் அல்லது ஒவ்வொருவரும் தத்தம் முதுமைக்கென்று தமக்குப் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் உருவாக வேண்டும்.

பெண் எதனால் இவ்வாறாக ஆதரவற்ற நிலைக்கு வருகிறாள்?
இதற்கு நேரடிக்காரணம் கற்பு, மறைமுகக் காரணம் தாய்மை.

திருமணத்துக்கு முன் ஆடவரோடு கூடுவது கற்புக்குக் களங்கம். ஆனால் அதற்குச் சான்று கருவுறுவதே. எனவே கருவுறுவதாகிய தாய்மையே அவளுக்குப் பகையாகிறது. மணமான பின் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் கருவுற்றால் அவள் கள்ள உறவு கொண்டிருந்தால் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. அதுபோல் கணவன் இறந்த பின் கருவுற்றாலும் களங்கம். இவ்வாறு ஒரு பெண் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் போது கற்பு தவறிவிடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முயலப்படுகிறது. இந்தப் பதற்றத்தில் மணமகன் வீட்டார் வரைமுறையின்றி மனம்போன போக்கில் “வரதட்சிணை” கேட்கிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மணமகனின் உடன்பிறந்த பெண்களுக்கு வரதட்சிணை கொடுப்பதற்காகவே பல நேர்வுகளில் மணமகளின் வரதட்சிணை பயன்படுகிறது. இவ்வாறு மணமகனின் வரவும் செலவும் சரியாகவே போய்விடுகின்றன. எனவே வரதட்சிணை வாங்காமலிருந்தாலும் இதே சமநிலை உருவாகும். ஆனால் அதை எங்கே எப்போது தொடங்குவதென்பது தான் கேள்வி.

இவ்வாறு பெண் எப்போதும் கணவனுக்குக் கட்டுப்பட்டும் கணவன் இல்லாத போது அஞ்சி அஞ்சியும் வாழ நேரிடுவதற்கு கற்பு பற்றிய பதற்றமே காரணம் என்பது முடிவாகிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகள் தாங்க முடியாமற் போகும்போது இந்தக் கற்புக் கோட்பாடு தானே உடையும். அப்போது பெண்கள் உண்மையில் விடுதலை பெறுவார்கள்.

ஆண்-பெண் சமத்துவத்தின் முதற்படியாக நாம் செய்யக் கூடுவது கல்வி நிலையங்களில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனி நிறுவனங்கள் இருக்கும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும். ஆண்கள் பெண்கள் அனைத்து நிலையிலும் கலந்து பழக அனுமதிக்கப்பட வேண்டும். இதன் பக்க விளைவாகக் கல்வி நிறுவனங்கள் சில சமய நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கும் நிலைமாறும்.


பேருந்துகளில் ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனி இருக்கைகள் ஒதுக்கியிருக்கும் முறை மாற்றப்பட வேண்டும். இது தமிழகத்தில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் ஒரு பிற்போக்கு முறையாகும்.
மனிதப் பிறவியில் தாய்மைக்குரிய அமைப்புகளுடன் விளங்குவதால் பெண் மேம்பட்டவள். ஆனால் இந்த மேம்பட்ட நிலையே அவளுக்குச் சுமையாக கழுத்திலும் காலிலும் கட்டித் தொங்கவிடப்பட்ட பாரமாக மாறிவிட்டது. இதிலிருந்து அவள் விடுவிக்கப்பட வேண்டும்.

வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலத்தில் பெண் தாய்மைக்காகவே வணங்கப்பட்டாள். பெண் கருவுற்ற பின்னரே அவளுக்கு மணமுடிக்கப்பட்டது. அவள் யாரால் கருவுற்றாள் என்பது ஆராயப்படவில்லை. அவளால் தாய்மை எய்த முடியுமா என்ற கேள்விக்கு விடையாகவே அவளது தாய்மை மதிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு கருவுறுவதே திருமணத்துக்கான அவளது தகுதியாகக் கருதப்பட்டது. அன்று பெண் ஆணின் ஈட்டத்தை அடையவிருக்கும் வழித்தோன்றல்களை ஈனும் கருவியாக இருக்கவில்லை. மாறாகத் தங்கள் குழுவுக்கு உழைக்கவும் அதைப் பாதுகாத்துப் போரிடவும் தேவையான குலப் பெருக்கத்துக்குத் தேவையானவளாகக் கருதப்பட்டாள். இன்று நிலை தலைகீழாக மாறிவிட்டது.

இப்போது பெண்ணுக்குச் செய்யப்படும் வளைகாப்பு தான் உண்மையான பழைய திருமணம். ஏனென்றால் முன்பு கணவன் இறந்தால் பெண் தன் கைவளையல்களை உடைத்தே கைம்மையினுள் நுழைந்தாள். கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறிய போது தன் கைவளையல்களைத்தான் உடைத்துக் களைந்துவிட்டுப் போகிறாள். வளைகாப்புதான் முந்தியல் திருமணச் சடங்கு என்பதற்கு இது ஒரு தடயமாகும்.

இன்றும் சில குக்குல மக்களிடையில் பெண் கருவுற்ற பின்பே திருமணம் நடைபெறுகிறது. பெண் கருவுறக் காரணமானவன் கணவனாவதில்லை. கோவை இருளர்களைப் பற்றிக் கூறும் வனாந்தரப் பூக்கள் எனும் நூலில் இது கூறப்படுகிறது.
[3]

இன்றைய குமுகத்தை ஆணாதிக்கக் குமுகம் என்று அழைக்கிறோம். ஆனால் மனித இனத்தின் தொடக்க காலத்தில் அது ஒரு பெண்ணாதிக்கக் குமுகமாக இருந்தது. ஆண் பெண் புணர்ச்சிக்கு வரைமுறை கிடையாது. எனவே எந்தக் குழந்தைக்கும் தந்தையை அறிய முடியாது. ஆகவே தாய் மட்டுமே அறியத்தக்க ஒரே பெற்றோர். உறவுகள் அனைத்தும் தாயின் வழியிலேயே இருந்தன. குலங்கள் தாயின் பெயரிலேயே அறியப்பட்டன. நம் நாட்டிலும் ஏழு பெண்களே அனைத்துச் சாதிகளின் மூலவர்களாகக் குறிப்பிடுப்படுகின்றனர்.

வரைமுறையில்லாத பாலுறவு நிலையில் இனப்பெருக்கத்துக்குப் பல பெண்களுக்கு ஒரே ஆண் போதுமானவன். ஆனால் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஏறக்குறைய சம எண்ணிக்கையிலேயே அமைவர். இதனால் ஆடவன் அன்றைய குமுகத்தில் அதிகப்படியானவனாகவே கருதப்பட்டான். பெண்கள் தத்தம் மக்கள் மீது தமக்கிருந்த செல்வாக்கினால் ஆடவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இது நாளடைவில் ஆடவர்களிடத்தில் எதிர்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்கள், பெண்களை எதிர்ப்பதற்கு ஒரு வகையான இயக்கத்தைத் தொடங்கினர். இதனைத் “தலைமறைவுச் சங்கங்கள்” என்று மாந்தநூலார் அழைக்கின்றனர். ஆடவர்கள் அண்டையிலுள்ள காடுகளுக்குச் சென்று மறைந்து வாழத் தொடங்கினர். தத்தம் கூட்டத்தில் உள்ள சிறுவர்கள் பருவமெய்தியதும் அவர்களைக் கடத்தி வந்து அவர்களின் சிந்தனையைத் திருப்பித் தம்மோடு வைத்துக் கொண்டனர். இதனால் இருபாலருக்கும் நெருக்கடிகள் தோன்றின. அதிலும் ஆண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே மிகுதி. ஏனென்றால் பெண்களிடையில் எப்படியாவது சில ஆடவராவது எஞ்சியிருந்தனர். எனவே ஆண்கள் செயற்கையான பாலுறவு முறைகளை வளர்த்தனர். பெண்களிடையிலும் செயற்கை முறைகள் உருவாயின. அவற்றின் விளைவாகப் பாலியல் நோய்களும் உருவாயின. ஆண்குறியின் மேல்தோலை அகற்றுதல், பெண் குறியிலுள்ள நாக்குப் பகுதியை அகற்றல் போன்ற நடைமுறைகள் இப்பழக்கங்களின் பின்தொடர்ச்சியே. தன்னினப் புணர்ச்சிக்கு பல்வேறு சமயங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைகளும் இதன் விளைவேயாம்.

ஆடவர்களின் இந்தப் போராட்டத்தின் விளைவுகள் என்ன? ஒரு கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஆடவர்கள் பிற கூட்டத்தைச் சேர்ந்த பெண்களைத் தூக்கி வந்து கூட்டாகப் புணர்ந்தனர். பின்னர் நாளடைவில் ஒவ்வொரு கூட்டத்து ஆடவரும் பிற கூட்டத்து பெண்களுடன் உறவு கொள்ளும் புற மண வழக்கம் உண்டாகியது. அது மட்டுமல்ல முன்பு ஒரு தாயாதிக் குடும்பத்தினுள் நிலவி வந்த பாலுறவு மறைந்து அதன் இடத்தில் பல்வேறு வடிவங்களிலான மண உறவு முறைகள் உருவாயின.

மனித இனம் இயல்பில் வரைமுறையற்ற பாலுறவு கொண்டது. அதனால் ஏற்பட்ட இறுக்கமான ஒற்றுமை பிற உயிரினங்களை வெற்றி கொண்டு வளர்வதற்கேற்ற வலிமையை அதற்குக் கொடுத்தது. ஆனால் அதே வளர்ச்சியே நாளடைவில் அந்த ஒற்றுமைக்கு அறைகூவலாக அமைந்தது. அதற்கு விளைப்பு உத்திகளில் ஏற்பட்ட மேம்பாடுகளும் அதனால் ஏற்பட்ட விளைப்புப் பெருக்கமும் காரணமாக அமைந்தன. வாணிக வளர்ச்சி, அதனால் உருவான பாதுகாப்புச் சிக்கல்கள், வாணிகத்திற்குத் தேவைப்பட்ட படைப் பாதுகாப்பு அதன் வளர்ச்சியிலிருந்து உருவான அரசு போன்ற அமைப்புகள் குமுகக் கூட்டு உழைப்பிலிருந்து ஆடவரில் ஒரு பகுதியினரை விடுவித்தன. பெண்ணின் தாய்மை, அதன் தொடர்ச்சியான குழந்தையைப் பேணுதல் முதலியன அவளை இத்துறைகளில் ஆணுடன் போட்டியிட முடியாதவளாக்கின. சிறிது சிறிதாக பெண்ணின் தலைமை வலுவிழந்தது. ஆணின் நிலைமை வலுப்பெற்றது. அப்போதும் கூட ஆண்-பெண் உறவில் ஈரடுக்கு அமைப்பு ஒன்று இருந்தது. குழுவின் தலைவனின் குடும்பம் ஆண் தலைமையுடையதாகவும் மற்றவை பெண் தலைமையுடையவையாயும் இருந்தன. கேரளத்து நாயர்களின் முன்னாள் குடும்ப அமைப்பு இத்தகையது. தமிழகத்திலும் இத்தகைய அமைப்பு இருந்தமைக்குத் தடையங்கள் உள்ளன.

கூட்டுழைப்பிலிருந்து விடுபட்டு ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு உயர்ந்த ஆடவனுடன் வாழப் பெண்கள் புறப்பட்டனர். அவ்வாறு புறப்பட்டவர்கள் கைவிடப்பட்ட போது நெருக்கடிகள் உருவாயின. விலைமகளிர் உருவாயினர். திருமணம் என்ற ஒப்பந்த முறையும் உருவானது. பெண் ஆடவனை அண்டி வாழ வேண்டியவளானாள்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
(தொல்காப்பியம்)

அதே போல் நிலத்தை ஆள்கின்ற நிலக்கிழார்களுக்கும் அரசர்களுக்கும் கூட துணைவியான பெண் அவனை அண்டி வாழ வேண்டியவளானாள். கூட்டுழைப்பில் வாழ்ந்த பெண்ணுக்கிருந்த தற்சார்போ, துணிவோ, வழிவகையோ அவளுக்கில்லை.

இவ்வாறு பெண்ணின் அடிமைத் தனத்தின் வடிவமாகத் தனிக் குடும்பம் உருவானது. பெண்ணின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்தன.


தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவின் பல்வேறு நிலைகளை நம்மால் உய்த்துணர முடிகிறது. காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு அவனைப் புணர்ந்து பிரிந்து செல்லும் “கூடல்” கட்டத்துக் குறிஞ்சித் திணை, தாம் விரும்பும் வரை மட்டும் சேர்ந்திருந்து வாழும் “இருத்தல்” கட்டத்து முல்லைத் திணை, வாணிகமோ, படைப்பணியோ, அரசூழியமோ செய்வதற்காகத் தம் கூட்டத்தை விட்டுச் செல்லும் ஆடவனுடன் பெண்ணும் “பிரிந்து” செல்லும் பிரிவு காட்டும் பாலைத் திணை, கணவன் பிற பெண்கள், அதாவது பரத்தையருடன் உறவு கொள்வதை அறிந்தும் அவனைப் பிரிந்து செல்லும் துணிவைத் தராத பொருளியல் சூழலில் “ஊடல்” செய்ய மட்டும் உரிமை கொண்டிருந்த மருதத் திணை, கணவனைப் பிரிவிலோ, சாவிலோ இழந்து விட்டால் அத்துடன் வாழ்வையே இழந்து பிரிவை நினைத்து இரங்கி வாழும் கைம்மை நிலையைக் காட்டும் நெய்தல் திணை என்பவை பொருளிலக்கணத்தின் மூலம் வெளிப்படும் கட்டங்களாகும். தொல்காப்பியத்தில் பெண்கள் கடற்பயணம் செய்யக் கூடாது என்ற தடையைக் காண்கிறோம். பெண்களின் குமுகச் செயற்பாடுகளில் இடப்பட்ட தடைகளுக்குத் திட்டவட்டமான ஒரு சான்றாகும் இது.

தமிழக மக்களின் பண்டை வரலாற்றின் சில மிக முகாமையான செய்திகளைத் தன்னகத்தே வைத்துள்ள சிலப்பதிகாரம் பெண்ணின் நிலைமையைப் பற்றிய சிறப்பான சில செய்திகளைக் கூறுகிறது.

1. குன்றக் குரவையில் குறவர் பெண்கள் தங்கள் காதலர்களையே மணம் செய்யவும் பிறரை மணம் செய்வதை விலக்கவும் வரமருளுமாறு கண்ணகியை வேண்டுகின்றனர். குறிஞ்சி நிலப் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காட்டும் காட்சி இது.

2. தலைக்கோல் பெற்ற கணிகையாகிய மாதவி தன் குமுகக் கடமையாக இந்திர விழா போன்ற நிகழ்ச்சிகளில் ஆடச் செல்வதைக் கோவலன் விரும்பவில்லை. அதனை மீறி அவள் நடப்பதற்காக அவன் ஊடியிருந்ததைக் கடலாடு காதையில் காண்கிறோம்.

3. அதே போல் கோவலனிடம் தன் உள்ளடக்கிடக்கையை எடுத்துக் கூறிய கண்ணகி தனக்கு அவன் இழைத்த கொடுமைகளில் பெரியதாக அருளாளர்களையும் விருந்தினர்களையும் பேணுவதாகிய குமுகப் பணிகளைச் செய்யவொட்டாமல் தடுத்ததே என்று கூறுகிறாள் (கொலைக்களக் காதை).

4. கோவலன் கொலையுண்டதை அறிந்து கண்ணகி பெண்கள் மீது சுமத்தப்படும் கைம்மைக் கொடுமைகளை எடுத்துக் கூறி அத்தகைய கைம்மையைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறாள். அந்தச் சூளுரையின் விளைவு தான் அவளது தொடர்ந்த செயற்பாடுகள்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தில் பெண்ணுரிமை, பெண்ணடிமை போன்ற கருத்துகள் பற்றிய கலந்துரைகள் வெளிப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலையின் தலைவி திருமணம் இல்லாமலேயே வாழ்கிறாள். மக்கள்தொண்டு புரிகிறாள். அரசனை எதிர்த்து இயக்கமே நடத்துகிறாள்.

இதற்கும் மேலே சென்றுள்ளது குண்டலகேசி காவியம். அக்காவியத்தின் தலைவியாகிய வாணிக குலப்பெண் கொடியவனான கொள்ளையன் ஒருவனைக் காதலித்துப் பின்னர் அரசனால் அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவனை மீட்டுத் திருமணம் புரிந்து கொண்டாள். பின்னர் ஒரு முறை அவர்கள் கேளிக்கையாகப் பேசிக் கொண்டிருந்த போது கணவனை விளையாட்டாகக் கொள்ளைக்காரன்தானே என்று கூறியதை அக்கொடியவன் மனதில் வன்மமாக வைத்திருந்தான். மலை வளம் காண்போமென அழைத்துச் சென்று மலை உச்சியிலிருந்து அவளை உருட்டி விடப் போவதாகக் கூறுகிறான். அவளோ அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து தானே முந்தி அவனை உருட்டி விட்டுக் கொன்று விடுகிறாள்.

இந்தக் கதையின் தலைவி, இக்கதையின் திரைப்படத் தழுவலாக வந்த ‘மந்திரிகுமாரி’யின் தலைவியைப் போலவோ “அந்த நாள்” தலைவியைப் போலவோ நாட்டுப்பற்றுக்காகத் தன் கணவனை “ஈகம்” செய்யவில்லை. தனக்காக, ஒரு மனிதப் பிறவியாகிய தன் உயிரைக் காத்துக் கொள்ளத் தன்னைக் கொல்ல வந்த கணவன் எனும் உறவு கொண்டவனாயினும் இன்னொரு மனிதப் பிறவியைத் தானே முந்திக் கொன்றாள். அவ்வாறு ஒரு மனிதப் பிறவியாகத் தனக்குள்ள தன்னுயிர் காக்கும் உரிமையைக் காத்து நின்றாள். அக்காவியமும் அவளைத் “தற்கொல்லியை முற்கொல்லி” என்று அழைத்து அவளுக்குள்ள உயிர்வாழும் உரிமையை வலியுறுத்துகிறது.

இக்கதைத் தலைவி துறவு மேற்கொண்டு புத்த சமயத்தைத் தழுவிப் பெரும் புகழ் பெற்றதாக அந்தக் கதை கூறுகிறது.

புத்த சமயத்தின் இக்கதைக்குப் போட்டியாகக் கணவனால் கொல்லப்பட்டுப் பேயாகிப் பின்னர் அவனைக் கொன்று பழிவாங்கிய நீலி மறுபிறவியில் நீலகேசியாகப் பிறந்து சமணத் துறவியாகிப் புகழ்பெற்றதாக நீலகேசி காவியம் கூறுகிறது.

இவையெல்லாம் பெண்ணுரிமை குறித்து அவ்வப்போது தோன்றிய இலக்கியப் படைப்புகள். இப்படைப்புகள் எந்த அளவுக்கு உண்மையில் பெண்களின் உரிமைகளின் வெளிப்பாடுகள் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றமும், பொருளியலில் ஓரளவு தற்சார்பும் பெற்ற நிலையிலும் கூட நம் இலக்கியம் பெண்ணுரிமையைப் பொறுத்த வரை இந்த உயரத்தை எட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

இவ்வாறு பெண்ணுரிமையைப் பொறுத்து ஒன்றோடொன்று போட்டி போட்ட இவ்விரண்டு சமயங்களும் பிற்காலத்தில் பெண்களைப் பாவப் பிறவிகளென்று கூறின.

சிவனியத்தின் எழுச்சிக்குப் பல்லாண்டு பாடியவர் காரைக்காலம்மையார். அதன் முன்னேற்றத்துக்குத் திலகவதி, மங்கையர்க்கரசி போன்ற பெண்கள் ஆற்றிய தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும் வெற்றி பெற்ற சிவனியம் பெண்களை இழி பிறவிகளாகவே மதித்தது.

மாலியத்திற்கு ஆண்டாளின் பணி அளப்பரியது. ஆனால் வலுப்பெற்ற மாலியம் பெண்களை மதிக்கவில்லை.

இவையனைத்தும் சுட்டிக்காட்டுவது ஒரே உண்மையைத்தான். குமுக இயக்கங்கள் தங்கள் போராட்டத்தின் ஒரு உத்தியாகவே பெண்ணுரிமையை எடுத்துரைக்கின்றனவேயன்றி பெண்ணுரிமை மீதுள்ள ஆர்வத்தினாலல்ல என்பதே அது. இதைத் தான் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் கூறுகிறார். இந்த நிலையில் பெண்களே தலைமை தாங்கி நடத்தும் பெண்ணுரிமை இயக்கங்கள், வெளிநாடுகளிலிருந்து பணத்தையும் முழக்கங்களையும் இரவல் வாங்கிச் செயற்படும் இயக்கங்கள் என்று பல உள்ளன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, வரதட்சிணை ஒழிப்பு என்ற முழக்கங்களை இவை வைக்கின்றன. பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு என்ற கேள்வி மெல்லியதாகவே கேட்கிறது.

பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு, அனைத்துத் தொழிலிலும் ஈடுபட உரிமை என்ற கேள்விகள் எழுந்தாலும் அதனுள்ளே இருக்கும் ஒரு பெரிய சிக்கல் பெரும் தடங்கலாக இருக்கிறது. இதன் விளைவாக உண்மையிலேயே பெண்ணுரிமையை விரும்புவோரும் விரும்புவோர் போலக் காட்டிக் கொள்வோரும் ஒரு குறையை முன் வைக்கிறார்கள். பெண்களுக்கு உரிமைகளைக் கொடுக்க முன் வந்தாலும் அவர்கள் பின்னணியிலேயே இருக்க விரும்புகிறார்கள் என்பது தான் அந்தக் குறை. இப்படி ஒரு நிலைமை இருப்பது உண்மைதான். இதற்கு மூன்று காரணங்களை முகாமையாகக் கூறலாம்.

முதற்காரணம் ஒருவகைக் கூச்சம். இதுவரை வீட்டினுள்ளும் மிஞ்சிப் போனால் கல்வி நிலையங்களுக்குள்ளும் அடங்கிப் போயிருந்த பெண்கள் திடீரென்று வெளியில் வந்து தாராளமாகப் பழகுவதில் உள்ள கூச்சம். இந்தக் கூச்சம் பெரும்பாலான ஆடவர்களிடமும் கூட உண்டு. இதனாலேயே பலர் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாலும் அதை அவர்கள் தவிர்க்கக் காரணமாகிறது. பெண்களிடையில் குமுகச் சூழலால் உருவான கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக விலகி அதனால் இக்கூச்சமும் குறையத் தொடங்கியிருக்கிறது.

இரண்டாவது காரணம் மெத்தனம். இப்போது நிலவும் சூழ்நிலையில் பெண்கள் தங்களுக்குச் சில வசதிகள் இருப்பதாகக் கருதுகிறார்கள். தம் தலை மீது சுமைகள் எதையும் தாங்க வேண்டியதில்லை. பணம் ஈட்டல், அவற்றுக்கு ஏற்றவாறு செலவுகளை முறைப்படுத்தல், செலவுகளின் முன்னுரிமையை முடிவு செய்தல், பணம் ஈட்டுவதிலுள்ள ஒழுக்கம், தன்மானம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளல் போன்ற பொறுப்புகளிலிருந்து தப்புவது போன்றவை குடும்பத்தினுள் உள்ள வசதிகள்.

பேருந்துகள், திரைப்பட அரங்குகள் போன்றவற்றில் பெண்களுக்கென்று மட்டும் ஒதுக்கீடுகள், சில துறைகளில் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கருத்து நிலவுதல் போன்ற சிறப்புச் சலுகைகள் போன்றவை பெண்களை இன்று நிலவும் அமைப்பை உடைத்து விடுபட வேண்டுமென்ற வேட்கையைப் பரவலாக ஊட்டவில்லை.

மூன்றாவது காரணம் முகாமையானது மட்டுமல்ல பிற இரண்டு காரணங்களுக்கும் அடிப்படையானது. புறமனதில் வெளிப்படாமல் உள்மனதில் மறைந்து நின்று செயற்படுவது. அதை நாம் பெண்மை அச்சம் என்று குறிப்பிடலாம். தாய்மை அச்சம் என்பது கூடப் பொருத்தமாக இருக்கும்.

பெண் புறவாழ்வில் ஈடுபட்டால் பலதரப்பட்ட ஆண்களோடும் பழக வேண்டியிருக்கும். இரவு, பகல் என்ற வேறுபாடு, உள்ளூர், வெளியூர் என்ற வேறுபாடு இன்றிப் பழகவேண்டியிருக்கும். அத்தகைய சூழல்களில் அவள் விரும்பியோ விரும்பாமலோ திருமணத்திற்கு முன்பாக அல்லது திருமணத்துக்குப் புறம்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளநேரும். அது வெளிஉலகுக்குத் தெரியாமலிருந்தாலும் தாய்மை மூலம் வெளிப்படலாம். அதன் மூலம் அவள் குடும்ப வாழ்வும் குமுக வாழ்வும் பாதிக்கப்படுவது இன்றைய நிலையில் உறுதி. இன்று ஒரு பெண் பிற ஆடவர்களுடன் தன் தொழில் தேவைகளுக்காகக் கூட குமுகம் விதித்திருக்கிற வரம்புக்கு அதிகமாகப் பழகினால் அவள் மீது ஐயங்கொள்கிறது. குமுகக் கட்டுபாட்டை மீறுபவளென்று குற்றம் சாட்டுகிறது. அவளை ஒதுக்கி வைக்கிறது. பெண்கள் அவளை ஏளனம் செய்கின்றனர். ஆண்கள் அவள் பெண்மையை மலிவாகக் கருதுகின்றனர். வீட்டினுள் பெற்றோரும் உடன்பிறந்தோரும் கணவனும் அவளை நம்ப மறுக்கின்றனர். அவள் தன்மானத்துடன் வாழ்வது இயலாமற் போகிறது. அளவிலாத் துணிவும் திறமையும் பெற்ற சிலர் இச்சூழலிலும் புறவாழ்வில் வெற்றி பெறுகின்றனர். பலர் பொருளியல், அரசியல் பின்னணியினால் நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் பற்றி இழிசொற்கள் கூறப்பட்டாலும் அவற்றால் பாதிப்புக்குள்ளாகும் எல்லையை அவர்கள் தாண்டி நிற்கிறார்கள்.

வரலாற்றில் குறிப்பாகப் பிற்போக்கு நிலவிய இடைக்காலத்திலும் பெண்கள் புறவாழ்வில் ஈடுபட்டுப் புகழெய்தியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் ஏதோவொரு விலைகொடுக்க வேண்டியிருந்தது. காரைக்காலம்மையார் பேயுருக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் சரியாகப் புரியவில்லை. ஆனால் பெண்ணென்ற வகையில் ஆண்கள் நெருங்க முடியாத ஓர் உருவத்தை அவர் பூண்டார் என்பது புலனாகிறது. ஒளவையார் என்ற பெயரில் அழைக்கப்படும் பெண்கள் கிழவிகளாகவே குறிப்பிடப்படுகின்றனர். முதுமை எய்திய பின்னர் தான் புறவாழ்வில் ஈடுபட்டனர் என்பது இதன் பொருளாயிருக்கலாம். திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார் வீட்டினுள்ளிருந்தே தம்பியைச் சமயமாற்றம் கொள்ள வைத்ததன் மூலம் புகழ் பெற்றவர். அவரது புறவாழ்வு வீட்டினுள்ளேயே அடங்கிவிட்டது. கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி அரசனின் மனத்தை மாற்றியதினால் புகழ் பெற்றவள். ஆனால் அவளது ஒழுக்கத்தைப் பற்றிக் கேலி பேசுபவர்கள் உண்டு. மதுரை அரசி மீனாட்சி மகனின் பெயரால் நாட்டை ஆண்டவள். அதிகாரியாக இருந்த தாயுமானவரை அவளோடு தொடர்புபடுத்தியதால் அவர் துறவு பூண்டார். ஆனால் இக்குறைகள் பெரிதாய்ப் பேசப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களின் சமயச் சார்பு அவர்களைக் காத்து நிற்கிறது. ஆண்டாளுக்கு அரசனின் முழுத்துணையும் இருந்தது. ஆனால் அரங்கனோடு இரண்டறக் கலந்துவிட்டாள் என்ற கதையின் பின்னால் என்ன ஒளிந்துகொண்டிருக்கிறதோ அறியோம்.

மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம். பணக்கார நாடுகளில் பெண்களின் நிலையைப் பார்ப்போம். புதினங்களின் மூலமாகவும், தாளிகைகளின் மூலமாகவும் அறிந்தவற்றைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

பொதுவாகவே ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குப் பின் பாலியல் பொறையுடைமை இருந்தது. ஒரு பெண் கணவனல்லாத ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரியவந்தால் ஆடவர் இருவரும் தனிப் போர் நடத்தி வெல்பவர் அப்பெண்ணை வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் அடிப்படையில் வானம் வசப்படும் என்ற தொடர்கதையை தினமணிகதிர் இதழில் பிரபஞ்சன் எழுதினார். ஆளுநர் டியூப்ளேயின் மனைவியின் மகள் (மனைவிக்கு டியூப்ளே இரண்டாம் கணவன்) வேறொருவனோடு தொடர்பு வைத்திருந்ததை அறிந்து அவனைக் கையும்களவுமாகப் பிடிப்பதற்காக அவளது கணவன் வருகிறான். மனைவியும் அவள் காதலனும் தனியறையில் கலவியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து நாகரிகத்துடன் பொறுமையாக வெளியில் காத்திருக்கிறான். அவர்கள் வெளியில் வந்த பின் மனைவியின் காதலனைத் தனிப் போருக்கு அழைக்கிறான். போரில் காதலன் பின்னடைய மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறான். செல்லப் பிள்ளையாக வளர்ந்து உலகம் அறியாதவளாக வாழ்ந்து விட்ட அப்பெண் மனம் கருகி உண்ணாமலிருந்து செத்துப் போகிறாள்.

கிறித்தவ சமயம் மணவிலக்கை ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் மணவிலக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் கணவன் மனைவி இருவரும் வழக்கு மன்றம் செல்லாமலே வழக்குரைஞர்கள் மூலம் மணவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம். பொருட்படுத்தத் தேவையற்றவை என நமக்குத் தோன்றும் காரணங்களுக்கெல்லாம் கூட அங்கு மணவிலக்கு வழங்கப்படுகிறது. தன் துணை வேறொருவருடன் உடலுறவு கொள்வதைக் கண்டு அது அவருக்கும் தெரிந்துவிட்டால் இருவரும் உடனடியாக மணவிலக்குப் பெற்றுக் கொள்வது நாகரிகமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் நண்பர்களாகவே வாழ்வர். ஆனால் தன் துணை இன்னொருவருடன் காதலுடன் பழகுவதைப் பொறுத்துக் கொள்வதும் அதைப் பிறர் அறிந்தாலும் மற்றவரை அதற்காக இழிவாக நினைப்பதும், தூற்றுவதும் இல்லை. கழகப் பாடல்களில் குறிப்பிடப்படுவது போல் “அலர்” எழுவது உண்டு.

இவ்வளவு இருந்தும் அமெரிக்கப் பெண்களுக்கு நிறைவு இல்லை. திருமணத்தையே தங்களுக்கு இடப்படும் விலங்காகக் கருதுகிறார்கள். என்னதான் கணவன்கள் கண்டும் காணாமலுமாக நடந்து கொண்டாலும் மனைவி தனக்கென்று நேரத்தையும் மனத்தையும் கொஞ்சமாவது ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. அதற்குக் கூட அமெரிக்கப் பெண்கள் ஆயத்தமாயில்லை. அதே நேரத்தில் உடலின்பத்தையும் குழந்தைப் பேற்றையும் புறக்கணிக்கவும் விரும்பவில்லை. எனவே தன்னிடம் நெருங்கிப் பழகவரும் ஆடவர்களிடம் எவ்வளவு காலம் வேண்டுமாயினும் இருவரும் விரும்பும் வரையில் சேர்ந்து வாழலாம்; ஆனால் அவன் என்றும் தன்னை மணம் புரிந்து கொள்ளக் கேட்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கின்றனர்.

தமக்குப் பிறக்கும் குழந்தைகளை காப்பகங்களில் வளர்க்கிறார்கள். கிழமை இறுதிகளில் தங்களோடு வைத்துக் கொள்கின்றனர். அங்கு பொதுவாக வேலை வாய்ப்புகளில் பெரும் இடரில்லை. வேலையிலிருக்கும் போது உள்ள ஈட்டத்தைச் சேமித்து முதலீடுகள் செய்து வேலையில்லாக் காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு மீண்டும் தந்தை என்ற உறவு இல்லாமலே குழந்தைகள் வாழும் சூழ்நிலை உலகில் உருவாகிறது.


அண்மையில் இந்தித் திரைப்பட நடிகை ஒருவர் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று அதைத் துணிவுடன் ஊரறிய வளர்த்து வருகிறார். இதுவும் அந்த அமெரிக்கப் பாணிதான்.

இதனுடன் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் வாழும் ஓரினப் புணர்ச்சி இப்போது மேலைநாடுகளில் மலிந்து வருகிறது. பிரிட்டன் ஒலிபரப்புக் கழகம் புதுமண இணைகளுக்கு வழங்கி வந்த தேனிலவுச் செலவுச் சலுகையை இத்தகைய ஓரினப் புணர்ச்சியாளருக்கும் மணமின்றிச் சேர்ந்து வாழ்வோருக்கும் விரிவுபடுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.

பெண் தன் உரிமைகளில் எதனையும் ஆடவரோடு பகிர்ந்து கொள்ள மனமின்மையும் ஆடவன் தன் மனைவிக்குச் சமஉரிமை வழங்க விரும்பாமையுமே இத்தகைய ஓரினத் திருமணங்களுக்குக் காரணங்கள்.

இந்த வேளையில் கிறித்தவ மறைநூலில் காணப்படும் ஒரு செய்தி ஆர்வ மூட்டுவதாக உள்ளது. மக்கள் மீண்டும் உயிர்த்தெழுதலைப் பற்றி ஏசுவிடம் கேட்டனர். ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஒருவர் பின் ஒருவராகக் கணவர்கள் இறந்து போக மீண்டும் மீண்டும் ஏழு முறை மணக்கிறாள். உயிர்த்தெழுதலின் போது அவள் அந்த ஏழுவரில் யாருடைய மனைவியாக இருப்பாள் என்பது அந்தக் கேள்வி.

அவர் கூறிய விடை நம்மைச் சிந்திக்க வைக்கிறது. உயிர்த்தெழலின் போது கணவன் மனைவி போன்ற உறவுகள் இருக்காது என்பதே அந்த விடை. இந்த விடை இக்கட்டான ஒரு கேள்வியிலிருந்து நழுவுவதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்குமோ? இருந்திருக்க முடியாது. ஏனென்றால் விடை கேள்வியைவிடச் சிக்கலானதாகும். பெண்ணடிமைத்தனம், பெண் விடுதலை என்ற சிக்கல்களைப் பற்றிய ஆழமான சிந்தனைகளிலிருந்தே இத்தகைய ஒரு விடை பிறக்க முடியும். ஏசுபிரான் கூறிய இந்த நிலையை நோக்கியே பணக்கார நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.

நம் பண்டைத் தொன்மங்களில் கந்தருவர் என்றொரு இன மக்கள் வருகின்றனர். அவர்களை யாழோர் என்றும் விஞ்சையர் என்றும் இயக்கர் என்றும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அங்கு ஆடவரும் பெண்களும் மணமின்றியே கூடுவர். பொருளிலக்கணத்திலுள்ள குறிஞ்சித் திணைக்கு யாழோர் மணத்தையே தொல்காப்பியர் ஒப்பிட்டுக் காட்டுவார். தொன்மங்கள் இதைக் கந்தருவ மணம் என்று குறிப்பிடும். துசியந்தனும் சகுந்தலையும் காட்டில் கந்தருவ மணம் புரிந்து கொண்டனர் என்றே மகாபாரதம் கூறும். கந்தர்வர்கள் வானில் பறப்பவர்கள். அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் போல் அறிவியலிலும் செல்வத்திலும் உயர்ந்திருந்த இவர்களிடையில் அவர்களை விடவும் மேம்பட்ட ஆண்-பெண் உறவுகள் சுட்டப்படுவதைப் பார்க்கும் போது இவர்கள் புராண வடிவில் காட்டப்படும் உண்மையில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டமோ என்ற ஐயுறவு நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம் நாட்டில் கணவனில்லாமல் பெண்கள் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. ஆடவர்கள், அதிலும் குறிப்பாகப் படித்த ஆடவர்கள் பணத்துக்காக மனைவிகளைத் தீக்குளிப்பாட்டும் வழக்கம் பெருகி வருகிறது. எனவே பெண்கள் உயிருக்கஞ்சித் திருமணத்தைத் தவிர்க்க முற்படுவர். அதற்காகவே தம் சொந்தக் காலில் நிற்கும் பயிற்சியையும் அவர்கள் மேற்கொள்வர்.

பிறந்த பெண் குழந்தைகளைக் கொல்வதும் பிறக்கும் முன்பே கண்டறிந்து கருக்கலைப்பதும் இன்று பொது வழக்கிலிருப்பவை. இது நம் நாட்டுப் பெண்ணியர்கள் நடுவில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவர்களால் இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நடைமுறை பெண் அளவுககு மீறிக் கொடுமைப் படுத்தப்படுவதின் விளைவே. இந்த விளைவே ஆணின் ஆதிக்கத்துக்கு சாவு மணி அடிப்பதாக முடியும்.

வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவளை ஆடவரிடமிருந்து விலகி நிற்கத் தூண்டும் அதே வேளையில் பெண் குழந்தைக் கொலையும் கருக்கலைப்பும் எதிர்கால ஆண்-பெண் சமநிலையைக் குலைத்துப் பெண் ஒரு அரும்பொருளாய் மாறி விடுவாள். ஆண் மண்டியிட்டுத் தான் ஆக வேண்டும்.

மனிதன் இன்னும் பெருமளவு விலங்காகவே வாழ்கிறான். எனவே அவனால் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடிந்தாலும் தன் செயல்களை மாற்ற முடிவதில்லை. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்த பின்னரே அவன் இக்கொலைகளை நிறுத்த முயல்வான்: அதன் பின்னர் தான் உண்மையான ஆண்-பெண் சமநிலை உருவாகும். அதுவரை பெண்ணுரிமை இயக்கங்களும் அயராது பாடுபடவேண்டும்.


அடிக்குறிப்புகள்:

[1] இப்பகுதி சோவியத்து நாடு உடைபடுவதற்கு முன் எழுதப்பட்டதாகும்.
[2] எப். ஏங்கல்சு குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னுரை.
[3] நியூசெஞ்சுரி புத்தக நிலைய வெளியீடு.

0 மறுமொழிகள்: