13.11.05

பாலை நிலத்து ஒட்டகம்

ஆகஸ்டு 2004 கணையாழியில் வெளிவந்த வள்ளுவனின் "பாலையின் நீங்கிய ஒட்டகம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக “குமரிக்கண்டத்துப் பாலை நிலத்து ஒட்டகம்" என்ற தலைப்பில் ஜனவரி 2005 கணையாழியில் வந்திருக்கும் திரு.சு.கி. ஜெயகரனின் கட்டுரைக்கு விடையாக பல மடலங்கள் கொண்ட ஒரு நூல் தொகுதியில் கூறப்பட வேண்டிய செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

வெள்ளுவனின் அடிப்படைக் கருத்தாகிய இன்றைய தமிழகத்தில் பாலைவனம் இல்லை என்பதைச் சான்றுகளுடன் உறுதி செய்கிறது கட்டுரையின் முதல் பகுதி.

ஒட்டகத்தின் திரிவாக்கம் பற்றி விளக்குவது இரண்டாம் பகுதி. இன்றைய அகழ்வாய்வுச் சான்றுகளையும் காலக் கணிப்புகளையும் அடிப்படையாக்கக் கொண்டுள்ளார் திரு.ஜெயகரன். "பண்டை உலகின் ஒரு பெரும்பகுதி காலவோட்டத்தில் கடலினுள் மூழ்கியுள்ளது" என்ற உலகெங்கிலுமுள்ள மக்களின் பதிவுகளையும் மரபுவழிச் செய்திகளையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற ஒருசாரரின் கருத்தையும் நம்பகமான ஒரு காலக்கணிப்பு முறையை இன்று வரை இன்றைய அறிவியல் துறை உருவாக்கவில்லை என்ற உண்மையையும் புறக்கணித்துவிட்ட ஒரு கூற்றாகும் அவருடையது. அத்துடன் உலகின் பெரும்பாலான விலங்குகள் முதல் நிலைத்திணைகள் (தாவரங்கள்) வரை ஒரு கோடியில் நீரில்லா வரண்ட பாலை முதல் இன்னொரு கோடியில் நீர் உறைந்த தாங்கவியலாக் குளிர் நிலமான பனிப்பகுதி வரை இடையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தட்பவெட்ப நிலைகளுக்குள் வாழ்ந்து திரிவாக்கம் பெற்றுள்ளன என்பதற்கான தடயங்களைக் காணமுடியும். அதனால், இன்று பசுமைச் சூழலுக்கும் பொருந்தியதாக விளங்கும் முழுமை பெற்ற ஒட்டகம் பாலைவனத்தில் தோன்றி அங்கேயே திரிவாக்கம் பெறவில்லை என்பதால் மட்டும் மனிதன் தோன்றிய பின் இருந்த ஒரு பாலை நிலத்தில் ஒட்டகமும் இருந்திருக்கிறது என்பது பொருந்தாக் கூற்றாகி விடாது. அதுவும் அந்த விலங்கைக் குறிக்கும் சொல்லைக் கொண்ட மிகப்பழைய இலக்கண நூலைக் கொண்ட மொழியைப் பேசுவோர் இன்று வாழும் நிலத்தில் பாலைநிலம் மட்டுமல்ல, ஒட்டகமும் இல்லாதபோது, தென் அமெரிக்காவில் ஒட்டக இனத்தைச் சேர்ந்த லாமா (Llama) என்ற விலங்கு உள்ளது. எனவே ஒட்டகத்தின் திரிவாக்கத்தில் தென் அரைக் கோளத்துக்கும் ( Southern Hemisphere ) பங்குண்டு என்பதும், மூழ்கிய பாலைநிலத்தில் ஒட்டகம் இருந்ததென்ற செய்தி அந்தத் திரிவாக்க வட்டத்தை முழுமைப்படுத்தும் ஒரு தரவு என்பதும் தெளிவு.

வரலாற்று வரைவென்பது வெறும் தொல்பொருளாய்வல்ல. தொல்லாய்வு வரலாற்றின் துணைத்துறைகளில் ஒன்று மட்டுமேயன்றி அதுவே இறுதியும் உறுதியுமாகாது.

ஒட்டகம் வயிற்றில் நீரையும் திமிலில் கொழுப்பையும் சேமித்துள்ளது. இரட்டைதிமில் உள்ள சைபிரியப் புல்வெளி ஒட்டகத்துக்கு இன்று பாலை ஒட்டகத்துக்குக் கிடைப்பதைவிட புல்லாகிய உணவு எளிதில் கிடைக்கலாம். ஆனால் இன்றைக்கு 10,000 முதல் 62.000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய நான்காம் பனிப்படர்ச்சி காலத்தொடக்கத்தில் பனிப்படர்வு தெற்கு நோக்கி நகர நகர அதற்குக் கிடைத்த உணவு வளம் குறையக்குறைய அதன் சேமிப்புத் திறன் உயர்ந்ததன் விளைவாகவே இரட்டைத் திமில் உருவாகியிருக்க வேண்டும். இதே நிகழ்ச்சிகள் இன்று கடலாக மாறியுள்ள தென் அரைக்கோளப் பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும். ஆர்வமுள்ள நில இயங்கியலாளர்கள் முயன்றால் வட அரைக் கோளத்தில் பனிப்படர்வுக் காலங்களில் இருந்த மிகத் தாழ்ந்த கடல் மட்டத்தை வைத்து தென்னரைக் கோளத்தில் இன்ன கடலடித்தள மட்டங்களின் அடிப்படையில் கடலுக்கு மேலிருந்த நிலப்பரப்புகளை இனம் காணமுடியும். அவ்விடங்களில் குறிப்பாக மகரவரையில் (மகரரேகை அட்சம் 23½° தெ) உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாலைநிலம் பற்றியும் ஒட்டகம் பற்றியும் கூறும் தொல்காப்பிய முரண்பாட்டுக்குத் தீர்வு காண முடியும்.

குமரிக்கண்டம் என்ற பெயர் பற்றிய திரு. ஜெயகரனின் மனக்குறை வேடிக்கையாக உள்ளது. அமெரிக்க மூலக்குடிகளுக்கு "சிவப்பிந்தியர்" என்று ஐரோப்பியர் குட்டிய பெயரை நாம் பயன்படுத்தலாம் என்றால், பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் கடலினுள் முழுகிய நிலத்துக்கு குமரிக்கண்டம் என்று கா. அப்பாத்துரையார் பெயர் குட்டியதிலும் அதை நாம் பின்பற்றுவதிலும் தவறேதுமில்லை.

சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டப் பெயர் மட்டுமல்ல, முழுகிய நிலப்பரப்பு பற்றிய தெளிவான குறிப்புகள் இடம்பெறாததில் வியப்பேதுமில்லை. தவறு சங்க இலக்கியங்களில் தமிழர்களின் முழு வரலாறும் அடங்கியுள்ளது என்று கொள்வதில் தான். அது ஒரு தொகுப்பு. தொகுத்தோரின் நலன்கள் அதில் அடங்கியுள்ளன. குமரிக் கண்டத்தைக் கடல் கொள்ளக் கொள்ள மக்கள் கடல் மூலம் எளிதாகக் கடந்து உலகெலாம் பரந்து செல்ல நிலவழியில் இறுதியாக வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற அடையாளத்துடன் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்தனர். அடர்காடாக இருந்ததை இரும்புக் கோடாரி கொண்டு திருத்திக் குடியேறியதைப் பரசுராமன் கதை தொன்மவடிவில் கூறுகிறது. இவர்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்த நான்கு மக்கள் குழுவினரான துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போரின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கும் மாங்குடி கிழார் பாடிய புறம் 335,

“அடலருந்துப் பின் குரவே
தளவே குருந்தே முல்லை என்ற
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே அவரையொடு
இந்நான் கல்லது உணவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒன்று ஏந்து மருப்பின் களிறு எறிந்து விழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லை”

என்று கூறுகிறது.

உலகளாவலுக்கு ( Globalisation ) எதிராக, ஏழை நாடுகளின் பண்பாடு அழிகிறது என்று இன்று கூறவோரின் குரல் இப்பாடலில் எதிரொலிக்கவில்லையா? அரசர்களைப் போற்றிப் பாடியவரான மாங்குடி மருதனாரையும் மாங்குடிக்கிழாரையும் ஒருவர் என்று தொகுப்பாளர்கள் கருதிவிட்டதால் இப்பாடல் தொகுப்பினுள் இடம்பெற்று விட்டது.

கடம்பர்களை, உரோமக் கடல் வாணிகர்களுக்குப் போட்டியாக உள்ளனர் என்று (இன்றைய நம் ஆட்சியாளர்களைப் போல்) வந்தேறிகளான சேரர்கள் துரத்தி அவர்கள் கோவா மக்களின் மூதாதைகளாயினர். பாணரும் துடியரும் தடந்தெரியாத அளவுக்குச் சிறுத்துவிட்டனர். பறையர் மீதான ஒடுக்குமுறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. "பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்", இது இலக்கியத்துக்கு வெளியேயுள்ள சான்று.

குமரி என்ற பெண்ணைப்பற்றிய குறிப்பும் சங்கத் தொகுப்பில் இல்லை. "குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி" என்ற சங்கப்பாடல் வரியில் அயிரை என்ற நன்னீர் மீன்பற்றிய குறிப்பு குமரித்துறை என்பது ஒர் ஆற்றுத் துறைமுகம் என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது. மீன்பற்றி தெளிவில்லாத தொகுப்பாளரால் இது தவறுதலாக இடம் பெற்றிருக்க வேண்டும். "குமரித்துறைவன்" என்று பாண்டியனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அதுமட்டுமல்ல, பாண்டிய மரபே ஒரு பெண்ணிலிருந்து தான் தொடங்கியது என்ற உண்மையும் சங்கத் தொகுப்பில் மறைக்கப்பட்டுள்ளது. மதுராபதி, கொற்றவை (வேட்டுவவரி) ஆகிய பெண் தெய்வங்கள் சிவனின் முன் வடிவம் என்ற செய்தியைக் கூட சிலப்பதிகாரம் மறைமுகமாகச் சுட்டுகிறது. குமரிக்கோடு, குமரியாறு, குமரி ஆழ்கடல் (தொடியோள் பௌவம்) போன்ற செய்திகளையும் சிலப்பதிகாரம் தான் தருகிறது. இவற்றின் அடிப்படையில் கடல் கொண்ட நிலப்பகுதியைக் குமரிக்கண்டம் என்று அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. திரு.ஜெயகரன் எதிர்ப்பார்ப்பது போல் கடலடியில் பெயர்ப்பலகை எதையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை.

சந்திரகுப்த மௌரியன் அவையிலிருந்த கிரேக்கத்தூதன் மெகாத்தனி, பாண்டிய மரபு பாண்டியா என்ற கிரேக்கப் பெண்ணிலிருந்து தோன்றியதாக எழுதி வைத்துள்ளான். உலகின் அனைத்து அரசு மரபுகளும் தம் கடவுளர்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவது பண்டைக் கிரேக்க மரபு. திருவிளையாடல் புராணம் பாண்டிய அரசியாகிய தடாதகைப்பிராட்டி பற்றி கூறுகிறது. உண்ணாமுலையாகிய மணமுடிக்காத குமரியை, எந்தக் கோயிலிலும் கணவனுடன் இன்றி தனியாகவே அமர்ந்துள்ள தேவியைச் சிவன் மனைவியாக்கியது போல், பண்டைத் தமிழகப் பெண்ணரசிகளாகிய அல்லியையும் பவளக்கொடியையும் மகாபாரதத் தலைமக்களின் மனைவிகளாக்கி வைத்துள்ள மக்கள் இலக்கியங்களும் புதைத்துள்ள உண்மைகளை நீலக்கடற்கரை ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியன்னை தமிழர்களின் முதல் பேரரசை அமைத்தவள் ஒரு பெண்ணென்றும் அவள் பெயர் குமரி என்றும் கண்ணும் கருத்தும் உள்ளோருக்கு நன்றாகக் கேட்குமளவுக்கு உரக்கக் கூறுகிறாள்.

இந்த உண்மைகளைச் சங்க நூற் தொகுப்புகள் மறைத்த பின்னணியில் தான் இளங்கோவடிகள், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் போன்றோர் சங்கத் தொகுப்புக்கு வெளியில் தாமறிந்த உண்மைகளைப் பதிந்து வைத்துள்ளனர்.

சங்கநூல் தொகுப்பாளர்களைப் போன்று 19ஆம் நூற்றாண்டில் சங்க நூற்கள் உட்பட பண்டை இலக்கியங்களைப் பதிப்பித்தவர்கள் தங்கள் நலன்களுக்கேற்றவாறு பாட வேறுபாடுகளைக் காட்டினர். 17 - 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய அறிஞர்கள் நம் நாட்டினுள் தொகுத்து வைத்திருந்த நாட்டார் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொறுப்பிலிருந்த அறிஞர்கள் அவற்றில் பெரும்பான்மையாயிருந்த, தங்கள் கண்ணோட்டத்துக்கு ஒவ்வாதவற்றை அழித்துவிட்டனர். இன்றும் ஒடுக்கப்பட்டு மேலேழும்பி வரும் மக்களிடையிலுள்ள அறிஞர்கள் சிலர் தமக்கு ஏற்றவாறு கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் திரித்து வெளியிடுகின்றனர். நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்ட (1979) கோவை இருளர்களைப் பற்றிய வனாந்தரப்பூக்கள் என்ற நூலை எழுதிய "செங்கோ" என்பவர் தனக்கு ஏற்பில்லாத தரவுகளைப் புறக்கணித்திருப்பதாகக் கூறுகிறார். எனவே தொகுப்பு நூல்களுக்கு வெளியே உள்ளவற்றுடன் ஒப்பிட்ட நூல்கள் தரும் செய்திகளை உரைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தினுள் நுழைந்த குமரிக்கண்ட மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கடும் நெருக்கடி அரபிக்கடலோரம் பஞ்சாபிப் பாலை நிலத்தில் (அவந்தி நாட்டில்) கட்சு வளைகுடாவில் வீழ்ந்து பின்னர் மணலில் மறைந்த காயங்கரை (மணிமேகலை 9. பழம் பிறம்புணர்ந்த காதை) எனப்படும் கோக்ரா ஆற்றின் (டி,டி,கோசாம்பி - பண்டைய இந்தியா) கரையிலேறி காடு செறிவில்லாத மேற்குத் திசை நோக்கி சிந்துவெளி முதல் காந்தாரம் வரையும், காடுகளை அழித்துக் கொண்டு கங்கைக் கரைவழியாகவும் பரவியவர்கள் காயங்கரை ஆற்றின் நினைவாகவோ அல்லது குமரிக் கண்டத்தில் இருந்த ஓர் ஆற்றின் நினைவாகவோ சரயு ஆற்றைப் பற்றிய நினைவைப் பதிந்தவர்களின் (கங்கையின் ஒரு கிளையாற்றுக்கு கோக்ரா என்று பெயரிட்டுள்ளனர் - டி.டி.கோசாம்பி - பண்டை இந்தியா வரைபடம்) படைப்புகளும் தொகுப்புகளுமாகிய வேதங்களிலும் இராமாயணம், மகாபாரதம், தொன்மங்கள் போன்றவற்றிலும் தான் குமரிக்கண்டம் பற்றிய செய்திகளை விரிவாக அறிய முடிகிறது. உபநிடதங்கள், பிராமணங்கள் மற்றும் பிற சமற்கிருத இலக்கியங்களை ஆய்ந்தால் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற பல்வேறு துறை வளர்ச்சிகளை அறிய முடியும். வேதமொழி, சமற்கிருதம், அதிலுள்ள தொன்மங்கள் ஆகிய அனைத்தும் சிந்து சமவெளி குறியீடுகளிலிருந்து தோன்றியவை என்ற இந்திய முன்னாள் தொல்வாய்வு இயக்குனர் எஸ்.ஆர்.ராவின் கருத்து இதற்கு அரண் சேர்க்கிறது.

அதனால்தான் பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர திட்சிதர் முதல் பாவாணர் வரை தமிழகம், குமரிக் கண்டம் ஆகியவை குறித்த செய்திகளுக்கு சங்க இலக்கியங்களை விட சமற்கிருதத் தொன்மங்களிலிருந்தே சான்றுகளைக் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஏழேழ் நாடுகள் பற்றிய அடியார்க்கு நல்லார் கூற்றில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டுச் சாதி வரலாறுகள் அனைத்திலும் ஏழு மாதர்கள் அல்லது தாயர் பற்றிய குறிப்பு உண்டு. ஏழு முனிவர்கள் பற்றி தொன்மங்கள் கூறுகின்றன. முறையே ஏழு பெண்களை முதல்வர்களாகக் கொண்ட குக்குலங்கள் ("இனக்குழுக்கள்") அக்குக்குலப் பூசாரித் தலைவர்கள் ஆகியோரையே இவை குறிக்கும். இத்தலைவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்தவர்களே நம் தொன்மங்களில் வரும் இந்திர பதவி ஏற்றோர். இது போன்ற ஒரு நடைமுறை பண்டை எகிப்தியப் பதிவுகளில் உள்ளதாக ஜோசப் கேம்பெல் என்பார் எழுதிய Masks of Gods - Primitive Mythology - என்ற நூலில் உள்ளது. இத்தகைய குக்குல தெய்வங்களைப் பின்னுக்குத் தள்ளி குறிஞ்சி முதல் நெய்தல் வரையுள்ள மக்களை நில எல்லை அடிப்படையில் தலைமை தாங்கி தொடங்கி வைத்தவர்களே பொருளிலக்கணம் கூறும் ஐந்நிலக் கடவுள்களின் மனித மூலவர்கள். இது தான் உலகில் முதன்முதலில் தோன்றிய மண்ணின் மைந்தர் ஆட்சி. ஏழு பிரிவான நிலங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வேழு குக்குலங்களுக்கும் உரிய பகுதிகள் ஒன்றுக்குள் ஒன்றாக விரவிக்கிடந்தன என்பது அடியார்க்குநல்லார் உரையிலிருந்து தெரிகிறது.

விசை என்ற இதழில் வந்த "மூதாயர்கள்" என்ற கட்டுரை உலக மக்கள் அனைவரும் 5 முதல் 10 எண்ணிக்கைக்கு உட்பட்ட பெண்களின் வழி வந்தவர்கள் என்று கூறுவது இதற்குப் பொருந்துகிறது.

ஈழம் என்பது யாழின் திரிபே. இலங்கையை ஆண்ட இராவணனின் கொடி யாழே! ஈழத்துள் யாழ்ப்பாணம் இருப்பது ஒரு சான்று. யாழை மீட்டுவோர் பாணர்.

இராவணனின் இலங்கை கூட இன்றைய இலங்கை அல்ல. அது கடகவரையில் (அட்சரேகை வ.23°30ˈ தோராயமாக ) இருக்கும் உச்சையினிலிருந்து பழந்தீவு பன்னீராயிரம் எனப்படும் இலக்கத் தீவுகள் வழியாக மகரவரை (அட்சம் தெ.23°30ˈ தோராயமாக) முடிய ஓடிய பண்டைய மைவரை(Meridian) ஆகிய இலங்கை உச்சையினி மைவரையில் (தீர்க்க ரேகை 75°43ˈ கிழக்கு) இருந்த தென்னிலங்கையே அது. விரிவுக்கு தமிழியக்கம் இதழில் வந்துள்ள " தென்னிலங்கை" என்னும் எமது கட்டுரை காண்க.

இனி காதங்கள், தொலைவுகள் பற்றிய பகுதிக்கு வருவோம். தமிழ் மரபில் நீட்டல், முகத்தல், நிறுத்தல் போன்ற அளவைகள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காலத்துக்குக் காலம் ஒரே பெயருள்ள அளவைகள் வெவ்வேறு மதிப்பை கொண்டுள்ளது. துறைக்குத் துறையும் இந்த மாறுபாடு உள்ளது. வானியலில் உள்ள நீட்டல் அளவை நில அளவையில் வேறுபட்ட மதிப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும் சரியான அணுகலுடன் முயன்றால் தெளிவான விடையைப் பெற இயலும். அபிதான சிந்தாமணி என்ற தமிழின் முதல் கலைக்களஞ்சியத்தில் "கணிதவகை" என்ற சொல்லின் கீழ் "பூப்பிரமாணம் அறிதல்" என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கும் வாய்ப்பாடு இதற்கு பொருந்தும்.

சாண் 2 கொண்டது ஒரு முழம் (1½ அடி)
முழம் 12 கொண்டது ஒரு சிறுகோல் (18 அடி)
சிறுகோல் 4 கொண்டது ஒரு கோல் ( 72 அடி )
கோல் 55 கொண்டது ஒரு கூப்பிடு (3960 அடி)
கூப்பிடு 4 கொண்டது ஒரு காதம் (15840 அடி = 3 x 5280 = 3மைல்கள் )
(கூப்பிடு - காது - காதம்?)
காற்றில் ஒலியின் விரைவு நொடிக்கு 1089 அடி.
தோராயமாக 1100 அடி
ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவு = 24 x 60 x 1100 = 1584000 அடிகள் = 100 காதங்கள்.
அதாவது ஒரு காதம் என்பது ஒரு நாழிகையில் ஒலி செல்லும் தொலைவில் 100 இல் ஒரு பங்கு.

இவ்வாறு நம் முன்னோர்கள் நில அளவைக்கு காற்றில் ஒலியின் விரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது புலனாகிறது.

அபிதான சிந்தாமணியில் மேலேயுள்ள வாய்ப்பாட்டில் கோல் 56 என்றிருப்பதை 55 என்று திருத்தி மேற்கொண்டுள்ளேன். ஏனென்றால் பண்டை உலக நில அளவையில் 11 அடிப்படையான ஓர் அலகாகும். நம்மூர் மாட்டு வண்டிச் சக்கரத்தின் விட்டம் 5¼ அடியாகும். வட்டத்தின் சுற்றையும் பரப்பையும் கணிக்க உதவும் 22/7 என்ற கூட்டுத்திறனை அகற்றுவதற்காக இந்த விட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கணிதப்படி இந்த மாட்டுவண்டிச் சக்கரத்தின் சுற்று = x விட்டம் = 22/7 x 21/4 அடி = 66/4 அடி = 16.5 அடி x 4 = 66 அடி = இன்றைய நில அளவைச் சங்கிலியின் நீளம் x 10 = 660 அடி = 1 பர்லாங் x 8 = 5280அடி = 1 மைல். 66 அடி x 66 அடி = 4356 ச.அடி. = 10 சென்றுகள் x 10 = 43560 அடி = 1 ஏக்கர். குமரி மாவட்டத்தில் ஓர் ஏர் உழவு என்பது 2½ ஏக்கர் என்பது சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் நடைமுறையிலிருந்தது. 43560 அடி x 2½ = 108900 ச.அடி = 330 அடி x 330 அடி . இன்றுள்ள 10 மீட்டர் = 32.8 அடி என்றிருப்பதை 33 அடி எனக் கொண்டால் 10000 ச.மீ. கொண்ட எக்டேர் பண்டைத் தமிழ் ஏருக்குச் சமமாகும். 2.75 அடி கொண்ட, கையாட்சிக்கு உகந்த, நம்மூர் தச்சு முழக்கோல் x 4 = 11 அடி. 12 தச்சு முழக்கோல் = 33 அடி = 10 மீட்டர். இன்று சாலைகளின் நீளத்தை அளக்க சக்கரம் பதித்த ஒரு கோலைத் தள்ளிச் செல்வது போல் அன்று மாட்டு வண்டிச்சக்கரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

உழுதொழில் புவித்தாயின் வயிற்றைத் கிழிப்பது, எனவே உழவர்களாகிய தசியூக்கள், அதாவது "திராவிடர்கள்" இழிவானவர்கள் என்று கருதியோராகக் கூறப்படும் "ஆரிய "இன் மக்களின் பெயர் கலப்பை எனப் பொருள்படும் "ஏர்" என்ற கிரோக்கச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறிய மாக்சுமுல்லருக்கு ஏர் ஒரு தமிழ்ச்சொல் என்பது தெரிந்திருக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை ஆரியர் என்ற "இன” மக்கள் உலகில் என்றும் வாழ்ந்ததில்லை என்பதும் அவர்கள் மாக்சுமுல்லரின் கற்பனையில் பிறந்தவர்கள் என்பதும் விந்தியத்துக்கு வடக்கில் உள்ள நிலப்பரப்பை ஆரியம் என்பது தமிழ் வழக்கு என்பதும் எமது நிலைப்பாடுகள். ஆரியர் என்று வழங்கப்படும் மரபுக்குப் பொருள் ஆரிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தானே யொழிய ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்பதல்ல.

தமிழ் இலக்கியங்கள் கூறும் முதற் கடற்கோளுக்குப் பின் உருவான தலைநகரான கபாடபுரம் 26.12.2004 அன்று தாக்கிய பேரலையால் கடுமையான தாக்குதலுக்குள்ளான இலங்கைத் தீவின் காலே நகர் இருக்கும் ஏறக்குறைய 5° வடக்கு நிரைவரை(அட்சரேகை) யில் இருந்திருக்குமெனக் கொண்டால் (பொருளியல் உரிமை இதழில் 1,2,3 ஆம் இதழ்களில் வந்திருக்கும் " பொங்கல் திருநாளும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்" என்ற கட்டுரையில் இதன் விளக்கத்தைக் காண்க.) அங்கிருந்து மகரவரை வரை 5° + 23 ½ = 28½ பாகைகள்.

1 பாகை நிரைவரைகளுக்கிடையில் உள்ள தொலைவு மேகலைவரையில் (நிலநடுக்கோடு) 68°70ˈ முனைகளில் 6°41ˈ மைல்கள். சராசரி 69,055, 28½ பாகைகளுக்குத் தோராயமாக 1982 மைல்கள். தமிழ் இலக்கியங்களின் கூற்றுப்படி முழுகிய நிலப்பரப்பாகிய 700 காதங்கள் = 700 x 3 = 2100 மைல்கள். மகரவரைக்குத் தெற்கில் அண்டார்டிக் வட்டம் வரை நம் முன்னோர்கள் பரவியிருந்தமைக்கு நம் தொன்மங்களில் உறுதியான சான்றுகள் உள்ளன. இந்தத் தொலைவை திரு. ஜெயகரன் வழியில் குமரி முனையிலிருந்து அதாவது 8°வ. நிரைவரையிலிருந்து தொடங்கினால் 8 + 23½ = 31½ x 69.055 = 2175 மைல்கள். அதாவது கிட்டத்தட்ட மகரவரை வரைதான் வருகிறது.

உலகில் அறிவியலும் நாகரிகமும் வெள்ளையர்கள் உலக முழுவதும் பரவத்தொடங்கிய 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் தான் தோன்றின போலும். மக்கள் தொகைப் பெருக்கமும் அதன் பின்னரே தொடங்கியது போலும். எனவே தொல் பழங்காலத்தில் 49 நாடுகள் இருந்திருக்க முடியாது ஏழு ஊர்களே (ஊராட்சியா, சிறப்புநிலை ஊராட்சியா, தேர்வுநிலை ஊராட்சியா, நகர ஊராட்சியா அல்லது "ஆட்சி" இல்லாத சிற்றூரா, அவர்தான் "கண்டுபிடித்துக்" கூற வேண்டும்.) இருந்திருக்க முடியும் என்றும் திரு. ஜெயகரன் கூறுகிறார். மக்கள் தொகை பற்றிய மால்தூசியக் கோட்பாட்டின் முன்னோடியாக, அதாவது அளவின்றிப் பெருகி விட்ட மக்கள்தொகையைப் போரால் அழித்து பூமாதேவியின் சுமையைக் குறைப்பது என்று பாரதப்போரின் நோக்கம் கூறப்படுகிறது. எனவே 49 நாடுகள் மகரக்கோடு வரையிலும் அதற்கு அப்பாலும் கூட இருந்தன என்று கொள்வதில் அறிவியலுக்குப் பொருந்தாத எதுவும் இல்லை.

1930 களில் நாகரிகத்தின் கதை என்ற பெருந்தலைப்பின் கீழ் முதல் மடலமாக கீழை நாடுகள் நமக்களித்த கொடைகள் ( Story of Civilisation- our Oriental Heritage ) என்ற நூலை எழுதிய வில்தூரன் அவர்கள் அவர் காலம் வரை இடம்பெற்றிருந்த மேலை அறிவியல், அரசியல், குமுகியல், ஆட்சியியல் வளர்ச்சிகள் அனைத்தும் கீழைநாடுகளில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் மறுகண்டுபிடிப்புகளே என்கிறார். அவரைத் தொடர்ந்து பண்டை மக்கள் விட்டுச் சென்றுள்ள அரிய சுவடுகளைத் தொகுத்து எழுதிய எரிக்வான் டெனிக்கன் என்ற நாசா அறிவியலாளர் எழுதிய Chariots of Gods என்ற நூலில் இன்றைய அணுவியல் மின்னணுவியல் வளர்ச்சிகளையும் நம் முன்னோர்கள் எய்தியிருந்தனர் என்கிறார். வெள்ளைத் தோல் ஐரோப்பியர் தவிர வேறெவருக்கும் அறிவியல் பார்வை இருக்க முடியாது என்ற கண்ணோட்டத்தில் அவை வெளிஉலகங்களிலிருந்து வந்தவர்களின் எய்தல்கள் முடிவுக்கு வருகிறார். உலகில் பிற பகுதிகளில் உள்ள தொன்மங்களில் "கடவுளர்கள்" வானுர்திகளில் மேலேயிருந்தும் கப்பல்களில் கடலிலிருந்தும் வந்தனர் என்று கூறப்பட்டுள்ளபோது நம் நாட்டுத் தொன்மங்களில் அசுரர்களும் அரசர்களும் கந்தர்வாகளும் வானூர்திகளில் பறந்ததாகக் கூறப்படுகிறது. எனவே பிற பகுதி மக்கள் பதிந்து வைத்துள்ள "கடவுளர்கள்" நம் நாட்டிலிருந்து அங்கு சென்றவர்கள் தாம் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு வான்வழியாகவும் கடல் வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று அவர்களுக்கு நாகரிகத்தைக் கற்பித்த "கடவுளர்கள்" மீண்டும் வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றனர். ஆனால் ஒருவர் கூடத் திரும்பவில்லை. குமரிக்கண்டம் கடலில் மறைந்து போனதால் தங்கள் வாக்குறுதியைக் காக்க முடியாமல் போயிற்று என்று கொள்வதில் என்ன தவறு?

உலகில் பல காரணங்களால், மாபெரும் விண்கற்கள் வீழ்வது கடலடி நில நடுக்கங்கள், எரிமலைச் சீறல்கள். பெரும் பனிமலைகள் கடலினுள் சறுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளால் கடலலைகள் எழும்பி மக்களையும் நகர்களையும் காடுகளையும் எண்ணற்ற உயிர்வகைகளையும் அழித்து புதிய உயிர் வகைகள் மீண்டும் உருவானது பற்றிய செய்திகள் புவி இயங்கியல் போன்ற அறிவியல்களைக் கற்றவர்களுக்கு மட்டுமல்ல. இன்றைய ஊடகங்கள் மூலமாக ஒவ்வொரு சராசரிக் குடிமகனுக்கும் தெரியும். அவை போன்ற நிகழ்வுகள் மனிதன் தோன்றிய பின்னும் நிகழ்ந்தன என்பதற்கு எண்ணற்ற பதிவுகளும் வாய்மொழி மரபுகளும் உள்ளன. அதே நேரத்தில் ஐம்புலன்களால் அறிவனவற்றைத் தான் நம்புவோம். பகுத்தறிவைப் பயன்படுத்தும் உய்த்தறிவை (Inference) ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று கூறும் பூதவாதிகள் எனப்படும் பட்டறிவியர்களுக்கு (Empricists) கண்ணாரக் காட்டுவதற்காகத் தான் போலும் கொடுங்கடல் மீண்டும் ஒருமுறை வீங்கலை எனும் தன் பேய்க்கரத்தால் ஒன்றரை இலக்கத்துக்கும் மேற்ப்பட்ட மனித உயிர்களைத் தன்னுள் அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை கடல் கொண்ட நம் தென்புலத்தார் அனைவருக்கும் நினைவேந்தல் செய்வோம்.

“நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்” - குறள் 373,

பூதவாதிகள் பற்றி மணிமேகலை கூறியதை நாம் கூற விரும்பவில்லை. திரு. ஜெயகரன் அவர்கள் புகழ்பெற்ற புவி இயங்கியல் அறிஞர் என்று கூறுகிறார்கள். உண்மையா….?!

(இக் கட்டுரை மார்ச் 2005 கணையாழி இதழில் வாசகர் கடிதம் பகுதியிலும் திண்ணை 07 ஏப்ரல் 2005 இணைய இதழிலும் வெளியாகியுள்ளது.)

ஒரு மொழிபெயர்ப்பின் கதை

"தமிழ்வழி உயர்கல்விக்கு முன்னோடி" என்ற திரு. தமிழண்ணல் அவர்களின் கட்டுரையில் (03.07.1997) தமிழ்வழி உயர்கல்விக்கும் மழலையர் கல்விக்கும் தமிழறிஞர்களே வாதாடும் நிலை உள்ளது; அறிவியல் துறையிலுள்ளவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இது ஒரு முழுமையான கணிப்பல்ல என்பதற்கு என் பட்டறிவு ஒன்றே சான்றாகும்.

பொதுப்பணித் துறையில் பொறியாளராய் பத்து ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் முழு ஆற்றலையும் செலவிடத்தக்க துறை அதுவல்ல என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே பொறியியல் கல்லூரியில் பாடநூலாக விளங்கியதும் இன்றும் பொதுப்பணித்துறையில் பாசனப் பணிகளுக்கான இன்றியமையாத பார்வை நூலாக விளங்குவதுமான "பொறியியல் கல்லூரிக் கைநூல் (College of Engineering-Manual Irrigation by Col.W.M.Ellis (ELLIS)) என்ற நூலைத் தமிழாக்கம் செய்யும் எண்ணம் உருவானது. பொதுப்பணித்துறையில் பட்டயப் பொறியாளர்களின் அமைப்பான தமிழ்நாடு பொறியியல் சங்கம் எனும் அமைப்புக்கு மாவட்டம் தோறும் கிளைகள் தொடங்கி "பொறியியல் கதிர்" என்ற ஒரு மாத இதழும் தொடங்கிய நேரம். இந்த விரிவாகத்தை முன்னின்று நடத்தியவர்களில் முதன்மையானவரும் தமிழில் பெரும்புலமை வாய்ந்தவருமான ஒரு பொறியாளர் இத்தமிழாக்கத்தைப் "பொறியியல் கதிரில்" வெளியிட ஒப்புக் கொண்டார். எனவே நூலின் முதலதிகாரத்தை மொழிபெயர்த்து அனுப்பினேன். ஆனால் இதழின் பொறுப்பிலிருந்தவராக இன்னொருவர் தன்னை அறிவித்துக் கொண்டு முழு நூலையும் மொழிபெயர்த்துத் தந்தாலே வெளியிட முடியும் என்று எழுதினார். ராயல் அளவு எனப்படும் பெரிய அளவில் 455 பக்கங்கள் கொண்ட இப்பெருந்நூலைத் தமிழாக்கம் செய்யக் குறைந்தது இரண்டாண்டுகளாவது ஆகும். எனவே இது ஒரு மறைமுக மறுப்பு என்பது புரிந்தது. அத்துடன் அவ்வாண்டு நடைபெற்ற சங்க மாநாட்டில் மேலே குறிப்பிட்ட தமிழ்ப் புலமை வாய்ந்த பொறியாளர் எழுதிய பொறியியல் கலைச் சொற்கள் பற்றிய இரு நூல்கள் சங்கச் செலவில் வெளியிடப்பட்டன. எனவே கொடுத்த வாக்கு நிறைவேற்றப்படாது என்று தமிழாக்கத்தைத் தற்காலமாக நிறுத்தி வைத்தேன்.

சில ஆண்டுகள் சென்ற பின் வேலை குறைவான ஒரு சூழலில் தசுநேவிசு என்ற பொறியாளர் நண்பர் மொழிபெயர்ப்பை முடிக்குமாறும் சங்கத்தின் மூலம் நூலாக வெளியிடும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார். (அவர் இன்று வரை அந்த முயற்சியில் தளரவில்லை). இரண்டாண்டு கடும் உழைப்பில் தமிழாக்கப் பணி முடிந்தது. சங்கத்தாரை அணுகிய போது அரசு மூலம் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.

தமிழ் அமைப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிய போது தமிழ் வளர்ச்சி இயக்கத்துக்கு ஒரு மதிப்பீடு அனுப்பினால் அவர்கள் கடன் வழங்குவர் என்றார். அன்றைய விலைவாசியில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் இப்பணிக்கு நாம் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு போட்டுக் கடன் பெற்று மீதி 40 ஆயிரம் ரூபாயை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றார். அதற்கான தொடர்புகள் இருப்பதாகக் கூறினார். இந்தத் "தமிழ் வாணிகத்தை" நான் விரும்பவில்லை. பொதுப்பணித்துறையுடனோ பொறியியல் கல்லூரியுடனோ தொடர்பில்லாமல் வெளியிடப்பட்டு நூல் நிலையங்களில் நூல் தூங்குமானால் அதனால் பயனில்லை என்பதாலும் அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை.

இதற்கிடையில் 1972 இல் தொடங்கி 1980 வரை அரசு வெளியீடான மேற்படி ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்வதற்கான இசைவை வேண்டி எனக்கும் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் (பொது) அவர்களுக்கும் அரசுத் துணைச் செயலாளருக்கும் இடையில் ஒரு நீண்ட கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இறுதியில் பொதுப்பணித்துறை துணைத் தலைமைப் பொறியாளர் (பொது) பொறுப்பிலிருந்த திரு. பி. இராமகிருஷ்ணன் அவர்களை 1981ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்து நிலைமையை விளக்கினேன். அலுவலர்களை வட்டம் விட்டு வட்டம் மாற்றுவது பதவி உயர்வு போன்ற ஆள்வினைப் பணிகளுக்குப் பொறுப்பான அவர் அப்பதவிக்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர். அதிகம் பேசும் வழக்கமில்லாத அவர் உடனேயே அதனை அரசு வெளியீடாக பொதுப்பணித்துறையே வெளியிடுவதாக அறிவித்துப் பாசனத்துக்குப் பொறுப்பான தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்களை மொழிபெயர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும்படி வேண்டினார். (எண் வேலை II-1/96787/78-11 நாள் 10.04.81) பாசனத் தலைமைப் பொறியாளர் மொழிபெயர்ப்பின் தரம் பற்றிய கருத்தறிய தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு அனுப்பினார். (எண் 3/29699/81-1 நாள் 20.11.81)

வந்தது வினை. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் அனைத்தையுமே திசை திருப்பி விட்டனர். தாங்கள் அந்நூலை வெளியிட வாய்ப்பில்லையென்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் பொறியியல் நூல் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கேட்காத கேள்விக்கு விடை கூறினர். (ந.க.எண் இ3/1793/081 நாள் 29.03.91). அத்துடன் தங்கள் "தொழிலில்" கருத்தாக நூல் வெளியீட்டுக்குத் தாங்கள் கடன் கொடுப்பதாகவும் கடன் தொகையில் மானியம் கொடுப்பதாகவும் ஒரு நீண்ட பட்டியலை இணைத்திருந்தனர். இறுதியில் போகிற போக்கில் "மொழிப் பெயர்ப்பாளரின் அரிய முயற்சிக்குப்" பாராட்டுதலையும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் அப்போதைய முதல்வரோடு ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால் திரு.பி. இராமகிருஷ்ணன் அவர்கள் எங்கோ ஒரு மூலைக்கு வீசப்பட்டுவிட்டார். புதிதாக வந்தவர்கள் தங்கள் வேலையை எளிதாக்க வேண்டி தமிழ் வளர்ச்சி இயக்கத்தினர் மடலைச் சாக்காகக் காட்டி வெளியிட வாய்ப்பில்லை என்று கதையையே முடித்துவிட்டனர். நடந்தவற்றை எவ்வளவு விளக்கிக் கூறியும் பயனில்லை.

1982ஆம் ஆண்டில் அப்போதிருந்த தலைமைப் பொறியாளர் (பொது) திரு. ஜெயபாலன் அவர்கள் இம்மொழிபெயர்ப்பைப் பாசனத்துறையால் வெளியிடப்படும் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" (New Irrigation Era) எனும் காலாண்டிதழில் வெளியிட்டு மொழிபெயர்ப்பைப் பற்றிய துறைப் பொறியாளர்களின் கருத்தை அறியுமாறு ஆணையிட்டார்.

சில நண்பர்களின் அறிவுரைப்படி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் வ.சுப. மாணிக்கனார் துணை வேந்தராயிருந்த காலத்தில் அவரை இருமுறை சந்தித்து மொழிபெயர்ப்பின் படியொன்றையும் கொடுத்தேன். தன்னால் இயன்றதைச் செய்வதாகவும் ஊக்கத்தை இழக்க வேண்டாமென்றும் தேறுதல் கூறினார். தங்கள் நூல்களையே வெளியிட முடியாத பொருளியல் நெருக்கடியில் பல்கலைக் கழகம் இருந்ததாக அறிந்தேன்.

1985 வாக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வ.அய். சுப்பிரமணியன் அவர்களைப் புலவர் சரவணத் தமிழன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சந்தித்தேன். மொழிபெயர்ப்பு தூய தமிழில் இருப்பது குறித்து, "நாங்கள் படிப்படியாகச் செய்ய நினைப்பதை நீங்கள் ஒரே அடியில் செய்ய நினைக்கிறீர்கள்" என்று அவர் கூறினார். அது பாராட்டா. குறையா என்பது தெரியவில்லை. ஆனால் "பாசன முறையின் மறுமலர்ச்சிச் செய்தி" இதழில் இம்மொழிப்பெயர்ப்பு வெளியிட்டிருப்பதை அறிந்து அதைத் தாங்கி வந்த இதழ்களின் தொகுதியொன்றைக் கேட்டுப் பொதுப் பணித்துறையின் தலைமைப் பொறியாளருக்கு மடலொன்று எழுதினார். அதற்குப் பயனேதும் இல்லை. எனவே அம்முயற்சி அத்துடன் நின்றது.

முதலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சங்கம் பொதுப்பணித் துறையிலுள்ள பட்டயப் பொறியாளர்களின் சங்கமாகும். இதைத் தவிர (பகுதி நேரத்திலன்றி) முழு நேரப்படிப்பில் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றோருக்கு உதவிப் பொறியாளர்கள் சங்கம் என்று ஒன்று உள்ளது. இவ்விரண்டின் தலைவர்களும், சாதிச் சங்கங்கள் போல் உறுப்பினர்களுக்கிடையில் பகையை மூட்டிக் கொண்டிருப்பர். இவை இரண்டையும் இணைப்பதற்கு முயன்றால் அம்முயற்சியை இருவரும் "ஒற்றுமையாகச்" செயற்பட்டு முறியடிப்பர். (அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன்).

இது போன்ற "சாதி"ச் சங்கங்கள் அரசின் அனைத்துத்துறை ஊழியர்களிடையிலும் உள்ளன. ஆட்சியாளர்கள் இத்தகைய சங்கங்களை ஊக்குவித்துத் தாங்கள் நடுவர்கள் போலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இத்தகைய பூசல்களிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் இரு துறையினர் மட்டுமே - மருத்துவர்களும், வழக்கறிஞர்களும். மிக அதிகமாகச் சிதறுண்டு கிடப்பவர்கள் ஆசிரியர்கள்.

இந்தத் தமிழ்நாடு பொறியியல் சங்கத்தின் தலைவர்கள் பட்டயப் பொறியாளரான என்னைக் காட்டி இந்த மொழிபெயர்ப்பெனும் அரிய பணியை அரசே அச்சிடுவதற்காகத் தாங்கள் பெரும் முயற்சி எடுப்பதாக ஒவ்வொரு பொதுக்குழு அல்லது மாநாட்டில் முழுங்குவர். அண்மையில் இரண்டு மூன்று மாதங்களில் அவ்வாறு அரசை அச்சிட வைக்கும் பொறுப்பை சங்கப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அதற்கு நான் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றும் இருமுறை ஆட்கள் வந்து கூறினர். அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது இதைப் பற்றித் தெரிந்து கொள்ள பொதுச் செயலாளரைப் பார்க்கச் சென்றேன். சில ஆண்டுகள் முன் வரை நன்றாகப் பழகியிருந்தும் முதலில் அவர் என்னை அடையாளம் "தெரிந்து கொள்ளவில்லை," சொன்னதும் தன்னால் எனக்கு ஏதாவது வேலை ஆக வேண்டியுள்ளதா என்று கேட்டார். மொழிபெயர்ப்பு பற்றிச் சங்கத்திலிருந்து தொடர்பு கொண்டதைப் பற்றி நான் கூறியதும் "ஓ...." என்று கூறி பக்கத்திலிருந்தவரிடம் "ஏம்பா இது குறித்து ஏதோ ‘பேப்பர்’ வந்தது போலிருக்கே" என்று கேட்டார். எனக்குப் புரிந்தது. "இது பற்றிய முயற்சியை நீங்கள் கைவிட்டு விடலாம், எனக்கும் ஆர்வமில்லை" என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இது ஒரு தன் புராணமல்ல. ஒருவனின் பட்டறிவு மூலம் வெளிப்படும் அரசு அமைப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே இது.

பாவாணரின் தனித்தமிழ் இயக்கத்தின் விளைவாகத் தமிழகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் தமிழாக்க முயற்சிகள் எழுந்தன. மதுரை மருத்துவக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த இல.க. இரத்தினவேலு என்பார் மாண்டலீவின் காலமுறைத் தனிமைப்பட்டியிலுள்ள தனிமங்களனைத்துக்கும் அவற்றின் அனைத்துலகப் பெயர்களின் ஒலிப்பில் தமிழ்ப்பெயர்களை வழங்கி (எ.டு. Sulphur - சுற்பொறை. Phosphorous - பொசுப்பொறை) அவற்றுக்குச் சொற்பிறப்பியல் விளக்கங்களுடன் "தென்மொழி" இதழில் கட்டுரைத் தொடர் எழுதினார். காலமுறைப் பட்டியலையே தமிழ்க் குறிகளுடன் வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் பொறியாளர் ஒருவர் மின் துறையில் வழங்கப்படும் சொற்கள் அனைத்துக்கும் தூய தமிழ்ச் சொற்களை வடித்து அவற்றை விளக்கி நூல் எழுதியுள்ளார். "கடைசல் பொறிகள்" என்ற பெயரில் "லேத்"களைப் பற்றிய கலைச் சொற்களுடன் ஒருவர் நூலெழுதியுள்ளார். பாவாணரின் தனித்தமிழ்க் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத "தினமணி"க் கட்டுரையாளர்கள் திரு.கே.என். இராமச்சந்திரன், நெல்லை சு. முத்து போன்றோர் தூய தமிழ்க் கலைச் சொற்களைத் தங்கள் அறிவியற் கட்டுரைகளில் கையாண்டுள்ளனர். நெல்லையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை முப்பதுகளில் நிறுவிய அறிஞர் இ.மு. சுப்பிரமணியனார் ஆட்சிச் சொல்லகராதியும் பாடநூல்களுக்குக் கலைச் சொல்லாக்கமும் வெளியிட்டுளார். அவர் தமிழப்புலவர் அல்லர். (அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கால் அரசே அப்பணியை அவருக்கு அளித்தது). இன்னும் வெளிச்சத்துக்கு வராதோர் எத்தனையோ பேர்.

ஆனால் உயர்கல்வி படித்த தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் என்ன செய்தனர்" அரசு உருவாக்கிய "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பதவிகளைப் பெற்றனர். அதிகார அமைப்போடு அமைப்பாக ஒன்றிக் கலந்தனர். தாமும் தனக்கு வேண்டியவர்களும் எழுதிய நூல்களை வெளியிட்டனர். வேறு சிலர் தங்கள் முனைவர் ஆய்வுக்காகக் கலைச்சொல் ஆக்கத்தில் இவர்களின் உத்திகளை அலசினர்.

நமது அரசு நாட்டின் பொது வளர்ச்சிகளுக்குத் தேவையான அடிப்படைகளை உருவாக்கி மக்களின் சொந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதை விட்டு உதவிகள், சலுகைகள், மானியங்கள், கடன்கள் என்ற பெயரில் அனைத்துத் துறை ஊழியர்களையும் "பணப்பட்டுவாடா" செய்பவர்களாக மாற்றி அவர்களது கைகளில் பணத்தைத் திணித்து அவர்களது நோக்கையும் போக்கையும் கெடுத்து ஊழலும் கையூட்டும் சமூகத்தின் அடி முதல் முடி வரை ஊடுருவ வைத்துள்ளது. அது போலவே "தமிழ் வளர்ச்சி" அமைப்புகளிலும் "பணப்பட்டுவாடா" உத்தியைப் புகுத்தி தமிழறிஞர்களைக் கெடுத்தது. அதற்கிசைய வெளியிலுள்ள "தமிழ்த் தொண்டு" அமைப்புகள் இடைத்தரகர்களாகச் செயற்பட்டன. இவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வழக்கம் போல் "புல்லில் சிந்திய தவிடாக் உரியவருக்குப் பயன்படாமல் போயிற்று.

அறிவியல் துறைகளில் இருந்து கொண்டு கலைச் சொற்களையும் மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கியோரில் பலர் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றவரில்லை, உயர் பதவிகளில் அமர்ந்தவர்களில்லை. அரசுத்துறைகளிலுள்ள எளிய கீழ்நிலை அதிகாரிகள்தாம். இவர்கள் வயிற்றுப்பாட்டுக்காகவோ பணம் ஈட்டவோ "தமிழ்ப்பணி" ஆற்றியவர்களல்ல. வயிற்றுப்பாட்டுக்கென்று வேறு தொழில் செய்தவர்கள்.

அந்தத் தலைமுறையினருக்கு அவர்களது சமூக, பொருளியல் பின்னணி எதுவாயிருந்தாலும் அறிவுத் திறனுக்கேற்ற கல்வித் தகுதியை ஓரளவு பெற முடிந்தது. அத்தகுதிக்கேற்ற வேலையும் எளிதில் கிடைத்தது. ஆனால் தமிழைப் பாடமாக எடுத்தவர் நிலை வேறு. அவர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைவு, சம்பளமும் குறைவு, மதிப்பும் குறைவு. அதனால் தமிழில் உயர்படிப்புப் படித்தோரெல்லாம் "தென்மொழி" இதழின் பின்னால் ஓர் பேரியக்கம் உருவாகக் காரணமாயிருந்தனர். ஆனால் புதிய பல்கலைக் கழகங்களும் தமிழ் வளாச்சி அமைப்புகளும் உருவாகி தமிழ்ப் பேராசிரியர்களும் பிறதுறைப் பேராசிரியர்களுக்கு ஒப்ப மதிக்கப்படும் நிலை வளர்ந்ததும் பெரும்பாலோர் தங்கள் கடந்த காலத்தை வீசியெறிந்து விட்டு அதிகார அமைப்பினுள் ஒன்றிவிட்டனர். தமிழே அவர்களது "வாழ்வாகி" விட்டது.

பாவாணர், மற்றும் "தென்மொழி" மரபில் வந்த பேராசிரியர்கள் அனைவருக்கும் அறிவியல் துறைகளிலிருந்து தமிழாக்கம், கலைச் சொல்லாக்கம் செய்தவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் அவர்கள் தமிழை “வளர்க்கும்” பொறுப்புகளில் அமர்ந்த பின்னர் அந்த அருஞ்செயலாளர்களின் ஆக்கங்கள் வெளிச்சத்தைக் காண எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

என் மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுப்பணித்துறையிலுள்ள பெரும்பாலான பொறியாளரும் அறிவார். முன் சந்தித்திராத அத்தகைய ஒருவர் என்னைச் சந்திக்க நேர்ந்து என் பெயரை அறிந்ததும் அந்த மொழிபெயர்ப்பைக் கூறிப் பாராட்டுவார். பொறியியல் கருத்துக்களைத் தமிழில் பார்ப்பதிலுள்ள ஆர்வம் அவர்களிடம் தெளிவாகவே வெளிப்படும். இவ்வாறு தான் அனைவரும் தம் தாய்மொழி வலிமை பெறுவதில் ஆர்வமாகவே உள்ளனர். ஆனால் உண்மையான தடங்கல் தமிழறிஞர்கள், தமிழப் பேராசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் போன்றோரிடமிருந்தே வருகிறது.

தமிழ் ஆட்சி மொழிக்கும் பயிற்று மொழிக்கும் தெருவில் இறங்கிப் போராடும் தமிழறிஞர்கள் தாங்கள் பதவியிலிருந்த போது செய்யத் தவறியவற்றை இனிமேலாவது செய்யுமாறு அரசை நெருக்கித் தமிழில் கலைச் சொற்களில்லை, பாட நூற்களில்லை என்ற தமிழ் எதிர்ப்பாளர்களின் கூற்றுகளுக்கு அடிப்படை இல்லாமல் ஆக்க வேண்டும். அதற்கு முதற்படியாகத் தமிழ் வளர்ச்சி அமைப்புகளிலாவது "பணப்பட்டுவாடா" உத்தியை முடிவுக்குக் கொண்டு வருமாறு அரசுக்குக் கூற வேண்டும்.

(இக் கட்டுரை 1997 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தென்மொழி இதழிலும் திண்ணை இணைய இதழிலும் வெளிவந்தது. “தமிழ் பாதுகாப்பு குரல்” ஒலிக்கும் வேளையில் தமிழ் ஆர்வலர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இக் கட்டுரை அமையும்.)

ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து -- ஒரு குறிப்பு

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் படைப்பான 'ஐந்தாவது மருந்து' என்ற சிறுகதையினை இணையத்தில் இருந்து நண்பர் ஆபிரகாம் லிங்கன் மூலம் பெற்று படித்தேன். குமரிக்கண்டம் பற்றிய என் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு உள்வாங்கி அவற்றைக் கதையில் வெளிப்படுத்தியுள்ள பாங்கினை கண்டு நான் பெருமையும் பெருமகிழ்வும் எய்துகிறேன். உங்களுக்கு என் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தமருத்துவம் என்னும் தமிழ் மருத்துவம் முதலில் நிலைத்திணைகள் [தாவரம். சிறுகதையின்படி அசீவம்] விலங்குகள் [சீவம்] பிறகு பொன்மங்கள் [ரசாயனங்கள்] என்ற வரிசையில் முன்னேறியது என்ற கூற்று சரியாக இருக்கலாம். வேறு வரிசையிலும் இருக்கலாம். உங்கள் கதையை ஒரு தொடக்கநிலை கருத்தாகக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அணுவியல் மருத்துவம் [ரசக்கூட்டு - பொன்மங்களின் அணுவியல் கூட்டை மாற்றுதல் பொன்மாற்று [பம்மாத்து!] மிகப்பழைமையான ஒர் அறிவியல் ஆய்வாகவே தெரிகிறது.

நோய்களை உண்டாக்கும் நுண்மங்களும் அவற்றுக்கு எதிராக மனிதன் தரும் மருந்துகளும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு முன்னேறுகின்றன என்பது உண்மையே. நோய்களும் மருந்துகளும் மட்டுமல்ல இயற்கையில் உள்ள அனைத்து கூறுகளிலுமே இப்படி எதிரிணைகளின் போராட்டம் இடைவிடாது நடைபெறுகிறது என்பது மார்க்ஸிய இயங்கியலாகும். எனவே கதையில் தளவாய் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டதாகக் காட்டுவது உங்களிடம் நான் பொதுவாகக் கண்ணுறும் ஓர் இயலாமை கண்ணோட்டடத்தின் விளைவாக எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் கதையில் சரியாக குறிப்பிடுவதுபோல மனிதன் என்பவன் இயற்கைவிதிகள் எனப்படுவனவற்றை இயற்கைப்படைப்புகளே மீறி இயற்கை தன்னைப்பற்றி முழுமையாகத் தன்னுணர்வுடையதாக மாற்றிக் கொண்ட ஓர் அமைப்பு. அது எப்படியெல்லாம் தன்னாலும் சூழல்களாலும் உருவான நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றதோ அது போலவே இன்னும் வாழும்.

பால்வினை நோய்களுக்கு முதன்மைக் காரணமாகிய தன்னினப் புணர்ச்சி நானறிந்தவரை வரலாற்றில் முதலில் பெண்களின் முற்றதிகாரத்தை எதிர்த்து ஆண்கள் பிரிந்துசென்று காடுகளுக்குள் தலைமறைவுக் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் இருபாலரிடமும் உருவாகியிருக்கலாம். மோசே விடுவித்துச்சென்று பின்னர் யூத இனமாக வடிவெடுத்த எகிப்திய அடிமைகளிடம் அப்பால்வினை நோய்கள் இருந்திருக்கலாம். அதனால்தான் அவர் முகமதியர் சுன்னத் என்றழைக்கும் முந்தோல் அகற்றும் சடங்கைத் தொடங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்து மறவர்களில் இப்பழக்கம் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
எயிட்சு என்றழைக்கப்படும் தேய்வு நோயைப்பொறுத்தவரை எனக்குப் பல்வேறு ஐயப்பாடுகள் உள்ளன. முதலில் பல்மருத்துவரைக்கூடத் தாக்கும் என்ற அளவுக்குக் கிலியூட்டப்பட்ட இந்நோய் இப்போது ஆணுறை அணிந்தால் போதும் என்ற அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் நானறிந்தவரை பால்வினைநோய்கள் பிற உறுப்புகளின் தொடர்பால்கூட பரவமுடியும். குறிப்பாக வாய். இவ்வாறு ஆணுறை பெண்ணுறை மூலம் தடுத்துவிடலாம் என்ற செய்தியை பரப்புவதானது தவறான விளைவுகளை உருவாக்கும். ஆசிரியர்களே மாணவர்களிடம் இச்செய்தியைப் பரப்புகிறார்கள் என்பது மேலும் தவறானதாகும்.

எச் ஐ வி என்ற நுண்ணுயிரிக்கும் தேய்வுநோய்க்கும் தொடர்பில்லை என்ற வாதமானது இன்று ஒருதரப்பினரால் -- குறிப்பாக பிரெஞ்சு மருத்துவ ஆய்வாளர்களால் -- தொடக்ககாலம் தொட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த நுண்ணுயிரி உள்ளன என்ற அளவிலேயே இந்நோய்க்குரிய அறிகுறிகளுடன் அதை தொடர்புபடுத்தி நோயாளி காணத்தொடங்கிவிடுவான். அதன் பின் அவனால் அதன் தாக்குதலை தடுக்க இயலாது. இந்த அச்சத்தை பயன்படுத்தி அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தை பரப்புகைக்காக நம் நாடுகளுக்கு வெளியிடுகிறார்கள்.

நானறிந்தவரை இந்நோய்க்குரிய அறிகுறிகள் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளன. நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்துவீட்டு இளைஞர் ஒருவர் இனம்காண முடியாத ஒரு நோயால் சிறிது சிறிதாக மெலிந்து இறந்தார் அவருக்கு 'என்புருக்கி ' என்று மருத்துவர் சொன்னார்கள். அக்காலத்தில் நீரிழிவு உட்பட பல நோய்கள் அப்படி பொதுப்பேரில் சொல்லப்பட்டன. இவருடைய நோய் அதுவல்ல. அவரால் எவருக்கும் அந்நோய் பரவவில்லை. நம் நாட்டில் பல்லாயிரம் நோய்களைப்பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன. ஆனால் அவற்றைப்பற்றிய அறிவு மக்களிடையே இல்லை.'தமிழ்' மருத்துவர்களிடமும் இல்லை. எனவே எந்தெந்த நோய்கள் பழைமையானவை எவை இன்றைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மூலம் உருவானவை என்று வரையறுத்துக்கூறும் முறை இல்லை. ஆனால் மெத்தப்படித்தவர்களாக அறியப்படும் ஒரு சிறு தொழில் கூட்டத்தினரின் பல கூற்றுகளை நாம் மறுத்தாகவேண்டியுள்ளது.

(கடிதம் - திண்ணை டிசம்பர் 9, 2004.)

2.11.05

தமிழகத்தில் சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்

26-12-2004 அன்று இந்தோனேசியாவின் சுமதுரைத் தீவின் அருகில் நிகழ்ந்த கடலடி நிலநடுக்கத்தின் விளைவாய் எழுந்து 1000கி.மீ. வேகத்தில் பாய்ந்தேறி வந்த சுனாமி எனப்படும் வீங்கலை யாருமே நினைத்துப் பார்க்காததும் அண்மைக்கால வரலாறு அறியாததுமான பேரழிவுகளைத் தமிழகக் கடற்கரை வாழ் மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகள் மீது நிகழ்த்தியது. அது நிகழ்த்திய பேயாட்டத்தில் கடற்கரையில் கிடத்தப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான கட்டுமரங்களும் வள்ளங்களும் சேர்ந்துகொண்டன. எந்தப் பிணைப்புமின்றி மணல் மீது இழுத்துப் போடப்பட்டிருந்த இந்த மிதவைகள் நீரில் மிதந்து பெரும் பீரங்கிக் குண்டுகள் போல் அலையின் 1000கி.மீ. வேகத்தில் மனிதர்கள் மீதும் மரங்கள் மீதும் கட்டடங்கள் மீதும் மோதியிருக்கவில்லையாயின் உயிர், உடைமை, வீடுகளுக்கு இவ்வளவு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்காது. கடல் வரம்பிலிருந்து 500 கி.மீ. தொலைவுக்குள் கட்டுமானங்களை எழுப்பக் கூடாது என்ற இந்திய நீரியல் அமைச்சகத்தின் ஆணை கடைபிடிக்கப்பட்டிருந்தால் பாதிப்பு கட்டுக்குள் நின்றிருக்கும்.

குமரி, நெல்லை மாவட்டங்களின் கடற்கரையின் சிறப்பாகிய தேரிகள் எனப்படும் மணற் குன்றுகளிலிருந்து மணல் எடுக்கும் உள்நாட்டினருக்குத் துணை நின்று அந்த இடங்களில் கட்டிய வீடுகளும் மணல் தேரிகளின் முகடுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட இடங்களில் கட்டிய வீடுகளும் அவற்றிலிருந்த பல மக்களுடன் அழிந்து போயுள்ளன. நெல்லை குமரி மாவட்டக் கடற்கரையில் காணப்படும் அருமணல்கள் பல்லாயிரம் கோடி நேரடியாகவும், மணவாளக்குறிச்சி அருமண் தொழிற்சாலையில் பிரித்தெடுத்தும், ஏற்றுமதி செய்வதற்காக அகற்றப்பட்டதன் விளைவாக தேரிகள் அழிந்து போனதால் குளச்சலை அடுத்துள்ள பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் தளங்களாக வடிக்கப்பட்டுள்ள சொத்தவிளை கடற்கரையில் தேரி முகடுகள் அகற்றப்பட்டுவிட்டதால் கடல்நீர் தேரியைத் தாண்டி தென்னந்தோப்புகளுக்கு இடப்பட்டிருந்த சுற்றுச் சுவர்களைத் தகர்த்ததுடன் மக்களில் பலரையும் கொன்றுள்ளது.

கடற்கரை கடலினுள் துருத்தி நின்ற இடங்களை விட கடல் நிலத்தை நோக்கிக் கரையில் குழிவுகள் ஏற்படுத்தியிருந்த பிள்ளைத்தோப்பு போன்ற இடங்களில் அழிவு மிகுதி. அதேபோல் மீன்பிடி விசைப்படகுகளைப் பிணைத்துக் கட்டி வைப்பதற்குக் கட்டப்பட்ட தூண்டில் வளைவுகள் இருக்கும் இடங்களில் பாதிப்பு குறைவு.

இதுவரை கடலைத் தாயாகவும் கடற்கரையைத் தாய்மடியாகவும் கருதி நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த கடற்கரை மீனவர்களின் காலங்காலமாகவுள்ள நம்பிக்கையையும் இந்த பேரலை அடித்துச் சென்றுவிட்டது. எனவே அவர்களில் பலர் மீண்டும் கடற்கரையில் குடியேறவும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவும் மிகவும் தயங்குகின்றனர். உயிரிழந்த மீனவர்களில் ஏறக்குறைய 40% பகுதி சிறுவர்களூம் குழந்தைகளுமாவர். இவையனைத்திற்கும் பிறகு இன்றைய தலைமுறையினர் கடற்கரையில் குடியேறி பழைய முறைப்படி கட்டுமரங்களில் மீன் பிடிக்கப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பதற்கில்லை.

இந்த நிகழ்வுகள் மற்றும் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் இன்றியமையா ஊட்ட உணவுகளில் தலையாயதாகிய மீனை வழங்குவதும் பல இலக்கம் மக்களின் உயிர்காக்கும் தொழிலுமாகிய மீன்பிடித் தொழிலை மீட்பது, கடலின் மீதுள்ள அச்சத்தை அகற்றும் வகையில் உரிய இடத்தை தேர்ந்தெடுத்து அவர்களைப் புதிய கடல் அலை தாக்க முடியாத இடங்களில் குடியமர்த்துவதுமாகிய இரு பகுதிகளாக நமது திட்டமிடல் அமைய வேண்டும். இவை இரண்டும் உடனடியாக ஒரே நேரத்தில் செய்து முடிக்க வேண்டியிருந்தாலும் இவற்றை நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்கோடு அணுக வேண்டும்.

1.குமரி மாவட்டத்தையும் நெல்லை மாவட்டத்திலுள்ள பகுதிகளையும் பொறுத்த வரை அங்கு இயற்கையாக உருவாகும் தேரிகள் காற்றில் கரையாதிருக்கவும் மணலின் படிமானத்தை ஊக்கவும் அங்கு இயற்கையாக வளரும் புல் இனத்தை வளர்த்து நட வேண்டும்.

2.தேரி உருவாகும் தன்மையை ஆய்ந்து இப்போது தேரி இல்லாத தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் தேரியை செயற்கையாக உருவாக்கிப் பராமரிப்பதற்கான வாய்ப்புகளை மதிப்பிட்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

3.தற்போது கன்னியாகுமரியிலிருந்து ஈத்தாமொழி, குளச்சல் போன்ற ஊர்கள் வழியாகச் செல்லும் மேற்குக் கடற்கரை சாலைக்கும், கடற்கரைக்கும் இடையில் மீனவர்கள் வாழும் ஊர்களை இணைக்கும் சாலைகள் உள்ளன. இவை பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்படாத தேரிகளின் முகட்டிலேயே செல்கின்றன. அந்தச் சாலைகளுக்கும் கடலுக்கும் இடையில் தெருக்கள் அமைத்தோ இன்றியோ கட்டப்பட்ட குடியிருப்புகள்தான் பெருமளவு இடிந்ததும் மக்கள் மடிந்ததும். எனவே தேரிகளை முறைப்படி உருவாக்கி அவற்றின் இரு புறங்களிலும் குட்டைத் தென்னை மரங்களையும் மணற்புற்களையும் வளர்த்துப் பராமரித்தால் அச்சாலை தேரிகளின் பராமரிப்பிற்குத் துணை நிற்பதுடன் அதன் மீது செல்வோருக்குச் சாலையின் இருபுறங்களிலும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தென்னை மரங்களைக் குத்தகைக்கு விட்டுச் சாலைப் பராமரிப்புச் செலவை ஈடுகட்ட முடியும்.

4.கடற்கரையின் அமைப்புக் கேற்பவும் உள்நாட்டிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலைத் தொடர்பிற்கு ஏற்பவும் உடனடியாகத் தூண்டில் வளைவுகள், சிறு மீன்பிடி துறைமுகங்கள், சிறு போக்குவரத்து துறைமுகங்கள் என்று முன்னுரிமை வரிசையில் கடடுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அவற்றில் விசைபடகுகள், சிறுமீன்பிடிக் கப்பல்கள், சிறு போக்குவரத்துக் கப்பல்கள் என்று தொழிலில் இறங்க முன்வருவோருக்கு வருமான வரி விலக்கு போன்ற ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். கட்டுமரங்களைத் தவிர்ப்பதற்கு, பழைய கட்டுமரத் தொழிலில் ஈடுபட்டிருந்தோருக்கு அவர்களது அகவைககு ஏற்ப ஓய்வூதியம் வழங்கல், வலைகள், தூண்டில்கள் போன்ற மீன்பிடி தளவாடங்களைப் பராமரித்தல் பணிகளில் ஈடுபடுத்தல், கூட்டாக சேர்ந்து தொழில் செய்ய முன்வருவோருக்கு விசைபடகுகள் வாங்க கடன் வழங்குதல், மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கும் பயிற்சியளித்தல்,பிடித்த மீனை உரிய பக்குவத்தில் சந்தைக்கு அனுப்புதல், ஊரகங்களிலும் நகரங்களிலும் துப்புரவுடன் பராமரிக்கத்தக்க கட்டமைப்புகளுடன் விற்பனை நிலையங்களை உருவாக்கி அவற்றில் மீன் விற்பனைக்குப் பயிற்றுவித்தல் என்று எண்ணற்ற வகையில் வேலை வாய்ப்பை அளிக்க முடியும். இத்தகைய பயிற்சிகளை அளிப்பதற்கு மீன்வளத்துறை, தொழில்நுட்பத்துறை போன்றவை வகுக்கும் பாடத்திட்டங்களின் அடிப்படையில் தொழில்நுட்பப் பயிலகங்களில் பயிற்சியளிக்க வேண்டும். இன்று மீன்பிடித் தொழில் எய்தியிருக்கும் முன்னேற்றத்துடன் ஒப்பிட, உலகில் முதன்முதலில் மீன்பிடிக்க மனிதன் தொடங்கிய காலத்துக்குரிய தொல்பொருட்காட்சியகங்களில் வைக்க வேண்டிய காலங்கடந்து போன கட்டுமரங்களைக் கைவிட்டு அவற்றை விட மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள விசைப்படகுகள், சிறு மீன்பிடி கப்பல்களைப் பயன்படுத்துவதால் இன்றுபோல் வெவ்வேறு பகுதி மக்களூக்கிடையில் உருவாகும் சச்சரவுகளுக்கும் மோதல்களுக்கும் வாய்ப்பு குறையும்.

5.தடுப்புச் சுவர் கட்டுவதற்கு 500 கிலோகிராம் வரையும் தூண்டில் வளைவுகள் அமைக்க 3 முதல் 5 டன்கள் வரையும் எடையுள்ள பெருங்கற்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் மைலாடி, பொற்றையடி, சுங்கான் கடை போன்ற எண்ணற்ற இடங்களில் கல்லுக்காகப் பாறைகளை உடைத்ததில் மண்மீது உயர்ந்து நின்ற மலைகளும், குன்றுகளும், பாறைகளும் காணாமல் போய்விட்டன. குமரி மாவட்டத்தில் மழை வளம் குன்றியதற்கு மேகத்தைத் தடுத்து மழையைப் பெய்வித்த மலைகள் குறைந்ததும் ஒரு காரணமாகும். இராதாபுரம் போன்ற அண்மையிலுள்ள நெல்லை மாவட்ட பகுதிகளிலும் மழை குறைந்ததற்கு இது காரணமாகலாம். எனவே தேரிகளை உருவாக்கிப் பராமரிப்பதன் மூலம் தடுப்புச் சுவர்களைத் தவிர்க்க முடியும். தவிர்க்க இயலாத இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்களுக்கும் தூண்டில் வளைவுகளுக்கும் துறைமுகங்களுக்கும் நில மட்டத்திற்கு அடியிலிருந்து கற்களை எடுக்க வேண்டும். வேறுவழியில்லை என்றால் மட்டுமே நிலத்துக்கு மேலேயுள்ள பாறைகளை உடைக்க வேண்டும். அவ்வாறு இனி உடைக்கும் பாறைகளும், முன்பு உடைத்த பாறைகளும் இருந்த இடத்தில் இந்திய அரசு நில அளவை(G.I. maps) வரைபடத்தின் துணையுடன் நகராட்சி, ஊராட்சிகளில் எடுக்கப்படும் மட்காத திடக் கழிவுகளைக் கொட்டி பழைய உயரத்துக்கு புதிய மலைகளை உருவாக்கி குலைந்துவிட்ட இயற்கைச் சமநிலையை மீட்க வேண்டும்.

6.கல், மண், கனிமங்கள் போன்ற மீட்க முடியாத இயற்கைச் செல்வங்களை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுமதி செய்வது பொருத்தமான பொருளியல் அணுகுமுறையாகாது. அவை இனிவரும் தலைமுறையினருக்கும் உரிமையுள்ள அரும்பொருட்களாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டக் கடற்கரையிலிருந்து பல்லாயிரம் கோடி டன்கள் அருமணல் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. (குமரி மாவட்டத் தேரிகள் அழிய இதுவும் ஒரு காரணமாகும்.) இதனுடன் கருங்கல் சல்லியும், ஆற்றுமணலும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதியாகும் பொருள்களில் முதலிடம் பிடிக்கின்றன. இந்த ஏற்றுமதியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

7.ஏறக்குறைய 6000 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்ட இந்தியாவின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு கடல் வழியில் செல்வதற்கு உரிய நீர்வழி இல்லை. உள்நாட்டு மக்கள் மீன்பாடுள்ள இடங்களைத் தேடிச் செல்லவும் கடல் வழியில் பண்டங்களை நாட்டினுள் கொண்டு செல்லவும் கடலோரப் பாதுகாப்புக்கும் இது இன்றியமையாதது. பேரலைகள் தாக்கிய போது அத்தகைய ஒரு கடல் வாய்க்கால் இருந்திருந்தால் அதன் வழியாக அலை விசையின் ஒரு பகுதி கரைக்கு ஒரு போகாக திரும்பிச் செல்லும் வாய்பிருந்தது. எனவே அத்தகைய ஒரு கடல் வாய்க்காலை இந்தியக் கடற்கரையை ஒட்டி உடனடியாக அமைக்க வேண்டும்.

8.கிழக்கு கடற்கரையில் விசாகப்பட்டினம் - நாகப்பட்டினத்தை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அதில் விசாகப்பட்டினம் - சென்னைக்கு இடைப்பட்ட பகுதி இன்றும் பொருட் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. சென்னை மாநகர எல்லைக்குள் தூர்ந்து போய் சாக்கடையாக மாறி ஓர் சூழியல் சிக்கலாகி உள்ளது. சென்னைக்குத் தெற்கில் சில் இடங்களில் அந்த கால்வாயை காண முடிகிறது. குமரி மாவட்டத்தில் குமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை திருவிதாங்கூர் மன்னர்கள் உருவாக்கிய ஏ.வி.எம். வாய்க்காலைக் குளச்சலுக்குக் கிழக்கில் கதம்பை ஊறவைப்பதற்காகப் பயன்படுத்தியதால் அது முற்றிலும் தடமழிந்து கிடக்கிறது. பிற பகுதிகளிலும் முறையான பராமரிப்பில்லை. தற்போதைய பேரலை வாய்க்கால் இருந்த இடங்களில் வாய்க்காலுக்கும் கடலுக்கும் இடையில் குடியிருந்த மக்களை அடித்துக் கொண்டு வாய்க்காலுக்குள் புதைத்துவிட்டது. வாய்க்காலுக்கு வெளியே, கடலுக்கு எதிர்க்கரையிலுள்ள நிலப்பகுதிகள் குடியிருப்புகள் அமைந்திருந்தால் இந்த வாய்க்கால் அலையின் வேகத்தை மட்டுப்படித்தும் ஒரு காப்பரணாச் செயற்பட்டிருக்கும். எனவே ஏ.வி.எம். வாய்க்காலையும் பக்கிங்காம் வய்க்காலையும் முழுமையாக மீட்பது மட்டுமின்றி இந்தியக் கடற்கரை முழுவதும் சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு உகந்த நீர் வழிப்பாதையாக அதை விரிவு செய்தால் பல்முனைப் பயன் அதற்கு உண்டு. அத்துடன் தேரி முகட்டில் போடப்படும் சலைக்கு இணையாக இந்த வாய்க்காலும் அமைந்தால், இந்தியக் கடற்கரை கண்ணைக் கவரும் உலகிலுள்ள சிறந்த கரையாக இந்தியக் கடற்கரை பொலிவுறும்.

இப்போது கடற்கரையில் வாழும் மக்களின், குறிப்பாக மீனவர்களின் குடியிருப்பு பற்றி பார்போம். அவர்களை

1.மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டோர்,

2.மீன் வாணிகத்தை மேற்கொள்ளும் டவர் மற்றும் பெண்டிர்,

3.பிற தொழில்கள் செய்து கடற்கரையில் குடியிருப்போர்,

4.உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கப்பல்களிலோ, வேறு வகைகளிலோ பணிபுரிவோரின் குடும்பத்தினர்,

5.கடற்கரையில் கடைகள் முதலியவற்றை நடத்துவோர்,

என்று பெரும்போக்காக வகைப்படுத்தலாம்.

இன்னொரு வகையில், கட்டுமானத் தன்மையைப் பொறுத்து,

1.குடிசைகளில் வாழ்வோர் (குமரி மாவட்டத்தைப் பொறுத்த வரை இது அரிதாகவே தென்படுகிறது.),

2.ஓட்டுக் கூரையுடன் மண் அல்லது செங்கல் சுவர்,

3.வலுவான கான்கிரீட் கட்டடங்கள்,

என்று வகைப்படுத்தலாம். இத்தகைய எந்த வீடாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து 500 மீட்டர்களுக்கு உட்பட்ட தொலைவிலுள்ளவற்றையும் பாதிப்புக்குட்படும் நிலமட்டம் (Velnerable level) என்பதனை விடத் தாழ்ந்த இடத்தில் உள்ள வீடுகளையும் அகற்றிவிட வேண்டும்.

1.இதுவரை வலை, தூண்டில் முதலிய மீன்பிடி தளவாடங்களையும் கருவாடு போன்ற மீன் பொருட்களையும் குடியிருப்புகளில் வைத்து வாழ்ந்ததை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். படகுகள் அல்லது மீன்பிடி கப்பல்களில் மீனைப் பிடித்து துறையில் சேர்த்துவிட்டு மீனவர் என்ற தொழில் அடையாளத்தை அத்துடன் இறக்கி வைத்துவிட்டு சராசரியான ஒரு குடிமகனாகக் குடியிருப்பினுள் நுழையும் புதிய சூழலை உருவாக்க வேண்டும். பிடித்த மினை வகைப்படுத்துதல், பிரித்துச் சந்தைக்கு விடுதல், மீன்பாடு மிகுந்த காலத்தில் மிகுதியாக உள்ள மீனைப் பதப்படுத்திச் சேர்த்து வைத்தல், ஊறுகாய், கருவாடு, ஓரளவு வேக வைத்துக் கலன்களில் அடைத்தல் போன்ற பணிகள், வலை, தூண்டில் போன்ற தளவாடங்களையும் மீன்பிடி கலன்களையும் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்யும் தனித்தனிப் பணியாளர்களும் தம் தொழில் நேரம் முடிந்ததும் தொழில் அடையாளத்தை அங்கேயே விட்டுத் தம் வீடுகளுக்குச் செல்லும் நிலை உருவாக வேண்டும். முதற்பகுதியில் நாம் குறிப்பிட்டிருக்கும் தூண்டில் வளைவுகள், துறைமுகங்கள், விசைபடகுகள், கப்பல்கள் போன்ற கட்டமைப்புகள் இந்தச் சூழலை உருவாக்கித்தருவது மட்டுமல்ல தேவையும் ஆகும்.

2.மீன் வாணிகத்தை மேற்கொள்ளும் ஆடவரும் பெண்டிரும் தாங்கள் செயற்படும் சந்தைப் பகுதி அருகில் குடியிருப்பை அமைத்துக் கொள்வது சிறப்பு. அவர்களது விருப்பத்தை அறிந்து அப்பகுதியில் நிலம் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

3.பிற தொழில் செய்து கடற்கரையில் குடியிருப்போர் தாங்கள் தொழில் செய்யும் பகுதிகளுக்குத் தம் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

4.குடும்பத்தார் கடற்கரையில் குடியிருக்க, தாம் வெளியில் பணியாற்றுவோரும் நகரங்களுக்கோ, வேறு தாம் விரும்பும் இடங்களுக்கோ தம் இருப்பிடங்களை மாற்றிக் கொள்ளலாம்.

இப்போது உண்மையான கட்டுமானப் பொறியியல் சிக்கல் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் எல்லைக்குள் கட்ட வேண்டிய தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள், துறைமுகங்கள், மீன் தொழில்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான கட்டுமானங்களும், 500 மீட்டருக்கு வெளியே கடலையடுத்து குடியிருப்பது ஏதோவொரு காரணத்தால் தேவைப்படும் மீனவர்கள் மற்றும் மீனவரல்லாதவர்களின் குடியிருப்புகளும் பற்றியதே.


1.இவ்வாறு புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள், பாதிக்கத்தக்க மட்டத்தின் கீழ் உள்ள நிலங்களில் கட்டப்பட வேண்டியிருந்தால் கான்கிரீட் தூண்களாலான சட்டமிட்ட (Framed) அமைப்புகளாக, தரைத்தளம் ஊர்திகள் நிறுத்துமிடம் போன்ற பொதுப் பயன்பாட்டுடன் அதற்கு மேல் மூன்று தளங்களுக்குக் குறையாமல் கட்டப்பட வேண்டும். கட்டடங்கள் உயரம் கூடும் தோரும் அவற்றின் பாரத்துக்கு ஏற்ப அமைக்கப்படும் தூண்கள் இயல்பாகவே பேரலைகள், நில நடுக்கம் போன்ற தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கும் தன்மையை ஓரளவு எய்திவிடுகின்றன. எனவே இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக சிறிதளவே கூடுதல் செலவு இருக்கும்.

2.பல எண்ணிக்கையிலான குடியிருப்புகள் ஒரே கட்டடத்தில் இருப்பது உயரிய நிலப்பயன்பாடு, சிக்கனமான கட்டுமானப் பொருட்செலவு, சூழியல் பராமரிப்பு எளிதாதல், குடியிருப்போரிடையில் இணக்கமான உறவு நிலவ வேண்டிய கட்டாயத்தினால் மக்களின் பண்பாட்டு மேம்பாடு போன்ற பல பயன்கள் உள்ளன.

3.பேரலையின் போது குடியிருப்புகளை இழந்தோருக்கும், அவ்வாறு பாதிப்பில்லாத 500 மீட்டருக்குள் வீடுகளைக் கொண்டோரும் இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேறும் போது அவர்களது வீடுகளின் மதிப்புக்கு ஏற்ற இழப்பீடு வழங்க வேண்டும். பின்னர் அவர்களது தேவை மற்றும் பொருளியல் வலிமைக்கு ஏற்றவாறு கடன் வழங்கு நிறூவனங்களில் கடன் ஏற்பாடு செய்து அவர்கள் விரும்பும் இடங்களில் வீடுகளைக் கட்டித் தரலாம். ஒவ்வொரு நேர்விலும் பாதிக்கப்பட்டோர், பயனாளிகள் என்ற இரு கோணங்களிலும் அவர்களைக் கலந்தே முடிவுகள் எடுக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

இதில் விளக்கியுள்ளது போன்ற மீன்பிடி கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் குடியிருப்புகளும் உருவாவது வரை பாதிக்கப்பட்டபகுதி மக்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் வீடுகள் நல்ல நிலையிலிருந்தால் அவற்றிலும் இல்லையெனில் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்படும் தற்காலிகக் குடியிருப்புகளிலும் குடியமர்த்தலாம்.