பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை - 6
இந்த மூன்றடுக்குப் பாதுகாப்பு எவ்வாறு ஓங்கலைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் என்ற கேள்விக்கு இப்போது விடை காண்போம். ஓங்கலை என்பது சூறாவளியையோ ஏற்றவற்றம் எனப்படும் வீங்கலையையோ போன்று கடலின் மேல் பரப்பைத் தாக்குவதல்ல. புவிக்கு அடியிலிருந்து வெளிப்படும் புவியதிர்ச்சியின் பேராற்றல் கடலடித் தரையைத்தொட்டு மணிக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் மைல்கள், அதாவது ஒலியின் விரைவைப் போல் மூன்று மடங்கு விரைவில் பாய்ந்துவருவதாகும். கரையை நெருங்கும் போது கடலடித் தரை கரையிலிருந்து குறிப்பிடத்தக்க தொலைவிலேயே மேல் நோக்கி உயருமானால் அங்கேயே செங்குத்தாக அவ் விசை நீரை மேலெழுப்ப அது அருகிலேயே வீழ்ந்துவிடும். கரையை எட்டும் போது ஆற்றல் குறைந்துவிடும். கடலடித் தரை கரை அருகு வரை ஆழமாக இருந்து கரையின் அருகில் மேலெழுந்தால் ஓங்கலை கரையை ஒட்டி மேலெழுந்து கரை மீது பெரும் தாக்குதலை நடத்தும். இது ஓங்கலை நிகழ்ந்த பின் கள ஆய்வுகளிலிருந்து தெரிந்த உண்மை. இப்படி கடலடித் தரையைத் தொட்டு வந்த மாபெரும் விசை அள்ளிக்கொண்டு வந்த அரிய கனிமங்களை ஓங்கலை தாக்கிய உடனேயே பன்னாட்டு நிறுவனங்கள் ஆய்ந்தறிந்து நம் ஆட்சியாளர்களின் உட்கையுடன் உள்நாட்டு முகவர்களைக் கொண்டு அள்ளிச் சென்றுவிட்டனர். அனைத்தையும் அள்ளி முடிக்கும் வரை ஏதும் அறியாதவர்கள் போல் இருந்த “குமுக ஆர்வலர்கள்” இப்போது அவ்வப்போது கூக்குரல் இடுகின்றனர். ஓங்கலையின் இந்த நிகழ்முறையில் முதலில் குறுக்கிடும் கப்பலோடையின் தோண்டப்பட்ட பகுதிகள் அதன் விரைவைப் பக்கவாட்டில் திருப்பித் தணிக்கப் பயன்படும். அடுத்துக் கடற்கரையைத் தாண்டி வரும் நீரை தேரி மேடு நேரடியாகவே தடுக்கும். எஞ்சியிருப்பது ஆறுகள் வழியாக உள் நுழையும் நீரின் ஆற்றல். இதில் ஒரு பகுதி கடல் நீரின் பொது மட்டத்தில் நீரைக் கொண்டிருக்கும் உள்நாட்டு நாவிக வாய்க்காலில் திரும்பி விடும். இவற்றின் விளைவாக ஓங்கலையின் தாக்கம் குடியிருப்புகளை நெருங்கும் போது பெருமளவில் மட்டுப்பட்டுப்போகும். இந்தக் கண்ணோட்டத்தில் எதிர்காலக் கடற்கரையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய பதமாக முன்னீடு ஒன்றை எமது புதுமையர் அரங்கம் காந்தி கிராமம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் கூட்டுடன் நடுவரசு அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் முன்வைத்தது. அது ஏற்கப்பட்டு ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தான நிலையில் பல்கலைக் கழகத்தில் உருவான சில சிக்கல்களால் தடைபட்டுப் போனது. அதை இங்கு தருகிறேன்.
உயர் ஓத மட்டம்(உ.ஓ.ம. – High Tide Level – H.T.L.) எனும் ஏற்றவற்றத்தின் உயர் மட்டத்தின் மேல் 20 அடிகளாவது உயரம் கொண்ட தேரியை கடற்கரையின் முழு நீளத்துக்கும் உருவாக்கி அதன் மீது ஒரு நால்வழிச் சாலையையும் முன்னிடுகிறது இத் திட்டம். தேரியின் நிலப்புறச் சாய்வுக்கு அப்பால் கணிசமான இடைவெளி விட்டு உள்நாட்டு நாவிக வாய்க்காலைத் தோண்ட வேண்டும். வாய்க்கால் இருக்குமிடங்களில் அதன் கிடப்பை இத் திட்டத்துக்குப் பொருந்துமாறு சீரமைக்க வேண்டும். நடுத்தரச் சரக்குப் படகுகள் எதிரெதிர் செல்லும் அளவுக்கு வாய்க்காலின் அகலமும் தாழ் ஓத மட்டத்துக்கு(தா.ஓ.ம. – Low Tide Level – L.T.L.)க் கீழே ஆழமும் இருக்க வேண்டும். வாய்க்காலின் நிலப்புறக் கரை உ.ஓ.ம. அல்லது அண்மைப் பக்கத்தில் கடலில் விழும் ஆற்றின் மேலிற்று வெள்ள மட்டத்தின்(M.F.L.) மேல் தேவையான மிகு உயரத்துடன் இருக்க வேண்டும். வாய்க்கால் ஆறுகளைக் கடக்கும் இடங்களில் ஆற்று வெள்ளத்தின் இழுப்புக்கு படகுகள் ஈடுகொடுக்கும் வகையில் ஆற்றின் ஒரு மேல் எட்டத்துக்குச் சென்று ஆற்றில் இறங்கும் வகையில் ஆற்றின் அந்த மேல் எட்டம் வரை வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும்.
ஆறுகளுக்கிடையில் கடலை நோக்கி வரும் மழைநீர் விழுவதற்காக தோதான இடங்களில் இயற்கை நிலக்கிடப்பைப் பயன்படுத்தியோ செயற்கையாகவோ நன்னீர்க் காயல்களை உருவாக்க வேண்டும். மழைக் காலங்களில் அக் காயல்களில் விழுகின்ற மேலீற்று வெள்ளத்தை நாவிக வாய்க்காலினுள் கழிக்கின்ற வகையில் உயர் ஓத மட்டத்துக்கு மேல் உச்சியைக் கொண்ட கலிங்குகளை அமைக்க வேண்டும்.
தேரியின் இரு சாய்வுகளிலும் தாழை, கடல் மணலில் வேர் பதித்துப் படர்கின்ற, கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள முள் பொன்ற இலையுள்ள புல், அடப்பன் கொடி எனப்படும் கடம்பாக் கொடி போன்றவற்றை வளர்க்க வேண்டும். தடிக்கோ விறகுக்கோ பயன்படும் மரங்களைத் தவிர்த்து தேரி மணலுக்கேற்ற குத்துச் செடிகளையே வளர்க்க வேண்டும்.
தேரியின் நிலப்புறச் சாய்வுக்கும் நாவிக வாய்க்காலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் தடி மரங்களைத்தான் வளர்க்க வேண்டும். உள் நாட்டிலிருந்து கடற்கரை நோக்கி வரும் சாலைகளை நாவிக வாய்க்கால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லா வகையில் மேம்பாலங்கள் அமைத்து தேரி உச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும். வாய்க்காலின் நிலப்புறத்தில் ஒரு சாலையுடன் கரை அமைக்க வேண்டும். அது ஆறுகளைக் கடக்கும் இடத்தில் தேவைப்படும் இடங்களில் அடியில் நாவிகப் போக்குவரத்துக்கு வசதியாக தூக்குப் பாலங்கள் அமைக்க வேண்டும். தேரி மேலுள நால்வழிப்பாதை ஆறுகளைக் கடக்கும் இடத்திலும் இதே உத்தியைக் கையாள வேண்டும்.
உள்நாட்டுக்குள் கப்பல் செல்ல வாய்ப்புள்ள நேர்வுகள் தவிர ஆற்றினுள் துறைமுகங்கள் அமைக்கக் கூடாது. மீன்பிடி துறைமுகங்கள் உட்பட அனைத்துத் துறைமுகங்களையும் நாவிக வாய்க்காலில்தாம் அமைக்க வேண்டும். கடலுக்குள் செல்லும் கப்பல்கள், படகுகள் அனைத்தும் ஆற்றுக் கழிமுகங்களுக்குச் செல்லாமல் துறைமுகங்களை அடுத்து அகழ்ந்து பராமரிக்கப்படும் கால்வாய்கள் வழியாகவே செல்ல வேண்டும்.
ஆற்றுக்குள் ஆற்றுக் கழிமுகத்திலோ மேலேயுள்ள எட்டங்களில் குறிப்பிட்ட தொலைவுக்கு புதர்களோ மரங்களோ வளர்க்கக் கூடாது. ஓதம் ஆகிய வீங்கலை, சூறாவளி, ஓங்கலை ஆகியவற்றின் வீச்சு ஆற்றுக்குள் எட்டும் தொலைவு என்று கள நிலைமைகள் காட்டும் எட்டம் வரை அதற்கேற்ற உயரத்துக்கு ஆற்றின் கரைகளை உயர்த்தி நிலைத்திணைகளையும் நட்டுப் பராமரித்து வாய்க்காலுக்கு அப்பால் நிலப்புறத்திலுள்ள குடியிருப்புகளையும் பிற கட்டுமானங்களையும் விளைநிலங்களையும் காக்க வேண்டும்.
தேரிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் மக்கள் இறங்கி பொழுது போக்கு, பல்வகை மணல்சார், கடல்சார் விளையாட்டுகளில் ஈடுபடலாம். அவர்களுக்குத் தேவைப்படும் சிற்றுண்டி விடுதிகள், உணவு விடுதிகள், கடைகள் போன்றவை தற்காலிக அமைப்புகளாகவே இருக்கும். நிலையாக ஆட்கள் தங்கக் கூடாது. நிலையான கட்டடங்களும் கூடாது.
மீன்பிடி துறைமுகங்களில் கீழ்க்காணும் வசதிகள் செய்யப்பட வேண்டும்:
1. மீன்பிடி தொழிலாளர் தங்கும் விடுதி,
2. பொருள் காப்பறை,
3. படகு பழுது தளம்,
4. மீன் வகைப்படுத்திச் சிப்பமிடும் தளம்,
5. வலை மற்றும் தூண்டில் பழுது தளம்,
6. வலை உலர்த்து தளம்,
7. மீன் உலர்த்து தளம்,
8. குளிர்பதன சேமிப்புக் கிடங்கு,
9. பனிக்கட்டித் தொழிலகம்,
9. உணவகம்,
11. மனமகிழ் மன்றம்,
12. மருத்துவ மையம்,
13. மீன் பிடித்தல் மற்றும் நாவிகம் தொடர்பான பயிற்சி மையங்கள்,
14. நூல் நிலையம் மற்றும் படிப்பகம்,
15. வானிலை கண்காணிப்பகம் மற்றும் குறியறி மையம்,
16. பேரிடர் எச்சரிக்கை மையம்,
17. பேரிடர் புகலிடம்
முதலியவை.
மேலே விளக்கப்பட்டுள்ள முன்னீடுகள் பற்றி எழக்கூடிய ஐயங்கள், வினாக்களுக்கான விளக்கங்களைக் கீழே தருகிறேன்.
1. தேரி உருவாக்க வேண்டிய இடங்களில் முதலில் வாய்க்காலைத் தோண்டும் பணியைத் தொடங்கி ஒரு முதனிலைத் தேரியை உருவாக்க வேண்டும். மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் மணலைப் பற்றிப்பிடிக்கும் வேர்களுடைய, தேரியில் செழித்து வளரும் கொடிகள் குத்துச் செடிகளை நட்டால் கடலிலிருந்து வீசும் காற்று சுமந்து வரும் கடல் மணலை அவை பிடித்துவைப்பதோடு கடலை நோக்கி வீசும் காற்று அதைக் கொண்டுசெல்லாமலும் தடுக்கும்.
2. தேரியின் சாய்வுகளில் விறகு மரங்களும் தடி மரங்களும் வளர்க்கப்பட்டால் விறகுக்காகவும் தடிக்காகவும் அவற்றைத் திருடர்கள் வெட்டி அகற்றக்கூடும். அதனால் அவை தேரிக்கு நம்பகமான பாதுகாப்புப் போர்ப்பாக இருக்கமாட்டா.
3. தேரியின் மீது முன்னிடப்பட்டுள்ள நால்வழிச் சாலை மிக முகாமையான போக்குவரத்துத் தடமாக மாறும் வாய்ப்பு உண்டு. அதில் செல்வது மிக இன்பமான ஒரு பட்டறிவாகவும் இருக்கும். அதனால் அச் சாலையின் பராமரிப்புத் தேவைக்காக தேரியும் நிலைத்து நிற்கும் வண்ணம் பராமரிக்கப்படும்.
4. தேரிக்கும் நாவிக வாய்க்காலுக்கும் இடையிலுள்ள நிலத்தில் தடி மரங்கள் வளர்க்க வேண்டுமென்பதன் நோக்கத்தைக் கூறுகிறேன். கடல் நிலத்தை நோக்கி வளைந்த இடங்களில் ஓங்கலைத் தாக்குதல் கடுமையாக இருந்தது. குமரி மாவட்டத்தின் கீழ முட்டம் கடற்கரையின் ஓங்கலையின் பின்னர் எடுத்த கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.
இந்த வளைவுகளை நேராக்க முடியும். எடுத்துக்காட்டுக்கு குமரி மாவட்டம் பெரியகாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் தூண்டில் வளைவு எனப்படும் மேலேயுள்ள குரம்புகளை(groynes)ப் பாருங்கள். இவற்றின் இடையில் மணல் படிந்து மேடாகி கரை கடலை நோக்கி நகர்ந்து நேராகியிருக்கிறது. ஆனால் இந்தக் கல் குரம்புகளால் பல கேடுகள் உள்ளன. அந்த வட்டாரத்து மலைகளை உடைத்து ஆண்டு முழுவதும் கடலுக்குள் கொட்டுகிறார்கள். அதனால் பல குன்றுகள் காணாமல் போயுள்ளன. மலைகள் மறைந்து வருகின்றன. இதனாலும் இங்கெல்லாம் மழையின் சீர்மை கெட்டுவருகிறது. கடலுக்குள் கொட்டுவதால் அளந்து சரிபார்ப்பது கடினம் என்பதால் அதிகாரிகள், அரசியல்வாணர்கள் நன்றாகக் கொள்ளையடிக்க முடிகிறது. இந்த உண்மைகளை அறியாத மீனவ மக்களைத் திரட்டி கண்ட இடங்களிலெல்லாம் கற்குரம்புகள் அமைக்குமாறு அரசியல்வாணர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர்.
ஆனால் வேறு பொருட்களை, குறிப்பாக மரத்தைக் கொண்டும் குறம்புகளை அமைக்க முடியும். பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள். மரம் புதுப்பிக்கத்தக்க ஒரு இயற்கை வளம், பாறை இரும்பு போன்றவை மீளப் பெற முடியாதவை. ஆனால் பாருங்கள் நம் மாநில, நடு அரசுகள் காடுகள் அழிவதைத் தவிர்க்கிறோம் என்ற போர்வையில் தங்கள் கட்டடங்களில் கதவுகள், சன்னல்களுக்கு மரங்களைத் தவிர்த்து இரும்பைப் பயன்படுத்தி வருகின்றன. கணக்கற்ற பரப்பில் விரிந்து கிடக்கின்றன தரிசு நிலங்கள் நாடு முழுவதும். திறந்தவெளி மேய்ச்சலை முடிவுக்குக் கொண்டுவந்து கால்நடைகளைத் தொழுவங்களில் வளர்த்து மக்களைக் காடு வளர்க்க ஊக்கினால் நம் நாட்டில் தடி மரங்களுக்குக் குறைவே இருக்காது. மக்களுக்கு நல்ல முதலீட்டு வாயில்கள் திறக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும். ஆனால் இதையெல்லாம் செய்து ஆட்சியாளருக்கு என்ன ஆதாயம்? இருப்பதை மாற்றிப் புதியவற்றைப் புகுத்தி மக்களோடு ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்? மரத்தை இறக்குமதி செய்வதால் கிடைக்கும் தரகுப் பணம் இதில் கிடைக்குமா?
மீண்டும் கடற்கரைக்கு வருவோம். தேரியின் நிலப்பக்கச் சாய்வுக்கும் நாவிக வாய்க்காலுக்கும் நடுவில் வளர்க்கப்படும் மரங்களைக் கொண்டு வேண்டிய இடங்களிலெல்லாம் குரம்புகளை அமைத்து தேரியையும் நாட்டையும் கடல் சீற்றங்களிலிருந்து காக்கலாம். இதற்குப் பொருத்தமான உள்நாட்டு மரங்களைத் தேர்ந்து நட்டால் மட்டும் போதாது பேணி வளர்க்கவும் வேண்டும்.
5. ஆற்று முகப்புகளில் துறைமுகங்கள் அமைக்கக் கூடாது என்றோம். இதற்கு முதற்காரணம் கயவாய்களில் அமைக்கப்படும் துறைமுகக் கட்டுமானங்கள் ஆற்றின் பாய்ச்சலில் குறுக்கிட்டு உள்நாட்டில் வெள்ளத்தால் அழிவுகள் மிகுவதற்குக் காரணமாகும். அத்துடன் இது போன்ற வெள்ளக் காலங்களில் கப்பல்கள் துறைமுகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இடையூறாவதுடன் நிற்கும் கப்பல்களும் ஏதத்துக்குள்ளாகும். ஓங்கலைப் பணியின் போது கொள்ளிடத்தின் பழையாற்றுக் கழிமுகத்தில் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்க மீன்வளத்துறை திட்டத்துக்கு ஒப்புதலளித்துள்ளதாகவும் அவ்வாறு அமையும் துறைமுகத்துக்கு அமைக்கப்படும் தூண்டில் வளைவு ஆற்றில் வரும் வெள்ள நீரைத் தடுக்குமாதலால் உள்நாட்டில் பேரழிவு ஏற்படும் என்பதால் அத் திட்டத்துக்கு ஒத்திசைவு வழங்க தமிழகப் பொதுப்பணித் துறை மறுத்துவருகிறது என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர். இது உண்மையாயிருந்தால் மீன் வளத்துறைத் துறைமுகப் பொறியாளர்களின் மழுமண்டைத்தனம் நமக்கு வியப்பளிக்கிறது, இந்தக் கழிமுகத்துக்கு ஏறக்குறைய இரு கி.மீ.க்களுக்கு ஆற்றின் மேல் எட்டத்திலிருந்து தென்புறம் ஒரு நீர்த்தடம் உருவாக்கி அங்கு படகுகளைக் கொண்டு நங்கூரமிட்டு நிறுத்தியும் தேவைப்படும் பழுதுகள் பார்த்தும் புதுப் படகுகள் கட்டியும் வருகிறார்கள் அங்குள்ள மீனவர்கள். மீன் வளத்துறையினர் அந்த இடத்தைப் பயன்படுத்தித் திட்டம் தீட்டியிருக்கலாம் அல்லது வேறு பொருத்தமான ஓரிடத்தில் இது போன்ற நீர்த் தடத்தை உருவாக்கி அங்கு துறைமுகத்தை அமைக்க முன்னிட்டிருக்கலாம்.
(பழையாற்றில் கொள்ளிடம் கழிமுகத்தையும் அதற்கு மேற்கில் பக்கிங்காம் கால்வாய்க்கும் மேற்கில் தெற்கு நோக்கிச் செல்லும் நீர்வழியைக் காட்டும் படம்)
இந்த நோட்டங்களிலிருந்துதான் ஆற்றுக் கழிமுகங்கள் துறைமுகம் அமைக்கப் பொருத்தமற்றவை என்ற முடிவு என்னுள் முகிழ்த்தது, அது மட்டுமல்ல மேலே முன்னிடப்பட்டுள்ளவாறு நாவிக வாய்க்காலில் துறைமுகத்தை அமைத்தாலும் அங்கு வருவதற்குக் கூட கப்பல்களோ படகுகளோ ஆற்றுக் கழிமுகத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கும் வந்தேன். இந்த நேரத்தில் குமரிக் கண்டம் பற்றி ஆய்வதாகக் கூறி என்னை அடிக்கடி சந்தித்த ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியிடம் இக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சில நாட்கள் சென்று என்னைச் சந்தித்த அவர் ஒரு முகாமையான கருத்தைக் கூறினார். குமரி மாவட்டத்து மணக்குடியில் கடலில் விழும் பழையாறு என்னும் கோட்டாறுக்கு(கோடு = மலை) ஒரு காலத்தில் பறக்கைக் கால் எனப்படும் கால்வாயும் இப்போது அது வீழும் சிமிந்தக் குளம் எனப்படும் சுசீந்திரம் குளமும் அதைத் தொட்டுத் தெற்கில் கிடக்கும் பறக்கைக் குளமும்(இரண்டையும் இணைத்து பறக்கைக் குளம் என்றே ஆவணங்கள் குறிப்பிடுகின்றன) அதன் தொடர்ந்த பாதையாகவும் இருந்து அவற்றைத் தாண்டி இன்னொரு குளத்தையும் தாண்டி கடலில் விழுந்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவர் கூறிய செய்தி சிறப்பானதாகும். மேலே கூறியவாறு இன்றைய குளங்களின் கிடப்பிடத்தைக் கொண்ட பழைய கோட்டாற்றின் வழியாக பழம்பெருமை வாய்ந்த கோட்டாறு நகருக்குக் கப்பல் போக்குவரத்து நடந்துள்ளது என்பதே அது. அதாவது இன்று நாகர்கோயில் தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கும் இடத்தின் இரு பக்கங்களிலும் கோட்டாற்றின் எச்சங்கள் நீர் நிறைந்து சம்பு எனப்படும் நீர்ப் புல்வகை அடர்ந்து காணப்படுகிறது. அது மேலும் வடக்கே தொடர்ந்து ஒழுகினசேரி பாலத்துக்கு மேற்கில் தொடர்வதைக் களத்திலும் கீழை தரப்பட்டுள்ள திணைப்பட(map)த் துணுக்கிலும் பார்க்கலாம். இந்தத் துறைமுகத்துக்கு வந்த பாதையில் சேரும் வண்டலை அகற்றுவதற்கு கப்பல்களில் அமைந்த தூரகற்றிகளும் இருந்துள்ளன என்றார். பின்னர் கப்பல் போக்குவரத்து நின்று ஆற்றின் பராமரிப்பு முடிவுக்கு வந்த பின்னர் ஆறு கிழக்குப் பக்கமாக உடைப்பெடுத்து இன்றைய பாதை உருவாகியிருக்கிறது.
(சுசீந்திரத்துக்குத் மேற்கில் பறக்கைக் குளத்துக்குத் தெற்கில் கடற்கரை வரையும் வடக்கில் ஒழுகினசேரி பாலம் வரையும் தொடர்ந்து கிடக்கும் நீரோட்டத்தைக் காட்டும் படம்)
கோட்டாறு பண்டைத் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு வாணிக நகரம். அதன் எச்சமாக இன்றும் அதன் கூலக்கடைத் தெருவும் சாலையோரக் கடைகளும் காணப்படுகின்றன. அந் நகரின் தெருக்களைக் கவனித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட நகரமைப்புப் பகுதிகளை இனம் காண முடிகிறது. இது ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த ஆய்வுக்களமாகும்.
6. ஆற்று முகப்புகளிலும் மரங்கள் போன்ற தடங்கல்கள் இருக்கக் கூடாது என்கிறோம் ஏனென்றால் புயல், ஓதம், ஒங்கலை போன்று கடல் நீர் மட்டத்தில் திடீர் உயர்வுகள் நிகழும் போது அவற்றை மட்டுப்படுத்த உதவுவது கடலுக்குள் கழியும் ஆறுகளே. அவற்றின் வழியில் தடங்கல்கள் இருந்தால் கடல்நீர் எந்தத் தயக்கமும் இன்றி அண்டையிலிருக்கும் தேரியைத் தாக்கும். தேரி இல்லாத இடங்களில் 2004 ஓங்கலையில் நிகழ்ந்தது போல் ஈவிரக்கமின்றி எதிர்ப்பட்டவற்றையும் பட்டவர்களையும் அழித்து வெறியாடிவிடும். அது மட்டுமல்ல கடல் பரப்பில் தாழ்வழுத்த நிலைகள் உருவாகும் போது தன்னூடு நிலத்தின் தாழ் அடுக்குகளில் உள்ள அழுத்தம் கூடிய காற்றை வெளிப்படுத்தி தாழ்வழுத்தம் மிகாமல் அடக்குவதுடன் அத் தாழ்வழுத்தத்தைத் தன்னூடு மலை முகடுகள் வரை இழுத்துச் சென்று சூறாவளிகள் உருவாகும் முன்பே மழையைப் பெய்ய வைக்கிறது.
மா.சு.சுவாமிநாதன் வகையறா போலியான காரணங்களைக் கூறி ஆற்று முகப்புகளில் மண்குதிர்க் காடுகளை(mangrove forests) வளர்க்கத் தொடங்கிய பின்னர்தான் தமிழகக் கடற்கரைப் பகுதியில் உருவாகும் தாழ்வழுத்த நிலைகள் நிலத்தினுள் புக வழியின்றி நகர்ந்து இலங்கைக்கு அல்லது வடக்கு நோக்கி ஆந்திரக் கடற்கரையை நோக்கிச் செல்லும் போதே வலிமை பெற்று பேரழிவுப் புயல்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. தமிழகத்திலும் தொடர்ந்து மழை வாய்ப்பைக் குறைக்கின்றன. முன்பு தமிழகத்தின் எண்ணிலடங்கா மரபு விதைகளைத் திருடி பிலிப்பைன்சு அமெரிக்க வேளாண் ஆய்வகத்துக்குக் கடத்தியதான குற்றச்சாட்டுக்கு உள்ளான சுவாமிநாதனிடம் இது போன்ற செயலைத்தான் எதிர்பார்க்க முடியும்.
7. சிறிய படகுகள், தோணிகள், வள்ளங்கள் கட்டுமரங்கள் போன்றவற்றின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்து குறைந்தது நடுத்தர அளவுள்ள படகுகளையாவது பயன்படுத்தும் குறிக்கோளை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்பது என் அவா. கிட்டத்தட்ட 1000 கி.மீ. நீளம் கடற்கரையைக் கொண்ட தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட தமிழக மக்களுக்குச் சத்தும் எளிமையும் கலந்த மீனுணவு கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் தவறல்ல என்று கருதுகிறேன். இன்று நமக்கு எதிரி அரசு போல் செயல்படும் இந்திய அரசின் கடலோரக் காவற் படையின் துணையுடன் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் சிங்களர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் துணை சேர்க்கவாவது நாம் உள்நாட்டு மக்களுக்குரிய மீன் வழங்கலை உயர்த்த நம் மீன்பிடித் தொழிலின் தொழில்நுட்பங்களை இன்றைய அறிவியல் வெளிச்சத்தில் நம் பண்டைய மரபு அறிவுகளின் அடிப்படையில் மேம்படுத்திப் பயனுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த இடைமாற்றக் காலத்தில் இப்போது பணியாற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு அவர்களின் அகவைக்கும் கல்விக்கும் ஏற்றவாறு பயிற்சியளித்துப் புதிய சூழலில் பயன்படுத்த வேண்டும். முதுமையடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற வசதிகளை வழங்க வேண்டும்.
ஓங்கலைப் பணியின் போது கிடைத்த செய்திகளும் படிப்பினைகளும் பட்டறிவுகளும் பலப்பல. அவற்றில் பின் வருபவை முகாமையானவை. ஓங்கலைத் தாக்கல் நிகழ்ந்த உடனே எங்கெங்கெல்லாமோ இருந்து உதவிகள் வந்து குவிந்தன. உதவ வந்தவர்கள் துயருற்ற மக்களுக்கு உடனடியான மீட்புதவிகளையும் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தவும் மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதிலும் முனைப்பாக ஈடுபட்டனர். இன்னொரு புறம் ஒங்கலையால் குடியிருப்புகளை இழந்தோருக்கு புதிய குடியிருப்புகளை அமைப்பது பற்றிய ஆயத்த வேலைகள் ஆட்சியாளர்களின் கண்காணிப்பில் நடைபெற்றன. இது குறித்து தமிழக அரசும் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி களத்திலிருப்போர்க்கு அளித்தது. அதில் முகாமையானது, புதிய குடியிருப்புகள் கடற்கரையிலிருந்து 2 கி.மீ.க்கு அப்பால் இருக்க வேண்டுமென்பது. இது மிகச் சரியான அணுகலாகும். இந்தத் தொலைவு நிலக் கிடப்புக்கு அதாவது கடலை அடுத்த நிலத்தின் மேல் நோக்கிய சாய்வைப் பொறுத்து மாற்றத்தக்கதாகலாமே ஒழிய பாதிப்புக்குள்ளாகத்தக்க மட்டத்துக்கு மேலே இருக்க வேண்டுமென்பது சரிதான். கடலோரக் குடியிருப்புகளும் அவற்றையொட்டியே படகுகளை ஒதுக்கி வைத்திருப்பதும் பெரும் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் என்பதைக் கீழையுள்ள புகைப்படங்கள் விளக்கும். வலது புறத்திலுள்ள குமரி மாவட்ட கீழ மணக்குடி மாதா கோவிலைத் தகர்த்தெறிந்தவை ஓங்கலையின் பேய்க் கரங்களால் தூக்கி வீசப்பட்ட கரையில் கிடந்த படகுகள்தாம்.
ஆனால் இந்தத் திட்டம் சிலருக்கு, குறிப்பாக தமிழகக் கடற்கரை மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பினருக்கு உவப்பாயில்லை. சங்கத்தைப் பயன்படுத்தி கடற்கரையில் படும் மீனை மொத்தமாகக் கொள்முதல் செய்து கொள்ளையடிப்பவர்கள் இவர்கள். இருக்கும் கட்டமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும் அது தங்கள் மேலாளுமைக்கு அறைகூவலாக அமையும் என்று நினைத்தனர். கடற்கரை மதகுருக்களும் அவ்வாறே உணர்ந்தனர். விளைவு 2கி.மீ. 1கி.மீ.யாகி பின்னர் ½ யாகி இறுதியில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என்றாயிற்று.
பழையாற்றில் பாதுகாப்பான மட்டத்துக்கு மேல் இருக்க வேண்டுமே என்று என் போன்றவர்கள் தேடித்தேடி பொருத்தமான ஓர் இடத்தைத் தேர்வு செய்து நில அளவை ஆவணங்களைத் திரட்டிக்கொண்டிருந்த போது பழைய பெருநிலக்கிழார்(மிராசுதார்), குன்னியூர் சாம்பசிவ ஐயர் என்று நினைவு, அவருடைய நிலத்தில் நில உச்சவரம்பின் போது யாரும் ஏற்றுக்கொள்ளாமல், ப.வாய்க்காலுக்கு வெளியே நிலப்புறத்தில் காலங்காலமாக பாசியோடி நீர் தேங்கி அழுகிக் கிடந்த இடத்தைப் பேசி முடித்தார்கள். அதை நான் எதிர்த்தேன். இது போன்ற சிக்கல்கள் காரைக்கால் வட்டாரத்திலும் குமரி மாவட்டத்திலும் எழுந்தன. குடியிருப்புகளின் அமைப்பும் இப்போது நாம் பட்டறிந்துவரும் இடர்பாடுகள் இல்லாத மேம்பட்ட கண்ணோட்டத்தில் இருக்குமாறு வடிவமைப்புகளை முன் வைத்தேன். இதுவும் மேலேயுள்ளவர்களுக்கு உவப்பாயில்லை. இதற்குள் வெளிநாட்டுத் “தொண்டு” நிறுவனங்கள் கொட்டும் பணத்தில் உண்டு களித்த ஒரு கூட்டம் ஆரவாரத்துடன் உள் நுழைந்தது. கட்டுமானங்களின் தரம் போன்ற என் முன்வைப்புகளை விரும்பாத அந்தக் கூட்டம் என்னைக் குறிப்பிட்டு வெளியேற்ற வற்புறுத்தியது. அதோடு கடற்கரையோடுள்ள அப்போதைய உறவு முடிவுக்கு வந்தது.
இந்தக் கால கட்டத்தில்தான் அமெரிக்கப் பின்புலமுள்ள ஒரு தொழிற்சங்கம் பழையாறு வட்டாரத்தில் புகுந்து படகு உரிமையாளர்களுக்கு எதிராக மீன்பிடித் தொழிலாளரை ஒருங்கிணைத்து தூண்டிவிட்டு இரு சாரருக்கும் அடிதடி வெட்டுக்குத்து எல்லாம் நடைபெற்றன. இதனாலும் ஏழை மீன்பிடி தொழிலாளர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான ஒரு குடியிருப்பு வேண்டும் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் போயிற்று. பிற பகுதிகளிலும் இந்த அமெரிக்கக் கையாட்கள்தாம் மீனவர்களைக் கடலோரப் பழங்குடியினர் என்று மூளைச் சலவை செய்து தமிழகத்தின் பிற மக்களிடமிருந்து மனதளவில் பிரித்து வைத்துள்ளனர். இந்தியக் கடலோரக் காவற்படையின் ஒத்துழைப்போடு சிங்களக் கடற்படை நம் மீனவர்கள் மீது இடையீடின்றி நடத்தும் கொலைவெறித் தாண்டவம் அவர்களை மட்டுமல்ல தமிழக உணர்வுடைய உள்நாட்டு மக்களையும் ஒன்றிணைய வைக்கும் என்பதில் ஐயமில்லை.
கடலோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன். உள்நாட்டில் வாழ்வோரின் நிலையும் மேம்பட்டதல்ல. நேப்பாளத்தில் அடுத்தடுத்து நிகழும் நில நடுக்கம் இதற்கு முன் நிகழ்ந்தவற்றிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றுகிறது. இப்போதைய நிலநடுக்கத்தின் பின்னே இமயத்தின் உயரம் குறைந்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை இதழ்களில் வெளியானது. இதன் பொருள் மிக அச்சம் தருவது. இந்தியக் கண்டத்தட்டு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத் தட்டோடு மோதி சிறுகச் சிறுக உயர்ந்து வந்தது. இந்த உயரத்தின் சுமையைத் தாங்கும் சுற்றியுள்ள நிலத்தின் உராய்வு ஆற்றல் எல்லையை மலையின் உயரம் தாண்டும் போது பக்கத்து நிலம் விட்டுக்கொடுக்க மலை கீழ் நோக்கி விரைந்து இறங்க நேரலாம். இமயம் இறங்கியுள்ளது என்ற ஆய்வர்களின் கூற்று உண்மையானால் உலக அளவில் பேரழிவுகள் நேரலாம். எனவே அனைவரும், குறிப்பாகக் கடலோர மக்கள் கடல் அலைகள் தொடும் எல்லையிலிருந்து விலகியிருப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
மேலே நான் தந்துள்ளது போன்ற ஓரு திட்டம் முழுக்க முழுக்க கடலோர மக்களுக்கு முன்னுரிமையுடன் தமிழக மக்களின் பங்கு முதலீட்டில் செயல்படுத்தப்பட்டால் இன்று மீன்பிடிப்பதை மட்டுமே வாழ்வின் ஒரே வழியாகக் கொண்டிருக்கும் கடலோர மக்களுக்கு தேரியைப் பராமரித்தல், மரங்களைப் பராமரித்தல், நாவிக வாய்க்காலில் அமையவுள்ள சிறு, குறு, நடுத்தர, பெரும் துறைமுகங்களிலும் பொருள், ஆள் போக்குவரத்து, வாய்க்காலிலும் கடலிலும் பல்வேறு விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்தால் அதன் மூலமும் உருவாகும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. எனவே இந்த மேம்பாட்டுப் பணியை தமிழகம் தவிர்த்த எவருடைய பங்களிப்பும் இன்றி மேற்கொள்வதற்காக இந்திய அரசை வலியுறுத்தும் போராட்டத்தைத் தொடங்க தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகத்தின் பின் அணிதிரளுமாறு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறோம்!
ஓங்கலைப் பணியின் போது நான் அறிந்த ஓர் உண்மை, ஏறக்குறைய தூத்துக்குடிக்கு வடக்கில் வாழும் மீனவர்கள் கடற்கரையில் மரபு வழியில் வாழ்ந்தவரில்லை என்பது. நாகை மாவட்டத்தின் பழையாற்று மக்கள் தாங்கள் கடந்த 200 ஆண்டுகளுக்குள் அங்கு குடியேறியவர்கள் என்று கூறுகிறார்கள். இராமேசுவரம் பகுதி மீனவர்களைப் பொறுத்தும் அவ்வாறே கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவர்களது சிந்தனைகள் மீன்பிடிப்புக்கு அப்பால் செல்லவில்லை. அத்துடன் குமரி மாவட்டத்தில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது போன்ற கல்விப் புரட்சி பிற இடங்களில் நிகழவில்லை. அங்கு மீனவர்கள் கல்வியின் துணையுடன் பல துறைகளிலும் பணியாற்றுகிறார்கள். கப்பல் துறைக் கல்வி கற்று கப்பல்களிலும் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் கடலோடிகளுக்கு எதிராக காலங்காலமாக நம் ஆளும் கணங்கள் வளர்த்து வந்திருக்கும் எதிர்மறை அணுகலால் கப்பல் தொழிலுடனான அவர்களது தொடர்பு அறுந்து போயிற்றென்றே கூற வேண்டும். வெள்ளையர்கள் இங்கு வந்த தொடக்க காலத்தில் இங்கிருந்த கப்பல் கட்டும் தளங்களில் தங்களுக்குத் தேவையான கப்பல்களைக் கட்டினர் என்று சில செய்திகள் உள்ளன. ஆனால் மேலை நாடுகளில் வளர்ந்த கப்பல் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அத் தொழில் மீன்பிடி படகுகளைக் கட்டுவதாகச் சுருங்கிப் போனது. இந்த முட்டுக்கட்டை நிலையை உடைக்கக் கிடைத்த ஒரே வாய்ப்பான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் முயற்சியை குசராத்து பனியாவான காந்தி – ஆங்கிலர் கூட்டணி சிதறடித்துவிட்டது. இன்று மதிப்பு மிக்க தமிழகக் கடற்கரையை மீன்பிடிப்புக்கு அப்பால் பயன்படுத்துவது பற்றிய கேள்விக்கு விடைகாண வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் தமிழகக் கடலோர மக்கள், குறிப்பாக இளைஞர்கள் உள்ளனர். வளர்ச்சி என்ற சாக்கில் அயல்நாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் நம் ஆட்சியாளர்கள் இந்த 67 ஆண்டுகளில் அடித்த கொள்ளையின் தொகுப்பான, வெளிநாடுகளில் அங்குள்ள குசராத்தி – வல்லரசு நிறுவனங்களின் மூலமாக நுழைந்து தமிழர்களைத் தங்கள் தாயகத்திலிருந்து அகற்றுவதை வேடிக்கை பார்த்திருந்து எந்த நாட்டில் குடியேறுவது என்று ஆய்வதா, நம் சொந்தச் செல்வங்களைத் திரட்டி நம் கடற்கரையை நம் பல்வகை – பல்துறைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தைத் தொடங்குவதா என்பதை முடிவு செய்ய வேண்டிய காலக்கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது கடலோர மக்களை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் முன்னால் நிற்கும் பல கேள்விகளில் ஒன்று.
வருமான வரியை ஒழிப்போம்!
உள்நாட்டு மூலதனத்தைப் புரப்போம்!
வெளிநாட்டு மூலதனத்தை வேரறுப்போம்!
தமிழகமே நமது ஊர்!
1956 நவம்பர் 1ஆம் நாளுக்குப் பின்னர் குடியேறியவர் தவிர்த்த தமிழக மக்களே நமது உறவினர்!
☀ ☀ ☀
முடிவுரையாக…….
2004 திசம்பர் 24ஆம் நாள் தமிழக மக்கள் மீது ஊழி வெள்ளமாகப் பாய்ந்து நாம் பார்த்தறியாத அழிவுகளை ஏற்படுத்திய ஓங்கலையின் கொடும் விளைவுகளைப் பார்க்கவென்று தானே முன்வந்து என்னை அழைத்துச் சென்ற பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர்(ஓய்வு) நண்பர் பொறி.இரத்தினசாமியுடன் குமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். அங்கு கட்டுமரங்களும் சிறு படகுகளும் வீடுகளின் மீது மோதி அவற்றை உடைத்து வீடுகளின் மேல் கவிந்திருந்ததைக் கண்டோம். இளைஞர்கள் சிலர் அவற்றில் ஒன்றை அப்புறப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர். படகுகளுக்கு அடியிலிருந்து பிண வாடை வீசியது, ஓருவரோ பலரோ அந்த வீட்டினுள்ளோ படகின் அடியிலோ சிக்கியிருக்கலாம் என்று தோன்றியது. கிடைத்த ஓர் இடுக்கு வழியாக அந்த இடத்தைத் தாண்டி கடலருகே சென்றோம். அந்தக் கூட்டத்திலிருந்த, நடுப்பருவத்தைத் தாண்டிய எளிய தோற்றமுடைய ஒருவர் எங்களைப் பின்தொடர்ந்தார். அங்கிருந்து மேற்கில் காணப்பட்ட கீல்(தார்) சாலையையும் அதன் இரு பக்கங்களிலும் நொறுங்கிக் கிடந்த வீடுகளையும் காட்டி இந்த வீடுகள் அண்மைக் கடந்த காலத்தில் உள்ளூர் அரசியல்வாணர்களால் தேரியின் கடற்பக்கத்தை நிரத்தி அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் என்றும் இங்கு சாலைகள், குடிநீர்க் குழாய்கள், மின்விளக்குகள் போன்ற வசதிகளுக்காக அங்கு குடியேறிய மக்களைத் திரட்டி அரசியல்வாணர்கள் போராட்டங்கள் நடத்தி தங்கள் வாக்குவங்கியையும் வருவாயையும் வளர்த்துக்கொண்டனர் என்றும் மனக் கொதிப்புடன் கூறினார். கடற்கரையிலிருந்து திரும்பிய போது படகை நகர்த்த முயன்ற இளைஞர்கள் தம்மால் முடியாது என்று கூறிக் கலைந்துகொண்டிருந்தனர். அந்த இடம் மேலே குறிப்பிட்ட புதிய குடியிருப்பிலிருந்து பழைய தேரி மட்டத்திலிருக்கும் குடியிருப்பை நோக்கிய இடை நிலத்தில் இருந்தது. தேரி மேலிருந்த குடியிருப்புகளும் பேருந்துத் தடமான சாலையும் பாதிக்கப்படவில்லை.
பாதிப்பென்று குறிப்பிடும் படியாக எதுவுமே நிகழாத இராசாக்கமங்கலம்துறையில் பேருந்து நிறுத்த நிழல் கூடத்தில் கூடி இருந்த மீனவர்கள் சிலரிடம் உரையாடிய போது கடற்கரையில் கட்டுமரங்களையும் வீட்டுக்குள் வலைகளையும் கருவாடுகளையும் வைத்து நடத்தும் இந்த வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்து முன்னேறிய மீன்பிடி உத்திகளை என்று கையாளப் போகிறீர்கள் என்று கேட்டேன். நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை பேருந்தில் நன்றாக உடை உடுத்தியிருந்த ஒரு பெண்மணியின் அருகில் உட்கார நேர்ந்தது. சிறிது நேரத்தில் அந்த அம்மாள் ‘கருவாட்டு வாடை அடிக்குதா கண்ணு’ என்று கேட்டார், கேட்டுவிட்டு, என்னதான் பாதுகாப்பாக பேழையுள் வைத்திருந்தாலும் வீட்டினுள் இருக்கும் கருவாட்டு வாடை துணிகளில் வந்துவிடுகிறது என்று அமைதியும் கூறினார். கடற்கரை ஊர்களிலுள்ள, பெரும்பாலும் பெண்கள் பொறுப்பிலிருக்கும் கடைகளில் வெற்றிலை போடும் என் தந்தையிடம் அவர்கள் வீட்டில் நடைபெறும் திருமணம், கோயில் விழா, பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரங்களை கொடுத்தனுப்புவார்கள். சில வேளைகளில் வீட்டுக்கு வருவோரும் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றிலும் சிறிது கருவாடு வாடை இருக்கும். இவ்வாறு அவர்களது வாழ்க்கை முறைகளையும் வாழ்க்கை நிலைகளையும் அறிந்திருந்த என் கேள்வியின் உட்கருத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் என் பொதுக்கருத்தை ஏற்று மறுமொழி கூறினார்கள். ஆனால் முன்பு ஓலைக்குடிசைகளில் வாழ்ந்தவர்கள் இப்போது கான்கிரீட் கூரை போட்ட வீடுகளில் வாழ்ந்தாலும் வலைகளையும் பிற மீன்பிடி தளவாடங்களையும் வீட்டிலிருந்து தனியாக இருக்கும் ஓலைப் புரைகளில் வைத்திருந்தாலும் அடிப்படை மீன்பிடி உத்திகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடு எதையும் அடையவில்லை.
ஓரிரண்டு நாளில் என் நெருங்கிய நண்பரும் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தரான ப-ர்.தி.கருணாகரன் அவர்களின் வீட்டருகில் இருந்தவருமான நண்பர் ஆ.கோபாலகிருட்டினன் துணைவேந்தர் ஓங்கலைப் பாதிப்புகளை ஆய்வுசெய்ய வந்திருப்பதாகவும் விரும்பினால் நானும் கலந்துகொள்ளலாமென்றும் கூறினார். ப-ர்.தி.கருணாகரன் என் நெருங்கிய உறவினர், சிறு பருவதிலிருந்தே நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு, பிற்காலத்தில் அவரவர் பணிகளின் சூழலில் எங்கள் தொடர்பு குறைந்திருந்தது. இப்போது தொடங்கிய எங்கள் தொடர்பு நான் காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் தங்கி ஏறக்குறைய ஓராண்டுக்காலம் கடற்கரையிலும் கொடைக்கானல் மலைப்பகுதியிலும் பணியாற்ற வாய்ப்பளித்தது. என் நண்பரும் கணினிக் கையாட்சியிலும் எனக்கு ஆர்வமுள்ள துறைகளிலும் ஈடுபாடுடையவருமான பள்ளி ஆசிரியர் ம.எட்வின் பிரகாசு அவர்களும் அவ்வப்போது என்னுடன் இணைந்துகொண்டார். துணைவேந்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஓங்கலை, தேரிகள், மண்குதிர்க் காடுகள், கடற்கரைப் பாதுகாப்பு போன்றவை குறித்த அடிப்படைச் செய்திகளை வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து தந்தார். இந்திய அரசின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை நடத்திய ஓங்கலை பற்றிய கருத்தரங்கில் என்னைக் கலந்துகொள்ள துணைவேந்தர் ஏற்பாடு செய்தார். அவர் வழிகாட்டலில் அக் கருத்தரங்கில் முன்வக்கவென்று எட்வின் துணையுடன் உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவில் உள்ளவைதாம் மேலே தரப்பட்டுள்ள புகைப்படங்கள். கடற்கரை பற்றிய குறுக்குவெட்டு நான் கையால் வரைந்ததை, அப்போது பல்கலையில் ஆய்வு மாணவராக இருந்தவரும் கட்டடக் கலைப் பொறியாளரும் துணைவேந்தரின் இணைய மகளுமான செல்வி புதுமா கணினியில் அழகுற வரைந்தது. இவ்வாறு என் இளமைக் காலம் தொட்டு என் சிந்தனையில் பதிந்துள்ள துறைகளில் முகாமையான இடத்தைப் பிடித்துள்ள தமிழகக் கடற்கரையின் மீட்சிக்கும் ஆட்சிக்கும் உதவும் என்று நான் நம்பும் இந்தப் படைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமங்கலம் அன்புடன்
18 – 06 – 2015 குமரிமைந்தன்