பணத்தோட்டம் – மதிப்புரை.
பணத்தோட்டம் – மதிப்புரை.
குமரிமைந்தன்
பணத்தோட்டம் என்ற அழகிய, பொருத்தமான தலைப்பைக் கொண்ட இந்த நூல்
சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழகத்திலும் இந்தியாவிலும் உரத்தொலித்த திராவிட
நாடு பிரிவினை என்ற முழக்கத்தின் பால் தமிழகத்து மக்களின் அனைத்துத்
தரப்பிலிருந்தும் ஒரு கணிசமான பகுதியினரை ஈர்த்த ஒன்றாகும். இந்நூலில்
தரப்பட்டுள்ள செய்திகளும் புள்ளிக் கணக்குகளும் காந்தி உயிருடன் இருக்கும் போதே
வடக்கில் ஆலைகளின் வளர்ச்சியையும் தெற்கே அவற்றை நசுக்கும் பணியையும், வெள்ளையன்
வெளியேறும் முன்பே பேரவைக் கட்சியினர் தொடங்கிவிட்டதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
இன்றைய ப.சிதம்பரம் போலவே அன்றைய ஆர்.கே.சண்முகம்(செட்டியார்) தமிழகப் பொருளியலை
அழிப்பதில் முனைப்புடன் செயற்பட்டிருப்பது வெளிப்படுகிறது. மாபெரும் ஆலை
முதலாளியான பிர்லா வளமனையில்(மந்திர், அதாவது கோயிலில்) அமர்ந்து கைராட்டை சுற்றி,
மரபுத் தேசியப் பொருளியலை வளர்க்கிறேன் என்று மனமறியப் பொய் சொல்வதற்கு காந்திக்கு
நம் மக்களின் மழுமண்டைத்தனத்தின் மீது முழு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை
அண்ணாத்துரைக்கும் இருந்தது. அதனால்தான் 1953இல் தி.மு.க. நடத்திய மும்முனைப்
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட மூன்று சிக்கல்களில் ஒன்று கூட பொருளியல் குறித்ததாக
இருக்கவில்லை. அவற்றில் ஒன்று ஆச்சாரியார் என்றும் குல்லூகபட்டர் என்றும்
மூச்சுக்கு முன்னூறு முறை வசவும் கிண்டலும் செய்யும் இராசகோபாலாச்சாரியை நேரு
நான்சென்சு என்று இழிவுபடுத்திவிட்டதற்கு எதிராக, இன்னொன்று வடக்கத்தி மார்வாரி
சிமென்றுத் தொழிற்சாலை அமைத்துள்ள திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் அமைந்துள்ள
தொடர்வண்டி நிலையத்துக்கு டால்மியாபுரம் என்று வைத்திருக்கும் பெயரைக் கல்லக்குடி
என்று மாற்ற வேண்டுமாம். அந்தச் சிமென்றுத் தொழிற்சாலையைத் தமிழக மக்களுக்கு மாற்ற
வேண்டும் என்று கூற அண்ணாத்துரைக்கு அறிவில்லையா என்ன? நம் மக்களின் மழுமண்டைத்
தனத்தின் மீதான அளவில்லா நம்பிக்கைதான் காரணம். இன்னொன்று இந்தி எழுத்துக்கள்
அழிப்புப் போராட்டம்.
தமிழகத்தின்
தாமசு ஆல்வா எடிசன் கோ.து.(சி.டி.)நாயுடு அவர்கள் வடிவமைத்த கரிசி(முகம் மழிக்கும்
பிளேடு), வானொலிப் பெட்டி போன்றவற்றுக்கு காப்புரிமம் தர நேருவின் பனியா அரசு
மறுத்ததுடன் அவர் மீது வருமான வரித்துறையையும் ஏவி விட்டது. அவர் தன் வாழ்வின்
இறுதி வரை வருமான வரிக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தார். அவருடைய
கண்டுபிடிப்புகளுக்கு இந்திய பனியா அரசு காப்புரிமம் வழங்கவில்லை என்பதை மேடைக்கு
மேடை பேசித் தன் கட்சிக்கு மக்களின் கருத்தைத் திருப்ப முயன்ற அண்ணாத்துரை அதற்கு
எதிராக ஒரு சிறு ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லை.
இந்த
நூலில் தமிழகத்தின், அதாவது அன்றைய சென்னை இராசதானி மீது பனியாக்களின் பொருளியல்
பிடி இறுகுவதற்கு எதிராக “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்று வைத்த
முழக்கத்தை பின்னர் நடப்புக்கு வந்த ஐந்நாண்டுத் திட்டங்களில் தமிழகத்துக்கு உரிய
பங்கு வேண்டும் என்று ஓசைப்படாமல் மாற்றினார்.
இடைவிடாத
எண்ணற்ற பரப்பல் உத்திகளுடன் கொள்கையில்லாக் கூட்டணி அமைத்து இந்தியாவுக்கே
வழிகாட்டி ஆட்சியைப் பிடித்த பின் அண்ணாத்துரை செய்ததென்ன? உலகத் தமிழ் மாநாட்டு
நிகழ்ச்சியைப் பயன்படுத்தி சென்னை கடற்கரைச் சாலை நெடுகிலும் சிலைகள் அமைத்ததும்
சென்னை என இருந்த மாநிலப் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதும் தவிர பொருளியலில்
என்ன செய்தார்? உரூபாவுக்கு மூன்று படி அரிசி போடுவதாகத் தெரிந்தும் பொய்
வாக்குறுதி அளித்துப் பதவியைப் பிடித்த அண்ணாத்துரை சென்னையிலும் கோவையிலும்
தொடங்கிய உரூபாவுக்கு ஒரு படி அரிசித் திட்டத்தைத் தொடர முடியாமல் “கிடைத்தால்
வீட்டுக்கு கிடைக்காவிட்டால் நாட்டுக்கு” என்ற அடுக்குமொழியுடன் பரிசுச் சீட்டுத்
திட்டத்தைத் தொடங்கி ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் சூதாடவிட்டு தமிழக மக்களின்
வாழ்க்கையைச் சீரழித்தது தவிர?
அண்ணாத்துரை
முதலமைச்சராகப் பதவியேற்ற போது முதன்முதலில் அவருக்கு பரிவட்டம் கட்டி வாழ்த்துச்
சொன்னவர்கள் மார்வாரிகள் என்ற செய்தி சுட்டிக்காட்டுவது பணத்தோட்டம் என்ற
இந்த நூலை எழுதிய உடனே மார்வாரிகளுக்கும் இவருக்கும் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதை அல்லவா?
அவர்கள் தந்த பின்னணியில்தான் இவர் துணிந்து பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தாரா?
எது எப்படி இருந்தாலும் நமது உண்மையான சிக்கல்களைக் காட்டிப் பதவியைப்
பிடித்தவர்கள் அமைத்த அரசுகளின் ஆட்சிக் காலத்தில் அந்தச் சிக்கல்கள் ஆயிரம்
மடங்கு முனைப்படைந்துள்ளன என்ற உண்மை இந்த நூலைப் படிப்போருக்குப் புரியும்.
மார்வாரிகள் தரும் பண்டங்களை வாங்கி விற்று வயிறு வளர்த்த தமிழர்களுக்கு இன்று
மார்வாரியே ஊரூருக்கும் கடைகள் வைத்து மார்வாரிகள் சீனத்திலிருந்து இறக்குமதி
செய்து குறைந்த விலைக்குத் தரும் பண்டங்களை விற்று உள்ளூர் சிறு வணிகர்களைக்
களத்திலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும் அளவுக்கு சிக்கல் முற்றிப்போயிருக்கிறது.
எனவே நாம் உடனடியாக மண் சார்ந்த நம் உரிமைகளை நிலைநாட்ட களத்திலிறங்க வேண்டிய
கட்டாயத்திலிருக்கிறோம் என்பதாலேயே தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
இந்தூலை மறுபதிப்புச் செய்து உங்கள் முன் வைக்கிறது என்பதைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய
அரசு உருவாக்கியதாக நூல் கூறும் இண்டசுட்டிரியல் பைனான்சு கார்ப்பரேசனில் எப்படி
பெரும்பான்மைப் பொறுப்புகளையும் இந்திய அரசு ஏற்றுக்கொண்டு வழிநடத்தல் குழுவில்
மட்டும் ஓரிரண்டு தவிர அனைத்து இடங்களையும் பனியா முதலாளிகளிடம் கொடுத்ததோ
அப்படித்தானே அண்ணாத்துரை பரிந்துரைக்கும் அரசுடைமை நிறுவனங்களிலும் நடக்கின்றன.
உழவர்கள் அரசுக் கடன் நிறுவனங்களின் தொல்லைகள் தாங்காமல் நாடு முழுவதும் தற்கொலை
செய்வது தொடர்கதையாக இருக்கும் போது பனியா முதலாளிகளிடம் குறைந்தது 8 இலக்கம்
கோடிகள் வாராக்கடன்கள் நிற்பதாகச் செய்திகள் கூறுகின்றன். இதற்கெல்லாம் ஒரு முடிவு
கட்டும் போராட்டத்துக்கு இந்நூல் தரும் செய்திகள் பயன்படும் என்று நம்புகிறேன்.
குமரிமைந்தன்
திருமங்கலம்,
13 – 05 – 2017
பிற்சேர்க்கை
கட்டற்ற
கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால்சாமி துரைசாமி நாயுடு
|