6.11.15

திராவிஇட மாயை - 1


திராவிட மாயை
குமரிமைந்தன்
மனந்திறந்து ……
            ஆங்கிலர் ஆட்சியின் கீழிருந்த சென்னை மாகாணத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த நிலப்பகுதிகள் அடங்கியிருந்தன. அந்த மாகாண மக்களின் பொருளியல் முனைவுகளை முடக்கும் வகையில் பனியா - பார்சிகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அம் மாகாணத்தில் வாழ்ந்த மகாராசாக்கள் எனப்படும் சிற்றரசர்கள், பணம்படைத்தவர்களாக இருந்த பார்ப்பனரல்லாத மேல் சாதிகள் ஆகியோர் தங்களுக்கு ஆகவேண்டிய பணிகளுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் போது அங்கு பணியில் ஏறி அமர்ந்திருந்த பார்ப்பன  அதிகாரிகளும் அலுவலர்களும் அவர்களை மதிக்காமல் இழிவாக நடத்தினர். இதன் எதிர்வினையாக உருவானதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இதன் தொடக்க கால மூலவர்களாக இருந்தவர்கள் மேலே நாம் குறிப்பிட்ட நான்கு மொழிகளும் பேசும் மக்களிலிருந்து வந்தவர்கள்.

            19ஆம் நூற்றாண்டில் செருமனியைச் சேர்ந்த மாக்சுமுல்லர் ஐரோப்பியரும் இந்தியப் பார்ப்பனர்களும் “ஆரிய இனம்” என்ற ஒரு கற்பனை மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மேற்காசியாவிலிருந்து கிழக்கும் மேற்கும் நோக்கிப் பரந்து அவ்வப் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவர்கள் என்றும் ஒரு கோட்பாட்டை இறுதி செய்தார். அதே போல் பிரிட்டனைச் சேர்ந்த கிறித்துவ மதகுரு கால்டுவெல் என்பவர் மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகியவை தமிழ்களிலிருந்து கிளைத்த மொழிகள் என்றும் தமிழ் “ஆரிய” மொழியாகிய சமற்கிருதத்திலிருந்து வேறுபட்டது என்றும் சமற்கிருதத்திலிருந்து கடன் பெறாமல் தன் சொந்தச் சொல்வளத்தைக் கொண்டு அதனால் வாழ முடியும் என்றும் கூறினார். மேலே கூறிய நான்கு மொழிகளோடு துளு முதலிய சில மொழிகளையும் சேர்த்து “திராவிட மொழிக் குடும்பம்” என்றும் அவற்றைப் பேசுவோரைத் “திராவிடர்” என்ற மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார். “திராவிடர்”கள் ஐரோப்பாவில் பின்லாந்து, நண்ணிலக் கடற்பகுதி உள்ளிட்ட ஆறு பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவில் குடியேறினார்கள் என்றும் கூறினார். “திராவிடர்”கள் இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்ததாகவும் இந்தியாவின் வடமேற்கு மூலையில் உள்ள கைபர் கணவாய் மூலம் “ஆரியர்கள்” வந்து வட இந்தியாவில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டியதாகவும் தென்னிந்தியாவில் தந்திரமாக தம் வருணக் கோட்பாட்டின் மூலம் “திராவிடர்”களைச் சாதிகளாக பிரித்துத் தம் மேலாளுமையை நிலைநாட்டியதாகவும் ஒரு வரலாற்று வரைவு, ஐரோப்பிய - இந்திய வரலாற்றாசிரியர்களால் புனையப்பட்டது. மாக்சுமுல்லரது “ஆரிய இனம்” கால்டுவெல்லின் “திராவிட இனம்” ஆகியவை குறித்த கற்பனை இனக் கோட்பாடு ஆகியவை இன்றுவரை உலக அலுவலக வரலாற்றாய்வில் உறுதியான இடத்தைப் பிடித்துவிட்டன. 19ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகிய காலப் பகுதியில் தமிழகத்தில் இருந்த குமுக முரண்பாடுகளால் இந்த இனக் கோட்பாடு இங்கும் வலிமையான இடத்தைப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் இடையில் பிடித்துவிட்டது. இருப்பினும் தென்னிந்திய நல உரிமை சங்கம்  “திராவிடர்” என்ற  இன அடிப்படையில் அன்றி சாதி ஒழிப்பு என்ற அடிப்படையில்  கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டையும் சென்னை மாகாண மக்களின் பொருளியல் நடவடிக்கைகளுக்கான அடிப்படைகளையும் தன் ஆட்சிக் காலத்தில் அமைத்துத் தந்தது.

            கோட்பாட்டு அடிப்படையில் இலங்கையிலும் தமிழகத்திலும் வாழ்ந்த சிவனிய வெள்ளாளர்கள் “ஆரிய” - “திராவிட” இனக் கொள்கையைப் பற்றிக் கொண்டு, “திராவிட இனத்”தின் தலைமக்களாகிய தமிழர்கள் தங்கள் சாதியினர்தாம் என்று கூறினர்.

            தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நயன்மைக் கட்சி என்ற பெயரில் ஆட்சியமைத்து, மக்களியக்கமாக வளர்ந்து வந்த பேரவைக் கட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட நிலையில் கட்சியைப் பெரியாரிடம் ஒப்படைத்தது. தன்மான இயக்கம் என்ற தன் அமைப்புடன் நீதிக் கட்சியை இணைத்தார் பெரியார். அக்கட்சியின் கொள்கைகளில் தமிழக மக்களின் பொருளியல் நடவடிக்கைகள் மீது பனியாக்களின் பிடியைப் பற்றிப் பேச்சில் மட்டும் கூறி ஏமாற்றி அதே நேரத்தில் தமிழகப் பார்ப்பனர்கள் மீது பிற தமிழக மக்களின் வெறுப்பைத் திருப்புவதாகப் பெரியாரின் அணுகல் திரும்பியது; கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றினார். இந்தச் சூழலில் அண்ணாத்துரை எழுதிய ஒரு நூலின் பெயர் ஆரிய மாயை. இந்தியாவில் அன்றைய சூழலில் “ஆரியர்”களாகிய பார்ப்பனர்கள் “திராவிடர்”களாகிய பிற மக்களை சட்டங்களின் மூலமும் பல்வேறு தந்திரங்கள் மூலமும் அடக்கி ஆள்கின்றனர் என்பதை விளக்குவது அந் நூலின் அடக்கம்.

            இங்கு நாம் ஒன்றைச் குறித்துக்கொள்ள வேண்டும். “ஆரியர்”, “திராவிடர்” என்ற சொற்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ள முறையே வட இந்திய, தென்னிந்திய மக்களைக் குறிக்கும் நிலம் சார்ந்த குறியீடுகளாகும். தமிழ் சார்ந்த ஒரு நாகரிகம் மனிதக் குரங்கிலிருந்து குரங்கு மனிதனாக மனித இனம் திரிவாக்கம் பெற்ற நாட்களிலிருந்து வரலாற்றுக் காலம் வரை நிகழ்ந்த வளர்ச்சிக் கட்டங்களுக்குரிய தடயங்களும் தடங்களும் சான்றுகளும் வேத, பாலி, பிராகிருத, சமற்கிருத, தமிழ் சார்ந்த மொழி இலக்கியங்களிலும் மக்களின் மரபுகளிலும் படிந்து கிடக்கின்றன என்ற அடிப்படை வரலாற்று அணுகலைப் பற்றி அணுவளவும் கவலைப்படாமல் தமிழ்நாட்டிலுள்ள வெள்ளை வேட்டி வேலைகளுக்காகப் பறக்கும் ஒட்டுண்ணி மனப்பான்மை கொண்ட ஒரு கூட்டம், மனித நாகரிகத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள் என்று கூறிக்கொண்டே அந்த நாகரிகத்தின் திரிவாக்கத்தின் தொடக்க காலப் பதிவுகளைக் கொண்ட வேத, சமற்கிருதச் செய்திகளில் அவை நிகழ்ந்த காலத்தில் நிலவிய கண்ணோட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இன்றைய கண்ணோட்டத்தில் இழிவெனக் கருதத்தக்கவற்றுக்கான உரிமையை கற்பனையான “ஆரியர்”களுடையதென்று தெருவில் வீசி நிற்கிறார்கள். உலகின் ஒரே நாகரிகம், அது தமிழன் உருவாக்கியதுதான். தன் வளர்ச்சிக் காலத்தில் அந் நாகரிகம் பல்வேறு மொழிகளை உருவாக்கி ஒன்று மாற்றி ஒன்றாகக் கையாண்டு ஒரு பக்கம் தமிழையும் எதிர்ப்பக்கம் சமற்கிருதத்தையும் கொண்டு முரண்பட்டு நிற்கிறது. இதுதான் உண்மை நிலை.

            இனி, விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். பெரியாரிடமிருந்து பார்ப்பன எதிர்ப்பைக் கைக் கொண்டு அண்ணாத்துரை தொடங்கிய தி.மு.க. மும்பை மூலதனத்துக்கு எதிரான முழக்கங்களை வைத்தது. பின்னர் தேர்தலை குறியாகக் கொண்டு அனைத்தையும் கைவிட்டு பதவியையே, அது சார்ந்த பல்வேறு நலன்களையே நோக்கமாகக் கொண்டு சிதைந்தது.

            “திராவிட இன” மக்களுக்கு உரியதென்று அவர்கள் கூறிய தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய நிலப் பகுதிகளைக் கொண்ட ஒரு நாட்டை இந்திய ஒன்றியத்திலிருந்து விடுவிப்பது என்ற முழக்கத்துடன் களமிறங்கிய பெரியாரும் அண்ணாத்துரையும் தமிழகம் தவிர பிற பகுதிகளில் இந்த உணர்வே இல்லாதது கண்டு தங்கள் அரசியல் எல்லைகளைக் குறைத்துக்கொண்டனர். ஆனால் மேற்கூறிய மாநிலங்களில் தமிழகத்துக்கு வெளியில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள், தமிழகத்திலிருந்து சென்றவர்கள் ஆகியோரில் சிலர் அங்கும் கட்சிக் கிளைகளைத் தொடங்கினர். இதைக் காட்டித் “திராவிட” என்ற முன்னொட்டுக்குப் பொருளிருப்பதாகக் காட்டிக்கொண்டனர். ஆனால் கட்சித் தலைமைகளோ, தொண்டர்களோ, மக்களோ இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழக அரசியலில் “திராவிட” என்ற அடைமொழி “தமிழ்” என்ற பொருளிலேயே கையாளப்பட்டு வந்தது.

            இந்நிலையில் களமிறங்கின ஆய்வறிஞர் குணாவின் அரிய “ஆய்வுகள்”. தமிழகத்தின் கேடுகளுக்கெல்லாம் “திராவிட” என்ற முன்னொட்டு கொண்ட அரசியலே காரணம் என்றார். குறிப்பாக தமிழ் தவிர்த்த பிற “திராவிட” மொழிகளைப் பேசும் தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல அம் மொழிகளை வீட்டு மொழியாகக் கொண்ட சராசரித் தமிழகக் குடிமகனே தமிழகத்தின் முதல் எதிரி என்ற கருத்தை முன்வைத்தார். “ஆரியர்கள்” வடக்கிலிருந்து நுழைந்து தமிழர்களைச் சாதிகளாகப் பிரித்தனர் என்று முன்னாள் “வரலாற்றாசிரியர்கள்” கூறியதற்கு மாறாக, இல்லை! இல்லை! கடந்த 18 நூற்றாண்டுகளாக தமிழகத்தின் மீது படையெடுத்த “வடுக வந்தேறி”களே தமிழக மக்களைச் சாதிகளாகப் பிரித்துவிட்டனர் என்றார் அவர். அது மட்டுமல்ல, குணா பிறந்த சாதியாகிய பறையர்களில் ஒரு பிரிவினராகிய வள்ளுவர்களாகிய “மறையர்கள்” எனப்படும் “பார்ப்பார்”களை அவர்கள் அப் பதவியிலிருந்து அகற்றிவிட்டார்கள் என்பது அவரது “வரலாற்று” முன்வைப்பு. அதாவது, தமிழர்களுக்குச் சொந்த சிந்தனை கிடையாது; வந்தவன் சொன்னதையெல்லாம் கேட்டுத் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று எந்த மக்கள் குழுவினரையும் எந்த வரலாற்றாசிரியனும் கூறாத ஓர் இழிவான குற்றச்சாட்டை இந்த “வரலாற்றாய்வாளர்கள்” கூறியுள்ளனர் என்பதுதான் இதன் ஒட்டுமொத்த அடக்கம்.

சாதியத்தின் தீர்வாக நீதிக்கட்சி முன்வைத்த, பனியாச் சுரண்டலை மறைப்பதற்காகப் பெரியார் வளர்த்து வலுப்படுத்திய, ஒதுக்கீட்டு அரசியலைப் பயன்படுத்தி வளர்ந்த, இன்னும் வளரத் துடிக்கும், உள்நாட்டில் வேரில்லாத ஓர் ஒட்டுண்ணி வெள்ளை வேட்டிக் கூட்டம்தான் தமிழகத்தின் கணிசமான பகுதி மக்களை ஒதுக்கப்பட்டவர்களாக, ஒடுக்கிவந்திருக்கிறது. இன்றும் அதைத் தொடர படாத பாடுபட்டுக்கொண்டிருக்கிறது அது. அந்தக் கூட்டம்தான் இன்று குணாவைத் தலையில் தூக்கி வைத்துக் குதியாட்டம் போடுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு அயல்நாட்டுப் பணத்தில் இயங்கும் விடுதலை இறையியல் அமைப்பின் பண உதவியுடன் தொடர்ச்சியாக “ஆய்வு” நூல்களை எழுதிவரும் குணாவின் கூற்றுகளுக்கு மறுப்புக் கூறும் தகுதியுடன் எவரும் இல்லை என்று இறுமாந்து நிற்கின்றது தமிழக ஒடுக்கும் சாதிகளில் முன்னணியில் நிற்கும் மிகப் பிற்பட்ட சாதி சார்ந்த இந்தக் கூட்டம். அவர்களுடன் குணாவைத் தன் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும் பெரியாரை நம்பி ஏமாந்த ஆந்திரத்திலும் தூக்கிவைத்து ஆடுகின்றனர் வேறு சிலர்.

திராவிட இனம் என்பதும் திராவிட நாடு என்பதும் மாயைகள். அந்த மாயையைத் தூக்கிப் பிடித்து கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அரசியல் கடை நடத்தி அள்ளிக் குவித்தவர்கள் உருவாகிய மாயைக்கு எதிராக “ஆய்வறிஞர்” குணா உருவாக்கியுள்ள “திராவிட எதிர்ப்பு” மாயை அதைவிட மிகப் பெரும் கேடு தரும் பெரு மரமாக தமிழகத் தேசிய மக்களைத் தங்களிடையில் மோதிக் கொள்ள வைக்கும் ஐந்தாம் படையினரை உருவாக்கும் மரமாக வளர்ந்து வருகிறது. அந்த மாயையை அழித்தொழிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.

            இந்நிலையில் தேமதுரத் தமிழோசை இதழில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில், திராவிட இயக்கத்தின் இரண்டகத்துக்குக் காரணம் அதன் பெயரில் உள்ள “திராவிடர்” அல்லது “திராவிட” என்ற அடைமொழி காரணமல்ல, அதன் தலைவர்களின் நாணயமின்மையின் விளைவான இரண்டகமும்தாம் என்ற என் கருத்துக்கு எதிர்ப்பாக ஆம்பூர் க.எ. மணவாளன் என்ற பெரியவர் ஒரு மடல் விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக என் நிலைபாட்டை விரிவாக முன்வைக்கவும் அதன்மூலம் தமிழக மக்களுடன் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்நூலை எழுதியுள்ளேன். இதன் குறை நிறைகளைப் பகுத்தாய்ந்து கருத்துகளை முன்வைக்குமாறு அறிஞர் பெருமக்களை வேண்டுகிறேன்.                                                  
                                                                                                                                            அன்புடன்,
தெற்குச் சூரன்குடி(கு.மா.),                                                                                                குமரிமைந்தன்
16 – 01 - 2012                                                                                                   

0 மறுமொழிகள்: