இராமர் பாலப் பூச்சாண்டி - 3
இராவணனார் வரலாறும் அவரது நாடும்
பிரமனின் மகன் புலத்தியர். புலம் என்பதற்கு தவம் என்பது
வேதத்தில் பொருள் என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி. அந்தப் புலத்தியருக்கு
இரு மகன்கள். மூத்த மகன் பெயர் விசிரவசு. இளைய மகன் அகத்தியர்.
விசிரவசுவுக்கு இரு மனைவிகள்.
அவர்களின் முதல் மனைவியாகிய ஆவிற்பூவிற்குப் பிறந்தவன் குபேரன். இரண்டாம் மனைவி கைகேசி. அவளது
மகன் இராவணன். இச் செய்தியை அபிதான சிந்தாமணி தருகிறது.
மாலியவான் என்றும் மாலிய வாகு என்றும்
அறியப்படுபவன் மாலியவந்தன். இவன்தான் மயன் அமைத்த இலங்கையில் முதன்முதலில்
அரசமைத்தவன். இவனிடமிருந்து குபேரன் இலங்கையைக் கைப்பற்றினான். அதற்குப் பழிவாங்க
விசிரவசுவிடம் கைகேசியை அனுப்பி அவள் மூலம் பிறந்த இராவணனைக் கொண்டு இலங்கையை
மீட்டு இராவணனுக்கு அமைச்சனாகச் செயற்பட்டான் மாலியவந்தன் என்று தமிழ்மொழி அகராதி
கூறுகிறது. குபேரன் மேருவில் இருந்த சிவனிடம் அடைக்கலம் புகுந்து அளகாபுரியில்
இருந்து ஆட்சி செய்தான்.
இராவணன் மயன் மகளாகிய மண்டோதரியை
மணந்தவன். அவன் ஓர் இயக்கன். இயக்கர்கள் எனப்படுவோர் கந்தவருவர் என்றும்
அழைக்கப்படுவர். இவர்கள் வானூர்திகளில் செல்பவர் என்று கூறப்படுகிறது. குபேரனது
நாட்டைக் கைப்பற்றிய போது அவனுடைய புட்பக விமானத்தையும் இராவணன் பிடுங்கிக்
கொண்டான் என்று மேற்குறிப்பிட்ட கதை கூறுகிறது.
இராவணன் ஓர் இசை வல்லான். ஆயிரம்
நரம்புடைய யாழை மீட்ட வல்லவன் என்று கூறப்படுகிறது. அவனது கொடியே யாழாகும். உலகில்
நாட்டுக் கொடிகளில் இயற்கைப் பொருட்கள், உயிரிகள் நீங்கலாக மனிதப் படைப்புகளைக்
கொடியாகக் கொண்டவர்கள் தமிழர்களே. சேரனின் வில், இராவணனின் யாழ் ஆகியவை
குறிப்பிடத்தக்கவையாகும். வீணை எனப்படும் யாழ் மனித வரலாற்றிலேயே இசைக் கருவிகளில், குறிப்பாக நரம்புக் கருவிகளில் மிக உயர்ந்த படைப்பு. மகரயாழ் போன்ற வளைந்த தண்டுள்ள பல கருவிகளைச்
சேர்த்து ஒருங்கிணைந்து இசைப்பதை ஒரே தண்டில் உள்ள மேருகள் எனப்படும் மேடுகளின்
எண்ணிக்கைகள் மற்றும் நரம்புகளின் எண்ணிக்கையின் பெருக்குத் தொகை அளவுக்கு இசை
ஒலிகளை எழுப்ப முடியும். இந்த இசை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நரம்பு என்ற கலைச்
சொல்லால் குறிப்பிடுகின்றனர். இந்த வகை யாழின் இயக்கக் கோட்பாட்டின் அடிப்படையில்தான்
இன்று உலகிலுள்ள நரம்புக் கருவிகள் வடிவமைக்கப்படுகின்றன.
இராவணன் தான் வாழ்ந்த காலத்தில்
சுற்றிலுமுள்ள பெரும் வேந்தர்களை எல்லாம் போருக்கழைத்து வென்றான் என்று அவனைப் பற்றிய
தொன்மங்கள் கூறுகின்றன. அதே போல் ஒரு முறை சிவன் இருக்கும் கயிலை மலையை அவன்
அசைத்துப் பார்த்ததாகவும் அதனை உணர்ந்த சிவன் தன் பாதத்தால் மலையை அழுத்த அதில்
சிக்கிய இராவணன் தன் தலைகளிலொன்றையும் கைகளிலொன்றையும் பெயர்த்தெடுத்து தன் உடலிலிருந்து
நரம்புகளை உருவி ஒரு யாழ் செய்து இசைக்கவும் அந்த இசை இன்பத்தில் திளைத்த சிவன்
தன் அழுத்தத்தைத் தன்னை அறியாமலே தளர்த்த இராவணன் தப்பித்ததாகவும்
ஒரு தொன்மக் கதை உண்டு. இராவணன் யாழ் என்ற கருவியை உருவாக்கியவன் என்ற உண்மையின்
தொன்ம வடிவத்திலான வெளிப்பாடு என்று இதைச் சொல்லலாம்.
சாம வேதத்துக்கு இசையமைத்தவனும்
இராணவன் என்று தொன்மங்கள் கூறுகின்றன.
தசரதன் என்பதற்கு எட்டுத் திசைகளிலும்
வானுலகிலும் நிலத்திலும் செல்லும் தேர்களை உடையவன் என்று விளக்கம் கொடுக்கிறது அபிமான
சிந்தாமணி. தசரதன் என்ற சொல்லுக்குப் பத்துத் தேரை உடையவன் என்பது பொருள். அதே
போல் எட்டுத் திக்கிலும் வானையும் புவியையும் அடக்கி ஆண்டவன் என்ற பொருளில்
பத்துத் தலை இராவணன், தசகண்டன், தசக்கிரீவன் (பத்து மணிமுடியணிந்தவன்) என்றெல்லாம்
அழைக்கப்பட்டான்.
இவனை இழிவுபடுத்துவதற்கென்று
இராமாயணத்திலும் பல்வேறு தலபுராணங்களிலும் சில செய்திகளைச் சொன்னாலும் அவனது
வெற்றிகளையும் அவை பட்டியலிட்டுள்ளன. இராமாயணம் அவனது ஆட்சித் சிறப்புகளை மிக
விரிவாகக் கூறுகிறது. இராமாயணமே இராவணனது சிறப்புகளைக் கூறும் ஒரு படைப்பு
என்று கூட ஒரு நூலில் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் சீதையைக் கடத்திச் சென்றதாக்
கூறும் பகுதியை நீக்கிவிட்டுப் பார்த்தால் போர்த்திறனிலும் ஆட்சிச் சிறப்பிலும்
அறிவியல்கள், கலைகள் ஆகியவற்றில் திறமைகள் என்ற வகையிலும்
ஒப்பற்ற ஓர் அரசன் இராவணன்.
கார்த்தவீரியார்ச்சுனன், வாலி ஆகியோரோடு
ஒரே காலத்தில் வாழ்ந்தவன் இராவணன். கார்த்தவீரியார்ச்சுனனோடு போர் செய்து
சிறைப்பட்டு புலத்தியர் வேண்டிக்கொள்ள விடுவிக்கப்பட்டவன். வாலியோடு போர் புரியச்
சென்று தோற்று அவனுடன் நட்புக் கொண்டவன் என்பவை அபிதான சிந்தாமணி மூலம்
நாம் அறியும் தொன்மச் செய்திகள்.
இராவணன் ஆண்ட இலங்கையைப் பற்றிய
செய்திகள் நமக்கு முகாமையானவை.
லங்காபுரி / லங்கை
என்ற சொல்லுக்கு “தென்கடலில் திரிகூட மலைச் சிகரத்திலே விசுவகர்மாவினால்
உண்டாக்கப்பட்ட நாடும் நகரமுமாம்” என்று தமிழ்மொழி அகராதி கூறுகிறது. இதன்
பரப்பு 700 காதங்கள் என்று கூறும் அகராதி “சூரிய சித்தாந்தத்திலே சொல்லப்பட்ட
மேகலா நகரங்கள் நான்கினுள் ஒன்று” என்றும் “கடலாற் கொள்ளப்பட்ட இலங்கையின் ஒரு
கூறே இக் காலத்துள்ளதாகும்” என்றும் கூறுகிறது.
உலகத் திணைப் படத்தில் (Brijbasi World Atlas) இந்தியாவுக்குத் தெற்கில் தென்வடலாகச் செல்லும் ஒரு கடலடி மலைத்
தொடரில் இரண்டிடங்களில் மேற்கு நோக்கிய கிளைகள் உள்ளன. ஒன்று சுறவக் கோடு என்னும்
மகரக் கோட்டில், இன்னொன்று நிலநடுக்கோட்டில். மேலே கூறியுள்ள இரண்டு பகுதிகளில் “தென்கடலில் திரிகூட மலைச் சிகரத்தில்” என்று
கூறப்படுவது மகரக் கோட்டில் இருந்த இராவணனின் தென்னிலங்கையாகும். இரண்டாம்
பகுதியிலுள்ள “மேகலா நகரங்களில் ஒன்றான இலங்காபுரி” நிலநடுக்கோட்டிலுள்ளதாகும். இது “நிரட்ச லங்கை” என்று ஐந்திரங்களாகிய பஞ்சாங்கங்களில் சுட்டப்படுகிறது.
நிரட்சம் என்றால் அட்சம் இல்லாதது.
அதாவது 0° அக்க வரை[1], அதாவது நிலநடுக்கோடு ஆகும். எனவே நிரட்சலங்கை என்பது
நிலநடுக்கோட்டிலுள்ள இலங்கை என்று பொருள்படும். மேகலை என்றால் அரையில்
அணியப்படுவது, அதாவது நடுவில் உள்ளது. மேகலா ரேகை எனப்படுவது
நிலநடுக்கோடு. இந்த இலங்காபுரி வழியாகச் செல்லும் தென்வடல் கோடு லங்கோச்சையினிக்
கோடு என்று ஐந்திறங்களில் (மனோன்மணி
விலாச சுத்தவாக்கிய பஞ்சாங்கத்தில்)
குறிப்பிட்டுள்ளது. இந்த இலங்கை - உச்சையினி நெடு வரை[2] (- தீர்க்கரேகை), அதாவது உச்சியினியிலிருந்து தெற்கே செல்லும் நெடுவரை
இன்றைய இலங்கைத் தீவிலிருந்து 5° மேற்கே விலகிச்
செல்கிறது. பழந்தீவு பன்னீராயிரம் என்று இராசேந்திரன் கல்வெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத் தீவுக் கூட்டத்தின் ஊடாகவும் கடலடியில் தென் வடலாகக்
கிடக்கும் மலைத் தொடரை நில நிடுக்கோட்டிலும் சுறவக் கோட்டிலும் வெட்டியும்
செல்கிறது. பின்னுள்ள இந்த இரண்டு இடங்களின் அருகில்தான் மேற்காகப் பிரிந்து
செல்லும் இரண்டு மலைத் தொடர்களும் உள்ளன.
நிரட்சலங்கையாகிய இங்காபுரியிலிருந்து
90° இடைவெளிகளில் உரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் என்று,
இலங்காபுரியுடன் சேர்த்து மொத்தம் நான்கு துறைமுக நகரங்கள் இருந்தவென்றும்
அவற்றுக்கு மேகலா நகரங்கள் என்பது பெயர் என்றும் மயன் எழுதிய சூரியசித்தாந்தம்
எனும் நூல் கூறுகிறது.[3]
பண்டைக் கிரேக்கர்களும் உரோமர்களும்
இலங்கைத் தீவு என்பதை தாமிரபரணி என்றே கூறியிருக்கின்றனர். அது
இந்தியாவிலிருந்து பல நாள் கடலில் சென்று சேரத்தக்க நிலப்பரப்பு என்றும் அங்கு
நிழல்கள் வடக்கில் விழுவதில்லை என்றும் கூறியிருக்கின்றனர். கதிரவன் தென்வடல்
செலவின் தென்கோடியாகிய சுறவக் கோட்டிலோ அல்லது அதற்குத் தெற்கிலோ இலங்கை
இருந்திருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதில் ஒரு சிறப்பு, இராவணனைப் பற்றிக்
குறிப்பிடும் அபிதான சிந்தாமணி பத்தாவது இனமாக, “சூரியனை
இலங்கையில் வரவொட்டாமல் தடுத்தவன்” என்று கூறுவதாகும்.
இவ்வாறு இராவணனது இலங்கை சுறவக் கோட்டில் அல்லது அதற்குத் தெற்கே இருந்தது என்பது
உறுதியாகிறது. சுறவக்கோடு ஏறக்குறைய 23½° தெற்கு அக்கவரையில்
இருக்கிறது. இன்றைய குமரி முனை ஏறக்குறைய 8° வடக்கு அக்கவரையில்
இருக்கிறது. இவற்றினிடையிலுள்ள தொலைவு (8+23½)×111=3496.5 அதாவது ஏறக்குறைய 3500 கி.மீ.க்கள் ஆகும்.
எனவே இராமாயணம் குறிப்பிடும்
இராவணனின் இலங்கைக்கு இராமேசுவரத்திலிருந்து 3500 கிலோ மீற்றர்கள் நீளத்துக்கு
இராமனின் அணியினர் பாலம் கட்டியிருக்க வேண்டும், அல்லது அன்றைய இந்தியத் தென்முனை
சூறவக் கோட்டுக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். இந்த இரு நேர்வுகளிலும் எதுவாக
இருந்தாலும் சேதுக் கால்வாயைக் குறுக்கிடும் மேடு இராமன் அமைத்ததாகத் கூறப்படும்
பாலமாக இருந்திருக்க முடியாது, ஏனென்றால் முதல் நேர்வில் இன்றைய இலங்கைத் தீவுக்கு
இடமில்லை. இன்றைய இலங்கைத் தீவு அன்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால்
இராமர் பாலம் எனப்படுவது இலங்கையையும் தாண்டித்தான் தொடங்கியிருக்கும்.
அப்படியானால் குரங்குகள் கட்டியதாக இவர்கள்கள்
கூறும் இராமர் பாலத்தின் அடிப்படைதான் என்ன?
இன்றைய இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில்
காணப்படும் திண்டுகள் எவராலும் உருவாக்கப்பட்டவையல்ல. கி.மு.1700 வாக்கில் நிலத்
தாழ்ச்சியாலும் கடல் நீர் மட்ட உயர்ச்சியாலும் முழுகிய நிலப்பரப்பில் கடல்
மட்டத்துக்கு மேல் தலையை நீட்டி நிற்கும் உச்சி மட்ட நிலப்பரப்புகளின் ஒரு
தொடர்ச்சிதான் அது என்பதுதான் நம் விடை.
கங்கையைப் படகு மூலம் கடந்ததாக் கூறும்
இராமாயணம் ஆழம் குறைந்த சேதுக்கடலைக் கடக்க பாலம் கட்டியதாகக் கூறுவது ஏன்? கடல்
மேல் செலவைப் புறக்கணிக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடா?
கதை எழுதிய வால்மீகி தன் கற்பனைக் குதிரையை
ஓடவிட்டு இயற்கையான நிலப்பரப்பை குரங்குகள் கட்டிய பாலம் என்று
கதையளந்திருந்தாலும் அதற்கும் முன்பே அனுமன் இலங்கைக்குப் பறந்து சென்ற போது
தாண்டிச் சென்றதாக வால்மீகி காட்டியுள்ள புவியியல் காட்சிகள் மூலம் இராவணனின்
இலங்கை ஆத்திரேலியப் பகுதியில் இருந்ததாகக் காட்டித் தன் மனச்சான்றுக்கு அமைதி
தேடியுள்ளார். 15 – 10 – 1995 அன்று ப-ர்.சு.பத்மநாபன் அவர்களால் நாகர்கோயிலில் நடத்தப்பட்ட குமரிக் கண்டம்
குறித்த கருத்தரங்கு ஒன்றில் உசுமானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்
ராவ் என்பவர் வால்மீகி இராமாயணத்திலிருக்கும் இந்தச் செய்தியை வெளியிட்டார் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது[4].
[1]
Latitude
[2]
Longitude
[3] விரிவுக்கு குமரிமைந்தன், வெள்ளுவன்
எழுதிய ″தென்னிலங்கை″ கட்டுரை பார்க்க. இந்திய வரலாற்றில் புராணங்கள்,
இலக்கியங்கள், வானியல், வேங்கை பதிப்பகம், 2004, பக்.30.
[4]
கட்டுரை நீண்டதாக
இருந்ததால் நேரம் போதாது என்று அவர் மேடையில் செய்திகளைச் சுருக்கமாகவே சொல்லிவிட்டு
கட்டுரை வரைவை ப-ர்.பத்மநாபடனிடம் கொடுத்தார். அவர் அதை அவரது மாதிகையான ஆய்வுக்
களஞ்சியத்தில் வெளியிடவுமில்லை, கட்டுரையின் படியொன்றைக் கேட்டதற்குத் தரவுமில்லை.
உசுமானியா பல்கலைக் கழகம் முகவரியிட்டு பேராசிரியருக்கு எழுதிய மடல் திரும்பிவிட்டது.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக