26.11.15

சிலப்பதிகாரப் புதையல் - 10


8. வேனிற் காதை

நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும்
            தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு
            மாட மதுரையும் பீடா ருறந்தையும்
            லிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்
5.         அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
            மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய
            இன்னி வேனில் வந்தன னிவணென
            வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த
            இளங்கால் தூதன் இசைத்தன னாதலின்
10.        மகர வெல்கொடி மைந்தன் சேனை
            புகரறு கோலங் கொள்ளுமென் பதுபோற்
            கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
            படையுள் படுவோன் பணிமொழி கூற
            மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுள்
15.        கோவலன் ஊடக் கூடா தேகிய
            மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
            வானுற நிவந்த மேனிலை மருங்கின்
            வேனிற் பள்ளி ஏறி மாணிழை
            தென்கடல் முத்துந் தென்மலைச் சந்தும்
20.        தன்கடன் இறுக்குந் தன்மைய வாதலின்
            கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து
            மையறு சிறப்பின் கையுறை யேந்தி
            அதிரா மரபின் யாழ்கை வாங்கி
            மதுர கீதம் பாடினள் மயங்கி
25.        ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
            நன்பால் அமைந்த இருக்கைய ளாகி
            வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
            இடக்கை நால்விரல் மாடகந் தழீஇச்
            செம்பகை யார்ப்பே கூடம் அதிர்வே
30.        வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து
            பிழையா மரபின் ஈரேழ் கோவையை
            உழைமுதற் கைக்கிளை இறுவாய் கட்டி
            இணைகிளை பகைநட் பென்றிந் நான்கின்
            இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
35.        குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும்
            வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
            உழைமுத லாகவும் உழையீ றாகவும்
            குரல்முத லாகவுங் குரலீ றாகவும்
            அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
40.        அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
            நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி
            மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
            திறத்து வழிப்படூஉந் தெள்ளிசைக் கரணத்துப்
            புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கிச்
45.        சண்பக மாதவி தமாலங் கருமுகை
            வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
            அஞ்செங் கழுநீர் ஆயிதழ்க் கத்திகை
            எதிர்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
            முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
50.        விரைமலர் வாளியின் வியனிலம் ஆண்ட
            ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்       
            ஒருமுக மன்றி உலகுதொழு திறைஞ்சுந்
            திருமுகம் போக்குஞ் செவ்விய ளாகி
            அலத்தகக் கொழுஞ்சோறு அளைஇ அயலது
55.        பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு
            மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
            இன்னிள வேனில் இளவர சாளன்
            அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய
            திங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன்
60.        புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
            தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும்
            நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
            இறும்பூ தன்றிஃ தறிந்தீ மின்னென
            எண்ணெண் கலையும் இசைந்துடன் போகப்
65.        பண்ணுந் திறனும் புறங்கூறு நாவின்
            தளைவா யவிழ்ந்த தனிப்படு காமத்து
            விளையா மழலையின் விரித்துரை எழுதிப்
            பசந்த மேனியள் படருறு மாலையின்
            வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
70.        தூமலர் மாலையிற் றுணிபொரு ளெல்லாங்
            கோவலற் களித்துக் கொணர்க ஈங்கென
            மாலை வாங்கிய வேலரி நெடுங்கண்
            கூல மறுகிற் கோவலற் களிப்பத்
            திலகமும் அளகமுஞ் சிறுகருஞ் சிலையுங்
75.        குவுளையுங் குமிழுங் கொவ்வையுங் கொண்ட
            மாதர்வாண் முகத்து மதைஇய நோக்கமொடு
            காதலின் தோன்றிய கண்கூடு வரியும்
            புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
            கயலுலாய்த் திரிதருங் காமர் செவ்வியிற்
80.        பாகுபொதி பவளந் திறந்துநிலா உதவிய
            நாகிள முத்தின் நகைநலங் காட்டி
            வருகென வந்து போகெனப் போகிய
            கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்
            அந்தி மாலை வந்ததற் கிரங்கிச்
85.        சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கிக்
            கிளிபுரை கிளவியும் மடவன நடையுங்
            களிமயிற் சாயலுங் கரந்தன ளாகிச்
            செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
            ஒருதனி வந்த உள்வரி யாடலும்
90.        சிலம்புவாய் புலம்பவும் மேகலை யார்ப்பவுங்
            கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவே றாயவென் சிறுமை நோக்கியும்
புறத்துநின் றாடிய புன்புற வரியும்
கோதையுங் குழலுந் தாதுசேர் அளகமும்
95.        ஒருகாழ் முத்தமுந் திருமுலைத் தடமும்
மின்னிடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சியுட் பொதிந்த கலாந்தரு கிளவியின்
            இருபுற மொழிப்பொருள் கேட்டன ளாகித்
100.      தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்
            கிளர்ந்துவே றாகிய கிளர்வரிக் கோலமும்
            பிரிந்துறை காலத்துப் பரிந்தன ளாகி
என்னுறு கிளைகட்குத் தன்னுறு துயரம்
தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி யன்றியும்
105.      வண்டலர் கோதை மாலையுள் மயங்கிக்
            கண்டவர்க் குரைத்த காட்சி வரியும்
            அடுத்தடுத் தவர்முன் மயங்கிய மயக்கம்
எடுத்தவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை
110.      பாடுபெற் றனவப் பைந்தொடி தனக்கென
அணித்தோட்டுத் திருமுகத் தாயிழை எழுதிய
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற் கிரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடலர் கோதைக்குத் துனைந்துசென் றுரைப்ப
115.      மாலை வாரா ராயினும் மாணிழை
காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்.

வெண்பா

1.         செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்தொழுக
            மைந்தார் அசோகம் மடலவிழக் - கொந்தார்
            இளவேனல் வந்ததால் என்னாங்கொல் இன்று
            வளவேனிற் கண்ணி மனம்.

2.         ஊடினீர் எல்லாம் உருவிலான் றன்ஆணை
            கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
            வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
            கானற்பா ணிக்கலந்தாய் காண்.

பொழிப்புரை

வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரிக் கடலும் எல்லையாக வரையறுக்கப்பட்ட குளிர்ச்சி பொருந்திய நீரையுடைய உயர்ந்த தமிழ்நாட்டிடத்தே,

சிறந்த மாடங்களையுடைய மதுரையும் பெருமை பொருந்திய உறையூரும் ஆரவாரம் பொருந்திய வஞ்சி நகரும் ஒலிக்கின்ற நீரையுடைய காவிரிப்பூம்பட்டினமும் என்னும் நான்கிடத்தும் அரசு வீற்றிருந்த புகழமைந்த சிறப்பினையுடைய மாரனாகிய மன்னனுக்கு மகிழும் துணைவனாகிய இன்பத்தைத் தரும் இளவேனில் என்பான் இங்கே வந்துவிட்டான் என்று,

வளம் பொருந்திய பொதியின் மலையிடத்து சிறந்த முனிவன் பெற்ற தென்றலாகிய தூதன் குயிலோனுக்கு உரைத்தனன் ஆதலால் வெற்றி பொருந்திய மகரக் கொடியை உடைய காமன் சேனையாக உள்ளார் எல்லாரும் குற்றமற்ற கோலத்தைக் கொள்ளுங்கள் என்ற பொருள்படும்படி கொடிகள் நெருங்கிய சோலை என்னும் பாசறையிலிருக்கும் குயிலோன் என்னும் எக்காளம் ஊதுவோன் தென்றல் ஆகிய தூதன் தனக்குப் பணித்த செய்தியை சேனைக்குக் கூற,

கடல் விளையாட்டின் போது பூக்கள் இதழ் விரியும் கானல் இடத்து கோவலன் ஊடிச் சென்றதால் அவனுடன் சேர்ந்து செல்லாது தனியளாகத் தன் வீட்டினுள் சென்ற கரிய மலர்போலும் நெடிய கண்களை உடைய மாதவி தானே விரும்பி வானளாவி உயர்ந்த மேல் நிலை(மாடி)யின் ஒரு பக்கத்திலே இளவேனிலுக்கு உரிய நிலா முற்றமாகிய இடத்திலே ஏறி,

மாட்சிமையுடைய அணியினை உடையாள் தென்கடலின் முத்தும் பொதிய மலையின் சந்தனமும் அக் காலத்துக்கு எப்போதும் இறுக்கக் கூடிய திறை ஆகையால் இளவேனிலாகிய அக் காலத்தில் குங்குமத்தால் அழகூட்டப்பட்ட முலை முற்றமாகிய பரப்பிலே குற்றமற்ற சிறப்பினையுடைய அம் முத்தையும சந்தனத்தையும் பரிசுப் பொருளாக (திறையாக) ஏந்தி, அதாவது பூண்டும் பூசியும்,

ஒன்பது  வகைப்பட்ட இருக்கை(ஆசனம்)களில் முதலாவதாகிய பதுமாசனம் எனும் நன்மை அமைந்த இருப்பினை உடையவளாய் கோவை கலங்காத மரபினையுடைய யாழைக் கையிலே வாங்கி வாய்ப்பாட்டாகப் பாட முற்பட  அது பண் மயங்கிப் போகவும் யாழில் பாடத் தொடங்கினவள்,

வலக்கையைப் பதாகையாகக் கோட்டின் மேல் வைத்து இடக்கையின்  நான்கு விரல்களால் நரம்பினைச் சுண்டும் மாடகம் எனும் கருவியைப் பற்றி செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் எனும் இப் பகை நரம்பு நான்கும் மிகாமல் நீக்கும் உத்தியை அறிந்து கடைப்பிடித்து,

மயங்கா மரபினையுடைய பதினால் கோவையாகிய சகோட யாழை உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி,

இணையும் கிளையும் பகையும் நட்புமாகிய இந் நான்கினுள் இசை புணரும் குறிநிலையைப் பொருந்த நோக்கி,

குரலிடத்திலும் அதற்கு ஐந்தாம் நரம்பாகிய இளியிடத்திலும் இசை ஒத்திருத்தலைத் தன் செவியால் அளந்து அறிந்தனள்.

அங்ஙனம் வாசித்துச் செவியால் அளந்து அறிந்தது அன்றியும் வரன்முறையாலே இளி முறையால் பாடப்படும் ஏழு நரம்புகளுக்கோ உழை முதல் உழையீறு, குரல் முதல் குரலீறு ஆகவும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் எனப்படும் மருதத்தின் நால்வகைச் சாதிப் பண்களையும் நலம்பெற நோக்கி

வலிவு, மெலிவு, சமம் என்னும் மூவகை இயக்கத்திலும் முறையாலே பாடிக் கழித்து அவற்றின் வழிப்படும் திறப்பண்களைப் பாடுமிடத்து நெஞ்சு கலங்கினாள் ஆதலால் எடுத்த பண்ணுக்குப் புறமாகிய ஓர் இசையிலே அவள் மயங்கி

மணம் பொருந்திய மலராகிய சிறிய அம்பாலே பெரிய நிலம்  முழுவதையும் ஆளும் ஒப்பற்ற தனிச் செங்கோலையுடைய ஒருவனாகிய காமவரசன் ஆணையாலே ஒரு திசையன்றி உலகெல்லாம் தொழுது வணங்கப்படும் அவன் திருமுகத்தை(மடலை) கோவலனுக்கு விடுப்போம் என்னும் தெளிவை அடைந்தவளாகி சண்பகம், மாதவி, பச்சிலை, பித்திகை, வெள்ளிய பூவாகிய மல்லிகை என்னும் மலர்களாலும் வெட்டி வேராலும் அழகிய செங்கழுநீரின் நெருங்கிய மெல்லிய இதழ்களாலும் தொடுக்கப்பெற்ற பூக்களின் மணம் மாறுபடும் தன்மையுடைய மாலையின் நடுவிடத்தே தொடுத்த முதிர்ந்த தாழம்பூவினது மடலை எழுதுவதற்கான வெண்மையான ஏடாகக் கொண்டு அதற்கு அயலாகிய முதிராத பிச்சி மலரின் மொட்டாகிய எழுத்தாணியைக் கையில் கொண்டு அதனைச் செம்பஞ்சின் குழம்பாகிய  மையில் தோய்த்து உதறி எழுதுகிறவள்,

உலகில்  நிலைபெற்றுள்ள உயிர்கள் யாவற்றையும் தாம் மகிழும் துணையோடு புணரச் செய்யும் இனிய இளவேனில் என்னும் இளவரசனும் அந்திப் பொழுதாகிய யானையின் அரிய பிடரியிலே தோன்றிய திங்களாகிய செல்வனும் நல்ல தன்மை உடையவர்கள் அல்லர். புணர்ந்தோர் சிறிது நேரம் தம்முள் இடைவெளி இட்டாலும் பிரிந்து சென்றோர் தம் துணைவரை மறந்து நின்றாலும் மணமுள்ள பூவாகிய அம்பானது உயிரைக் கொண்டுவிடுதல் அரிய செய்தி அல்ல என்பதை அறிவீராக என்று அறுபத்து நால்வகைக் கலைகளும் வழிபட்டு இசைந்து நிற்க அவற்றுள் பண்களையும் திறங்களையும் பழிக்கும் மொழியால் கட்டவிழ்ந்து குலைந்த தனிப்பட்ட காமத்தை வெளிப்படுத்தும் முற்றாத மழலையோடு பேசிப் பேசி எழுதி

பசப்புற்ற மேனியை உடையவளாய் நினைவு மிகும் மாலைக் காலத்தே வசந்தமாலையை வருக என அழைத்து இத் தூய மலர்மாலையில் எழுதி முடித்துள்ள பொருளை எல்லாம் கோவலனுக்கு ஏற்ற வகையில் எடுத்துச்சொல்லி இப்பொழுதே இங்கே கொணர்வாயாக என்றுரைக்க,

அங்ஙனம் மாதவி தந்த மாலையை வாங்கிய வேல் போலும் அரி பரந்த நெடிய கண்களை உடைய வசந்தமாலை, கூலக் கடைத்தெருவில் கோவலனைக் கண்டு அவனுக்கு அம் மாலையைக் கொடுத்தனள்.

திலகத்தையும் கூந்தலையும் உடைய, சிறிய கரிய வில்லையும் நீல மலரையும் குமிம் பூவையும் கொவ்வைக் கனியையும் உறுப்பாகக் கொண்ட அழகிய ஒளி பொருந்திய முகத்தின் மலர்ந்த நோக்குடன் என்மேல் காதலுடையாள் போலத் தோன்றி எதிர்முகமாக நின்று நடித்த கண்கூடுவரி ஆகிய நடிப்பும்

முகிலைச் சுமந்து வருந்தி கதிரைப் பொழியும் நிலவின் இடத்தில் கயல்கள் உலாவித் திரிகின்ற அழகிய தோற்றம் உடைய பாகைப் பொதிந்த பவளம் போன்ற இதழ்களைத் திறந்து மிகுந்த இளமையை உடைய முகத்தின் அழகையுடைய பல்லால் ஆகிய சிரிப்பைக் காட்டி வருக என்றால் வருவதும் செல்க என்றால் செல்வதுமாகிய காண்வரி எனும் நடிப்பும்

யான் ஊடல் கொண்டிருந்த காலத்து அந்தி மாலை வந்ததற்காகப் பிரிவாற்றாமையால் இரங்கி சிந்தையில் நோய் மிகும் என் வருத்தத்தை நோக்கி கிளியை ஒத்த சொல்லையும் மடப்பத்தை உடைய அன்னம் போன்ற நடையையும் மகிழ்வூட்டும் மயில் போலும் சாயலையும் மறைத்து போர் புரியும் வேல் போன்ற நெடிய கண்ணையுடைய பணிப்பெண்களின் கோலத்தைப் புனைந்து தான் தனியே வந்து நின்று நடித்த உள்வரி எனும் வேற்றுரு நடிப்பும்

சிலம்பு வாய்விட்டுப் புலம்பவும் மேகலை வாய்விட்டு ஆர்ப்பவும் அணிகலன்களைப் புனையவும் பெறாத இடையை உடையவள், காதலுடையாள் போல் நோக்கிய பார்வையோடே ஊடலால் இயல்பு திரிந்த என் வருத்ததை அறிந்தும் என்னை அணையாது புறம்பே நின்று நடித்த இழிந்த புறவரி எனும் நடிப்பும்

பூந்துகள் பொருந்திய மாலையும் குழலும் அளகமும் முத்தாலாகிய ஒரு வடமும் அழகிய முலைப் பகுதியும் மின்போலும் இடையினை வருத்தும்படி நல்ல நெற்றியை உடையவள் நெருங்கிவராமல் வாயில் புறத்தில் வந்து நின்று ஏவல் பெண்கள் மூலம் எனது மொழிக்கு மறு மொழிகளைச் சொல்ல, புணர்ச்சிக் குறிப்புகள் உள்பொதிந்த சொற்களை இரு புறத்திலிருந்தும் கேட்டவளாய் தளர்ந்த மேனியினையும் அழகிய மெல்லிய கூந்தலினையும் உடையவள் ஊடலால் வேறுபட்டுப் போவது போல் நடித்த கிளர்வரி என்ற நடிப்பும்

நான் பிரிந்து வாழ்கின்ற காலங்களில் தான் பிரிவாற்றாது வருந்தினள் போன்று காட்டி எனது மிக்க நெருங்கிய உறவினர்க்குத் தான்  அடையும் துயரத்தைத் தேர்ந்து தேர்ந்து உரைக்கின்றவளாக நடிக்கின்ற தேர்ச்சி வரி என்ற நடிப்பும்

வண்டுகளால் மலர்த்தப்படும் பூமாலையினை உடையவளாகிய அவள் மாலை நேரத்தில் மயக்குற்றவள் போல் அவ் வுறவினர்களைக் கண்டு அவர்களுக்கு உரைத்த காட்சி வரி எனும் நடிப்பும்

மீண்டும் மீண்டும் அவ்வுறவினர் முன்பு தான் மயங்கிய மயக்கத்தைப் பொறுக்க முடியாமல், சிக்கலைத் தீர்த்து அவள் ன்னை மீண்டும் எடுத்துக்கொண்ட எடுத்துக்கோள் வரி என்னும் நடிப்பும்,

தேர்ந்த அணிகளை உடையவளே, அவள் நாடகம் நடிக்கும் பெண்ணே ஆதலால் அவளது நடிப்புகள் அழகிய தொடிகளை உடைய அவளுக்குப் பெருமை சேர்ப்பனவே என்று கோவலன் கூறவும்,

அழகிய பொன் தோடுகளை அணிந் திருமுகத்தை உடைய மாதவி எழுதிய அழகிய தாழந்தோட்டுத் திருமுகமாகிய மடலைக் கோவலன் மறுத்ததற்கு மனம் வருந்தி வாட்டமுற்ற உள்ளத்துடன் வசந்தமாலை இதழ் விரிந்த மாலையை உடைய மாதவிக்கு விரைந்து சென்று உரைக்க,

இன்று மாலைப் பொழுதில் அவர் வரவில்லை; ஆனால் சிறந்த அணிகளை உடையவளே காலைப் பொழுதில் நாம் அவரைக் காணலாம் என்று செயலற்ற மனத்தினளாய் தானிருந்த அழகிய மலரமளி மீது வீழ்ந்து இமை பொருந்தாமல் கிடந்தனள், கரிய மலர் போல் கண்ணை உடைய மாதவி.

வெண்பாக்கள்

1.   செந்தாமரை மலர் விரியவும் தேமாவின் கொழுந்து ஒழுகுவது போலும் வனப்புடன் தளிர்க்கவும் அழகு பொருந்திய அசோகம் இதழ் விரியவும் பூங்கொத்துகள் நிறைதற்குக் காரணமாகிய இளவேனில் பொழுது வந்தது. கூரிய வேல் போலும் நல்ல கண்ணினை உடையாள் மனம் இன்று என்ன துன்பமுறுமோ!

2.   உலகில் ஒருவனும் ஒருத்தியுமாயுள்ளோரில் ஊடினவர்களே நீங்களெல்லாம், காமன் ஆணை, கூடுவீராக என்று குயில் குலங்கள் எடுத்துரைக்க, இளவேனில் பொழுதில் உன்னோடு என்றும் கலந்தவளுடைய மெல்லிய பூப்போன்ற திருமுகத்தை கானலிடத்து அவள் பாடிய பாட்டுக்கு வருந்தியவனே காண்பாயாக!

இக்காதையிலுள்ள சிறப்புகள்

1.   தமிழகத்தின் எல்லையாகத் தெற்கே குமரிக் கடல் என்ற வரிக்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள விளக்கம் குமரிக் கண்டக் கோட்பாட்டுக்குரிய சான்றுகளில் முகாமையான ஒன்று.
(அடியார்க்கு நல்லார்: நெடியோன் குன்றமும் தொடியோள் நதியு மென்னாது பெளவ மென்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர்  பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன்  தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகரைநாடும் ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பெளவமென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின் வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள என்பனாலும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும் உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரை யானும் பிறவறாற்றானும் பெறுதும்.)

தமிழகத்திலுள்ள அரைகுறைகளைக் குழப்புவதற்கென்றே தன்னை புவியியங்கியலில் புலி என்று மார்தட்டிக் கொண்டு களமிறங்கியுள்ள திருவாளர் சு.கி. செயகரன் குமரி நிலநீட்சி என்ற நூலை எழுதியிருக்கிறார்.

பனியாக்களின் கண்காணிப்பில் இயங்கும் நம் பல்கலைக் கழகங்களுக்கு அமெரிக்கா வகுத்துக் கொடுத்துள்ள “வழிகாட்டி” நெறிகளின் படி சராசரி பக்கத்துக்கு மூன்றுக்குக் குறையாத “சான்றுகளுக்கு”(மேற்கோள்களுக்கு)க் குறையாமல் காட்டி வழங்கியிருக்கும் இக் குப்பைக் குவியலில் குமரிக் கண்டக் கோட்பாட்டைப் பொய் என்று காட்டிவிட்டதாகப் பலர் நம்புகிறார்கள். அது பற்றிய ஒரு முழுமையான அலசலை நாம் தனியாக மேற்கொள்ளலாம்.

2009 மார்ச் தமிழினியில் திரு. இராமகி எழுதியுள்ள திசைகள்  என்ற கட்டுரையில் தென் திசை என்ற சொல் தென்னையிலிருந்து வந்திருக்க முடியாது என்று நிறுவுவதற்காக கள் என்னும் பொருள் தரும் என்று அவர் கூறும்  தெல் + ங்கு = தெங்கு என்று வேர்மூலம் காட்டுகிறார். அத்துடன் பனங்கள்ளைப் போல் தென்னங்கள் கடுக்காமல் இனிப்பாக இருக்குமாம். அத்துடன் தென்னை எங்கோ ஆசியத் தென்கிழக்கில் இருந்து கொண்டுவந்த மரம் என்று நிலைத்திணையியலார்(Botanists) கூறுகிறார்களாம். (தமிழகத்தில் மண்ணும் கல்லும் இருந்ததாகக் கூட நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் உருவாகும் கூட்டம் ஒப்புக்கொண்டாலே நாம் வியப்படைய வேண்டும்.)

மனிதன் முதன் முதல் நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்கு அவன் இயற்கையில் நடைபெறும் தற்செயல் அல்லது எளிய நிகழ்ச்சிகள் பயன்பட்டிருக்க வேண்டியது பெரும்பாலும் இன்றியமையாதது. நாம் அறிந்த வரையில் வெட்டும் கருவி ஒன்றின் துணையில்லாமல் கள் தரும் மரங்களிலிருந்து பனையைத் தவிர வேறெந்த மரத்திலும் கள்ளை வடிக்க முடியாது. பனையில் ஆண்பனையாகிய அலகுப் பனையின் பாளையைக் கையால் எளிதில் ஒடித்து விட முடியும். அவ்வாறு ஒடித்தால் அதிலிருந்து மரத்தின் சாறு(Sap) ஒழுகும். அந்தச் சாறுதான் காற்றிலுள்ள ஈற்று எனப்படும் நுண்மியால் சிதைக்கப்பட்டு கள்ளாகிறது. பனை, தென்னை மரங்களை வெட்டும் போது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இந்தச் சாறு சில நாட்களுக்குத் தொடர்ந்து கசிவதைக் காணலாம். அவ்வாறு குரங்கு போன்ற விலங்குகள் பாளையை ஒடித்து நக்கிக் குடிப்பதைப் பார்த்து மனிதனும் பதனீர் இறக்கும் உத்தியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். பின்னர் இரும்பு போன்ற பொன்மங்கள் கண்டுபிடித்த பின் ஈச்சை, தென்னை போன்ற பனைக் குடும்ப மரங்களிலிருந்து கள் இறக்கியிருக்க வேண்டும். தேங்காய், இளநீர் போன்றவற்றின் இனிமையைக் கொண்டு அதனைத் தேன் + கு தேன்கு → தென்கு → தெங்கு என்று வந்திருக்க வேண்டும் என்று சொன்னால் கூட ஓரளவு பொருந்தலாம். ஆனால் இங்கு அடியார்க்குநல்லார் பட்டியலிடும் நாடுகளில் நம் கவனத்தை ஈர்ப்பது ஏழ் தெங்கநாடு. தென்பாலி நாடு என்பது இன்று தாய்லாந்தில் இருக்கும் பாலிக்கு தெற்கில் இருந்த ஒரு நிலமாக இருந்திருக்கும். அங்கிருந்து வடக்கு நோக்கி உள்ள நாடுகளை அவர் தரும் வரிசை குறிக்கிறது. நீர் மலிந்த இடத்தில் வளரும் தென்னை மலிந்த ஏழ் தெங்க நாடு, அதற்கு வடக்கில் முன்பாலை 7, பின்பாலை 7 நாடுகள். அதற்கு வடக்கு ஏழ்குன்ற நாடும் அதற்கும் வடக்கில் ஏழ் குணகரை நாடும் ஏழ் குறும்பனை நாடும் என்ற வரிசைப் படி தெற்கி்ல் தெங்கும் வடக்கில் பனையும் அமைந்திருந்தன என்பது புலனாகிறது.

இளம்பனையை வடலி என்று குறிப்பிடுவதால் வடக்குக்கும் பனைவடலிக்கும் தொடர்பிருக்கலாம் என்பது எம் கருத்து. விடலை என்பதுதான் வடலி என்று திரிந்திருக்கும் என்பது திரு.வசந்தகுமார் அவர்கள் கருத்து. விடலை என்பதற்கு இளவாண் பொது என்ற பொருளைக் கழகத் தமிழ் அகராதி தருகிறது. வடலி என்பதற்கு இளம்பனை, போந்தை, சோற்றுப்பனை என்ற பொருட்களையும் அது தருகிறது. போந்தை என்பது இன்றும் மடகாசுக்கர் தீவில் வளரும் ஒரு பனைவகை; அதில் நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கும் பூதான் சேரனின் மாலையாக இருந்திருக்க வேண்டும் என்று பேரா. இரா.மதிவாணன் அவர்கள் 2009 சூன் தென்மொழியில் மடகாசுகர் தீவில் சேரனின் பனம்பூ என்றொரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆக வடலி என்பது ஒரு குறிப்பிட்ட வகை பனையைக் குறித்தது என்பதும் தெரியவருகிறது. பனம்பூ மாலையை சேரனின் மாலையாக தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் நம்மிடையில் உள்ள பனைகளில் மாலை தொடுக்கத்தக்க பூக்கள் இல்லையே என்ற கேள்விக்கு பேரா.மதிவாணனின் கட்டுரை விடை தருகிறது.

பனை, தென்னை ஆகியவற்றின் இடையில் ஒரு விந்தையான இணைப்பு காணப்படுகிறது. பனங்காயில் பொதுவாக மூன்று கொட்டைகள் காணப்படும். சிறு எண்ணிக்கையில் இரண்டு கொட்டைகளுடனும் அதனிலும் சிறிய  வீதத்தில் ஒரு கொட்டை உடையனவும் உண்டு. ஒவ்வொரு கொட்டையிலும் முளை வெளிவருவதற்கான கண் ஒன்று இருக்கும்.

தேங்காயை உரித்து கொட்டையை எடுத்துப் பார்த்தால் அதன் வெளிப்பரப்பை மூன்றாகப் பிரிக்கும் தெளிவான மேடுகளாய் அமைந்த கோடுகளைக் காணலாம். அது போல் தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். அவற்றில் முளை வெளிவருவதற்கான ஒன்று தவிர பிற இரண்டும் பொய்க் கண்கள்.

இப்போது இப்படிக் கற்பனை செய்து பார்ப்போம். பனை வரண்ட நிலத்துக்கு உரியது. இங்கு விதைகளைப் பரப்ப பனம் பழத்திலுள்ள இனிய சதை விலங்குகளை ஈர்த்தது. இப்போது காலநிலை மாற்றத்தாலோ வரண்ட நிலங்களில் எப்போதாவது பெய்யும் பேய் மழைகளாலோ இப் பனம் பழங்கள் கடல் ஓரங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது இயற்கைத் தேர்வு மூலம் அது தன் சதைப்பகுதியை கனமற்ற நார்த்தொகுதியாக மாற்றிக் கொண்டு மூன்று கொட்டைகளையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு தண்ணீரில் மிதந்து பரவி இருக்கலாம். ஆக, நீர் மலிந்த தெற்கில் தெங்கும் வடக்கில் பனையும் இருந்ததாகக் கூறும் அடியார்க்குநல்லார் கூற்று பொருத்தமானதே.

தென்னை, நெல், கரும்பு போன்ற பல்வேறு வேளாண் பொருட்கள் வெளியிலிருந்து தமிழகத்துக்கு வந்தன என்று ஒரு சாரார் நம்புவதற்கும் அடித்துக் கூறுவதற்கும் அடிப்படை இல்லாமல் இல்லை. இவை எல்லாவற்றிலும் உள்நாட்டில் இல்லாத வகைகளை யாரோ ஓர் அரசன் கொண்டுவந்ததான இலக்கியக் குறிப்புகளே அவர்களை இவ்வாறு மயங்க வைக்கிறது. தமிழக நெல்லின் மூலமான காட்டுவகையை இன்றும் மேற்குமலைத் தொடரில் காண முடியும்.  சம்பா வகை நெல் சம்பாபதி என்ற நகரைக் கொண்ட தாய்லாந்து நகரின் பெயரின் அடிப்படையில் அழைக்கப்படுகிறது. பூம்புகார் நகரின் காவல் தெய்வத்தின் பெயர் சம்பாபதி என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. கரும்பில் பொங்கல் திருநாளில் நாம் பயன்படுத்தும் மெல்வதற்கு எளிதான கருங்கரும்பு தமிழ்நாட்டுக்கு உரியது. ஆலைக் கரும்பு தாய்லாந்திலிருந்து வந்திருக்கிறது. இவ் வகையை இந்திரனிடமிருந்து சேரன் பெற்று கொண்டுவந்ததாகக் குறிப்பு உள்ளது. நெல், கரும்பு ஆகிவை மிகச் செழித்திருப்பதையும் வெள்ளை யானை இருப்பதையும் காட்டி இந்திரன் இருந்தது தாய்லாந்தாகத்தான் இருக்க வேண்டும் என்று பாவாணர் சரியாகவே முடிவு செய்கிறார். சோழர்களுக்கும் இந்திரனுக்கும் சிலப்பதிகாரத்தில் காணப்படும் உறவு அங்கிருந்த ஒரு நெல்வகையை அவர்கள் இங்கு அறிமுகம் செய்திருக்கும் வாய்ப்பைச் சுட்டுகிறது.  தென்னையிலும் மானக்கவரம் எனும் நிக்கோபார் தீவுகளிலிருந்து வந்த நக்குவாரித் தேங்காய் வகை இருக்கிறது.

குமரிக் கண்டத்தில் இருந்த நிலப் பகுதிகளை ஏழு ஏழு நாடுகளாகக் கூறுவது கூட தமிழ் மக்களின் மூதாதையரான ஏழு பெண்களின் அடிப்படையில் அமைந்த எவ் வேழு பகுதிகளாக, அல்லது எவ் வேழு பண்பாட்டு உட்பிரிவுகளாக இருக்கலாம்.

இங்கு அடியார்க்குநல்லார் தெளிவாகவே குமரிக் கடலில் என்று கூறியுள்ளார். பின்னர் அடைக்கலக் காதையில் விளக்கவுரையில் குமரி - யாறு, கடலுமாம் ‘தொடியோள் பெளவம்′ என்றாரகலின் என்று வேங்கடசாமியார் தெளிவாகவே கூறியுள்ளதில் செயகரனுக்குக் குழப்புவதற்கு ஒரேயொரு புள்ளி கிடைத்துள்ளது, நளன் ஏதோவொரு தவறு செய்தவுடன் சனி அவன் உடலில் புகுந்தானாமே அதுபோல், கிரேக்க மறவனப்பு இலியடில் வீரன் அக்கில்லரைச் சாவு தீண்டாமலிருப்பதற்காக அவன் தாய் நரத்து ஆற்றினுள் முக்கும் போது அவனைப் பற்றியிருந்த அவள் கையிருந்த இடமாகிய அவனது குதிகால் நனையாமல் நின்றுவிட்டதால் அவன் இறந்தானாமே அதுபோல்.

2.   சிலப்பதிகாரக் காலத்தில் தமிழகத்தில் நான்கு தலைநகரங்கள் இருந்துள்ளன, மதுரை, வஞ்சி, உறையூர், புகார் ஆகியவை. சோழ மரபில் வந்த அரசன் நெடுங்கிள்ளி உறையூரை ஆண்டான். உரைபெறு கட்டுரையில் உறையூர்ச் சோழன் பற்றி கூறப்பட்டுள்ளது.

3.   அந்த அரசர்களுக்குப் போட்டியாக அவர்களின் தலைநகர்களில் காமதேவன் ஆட்சி செய்வதாக இளங்கோவடிகள் நகைச்சுவை ததும்பும் வகையில் கூறுகிறார், முன்பு நகரங் காவல் நனிசிறந்ததுவே (அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில்) என்று கூறியது போன்று.

4.   காமதேவனாகிய அந்த அரசனுக்கு மகிழ்ச்சி தரும் துணைவன் இளவேனிலாம், பொதிகைத் தென்றல் தூதுவனாம், இளவேனில் என்ற காமனின் துணைவன் வருகிறான் என்று அவனது தூதுவனாகிய தென்றல் கூறியதால் படையில் உள்ள எக்காளம் ஊதும் பணிமகனான குயில் காமனது சேனையாகிய பெண்கள் தங்கள் காதல் போருக்கான கோலம் கொள்ளுங்களென்று அறிவிக்கும் வகையில் இசைத்தானாம், என்னே உவமைச் சிறப்பு!

5.   அந்த மன்னனுக்குக் கப்பமா தென்கடலில் பிறந்த முத்தையும் தென்மலையில் பிறக்கும் சந்தனத்தையும் தன் முலையாகிய முற்றத்திலே குங்குமமாகிய வளாகத்திலே ஏந்தினாளாம் மாதவி, தனது காதல் போரைக் கோவலனுடன் நடத்துவதற்கு. இது நடந்தது மேல்மாடியில் இளவேனில் காலத்துக்கு உகந்த நிலா முற்றத்தில்.

6.   யாழைக் கையில் வாங்கி வாய்ப்பாட்டுப் பாடினாள். பாட்டின் இசை மயங்கியது என்று அவளது அமைதி இழந்த மனநிலையைச் சிறப்பாக ஒரு சிறு குறிப்பால் தெளிவாக விளக்குகிறார் அடிகள்.

7.   எனவே யாழ் இசைக்கத் தொடங்கினாள். இங்கு அவள் யாழ் இசைக்கும் நிலையை விரிவாக விளக்குகிறார் அடிகள்.
      1.ஆசனங்கள் எனப்படுபவை ஒன்பதாம். அவை:
1.பதுமுகம்                 6. சுவத்திகம்
2.உற்கட்டிதம்            7. தனிப்புடம்
3.ஒப்படி இருக்கை     8. மண்டிலம்
4.சம்புடம்                   9. ஏகபாதம்.
5.அயமுகம்
            அவற்றுள் பதுமாசனம் ஆகிய பதுமுகம் என்ற முதல் இருக்கை முறையில் அமர்ந்தாளாம்.
      2.இப்போது, இசை எழுப்பும் வகை:
1.வலக்கையைப் பதாகையாக அதாவது நான்கு விரலும் தம்முள் ஒட்ட நிமிரப்  
   பெருவிரல் வளைந்து (குஞ்சித்து) நிற்பது.  
2.இடக்கையின் நான்கு விரல்களும் நரம்பினை மீட்டும் கருவியைத் தழுவுதல்.
      3.இசை எழுப்புவதில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கை
1.செம்பகை: பண்ணோடு உளரா இன்பமில் ஓசை(செம்பகை யென்பது பண்ணோ டுளரா).
2.ஆர்ப்பு: அளவு இறந்து(மீறி) இசைத்தல்(ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்).
3.அதிர்வு: இழுமென்றின்றி சிதறியுரைத்தல்(அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச் சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே) .
4.கூடம்: மழுங்கி இசைப்பது(கூட மென்பது குறியுற விளம்பின் வாய்வதின் வராது மழுங்கியி சைப்பதுவே).
இவை வராது தவிர்க்க வேண்டும்.
            நீரிலே நிற்ற லழுகுதல் வேர்த னில்மயக்குப்
            பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய் மரப் பாற்படல் கோள்
            நேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல்
            சேரினேர் பண்க ணிறமயக்  குப்படுஞ் சிற்றிடையே
என்றொரு பாடலைத் தந்திருக்கிறார் வேங்கடசாமியார் அவர்கள். இவ்வாறு யாழ் செய்த மரத்தின் குறைபாட்டால் இசையில் குறைபாடு எழுமாயின் யாழ் இசைப்பவர் அத்தகைய யாழில் அவற்றைத் தவிர்க்க முடியுமா என்பது ஒரு கேள்வி. ஒருவர் தான் யாழ் இசைக்கும் முன் தனக்குப் புதியதான ஒரு யாழை வழங்கினால் அதனை ஆய்ந்து வேறு யாழைப் பெறுவதாக இருந்தால் இது பொருந்தும். இங்கோ, மரம் குறைபாடுடையதாக இருந்தாலும் இசையில் குற்றங்கள் நேராமல் தவிர்க்கும் உத்திகளைக் கடைப்பிடித்தாள் என்றே குறிப்பிடப்படுகிறது. இசைக்கத் தெரியாதவன் நல்ல யாழிலும் இத்தகைய குறைகள் ஏற்படும் வகையில்  இசைக்கலாமல்லவா?

4.   இனி இசைப்பாட்டுக்குள் நுழைந்து பார்ப்போம். பிழையா மரபின் ஈரேழ் கோவையை என்ற 31 ஆம் வரிக்கு - மயங்கா மரபினையுடைய பதினாற்கோவையாகிய சகோட யாழை என்று உரை கூறுகிறார் வேங்கடசாமியார். ஆனால் அரங்கேற்றுக் காதையில் ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் என்ற 70ஆம் வரிக்கு, செவ்விய முறையே இரண்டேழாகத் தொடுக்கப்பட்ட ஆயப் பாலையாய் நின்ற பதினாற்கோவையில் என்று பொருள் கூறியிருக்கிறார். அதுதான் இங்கு பொருந்தும் என்று தோன்றுகிறது. சகோட யாழ் என்பது என்னவென்று அபிதான சிந்தாமணியில் யாழ் என்ற தலைப்பில் பார்த்தால் சகோட யாழுக்கு நரம்பு பதினொன்று என்று உள்ளது. தமிழ் மொழி அகராதியில் பொருளகராதித் தலைப்பில் சகோட யாழ் என்பதைப் பார்த்தால் சோடச நரப்பி என்று உள்ளது, அதாவது பதினாறு நரம்பு உள்ளது என்று கூறுகிறது. அரங்கேற்றுக் காதை உரை (வரி 26)யில் யாழ் என்ற தலைப்பில் சொல்லின் கீழ் தந்துள்ள பாடலில் சகோட யாழுக்கு பதினான்கு நரம்புகள் என்று உள்ளது. இங்கு ஆயப்பாலை என்பது பொருந்துமா என்பது தெரியவில்லை. நரம்பு எனும் சொல்லுக்கு இசை என்றும் யாழ் உறுப்பாகிய நரம்பு என்றும் இரு பொருள்கள் இருப்பதால் வந்த குழப்பமா? சகோட யாழ் என்றும் ஆயப்பாலை என்றும் ஈரேழ் கோவை என்ற தொடருக்குப் பொருள் தந்திருப்பது இது போன்ற  கேள்விகளை எழுப்புகிறது.

சகோட யாழுக்கு பதினாறு நரம்பென்ற தமிழ்மொழியகராதிப் பொருள் ஈரெட்டுக் கோவை என்று, அடிப்படை இசைகள் 8 என்ற எம் கருத்துக்கு அரண்செய்வதாகக் கொள்ளலாமா?           
ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
                        நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத
                        நால்கை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
                        மேல்வகை நூலோர் விதி

உழையைக் குரலாகவும் கைக்கிளையைத் தாரமாகவும் கட்டினால் (வரி 32) என்ன வருமோ தெரியவில்லை.

இணை, கிளை, பகை, நட்பு இசை சேர்க்கும் குறிநிலையைப் பொருந்த நோக்கி குரலிடத்தும் அதற்கு ஐந்தாம் நரம்பாகிய இளியிடத்தும்(கிளைநரம்பு) இசை ஒத்திருந்தலைச் செவியால் அளந்தறிதல்.
           
இது குறித்து குரல் முதலாக எடுத்து இளி குரலாக வாசித்தாள் என்று அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் கூறுகின்றனர் என்று வேங்கடசாமியார் கூறுகிறார்.

அத்துடன் இளி முறையால் பாடப்படும் ஏழு நரம்புகளில் உழை முதலாகவும் உழை ஈறாகவும் குரல் முதலாகவும் குரல் ஈறாகவும் அநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்ற நால்வகைப் பண்களையும் நலம்பெற நோக்கி என்பதற்கு விளக்க உரையாசிரியர் வேங்கடசாமியார் தருபவை:  

குரல்           
மத்திமம் (ம)
துத்தம்        
பஞ்சமம் (ப)
கைக்கிளை
தைவதம் (த)
உழை
நிடாதம் (நி)
இளி 
சட்சம் (ச)
விளரி
ரிடபம் (ரி)
தாரம் 
காந்தாரம் (க)
           
என்ற வரிசையில் ஐந்தாவதாக வரும் இளிக்கு நேரான சட்சம் வட்டப் பாலை இடமுறைத் திரிபு கூறுகின்றார் என்று
உழை குரலாக               கோடிப்பாலை
குரல் குரலாக                 செம்பாலை
விளரி குரலாக                படுமலைப் பாலை
துத்தம் குரலாகச்            செவ்வழிப்பாலை
இளி குரலாக                 அரும்பாலை
கைக்கிளை குரலாக       மேற்செம்பாலை
தாரம் குரலாக                விளரிப்பாலை.

என்று அடியார்க்கு நல்லார் கூறுவதைத் தந்துவிட்டு விளரி நிற்குமிடத்தில் இளியும் ளி நிற்கும் இடத்தில் விளரியும் நிற்க வேண்டும் என்ற திருத்தத்தையும் தருகிறார். அத் திருத்தத்தின்படி பட்டியல் கீழ்கண்டவாறு அமையும்:
                        உழை குரலாக               கோடிப்பாலை
                        குரல் குரலாக                 செம்பாலை
                        இளி குரலாக                 படுமலைப் பாலை
                        துத்தம் குரலாக              செவ்வழிப்பாலை
                        விளரி குரலாக                அரும்பாலை
                        கைக்கிளை குரலாக       மேற்செம்பாலை
                        தாரம் குரலாக                விளரிப்பாலை
உழைக்கு ஐந்தாவதாக                குரலும்
குரலுக்கு ஐந்தாவதாக                இளியும்
இளிக்கு ஐந்தாவதாகத்                துத்தமும்
துத்தத்துக்கு ஐந்தாவதாக            விளரியும்
விளரிக்கு ஐந்தாவதாக                கைக்கிளையும்
கைக்கிளைக்கு ஐந்தாவதாக        தாரமும்
தாரத்துக்கு ஐந்தாவதாக             உழையும்
இது மேலே தரப்பட்ட இசைகளின் பட்டியலின்படி இருப்பதைக் காணலாம்.
            இவ்வாறு பொருள்கொள்ள செய்யுளில் எதுவும் கூறப்படவில்லை எனும் வேங்கடசாமியார்

குரல்                                     
குரலாய்
செம்பாலை
துத்தம்  
குரலாய்  
படுமலைப்பாலை
கைக்கிளை
குரலாய் 
செவ்வழிப்பாலை
உழை
குரலாய் 
அரும்பலை
இளி   
குரலாய்          
கோடிப்பாலை
விளரி  
குரலாய்  
விளரிப்பாலை
தாரம்
குரலாய்
மேற்செம்பாலை
                                                                                             
என்று ஆய்ச்சியர் குரவையிலும் திவாகரம் முதலிய நிகண்டுகளிலும் கூறியுள்ளதை எடுத்துக் காட்டுகிறார்.
உழை                        குரலாக              செம்பாலை
                        கைக்கிளை                குரலாக              படுமலைப் பாலை
                        துத்தம்                       குரலாக              செல்வழிப்பாலை
                        குரல்                          குரலாக              அரும்பாலை
                        தாரம்                         குரலாக              கோடிப் பாலை
                        விளரி                         குரலாக              விளரிப்பாலை
                        இளி                           குரலாக              மேற்செம்பாலை
இது அரங்கேற்றுக் காதையில் கூறியுள்ளது.

இவ்விரு வகையிலும் வேறுபடப் பாலையேழும் பிறக்குமென்று அடியார்க்குநல்லார் கூறியுள்ளார் என்று தொகுத்துக் கூறுகிறார். இவற்றைப் பட்டியலிட்டால்,

இசைப்பெயர்

பிறக்கும் வகை


அரங்கேற்றுக் காதை
வேனில்காதை
ஆய்ச்சியர் குரவை
செம்பாலை

உழை குரலாக
குரல் குரலாக
குரல் குரலாக
படுமலைப் பாலை

கைக்கிளை குரலாக
இளி குரலாக
துத்தம் குரலாக
செவ்வழிப் பாலை

துத்தம் குரலாக
துத்தம் குரலாக
கைக்கிளை குரலாக
அரும்பாலை

குரல் குரலாக
விளரி குரலாக
உழை குரலாக
கோடிப்பாலை

தாரம் குரலாக
உழை குரலாக
இளி குரலாக
விளரிப்பாலை

விளரி குரலாக
தாரம் குரலாக
விளரி குரலாக
மேற்செம்பாலை

இளி குரலாக
கைக்கிளை குரலாக
தாரம் குரலா

நம் குறிப்பு :


ஏழாவது இணை          நரம்பு    வரிசை
இறுதி இரண்டும்           நட்பு நரம்புகள்        
இரண்டாவது இணை நரம்பு வரிசை

மேற்படி பட்டியலில் வேனிற்காதையில் அடியார்க்குநல்லார் தந்திருப்பதை வேங்கடசாமியார் கூறியிருப்பதை வைத்துத் திருத்தினால் முதல் நான்கும் கிளை வரிசையிலும் ஐந்தவாது பகை வரிசையிலும் இறுதி இரண்டும் நட்பு வரிசையிலும் வருகின்றன.

            அடியார்க்குநல்லார் தந்திருப்பவற்றைத் திருத்தாமல் பட்டியலிட்டால்:

           
குரல்
கிளை (5)
விளரி
பகை  (6)
துத்தம்
நட்பு   (4)
இளி
நட்பு   (4)
கைக்கிளை
பகை  (6)
தாரம்
கிளை (5)
உழை
கிளை (5)
 
            எனவே இந்த வரிசை எப்படிப் பார்த்தாலும் பிழையானது என்று தெரிகிறது.

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் (வரி 36) என்பதற்கு விளக்கவுரையில் ஐந்து - இளி; ஆவது சட்சம் சப முறையாலென்க என்கிறார் வேங்கடசாமியார், சரிகமபதநி என்பதில்,
            ச → 5ப → 5ரி → 5த → 5க → 5நி → 5ம →5ச
1. உழை முதலாக           அகநிலை மருதம்
2. உழை ஈறாக               புறநிலை மருதம்
3. குரல் முதலாக             அருகியல் மருதம்
4. குரல் ஈறாக                 பெருகியல் மருதம்
பெரும்பண்கள்
1.பாலையாழ்                 3.மருதயாழ்
2.குறிஞ்சியாழ்                4.செவ்வழியாழ் என நான்கு.
நான்குக்கும்
1.அகநிலை                   3.அருகியல்
2.புறநிலை                    4.பெருகியல்
என்று நான்கு: 4x4 = 16.
திறன்கள்:
1.பாலையாழ்    : 5
2.குறிஞ்சியாழ்    : 8
3.மருதயாழ்       :  4
4.செவ்வழியாழ்  : 4
                       திறத்தின் வகைகள்: 21
               
1. பாலையாழ்      :  15
2. குறிஞ்சியாழ்     : 24
3. மருதயாழ்            12
4. செவ்வழியாழ்    : 12
                                                      63                                                                                                       
இவைத் தவிர
1.தாரப் பண்திறம்
2.பையுள் காஞ்சி
3.படுமலை
மொத்தம் 16+21+63+3 = 103 என்கிறார் வேங்கடசாமியார்.

நமக்கு உள்ள ஓர் ஐயப்பாடு அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பவற்றுக்கு என்ன பொருள், அவற்றுக்கும் திறன்களுக்கும் உள்ள உறவு யாது என்பதுதான். அது தெரிந்தால்தான் மொத்தம் பண்கள் 103தாமா அல்லது எண்ணிக்கை கூடுமா என்பது தெரியும்.

            அடியார்க்குநல்லார் கூறுவதாகக் கூறுவது 
1.உழை குரலாகிய                     கோடிப்பாலை அகநிலை மருதம்
2.கைக்கிளை குரலாகிய              மேற்செம்பாலை புறநிலை மருதம்
3.குரல் குரலாகிய                       செம்பாலை அருகியல் மருதம்
4.தாரம் குலாகிய                     விளரிப்பாலை பெருகியல் மருதம்
இங்கு பாலை எவ்வாறு மருதமானது? பட்டியலில் கொடுத்துள்ள 7  இசைகளில் எஞ்சிய மூன்றும் என்னாயின? பாலைக்கு மட்டும்தான் இப் பட்டியலா? பிற பெரும்பண்களுக்கு இது போன்ற பட்டியல்கள் கிடையாதா? இந்தக் கேள்விகளுக்கும் விடை தேட வேண்டியுள்ளது.
அரும்பதவுரையாசிரியர் கூற்றுப்படி,
            1.அகநிலை மருதம்
                  செய்யுள்   : ஒத்த கிழமை யுழைகுரன் மருதம்
                                    துத்தமும் விளரியும் குறைபிற நிறையே
                  பாட்டு      :  ஊர்க திண்டேர் ஊர்தற் கின்னே
                                    நேர்க பாக நீயா வண்ணம்
                  நரம்பு - 16
            2.புறநிலை மருதம்
                  செய்யுள்   :  புறநிலை மருதங் குரலுழை கிழமை துத்தங் கைக்கிளை
                                   குறையா மேனைத் தாரம் விளரி யிளிநிறை யாகும்
                  பாட்டு:        அங்கட் பொய்கை யூரன் கேண்மை
                                    திங்க ளோர்நா ளாகுந் தோழி
                  நரம்பு : 16
            3. அருகியல்  மருதம்
                  செய்யுள்   : அருகியன் மருதங் குரல்கிளை கிழமை விளரி  யிளிகுறை
                                    யாகு மேனைத் துத்தந் தார முழையிவை நிறையே
                  பாட்டு      : வந்தா னூரன் மென்றோள் வளைய
                                    கன்றாய் போது காணாய் தோழி
                  நரம்பு 16
            4.பெருகியல் மருதம்
                  செய்யுள்   : பெருகியன் மருதம் பேணுங்  காலை அகநிலைக் குரிய
                                    நரம்பின திரட்டி நிறைகுறை கிழமை பெறுமென மொழிப
                  பாட்டு      :              மல்லூர் ... நோ வெம்முன் சொல்லற் பாண
                                    சொல்லுங் காலை எல்லி வந்த நங்கைக் கெல்லாம்
                                    சொல்லுங்காலைச் சொல்லு நீயே
                  நரம்பு - 32
பரிபாடல் 17ஆம் செய்யுளில்
                        ஒருதிறம் பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற என்பதற்கு பாலையையுடைய அழகிய மிற்றுப் பாடற்கண் நாலு தாக்குடைய கிழமையும் இரண்டு தாக்குடைய …… குறையும் தோன்ற எனப் பரிமேலழகர் உரை கூறியிருத்தலின்,
                                    கிழமை             4 தாக்கும்
                                    நிறை                2 தாக்கும்
                                    குறை               1 தாக்கும்  பெறுமெனக் கொள்ள வேண்டும்.

மேலே காட்டிய பாட்டுகளில் அகநிலை முதலிய மூன்றும் ஒற்று நீக்கிப் பதினாறெழுத்துக்களும் பெருகியல் ஒன்றும் முப்பத்திரண்டெழுத்துகளும் பெற்று வருதலின் ஓரெழுத்து ஒரு நரம்பாகவும் ஒரு மாத்திரையாகவும் கொள்ளப்பட்டதென்பது புலனாகிறது.
           
அகநிலை மருதத்துக்கு நரம்பணியும்படி: உழை இளி விளரி உழை கைக்கிளை குரல் உழை குரல் தாரம் இளி தாரம் துத்தம் இளி உழை இவை உரைப்பிற் பெருகும் என்றுள்ள அரும்பத உரையில் பதினான்கு நரம்புகளே காணப்படுதல் முரணாகிறது. இரண்டு விடுபட்டிருக்கும் போலும், இவை வேங்கடசாமியாரின் குறிப்பு:
           
இங்கு நம் ஐயம்: எட்டு இசைகளை ஏழு இசைகள் என்று மாற்றியதால் (2×8=16, 2×7=14) இந்தக் குழப்பம் நேர்ந்திருக்குமோ? இசையில் சரிகமபதநிச என்று இரண்டாவது ச உச்சித்தில் நின்று ஒலிக்கிறது. இதற்குத் தனி குறியீடு இல்லை. 7 குறியீடுகளே உள்ளன. அதுபோல் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று 7தாம் உள்ளன.  உயிரெழுத்துகளும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள ஆகிய 7தான் உள்ளன. ஆயுதத்தைச் சேர்த்து அதற்குரிய குறியீட்டையும்  கண்டால் இந்தச் சிக்கல் தீருமென்று நினைக்கிறேன். காலத்தால் முந்தியவரான பரிமேலழகர்  16 நரம்புகள் என்று சொல்வதால் முன்பு இசை நரம்புகளின் எண்ணிக்கை 8 ஆக இருந்து பின்னர் ஏழாக மாற்றப்பட்டுள்ளது என்ற எமது கருத்துக்கு இது வலுச் சேர்க்கிறது.

மூவகை இயக்கம் என்பதற்கு வலிவு, மெலிவு, சமம் அதாவது உச்சம், மத்திமம், நீச்சம் என்ற ஒன்றிலும் நான்கு சாதிப்பண்களையும் பாடினாள். அவற்றின் போக்கிலுள்ள திறப்பண்களை யாழிலும் கண்டத்திலும் (வாய்ப்பாட்டு) பாடும் போது எடுத்த பண்ணுக்கு மாறாகிய ஒரு பண்ணில் அவள் மயங்கினாள் என்கிறார் அடிகள்.

இவ்வாறு இசை, நாடகம் போன்ற கலைத்துறைகளின் ஒரு பாடநூல் போல் அமைத்து ஆனால் அது வெளிப்படத் தோன்றாமலும் படிக்குநர்க்குச் சோர்வை ஏற்படுத்தாமலும் பிரித்துக் கதையோடு ஆங்காங்கு ணைத்துத் தந்துள்ளார் அடிகள். அது போல்தான் தொன்மச் செய்திகளையும் பிறதுறைச் செய்திகளையும்.  இவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஓர் ஐயம் எழுகிறது. தமிழகக் கலைகள், அறிவியல்கள், வரலாறு, பிற பண்பாட்டு உறுப்புகள் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஒன்று நெருங்கி வந்த ஒரு சூழல் அவர் காலத்தில் உருவாகிக் கொண்டிருந்ததோ என்ற ஐயம்தான் அது. குறிப்பிட்டுச் சொல்வதாயிருந்தால் சமணம் என்ற அம்மணத்தின் பெயரில் மனித நாகரிகத்தின் முதல் அடியான ஆடையையே களைந்தெறிந்த ஓர் அநாகரிக ஒற்றர்களின் கூட்டம் தமிழகத்தின் அடித்தள மக்களிடையில் ஊடுருவி மலை முழைஞ்சுகளில் மக்களை இன்று வல்லரசுகளிடமிருந்து, பணம் பெறுவதற்காக மனித நேய, சூழல் நேய நடவடிக்கைகள், சமய நடவடிக்கைகள், ஒன்றிய நாடுகளவை போன்ற பன்னாட்டு அமைப்புகளின் நடவடிக்கைகளின் பின்னணியில் மக்களை அவர்களின் பொது நலன்களுக்கு அதாவது நாட்டு நலனுக்கு எதிராக மிடுக்கான அல்லது கதராலாஉடையணிந்து நுனிநாவில் ஆங்கிலம் பேசும் இன்றைய உள்நாட்டு ஒட்டுண்ணிகளான ஒற்றர்களைப் போல  அணிதிரட்டிக் கொண்டிருந்ததையும் அவர்களை வழிநடத்தியவர்கள் வெளிப்படையாகச் செயற்பட்டதையும் கண்டு அவர்களிடமிருந்து தமிழகத்தின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை ஓர் இலக்கியத்தினுள் புதைத்து வைத்துக் காப்பதை நோக்கமாகக் கொண்டு, கண்ணகியின் கதையை அதற்குப் பொருத்தமானதாகக் கொண்டு இந்த நூலை அவர் யாத்திருப்பாரோ என்பதுதான் அந்த ஐயம். இந்த ஐயத்துக்குத் துணையாக இருப்பவை, அம்மண ஒற்றர்களின் வினைப்பாட்டின் விளைவாகிய களப்பிரர் ஆட்சி முடிந்தபின், சிலப்பதிகாரம் காட்டும் பல்வேறு வளர்ச்சி நிலைகள் முற்றிலும் அழிந்து போய் புதியனவாகவே அவை தோன்றியுள்ள நிலமைகளாகும். அவற்றுள் ஒன்று இசை, நாட்டியம் ஆகியவளற்றில், புதியவற்றுக்கும் அவற்றுக்குமான உறவுகள், வேற்றுமைகளைப் இனங்காணா நிலை ஆகியவை ஆகும். அவ்வாறு புதியவையாகத் தோன்றியவற்றை வைத்தே இன்றைய பனியா - பார்சி இந்திய அரசின் கல்வித்துறைகளும் ஆய்வுத் துறைகளும் தமிழர்களின் நாகரிகம் சமணர்களின் கொடை என்ற தலைகீழ்ப் பாடத்தைப் படித்துக்கொண்டிருக்கின்றன.

  1. அடுத்து அன்றைய செல்வச் செழிப்புள்ள மக்கள் காதல் மடல் விடுக்கும் விதத்தை மனதை மயக்கும் வகையில் விளக்குகிறார் அடிகள். சண்பகம், மாதவி, பச்சிலை, இருவாச்சி, மல்லிகை வெட்டிவேர், செங்கழுநீர் போன்ற எதிர் எதிரான மங்களை உடைய  மலர்களால் தொடுத்த  மாலையின் நடுவில் வைத்துத் தொடுத்த முதிர்ந்த தாழை மடலில் செண்பகத்தின் சிறு மொட்டாகிய எழுத்தாணியால் எழுதினாளாம். மை செம்பருத்தியின் பூவை அரைத்த குழம்பு. இவ்வாறு எழுதக் காரணம் என்ன? கோவலன் பிரிந்தால் வந்த காதல் வேட்கை. அந்த வேட்கையை மணம் பொருந்திய மலர்களாலாகிய அம்புகளைக் கொண்டு, அனைத்துத் திசைகளும் தன்னைத் தொழுது வணங்குமாறு முழு உலகத்தையும் ஆளும் காம தேவனின் ஆணை என்கிறார். அரசன் தன் கீழ் உள்ள பிற அரசர்களுக்கு ஆணை விடுப்பது போல் காமனின் ஆணையால் கோவலனுக்குத் திருமுகம்  விடுக்கிறாளாம்.

8.   ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதுவதுதான் தமிழர்களின் வழக்கம் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக தாழை மடலில் ஒரு மையில் தோய்த்த முனையுள்ள பொருள் கொண்டு எழுதும் முறை இங்கு வெளிப்படுகிறது. ஏகுபதியர்கள்தாம் தாழை மடலில் எழுதும் முறையைக் கண்டுபிடித்தனர் என்பது வரலாற்றாய்வாளர் முடிவு. நம் நாட்டில் தோன்றிய இந்த முறை ஒருவேளை பனை ஓலை கிடைப்பதற்கு எளிதாக இருந்ததால் தாழை மடலில் எழுதும் முறை வளமிக்கவர்களிடையில் மட்டும் நிலைத்து பின்னர் அங்கிருந்தும் அகன்றதோ?

காமனது கொடுமையின் வெம்மையை விளக்கி, காமம் அவளது கட்டுப்பாடுகளை  அறுத்து அவிழ்க்க, அறுபத்து நான்கு கலைகளும் வழிபட்டு நிற்கும் பண்களும் இசைகளும் பொறாமைப்படத்தக்க தன் இளம் மழலை மொழியில் சொல்லிச் சொல்லி எழுதுகிறாள். இது அவளது உண்மையான காதலை வெளிப்படுத்தும் ஆசிரியரின் ஒப்பற்ற சொல்லோவியம், இவள் தனியாக இருந்தே இதை எழுதுகிறான் என்பதை, தோழியாகிய வசந்தமாலையைக் கூவி அழைத்தாள் என்று சொல்லிப் புலப்படுத்துகிறார். அந்திப் பொழுதின் அரிய பிடரில் தோன்றும் நிலவு என்று பொருள் கொள்வது குறித்து அடியார்க்குநல்லார் கூறியுள்ள மறுப்புரையை (அந்திப் போதகத்து அரும்பு இடர்த் தோன்றிய எனப் பிரித்து, அந்திப் பொழுதின்கண்ணே அரும்புகின்ற விரகவிதனத்தின் மேலே வந்து தோன்றிய திங்களாகிய செல்வன் என்று பொருளுரைப்பர் அடியார்க்குநல்லார். அவர், அந்தியாகிய யானையின் கழுத்திற் றோன்றிய திங்களெனிற் பிறையாமாதலின், அது நாடுகாண் காதையுள் “வைகறை யாமத்து மீன் றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாட் கங்குல்” என்பதனோடும் கட்டுரை காதையுள் “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண” என்பதனோடும் பிறவற்றோடும் மாறுகொள்ளுமாதலின் அவ் வுரை பொருந்தாதென மறுப்பார். ஆயின் இவர் கருத்துப்படியும் அந்தியோடு திங்களுக்குத் தொடர்பில்லா தொழியவில்லை என்பது கருதற்பாற்று)ச் சரியாகவே எதிர்கொள்கிறார் வேங்கடசாமியார். நிகழ்ச்சி இடம்பெற்ற நாள் முழுநிலவுக்கு முந்தியது. ஆதலால் கதிரவன் மேலைக் கடலில் வீழ்வதற்கு இரு நாழிகைகள் முன்பே நிலவு கீழ்வானில் தோன்றிவிடும் என்பதால் அவரது விளக்கம் சரியானதே.  

மடலில் கூறியிருப்பவற்றை அவளுக்கு விளக்கி அல்லது அவளைப் படித்துப் பார்க்கச் சொல்லி அவற்றைக் கோவலனுக்கு விளக்கு என்று சொன்னாள் என்று கொள்வதே சரி. இந்த வகையில்  தோழி என்பவளுக்கு காதலர்களிடையில் நடைபெறுபவற்றில் மறைப்பதற்கு என்று எதுவும் இருந்ததில்லை, அதாவது தோழியைப் பற்றி நாம் மேலே குறிப்பிட்டவாறு தலைவனைப் பொறுத்தவரை தலைவியும் தோழியும் ஓர் ஒன்றியாகவே விளங்கினர், அதாவது வரவாயினும் இழப்பாயினும் இருவரையும் ஒன்றாகவே பாதித்தன என்று தெரிகிறது.

9.   மாலையைக் கொண்டு சென்ற வசந்தமாலை கூலத்தெருவில் கோவலனைக் கண்டு அவனிடம் அளிக்கிறாள். கூலக்கடைத் தெருவில் கடைவைத்திருந்தானா கோவலன்? இருக்கக் கூடும். இதை உரிய இடத்தில் அலசுவோம்.

10.  மடலை வாங்கிய கோவலன் விடையாகக் கூறிய வரிகள் தமிழக கலைக் கட்டமைப்பில் ஒரு முகாமையான தொகுப்பைத் தருகிறது. ஏற்கனவே வரிக் கூத்துகள் என்று நூற்றுக்கும் மேலே ஒரு பட்டியலை அரங்கேற்றுக் காதையில் உரையாசிரியர்கள் தொகுத்துத் தந்துள்ளதைப் பார்த்தோம். இங்கு வரிக் கூத்துகளின் இன்னொரு பட்டியலைப் பார்க்கிறோம். அகராதிகளில் இந்தப் பகுதியில் அடிகள் தந்துள்ள அதே வரிகளைத்தான் ஏறக்குறைய தந்துள்ளார்கள். இவை பற்றிய முந்திய இலக்கணக் குறிப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை போலும். அதிலிருந்து பண்பாட்டுச் செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கும் இளங்கோவடிகளின் பணி பற்றி நம் மேலே கூறிய கருத்தின் உண்மை புலப்படும். அந்த வரிக் கூத்துகளின் விளக்கம்:        

      1.கண்கூடுவரி         :   ஒருவர் நின்றிருக்க மற்றவர் அவருக்கு எதிரிட்டு வந்து அவர் கண்களை நேருக்கு நேர் சந்தித்து நிற்கும் நிலை.
      2.காண்வரி             :   முகத்தைப் பார்க்காது வந்தவாறே செல்லுதல்.
      3.உள்வரி                :   தன் உருவத்தை மறைத்து மாற்றுருக் கொள்ளுதல்.
      4.புறவரி                  : உள்ளே வந்து காட்சி தராமல் புறத்தே நின்று உரையை மட்டும் நிகழ்த்துதல்.
      5.கிளர்வரி               :  நேருக்கு நேர் பேசாமல் இன்னொருவரை இடையில் வைத்து அவர் மூலம் பேசுதல்.
      6.தேர்ச்சி வரி           :  ஒரு குறிப்பிட்ட சூழலில் தனக்கும் அதற்கும் உள்ள உறவையும் அதனோடு தனக்குள்ள பட்டறிவையும் நினைத்து நினைத்து உரைத்தல்.
      7.காட்சி வரி            :  ஒரு சூழல் பற்றிய தன் உணர்வுகளைக் காட்சிப் படிவமமாக்கிக் காட்டுதல்.
      8.எடுத்துக்கோள்வரி:   எதிராளியை மீண்டும் மீண்டும் நெருக்கியும் மயக்கியும் தான் நினைப்பதை முடித்துக் கொள்ளுதல்.

வை பொதுவான நடிப்பு உத்திகள். இவற்றைக் காதலியாகிய மாதவி காதலனான கோவலனிடம் தன் நடிப்புகளின் ஒரு பகுதியாகத் தன் காதலைக் காட்டுவது போன்று நடித்து ஏமாற்றினாள் என்று கோவலன் வசந்தமாலையிம் கூறியதாக இளங்கோவடிகள் நமக்குத் தருகிறார்.

மேலே கூறியவற்றை பொதுவான நடிப்பு உத்திகள் எனக் கொள்ளாது காதலன் காதலிகளுக்கிடையிலான உறவு தொடர்பான நடிப்புகள் என்ற கருத்திலேயே உருவாக்கப்பட்ட மேற்கோள் செய்யுள்களை வேங்கடசாமியார் தந்துள்ளார். அவை: (1) கண்கூ டென்பது கருதுங்காலை, இசைப்ப வாராது தானே வந்து, தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப, (2) காண்வரி யென்பது காணுங்காலை, வந்த பின்னர் மனமகிழ் வுறுவன, தந்து நீங்குந் தன்மைய தாகும், (3) உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவங் கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே, (4) புறவரி யென்பது புணர்க்குங் காலை, இசைப்ப வந்து தலைவன் முற்படாது, புறத்துநின் றாடி விடைபெறு வதுவே (5) கிளர்வரி யென்பது கிளக்குங் காலை, ஒருவ ருவப்பத் தோன்றி யவர்வாய், இருபுற மொழிப்பொருள் கேட்டுநிற் பதுவே, (6) தேர்ச்சி யென்பது தெரியுங் காலை, கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன் பட்டது முற்றது நினைஇ யிருந்து, தேர்ச்சியோ டுரைப்பது தேர்ச்சிவரி யாகும், (7) காட்சிவரி யென்பது கருதுங் காலைக், கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப், பட்டது கூறிப் பரிந்துநிற் பதுவே, (8) எடுத்துக் கோளை யிசைக்குங் காலை, அடுத் தடுத் தழிந்து மாழ்கி யயலவர், எடுத்துக்கோள் புரிந்த தெடுத்துக் கோளே.        

அபிதான சிந்தாமணியும் தமிழ் மொழியகராதியும் இந்த நடிப்பு வகைகளைக் காதலன் காதலிகளுக்கிடையில் நடப்பவையாகவே காட்டுகின்றன. இவ் விளக்கங்களைப் பார்க்கும் போது பாட்டு, கூத்து என்பவற்றைத் தவிர்த்து  நடிப்பு என்பதும் வரி என்ற தலைப்பின் கீழ் வரும் என்பதை இளங்கோவடிகள் மூலமே தமிழ் இலக்கியம் சார்ந்த பண்டை ஆய்வாளர்கள் அறிந்தனர் என்பது தெரிகிறது. ஆடல் மகளே ஆதலின் ஆயிழை பாடுபெற் றனவப் பைந்தொடி தனக்கென என்று கோவலன் வாய்மொழியாக வரும் அடிகளின் கூற்று அது கூத்து சார்ந்த ஒன்றுதானோ என்றொரு மயக்கத்தைத் தரக்கூடும். ஆனால் மாதவி ஆடும் நாடகக் கூத்துகளில் நடிப்பே சிறப்பிடம் பெறுவதால் அவற்றில் வரி என்ற ஒருவர் நடிக்கும் நடிப்புகளை இங்கு சுட்டுகிறார். இவற்றில் இருவர் இடம்பெற்றாலும் ஒருவர் பெரும்பாலும் வாளாதிருக்க மற்றவர் மட்டுமே செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் நமக்கு ஆர்வமுட்டுவன இறுதியில் வரும் தேர்ச்சிவரியும் காட்சிவரியும் எடுத்துக்கோள்வரியுமாகும்.

இவற்றுள் முதலாவதாகிய தேர்ச்சி வரி பற்றிய வரிகள்:
                  பிரிந்துறை காலத்துப் பரிந்தன ளாகி
                  என்னுறு கிளைகட்குத் தன்னுறு துயரம்
                  தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி....      

இதில் என்னுறு கிளைக்கு என்பதற்கு எனது மிக்க கிளைகளாயினார்க்கு என்று வேங்கடசாமியார் பொருள் கூறியுள்ளார். உறு கிளையினர் யாவர்? கோவலனின் நெருங்கிய கிளையினர் என்றால் அவனது பெற்றோரும் மனைவியும். மாதவி கோவலனது பெற்றோரிடம் சென்று மன்றாடியிருக்க முடியாது, ஏனென்றால் கொலைக்களக் காதையில், அவன் தன்னைப் பிரிந்திருந்த காலத்தில்,
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவிகந் தன்னா
அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ
ஏற்பா ராட்ட யானகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்த .......
அதாவது கோவலன் பிரிந்ததற்காக குடும்பப் பெண்களுக்கு இருந்த, வீட்டுக்குள் மட்டும் அடங்கிய சிலவாகிய என் குமுகச் செயற்பாடுகளையும் நான் இழந்து நிற்பதைப் பார்த்து உன் தாயும் தந்தையும் என் மீது அன்பையும் இரக்கத்தையும் காட்டிப் பாராட்ட அதற்கு மறுமொழியாக என் துன்பத்தைச் சொல்வது போன்ற என் சிரிப்புக்கு வருந்தினர் உன் பெற்றோர் என்று கூறுகிறாள். அப்படிப்பட்டவர்களிடம் மாதவி சென்று மன்றாடினால் அவர்கள் கோவலனை அவளோடு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கமாட்டார்கள் என்பது உறுதி. அப்படியான உறு கிளைகளில் எஞ்சியிருப்பவள் கண்ணகிதான். அவளிடம் மாதவி சென்றிருப்பாளா? காமக் கிழத்தி இல்லக் கிழத்தியைக் கண்டு அவளது கணவனைத் தன்னோடு விடுக்குமாறு கேட்டிருக்க முடியுமா? இது குறித்து தொல்காப்பியம் ஏதாவது சொல்கிறதா என்று பார்ப்போமா?
           
            கற்பியலில்தான் பரத்தையரைப் பற்றிப் பேசுகிறது தொல்காப்பியம். பரத்தையர் என்பது கற்பு வாழ்க்கை, அதாவது மணவாழ்க்கைக்குப் புறம்பான, புறமான உறவில் உள்ள பெண்ணைக் குறிப்பிடுகிறது. பரர் என்ற சொல்லுக்குப் பிறர் என்று பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி.
     
      தொல்காப்பியம் பொருளதிகாரம் நூற்பா 21 இல்

      தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் என்பதில் பரத்தை என்றதற்கு அயன்மை என்று பொருள் கூறுகிறது. அயன்மை என்பது ஊடுதல் வழி அவனை அலைக்கழித்தல் என்ற பொருளில் இங்கும் பரத்தை என்பதிலுள்ள பர அல்லது புறம் என்ற பொருளில் தமிழ்ச் சொல்லாகவே கையாளப்பட்டுள்ளது காண்க:

      மனைக் கிழத்திக்கும் காமக் கிழத்திக்கும் இடையிலான உறவு பற்றித் தொல்காப்பியம் விரிவாகவே பேசுகிறது. கற்பியல் நூற்பா 6,
                                       காமக் கிழத்தி தன்மகத் தழீஇ
                                       ஏமுறு விளையாட்டி றுதிக் கண்ணும் என்றும்                 
                                      
                                       அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
                                       காதல் எங்கையர் காணின் நன்றென என்றும்    
                                      
                                       தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
                                       மாயப் பரத்தை உள்ளிய வழியும் என்றும்
                                      
                                       காமக் கிழத்தி நலம்பா ராட்டிய
                                       தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என்றும்
      தலைமகளின் கூற்று பற்றி கூறுகிறது.
     
      நூற்பா 10,
                                       மறையின் வந்த மனையோள் செய்வினை
                                       பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் என்றும்      

                                       காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையில்
                                       தாய்போற் கழறி் தழீஇய மனைவியைக்
                                       காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்  என்றும்
     
      நூற்பா 32,
                                       தாய் போற் கழறித் தழீஇக் கோடல்
                                       ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப என்றும்
     
      நூற்பா 33,
                                       அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்
                                       மகன்தா யுயர்புந் தன்னுயர் பாகுஞ்
                                       செல்வன் பணிமொழி இயல்பாக லான என்றும்
     பொருளியல் நூற்பா 37,
                                       கற்பு வழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும்
                                       உள்ளத் தூ லுண்டென மொழிப என்றும்
      நூற்பா 38,
                                       கிழவோள் பிறள்கும் இவையெனக் கூறிக்
                                       கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள் என்றும்

      நூற்பா 39,
                                       தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும்
                                       மெய்ம்மையாக அவர் வயினுணர்ந்தும்
                                       தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே
                                       மலிதலும் ஊடலும் அவையலங் கடையே என்றும்
இவை அனைத்தும் மனைக்கிழத்திக்கும் காமக்கிழத்திக்கும் இடையில் ஊடாடிய பல்வேறு உறவு நிலைகளைக் கூறியதைக் கண்டோம். இவற்றில் பிறர் பற்றி வாயில் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அது குழந்தைகள் பற்றியனவே ஆகும்.

கற்பியல் நூற்பா 33இல் பரத்தைக்குப் பிறந்த கணவனின் ஆண் குழந்தை பரத்தை ஒருத்தியின் குழந்தையாகிவிடக் கூடாதே என்பதற்காக அவளைத் தன் ஓரகத்தியாக மனைவி ஏற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. மாதவிக்கு ஒரு குழந்தை இருப்பதை மதுரைக் காண்டத்தில் அடைக்கலக் காதையில்தான் அடிகள் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, மாதவி ஒரு கணிகை. ஆயிரத்தெண் கழஞ்சு பொன் தருவோருக்குத் தன்னை ஒப்படைக்கக் கடமைப்பட்டவள். ஆனால் அவள் தன்னை ஒரே ஆடவனுக்கு உரிமையாக்க விரும்புகிறாள், தில்லானா மோகனாம்பாள் கதைத் தலைவியைப் போல். அதற்காகவே அவள் கண்ணகியைக் கண்டு முறையிட்டு மன்றாடித் தன் நிலையை எடுத்துரைக்கிறாள். கோவலன் தன்னோடு இல்லை என்றால் 1000 கழஞ்சு பொன் தருவோருக்கு தான் படுக்கைத் துணையாக வேண்டிய அவலத்தைச் சொல்லி அவனைச் சந்திக்க இசைவு கேட்கிறாள். அவளைக் கண்டதும் ஒவ்வொரு முறையும் மனம் மாறி அவளுடன் சென்றுவிடுகிறான் கோவலன். உறுதியில்லா அவன் மன இயல்பைச் சுட்டித்தான் கொலைக் களக்காதையில் போற்றா ஒழுக்கம் புரீந்தீர் என்று சீறுகிறாள் கண்ணகி.
           
இவ்வாறு தான் கொடுத்த ஓலையை மறுத்த கோவலனின் செயலால் வருந்திய வசந்தமாலை நடந்தவற்றை மாதவிக்குச் சென்று உரைத்த போது மாலை வராராயினும் மாணிழை காலை காண்குவம் என்றாள். அதாவது காலை வருவார் என்று கூறவில்லை, காலையில் பார்ப்போம் என்றுதான் கூறினாள். காலையில் அவர் வருவார், அப்போது அவரை நாம் பார்க்கலாம் என்றும் பொருள் கொள்ளலாம், காலையில் சென்று நாம் அவரைப் பார்ப்போம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி ஆகியவை குறிப்பிடும் செய்தியையும் இனித் தொடர்வனவற்றையும் வைத்துப் பார்க்கும் போது மறுநாள் காலையில் நாம் சென்று கண்ணகியிடம் முறையிட்டு அவனைப் பார்த்து அழைத்து வருவோம் என்று கூறியதாகவே கொள்ள வேண்டும்.

கோவலன் பிரிந்து சென்று தான் தனியாக வீடு திரும்பிய பின் மாதவியின் செயல்களில் கலக்கம் இல்லை, தடுமாற்றம்தான் இருந்தது, எடுத்துக்காட்டாக, மடல் விடுக்க வேண்டுமே, அதற்கும் அவன் மசியவில்லை என்றால் நாளை காலை அந்தக் கண்ணகியின் முகத்தில் சென்று முழிக்க வேண்டுமே என்று. சரி, வேறுவழி? எனவேதான் பதற்றத்ததை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு மழலை மொழியில் பேசியபடியே ஒருவகை விளையாட்டாக அவள் மடல் எழுதியது போல் இளங்கோவடிகள் காட்டுகிறார்.

இன்னொரு முகாமையான செய்தியையும் இந்த “விளையாட்டு” வெளிப்படுத்துகிறது. கோவலனும் மாதவியும் இப்படி அடிக்கடி சண்டை(ஊடல்) விளையாட்டில் ஈடுபடுவதும் கோவலன் கண்ணகியிடம் வருவதும் மாதவி மடல் எழுதுவதும் அவன் அதைப் புறக்கணிப்பதும் அவள் நேரடியாக கண்ணகியைக் கெஞ்சிக் கூத்தாடி அவனை “மீட்டு”ச் செல்வதுமான நடைமுறையில் இதுவும் ஒன்று என்பதால்தான் மாதவியால் எவ்வகைக் கலக்கமும் இன்றி “விளையா மழலை”யில் விரித்தெழுதவும் கோவலன் மடலைப் புறக்கணித்ததும் நாளை காண்குவம் என்று உறுதிபடக் கூறவும் முடிகிறது. இந்த ஊடல் விளையாட்டால், அதாவது கண்ணகியைச் சுற்றி இவர்கள் இருவரும் அடிக்கடி நடத்திய ஒளித்து விளையாட்டால் கண்ணகியை எவ்வளவு புண்படுத்தியிருப்பர் என்பதை நினைத்துப் பாருங்கள்.

கண்ணகியின் தோற்றப் பொலிவை மனையறம்படுத்த காதையில் அவளிடம் நேரடியாகக் கூறிய கோவலன் மாதவியின் அழகை நேர் எதிரான ஒரு சூழலில் அவளது தோழியிடம் கூறுவதாக அடிகள் காட்டுகிறார் இக் காதையில்.
                                                                                 

0 மறுமொழிகள்: