26.11.15

திராவிட மாயை - 5


                                        தேசியப் போராட்டமும் மார்க்சியமும் 
இனி, வர்க்கப் போராட்டம் எனப்படும் வகுப்புப் போராட்டத்தைப் பார்ப்போம். வகுப்புப் போராட்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்ந்து கூறியவர் காரல் மார்க்சு. அவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய முதன்மையான முரண்பாடே முதலாளியர் - பாட்டாளியர்களிடையில் உள்ளதாகும். அன்று உலகையே ஐரோப்பா தன் முழு ஆளுமையினுள் கொண்டுவந்திருந்ததால் அங்கு எந்தப் புற முரண்பாடும் இல்லை. எனவே அன்று அங்கிருந்த முதன்மை முரண்பாடான அக முரண்பாடு அவர் கவனத்தை நிறைத்திருந்தது. இது ஒரு பக்கமென்றால் இயங்கியல் பருப்பொருளியம், வரலாற்றுப் பருப்பொருளியம் என்ற இரு கூறுகளைக் கொண்ட இயங்கியல் பருப்பொருளியம் என்ற மெய்யியலை அவர் முன்வைத்தார். இயற்கை, குமுகம், மனித சிந்தனை ஆகிய அனைத்தும் இயங்கியலாகச் செயற்படுகின்றன, அதாவது தமக்குள் என்றுமே உடன்பாடு காணாதவையான எதிர் இணைகளின் முரண்பாடுகளாலான இடைவிடாப் போராட்டமே மேற்கூறிய மூன்றையும் இயக்குகிறது; அதற்கு அடித்தளமாக விளங்குவது பருப்பொருள்; காலம் - இடம் என்ற வகைத்திணைகளில் பருப்பொருள் தன் இருப்பைக் கொண்டுள்ளது என்பது இயங்கியல் பருப்பொருளியம்.

            ஒரு குமுகத்தின் பண்பாடு என்பது அக் குமுகம் அக் காலகட்டத்தில் இருக்கும் விளைப்புப் பாங்கைப் பொறுத்துள்ளது என்பது வரலாற்றுப் பருப்பொருளியம். பண்பாடு என்பது உணவு, சமயம், ஆண் - பெண் உறவு, சட்டம் - நயன்மை, அறிவியல் - தொழில்நுட்பம், அரசியல், கலை - இலக்கியம், இறுதியில் இவை அனைத்தையும் தாங்கித் தானும் வளர்ந்து குமுகத்தையும் வளர்க்கும் திறனுள்ள மொழி. ஆனால் இவை அனைத்தும் அந்தக் குமுகம் வாழும் நிலம், அதன் சிறப்பான காலநிலை ஆகியவற்றைச் சார்ந்துதான் உள்ளன. மண்ணுக்கும் மழை - வெய்யிலுக்கும் ஏற்பத்தானே உணவு அமையும்? அந்த உணவின் அடிப்படையில் அதனை உருவாக்க வழிகாட்டிய மாமனிதர்களின் படிமமாகத்தானே கடவுள் இனங்காணப்படுகிறான். அம் மக்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, அதாவது யார் கையில் சொத்து இருக்கிறதோ அல்லது சொத்து என்று எதுவும் இல்லையோ அதற்கேற்பத்தானே ஆண் - பெண்ணின் உறவுநிலை அமையும்? சொத்துடைமையின் அடிப்படையில்தானே சட்டங்களும் நயன்மை நடைமுறைகளும் உருவாகும்? மக்களின் வளர்ச்சி நிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்பத்தானே அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கும். எடுத்துக்காட்டாக, நீராவியில் இயங்கும் விளையாட்டுக் கப்பல்கள் சீனத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்தன; ஆனால் அரேபிய வாணிகர்களின் கடல் மேலாளுமையை எதிர்கொள்ளத்தானே ஐரோப்பியர் அந்த விளையாட்டுக் கப்பலில் இருந்த தொழில்நுட்பத்தை பொருளியல் வினைப்பாட்டினுள் புகுத்தினர். நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் துணிகளில் அச்சிடப் பயன்படுத்திய மரக்கட்டை அச்சுமுறையைப் பயன்படுத்தித்தானே ஐரோப்பியர் நூல்களை அச்சிடத் தொடங்கினர். அரேபியரின் படையெடுப்புகளை முறியடிக்கவென்று தொடங்கிய போராட்டம் பண்டை நூல்களின் ஆய்வுக்கு இட்டுச் சென்றது; பண்டை எழுத்துகளையும் புதிதாக எழுதப்பட்டவற்றையும் மக்களுக்கு எடுத்துச்செல்லும் இன்றியமையாத் தேவையை நிறைவேற்றத்தானே அங்கு அச்சுப் புரட்சி நடந்தேறியது. பொருளியல் வளர்ச்சி நிலைக்கு ஏற்பத்தானே மனித உறவுகளும் அதிலிருந்து தோன்றும் உரிமை அடிப்படையிலான அரசியலும்(பதவி அரசியல் அதன் போலி) தோன்றுகின்றன. கலையும் இலக்கியமும் மேற்சொன்ன பல்வேறு வளர்ச்சி நிலைகளின் நேர்மறை - எதிர்மறை எதிரொளிப்பாகத்தானே உள்ளது?

            நம் நாட்டைப் பொறுத்தவரை, நம் மேல்தட்டினர் பெரும்பான்மை மக்கள் மீதுள்ள தங்கள் காட்டுவிலங்காண்டித்தனமான ஒடுக்குமுறைக்கு எந்தக் கேடும் வந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தகைய இழிவு வெளிப்படையெடுப்பாளர்களால் வந்தாலும் அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஏவல் செய்தனர், செய்கின்றனர். நாட்டு மக்களை ஒடுக்கி வைப்பதற்குப் பொருளியல் ஒடுக்கலையே அடிப்படையாகக் கொண்டனர் (காரை வீடு கட்டக் கூடாது, மண்கலங்களில்தான் சமைக்க வேண்டும், ஆடையால் உடலை மறைக்கக் கூடாது என்று பல வகைகளில். இன்றும் அது தொடர்கிறது, மறைமுகமாக, பல்வேறு வடிவங்களில்).

            பண்பாட்டால் தேங்கி நிற்கும் குமுகம் ஒரு புறக்காரணியின் தாக்கத்தால் தன் பண்பாட்டை உதறிக் கொண்டு தன்னை உயர்த்திக்கொள்ளும். எடுத்துக்காட்டு சப்பான். 19ஆம் நூற்றாண்டில் துறைமுகத்தை வாணிகத்துக்குத் திறந்துவிடும்படி அமெரிக்கா மிரட்டிய போது சிறிது பின்வாங்கி வருண அடிப்படையில் அமைந்த தன் குமுக அமைப்பைக் கைவிட்டு குமுக ஏற்றத்தாழ்வுகளைச் சட்டத்தின் மூலம் ஒழித்துக்கட்டி, இற்றைக் கல்வி மூலமும் முதலாளியப் பொருளியல் மூலமும் வளர்ந்து 20 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் சமமான நிலையில் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது.

            ஆனால் நம் ஆளும் கணங்களோ எந்தப் பகைவன் வந்தாலும் அவனுக்கு அடிபணிந்து செல்வார்களே அன்றி நாட்டு மக்களை மதித்து அவர்களை உயர்த்தி எதிரியை எதிர்கொள்வதைக் கனவிலும் நினைப்பதில்லை. வள்ளுவர், வெள்ளத் தனைய மலர்நீட்டம் என்றது போல் ஆட்சியாளர்கள், தங்களைத் தாங்கி நிற்கும் மக்களை எந்த மட்டத்தில் வைத்துள்ளார்களோ அதற்கு ஏற்பத்தான் உலக அரங்கில் அவர்கள் இருக்கும் மட்டம் அமையும். உலகில் இரண்டாம் பெரிய மக்கள் தொகை கொண்ட நம் நாட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் அயல்நாடுகளில் வெட்கப்படும் அளவுக்கு இழிவுபடுத்தப்படுவது இவர்கள் தம் நாட்டு மக்களை வைத்திருக்கும் நிலைக்கு ஏற்பத்தான்.

            மேற்சொன்ன அடிப்படையில் பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களை வரிசைப்படுத்தினார் மார்க்சு. சொத்துடைமை இல்லாத குக்குல(இனக்குழு)க் குமுகம், மிகுதிப் பண்டங்களை விளைப்பதற்குப் போர் அடிமைகளைப் பயன்படுத்திய அடிமைக் குமுகம், நிலத்தோடு பிணைக்கப்பட்ட கொத்தடிமைகளைக் கொண்ட நிலக்கிழமைக் குமுகம், அடுத்து முதலாளியக் குமுகம் என்று அன்றுவரை நிலவிய முகாமையான பல்வேறு குமுக அமைப்புகளை வரிசைப்படுத்திவிட்டு அடுத்து வரப்போவது பொதுமைக் குமுகம் என்று வரையறுத்து அதன் அமைப்பு, செயற்பாடு ஆகியவை எவ்வாறு இருக்கும் என்ற தோராயமான வடிவத்தையும் தந்தார்.

            இவ்வாறு வரிசைப்படுத்திய மார்க்சு முகாமையான இன்னொரு முடிவையும் வெளியிட்டார். மேலே குறிப்பிட்ட வரிசை முறையில் இல்லாமல், இடையில் ஒன்றோ பலவோ கட்டங்களினுள் நுழையாமல் அவற்றுக்கு அடுத்த வளர்ச்சிக் கட்டத்தினுள் நுழைய முடியாது என்பதுதான் அது.

            … And even when a society has got upon the right track for the discovery of the natural laws of motion – and it is the ultimate aim of this work, to lay bare the economic law of motion of modern society - it can neither clear by bold leaps, nor remove by legal enactments, the obstacles offered by the successive phases of its normal development. But it can shorten and lessen its birth pangs.- Karl Mark, Capital, Vol.Ⅰ P.20, Preface to the first German Edition, Progress Publishers, Moscow.

            ஒரு குமுகம் இயக்கத்தின் இயற்கை விதிகளைக் கண்டுபிடிப்பதற்கான சரியான தடத்தில் வந்தடைந்தாலும் - இவ்வாக்கத்தின் அறுதி நோக்கமே இற்றைக் குமுகத்தின் பொருளியல் இயங்குநிலையின் விதிகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதுதான் - தன் இயல்பான வளர்ச்சியின் அடுத்தடுத்து வரும் கட்டங்கள் தரும் தடங்கல்களை துணிச்சலான தாவுதல்களால் அப்புறப்படுத்தவோ சட்ட நிறைவேற்றங்களால் அகற்றவோ முடியாது. ஆனால், பேற்றுக்காலத் துடிப்புகளைக் குறைத்து காலநீட்சியைக் குறுக்க முடியும். - காரல் மார்க்சு, மூலதனம், மடலம் 1, பக்.20, செருமானியப் பதிப்பின் முன்னுரை, முன்னேறப் பதிப்பகம் மாசுக்கோ (ஆங்கிலப் பதிப்பு)

… The country that is more developed industrially only shows, to the less developed, the image of its own future.- Ⅰbid p.19

            தொழில்துறையில் கூடுதலாக முன்னேறிய நாடு குறைவாக முன்னேறிய நாட்டுக்கு அதன் சொந்த எதிர்கால வடிவத்தைத்தான் காட்டுகிறது. - அதேநூல், பக்.19

            அப்படித் திட்டவட்டமாகக் கூறிய மார்க்சே, பொதுமைக் கட்சியின் கொள்கை அறிக்கை நூலின் உருசியப் பதிப்பில்,

…. Now the question is: can the Russian obshchina(Village community), though greatly undermined, yet a form of the primeval common ownership of land, pass directly to the higher form of communist common ownership? Or, on the contrary, must it first pass through the same process of dissolution as constitutes the historical evolution of the West? - Manifesto of the Communist Party, Karl Marx, Frederick Engels, Progress Publishers, Moscow - 1977 P.12

            இப்போது இதுதான் கேள்வி: பெருமளவு சீரழிந்திருந்தாலும், நிலத்தின் உடைமையைப் பொதுவாகக் கொண்ட ஒரு முந்தியல் வடிவமாக விளங்கும் உருசிய ஊர்க் குமுகம் அப்படியே நேரடியாக பொதுமைப் பொது உடைமையின் உயர்ந்த வடிவத்துக்குக் கடந்து செல்ல முடியுமா? அல்லது மேற்கு உலகத்தின் வரலாற்றுத் திரிவாக்கத்தில் இடம்பெற்றவாறு கலைத்தல் நிகழ்முறையைத் தாண்டித்தான் செல்ல வேண்டுமா? பொதுமைக் கட்சியின் கொள்கை அறிக்கை, காரல் மார்க்சு, பிரடரிக் ஏங்கல்சு, முன்னேற்றப் பதிப்பகம், 1977பக்.12 (ஆங்கிலப் பதிப்பு)
           
            மார்க்சு வினையாடியது போன்று சிக்கலும் முகாமையும் உள்ள ஒரு துறையில் புதிதாகச் சிந்தித்துச் செயல்திட்டத்தை வடிவமைக்கும் எவரையும் அலைக்கழிக்கும் ஐயங்களும் குப்பங்களும்தாம் மேலே உள்ளவை. ஆனால் மார்க்சின் நேர்வில், நம் ஆன்மீகர்கள் கூறுவதுபோல் மூச்சை அடக்கி மூக்கை அல்லது கொப்பூழ் குழியை நோக்கி அமர்ந்திருந்தால் அது தெரியும், இது தெரியும் என்பதை அறிந்தோம், இன்னும் தொடர்ந்து சென்றால் கடவுளாகவே ஆகி விடலாம் என்பது போன்ற மனக்கட்டுமானத்தோடு இக் கேள்வி நின்றுவிடவில்லை. அன்று நிலவிய உண்மையான நிலைமைக்கு மாறாக, உருசியாவில் முதலாளியம் முற்றிவிட்டது என்று முடிவு செய்து பொதுமைப் புரட்சி செய்யக் கிளம்பிய லெனின், முதலாளியப் புரட்சிதான் முடிந்திருந்தது என்பதை ஏற்றுக்கொண்டது தெளிவாகிறது. பொடிப்பூரிய(Petty bourgeois)ச் செயல்திட்டம் என்று புரட்சிக்கு முன்பு ஒரு காலகட்டத்தில் தான் வசைபாடிய, நிகர்மைப் புரட்சியாளர்கள் (Socialist Revolutionaries) முன்வைத்த முதலாளியப் புரட்சிக்கு முன்னோடியாகத் தக்க நிலச்சீர்த்திருத்தத் திட்டத்தை புரட்சி முடிந்த உடனே லெனின் ஏற்றுக்கொண்டதிலிருந்து மார்க்சு முதலில் கூறியதுதான் சரி என்பதை அவர் நடைமுறையில் ஏற்றுச் செயற்பட்டார் என்பது தெளிவாகிறது. இருந்த நிலைமையை மறைக்க முதலாளியத்திலிருந்து பொதுமை நோக்கிச் செல்லும் இடைநிலையான நிகர்மைப் புரட்சிதான் நடந்துள்ளது என்று லெனின் அன்று சப்புக்கொட்ட வேண்டியதாயிற்று. முதலாளியப் புரட்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு நேரத்திலும் இது நிகர்மைப் புரட்சி நடந்தேறுவதற்கு இன்றியமையாதது என்று மந்திரம் போட வேண்டியதாயிற்று. இதைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகளும் கட்சியினரும் அதிகாரத்தைக் கையில் எடுத்துப் புரட்சியைத் தோல்விக்கு இட்டுச்செல்ல நேர்ந்தது.

            அது போலவே தெள்ளத் தெளிவாக, நிலக்கிழமைக் குமுகமாக இருந்த சீனத்தில் ஒன்றிய முன்னணி, அது இது என்றெல்லாம் கதைத்த மாவோவின் கதையும் அமெரிக்காவின் காலடியில் முடிந்தது.
           
இவ்வாறு, 20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு பெரும் புரட்சிகளும் நாம் மேலே கோட்சுட்டிய கருத்துதான், அதாவது உரிய பொருளியல் கட்டங்களுக்குள் நுழையாமல் எந்தக் குமுகமும் தாவிச் செல்ல முடியாது என்பது, சரி என்று மெய்ப்பித்துள்ளன. அதாவது மார்க்சின் கணிப்புகள், குழப்பங்களுக்கு நடைமுறை சரியான விடையை வழங்கியுள்ளது. மனக் கட்டுமானங்களையே அறுதி உண்மைகள் என்று அடித்துக் கூறும் நம் நாட்டுக் குண்டிலினிக் கோட்பாளர்களுக்கு மாறாக எந்தக் கோட்பாட்டுக்கும் நடைமுறைதான் அறுதித் தீர்ப்பைத் தரும் என்பது மார்க்சியம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

            நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் மார்க்சின் ஆய்வின் தொடக்க காலத்தில் உலகில் எங்கும் தேசியச் சிக்கல்கள் வெளிப்படவில்லை. எனவே அவர் அக முரண்பாடுகளுக்கே முதலிடம் கொடுத்தார். ஆங்காங்கே, பிற குமுகங்களுடன் உள்ள உறவை, அதாவது புற முரண்பாடுகளை, தான் இங்கு விளக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். விளைப்பு, பங்கீடு ஆகிய வாணிகம் ஆகியவற்றில் விளைப்பே எப்போதும் முதன்மைப் பங்கு ஏற்கிறது என்று இயங்கியலுக்கு எதிராகக் கூட கூறியிருக்கிறார். குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வட்டாரத்தில் நிலவிய நிலையைப் பொதுப்படுத்திக் கூறிய ஒரு நேர்வாகும் இது. ஏங்கெல்சு கூட சிலாவிய மக்களின் நிலை குறித்துப் பேசும் போது அவை வரலாற்றிலிருந்து அகன்ற தேசியங்கள் என்று கூறியிருக்கிறார்.

            ஆனால் அயர்லாந்து மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழுந்து இங்கிலாந்தில் அயர்லாந்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது இங்கிலாந்து தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய போது மார்க்சும் ஏங்கெல்சும் அதிர்ந்தனர். அயர்லாந்து தொழிலாளர்களுடன் இங்கிலாந்து தொழிலாளர்கள் இணைந்து பிரிட்டனின் ஆட்சியாளரை எதிர்த்துப் போராடி பாட்டாளியப் புரட்சியை முன்னோக்கி நகர்த்த வேண்டுமென்று அறிவுரை கூறவே அவர்களால் முடிந்தது. இதே பாடலாகத்தான் ஈழ விடுதலைப் போரின் எல்லாக் காலகட்டத்தின் போதும் இந்திய, மார்க்சியப் பொதுமைக் கட்சியின் நிலைப்பாடும் இருந்துள்ளது.

            உருசியப் புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில் உக்ரைன், போலந்து போன்ற தேசங்களில் தேசிய உணர்வுகள் வலிமை பெற்றிருந்தன. அவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் லெனினுக்கு ஏற்பட்டது. எனவே தேசியங்களின் பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்தீர்மானிப்புரிமை என்ற உறுதி மொழியை அவர் கொடுத்தார்.

            இற்றை வரலாற்றுக் கட்டத்தில் தேசிய எழுச்சி என்பது சாரத்தில், முதலாளியத்தினுள் புகுந்த ஒரு தேசத்தின் உரிமைக் குரல், புதிதாக உருவான முதலாளிய விசைகள் தமக்கு உரிய ஒரு சந்தையைக் கேட்டு நடத்தும் போராட்டம். நாம் மேலே குறிப்பிட்டது போல் ஒட்டுண்ணிகள் அல்லது பழமையாளர்கள் அதற்குக் குரல் கொடுத்தாலும் முதலாளிய விசைகள் அதற்குப் பின்னணியிலிருந்து மூலவிசையை வழங்க வேண்டும். தேசியப் பொருளியல் பற்றிய வெளிப்படையான கேள்விகளை அது பெரும்பாலும் எடுத்த எடுப்பில் முன்வைப்பதில்லை. வைத்தால் புதிய முதலாளிய விசைகள் களத்தில் நுழைந்து போட்டிக்கு வரும். அதனால்தான் காந்தி கைராட்டை, கதர்த்துணி என்றெல்லாம் திசைதிருப்பி, பனியாக்களுக்குப் போட்டியாக நாடு முழுவதும் அரும்பியிருந்த முதலாளிய முளைகளைக் கிள்ளி எறிந்து புதிதாக உருவாகத் தக்கனவற்றையும் கருவறுத்தார்.

            உருசியாவில் போராட்டங்களைத் தொடங்கியிருந்த தேசங்களும் முதலாளியம் அரும்பிய நிலையிலிருந்தவைதாம். அங்கு மாருசியா எனப்படும் முதன்மைப் பகுதி நீங்கலாக பிறவற்றிலுள்ள நிலங்கள் பெரும்பாலும் மாருசிய நிலக்கிழார்களாகிய மேட்டுக்குடியினருக்கு உரிமையானவை. அவற்றில் அந்தந்த தேச மக்கள் உழுகுடிகளாக இருந்து குத்தகைப் பயிரிட்டு வந்தனர். அவர்களுக்குத் தாங்கள் உழும் நிலங்களைச் சொந்தமாக்குவதாக அளித்த வாக்குறுதியால்தான் அவர்கள் புரட்சியில் பங்கேற்றார்கள். ஆனால் அங்கு முதலாளிய விளைப்புமுறை உருவாகாமல் லெனினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் கூட்டுப் பண்ணைகள், கூட்டுறவுப் பண்ணைகளை உருவாக்கி அதிகாரிகள், கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இவ் விசைகள் நம் நாட்டில் போல் கட்டற்று ஊழல் விளையாட்டில் திளைத்தன. அதன் தொடர்விளைவுதான் மூட்டை அவிழ்ந்த நெல்லிக்காய் போல் சோவியத் ஒன்றியம் சிதறிப்போனது.

            அத்துடன் நிலையாக எங்கும் குடியமராமல் நாடோடிகளாகத் திரிந்த மக்களைக் கொண்ட நிலப் பரப்புகளும் அங்கு இருந்தன. அவர்களைக் குடியமர்த்தி பொருளியல் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தது சோவியத் அரசின் அருஞ்செயல்களில் ஒன்று. இரண்டாம் உலகப் போரின் போது செருமானியப் படைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மேற்கிலிருந்த பெரும்பெரும் தொழிற்சாலைகளை அப்படி அப்படியே பெயர்த்தெடுத்து நாடோடி மக்கள் குடியமர்ந்த கிழக்குப் பகுதிகளில் நிறுவியதால் புதிதாக மூளைத்தெழுந்த பொருளியல் வளர்ச்சி அப்பகுதிகளில் தேசிய உணர்வுகளை முடுக்கிவிட்டன.

            எழுத்தோ இலக்கணமோ இன்றி இருந்த நாடோடி மக்களின் மொழிகளுக்கு அவற்றை வழங்குவதற்கு சோவியத் அரசு உருசிய மொழி எழுத்துகளைப் புகுத்துவதாகத் தொடங்கி, ஏற்கனவே எழுத்திருந்த மொழிகளும் உருசிய மொழி எழுத்துக்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தபோது வெடித்த போராட்டங்களும் அதில் வடிந்த மக்களின் குருதியும் சோவியத்துச் சிதறலின் பின்னணியிலிருந்த முகாமையான காரணங்களில் மற்றொன்று.

            எனவே தேசியப் போராட்டம் என்பது பொருளியல் நோக்கில் ஒரு முதலாளியப் புரட்சி. இங்கு வகுப்புப் போருக்கான எந்தக் கூறும் இருக்க முடியாது. மாறாக, இருக்கும் அக முரண்பாடுகளில் பகை முரண்பாடுகள் நீங்கலாக பிறவற்றை அகற்றும் முனைவுகளே முன்னிற்கும்.

0 மறுமொழிகள்: