தமிழகத்தில் 'வந்தேறிகள்'
தமிழகத்தில்
‘வந்தேறிகள்’
குமரிமைந்தன்
தமிழகத்தில்
வந்தேறிகள் பற்றி அண்மைக் காலமாக அதிகமாகப் பேசப்படுகிறது. ‘தமிழ்த் தேசியம்’
பேசும் ஒரு சிறு குழுவின் முணுமுணுப்பாக இருந்த இந்த கோட்பாடு இப்போது ‘தமிழ்த்
தேசியப் புரட்சியாளர்’ திரைப்பட இயக்குநர் திரு.சீமான் அவர்களால் அனைவரும் அறியும்
வகையில் உரத்துக் கூறப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட முணுமுணுப்பைத் தொடங்கிவைத்தவர்
வெங்காளூரைப் பிறப்பிடமாகக் கொண்டு அங்கே வாழ்ந்துவரும் குணா என அறியப்படும்
குணசீலன் என்பவர். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் மூலம் இதைத்
தொடங்கிவைத்தார். அதில் நான் எழுதிய தமிழ்த் தேசியம் என்ற இதுவரை
அச்சேறாத கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை பெரியாரைத் திறனாய்வதற்காக மேற்கோளாகக்
காட்டியிருந்தார். பார்ப்பான் – பனியா என்று அடிக்கடி கூறும் பெரியார்
பனியாக்களின் பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராக உருவாக்கப்பட்ட நயன்மைக் கட்சி
எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (இந்தப்
பெயர் மொழி, மதம், இனத்தின் பெயரால் அமைந்ததல்ல, நிலத்தின் பெயரால் அமைந்தது
என்பதைப் பார்க்க.) பெயரை தமிழர் கழகம் என மாற்றுவதாகச் செய்திருந்த
முடிவுக்கு மாறாக, தன்னைத் தமிழகத்தின் பட்டிதொட்டிகளினுள் அறிமுகம் செய்து வைத்த
உ.பு.அ.சவுந்திரபாண்டியனார், கி.ஆ.பெ.விசுவநாதம், திரிகூடசுந்தரம் முதலான மூத்த
தலைவர்களை ஏமாற்றி திராவிடர் கழகம் என்று மாற்றுவதாக
அண்ணாத்துரையைக் கொண்டு தீர்மானத்தை அறிமுகம் செய்து தமிழகத்தின் மீது
நிகழ்த்தப்படும் பனியாக்களின் பொருளியல் சுரண்டலிலிருத்து மக்களின் கவனத்தைப்
பார்ப்பனர்களின் சாதிய, அரசுப் பதவிகளில் ஆதிக்கம் ஆகியவற்றின் மீது திருப்பி
தமிழகத்தின் பொருளியல் சிக்கலை கற்கனையான ஆரிய – திராவிட இன, சாதிச் சிக்கல்களாக,
அதைப் பெரிதுபடுத்தி பனியாக்களிடமிருந்தும் இவர் தாக்குதல் நடத்திய பிறரிடமிருந்தும்
ஆதாயங்கள் பெற்றும் வாழ்க்கையில் 125 கோடி உரூவாக்களைச் சேர்த்தார் என்பது என்
குற்றச்சாட்டு. ஆனால் பெரியாரும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் கன்னடர்கள்,
தெலுங்கர்கள் என்பதால்தான் தமிழகத்துக்கு இரண்டகம் செய்தனர் என்பது குணா முன்வைக்கும்
குற்றச்சாட்டு. ஆனால் உண்மை என்னவென்றால் பெரியாருக்கு பண வெறி என்ற மனநோயும்
அண்ணாத்துரைக்கு எப்படியாவது தமிழகத்தின் முதலமைச்சராகி விடவேண்டுமென்ற வெறியும்
கருணாநிதிக்கு தனக்கு இயற்கையாக வாய்த்த திறன்களைப் பயன்படுத்தி உலகின் அனைத்து
இன்பங்களையும் தானும் நுகர்ந்து தன் பிறங்கடை(வாரிசு)யினருக்கும் விட்டுச் செல்ல
வேண்டும் என்ற வெறியும்தானே ஒழிய தான் என்பதற்கு வெளியே ஏதோ ஒரு குழுவினரின் நலன்
பற்றிய ஆர்வம் இருந்தது என்பது அவர்களுக்குத் தகுதியில்லாத ஒரு பெருமையைக்
கொடுப்பதாகும்.
குணாவின் நிலைப்பாடு என்னவென்றால்
மார்வாரி, குசராத்திகளாகிய அம்மண சமயம் சார்ந்த பனியாக்கள்தாம் தமிழகத்தின்
மூலக்குடிகள் என்பதும் மற்றோரெல்லாம் வந்தேறிகள் என்பதுமாகும். ஆடையின்றி தங்கள்
மயிரைத் தாங்களே பிடுங்கிக்கொண்ட மனம் பேதலித்த கூட்டமான ஆசீவகர்கள் எனப்படும்
அம்மண சமய்ப் பிரிவினர் தமிழர்களாம், இவர்களை அம்மண சமயம் ‘உட்செரித்து’க்கொண்டதாம்.
இப்படிச் சொல்லி தமிழகம் அம்மண சமய பனியாக்களுக்கு உரியது என்கின்றனர் குணாவின்
பற்றாளர்கள். பெரியாரை விடப் பல படிகள் உயர்ந்துவிட்டார் ‘ஆய்வறிஞர்’ குணா.
ஒரு மாவோயியராக இருந்த குணா தனது
நடவடிக்கைகளுக்காக அவர் வேலை பார்த்த ஏம(ரிசர்வு) வங்கியிலிருந்து பணிநீக்கம்
செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலை எழுதியதால், அப்போது ஆட்சியிலிருந்த
செயலலிதாவின் அரவணைப்பிலிருந்த வீரமணியின்(ஆட்சியாளர்களுக்கு இணக்கமாக
நடந்துகொள்வது பெரியாரின் வழி – ஆச்சாரியார், அதாவது இராசாசி, பக்தவச்சலம்
நேர்வுகள் தவிர, ஏனென்றால் அவ் விருவரும் இவரது பரிந்துரைகளுக்கு
மதிப்பளித்ததில்லை) தூண்டுதலால் சிறையிலிருந்த காலத்தில் இந்த வந்தேறிக்
கோட்பாட்டை பல நூற்றுக்கணக்கான நூல்கள், கட்டுரைகளை மேற்கோள் காட்டி(பக்கத்துக்கு சராசரி
4 மேற்கோள்களுக்கும் மேலே – பெரும்பாலும் வெளிநாடுகளில் பணம் பெற்று எழுதப்படும்
நூல்களின் தரம் மேற்கோள்களின் எண்ணிக்கையைக் கொண்டே முடிவுசெய்யப்படுகின்றன)
வளர்த்தெடுத்தார். விடுதலை இறையியல் என்ற கிறித்துவ அமைப்பின் அனைத்து உதவிகளுடன்
அவரது நூல்கள் தொடர்ந்து வெளிவந்து இந்த வந்தேறிக் கோட்பாட்டை விதைத்தன. மாவோவின்
பெயரால் உருவாக்கப்பட்ட மாவோயியம் எனப்படும் கோட்பாடு சோவியத்தின்
தாலின் மரணத்துக்குப் பின் அங்கு உருவான தலைமைக்கும் மா சே துங்குக்கும் இடையில்
நிகழ்ந்த போட்டியில் அமெரிக்க நிக்சன் – கிசிங்கர் குழுவுடன் இணைந்து உருவான
கூட்டணியில் வடிக்கப்பட்டதாகும். உள் முரண்பாடுகள்தாம் எப்போதும் முதன்மை
முரண்பாடு என்பதையும் பொருளியல் வளர்ச்சி என்பதும் முதலீடு என்பதும் சுரண்டலுக்கு
வழி வகுக்கும் என்பதாகவும் வெறும் பொருளியல் மாற்றம் குமுகக் கட்டமைப்பை மாற்றாது
என்பதாகவும் நேரடியான பண்பாட்டுப் புரட்சிதான் மாற்றத்துக்கு வழி என்பதாகவும்
மாவோயியத்தை வகுத்து ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் முன்னால் ஏழை நாடுகளின் படித்து
வேலை கிடைக்காமல் வெறுப்புற்றிருந்த இளைஞர்களின் மூளைகளினுள் அமெரிக்க நடுவண் உளவு
முகவாண்மையால்(ந.உ.மு. – சி.ஐ.ஏ.) செலுத்தப்பட்டது. அவர்களுக்கு ஆயுதங்களும்
வழங்கப்பட்டு தத்தம் வட்டாரத்திலுள்ள பணக்காரர்கள் மீது ஏவி விடப்பட்டனர். அவர்களை
அரசுகளின் காவல்துறையும் பல்வேறு படைகளும் சுட்டுத்தள்ளின. ஆக, ‘வளரும்’ நாடுகளின்
திறனும் முற்போக்குச் சிந்தனையும் பொதுநல நோக்கும் கொண்ட ஓரு தலைமுறை இளைஞர்கள்
தெருக்களில் நாய்கள் போல் சுட்டுக் கழிக்கப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கை கொண்டது
இலங்கை. இலங்கைப் படையினர் இக் கொலைகளை நிகழ்த்திய போது இந்தியாவின் இந்திரா ‘தன்’
படைகளை அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தியிருந்தார் என்பது பின்னர் கசிந்த செய்தி.
அதைப் போல் பெருமளவில் அழிவைச் சந்தித்தோர் பெருவில் ஒளிரும் பாதை
என்ற பேரியக்கத்தைச் சார்ந்தோர்.
ஆயுதம் தாங்கியோர் தவிர ‘அறிவு சீவி’கள்
என்று ஒரு கூட்டம் உண்டல்லவா? அவர்களையும் இந்தத் ‘திருப்பணி’யில் இணைத்துக்கொள்ள
வேண்டாமா? அவர்களுக்கு இதழ்கள் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு பெருமளவில் பணமும்
வழங்கப்பட்டது. அவர்களது பணி பாட்டாளியக் கோட்பாடு என்ற பெயரில் மாநிலங்களினுள்
தேசியப் பொருளியல் விசைகள் தலை தூக்கிவிடாமல் கருத்துப் பரப்பல் செய்வது.
அப்பப்பா! எத்தனை இதழ்கள்! அமெரிக்கப் பணத்தில் நடந்த இந்த இதழ்கள்
அமெரிக்காவுக்கு எதிராகக் கருத்துப் பரப்பப் பணிக்கப்பட்டிருந்தன.
அப்படியானால்தானே அவர்கள் பரப்பும் பாட்டாளியக் கோட்பாட்டின் மீது இதழ்
நடத்துவோருக்கும் படிப்போருக்கும் நம்பிக்கை வரும். இவற்றை நெறிப்படுத்தியோர்
சென்னை லயோலாக் கல்லூரிச் சாமியார்களும் மதுரை இறையியல் கல்லூரி மதகுருக்களும்
ஓரளவுக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியும்.
வேண்டிய அளவில் கருத்துகள் சென்று சேர
வேண்டிய இலக்குகளைச் சென்றடைந்ததும் இதழ்களுக்கு வழங்கிய பணத்தை நிறுத்தியது
அமெரிக்கா. இந்தப் பணத்தை நம்பி திருமணம் செய்து பிள்ளை குட்டி என்று நிலைத்து
அரசு வேலைக்குத் தகுதியான அகவையைத் தாண்டிய இதழ்களை நடத்தியோர் செய்வதென்னவென்று
தெரியாமல் திகைத்துத் தடுமாறி நின்றனர். அதனாலென்ன என்று அங்கும் கைகொடுக்க வந்தது
அமெரிக்கா. எண்ணற்ற ‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை’த் தொடங்க பணத்தை அள்ளி
வீசியது. உள்ளூர் மக்களுக்கு உதவும் நிறுவனங்களை உருவாக்க அவர்கள்
அறிவுறுத்தப்பட்டனர். இதற்கான திட்ட அறிக்கைகளில் அந்தந்தப் பகுதி மக்களின்
பண்பாடு, தொழில், இயற்கை வளம், மக்கள் குழுக்கள், அவற்றுக்கிடையிலுள்ள உறவுகள்
உட்பட்ட அனைத்து செய்திகளும் திரட்டித்தரப்பட்டன. இவர்களை தென் மாவட்டங்களில்
ஒருங்கிணைக்கத் தொடங்கப்பட்டதுதான் போர்டு அறக்கட்டளையின் உதவியுடன் பாளையங்கோட்டை
தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுத்துறை. வேண்டிய புலனங்கள்
கிடைத்தவுடன் வழக்கம் போல் உதவி நிறுத்தப்பட்டது. பல்கலைக் கழகங்களுக்குப் பணம்
கொடுத்து தங்களுக்கு வேண்டிய துறைகளில் ஆய்வு செய்வதென்ற பெயரில் ஆய்வேடுகளை
உருவாக்கியும் தனி ஆய்வாளர்களை நேரடியாக விடுத்தும் தமக்கு வேண்டிய செய்திகளைச்
சேர்த்துக்கொண்டனர். இப்போது அமெரிக்கா நினைத்தால் நாட்டில் எந்த ஓர் ஊரிலும் ஒரு
கலவரத்தை உருவாக்கவோ அல்லது அங்குள்ள வளங்களை அள்ளவோ அங்குள்ள மக்களைக் கொண்டு
தனக்குத்தேவையான பண்டங்களைப் படைக்கவோ தேவையான புலனங்கள் அவர்கள் விரல் நுனியில். அனைத்து
ஏழை நாடுகள் குறித்தும் இதுதான் நிலை.
இப்படித் திரட்டப்பட்ட செய்திகளைத் தொகுத்து
வகைப்படுத்த வேண்டாமா? அதற்குத்தான் கணினிப் பொறியியல். சொந்த நாட்டிலும்
அமெரிக்காவிலும் அமர்ந்து இராப் பகலாக கணினிப் பொறியாளர்கள் செய்தது இந்த
வேலையைத்தான். அந்த வேலை முடிந்ததும்தான் இன்றைய வேலைவாய்ப்புப் பெருந்தேக்கம்.
புலன(தகவல்)த் தொழில்நுட்பம் படித்தவர்கள் நாளொரு வேலைவாய்ப்புத் தேர்வுக்கென்று
அலைந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் தெருவில் செல்லும் பெண்களின் தாலியை அறுக்கப்
பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றனர். வேறெந்தத் திறனையாவது நமது கல்வி முறை
வளர்த்திருக்கிறதா சொல்லுங்கள்!
அடுத்து விடுதலை இறையியல் பற்றிப்
பார்ப்போம். கிறித்துவ மக்களிடையில் பாட்டாளியக் கோட்பாட்டைக் கொண்டு செல்வது என்ற
நோக்கத்தை முன்வைத்து கத்தோலிக்கத் தலைமையகத்தால் இது தொடங்கப்பட்டதாகத்
தோன்றுகிறது. தொடக்க காலத்தில் குமரி மாவட்ட மீனவர்களிடையில் மதகுருக்களுக்கு
எதிரானது போல் இது உருவெடுத்ததையும் கிறித்துவரல்லாத சிலரும் அதில் ஆர்வம் காட்டியதையும்
நான் அறிவேன். பின்னர் சிறிது சிறிதாக அவர்களை கடல் சார் பழஙகுடிகள் என்றும்
மலைகளுக்குச் சென்று இங்குள்ள ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு
நலப்பபணிகள் என்ற பெயரில் உதவிகள் செய்து அவர்களை மலைசார் பழங்குடிகள் என்றும்
பெயர் சூட்டி உள்நாட்டு மக்களிலிருந்து பிரிவினை மனப்பான்மையை வளர்த்தனர். இது பொல
ஆப்பிரிக்காவில் ஏற்கனவே குக்குல(பழங்குடி)ப் பண்பாட்டைத் தாண்டாத மக்களிடையில்
குக்குலப் பகைமையை வளர்த்து கும்பல் கும்பல்களாக ஒருவரை ஒருவர் ஒழித்துக்கொண்ட
சண்டைகளைத் தூண்டிவிட்டு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் தொகையைக் குறைத்தது இந்த
விடுதலை இறையியல் கூட்டம்தான்.
இவ்வாறு இந்த இரண்டு இயக்கங்களின்
பின்னணி கொண்ட குணா தமிழகத்தில் வந்தேறிகள் கோட்பாட்டை முன்வைத்ததில்
வியப்பொன்றுமில்லை. அத்துடன் அக முரணபாடே முதன்மையானது என்ற அடிப்படையில்
பார்த்தாலும் அது சரிதானே!
ஆனால் மாவோவின் பெயரில் வைக்கப்பட்ட
கோட்பாடுகளுக்கும் மாவோவுக்கும் எந்த உறவுமில்லை. முரண்பாடுகள் பற்றி….என்று
அவர் எழுதியுள்ள குறுநூலைப் படிப்போருக்கு இது எளிதில் விளங்கும்.
மாவோயியத்துக்கு மார்க்கசிய –
லெனினியக் கோட்பாடு என்றும் பெயர் சூட்டியுள்ளனர். ஒரு குமுகம் ஒரு
பொருளியல் கட்டத்திலிருந்து மேம்பட்ட இன்னொரு பொருளியல் கட்டத்துக்குள்
நுழைந்தாலும் அதில் பழைய பொருளியல் கட்டத்துக்குரிய பண்பாட்டுக் கூறுகள் கொஞ்ச
காலத்துக்குத் தொடரும் என்பது மார்க்சின் முடிவு. அதை மறைத்து நேரடியாகவே
பண்பாட்டுப் புரட்சி என்ற போகாத ஊருக்கு வழிதேட பணிக்கப்பட்டுள்ளனர் ‘வளரும்’
நாடுகளின் அனைத்து ‘அறிவு சீவி’களும் இளைஞர்களும். கிட்டத்தட்ட முற்போக்கு எண்ணம்
கொண்ட அனைவரின் மூளைகளிலும் கேடுதரும் இந்தச் சிந்தனை பதிக்கப்பட்டுவிட்டது.
குணா தொடங்கிவைத்த இந்த ‘கோட்பாட்டு’ப்
பின்னணியில் வந்தேறிகளை தமிழகத்தின் எதிரிகளாகக் காட்டி ‘உள் முரண்பாட்டு’க்குத்
தீர்வுகாணும் களப்பணியில் இறங்கியிருக்கிறார் திரு.சீமான்.
சீமான் தன் இயக்கத்துக்கு வைத்திருக்கும்
பெயராகிய நாம் தமிழர் என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. தினத்தந்தி
நாளிதழின் நிறுவனரும் ஆசிரியருமான சி.ப.ஆதித்தன் 1950களில் ஒரு நாள் திடீரென்று தி.மு.க.வுக்கு
வலிமை சேர்த்த நடிகராகிய ம.கோ.இராமச்சிந்திரன் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினார்.
அவரைக் கிழட்டு நடிகர் என்றும் அவரது கண்களின் கீழே சுருக்கம் விழுந்திருப்பதைப்
பாருங்கள் என்றும் தாடையில் சதை தொங்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் ஒரு மலையாளி
என்றும் தொடங்கியவர் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து
தமிழரான ஒரு நடிகர் என்று விசயபுரி வீரன் என்ற படத்தில் நடித்த
ஆனந்தன் என்ற நடிகரைத் தூக்கிப்பிடித்தார். தமிழர்களின் விளையாட்டு என்று சடுகுடு
விளையாட்டைப் பரவலாக்கினார். இன்று அது அப் பெயரை இழந்து கபடி என்று அனைவராலும்
அழைக்கப்படுகிறது.4444 நாம் தமிழர் கட்சியையும் தொடங்கினார். (சந்திரோதயம்
என்ற ம.கோ.இரா.வின் திரைப்படக் கதை கூட ஆதித்தனை மனதில் கொண்டுதான் கொடுமதியாளனாக
ஒரு தாளிகை உரிமையாளனைக் காட்டுகிறது.) அனைத்தையும் செய்துவிட்டு இறுதியில்
1967இல் தி.மு.க.வில் இணைந்து கூலியாக சட்டப்பேரவைத் தலைவர் பதவியைப் பெற்றார்.
அண்ணாத்துரை இறந்த பின் கருணாநிதியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றார். பேருந்துப்
போக்குவரத்துத் துறையில் டயர்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு
எழுந்ததாகவும் நினைவு. இப்படி நாளுக்கொரு நிலைப்பாடு எடுத்து இழிவுக்கு ஆளானவர்
ஆதித்தன்.
சீனத்தில் வாழ்ந்து சீனப் பின்னணியில்
புதினங்கள் எழுதிப் புகழ்பெற்ற புதின ஆசிரியர் பேழ் எசு பக்கு (Pearl S Buck) என்ற
பெணமணி எழுதிய கடவுளின் மனிதர்கள் (God”s Men) என்ற புதினத்தில் வரும் ஓர்
அமெரிக்கன் தன் தங்கையின் கணவனிடம் தான் நடத்தும் தாளிகையை முதலில் மக்களைக்
கவரும் வகையில் நடத்தி பெரும் எண்ணிக்கையிலானவர்களைப் படிக்க வைத்துப் பின்னர்
அவர்களுக்கு நலம் தரும் செய்திகளை ஊட்டி குமுகப் புரட்சி செய்யப் போவதாகக்
கூறுவான். ஆதித்தன் அரசியலில் ஆர்வம் காட்டிய காலகட்டத்தில் அவர் கூட இது போல் தன்
இதழ் மூலம் தமிழக மக்களுக்கு நல்லறிவூட்டி நல்வழிகாட்டக் கூடும் என்று நான் ஒரு
சிறு நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அப்படு எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் நல்ல
ஒரு தமிழ்நடை உருவாகிக் கொண்டிருந்த சூழலில் அதிகம் பேரைப் படிக்க வைத்துப் பணம்
ஈட்டும் ஒரு குறிக்கோள் அன்றி வேறு நோக்கம் எதுவும் இன்றி தமிழகப் பெருந்திரள்
மக்களின் சுவையுணர்வையும் பண்பாட்டு மட்டத்தையும் தாழ்த்துபவையாகத்தான் அவருடைய
இதழ்ப் பணியும் அரசியல் செயற்பாடுகளும் இன்று வரை அமைந்திக்கின்றன. எங்கும்
எப்பொழுதும் தமிழுக்கோ தமிழக மக்களுக்கோ இன்னல்கள் வரும் போது அவரோ அவரது இதழோ
உரக்கக் குரல் கொடுத்த நிகழ்ச்சி எதுவும் என் நினைவுக்கு வரவில்லை. தினமணி,
தினமலர் மட்டுமல்ல ஏறக்குறைய அனைத்து தமிழ் நாளிதழ்களும், நமக்கு
உவப்பாயில்லை என்றாலும், அவர்களுக்கென்று ஒரு குறிக்கோள், குறிப்பாக பார்ப்பன,
பார்ப்பனிய நலம் என்ற குறிக்கோளிலிருந்து என்றும் பிறழ்வதில்லை. ஆனால்
அன்றிலிருந்து இன்று வரை, நாம் தமிழர் இயக்கம் செயல்பட்ட ஒரு சிறு
காலகட்டம் நீங்கலாக கவர்ச்சிகரக் கூறுகளை(‘அம்சங்களை)க் கொண்ட விளம்பரத்
தாளிகையாகவே, விளம்பரங்களுக்கிடையில் காலியாக இருக்கும் இடங்களில் செய்திகளை இட்டு
நிரப்பும் ஒரு தாளிகையாகவே தினத்தந்தி விளங்குகிறது. இத்தகைய ஓர் இதழை
நடத்தி நல்ல ஆதாயமும் அமைச்சர் பதவி போன்றவற்றையும் பெற்ற ஒருவரை தமிழர்
தந்தை எனப் பட்டம் சூட்டிப் பெருமைப்படுத்துவது தமிழகத்தின் இன்றைய
இழிநிலையின் ஒரு அடையாளமே அன்றி வேறல்ல.
ஆதித்தன் எனும் இவர்களுடைய குடும்பப்
பெயர் ஒரு வேளை ஆதிச்சநல்லூரோடு தொடர்புடையதாக இருக்கலாம். முதல் கடற்கோளுக்குத்
தப்பி இந்தப் பகுதியில் தங்கியிருந்த சொழ மரபினரின் தொல்பொருள் எச்சங்கள்தாம்
அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தோன்றுகிறது. இரண்டாம் கடற்கோளுக்குப் பின்
இங்கு வந்த பாண்டியன் இவர்களை வடக்கு நோக்கித் துரத்தியிருக்கிறான்.
மலிதிலிரை
யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி
மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு
வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணங்கிய வாடாச்சீர்த்
தென்னவன் (முல்லைக்கலி 104: 1-4)
என்ற வரிகள் இதைத்தான் குறிப்பிடுகின்றன.
இந்த எச்சங்கள் காணப்படும் இடத்தை ஒட்டி ஓடும் தாமிரபரணி ஆற்றுக்கு சோழனாறு
என்று ஒரு பெயர் இருப்பதாக வி.கனகசபையார் தனது ஆயிரெத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு
முற்பட்ட தமிழகம் நூலில் கூறியுள்ளது இதை உறுதி செய்கிறது. (இது போலவே குமரி
மாவட்டத்தில் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தொலைவில் கூனாச்சிப்
பொட்டல் என்ற இடத்தில் கூனை எனப்படும் முதுமக்கள் தாழிகள் இருந்துள்ளன.
1945இல் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் இங்கு ஒரு வானூர்தித் தளம்
அமைக்க நிலத்தைச் சமன்படுத்திய போது அவை வெளிப்பட்டுள்ளன. போர் இன்னும் ஒரேயொரு
ஒரு நாள் தொடர்ந்திருந்தால் இன்றைய குமரி மாவட்டத்தில் வானூர்தி நிலையம் ஒன்று
வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே வந்திருக்கும். சப்பானியப் பாவிகள் பொறுத்திருக்க
முடியாமல் தஞ்சமடைந்து கெடுத்துவிட்டனர். ஆதிச்சநல்லூர் சோழன் பிடியில் இருந்தது
போல் இந்தப் பகுதி சேரன் பிடியில் இருந்திருக்கக் கூடும். இது பற்றிய விரிவை
விரைவில் வெளிவர இருக்கும் சாதி வரலாறுகளின் ஒரு பதம் – நாடார்களின் வரலாறு என்ற
எமது நூலில் காணலாம்).
முதற் கடற்கோளுக்குத் தப்பி வந்த
சோழர்களுக்கு உதவிய உள்ளூரார் என்ற வகையில் ஆதித்தன் எனும் சோழகுலத் தெய்வமாகக்
கருதப்படும் கதிரவனின் பெயரைப் பட்டப்பெயராக அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்,
அல்லது பேரரசுச் சோழர் காலத்தில் இராசராசன் படையெடுத்த போது காட்டிக்கொடுத்து இப்
பட்டத்தைப் பெற்றிருக்கலாம். ஆக, உயர் பக்கமாக 7500 குறைந்த பக்கம் 1000 ஆண்டுகள்
பழமை வாய்ந்ததாக இக் குடும்பப் பெயர் இருக்கலாம். குமரி மாவட்டம் வடசேரி சாலியர்
தெருப் பகுதியில் வஞ்சி ஆதித்தன் புதுத்தெரு என்ற பெயர் இருப்பதைப்
பார்த்தால் இரண்டாம் நேர்வை ஆதித்தன் குடும்பப் பெயருக்கான காரணமாகக் கொள்ளலாம்.
இவ்வாறு வரும் ஆட்சியாளர்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்து குறைந்தது ஆயிரம்
ஆண்டுகள் தம் நிலையைத் தக்க வைத்துக்கொண்டவர்கள் ஆதித்தன் மரபினர். அரியநாதர்
நாடுகளை அழித்துப் பாளையங்களை உருவாக்கிய காலத்தில் பாளையங்கோட்டைக்குத்
தெற்கிலுள்ள நிலப்பரப்பு கேரள அரசரின் கீழ் இருந்ததால் நாடான் என்ற இவர்களுடைய
பதவி நீடித்ததுடன் புதிய ஆட்சியாளருக்கு அடங்கிப் பணிபுரிய முன்வந்ததால், மலையாள
நம்பூதிரிகளை திருச்செந்தூர்க் கோயிலில் பூசகராக அமர்த்திய கேரள அரசர்கள் தேர்
வடம் பிடிக்கும் முதல் வரிசை(முதல் மரியாதை) உரிமையை ஆதித்தன் குடும்பத்தினருக்கு
வழங்கினர். (இவர்களின் குடும்ப உறவுகளை குமரி மாவட்டத்திலும் தடம் பிடிக்க முடிகிறது).
இவ்வாறு வந்தவர்களுக்கெல்லாம் மடி விரித்து தம் நிலையைத் தக்க வைத்துக்கொண்டது
ஆதித்தன் குடும்பம். தொடர்ந்த படையெடுப்பாளர்களுக்கு நாட்டைக் காட்டிக்
கொடுத்தவர்கள் ஒடுக்கும் சாதிகளாக உயர்ந்து நிற்க படையெடுப்பாளர்களுடன் காட்டிக்கொடுத்தவர்களின்
இணைந்த கூட்டணியை எதிர்த்து, எதிர்நிற்க முடியாமல் தப்பி இத் தென் பகுதிக்கு வந்து
அங்கு ஏற்கனவே இருந்த சாணார்களின் அடையாளத்தை ஏற்றுக் குடியேற, இருந்தவர்களையும்
வந்தவர்களையும் ஒரு சேர ஒடுக்கியவர்களே ஆதித்தன் குடும்பத்தினர். இந்தப்
பின்னணியில் ஆதித்தனின் கட்சியைக் கல்லறையிலிருந்து எழுப்பிக் கட்டியுள்ள
திருவாளர் சீமானின் இப் போக்கு நமக்கு வியப்பளிக்கவில்லை.
தமிழகத்தில் வடக்கிலிருந்து வந்தேறிகள்
காலங்காலமாகத் தாமே வரவில்லை. உள்நாட்டுப் பூசல்களில் போட்டியாளர்கள் கூட்டி
வந்தவர்களே மிகுதி. ஒரிசாவிலிருந்து ஓடி வந்த விசயனுக்கு தன் தமையனின் ஆட்சியைக்
கைப்பற்ற வேண்டுமென்ற வெறி கொண்ட தங்கையின் காட்டிக்கொடுப்பால் இலங்கையில்
நாகர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்படி ஆட்சியைப் பிடித்த விசயனுக்கு தானே
தங்கையை மணமுடித்துக்கொடுத்து சேரனோடுள்ள போட்டிக்கு வடிகாலமைத்தான் பாண்டியன்.
புகாரை அழிப்பதற்கு சிங்களக் கயவாகுவுக்கு வேண்டிய உளவுப் பணிகளை புத்தரான
சாத்தனார் மணிமேகலையுடன் இணைந்து செய்தார். இராசராசன், இராசேந்திரன் ஆகியோரின்
மகள்கள் வழி வந்த சாளுக்கியனான இரண்டாம் இராசேந்திரன் தமிழகத்தின் வலங்கை –
இடங்கைப் பூசலைப் பயன்படுத்தி ஐந்தொழிற் கொல்லர்களையும் உழவர்களையும் தன் பக்கம்
திருப்பி கலகத்தை ஏற்படுத்தி அதிராசேந்திரன் என்ற இராசராசனின் ஆண்வழி மன்னனைக்
கொன்று ஆட்சியைக் கைப்பற்றி 600 ஆண்டுகள் தமிழக மக்களை அரத்த வெறி பிடித்த வலங்கை
– இடங்கைச் சண்டை போட வைத்துத் தமிழகத்தைச் சீர்குலைத்தான். குலசேகர பாண்டியனின்
மக்களிடையில் நடைபெற்ற அரசுரிமைப் போட்டியில் மாலிக் காபூர் உள்ளே புகுந்து
மாபெரும் அழிமதிகளுடன் கொள்ளையும் அடித்துப் போனான். போர் நடுவே பாண்டியன்
படையிலிருந்த முகம்மதிய மதமாறிகள் கட்சி மாறி தாய் நாட்டுக்கு இரண்டகம் செய்தனர்.
நாயக்கர்கள் படையெடுத்து மதுரையில் ஆட்சியமைத்த போது பாண்டியர் ஆட்சி வலுக்குறைந்திருந்த
காலத்தில் மக்களுக்குக் கொடுமைகள் செய்த நாடுகள் என்ற ஆட்சி அலகுகளின் அதிகாரிகளான
நாடான் பதவியிலிருந்தோரை அகற்ற தமிழ் வெள்ளாளரான அரியநாத முதலியார் உதவினார்.
புதிதாக உருவான 72 பாளையங்களில் 30க்கும் மேற்பட்டவை மறவர் பாளையங்கள் என்பது
நாயக்கர்களுக்கு அவர்கள் உதவி, படையெடுப்பை எதிர்த்த மக்கள் மீதும் பிறர் மீதும்
மேலாளுமை பெற்றனர் என்பதற்குச் சான்றாகும். மருதிருவர் ஆங்கிலரை எதிர்த்து
தென்னிந்தியக் கூட்டணி அமைத்துப் போரிட்ட போது மறவர்களை அவர்களிடமிருந்து
பிரிப்பதற்கு ஒரு மறவர் தலைமை தாங்கி எதிர்த்ததால் மருதிருவரை எளிதில் வென்றனர் ஆங்கிலர்.
ஆக, தமிழக வரலாறு நெடுகிலும் அயலவர்க்கு நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்கள் ஒடுக்கும்
மேல் சாதிகளாகவும் வெளி எதிரிகளை எதிர்த்து நின்றோர் ஒடுக்கப்பட்டோராகவும்
மாறியுள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் காட்டிக்கொடுத்தோரின் வழி
வந்தவர்கள்தாம் தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையராகத் திகழ்கின்றனர். இவர்களின்
காட்டிக்கொடுப்பால் பஞ்சம் பிழைக்கவும் முகம்மதியர்களின் கொடுமைகள் பொறுக்காமலும்
ஏதிலிகளாக வந்த தெலுங்கு பேசும் மக்கள் இன்று ஆதிக்க சாதியினராகிவிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த சிவனிய வெள்ளாளர்கள் தமக்குள் இரு குழுக்களாக
மோதிக் கொண்டதில் வடக்கில் எங்கோ போரில் தோற்று ஓடி வந்த கொண்டாரெட்டிகள்
என்போருக்கு 18 ஊர்களைத் தருவதாக ஒப்பந்தம் பேசி போரில் ஈடுபடுத்த அவர்கள் பக்கம்
வெற்றி பெற்றதால் இன்று அவர்கள் அந்த வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குச்
செலுத்துவதுடன் இன்று உணவு விடுதித் தொழிலில் முன்னணியில் இருக்கின்றனர்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக தமிழகத்தை ஆண்ட
சேர, சோழ, பாண்டியர்களும் அவர்களுடன் கடற்கோளுக்குத் தப்பி வந்தவர்கள் அனைவரும்
இன்றைய தமிழகத்தைப் பொறுத்தவரை வந்தேறிகள்தாம். அப்போது தமிழகத்தில் வாழ்ந்த
மூலக்குடிகள் பாணர், துடியர், பறையர், கடம்பர் என்போர் என்று புறநானூற்று
335ஆம் பாடல் கூறுகிறது:
அடலருந்துப்பின் குரவே
தளவே குருந்தே முல்லை என்ற
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே அவரையொடு
இந்நான்கல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து
வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
அவர்களில் வலிமை மிகுந்தோர் பறையரும்
கடம்பருமாவர். கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் அவர்களுக்கும் வந்தேறிகளுக்கும் போர்கள்
நடந்துள்ளன. கி.மு.நான்காம் நூற்றாண்டளவில் கிரேக்கக் கடல் வாணிகர்களுடன் கூட்டுச்
சேர்ந்து சேர அரசர்கள் கடம்பர்களை இன்றைய கோவா ஆகிய கொங்கணத்துக்குத் துரத்திய
பின்தான் பறையர்களை அடிபணிய வைக்க முடிந்தது. இந்த நிகழ்வுகளை மறைக்கத்தான்
கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்களைக் கழகப் பாடல் தொகுப்புகளில்
சேர்க்காமல் விட்டிருக்கின்றனர் பாண்டிய வந்தேறிகள்.
பறையர்களின் வலிமை என்ன? அவர்கள் ஆற்று
வேளாண்மைக்கு முந்திய வளர்ச்சி நிலையில் இருந்தனர். மலையில் விளைந்து முளைத்து
மழைக் காலத்தில் அடித்து வரப்பட்டு ஆற்றுப் படிகைகளில் படியும் வண்டலில் வளர்ந்த
மலைநெல்லை வீட்டில் வளர்த்து ஆற்று வெள்ளத்தில் கரைத்து இயற்கையைப் போலச்செய்யும்
முளைப்பாரி முறைக் கட்டத்தில் அவர்கள் இருந்தனர். இந்த நெல்லை அவர்கள் தெய்வத்தின்
முன் தூவி வழிபடத்தான் பயன்படுத்தினர். வரகு, தினை, கொள், அவரை போன்ற தவசங்களையே
உண்டனர். மாடு வளர்த்து அதன் இறைச்சியை உணவாகவும் தோலைப் பதப்படுத்தி உலகின் பனி
மூடிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தனர். அதில் குவிந்த
செல்வம்தான் அவர்களை வெல்ல முடியாதவர்களாக்கியது. குமரிக் கண்ட காலத்தில்
இங்கிருந்து நண்ணிலக் கடற்கரையில்(மத்தியதரைக் கடல்) குடியேறி உலகக் கடல்களில்
ஆதிக்கம் செலுத்திய பினீசியர்களை அலக்சாந்தர் களத்திலிருந்து அகற்றிய பின்னர் அவர்களின்
பின்னணி இல்லாத நிலையில் தனித்து விடப்பட்ட கடம்பர்களை புதிதாக நுழைந்த
கிரேக்கர்களின் துணைகொண்டு சேரர்கள் அழித்திருக்க வேண்டும். அன்று முதல் அரபிக்
கடலிலிருந்து தமிழர்களின் ஆளுமை முற்றிலும் அகன்றது.
அன்றிலிருந்து பறையர்களின் மீது
மூவேந்தர்களின் ஒடுக்குமுறையும் கடுமையானது. அவர்களை செத்த மாடுகளைத் தின்போராக
இழிவபடுத்தினர். உலகில் மிகவும் இழிவானவர்கள் எனப் பொருள்படுவதாக pariah என்ற
ஆங்கிலச் சொல் அகராதிகளில் உருவாகியிப்பது ஒன்றே வந்தேறி மூவேந்தர்களும் அவர்களோடு
வந்த ‘தமிழர்’களும் தமிழக மூலக்குடிகள் மீது நிகழ்த்தியிருக்கும் கொடுமைகளை
விளக்கப் போதுமானது.
ஆங்கிலர் வருவதற்கு முன் தமிழகத்தை
ஆண்டவர்கள் என்ற வகையில் தெலுங்கையும் கன்னடத்தையும் தாய்மொழிகளாகக் கொண்டவர்கள்
பொருளியலில் முதலிடத்தில் இருந்தது இயற்கையானது. அந்த வகையில் வடக்கத்தி
பனியாக்கள் தமிழகப் பொருளியலைத் தங்கள் கைகளுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளை
நேரடியாக அறியும் வாய்ப்பை அவர்கள் பெற்றதும் இயல்பே. வெளி எதிரியாகிய பனியாக்களை
எதிர்கொள்வதற்கு உள்நாட்டு மக்களின் மிகப் பெரும் ஒற்றுமை தேவை என்பதை உணர்ந்து, சங்கமாகப்
பதிவான சரியாக ஓராண்டிலேயே புதிதாகத் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச்
சங்கத்துடன் வலிய வந்த நாடார் மகாசன சங்கத்தை அவர்கள் இரு கரம் நீட்டி
ஏற்றுக்கொணடதுடன் அடுத்து வந்த தேர்தலில் அவர்களுக்கு சட்ட மன்றத்தில் இரு
இடங்களையும் வழங்கினர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த பிற்பட்ட, மேல் சாதிகள்
நாயினும் கீழாக மதித்த நாடார்களை ஏற்றுச் சம இடம் வழங்கியதன் மூலம் ஒரு தேசிய
இயக்கத்தின் மிக அடிப்படையான இலக்கணத்தை அந்த இயக்கம் தமிழ்நாட்டு வரலாற்றில்
பதிவு செய்துள்ளது.
நாடார் மகாசன சங்கத்தின் குறிக்கோள்களில்
ஒன்று அவர்களின் பொருளியல் மேம்பாட்டுக்காகப் பணியாற்றுவது. ஆனால் சங்கத்தின்
சார்பில் சட்டமன்றம் சென்ற சவுந்திரபாண்டியனாரால் தம் சாதியினருக்கு எதிராக
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மறவர்களின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவே
நேரம் இருந்தது. அந்தப் பின்னணியில்தான் நயன்மைக் கட்சியின் பொறுப்பாளராக மாறிய
பெரியார் தமிழகத்தின் மீது பனியாக்களின் சுரண்டல் விழுதுகள் ஆழ
ஊடுருவிக்கொண்டிருந்ததை மறைக்கும் விதமாக பார்ப்பன எதிர்ப்பை மட்டும் உயர்த்திப்
பிடித்ததையும் புறக்கணித்து அவ் வியக்கம் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும்
மூலைமுடுக்குகளிலும் பரவி வேர்கொள்வதற்கு ஆளும் பணமும் தந்து உதவினார். அது
மட்டுமா, இன்று கூட திருநெல்வேலி மாவட்டத்தின் எட்டியுள்ள பகுதிகளில் மறவர்
ஊர்களில் நாடார்கள் செருப்பணிந்தோ மிதிவண்டிகளிலோ செல்ல முடியாது என்பதைத்
திரு.சீமான் அறிவாரா? தங்கள் குமுகியல் இழிவுகளிலிருந்து விடுபட திராவிடர் கழகம்தான்
ஒரே புகலிடம் என்று நம்பி தமிழகத்துக்கு வெளியிலிருந்த வேறு எந்த இயக்கத்தையும்
நாடாத தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை இயக்க குழுக் கூட்டங்களில் சாதியைச் சொல்லித்
திட்டியும் அடித்தும் கொடுமை செய்து அவர்கள் அம்பேத்காரை நாட வைத்தவர் யார்? ‘தமிழ்’க்
குடியினரான முக்குலத்தோர் அல்லரோ? அப்படி இருக்க தமிழ்த் தாழ்த்தப்பட்ட மக்களை,
வந்தேறிகள் என இவர்கள் குற்றம சாட்டும் ‘பிறமொழியாளர்’ இழிவுபடுத்துவதைக் குறை
சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?
தமிழகத்து ‘வந்தேறிகளை’ அடக்கி வைக்க
வேண்டும் என்று இவர்கள் சொல்வதை ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொள்வோம். அதற்குத் தமிழ்
பேசும் தாய்நாட்டினரை ஒன்றிணைத்து வலிமையைப் பெருக்கிக் கொள்வதுதானே முதல்
நடவடிக்கையாக இருக்க வேண்டும்? ஆனால் அதற்குத் தடையாக, ஒடுக்கும் ‘தமிழ்’ச்
சாதியினரின் நடவடிக்கை இருப்பதாகத் திரு.சீமானோ அவரது கோட்பாட்டு ஆசானான ‘ஆய்வறிஞர்’
குணாவோ ஒரு சொல்லாவது கூறியிருக்கிறார்களா? அப்புறம் அவர்களை ஒன்றிணைக்கும்
முயற்சிகளில் அவர்கள் எங்கே இறங்கப்போகிறார்கள்?
‘ஆய்வறிஞர்’ குணா தனது அரிய வேதத்தை
பரப்புவதற்காக திருவனந்தபுரத்துக்கு வானூர்தியில் பறந்து மகிழுந்தில் நாகர்கோவிக்கும்
வந்து அங்கிருந்து ஒவ்வோர் ஊராகவும் சென்னை நோக்கிச் சென்ற போது அவரோடு மேடைகளில்
இருந்தவர்களில் பெரும்பாலோர் மறவர் தலைவர்கள். அதில் பரமக்குடியில் பள்ளர்கள் மீது
நடந்த தாக்குதல்களை வழிநடத்தியவர்களும் அடக்கம். இந்த உண்மைகள் எல்லாவற்றையும்
நன்றாகவே அறியும் சூழலில்தான் திரு.சீமான் இருக்கிறார்.
வட மாவட்டங்களில் வாக்கு வங்கி அரசியல்
என்ற பெயரில் சாதி வெறியைத் தூண்டிவிடும் மரு.இராமதாசுக்கும் கொங்குநாட்டு
ஈசுவரனுக்கும் எதிராக ஒரு சொல் கூறுவாரா திரு.சீமான்? மரு.இராமதாசின் குறிக்கோள்
வன்னியர்களுக்கு ஒதுக்கீட்டின் பெயரில் அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவது
அல்லது அதன் பெயரில் தேர்தலில் வெற்றி பெற்று மகனை முதல்வராக்குவதாக எனக்குத்
தோன்றவில்லை சாதிவாரி கணக்கெடுப்பு கோரி தமிழகம் மட்டுமல்ல இந்திய மக்கள்
அனைவரையும் சிறு சிறு குழுக்களாகச் சிதறடிப்பதன் ஒரு பெருந்திட்டத்தின் முகவராக அவர்
செயற்படுகிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒதுக்கீட்டு முறை ஒரு நெருக்கடித்
தீர்வேயன்றி நிலையான ஒரு தீர்வாக இருக்க முடியாது. என்று ஒதுக்கீடு என்ற கோட்பாடு
கொள்கை அளவில் குமுகத்தின் மிகப் பிற்போக்குக் கட்சியான பா.ச.க.வால் கூட
ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அன்றே அது தன் புரட்சித் தன்மையை இழந்துவிட்டது. அதற்கும்
முன்பே 1980களில் மதுரையில் கல்லூரியில் கொலை நடக்கும் அளவுக்கு மாணவர்களிடையில்
என்று பகைமை வெளிப்பட்டதோ அன்றே நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். வாக்குவங்கி
அரசியலைப் பிழைப்பாகக் கொண்ட குமுகப் பகைவர்களான அரசியல் கட்சியினர் இதில் ஆதாயம்
காணவே முற்படுவர். ஆனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, வந்தேறிகள் என்று பிதற்றித் திரிவோர்
இதை ஏன் கண்டுகொள்ளவில்லை?
நாடு ‘விடுதலை’ அடைந்ததிலிருந்து முதன்
முதலில் தமிழர்களாக பார்ப்பனரான ஆச்சாரியாரையும் நாடாரான காமராசரையும் முதலியாரான
பக்தவத்சலத்தையும் விட்டால் பிறமொழியாளர்கள்தாம் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.
ஆச்சாரியாரோ இரு முறைகள் பதவி தாங்கிய காலங்களில் தில்லியின் இந்திப்
பரப்பலுக்குத் துணை நின்றதாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுத்தறிவுக்கு வேட்டுவைக்க
முயன்றதாலும் பதவியைப் பறிகொடுத்தார். அது மட்டுமல்ல முதன் முறை ஆட்சியின் போது
ஆச்சாரி என்ற பட்டத்துக்காக ஐந்தொழில் கொல்லர்களுடன் மல்லுக்கு நின்று
நயமன்றத்தின் தீர்ப்பால் தலைகுனிவையும் சந்தித்தார். காமராசர் மாநில
மறுசீரமைப்பின் போது தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பகுதிகளை, பகுத்தறிவைப் பறித்த
தன் கட்சி வெறியால் அண்டை மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்து தான் பிறந்த மண்ணான
தமிழகத்துக்கு இரண்டகம் செய்து காலத்தால் துடைக்க முடியாத தீராத பழியை வரலாற்றில்
ஏற்றுள்ளார். பக்தவத்சலமோ இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய மாணவர்களையும்
அவர்களுக்குத் துணையாக எழுந்த மக்களையும் காக்கை கழுகைப் போல் சுட்டுக்கொன்று
கொடுங்கோலன் பட்டம் பெற்றார். பிரகாசம் போன்றவர்கள் இன்றைய ஆந்திரத்தில்
பிறந்தவர்களாயினும் அன்றைய சென்னை மாகாணத்தில் அவர்கள் பிறப்பிடம் அமைந்திருந்தது.
ஆனால் இலங்கையில் பிறந்து கேரளத்தில் வளர்ந்த ம.கோ.இரா.வும் மைசூரில் பிறந்த
செயலலிதாவும் எப்படி அசைக்க முடியாத தலைவர்களாகவும் முதலமைச்சர்களாகவும் வர
முடிந்தது?
இந்தக் கேள்விக்கான விடையைக் காண்பது
எளிது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அனைத்து மக்களின் நம்பிக்கையையும் கொண்ட
ஒரு தலைவர் தமிழகத்தில் உருவாகவில்லை, அத்தகைய ஒருவரை இனங்கண்டு அவரைப் பின்பற்ற
தமிழக மக்களுக்கு தெளிவில்லை என்ற இரண்டு காரணிகளில் ஒன்று அல்லது இரண்டுமே
செயல்பட்டிருக்க வேண்டும். அத்துடன் மேலே குறிப்பிட்டவாறு அமெரிக்க உளவு முகவாண்மை
உருவாக்கியுள்ள சிந்தனைகள் மிகப் பரவலாகி முற்போக்கு மனப்போக்குள்ள அனைவயும்
பற்றியுள்ளதால் அவர்களால் சராசரித் தமிழக மக்களின் சிக்கல்கள் பற்றிய சிந்தனைகளை
வளர்த்தெடுக்க முடியாமல் வெறும் தெருக்கூத்தும் பாட்டும் நிகழ்த்துவோராக மக்களால்
முற்றிலும் அறியப்படாதவர்களாக ஆக்கியுள்ளது.
தி.மு.க. வளர்ந்து வந்த காலத்தில் அவர்களுக்கு
எதிராக ஒரு வலிமையான அரங்கத்தை அமைக்க முயன்றவர் ம.பொ.சி. பேரவைக் கட்சியிலிருந்த
அவர் அதன் மொழிக் கொள்கை, அதிகாரம் தில்லியில் நடுவப்படுத்தப்பட்டிருப்பது
ஆகியவற்றை எதிர்த்து வெளியேறி தமிழரசுக் கழகத்தை அமைத்தார். தமிழக பேரவைக்
கட்சியில் சத்தியமூர்த்திக் குழு இராசாசிக் குழு என்று இரண்டு குழுக்கள் இருந்தன.
காமராசர் சத்தியமூர்த்தியின் மாணவர். ம.பொ.சி. இராசாசியின் தொண்டர். அதனால் அவர்
பார்ப்பனர்களையோ சாதியத்தையோ எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுக்கவில்லை. சாதியக்
கொடுமைகளைத் தாங்க முடியாத மனநிலையில் தி.மு.க.வின் பின்னால் அணிதிரண்டு நின்ற
தமிழக மக்களைத் தன் பால் இழுக்க அவர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இவ்வளவுக்கும்
பிறகு 1978 – 86 காலகட்டத்தில் தான் எதிர்த்து வந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ம.கோ.இரா.
ஆட்சிக் காலத்தில் தமிழகச் சட்ட மேலவைத் தலைவராக அவர் வாழ்ந்து மறைந்தார்.
கடந்த காலத்தில் தமிழத்தில் வாழ்ந்த
இன்னோரு தலைவர் பசும் பொன் முத்துராமலிங்கர். உள்ளூர்த் தலைவர்களை மதிக்காமல்
காந்தியோடு தனக்குள்ள நெருக்கத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்கு
செலுத்திய ஆச்சாரியாரை எதிர்க்க பெருந்தலைகள் தயங்கி காமராசரை மாநிலத் தலைவராக
முன்னிறுத்துவதற்கு உறுதுணையாக இருந்தது உண்மைதான். ஆனால் இது ஆச்சாரியார் மீதுள்ள
வெறுப்பின் வெளிப்பாடுதானே ஒழிய அவரது சாதி சத்ததுவ நோக்கைக் காட்டுவதல்ல.
தாழ்த்தப்பட்டோருக்கான தனிப்பள்ளி நிறுவியதாக அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள். ஆனால் தங்கள் சாதிப் பிள்ளைகளுக்கு பள்ளிகள்
தொடங்கியதாக எந்தச் செய்தியும் இல்லை. அப்புறம், தங்கள் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட
மாணவர்களைச் சேர்ப்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த நாடார்களைப் போல் அவர் எதுவும்
செய்யவில்லை என்று குறை சொல்வதில் என்ன பொருளிருக்கப் போகிறது? குற்ற பரம்பரைச்
சட்டத்தை விலக்கப் போராடியவர், அம் மக்களின் பண்பாட்டை மேம்படுத்த அவர்களுக்குக்
கல்வியோ வேலை வாய்ப்போ அளிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த
வட்டாரத்தில் பெரும் எண்ணிக்கையில் செறிந்து வாழ்ந்த முக்குலத்தோரின் பண்பாட்டு
நிலை மிக இழிவான நிலையில் இருந்ததைக் கண்டு மனம் பொறுக்காமல், அரசு பணமில்லை என்று
இடையில் விட்டுவிட்ட பெரியாற்று அணைத் திட்டத்தை இங்கிலாந்திலிருந்த தன் சொந்தச்
சொத்தை விற்று அந்தப் பணத்தில் கட்டி முடித்த மாமனிதர் பென்னிக்குயிக்குக்குத்
தோன்றியது போல் இவருக்குத் தோன்றாதது ஏன்? தாழ்த்தப்பட்டோரும் பிறரும் அரசு அளித்த
கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திய கால கட்டத்தில் அரிவாள் இருக்க எங்களுக்கு கல்வி
எதற்கு என்று இறுமாந்திருந்த தன் சாதியினரின் அறியாமையை அகற்ற அவர் செய்தது என்ன?
சாதி எதிர்ப்பை முன்னிறுத்தி இறைமறுப்பையும் ‘பிரிவினை’யையும் பேசிய திராவிட
இயக்கத்தை எதிர்ப்பதாக ‘தெய்வீகம், தேசிகம்’ என்ற முழக்கத்தை முன்வைத்ததைப்
புரிந்துகொள்ளலாம், ஆனால், அது அவர்களின் சாதி மறுப்பை எதிர்ப்பதற்காகவல்லவா முன்வைக்கப்பட்டது?
இன்று அருவருப்பான வாங்குவங்கி அரசியலுக்காக அனைத்துக் கட்சிக் கழிசடைகளும் அவரது
சிலையை வழிபடச் செல்வதையும் தங்க மணிமுடியும் கவசமும் சார்த்துவதையும் பெரும்பாலான
தமிழக மக்கள் கசப்புடனல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்?
வந்தேறிகளைப் பற்றி இவ்வளவு கூச்சல்
போடும் முக்குலத் தலைகள் இன்றும் தெலுங்கு பேசும் மக்களை மாமன் – மச்சான் முறை
பேசியல்லவா மகிழ்கிறார்கள்? முகம்மதியர்களை மகன் – சித்தப்பன் முறை கூறியல்லவா
கொஞ்சுகிறார்கள்? தாழ்த்தப்பட மக்களையும் நாடார்களையும் இந்த இரு சாரரும் அது
போன்ற ஏதாவது ஒரு முறை கூடி அழைப்பார்களா?
பிற மொழியாளர்களின் மீதுள்ள இந்த
காழ்ப்புணர்ச்சி உண்மையில் ஒதுக்கீட்டு முனையில் உருவாகியுள்ள படித்த
மேல்தட்டினரின் போட்டிக்கு ஏழை மக்களைத் தூண்டி அவர்களின் குருதியை உரமாக்கும் ஓர்
உத்தியாகும்.
திராவிட இயக்கத்தின் மீது இவர்களது
இவ்வளவு வெறுப்புக்குக் காரணம் அந்த இயக்கத்தின் பின்னணியில் தாழ்த்தப்பட்டோரும்
நாடார்களும் எழுந்து இவர்களைத் தாண்டும் கட்டத்தை நெருங்கிவிட்டதுதான். ஆனால்
தாழ்த்தப்பட்டோரின் கல்வி – வேலைவாய்ப்பு உயர்வுக்கு நயன்மைக் கட்சியோ அதைத்
தொடர்ந்த திராவிட இயக்கமோ காரணமல்ல. அம்பேத்காரின் போராட்டத்தின் பின்னணியில்
நடுவரசு வழங்கியதுதான் அது. நாடார்கள் வேண்டுமானால் திராவிட இயக்கத்தால் இந்த
வகையில் பயனடைந்திருக்கலாம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவ் வியக்கம் கொடுத்தது
உளவியல் ஊக்கம்தான். அந்த வலிமைதான் அவர்களுக்குத் துணை நின்றது. அது மட்டுமல்ல
தமிழக மக்களின் உள்ளுணர்வில் சாதி அமைப்பைத் தூக்கி எறிய வேண்டும் என்ற துடிப்பு
இருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. சாதியும் வருணமும் ‘இந்து’ மரபு உருவாக்கிய
உயரிய குமுகக் கட்டமைப்புகள் என்று கூசாமல் கூறிய காந்தியைத் தலைமையில் கொண்ட
பேரவைக் கட்சியினரும் திராவிட இயக்கத்தினரும் மட்டுமின்றி அனைவரும்
விதிவிலக்கின்றி பெயர்களின் பின்னர் சாதிப் பட்டங்களைக் குறிக்கும் பழக்கத்தைக்
கைவிட்டுள்ளது வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாத வியப்பாகும். தலைவர்களின் பொய்
முகங்களை தங்கள் உள்ளுணவின் தூண்டுதலால் ஏற்றுக்கொண்டு குமுகத்தின் முற்போக்கு
மனங்கள் அவற்றை துரோணப் பொம்மையாகக் கருதி அருஞ்செயல் ஆற்றிய ஏகலைவன்களாகச்
செயல்பட்ட ஒரு வரலாற்றுக் குமுக நிகழ்வாகும் இது. இந்த நோக்கில் பார்க்கும் போது
இன்றும் தமிழக மக்களிடையில் ‘திராவிட’க் கட்சிகளின் செல்வாக்கு நிலைப்பதற்கு
சாதியொழிப்பை வலியுறுத்தும் கட்சிகள் என்ற பொய் முகம் அவற்றுக்கு நீடிப்பதுதான்
காரணம் என்ற முடிவுக்கு நம்மைக் கொண்டுசெல்கிறது.
கடந்த 48 கால திராவிடக் கட்சிகளின்
ஆட்சியில், குறிப்பாக கருணாநிதியின் ஆட்சி தொடங்கிய பின்னுள்ள 46 ஆண்டுகளில் ஆள்வோருக்குப்
பின்புலமாயிருந்து ஆதாயம் அடைந்தவர்களில் இவர்கள் குற்றம் சாட்டும் ‘வந்தேறி’களை
விட அவ் வந்தேறிகளுக்கு இங்கு பாவாடை விரித்துப் பயனடைந்த ஆதிக்க சாதியினர்தாம்
மிகப் பெரும்பான்மையர் என்பது கண்கூடாக அனைவரும் அறியும் உண்மை.
காட்டிக்கொடுக்கும் இந்தக் கும்பலுக்கு
பொய்களைக் கூறி கோட்பாட்டுத் துணைநிற்கும் குணா வகையறாக்களையும் களப்பணியில்
இறங்கியிருக்கும் சீமான் வகையறாக்களையும் களத்திலிருந்து அகற்ற வேண்டுமாயின் சென்ற
நூற்றாண்டில் நில அடிப்படையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற
புரட்சிகரமான பெயரில் கட்சியமைத்து மண்ணின் மக்களின் பொருளியல், குமுகச் சமநிலை
ஆகியவற்றை முன்னிறுத்திய முன்னோடிகளின் குறிக்கோளை மீட்டு தமிழகம் எனும்
நிலப்பரப்பில் வாழும் பக்களின் நிலம் சார்ந்த மூலப் பொருள், மூலதனம், மனித வளம்,
அறிவியல் – தொழில்நுட்ப, தொழில்முனைவு ஆற்றல்கள் என்று அனைத்தும் முழு வீச்சுடன்
இம் மண்ணின் மக்களின் வளத்துக்காக மட்டும் செயற்பட இன்று பனியா – பார்சி – வல்லரசியக்
கும்பல்கள் இட்டுவைத்திருக்கும் தடைகளை உடைத்து பொருளியல் உரிமைக்காக தமிழக
மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் காட்டும் வழியில் போராடுமாறு உண்மையான
சாதி ஒழிப்பையும் தமிழக மக்களின் மேம்பாட்டையும் நாடும் நல்ல உள்ளங்களை
வேண்டுகிறோம்.
வெளி எதிரி என்னும் புற முரண்பாட்டை
எதிர்த்து விட்டுக்கொடுப்பில்லாமல் போராடும் விசைகள் களத்திலிறங்கும் காலங்களில்
அக முரண்பாடுகளைக் கையாண்டு மக்களைப் பிரிக்கும் விசைகள் முன்வைக்கும்
கேள்விகளுக்கு அந்த முற்போக்கு விசைகள் நல்ல தீர்வுகளை முன்வைத்து உணர்வொன்றிய ஓர்
தேசிய ஒற்றுமைக்கு வழிவகுத்து நாட்டையும் குமுகத்தையும் அடுத்த கட்ட வளர்ச்சி
நிலைக்கு இட்டுச்செல்லும் என்பது வரலாறு புகட்டும் பாடம்.
இன்று கல்வி என்ற பெயரில் மழலையிலிருந்து
தொடங்கி இளம் பிஞ்சுகளின் அனைத்துத் திறன்களையும் அழித்து எழுத்தறிவைக் கூட
முறையாக வழங்காமல் சிலரை அயல்நாடுகளுக்கும் இன்னும் சிலரை உள்நாட்டில்
அயலவர்க்கும் அடிமை செய்ய வைத்து எஞ்சியோர் போட்டித்தேர்வுகள் என்ற பெயரில் ஒரு
வேலைக்கு 2000 பேர் போட்டியிட நாளதோறும் அங்கும் இங்கும் அலையவும் அதுவும்
முடியாதோர் குமுகப் பகைவர்களின் கருவிகாளாகவும் மாறிவிட பெரும்படிப்புப் படிக்காத
பலரை உலகெலாம் விரட்டி அங்கு அவர்கள் சொல்லத்தொலையாத அவலங்களைச் சந்திக்க இங்குள்ள
எண்ணற்ற உடல் உழைப்பு வேலைகளுக்கு ஆளின்றி பீகார், குசராத்து, நேப்பாளம் போன்ற
பகுதிகளிலிருந்து வந்தோர் சிற்றூர் வரை பரவி நிற்கும் ஒரு கையறு நிலையில் ‘தமிழக
மக்கள்’ என்ற வரையறையை வகுப்பது எவ்வாறு? அதற்கும் எமது தமிழக மக்கள்
பொருளியல் உரிமைக் கழகம், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இன்றைய தமிழகம்
உருவாக்கப்பட்ட போது வெளியே எங்கும் வேரின்றி தமிழகத்தை மட்டும் தாய்மண்ணாகக்
கொண்டு வாழ்ந்தவர்கள் அனைவரையும் தமிழக மக்கள் என்று வரையறுத்துள்ளது.
தமிழகத்துக்குப் புறத்தே இருப்பிட அடையாளத்தைக் கொண்டு இங்கு வாழ்ந்தோர், வாழ்வோர்
எவரும் தமிழக மக்கள் என்ற வரையறைக்குள் வர முடியாது. அது மட்டுமல்ல மாநில
மறுசீரமைப்பின் போது தமிழகத்திலிருந்து காமராசர் – நேசமணி கூட்டாகச் செய்த
வஞ்சகத்தால் நாம் இழந்த அன்றைய நெய்யாற்றின்கரை வட்டம், அன்றைய செங்கோட்டை
வட்டத்தில் பாதி, அன்றைய தேவிகுளம் - பீர்மேடு ஆந்திரத்தின் புத்தூர், சித்துர்,
திருப்பதி, கன்னடத்திலிருந்து கோலார், கொள்ளேகாலம், வெங்காளுர் ஆகிய அன்றைய
வட்டங்களின் நிலப்பரப்புகளை மீட்பது எமது இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள்களில்
ஒன்று. அவ்வாறு மீட்கப்பட்ட நிலப்பரப்புகளில் அந்த நாளில் இருந்தோரும் அவர்கள்
வழிவந்து அங்கு வாழ்வோரும்தாம் தமிழக மக்கள் என்பது எமது நிலைப்பாடு.
வருமான வரியை
ஒழித்து முதலீட்டுக்கான முதல் தடையை அகற்றுவோம்!
தொழில் தொடங்க
உரிமம் வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றிய அளவில் விரிவடையப் போராடுவோம்!
புதிய தொழிலகள்
தொடங்கும் உரிமை உள்ளூர் முனைவோருக்கு மட்டுமே கிடைக்கப் போராடுவோம்!
மாவட்ட
மட்டத்தில் அறிவியல் – தொழில்நுட்பங்களுக்குக் கப்புரிமம் வழங்கும் அலுவலகங்கள்
திறக்க முனைப்பாகப் போராடுவோம்!
ஏற்றுமதி –
இறக்குமதி சார்ந்த போருளியல் கொள்கையை இந்திய அரசு கைவிடும் வரை இடைவிடாது
போராடுவோம்!
குழந்தைத்
தொழிலாளர் அகவை வரம்பை 12 ஆகக் குறைக்கப் போராடுவோம்!
சிறுதொழில்கள்,
குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்களுக்கு இப்போதுள்ள சலுகைகளும் சிறப்புரிமைகளும்
தொடர விட்டுக்கொடுப்பில்லாமல் போராடுவோம்!
இந்திய நாணய
மதிப்பை உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்புக்கு இணையாக படிப்படியாக உயர்த்த
வேண்டிப் போராடுவோம்!
தமிழக மக்கள்
பொருளியல் உரிமைக் கழகம், மதுரை.
தொடர்புக்கு:
செல்பேசிகள் 9790652850, 9443962521,
9789304325
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக