சிலப்பதிகாரப் புதையல் - 8
6. கடலாடு
காதை (1)
வெள்ளி
மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்ளவிழ் பூம்பொழிற் காமக்
கடவுட்குக்
கருங்கயல்
நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்
டயருமோர் விஞ்சை வீரன்
5. தென்றிசை மருங்கினோர் செழும்பதி தன்னுள்
இந்திர விழவுகொண்டு எடுக்குநாள் இதுவெனக்
கடுவிசை
அவுணர் கணங்கொண் டீண்டிக்
கொடுவரி
ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழன்
மன்னற்குத் தொலைந்தன ராகி
10. நெஞ்சிருள்
கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம்
பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவே
லண்ணற்குத் தேவ னேவ
இருந்துபலி
யுண்ணும் இடனும் காண்கும்
அமரா
பதிகாத் தமரனிற் பெற்றுத்
15.
தமரிற் றந்து தகைசால்
சிறப்பிற்
பொய்வகை
யின்றிப் பூமியிற் புணர்த்த
ஐவகை
மன்றத் தமைதியுங் காண்குதும்
நாரதன்
வீணை நயந்தெரி பாடலும்
தோரிய
மடந்தை வாரம் பாடலும்
20.
ஆயிரங் கண்ணோன்
செவியகம் நிறைய
நாடகம்
உருப்பசி நல்கா ளாகி
மங்கலம்
இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக
இவளெனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
25.
அங்கரவு அல்குல்
ஆடலுங் காண்குதும்
துவரிதழ்ச்
செவ்வாய்த் துடியிடை யோயே
அமரர்
தலைவனை வணங்குவதும் யாமெனச்
சிமையத்
திமையமுஞ் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம்
பதியும் விஞ்சத் தடவியும்
30.
வேங்கட
மலையும் தாங்கா விளையுட்
காவிரி
நாடுங் காட்டிப் பின்னர்ப்
பூவிரி
படப்பைப் புகார்மருங் கெய்திச்
சொல்லிய
முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
35. மாயோன்
பாணியும் வருணப் பூதர்
நால்வகைப்
பாணியும் நலம்பெறு கொள்கை
வானூர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீரியல்
பொலிய நீரல நீங்கப்
பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
40. திரிபுர
மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப்
பேரம்பு ஏவல் கேட்ப
உமையவ
ளொருதிற னாக வோங்கிய
இமையவன்
ஆடிய கொடுகொட்டி ஆடலும்
தேர்முன்
நின்ற திசைமுகன் காணப்
45.
பாரதி ஆடிய வியன்பாண்
டரங்கமும்
கஞ்சன்
வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன
வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத்
தொகுதியும் அவுணற் கடந்த
மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண்
50. நீர்த்திரை
அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறங்
கடந்தோன் ஆடிய துடியும்
படைவீழ்த்
தவுணர் பையு ளெய்தக்
குடைவீழ்த்
தவர்முன் ஆடிய குடையும்
வாணன்
பேரூர் மறுகிடை நடந்து
55. நீணிலம்
அளந்தோன் ஆடிய குடமும்
ஆண்மை
திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன்
ஆடிய பேடி யாடலும்
காய்சின
அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள்
ஆடிய மரக்கால் ஆடலும்
60. செருவெங்
கோலம் அவுணர் நீங்கத்
திருவின்
செய்யோள் ஆடிய பாவையும்
வயலுழை
நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி
மடந்தை ஆடிய கடையமும்
அவரவர்
அணியுடன் அவரவர் கொள்கையின்
65.
நிலையும் படிதமும்
நீங்கா மரபிற்
பதினோ
ராடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண்
கொள்கையின் விளங்கக் காணாய்
தாதவிழ்
பூம்பொழி லிருந்தியான் கூறிய
மாதவி
மரபின் மாதவி இவளெனக்
70. காதலிக்
குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய
மேதகு
சிறப்பின் விஞ்சையன் அன்றியும்
அந்தரத்
துள்ளோர் அறியா மரபின்
வந்து
காண்குறூஉம் வானவன் விழவும்
ஆடலுங்
கோலமும் அணியுங் கடைக்கொள
75.
ஊடற் கோலமோ டிருந்தோன்
உவப்பப்
பத்துத்
துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்
திருவகை யோமா லிகையினும்
ஊறின
நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங்
கூந்தல் நலம்பெற ஆட்டிப்
80.
புகையிற் புலர்த்திய
பூமென் கூந்தலை
வகைதொறு
மான்மதக் கொழுஞ்சே றூட்டி
அலத்தக
மூட்டிய அஞ்செஞ் சீறடி
நலத்தகு
மெல்விரல் நல்லணி செறீஇப்
பரியக
நூபுரம் பாடகம் சதங்கை
85.
அரியகம் காலுக் கமைவுற
அணிந்து
குறங்கு
செறிதிரள் குறங்கினிற் செறித்துப்
பிறங்கிய
முத்தரை முப்பத் திருகாழ்
நிறங்கிளர்
பூந்துகில் நீர்மையின் உடீஇக்
காமர்
கண்டிகை தன்னொடு பின்னிய
90.
தூமணித் தோள்வளை
தோளுக் கணிந்து
மத்தக
மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச்
சூடகம் செம்பொற் கைவளை
பரியகம்
வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர்
முன்கைக் கமைவுற அணிந்து
95.
வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்
கேழ்கிளர்
செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில்
வயிரத்து மரகதத் தாள்நெறி
காந்தள்
மெல்விரல் கரப்ப அணிந்து
சங்கிலி
நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை
100. அங்கழுத்து அகவயின் ஆரமோ
டணிந்து
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு
இந்திர நீலத் திடையிடை திரண்ட
சந்திர
பாணி தகைபெறு கடிப்பிணை
105.
அங்காது அகவயின் அழகுற அணிந்து
தெய்வ
உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம்
புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மையீர்
ஓதிக்கு மாண்புற அணிந்து
கூடலும்
ஊடலும் கோவலற் களித்துப்
110.
பாடமை சேக்கைப் பள்ளியு ளிருந்தோள்
உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியன் மாக்களொடு
மடலவிழ்
கானற் கடல்விளை யாட்டுக்
காண்டல்
விருப்பொடு வேண்டின ளாகிப்
115. பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப
வைகறை
யாமம் வாரணங் காட்ட
வெள்ளி
விளக்கம் நள்ளீருள் கடியத்
தாரணி
மார்பனெடு பேரணி அணிந்து
வான
வண்கையன் அத்திரி ஏற
120. மானமர் நோக்கியும் வைய மேறிக்
கோடிபல
அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி
மறுகிற் பீடிகைத் தெருவின்
மலரணி
விளக்கத்து மணிவிளக் கெடுத்தாங்கு
அலர்கொடி
அறுகும் நெல்லும் வீசி
125. மங்கலத் தாசியர் தங்கலன் ஒலிப்ப
இருபுடை
மருங்கினும் திரிவனர் பெயருந்
திருமக
ளிருக்கை செவ்வனங் கழிந்து
மகர
வாரி வளந்தந் தோங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
130.
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பிற்
கூல மறுகிற் கொடியெடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென் றெய்தி
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
135.
பண்ணியப் பகுதியும்
பகர்வோர் விளக்கமும்
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்
காழியர்
மோதகத் தூழுறு விளக்கமும்
கூவியர்
காரகற் குடக்கால் விளக்கமும்
நொடைநவில்
மகடூஉக் கடைகெழு விளக்கமும்
140. இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்
இலங்குநீர்
வரைப்பிற் கலங்கரை விளக்கமும்
விலங்குவலைப்
பரதவர் மீன்திமில் விளக்கமும்
மொழிபெயர்
தேத்தோர் ஒழியா விளக்கமும்
கழிபெரும்
பண்டங் காவலர் விளக்கமும்
145.
எண்ணுவரம் பறியா இயைந்தொருங் கீண்டி
இடிக்கலப்
பன்ன ஈரயிர் மருங்கிற்
கடிப்பகை
காணுங் காட்சிய தாகிய
விரைமலர்த்
தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத
வேலியின் மாண்புறத் தோன்றுங்
150.
கைதை வேலி நெய்தலங் கானற்
பொய்த
லாயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை
எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பஃ
றாரமுங் கடற்பஃ றாரமும்
வளந்தலை
மயங்கிய துளங்குகல விருக்கை
155. அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும்
பரத
குமரரும் பல்வே றாயமும்
ஆடுகள
மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள்
மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு
பெரும்புகழ்க் கரிகால் வளவன்
160. தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல
வேறுவேறு
கோலத்து வேறுவேறு கம்பலை
சாறயர்
களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை
மெலிக்குங் காவிரிப் பேரியாற்று
இடங்கெட
ஈண்டிய நால்வகை வருணத்து
165.
அடங்காக் கம்பலை உடங்கியைந் தொலிப்பக்
கடற்புலவு
கடிந்த மடற்பூந் தாழைச்
சிறைசெய்
வேலி அகவயி னாங்கோர்
புன்னை
நீழற் புதுமணற் பரப்பில்
ஓவிய
எழினி சூழவுடன் போக்கி
170. விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை
வருந்துபு
நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல்
நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன்
தன்னோடுங் கொள்கையி னிருந்தனள்
மாமலர்
நெடுங்கண் மாதவி தானென்.
வெண்பா
வேலை மடற்றாழை யுட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத்
துயின்ற மணிவண்டு-காலைக்
களிநறவந்
தாதூதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற
வெண்கதிரோன் தேர்.
பொழிப்புரை
பெரிய
வெள்ளி மலையில் அகன்ற பெரிய வடசேடி எனும் விஞ்சையர்(வித்தியாதரர்) நகரில் தேன் ஒழுக
மலரும் பூக்களையுடையதொரு சோலையின் கண்ணே காம தேவனுக்கு கரிய கயல் போலும் நீண்ட கண்களையுடைய காதலியுடனே இருந்து
விழாக் கொண்டாடும் ஒரு விஞ்சை வீரன்,
தென்திசைப் பக்கத்தில் ஒரு வளம் பொருந்திய நகரில்
இந்திரவிழா முடியும் நாள் இதுவெனக் கூறி,
மிக்க வேகத்தினையுடைய அவுணர்கள் கூட்டமாக நெருங்கி வந்து
எதிர்த்து இந்திரனது நகரைக் காத்த புலிபோலும் வலிமையுடைய முசுகுந்தனுக்குத்
தோற்று, பின்பு அம் முசுகுந்தனது நெஞ்சம் இருள் மிகும்படி
விடுத்த இருள் அம்பினைப் போக்கிய மிக்க பெரிய பூதமானது திருந்திய வேலையுடைய அம் முசுகுந்தன் பொருட்டு இந்திரன் ஏவுதலினால்
சென்று புகாரில் இருந்து பலி உண்ணும் இடமாகிய நாளங்காடியைக் காண்போம்;
முன்பு அவுணர்களால் வந்த இடரை நீக்கி அமராபதியைக்
காத்தமையால் அதற்குக் கைம்மாறாக இந்திரனால் அளிக்கப்பெற்று சோழன் மரபினராகிய
முன்னோரால் கொண்டுவரப்பட்டு அழகு மிகுந்த சிறப்பினையுடைய பொய்த்தலின்றிப் புவியிலே
புகார் நகரில் வைக்கப்பட்ட ஐவகைப்பட்ட மன்றங்களின் பெருமையையும் காண்போம்:
யாழாசிரியனாகிய நாரத முனிவன் இசையின்பம் விளங்கப் பாடும்
பாடலும் மூத்த ஆடல் மகளான தோரிய மடந்தை பாடும் வாரப் பாடலும் இந்திரனுடைய
செவியிடம் நிறையும் படி நாடகம் நடிக்கவில்லை ஆதலால் யாழ் மங்கலம் இழக்க உருப்பசி
ஆகிய இவள் மண் மீது பிறக்க எனச் சபித்தலால்
அதனைப் பெற்றுவந்து பிறந்த மங்கையாகிய மாதவியின் வழியிலே பிறந்த அரவு போலும்
அல்குலையுடைய மாதவியின் ஆடலையும் அங்கு காண்போம்;
செந்நிறம் உடைய உதட்டினையும் சிவந்த வாயையும் உடுக்கையின்
நடுப்போலும் இடையையும் உடையவளே, அங்கு பூசைகொள்ளும் இந்திரனை யாமும் வணங்குவோம்
என்று அவளையும் அழைத்துச் சென்றனன்.
கொடுமுடியையுடைய இமயமலையையும் வளவிய நீரைவுடைய கங்கை
ஆற்றினையும் அழகிய உஞ்சைப் பதியையும் விந்தமலை சூழ்ந்த காட்டினையும் வேங்கடம்
எனும் மலையினையும் நிலம் தாங்காத விளைச்சலையுடைய காவிரி பாயும் சோழ நாட்டினையும் தன்
காதலிக்குக் காட்டி அதன் பின்னர் பூக்கள் விரிந்த தோட்டங்களையுடைய புகார் எல்லையை
அடைந்து இந்திரனைத் தொழுது முன் சொன்ன முறைப்படி அவளுக்குக் காட்டி வளம் பொருந்திய
அம் மூதூரில் நடக்கின்ற, தேவரும் மகிழும்
விழாவைத் தானும் காண்கின்றவன்,
திருமாலைப் பரவும் தேவ பாணியும் வருணப் பூதர் நால்வரையும்
பரவும் நால்வகைத் தேவபாணியும் பல்லுயிர்களும் தன் கலையால் நன்மை பெறும்
தன்மையுடைய, வானில் ஊர்ந்து செல்லும் திங்களைப் பாடும் தேவ பாணியும் பாடிய பின்பு
அவதாளம் நீ்ங்கி, தாள வியல்பு பொலிவு பெற,
பாரதியாகிய பைரவி ஆடியமையாலே பாரதி அரங்கமெனும் பெயர்பெற்ற
சுடுகாட்டிலே, தேவர் திரிபுரத்தை எரியச் செய்ய வேண்டுதலால் வடவைத் தீயைத் தலையிலே
உடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட அளவிலே உமையவளை ஒரு பக்கமாக உடைய தேவர் யாவரினும்
உயர்ந்த இறைவன் வெற்றிக் களிப்பால் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டி என்னும் ஆடலும்
தேரின் முன்னிடத்து நின்ற நான்முகன் நாணும்படி பாரதி வடிவாய
இறைவன் வெண்ணீற்றை அணிந்து ஆடிய பெரிய பாண்டரங்கக் கூத்தும்
கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக கரிய நிறத்தையுடைய
மாயோன் ஆடிய கூத்துகளுள் கஞ்சன் வஞ்சத்தினால் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு
நின்றாடிய அல்லியத்தொகுதி எனும் கூத்தும்
மாயோன் மல்லனாய் அவுணனைக்(வாணாசுரன்) கொன்ற மல் கூத்தும்
கரிய (பெரிய) கடலின் நீரின் அலையே அரங்கமாக நின்று எதிர்த்து
முன் நின்ற சூரனது வஞ்சத்தை அறிந்து அவன் போரைக் கடந்த முருகன் துடி கொட்டி ஆடிய
துடிக் கூத்தும்
அவுணர்கள் தாம் போர் செய்தற்கு எடுத்த படைக்கலங்களைப்
போருக்கு ஆற்றாது போகவிட்டு வருத்தமுற்ற அளவிலே அவர் முன்னே முருகன் தன் குடையைச்
சாய்த்து நின்று ஆடிய குடைக் கூத்தும்
வாணாசுரனது சோ என்னும் நகர வீதியில் சென்று நெடிய நிலத்தைத்
தாவி அளந்த மாயோன் குடம் கொண்டு ஆடிய குடக் கூத்தும்
ஆண்மைத் தன்மையில் திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடிய
பேடியென்னும் ஆடலும்
காயும் சினத்தை உடைய அவுணர் வஞ்சத்தால் செய்யும் கொடுந்
தொழில்களை பொறாதவளாய் காளி (மாயவள் - துர்க்கை) மரக்கால் கொண்டு ஆடிய மரக்கால்
கூத்தும்
அவுணர் வெம்மையான போர்க்கோலம் ஒழிய செந்நிறமுடைய திருமகள்
கொல்லிப்பாவை வடிவாய் ஆடிய பாவைக் கூத்தும்
வாணபுரமுமாகிய சோ நகரின் வடக்கு வாயிலினுள் இந்திராணி எனும்
மடந்தை கடைசியர் வடிவுகொண்டு ஆடிய கடையக் கூத்தும் என்னும் இவற்றை,
அங்ஙனம் கூறப்பட்ட அவரவருடைய அணிகளுடனும் அவரவர் கொள்கையுடனும்
ஆடிய நின்றாடலும் வீழ்ந்தாடலும் ஆகிய அவரவரை நீங்காத மரபினையுடைய பதினொரு
வகைப்பட்ட ஆடல்களையும் அவ்
வாடல்களுக்கு ஏற்ற பாடல்களின்
வேறுபாட்டையும் அவற்றுக்கு விதித்த சிறந்த கொள்கையோடு புலப்படக் காண்பாயாக,
அன்று மதுவொழுகும் பூம்பொழிலில் இருந்து நான் கூறிய
உருப்பசியாகிய மாதவி மரபில் வந்த மாதவி இவள்தான் என்று தன் காதலிக்குக் கூறி
தானும் கண்டு மகிழ்வுற்ற மேன்மை பொருந்திய சிறப்பினை உடைய விஞ்சையன் மட்டுமின்றி,
விண்ணுலகிலுள்ள தேவர்களும் பிறர் அறியாதபடி உள்வரி கொண்டு
வந்து(மாற்றுக் கோலம் கொண்டு வந்தனரா அல்லது கண்ணுக்குத் தோன்றாத நிலையில்
வந்தனரா) காணும் இந்திர விழாவும் மாதவியின் ஆடலும் அவ் வாடலுக்கென்று
அமைந்த கோலமும் ஆடுதலால் பிறந்த அழகும் முடிந்த நிலையில், ஊடல் கொண்டிருந்த கோவலன்
மகிழும்படி,
பத்துவகைப்பட்ட துவரினாலும் ஐந்து வகைப்பட்ட விரையினாலும்
முப்பத்திரண்டு வகை ஓமாலிகையாலும் ஊறித் திளைத்த நல்ல நீரில் வாச நெய் தேய்த்த
மணங்கமழும் கரிய கூந்தலை நன்மை பெற நீராட்டி,
பொலிவினையுடைய புகையால் ஈரம் புலர்த்திய கூந்தலை ஐந்து
வகையாய் வகுத்த வகை தோறும் கொழுவிய கத்தூரிக் குழம்பு ஊட்டி,
செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய சிவந்த சிறிய அடியின் நலமிக்க
மெல்லிய விரலிடத்தே சிறந்த அணிகளைச் செறித்து,
பாதசாலமும் சிலம்பும் பாடகமும் சதங்கையும் கால்சரியும்
என்னும் இவற்றை காலுக்குப் பொருந்தும் வகையில் அணிந்து,
குறங்குசெறி என்னும் அணியைத் திரண்ட தொடையில் செறித்து பருமுத்தின்
கோவை முப்பத்திரண்டால் செய்த விரிசிகை என்னும் அணியை நீல நீறம் விளங்கும்
பூத்தொழிலையுடைய உயர்வகை உடையின் மீது உடுத்து,
அழகிய
கண்ட சரம் என்னும் அணியுடன் சேர்த்துக் கட்டிய முத்து வளையைத் தோளுக்கு அணிந்து,
முகப்பிற்கட்டிய மாணிகத்தோடு பத்திகளில் வைரங்கள் பதித்த
சித்திரத் தொழிலையுடைய கைவளையும் செம்பொன்னால் செய்த வளையும் சங்கு வளையும்
பலவாகிய பவழ வளைகளும் மெல்லிய மயிரை உடைய முன்கைக்குப் பொருத்தமுற அணிந்து,
வாளை
மீனின் பிளந்த வாயை ஒக்கும் முடக்கு மோதிரமும் ஒளி மிக்க செந்நிறம் விளங்குகின்ற
மாணிக்கம் பதித்த மோதிரமும் பக்கத்தே வளைந்து சிதறும் ஒளியையுடைய வயிரம் சூழ்ந்த
மரகதமணித் தாள்செறி(விரலடியில் செறிப்பது) என்னும் இவற்றை காந்தள் மலர் போலும்
மெல்லிய விரல்கள் மறையும் படி அணிந்து,
வீரச் சங்கிலியும் நுண்ணிய சங்கிலியும் பூணப்படும் சரடும்
புனையப்பட்ட தொழில்களையுடைய சவடி, சரப்பளி முதலாயின எனும் இவற்றை அழகிய
கழுத்திடத்தே முத்தாரத்தோடு அணிந்து,
முன்பு கூறிய சங்கிலி முதலியவற்றை ஒன்றாய் இணைத்திருக்கும்
கொக்கு வாயிலிருந்து பின்புறம் தாழ்ந்த, அதாவது இறங்கிய, விருப்பத்தைத் தூண்டும்
தூய முத்தினால் செய்யப்பட்ட கோவையாகிய பின்தாலியால் பிடரியையும் மறைத்து,
இந்திர நீலத்துடன் இடையிடையே திரண்ட சந்திரபாணி எனும்
வைரத்தால் கட்டப்பட்டு அழகு பெற்ற குதம்பை என்னும் காதணியை அழகிய(வடிந்த?)
காதினிடத்தே அழகு மிகும்படி அணிந்து,
சீதேவி என்னும் பணியுடனே வலம்புரிச் சங்கும் தொய்யகம், புல்லகம்
என்பனவும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை கரிய பெரிய கூந்தலுக்கு
அழகுறும்படி அணிந்து,
கூடுதலையும் பின்னர் ஊடுதலையும் கோவலனுக்கு அளித்து
படுத்தல் அமைந்த சேக்கையாகிய பள்ளியறையிலே இருந்தவள்,
உவாநாள் தலைவந்ததாக அழகு மிளிரும் மூதூராகிய புகாரினின்றும்
கடலாடுவதற்கு விரைந்து செல்லும் மக்கள் கூட்டத்தோடு தாழை, புன்னை ஆகியவற்றின்
பூக்களின் இதழ்கள் விரியும் சோலையைக் கரையில் கொண்ட கடல் விளையாட்டைத் தானும்
காண்பதை விரும்பியவளாகக் கோவலனை வேண்டியவள்,
பொய்கைகளில் தாமரைப் பூஞ்சேக்கையில், தாமரைப்பூ ஆகிய மெத்தையில்
உறங்கிய புள்கள் (வண்டுகள்) வாய்விட்டுப் புலம்ப வைகறைப் பொழுதென்பதனைக் சேவல்
கோழிகள் அறிவிக்க விடிவெள்ளி எழுந்து வெளிச்சம் செறிந்த இருளை நீக்க மாலை அணிந்த
மார்பை உடைய கோவலனோடு பெரும்பதக்கம்(மதாணி) முதலிய பேரணிகலன்களை அணிந்து மேகம்
போலும் கொடைத் தன்மையுடைய கையினனாகிய அவன் அத்திரி எனும் குதிரையில் ஏற மானின்
பார்வையுடைய மாதவியும் வையம் எனும் கூண்டு வண்டியில் ஏறி,
கோடி என்னும் எண்ணைப் பலவாக அடுக்கிய வளமான பொருள் குவியலை
உடைய மாடங்கள் (சரக்கறைகள்) நிறைந்த குறுந்தெருக்களை உடைய கடைத்தெருவில் மலர்
அணிந்த விளக்கோடு மாணிக்க விளக்குகளையும் எடுத்து அங்கே மலரையும் அறுகையும்
நெல்லையும் தூவி சுமங்கலிகளான ஏவல் மகளிர் தம் அணிகலன் ஒலிக்க இருமருங்கும்
திரிந்து செல்லும் திருமகளின் அந்த இருப்பிடத்தை நல்லவாறு கழிந்து,
கடலின் வளத்தைத் தருதலால் உயர்வு பெற்ற நகர வீதியினூடே
சென்று, மரக்கலங்கள் தந்த செல்வத்தை உடைய தம் தேசங்களை விட்டுவந்த வெளிநாட்டினர் கடலின்
அலைவாய்க் கரையில் வெண்மணலையுடைய கூல வீதியில் ஆங்காங்கு உள்ள சரக்கைக் கொடிகள் கட்டி
அறிவிக்கும் ஒழுங்குபட்ட அந்திக்கடைச் சேரிகளைச் சென்றடைந்து,
உடம்பில் எழுதும் வண்ணமும் சாந்தும் மலரும் உடம்பில் பூசும்
சுண்ணமும் பணியார வகைகளும் விற்பவர்கள் வைத்த விளக்குகளும் செய்தொழில் வல்ல
தட்டார் அணிகலன் செய்யுமிடங்களில் வைத்த விளக்குகளும் மோதக(பிட்டு?) வாணிகர்
மோதகம் விற்பதற்கு முறை முறையாக வைத்த விளக்குகளும் விலைகளைக் கூவி விற்கும்
பெண்கள் தம் கடைகளில் வைத்த கரிய அகல் விலக்கால் ஆன குடத்தண்டில் வைத்த (குடம்
போன்ற விளக்குத் தண்டு) விளக்குகளும் பல பண்டமும் விற்கும் மகளிர் தம் கடைகளில்
வைத்த விளக்குகளும் இடையிடையே மீன் விற்போர் விளக்குகளும் கடலிடத்தே ஓடும்
மரக்கலங்களைத் துறைநோக்கிக் குறிகாட்டி அழைத்தற்கு இட்ட விளக்கும் மீன்களைக்
குறுக்கிட்டுத் தடுத்து அகப்படுத்தும் வலையையுடைய பரதவர் கட்டுமரங்களில் வைத்த
விளக்குகளும் மொழி வேறுபட்ட தேயத்தினர் வைத்த விடிவிளக்குகளும் மிகப் பெரும் பண்டங்களையுடைய
பண்டக சாலைக் காவலர்கள் இட்ட விளக்குகளும் எண்ணி அறிய முடியாதவாறு ஒன்று கூடி
மிகுவதனால்,
மாவின் கலப்பினை ஒத்த மிக நுண்ணிய மணலி்ன் மீது இட்ட
வெண்சிறு கடுகும் புலப்படக் காணும் காட்சியை உடையதாகிய மிகுந்த நீர்ப் பரப்பிலே
மணம் பொருந்திய மலரை உடைய தாமரையை வேலியாகக் கொண்ட மருத நிலம் போல் அழகுறத்
தோன்றும் தாழையை வேலியாக உடைய நெய்தல் நிலத்தின் கழிக்கானலிலே,
மகளிர் விளையாட்டு அணியினரோடு(ஆயம் - Team) பூங்கொடி போன்ற மாதவி சென்று இணைந்து விளாயாடி,
மலைதரும் பற்பல பண்டங்களும் கடல் தரும் பற்பல பண்டங்களும்
ஒன்று கலந்து கிடக்கும், வரிசை வரிசையாக நின்று மரக்கலங்கள் அசைகின்ற குற்றமற்ற
காட்சியையுடைய துறைமுகத்தை அடுத்துள்ள சோலை சூழ்ந்த இடத்தில்,
அரச குமாரரும், அவர்களின் உரிமைச் சுற்றங்களும் பரத(வாணிக)
குமரரும் அவர்களின் பல்வேறு பட்ட ஆய மகளிரும் உரிமைச் சுற்றங்களும் பல்வேறுபட்ட ஆய
மகளிரும் ஆடல் மகளிரும் பாடல் மகளிரும் என்று ஒவ்வொரு தொகுதியினரும் இருக்கும்
இடத்தையும் தீரைச்சீலை சூழ்ந்து நிற்க,
வேறு
வேறு கோலமும் வேறு வேறு ஆரவாரமும், விண்ணிலே சென்று முட்டும் பெரும் புகழையுடைய
கரிகால் சோழன் புதுப்புனல் விழா கொண்டாடிய பண்டை நாட்களில் விழாச் செய்யும்
களத்தில் போலவே வீறுபெறத் தோன்றின.
கடற்கரையை
நெரித்து விலக்கும் காவிரியின் கழிமுகம் எங்கும் வெற்றிடம் இல்லாதவாறு திரண்ட
நால்வகை வருணத்தாரின் அடங்காத ஆரவாரம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே ஓசையாய் நின்று
ஒலிக்க,
கடலினது
புலால் நாற்றத்தை முறியடித்த மடலவிழ்ந்த பூவையுடைய தாழை சூழ்ந்திருந்து காவல்
செய்யும் வேலியின் உள்ளே ஒரு புன்னை மரத்தின் நிழலில் புதிய மணற்பரப்பிலே
சித்திரத் திரைச்சீலையைச் சூழ வளைத்து மேற்கட்டும் கட்டி இடப்பட்ட யானைக் கொம்பால்
செய்த கால்களையுடைய கட்டிலின் மேலே யாழைச் சுமந்து வருந்தி நின்ற வசந்தமாலையின்
கையிலிருந்த திருந்திய நரம்பினையுடைய நல்ல யாழைச் செவ்வனே வாங்கி பெரிய மலர்
போலும் நெடிய கண்களை உடைய மாதவி கோவலனோடும் சேர்ந்து இருந்தாள்.
வெண்பா:
கடற்கரையிலுள்ள
மடல் விரிந்த தாழையின் உள்ளே செறிந்த வெண்மையான இதழின் கண் மாலைப் பொழுதில் துயின்ற
நீல நிறமுடைய வண்டு காலைப் பொழுதில் களிப்பூட்டும் தேனினையும் தாதினையும் ஊதும்படி
அழகிய தெளிந்த நிறத்தை உடைய வெம்மையான சுடரினை உடைய பரிதியின் தேர் தோன்றிற்று
தொடரும்.
தொடரும்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக