27.11.15

இராமர் பாலப் பூச்சாண்டி - 1

பதிப்புரை

            சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்ற பாடல் வரியில் இலங்கையைச் சிங்களத்தீவு என்று என்ன உட்கருத்துடன் பாரதி குறிப்பிட்டாரோ நமக்குத் தெரியாது, இன்று இந்திய ஆட்சியாளர்கள், அவர்களின் கட்சிகளில் இருந்து இங்கு பிழைப்பு நடத்தும் “தமிழர்”கள், மாறிமாறி நடுவரசில் அமைச்சர் பதவி என்ற எச்சிற்காக நடு ஆட்சியாளர்களின் காலை நக்கத் தயங்காத தமிழகத்துப் பெருங்கட்சிகள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களத் தீவாகவும் தமிழகத்தைத் தமிழக மக்கள் இல்லாத நிலமாகவும் மாற்ற முடிவெடுத்து முழுமூச்சாகச் செயலில் இறங்கிவிட்டார்கள். புரட்டி விடப் போகிறான் என்று வழக்கம் போல் பெரும் வரவேற்பளிக்கும் தமிழ்த் தேசியர்கள் ஊட்டிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் பதவியேற்ற இரணில் விக்கிரமசிங்க கடல் “எல்லை”யைத் தாண்டும் தமிழக மீனவர்களைச் சுட்டுத்தள்ளுவோம் என்று திமிரோடு பேசுகிறான். அவன் அப்படிப் பேசியதற்கு பெயருக்குக் கூட ஒரு மறுப்பைக் கூறாத இந்திய அரசு மேம்பட்ட கப்பல்களையும் படகுகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. தமிழகக் கடலோரக் காவல் படைக்கும் புதிய மேம்பட்ட கப்பல்களை இறக்கியுள்ளது. இவர்கள் தமிழர்களைத் தாக்க சிங்களக் கடற்படைக்குத்தான் உறுதுணையிருப்பார்கள் என்பது நம் நீண்டகாலப் பட்டறிவு. அது மட்டுமல்ல இலங்கைப் படையினருக்குத் தமிழக நீலகிரி மாவட்டம் உட்பட இந்தியாவில் மூன்றிடங்களில் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். சீனத்தின் செல்வாக்கிலிருந்து இலங்கையை விடுவிக்கத்தான் இவையெல்லாம் என்று நம் எத்தர்கள் சப்புக்கொட்டினாலும் இவர்கள் அளிக்கும் “உதவி” இன்று எத்தகைய வலிமையும் பாதுகாப்புமின்றி புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈசல்கள் போன்று இருக்கும் தமிழக, இலங்கைத் தமிழர்களை நசுக்கத்தான் உதவுமே ஒழிய யானை போன்று வளர்ந்து நிற்கும் சீனத்தைப் பொறுத்த வரை கொசுவுக்குக் கூட சமமாகாது. சொந்தத் தொழில்நுட்பம் என்ற ஒன்றின்றி வல்லரசுகள் இந்தியாவின் 135 கோடி மக்களின் உழைப்பையும் விளைப்பையும் இங்குள்ளோருக்கு உரிய தரகைக் கொடுத்து உறிஞ்சிவிட்டுக் கொட்டும் காலங்கடந்து போன போர்க் கருவிக் குப்பைகளுடன் பஞ்சாபு போன்ற இந்தியாவின் வடக்கிலுள்ள ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர தமிழகம் போன்ற அப்பாவி மாநிலங்களிலிருந்து செல்லும் வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு, தேவைப்பட்டால் மோதல்கள், ஏதங்கள், தற்கொலைகள் என்ற பெயரில் “அகற்றப்பட்டு” மனநிலை கெட்டுப் போய்க் கிடக்கும் இந்தியப் படையால் இன்று அமேரிக்காவே கண்டு நடுங்கி நிற்கும் சீனத்தை ஒரு நொடி கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. அந்தத் தெளிவிலும் துணிவிலும்தான் சீனத்து ஆட்சியாளர்கள் இப்போது தன் படைவீரர்களின் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்துள்ளனர். இந்த அழகில் இவர்கள் இலங்கையைச் சீனத்தின் பிடியிலிருந்து காக்கப் போகிறார்களாம்!

            இந்தப் பின்னணியில் அண்மையில் சிங்கள தலைமை அமைச்சர் இந்தியா வரவிருக்கும் நிலையில் தனுக்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்கும் சாலை அமைக்கும் உரூ. 34,000 கோடி திட்டம் பற்றி சிங்கள அரசுடன் பேச்சு நடத்த இருப்பதாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி 21 – 09 – 2015 தினமணியில் வந்துள்ளது.

            இந்தியாவின் தென் கோடி நிலப்பரப்புக்கு இடையில் ஏறக்குறைய 3700 ஆண்டுகளுக்கு முன் கடல் புகுந்து தமிழ் மக்களைத் தமிழகமாகவும் ஈழத்தீவாகவும் பிரித்துவிட அதற்கு ஏறக்குறைய 1200 ஆண்டுகளுக்குப் பின் பீகாரிலிருந்து துரத்தப்பட்ட விசயன் என்பான் ஈழத்தில் ஒரு பெண் பதவி வெறியால் தன் அண்ணனைக் காட்டிக்கொடுத்ததால் அவனைக் கொன்று ஈழத்தில் ஒரு பகுதியில் ஆட்சியை நிறுவ, அது வரை சேரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அத் தீவில் அயலான் ஒருவன் காலூன்றிய மகிழ்ச்சியில் பாண்டியன் காழ்ப்புணர்ச்சியால் தன் தங்கையை ஓடிப்போய் மணமுடித்துக் கொடுத்து சிங்களர் ஆட்சியை வலுவாக்கினான். இவ்வாறு காட்டிக்கொடுத்து காழ்ப்பையையும் பொறாமையையும் பதவி, பண வெறிகளைத் தீர்த்துக் கொள்வோருக்கும் அதன் மூலம் வளவாழ்வு வாழ்வோருக்கும் அடங்கி வாழ்ந்தே பழகிவிட்ட தமிழர்களாகிய நமது ஒட்டுமொத்த இருப்புக்கே இப்போது அறைகூவல் வந்துள்ளது. கடலால் பிரிக்கப்பட்ட நிலத்தைச் சுற்றி நம் முன்னோர் பயன்படுத்திய கடல்வழி இன்று சிங்களனின் கைப்பற்றில் இருக்கிறது. எனவே இடையில் மூழ்கிய நிலத்திலுள்ள, சேது என்று அழைக்கப்படும் கடலடி மேட்டுநிலத்தை அகழ்ந்து தெற்கிலிருந்து சென்னைத் துறைமுகம் செல்வதற்கு ஒரு கப்பல் தடம் அமைக்கவென்று நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலர், நிலத்தில் கடல் புகுந்ததென்பது தெரியாமலே, கடலால் சூழப்பட்ட ஒரு நாட்டின் கடற்கரை முழுவதையும் இணைக்கும் ஒரு கடல் வழி அந் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் எண்ணற்ற பொருளியல் சார்ந்த, சாரா நடவடிக்கைகளுக்கும் தேவை என்ற அடிப்படைச் சிந்தனையிலிருந்து  தீட்டிய திட்டத்தைச் செயற்படுத்த உலகப் போர்ச் சூழல்கள் இடம் கொடுக்காததால் அது வல்லரசியத் தரகர்களும் தமிழக வெறுப்பர்களுமான தில்லி ஆட்சியாளர்களிடம் மாட்டிக்கொண்டு திணறுகிறது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக அயல்நாட்டுக் கடல் வாணிகர்கள் குறிப்பிட்ட துறைமுகங்களில் இறக்கும் பண்டங்களை உள்நாட்டில் விற்றும் உள்நாட்டு மக்கள் விளைக்கும் குறிப்பிட்ட பண்டங்களை வாங்கி அயல்நாட்டுக் கடல் வாணிகர்களுக்கு விற்றும் தரகு பார்த்த அம்மண பனியாக்களால் இந்தியாவின் கடல் வாணிகமும் உள்நாட்டு அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியும் கருவறுக்கப்பட்டு வந்துள்ளன. அவர்களின் விருப்பத்துக்கு இசையவே கிரேக்க, உரோமானிய கடல் வாணிகர்கள் உள்நாட்டு வாணிகத்தில் தலையிடவில்லை. அதனால் தமிழகக் கடற்கரையில் இராமேசுவரத்துக்கு வடக்கில் இருந்த மரபு மீனவர்கள் வெளியேறியிருக்கின்றனர். இப்போது இருப்போர் கடந்த 200 ஆண்டுகளுக்குள் கடற்கரையில் குடியேறியதாக அவர்களே கூறுகிறார்கள். அதனால் இவர்களுக்கு மீன் பிடிப்பதைத் தவிர கடல் தொழிலில் அவ்வளவு ஈடுபாடும் இல்லை.

ஆனால் அரேபியர்களும் உள்நாட்டில் ஒடுக்கலுக்கு ஆட்பட்டுக் கிடந்த, பனியாக்கள் தவிர்த்த பல்வேறு தேசிய வாணிகர்களில் பெரும்பாலோர் முகம்மதியத்துக்கு மாறி நில வழி வாணிகத்திலும் போட்டிக்கு வந்த போதுதான் பனியாக்களின் விழி பிதுங்கியது. இந்தச் சூழலில் அரேபியர்களின் உலக வாணிகப் போட்டியை முடிவுக்குக் கொண்டுவரவும் தங்களுக்கென்று தனி வாணிகத் தொடர்புகளை உருவாக்கவும் களத்திலிறிங்கிய ஐரோப்பியர் இந்தியாவினுள் நுழைந்து உள்ளூர் தரகர்களின் துணையுடன் நாட்டைக் கைப்பற்றினர். மக்களின், குறிப்பாகப் பார்ப்பனர்களின் முன்முயற்சியால் உருவான இந்திய விடுதலைப் போராட்டத்தில் சாதி, வருண வேற்றுமைகளைப் புறக்கணித்து மக்கள் ஒன்றிணைவதையும் அதன் உச்ச கட்டமாக தமிழகத்து வ.உ.சி. தேசிய கப்பல் குழுமத்தை வெற்றியுடன் நடத்தியதையும் கண்டு மிரண்ட ஆங்கிலராட்சி தென்னாப்பிரிக்காவில் இருந்த மோகன்தாசு கரம் சந்து காந்தியைக் கரத்தைப் பிடித்து இங்கு கொண்டு வந்து இன்று அப்துல் கலாமுக்குச் செய்வது போல் அனைத்து ஊடகங்கள் மூலமும் மகாத்துமா படிமம் உருவாக்கி பனியாக்களுக்குப் பெரும் போட்டியாளர்களான வடக்கத்தி முகம்மதியர்களை பாக்கித்தான் எனும் புது நாட்டுக்குத் தூக்கியெறிந்துவிட்டார்கள். எஞ்சிய அனைத்து மக்களையும் ஓர் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து வகையிலும் ஒடுக்குகிறது பனியாக்களின் இந்திய அரசு. அதன் குறிக்கோள்களில் முதன்மையானது தமிழகத்தில், குறிப்பாக தமிழகக் கடற்கரையில் தொழில் முனைவுகள் எதுவும் உருவாகிவிடாமல் கண்காணிப்பாக இருப்பது. அந்த அடிப்படையில்தான் இந்த தமிழன் கால்வாய்த் திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளனர். தாழ் ஓதத்தின்(low tide) போது ஆங்காங்கு மேலே தலைகாட்டும் கடலடி மேட்டுநிலத்தை குரங்குகள் கட்டிய பாலம் என்று கற்பனை செய்து கதை எழுதிய வால்மீகியைப் பிடித்துத் தொங்குகிறார்கள் தமிழக மக்களின் பகைவர்கள். அன்று அத் திட்டத்தை நிறைவேற்ற தன் கட்சியின் டி.ஆர். பாலுவை நடுவரசு அமைச்சராக்கி ஆதாயம் பார்த்த கருணாநிதியின் நாக்கு இப் பொருள் பொறுத்து மட்டும் இன்று செத்துவிட்டதா என்ன?

            தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு எதிர்வினையாக, மாற்றுப்பாதை ஆய்வு நடைபெறுகிறது என்று கூறும் மோடியின் அமைச்சர் இப்போதும் அதையே கூறுகிறார். இராமாயாணப் போரும் இராமர் பாலமும் வெறும் கற்பனை என்றும் கடலியல் கோட்பாடுகளின் அடிப்படையிலும் இப்போதைய தடமே சிறந்தது என்பதை விளக்கும் இந் நூல், தமிழன் கால்வாய்ப் பணிகள் முடியும் முன் புதிதாகப் புறப்பட்டிருக்கும் இப் பாலம் கட்டப்பட்டால் கிழக்கில் சிங்களருக்கும் வடக்கிலும் மேற்கிலும் கன்னடர்களுக்கும் ஆந்திரர்களுக்கும் கேரளத்தாருக்கும் இடையில் தமிழக, ஈழ மக்கள் நசுக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுடன் பாலத்துக்கு வடக்கும் தெற்கும் வாழும் மீனவர்கள் மறுபக்கம் போக முடியாமல் சிறைப்பட்டுப் போவார்கள் என்பதால் உடனடியாக இடையில் நிறுத்தப்பட்ட தமிழன் கால்வாய்த் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந் நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.

            தமிழ் மக்களின் போர்க்குணத்தை இந்திய பனியா – பார்சி இந்திய அரசும் வல்லரசியமும் நன்றாகவே அறியும். வங்கத்து அரிமா சுபாசு சந்திர போசின் வழிகாட்டியாகிய எம்டன் புகழ் செய்கிந்து செண்பகராமனையும், மகா எத்தன் காந்தியைத் தூக்கிப்பிடித்த அப்பாவி தென்னாப்பிரிக்கத் தமிழர்களையும்(அதையும் வ.உ.சியையும் கண்டு அஞ்சியே தமிழகத்தை அந்த ஆள் குறிவைத்ததை நாம் மறந்துவிடக்கூடாது) சுபாசு சந்திர போசின் இந்தியத் தேசியப் படையில் மிகப் பெரும்பான்மையினராகிய அயல்நாட்டுத் தமிழர்களையும், குறிப்பாகத் தம் கூந்தலை அகற்றிப் போருடை அணிந்த தமிழ்ப் பெண்களையும் நம் கண் முன்னால் ஈழத்தில், வல்லரசியங்களின் மறைமுக ஆதரவுடன் இந்தியத் தரகு அரசினரை சிங்கள அரசின் பின்னணியில் இழுத்துவந்து நிறுத்திய ஈழத் தமிழர்களின் மாவீரத்தையும் கண்டு இந்திய ஆளும் கூட்டம் மட்டுமல்ல உலக வல்லிரசியமே தமிழர்களை எண்ணி நடுங்குகிறது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலரின் படை முன் மண்டியிட முன்வராத இந்தியத் தேசியப் படை வீரர்களுக்கு “விடுதலை பெற்ற” இந்தியாவில் இன்று வரை மரண தண்டனை காத்திருக்க, மண்டியிட்டு ஆதாயமடைந்தவர்கள் இங்கு தமிழக மக்களிடையில் சாதிய வெறித் தீயை தூண்டிவிட அது இன்றும் கனன்றுகொண்டிருக்கிறது. இன்று ம – ர். இராமதாசு, கொங்குநாட்டு ஈசுவரன் வகையறாக்கள் போன்றோர் பேரளவிலும் அதற்கு எதிர் அணிகள் என்ற பெயரில் நாளுக்கு ஒன்றாக முளைத்துக் கிளைத்து வரும் பிளவு விசைகளுக்கு பனியா – பார்சி – வல்லரசிய விசைகள் பணம் உட்பட அனைத்து உதவிகளையும் அளித்து வருவது கண்கூடு.

            தமிழக மக்களைப் பிளவுபடுத்தி பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணியின் கொள்ளைகளிலிருந்து அவர்களின் கவனத்தை வேறுபுறம் திருப்பும் இந்தக் கும்பல்களின் கீழறுப்பு வேலைகளை முறியடிக்க வேண்டுமென்றால் பொருளியலில் தமிழக மக்களின் முனைவுகளை வேரறுத்து இங்கு வாழும் மக்களின் வேலைவாய்ப்புடன் இம் மக்களுக்கு உரிமைப்பட்ட அனைத்து வளங்களையும் பறித்தும் அழித்தும் அவர்களை நாட்டை விட்டு ஓட்டத் திட்டமிட்டுச் செயற்படும் பனியா – பார்சி இந்திய ஆட்சியாளர்களின் அனைத்தும் தழுவிய கட்டமைப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இம் மக்களை ஒன்று படுத்தவும் அவர்களின் வாழ்வு வளம் பெறவும் ஒரே வழி என்பதை மீண்டும் ஒரு முறை கூறி களத்தில் இறங்க தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறோம்.   

11 – 10 - 2015                                                                                                             த.ம.பொ.உ.க.


மனந்திறந்து………

            ஈழத் தமிழர்கள் மீதும் தமிழக மீனவர்கள் மீதும் இந்திய – இலங்கை ஆட்சியாளர்களின் கூட்டுக் கொடுமை நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியர் என்று அறியப்படுவோரும் இந்திய அரசு தமிழக மக்களைக் காக்கும் என்ற மாயையை நிலைப்படுத்தும் வகையிலேயே தங்கள் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளனர். ஆனால் வரலாறு இவர்களின் நம்பிக்கைக்கு எதிரான நிகழ்வுகளையே காட்டுகின்றன.

            கி.மு.4ஆம் நூற்றாண்டில் அலெக்சாந்தரின் படையெடுப்பின் விளைவாக கங்கைச் சமவெளி கிரேக்கர்களின் முழுக் கட்டுப்பாட்டில் வந்த போது புத்த – அம்மண சமயங்களின் தாக்குதல்களால் பதுங்கியிருந்த வேதியர்களைத் துணை சேர்த்துக்கொண்டு புத்த சாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகத்தில் இராமன் காட்டுக்குச் சென்ற நிகழ்வோடு கிரேக்கர்களின் மறவனப்பான இலியதின் பெண் கடத்தலை இணைத்து வான்மீக இராமாயணம் எழுதப்பட்டதிலிருந்தே தென்னகத்தை வட இந்தியாவின் எதிரிகளாகக் காணும் போக்கு உருவாயிற்று. இதில் கிரேக்கர்களின் உண்மையான நோக்கம் தங்கள் வாணிக எதிரிகளான தமிழ்க் கடல் வாணிகர்களை வீழ்த்துவதுதான். தெற்கே கடலிலிருந்து இன்றைய தமிழகத்தினுள் நுழைந்த மூவேந்தர்களுக்கும் உள்நாட்டு மூலக்குடிகளுக்கும் நடைபெற்ற 13 நூற்றாண்டு மாபெரும் மோதல் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் முடிவுக்கு வந்தது. மாபெரும் கடலோடிகளான பழந்தமிழ் கடம்பர்களை சேரர்கள் கோவாவுக்குத் துரத்தியதுடன் தமிழர்களின் கடல் வாணிகம் முடிவுக்கு வந்தது. அந்த இடத்தை “நம்” தமிழ் அரசர்கள் கிரேக்கர்களுக்கும் பின்னர் உரோமர்களுக்கும் வழங்கினர்.

            இருப்பினும் வட இந்தியாவில் உருவான நந்த, மகதப் பேரரசுகள் நிலம் வழியாகத் தமிழகத்தினுள் கால் பதிக்க முடியாமல் மூலக்குடிகளின் வழி வந்த குறுநில மன்னர்கள் எல்லையில் வேலியாகக் காத்தனர். மூவேந்தர்களுக்கிடையிலான போர்களில் இக் குறுநில மன்னர்களின் பங்கேற்பு, இன்றைய தேர்தல் கூட்டணிகள் போன்று, வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்க அவர்களுள் அதியமான் நெடுமானஞ்சி, பாரி போன்ற ஒரு சிலர் வலிமை பெறுவது பொறுக்காமல் மூவரும் ஒன்றிணைந்து அவர்களைக் களத்தை விட்டு அகற்றினர். அத்துடன் தமிழகத்துக்கு இருந்த காப்பரணும் அகன்றது. அயலவர்கள் ஒவ்வொருவராக தமிழகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. இதற்கு மக்களுக்கும் அரசர்களுக்கும் இருந்த முரண்பாட்டைப் பயன்படுத்திய புத்த, அம்மண சமயங்கள் முகவர்களாகச் செயற்பட்டனர். தமிழ் வேந்தர்களோ மக்களுடன் இணக்கம் காண்பதற்குப் பகரம் வடக்கில் இச் சமயங்களின் நெருக்குதலால் தெற்கே நகர்ந்த வேதியப் பார்ப்பனர்களிடம் அடைக்கலமாயினர்.

            கழக இலக்கியங்களில் தமிழர்கள் கடலோடியதற்கான சான்று ஒன்றும் இல்லை. அகத்துறைப் பாடல்களில் ஆயிரத்துக்கு மேல் இடம் பெறும் பிரிவு குறிக்கும் பாலைத்திணைப் பாடல்களில் கடல்மேல் பிரிவைக் குறிக்கும் பாடல் ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்று                                 ப-ர்.வ.சுப.மாணிக்கனார் தான் எழுதிய பண்டிதர் ஆய்வேடான தமிழர் காதல் நூலில் கூறுகிறார். தொகுத்தோர் அத்தகைய பாடல்களை அழித்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டுக் கடல் வாணிகம் பற்றிய நேரடிக் குறிப்பு ஒன்றும் இல்லை. கோவலன் முன்னோன் பற்றியும் வஞ்சின மாலையில் புகாரின் கற்புக்கரசியர் பற்றிக் கண்ணகி கூறுவதிலும் வெளிப்படும் ஒன்றும் தவிர வேறு குறிப்பு இல்லை. மணிமேகலையில் ஆதிரை கணவன் சாதுவன் குறித்தும் சோழனின் மகனை அழைத்து வந்து இடையில் தவற விட்ட கப்பலும் தவிர வேறெந்தக் குறிப்பும் இல்லை. பட்டினத்தார் எனப்படும் திருவெண்காடரின் கடல் வாணிகம் பற்றி இடைக் காலத்திய செய்தி ஒருவேளை பிற இடங்கைச் சாதிகளின் தொழில்கள் போல் குமுக மதிப்பில்லாத ஒரு தொழிலாகவே இருந்திருக்கும். அனந்தரங்கம் பிள்ளை பிரஞ்சியரின் காலத்தில் வாணிகர்கள் எதிர்கொண்ட குமுக ஒதுக்குமுறையைப் பற்றிக் கூறுகிறார். ஆனால் தற்கால வரலாற்றுத் தொடக்க காலங்களில் ஐரோப்பியர்கள் தமிழகத் துறைமுகங்களில் தமிழகத் தொழில்வல்லோரைக் கொண்டு தமக்கு வேண்டிய மரக்கலங்களை உருவாக்கினர் என்று பதிந்துள்ளனர். இப்போதும் பெரிய மீன்பிடி மரப் படகுகள் தமிழகக் கடற்கரையில் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

            இன்றும் பண்டப் போக்குவரத்துக் கப்பல்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தாம் மிகுதியாகப் பணியாற்றுகிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவர்களின் தாய் மண்ணின் கடற்கரையை மீன் படிப்பது தவிர வேறெதற்காகவும் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்த முடியும் என்ற சிந்தனையே கடற்கரையிலிருக்கும் மக்களுக்கோ ஆட்சியாளர்களுக்கோ இல்லை.

            இந்திய விடுதலைப் போர் திலகர் தலைமையில் இயங்கிய முனைப்பியர்கள் கைகளில் இருந்த போது தமிழகத்தின் சிதம்பரனார் ஆங்கிலருக்குப் போட்டியாக வெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிய போதே ஆங்கிலருக்கு அடிவயிற்றைக் கலக்கியது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அவர் மீது ஏமாற்று வழக்குத் தொடர்ந்து இந்திய விடுதலை வரலாற்றில் எவருக்கும் வழங்கப்படாத கொடும் தண்டனையை வழங்கியதுடன் முனைப்பியத் தலைவர்களின் இடத்தில் தங்கள் கையாளாக மோகன்தாசு கரம் சந்து காந்தியை இனம் கண்டு தென் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தது ஆங்கில அரசு.

            தென்னாப்பிரிக்காவில் இந்திய மரபினர் குடியுரிமை பெற விரல்கள் நாட்டு(ரேகை) வைக்க வேண்டும் என்ற திட்டத்துக்கு எதிர்ப்பாக இந்திய மரபினரைத் திரட்டி இத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அனைவரையும் ஆணையிட(“சத்தியம்” செய்ய) வைத்த காந்தி பின்னர் ஆங்கில உள்துறை அமைச்சருடன் கமுக்கமாகப் பேசி ‘விரும்புவோர் மட்டும் விரல் நாட்டு வைத்துச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்’ (முதல் திட்டத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று காந்தியைத்தான் கேட்க வேண்டும் – இதுதான் “சத்திய சோதனை”யா?) என்று கூறியிருக்கிறார். இதில் காந்தி தரப்பினர்க்கும் பட்டாணிகளுக்கும் அடிதடிகள் நிகழ்ந்தன. காந்தி பக்கம் பெரும் பணம் படைத்த பார்சி ரசுத்தோம்சியும் ஆங்கிலரும் நிறைய ஏமாளித் தமிழர்களும் இருந்தனர். இவ்வாறு “சத்தியத்துக்குச் சோதனை”யாக வாய்த்த, ஆங்கிலரின் கூட்டாளியும் வழிகாட்டியுமான காந்தியின் வழிகாட்டலில் இந்திய “விடுதலை” “ஏற்பாடு செய்யப்பட்டது”. காந்தியின் சத்திய சோதனையைச் சான்று காட்டி 30-01-2014 தினமணியில் காந்திய அறிஞர் லா.சு.ரங்கராசன் என்பார் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து இச் செய்திகள் பெறப்பட்டன.
                        
            பகத் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்து விட்டு அதை நிறைவேற்றத் தயங்கிக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளருக்கு வரவிருந்த சூரத்து பேரவைக் கட்சி மாநாட்டைக் காட்டி அப்போது பகத் சிங் சிறையிலிருந்தால் மாநாட்டில் பெரும் கலகம் வெடிக்கும் என்று கூறி, “தூக்கிலிடுவதாயிருந்தால் மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிட்டுவிடுங்கள்” என்று இவர் மடல் எழுத அவர்கள் தண்டனையை நிறைவேற்ற மாநாட்டில் இவரே கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து நீலிக்கண்ணீர் வடித்தார். வீரபாண்டியன் என்பார் பகத் சிங் பற்றி எழுதியுள்ள நூல் தரும் செய்தி இது.

            ஆக, தென்னாப்பிரிக்காவிலேயே வடக்கத்தி முகம்மதியர்களுக்கு எதிராக பனியாக்கள், பார்சிகள், ஆங்கிலர்களின் கூட்டணி உருவாகிவிட்டது. அம்மண சமயம் சார்ந்த காந்தி இந்து வேடமிட்டது இந்தியாவில் பரந்து வாழ்வோரில் பெரும்பான்மையரைக் குறி வைத்து என்றால் இந்திதான் இந்தியவின் ஆட்சி மொழி என்றது மொழி அடிப்படையில் இந்தியாவில் பெரும்பான்மையரான இந்தி பேசும் மக்களைக் குறி வைத்து. அவரது இலக்கு தன் வகுப்பினரான பனியாக்களும் அவர்களில் அடங்கிய தன் மொழியினரான குசராத்திகளும் இந்தியாவை ஆட்டிவைப்போராக வர வேண்டும் என்பதுதான். அதற்கு இன்றியமையாமல் தேவைப்படுவது பல நூற்றாண்டுகளாகவே பனியாக்களின் கடும் போட்டியாளர்களாக விளங்கும் வடக்கத்தி முகம்மதியர்களை அகற்ற வேண்டும் என்பது திட்டம். திட்டம் நன்றாகவே செயற்பட்டது. சின்னாவின் பின்னணியில் முகம்மதியர்கள் திரண்டு முழுத் தன்னுரிமை கொண்ட மாநிலங்களின் கூட்டாட்சி அல்லது தனி நாடு கேட்டுப் போராடினர். இறுதிக் கட்டத்தில் நேருவும் பட்டேலும் பிறரும் இந்தச் சிக்கல் பற்றித் தலைகளைப் பிய்த்துக்கொண்டிருக்க, வழக்கம் போல் அய்யாவின் அறிவுரையின் பேரில் பிரிட்டன் அரசு இந்தியாவை இரண்டாகப் பிரித்து ஆணையிட்டது.

            “பிரிவினை” நல்லபடியாக நிறைவேற “நடிகர் திலகம்” கால்நடையாகச் சென்றார். வழியில் பனியாக்களான தன் வகுப்பு மக்களுக்காக உயிர் ஈகம் செய்தார். இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பாராயின் இன்னும் இந்தியாவில் எஞ்சியிருக்கும் முகம்மதியர்களையும் அங்கே தள்ளுவதற்கு கூடுதல் மாநிலங்களைப் பாக்கித்தானுடன் இணைக்கப் பாடுபட்டு மனித நேயர் என்ற தன் படிமத்தை இன்னும் கூடுதலாக ஒளிரச் செய்திருப்பாரோ? அப்படியும் சொல்வதற்கில்லை. சமய வெறி வளர்ந்தால் இந்துக்களும் முகம்மதியர்களும்தாமே அடித்துக்கொள்வர்? பனியா பார்சிகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பாதல்லவா?

            முகம்மதியர் தவிர்த்த பிறரின் நிலைதான் என்ன? விரும்பும் சமத்தானங்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தீர்மானம் இயற்றிக்கொள்ளலாம் என்ற வாக்குறுதியை நம்பி திருவிதாங்கூரின் திவான் சி.பி. இராமசாமியும் ஐதராபாத்து நிசாமும் தீர்மானம் இயற்றினர். இராமசாமியை மலையாளிகள் வெளியேற்றிவிட்டனர். நேருவை முகமூடியாக வைத்து நடந்த இந்திய ஆட்சியின் முதல் உள்துறை அமைச்சரான குசராத்தி வல்லபாய் படேல் படைகளை விடுத்தும் மிரட்டினார். திருவிதாங்கூரின் பெரும்பாமைக் குடிகளான தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தமிழரான இராமசாமியாரது நடவடிக்கையைப் புரிந்துகொள்ளும் தெளிவற்ற சில அறிவுக் கழுந்துகள்(மழுங்கல்கள்) அவரை இன்றும் திட்டிக்கொண்டிருக்கின்றன. பாரிய ஆந்திரத்துக்குள் சிக்கிக்கொண்ட ஐதராபாத்து மக்கள் இன்று தெலுங்கானாவைப் பெற்று மகிழ்கிறார்கள். கேரளத்துக்குள் சிக்கிக்கொண்ட திருவிதாங்கூர் தமிழ் மக்களுக்கு என்று விடிவு?

            காந்தி திட்டமிட்டபடியே ஆங்கிலர் காலத்தில் மும்பையில் பனியா - பார்சிகளின் தொழில்கள் நன்றாகவே வளர்ந்தன. சென்னை மாகாணத்தில் நயன்மைக் கட்சி ஆட்சியில் பல தொழில்களுக்கு அடித்தளமிடப்பட்டது. ஆனால் “விடுதலை”க்குப் பின் சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்த பேரவைக் கட்சி தமிழக நூற்பாலைகள் கதிர்களின் எண்ணிக்கையை மிகுப்பதற்குத் தடைவிதித்ததையும் கைராட்டைகளைப் பரவலாக்கப் பணம் ஒதுக்கியதையும் பம்பாய் மாகாணத்தில் நெசவாலைகள் வளர்ச்சிக்கு 100 கோடி ஒதுக்கப்பட்டதையும் பம்பாயைத் தலைமையகமாகக் கொண்ட சவளி மண்டலத்தின் கீழ் சென்னை மாகாணம் புதைக்கப்பட்டதையும் தமிழ்நாட்டாரின் பொருளியல் முனைவுகளை எப்படிக் கருவறுத்து இங்கு பனியாக்கள் காலூன்ற வாய்ப்பளித்தனர் என்பவற்றையும் அண்ணாத்துரையின் பணத்தோட்டம் நூலில் காணலாம். நடுவரசில் பண அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த கோடாரிக்காம்பு ஆர்.கே.சண்முகம்(செட்டியார்) பனியா – பார்சிகளின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தீட்டினார் என்பதையும் அந் நூலில் காணலாம். “செட்டியாரை”ப் பார்த்து நமது “நடிகர் திலகம்” நீயும் பனியா(வணிகன் என்பதின் திரிபு) நானும் பனியா என்று உறவாடி மயக்கியதாக சில ஆண்டுகளுக்கு முன் புதிய பார்வை என்ற இதழில் ஒரு குறிப்பு வந்தது. இன்றும் ப.சிதம்பரம் அவரின் தடத்தில் இன்னும் முனைப்பான செயல்பாட்டில் உள்ளார்.

            இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் ஆங்கிலராட்சியில் பெருமுதலாளியாக வளர்ந்த பனியா பிர்லாவின் வளமனையில் அமர்ந்து கொண்டு கைராட்டை வேள்வி செய்து கதிராடை, வரட்டி தட்டுதல் போன்ற “மரபுத் தொழில்களின்” பெருமை குறித்து பிற இந்தியர்களுக்கு “மகான் காந்தி” வேதம் ஓதிய இறும்பூதின் சிறப்பு விளங்கும்.

            ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில் தமிழகக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மீனவரல்லாத மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இலங்கை மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக்கினர். பலர் கொழும்பைச் சுற்றி பல்வேறு தொழில் வாணிகங்களில் ஈடுபட்டு செல்வம் திரட்டி தமிழகத்தில் நிலங்கள் வாங்கிப் போட்டனர். இந்தியாவும் இலங்கையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒரே நாடு போல் செயல்பட்டதால் இது எளிதாக நடைபெற்றது. ஆனால் ஆங்கிலர் அகன்றதும் மலையகத் தமிழர்களைத் தமிழகத்துக்குத் திருப்பவும் கொழும்பில் தொழில் செய்த தமிழ்நாட்டவரைத் துரத்தவும் நடவடிக்கை எடுத்தது சிங்கள அரசு. அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த இந்திய பனியா அரசு இலங்கையுடன் பனியாக்களின் தொழில் – வாணிக நடவடிக்கைகளை ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி உரூபாய்வரை இன்று வளர்த்துள்ளது.

            கடலுக்கு இரு புறங்களிலும் தமிழர் வாழும் பகுதிகளில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் மாபெரும் கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வல்லரசியம் திட்டமிட்டது. முதலில் இதில் கால் பதிக்க நினைத்த அரபு நாடுகள் ஈழத் தமிழர்கள் நடுவில் சமய அடிப்படையில் பிளவை ஏற்படுத்தியும் ஆதாயம் காண முடியாமல் ஒதுங்கின. பின்னர் நடுவம் பேச வந்த நார்வேயும் பிரபாகரனிடமிருந்து இவ் வளங்களில் எதுவும் எவருக்கும் கிடைக்காது என்று அறிந்து ஒதுங்கியது. இப்போது வல்லரசுகளின் ஊக்குவிப்புடன் சிங்கள அரசின் பின்னணியில் நின்று இந்தியா ஈழத் தமிழர்களை அழித்து ஊழித் தாண்டவம் ஆடிவிட்டது. இனி கடலுக்கு மேற்கேயுள்ள தமிழர்களை அப்புறப்படுத்த வேண்டியதுதான். அதற்கான ஆயத்த வேலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்துவிட்டன. அதுதான் காவிரி நீர்ச் சிக்கலின் பின்னணி. ஆனால் அதன் நோக்கம் முதலில் வேறாக இருந்தது. அமெரிக்காவில் மாடு வளர்க்கப் பயன்பட்ட சமவெளிகள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் தங்கள் இறைச்சித் தேவைகளுக்காக ஆசியாவில் தரிசு நிலங்களை உருவாக்கும் திட்டத்தில் தமிழகம் இடம் பெற்றிருந்தது. இப்போது அதனுடன் கனிமவளக் கொள்ளை நோக்கமும் இணைந்துள்ளது. எனவே காவிரிப் படிகையின் வேளாண் நிலங்களில் எண்ணெய்க் கிணறுகளும் எரிவளித் துளைகளும் அமைக்க ஆட்சியாளர்கள் முயல்வதும் மக்கள் எதிர்த்துப் போராடுவதும் இப்போது தொடர்கதையாகியுள்ளது. தெற்கில் மீனவர்களை அப்புறப்படுத்துவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இந்தியக் கடலோரக் காவல்படை, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டனர் என்று சான்றளிக்க, சிங்களக் கடற்படையினர் கடலில் அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துச் சிறைப்பிடிப்பது. பல தடவைகள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சிங்களர்கள் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்துள்ளனர். அவற்றை இந்திய பனியா அரசு கண்டுகொள்ளவே இல்லை.

            மூன்றாவது உத்தி கூடங்குளம் அணுமின் நிலையம். செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் அந்தக் கோளாறு இந்தக் கோளாறு என்று அந்த வட்டார மக்களை மிரட்டி வருகிறார்கள். அணுவுலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்களுக்கு எதிராக சாதியடிப்படையில் அவர்களை அடுத்து வாழும் மக்களை நிறுத்தியிருக்கிறார்கள் ஆட்சியாளர்களின் கைக்கூலிகள். ஒரு நாள் அணுவுலையில் பழுது, பாதுகாப்பான இடத்துக்கு ஓடுங்கள் என்று ஆளவந்தார் கூறினால் ஈழத் தமிழர்கள் போல் உள்நாட்டிலேயே ஏதிலிகளாவீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் என்று அம் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்ட தேரிக்காட்டில் 20,000 ஏக்கர் நிலத்தைப் பிடுங்கவந்த பார்சி டாட்டாக்கள் அப்படியே ஓய்ந்து விடுவார்கள் என்று நம்புகறீர்களா?

            தமிழக மீனவர்கள் மீதான சிங்களர்களின் தாக்குதலின் உச்சமாக சில ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள் கடத்தினார்கள் என்று இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் 5 ஐந்து பேரைச் சிறைப்பிடித்து திடீரென்று அவர்களுக்கு மரண தண்டனையைச் சிங்கள அரசு இப்போது விதித்திருக்கிறது. இந்த நடைமுறை அனைத்துத் தரப்பினரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி சினவெறியைக் கிளப்பியுள்ளது. அத்துடன் இந்தியாவினுள்ளும் வெளியிலும் தமிழர்கள் சாவதைக் கண்டு மகிழும், பிடித்து வைத்திருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளைக் கொடுக்கக் கூடாது என்று சிங்கள அரசுக்கு அறிவுரை கூறும், அமெரிக்கா இலங்கை மீது மனித உரிமை மீறல் தீர்மானங்கள் கொண்டுவருவதும் அது வெற்றி பெற்றால் இந்திய ஆட்சியாளர்களின் திருவிளையாடல்கள் அம்பலமாகிவிடும் என்று மிரட்டி அமெரிக்காவுக்கு நலம் தரும் வகையில் இந்தியாவை மிரட்டி சலுகைகள் பெற்றுத் தரும் வல்லரசிய மரணத் தரகன் சுப்பிரமணியன்சாமி இந்திய – சிங்கள அரசுகளுக்கிடையில் உள்ள கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை அடிப்படையில் மோடி அரசு மரண தண்டனை பெற்றோரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் என்று கூறியிருப்பது நமக்கு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

            பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியிலிருந்த பேரவைக் கட்சி ஆட்சியில் தி.மு.க.வுடன் பிறரும் வெட்கமின்றி தொட்ட இடமெல்லாம் வகைவகையாக நடத்திய ஊழல் கூத்துக்களுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதையே கேள்விக்குறியாக்கிய விலைவாசி ஏற்றங்களும் உருவாக்கிய கசப்புணர்வைப் பயன்படுத்தி மீ இற்றை உத்திகளுடன் மாபெரும் பரப்பல் – விளம்பரம் மூலம் அவர்களே அதிர்ச்சியடையும் வெற்றியை எய்தினார் மோடி. இவர்கள் செலவு செய்த மாபெரும் பணத்தின் மூலம் குறித்து நிறைய ஐயங்கள் எழுகின்றன. இந்திய பனியா – பார்சி முதலைகளும் உலகம் முழுவதும், குறிப்பாக பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் தொழில் துறையிலும் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தும் குசராத்திகளும், அமெரிக்க வல்லரசும் இந்த வெற்றிக்குப் பின்னணியில் உள்ளனர் என்பது எமது கணிப்பு. குசராத்துக் கலவரத்தைக் காரணம் காட்டி மோடிக்கு தங்கிசைவு(விசா) வழங்க அமெரிக்கா மறுத்தது ஒரு நடிப்பு என்பது எமது கருத்து. அமெரிக்கா மீது இந்திய மக்களுக்கு இருக்கும் வெறுப்பை நன்றாகவே உணர்ந்திருக்கும் அமெரிக்கா அதையே மூலதனமாக்கி மோடிக்கு வெற்றி வாய்ப்பை மிகுத்திருக்கிறது.

            இந்தியாவில் தமிழகத்தில்தான் மிகக் குறைந்த ஆதரவு மோடிக்குக் கிடைத்தது. மோடியின் அருஞ்செயல்களாகக் கூறப்படுபவற்றை மறுத்து, புள்ளிக் கணக்குகளைக் காட்டி குசராத்தை விட தமிழகம் தன் ஆட்சிக் காலத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது என்று செயலலிதா மேற்கொண்ட பரப்பல் மட்டும் இதற்குக் காரணமல்ல. மனித நாகரிகத்தையும் மொழியையும் உருவாக்கிய தமிழர்களின் முன்னோர் தங்கள் வளர்ச்சிக் கட்டங்களில் பல் வேறு துறைகளில் உருவான குழூஉக் குறிகளிலிருந்து பிராகிரதம்(முந்திச் செய்தது), சமற்கிருதம்(திருந்தச் செய்தது) ஆகிய மொழிகளை உருவாக்கினர். மக்களுக்குத் தலைவர்களாக முதலில் விளங்கிய பூசகர்களும் பின்னர் அவர்களாலேயே உருவாக்கப்பட்ட அரசர்களும் முதலில் மோதிக்கொண்டாலும் பொதுமக்களை எதிர்கொள்ள சமற்கிருதத்தைத் தங்களுக்கு மட்டும் மொழியாகக் கொண்டு தங்கள் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைத்தனர், அதை மக்கள் படிப்பதற்கும் தடை விதித்தனர்.

தெற்கில் கடற்கோளால் இறுதியில் தமிழகத்துள் நுழைந்த சேர, சோழ, பாண்டியர்கள் பூசகர்களின் மேலாளுமையை முற்றிலும் அகற்றியிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் முன்னால் பல்வேறு கட்டங்களில் ஒருவர் பின் ஒருவராக வட இந்தியாவினுள் நுழைந்தவர்களால் பூசகர்களின் இந்த மேலாளுமையை முறியடிக்க முடியாமல் போயிற்று. அங்கிருந்து அம்மண, புத்தர்களின் நெருக்குதலால் மேலே[1] கூறியுள்ளவாறு இங்கே நுழைந்த வேதியர்களிடம் தமிழ் அரசர்கள் அடைக்கலமாக வேண்டி வந்தது.

            ஆனால் தமிழக வரலாற்று இயக்கம் பிற பகுதிகளிலிருந்து வேறாக இருந்தது. முன்னாள் களப்பிர(கள்ளர் பிறர்) படைமானியத் தலைவர்களாக இருந்து அம்மணர்களாக மாறியவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிவனிய வேள்ளார்களுக்கும் முதலில் அம்மணர்களோடும் பின்னர் பார்ப்பனர்களோடும் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் பின்னர் சிவனிய – மாலிய பூசல்களாலும் பார்ப்பன மேலாளுமை எதிர்ப்பும் சமற்கிருத எதிர்ப்பும் அதன் பக்க விளைவாக வடக்கு எதிர்ப்பும் இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறது. அதைப் போல் சிதம்பரனாரின் கப்பல் குழுமம் காந்தியின் வயிற்றில் உருவாக்கிய கலக்கம் இன்றும் பனியா இந்திய அரசிடமிருந்து அகலவில்லை.

            பனியா பண்பாடு உள்நாட்டுத் தொழில் - வாணிகம் சராசரி குடிமக்களிடம் மேம்படுவதை விரும்புவதில்லை. அது போல் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியையும் விரும்புவதில்லை. அப்போதுதானே வெளியிலிருந்து இறங்கும் புதுமையான பண்டங்களை உள்நாட்டில் விற்றுக் கொள்ளையடிக்க முடியும்? உள்ளுரில் உருவாகும் பண்டங்கள் அண்டையிலேயே விற்றுப்போனால் இவர்களுக்கு இங்கு என்ன வேலை? சிவகாசியைச் சுற்றி உருவாகும் தீப்பெட்டியை வடக்கில் அவர்களைச் சில்லரைச் சந்தையில் விற்கவிடுவதில்லை. உப்பைக் கூட அதனை விளைக்கும் நாம் ஏற்றுமதி செய்ய முடியாது. அதே வேளை வடக்கில் உருவாகும் பண்டங்களை இங்கே தங்கள் ஆட்களை இறக்கி அவர்களைக் கொண்டு குறைந்த விலைக்கு விற்று அப் பண்டங்களில் வாணிகம் செய்யும் உள்ளுர் மக்களைக் களத்திலிருந்து அகற்றிவருகின்றனர்.

            உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி இவர்களுக்குப் பிடிக்காது என்றோம். அதனால்தான் கடலோடிகளைப் போல் நுண்வினைத் தொழிலாளர்களையும் இடங்கைச் சாதியராக்கி ஒடுக்கிவைத்தனர். இன்று புதிய தொழில்நுட்பங்களுக்கு பதிவுரிமம் வழங்க 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந் நாட்டுக்கு ஒரேயொரு அலுவலகம்தான் இருக்கிறது. கடவுச் சீட்டு வழங்க மட்டும் வெற்றிலைபாக்குக் கடைகளை விடக் கூடுதலான எண்ணிக்கையில் அலுவலகங்கள் உள்ளன. எனவே இந் நாட்டையே வெறுத்து வெளிநாடுகளுக்கு தொழில்நுட்பர்கள் ஓடிய நிலை மாறி “மனித வள ஏற்றுமதி” என்ற இழிவான பெயர் கொண்ட “புதிய” பொருளியல் கோட்பாடு அடிப்படையில் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் அயலவருக்கு உருவாக்கித் தரும் புதிய படைப்புகளை இறக்குமதி செய்து உள்நாட்டில் விற்றுக் கொள்ளையடிக்கின்றனர் இவர்கள். சீனத்திலிருந்து ஏறக்குறைய 1½ இலக்கம் கோடி உரூபாய்க்குப் பண்டங்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருக்கும் மோடி தனக்குத் தேர்தலில் வாக்களித்த மக்களின் வாழ்வின் அடித்தளம் அழிவது பற்றிய கவலை இல்லை. இறக்குமதியாகும் பண்டங்களை விற்றுக் காசு பார்க்கப் போகும் பனியாக்கள் நலனில்தான் நாட்டம். “இந்தியாவில் செய்வோம்” என்பவர் “இந்தியர்கள் செய்வோம்” என்று சொல்ல மனம் வருகிறதா? “மக்கள் செல்வம்” (சன்தன்) என்ற முழக்கத்தில் அன்றாடங்காய்ச்சிகளின் பணத்தை வங்கிகளிலிருந்து பனியா பெருமுதலைகளுக்கு அள்ளிக் கொடுத்து வாராக்கடனாக்கி பணத்தைப் வங்கிகளில் போட்டவர்களின் பணமதிப்பைப் புதைகுழிக்குள் தள்ளி வயிற்றிலடிக்கும் மோடி உலக உலா வந்து நெடுநாள் ஏமாற்ற முடியாது. என்னென்னவோ பேசும் மோடியின் வாயிலிருந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்துவோம் என்ற கூற்று தப்பித் தவறிக்கூட வர மறுக்கிறதே ஏன்? 

            இவ்வாறு இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் கேள்வி கேட்பாரற்ற பார்ப்பன மேலாளுமையோ சமற்கிருத, இந்தி மொழி ஏற்போ இல்லாததுடன் சிதம்பரனார் ஏற்றி நயன்மைக் கட்சி தூண்டிவிட்ட பொருளியல் உரிமை நெருப்பு இன்னும் கனன்றுகொண்டிருப்பதாலும் இந்திய ஆளும் கணத்தினரும் அவர்களை இயக்கும் பனியா – பார்சி - வல்லரசியக் கூட்டமும் தமிழகத்தை வெறுப்புடனும் அச்சத்துடனுமே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று இங்கு காலூன்றி விட்டால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கனவு காண்கின்றனர். அதன் முதற்படிதான் இந்த தூக்குத் தண்டனையும் அதிலிருந்து விடுதலை பெற்றுத் தருவதான நாடகமும். அடுத்து எந்த இராமர் பாலத்தைக் காட்டி தமிழன் கால்வாய்த் திட்டத்தை பா.ச.க.வினர் எதிர்த்தார்களொ அவர்களே இன்று அப் பாலத்துக்கு அப்பால் கால்வாயைத் தோண்டப் போவதாக அளக்கின்றனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடைவெளி விட்டா பாலம் கட்டினார்கள்? நிலப்பகுதியில் தோண்டத் திட்டமிட்டால் நாளை இவர்களே சூழல் கேடு, பல்லுயிர்மப் பாதுகாப்பு அது இது என்று கூறி நிறுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?

இந்த மாயமானைக் காட்டும் நாடகத்தின் ஓர் அங்கம்தான் பொன்.இராதாகிருட்டினனை சாலை – கப்பல் போக்குவரத்து இணையமைச்சராக்கியுள்ளது. முன்னரும் தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலுதானே இதே துறையின் “முதன்மை” அமைச்சராக இருந்தும் காரியம் ஒன்றும் நடக்கவில்லையே!

நிகழ்காலத்தில் தங்களுக்கு சாதி அடிப்படையில் உள்ளூரிலும் அரசியல் அடிப்பட்டையில் இந்தியாவிலும் செல்வம், நாட்டுரிமை அடிப்படையில் உலக அளவிலும் எந்த மதிப்பும் இல்லையே என்ற ஏக்கத்தால் பெரும் தாழ்வு மனப்பான்மை தமிழர்கள் மனதில் இருக்கிறது. அதைப் பயன்படுத்திப் புறப்பட்டிருக்கிறார் உத்திரகாண்டு மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க.பாராளுமன்ற உறுப்பினர் தருண் விசை என்பவர். அவரைத் தலைமீது சுமந்து திரிகின்றனர் தன்னை உலகில் இது வரை தோன்றிய புலவர்களின் அரசன் என்று இறுமாந்து திரியும் வைரமுத்துவும் வேறு சிலரும். இதற்கு முன்னும் ஆங்கிலேயரும் நேற்று சப்பானியரும் இதே போன்று உறவு கொண்டாடியே நம்மைச் சுரண்ட எதிர்ப்பு இல்லாத மனநிலையை நம்மிடம் உருவாக்கினர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவரும் பாரதியும் எங்கும் போய்விடமாட்டார்கள். ஆனால் நாம் மண்ணை இழந்தால் எதுவும் இருக்காது என்பதை மனதில் நிறுத்தி இவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயலலிதாவால் குற்றஞ்சாட்டப்பட்டு பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியும் வல்லரசிய மரணத் தரகன் சுப்பிரமணியம்சாமியும் நாற்காலிகளில் ஒய்யாரமாக வீற்றிருக்க அவர்கள் முன்பு தரையில் தலை குனிந்து சப்பணமிட்டு அமர்ந்திருக்கும், தன் சாதி மக்களையே மதிக்காத பொன்.இராதாகிருட்டினனும் பதவிக் கனவில் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசித் திரியும் தமிழிசையும் தமிழகத்தில் பா.ச.க.வை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் பயன்தரா. 1982இல் குமரி மாவட்ட மக்களிடையில் சமய மோதல் என்ற பெயரில் சாதி மோதலை ஏற்படுத்தி தாணுலிங்க நாடார் என்ற கோடாரிக் காம்பைப் பயன்படுத்தி உலகிலுள்ள பணக்கார “இந்து” நாடார்களிடம் பணம் கொள்ளையடித்து அவர்களின் தொழில்களுக்கே குழி தோண்டிக்கொண்டிருக்கும் தந்திரம் மீண்டும் எடுபடாது. தமிழக மக்கள் விழிப்பாக இருப்பார்கள், இருக்க வேண்டும்.

வந்திருக்கும் அறைகூவல் மீனவர்களுக்கோ காவிரிப் படிகை உழவர்களுக்கோ என்று நாம் ஒதுங்கியிருக்கக் கூடாது. 1956 நவம்பர் வரை திருவிதாங்கூரிலும் சுற்றிலுமிருந்த மநிலங்களிலுமிருந்த 9 வட்டங்களுக்காக இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த மக்கள் போராடிய போது தமிழக மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் அவற்றில் 4½ வட்டங்களை விட்டுக்கொடுத்துத் தமிழக மக்களுக்குக் காமராசரும் தன்னை நம்பி சிறை வாழ்வும் அடியுதையும் பட்டதோடு இன்னுயிர்களையும் ஈந்தவர்களுக்கு நேசமணியும் இரண்டகம் செய்த போது தட்டிக்கேட்டிருந்தால் பெரியாறு அணையையும் கண்ணகி கோயிலையும் இழந்திருக்க மாட்டோம். பெரியாற்று அணையின் நீர் மட்டம் உயர உயர மலையாளிகளின் அரசு என்ன செய்யுமோ என்று நொடிக்கு நொடி உள்ளம் பதற வேண்டியிராது. நெய்யாற்று நீருக்காக தமிழக அரசு நயமன்ற வாயிற்படியை மிதிக்க வேண்டி வந்திருக்காது. இனிமேலாவது தமிழகக் குடிமகன் எவனுக்கு எங்கு அயலவர்களால் சிறு தீங்கு ஏற்படினும் கொதித்தெழுந்து அவனுக்குப் பாதுகாப்பளிப்போம் என்று உறுதி எடுப்போம்.

தமிழன் கால்வாய் கடற்கோள் நம்மிடமிருந்து பறித்து விட்ட சொத்தைப் புதிய இடத்தில் உருவாக்கும் நடவடிக்கை. அதுதான் மீனவ மக்களின் இல்லாமை, கல்லாமை, வறுமை ஆகியவற்றை அகற்றி பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்குமுறைச் சிறைக்குள் முடங்கிக் கிடந்தவர்களை வாழ்வின் ஒளியை நோக்கி இட்டுச் செல்லும் ஒளி விளக்கு.

ஆட்சியாளர்களை நம்பியிராமல், ஆட்சியாளரின் வருமான வரி மிரட்டலுக்கு அஞ்சி தமிழ்நாட்டு மக்களிடம் பதுங்கிக் கிடக்கும் மாபெரும் செல்வக் குவியலைக் கொண்டு நாமே நிறைவேற்றப் போராடுவோம். இப் பணிக்காக முதலிடப்படும் பணத்திக்கு மட்டுமாவது வருமான வரி விலக்குக் கேட்டுப் போராடுவோம். 
வருமான வரியை முற்றாக ஒழிப்போம்!
ஒன்றிணைவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
வெல்க தமிழ்!
                                                வளர்க தமிழகம்!                                                 
                                                                                                                              அன்புடன்
குமரிமைந்தன்
திருமங்கலம்,
14 – 11 - 2014


[1] பக.1

0 மறுமொழிகள்: