இராமர் பாலப் பூச்சாண்டி - 2
இராமர் பாலப் பூச்சாண்டி
அறிமுகம்
ஒரு நாட்டைச் சுற்றிக் கடல் அமைந்திருப்பது
என்பது இயற்கை அந் நாட்டுக்கு அளித்த வரம் என்பது உலக வரலாற்றை அறிந்தவர்களுக்கு
மிக எளிதாக விளங்கும் உண்மை. பண்டை வல்லரசுகளான கிரேக்கமும் உரோமும் இடைக்கால
அராபியர்களும் அண்மைக்கால இங்கிலாந்தும் இன்றைய அமெரிக்காவும் எவர்
கவனத்திலிருந்தும் தப்ப முடியாத எடுத்துக்காட்டுகள்.
ஆனால் இந்தியர்களாகிய
நாம் தனிப்பிறவிகளல்லவா? நமக்கு எல்லாம் தலைகீழாகத்தான் நடக்கும். ஓர் அரிய
வாய்ப்பாக 6000 கிலோமீற்றர் தொலைவு நீண்ட கடற்கரை நமக்கு இருக்கிறது. ஆனால் இந்த
அரிய வாய்ப்பைத்தான் இங்குள்ள குறுகிய மனம் படைத்த ஆட்சியாளர்களும் அவர்களுக்குக்
கூட்டாளிகளான பனியாக்களும் வரலாற்றுக் காலம் முழுவதும் இப் பாரிய நாட்டின்
வலுக்குறைவாக்கி வைத்துள்ளனர். எவ்வாறு என்று கேட்கிறீர்களா? சொல்கிறோம்.
கடல் தொழில் செய்வோர்
தீண்டத்தகாதவர் என்று ஒதுக்குவதும் மேல் சாதியினர் கடலில் சென்றால் அவர்களைச் சாதி
நீக்கம் செய்வதும் 20ஆம் நூற்றாண்டு வரை நம் நாட்டில் நடைமுறையிலிருந்தது.
இராசாராம் மோகன்ராய் கடல் மேல் செலவு மேற்கொண்டதற்காக சாதி நீக்கப்பட்டது நமக்குத்
தெரியும். “மகாத்துமா” காந்தியை கன்னிமாகுமரி கோயிலினுள் நுழையவிட அங்குள்ள
பூசகர்கள் மறுத்ததை அறிவீர்களா?
கடல் வாணிகம்
அளவில்லாத ஆதாயம் தருவது. கடற்கொள்ளையர்களின் தொல்லைகள், எப்போது வேண்டுமானாலும்
சீறிப் பேயாட்டம் ஆடும் கடலின் கொடுமை ஆகியவற்றுக்கு ஈடு கொடுத்து தாங்களே
படைவீரர்களாகச் செயற்பட்ட கடல் வாணிகர்கள் வைத்த விலையைக் கொடுத்து அவர்கள்
எங்கெங்கெல்லாமோ இருந்து கொண்டுவந்து கொட்டும் பண்டங்களை வாங்க அனைத்து நாட்டு
மேல்தட்டினரும் ஆயத்தமாக இருந்தனர். இவர்களுக்கு வழங்குவதற்கென்று பண்டங்களைப்
படைத்து இவர்கள் வைக்கும் தவிட்டு விலைக்கு விற்று வயிற்றைக் கழுவ அனைத்து நாட்டு
அடித்தட்டு மக்களும் காத்துக்கிடந்தனர். இவ்வாறு அவர்கள் குவித்த செல்வம்
ஆட்சியினரின் கண்களை உறுத்தியது. தமிழகத்தில் இவ்வாறு வளர்ச்சி பெற்ற வாணிகச்
செல்வம் அரச கணிகையாகிய மாதவியை ஒரு வாணிகன் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வலிமை
பெற்றுவிட்டதை ஒரு குறியீடாகக் கொள்ள வேண்டும்.
சிலப்பதிகார – மணிமேகலைக்
காப்பியங்கள் அரசர்களுக்கும் வாணிகர்களுக்கும் நடைபெற்ற வாழ்வா சாவா மோதலின்
ஒப்பற்ற இலக்கியப் பதிவுகளாகும். ஆனால் இதில் வடக்கத்தி அம்மணர்கள், சிங்களப்
புத்தர்கள் ஆகியோரின் ஊடுருவலுக்கு முதன்மைப் பங்கு இருந்ததால் தமிழக அரசர்களும்
அழிந்தனர் வாணிகர்களும் அகன்றனர். கழக நூல் தொகுப்பில் தமிழர்களின் கடல் வாணிகம்
பற்றிப் பேசும் பாடல்களே இல்லை. அயல்நாட்டு வாணிகர்களைப் பற்றியே அவை பேசுகின்றன.
காதலர்களின் பிரிவு பற்றிப் பேசும் பாலைத்திணைப் பாடல்கள் 1000க்கும்
மேற்பட்டற்றில் கடல்வழிப் பிரிவைக் கூறும் பாடல் ஒன்றேயொன்றுதான் உள்ளது. உலகெலாம்
பரவியிருக்கும் தமிழர்களின் கடலோடிப் பெருமை கூறும் பாடல்களைக் கழக நூல்
தொகுப்பில் கழித்துக்கட்டியிருக்கின்றனர் தமிழகப் பண்டை அரசர்கள்.
ஏறக்குறைய 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாணிகப்
பெண்ணான காரைக்காலம்மையார் தொடங்கிவைக்க, தமிழ் வாணிகர்களின் பின்னணியில் உருவான
சிவனியப் புரட்சியில் உருக்கொண்ட சோழப் பேரரசு தமிழ் வாணிகர்களை அழிப்பதற்கு மிக
உயர்ந்த முன்னுரிமை கொடுத்திருந்தது. கடலோடிகளை இடங்கைச் சாதியினராக்கி அவர்களுடைய
சராசரி குடியுரிமைகளைப் பறித்தது. நில வாணிகர்களும் அதே ஒடுக்குமுறைகளுக்கு
ஆளாயினர். இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாத நில வாணிகர்கள் தமிழத்தை விட்டு
வெளியேறி வடக்கில் கழகங்களை உருவாக்கியிருந்தனர். அவர்களை அழிக்கவென்றே வடக்கே பல
முறை படையெடுத்தான் இராசேந்திர சோழன். கடல் கடந்து சாவகத்துக்குச் சென்று தங்கி
வாணிகம் செய்த தமிழ் வாணிகரை அழிக்கவே கடாரத்தின் மீது அவன் படையெடுத்தான்.
அது மட்டுமல்ல,
பொதுமக்கள் கைகளில் பணம் திரளுவது கூட சோழப் பேரரசர்களுக்குக் கசப்பாக இருந்தது.
செல்வம் படைத்தவர்கள், குறிப்பாக சிற்றரசர்கள் தங்கள் கட்டற்ற அதிகாரத்தில்
குறுக்கிடுவார்கள் என்பதே காரணம். இதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே எண்ணற்ற
கோயில்களைக் கட்டி அவற்றுக்கு நிலங்களை எழுதிவைக்கும் பண்பாட்டை உருவாக்கனர்.
கோயில்களை ஆட்சி அலகுகளாக மாற்றி படைப்பிரிவுகளை அங்கே நிலைநிறுத்தினார்கள். ஆறு
வேளைப் பூசை, இறைவனுக்கு பதினாறு வகைப் பணிவிடைகள் என்று நாட்டின் செல்வங்கள்
அனைத்தையும் திட்டமிட்டு அழித்தனர். மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்ந்தால் தங்களைக்
கேள்வி கேட்பார்கள் என்பதற்காகவே விருதுகள் என்ற சிறப்புரிமைகளை வைத்து
வலங்கையினர் – இடங்கையினர் என்று பிரித்து அவர்களுக்குள் தீராப் பகைமையை உருவாக்கி
நாள்தோறும் கொலைவெறிக் கலவரங்களை உருவாக்கி தங்களை நடுத்தீர்ப்பர்களாக
வைத்துக்கொண்டனர். ஆக குமுகத்தின் ஒட்டுமொத்த செல்வத்தை அழிப்பதையும் மக்களின்
ஒற்றுமையை உடைத்து அவர்களின் வலிமையைச் சிதைத்து அழிப்பதையும் தமிழகத்தை ஒருவர்
பின் ஒருவராக ஆண்டவர்கள் தங்கள் ஆட்சி இலக்காகக் கொண்டு செயற்பட்டனர். தமிழகம்
மட்டுமல்ல இந்தியக் கடற்கரை முழுவதும் காவலற்ற திறந்த மடமாகக் கிடந்தது. வடக்கிலோ
அங்கு வந்த அயல்நாட்டு வாணிகர்களிடம் பண்டங்களை வாங்கி உள்நாட்டில் விற்றும்
உள்நாட்டில் கிடைக்கும் பண்டங்களை வாங்கி அயலவரிடம் விற்றும் கொள்ளையடித்துக்
கொழுத்தனர் அம் மணர்களாகிய பனியாக்கள். அவர்களைப் பற்றிக்கொண்டு இந்தியாவினுள்
நுழைந்த பாரசீகர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள், குசானர்கள் போன்ற அயலவர்களைப்
பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
பார்ப்பனர்களுக்கும்
அரசர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் வாணிகர்களுக்கும் உருவான முரண்பாடுகளிலிருந்து
தோன்றிய புத்த, அம்மண சமயங்களின் நெருக்குதலிலிந்து தப்பிப்பதற்கென்று
கிரேக்கர்களுடன் இணக்கம் கண்டது வடக்கத்திப் பார்ப்பனியம். அப்போது கிரேக்கர்கள்
தெற்கின் வாணிகர்களின் போட்டியை எதிர்கொண்டனர். எனவே தெற்கின் புகழ் பெற்ற
மாவேந்தனான இராவணனை வடக்கின் அரச மரபைச் சேர்ந்த இராமன் வென்றதாக ஒரு கற்பனைக்
கதையை இருவரும் சேர்ந்து உருவாக்கினர். இதற்குப் பயன்பட்டது புத்த சாதகக் கதைகளில்
ஒன்றான தசரத சாதகம். இரண்டாம் மனைவியின் நெருக்குதலுக்கு அடிபணிந்த காசியை
ஆண்ட தசரதன் மூத்த மகனான மூத்த மனைவியின் மகனை 14 ஆண்டுகள் காட்டுக்குத்
துரத்துகிறான். அவனுடன் அவனுடைய தங்கை சீதையும் தம்பி இலக்குவனும் செல்கிறார்கள்.
மகனைப் பிரிந்த துயரம் தாங்காமல் 12 ஆண்டுகளில் தசரதன் இறந்து போக தம்பியையும்
தங்கையையும் மட்டும் தலைநகருக்கு விடுத்து தான் மட்டும் தந்தையின் ஆணைப்படி 14
ஆண்டுகள் காட்டில் இருந்து திரும்பி தங்கையை மணந்து ஆட்சி புரிகிறான் என்பது அக்
கதை. இந்தக் கதையின் நம்பகத் தன்மையே அண்ணனும் தங்கையும் மணம்புரிந்தது. மனித
நாகரிக வளர்ச்சியில் உடன்பிறந்தார்களிடையில் திருமணம் அனைத்து நாடுகளிலும்
நடைபெற்றுள்ளது. இந்தியாவிலும் அது நிகழ்ந்ததற்கான ஒப்பற்ற ஒரு பதிவு தசரத
சாதகமாகும். இந்தக் கதையில் காட்டிலிருந்த சீதையை இராவணன் கடத்திச் சென்றதாக ஒரு
கதைத் துணுக்கைச் சேர்த்து புனையப்பட்டதுதான் வான்மீக இராமாயணம். பெண்
கடத்தும் இந்தக் கதைத் துணுக்கு ஏற்கனவே கிரேக்கர்களிடம் ஆயத்தமாக இருந்தது.
அவர்களின் காப்பியமான இலியது என்பதன் கதை அடிப்படையே இதுதான்:
விருந்தாளியாக வந்த திராய் மன்னனுடன் கிரேக்க அரசி எலன் என்பவள் ஓடிவிட்டாள். அவளை
மீட்க கிரேக்க அரசர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயன்று திராய் நகரை அழித்து
வென்றதுதான் கதை. நம் பெண்கள் கற்பின் திருவுருவங்களல்லவா? அதனால் சீதையை இராவணன்
வலிந்து தூக்கிச் சென்றதாக ஒரு சிறு மாற்றம் செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
அதிலும் கம்பன் ஓரடி என்ன பல அடிகள் முன்னே சென்று சீதையை இராவணன் தொடை மீது
அமர்த்தித் தூக்கிச் சென்றதாக வான்மீகி கூறியிருக்க ஆகா, தமிழ்ப் பண்பாடு இடிந்து
தலை மீது விழுந்துவிடுமே என்று துடித்துப்போன கம்பன் அவளை மண்ணோடு சேர்த்துப்
பெயர்த்தெடுத்துப் போனான் என்று கூறி அதனைக் காப்பாற்றிவிட்டார். ஆனால்
கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள் என்ற சொலவடை என்றும் பொய்க்காது என்பதை வரலாறு
எப்போதும் போல இப்போதும் மெய்ப்பித்துவிட்டது. எப்படி என்று கேட்கிறீர்களா?
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக