சிலப்பதிகாரப் புதையல் - 7
5. இந்திரவிழவூரெடுத்த காதை
அலைநீ ராடை மலைமுலை யாகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தற்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருட் படாஅம் போக நீக்கி
5. உதய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங் கவிரொளி மலர்கதிர் பரப்பி
வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
காலதர் மாளிகை யிடங்களும்
கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
10. பயனற வறியா யவன ரிருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
15. பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங்
கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்
தூசுந் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
20. அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
25. மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பன்னிண விலைஞரோ
டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும்
கஞ்ச காரருஞ் செம்புசெய் குநரும்
மரங்கொஃ றச்சருங் கருங்கைக் கொல்லருங்
30. கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களுங்
35. குழலினும் யாழினுங் குரன்முத லேழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
40. கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோ ரிருக்கையும்
வீழ்குடி உழவரொடு
விளங்கிய கொள்கை
ஆயுள் வேதருங் காலக் கணிதரும்
45. பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ
டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
50. காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
55. நெடுந்தே ரூருநர்
கடுங்கண் மறவர்
இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும்
பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும்
இருபெரு வேந்தர் முனையிடம் போல
60. இருபாற் பகுதியி னிடைநில மாகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போ ரோதையுங் கொள்வோ ரோதையும்
நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென
65. வெற்றிவேன் மன்னற் குற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமா னேவலிற் போந்த
காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
70. துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப்
பெருநில மன்ன னிருநில மடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்
75. மூதிற் பெண்டி ரோதையிற் பெயர
மருவூர் மருங்கின் மறங்கொள்
வீரரும்
பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப்
80. பலிக்கொடை புரிந்தோர் வலிக்குரவம் பாகெனக்
கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற்
பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி
ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
85. வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்
குயிர்ப்பலி யுண்ணு முருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி
இருநில மருங்கிற்
பொருநரைப் பெறாஅச்
90. செருவெங் காதலின் திருமா வளவன்
வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம்
மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
95. அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
100. கோன்இறை
கொடுத்த கொற்றப் பந்தரும்
மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்
105. பொன்னினும்
மணியினும் புனைந்தன வாயினும்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின
துயர்தீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும்
110.
அரும்பெறன் மரபின் மண்டப மன்றியும்
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும்
கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய வாகிக்
115. கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக்
கொட்பி னல்லது கொடுத்த லீயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகின ராடிப்
120. பழுதில் காட்சி நன்னிறம் பெற்று
வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்
வஞ்ச முண்டு மயற்பகை யுற்றோர்
நஞ்ச முண்டு நடுங்குதுய ருற்றோர்
அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர்
125. கழல்கண் கூளிக்
கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்
தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
130. அறைபோ கமைச்சர் பிறர்மனை
நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்
135. அரைசுகோல்
கோடினும் அறங்கூ றவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப்
பாவைநின் றழூஉம் பாவை மன்றமும்
மெய்வகை யுணர்ந்த விழுமியோ ரேத்தும்
140. ஐவகை மன்றத்தும் அரும்பலி
யுறீஇ
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசங்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
145. தங்கிய கொள்கைத் தருநிலைக்
கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற
எடுத்து
மரகத மணியொடு வயிரங்
குயிற்றிப்
பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக்
கடைமுகத் தியாங்கணுங்
150. கிம்புரிப்
பகுவாய்க் கிளர்முத் தொழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரண நிலைஇய தோமறு பசும்பொற்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொற் படாகை
155. தூமயிர்க் கவரி சுந்தரச்
சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியிற் செறிந்தாங்கு
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்பரிப் புரவியர்
களிற்றின் தொகுதியர்
160. இவர்பரித் தேரினர் இயைந்தொருங்
கீண்டி
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென
மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும்
ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட
165. தண்ணறுங் காவிரித் தாதுமலி
பெருந்துறைப்
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி
மண்ணக மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டிப்
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
170. அறுமுகச்
செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
175. நான்மறை
மரபின் தீமுறை யொருபால்
நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்
அறவோர் பள்ளியும் அறனோம் படையும்
180. புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
திறவோ ருரைக்குஞ் செயல்சிறந் தொருபால்
கொடித்தேர் வேந்தனொடு
கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந் தொருபால்
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
185.
பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரொடு
எண்ணருஞ் சிறப்பின் இசைசிறந் தொருபால்
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலு ளாங்கண்
காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா
190. மாதர்க் கொடுங்குழை மாதவி
தன்னோடு
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ் வெய்திக் காமர்
195. பூம்பொதி நறுவிரைப் பொழிலாட்
டமர்ந்து
நாண்மகி
ழிருக்கை நாளங் காடியிற்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையுஞ்
சாந்தும் புலராது சிறந்து
நகையா
டாயத்து நன்மொழி திளைத்துக்
200. குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு
மரபிற் கோவலன் போல
இளிவாய்
வண்டினொ டின்னிள வேனிலொடு
மலய
மாருதந் திரிதரு மறுகிற்
கருமுகில்
சுமந்து குறுமுயல் ஒழித்தாங்கு
205. இருகருங் கயலோ டிடைக்குமிழ் எழுதி
அங்கண்
வானத் தரவுப்பகை யஞ்சித்
திங்களும்
ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்
நீர்வாய் திங்கள் நீள்நிலத் தமுதின்
சீர்வாய்
துவலைத் திருநீர் மாந்தி
210. மீனேற்றுக்
கொடியோன் மெய்பெற வளர்த்த
வான
வல்லி வருதலும் உண்டுகொல்
இருநில
மன்னற்குப் பெருவளங் காட்டத்
திருமகள் புகுந்ததிச் செழும்பதி யாமென
எரிநிறத் திலவமும் முல்லையும் அன்றியுங்
215. கருநெடுங்
குவளையுங் குமிழும் பூத்தாங்கு
உள்வரிக் கோலத் துறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
220. ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாணுடைக்
கோலத்து நகைமுகங் கோட்டிப்
பண்மொழி
நரம்பின் திவவியாழ் மிழற்றிப்
பெண்மையில்
திரியும் பெற்றியும் உண்டென
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
225. இகலம ராட்டி யெதிர்நின்று
விலக்கியவர்
எழுதுவரி
கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு
புக்க பெருந்தோட் கணவரொடு
உடனுறைவு
மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன்
கற்பின் மனையுறை மகளிர்
230. மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
மருந்தும்
தருங்கொல்இம் மாநில வரைப்பெனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்
235. உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து
கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன
எண்ணுமுறை இடத்தினும்
வலத்தினுந் துடித்தன
240. விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென்.
பொழிப்புரை
அலைகடலை ஆடையாகவும் மலைகளை முலையாகவும் மார்பில் பெரிய ஆறுகளை
ஆரங்களாகவும் மேகங்களைக் கூந்தலாகவும் கொண்ட இடம் அகன்ற பரப்பினையுடைய நிலமகளின்
இருளெனும் புதைப்பாகிய போர்வையை நீக்கி உதயகிரியின் உச்சியில் தோன்றி உலகை
விளங்க வைக்கும் கதிரவன் மலர்ந்த கதிர்களைப் பரப்பி,
நிலா
முற்றமும் பெரிய அணிகலன்கள் பொருந்திய அறைகளும் மானின் கண்கள் போலத் தோற்றம் தரும்
காற்றியங்கும் நெறியாகிய சாளரங்களையுடைய மாளிகைகளும்
கயவாய்ப் பக்கங்களில் காண்போரை மேற்கொண்டு நகரவிடாமல்
தடுக்கும் பயன் தொலைதல் இல்லாத யவனர் இருப்பிடங்களும்
மரக்கலம் தரும் செல்வத்தின் பொருட்டாக தாம் பிறந்த நிலத்தைக்
கைவிட்டுப் பிரிந்த பிற நாட்டார் பலரும் ஒரு நாட்டினர் போல் கலந்து
வாழ்ந்திருக்கும் விளங்குகின்ற அலைவாய்க்கரை இருப்பிடங்களும்
தொய்யில் குழம்பும் பூசு சுண்ணமும்(முகப்பொடி) குளிர்ந்த நறிய
கலவைச் சந்தனமும் விடுபூ, தொடுபூ முதலிய பூக்களும் புகைக்கு உறுப்பாகிய அகில்
முதலியனவும் பொருந்திய நறுமணப் பொருள்களாகிய சந்தனம் முதலியனவும் விற்போர்
திரியும் நகரத் தெருக்களும்
பட்டு
நூலாலும் மயிராலும் பருத்தி நூலாலும் நுண்ணிய வேலைப்பாடுகளை ஊசியால் பிணிக்கும் பட்டுச்
சாலியர் இருக்கும் இடங்களும் பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும் குற்றமற்ற
முத்தும் பிற மணிகளும் பொன்னும் ஆகிய இவை அளந்து அறிய முடியாத பல வளங்களும் தலை
மயங்கிய அகன்ற இடத்தை உடைய தெருவும்
பகுதி வேறுபாடு
தெரிந்த முதிரை முதலிய பண்டத்தோடு எண்வகைக் கூலமும் குவித்து விற்கும் கூலக்கடைத்
தெருவும்
பிட்டு வாணிகரும்
அப்பம் சுடுவாரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் வெள்ளிய
உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பாரும் பஞ்ச வாசம் விற்பாரும் பலவகை
உண்ணத்தக்க விலங்குகள், பறவைகளின் தசைகளை விற்பாருடன் எண்ணெய் வாணிகரும் நெருங்கி
இருக்கும் ஊன் நிறைந்த இருப்பிடங்களும்
வெண்கலக் கன்னாரும் செப்புப் பாத்திரம் செய்வாரும் மரத்தை
அறுத்துத் தொழில் செய்யும் தச்சரும் வலிய கையையுடைய கொல்லரும் சிற்பிகளும்(கல் நுண் வினைஞர்)
சுதையால் பாவையுள்ளிட்டன(ஓட்டை உருவம் = சுடுமண் சிற்பம் எனப்படுவது உட்பட) செய்வாரும் பொற்பணி
செய்யும் உருக்குத் தட்டாரும் இரத்தினப் பணித் தட்டாரும் தையற்காரரும் தோலில்
தையல் வேலை செய்யும் செம்மாரும் துணியாலும் நெட்டியாலும் பலவகை உருக்கள் செய்யும்
தொழில்களை வளர்த்துக் காட்டி குற்றமற்ற கைத்தொழிலால்
வேறுபட்ட இயல்புடையாரும் வங்கியத்தாலும் யாழாலும் குரல் முதலாகிய ஏழிசைகளையும்
குற்றமின்றி அமைத்து பண்களையும் அவற்றின் வழிப் பிறக்கும் திறங்களையும் பாடவல்ல
பெறற்கரிய இசை மரபினை அறிந்த பெரும்பாணர்களும் இருக்குமிடங்களும்
மற்றும்
சிறிய கைத்தொழில் செய்வாரும் பிறருக்குக் குற்றேவல் செய்வாரும் உறையும்
இடங்களும் குற்றமின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
பெரிய அரச விதியும் கொடியணிந்த
தேரோடும் வீதியும் கடைத்தெருவும் பெரிய குடிப்பிறப்பையுடைய வாணிகரது மாடங்களையுடைய
தெருவும் வேதியர் இருக்குமிடங்களும் யாவரும் விரும்பும் குடியினராகிய உழவரோடும்
சிறந்த கொள்கையுடைய மருந்துவ நூலோரும் சோதிடரும் வேற்றுமை தெரிந்த பல முறைமையோடு
இருக்கும் இருப்பிடங்களும்
மணிகளைப் பொருத்துவாரும் கோப்பாரும் சிறந்த கொள்கையொடு
அணியப்படும் வளையை அறுத்துச் செய்வாரும் வாழும் அகன்ற பெரிய வீதியும்
நின்றேத்தும்
சூதர், இருந்தேத்தும் மாகதர், வைதாளியாடுவார்(புகழ்ந்து ஆடுவோர்) ஆகியோரோடு
நாழிகைக் கணக்கராகிய கடிகையாரும் கோலத்தாலும் கூத்தாலும் அழகுபெறும் சாந்திக்
கூத்தரும் காமக் கிழத்தியரும் பரத்தையரும் அகக் கூத்தாடும் பதியிலாரும் அற்றைப்
பரிசம் கொள்ளும் பரத்தையரும் ஏவல் தொழில் செய்து உள்விடு காப்பவரும் தமக்குரிய தொழிலில்
பயின்ற குயிலுவக் கருவியாளரும் படைக்கும் விழாக்களுக்கும் கொட்டும் பலமுறையான
வாத்தியக்காரரும் நகைவேழம்பரும்(விதூடகரும்) இருக்கும் அவரவர் வகை தெரியுமாறு
அமைந்த இடங்களும்
விரைந்த
செலவினையுடைய குதிரைகளைச் செலுத்துவாரும் யானைப் பாகரும் நெடிய தேரினைச் செலுத்தும்
தேர்ப் பாகரும் தறுகண்மையையுடைய
காலாட்படைத் தலைவரும் இருக்கும் அரசன் கோயில் புறத்தை சூழ்ந்திருக்கும்
பெரிய பரப்பையுடைய இருப்புகளும் என்று பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோர்
நிறைந்த பாடலமைந்த(பட்டினப்பாலை) சிறப்பினையுடைய
பட்டினப்பாக்கமும்
பெருவேந்தர்
இருவர் போர் குறித்து வந்து தங்கிய பாசறை இருப்புக்கு இடைநிலமாகிய போர்க்களம் போல
இரண்டு பக்கத்தினவாகிய மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு
நிலத்துக்கும் இடைநிலமாகிய வரிசைபட நெருங்கிய சோலை மரங்களின் அடிகளே தூண்களாகக்
கட்டப்பட்ட கடைகளையுடைய பண்டங்ளை விற்போர் ஓசையும் வாங்குவோர் ஓசையும் இடையறாது
நடைபெற்ற நாளங்காடியில்,
சித்திரை
மாதத்தில் சித்திரை நாள்மீனில் நிறைமதி
பொருந்தியது. அந்நாளிலே,
வெற்றி
பொருந்திய வேலையுடைய முசுகுந்தன் என்னும் வேந்தனுக்கு வரும் இடையூறை ஒழிப்பாயென
தேவர்க்கு அரசனாகிய இந்திரன் ஏவுதலாலே அத் தேவர் உலகிலிருந்தும் சென்று தங்கி அந் நாள்
முதலாகப் பலி கொண்டிருக்கும் காவலாகிய பூதத்தின் வாசலில் பொருந்திய பலி பீடத்தில்,
அவரை, துவரை
முதலிய முதுரைப் பண்டங்களை வேகவைத்த புழுக்கலையும்(சுண்டல்?) எள்ளுருண்டையையும்
இறைச்சியுடன் கூடிய சோற்றையும் பூவினையும் புகையினையும் பொங்கல்
சோற்றினையும்(அல்லது மதுப்பொங்கலையும்) மதுச் சொரிந்து துணங்கை(சிங்கி)க் கூத்தினராயும் குரவைக்
கூத்தினராயும் தெய்வமேறி ஆடி எம் வேந்தனுடைய பெரிய நிலம் முழுதும் பசியும்
பிணியும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரக்கவென வாழ்த்தி வல்லமையுடன் உரைக்கும்
அழகிய கோலத்தையுடைய மறக்குலப் பெண்டிர் ஆரவாரத்துடனே பலியிட்டுப் போன அளவிலே,
மருவூர்ப்பாக்கத்திலுள்ள
மறத்தினைக் கொண்ட வீரரும் பட்டினப்பாக்கத்திலுள்ள படைக்கலமுடைய வீரரும் முற்படச்
சென்று வெவ்விய திறலை(கடிய போர்த்திறம்) உடைய எம் அரசருக்கு உறும் இடையூற்றை
ஒழித்து வெற்றி தருகவெனத் தம்மைப் பலியாகக் கொடுத்தோர் வலிமைக்கு எல்லையாகக்
கடவரென வஞ்சினம் கூறி கல்லினை வீசும் கவணினை உடையராய் ஊண் பொருந்திய கரிய தோலால் இயற்றப்பட்ட
கேடயத்துடன் பல வேல்களை உடையவராய் தோள் தட்டி ஆரவாரம் செய்து போர்க்களத்தைத்
தமதாக்கிக் கொண்டோர் அரிய அமர்க்களப் பரப்பிலே அச்சத்தை மூட்டி கடும் கொள்ளி போலும் கடை சிவந்த பார்வையையுடைய தமது பசுந்தலையை
வேந்தன் வெற்றி கொள்க என்று நன்றாகிய பலி பீடத்திலே நன்மை பொருந்த வைத்து
அப்பொழுதே உயிர்ப்பலி உண்ணும் இடியின் குரல் போலும்
முழக்கத்தை உடைய மயிர் சீவாத தோலால் போர்த்த வீரமுரசின் முழக்கத்தோடு உயிராகிய
சிறந்த பலியை ஊட்டி,
தமிழகத்திலே
தன்னோடு எதிர்த்துப் போரிடும் அரசரை மேற்கும் தெற்குமாகிய இரு திசைகளிலும் பெறாத
கரிகால் பெருவளத்தான் போரில் மிக்க விருப்பம் உடையவனாதலால் வட திசையிலாயினும் பகை
பெறலாமெனக் கருதி வாள், குடை, முரசு என்பவற்றை நல்ல நாளிலே புறப்படச் செய்து என்
வலி பொருந்திய தோள்கள் இத் திசையிலாயினும் பகைவரைப் பெற வேண்டுமென்று தான் வழிபடு
தெய்வத்தை மனத்தால் வணங்கி அந்த வட திசையிலே சென்ற அந்நாளில்,
இமயமலை
குறுக்கிட்டு விலக்கிற்று ஆதலால் மடிதல் இல்லாத மன எழுச்சியாலே மேலும் செல்ல
விரும்பும் என் விருப்பம் பின்னிட்டு ஒழியும்படி இம் மலை பகையாகக் குறுக்கிட்டுத்
தடுத்தது என வெகுண்டு தேவர் உறையும் அதன் குடுமியின் பிடரியில் தனது புலியைப்
பொறித்து அப்பால் செல்லும் கொள்கையைக் கைவிட்டு மீள்கின்றவனுக்கு,
கடலை
அரணாகவுள்ள நல்ல வச்சிர நாட்டரசன் திறையாகக் கொடுத்த முத்துப்பந்தரும் வாட்போரில்
வாய்ப்புடையவனாகிய நல்ல மகத நாட்டரசன் பகையிடத்து அதாவது போரில் தோற்றுத் தந்த
பட்டி மண்டபமும் (தருக்க மண்டபமும்)
அவந்தி
நாட்டரசன் மகிழ்ந்து கொடுத்த மிக உயர்ந்த தொழில்நுட்பமுடைய வாயில் தோரணமும்
பொன்னாலும்
மணியாலும் புனையப்பட்டனவாயினும் நுண்வினைக் கம்மியர், தொழில் வல்ல கம்மியரால்
செய்யப்படாதன, பிறர் துன்பம் நீங்குவதற்கேற்ற சிறப்பினையுடைய அம் மூவருடைய
முன்னோர் ஒவ்வொரு காலத்தில் செய்த உதவிக்குக் கைமாறாக மயன் இயற்றிக்கொடுத்த மரபை
உடையன. ஒன்றுக் கொன்று சேய்மை நாடுகளுக்குரிய அவை ஒரு நாட்டிலுள்ள ஒரே ஊரில்
ஒருங்கு சேர்க்கப்பட்ட, பெரியோரால் போற்றப்படும் பெறுதற்கரிய சிறப்புடைய மண்டபத்திலும்
புதியவர்கள்
தம் பெயரெழுதிய அடையாள எழுத்தினை இலச்சினையாக அமைத்த பல எண்ணிக்கையிலுள்ள பொதிகள்
பண்டகசாலை வாயிலையும் வலிய தாழை உடைய அரணாகிய காவலையும் உடைமையாளர் காத்திருக்கும்
காவலையும் நீங்கினவாதலால் அவற்றை எவராவது களவாடினால் அவர்களது கழுத்துக் கடுக்கப்
பொதியைத் தலையிலேற்றி ஊரைச் சுற்றச் சுற்றி வரச் செய்வதன்றி அவற்றை அவர்களுக்கே
கொடுத்து விடாததால் களவென்பதை மனத்தாலும் நினைப்பவரையும் நடுங்கவைக்கும் வெளியான
இடத்தையுடைய வெள்ளிடை மன்றமும்
கூனரும்
குள்ளரும் ஊமையரும் செவிடரும் தொழுநோயால் அழுகிய உடம்பை
உடையாரும் முழுகி நீராடிய அளவில் பழுதில்லாத தோற்றத்தை உடைய நல்ல உருவத்தைப்
பெற்று வலம் செய்து தொழுது நீங்கும் பொய்கையை உடைய இலஞ்சி மன்றமும்,
வஞ்சனை(செய்வினை)
செய்யப்பட்டு அல்லது வஞ்சகமாக மருந்தூட்டப்பட்டு பித்தேறினோரும் நஞ்சை உண்டு
நடுங்கும் படியான துன்பமுற்றோரும் தீப்போலும் நஞ்சுடைய நாகத்தின் கூரிய பல்
அழுந்தக் கடிபட்டோரும் பிதுங்கின கண்ணை உடைய பேயினால் கடுந்துன்பம்
அடைந்தோரும் ஒருக்கால் சுற்றிவந்து தொழுத அளவிலே அத் துயர்களை நீங்கவைக்கும்
ஒளியைச் சொரியும் நெடிய கல் நாட்டப்பட்ட மன்றமும்,
தவ உருவில்
மறைந்து நின்று கூடாவொழுக்கத்தில் ஒழுகும் தவத்தன்மை இல்லாதவரும் மறைவாகத்
தீயநெறியில் ஒழுகும் அறிவிழந்த கட்டுப்படுத்த இயலாத பெண்டிரும் காட்டிக்
கொடுக்கும் அமைச்சரும் பிறர் மனைவியை விரும்புவோரும் பொய்ச் சான்று கூறுவோரும்
புறங்கூறுவோரும் ஆகிய இவர்கள் என் கையிலிருக்கும் பாசக் கயிற்றில் அகப்படுவர்
என்று நான்கு காத வட்டத்திலும் கேட்கும்படி கடிய குரல் எழுப்பி அங்ஙனம் செய்வோரைக்
கயிற்றால் கட்டி நிலத்தில் அடித்து
உண்ணும் பூதச் சதுக்கமும்
அரசனது
செங்கோல் சிறிது வளைந்தாலும் ஞாயம் கூறும் நயமன்றத்தின் அவையோர் கூறுவது நேர்மை
திரிந்து ஒரு பக்கச் சார்பாயினும் நாவால் கூறாமல் துன்பக் கண்ணீர் சொரிந்து பாவை
நின்று அழும் பாவை மன்றமும்
ஆகிய,
உண்மையான இயல்புகளை உணர்ந்த உயர்ந்தோர் போற்றும் ஐவகைப்பட்ட மன்றத்திடத்திலும்
பலியிட்டு
இந்திரனின்
போர்ப்படையாகிய வச்சிரக் கோட்டத்தில் இருக்கும் மங்கல முரசை கச்சை அணிந்த யானையின்
பிடரிடத்தே ஏற்றி வெண்மையான ஐராவதமென்கிற யானைகளின் அரசனான இந்திரனின் ஊர்தி நிற்கும் கோட்டத்தில் கால்கோள் விழாவின் இறுதி
நிலையை முடித்து,
நிலவுலகில்
தங்கிய (அல்லது இந்திரன் தன் நிழலில் தங்கியதால் செருக்குற்ற) முறையாலே கற்பக மரம்
நிற்கும் கோயிலின் முன்னர் அட்டமங்கலம் பொருந்திய கொடியை வானிலே உயர்த்தி எடுத்து,
மரகதம்,
வைரம் என்னுமிவற்றை விளிம்பிலே பதித்த பசும்பொன்னால் ஆன பலகையை பவளத் தூண்கள் மீது
பொருத்தி உருவாக்கிய திண்ணைகளை உடைய நெடிய
நிலைகளையுடைய மாளிகைகளின் வாயில்கள் தோறும் கொம்புகளில் கிம்புரியையும் பிளந்த
வாயில் முத்து மாலைகளையும் கொண்ட அட்டமங்கலம் பொறித்த
வாசிகை வளைவாக வளையச் செய்த மகர தோரணங்கள் நிலைபெற்ற, குற்றமற்ற பசும்பொன்னால் ஆன
நிறைகுடமும் பொலிவுபெற்ற முளைப்பாலிகையும் பாவை விளக்கும் பசும் பொன்னாலாகிய
கொடியும் வெண்ணிற மயிரை உடைய சாமரையும் அழகிய சுண்ணத்துடனே(கோலத்துடன்?) பொருந்திய
இயல்பினை உடைய வீதியிலே நெருங்கி,
அங்கு
ஐம்பெருங்குழுவும் எண்பேர் ஆயமும் அரச குமரரும் வாணிக குமரரும் போட்டியிட்டு
விரையும் குதிரையினராயும் யானையின் திரட்சியினராயும் மேலே பாயும் குதிரை பூட்டின
தேரினராயும் தம்மில் பொருந்தி ஒன்றுபடத் திரண்டு,
தம் அரசனை
மேம்படுத்தற்கு அப் பதியின் கண்ணே புகழமைந்த வேந்தன் கொற்றம் கொள்வானாக என
வாழ்த்தி மிகப் பெரிய புவியின் கண்ணே மிக்க உயிர்களைக் காக்கும் ஆயிரத்து எட்டு
அரச மரங்களைத் தன் கரைகளிலே கொண்ட குளிர்ந்த நறிய காவிரியின் பூந்தாது நிறைந்த
பெரிய சங்கமத் துறையில் நன்றாகிய தீர்த்த நீரை பொற்குடத்தில் ஏந்தி மண்ணிலுள்ளோர்
மருட்சியுறவும் விண்ணிலுள்ளோர் வியக்கவும் வானோர்க்கு அரசனாகிய இந்திரனை மேன்மையான
நீரில் ஆட்டினர்.
பிறவாயாக்கைப்
பெரியோனான சிவனது கோயிலிலும் ஆறு முகத்தையும் சிவந்த நிறத்தையும் உடைய முருகவேளின் அழகு விளங்குகின்ற கோயிலிலும் வெள்ளிய சங்கு போலும் நிறத்தையுடைய பலதேவன் கோயிலிலும்
நீல நிற மேனியையுடைய நெடிய மாலவன் கோயிலிலும் முத்துமாலை அணிந்த வெண்கொற்றக்
குடையையுடைய இந்திரன் கோயிலிலும் மிக்க முதுமையையுடைய இறைவனது (சிவபெருமான் அல்லது
பிரமன்) வாய்மையில் தப்பாத நூலாகிய வேதங்கள் சொல்லிய நெறியிலே ஒரு புறம் வேள்விகள்
நடந்தன.
நால்வகைப்பட்ட
தேவரும் பதினெட்டு வகைப்பட்ட கணங்களும் என்று வேற்றுமை தெரிந்து வகுக்கப்பட்ட இனமாகிய தோற்றத்தை உடைய வெவ்வேறு
கடவுளரது விழா ஒரு பக்கம் சிறந்தது.
அருகர்,
புத்தர் பள்ளிகளிலும் அறத்தினைப் புரக்கும் சாலைகளிலும் மதிற்புறத்தேயுள்ள
புண்ணியத் தளங்களிலும் அறத்தின் கூறுபாடுகளை உணர்ந்தோர் அறத்தை அறிவுறுத்தும்
செயல் ஒரு பக்கம் சிறந்தது.
கொடியை
அணிந்த தேரையுடைய அரசனோடு பகையாகிச் சிறைப்படுத்தப்பட்ட மன்னர்களின் கால்களில் பிணைத்த தளையை நீக்கி விடுதலை
செய்வதற்கு ஒரு புறம் அருள் சிறந்தது.
கூத்தரும்
குழலரும் தோற்கருவியாளரும் பண் நிறைந்த யாழ் இசைக்கவல்ல புலவரும் கண்டத்தால்
பாடும் பாணர் என்ற இவர்களுடைய அளந்தறிவதற்கரிய சிறப்பினையுடைய இசைகள் ஒரு பக்கம்
சிறந்தன.
இரவும்
பகலும் இங்ஙனம் நடத்தலால் முழவின் கண்கள் அடங்குதலின்றி குறுந்தெருக்களும்
பெருவீதிகளும் விழாவால் களிப்பு மிகுந்த அகன்ற ஊரிடத்து,
தன்னால் காதலிக்கப்பட்ட கொழுநனைப் பிரிந்து ஊர்ச் சொல்லுக்கு
ஆளாகாத அழகிய வளைந்த மகரக் குழையையுடைய மாதவியோடு இல்லிலே வளர்கின்ற முல்லையும்
இருவாட்சியும் தாழியுள் மலர்ந்த குவளையும் வண்டு சூழும் செங்கழுநீரும் ஆகிய
பூக்கள் நெருங்கிய கோதையாகிய பிணையலால் விளக்கமுற்று காமமாகிய கள்ளுண்டு களித்து
அழகிய நறிய மணம் பொதிந்த பூம்பொழிலில் விளையாட்டை விரும்பி நாள்தோறும்
மகிழ்ந்திருக்கும் தன்மையுடைய நாளங்காடியில் பூ விற்கும் இடங்களில் பல பூக்களின்
மணமாகிய புதிய மணத்தினுள் புகுந்து அகில் புகை சந்தனம் ஆகியவை குறையாமல்
சிறப்பெய்தி நகைத்து விளையாடும் கூட்டத்தோடு காமக் குறிப்பாகிய மகிழ்ச்சி மொழியிலே
இடைவிடாது பயின்று குரல் என்னும் இசையைப் பாடும் வாயையுடைய பாணரொடும் நகரத்திலுள்ள
காமுகர்களோடும் உலாத்துகிற தன்மையை உடைய கோவலன் போல இளி எனும் இசையைப் பாடும் வண்டோடும் இனிய
இளவேனிலோடும் பொதியில் காற்றாகிய இளந்தென்றல் உலாவுதலைச் செய்யும் வீதியிடத்தே,
கரிய
மேகத்தைச் சுமந்து சிறிய முயல்கறையை ஒழித்து இரு மருங்கிலும் இரண்டு கரிய
கயலினையும் இடையே ஒரு குமிழ மலரையும் எழுதி அழகிய வானத்திடையே அரவாகிய பகைக்கு
அஞ்சி திங்களும் இந் நிலத்திலே மாற்றுவடிவில் திரிகின்றதோ என்றும்
ஈரம்
வாய்க்கப் பெற்ற திங்களாகிய பெரிய நிலத்தே அமுதத்தின் தன்மை பொருந்திய நீர்த்
திவலைகளைப் பருகி வடிவு பெற மகரக் கொடியை உடைய காமன் வளர்த்த மின்னல் கொடியானது
இந் நிலத்தே வந்ததோ எனவும்
பெரிய
நிலத்தை உடைய அரசருக்குத் தனது பெரிய வளத்தைக் காட்ட திருமகள் வந்து
புகுந்திருப்பது செழுமையான இந்த நகராகுமெனக் கருதி நெருப்பு போன்ற நிறத்தையுடைய
இலவ மலரும் பல முல்லை அரும்புகளும் மட்டுமின்றி இரண்டு பெரிய குவளை மலரும் ஒரு குமிழ
மலரும் ஆகிய இவற்றைப் பூத்து அப்பொழுதே வேற்றுருக் கொண்டு தனக்குப் பொருந்திய துணையாகிய
திருமகளைத் தேடி கள்ளத்தனத்தைக் கொண்ட தாமரை மலர் திரிவதும் உண்டோ எனவும்
அரசனது
செங்கோலை மறுத்த குற்றத்துக்கு ஆளாக வேண்டுமென்று அஞ்சி பல உயிர்களையும்
குடிக்கும் பிளந்த வாயையுடைய கூற்றுவன் ஆணின் தோற்றத்தினைக் கைவிட்டு ஆனால் கொலைத்
தொழிலைக் கைவிடாது நாணத்தைக் காட்டும் கோலத்தையும் நகை பொருந்திய முகத்தையும்
உண்டாக்கிக் கொண்டு வினையுடைய யாழின் நரம்பு போல் பண்ணமைந்த மொழியால் பேசி
பெண்ணுருவோடு இங்கு திரிவதும் உண்டோ எனவும்
காமனுடைய
ஒப்பற்ற பெரிய சேனையாகிய பரத்தையரது ஊடலாகிய மாறுபட்ட போரை இங்ஙனம் புகழ்ந்து
சொல்லி வென்று அவர் போகாமல் தடுத்துப் புணர்வதால் அவர்களுடைய மார்பிலும் தோளிலும்
எழுதிய தொய்யில் முதலியன தம் மார்பகம் முழுவதும் பதிந்திருப்பதால் ஊடலைத் தவிர்ப்பதற்காக
விருந்தினரோடு புகுந்த பெரிய தோளினையுடைய கணவரொடு உடன் உறைதலைப் பொருந்தி
முறைப்படி கூடிப்புணர்ந்த அருந்ததி போலும் கற்பினையுடைய இல்லற மகளிரை அக் கணவரே
இம் மாதருடைய ஒளி பொருந்திய முகத்திலிருந்து நீலமணி போலும் இதழையுடைய குவளைப்
பூக்கள் தோற்கக் காரணமாகிய கரிய கண்களின் கடைச் சிவப்பு நீங்கியதில்லை ஆதலின் இப் பெரிய
நிலவெல்லை இதற்கு ஒரு மருந்தைத் தரவல்லதோ என்று தம் நெஞ்சத்தோடு செயலற்று
நடுங்கும் விழா நடு நாளில்,
உள்ளேயுள்ள
நறிய தாதுக்கள் ஊறிப் பிலிற்றுதலால் தேன் அகம் நிறைந்து வெளிப்புறம் பொழிய நின்று
நடுங்கும் கழுநீர் மலரைப் போல் கண்ணகியின் கரிய கண்ணும் மாதவியின் சிவந்த கண்ணும்
உள்ளத்துள்ள பிரிவுத் துன்பத்தையும் இன்பத்தையும் தத்தம் உள்ளத்தின் திண்மை,
மகிழ்ச்சியின் நிறைவு ஆகியவற்றால் முறையே மறைத்து அகத்தே ஒளிக்கவும் நீரைச்
சொரிந்தனவாய் முறையே இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் துடித்தன இந்திரனுடைய விழா
நாள் அகத்து என்க.
இக்காதையிலுள்ள சிறப்புகள்
1. கடலை
ஆடையாகவும் மலையை முலையாகவும் பெரிய ஆறுகளை மார்பில்
கிடக்கும் ஆரமாகவும் மேகத்தைக் கூந்தலாகவும் கொண்ட பெண்ணாக நிலத்தையும் இருளைப்
போர்வையாகிய “புதைப்பா”கவும் மொழிந்திருப்பது சிறப்பாகும். தூங்கும் போது மூடும் போர்வையைப் “புதைப்பு”(பொதப்பு) எனக் குறிப்பிடும் வழக்கு
குமரி மாவட்டத்தில் உண்டு.
2. பூம்புகாரின் கிழக்கில்
மலை எதுவும் இல்லை. சேர நாட்டில்தான் கதிரவன் எழுச்சி மலைகளில் நிகழ்கிறது. இதை ஓர்
இடவழு என்னலாமா?
3.நிலா
முற்றத்துடன் அணிகலன்களும்
அலங்காரப் பொருட்களும் பொருத்தப்பட்ட அறைகளையும் மான்கண் போன்ற சாளரங்களையும் உடைய வளமனைகள் இருந்தன என்று முதலில்
கூறியிருப்பது அவ் வளமனைகளின் உயரத்தால் கதிரவனின் முதல் கதிர்கள் அவற்றில் படுவதால்
இருக்கலாம்.
4. யவனர்
எனப்படும் வெளிநாட்டினரின் இருப்பிடங்கள் அவர்களது தேவை எப்போதும் இருந்துகொண்டே
இருந்தது, எனவே, அவர்கள் நிலையான இருக்கைகளில் வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகிறது.
5. அவர்
தவிர்த்து, மரக்கலங்களில் பண்டங்களைக் கொண்டு சென்று விற்பதால் கிடைக்கும்
செல்வத்துக்காகத் தங்கள் பிறந்த நிலத்தை விட்டுப் பெயர்ந்து செல்லும் பல
தேசத்தவரும் ஒரு நாட்டவர் போன்று கலந்திருந்து வாழும் பகுதிகள் பற்றிய செய்தி உலக வாணிகம்
அன்றும் வலிமையாக இருந்தது என்பதற்கான சான்று.
6. நகர
வீதிகளில் கூவி விற்கப்படும் பொருட்கள், தொய்யிற் குழம்பாகிய வண்ணமும் பூசு
சுண்ணமும் சந்தனமும் விடுபூ, தொடுபூ, முதலியனவும் புகைக்கு உறுப்பான,
(1) அஞ்சனக்கட்டி
(4) ஆரம்
(2) அரியாசம் (5) அகில்
(3) பச்சிலை
முதலியனவும்
நறுமணப் பொருட்களான
(1) கொட்டம் (4) அகில்
(2) துருக்கம் (5) ஆரம்
(3) தகரம்
முதலியனவும்
பற்றி:
புகைக்கும்
பொருட்கள்:
(1)
அஞ்சனக் கட்டி (4)
ஆரம்
(2)
அரியாசம் (5) அகில்
(3)
பச்சிலை
இவற்றில் பச்சிலை, அகில், ஆரம் ஆகியவை கடலாடு காதையில்
விளக்கப்பட்டுள்ளன.
அஞ்சனக்கட்டி என்ற சொல் அபிதான சிந்தாமணி, கழகத்தமிழ்
அகராதி, தமிழ் மொழி அகராதி ஆகியவற்றில் இடம்பெறவில்லை. ஆனால் அபிதான
சிந்தாமணியில் துபம் என்ற சொல்லின் கீழ்: “பிசின்களாலும் கட்டைகளாலும்
உண்டாக்கப்படுவன. தேவர்களுக்கு மணமுள்ள பிசின்களால்
தூபமளிக்க வேண்டும். தேவதைகளுக்கு வேறு உக்கிரமான கட்டைகள் முதலிய புகை அமைத்தல்
வேண்டும்”. என்று கூறப்பட்டுள்ளது. அஞ்சனக்கட்டி
என்றுள்ளதால் இது ஒரு பிசினாக இருக்கக் கூடும்.
அரியாசம் என்பதற்கு அபிதான சிந்தாமணியில் சொல் இல்லை கழகத்தமிழ்
அகராதி ஒரு மணப் பொருள் என்று கூறுகிறது. தமிழ்மொழி அகராதியில் இச்சொ ல்
இல்லை. இதுவும் ஒரு பிசினாக இருக்கக்
கூடும்.
நறுமணப்பொருட்கள் ஐந்தும் கடலாடு காதையில்
விளக்கப்பட்டுள்ளன.
இவ் வீதிகளில் மட்டும் அலைந்து திரிந்து கூவி விற்கும்
வாணிகர்கள் தொழில் செய்தனரா என்பதொரு கேள்வி. தள்ளு வண்டி வாணிகர்களாக இருக்கலாமோ?
7. பட்டு,
மயிர் அதாவது கம்பிளி, பருத்தி நூல் ஆகியவற்றை கட்டுந்தொழில் என்பது பூத்தையலா,
ஆடை தையலா, நெசவா என்பது கேள்வி.
8. மயிர்
என்பதற்கு எலி மயிர் என்று உரை கூறுகிறது. எலி மயிர் என்பது எந்த வகை எலியின்
மயிர் என்பது குறித்து சீவக சீந்தாமணியில் திருத்தக்கத்
தேவர் கூறியுள்ள விளக்கத்தைத் தந்துள்ளார். மயிர் என்பதற்கு எலி மயிர் என்ற பொருளை
அடியார்க்குநல்லார் தந்திருப்பதைச் சுட்டி, செந்நெருப்புணுஞ் செவ்வெ லிம்மயிர்
அந்நெருப்புள வாய்பொற் கம்பலம் என்ற சீவக சிந்தாமணி வரிகளையும்
தந்துள்ளார். அபிதான சிந்தாமணியில் எலிபேதம் என்ற தலைப்பின்
கீழ் அருணம், சபலம், சுவேதம், கபோதம், உந்துரு, நச்செலி(மூஞ்சுறு), பலினி, சுசுந்தரி,
செந்தலைமுட்டி, செவ்வெலி, தூங்கெலி, உலைப்பெலி, புடையெலி, இரைப்பெலி முதலிய என்று தரப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்படும் செவ்வெலியைத்தான் சீவக சிந்தாமணி கூறுகிறது போலும்.
எண் வகைக்
கூலங்கள்:
1) நெல் 5) சாமை
2)புல்(கம்பம்புல்)
6) இறுங்கு
3)வரகு
7) தோரை,
4) தினை,
8) கழை நெல்
எட்டு என்று கூறுவர்.
1) நெல், 10) கொள்ளு
2) புல், 11) பயிறு
3) வரகு, 12) உளுந்து
4) தினை, 13) அவரை
5) சாமை, 14) கடலை,
6) இறுங்கு, 15) துவரை,
7) தோரை, 16) மொச்சை,
8) இராகி, 17) கழிநெல்,
9) எள்ளு, 18)
பச்சைப்பயிறு
என பதினெட்டு என்றும் கூறுவர்.
9. இன்று
போல் அழுக்கு நிறம் உள்ள மாசு நீங்கிய உப்பும் மாசு நீக்காத பளபளப்பான வெள்ளை
உப்பும் இருந்தனவா?
10. துணியாலும்
நெட்டியாலும் வடிவங்கள் அமைப்போர்: நெட்டி என்பது நீர் நிலைகளில் வளரும் ஒரு செடியிலிலிருந்து கிடைக்கும் “தெர்மோக்கோல்” போன்ற கனமற்ற
நுரை போன்ற ஒரு பொருள். இதில் கட்டடம், கோட்டைகள் போன்ற ஒப்புருக்கள் செய்ய முடியும்.
ஆந்திரத்தில் ஒரு நீர்ச் செடியிலிருந்து இது பெறப்படுவதாகத் தோன்றுகிறது.
11. மருவூர்ப்பாக்கத்தில்
பெரும்பாலும் வாணிகமும் பட்டினப்பாக்கத்தில் பெரும்பாலும் தொழில்களும்
அமைந்திருந்தன எனலாம்.
12. இந்தப் பகுதியில் பல்வேறு தொழில்களில் ஈட்பட்டிருப்போரின் தொழிற்
பெயர்களின் அரிய பட்டியலை அடிகள் நமக்கு அளிக்கிறார்:
மருவூர்ப்பாக்கத்தில்,
தெருவில்
சென்று விலை கூறி விற்பவர் - பகர்வனர் (Hawker)
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும்
நுண்வினைஞர் (அல்லது) நெய்வோர் -
காருகர்
பிட்டு வாணிகர் (அல்லது) வண்ணார் - காழியர்
அப்ப வாணிகர் - கூவியர்
கள்விற்கும் வலைச்சியர் - கண்ணொ (கள் நொ)டையாட்டியர்
மீன் விற்கும் பரதவர் - மீன் விலைப் பரதவர்
வெள்ளிய உப்பு விற்கும் உமாணர்
(அல்லது) அளவர் - வெள் உப்புப் பகருநர்
வெற்றிலை விற்பார் (அல்லது) கயிறு
திரித்து விற்போர் - பாசவர்
பஞ்சவாசம் விற்பார் -
வாசவர்
பல்வகை இறைச்சியை விற்போர் -
பன்னி(பல்+நி)ண வினைஞர்
எண்ணெய் வாணிகர் - ஓசுநர்
வெண்கலக் கன்னார் - கஞ்சகாரர்
செம்புப் பாத்திரம்
செய்வார் - செம்பு செய்குநர்
மரத்தை அறுத்துத் தொழில்
செய்வோர் - தச்சர்
சுதையாற் பாவை முதலியன
செய்வார்
(அல்லது) குயவர் - ஓட்டை உருவம்
செய்வோர் (அல்லது) சிற்பிகள் - மண்ணீட்டாளர்
பொற்பணி செய்யும்
தட்டார் - பொன் செய் கொல்லர்
இரத்தினப் பணித் தட்டார் - நன்கலம் தருநர்
தையல்காரர்
-
துன்னகாரர்
தோலில் தையல் செய்வோர் - தோலின் துன்னர்(Tanner)
அதே போன்று பட்டினப்பாக்கத்தில்,
உழவர்கள் (அல்லது)
காணியாளர் - வீழ்குடி உழவர்
மருத்துவர்
நூலோர்
- ஆயுள்வேதர்
வேகடி வேலை செய்வோர்
(அல்லது)
முத்துக்கோர்ப்போர் -
திருமணி குயிற்றுநர்
வளையை அறுத்து
இயற்றுவோர் - அணிவளை போழுநர்
நின்றேத்துவோர் - சூதர்
இருந்தேத்துவோர் - மாகதர்
வைதாளியாடுவோர்
(பள்ளியெழுச்சி பாடுவோர்) -
வேதாளிகர்
கடிகையர்
- நாழிகைக் கணக்கர்
கோலத்தாலும்
கூத்தாலும் அழகு பெறும்
சாந்திக்
கூத்தர் - கண்ணுளர்
காமக்கிழத்தியர்,
ஒருவருக்கு வைப்பாட்டியாக
வாழ்பவர்
- காவற் கணிகையர்
அகக் கூத்தாடும்
பதியிலார்
- ஆடற் கூத்தியர்
நாளுக்கு விலை பேசும்
பரத்தையர் - பூவிலை மடந்தையர்
ஏவல் பணி செய்து உள்வீட்டைக்
காத்து
வாழ்பவர்
- ஏவற் சிலதியர்
குயிலுவக் கருவிகளை
இயக்கி வாழ்பவர் - குயிலுவர்
படைக்கும்
விழவுக்கும் கொட்டும்
வாச்சியக்காரர் - பன்முறைக்
கருவியர்
விதூடகர்
- நகைவேழம்பர்
குதிரைகளைச்
செலுத்துவோர் - பரி கடவுநர்
யானைப் பாகர் - களிற்றின் பாகர்
தேர்ப்பாகர்
- தேர் ஊருநர்
13. அரசு சார்ந்தவர்களும் செல்வச் செழிப்புள்ளோரும் கலைஞர்களும்
பட்டினப்பாக்கத்தில் இருந்தனர்.
14. நாளங்காடி
மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப் பாக்கத்துக்கும் இடைப்பட்ட சோலையில் மரங்களின்
மூடுகளைத் தூண்களாகக் கொண்டு கட்டப்பட்ட கடைகளைக் கொண்டிருந்தது. இரு பக்கத்து
மக்களும் பயன்படுத்தும் வகையில் கடைகளைச் சுவர் கட்டாமல், அடிமரங்களைத் தூண்களாகக்கொண்டு
கட்டியவை என்பது பொருத்தமாக இருக்குமா? இன்று போல் கடை வாடகை அல்லது தீர்வை
தண்டப்பட்டிருக்குமா? அதைத் தவிர்ப்பதற்காக அடிமரங்களைப் பயன்படுத்திக்
கட்டியிருப்பார்களா?
அயல் நாட்டு வாணிகர்கள் தங்கள் பண்டங்களை வைக்கவும்
குடியிருப்பதற்கும் நிலையான கட்டிடங்களைக் கட்டியிருக்க அங்காடி வீதிக் கடைகள்
மட்டும் மரங்களின் மூடுகளை இணைத்துக் கட்டப்பட்டவை என்ற விளக்கம் சரியா என்ற
ஐயப்பாடு உள்ளது. இன்று போலவே அன்றும் நாள் அங்காடிகள் தூய்மை அற்ற நிலையில்தான்
இருந்தனவா அல்லது மரங்கள் அடர்ந்த சோலையில் மரங்களுக்கு இடையில் கம்புகளை நட்டு
ஒலைப்புரைகளாகக் கடைகளைக் கட்டி இருந்தனரா என்பது தெரியவில்லை. ‘’சோலையுள்ளே
கடைகளை ஒழுங்காகக் கட்டிய என்றுமாம்’’ என்ற
விளக்கத்தையும் வேங்கடசாமியார் தந்துள்ளார்.
15. பூதச் சதுக்கம் இருந்தது நாளங்காடியிலா?
16. முசுகுந்தன் எனப்படும் பண்டைச் சோழ மன்னனின் தொன்மக்கதை பூதத்தின்
தொடர்பில் புதைந்து கிடக்கிறது.
17. சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன
என்பது சித்திரை மாதம் வெள்ளுவாவன்று நிலவு சித்திரை நாண்மீனில் இருந்தது என்ற
பொருளைத் தருகிறது. கதிரவனின் தென் வடல் செலவுக்கும் அது பற்றிய நம் பண்பாட்டு
மரபுகளில் வருடத்தின் சித்திரை மாதப் பிறப்புக்கும் இருக்கும் 24 நாட்கள் இடைவெளி
அன்றும் இருந்தது தெரிகிறது. எனவே நட்சதிரமானம் ஆண்டுக்கும் சூரியமானம்
ஆண்டுக்குமான வேறுபாடே இதற்குக் காரணம் என்ற விளக்கம் பொருந்தாது. 71 ஆண்டுக்கு 1
பாகை நட்சத்திரமான ஆண்டு சூரியமான ஆண்டைவிட கதிரவனின் சுற்றுப்பாதை பின்னோக்கி
நகர்கிறது என்றால் கடந்த 1900 ஆண்டுகளில் 26 பாகைகள் நகர்ந்து சித்திரை மாத முழு
நிலா அன்று நிலவு வேறொரு நாள்மீனில் இப்போது இருந்திருக்கும். விரிவுக்கு
ஆசிரியரின் பொங்கல் திருநாளும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும் என்ற
கட்டுரையைப் பார்க்க.
18. புழுக்கல் என்பது சுண்டலா?
19. விழுக்கு உடை மடை = நிணத்துடன்
கூடிய சோறு - பிரியாணியா? இதனைப் புலவுச் சோறு என்றும் பண்டை இலக்கியங்கள்
கூறுகின்றன. இன்றும் பிரியாணி அரிசியைப் புலவரிசி என்றுதான்
குறிப்பிடுகின்றனர்.
20. பொங்கல்
- கள்ளென்பாரும் உளர் என்கிறார் வேங்கடசாமியார். உண்மையில் மதுக்குடம் என்பதே அதன்
பெயர். அரிசி மாவைத் தயிர் முதலியவற்றை கலந்து நொதிக்க வைத்துக் கொடைவிழா முடியும்
நாளில் எடுத்துப் படைப்பர். நொதித்துப் பொங்கி வழியும் அளவுக்கேற்ப அந்த ஆண்டு
விளைச்சல் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இது போன்ற பண்டங்களை
நொதிக்கவைக்கும் நுண்மி ஈற்று (yeast) எனப்படு்ம். வளி மண்டலத்தில் ஈற்று இருக்கும் அளவுக் கேற்ப நொதிப்பின்
செறிவு மாறுபடும். எனவே வளிமண்டலத்தில் ஈற்றுப்
பெருக்கத்துக்கும் பயிர் விளைச்சலுக்கும் தொடர்புண்டா என்று ஆயலாம்.
21. வேந்தனுடைய பெருநிலத்தில் பசியும் பிணியும் பகையும் நீங்கி மழையும்
வளமும் சுரக்கவென மறக்குடியாகிய மூத்தகுடிப் பெண்டிர் வாழ்த்தியதாகக்
கூறப்படுகிறது. மக்கள் குழுக்களில் செல்வம் படைத்தோர் என்ற ஒரு வகுப்பு உருவாகும்
முன் நாட்டைக் காப்பவர்களாகிய மறக்குடியினர்தாம் செல்வாக்குப் பெற்ற வகுப்பினராய்
இருந்தனர். அதனால்தான் அவர்களை மூதில் மக்கள் என்றனர். முதிய குடிப் பிறந்த
பெண்கள் என்பது முன்பு நம்மைக் காப்பதிலும் வளங்களை மிகுப்பதிலும் அவர்களுக்கிருந்த
பங்கின் அடிப்படையிலாகும்.
இதே
மறக்குடி என்ற வகைப்பாட்டில் வருபவர்கள் என்று தங்கள் செல்வாக்கைக் காப்பதற்காக
எதிரிகளுடன் இணக்கம் கண்டு மேல்சாதியினராக மாறினரோ அன்றே தமிழகத்தின் உள்வலிமை
அழிந்து போனது. காவலனே கள்ளனாகிவிட்டான்.
வழிபாட்டை எடுத்துக் கொண்டாலும் சினம், மிகுந்தவளாகக் கூறப்படும்
தமக்கையாகிய மூதேவி எனப்படும் தெய்வத்தையும் அவள் வழிபாடு மங்கிப் போனதையும் அவளது
தங்கையாகிய திருமகள் வழிபாடு செல்வாக்குப் பெற்றுள்ளதையும் கூறலாம்.
கலகலப்பின்றி
இருப்போரைத் “துக்கபிடிச்சு” இருப்பதாகக் கூறும் வழக்கு
முன்பு குமரி மாவட்டத்தில் இருந்தது. துர்க்கை என்பதன் மரூஉ இது. அப்படியானால்
மூதேவிதான் துர்க்கையா? அவ்வை என்பதற்கு தமக்கை என்ற பொருள் உள்ளது. அவ்வையாரம்மன்
வழிபாடும் மூதேவி வழிபாடாக இருக்கலாமா?
22. இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசனின் நலத்துக்காகவென்று தம்மையே பலியாகக்
கொடுப்பவர்களின் குடும்பத்தாருக்கு அரசர்கள் தாராளமான நல்கைகளை வழங்கியிருக்க
வேண்டும். இன்றும் தம் கட்சித் தலைவருக்காக என்று நாக்கை அறுத்துகொண்டு, கையை
வெட்டிக் கொண்டு மண்சோறு உண்டு, புரண்டு வலம் வந்து(அங்கப் பிரதட்சணம் செய்து)
அல்லது தீக்குளித்து, தங்களுக்கும் அல்லது தம் குடும்பத்தினருக்கும் நலன்கள் பெற்றுக்
கொள்ளும் மரபு இதன் தொடர்ச்சியென்று தோன்றுகிறது. அதாவது மக்களாட்சி என்ற பெயர்
இருந்தாலும் நம் நாடு இன்னும் மன்னராட்சி நடைமுறையிலிருந்து மாறவில்லை என்பது
தெளிவாகிறது.
23. தென்னகத்தில் உள்ள அரசர்கள் அனைவரையும் வென்று வடபுலம் சென்ற கரிகாலன்
இமயத்தைக் கடந்து செல்ல முயன்று பணிமலையைக் கடக்க இயலா நிலையில் அங்கு தன்
புலிக்கொடியைப் பொறித்தான் என்ற சிலப்பதிகாரச் செய்திக்கு, வடகிழக்கு
எல்லையில் சோழன் கணவாய் என்ற பெயரில் தொண்டு ஒன்று இருப்பது சான்றாக
உள்ளது.
24. வச்சிர வேந்தன் கொடுத்த முத்துப் பந்தலையும் மகத வேந்தன் கொடுத்த பட்டி
மண்டபத்தையும் அவந்தி வேந்தன் தந்த தோரணவாயிலையும் பெயர்த்தெடுத்து வந்து
பூம்புகாரில் அவை ஒரே மண்டபமாகச் சேர்க்கப்பட்டன என்பதுடன் அவை இவ் வரசர்களின்
முன்னோர் மயனுக்குச் செய்த உதவிகளுக்கு அவன் இயற்றித் தந்தவை என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது.
மயனைப்
பற்றிய ஒரு செய்தி, அவன் மேரு மலையில் அமைத்திருந்த ஒரு கோட்டையை வானூர்தியாக
இணைத்து அதில் பறந்துவந்து அந்த வானூர்தியைப் பாண்டவர்களுக்கு அத்தினாபுரத்தில்
ஓர் அரண்மனையாகப் பிணைத்துத் தந்தான் என்று கூறுகிறது. அப்படியாயின்
கட்டுமானங்களின் உறுப்புகளை ஓரிடத்தில் வார்த்து அதை பல்வேறு வகைகளில் இணைத்து
வேறுவகைக் கட்டுமானங்களாக மாற்றி மாற்றிப் பிணைக்கும் ஒரு தொழில்நுட்பம் நம்
தொல்நாகரிகத்தில் இருந்திருப்பதகாக் கொள்ள முடியுமா?
25. வெள்ளிடை மன்றத்தைப் பற்றிய குறிப்பில் கூறப்பட்டுள்ளபடியான ஒரு
அவையின் தேவையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறதா? இன்று பல கோடி மதிப்புக்கு
ஏமாற்றியவர்களுக்கு சில ஆண்டுகள் சிறைத் தண்டனையும சில ஆயிரம் பிழையும் விதித்து
தம் குற்றத்தால் ஈட்டிய செல்வத்தை எவ்விதக் குற்ற உணர்வுமின்றி நுகர விடுவதுடன்
ஏமாந்தவர்களையும் பறிகொடுத்தவர்களையும் தவிக்கவும் விடும் இன்றைய சட்ட - நயன்மைத் துறைகள் போல் அன்றும் இருந்ததா?
வெள்ளிடை மன்றத்தைப் பற்றிய குறிப்பு கூறுவது போல, திருடி அல்லது ஏமாற்றிப் பெற்ற
செல்வத்தைத் திருடர்கள் அல்லது எத்தர்கள் கைக்கொள்ளவிடாது அதே வேளையில்
அவர்களுக்குக் கடும் தண்டனையும் கொடுத்தால் பிறருக்குத் திருடும் எண்ணமே தோன்றாது.
இன்றைய நிலையில் திருடர்களும் எத்தர்களும் நல்வாழ்வு வாழ்வதைக் காணும் மனம்
உறுதியில்லாத சராசரி மக்களும் திருடவும் ஏமாற்றவும் துணிந்துவிட்ட நிலை முடிவுக்கு
வரும். திருடர்கள் தொடர்ந்து திருடவும் எத்தர்கள் தொடர்ந்து ஏய்க்கவும் உறுதுணையாக
இருக்கும் காவல்துறை முன்னெச்சரிக்கை என்ற பெயரில் சராசரிக் குடிமக்களின் அடிப்படைக்
குடியுரிமைகளைப் பறிப்பதை முடிவுக்குக் கொண்டுவரலாம். நோயைக் குணப்படுத்துவதை விட வருமுன்
காப்பது மேலல்லவா? எப்படி?
26. “வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர்” என்பதற்கு “வஞ்சனையால் சிலர் மருந்தூட்ட
உண்டு பித்தேறினார்” என்று வேங்கடசாமியார் உரை
கூறியுள்ளார். மந்திரவாதியை வைத்து காலடி மண் எடு்த்து அல்லது சீட்டு எழுதி வீட்டு
வளாகத்துள் புதைப்பது என்றெல்லாம் கூறப்படுகிறதே அதனை “வஞ்சனை
வைப்பது” என்ற சொல்லால் குமரி மாவட்டத்தில் குறிப்பிடும்
வழக்கு இருக்கிறது.
27. தவக்கோலம் பூண்டு தீய செயல்களில் ஈடுபடுவோரும் காட்டிக் கொடுக்கும்
அமைச்சர்களும் அக் காலத்திலும் இருந்தனர் என்பதுடன், எக்
காலத்திலும் இருப்பர் போலும்.
28. இத்தனை தீச்செயல்களுக்கும் தண்டிக்க அமைப்புகள் இருந்தாலும் அரசனும் நய
மன்றங்களும் செய்யும் குற்றங்களைக் கடியவென்று எந்த அமைப்பும் இல்லை. மக்கள்
தங்கள் துயரங்களையும் ஆத்திரத்தையும் அழுது தீர்த்துக் கொள்வது தவிர வேற வழியில்லை
என்பதைத்தான் “நின்றழும் பாவை” என்ற படிமத்தின் மூலம் விளங்க வைக்கிறாரா
அடிகள்? இன்றும் அதுதானே நிலை! இந்த 2000 ஆண்டுகளிலும் நிலைமை மேம்படவில்லை.
இதற்கொரு தீர்வை மனித இனம் விரைவில் எய்த வேண்டும்.
29. வச்சிரக் கோட்டத்திலிருந்து முரசை யானையின் பிடரியில் ஏற்றி
ஐராவதத்தின் கோயிலில் சென்று கால்கோள் விழவின் கடைநிலை சாத்தி என்பதற்கு முதலும்
முடிவும் என்று வேங்கடசாமியார் தொடக்கமும் முடிவும் என்று பொருள் கூறியிருப்பது
தெளிவில்லாமல் இருக்கிறது. வச்சிரக் கோட்டத்தில் தொடங்கி ஐராவதக் கோட்டத்தில்
முடித்து என்பது தெளிவான பொருள்.
30.
கற்பகத்தருவின் கோயிலில் கொடி ஏற்றுதல் என்பதோடு விண்ணவர் தலைவனை விழுநீராட்டி எனக் கூறி சிவன், முருகன் போன்ற தெய்வங்களின் கோயில்களைத்
தொடர்ந்து கூறுவதால் இந்திரனுக்கும் தனிக்கோயில் இருந்ததைக் குறிப்பாகப்
புலப்படுத்துகிறார் என்றே கொள்ள வேண்டும். ஆக இந்திரன் தொடர்பாக வச்சிரம்,
ஐராவதம், கற்பகம், இந்திரன் என்று நான்கு
கோயில்கள் இருந்துள்ளன. எனவே இந்திரனே பூம்புகார் நகரத்தின் தலைமைத்
தெய்வம் என்று கொள்ள இடமுள்ளது.
31. ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அரசகுமரரும்
பரதகுமரரும் புரவி, யானை, தேர் ஆகியவற்றில் ஒன்றுகலந்து வலம் வந்த அரச வீதியின்
செல்வச் செழிப்பை பவளத்தால் செய்த கால்கள்மீது மரகதம், வைரம் (இரத்தினம்)
ஆகியவற்றைப் பதித்த பொன் தகட்டாலான திண்ணையையும் பூண் செறித்த கொம்புகளையும்
பிளந்த வாயினுள் பரும் முத்துகளைப் பற்களாகவும் வாசிகை வடிவில் செய்த மகர
தோரணங்களையும் பசும்பொன் நிறைகுடங்களையும் முளைப் பாலிகைகளையும் பாவை விளக்கையும்
பசும்பொன் கொடிகளையும் சாமரையையும்
சுண்ணத்தையும் கொண்ட தெரு என விளக்கியுள்ளது எண்ணி வியக்கத்தக்கது. இந்தத் தெரு
அரச வீதியா அல்லது வாணிகர் வீதியா என்ற ஐயம் எழுகிறது. இரு வீதிகளுக்கும்
பொதுவானதாகவே இதைக் கொள்ள வேண்டும்.
32. ஐம்பெருங்குழு: அமைச்சர், புரோகிதர் சேனாதிபதியர், தூதுவர், சாரணர்
என்பது பொதுவான பட்டியல். அரும்பதவுரையாசிரியர் காட்டியுள்ளபடி மாசனம்(மா சனம்,
குடிமக்கள்), பார்ப்பார், மருத்துவர், நிமித்தர்,
அமைச்சர் என்பது ஒரு பட்டியல். இது முதல் பட்டியலை விடக் காலத்தால் முந்தியதாக
இருக்க வேண்டும். பார்ப்பார் என்பதை மாசனம் என்பதுடன் சேர்த்து சேனாதிபதியுடன்
ஐந்தாக அதற்கும் முன்பு இருந்திருக்கும், மாசனம் என்பது கல்வியாளர் (பார்ப்பார்)
அல்லது பூசகர், வாணிகர் - உழவர், பாணர் - கூத்தர் என்ற
மக்கள் பிரிவுகளின் பேராளர்களின் தொகுதியாக இருக்க வேண்டும். இதுவே
ஊர்ப்புறங்களில் உள்ளூர் ஆட்சித் தலைவரையும் சேர்த்துப் பஞ்சாயம் என்று வழங்கப்
பட்டிருக்க வேண்டும். அரசுக்கு முந்திய குக்குலக் குமுகத்தில் சாமன்கள் என்ற ஒரு
தலைமை இருந்தது. அதுதான் பின்னர்
பூசகர்(பார்ப்பார்), மருத்துவர், நிமித்தர் போன்றவையாக உழைப்புப் பிரிவிணை
பெற்றது. தொல்காப்பியம் குறிப்பிடும் ஐந்நிலத் தெய்வங்கள் அந்தந்த நிலச்
சாமன்களின் வழிவந்தவர்களாக மலர்ந்திருப்பார்கள்.
33. எண்பேராயம்: கரணத்தியல்வர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர்,
நகர மாந்தர், படைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் என்பது பொதுவாகத் தெரிந்த
பட்டியல்.
சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, வெற்றிலை, கஞ்சுகம், நெய்
என்ற இந்தப் பொருட்களை ஆய்ந்தோர் எண்பேராயத்தார் என்று அரும்பதவுரைகாரர்
காட்டியுள்ளபடி பொது நிகழ்ச்சிகளில் அவர்களது பங்கு என்ன? இன்றைய ஆட்சித்
தலைவர்கள் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது மேடையை அடுத்து அல்லது மேடையின் ஒரு
பகுதியாக ஓய்வு அறை, கழிவறை, குளியலறை, ஒப்பனை அறை போன்றவற்றை அமைக்கும் வழக்கம்
அன்றும் இருந்ததோ என்று தோன்றுகிறது. ஆனால், அரங்கேற்றுக் காதையில் எண்பேராயம்
கூறப்படாததால், இங்கு குறிப்பிடப்படுவது முதலிலுள்ளதாகத்தான் இருக்க வேண்டும். கலந்தாய்வுக்
குழுவாகிய எண்பேராயத்தை அரங்கேற்றல் விழாவின் போது தவிர்த்திருக்கலாம். ஒப்பனைப்
பணியாளர்கள் கூறப்படாமல் இரு
நிகழ்வுகளிலும் விடப்பட்டிருக்கலாம்.
34. ஐந்நிலப் பண்பாடும் அதனோடிணைந்த இந்திர வழிபாடும் நிலைப்படுவதற்கு முன்
உருவான கொற்றவை வழிபாட்டிலிருந்து சிவன் வழிபாடாகக் கிளைத்தும் அதனுடன் பலதேவன்
முதலிய பழைய தெய்வங்கள் மீண்டும் இருப்பது இந்திரவிழவூரெடுத்த காதையில்
இருந்து தெரிகிறது.
35. தன்னிடம் தோற்றுச் சிறைப்பட்டிருக்கும் அரசர்களை இந்திரவிழாவான
நன்னாளில் விடுதலை செய்தான் சோழ மன்னன். தமிழ்நாட்டில் 21ஆம் நூற்றாண்டில் நம்மை
ஆளும் கூட்டம் ஏதோவொரு நாள் என்று சொல்லி தனக்கு வேண்டும் போது போக்கிரிகளை
விடுவித்துத் தங்கள் தேவை நிறைவேறியதும் மீண்டும் சிறையிலடைப்பது போன்றதல்ல இது என்பதும் கூட நாம் 2000 ஆண்டுகளுக்குப் முன்பிருந்ததைவிட இழிவான ஓர்
அரசையே பெற்றிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
36. இந்திர விழாவின் போது பூம்புகார்த் தெருக்களிலே நடமாடிய பரத்தையரைப்
பற்றிய விளக்கங்கள் மிக உயர்ந்த இலக்கிய நயம் கொண்டவை. தன்னை விழுங்க வரும்
பாம்புக்கு அஞ்சி நிலவு பெண் போன்று வடிவம் பெற்று வந்ததோ? தான் இழந்த உடலை மீளப்
பெறுவதற்காக திங்களாகிய நிலத்திலே அமுதமாகிய நீரை ஊற்றி காமன் வளர்த்த மின்னல்
கொடியோ? அரசனுக்கு மிஞ்சிய செல்வம் தனக்கு இருப்பதைக் காட்ட திருமகள் இந் நகருக்குள்
வந்திருக்க அவளது துணையாகிய தாமரை அவளைத் தேடி இங்கு பெண்ணுருக் கொண்டு வந்ததோ?
(புகார் நகர வாணிகர்கள் அரசனைவிடவும் செல்வத்தில் மேலோங்கி இருந்தனர் என்பதைக்
குறிப்பிடும் இன்னோர் இடம் இது.) அரசனின் செங்கோலுக்கு அஞ்சி தன் வடிவத்தை மறைத்து
கூற்றுவனாகிய எமன் பெண்ணுருவில் திரிகின்றானா?
இந்த உவமைகளிலும் ஒப்பீடுகளிலும் இலக்கிய உணர்வு தவிர வேறு
உணர்ச்சி எதனையும் காட்டாவிட்டாலும் இறுதியில் நடுநற்காதையில்,
அருந்திற
லரசர் முறைசெயி னல்லது
பெரும்பெயர்ப்
பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர்
உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும்
பத்தினி யாகலின்
ஆர்புனை
சென்னி யரசற் களித்து (வரி 207 - 211வரை)
எவக் கூறித் தன் கசப்பையும்
வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். பரத்தையர் கூற்றுவனின் மாற்றுரு என்று கூறும்
அடிகளார் கூற்றுவனுக்கு அச்சத்தைத் தரும் அரசன் பரத்தையரைத் தெருவில் அச்சமின்றி
நடமாட விட்டிருக்கிறானே என்று சுட்டிக்காட்டுகிறாரா? ஆக வெகுளிச் சுவையை இன்பச் சுவை
போன்று மாற்றிக் காட்டியுள்ள அருஞ்செயலை நிகழ்த்தியுள்ளார் இளங்கோவடிகள்.
- காதல் கணவனை(கொழுநன் என்றே அடிகள் குறிப்பிடுகிறார்)ப் பிரியாத மாதவியோடு காமக் களிமகிழ்வெய்தி பூக்கள் மலிந்த நாளங்காடியில் புதிய மகளிரோடு கூடி(புதுமணம் புக்கு)விட்டு நகைத்துக் கும்மாளமிட்டுத் திரியும் நண்பர்களாகிய ஒழுக்கங்கெட்டவர்கள் குழாத்தோடு பேசிக் களித்து சிரித்து கும்மாளமிட்டு பாடல் இசைக்கும் பாணர்களோடும் நகரத்திலுள்ள ஒழுக்கங்கெட்டவர்களோடும் திரிகின்ற கோவலன் போல நாளங்காடியில் உள்ள மலர்க் கடைகளில் அல்லது பூங்காவில் இருந்து புதிய மணத்தை தாங்கிக் கொண்டு இசைபாடும் வண்டோடும் இளவேனிலோடும் இளந்தென்றல் திரியும் மருகில் பரத்தையரை எதிர்கொண்டு மறித்துக் கூடி அவர்கள் உடலில் உள்ள வரிக் கோலத்தை உடலில் தாங்கி கற்பு நிறைந்த தம் மனைவியரின் சினத்திலிருந்து அல்லது ஊடலிலிருந்து தப்புவதற்காக விருந்தினரை உடனழைத்துச் சென்றும் மனைவியரின் கருமையான கண்கள் சினத்தால் அல்லது ஊடலால் எய்திய கடைக்கண் சிவப்பை மாற்ற முடியாமல் கணவர்கள் கையற்று நிற்கும் நடுநாளில் கண்ணகியின் கரிய கண்ணும் மாதவியின் சிவந்த கண்ணும் உள்ளத்தில் நிறைந்திருந்த உணர்வுகளை மறைத்து நீரைச் சொரிந்தன என்கிறார். அதாவது கோவலன் கண்ணகியிடமோ மாதவியிடமோ காமக்கலை பற்றிய போதாமையால் திரியவில்லை; மனைவி இருக்கவும் நாளொரு பரத்தையோடு உறவாடிவிட்டு வரும் அவனுக்கும் கண்ணகிக்கும் முரண்பாடுகள் வந்ததால் மாதவி கணிகைதானே என்று நினைத்து அவன் மாதவியைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் அவளோ அவன் ஒருவனோடு மட்டும் இல்லறம் நடத்த வேண்டும் என்று நினைத்தாள். அதனால்தான் கண்ணகியின் கண்கள் துயரத்தால் நீருகுத்தன, மாதவியின் கண்கள் சினத்தாலும் அல்லது ஊடலாலும் கோவலனின் பொறுப்பற்ற செயலாலும் சிவந்து நீர் சொகுததன என்று கொள்வதே சரி எனத் தோன்றுகிறது. இது கடலாடுகாதையிலும் கானல்வரியிலும் மேலும் தெளிவாகும்.
37. பெண்களுக்கு இடது கண் துடிப்பது மகிழ்ச்சிக்கும் வலது கண் துடிப்பது துயரத்துக்கும்
அறிகுறி என்பதையும் வேங்கடசாமியார் பதிந்துள்ளார்.
38. இக் காதையில் இந்திரவிழாவின் தொடக்கம் பற்றியும்
புகார் மாநகரின் சிறப்பையும் விரிவாகச் சொன்னாலும் கோவலன் தெருச் சுற்றும்
வம்பர்களோடு சுற்றித் திரிந்துவிட்டு பரத்தையரைக் கூடிவிட்டு மாதவியின் வருத்ததுக்கு
ஆளானான் என்ற அளவில்தான் கதை நகர்கிறது.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக