திராவிட மாயை - 2
ஆம்பூர் திரு. க.எ.மணவாளன்
மடல் [தேமதுரத் தமிழோசை இதழ் 9/11 பக்கம் 39 - 41].
தமிழ்த்திரு. தமிழாலயனார் அவர்கட்கு வணக்கம், தேமதுரத்
தமிழோசையில் குமரிமைந்தனார் எழுதும் தொடர்கட்டுரை குமரிக் கண்ட அரசியல் காலத்தின்
சுவடுகள் - குழப்பத்தின் முடிவுகள் சூன் 2009 இதழில் பெரியார் கன்னடத்தைத் தாய்
மொழியாகக் கொண்ட ஒரு தமிழகக் குடிமகன். தமிழர் கழகம் என்று புதிய பெயர் முடிவு செய்திருந்த நிலையில்
தன்மான இயக்கத்தை அண்ணாத்துரையுடன் சேர்ந்து கமுக்கமாக திராவிடர் கழகம் என்று
மாற்றியதில் அவருக்கு (பெரியாருக்கு) குணா குற்றம் சாட்டுவது போல் தமிழகத்தில்
வாழும், தெலுங்கர், கன்னடர், மராட்டியர்கள், மலையாளிகள் நலன் என்ற நோக்கம்
இருந்திருக்கலாம், ஆனால் தமிழ்த்தேசியப் போராட்டம்
திசைமாறியதில் திராவிடர், என்ற அடையாளம் காரணமே அல்ல என்று எம்மால் உறுதியாகச்
சொல்ல முடியும் என்று கூறி விட்டு [1 என்று அடிக்குறிப்பை தருகின்றார்] ஏனென்றால்
தேசியப் போராட்டம் என்று உள்ளடக்கத்தில் பொருளியல் உரிமைப் போராட்டம், தேசிய
ஒடுக்குமுறையாளர்களின் அறுதி நோக்கம் தாங்கள் ஒடுக்கும் நிலத்தின் செல்வங்களை
சுரண்டிச் செல்வதுதான். அதற்கு சுரண்டப்படும் தேசியத்தின் மொழி பண்பாடுகளைத்
தாங்கிக் கொண்டு அது உள்நுழைந்து பின்னர் அந்த அடையாளங்களை அழிக்கலாம் என்று
மேலும் கொடுக்கும் விளக்கங்கள் குமரிமைந்தனாரின் குழப்பத்தை விளக்குகின்றது.
தேசியப் போராட்டம் தோன்றலுக்கான சூழலை விளக்குகின்றார்.
வர்க்கப் போராட்டச் சூழலை தேசியப் போராட்டத்தின் மேல் ஏற்றி கூறுகின்றார். (தமிழ்த்) தேசியப் போராட்டம் என்பது
தமிழகத்தில் நடப்பது, வர்க்கப் போராட்டம் தெலுங்கு தேசத்தில் நடக்கும் மக்கள்
போர்க் குழுப் போராட்டம். முன்னது மொழியையும் பண்பாட்டு நாகரிகத்தையும், தன்
மண்ணையும் காப்பாற்றிக் கொள்ள நடப்பது. பின்னது பொருளியலை முன்வைத்து நிலக்கிழார்,
பண்ணைக் கொத்தடிமை, ஏழை பணக்காரன் தொழிலாளி, முதலாளி என்ற பொருளியலை அடிப்படையாகக்
கொண்ட போராட்டம்.
தமிழ்த் தேசியப் போராட்டம் திசை மாறியதில் திராவிடர் என்ற
அடையாளம் காரணமே அல்ல என்று எம்மால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று சொல்ல மட்டும்தான்
குமரிமைந்தனால் முடிந்தது. குமரிமைந்தன் எடுத்தெழுதிய விளக்கங்கள் அவர் கூறிய
உறுதிக்கு துணையாக இல்லை. 10 தலைப்புகளில் அவர் முன்வைத்துள்ள விளக்கங்கள்
பெரும்பாலானவை, தமிழ்த் தேசியப் போராட்டம் திராவிடர் என்ற அடையாளம்
தாங்கியவர்களால் திசைத் திருப்பியதையே வெளிப்படுத்தியுள்ளது. கன்னடத்தையோ,
தெலுங்கையோ, மலையாளத்தையோ, மராட்டியத்தையோ தன் தாய் மொழியாகக் கொண்டு தமிழகக்
குடிமக்களாய் உள்ளவர்கள் திராவிடர் என்ற அடையாளத்தைக் கொண்டு தமிழ்த் தேசியப்
போராட்டத்தை திராவிடர் கழகம் [பெரியார், கன்னடர், வீரமணி தெலுங்கர்] திராவிட
முன்னேற்றக் கழகம் [அண்ணாத்துரை தந்தை பிராமணன், இன்றைய கருணாநிதி தெலுங்கர்]
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் [ம.கோ.இரா. மலையாளி இன்று கன்னட பிராமணத்தி] மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் [வை.கோ. தெலுங்கர்]
தேசிய முற்போக்கு
திராவிடக் கழகம் [விசயகாந்த் தெலுங்கர்] இந்த ஐந்து திராவிடர்
அரசியல் கட்சிகள் திசைத் திருப்பவில்லை தமிழ்த் தேசிய இனப் போராட்டத்தை என்று
குமரிமைந்தன் கூறுகின்றாரா? தமிழ்த் தேசிய இனப் போராட்டம் மட்டுமன்று ஒருவனுக்கு
இயல்பாக குருதியோடும் பிறப்போடும் வரக் கூடிய தன் தாய்மொழிப் பற்றுணர்வே இல்லாமல்
மந்தைகளாய் கட்சிக்காரன் என்று தமிழ்த் தேசிய இனத்தவனை தங்களின் பின்னால் அலைய
வைத்துள்ள கட்சிகள் திராவிடர் என்ற அடையாளத்தைக் கொண்ட வந்தேறிகளின் நலன்காக்கும் திராவிடக்
கட்சிகள்தானே! நாம் தமிழர் என்ற பெயரில் சி.பா.ஆதித்தனார் ஒரு கட்சியை தொடங்கினார்.
நாம் தமிழர் என்று தமிழனைத் தனிமைப்படுத்தி காட்டிய ஒரு கட்சி நாம் தமிழர் இயக்கம்
தமிழ்த் தேசிய மண்ணில் வேர்கொள்ள முடியாமல் அழித்து தன்னகத்தே கலக்கச் செய்தவர்கள்
திராவிடர் என்ற அடையாளத்தைக் கொண்டவர்கள்.
மற்றுமொரு உண்மையை குமரிமைந்தனார் வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளையர்கள் இங்கு வரும் முன் தமிழகத்தை ஆண்டவர்கள் தெலுங்கர்கள், கன்னடர்கள்,
மராட்டியர்கள் மற்றும் முகம்மதியர்கள் என்று வரலாற்றுண்மை கூறுகின்றார். இஃது
வெள்ளையர் வருமுன் யென்னாது கடந்த 1800 ஆண்டுகளாய் தமிழ் மண் வந்தேறிகளான மேலே
கூறிய திராவிடர் கையிலே உள்ளது. இவ் வந்தேறிகளின் பிறங்கடையினர்தான் இன்றைய திராவிடர்
என்ற அடையாளத்துடன் அரசியல் கட்சிகளில் தமிழினத்தை அடைத்துள்ளனர். ஆய்வறிவர்
குணாவின் ஆய்வு தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றுப் பகைவரை தமிழ்த் தேசிய
இனத்திற்கு அடையாளம் காட்டி அவர்களின் தொன்மை மிக்க நாகரிக வாழ்வியலை மீட்டுருவாக்குவதே.
திராவிடர் என்ற அடையாளம் தமிழ்த் தேசியப் போராட்டத்தை திசை மாற்றியது மட்டுமல்ல
தமிழ்த் தேசிய இன உணர்வை தமிழனிடம் இல்லாமல் ஆக்கியது என்றால் மிகையன்று.
இன்று தமிழினத்தின் நிலை என்ன?
மொழிநூல் வல்லோன் தமிழுக் கதிகாரி பாவாணர் கூறுவார்கள்.
வரலாற்றில் கி.மு.வுக்கு முன் ஆய்வு கொண்டால் தமிழனின் உயர்வையும் தொன்மையையும்
முன்மையையும் தாய்மையையும் காணலாம்.
கி.பி.க்கு பின் ஆய்வு கொண்டால் தமிழனின் வீழ்ச்சியையும்
தாழ்ச்சியையும்தான் அறிய முடிகின்றது என்பார். தமிழனின் அறிவு மரபு இவ் வையத்தின் தாய் அறிவு மரபு என்று
இன்றுள்ள இந்து மத பிறப்பு வழி சாதிகள் தோன்றுவதற்கு முன் கி.மு.வுக்கு முன் என்ற
ஆய்வில் ஆசீவக அறிவர்களை வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலில் ஆய்வறிவர் குணா நிறுவியுள்ளார். தமிழ் காட்டுவிலங்காண்டி மொழி அதில் என்ன உள்ளது என்று வினா எழுப்பி
தமிழினத்தை இழிவுப்படுத்தியவர் யார்? கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்
மண்ணில் வந்தேறி தமிழ் நாட்டின் குடிமகனான ஈ.வே.இரா.பெரியார். இந்தத் துணிவு
அவருக்கு எப்படி வந்தது? தமிழில் எல்லாம் உண்டு என்பது மட்டும் அல்ல. தமிழ்த் தேசிய
அறிவு மரபை அழித்த பெளத்த மத நூல்களிலிருந்தும் ஆசீவகத்தை முழுமையாக தன்வயமாக்கிக்
கொண்ட [ஜெயின மத] அம்மண நூல்களிலிருந்தும்
கிடைத்த சான்றுகளைக் கொண்டே தமிழ்த் தேசிய இனத்தின் அறிவு மரபு இன்றைய உலக அறிவு மரபிற்கு (மூல) தாய்
அறிவுமரபென்று காட்டி தமிழ்த் தேசியர்கள் விழிப்புறவும், தமிழினம் வந்தேறிகளின்
பண்பாட்டு நாகரிகமான பிறப்பு வழி சாதியத்தை மேற்கொண்ட கேட்டால் விளைந்ததே தமிழின
வீழ்ச்சி என்றும் வரலாற்றியல் சான்றுகள் காட்டியுள்ளார்.
இஃது போன்ற வரலாற்றியல் தழுவிய ஆய்வு நூல்கள் தமிழ்த் தேசிய
இனம் வந்தேறிகளின் பின்னால் இலவயங்களைக் கையேந்திப் பெற ஓடுகின்றது என்று இன
உணர்வு கொண்டு எண்ணத் தூண்டும். இத்தூண்டல் தமிழின இளைஞர்களுக்கு வரவேண்டுமெனில்
அத் தமிழ் இன இளைஞனை ஒரு தமிழன் என்று காட்ட எழுதும் ஆற்றல் உள்ள தமிழிய
தமிழ்த் தேசிய, கட்டுரையாளர் அடையாளம்
காட்ட வேண்டும். குமரிமைந்தனார் காட்டியுள்ள அடையாளம் குணா போன்ற தமிழின
விழிப்பிற்குப் பல இன்னல்களை ஏற்று களத்திலுள்ள ஆய்வர்களுக்கு ஊக்கமளிக்கக்
கூடியது அல்ல. திராவிடர் என்ற அடையாளம் திசைமாற்றியது தமிழ்த் தேசியப் போராட்டத்தை
என்று சான்றுகளை குணா பாணியில் அளித்து விட்டு, அவ்வடையாளம் காரணம் அல்ல என்று
உறுதியாக எம்மால் கூற முடியும் என்று மட்டும் முரணாக தமிழிய மாதிகையான தேமதுரத்
தமிழோசையில் எழுதுவது குழப்புவதானதாகும்.
திராவிடம் தமிழர்க்கு தீதானது என்று ஆனபின் தாங்கள் மட்டும்
அல்ல வென்று எழுதுவது தாங்கள் மேற்கொண்டெழுதும் தொடர்க் கட்டுரைக்கு உரம்
சேர்க்காது. தமிழன் விழித்தெழ எல்லாரும் எழுதுங்கள். திராவிடக் கதையைச் சொல்லி
மந்தைப் பட்டியில் இருக்கவிடாதீர்கள். என்றும் தமிழிய தமிழத் தேசிய
இனவுணர்வுகுன்றா,
தமிழியம்
ஆம்பூர் க.எ.மணவாளன்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக