பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 5
ஒங்கலை காட்டும் வழி
இந்தக் குறிக்கோளை மனதில் கொண்டு 2004 ஓங்கலையின் போது காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழகக் கடற்கரையில் செய்யத்தக்க சில மேம்பாடுகள் குறித்து எமது அறக்கட்டளையாகிய புதுமையர் அரங்கம் உருவாக்கிய ஓரு திட்டம் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
என் இளைமையில் குமரி மாவட்டக் கடற்கரை நெடுகிலும் அங்கிங்கெனாதபடி பல்வகைச் செடிகொடிகளுடன் கண்களைக் கவரும் தேரி எனப்படும் மணலால் ஆன கரை இருந்தது. ஓங்கலையின் பின்னர் அங்கெல்லாம் சென்ற போது குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் மங்கலம் எனும் இராசாக்கமங்கலத்து பண்டை வாய்க்காலாகிய பன்றி வாய்க்காலின் கழிமுகத்துக்கு மேற்கில் மட்டும் கொஞ்சம் எஞ்சியுள்ளது.
பண்டை வாய்க்காலின் கழிமுகத்தின் மேற்கிலுள்ள தேரி மேடு
பெரியகாடு என்னும் கடற்கரை ஊரில் ஒரு 1000 அடிகள் நீளத்துக்கு ஆற்றின் கரை போன்ற அமைப்பில் கோட்டை போல் தேரி மேடு நிலத்தைக் காவல்காக்கும் இனிய காட்சியைக் காண முடிந்தது.
பெரியகாட்டின் கிழக்கில் கற்கோட்டை போல் நிமிர்ந்து நிற்கும் தேரி மேடு
பெரியகாட்டில் தேரி மேட்டின் மீது கட்டப்பட்ட குடியிருப்புகளும் கோயிலும் ஓங்கலையின் வீச்சுக்கு ஆட்படாமல் மதர்த்து நிற்பதைப் பாருங்கள். அதைப் போலவே கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் தேரி மேட்டுக்கு மேலே கட்டப்பட்ட குடியிருப்புகளும் பிற கட்டுமானங்களும் ஓங்கலை தாக்குதலிலிருந்து தப்பியுள்ளன.
ஏறக்குறைய 65 ஆண்டுகளாக, குறிப்பாக “விடுதலை” அடைந்த பின் அரசியல்வாணர்கள் தேரி
மேட்டின் கடல் நோக்கிய பக்கத்திலும் தேரி மேட்டை நிரத்தியும் குடியிருப்புகளைக் கட்டி சாலைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி மீனவர்களைக் குடியமர்த்தி தங்கள் வாக்கு வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இப் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிப் பந்தல்களில் விரிப்பதற்காகவும்
தேரிமேட்டிலிருக்கும் பெரியகாடு ஊரின் வீடுகளும் கோயிலும் – கடல் பக்கமிருந்த தோற்றம்
தென்னை நடுவதற்காகவும் என்று கடல் மணல் கொண்டு செல்வதுண்டு. அவர்களைத் தங்கள் பகுதியிலிருந்து மணல் அள்ள இவ்வாறு குடியிருப்புகள் அமைப்போர் வேண்டுவதும் நடந்திருக்கிறது. இப் பகுதிகளில் ஓங்கலை முழுக் குடியிருப்புகளையும் மக்களையும் அழித்துத் தண்டித்திருக்கிறது. சில காட்சிகளைப் பாருங்கள்:
கீழ மணக்குடி
செருதூர் – நாகை மாவட்டம்
இவை அனைத்திலும் மறுக்கமானதும் மறக்க முடியாததுமான நிகழ்வு இடம்பெற்றது குமரி மாவட்டத்தில் கொட்டில்பாடு என்ற ஊரில்தான். தமிழகக் கடற்கரையில் தொடர்ந்த கடற்கோள்களினால் நம் முன்னோர் உருவாக்கியிருந்த ஒரு மூன்றடுக்குப் பாதுகாப்பு அமைப்பின் தடயங்களை ஓங்கலைப் பணியின் போது காண முடிந்தது. அவற்றில் ஒன்று தேரி மேடு, இன்னொன்று ஒரு கடலோர நாவிக வாய்க்கால். ஆந்திரத்திலுள்ள ஆறுகளிலிருந்து ஒரு வாய்க்கால் வெட்டி நிலச் சாய்வுக்கு பூட்டிகள் என்ற அமைப்பை உருவாக்கி இந்த வாய்க்காலில் கொண்டு சேர்த்தனர் ஆங்கில ஆட்சியாளர்கள். அந்த வாய்க்கால் வழியாக வாழ்க்கைத் தேவையின் அனைத்துப் பண்டங்களின் போக்குவரத்தும் படகுகள் மூலம் நடைபெற்றது. இதைப் பராமரிப்பதற்கென்று சென்னையில் பொதுப்பணித்துறைக் கோட்டம் ஒன்று இயங்கியது. இதையும் இந்தக் கடலோரக் கால்வாயையும் சேர்த்துத்தான் பக்கிங்காம் வாய்க்கால் என்கிறோம். கடலோரத்தில் ஓடும் வாய்க்காலுக்கு முன்பு வழங்கிய பெயர் உப்பனாற்று ஓடை என்பது 1900ஆம் ஆண்டுவாக்கில் ஆங்கில ஆட்சியாளர்கள் உருவாக்கிய நில அளவு வரைபடங்களிலிருந்து தெரிகிறது. இப்போது பக்கிங்காம் பெயரிலான வாய்க்கால் சீர்காளி பொதுப்பணித்துறை சிறு கோட்டத்தின் பொறுப்பிலிருப்பதாக அவ் வலுவலக ஆவணங்களில் மட்டும் காணப்படுகிறது. தெற்கில் ஓடும் ஓடையின் பெயர் வேதாரணியம் வாய்க்கால். அதற்குத் தெற்கில் எந்தத் தடயமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கொள்ளிடம் ஆற்றின் கழிமுகமான பழையாறு என்ற ஊரிலுள்ள மீனவர்களிடையில் இவ் வாய்க்கால் குமரி முனை வரை செல்வதான மரபு உள்ளது.
(சீர்காளி வட்ட வரைபடத்தில் பழையாற்றுக்குத் தெற்கில் ‘பக்கிங்காம் கால்வாய்’ என்று குறிப்பிட்டிருப்பதையும் பழையாறு என்றிருப்பதையும் காட்டும் பகுதி)
மேற்குக் கடற்கரையில் அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா(ஏ.வி.எம்.) வாய்க்கால் என்ற பெயரில் வாய்க்கால் ஒன்று ஆங்கிலராட்சிக் காலத்தில் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரை ஆள், பொருள் ஆகியவற்றின் பொக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் வாய்க்கால் அமைக்கத் திட்டமிட்டு இன்றைய கேரளத்திலிருக்கும் பூவாற்றுமுகம் என்ற இடத்திலிருந்து தொடங்கி பண நெருக்கடியால் குமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காட்டோடு நிறுத்திவிட்டதாக ஒரு கூற்று உள்ளது. ஆனால் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு அரசர் வாய்க்கால் மூலம் வந்து செல்வார் என்று என் சிறு அகவையில் பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஓங்கலைப் பணியின் போது இராசாக்கமங்கலத்துக்கு அண்மையிலுள்ள தெக்குறிச்சி என்ற ஊரில் மிக அகலமுடைய அழி என்று அங்கு கூறப்படும் கழியைப் பார்த்தேன் (இதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கழிக்கானல் என்கின்றன). அதற்கும் கடலுக்கும் இடையில் தேரியை நிரத்தி, அதாவது மட்டப்படுத்தி அதில் சவுக்குத் தோப்பு உருவாக்கி அதை அறுவடை செய்து ஓங்கலைத் தாக்குதலுக்கு எந்தத் தடையுமில்லாமல் செய்திருந்தனர். அரசுப் பணியிலிருப்பவர்களுக்குக் கொள்ளையடிப்பது தவிர வேறு எந்தத் திசையிலும் மூளை வேலை செய்யாது என்பதற்கு இது ஒரு சான்று. இன்னும் ஒரு சான்றுக்கு நாகை மாவட்டம் செறுதூரில் பிடித்த கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.
அ.வி.மா. வாய்க்காலுக்கு மீண்டும் வருவோம். இந்தக் கழி நீரில் தேங்காயை உரித்தெடுக்கும், தேங்காய் மட்டை என்று தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பிடப்படும் கதம்பலை ஊற வைத்திருந்ததைப் பார்த்தேன். தமிழக மேலைக் கடற்கரையில் அடர்ந்து காணப்படும் தென்னந்தோப்புகளில் கிடைக்கும் கதம்பலை 6 மாதங்கள் வரை நீரில் ஊற வைப்பார்கள். இந் நோக்கத்துக்குப் பயன்படும் களத்துக்கு கதம்பல் பாந்து என்பது பெயர். தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள கதம்பலின் மேல் முதலில் மண்ணைப் பரப்பி வைத்திருந்திருப்பார்கள். பின்னர் நாளடைவில் கதம்பலிலிருந்து தென்னந்தும்பை அகற்றும் செயல்முறையில் கிடைக்கும் கதம்பல் தூள் என்னும் கழிவைப் பரப்பினர். இது கீழிருக்கும் நீரை உறிஞ்சி கதம்பல் நீருள் அமுங்கியிருக்கும் விளைவைத் தரும்(மண்ணடுக்கும் குறைந்த கனம் வரை இவ்வாறு நீரை உறிஞ்சும்). ஊறிய கதம்பலின் மேல் தோல் ஆகிய நெட்டியை அகற்றிவிட்டு தும்பை கல்லின் மீது வைத்து கனத்த இரும்புக் கம்பியால் ஓங்கி அடித்து தும்பிலிருந்து மேலே குறிப்பிட்ட தூளை உதறி அகற்றுவாகள். பாந்திலிருந்து 5 கிலோமீற்றர்கள் வரை தொலைவிலிருந்து பெண்களும் சிறுவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இப் பணியில் ஈடுபட்டார்கள். பின்னர் கருவிகள் வந்து இவர்களை அகற்றின. நெட்டி எனும் கழிவை வாங்கி அடுப்பெரிக்கப் பயன்படுத்துவார்கள். நெட்டியை அகற்றும் போது வெளியேறாமல் நெட்டியில் ஒட்டியிருக்கும் தும்பை அகற்றிவிட்டுத்தான் அடுப்பில் வைப்பார்கள். கொஞ்சம் சேர்ந்ததும் தும்பை இராட்டை வைத்திருப்பவர்களுக்கு விற்பார்கள். அண்மைக் காலமாக கடலிலிருந்து அகன்றிருக்கும் உள்நாட்டில் சிறு தொட்டிகளில் கதம்பலை ஊற வைத்து அங்கேயே நிறுவப்பட்டிருக்கும் கருவி மூலம் தும்பைப் பிரித்தெடுக்கும் முறை பரவலாகி இருக்கிறது. இங்கெல்லாம் பல நாட்கள் கதம்பலை ஊற வைப்பதில்லை. நீரில் முக்கி உடனேயே ஆலையிலிட்டுவிடுவார்கள். கருவி வருவதற்கு முன் முற்றிய அல்லது காய்ந்த கதம்பலை தும்பெடுக்கப் பயன்படுத்துவதில்லை, அடுப்பெரிக்கத்தான் பயன்படுத்தினார்கள். இப்போது காய்ந்த கதம்பலையும் நனைத்து அடித்துவிடுகிறார்கள். இருப்பினும் பழையபடி பாந்துகளில் 6 மாதங்கள் ஊற வைத்த பச்சைக் கதம்பலிலிருந்து பெறப்படும் தும்பு நிறத்திலும் உழைப்பிலும் உயர்ந்ததாகச் சந்தை மதிப்பு மிகுந்திருப்பதால் பாந்துகளுக்கு இன்றும் மதிப்பு உள்ளது.
முன்பு இந்தத் தும்பைப் பயன்படுத்தி இராட்டை என்ற மரக் கருவியில் 8 பேர் வரை கொண்ட ஒரு குழுவினர் 3 புரி கயிறு முறுக்கினர். இதற்கு நல்ல கேட்பு இருந்தது. மாலை நெருங்கும் போது புரி முறுக்கும் பணியாளர்களின் உள்ளங்கைகள் தேய்ந்து குருதி தோன்றத் தொடங்கிவிடும் மிகக் கொடிய பணி இது. இப்போது இப் பணி முடிவுக்கு வந்துவிட்டது. தும்பாகவே வெளியை சென்றுவிடுகிறது. குறைந்த எண்ணிக்கை ஊழியர்களுடன் சிறிய இராட்டில் 2 புரி கயிறு முறுக்குதல் மிக அரிதாகவை நடந்தது.
காலையில் வேலை தொடங்கும் போது முதலில் அன்றைய வேலைக்குத் தேவைப்படும் கச்சா தும்பில் நீர் தெளித்து அதற்கென்று உருவாக்கப்பட்ட பிரம்பினால் அனைவரும் சுற்றிச் சுற்றி நகர்ந்து கொண்டே அடித்து தும்பில் ஒட்டியிருக்கும் தூளை அகற்றுவார்கள். முதலில் இயல்பாகவும் இறுதியில் ஓங்கியும் அடிப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவ்வளவையும் அடித்து உலர விரித்த பின் கயிறு முறுக்கத் தொடங்குவார்கள். முறுக்குவதற்குத் தும்பை எடுக்கும் முன் தூள் ஏதாவது ஒட்டியிருந்தால் அதை அகற்றுவதற்காக பிரம்பால் தும்பை சிறிது சிறிதாக எடுத்து மென்மையாக உதறுவர் இதற்கு தெளித்தல் என்று பெயர்.
முன் இராட்டை என்பது மூன்று கதிர்களைக் கொண்டது. கதிரில் தும்பைச் செலுத்திச் சுற்றியதும் அது பிடித்துக்கொள்ளும். மூவர் தங்கள் கட்கம் ஒன்றில் தும்பை வைத்து விரல்களைக்கொண்டு தும்பைப் பக்குவமாக வெளியிட இராட்டையில் உள்ளவர் நிலையான விரைவில் சுழற்றுவார். மறுமுனையில் இருக்கும் பின் இராட்டையின் ஒரே கதிரில் மூன்று புரிகளையும் சிறு நீளத்துக்குக் கயிறாக்கி அதன் முன் புறம் மூன்று புரிகளுக்கும் தடங்களைக் கொண்டிருக்கும் மரத்தினால் அமைந்த சோங்கு என்ற சிறு கருவியைச் சொருகி கயிற்றைப் பிணைப்பார். சோங்கைப் பிடித்தபடி முன் இராட்டை நோக்கி புரி விடுவோரில் ஒருவர் நகர்வார். முன், பின் இராட்டுக்காரர்கள் இராட்டைகளை விரைந்து சுற்றுவார்கள். பின் இராட்டுக்குத் தனி ஆள் கிடையாது. புரி விடுபவரில் ஒருவர் அதைப் பார்த்துக்கொள்வார். பின்னிராட்டுக்கு நகரும் வகையில் பைதாக்கள்(சக்கரங்கள்) உண்டு. புரிகள் கயிறாகுந்தோறும் நீளம் குறையுமாதலால் பின்னிராட்டுக்காரர் காலால் இராட்டை முன்னோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவார். முறுக்கி முடிந்ததும் முன்னிராட்டிலிருந்து புரிகளை அறுத்தும் பின்ராட்டுக் கதிரிலிருந்து கயிற்றை விடுவித்தும் இரு முனைகளிலும் உள்ளவர்கள் கயிற்றை நன்றாக இழுத்துத் தொய்வு நீக்கி உரிய வகையில் கயிற்றை மடித்துக் கட்டுப் போட்டு அடுக்குவார்கள்.
தும்பு அடிக்கும் பிரம்பு வாங்கும் போது காய்ந்ததாக இருக்கக் கூடாது. ஏறக்குறைய 5 அடி. நீளமுள்ள அதை நெருப்பில் வாட்டி அரையரைக்கால் நீளத்தில் ஒரு 15〫சாய்வு கிடைக்குமாறு வளைக்கப்படும்.
கதம்பல் தூள் ஈரத்தைப் பிடித்துவைக்கும் என்பதால் தென்னை மூட்டைச் (மூடு, மரத்தின் அடிப்பாகத்தைக் குறிக்க குமரி மாவட்டத்தில் வழங்கும் சொல்) சுற்றிக் குழி தோண்டிப் புதைப்பபதுண்டு. தும்பு ஆலைகளுக்கு அருகில் முன்பு பெரும் அரிசி ஆலைகளில் நேர்ந்தது போல் பெரும் குவியலாக வளர்ந்து நெருப்பிட்டு அழித்தார்கள். பல மாதங்கள் தொடர்ந்து பொசுங்கிப் பெரும் சுற்றுச் சூழல் கேட்டை உருவாக்கியது. இப்போது தோட்டங்களில் நீர்ச் சிக்கனத்துக்காக செடிகளின் அடியில் புதைப்பதற்கான கட்டிகள் செய்வதற்காக வெளியே செல்கிறது. இசுரேலில் தோட்ட வேளாண்மையில் மணல் மேல் இந்தத் தூளைப் பரப்பி அதன் மேல் செடிகளை நட்டுப் பயிர் செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்தத் துறை பற்றிய ஒரு செய்தி, இரு நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள மணவாளக்குறிச்சியிலிருந்து ஏற்றுமதியான கயிற்றில் ஒட்டியிருந்த மணலில் தோரியம் என்ற அரிய கனிமம் இருந்ததை அறிந்த செருமானியர்களின் தூண்டுதலில் உருவானதே மணவாளக்குறிச்சி அருமணல் தொழிற்சாலை. இங்கு பிரித்தெடுக்கப்படும் தோரியம் ஏற்றுமதியாகிறது என்கிற உண்மை நாம் எப்படிப்பட்ட கடைந்தெடுத்த மடையர்களை, கடையர்களை, கயவர்களை, கள்ளர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்குக் காட்டுகிறது.
கயிறு முறுக்குவது முடிவுக்கு வந்துவிட்டதால் தும்பு அப்படியே கேரளத்துக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கயிற்றையும் தும்பையும் கொண்டு பல்வேறு பொருள்கள் செய்யும் ஒரு தொழிற்சாலையை ஈத்தாமொழி என்ற ஊரில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசு உருவாக்கியது. சரியான ஆள்வினை இன்றி அதுவும் ஏறக்குறைய முடங்கிக் கிடக்கிறது. உள்ளூர் முனைவுகளை ஒடுக்கும் அரசின் நடைமுறையால் மக்களும் இத் தொழிலில் புதுமையைப் புகுத்த நாட்டமின்றி இருக்கின்றனர். இப் பகுதி வளமானதாக இருப்பதால் இது ஒரு சிக்கலாக உணரப்படவில்லை. புதிதாக தென்னை வேளாண்மையில் இறங்கிய தமிழகத்தின் பிற பகுதிகளில் புதிய முயற்சிகள் நடைபெறுகின்றன.
கடந்த காலத்துள் மறைந்துவிட்ட ஒரு தொழில்நுட்பத்தைப் பதியக் கிடைத்த வாய்ப்பைக் கைவிட மனமின்றி சற்று விலகிச் சென்றுவிட்டமைக்குப் பொறுத்தருள்க.
தெக்குறிச்சியில் நான் கண்ட கதம்பல் பாந்துகளைப் போன்று அதற்குப் பல மைல்கள் கிழக்கில் மங்காவிளை என்ற ஊருக்குக் கிழக்கில் கொஞ்சம் தொலைவு வரை விட்டு விட்டு பார்த்துள்ளேன். மங்காவிளைக்குக் கிழக்கில், கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்வதாகிய சாலைரோடு எனப்படும் கடலோரச் சாலைக்கும் கடலுக்கும் நடுவில் நிலம் தாழ்வாகக் காணப்படுகிறது. இந்தப் பகுதி முழுவதும் திறந்த வெளியாக, கழியாக இருந்து பிற்காலத்தில்தான் கடல் காற்றில் அடித்துவரப்பட்ட மணலால் மறைந்திருக்கிறது. சாலைக்கு வடக்கில் வெறும் தேரி மணலும் கொல்லமா எனப்படும் முந்திரி மரங்களும் தாம் இருந்தன. கடந்த 50 ஆண்டுகளுக்குள்தான் அங்கு தென்னந்தோப்புகள் தோன்றின. அனைத்து இடங்களிலும் இக் கழி இச் சாலைக்கும் கடலுக்கும் இடையில்தான் உள்ளது என்பதையும் குறிப்பிட வேணணடும்.
மேலே குறிப்பிட்ட கடலோரச் சாலை கிழக்கிலுள்ள பழையாறு எனும் கோட்டாற்றை மணக்குடி என்ற கடலோர ஊரில் தாண்ட ஒரு பாலம் இன்றியே இருந்தது. ஆற்றைத் தாண்ட வேண்டுமானால் ஏற்றவற்றத்தின் போது பொழி வாங்கல், அதாவது வற்றத்தின் போது நடந்து கடக்க வேண்டும், மற்ற நேரங்களில் படகில் செல்ல வேண்டும். பல ஆண்டுகள் போராட்டத்தின் பின் ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள சாலைகளுக்கு நேராகப் பாலம் கட்டும் பணி தொடங்க ஆயத்தங்கள் நடந்தன. இந் நிலையில் மேலே குறிப்பிட்டது போல் தேரிக்கு உட்புறமும் தேரியை நிரத்தியும் கடலை ஒட்டி குடியிருப்புகளை அமைத்திருந்தவர்கள் தங்கள் குடியிருப்பை ஒட்டிப் பாலம் அமைய வேண்டுமென்று விடாப்பிடியாக நின்று போராட்டங்கள் நடத்தியதால் பாலத்தின் அமைவிடம் கடலுக்கு மிக நெருக்கமாக மாற்றப்பட்டது. ஓங்கலை நீரை இந்தப் பாலம் தடுத்ததால் பாலத்தின் பாளங்களைத் தூக்கி வீசியதுடன் இரு புறங்களிலும் பெரும் அழிவை ஏற்படுத்தியது. முன்பு கீழ மணக்குடி பற்றி காட்டியுள்ள படத்துடன் கீழையுள்ள படங்களையும் பாருங்கள்.
இந்தப் பாலம் முதலில் முன்னிட்டது போல் ஆற்றின் இரு மருங்கிலுமுள்ள பழைய சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்திருந்தால் கடலுக்கும் அதற்கும் ஒரு மைல் வரை தொலைவு இருந்திருக்கும், பாலத்தின் நீளம் மிகக் கூடுதலாக இருந்திருக்கும், பாலத்தின் உயரம் 20 அடிகள் வரை சென்றிருக்கும், இவ்வாறு நீரோட்டத்துக்கு எந்தத் தடையும் இல்லாமல் ஓங்கலையின் தாக்குதலில்
பாலம் எந்தக் கூடுதல் விளைவையும் ஏற்படுத்தியிருக்காது. காலங்காலமாகப் போராடிப் பெற்ற பாலம் 6 மாதம் கூடப் பயன்படவில்லை. ஒன்றன் மீதொன்றான மனிதத் தவறுகளை இயற்கை இரக்கமின்றித் தண்டித்த மிகத் திட்டவட்டமான ஒரு சான்று இது. நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் கடலை ஒட்டியிருக்கும் நீர்வழியும் அவற்றுக்கு இடையிலிருக்கும் பாலமும் பெரும் அழிவுக்குக் காரணமாயிருந்ததை அங்குள்ளவர்கள் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள்.
இனி கொட்டில்பாட்டுக்கு வருவோம். இந்த ஊர் மண்டைக்காட்டுக்கு மேற்கில் உள்ளது. இங்கு அ.வி.மா. வாய்க்கால் நல்ல நிலைமையில் உள்ளது. வாய்க்காலுக்கும் கடலுக்கும் நடுவில் இருந்த தேரி முற்றிலும் அகற்றப்பட்டிருக்கிறது. அங்கு ஒரு குடியிருப்பும் இருந்தது. ஓங்கலையின் போது தாக்கிய அலை மிகப் பெரும்பாலான வீடுகளையும் கட்டடங்களையும் துடைத்தழித்து மக்களையும் பிற உயிரினங்களையும் அதனுடன் சேர்த்து அள்ளிச் சென்று குடியிருப்பைத் தொட்டு ஓடிய வாய்க்காலில் கொட்டிப் புதைத்துவிட்டு சாலையையும் தாண்டிச் சென்று வந்த வேகத்தில் திரும்பி அரைகுறை உயிருடன் இருந்தோரை இன்னுமொரு புரட்டுப் புரட்டிவிட்டுப் போயிருக்கிறது. அது உண்டாக்கியிருந்த தடத்தைப் பாருங்கள்.
ஓங்கலைக்கு எதிராக நம் முன்னோர் உருவாக்கியிருந்ததாக மேலே நான் குறிப்பிட்ட மூன்றடுக்குப் பாதுகாப்பில் கடலூருக்குத் தெற்கில் தடமின்றி நிரந்து போன வாய்க்காலை நில அளவை மற்றும் வருவாய் ஊர் ஆவணங்களின் துணை கொண்டு தோண்டும் பணியை அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக ககன் சிங் பேடி தொடங்கினார். பின்னர் அப் பணி எக் காரணத்தாலோ கைவிடப்பட்டது. சீர்காளி வட்டம் பழையாற்றில் கடலில் விழும் கொள்ளிடம் ஆறு பிரிந்து ஒரு பிரிவு வடக்கு நோக்கி 8 கி.மீ.யில் கடலில் சேர்கிறது. ப.வாய்க்கால் தொடர்ந்து வடக்கில் வெள்ளாற்றையும் தாண்டிச் செல்கிறது. தெற்கிலும் நெடுந்தொலைவு செல்கிறது. காரைக்காலில் நன்றாயமைந்த கட்டுமானங்களின் இடிந்து போன பகுதிகளைக் காண முடிகிறது. வேதாரண்ணியம் என்று சமற்கிருதவாணர் தவறாக மொழிபெயர்த்த பெயரைக் கொண்டு அறியப்படும் திருமரைக்காட்டுக்கு அப்பால் வாய்க்கால் செல்வதாகத் தெரியவில்லை. இதன் காரணத்தை நம் பண்டை வரலாற்றில் தேட வேண்டும்.
கழக இலக்கியங்களில் கூறப்படுத் இரண்டாம் கடற்கோள் கி.மு.1700 வாக்கில் நிகழ்ந்ததற்கு வலுவான சான்றுகள் உள்ளன. அப்போது இன்றைய தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் புகுந்து இலங்கைத் தீவை உருவாக்கியது. அதனால் இன்றைய இலங்கையைச் சார்ந்திருந்து கடலில் முழுகிய நிலப்பரப்பின் கடற்கரையை ஒட்டி தோண்டப்பட்டிருந்த உள்நாட்டு நாவிக வாய்க்கால் கடலினுள் அமிழ்ந்து போயிருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அப்போது கடலினுள் தோண்டப்பட்ட கப்பலோடை வழியாகத்தான் இன்றைக்குக் கொழும்புக்குக் கப்பல்கள் செல்கின்றன.
இந்தக் கடற்கோளுக்குப் பின்னர் கடற்கரையில் கழிகள் உருவாகியிருக்கின்றன. கீழைக் கடற்கரையில் கால்டுவெல் ஐயர் செயற்பட்ட இடையன்குடி வட்டாரத்தில் கழிகளும் சதுப்பு நிலக் காடுகளும் இருந்ததையும் அதை ஆங்கிலக் குழும ஆட்சியாளர்கள் அழித்து அப் பகுதி மக்களுக்கு வாழ் வளித்ததாகவும் திருநெல் வேலிச் சாணார்கள் என்ற தன் நூலில் குறிப்பிட்டி ருக்கிறார். அதை அதற்கு முன் படகுப் போக்கு வரத்துக்குப் பயன் படுத்தினார்களா என்பது தெரியவில்லை. ப.வாய்க்கால் கன்னியாகுமரி வரை செல்கிறது என்ற பழையாறு மக்களிடையில் வழங்கும் மரபுச் செய்திக்கு இது சான்றாகுமா என்று தெரியவில்லை.
மேலைக் கடற்கரையில் கி.மு.1700 இடம்பெற்ற கடற்கோளுக்குப் பின்னர் கி.பி.825 ஒரு கடற்கோளில் கொல்லம் துறைமுகம் முழுகியது. அதன் நினைவாகத்தான் கொல்லம் ஆண்டுமுறை அறிமுகமானது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நம் முன்னோர் அமைத்திருந்த நாவிக வாய்க்கால் கடலினுள் சென்றிருக்க வாய்ப்புண்டு.
இனி கடலோர மூன்றாம் அடுக்குப் பாதுகாப்பைப் பார்ப்போம். இதைக் கப்பலோடை என்ற பெயரில் கன்னியாகுமரி மீனவர்கள் குறிப்பிடுகிறார்கள். குமரி முனையிலிருந்து ஏறக்குறைய 12 கி.மீ. தொலைவில் ஒரு கடல் வழி இருந்ததாகவும் அங்கு வந்து நிற்கும் கப்பல்களில் குமரி முனையிலிருந்து படகுகளில் பண்டங்களைக் கொண்டு சென்று ஏற்றுவதும் அங்கிருந்த கரைக்கு இறக்குவதும் நடைபெற்றதாகக் கூறுகின்றனர். ஆக, இரண்டாம் கடற்கோளுக்கு முந்திய தமிழகத்தில் கடற்கரையை அணைத்தவாறு கதவபுரத்தைச் சுற்றிச் செல்லும் ஒரு கடற்கால்வாய் இருந்திருக்கிறது. கடலில் ஆழம் குறைந்த இடங்களில் செயற்கையாகக் கடற்கால் தோண்டியிருக்கிறார்கள். இந்த உண்மையை, குணாஅது கரைபொரு தொடுகடல் – கிழக்கில் கரையைக் கரைக்க இடைவிடாது போராடுவதும், தோண்டப்பட்டதுமான கடலைக் கொண்ட தமிழகம் – என்ற புறநானூறு 6ஆம் பாடல் வரி கூறுகிறது. கடற்கோளின் போது இலங்கை துண்டிக்கப்பட்டதால் இந்தக் கடற்கால்வாயும் தொடர்பு அறுந்து போயிருக்கிறது. அந்தக் கடற்கால்வாய்தான் இப்போது கேரளக் கடற்கரையிலிருந்து கொழும்புத் துறைமுகத்துக்குச் செல்லும் கடல் வழியாகப் பயன்படுகிறது. இந்த வரலாற்றுச் செய்திகளை அறியாமலே நம்மை ஆண்ட அயலவரான ஆங்கிலர் இந்த நாட்டைச் சுற்றி ஒரு கடற்பாதை வேண்டுமென்ற இன்றியமையாமையைக் கருதி சேதுக் கால்வாய் எனப்படும் தமிழன் கால்வாயைத் திட்டமிட்டனர். அதைச் சீர்குலைக்கத்தான் வழக்கம் போல் உள்நாட்டில் காலங்காலமாகத் தற்சார்புப் பொருளியல் – அரசியல் வளர்வதைச் சீர்குலைத்துவந்தவர்களின் குரலை ஒலிக்கும் தினமலர் மற்றும் குழுவினர் முட்டி மோதி வருகின்றர்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக