31.12.17

பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை - 4

வாணிகக் குழுக்கள் பேரரசுகளை மட்டும் உருவாக்கவில்லை. உலக மொழிகளையும் அவைதாம் படைத்துள்ளளன. வாணிகத்துக்காக உலகின் பல்வேறு பகுதிகளை இணைத்த வாணிகக் குழுக்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மொழிக் கூறுகளைச் சுமந்து சென்றன. ஒவ்வொரு குழுவிலுமிருந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோரின் இணைவும் சேர்ந்து புதுப் புது மொழிகள் உருவாயின. இவ்வாறு உலக மொழிகளுக்குப் பொதுவான கூறுகளும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் உரிய தனித் தன்மைகளைக் கொண்ட மொழிகளும் அவற்றின் அடிப்படையிலமைந்த பேரரசுகளும் என்று தேசிய எல்லைகளுக்குப் புதுப்புது பண்புகள் வந்து சேர்ந்தன.

இவ்வாறு விளைப்போர் தாம் விளைக்கும் பொருளுக்கு வாங்குவோரையும் வாங்குவோர் தமக்கு வேண்டும் பொருட்களுக்கு விற்பனையாளர்களையும் வழங்கும் வகையில் தவிர்க்க முடியாமல் வாணிகன் உருவாகிறான். இன்று உழவனாயினும் தன்தொழில் செய்யும் கைவினைஞனாயினும் தன் விளைப்பை விற்பதற்காகத் தெருத்தெருவாக அல்லது வீடுவீடாக அலைந்தானென்றால் அவனது உழைப்புத் தொழில் என்னவாகும். “உழவர் சந்தைக்கு” சரக்குக் கொண்டு வந்து விற்கும் உழவனின் நிலையும் அத்தகையதுதானே! இன்று உழவர் சந்தைகள் அரசுப் பொறியால் தூக்கி நிறுத்தப்படுகின்றன. உழவர் என்று அரசு அதிகாரிகள் அடையாள அட்டை வழங்குகிறவர்களே சரக்குக் கொண்டுவருகிறார்கள். அதிகாரிகளே விலையை முடிவு செய்கிறார்கள். அரசு போக்குவரத்துக் கழகங்களே இலவயமாக உழவர்களையும் அவர்களது விளைபொருட்களையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. அரசு வரும் இடத்தில் அரசியல் கட்சியின் ஆதிக்கமும் செல்வாக்கும் வரும். நாளடைவில் வாணிகர்கள் நுழைவார்கள் அல்லது உழவர்களிலிருந்து புதிய வாணிகர்கள் உருவாவர். அந்த நிகழ்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. உழவர் சந்தைகளின் நிகர விளைவு நகரங்களிலும் பேரூர்களிலும் உருவாகியுள்ள புதிய குடியிருப்புப் பகுதிகளுக்குத் தேவையான புதிய நாளங்காடிகளையும் புதிய வாணிகர்களையும் உருவாக்குவதாகவே இருக்கும். (நாகர்கோவில் வடசேரி கனக மூலம் சந்தையின் வளாகத்தை ஒட்டி உழவர் சந்தைக்காக இடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உலகப் பெரும் முட்டாள்கள் பட்டம் வழங்கலாம்).

அப்படியாயின் வாணிகர்களின் கொள்ளையை எவ்வாறு தவிர்ப்பது? அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பயன் தராது என்று பார்த்தோம். ஆனால் இந்தக் கேள்விக்கான விடையை முதலாளிய விளைப்பு முறை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. பண்டங்களை விளைக்கும் நிறுவனங்களே வலைப்பின்னல் போன்ற முகவாண்மை(ஏசென்சி) நிறுவனங்கள் மூலமாகச் சில்லரை விற்பனை நிலையங்களாகிய”கடை”களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து அவை மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்கின்றன. பண்டத்தின் விலையை விளைக்கும் நிறுவனமே முடிவு செய்கிறது. முகவாண்மைகள் தங்கள் கூலியைப் பண்டத்தின் நிறுவப்பட்ட விலையில் விளைப்பு நிறுவனத்தால் நிறுவப்பட்ட நூற்றுமேனியில்(சதவீத்த்தில்) பெற்றுக்கொள்கிறது. அதில் ஒரு பகுதியைச் சில்லரை விற்பனைக் கடைகளுக்கு முகவாண்மைகள் கொடுக்கின்றன. வேளாண்மையில் மாபெரும் ஒருங்கிணைக்கப்பட்ட பண்ணைகள் பண்டங்களை விளைத்துத் தங்களே நேரடியாக பேரங்காடிகள் மூலம் அல்லது முகவாண்மைகள் மூலம் விற்பனை செய்கின்றன.

இந்த முறையில் வாணிகர்கள் விளைப்போரையும் மக்களையும் சுரண்டுவது மாறி விளைப்போர் மக்களைச் சுரண்டி முகவாண்மைகள், சில்லரைக் கடைகள் ஆகியவற்றோடு பங்கிட்டுக் கொள்கின்றனர். பணக்கார நாடுகளில் இந்தச் சுரண்டலை மட்டுப்படுத்தத்தான் அதிக பக்க விலை (எம்.ஆர்.பி.) குறிக்கும் முறை உருவானது. ஒரு நிறுவனம் தான் விளைக்கும் பண்டங்களின் விலையைத் தன் விருப்பம் போல் உயர்த்திவிட முடியாது. அதற்கான காரணங்களைச் சான்றுகளுடன் எடுத்துவைத்து அதற்குரிய கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இசைவைப் பெற வேண்டும். நாம் வடிவங்களைத்தான் அயலவரிடமிருந்து எடுத்துக் கொள்கிறோமேயொழிய உள்ளடக்கங்களையல்ல. எவ்வாறு “நுழைவு”த் தேர்வு இங்கு பொருளற்றுப் போய் சில குழுக்கள் பெற்றோரைக் கொள்ளையடிக்கும் உத்தியாக அறிமுகம் செய்யப்பட்டதோ அது போல்தான் மே.சி.வி. (எம்.ஆர்.பி.) குறிக்கும் முறையும். 1975ஆம் ஆண்டில் அப்போதிருந்த இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா “நெருக்கடி நிலை” என்று ஒரு முற்றதிகார(சர்வாதிகார) அறிவிப்பை வெளியிட்டார். அதிலிருந்துதான் மே.சி.வி. குறிக்கும் முறை நம் நாட்டில் அறிமுகமானது. அந்த “நெருக்கடி நிலையை” எதிர்த்த குழுக்களைச் சேர்ந்த முதலாளியர், குறிப்பாக சவளித் துறையினர் வேண்டுமென்றே மிகக் கூடுதலாக மே.சி.வி.யைக் குறித்துவிட்டு அதில் பாதிக்கும் குறைவான சில்லரை விலைக்கு விற்க வைத்து அந்த முறையையே கேலிக்குரியதாக்கினர்.

இது போன்ற முரண்பாடுகளுக்குக் காரணம் இந்த முறைகள் நம் நாட்டின் உள்ளார்ந்த வளர்ச்சியினால் எதிர்ப்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக நாமே வடிவமைத்தவையல்ல, நம் கல்விமுறையைப் போல் அயலவர்களால் அயலவர்களுக்காக நம் மீது வலிந்து திணிக்கப்பட்டவை என்பதாகும். காலங்கடந்து போன விளைப்பு மற்றும் விற்பனை முறைகள் ஆட்சி செய்யும் சூழ்நிலையில் இது போன்ற சிக்கல்களில் மக்களின் கவனம் திரும்பவில்லை. பெரும்பான்மை மக்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது இருப்பதை மேம்படுத்துவதைப் பற்றி அவர்களால் எவ்வாறு சிந்திக்க முடியும்?

பணக்கார நாடுகளில் அங்குள்ள நிறுவனங்களை அரசுகள் உரிய வகையில் கண்காணிக்கின்றன. மக்களும் விழிப்பாயிருக்கின்றனர். அதே நேரத்தில் ஏழை நாடுகளிலுள்ள அவற்றின் கிளைகளைக் கண்காணிக்கும் கடமை அவ் வரசுகளுக்கு இல்லை. இங்குள்ள அரசை அவ்வாறு கண்காணிக்குமாறு வலியுறுத்திச் செயலிலிறக்கும் தெளிவும் ஒற்றுமையும் கல்வியறிவற்றுக் கிடக்கும் மக்களிடமும் அனைத்துத் தப்பெண்ணங்களும் நிறைந்த கற்றவர்களிடமும் இல்லை. அதனால் நம் செல்வங்களை இந்த அயல் நிறுவனங்கள் தடங்கலின்றிக் கொள்கையடிக்கின்றன. அதில் ஒரு பங்குக்காகக் கையேந்தி நிற்கின்றனர் ஊழல் மலிந்த நம் ஆட்சியாளர்கள்.

இதற்கு நாம் முன்வைக்ககும் தீர்வு விளைப்புத் துறைகள், பணித்துறைகள் அனைத்தும் முதலாளிய முறைக்கு மாற வேண்டும். விளைப்பு பெரும் நிறுவனங்களிடமும் விற்பனை முகவாண்மை நிறுவனங்களிடமும் விடப்பட வேண்டும். பண்டங்கள், பணிகள் ஆகியவற்றின் தரமும் விலைகளும் கட்டணங்களும் உரிய வகையில் கண்காணிக்கப்பட வேண்டும். வேளாண்மை, கடல் தொழில் போன்றவற்றில் விளைச்சல் மிகுதியாகக் கிடைக்கும் காலங்களில் அறுவடை செய்து பண்டங்களைப் பதப்படுத்திச் சேர்த்து வைத்து அவற்றை விளைச்சல் குறையும் பருவங்களில் பங்கிட வேண்டும். பதப்படுத்தும் பணி கட்டங்கட்டமாக ஆண்டு முழுவதும் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

இங்கு நாம் முதலாளியம் என்று குறிப்பிடுவது அயலவர் பங்கு சிறிதும் இன்றி மூலதனம், தொழில்நுட்பம், மனிதவளம், மூலப் பொருட்கள் என்று அனைத்தும் உள்நாட்டைச் சார்ந்தனவாகி நுகர்வோர் அனைவரும் நம் நாட்டைக் சேர்ந்தோராகவும் அமைந்த தேசிய முதலாளியம் என்பதை ஐயம் திரிபறப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த மாற்றத்தின் போது இன்று சொந்தத் தொழிலில்(தன்தொழிலில்) ஈடுபட்டிருப்போர் நிலை என்ன என்று பார்க்கவேண்டும். வாய்க்கும் கைக்குமாகத் தொழில் செய்து கொண்டிருப்போருக்கு அத் தொழிலை விட நிலையான வேலைவாய்ப்புடைய தொழிலாளியின் நிலை மேலானதே. தொழிலகங்களில் வேலை கிடைத்தால், சொந்தத் தொழிலைக் கைவிட்டுச் செல்வோரை நாம் நாள்தோறும் காண்கிறோம். தொழிலை நடத்துவதற்கான மூலதனம், மூலப் பொருட்களுக்கான தேடல்கள், கவலைகள், விளைத்த பண்டத்தை விற்பதற்கான சந்தையைப் பிடித்தலும் அதைவிட்டுவிடாமல் பேணுதலும், விற்றுமுதல் உருப்படியாகக் கைக்கு வந்து சேர்தல் என்று பொழுது விடிந்தால் பொழுது போனால் அதே கவலையுடன் வாழ்வதும் எந்த நொடியிலும் நலிவுக்கு ஆளாகிப் பட்டினியை எதிர்நோக்குவதுமான நிலையில்லா வாழ்வாக இருந்த நிலைமாறி நிலையான கூலியும் நம்பகமான வேலைவாய்ப்பும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலையும் நாளின் மிகுதி நேரத்தைத் தான் விரும்பும் வகையில் செலவிடும் வாய்ப்பும் உரிமையும் கிடைக்கின்றன. சிறு தொழில்கள் என்ற பெயர் கொண்ட தொழில்களில் அன்றாடங் காய்ச்சித் தன்தொழில் செய்வோரைப் போன்ற அதே சிக்கல்கள் அளவில் பெரியவையாக இருக்கும். அங்கும் எப்போது நசிவும் நலியும் வரும் என்று சொல்ல முடியாது. இவர்கள் பெரிய தொழில்களில் தங்கள் திறமைக்கேற்ற பதவிகளின் மூலம் பங்கேற்கலாம். அல்லது தங்களுக்கு விருப்பமுள்ள வேறு துறைகளில் ஈடுபடலாம். அவர்களிடம் வேலை செய்யும் கூலியாட்கள் புதிய தொழில்களில் மேம்பட்ட நிலையில் வாழலாம். நாம் முன்போரிடத்தில் நம் நாட்டில் நாம் உருவாக்கத்தக்க புதிய வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டுள்ளோம். உண்மையில் பொருளியல் விளைப்பின் ஒரு கட்டத்திலிருந்து மேம்பட்ட இன்னொரு கட்டத்துக்கு மாறும் இடைமாற்றக் காலம் மிக நெருக்கடி வாய்ந்தது. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் போது தன்னியல்பாக மக்களின் ஓர்மையின்றி இந்த மாற்றங்கள் நேர்ந்தன. மக்கள் தாங்கள் ஈடுட்டிருந்த தொழில்கள் திடீர் திடீர் என்று நலிவடைந்ததும் மாற்று வழி இல்லாமல் பட்டினி கிடந்து செத்தனர் அல்லது புதிதாக உருவாகிக் கொண்டிருந்த தொழில் நகரங்களுக்குச் சென்று வேலை தேடிச் சேரிகளில் குவிந்து பட்டினியாலும் நோய்களாலும் செத்து மடிந்தனர். அந்த நெருக்கடிகளின் பயனாக இன்று உழைக்கும் மக்களுக்கென்று எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாகியுள்ளன. அரசு என்பதன் நோக்கமும் பார்வையும் தலைகீழாக மாறியுள்ளன. அவற்றுக்கேற்ப அரசின் செயல்பாடுகளும் மாறியுள்ளன. முழுமையான மக்களாட்சி நோக்கிய நகர்வைக் குறிக்கும் இந்த மாற்றம் முதலாளியத்தின் இன்னொரு பயன். (நிலக்கிழமைப் பொருளியல் நிலையில் தேங்கி நிற்கும் நம் நாட்டில் வடிவத்தில்தான் நம்மிடம் மக்களாட்சி நிலவுகிறது. உள்ளடக்கத்தில் மேடை போட்டுத் தலைவர்களின் கால்களில் அவர்களை விட முதியவர்களும் வீழ்ந்து வணங்கும் மன்னராட்சியை விட இழிந்த அடிமைக் காலப் பண்பாடே நிலவுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.) இன்று எந்த நெருக்கடியையும் எதிர்கொண்டு தீர்த்துவிடும் வகையில் அரசைக் கையாள முடியும் என்று முதலாளியம் காட்டியுள்ளது. இத்தகைய நூற்றாண்டுகளின் பட்டறிவின் பின்னணியில் நாம் திட்டமிட்டுப் பழைய நிலக்கிழமை விளைப்பு முறைகளைக் கைவிட்டுப் புதிய தேசிய முதலாளிய விளைப்பு முறையினுள் நுழைய வேண்டும்.

வாணிகத்தைப் பற்றிய இந்தப் பகுதியை முடிக்கும் முன் ஒரு வரலாற்றுத் தடத்தைப் பிடிக்க முயல்வோம். கடை என்ற சொல்லுக்குத் தமிழில் கடைசி, கதவு என்ற பொருட்களும் உண்டு. இன்றைய வாணிகவியலில் சில்லரைக் கடைகளை, அவற்றில் விற்பனையாகும் பண்டங்களை விளைக்கும் பெரும் நிறுவனங்கள் தங்கள் வெளிச்செல் வாயில்கள்(அவுட்லெட்கள்) என்கின்றன. இந்தக் கண்ணோட்ட்தில் பார்த்தால் தமிழில் விற்பனை நிலையத்தைக் கடை என்ற சொல்லால் குறிப்பதன் பின்னணியில் பெரும் விளைப்பு நிறுவனங்கள் என்றோ ஒரு நாள் நம் வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவை தம் பண்டங்களை விற்பதற்காக ஏற்படுத்தியிருந்த பெரும் மண்டலத்தின் இறுதியாக, அதாவது “கடை” நிலையில் இருந்த விற்பனை நிலையங்களுக்கு இப் பெயர் வழங்கியதென்றும் கொள்ளத் தோன்றுகிறது. அந்த நாள் வரலாற்றுக் காலத்தினுள் இருந்திருக்க முடியாது. குமரிக் கண்டக் காலத்தில் இருந்திருக்கலாம்.

கடலோர மக்களின் வாழ்க்கை இரங்கத்தக்கது. மீன் பிடிக்கச் செல்வோர் கட்டுமரங்கள் எனும் மிதவைகளில் மூங்கிலைப் பாய்மரமாக்கிக் கடலில் வீசும் கட்டுக்கடங்காக் காற்றுக்கும் அதன் விளைவான அலைக்கும் தங்களைத் தாங்களே ஆட்படுத்திக்கொண்டு உயிரை வளர்ப்பதற்காக உயிரைப் பணயம் வைத்துத் தங்கள் தொழிலான மீன்பிடித்தலில் ஈடுபட வேண்டும். எப்போதுமே எதுவும் நேரலாம். திசை தெரியாமல் நடுக்கடலில் சிக்கிப் பட்டினி கிடந்து சாகலாம். எல்லையற்ற நீர்ப் பரப்பில் குடிநீருக்குத் தவித்தும் சாகலாம். பெருஞ்சுறா, திமிங்கலம் போன்வற்றால் தாக்கப்பட்டு கட்டுமரம் கவிழ்ந்தும் அவற்றால் கடிபட்டும் சாகலாம். கடலிலுள்ள கொடிய நச்சுப் பாம்புகள் வலைகளில் சிக்கி அவை கடித்தும் சாகலாம். (இன்று கடற்செலவில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மேம்பாடுகள் இம் மக்களுக்கு எட்டாமலிருப்பதும் அதனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத “மாந்தநேயர்கள்” மரபுத் தொழில்நுட்பப் பெருமை பேசித் திரிவதும் எவ்வளவு இரக்கமற்ற செயல்!) இவர்களது வாழ்க்கை நிலை தாமும் தம் குடும்பமும் பட்டினியின்றி உயிர்வாழ்வதற்காக உயிரையே விலையாகக் கொடுத்துப் பணிபுரியும் எல்லைக் காவல் படை வீரர்களை விடக் கொடியது. எல்லையில் பணியாற்றும் போது வழங்கப்படும் குமுகப் பாதுகாப்பும் கடலில் உயிரைப் பணயம் வைத்துச் செல்லும் மீனவர்க்கு இல்லை. நில எல்லையைப் பற்றி இவ்வளவு பதற்றம் காட்டும் இந்திய அரசு கடல் எல்லையை, குறிப்பாகத் தமிழகத்தை ஒட்டிய கடல் எல்லையைச் சிங்களரின் வினைக்களமாக்கிக் களிக்கிறது. சிங்களக் கடற்படை நம் கடற்கரை வரை வந்து நம் மீனவரைச் சுட்டுக் கொல்கிறது. அது போதாதென்று இந்தியக் கரைக் காவல் படையும் தன் பங்குக்குக் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று மகிழ்கிறது.

முதலில் தமிழகத்துக்கு உரிய கச்சத் தீவை இந்திரா சிங்களத்தாருக்குத் கையூட்டாக அளித்தார். இந்தக் கைக்கூலி எதற்கு? மக்கள் நலனுக்கெதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை அமெரிக்காவின் குரல்(வாய்சு ஆப் அமெரிக்கா) என்ற அமெரிக்க அரசின் வானொலி மூலம் அமெரிக்கா ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. இந்தியா சோவியத்து நாட்டுக்குச் சார்பாகச் செயற்பட்டதின் எதிர்வினையே இது. பாக்கித்தானிலிருந்து மட்டும் நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த ஒலிபரப்பு தென்கோடியைத் தெளிவாக எட்டுவதற்காக இலங்கையின் திரிகோண மலையில் ஓர் ஒலிபரப்பு நிலையத்தை அமைப்பதற்காக அமெரிக்கா முயன்றுகொண்டிருந்தது. அதற்கு இலங்கை அரசு இடங்கொடுக்காமல் தடுக்கத்தான் இந்தக் கைக்கூலி. உண்மையில் இந்திரா அரசு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. அப்போது தமிழகத்தை “ஆண்டு”கொண்டிருந்த கருணாநிதியும் இது குறித்து வாய் திறக்கவில்லை. கருணாநிதி அவரது எந்த ஊழல் நடவடிக்கையைக் காட்டி மிரட்டப் பட்டாரோ அல்லது அவருக்குத் தனியாக ஏதாவது நலன்கள் வழங்கப்பட்டனவோ நாமறிவோம். இதன் விளைவாகக் கச்சத் தீவில் அதுவரை வலை உலர்த்தி வந்த தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனது. தமிழகத் தாய் நிலத்திலிருந்து கச்சத் தீவுக்கு 12 மைல்கள் தொலைவு. அங்கிருந்து ஈழக்கடற்கரைக்கு 16 மைல் தொலைவு. அதில் பாதி 8 மைல் ஆகத் தமிழகத் தாய் நிலத்திலிருந்து 12+8 = 20 மைல்கள் வரை மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு முன்பு இருந்தது. இப்போது அது தமிழகத் தாய் நிலக் கடற்கரைக்கும் கச்சத் தீவுக்கும் உள்ள தொலைவில் பாதியாகிய 6 மைல்களாகச் சுருங்கிவிட்டது. அது மட்டுமல்ல, நம் நாட்டுக் கடல் எல்லைக்கு வெளியே அனைத்துலகக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையைக் கூடச் சிங்களக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் சேர்ந்து பறித்துவிட்டன. இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அதைப் போலப் பன்மடங்கு எண்ணிக்கையினர் காயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் பிடித்த பல கோடி உரூபாய்கள் பெறுமான மீன்களும் வலைகள் உட்பட அவர்களது தளவாடங்களும் பறிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. படகுகளும் கட்டுமரங்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பிற நாடுகளால் சிறு ஊறு நேர்ந்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுகின்றன. அமெரிக்கா உலகிலுள்ள எந்தப் பகுதியிலாவது மோதலோ பதற்றமோ ஏற்பட்டால் உடனடியாக அந்தப் பகுதியில் வாழும் அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பளிக்கிறது, அல்லது அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கிறது. அந் நாட்டின் இரு தூதரகங்களில் குண்டு வெடித்ததும் அதற்குக் காரணம் பின் லேடன் தானென்று அவருக்குத் இருப்பிடம் அமைத்துக் கொடுத்துள்ள ஆப்கானித்தான் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறது. செக்கோசுலெவேக்கியாவில் சீனத் தூதரகம் மீது நேட்டோ படைகளின் குண்டுகள் தவறுதலாகத் தாக்கிய போது அதற்குப் பொறுப்பான அமெரிக்காவை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது அந் நாடு. ஆனால் தன் நாட்டுக் குடிமக்களில் நானூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஓர் அண்டை நாடு சுட்டுக்கொல்வது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியாயினும் இன்று வரை ஒரேயொரு கண்டனக் குரலைக் கூட எழுப்பவில்லை மானங்கெட்ட இந்திய அரசு. தமிழர்களுக்கென்று அது ஒரு தனி அளவுகோலை வைத்திருப்பது உண்மைதான். முந்தி இருந்த இந்திய ஆட்சியாளர்கள் பிற மாநில மக்களுக்காகவாவது சிறு குரல் எழுப்பினர். இங்கிலாந்தில் நுழைந்த இந்தியப் பெண்களுக்குக் கன்னிமை ஆய்வு என்ற ஒன்றை அந் நாட்டரசு புகுத்திய போது அப்போது இந்தியப் தலைமை அமைச்சராயிருந்த இந்திரா கடும் கண்டனம் தெரிவித்து அந்த இழிவை முடிவுக்குக் கொண்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கணினி அறிவியலாளர்களைக் கைவிலங்கிட்டுத் தெருவில் இழுத்துச் சென்ற அமெரிக்கக் காவல்துறையின் செயல் குறித்து ஒரு மூச்சுக் கூட விடவில்லை, மானங்கெட்ட பா.ச.க. அரசு. அமெரிக்காவிலிருக்கும் பல இலக்கம் “இந்தியர்களோ” கார்கில் நாடகத்தில் இறந்த வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் “தேசபக்தியை” ஆறாக ஓடவிட்ட “பாரத புத்திரர்களோ” கூட மூச்சுவிடவில்லை. இங்கிலாந்திலுள்ள “இந்தியர்களை”க் காணச் செல்லும் உறவினர்களுக்கு தங்காணை(விசா) மறுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான கட்டணத்தை உரூ 10,000/= த்திலிருந்து ரூ 33, 500/=ஆக உயர்த்தி இங்கிலாந்து அரசு பிறப்பித்திருக்கும் ஆணையை எதிர்த்தும் அந் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள்தாம் குரல் எழுப்பினரேயன்றி “தேச பக்தியே” மனித உரு எடுத்தவர்களைக் கொண்ட பா.ச.க. அரசு வாய் திறக்கவில்லை. இதுதான் “பாரத மனித் திருநாட்டின் பண்பாட்டுப் பெருமை”. தன் நாட்டு மக்களை மதிக்காததும் அயலவன் காலை நக்குவதுமான இந்தப் பண்பாட்டுப் பெருமையை என்னவென்று புகழ்வது!

தமிழகக் கடற்கரைக்கு எதிர்க்கரையில் உள்ள ஈழத்து மீனவர்கள் காலங்காலமாகத் தமிழகத்து மீனவர்களுடன் உறவுடையவர்கள். ஈழத்திலும் நெல்லை குமரி மாவட்டக் கடற்கரையிலும் குமரி மாவட்டத்தின் உள்ளேயும் கல்குளம் விலவங்கோடு வட்டங்களிலும் வாழும் மக்களின் சொல்வழக்குகளும் ஒலிப்பு முறையும் ஒத்திருக்கின்றன . ஈழ விடுதலைப் போரை முன்னின்று நடத்தும் ஈழத்து மீனவர்களின் வீரம் தமிழக மீனவர்களுக்கும் உண்டு. நாள் முழுவதும் கடலில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் அவர்களது வாழ்க்கை முறை அவர்களிடம் இயல்பாகவே வீரத்தை உருவாக்கியுள்ளது. எனினும் தங்களுக்கெதிராக நடத்தப்படும் இந்த மனித நேயமற்ற, அனைத்துச் சட்டங்களுக்கும் ஞாயங்களுக்கும் புறம்பான விலங்காண்டித்தனமான இந்த இருமுனை வன்கொடுமைக்கு எதிராக ஒரேயொரு குரல் கூட அவர்களிடமிருந்து எழவில்லை. அதற்குக் காரணம் மீனவர் சங்கங்களின் தலைமைகள்தாம். அரசியல் கட்சிகள் சார்ந்தனவையும் சாராதவையுமான இந்தச் சங்கங்களின் தலைவர்கள் அவ்வப்போது வீரார்ப்பாகப் போராட்டங்களை அறிவித்து விட்டு பின்னர் அவற்றைக் கைவிட்டு ஆட்சியாளர்களிடம் தங்கள் நலன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இதே உத்தி உள்நாட்டுத் தமிழர்களிடத்திலும் கையாளப்பட்டு வருகிறது. 1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் மக்கள் காட்டிய வீரம் திராவிட இயக்கங்களால் விலையாக்கப்பட்டது. 1970களில் தமிழக உழவர்கள் காட்டிய அதை விடக் கூர்மையான வீரம் உழவர் தலைவர்களால் முதலாக்கப்பட்டது. நாள்தோறும் இவ்வாறு அனைத்து முனைகளிலும் தமிழக மக்கள் எண்ணற்ற சங்கங்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்களால் காயடிக்கப்பட்டுத் தங்கள் வீர உணர்வை இழந்து விட்டார்கள். ஆனால் அது இன்னொரு முனையில் இத் தலைவர்களால் திருப்பி விடப்பட்டுள்ளது. சாதி, சமய மோதல்களில் ஈடுபட்டு நம் நாட்டு மக்கள் தங்கள் வாழ்வின் அடித்தளத்தை தாங்களே அழித்துக் கொள்ளும் வகையில் அவர்களது ஞாயமான சீற்றங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, தமிழக மீனவர்கள், ஈழத் தமிழர்கள் ஆகியோருக்காக நடத்தப்படும் போராட்டங்களைச் சீர்குலைக்க உலக வல்லரசுகளும் அவற்றிடம் கூலி பெறும் “குமுகத் தொண்டர்களும்” முனைப்பாகச் செயற்படுகின்றனர். ஒரு சிறு எடுத்துக்காட்டு இதோ: தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை தாக்குவதை எதிர்த்தும் ஈழத் தழிழர்களுக்கு ஆதரவாகவும் பிரான்சு சேவியர் என்ற கிறித்துவம் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் தமிழகக் கடற்கரை மீனவர் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆனால் அதே நாளில் அதுவரை தென் தமிழகத்துக்கு வெளிப்படையாக வந்திராத உலகப் புகழ் பெற்ற “குமுகத் தொண்டர்” மேதா பட்கர் எனும் பெண்மணி நாகர்கோவிலுக்கு வந்து விசைப் படகுகளுக்கு எதிரான கட்டுமர மீனவர்களின் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்துவிட்டுப் போனார். ஆக, வெளிநாட்டு உதவி பெறும் இத் தொண்டு நிறுவனங்களிலிருந்துகொண்டு உண்மையான தன்னார்வத்தோடு எவராவது செயற்பட்டு அது வல்லரசிய நலன்களுக்கு ஊறு செய்வதாக அமையுமாயின் அதை முடக்கத் தேவையான கண்காணிப்பை மிகக் கவனமாகச் செய்து அத் தொண்டர்களைத் “தடுத்தாட் கொள்வதற்கான” முன்னேற்றபாடுகளை வல்லரசுகள் செய்து வைத்துள்ளன என்பதை இந் நிகழ்ச்சி மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதுவரை பல்வேறு இதழ்களில் அடிக்கடி காணப்பட்ட பிரான்சிசு சேவியாரின் பெயர் முற்றிலுமாக மறைந்தே போனது. வல்லரசியத்துக்கு எதிராகத் தமிழக நலன்களுக்காகப் பாடுபடுகிறவர் என்று நாம் நம்பும் எவராவது தொடர்ந்து வெளி உதவிகளைக் கொண்டு செயற்பட முடிகிறதென்றால் அவரது செயல்கள் உண்மையில் வல்லரசியத்தின் நலன்களுக்கு எதிராக அமையவில்லை என்றும் மாறாக அறிந்தோ அறியாமலோ அவர் வல்லரசியத்துக்கு உதவுகிறார் என்றும்தான் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நம் சிக்கல்களைத் தீர்க்க நாம்தான் நமக்குத் தேவையான இயக்கங்களை நம் சொந்த வலிமையில் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குத்தான் தமிழ்த் தேசிய முதலாளிய வகுப்புகளை வளர்த்தெடுத்துக் களத்தினுள் இறக்க வேண்டும். அவர்கள் மூலம்தான் வெளிநாட்டுப் பணத்தால் இங்கு ஒற்றர்களாக இயங்கும் அமைப்புகளை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் பொருள் வலிமை கிடைக்கும். இந்திய அரசும் அதன் கிளை நிறுவனங்களான மாநில அரசுகளும் தமிழக முதலாளிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கெதிராக வகுத்து வைத்திருக்கும் வருமான வரி, நிலவுச்சவரம்பு, உரிமம், மூலப் பொருள் ஒதுக்கீட்டு முறை, மின்சார வாரியம், மாசுக் கட்டுப்பாடு, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு போன்ற போலித் தடைகளை உடைப்பதற்கான போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

இன்று தமிழகத்தில் தேசிய முதலாளிய வகுப்பென்று எதுவும் இல்லை. இந்தியாவிலும் இல்லை. அவ்வாறு இருந்தவற்றைத் திராவிட இயக்க ஆட்சியாளர்களும் குமரி அனந்தன் போன்ற பொய்யர்களும் நெடுமாறன் போன்ற போலித் தமிழ்த் தேசியர்களும் வேரோடு கிள்ளி எறிந்துவிட்டனர். ஆனால் தேசிய முதலாளியத்துக்கான விதைகளாக இங்குள்ள மூலவளங்களும் மூலதனமாகத் திரளத்தக்க ஏராளமான பணமும் அறிவுத் திறனும் பெரும் உழைப்பாற்றாலும் தொழில் முனைவும் கொண்ட மாபெரும் மனித வளமும் 6 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரும் சந்தையும் உள்ளன.

நீண்ட வரட்சியின் கொடுமையில் நிலம் பொட்டலாகிக் காட்சியளிக்கும். குளங்களும் வரண்டு மண் வெடித்துக் காணப்படும். ஒரேயொரு நாள் பெரும் மழை பெய்து குளத்தில் நீரும் பெருகிவிட்டால் ஒரு கிழமைக்குள்(வாரத்துக்குள்) பொட்டலெல்லாம் புல்வெளியாகி நிற்கும். குளத்தில் மீனும் தவளையும் தண்ணீர்ப் பாம்பும் நீந்திக் குதிக்கும். பட்டுப் போன புற்களின் விதைகள் முளைத்து குளம் வற்றிய போது தாம் இறக்கும் முன் மீன்கள் இட்ட முட்டைகள் பொரித்து அண்டையில் பதுங்கி உயிரைக் காத்துக் கிடந்த தவளைகளும் பாம்புகளும் குளத்தை அடைந்து நிலைமையைத் தலைகீழாக மாற்றுகின்றன. இதே போன்ற நிலையைத் தேசிய முதலாளியத்தைப் படைப்பதில் நாம் திட்டமிட்டுச் செயற்பட்டால் தமிழகத்தில் எய்த முடியும். இன்று கண்ணுக்குத் தெரியாத தமிழகத் தேசிய முதலாளியர் முளைத்துக் கிளம்புவர். துள்ளி விளையாடுவர். அவர்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டியதுதான் பாக்கி.

தமிழகக் கடற்கரையில் மீன்பிடித் துறைமுகங்களைக் கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றைப் பார்ப்போம். குமரி மாவட்டத்துக் குளச்சலில் சில ஆண்டுகளுக்கு முன் நார்வே அரசின் “உதவி”யுடன் ஒரு மீன்பிடி துறைமுகம் திட்டமிடப்பட்டது. உதவி என்றால் இலவயமல்ல, கடன்தான். இந்தக் கடனுக்கும் அதற்கான வட்டிக்குமாக அத் துறைமுகத்தில் பிடிக்கும் மீன்களை நாம் நார்வேக்குக் கொடுத்துவிட வேண்டும். இதன் பொருள் என்ன? நாம் நம் நாட்டுக் கடற்கரையில் நம் நாட்டு மக்களின் உழைப்பால் நம் நாட்டில் கிடைக்கும் கல், மண் போன்ற கட்டடப் பொருட்களைக் கொண்டு ஒரு துறைமுகம் அமைக்கிறோம். இவையனைத்துக்கும் நம்மூர் நாணயத்தில்தான் செலவு செய்கிறோம். அதற்காக நாம் நம் நாட்டுக் கடலில் பிடிக்கும் மீன்களைப் பிடித்து “உதவி” செய்ததாகக் கூறப்படும் நாட்டுக்குக் கொடுக்கிறோம். உலக வங்கிக் கடன், ஆகிய வளர்ச்சி வங்கிக் கடன் அல்லது பல்வேறு நாடுகள் வழங்கும் கடன்கள் இவ்வாறுதான் செயற்படுகின்றன. நாம் நம் நாட்டினுள் நம் நாட்டு மக்களின் உழைப்பினால் நம் நாட்டுப் பொருட்களைக் கொண்டு செய்யும் பணிகளின் பெயரிலான கடனுக்கென்று அங்கு உருவாக்கப்படும் பண்டங்களை வெளியே விடுக்கிறோம். இந்த மாயம் என்ன? இந்திய அரசு ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி உரூபாய்களைப் போர்க் கருவிகள் வாங்குவதற்கென்று ஒதுக்குகிறது. அவற்றை இறக்குமதி செய்வதற்கென்று டாலரில் பணம் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை உலக வங்கி அல்லது கடனளிக்கும் நாடுகள் நம் நாட்டின் பெயரில் கணக்கில் எழுதிக் கொள்கின்றன. அது போலவே கன்னெய்யப் பொருட்களின் இறக்குமதியும். இவ்வாறு கணக்கெழுதப்படும் டாலர்களுக்கு நிகரான உள்நாட்டுப் பணத்தை “உதவும்” நிறுவனம் அல்லது நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாகக் கூறிச் செலவிடுகிறது “நம்” அரசு. இதற்காக உலக வங்கி முதலிய கடன் வழங்கு நிறுவனத்தின் திட்டத்திற்கான மதிப்பீடு போடுதல் அம் மதிப்பீடு தொடர்பான அனைத்தையும் அந் நிறுவன அதிகாரிகள் வந்து சரிபார்த்து இசைவு வழங்கல், வேலைகளை எந்த முறையில் யாருக்குக் கொடுக்க வேண்டும், வேலை செய்யப்பட வேண்டிய முறை என்று ஒவ்வொரு கட்டத்திலும் மட்டத்திலும் தலையிட்டு நம் மீது மேலாண்மை செலுத்துகின்றன.

நம் ஆட்சியாளர்கள் இத்தகைய ஒரு நாடகத்தை ஏன் நடத்துகிறார்கள்? முதலில் ஆயுதங்கள் வாங்கத்தான் அயற் செலவாணியான டாலர் தேவைப்படுகிறது என்று மக்களுக்குத் தெரிந்தால் இவர்களது சாயம் கலைந்துவிடும். ஆயுதங்களை வாங்கி அதில் தரகு பெறுவதற்காகப் பாக்கித்தானோடு மோதல் நிலையைக் பேணிக் காக்கின்றனர். பாக்கித்தானை ஆளுவோர்களும் அவ்வாறே. மக்களுக்கு வெளிப்படையாக இந்த உண்மை தெரிந்தால் அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். இந்த வாணிகம் இடையறாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே படைத்துறை ஆராய்ச்சிப் பிரிவினரின் கண்டுபிடிப்புகளை வெளிவந்துவிடாமல் போட்டுப் புதைக்கிறார்கள். அப்துல் கலாம் போன்ற கண்டுபிடிப்பாளர்கள் உண்மைகளைப் போட்டு உடைத்து விடக் கூடாதே என்பதற்பாக அவரை ஊடகங்களை விட்டுப் புகழ்ந்து தள்ளுகிறார்கள், பல்கலைக் கழகங்கள் அவருக்குப் பட்டங்கள் கொடுத்துக் குளிப்பாட்டுகின்றன. அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து அமைதிப்படுத்துகிறார்கள்.

இரண்டவாது காரணம் நம் நாட்டிலுள்ள அடிப்படைக் கட்டுமானங்களுக்குக் கடன் தருகின்றன என்ற பொய்யான எண்ணத்தை மக்கள் மனதில் விதித்துவிட்டு கடன் தரும் நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் நாம் நன்றிக் கடன் பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் முன் நம் ஆட்சியாளர்கள் பணிந்து ஒருங்கியிருப்பதைப் பார்த்து நம் ஆட்சியாளர்களை விட அதிகாரம் படைத்தவர்கள் உள்ளனர்; அவர்களுக்கு நம் ஆட்சியாளர்கள் பணிந்து நடப்பதைப் போல் நாமும் நம் ஆட்சியாளர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஊன்றுகின்றார்கள். அதன் மூலம் மக்களாட்சியில் ஆளுவோர், ஆளப்படுவோர் என்ற வேறுபாடு கிடையாது, அனைவரும் சமமான அதிகாரமும் கடமைகளும் உடையவர்கள் என்ற சமன்மை எண்ணம் உருவாகிவிடக் கூடாது என்று பார்க்கிறார்கள். இதைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம்.

மூன்றாவது முகாமையான காரணம் கடன் “வழங்கும்” போதும் அதைத் திருப்பிச் செலுத்தும் போதும் ஒரு காசு கூடப் பணம் கைமாறுவதில்லை. அனைத்தும் பண்டங்களின் இறக்குமதியும் ஏற்றுமதியும்தான். பணம் கணக்கில்தான் வரும். கடன் வழங்கப்படுவது ஆயுதங்கள். கன்னெய்யம் போன்ற பண்டங்களின் கணக்கில். திருப்பிச் செலுத்துவது நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் வடிவில். இந்தத் தொடர் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. நாம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகத் துணி வகைகளை ஏற்றுமதி செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இறக்குமதி செய்யும் நாடுகள் நம் நாட்டில் கிடைக்காத நீண்ட இழைப் பருத்தி கொண்டு நெய்யப்பட்ட துணிகள்தான் தேவை என்று முறுக்கிக்கொள்ளலாம். அப்போது நீண்ட இழைப் பருத்தியை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். அவ்வாறு இறக்குமதி செய்தற்குத் தேவையான வெளிச் செலவாணியை ஈட்டுதவற்கு நாம் வேறு பண்டங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதோடு நமக்குக் கடன் வழங்குவோர் நமக்குக் கடன் கொடுப்பது என்ற வடிவில் வழங்கப்படும் பண்டங்களுக்கும் கடனை அடைப்பதற்காக நாம் ஏற்றுமதி செய்யும் பண்டங்களுக்கும் விலை வைப்பவை கடன் கொடுக்கும் நிறுவனங்கள்தாம். வாங்கும் பொருளுக்கு அளவுக்கு மீறிய விலையையும் விற்கும் பொருளுக்குக் குறைந்த விலையும்தாம் வைப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வகையில், கடன் வாங்குவது, அதற்காக ஏற்றுமதி, ஏற்றுமதிக்காக இறக்குமதி, இறக்குமதிகாக ஏற்றுமதி என்று சுழன்று சுழன்றடிக்கும் நச்சு வளையத்தில் நம் மீது கடன் சுமை நாளுக்கு நாள் ஏறத்தான் செய்யுமேயொழிய குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு நம் மக்கள் மீது கடன் சுமையை ஏற்றி அயலார் ஆதாயம் ஈட்டுவதற்கு வழி வகுத்துக் கொடுக்கும் நம் ஆட்சியாளரின் தரகுப் பணிக்கு உரிய தரகு அவர்களுக்குப் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது. முன்பு சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மறைமுகக் கணக்குகளில் பதுக்கப்பட்டன. அவை உரியவர்களின் பிறங்கடைகளுக்கு(சந்ததிகளுக்கு)க் கிடைக்காமல் போயின. எனவே இப்போது அவை அயல்நாட்டு நிறுவனங்களாகிய பன்னாட்டு நிறுவனங்களில் முதலிடப்படுகின்றன. அவற்றைக் கண்காணிப்பதற்கு ஆட்சியாளர்கள் தங்கள் பின்னடி(சந்ததி)களை அந் நாடுகளில் குடியேற்றுகின்றனர். வெளி நாட்டுக்குக் குடியேறுவோருக்கு நம் நாட்டு அரசு கொடுக்கும் மதிப்புக்கு இதுவெல்லாம் காரணங்கள். ஏற்றுமதி - இறக்குமதியில் நம் ஆட்சியாளர்கள் எவ்வளவு கூச்சமில்லாமல் கொள்ளையடிக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. அண்மையில் ஒன்றிரண்டு: சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபு உழவர்கள் கோதுமைக்குத் கூடுதல் விலை கேட்டுப் போராடினர். அதை மறுத்துவிட்டு அந்தப் போராட்டத்தை முறியடிப்பது என்ற சாக்கில் அவர்கள் கேட்ட விலையை விடக் கூடுதல் விலைக்குக் கோதுமையை இறக்குமதி செய்தனர் ஆட்சியாளர்கள். அடுத்த ஆண்டு கோதுமை விளைச்சல் மிகுதி, சேமித்து வைக்க இடமில்லை என்று கூறி கிலோ உரூ 4.00க்கு ஏற்றுமதி செய்கிறார்கள். உள் நாட்டில் கிலோ உரூ 9.00 வீதம் விற்கப்படும் கோதுமை பங்கீட்டு (ரேசன்) கடைகளில் இருப்பு இல்லை. அதே போல்தான் அரிசியும் பங்கீட்டுக் கடை விலையை விடக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

படைத்துறையில் ஆராய்ச்சிப் பிரிவில் கண்டுபிடிக்கப்படும் கருவிகளைப் பெருமளவு விளைக்காமல் உடனடித் தேவை என்ற சாக்கிட்டு அதற்காகவே பாக்கித்தானுடன் உரசலை ஏற்படுத்திப் பெருமளவில் நம் ஆராய்ச்சிப் பிரிவு கண்டுபிடித்தவைகளை விடத் தரம் குறைந்தவற்றை இறக்குமதி செய்வதையும் அது பற்றிய முனகல்களும் புலம்பல்களும் படைத்துறை இரும்புத் திரையையும் மீறி நம் காதுகளுக்கு வருவதையும் கூறினோம். கன்னெய்யத்தை எடுத்துக் கொண்டால் ஏரி நீர் இராமர் தான் மூலிகையிலிருந்து கன்னெய் கண்டுபிடித்தாகக் கூறினார். அது கன்னெய் அல்ல என்றனர் நம் ஆட்சியாளர்களின் எடுபிடிகளான “ஆராய்ச்சியாளர்கள்”. இவர் அதற்கு எரிநீர் என்று பெயர் வைத்தார். அப்போதும் அவர்கள் அவருக்குக் காப்புரிமம் வழங்கவில்லை. இன்று ஏமாற்று என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவரை எங்கு அடைத்து வைத்துள்ளனர் என்பதே கேள்விக்குறி. இது போன்று மாற்று எரிபொருட்கள் அல்லது எரிபொருட் சிக்கனத் தொழில்நுட்ப மேம்பாடுகள் கண்டுபிடித்ததாக அறிவித்த எவரையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. இவையனைத்தும் ஏற்றுமதி இறக்குமதியில் நம் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அவற்றில் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெரும் ஆதாயத்தையும் காட்டுகின்றன.

நூற்று முப்பது கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் ஒரேயொரு காப்புரிமம் வழங்கும் அலுவலகம்தான் உள்ளது. அங்கும் உருப்படியாக எவருக்கும் காப்புரிமம் வழங்குவதில்லை. வருகின்ற வேண்டுகைகளை அழிக்கின்றனர் அல்லது அவ் வேண்டுகைகளில் தரப்பட வேண்டுமென்று வலியுறுத்தும் கண்டுபிடிப்பு மறையங்களை அயலவர்களுக்கு விற்றுவிடுகின்றனர். அல்லது இங்கு அலைந்து பார்த்து அலுத்துப் போன கண்டுபிடிப்பாளர்கள் கிடைக்கும் காசுக்கு அயல் நாட்டினர்க்கு விற்றுவிடுகின்றனர். அவை வெளி நாட்டுத் தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் நம் நாட்டுக்குள் புகுந்து உரிமைத் தொகை(ராயல்டி) அல்லது ஆதாயமாக நம் செல்வத்தைச் சுரண்டிச் செல்கின்றன. உலக வாணிக ஒப்பந்தப்படி காப்புரிமப் பதிவு இரு கட்டங்களில் செய்யலாம். முதலில் செய்பொருள் காப்புரிமம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கலாம். இதற்கு செய்முறை மறையங்களை காப்புரிமம் வழங்கும் நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. அந்தக் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்முறை மறையங்களைத் தெரிவித்துச் செய்முறை காப்புரிமம் பெற்று அதை உறுதி செய்யலாம். இந்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியிருந்தும் செயலுக்குக் கொண்டு வரவில்லை. இந்திய நிலைமைக்கு மாவட்டத்துக்கு ஒரு காப்புரிமம் பதிவு அலுவலகம் திறக்க வேண்டும். அரசு செய்யவில்லையாயின் மக்களே அதைச் செய்ய வேண்டும். அதே போல் பங்குச் சந்தை, பண நிறுவனங்கள் ஆகியவற்றை உருவாக்கி அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தவறு செய்வோர் மீது தண்டனை விதித்துக் கண்காணிக்கும் அமைப்புகளையும் மக்களே அமைக்க வேண்டும்.

ஒட்டுண்ணிக் கூட்டத்தின் பிடியில் சிக்கி காட்டுவிலங்காண்டி நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நமக்கு அரசியல், பொருளியல், வளர்ச்சி மனப்பான்மை என்ற அனைத்தையும் ஊட்டி வழிகாட்டியவர்கள் ஆங்கிலரும் பிற ஐரோப்பியர்களும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர்கள் இந் நாட்டை விட்டு அகன்ற உடனே பழைய ஒட்டுண்ணிப் பிடியை இறுக்கிய ஏமான் (எசமான்)களுக்கும் நாட்டை அயலாருக்கு விற்றுவிட்ட கயவர்களுக்கும் எதிராகப் போராடி அவர்களை வென்று ஆங்கிலரும் பிறரும் காட்டிய அறிவியல் வழியைக் கடைப்பிடித்து சப்பானைப் போல் ஆசானுக்கு மிஞ்சிய மாணவனாக மாற வேண்டியது நம் வரலாற்றுக் கடமை.

தமிழகக் கடற்கரையில் துறைமுகங்கள் அமைக்கும் பணியை அரசு பணத்தை அச்சிட்டு அதைக் கொண்டு மேற்கொள்ளாமல் அயலாரின் கடன் கொண்டு செய்வதாயின் துறைமுகங்கள் வேண்டுமென்று அரசை நோக்கி நாம் கேட்க வேண்டியதில்லை. மக்களே தங்களுக்குள் பணம் திரட்டித் துறைமுகங்களை அமைக்கும் உரிமை கேட்டுப் போராட வேண்டும். அவ்வாறுதான் பெரிதாகப் பேசப்படும் சேது கால்வாய்த் திட்டமும். வெளிக்கடனில் கால்வாயை அமைத்து அக் கடனுக்காக அதில் தண்டப்படும் கட்டணத்தைக் கடன் கொடுத்தவன் பெற்றுக்கொண்டால் நம் நாட்டின் ஒரு பகுதியைக் கடன் கொடுத்தவனுக்கு இலவயமாகக் கொடுத்ததாகிவிடும். அதைக் கட்டுவதற்கான பொருட்களையும் உழைப்பையும் நாம்தானே வழங்கப் போகிறோம்!

இவ்வளவுக்கும் நம்மிடம் பணம் இருக்கிறதா என்ற கேள்வி எழலாம். நாம் நாள்தோறும் வீணாக்கும் பண்டங்கள், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றைச் சிக்கனம் செய்து, திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளையும் சமய நிகழ்ச்சிகளையும் எளிமைப் படுத்தி நம் பெண்களும் ஆண்களும் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கைவிட்டால் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குப் பணம் திரளும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வருமான வரியை ஒழித்துவிட்டாலே சட்டத்துக்கு உட்பட்டு ஈட்டி வருமான வரிக்கு அஞ்சி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடானு கோடானு கோடிக்கணக்கான உரூவாய்கள் வெளிப்பட்டு நம்மைத் திக்குமுக்காட வைக்கும் என்பது உறுதி.

உலகில் தங்கள் தங்கள் கடற்கரைகளை நன்கு பயன்படுத்திய நாடுகள் எவ்வளவு சின்னஞ்சிறியவையாய் இருந்தாலும் உலக நாடுகளின் மீது குறிப்பிடத்தக்க ஆளுமையைச் செலுத்தியுள்ளன. வரலாற்றுக் காலத் தொடக்கத்தில் பினீசியர்கள், பின்னர் கிரேக்கர்கள், உரோமர்கள் அரேபியர்கள் என்றால் இற்றை (நவீன) நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, சப்பான் போன்வற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். அவற்றுள் சப்பானின் வரலாறு மிகக் குறிப்பிடத் தக்கது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில்(1853) ஓர் அமெரிக்கக் கப்பல் சப்பானியத் துறைமுகம் ஒன்றினுள் நுழைய விட வேண்டுமென்று குண்டு வீசி மிரட்டியது. அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சப்பானியர் விட்டுக்கொடுத்துத் தம் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் உடனடியாகச் செயலில் இறங்கினர். நம் நாட்டில் இன்று சாதிச் சிக்கலின் தீர்வுக்கு இடையூறாயிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக அங்கிருந்த சாமுரைகள் என்ற வகுப்பினர் சிக்கலைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். அங்கு அப்போது பேரரசுருக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. சிற்றரசர்களே உண்மையான அதிகாரத்தை வைத்திருந்தனர். நம்மைப் போல் சப்பானியக் குமுகமும் நான்கு வருணங்களாகப் பிளவுண்டிருந்தது. அதாவது சப்பான் ஒரு முழுமையான நிலக்கிழமை நாடாக இருந்தது. இந்த நிலைமைகளை மாற்றிச் சிற்றரசர்கள் தங்கள் அதிகாரங்களையும் பதவிகளையும் விட்டுக்கொடுக்க இணங்கினர். வருண வேறுபாடுகளை ஒழித்து அனைவருமே சமமென்று அறிவித்தனர். ஐரோப்பாவுக்குச் சென்று அங்கிருந்த வளர்ச்சி நிலைகள் அனைத்தையும் அறிந்துவந்தனர். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாணவர்களை விடுத்து அவர்கள் மூலம் அனைத்துத் துறை அறிவுகளையும் திரட்டிக்கொண்டனர். இருபதே ஆண்டுகளில் தங்கள் நாட்டை ஒரு முழுமையான முதலாளிய நாடாக வளர்த்துவிட்டனர். தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலையான ஒப்பந்தங்களைப் பின்வாங்க வைத்தனர். 50 ஆண்டுகளில் (1905) உருசியப் பேரரசைக் கடற்போரில் படுதோல்வி அடையச் செய்தனர். இன்று உலகப் பொருளியல் வல்லரசுகளில் அமெரிக்காவுக்கு இணையான நிலையை எய்தியுள்ளனர். இவையனைத்துக்கும் தங்கள் கடற்கரையின் ஆளுமை மீது அவர்களுக்கிருந்த இமை நொடியும் பிசகாத விழிப்புணர்வுதான் அடிப்படை என்பதுதான் நமக்குப் பாடம். அந் நாட்டில் மூலப் பொருட்களே மிக அரிது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இந்தியக் கடற்கரையின் நீளத்துக்குச் சமமான நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட நாடுகள் உலகில் குறைவு. ஆனால் அக் கடற்கரை நமக்கு வலுவளிப்பதற்குப் பகரம் எப்போதும் மெலிவையே அளித்திருக்கிறது. கடற்கரை வலிமையடைந்தால் பகுத்தறிவுக்கொவ்வாத தங்கள் ஆதிக்க வெறிக்கு ஊறு வருமென்று கடற்கரை மக்களை அளவுக்கு மீறி அடக்கி ஒடுக்கி வைத்திருத்தனர், வைத்திருக்கின்றனர் உள்நாட்டு ஒட்டுண்ணிக் கூட்டத்தினர். இதுதான் இந்த நம் மெலிவுக்குக் காரணம். இதனால், நினைத்தவர்களெல்லாம் தட்டுத் தடங்கலின்றி நுழையும் வாயில்களாக நமது கடற்கரையும் அங்கு வாழும் மக்களும் அமைந்தனர். கடற்கரையைப் பேணும் நாடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் பகுதிகள் உள்நாட்டுப் பகுதிகள் மீது ஒரளவுக்கேனும் தம் பிடியை வைத்திருக்கும். ஆனால் இந்தியாவில் கடற்கரை மாநிலங்கள் மீது உள்நாட்டு மாநிலங்கள்தாம் தம் பிடியை இறுக்கி வைத்துள்ளன. இந்தியக் கடற்கரை மாநிலங்கள் மீது உள் நாட்டு மாநிலங்களான இந்தி பேசும் உத்திரப் பிரதேசம், இராசத்தான், மத்தியப் பிரதேசம், அரியானா, இமாசலப் பிரதேசம், ஆகியவை அரசியலிலும் அம் மாநிலங்களைச் சேர்ந்த மார்வாரிகள் அரசியல், பொருளியல் அடங்கிய அனைத்துத் துறைகளிலும் ஆட்டிப் படைப்பவர்களாக உள்ளனர். விதிவிலக்காக, பனியாவான காந்தி பிறந்த குசராத் மாநிலம் மட்டும் செல்வாக்குள்ள கடற்கரை மாநிலமாக உள்ளது. இவர்களின் பொருளியல் ஆதிக்கம் உண்மையில் நம் நாட்டு வலிமையைப் பெருக்கவில்லை. அயலவர்களின் தரகர்களாக தாங்கள் மட்டும் வீங்கி நாட்டின் பிற மக்களை மெலிய வைத்து மொத்த இந்தியாவின் வலிமையை அழித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை முறியடித்து அனைத்து மக்களும் நலன் பெற வேண்டுமாயின் கடற்கரை மாநிலங்கள் அரசியலிலும் பொருளியலிலும் வலிமை பெறப் போராட வேண்டும். அந்தப் போராட்டம் கடற்கரையிலும் உள்நாட்டிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட வேண்டும். நம் வளங்களும் ஆற்றல்களும் ஒன்று கலந்து புதிய குமுகமும் பண்பாடும் கண்ணோட்டங்களும் உருவாக வேண்டும். அனைத்துத் தளங்களிலும் களங்களிலும் நாம் வீறு கொள்ள வேண்டும். அதற்கு நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள தப்பெண்ணங்களைத் தகர்த்து உண்மை வழி நிற்க நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வோம்! தடைகளைத் தகர்த்து முன்னேறுவோம்! புதிய தமிழகம் படைப்போம்! வெற்றி உறுதி.

0 மறுமொழிகள்: