பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 2
பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை - 2
மீனவ மக்களை இந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க முடியும். அதற்கு எல்லையில்லா வாய்ப்புகள் உள்ளன. அவ்வப்போது மிச்சமாகும் மீனை இப்போது போல் கருவாடாக மாற்றுவதைக் கைவிட்டு அவற்றை இற்றை(மாடர்ன்)த் தொழில்நுட்பங்கள் மூலம் பதப்படுத்தி போணிகள் (டப்பாக்கள்) அல்லது வேறு கொள்கலன்களில் அடைத்து சந்தைக்கு விடுதல், மீனை ஓரளவு சமையல் செய்து அடைத்து விற்பனைக்கு விடுதல், மீனுடன் நண்டுகள், நத்தைகள், சிப்பிகள், கடல் அட்டைகள், நட்சத்திர மீன்கள், பாசிகள் போன்று உண்ணத்தக்கவை அனைத்தையும் திரட்டிப் பதப்படுத்தியும் ஒரளவு சமையல் செய்தும் அடைத்து சந்தையில் விடுதல் என்று தொழிலை விரிவுபடுத்தலாம். கடற்கரையில் கிடைக்கும் கிளிஞ்சல்கள், சங்குகள் போன்றவற்றைத் திரட்டி அலங்காரப் பொருட்கள் செய்யலாம். இவை அனைத்துக்குமான தொழிற்சாலைகளைக் கடற்கரையில் அமைக்கலாம். துலை, நளி (ஐப்பசி, புரட்டாசி) மாதங்களில் கணக்கின்றிக் கிடைக்கும் மீன்களை இப்போது போல் ஆழுக வைத்து ஏற்றுமதி செய்யாமல் பிடித்த உடனே பதப்படுத்தி அடைத்து வைத்துக் கொண்டு பாடுகுறைந்த மாதங்களில் அவற்றை மக்களுக்குக் கிடைக்கச் செய்யலாம், மீனவர்களுக்கும் வேலை தொய்வின்றிக் கிடைக்கும். மீன் தொடங்கி உண்ணத்தக்க அனைத்துக் கடல் பொருட்களையும் சமைக்கும் முறைகளை அனைவருக்கும் கற்பிக்கும் பணியையும் மேற்கொள்ளலாம்.
இவையனைத்துக்கும் மேலாக இன்னொரு பெரும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பணக்கார நாட்டு மக்கள் விடுமுறை நாட்களில், தாங்கள் எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கடற்கரை நோக்கிச் செல்கின்றனர். அங்கு படகுவிடல், ஒற்றைப் பாய்மரப் படகுகளில் திறனை வளர்த்தல், பல்வேறு வகை நீர்ச் சறுக்கல்களில் ஈடுபடல் என்று பொழுதை இனிமையாகக் கழிக்கின்றனர். அது போல் நீண்ட கடற்கரையையுடைய நம் நாட்டு மக்களையும் கடற்கரைக்கு ஈர்த்து இவை போன்ற விளையாட்டுகளில் பழக்கி ஆர்வமூட்ட வேண்டும். இதற்காக மீனவ இளைஞர்களே முதலில் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் நீச்சல் தொடர்பான விளையாட்டுப் போட்டிகளில் பணக்கார நாடுகள் வெற்றி பெறுவதைப் பார்த்து நாம் ஏக்கப் பெருமூச்சுவிட வேண்டியிருக்காது. இவ்வாறு செய்வதால் மீனவர்களே கடற்கரைகளுக்குத் தனியுரிமை பெற்றிருந்த நிலை மாறலாம். ஆனால் மீனவர்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்குள் ஊடுருவித் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் நோக்கம் உருவாகி அதற்கான வாய்ப்புகளும் பெருகும்.
தொழில் வளர்ச்சி, தொழில் பன்முகமாதல் என்பவையெல்லாம் கடற்கரையில் மட்டும் தனித்து நிகழ முடியாது. நாடு மொத்தமும் அந்நிலைக்கு மாறினால்தான் மக்களின் வேலைவாய்ப்புகள் விரிவடைந்து பணப்புழக்கம் ஏற்பட்டு கடற்கரையில் படைக்கப்படும் பண்டங்கள் உள்நாட்டில் நுகரப்பட்டு அவற்றைச் செய்தவர்களுக்கு விற்றுமுதல் ஆகும். எனவே இந்தப் பன்முகமாதல் அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் நிகழ வேண்டும்.
எடுத்துக்காட்டாக, தேங்காய் மிகுதியாக விளையும் இடங்களில் தேங்காயைப் பால், பொடி, சிரட்டை எண்ணெய், சிரட்டைகள், அதிலிருந்து கிடைக்கும் பிற பொருட்கள், கதம்பல் எனப்படும் தேங்காய் மட்டையிலிருந்த தும்பு, அதிலிருந்து கழியும் தூளிலிருந்து உரம், ஈரத்தைப் பிடித்து வைக்கும் அட்டைகள், ஈர்க்குப் பொருட்கள், ஓலையையும் மட்டையையும் மட்கவைத்து உரம் என்று எத்தனையோ தொழில்களைத் தொடங்க முடியும். வாழைப் பழத்திலிருந்து இனிப்புப் பொருட்கள், வாழைப்பழத் தோலிலிருந்தும் தண்டு, பூ ஆகியவற்றிலிருந்தும் உணவுப் பொருட்கள், மருந்துகள், வாழை இலை, பட்டை, சருகு ஆகியவற்றில் கிடைக்கும் வளிகளைப் பிரித்தெடுத்து ஆற்றல் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தி எஞ்சிய கழிவிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்களையும் பிரித்தெடுத்த பின் உரமாகவும் பயன்படுத்தலாம். நன்செய், புன்செய்த் தவசங்கள் (தானியங்கள் - நெல், சோளம், கம்பு, வரகு போன்றவை), பயிறு வகைகள் பருப்பு வகைகளில் இன்று நாம் விதைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றிலிருந்து கிடைக்கும் பதர், உமி(மேலுறை), தொலி(விதைத் தோல்) போன்ற அனைத்தையும் எரித்தழிக்கிறோம். இதன் மூலம் காற்றும் மாசுபடுகிறது. இவற்றைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி அவற்றிலிருந்து வேதிப்பொருட்களையும் வளிகளையும் பிரித்தெடுத்து எஞ்சியவற்றை உரமாகவும் கால் நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
இன்று தமிழகத்தில் மிகப் பெரும்பாலான மாடுகள் தொழுவங்களில் அடைத்து வளர்க்கப்படுவதில்லை. தொழுவங்களை வைத்திருந்த பண்ணையார்கள் கடந்த காலத்தினுள் மறைந்துவிட்டனர். ஆட்சியாளர்கள் கூட்டுறவுப் “பால் பண்ணைகளை” உருவாக்கிக் குடியிருக்க வீடே இல்லாத வறியவர்களுக்குக் கடன் கொடுத்து மாடு வாங்கி அக் கடனுக்கு வட்டிக்கும் முதலுக்குமாகப் பாலை வாங்கிக்கொள்கின்றனர். கொஞ்சம் மிச்சமும் மாட்டுக்காரனுக்குக் கிடைக்கிறது. அவன் மாட்டை வெட்ட வெளியில் ஓட்டிவிடுகிறான். அது நகரமாயிருந்தால் தெருக் குப்பைகளை உண்ணுகிறது, நாட்டுப் புறங்களில் தரிசு நிலம், விளைநிலம் என்ற வேறுபாடின்றி மேய்கிறது. தெருவிலும் வெட்ட வெளியிலும் படுத்துக்கொள்கிறது. சரியான உணவோ குடிக்க நீரோ இன்றி அது வளர்கிறது. கன்று ஈன்றால் அறிந்து வந்து மாட்டுக்காரன் கன்றைத் தூக்கிச் செல்கிறான். பின்னர் கன்றுக்குப் பாலுட்ட வரும் மாட்டின் பாலைக் கறந்துவிட்டுத் துரத்திவிடுகிறான். இதனால் மாட்டின் சாணமும் சிறு நீரும் உரமாகாமல் வீணாகின்றன, மாட்டின் உடலமைப்பே நாளடைவில் நசிந்து போகிறது. தரத்தில் குறைந்த இன மாடாக நம் மாடுகள் இழிந்து போகின்றன (மாடுகள் மட்டுமென்ன மக்களுமே வறுமையால் அந்நிலையை எய்தியுள்ளனர்). இதன் இன்னொரு பக்கவிளைவாய் நகரத்திலும் தரிசுகளிலும் மரம் மட்டைகள் புற்கள் கூடத் தலைகாட்ட முடியவில்லை. சீமை உடை என்ற வகை மரம் மட்டும்தான், தன் முள்ளால் மாடுகளைத் தடுப்பதால், தாக்குப் பிடிக்க முடிகிறது. ஆடுகளும் அப்படித்தான். இதே முறையில் கடனாக ஆட்சியாளர்கள் கொடுக்கிறார்கள். அவை ஆட்சியாளர்கள் நட்டுவிட்டுச் செல்லும் மரக் கன்றுகளைத் தின்றுவிட்டு மரம் நடு விழாக்கள் ஆண்டு தோறும் தொய்வின்றி நடக்க அவர்களுக்கு வழியமைத்துக் கொடுக்கின்றன. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான கோடி உரூபாய்களை மரம் நடுவதற்காக வெளிக்கடன் வாங்கித் தங்கள் பக்கறைகளை(பைகளை) நிரப்பிக்கொள்கிறார்கள். இந்த ஒற்றை இரட்டை ஆடுகள் வளர்ப்பவர்களோ தனியார் நிலங்கள், சாலை ஒரங்களிலும் குளக்கரைகளிலும் நிற்கும் மரங்கள் என்ற வேறுபாடின்றிக் கிளைகளை வெட்டித் தொண்டு செய்கிறார்கள். “மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வந்தே மாதரம்!”.
இதற்கு மாறாகப் பெரும் பெரும் ஒருங்கிணைந்த பண்ணைகளில் இந்த மாடுகளையும் ஆடுகளையும் வளர்ப்பதாய் வைத்துக்கொள்வோம். அவற்றின் சாணம், பிழுக்கை, சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து அவற்றிலிருந்து முதலில் எரிவளி எடுக்க முடியும். வெளியேறும் கழிவை உரமாகப் பயன்படுத்தலாம். அவற்றிலிருந்து காய்கறிகள், தீவனப் புல்கள் என்று விளைவிக்கலாம். நல்ல உணவும், தண்ணீரும் கிடைத்தால் நம் மாடுகள் உயர்ந்த தரத்தை எய்தி நிறையப் பால் தரும். பாலாக விற்றது போக எஞ்சியதைப் பதப்படுத்தித் துணைப் பொருட்கள் செய்யலாம். இந்தப் புது வாய்ப்புகள் மூலம் எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். நம் நாட்டு பசுமையைப் பாதுகாக்கலாம் என்பது எல்லாவற்றுக்கும் மேலான நன்மை.
இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் கணக்கற்ற வேலை வாய்ப்புகளைத் உருவாக்க வாய்ப்புத் தருகிறது முதலாளிய விளைப்பு முறை. இந்த வேலை வாய்ப்புகளைத் தேடி மக்கள் இடம் பெயர்வது தேவையாகும். சாதிகளின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்புறங்கள்(இங்குதான் இந்தியாவின் “இதயமே” இருப்பதாக மோகன்தாசு கரம் சந்து காந்தி கூறினர். அந்தச் சாதியமைப்புதான் இந்தியக் குமுக அமைப்பின் மிக உயர்ந்த பண்பு என்று பெருமிதப்பட்டார்) கலைவதும் அவற்றின் தொழிலடிப்படை மறைவதும் இன்றியமையாதது என்று கருதுவோருக்கு முதலாளியம் இன்றி வேறு வழியில்லை. தேங்கிய தொழில்நுட்பத்தின் விளைவுதான் தொழில் சார்ந்த சாதிகள். முதலாளியம் தொழில் நுட்பத்தைத் தேங்க விடுவதில்லை. இடைவிடாமல் அதைப் புதுப்பித்துக் கொண்டிருப்பது அதன் இருப்புக்கு இன்றியமையாததாகும். இவ்வாறு சாதியத்துக்கு நிலைக்களனின்றிச் செய்துவிடும் முதலாளியம்.
சொந்தத் தொழில் என்ற பெயரில் விளைப்பு வகைதுறைகள்(உற்பத்திச் சாதனங்கள்) என்ற கருவிகளோடும் மூலப் பொருட்களோடும் செய்பொருட்களோடும் பிணைக்கப்பட்டு புற உலகத்துடனும் மக்களுடனும் உள்ள குமுக உறவுகள் அறுக்கப்பட்டு ஒவ்வொருவரும் தனித் தீவாய் இருக்கும் நிலை மாறி முதலாளியத்தால் தொழிலாளி வேலை நேரம் போக எஞ்சிய நேரத்தைத் தன் குமுக வாழ்வுக்குப் பயன்படுத்தலாம்.
இந்த நிலையை எய்துவதற்குப் பெரும் முதலீடு தேவை. அதைப் பெறுவதற்கு நம் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் காட்டும் வழி உலக வங்கி மற்றும் வெளிநாடுகளில் கடன் வாங்குவது அல்லது நாட்டின் பொருளியலை வெளிநாட்டினருக்குத் திறந்து விடுவது ஆகும். உள்நாட்டில் மூலதனம் திரட்டும் வாய்ப்பு உள்ளதா, அதை எய்துவுது எப்படி என்ற சிந்தனையையே வளர்ப்பதில்லை. நம்மிடம் மூலதனம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தே அவர்கள் அரசியல் நடத்துகின்றனர். இது உண்மைக்கு மாறானதாகும். நம் மக்களிடம் ஏராளமான பணம் உள்ளது. ஆனால் தனித்தனியாக அவை எந்த உருப்படியான தொழிலுக்கும் போதாது என்ற வகையில் பயனற்றுக் கிடக்கிறது. இதே போன்ற சூழலை எதிர்கொள்ளத்தான் முந்திய நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் பங்கு மூலதனம் என்ற மிகச் சிறந்த உத்தியை வகுத்து நடைமுறைப்படுத்தினர். அதைச் சரியாகக் கடைப்பிடித்தால் நம்மில் உரூ 5000/- வைத்திருப்போர் கூட தங்கள் பணத்தை முதலிட்டு நாட்டின் விளைப்புச் செயல்முறையில் பங்கேற்க முடியும். ஆனால் இங்கு நடந்ததென்ன? முப்பதாண்டுகளுக்கு முன் மக்களிடையில் பங்குச் சந்தை மீது பேரார்வத்தை ஏற்படுத்தினர் ஆட்சியாளர்கள். தாளிகை (பத்திரிகை)களெல்லாம் பங்குச் சந்தையைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கென்று தனிப் பகுதிகளை ஒதுக்கின. பல இலக்கம் கோடி உரூபாய்கள் பங்குச் சந்தையில் பாய்ந்தன. ஆட்சியாளர்கள் அறிவித்த “தாராளமாக்கலை” நம்பிப் பல இளைஞர்கள் புதிய தொழில் திட்டங்களோடு களத்தில் இறங்கினர். “தாராளமாக்கல்” அயல் நாட்டினருக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும்தான் என்பதைக் காலங்கடந்து உணர்ந்தனர். ஆட்சியாளர்களின் கையாளான அர்சத் மேத்தா என்பவன் அரசு நிறுவனங்களின் பணத்தைப் பயன்படுத்தி ஓர் இலக்கம் கோடி உரூபாய் அளவுக்குச் பங்குச் சந்தையில் கொள்ளையடித்து ஆட்சியாளர்களுடன் பங்கு போட்டுக்கொண்டான். அரசு நிறுவனமான செபி எனும் பங்குச் சந்தைக் கட்டுப்பாடு வாரியத்தினர் போலித் “தொழில் முனைவர்”களோடு கூட்டுச் சேர்ந்து அவர்கள் அறிவித்த போலித் தொழில் நிறுவனங்களைப் பங்குச் சந்தையில் பட்டியலிட்டுக் கொடுத்து பல ஆயிரம் கோடி உரூபாய்களைக் கொள்ளையடித்தனர். இப்படிப் பல முனைகளிலும் தாங்க முடியாத வகையில் சூடுபட்ட பொதுமக்கள் பங்குச் சத்தைப் பக்கமே வராமல் ஒதுங்கிக்கொண்டனர். அதே வேளையில் பங்குச் சந்தை என்ற பெயரில் இன்று நடைபெறும் வாணிகம் இரண்டாம் நிலை பங்குச் சந்தை எனப்படும். இதில் ஒரு தொழில் நிறுவனத்தில் முதலிட்டதற்குச் சான்றாக ஒருவருக்குத் வழங்கப்படும் சான்றிதழை ஒருவர் இன்னொருவருக்கு விற்பார். இவ்வாறு போடப்படும் பணத்தில் ஒரு தம்பிடி கூட அந்தப் பங்கினை முதன் முதலில் வெளியிட்ட நிறுவனத்துக்குச் சேராது. தொழில் முதலீட்டோடு தொடர்பு அறுந்து போன “தூய” சூதாட்டம்தான் இது. இந்த உண்மை அனைத்து மக்களுக்கும் மறைக்கப்படுகிறது. இதன் மூலம் பெருங்கொண்ட மக்களுக்கு பங்கு மூலதனத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் நாட்டுப் பொருளியல் நடவடிக்கைகளில் பங்குகொள்வதன் மூலம் அரசியல் மக்களாட்சிக்கு அடிப்படையாக அமையத்தக்க ஒரு பொருளியல் மக்களாட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
முதலீடு, மூலதனம் என்ற களங்களில் இடங்கைக் கட்சிகள் எனப்படும் பொதுமைக் கட்சிகளும் நிகர்மை(சோசலிச)க் கட்சிகளும் வெளிக்கடன், வெளிநாட்டு மூலதனம், உள்நாட்டு மூலதனம் அனைத்தையும் எதிர்ப்பர். ஆனால் மாற்றுவழியைக் கூறமாட்டார்கள். அவர்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்களில் வெளிக் கடன்களையும் வெளியார் முதலீடுகளையும் வரவேற்றுப் போற்றுகின்றனர். அடக்கத்தில் அவர்கள் நம் நாட்டு ஆளுங்கணத்தாரின் பொதுவான திட்டத்திற்குள்ளாகவே - அதாவது அயலாருக்காக உள்நாட்டுப் பொருளியல் விசைகளை நசுக்குதல் - வருகின்றனர்.
முதலாளியத்துக்கு எதிரான மூன்றாவது தடை இந்தப் பரவலான தொழில் வளர்ச்சியில் உடலுழைப்பின் மூலம் பங்கு கொள்வதற்கு நம் இளைஞர்களின் தயக்கம். அண்மைக் காலம் வரை தொழில் மற்றும் வாணிக நிறுவனங்களின் வாயில்களில் “வேலை காலி இல்லை” என்ற அறிவிப்புகள் தவறாமல் தொங்கும். ஆனால் இன்று தேநீர்க் கடையிலிருந்து பெரும் பெரும் தொழிற்சாலைகளின் வாயில்கள் வரை “வேலைக்கு ஆள் தேவை” என்ற அறிவிப்புகள் தொங்குகின்றன. அதே நேரத்தில் வேலையற்றோர் படை நாளுக்கு நாள் பெருகி வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த விந்தையான முரண்பாட்டுக்கு நம் பண்பாட்டுப் பின்னணியும் இந்த நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியும் அவற்றுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் நம் கல்விமுறையும் காரணங்களாகும்.
உழைப்போரை இழிந்தோராகப் பார்ப்பது நம் பண்பாடு. தொல்காப்பிய காலத்திலேயே (இதன் காலம் கி.மு. 7600 வரை மதிப்பிடப்படுகிறது) உடலுழைப்போர் மீது இந்த இழிவு சுமத்தப்பட்டுவிட்டது. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத் தென்மனார் புலவர் என்ற வரிகளின் பொருள், அடிமைகள், கைத்தொழில் வல்லோர் ஆகிய உடலுழைப்பாளர்கள் ஐந்திணை எனப்படும் மேற்குடி மக்களின் களவு, கற்பு ஒழுக்கத்துக்கு உரியவரல்லர் என்பதாகும். தொல்பழங்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பாட்டிராத நிலையில் மக்களின் எண்ணிக்கையில் மிகப் பெரும்பாலோர் உடலுழைப்பாளர்களாகவே இருந்திருக்க முடியும். அவர்களை எஞ்சிய ஒரு மிகச் சிறு குழு ஒடுக்கி ஒதுக்கி வைத்திருந்ததையே இவ் வரிகள் குறிப்பிடுகின்றன. வரலாற்றுக் காலத்தில் இடங்கைப் பிரிவினுள் தொழிற் சாதிகள் சேர்க்கப்பட்டதும் இதே அடிப்படையில்தான். இதைவிடப் பெரிய ஒரு தாக்குதல் உளவியல் மட்டத்தில் உழைக்கும் மக்கள் மீது சுமத்ததப்பட்டது. அதுதான் சித்தர்களின் பெயரில் கூறப்பட்ட “குண்டிலினிக் கோட்பாடு”. தரையில் புலித்தோல் அல்லது மான்தோல் மீது “ஆசன” மிட்டு அமர்ந்து மூக்கு நுனியை உற்றுநோக்கி மூச்சை வலஞ்சுழி, இடஞ்சுழி, சுழிமுனை என்று மூக்கின் தனித்தனியான இரு வேறு துளைகளிலும் பின் இரு துளைகளிலும் உள்வாங்கி மூக்கின் உள் சந்திப்பில் இணையவைத்து அதனைக் கிழ்நோக்கிச் செலுத்தினால் அவ்வாறு அமர்ந்திருப்பவனின் குண்டியில் அல்லது மூலத்தில்(“மூலாதாரத்தில்”) பாம்பு போல் சுருண்டு படுத்திருக்கும் குண்டலினி(குண்டி → குண்டலினி) ஆற்றல் எழுந்து தொப்புள், நெஞ்சு, தொண்டை போன்ற நிலைகளைத் தாண்டித் தலை உச்சிக்கு ஏறி அந்த மனிதனுக்கு உலகத்திலுள்ள அறிவு அனைத்தையும் எய்தும் ஆற்றலைத் தருமாம். அவன் கடவுளுக்கு இணையான ஆற்றல் பெற்றுக் கடவுளாகவே மாறிவிடுவானாம். காடுமேடெல்லாம் அலைந்து ஒவ்வொரு மூலிகையாகத் தேடி அவற்றின் வேர் முதல் விதை வரை அனைத்துப் பண்புகளையும் நேரிலும் ஆய்வகங்களிலும் ஆய்ந்தும் சுடுகாடு இடுகாடுகளில் பேயாண்டிகளாய் அலைந்து செத்த மனித உடல்களை ஆய்ந்தும் நிலத்தில் கிடைக்கும் கனிமப் பொருட்களைப் பிரித்தெடுத்து பொன்மங்களைப் பாடம் செய்தும் மருந்துகளையும் மருத்துவ முறைகளையும் வகுத்தும் வானிலுள்ள கோள்கள் விண்மீன்களின் இருப்பு நிலைகளையும் இயக்கங்களையும் அவற்றுடன் புவிக்குரிய உறவியல் இயக்கத்தையும் வரையறுத்து அந்த உறவியல் நிலையால் புவிக்கும் புவிவாழ் உயிர்வகைகளுக்கும் மனிதனுக்கும் ஏற்படுகின்ற உடலியல் உளவியல் விளவுகளைக் கண்டுணர்ந்தும் கூறிய கடும் உழைப்புக்குரிய சித்தர்களின் பெயரால் குத்தகை உழவனின் உழைப்பால் உண்ட வஞ்சகச் சோம்பேறிகள் தங்கள் ஒட்டுண்ணி வாழ்வின் இழிவினைப் பெருமையாக்கிக் காட்டக் கட்டிவிட்ட கட்டுக்கதை இது. ஆனால் இந்த கோட்பாடுதான் கல்லாத மக்களை விடக் கற்றவர் அனைவரையும் இன்று பிடித்துள்ளது. இன்று புதிய போலி அறிவியல் விளக்கங்களுடன் மிக விரிவாக இளம் தலைமுறையினரிடையில் புகுத்தப்படுகிறது. மன அமைதிக்கும் சிந்தனையை ஒருமுகப்படுத்தவும் “தியானம்” இன்றியமையாதது என்று அவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. உண்மையில் நம் புதிய தலைமுறைக்குத் தேவைப்படுவது மன அமைதியல்ல, தேடல், புதியவற்றை அனைத்துக் களங்களிலும் தளங்களிலும் படைக்கும் வெறி. மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நமக்கு ஓர் இலக்கு, குறிக்கோள் தேவை. இலக்கில்லாமல் குறியில்லாமல் மனதை ஒருமுகப்படுத்தல் என்பது ஏமாற்று. சமயம் சார்ந்த உணர்வுகளால் மனதை நிறைப்பதையே “தியானத்”தால் கிடைக்கும் மன ஒருமுனைப்படுத்தல் என்கின்றனர். ஒரு செயலில், தொழிலில் அல்லது வேலையில் முழு மனதுடன் ஈடுபடும் போது கிடைக்கும் மன அமைதியும் மன ஒருமைப்பாடும் இவர்கள் கூறும் “தியானத்”தால் கிடைக்கவே கிடைக்காது. நெடுநேரம் ஒரே பணியில் ஈடுபடும் போது ஏற்படும் சோர்வை, பணியை மாற்றுவதாலோ, விளையாட்டுகள், குமுக - அரசியல் இயக்க ஈடுபாடுகள், குமுகப்பணி, கலைகள் என்றோ செயற்பாட்டைத் திருப்புவதன் முலம் போக்கிக்கொள்ள முடியும். அத்தகைய குறிக்கோள்களையும் வழிமுறைகளையும் இளைய தலைமுறைக்கு மறுத்துத் திசைதிருப்பும் முயற்சியே “தியானம்” பற்றிய புதிய பரப்பல்கள். “ஒடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் பெயரை முழங்கிக் கொண்டே குழந்தைகள் மனதில் ஓய்ந்திருத்தல் என்ற நச்சை விதைக்கிறார்கள் “வேலை நேரத்தில் வேலையில் முழுமையாக ஈடுபாடு, விளையாடும் போது விளையாட்டில் முழுமையாக ஈடுபடு” என்ற ஆங்கிலப் பொன்மொழியை(Work while you work and play while you play) இளையோர் மனதில் ஊன்றுவதற்குப் பகரம் ஓய்ந்திருத்தலின் புகழைப் பதிக்கிறார்கள்.
ஒட்டுண்ணி வாழ்க்கை மீதான பற்று இந்த நூற்றாண்டில் இன்னொரு முனையிலும் தூண்டிவிடப்பட்டு அந் நஞ்சு நம் குமுகத்தின் சல்லிவேர் வரையிலும் பரவி நிற்கிறது. இதைத் தொடங்கி வைத்தவர்கள் “திராவிட” இயக்கத்தின் முன்னோடிகளான நயன்மை (நிதி)க் கட்சியினர். அயலவர்களான வெள்ளையர்கள் தமிழகத்தினுள் நுழைந்த போது அவர்களிடம் மொழிபெயர்ப்பாளர்களாகவும் தரகர்களாகவும் வாணிகப் பொருட்களை வாங்குவோராகவும் அவர்களுக்கு வழங்குவோராகவும் செயற்பட்டுப் பயனடைந்தவர்கள் பார்ப்பனரல்லா மேற்சாதியினராவர். ஆனால் நாளடைவில் ஆங்கிலர் இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக மாறிய போது அவர்களுக்குத் தேவைப்பட்டது படிப்பறிவுள்ள உள்நாட்டுக் கூட்டம். காலங்காலமாகப் பாராயணம் (பாராமல் படித்தல், மனப்பாடம் செய்தல்) செய்து அதுவே குருதியில் ஊறிப்போன பார்ப்பனர்கள் எளிதில் அந்த இடத்தைப் பிடித்தனர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்தத் “திறமை” மட்டும் செயற்படவில்லை. பார்ப்பனர்களின் கட்டுக்குள் இருந்த கோயில் தாசிப் பெண்களால் அவர்களுக்கு வெள்ளை ஆட்சியாளருடன் ஏற்பட்ட நெருக்கமும் இதன் பின்னணியில் இருந்தது. மனப்பாடம் செய்யும் திறமை அனைவருக்கும் சம அளவில் உண்டு என்ற உண்மையை இன்று கல்வி வாய்ப்பைப் பெற்ற அனைத்துச் சாதி மக்களும் மெய்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு மிகப் பெரும்பாலான வாய்ப்புகளைப் பார்ப்பனர் பிடித்து ஆட்சிப் பொறியின் முகாமையான இடங்களில் அமர்ந்துகொண்டனர். அத்துடன் பிற துறைகளில் இருந்த பார்ப்பனரல்லா மேல் சாதியினர் அரசிடம் தாம் முடித்துக் கொள்ள வேண்டிய வேலைகளுக்கு இந்தப் பார்ப்பன அதிகாரிகளின் முன் கைகட்டி நிற்க வேண்டியிருந்தது. அவர்கள் வெளிப்படுத்திய திமிரும் அகம்பாவமும் இவர்களுக்கு ஆத்திரமூட்டியது. எனவே தாங்களும் அவர்கள் அமர்ந்துள்ள பதவிகளில் அமர வேண்டுமென்று விரும்பினர். அதன் விளைவுதான் நயன்மைக் கட்சியின் தோற்றம். அதாவது ஆங்கிலருக்கு அடிமை செய்து பயன்பெறுவதில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத மேற்சாதியினருக்கும் ஏற்பட்ட போட்டிதான் நயன்மைக் கட்சியின் அடிப்படை. இதில் பேரவை (காங்கிரசு)க் கட்சி பார்ப்பனர் நலன்களுக்காகப் பாடுபட்டு வந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முகாமையான ஒன்று உள்ளது. நம் நாட்டுச் சாதியமைப்பின் விளைவாக நாம் ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையை எய்திவிட்டோம். நமக்குப் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவும் பிறருக்கு அடிமை செய்யவும்தாம் தெரியும். பிறரை நமக்குச் சமமாக மதிக்கவோ பிறருடன் சமமாக நிமிர்ந்து நிற்கவோ தெரியாது. நம் சாதியமைப்பின் ஒட்டுமொத்த இயல்பே இதுதான். நம் கீழுள்ள சாதியினர் மீது நம் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள நம் மேலுள்ள சாதியினரின் ஆதிக்கத்தைப் பொறுத்துக் கொள்ள நாம் தயங்குவதே இல்லை. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நயன்மைக் கட்சி தொடங்கி வைத்த பார்ப்பனர் எதிர்ப்பு விரிவடைந்து சாதி மறுப்பு இயக்கமாகத் தமிழக மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போது ஒரு கட்டத்தில் ஒவ்வொரு சாதியினரும் தம் கீழுள்ள சாதியினர் தமக்குச் சமமான நிலை நோக்கி மேலெழும்பி வருவது பொறுக்காமல் தம் மேலுள்ள சாதியினரிடம் இன்னும் முறியடிக்கப்படாமல் எஞ்சி நிற்கும் ஆதிக்க நிலையை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டனர். அதன் விளைவாகத்தான் பாரதீய சனதா, இரா.சே.ச., இந்து முன்னணி போன்ற சாதியத்தை நிறுத்துவதைத் தங்கள் நோக்கமாக கொண்டு “இந்து” சமயப் போர்வையில் செயற்படும் இயக்கங்களும் சாதிச் சங்கங்களும் சாதி சார்ந்த அரசியல் கட்சிகளும் புயல் போல் வேகங்கொண்டு வருகின்றன. இவ்வாறு தம் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதிகளையும் தம் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சாதிகளையும் ஒரே நேரத்தில் கொள்ளாத சாதிகளும் மக்களும் மிக மிகக் குறைவே. அடிமட்டத்தில், மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட ஒன்றிரண்டு சாதிகள் இருக்கலாம். ஆனால் மேல் மட்டத்திலிருக்கும் பார்ப்பனர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர்ச் சாதிகள் இல்லை. அவற்றின் இடத்தில் வெளியிலிருந்து நம் மண் மீது ஆதிக்கம் செலுத்த வரும் அயலார்களைப் பார்ப்பனர்கள் வைத்துள்ளனர். இதில் பிற மேல் சாதியினரோடு அவர்களுக்கு எப்போதுமே போட்டி உண்டு. இந்தப் போட்டியில் இந்த நூற்றாண்டில் அனைத்துச் சாதிகளிலுமிருந்து படிப்பாலும் பதவிகளாலும் மேலுயர்ந்தவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். பார்ப்பனர்கள் மீது தாங்கள் நடத்த நினைக்கும் தாக்குதல்களுக்குப் “தமிழ்த் தேசியப் போராட்டம்” என்ற பெயரையும் சூட்டியுள்ளனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டு விசைகள் மேற்சாதிகளாலும் மேனிலையடைந்த பிற சாதி மக்களாலும் ஒடுக்கப்படும் கீழ்ச்சாதி மக்களின் அவலங்களைப் பயன்படுத்தி அவற்றை ஆற்ற வருவது போல் அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொள்கின்றன. இவ்வாறு நம் மக்கள் தங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டிகளைத் தீர்த்துக்கொள்ளப் பல நூற்றாண்டுகள் முயன்று வந்து அவற்றைப் தீர்த்துக்கொள்ள வகையறியாது அதில் தொடர்ந்து தோல்வியடைந்து அயலவருக்கு அடிபணிந்து உலகின் மிகச் சிறந்த அடிமைகள் என்ற பெயரைப் பெற்று உலகின் முன் இழிந்து நிற்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் இந்த இயக்கங்களைத் தொடங்குவோரும் அவற்றில் இணைவோரும் உடலுழைப்பின்றி, உழைக்கும் மக்கள் உருவாக்கும் செல்வத்தின் பெரும் பகுதியைத் தாமே பெற வேண்டும் என்று விரும்புவதே. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நயன்மைக் கட்சியை தொடங்கியவர்கள் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களின் துணையைப் பெறுவதற்காக அவர்களை இணைத்துக்கொண்டனர். பின்னர் அது பெரியாரின் தலைமையில் ஒரு பெரும் சாதி மறுப்பு இயக்கமாகப் பொய்த் தோற்றம் கொண்டது. அதனுள் புகுந்துகொண்ட ஒட்டுண்ணி வாழ்க்கை நோக்கம் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடு என்ற ஒற்றை முனையிலிருந்து விலகப் பிடிவாதமாக மறுத்தது. இதுவே சாதிச் சங்கங்கள் புத்துயிர் பெறவும் மங்கிக் கிடந்த சாதி வெறி மீளவும் வழியமைத்தது. எனவே இந்த நிலை மீண்டும் ஒரு முறை திரும்பாமல் இருக்க நாம் ஒட்டுண்ணி வாழ்க்கையினருக்கு எதிர்காலமில்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு இரு முனைகளில் பாடுபட வேண்டும். முதலில் கல்வித் துறை.
பொதுக்கல்வி என்பது நம் வரலாற்றில் கிடையாது. அதுவும் ஆங்கிலர் நமக்களித்த கொடைதான். அதற்கு முன் பார்ப்பனர், வெள்ளாளர் ஆகிய உயர் சாதியினருக்குக் கோயில்களும் மடங்களும் இலவச உணவு, உடை, உறையுள் அளித்து எழுத்தறிவும் ஆட்சி, அரசியல், இலக்கியம், போர் ஆகிய அனைத்திலும் பயிற்சியும் கொடுத்து உயரிய பதவிகளில் அமர்த்திய நிலை இருந்தது. பிற மேற்சாதி மக்கள் தங்கள் சொந்த முயற்சிகளில் கல்வி கற்றனர். “கீழ்ச்சாதி” மக்கள் கல்வி அதாவது எழுத்தறிவு பெறக் கூடாது என்றே மனுச்சட்டம் தடை விதித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் நயன்மைக் கட்சியும் திராவிட இயக்கமும் கல்வியில் ஒதுக்கீடு என்ற ஓர் இடைநிலை முழக்கத்தை கொண்டதேயன்றி அனைவருக்கும் கல்வி என்ற இறுதி இலக்கைக் கொள்ளவில்லை. இந்த வகையில் கல்வி என்பதைச் சிறப்புரிமையாகக் கொண்ட குழுவை விரிவுபடுத்தும் முயற்சியாகவே அந்த முழக்கம் அமைந்துள்ளது. இந்த முழக்கத்துக்கு முடிவுகட்டி அனைவருக்கும் கட்டாய இலவயக் கல்வி என்ற நோக்கத்தை நாம் முன் வைத்துச் செயலாக்கப் போராட வேண்டும்.
கல்வி என்ற சொல்லின் உண்மையான பொருளுக்கும் இன்று கல்வி என்று நாம் குறிப்பிடுவதற்கும் எந்த உறவும் இல்லை. கற்கப்படும் அனைத்தும் கல்விதான். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது மனிதனாக வளர்ந்து முதுமை எய்தி இறப்பது வரையிலும் இடைவிடாமல் கல்வி தொடர்கிறது. பெற்றோரிடமிருந்தும் மற்றோரிடமிருந்தும் நேரடியாகவோ மறைமுகமாவோ கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றும் கல்விதான். ஆனால் நாம் கல்வி என்று சிறப்பித்துக் கூறுவதில் எழுத்தறிவு முகாமையான இடத்தைப் பெறுகிறது. அதன் காரணம் என்னவென்றால் ஒவ்வொரு துறையிலும் முன்னோர் எய்தியவை, சிந்தித்தவை, விரும்பியவை, தோற்றவை என்று அனைத்தையும் எழுத்தில் பதிந்து வைப்பது நாகரிகம் பெற்ற மக்களின் இயல்பு. அவற்றை அறிந்துகொண்டு அவர்கள் எய்தியவற்றை விடவும் மேலான எய்தல்களை நோக்கி மக்களை இட்டுச்செல்ல உதவுவது எழுத்தறிவு. ஆனால் நம் நாட்டில் கல்வியும் எழுத்தறிவும் பிரித்துவைக்கப்பட்டுள்ளன. நாம் மேலே குறிப்பிட்டவாறு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்த மேற்சாதியினருக்கு இலவயமாகப் பல்வேறு வசதிகளுடன் எழுத்தறிவு வழங்கப்பட்டது. ஆனால் உழைக்கும் மக்களுக்கு அது மறுக்கப்பட்டது. தொழில்கள் அனைத்தும் மூத்தோர் வாய் மொழியாகவும் செயல் முறையிலும்தாம் கற்பிக்கப்பட்டன. தன் பட்டறிவினாலும் கூரறிவினாலும் புதியன கண்டுபிடித்தாலும் எழுத்தறிவற்ற காரணத்தால் அது அடுத்த தலைமுறைக்குக் கிட்டாமல் போயிற்று. மிஞ்சிப் போனால் அது ஒரு குடும்பத் தொழில் மறையமாக (இரகசியமாக) நிலவி கால வெள்ளத்தில் அழியக் கூடும். அத்துடன் தமிழில் இருந்த தொழில்நுட்ப நூல்களைச் சமற்கிருத்தில் மொழி பெயர்த்துவிட்டுத் தமிழ் மூலங்களை அழித்துவிடுவதும் அவற்றை மீறிப் புதுப்புது நூலாக்க முயற்சிகள் நடைபெறுவதும் அவை மீண்டும் மேற்கூறிய வழியில் அழிக்கப்படுவதும் தொடர்ந்தது. எழுத்தறிவற்ற தொழில் வல்லாருக்கு அவற்றால் எந்தப் பயனும் இருக்கவில்லை. தொழில்துறையில் பெரும் விரிவாக்கம் ஏதுமின்றி காலம் ஓடியது. வாணிகர்களை ஒடுக்குவதில் குறியாயிருந்த ஆட்சியாளர்களின் செயலால் ஏற்பட்ட தேக்கநிலை இது. எனவே வழக்கமான தேவைகளை வழக்கமான முறையில் அதாவது சாதி சார்ந்த தொழில் அடிப்படையில் வழங்கிவந்தனர். எனவே குமுக நெருக்கடி எதுவும் உருவாகவில்லை. ஆனால் இன்னொரு துறையிலிருந்து வந்தது. சோழப் பேரரசு தன் கட்டற்ற ஆட்சி அதிகாரத்துக்குத் தடங்கலாயிருந்த வேளிர்கள் எனும் குறுநில மன்னர்களின் வலிமையைக் குறைப்பதற்காகவும் மக்களிடம் நிலவுடைமை வடிவில் செல்வம் திரளாதிருக்கவும் எண்ணற்ற கோயில்களைக் கட்டியது. எனவே கோயில் தொடர்பாக புதிய எண்ணற்ற தொழில்துறைகளும் வேலை வாய்ப்புகளும் உருவாயின. நூல்களும் தோன்றின. இவ்வாறு தோன்றிய புதிய வகுப்புகள் தங்களுக்கான குமுக ஏற்பை நாடின. அத்துடன் கோயில்கள் கட்டவும் போர்களுக்குமாக மக்கள் மீது சுமத்தப்பட்ட கணக்கற்ற வரிகளும் கோயில்களுக்காக மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டின. இவ்வாறு மூண்ட ஒரு பெரும் மக்கட் கிளர்ச்சியின் போது சோழ அரசன் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான். கோயில்கள் இடிக்கப்பட்டன, பார்ப்பனப் பூசாரிகள் படுகொலைப்பட்டனர். இந்தக் கிளர்ச்சியை மறைமுகமாகத் தூண்டி நடத்தியவன் என்று ஐயுறத்தக்க ஒருவன் உண்டு. அவன் சோழ மரபில் பெண்வழியில் பிறந்து சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்தான். கிளர்ச்சியின் விளைவாக சோழ அரியனையில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் குலோத்துங்கன் என்ற பெயரில் அரசேறினான். இவன் தான் பட்டமேற்றதும் சில வரிகளைக் குறைத்துவிட்டு “சுங்கந் தவிர்த்த சோழன்” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான். அடுத்து முன்பு கிளர்ச்சியில் ஒன்றுபட்டு நின்ற மக்களிடையில் புதிய விருதுகளை வழங்கியதன் மூலம் வலங்கை - இடங்கைப் பாகுபாட்டை ஊதிப் பெருக்கி அவர்களை என்றும் ஒன்றுசேர இயலாத பகைவர்களாக்கினான். அன்றிலிருந்து தமிழகத்தில் ஒரு தேக்கமும் தளர்ச்சியும் ஏற்பட்டன. தொழில்நுட்ப நூல்கள் சமற்கிருத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆகமங்கள் என்ற பெயரில் கோயில்களினுள் பதுங்கின. இந்தத் தேக்க நிலையில் இங்கு புகுந்த ஆங்கிலர் நம்மை விட அறிவியல் - தொழில்நுட்பங்களில் தேர்ந்திருந்தனர். தங்கள் நாட்டில் பெரும் முதலாளியத் தொழில் வளர்ச்சியும் எய்தியிருந்தனர். இந்தியாவை ஆள்வதற்குத் தமக்குத் துணை புரியத் தேவையான அளவு இந்தியர்களுக்குக் கல்வியளிக்கத் தொடங்கினர். தம் நாட்டில் நிலவிய கல்வி முறையையும் பாடத் திட்டத்தையும் இங்கு புகுத்தினர். இங்கிலாந்துச் சூழலில் மக்களின் வாழ்நிலையோடு பொருந்திய அந்தக் கல்விமுறை இங்கிருந்த பிற்பட்ட சுழலுடன் பொருந்தாமல் அதைக் கற்றவர்கள் மக்களிடமிருந்து அயற்பட்டனர். அது மட்டுமல்ல, தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட தொழில்நுட்பச் செய்திகளைச் சரி பார்ப்பதற்கோ செய்து பார்ப்பதற்கோ தகுந்த பொருளியல் சூழல் இங்கு இல்லாததால் அக் கல்வி வெறும் எழுத்தறிவாக, “பாராயணம்” செய்வதாக, மனப்பாடம் செய்து தாளில் எழுதி மதிப்பெண்களும் பட்டமும் பெறுவதாகச் சுருங்கிப்போயிற்று. இன்றும் பாடத் திட்டங்கள் நாள்தோறும் மேம்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை நாள்தோறும் நம்மை விட உயர்ந்துகொண்டே செல்லும் பணக்கார நாடுகளின் சூழல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டனவாக உள்ளன. எனவே இந்தக் கல்வியைப் பெறுவோரும் நாளுக்கு நாள் கூடுதலாக இம் மண்ணிலிருந்து அயற்படுகின்றனர். முன்பு உள்நாட்டில் அயலவர்க்குப் பணி செய்த நிலை விரிவடைந்து அயல் நாட்டினரோடு கூட்டு வைத்தும் அவர்களோடு வாணிகத் தொடர்பு வைத்தும் செயற்படுகின்ற நிறுவனங்களிலும் பணி செய்யத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்ல, இந்த மண்ணை விட்டு ஓரேயடியாக வெளிநாடு செல்வதே வாழ்வின் நோக்கமாகவும் அதற்காகவே கல்வி கற்பது என்றும் தலைகீழ் நிலைமை உருவாகிவிட்டது. திராவிட மரபினர் இன்று “தமிழ்த் தேசியம்” என்ற பெயரில் இங்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் “ஒதுக்கீடு” கேட்டுக் கையேந்தி நிற்கின்றனர். இந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியாதவர்கள் இங்கு ஒட்ட முடியாமல் நாட்டுக்குப் பலவகைகளிலும் சுமையாகவும் தீங்காகவும் வாழ்கின்றனர். தங்கள் “கல்வித் தகுதி”க்கு இழிந்ததாக அவர்கள் கருதும் எந்த வேலையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக உடலுழைப்பு அவர்களால் மிகவும் வெறுக்கப்படும் ஒன்றாகும். இப்படித்தான் ஒருபுறம் நிறைய வேலைவாய்ப்புகளும் இன்னொரு புறம் வேலையற்ற இளைஞர்களின் பெரும்படையும் நிலவும் விந்தையான முரண்பாடு நிலவுகிறது. இவர்களது “கல்வித் தகுதி” எதற்கும் பயன்படாதது. குறைந்தது 10 ஆண்டுகள் புத்தகத்தையும் தாளையும் எழுதுகோலையும் தவிர வேறெதையும் அறியாத இவர்கள் கைத்திறன் தேவைப்படும் எந்தப் பணிக்கும் தகுதியற்றவர்கள். தப்பித் தவறி வயிறு காய்ந்த நிலையில் உழைப்பு சார்ந்த அல்லது தம் “கல்வித் தகுதி”க்கு குறைவான பணியில் ஈடுபட வேண்டி வந்தால் அவர்களால் முழுமனதுடன் அதில் ஈடுபட முடிவதில்லை. எனவே சிறு வாணிக, பணி நிறுவனங்களில் பணியாற்றுவோரிடமிருந்து நமக்கு நிறைவான, தரமான பணிகள் கிடைப்பதில்லை. மதிப்பெண்ணும் பட்டமும் நோக்கங்களாகக் கொண்ட இன்றைய “கல்வி” முறையின் அவலம் என்ன தெரியுமா? இக் கல்வியைப் கற்று முடித்து வருவோருக்கு எந்த மொழியிலும் பிழையின்றி ஒரு சொற்றொடர் கூட எழுதவோ பேசவோ முடியாது என்பதாகும்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். கல்வி என்பது எழுத்தறிவும் செயலறிவும் ஒன்றையொன்று மேம்படுத்துவதாக இணைக்கப்பட வேண்டும். செயலறிவே மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. எனவே எழுத்தறிவையே மாண்டிசோரிக் கல்வித் திட்டப் பாணியில் செயல்களின் மூலம்தான் புகட்ட வேண்டும். குழந்தைகளுக்கு அவர்களின் அகவைக்கேற்ற உழைப்புக் கருவிகளின் கையாட்சியை அறிமுகப்படுத்த வேண்டும். 8ஆம் வகுப்பு முடிவதற்குள் அடிப்படையான உடலுழைப்புத் துறை அனைத்திலும் ஒவ்வொரு மாணவனும் அறிமுகம் பெற்றிருக்க வேண்டும். இதுவே அவனது குடியுரிமைக்கான தகுதியாய் நிறுவப்பட வேண்டும். 8ஆம் வகுப்பின் மேல் உயர்நிலைக் கல்வி பெறவேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமக்கு உகந்ததான துறையில் குறிப்பிட்ட காலம் பணியாற்றியிருக்க வேண்டும். இவ்வாறு கல்வி இடையில் நின்று போனதாலும் தாம் விரும்பும் உயர்கல்வித் துறை பற்றிய அறிமுக அறிவைப் பெறவும்தான் நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது. நாம் இங்கு விளக்கியுள்ள சூழ்நிலையில் தொழில் வள நாடுகள் கடைப்படிக்கும் நுழைவுத் தேர்வு உத்தியை அந்தச் சுழ்நிலை பற்றிய சிந்தனையே இல்லாத நம் நாட்டில் புலியைப் பார்த்துக் பூனை சூடு போட்டாற்போல் நாம் போலச்செய்துகொண்டிருக்கிறோம். மேற்சொன்ன முறை கடைப்பிடிக்கப்பட்டால் ஒவ்வொருவரும் தத்தம் ஆர்வங்களையும் திறமைகளையும் இனங்கண்டு அவற்றுக்கேற்பத் தங்கள் தகுதியை மேம்படுத்தித் தம் சொந்த முயற்சியிலேயே தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ளலாம். இன்று போல் மாணவர்களின் கல்வியைத் தேர்ந்தெடுப்பது, அவர்களது இன்றியமையாத் தேவைகளை மட்டுமின்றி ஊதாரிச் செலவுகளுக்கும் ஈடுகொடுப்பது, அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது உட்படப் பெற்றோரின் கால்களையும் கைகளையும் பிணைத்திருக்கும் விலங்குகள் உடையும். 13ஆம் அகவையிலிருந்தே மாணவர்கள் வேலை செய்யப் போவதால் நாட்டின் பணியாளர் படையும் பெருகும். மாணவர் படிப்பின் இரு வேறு கட்டங்களுக்கிடையில் பணியில் ஈடுபடுவதால் தம் படிப்பைப் பணியின் மூலமும் பணியைப் படிப்பின் மூலமும் செழுமைப்படுத்தி இரு களங்களிலும் தர மேம்பாடு கிடைக்கும். முழுமையான புரிதலுக்கும் புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கும் வழி பிறக்கும். இதனால் பட்டப் படிப்பை எய்துவதற்கு ஒருவருக்கு 30 அகவை கூட ஆகிவிடும். இவ்வாறு படிப்பு, உழைப்பு என்று தன் முயற்சியால் படிக்கும் மாணவர்களிடையில் இன்று நம்மிடையில் நிலவும் வன்கேலி(ராகிங்) போன்ற பொறுப்பற்ற செயல்கள் இடம்பெறா. உழைப்பு, பணம் கல்வி என்பன பற்றிய பொறுப்பை உணராமல் வசதி படைத்த பெற்றோரால் தறுதலைகளாக வளர்க்கப்படும் இளைஞர்களாலேயே இக் கொடுமைகள் நிகழ்கின்றன.
இத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டால் இன்று போல் தேவையற்ற, பயனற்ற பட்டந்தாங்கிகளை உருவாக்க வேண்டியிராது. மாநிலத்துக்கு ஒரு பல்கலைக் கழகமும் மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியும் போதும். பிற கல்வி நிலையங்கள் அனைத்தும் தொழில் கற்பிப்பவையாய் இருக்கும். கல்வி நிலையங்களைச் சார்ந்து பணிமனைகளும் வயல்வெளிகளும் தோட்டங்களும் தொழிலகங்களும் பயிற்சிப் பட்டறைகளாக விளங்கும் அல்லது இப் பயிற்சிப் பட்டறைகளைச் சார்ந்து கல்வி நிலையங்கள் இயங்கும். கல்விக் கட்டங்களின் இடைப்பட்ட பணிக் காலங்களில் முழு நேரமும் கல்விக் காலங்களில் பகுதி நேரமும் வேலை செய்து தம் கல்வி, வாழ்க்கைச் செலவுகளைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் போது வாழ்க்கையையும் உலகையும் குமுகத்தையும் பொருளியலையும் பற்றிய உண்மைகளை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வர். இன்று ஓர் எல்லையைக் கல்வி அடைந்ததும் ஒரு வேலை உறுதிப்பட்டவுடன் எல்லாம் முடிந்துபோகிறது. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையே ஒரே குறிக்கோளாகிவிடுகின்றன. ஆனால் மேலே விளக்கிய முறையில் வாழ்க்கை முடிவது வரை ஒவ்வொருவரும் தத்தம் திறமையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இவையனைத்தையும் விட முகாமையான நன்மை, இன்று உடலுழைப்பு அடிப்படையில் மக்கள் இழிந்த சாதியினராகவும் உழைப்பறியாதோர் உயர்ந்த சாதியினராகவும் கருதப்பட்டு உழைப்பு கொச்சைப்படுத்தப்படும் நிலை முடிவுக்கு வந்து உடலுழைப்பறியாதோர் குடியுரிமையே பெற முடியாத நிலை உருவாகி சாதிய ஏற்றத்தாழ்வுகளின் ஒரு முகாமையான அடிப்படை அடிபட்டுப்போகும். உடலுழைப்புக்கு நம் குமுகத்தில் இன்று வரை இல்லாதிருக்கும் மதிப்பு கிடைக்கும்.
ஒரு நாட்டின் மக்கள் உடலுழைப்புக்கு அளிக்கும் மதிப்பில்தான் அந் நாட்டின் செல்வச் செழிப்பும் வலிமையும் மதிப்பும் இருக்கும் என்பதற்கு அமெரிக்காவின் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஐரோப்பியரில் (சு)பானிய மக்களால் கண்டறியப்பட்ட அமெரிக்கக் கண்டத்திலிருந்த மூலக் குடிகளான செவ்விந்தியரில் மிகப் பெரும்பாலானோரை அவர்கள் கொன்றொழித்தனர். பின்னர் குடியேறியவர்களில் வட அமெரிக்காவில் ஆங்கிலர் மிகுதி. அவர்களிலும் அப்போது இங்கிலாந்திலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிக்கொண்டிருந்த அயர்லாந்திலிருந்து தப்பியோடி வந்தவர்கள் மிகுதி. பின்னர் அமெரிக்க மண் வளத்தை இங்கிலாந்தின் பயனுக்குக் கொண்டுவருவதற்காக இங்கிலாந்தில் சிறைத் தண்டனை பெற்றவர்களை, அவர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தால் சிறைத் தண்டனையிலிருந்து விடுவித்து அமெரிக்காவுக்கு அழைத்துவந்தனர். அவ்வாறு சென்றவர்கள் அங்கிருந்த கன்னி மண்ணில் தாமே உழைத்து உருவாக்கிய செல்வம் இங்கிலாந்தை வளப்படுத்தியது. பின்னர் இங்கிலாந்தின் சுரண்டல் கொடுமை தாங்காமல் அவர்கள் போரிட்டு விடுதலை பெற்றனர். அந்த உழைப்புப் பண்பாடு அமெரிக்கர்களது குருதியில் இரண்டறக் கலந்துள்ளது. நம் நாட்டில் இதுவரை நிலவி வரும் ஒட்டுண்ணிப் பண்பாடான உழைப்பை வெறுத்து இழிவுபடுத்தும் சாதியப் பண்பாட்டை அழித்து உழைப்புப் பண்பாட்டை உருவாக்குவதற்குக் கல்வியில் இந்தத் தலைகீழ் மாற்றம் இன்றியமையாதது.
இதை முடிப்பதற்கு முன் வெளி உலகுக்கு உரிய வகையில் புலப்படாமல் உள்ள நயன்மைக் கட்சியின் இன்னொரு தோற்றத்தை நம் அறிந்துகொள்ள வேண்டும். தொழில் துறையிலும் பிற பொருளியல் நடவடிக்கைகளிலும் மும்பையின் ஆதிக்கத்தை எதிர்த்து மேற்கொண்ட முயற்சிகளாகும் அது. தி.மு.க. ஆட்சிக்கு வருவது வரை தமிழகத்தில் பார்ப்பனர், செட்டியார் அல்லாதாரிடமிருந்த பெரும்பாலான பெருந்தொழில்களும் நயன்மைக் கட்சி ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டவையாகும். பேரவை(காங்கிரசு)க் கட்சியை எதிர்த்து நிற்க மாட்டாமல், தலைவர்களுமில்லாமல் அக் கட்சியின் தலைமையைப் பெரியார் ஏற்றுக்கொண்ட பின் அவர் கட்சியின் பொருளியல் கண்ணோட்டத்தை வீசீயெறிந்து விட்டுத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவும் பொருளியல் ஆதாயங்களுக்காகவும் அப் பேரியக்கத்தின் ஆற்றல்களைப் பயன்படுத்திக்கொண்டார். பொருளியல் பக்கத்துக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று நம் நாட்டில் முதலாளிய விளைப்பு முறை நோக்கிய பாய்ச்சல் இருந்திருக்கும். ஒதுக்கீட்டின் மாற்றாகிய அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்று இரு முனைகளிலும் நாம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்போம்.
நயன்மைக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல தொழில்கள் இன்று மார்வாரி கைகளுக்குச் சென்றுவிட்டன. இதற்குத் திராவிடக் கட்சிகள் உறுதுணையாயிருந்திருக்கின்றன என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.
முதலாளிய விளைப்பு முறை நம் நாட்டில் வேர் கொள்ளாமல் தடையாயிருப்பவற்றில் இறுதியானதும் தலையாயதும் உலக வாணிக விசைகளும் உள்நாட்டு அதிகாரிகள், அரசியலாளர்கள் ஆகிய ஆட்சியாளர்களும் ஒட்டுண்ணிப் படிப்பாளிகள், பல்கலைக் கழக முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள், வேலை வாய்ப்பின்றிக் கிடக்கும் திறமை மிக்க இளைஞர்கள் ஆகியோரைக் கொண்டு பரப்பிவரும் முதலாளிய விளைப்பு முறைக்கு எதிரானதும் மரபுத் தொழில்கள் எனப்படும் சாதி சார்ந்த தொழில்களையும் சொந்தத் தொழில்களையும் அழியவிடாமல் பாதுகாப்பதுமான கருத்துகளைப் பரிந்துரைத்துச் செயற்படுத்தி வரும் திட்டங்களாகும். இதில் பிறரெல்லார் முயற்சிகள் பாதியாயின் பொதுமைக் கட்சியினரின் பங்கு பாதியாகும்.
இது பல கோணங்களில் நடைபெறுகிறது. முதலாளியம் பாட்டாளியரைச் சுரண்டுகிறது என்பது ஒரு கோணம். சுரண்டல் முதலாளியத்தில் மட்டும் இல்லை. சொந்தத் தொழில், சாதித் தொழில், சிறுதொழில் என்று அனைத்திலுமே சுரண்டல் உண்டு. ஆனால் இந்தச் சுரண்டல் வாணிகர்களாலும் கந்துவட்டிக்காரர்களாலும் நடைபெறுகிறது. அவர்களிடமிருந்து தொழில் செய்வோரைக் காக்கிறோம் என்ற பெயரில் அரசு உள் நுழைந்து கூட்டுறவென்றும் வாரியங்கள் என்றும் கழகங்கள் என்றும் உருவாக்கும் போது இந்த சுரண்டல் ஆட்சியாளர்களிடம் சென்றடைகிறது. இவ்வாறு சுரண்டப்படும் செல்வம் சட்டப்படியும் பிறவகைகளிலும் ஒன்றுதிரண்டு குமுகச் செல்வமாவதில்லை. அந்தச் செல்வத்துக்கு எந்த உரிமையுமில்லாத ஆட்சியாளர்களின் வரம்பற்ற நுகர்வில் அது அழிந்து போகிறது. அதே வேளையில் முதலாளிய விளைப்பு முறையில் சுரண்டப்படும் செல்வம் மீண்டும் மூலதனமாகிறது. தொழில் வளர்ந்து விரிவடைகிறது. பல்வேறு மூலதனத் திரட்சிகளின் போட்டியால் புதுப்புதுத் தொழில்நுட்பங்கள் புனையப்படுகின்றன. அதற்கும் இந்தச் சுரண்டல் பணம் பயன்படுகிறது. மலிவாகவும் எளிதாகவும் விரைவாகவும் பண்டங்களும் பணிகளும் நிறைவடைகின்றன. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பருப்பொருள் அடித்தளம் அமைகிறது. அது மட்டுமல்ல, நாம் ஏற்கெனவே கூறியது போல சொந்தத் தொழில் போன்றவற்றில் தொழிலாளர்களாகிய “முதலாளிகள்” தொழில் தொடர்பான இடர்களோடு நாள் முழுவதும் வாழ வேண்டியுள்ளது. அத்துடன் முதலாளிய விளைப்பு முறையில் கிடைக்கத்தக்க, தொழிலகத்தோடு இணைந்த பல்வேறு வசதிகளும் கிடைப்பதில்லை. முதலாளிய விளைப்பு முறையின் இயல்பான கூடுதல் விளைப்புத் திறன், அத்துடன் சுரண்டல் எனப்படும் ஆதாயம் முதலாளியாகிய ஒருவர் அல்லது ஒரு நிறுவனத்தின் கைகளிலேயே திரள்வதாலும் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் குழுமிப் பணியாற்றுவதாலும் இந்த வசதிகள் கிடைப்பதற்கு வாய்ப்பேற்படுகிறது. மொத்தத்தில் முதலாளிய விளைப்பு முறையில் நடைபெறும் சுரண்டல் என்பது ஒரு வகையில் குமுகம் தன்னுணர்வின்றி கண்டறிந்துள்ள ஒரு குமுகச் சேமிப்பு முறை ஆகும். இந்தச் சேமிப்பின் அளவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இன்னும் கூடுதல் நன்மைகளைக் குமுகம் பெற முடியும்.
முதலாளியத்துக்கெதிராக வைக்கப்படும் இன்னொரு குற்றச் சாட்டு அது நிலத்தையும் நீரையும் வளியையும் மாசுபடுத்துகிறது என்பதாகும். அது உண்மைதான் ஆனால் அவ்வாறு மாசுறுவதைக் கண்டறியவும் மாசுபாடமல் தடுக்கவும் உருவான மாசை அகற்றவும் தேவையான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும் அந்த முதலாளியத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியலால்தான் முடியும். இன்று பணக்கார நாடுகளில் உள்ள பெருந்தொழில்களால் இயற்கையில் ஏற்படும் மாசைச் சரி செய்ய வேண்டும் என்ற இயக்கங்கள் அந் நாடுகளில் வலுப்பெற்றமையால் அந்தச் செலவுகளைத் தவிர்க்க விழிப்புணர்வு இல்லாத ஏழை நாடுகளுக்கு அந் நாடுகளின் விலைபோன ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் அங்குள்ள தொழிற்சாலைகள் மாற்றப்படுகின்றன. அத்துடன் ஏழை நாடுகளிலுள்ள மின்சாரம், குடிநீர்த் தரமுள்ள நீர், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை மலிவாகவும் இலவயமாகவும் பெற்றுக்கொள்கின்றன. இவற்றுக்காக நாம் இறக்குமதி செய்யவேண்டிய கன்னெய்யம்(பெட்ரோலியம்) உட்படப் பல்வேறு பண்டங்கள், பணிகளின் சுமைகளையும் நம் தலை மீது ஏற்றுகின்றன. அதே நேரத்தில் உலக வாணிகர்களின் நலனுக்காக ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆடைத் தொழில், தோல் தொழில் போன்றவற்றால் ஏற்படும் மாசுகளைக் களைவதற்காக இத் துறைகளில் பணக்கார நாடுகள் உருவாக்கி வைத்திருக்கும் தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் நம் மீது சுமத்துவதற்காகப் பணம் கொடுத்து தன்னார்வ இயக்கங்களை இயக்கி இத் தொழில்களுக்கு எதிரான பரப்புரையுடன் பல்வேறு இடையூறுகளையும் ஏற்படுத்தி நம் மக்களுக்கு ஒரு உளவியல் நெருக்கடியைக் கொடுத்து எதிர்த்துப் போராடுவதற்குப் பகரம் எப்போதுமே குற்ற உணர்வில் குன்ற வைக்கின்றன.
இதற்கு மாற்று, நம் மரபுத் தொழில்களின் அழிவிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை நாமே வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு வளர்த்தெடுக்கும் போது ஏற்படும் இயற்கை மாசடைதல் உட்பட அனைத்துச் சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்குமான தீர்வை நாமே கண்டறிய வேண்டும், கண்டறிய முடியும். அந்தத் தொழில்நுட்பங்கள் மூலம் விளைக்கப்படும் பண்டங்களும் பணிகளும் நமக்கே பயன்பட வேண்டுமென்பது மிக முகாமையானது. அதாவது நமக்குத் தேவைப்படும் பண்டங்களுக்கும் பணிகளுக்காகவும் மட்டும் ஏற்படும் மாசுகள் இன்று போல் பேரளவில் இருக்காது, எனவே அவற்றை எதிர்கொள்வதும் ஒரு பெரும் சிக்கலாக இருக்காது.
அடிக்குறிப்புகள: இல்லை
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக