31.12.17

பாழ்பட்டுக்கிடக்கும் தமிழகக் கடற்கரை - 3

முதலாளிய முறைக்கு எதிராகக் கூறப்படும் இன்னொரு குற்றச்சாட்டு நம் மரபுத் தொழில்கள் நம் மக்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்பளிக்கின்றன ; இந்த நிலையில் முதலாளிய விளைப்பு முறைக்கு மாறினால் மரபுத் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் வேலையிழப்பர் என்பதாகும். ஆனால் நம் சிந்தனைக்கு எட்டாமல் உள்ள எத்தனையோ பணிகள் நம் நாட்டை வளமுடனும் நலமுடனும் வைத்துக்கொள்ளத் தேவைப்படுகின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அகன்ற நேரான சாலைகளை நாடு முழுவதும் அமைத்து அவற்றை மாசுறாமல் அழகுறப் பராமரித்தல், ஏரிகள், குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைச் சீராகவும் துப்புரவாகவும் அழகுறவும் பராமரித்தல், இன்று சீர்படுத்த முடியாத அளவுக்குப் பழமை எய்திப் போன நகர்களையும் ஊர்களையும் கைவிட்டுப் புதிய சாலைகளுக்கேற்பப் புது நகர்களையும் ஊர்களையும் உருவாக்குதல், மின்சாரம், குடிநீர் போன்றவை தடையின்றிக் கிடைக்கும் வகையில் அவற்றின் வழங்கலை மேம்படுத்தல், நாட்டில் ஒரு காலடி நிலம் கூடத் தரிசாக இல்லாத அளவு எங்கும் காடுகளை வளர்த்தல், பயிர்களையும் மரங்களையும் மரக் கன்றுகளையும் தின்று அழித்து நாட்டைப் பாலைவனமாக்கும் ஆடுகளையும் மாடுகளையும் வளர்க்க அறிவியல் அடிப்படையில் தொழுவங்களையும் பண்ணைகளையும அமைத்தல்; நேராக இன்று சந்தைக்கு வரும் உணவுத் தவசங்களை(தானியங்களை)ப் பகுதிப் பக்குவம் செய்த நிலைக்கு மேம்படுத்தல், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் ஏராளமாக விளைந்து இன்று அழிவுக்குள்ளாகும் தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், வாழைக்காய், மாம்பழம், மீன்வகைகள் என்ற கணக்கிலடங்கா வகைப் பொருட்களையும் பதப்படுத்தி பகுதிப் பக்குவம் செய்த நிலையில் அல்லது தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தும் வகையில் பக்குவம் செய்து வைத்தல், மக்கள் குடியிருப்புகளிலும் தொழிலகங்களிலும் சேரும் குப்பைகளிலும் நீர்க் கழிவுகளிலும் இருந்து உயிர்வளி, எரிபொருட்கள் போன்வற்றைப் பிரித்தெடுத்து மின்சாரம், எரிவளி போன்ற ஆற்றல்களை உருவாக்கல், மிஞ்சும் கழிவுகளிலிருந்து உரம் உட்பட எண்ணற்ற பொருட்களைப் பிரித்தெடுத்து மறு சுழற்சிக்குக் கொண்டுவரல், ஊர்திகள் போன்ற பயன்பாட்டுப் பொருட்களைக் குறிப்பிட்ட காலம் முடிந்த பின் கைவிட்டு அவற்றிலுள்ள மூலப் பொருட்களை மறுசுழற்சிக்குக் கொண்டு வந்து மக்கள் எப்போதும் புதுமை மாறாத கருவிகளைப் பயன்படுத்துவதும் அதனால் இயக்காற்றல்(எரிபொருள் மின்சாரம் போன்றவை) செலவைக் குறைக்க வழி கோலுதல், உலகின் எந்த நாட்டையும் விட மிகுதியாகக் கிடைக்கும் சூரிய ஒளியாற்றலை வீணாக்காமல் முழுவதும் பயன்படுத்தத் தக்க அமைப்புகளை நாடெங்கும் அமைத்தல், நீர் நிலைகளிலும் நிலத்திலும் இடையூறாக வளரும் செடி கொடிகளைத் திரட்டி எரிவளி, உரம், தீவனங்கள், மருந்துகளுக்கான மூலப் பொருட்களை உருவாக்குதல் என்று திரும்பிய பக்கமெல்லாம் எல்லையில்லாத வேலைவாய்ப்புகள் நம் கவனிப்புக்காகச் காத்திருக்கின்றன. நாம் மேலே விளக்கியுள்ள தடங்கல்களை அகற்றுவது மட்டுமே தேவை. எடுத்த எடுப்பில் விரிவான வேலை வாய்ப்பை உருவாக்கும் ஓர் முயற்சி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவயக் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகும். அதற்காகத் தரமான பள்ளிக் கட்டடங்களையும் வளாகங்களையும் அமைத்தல், தேவைக்குச் சற்றும் குறையாத ஆசிரியர்களை அமர்த்தல், அந்த ஆசிரியர்கள் தடங்லின்றிக் கிடைக்கும் வகையில் முழு நிறைவான ஆசிரியப் பயிற்சி நிலையங்களை நிறுவுவதல் என்ற ஒரு துறை மட்டுமே வேலையின்மையின் ஒரு பெரும் பகுதிக்குத் தீர்வு கண்டுவிடும்.

இப்போது எழும் கேள்வி, இவ்வளவு பெரும் பணிகளுக்குத் தேவையான மூலதனத்துக்கு என்ன செய்வது என்பதாகும். விலைக்கு விற்கத்தக்க பண்டங்களையும் கட்டணம் பெறத்தக்க பணிகளையும் செய்வதற்கு வேண்டிய பணத்தைப் பொதுமக்களிடமிருந்தே திரட்ட முடியும். அந்த அளவுக்குப் பணப் புழக்கம் உள்ளது. அதைத் திரட்டுவதில்தான் சிக்கல். ஏற்கனவே பங்கு மூலதனம் பற்றிக் கூறினோம். இங்கு, சிறு பண நிறுவனங்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாக எழும் கூச்சலைப் பற்றிப் பார்ப்போம். இங்கும் ஆட்சியாளர்களின் கை உண்டு. முதலில், தமிழகத்தில் உள்ள 36 நிறுவனங்கள் நம்பகமானவை அல்லவென்று ஏம (ரிசர்வு) வங்கி விளம்பரம் செய்துவிட்டு வாளாவிருந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட பதற்றத்தில் முதலீட்டாளர்கள் போட்ட பணத்தை ஒரே நேரத்தில் திரும்பக் கேட்டதால் அனைத்து நிறுவனங்களும் வீழ்ந்தன. உண்மையிலேயே ஏமாற்று நிறுவனம் எதுவென்று இனம் காண முடியாது போயிற்று. இவ்வாறு ஒரே நேரத்தில் முதலீட்டாளர்கள் அனைவரும் பணம் கேட்டால் ஏம வங்கி கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. காவல்துறையினர் கேட்ட கைக்கூலியைக் கொடுக்க இயலாததால் முதலீட்டாளர்களைத் தூண்டிவிட்டு வீழ்ந்த நிறுவனங்களும் உண்டு. வழக்கு மன்றமும் காவல்துறையும் சேர்ந்து முதலீட்டாளர்களை ஏமாற்றுவதும் நடைபெறுகிறது. பல நிறுவனங்கள் வீட்டுமனை விற்பனையை நம்பித்தான் மக்களிடம் முதலீடுகளைப் பெற்றன. அன்று வீட்டுமனை வாணிகம் இருந்த நிலையில் அந் நிறுவனங்கள் அறிவித்த வட்டியையும் பிற சலுகைகளையும் வழங்கினாலும் கணிசமான ஆதாயம் கிடைக்கும். ஆனால் வருமான வரித்துறையினர் உள் நுழைந்தனர். இந் நிறுவனங்களிடம் மனை வாங்குவதற்கு முன்பணம் செலுத்தியவர்களின் முகவரிகளைப் பெற்று அவர்களைத் “தேடுதல்” வேட்டையாடினர். மனை வாணிகமும் கட்டுமானத் துறையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ப.சிதம்பரம் இந்தியப் பண அமைச்சராக இருந்த போது இது நடைபெற்றது. நடுவரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நகர்ப்புற நில உச்சவரம்பைக் கைவிட்ட கையோடு அதற்கு உட்கையாகச் செயற்பட்ட பனியா - பார்சிக் கும்பல்கள் அசையாச் சொத்துத் துறையில் காலடி எடுத்துவைக்க ஆயத்தமான போது போட்டியாளர்களைக் களத்திலிருந்து அகற்ற ப.சிதம்பரம் எடுத்ததுதான் இந் நடவடிக்கை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இவ்வாறு அரசின் திட்டமிட்ட அழிம்பு வேலைகள் புதிய முனைவர்களுக்கு மூலதனத் திரட்சியைத் தடுக்கின்றன. வருமான வரித்துறை இதில் முதன்மைப் பங்காற்றுகிறது. வருமான வரியை முற்றாக ஒழித்து பண நிறுவனங்கள் திரட்டும் பணத்துக்கு உறுதியான பிணைகளை ஏற்படுத்தி, இரண்டாம் நிலை பங்குச் சந்தையையும் ஒழித்து முதல்நிலை பங்குச் சந்தைக்கு வலுவூட்டி அவற்றை மக்களின் ஒத்துழைப்போடு கண்காணித்தால் கிடைக்கும் பணத்தால் நாம் மேலே கூறிய விற்கத் தக்க பண்டங்களையும் கட்டணம் பெறத்தக்க பணிகளையும் செய்யும் நிறுவனங்களுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டிவிடலாம்.

பண நிறுவனங்களை அழிப்பதற்கு ஏம வங்கி திட்டமிட்டுச் செயலாற்றியது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள்: சீராம் சீட்டு நிறுவனம் வலிமை குன்றியிருப்பதாக ஏம வங்கி அறிவித்தது. அந் நிறுவனம் தாளிகை(பத்திரிகை)கள் மூலமாகவும் நேரடியாகவும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு உண்மை நிலையை விளக்கியது. ஏம வங்கி வலுவற்றவை என்று அறிவிக்காத நலப் பண நிறுவனங்கள்(பெனியிட் பண்டுகள்) பலவும் தனியார் நிறுவனங்களும் மக்களை ஏமாற்றியுள்ளன. மக்களின் பணத்தை முதலீடாகப் பெற்று நாட்டின் பொருளியல் நடவடிக்கையில் முகாமைப் பங்காற்றும் பண நிறுவனங்களில் வலுவற்ற நிலையில் உள்ளன என்பதை அறிவிப்பதோடு வாளாயிருந்துவிட்ட ஏம வங்கி பண மூலதனத்தின் இயக்கத்தைக் கண்காணிக்கும் தலைமை அமைப்பு என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்றவில்லை என்பதோடு அதற்கு எதிராகச் செயற்பட்டது என்பதுதான் உண்மை. உடனடியாக மக்களின் மூதலீட்டைப் பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குதிரை ஓடிய பின் கொட்டிலை அடைத்த கதையாக அனைத்தும் அழிந்த பின் பண நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை அறிவித்தது.

இனி, அரசால் மட்டும் செயல்படுத்தக்க கட்டணம் பெற முடியாத பணிகளுக்கும் விலைக்குப் விற்க முடியாத பண்டங்களுக்கும் மூலதனத்துக்கு என்ன செய்வது என்று பார்ப்போம். அதனை முழுவதும் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெற முடியாது. இதற்கென்று ஒரு வழியை 20ஆம் நூற்றாண்டின் பொருளியல் மேதையான கெயின்சு என்பார் வகுத்து அதைப் பணக்கார நாடுகள் கையாண்டு வலிமை பெற்றுள்ளன. இத்தகைய பணிகளுக்குத் தேவையான பணத்தை அரசே அச்சிட்டு வெளியிடுவதுதான் அவர் கூறிய வழி. இவ்வாறு வெளியிடப்படும் பணம் மேலே கூறிய இலக்குகளை எய்தப் பயன்படுவதுடன் மக்களிடையில் பணப் புழக்கத்தை உருவாக்கி அனைத்துத் துறைகளிலும் பாய்ச்சல் நிலையைத் தோற்றுவித்து நாட்டின் வளம் பெருகவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழியமைக்கும் .

19ஆம் நூற்றாண்டில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை கடும் பொருளியல் நெருக்கடிகள் ஏற்பட்டு உலக முழுவதும் மக்கள் பட்டினியால் செத்தார்கள். இதன் காரணம் தொழிற்சாலைகளில் படைக்கப்பட்ட அளவுக்குமீறிய பண்டங்களை வாங்க அத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய மக்களாகிய பெரும்பான்மையினருக்குப் போதிய கூலி வருவாயில்லாததால் அவை தேங்கின; அதனால் பணி முடக்கம் ஏற்பட்டு வேலையிழந்த மக்கள் பட்டினியால் செத்தனர். நாடு முழுவதும் பண்டங்கள் தேங்கிக் கிடந்த நிலையில் மக்கள் பட்டினியால் செத்த இந்த இரங்கத்தக்க விந்தைச் சூழலில் இருந்துதான் பாட்டாளியப் புரட்சியாகிய பொதுமைப் புரட்சி ஏற்படும் என்று காரல் மார்க்சு 19ஆம் நூற்றாண்டில் கருதினார். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் 1933 - 36இல் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியின் போது மேலே குறிப்பிடப்பட்ட கெயின்சு அறிவுரையை ஏற்ற அமெரிக்க அரசினர் நடவடிக்கையால் உலகில் இப் பட்டினிச் சாவுகள் முடிவுக்கு வந்தன. இந்த உத்திக்குப் பற்றாக்குறைப் பணமுறை(டிபிசிட் பினான்சிங்) என்று பெயர். இதில் சாலைகளை, பாசனம், மின்சாரம், துறைமுகங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்களைக் கட்டுவதற்காகப் பணத்தை அச்சிட்டுப் புழங்கவிடுவதன் மூலம் மக்களின் வாங்கும் ஆற்றல் வளர்ந்து தொழிற்சாலையில் விளைக்கப்படும் பண்டங்கள் விலையாகும்; தொழில் சுழற்சி முறையாக இயங்கும். இந்த அடிப்படைக் கட்டுமானங்களில் பண்டங்கள் நேரடியாகப் பயன்படுவதன் மூலமும் தொழில் தேக்கம் முடிவுக்கு வரும்.

முந்திய நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தங்கம் போன்ற பொருட்களை எடுத்து அவற்றை அடித்தளமாகக் கொண்டு வல்லரசுகளாக வளர்ந்தன. 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவும் உலகப் போர்களால் வலிமையிழந்திருந்த சப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பற்றாக்குறைப் பணமுறையைப் பயன்படுத்தி வல்லரசு நிலையை எய்தியுள்ளன. ஆனால் நம் ஆட்சியாளர்களும் கூலிக்கு மாரடிக்கும் போலிப் “பொருளியல் வல்லாரும்” பற்றாக்குறைப் பணமுறையைப் பற்றிப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்- பணவீக்கம் ஏற்பட்டுவிடும் என்று. பற்றாக்குறைப் பண்முறையில் இடையூறு உண்டு. அரசு புழக்கத்துக்கு விடும் பணத்தைப் பெறும் மக்கள் அதைக் கொண்டு வாங்கத்தக்க பண்டங்கள் வேண்டிய அளவில் சந்தையில் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் பண்டங்களின் கேட்பு அளவு மீறி அவற்றின் விலை விரைந்து ஏறி ஏழைகளின் வாழ்வைப் பாதிக்கும். இதற்குப் பணவீக்கம் என்று பெயர் கொடுத்துள்ளனர். இந்தப் பணவீக்கம் ஓர் அளவுக்குள் இருந்தால் பண்டங்களை விளைப்போர் கூடுதல் ஆதாயம் கிடைக்குமென்பதால் ஊக்கத்துடன் பண்ட விளைப்பைப் பெருக்குவார்கள். பண்ட விளைப்போ பணவீக்கமோ அளவு மீறும் போதுதான் சிக்கல். எனவே பண்ட விளைப்புக்கேற்ப அரசு வெளயிடும் பணத்தைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல.

பணப்புழக்கம் பெருகுவதால் மட்டும் பணவீக்கம் ஏற்படுவதில்லை. பண வீக்கம் என்பது பணப்புழக்கத்துக்கும் பண்ட விளைப்புக்கும் இடையிலான ஒரு விகிதமே. பணப்புழக்கம் அளவு மீறுவதாலும் வரலாம், பண்டங்களின் வழங்கல் குறைவதாலும் வரலாம். நம் ஆட்சியாளர்கள் இரண்டையும் செயற்பட வைக்கிறார்கள். வெளிக் கடன்களை வாங்கி உள்நாட்டில் பணப்புழக்கத்தைப் பெருக்குகிறார்கள். அதே வேளையில் அக் கடன்களை அடைப்பதற்காக என்று கூறிப் பண்டங்களை ஏற்றுமதி செய்து வழங்கலைக் குறைக்கிறார்கள். இவ்வாறு பொருளியலில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமலும் எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்தும் தலைகீழாக நிற்கிறார்கள். எல்லாம் வெளியார் தரும் தரகின் திருவிளையாடல். இன்று வரம்பின்றி வெளிநாடுகளில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்து உள்நாட்டுத் தொழில்களை அழித்து மக்களின் பணப்புழக்கத்தை முறித்து சென்ற நூற்றாண்டின் பட்டினிச் சாவுகளை மீண்டும் அரங்கேற்றிக் காட்டப்போகிறார்கள்.

நம் நாடு முதாளியத்துக்கு மாறாமல் இருப்பதற்கு இன்னொரு முகாமையான காரணம் தொழில்களைத் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் பெறுவதற்கும் மூலப் பொருட்களுக்கு அரசின் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கும் உள்ள சிக்கலாகும். நெல்லை அவித்து உலர்த்தி அரிசியாக்கும் ஒரு சராசரி அரிசியாலைக்கு தில்லி வரை சென்று உரிமம் பெற வேண்டியுள்ளது. மூலப் பொருட்களை வாங்குவதற்கு, அது தாராளமாகக் கிடைத்தாலும் கட்டுப்பாடுகளை விதித்து ஒதுக்கீடுகளை வகுத்து அதன்படிதான் வழங்கின்றனர். இதனால் போலி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அவற்றிடம் இருந்து கள்ள விலையில் மூலப்பொருட்களைப் பெறவேண்டியுள்ளது. மின்சார வழங்கல் அரசின் வாரியங்களின் கைகளுக்குச் சென்ற பின் மின் இணைப்புக் கொடுப்பதற்குத் தம் துறைக்குத் தொடர்பில்லாத சிக்கல்களையெல்லாம் கிளப்புகிறார்கள். மாசுக் கட்டுப்பாடு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு என்று புதிது புதிதாகச் சிக்கல்களை உருவாக்கித் தடங்கல் செய்கிறார்கள். இதில் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருப்பதில்லை, வேண்டுமென்றே பொய்க் காரணங்களைக் கூறுவார்கள். கைக்கூலி பெறுவதே அவர்கள் நோக்கம். இவர்களைத் தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் தண்டிக்கவும் நம் நாட்டில் ஓர் அமைப்பு இல்லாமையே காரணம். நம்மை ஆண்ட ஆங்கிலர் அடிமைகளாகிய நம் மக்களை அடக்கியாளவென்று தான் உருவாக்கிய உள்நாட்டு அதிகார வகுப்புக்குப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல அதிகாரங்களையும் பாதுகாப்புகளையும் எண்ணற்ற சலுகைகளையும் வழங்கியிருந்தனர். அந்த அமைப்பே “விடுதலை” அடைந்த பின்னும் தொடர்கிறது. ஆங்கிலரும் போய்விட்டதால் தட்டிக் கேட்பாரின்றி அவர்கள் துள்ளாட்டம் போடுகின்றனர். ஆங்கிலரிடமிருந்த ஓரளவு மக்களாட்சிப் பண்பும் மனிதநேயமும் சாதி - வருணங்களின் அடிப்படையில் அமைந்த நம்மவரிடையில் குறைவு என்பதால் ஆங்கிலர் வருவதற்கு முன்பிருந்த நிலையை நோக்கி நாம் விரைந்துகொண்டிருக்கிறோம்.

நம் ஆட்சியாளர்கள் ஒருவருடைய வேண்டுகை தொடர்பாக ஏதாவது தவறு செய்துவிட்டால், தான் செய்த விட்ட தவற்றைத் திருத்துவதற்குப் பலருடைய ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது எனவே பணம் கொடு என்று கேட்பார்கள் இந்த வெட்கங்கெட்டவர்கள். கைக்கூலியே அவர்களது இலக்கு. இவர்கள் கேட்கும் அளவுக்கு உள்நாட்டு முதலாளிகளால் கைக்கூலி கொடுக்க இயலவில்லை. கர்னாடகத்தில் ஒரு வானூர்தி நிலையம் அமைக்க ஒப்புதல் பெறுவதற்கு தன்னால் இயலாத அளவுக்குக் கைக்கூலி கேட்கிறார்கள் என்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாட்டாவே அத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது என்றால் பாருங்களேன். எனவே இவர்களையும் விடக் கூடுதல் கைக்கூலி தரத்ததக்க பெரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகவோ உள்நாட்டு நிறுவனங்களுடன் மூலதனம், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் என்று ஒன்றிலோ, கூடுதலாகவோ கூட்டு வைத்துக்கொண்டால்தான் ஒப்புதல் பெற முடியும் என்பதுதான் நிலை. இதை விரும்பாத வெளிநாட்டு நிறுவனங்கள் பின்வாங்குவதால்தான் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு “தாராளமயம்” இங்கு நடைபோடவில்லை. பெருங்கையான டெர்லைட் ஆலையின் நச்சுச் சூழலால் சுற்றிவாழும் மக்கள் துயரிழந்தும் உயிரிழந்தும் நடவடிக்கை எடுக்காத அரசும் “நய மன்றமும்” திருப்பூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் பல சிறு தொழிற்சாலைகளை மூடவைத்தன. அத் தொழில்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த மாற்று ஏற்பாடும் செய்ய நேரமும் வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கவில்லை. இவற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இத்தனை தடங்கல்களையும் செய்துவிட்டு, நம் குடியரசுத் தலைவர்களும் அமைச்சர்களும் நம் அரசின் ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களை நம் நாட்டுத் தொழில் முனைவோர் பின்பற்ற முன்வருவதில்லை என்று கூசாமல் மேடையேறிப் பொய் பேசுகின்றனர்.

முதலாளியத்துக்கு மாறாமல் நம்மைத் தடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் எனப்படும் உலக வாணிக குழுக்கள் ஏராளமான பணத்தை இங்கு பாயவிட்டு பல முனைகளிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் ஒற்றர்களை நாடெங்கும் உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆதாயம்?

முதலாளிய விளைப்பு முறையில் தொழிலகம் கட்டவும் உயர் தொழில்நுட்பக் கருவிகள் நிறுவவும் அடிப்படைக் கட்டமைப்புகளையும் தொழிலாளர்களுக்கேற்ற அடிப்படை வசதிகளையும் உருவாக்கவும் அவற்றை முறையாகப் பராமரிக்கவும் ஏராளமான முதலீடும் நாளாவட்டச் செலவுகளும் தேவைப்படுகின்றன. ஒரே தொழிலகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு தங்களுக்குக் கூடுதல் சம்பளம், சலுகைகள் வசதிகள் வேண்டுமென்று வேலைநிறுத்தப் போராட்டம் செய்து முதலாளிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். தான் செய்திருக்கும் பெரும் முதலீடு செயலற்றுக் கிடப்பதைத் தவிர்ப்பதற்காக முதலாளி தன்னால் இயன்றவரை முயல்வார். தொழிலை மூடுவதை விட தொழிலாளர்களின் கேட்புகள் இழப்பேற்படுத்தும் அளவுக்குச் சென்றால் ஒழிய அத்தகைய முடிவுக்கு வரமாட்டார். இதைத்தான் தொழிலாளர் இனத்தின் “பகரம்(பேரம்) பேசும் வலிமை” என்பர். வீடுகளில் அல்லது சிறு பட்டறைகளில் வைத்துச் செய்யப்படும் தன் தொழில்கள், குறுந்தொழில்களில் “முதலாளி” என்ற பொருந்தாப் பெயர் கொண்ட உழைப்பாளிக்குக் கிடைக்கும் கூலி என்பது அவன் செய்த பண்டத்தின் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் இடுபொருட்களுக்காகச் செய்த முதலீடு, அதைக் கடனாகப் பெற்றிருந்தால் அதற்குரிய வட்டி, உதவிக்கு ஆள் வைத்திருந்தால் அவனுக்குரிய கூலி ஆகியவற்றைக் கழித்துக் கிடைப்பதேயாகும். இங்கு தன் கூலியை அதாவது தன் பண்டத்தின் விலையைக் கூட்டித் தரும்படி எவரையும் எதிர்த்து அவன் போராட முடியாது. வேலைநிறுத்தம் செய்தால் அவன் வயிறுதான் காயுமே யொழிய வேறெவருக்கும் இழப்பு கிடையாது. பகரம் பேசும் வலிமை என்பது அவனுக்கு அறவே கிடையாது. சந்தையைக் கையில் வைத்திருக்கும் வாணிகன் வைத்ததுதான் சட்டம். எனவே பண்டத்தின் அடக்கவிலையை(இதில் அவன் கூலியும் அடக்கம்) விடக் குறைத்து விற்றுவிட்டு அவன் பட்டினியும் கிடந்து கடனாளியாகவும் மாறலாம். அதன் மூலம் அவன் கந்துவட்டிக்காரனுக்கும் வாணிகனுக்கும் கொத்தடிமையாவான். அவனது இந்த இழப்பு வாணிகர்களாலும் கந்துவட்டிக்காரர்களாலும் இறுதியில் உலகவாணிகக் குழுக்களாலும் ஆதாயமாக வரவு வைக்கப்படுகிறது. வாணிகர்கள், கந்துவட்டிக்காரர்கள் பெறும் பங்கைத் தவிர்ப்பதற்கு அரசு உருவாக்கியுள்ள வங்கி உட்பட்ட பல்வேறு கடனளிப்பு நிறுவனங்களும் கூட்டுறவு அமைப்புகளும் பல்வேறு தொழில் வாரியங்களும் கழகங்களும் களத்திலுள்ளன. அவை விளைப்போனிடம் வட்டியும் பெற்றுக்கொள்கின்றன. தங்கள் அமைப்புகளிலுள்ள மாபெரும் ஊழியர் படையின் செலவையும் அவன் மீது சுமத்துகின்றன. அது போதாதென்று ஊழலும் கையூட்டும் “நல்லூதியமாக”(போனசாக) அவனுக்குக் கிடைத்துள்ளது. இப்போது தன்னுதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் விளைப்போர், குறிப்பாகப் பெண்கள் பணம் சேமிக்க ஊக்கப்படுகின்றனர். அவ்வாறு சேமிக்கப்பட்ட பணத்திலிருந்தே கடன் பெற்று தொழில் செய்து உருவாகும் பண்டங்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றன, அல்லது அதற்கென இயங்கும் பிற நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்கின்றன. இந்தத் திட்டத்தின் பின்னணியில் “தாராளமயத்”துக்குத் தோதான சில கூறுகள் உள்ளன. இப்போது பல்வேறு வேலைவாய்ப்பு நலத்திட்டங்களின் பேரில் ஏழைகளுக்கு அரசு வங்கிகளின் மூலம் வழங்கும் கடனுதவிகள் முறையாகத் திரும்பச் செலுத்தப்படுவதில்லை. இதனால் வங்கிகள் சிக்கல்களுக்குளாகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு வங்கிகள் இங்கு நுழையப் பார்க்கின்றன. அரசுடைமை வங்கிகளை அயலவர்க்கு விற்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எதிர்ப்போர் முன்வைக்கும் கருத்து என்னவென்றால் இப்போது அரசுடைமை வங்கிகள் மூலம் நடைபெறும் “மக்கள் நலப்பணிகளை” அயலார் வங்கிகள் ஏற்றுச் செயற்படுத்தா என்பதாகும். எனவேதான் கடன்பெற்றுத் தொழில் செய்வதற்கு மாறாகச் சேமித்து அதிலிருந்து கடன்பெறும் பழக்கத்துடன் சொந்தத் தொழில் செய்வாரின் எண்ணிக்கையையும் பெருக்கிப் பலவழிகளில் அயலவருக்கு ஆதாயம் தரும் இந்தத் திட்டம் செயற்பட்டு வருகிறது. இப்போது கடன் மூலம் வங்கிக்கு வெளியே பணம் நிலுவையில் நிற்பதற்குப் பகரம் சேமிப்பின் மூலம் சொந்தத் தொழில் செய்வோரின் பணம் வங்கியின் கைகளுக்கு வந்து வங்கியின் வைப்பு(டெபாசிட்) நிலையை மேம்படுத்துகிறது. சேமிப்புக்குப் கொடுக்கும் வட்டியை விடக் கடனுக்குக் கூடுதல் வட்டி விதித்து ஆதாயம் பெறலாம். சொந்தத் தொழில் செய்வோரின் எண்ணிக்கையைக் கூட்டி அவர்களின் விளைப்புகளை வாங்கி விற்பதன் மூலம் உலக வாணிகக் குழுக்களுக்கு ஆதாயம்.

இப்படி எல்லாம் கூறித் தொடங்கிய இந்தத் தன்னுதவிக் குழுக்கள் இப்போது அயல்நாட்டு நிறுவனங்களின் முத்திரையோடு விற்கப்படும் பல்வேறு நுகர்பொருட்களை நம் பெண்கள் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்ப்பனவாகவே செயற்படுகின்றன.

இது போலக் கிறித்துவத் திருமண்டலங்கள், மறை மாவட்டங்கள் மற்றும் எண்ணற்ற “ஆர்டர்கள்” எனப்படும் தொண்டமைப்புகள் மூலம் ஏழை எளிய பெண்களைத் திரட்டி அவர்கள் மூலமாகப் பண்டங்களைச் செய்து அவர்களுக்கு மிகக் குறைந்த கூலியை அல்லது விலையைக் கொடுத்து வாங்கி வெளிநாடுகளில் விற்றுக் கொள்ளை ஆதாயம் பெறுகின்றனர். இந்த ஆதாயம் நூறு மடங்கு வரை செல்லும். இவ்வாறு உழைப்பாளர்களின் வருவாயைப் பறிப்பதன் மூலம் அவர்களது நுகர்வும் அதனால் வாழ்க்கைத் தரமும் குறைகின்றன. அதனால் உள்நாட்டில் மிஞ்சும் பண்டங்கள் ஏற்றுமதிக்கென்று குறைந்த விலையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இத் தொண்டு நிறுவனங்கள் கிறித்துவ நிறுவனமாயினும் அல்லவாயினும் இவையனைத்தும் முதலாளியத்துக்கு எதிரான ஓர் அரைகுறை மார்க்சியத்தைக் கற்பித்து மக்களுக்கு முதலாளியத்தின் மீது வெறுப்பை ஊட்டுகின்றன.

நேற்றுவரை பெருந்தொழிலகத் தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்துத்தான் அனைத்துக் கட்சிகளும் செயற்பட்டு வந்தன. முதலாளிகளின் ஆதாயத்திலிருந்துதான் தொழிலாளர்களுக்கு நலன்கள் பெறப்பட்டன என்று கருதப்பட்டாலும் நம் நாட்டில் விலை உயர்வு கண்காணிக்கப்படாததால் வாடிக்கையாளரிடமிருந்து பறித்து ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை முதலாளியே வைத்துக்கொள்வதாகத்தான் ஊதிய உயர்வுப் போராட்டங்களின் “வெற்றி” அமைகிறது. புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு விளைப்பைப் பெருக்கினால் மட்டுமே மக்களைக் கொள்ளையடிக்காமல் தொழிலாளர்கள் கூடுதல் ஊதியம் பெற முடியும். அல்லது முதலாளியின் ஆதாய விகிதம் குறைக்கப்பட வேண்டும். இரண்டுமே இங்கு நடைபெறவில்லை. அதே வேளையில் அரசுடைமையாக்கப்பட்ட தொழில்களில் இழப்பு ஏற்பட்டாலும் தொழிலாளர்களுக்கு நலன்களும் சலுகைகளும் அதுவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அளவுக்கு வழங்கப்பட வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் அடம்பிடிக்கின்றன. ஆட்சியாளர்களின் தேர்தல் நடுக்கத்தால் வெற்றியும் பெறுகின்றன. எ-டு. அரசுப் போக்குவரத்து ஊழியர்கள். அரசுடைமையானால் முதலாளிகள் கைக்குச் செல்லும் ஆதாயம் அரசுக்குக் கிடைக்கும்; அதன் மூலம் மக்களின் வரிப்பளு குறையும் என்று கூறப்பட்டது. இன்று தலைகீழாக அரசுடைமை நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்யவும் அவற்றின் ஊழியர்களுக்குக் கேட்பதை எல்லாம் அள்ளிக் கொடுக்கவும் மக்களின் மீது வரிச்சுமையும் கடன் சுமையும் ஏறிக்கொண்டே போகின்றன. தொழிற்சங்கங்கள் இந் நிறுவனங்களுக்கு அரசு “மானியம்” வழங்கவேண்டுமென்று கேட்டுப் பெற்றுவிடுகிறார்கள். இதனால்தான் தொழிற்சங்கங்களும் பொதுமை பேசும் கட்சிகளும் மக்களுடைமை(தனியார் உடைமை)யை எதிர்க்கின்றன. அரசுடைமை நிறுவனங்களைப் போல் எந்த மக்களுடைமை நிறுவனமும் இழப்பைச் சுமந்து கொண்டே ஊழியர்களுக்கு மேலும் மேலும் சலுகையளிக்க இயலாது. அவை உயிர் வாழவே முடியாது. (தனியார் உடைமை என்ற சொல்லில் அயலாரும் அடங்குகின்றனர். பொதுமைக் கட்சிகளும் ஆளும் கணங்களும் அயலாருக்கும் உள்நாட்டினருக்கும் உள்ள வேறுபாட்டை மறைத்து நம்மை ஏமாற்றுகின்றன. எனவே உள்நாட்டுத் “தனியார்” நிறுவனங்களை மக்களுடைமை என்ற அடைமொழியால் குறிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அரசுடைமை X மக்களுடைமை)

அரசுடைமை நிறுவனங்களின் இழப்புகளுக்குக் கட்டுப்படுத்த முடியாத ஊழியர்களின் அட்டூழியங்களும் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழல்களும்தாம் காரணங்கள். இந் நிறுவனங்கள் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் கடமை உணர்வற்ற பொறுப்பில்லாத் தொழிலாளர்களுக்கும் பொன்முட்டையிடும் வாத்து. தொழிலாளர் இனத்தின் பண்பாட்டை அழிக்கும் நச்சுச் கிடங்குகள். நாம் எடுத்துக்கொண்ட அரசு போக்குவரத்து நிறுவனங்களின் வண்டிகளையும் மக்களுடைமை வண்டிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும் நமக்குக் கிடைக்க வேண்டிய பணிகளின் தரத்தை அரசுடைமையின் மூலம் எந்த அளவுக்குப் பறிகொடுக்கிறோம் என்று.

இவ்வாறு “ஒருங்கிணைக்கப்படத்தக்க” துறைகளின் தொழிலாளர்கள் ஆதாயம் பெறும் போது தாமே ஒருங்கினைய வழியற்ற உதிரித் தொழிலாளர்களை விடக்கூடாதல்லவா? (முதலாளிய விளைப்பு முறையில் அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே களத்தில் இணைகிறார்கள் என்பதைத் தொழிலாளர் ஒருங்கிணைவுக்கு வழி என்று நம் கூறியதை நினைவுபடுத்திக் கொள்க) அதனால் வெளிநாட்டுப் பண உதவியுடன் இயங்கும் சிலர் இத்தகைய தொழிலாளர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். ஆட்டோ ஒட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள் என்று தொடங்கி பால்வினை(விபச்சார)த் தொழிலாளர் உட்பட ஒரு துறை விடாமல் இது விரிவடைந்துள்ளது. இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு போராட்டங்கள் நடத்தி அந்தந்தத் துறைப் பணியாளர்களுக்கு நல வாரியங்கள் அமைக்கப் போராடி வெற்றியும் ஈட்டுகின்றனர். உடலுழைப்புத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், வாணிகர்கள் என்று வாக்கு வங்கியாகத் திகழத்தக்கவரும் ஆட்சியாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றவர்களுமான அனைத்துத் தரப்பினரின் வேண்டுகைகளும்(கோரிக்கைகளும்) ஏற்கப்படுகின்றன . ஒரு தொழிலாளி இறந்தால் ஏதத்துக்கு(விபத்துக்கு) உட்பட்டால் நோய்வாய்பட்டால், மகள் பருவமெய்தினால், மகளுக்குத் திருமணமென்றால் இவ்வளவு பணம் என்று இலவயமாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறெல்லாம் உதவுவது மனித நேய அடிப்படையிலும் மக்கள் நல ஆட்சி என்ற வகையிலும் தக்கதாய்த் தோன்றும். ஆனால் ஓர் உண்மையைத் தெரிந்துகொண்டால் இதிலுள்ள கொடுமை புரியும். கேரளத்தில் கட்டடத் தொழிலாளர் நலநிதிக்கு ஒவ்வொரு தொழிலாளியும் செலுத்துவதற்குச் சமமான பணத்தை அரசும் செலுத்துகிறது. அந்த அளவுக்குத்தான் அவருக்குப் பலன்கள் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் கட்டடம் கட்டுவோர் அதற்கு உரிமம் எனப்படும் இசைவு பெறும் போது அவரிடமிருந்து கணிசமான தொகை நலநிதியாகத் தண்டப்படுகிறது. எந்தத் தொழிலாளிக்கு எவ்வளவு என்ற வரைமுறையில்லை. அரசியல் தொடர்பு உள்ளவர்ககும் கைக்கூலி கொடுப்பவர்க்கும் அவர் தொழிலாளியில்லையாயினும் “நல உதவிகள்” கிடைக்கும். இது ஓர் ஊழல் களம்.

இதில் இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். தொழிலாளர் இயக்கம் மார்க்சியத்தோடு தொடர்புபடுத்தப்படுவது வழக்கம். மார்க்சியம் பொதுமை என்ற அரசியல் – பொருளியல் – குமுகியல் உலக அமைப்பைப் பரிந்துரைக்கிறது. அது, பகுத்தறிவும் மனிதப் பண்பும் மனித நேயமும் தன்மானமும் பொறுப்புணர்வும் போன்ற முழுமையான மக்களாட்சிப் பண்பு நிறைந்த மக்களைக் கொண்ட ஓர் உலகை அமைப்பதை மனித குலத்தின் இலக்காகத் தந்ததுள்ளது. ஆனால் அதன் பெயரால் நடத்தப்படும் தொழிலாளர் இயக்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் பண்பாட்டை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குச் சிதைத்து வைத்துள்ளன. ஒரு தொழிலாளி எவருக்காவது அல்லது பொதுவிலாவது தவறிழைத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் உடனே வேலை நிறுத்தம், மறியல், வன்முறை என்ற காட்டுவிலங்காண்டி நிலைக்குச் சென்று விடுகின்றனர். இதன் மூலம் தொழிலாளர் வகுப்பு மீதும் சங்கங்கள் மீதும் மக்களுக்குப் பெரும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இதைவிடப் பெருங்குறை, தொழிலாளர்களின் செலவுப் பண்பாட்டை இச் சங்கங்கள் வளர்த்தெடுக்காதது. இன்று தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் தாங்கள் ஈட்டும் வருவாயைக் குடியிலும் பரிசுச் சீட்டுகளிலும் அழிக்கிறார்கள். பெண்கள் வேலை செய்யும் குடும்பங்களில் அவர்கள் வருவாய்தான் குடும்பம் நடத்தப் பயன்படுகிறது. அந்தப் பணத்தையும் பறித்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. குழந்தைகளின் படிப்பை நிறுத்தி வேலைக்கு விடுவது முதலியவற்றுக்குக் காரணமே இந்தப் பழக்கங்களுக்கு அடிமையான குடும்பத் தலைவர்கள்தாம். ஆனால் நம் தோழர்கள் இதைக் கண்டுகொள்வதே இல்லை. குடிப்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்று கருதுகிறார்கள் போலும். முன்பு காந்தி குடியால் ஏழைகளின் வாழ்வு சிதைவுறும் கொடுமையை எடுத்துரைத்து அதற்கெதிராகப் போராடிய போது, அவர் முதலாளிகளின் சுரண்டலை மறைத்துத் திசைதிருப்புவதற்காக அதைச் செய்கிறார் என்றனர். இன்று ஒட்டு மொத்ததமாகக் சாராயத்துக்கு எதிராகப் போராடாமல் “கள்ள”ச் சாராயத்துக்கு எதிராக மட்டும் போராடுகின்றனர், ஆக, “நல்ல” சாராயமாகிய “உள்நாட்டில் செய்யப்படும் அயல்நாட்டுச் சாராயத்”தைக் குடித்துத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் குமுகத் தரத்தையும் ஒட்டுண்ணிகளுக்கு இணையாக வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்றனர் போலும் . இதில் அயல்நாட்டுச் சாராய நிறுவனங்கள், கள்ளச் சாராயம் காய்ச்சும் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையிலுள்ள போட்டியில் இவர்கள் நிலைப்பாட்டையும் நமக்குக் கோடி காட்டுகிறது.

இந்த இடத்தில் குடிப்பது பற்றி நம் குமுகத்தில உருவாக்கி வைத்துள்ள ஒரு தீய கருத்தை நாம் அலச வேண்டியுள்ளது. உடலுழைப்பில் ஈடுபடுவோர் உழைப்பால் உண்டான உடல் நோவைத் தீர்த்துக் கொள்ள குடிப்பது இன்றியாமையாதது என்பது அந்தக் கருத்து. குடிப்பவன் உண்மையில் தன்னினைவின்றி உடலைத் தள்ளாட விடுவதாலும் கீழே விழுந்து புரள்வதாலும் தன் உடலுக்கு ஊறு விளைவிக்கிறான். பசியுணர்வு குன்றி உடல் நலம் கெடுகிறது. மறுநாள் காலையில் தலை கிறுகிறுப்பும் உடல் சோர்வும் ஏற்பட்டு அவன் செயல்திறன் குறைகிறது. மாறாக உழைப்பினால் வரும் பசிக்கேற்ற உணவை வயிராற உண்டபின் அவனுக்கு வரும் தூக்க மயக்கம் சாராயத்தால் வரும் மதிமயக்கத்தை விட எவ்வளவு உயர்வானது? இனிமையானது? அது சுவைத்துணரத்தக்கது. அவ்வாறு உறங்கி விழிந்த பின் அவனது உடலும் மனமும் எவ்வளவு புத்துணர்ச்சியுடனும் தெளிவுடனும் ஊக்கத்துடனும் செயற்படும்? இவற்றை அறியாத, உழைத்தறியாத சோம்பேறி வாழ்க்கையினர், உழைக்காததால் உடல் சோர்வே அறியாமல் தூக்கம் வராமல் சாராயம் அருந்திப் பழகிய சோம்பேறிகளான “அறிஞர்”களும் தலைவர்களும்தாம் குடி உடல் நோவைத் தீர்க்கும் என்ற பொய்யான தீக் கருத்தைப் பரப்புகின்றனர். கருணாநிதி 1971இல் மதுவிலக்குச் சட்டத்தின் செயற்பாட்டை “நிறுத்தி வைத்ததற்கு” முன்பு 20 ஆண்டுகள் மிகப் பெரும்பாலான மக்கள் குடியையே மறந்திருந்தனர். தொழிலாளர்களும் சாராயமோ கள்ளோ குடிக்காததால் உடல் நோவால் துடிக்கவில்லை. தன் கட்சிக்காரர்களும் கள், சாராயத்துக்கு எதிராக ஒரு காலத்தில் பேரியக்கம் நடத்திய பேரவைக் கட்சியினரும் கொடுத்த நெருக்குதலால்தான் கருணாநிதி இந்த நடவடிக்கையை எடுத்தார். அதுவரை மதுவையே அறியாத இளைய தலைமுறையினரைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார். தி.மு.க.வினருக்கும் பேரவைக் கட்சியினருக்கும் கள், சாராயக் கடைகள் நடத்திப் பணம் சேர்க்க வேண்டுமென்ற திட்டம் இருந்தது. நம் பொதுமைக் கட்சித் தோழர்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்காதது ஏன்?

அடுத்தது பரிசுச் சீட்டு “விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற முழக்கத்துடன் “பேரறிஞர்” அண்ணாத்துரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கேடு தரும் திட்டம் தமிழகத்தின் உயிராற்றலையே உறிஞ்சி நிற்கிறது. தங்கள் வருவாயை முறையாகச் செலவு செய்து சேமித்து வளம் காண விரும்பாத, தன்னம்பிக்கையற்ற மன நோயாளிகளின் புகலிடங்களாகப் பரிசுச் சீட்டுக் கடைகள் விளங்குகின்றன. பல்வேறு பண்டங்களை விற்பனை செய்யும் கடைகளைப் பற்றிய ஒரு புள்ளிக் கணக்கு ஆய்வை மேற்கொண்டால் தமிழகத்தில் பரிசுச் சீட்டு விற்கும் கடைகளே முதலிடம் பெறும். பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தொழிலாளர்கள் பரிசுச் சீட்டை பொறுத்தவரை போதை அடிமைகள் நிலைக்கு வந்து விட்டனர். இங்கு தமிழக அரசை விட வெளி மாநில அரசுகளும் அங்குள்ள தனியார் நிறுவனங்களும் தமிழகத்திலிருந்து அள்ளிச் செல்லும் பணமோ ஏராளம். போலிச் சீட்டுகளால் மக்களை ஏமாற்றுவோர் ஒரு புறம், மார்வாரிகள் வருமான வரியிலிருந்து தப்ப பரிசுச் சீட்டு பயன்படுகிறது .

திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்குத் தங்கள் ஆற்றலுக்கு மீறிக் கடன் வாங்கிச் செலவழிப்பதாலும் தொழிலாளர் வகுப்பு வறுமையெய்திக் கடன்பட்டுச் சிரழிகிறது. சங்கம் என்ற அமைப்பின் கீழ் அவர்களுக்கு இத் தவறான பழக்கங்களிலிருந்து விடுபடும் பயிற்சிகளை அளிக்கலாம். ஆனால் ஆயுத பூசை போன்ற விழாக்களை ஆரவாரத்தோடு நடத்துவதும் தீபாவளி போன்ற பண்டிகைகளில் பணத்தை வீணடிக்க நல்லூதியம்(போனசு) கேட்டுப் போராட வைப்பதுமாக தொழிலாளர்களின் செலவுப் பண்பாட்டைச் சீரழிக்கின்றன சங்கங்கள். நல வாரியங்கள் தொழிலாளர்களின் குடும்பச் செலவுகளை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களும் ஊதாரித்தனம், குறிப்பாகக் குடி, பரிசுச் சீட்டு, குடும்ப நிகழ்ச்சிகளிலும் சமய நிகழ்ச்சிகளிலும் பொருட்களை வீணடித்தல் என்ற வகையில் அவர்களுக்கோ நாட்டுக்கோ பயன் தராத வகையிலும் ஒட்டுமொத்தப் பண்பாட்டுச் சீரழிவை நோக்கித் தொழிலாளர்களை இட்டுச் செல்கின்றன.

இந்த முற்போக்கர்களின் இரண்டகம் தவிர்த்து தொழிலாளர்களின பண்பாட்டு வீழ்ச்சிக்கு வேறொரு உளவியல் அடிப்பையும் உண்டு. உடலுழைப்பையும் உடலுழைப்போரையும் இழிவாகப் பார்த்து அவர்களை ஒதுக்கி வைத்துள்ளது நம் மரபு. அதனால் அம் மக்களுக்கு இயல்பாகவே தம் மீதும் தம் தொழில், வாழ்நிலை ஆகியவை பற்றியும் இழிவுணர்ச்சியும் வெறுப்பும் உள்ளது. குமுகத்தின் உயர் மட்டத்திலுள்ளோர் போன்று தங்களை மென்மையாக, உயர்ந்த நடத்தையுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவாவோ அவ்வாறு காட்டிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையோ அவ்வாறு உண்மையாகவே நடந்து கொண்டாலும் குமுகம் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோ அவர்களுக்கு இல்லை. உழைப்பின் மீதும் உழைப்போர் மீதும் நாம் மதிப்பு வைத்து அவர்களுக்குக் குமுகத்தில் உள்ள முகாமையான இடம் பற்றிய உண்மையை உணர்த்திக் காட்டினால்தான் அவர்களை இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளிலிருந்து மீட்க முடியும்.

இவ்வாறு நாம் பட்டியலிட்டுள்ள மேற்கூறிய தடைகளை உடைத்து முதலாளியப் பொருளியலை அமைத்தால் அதன் மூலம் உருவாகும் கூடுதல் பண்டங்களை எங்கு எவ்வாறு விற்றுமுதலாக்குவது? இங்குதான் ஓர் அடிப்படைப் பொருளியல் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று உலகில் மக்கட் தொகையில் ஒரு குறுகிய குழுவே நுகர்கிறது. பிறரெல்லாம் பல்வேறு காரணங்களால் தங்கள் வாங்கும் ஆற்றலை இழந்து நிற்கிறார்கள். இந்தப் பெரும்பான்மைப் பண்டங்களும் உலக வாணிகக் குழுக்களால் கையாளப்படுகின்றன. இது இன்று நேற்று உருவானதல்ல. தொல்பழங்காலத்திலேயே உருவானதாகும். கழக இலக்கியங்கள் காட்டும் காலத்திலேயே நம் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னரும் கள்ளைக் கொடுத்தே மக்களிடமிருந்து பண்டங்களைப் பெற்றனர். யானை மருப்பு(தந்தம்) தொடங்கி பல்வேறு விலைமதிப்புள்ள மலைச் சரக்குகளைக் கள்ளைக் கொடுத்தே நம் அரசர்கள் பெற்றனர். கொற்கையில் மீனவர் குளித்தெடுத்த முத்துக்களைக் கள்ளைக் கொடுத்துப் பெற்றான் பாண்டியன். இப் பண்டங்கள் கப்பலேறி கிரேக்கத்துக்கும் உரோமைக்கும் சென்றன. அங்கிருந்து திராட்சை மதுவும் கண்ணாடி, பீங்கான் பொருட்களும் தமிழ்நாட்டு அரண்மனைகளையும் வளமனை(பங்களா)களையும் வந்தடைந்தன. மதுவைக் கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் கொடுக்க யவன மகளிரும் இறக்குமதி செய்யப்பட்டனர். ஆனால் அப் பண்டங்களைத் திரட்டிக் கொடுத்த மலைவாழ் மக்களும் அலைவாய்க்கரை(கடற்கரை) மக்களும் காட்டில் காய்கனிகள், எலி, முயல்களையும் மீனையும் நண்டையும் தின்று வாழ்ந்தனர். உடுத்த உடைதான் நமக்குத் தேவையில்லையே! தாழ்ச்சீலை(கோவணம்) போதுமே! இயற்கை தந்த “வரம்” அல்லவா அது, அதாவது நம் நாட்டுத் தட்பவெப்பம். அதனால்தான் வெள்ளையரைப் போல் சட்டையும் முழுக்காற் சட்டையும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்த “மனித நேயர்கள்” பலர் திறந்த உடம்புதான் நம் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக வெய்யிலிலும் காற்றிலும் மழையிலும் பனியிலும் பாடுபடும் உழைப்பாளிகளுக்கு நம் “மரபுப்படி” ஏற்றது என்று அறிவுறுத்துகிறார்கள்! அதே நிலையை இன்றும் தொடர்ந்து இங்குள்ள பாட்டாளி மக்களின் நுகர்வு மட்டத்தைத் தாழ்த்தி அவர்களை வறுமைக்குள்ளாக்கி அவர்களது பகரம் பேசும் ஆற்றலை அழித்து அவர்களது உழைப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த விலைக்குத் தட்டிப்பறிப்பதற்காகத்தான் முதலாளிய விளைப்பு நம் நாட்டில் வேர் கொண்டு விடாமல் தடுக்க இத்தனை முனைகளில் முயல்கிறார்கள்.

உலக மக்களில் மிகப் பெரும்பாலான மக்களை விலங்குகள் போல் வாழ்க்கையின் அடிமட்டத்தில் அமிழ்த்தி ஒரு சிறு குழுவுக்கு உலக வளங்களையெல்லாம் பகிர்ந்து கொடுக்கும் உலக வாணிகக் குழுக்களின் பிடியில்தான் இன்று வரையிலான உலகின் அரசுகளெல்லாம் சிக்கியிருந்துள்ளன. அரேபியர்களிடமிருந்து வெள்ளையர் தம் கடலாதிக்கத்தை மீட்ட போது அதன் உடனிகழ்வாக தொழிற்புரட்சியும் முதலாளிய வடிவில் வல்லரசியமும்(ஏகாதியத்தியம்) உருவாயின. அப்போது தோன்றிய பொருளியல் கோட்பாடுகள் உலக வாணிகத்தை, அதாவது ஏற்றமதி -இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டே தோன்றின. பணத்துக்காகத் தங்க ஈடு, நாணயமாற்று குறித்த அடிப்படை விதிகள் இந்த நோக்கிலேயே உருவாயின. பண்டத்தைப் படைத்த நாட்டு மக்களின் நுகர்வும் தம் நாட்டுப் பண்டங்கள் மீது அவர்களுக்கிருந்த பிரிக்க முடியாத நுகர்வு உரிமையும் எவராலும் கணக்கிலெடுக்கப்படவில்லை. அதனால்தான் எந்த மூலப் பொருளும் இல்லாத சப்பான், குடிக்கும் தண்ணீரைக் கூட இறக்குமதி செய்யும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் மக்கள் உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை எய்த முடிந்திருக்கும் முரண்பாட்டை நாம் காண வேண்டியுள்ளது.

மக்களாட்சி என்பதன் உண்மையான நோக்கம் அல்லது அடிப்படை ஒரு நாட்டின் வளங்கள் மீது அம் மக்களுக்குள்ள பிரிக்க முடியாத உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும். வாக்குரிமை, கருத்துரிமை, செயலுரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்ற எந்த உரிமையை விடவும் இந்த உரிமைதான் முதலிடம் பெற வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றாத எந்த உரிமையாலும் பயனில்லை. இன்றைய பாராளுமன்ற மக்களாட்சி மக்களின் கையில் வாக்குச் சீட்டைக் கொடுத்து அவர்கள் “தேர்ந்தெடுக்கும்” ஆட்கள் பாராளுமன்றம் என்ற ஓர் அவையில் மேற்கொள்ளவிருக்கும் முடிவுகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வகுப்பு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அவை மக்களுக்குப் பெருங்கேடு விளைவிப்பவையாயிருந்தாலும் முன் கூட்டியே ஒப்புதல் கொடுப்பதாகும். தேர்தலில் போட்டியிடுவோரை முடிவு செய்யும் உரிமை மக்களுக்கில்லை. கட்சியும் அரசு நிறுவனமான தேர்தல் ஆணையமுமே அதைச் செய்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மக்களுக்குக் கட்டுப்பட்டவரல்ல, கட்சிக்குக் கட்டுப்பட்டவர், அதாவது கட்சியின் பேராளர். இத்தகைய ஆட்சியை எப்படி மக்களாட்சி என்று கூற முடியும்? அத்துடன் பராளுமன்றம் மேற்கொள்ளும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல, பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை சட்ட முன்வரைவு வடிவிலும் பிறவகையிலும் தீர்மானிப்பவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளே. உண்மையில் பாராளுமன்ற மக்களாட்சி என்பது பாராளுமன்றம், தேர்தல், கட்சிகள், கொள்கைகள் என்ற முகமூடிகளை அணிந்து கொண்ட அதிகாரிகளின் ஆட்சியே, அதாவது அரசின் ஆட்சியே, “அரசாட்சியே”, மக்களாட்சி அல்ல.

உண்மையான மக்களாட்சி என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பண்டப் படைப்பிலிருந்து தொடங்க வேண்டும். முதலாளிய விளைப்பு முறையில் மிகப் பெரும்பான்மை மக்களும் தொழிலாளர்களாகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களிலிருந்து பெறும் நல்னகளின் ஒரு பகுதியை அவர்களுக்கு அந் நிறுவனத்தின் மூலதனப் பங்குப் பத்திரமாக வழங்கச் சட்டத்தில் வகை செய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்தும் தாங்கள் பணியாற்றும் அல்லது வேறு நிறுவனப் பங்குகளிலும் முதலிடலாம். இவ்வாறு அவர்கள் ஒரே நேரத்தில் முதலாளிகளாகவும் தொழிலாளிகளாகவும் செயற்பட முடியும். தொழிற்சாலைகளின் ஆள்வினையை (நிர்வாகத்தை) முடிவு செய்வதில் அவர்கள் பங்கேற்க முடியும். சம்பளம் போன்ற உடனடிப் பலன்கள், ஆதாய வடிவிலான சேமிப்பு, அதாவது சம்பளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு உறுதுணை புரிந்து அதன் மூலம் தன் பங்கை வளர்த்துக் கொள்வது என்ற நீண்டகால நலன்கள் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தின் மூலம் பொருளியல், பண்ட விளைப்பு, நுகர்வு, சேமிப்பு, ஆள்விணை இவையனைத்தும் தழுவிய அரசியல் அறிவும் விழ்ப்புணர்வும் அவற்றின் அடிப்படையிலமைந்த அரசியல் செயற்பாடும் என்று மக்களாட்சிக்கு இன்றியமையாத அடிப்படைத் தகுதிகளையும் பயிற்சிக்களையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதோடு கூடவே கூட்டுப் பொறுப்புணர்வும் கூட்டுச் செயற்பாடும் பிறரை மதிக்கும் பண்பும் அவர்களிடையில் உருவாகும். இந்த மக்களாட்சியிலும் ஏதோவொரு வடிவிலான தேர்தல் முறை இருக்கலாம். ஆனால் அவ்வாறு தேர்த்தெடுக்கப்பட்டவர்களை மக்களின் கூட்டு நடவடிக்கை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஏற்றுமதி - இறக்குமதி, உலக வாணிகம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். உள்நாட்டு அனைத்துத் தேவைகளையும் அங்குள்ள மூலவளங்களைக் கொண்டே நிறைவேற்றுவதே உண்மையான அறிவியல் - தொழில்நுட்பங்களின் இலக்கணம் என்றாக வேண்டும். உள்நாட்டு மக்களின் தேவைகளையும் மீறிக் கிடைக்கும் மீட்கத் தக்க வளங்களை மட்டும் பிற நாட்டு மக்களுடன் நேரடியாகப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை உருவாக வேண்டும். இந்த அடிப்படையை நோக்கிய ஒரு பொருளியல் கோட்பாட்டை உருவாக்க வேண்டும்.

நம் கடலோரத்தில் வாழும் மக்களின் தேவைகளை இன்றைய விளைப்புமுறை, தொழில்நுட்பங்கள், வாணிக முறைகள் ஆகியவற்றால் நிறைவு செய்ய இயலாமையால் அவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் சூழ்நிலையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்று அலசத் தொடங்கினோம். இந்தச் சிக்கலை மீனவர்களின் சிக்கலாக மட்டும் தனித்துப் பார்க்க இயலாது; இதனுள் அனைத்து மக்களின் பண்பாடு, தொழில்நுட்பங்கள், மரபுகள், பொருளியல் நிலை, குமுக அமைப்பு ஆகிய அனைத்தும் பின்னிக் கிடக்கின்றன; உண்மையில் பிற மக்கள் அனைவருக்கும் உரிய சிக்கல்களுக்கு நடுவில் மீனவர்கள் சிக்கிக் கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். தமிழகம் அளாவிய முதலாளிய விளைப்பு முறைதான் இந்த ஒட்டுமொத்தச் சிக்கலின் தீர்வு என்பதையும் அதை எய்துவதில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் தடைகளையும் அவற்றை எவ்வாறு தகர்க்கலாமென்பதையும் பார்த்தோம். இப்போது மீண்டும் கடற்கரைக்கு வருவோம்.

மீன்பிடிப்பதற்கு இன்று விசைப்படகுகள் புழக்கத்தில் வந்தாலும் இன்னும் கட்டுமரங்களே கூடுதலாகத் தொழிலில் உள்ளன. இதனால் விசைப் படகுகள் கூட துறைமுகங்களோ இறங்கு தளங்களோ இன்றி வெறும் கடல் மணலிலேயே “மடியை” இறக்குகின்றன. நம் நாட்டில் நாம் நிலத்தை எவ்வாறு வைத்திருக்கிறோமோ அது போலத்தான் கடற்கரையையும் திறந்த கழிவறையாக வைத்துள்ளோம். அதனால் மீனெனும் உணவுப் பண்டம் அதற்குத் தேவையான தூய்மையுடன் கையாளப்படவில்லை. மீன்பிடித் துறைமுகங்களும் தூய்மையான நிலையில் பேணவோ கையாளவோ படவில்லை. அதனால்தான் நம் நாட்டுக் கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அவை தூய்மையான நிலையில் கையாளப்படவில்லை என்று குறை கூறுகின்றன. ஏற்றுமதி சார்ந்திருக்கும் மனநிலையை நாம் வளர்த்து விட்டதனால் இதைக் காட்டி நம்மைக் கையேந்தும் நிலைக்கு அயலவர்கள் தள்ளியிருக்கிறார்கள். அவர்களுக்காக என்றில்லாமல் நமக்காகவும் நாம் நம் உணவுப் பொருட்களைத் தூய்மையான நிலையில் கையாள வேண்டும்.

கடலுணவுப் பொருட்கள் என்றில்லை, நாம் உண்ணும் காய்கறிகள், கீரைகள் என்று அனைத்துமே தூய்மையற்ற சூழ்நிலையில் விளைக்கப்பட்டு தூய்மையற்ற சூழ்நிலையில் கடவப்பட்டு தூய்மையற்ற சூழ்நிலையில் விற்கப்படுகின்றன. தினசரிக் சந்தைகள் எனப்படும் நாளங்காடிகள் தூய்மைக் கேட்டின் பிறப்பிடங்களாக உள்ளன. மழைக் காலங்களில் அவற்றினுள் நடப்பதற்குத் தமிழர்கள் போன்ற “தனிப் பிறவிகளால்”தான் முடியும். பல நகரங்களில் நாளங்காடிகள் சாலையின் இரு மருங்குகளிலும்தாம் கூடுகின்றன. சாலையில் ஒடும் பல்வேறு ஊர்திகள் கிளப்பும் புழுதி, மழைக்காலங்களில் அவை அள்ளி வீசும் சேறும் சகதியும், சாலையின் இரு மருங்குகளிலும் உள்ள கட்டடங்களிலிருந்து வெளிவரும் கழிவுகள், அங்காடி கூடும் முன் அவ்விடத்தில் மக்கள், கழிக்கும் கழிவுகள் என்பவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தால் உணவு நம் தொண்டைக்குள் இறங்காது.

இந்த நிலையில் உழவர் சந்தைகளைக் கருணாநிதி அறிமுகம் செய்துள்ளார். இனி மீனவர் சந்தையும் அறிமுகம் செய்யவுள்ளார். அவற்றைப் பற்றிச் சில கூறியாக வேண்டும்.

வாணிகன் என்பவன் மனித இனத்தில் ஓர் இன்றியமையாத சூழலில் தோன்றியவன். மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே இயற்கையிலிருந்து திரட்டிப் பயன்படுத்திவந்தனர். தாங்கள் வாழும் பகுதிகளில் வளங்கள் போதாதபோது அடுத்த இடம் நோக்கி நகர்ந்தனர். புதிய இடத்தில் ஏற்கெனவே மக்கள் கூட்டம் இருந்தால் இரு கூட்டங்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. தொடர்கதையான இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு பகுதியில் கிடைக்காத, ஆனால் இன்னொரு பகுதியில் தேவைக்கு மேல் கிடைக்கின்ற பொருட்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர். இதுதான் நில எல்லைகளும் அதனடிப்படையிலான தேசியங்களும் உருவான பொருளியல் அடிப்படை. இவ்வாறு ஒவ்வொரு குழுவும் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களுடன் பண்டங்களை மாற்றிக் கொள்ளும் நிலை வந்ததும் அவ்வாறு பண்டங்களைக் கொண்டுசெல்லவும் மாற்றுப் பண்டங்களை வாங்கி வரவும் ஒவ்வொரு குழுவிலும் தனித்தனி ஆட்கள் அல்லது குழுக்கள் உருவாயினர். அடுத்த கட்டமாக இந்த நிகழ்முறை விரிவடைந்த போது தன்னிடம் இருக்கும் பொருளைத் தேடும் இன்னொரு குழுவிடம் தான் விரும்பும் பொருள் இல்லாதிருந்தால் அதே போல் தான் விரும்பும் பொருளை வைத்திருக்கும் மூன்றாவது ஒரு குழுவுக்குத் தன்னிடம் இருக்கும் பொருளின் தேவை இல்லாதிருந்தால் இந்தப் பரிமாற்றம் சிக்கலாகிறது. அப்போது பண்டங்களைச் சுமந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட குழுவினரை அணுகி ஒன்றோடொன்று மாற்றி இறுதியில் தாம் விரும்பும் பண்டத்தைத் பெற வேண்டும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குத்தான் பணம் என்ற ஒரு செயற்கைச் செல்வம் மனிதனால் படைக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு குழுக்களிலும் பண்டப் பரிமாற்றத்துக்கென்று ஒதுக்கப்பட்ட தனி மனிதர்கள் இணைந்து வாணிகக் குழுக்கள் உருவாயின. பணம் அனைத்துப் பண்டங்களோடும் மாற்றத்தக்கது. தன்னிடம் இருக்கும் பொருளுக்குப் பணத்தையும் பணத்துக்குத் தனக்கு வேண்டும் பொருளையும் எளிதில் மாற்றிக்கொள்ள முடிந்தது. அனைத்துப் பொருட்களும் குவியும் அங்காடிகள் உருவாயின. பணம் முதலில் உப்பு, மாடு, தோல் ஆகிய வடிவங்களில் இருந்தன. பின்னர்தான் பொன்மத்தில்(உலோகத்தில்) செய்யப்பட்டு நாணயங்களை வாணிகக் குழுக்கள் வெளியிட்டன. அந் நாணயங்கள் குறிப்பிட்ட வடிவங்களில் இருந்தன. உருண்டை வடிவத்தில் சிறிது தட்டை, வட்டத்தில் சிறு ஓட்டை போன்றவை அந்த வடிவங்கள். நாளடைவில் அரசர்கள் தலையிட்டு நாணயங்களைத் தங்கள் பெயரில் வெளியிட்டனர். இதனை வாணிகக் குழுக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் அரசன் நாணயங்கள் அச்சிடும் வேலையைத் “தம்பட்டம்” (தன் + பட்டம்) அடித்தல் என்று அழைத்தனர். “தம்பட்டம்” அடித்தல் ஒரு கேலிச் சொல்லாய் இருப்பது அதனால்தான் போலும்.

உலகில் தொலைவிலுள்ள பகுதிகளை வாணிகர்கள்தாம் இணைத்தனர். பெரும் பேரரசுகளுக்கு வழிகோலினர். இயற்கை வழிகளான கடல், ஆறுகள் மூலம்தான் இது தொடக்கத்தில் இயன்றது. உலகின் மிகத் தொன்மையான அசர மரபான பாண்டிய மரபு மீனவர்களால் அவ்வாறுதான் அமைந்தது. உள் நாட்டிலும் வாணிகர்களால்தான் அரசுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் வெவ்வேறு நிலப்பகுதிகளை இணைக்கும் பாதைகளை அவர்கள்தான் வகுத்தனர். எடுத்துக்காட்டாக மனிதன் கடக்க வொண்ணாத பாலை நிலத்தை ஒருபுறம் முல்லை நிலத்திலிருந்தும் மறுபுறம் மருத நிலத்திலிருந்தும் கடந்தவர்கள் வாணிகர்களே. அவர்களின் போக்குவரத்தின் விளைவாகவே பாலை நிலத்தின் இரு மருங்கிலுமிருந்து வழிப்பறிக் கள்ளர்கள் பாலை நிலத்தில் குடியேறினர். இதுவும் தமிழ்ப் பொருளிலக்கணம் நமக்குக் காட்டும் சான்று. ஆக நிலத்திலும் ஆட்சியமைத்தவர்கள் வாணிகர்களே. அதற்கு அடிப்படையாயமைந்தது வழிப்பறிக்காரர்களை எதிர்கொண்ட அவர்கள் ஒரு போர்ப் படையாக இயங்க வேண்டியிருந்த வரலாற்றுத் தேவையே.

0 மறுமொழிகள்: