4.4.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 41

29. குமுகியல் வித்தகர்களன்றோ நாம் - 10Related imageRelated image.:  எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. ஆத்திரப்படாதீர்கள். மதங்களைப் பற்றி நீங்களாகவே கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு உண்மைகளை அறியும் போது கொதிப்படைந்தால் சிரிக்காமல் வேறென்ன செய்வது. இரண்டாம் கரிகாற் சோழன் இலங்கை மீது படையெடுத்து காவிரிக்குக் கரையெடுக்க பன்னீராயிரம் ஈழவரைச் சிறைபிடித்து வந்தான். அப்போது இலங்கையை ஆண்டவன் பராக்கிரமபாகு. அதறகுப் பழிவாங்க இலங்கையில் அடுத்து அரியணைக்கு  வந்த அவன் மகன் கயவாகு புகார் நகரை அரசனுடன் அழித்துவிட்டதாக இலங்கை வரலாறு பதிவுசெய்துள்ளது. இது பற்றிய தடயங்களை சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண முடிகிறது.
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளாநா டழிக்கும் மாண்பின ராதலின்
ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்………நீர்ப்படைக் காதை  வரி.  118 – 123
(உனது மைத்துனனான சோழன் பெருங்கிள்ளியுடன் சேராத, ஒத்த தன்மையை உடைய ஒன்பது அரசர்கள் தாம் இளவரசாக இருப்பது பொறுக்காமல் கிள்ளியின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாமல் செல்வமிக்க சோழ நாட்டை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் அவ் வொன்பது பேர்களின் குடைகளையும் ஒரே பல் நேரத்தில் ஒழித்து அச் சோழனது பொன்னால் புனையப்பட்ட ஆணைச் சக்கரத்தை ஒரு நிலைப் படச் செய்தவனே.) என்று சேரன் செங்குட்டுவனைப் பார்த்து மாடலன் கூறுகிறான்.

பெருங்கிள்ளியின் பங்காளி உறவுள்ள ஒன்பது இளவரசர்களைத் தூண்டி மன்னன் மீது பகமையேற்றி அவர்களைக் கொண்டு நாட்டின் வேளாண் பயிர்களைத் தீயிட்டு அழித்து அதனால் உருவான பஞ்சத்தைப் பயன்படுத்தி, புத்தத்துக்கு மாறிய மணிமேகலையை இரத்தினத்தீவு எனப்படும் மணிபல்லவத்துக்கு வரவழைத்து அவளோடு ஒப்பந்தம் செய்து பட்டினியால் அல்லலுற்ற மக்களுக்குச் சோறிட்டதுதான் மணிமேகலையில் வரும் அமுதசுரபி கதை. மணிமேகலையின் பின்னால் சுற்றிய இளவரசன் உதயகுமாரனைக் கொன்று காயசண்டிகையின் கணவன் பொறாமையால் கொன்றுவிட்டதாகக் கதை கட்டியவர்களும் புகார் புத்த மடத்து ஒற்றர்களே. பெருங்கிள்ளியின் காதலியாகிய நாகநாட்டுப் பெண்ணுக்குப் பிறந்த மகனை கப்பலில் அழைத்துவந்த வாணிகர்கள் வழியில் தீவொன்றில் இறங்கிய அவன் காணாமல் போய்விட்டான் என்று கைவிரித்ததும் கயவாயுவுடன் புத்தத்தைத் தழுவிய தமிழக வாணிகர்களின் கீழறுப்புகளே.

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மட்டும் இலேசுப்பட்டவரா என்ன? குடவாயில் கோட்டத்திலிருந்த இளங்கோவடிகளை குன்றக் குறவர்கள் கண்டு கண்ணகி தங்கள் கண்முன்னால் விண்ணுலகு எய்தியதைக் கூற அப்போது அங்கிருந்த சாத்தனார்தான் அவள் வரலாற்றை கூறுவதாகத் தொடங்கி பழம் வினையால் பாண்டியன் எதையும் ஆயாமல் கோவலனைக் கொல்ல ஆணையிட்டதாகக் கூறுகிறார்.
வினைவிளை கால மென்றீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின்
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபங் கட்டிய தாகலின்
வாரொலி கூந்தல்நின் மணமகன் றன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
 ஈனோர் வடிவிற் காண்ட லில்லெனக்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென…. பதிகம்   37 -54
      அவரது கூற்றில் நம்பிக்கை இல்லாத நிலையில் அவரே இச்செய்திக்குப் பொறுப்பாளி என்பது போல் அவர்களது வினை யாது என்று கேட்டு இன்றைய ஊடகவியலாளர் போல் பதிகத்தில் இச் செய்தியை அடிகள் பதிந்துள்ளார். புத்தரான சாத்தனார் வெள்ளியம்பலமான சிவன் கோயிலில் நள்ளிருளில் கிடைந்தது ஏன்? ஓடோடிச் சென்று சேரன் செங்குட்டுவனுக்கும் அவனது தம்பிக்கும் இந்த “வினைவிளை காலம்” பற்றி ஏன் கூற வேண்டும்? மதுரையை எரித்ததில் அவருக்குப் பங்கு இருந்தது, இன்னும் குறிப்பாகக்  கூறுவதென்றால் அவரே தலைமை தாங்கினார் என்று கூற வேண்டும். தன்னைக் காத்துக்கொள்ளவே அவர் சேரனை நாடிவருகிறார் என முடிவு செய்வதற்கும் தடயம் சிலப்பதிகாரத்தில் உள்ளது.

.:  என்ன அது?

.: பாண்டிய நாட்டில் கொடுங்கோன்மையால் மக்கள் துயருறுகிறார்கள், அங்கு சென்று ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தி நல்லாட்சியை நிறுவு என்ற பொருளில்,          
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல்
தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள்
நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று(காட்சிக் காதை…87 -90)
      கூறுகிறார். அண்டை நாட்டில் மக்கள் கலகம் செய்து அரசனைக் கொன்று தலைநகரையும் அழித்துள்ளனர் என்றறிந்து தன் நாட்டுக்கும் அந் நிலை வராமல் தடுக்கவென்று புறப்பட்ட செங்குட்டுவன் மாண்ட நெடுஞ்செழியன் தம்பி வெற்றிவேற் செழியன் மதுரையில் “சட்டம் ஒழுங்கை” நிலைநாட்டிவிட்டான் என்பதறிந்து மலையில் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்த போது குன்றக் குறவரும் சாத்தனாரும் கண்ணகி பற்றிக் கூறிய செய்திகள் நடைபெற்றது மக்கள் புரட்சியல்ல, ஒரு “பத்தினித் தெய்வத்”தின் இறம்பூதே என்று திசைதிருப்புவதற்கு உதவும் என்பதைப் புரிந்துகொண்டு அதே திசையில் “பத்தினி”க்குக் கோயில் எழுப்பக் கல் தேடி இமயத்துக்கே புறப்பட்டுவிட்டான்.

.:  அப்படியானால் கண்ணகியின் பெருமையாகக் கூறப்படுபவை உண்மையல்ல என்கிறீர்களா?

.:  அப்படியல்ல, வெறுப்பு எனும் வெப்பம் நெஞ்சில் கனன்றிருந்த மதுரை மக்களிடையில் துணிவான தலைமை ஒன்று இல்லாத நிலையில் கண்ணகியின் வீரம் எனும் நெருப்புப் பொறி விழுந்துப் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டெரியக் காரணமாக இருந்ந்து என்பதுதான் உண்மை.

சாத்தனாரின் “பெருமை” இத்துடன் முடிந்துவிடவில்லை. அசோகரால் புகுத்தப்பட்ட மகாயனப் புத்த சமயம் இருந்த இடத்தில் தேர வாத புத்தத்துக்கான அடிப்படைகளை வகுத்துத் தந்தவர் அவரே.
 
.:  எதை வைத்து இதைக் கூறுகிறீர்கள்?

Related image.:  பேரா.வானமாமலையார் தன் ஆராய்ச்சி இதழில் மணிமேகலையில் பௌத்தம் என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் நோக்கம் இலங்கையில் தேரவாதப் புத்த சமயம் நிறுவப்பட்ட 5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே மணிமேகலை இயற்றப்பட்டது என்று நிறுவுவதுதான். ஆனால் அவரது வாதங்கள் அவரது கருத்துக்கு உரம் சேர்ப்பனவாயில்லை. அதாவது, தேரவாத புத்தம் தன் கருநிலையில் மணிமேகலையில் உள்ளது, கருநிலையில் இருந்தே விரிந்த நிலைக்கு வளர்ச்சி பெறுவது இயல்பு, ஆனால் சாத்தனார் ஒரு மெய்யியலார் அல்ல, அவர் ஓர் இலக்கியப் படைப்பாளி, அதனால் இலங்கையிலிருந்து பெற்றுத்தான் தேரவாதக் கருத்துகளை சாத்தனார் தன் படைப்பில் சேர்த்திருக்க வேண்டும் என்பது பேராசிரியரின் விந்தையான வாதம். அறிவியல் போன்ற துறைகளில் சிறந்த எத்தனையோ இலக்கியப் படைப்பாளிகளைப் பேராசிரியர் அறியாதிருக்க முடியாது. அத்துடன் மணிமேகலை ஓர் இலக்கியமே அல்ல, சமய நூலே என்ற கருத்து தமிழ் ஆய்வாளர்களில் ஒரு பிரிவினிரிடையில் நிலவுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பிறந்த பெருமக்களில் ஆற்றல் சான்ற பலர் காலந்தோறும் தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளனர் என்பதற்கு சாத்தனாரும் பேராசிரியரும் சான்றுகள்.  

Related image.:  தமிழகத்தில் சிவனியக் குரவர்களான அப்பர், சம்பந்தர், ஆதி சங்கரர், இராமானுசர் ஆகியோர் சாதிகளுக்கு எதிராக இயக்கங்கஙளை நடத்தியுள்ளனர். இன்றும் சாதிகள் வலிமையாயிருப்பது அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததன் விளைவுதானே?

.:  இதில் எந்த ஐயமும் இல்லை. அப்பரும் சம்பந்தரும் அதுவரை சிவனியத்துக்கு இல்லாதிருந்த சமயக் கட்டமைப்பை உருவாக்கியவர்கள். மாலியம் தோராயமான ஒரு சமயக் கட்டமைப்பைப் பெற்றுவிட்டது சிலப்பதிகாரத்தில் வரும் மாங்காட்டு மறையோன் குடமலையின்(மேற்குத் தொடர்ச்சி மலையின்) மாங்காட்டிலிருந்து (மங்களூராக இருக்கக் கூடும்) புறப்பட்டு திருவரங்கத்துக்குச் சென்றுவிட்டு வட வேங்கடம் செல்ல இருப்பதாகக் கூறுவதிலிருந்து புரிகிறது. சிவன் கோயில்கள் அரண்மனைகளுக்குள்ளும் தலைநகரங்களுக்குள்ளும் அதாவது மீ உயர் இடங்களில் மட்டுமே முடங்கிக் கிடக்கிறது. முல்லை நிலத்து மாலியத்துடன்தான் களப்பிரர்கள் தொடக்கத்தில் வந்தனர் என்பது அவர்களது அரசர்களின் தொடக்க கால அரசர்களின் பெயர்கள் காட்டுகின்றன. எனவே Related imageஅம்மணத்துக்கு எதிராக சிவனியத்தைத் தூக்கிப்பிடித்த அம்மண எதிர்ப்பியக்கம் அதனை ஒரு மக்கள் சமயமாக வளர்ப்பதற்காக காடுகளில் புதர்களில் சிவன் இருந்து தங்களை அழைத்தான் என்று சொல்லி குறிகளை(லிங்கங்களை) நிறுவிச் சென்றனர். அவர்களுக்கு தமிழக வாணிகர்களின் முழுப் பின்னணி இருந்தது. அப்பரைப் பார்ப்பனர்களும் ஏற்றுக்கொண்டு சாதி கடந்த ஓர் ஒற்றுமை தமிழகத்தில் உருவானது. சம்பந்தருக்கு ஒரு வாணிகப் பெண்ணை மணம் முடிக்க இருந்த சூழலில் இதைப் பொறுக்காத ஒரு கும்பல் மணப்பந்தலுக்குத் தீ வைத்து அவர்களை அழித்தது.

      இத்தகைய ஒரு மனமாற்றச் சூழலில் ஆதி சங்கரன் தோன்றினான். அனைத்து உயிர்களும் ஒன்றே என்று கூறி சமனிலைக் கோட்பாட்டின் உச்சிக்கே போனான். அதே வேளையில் உலகில் நாம் காண்பவை அனைத்தும் மாயையே, எதுவுமே உண்மையல்ல என்றான். அதாவது நம்மிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள், துன்பங்கள், துயரங்கள், மகிழ்ச்சி, இன்பம் என்று அனைத்துமே வெறும் தோற்றங்களே, அவற்றை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றான். அதாவது சாதிய ஏற்றத்தாழ்வுகளும் அவற்றால் சிலர் பயனடைவதும் பலர் துன்பமும் துயரும் இழிவும் அடைவதும் வெறும் மாயை என்றான். அதனால் இவற்றைப் பெரிதுபடுத்தக்கூடாது என்று வலியுறுத்துவதுதான் அவனது இறுதி நோக்கம். அது மட்டுமல்ல சிவனோ திருமாலோ முதன்மையானவை அல்ல, வேதங்களே முதன்மையானவை என்றான். அவனது இக் கோட்பாடுகளைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லையாயினும் சம்பந்தரின் ஒற்றுமைக் கோட்பாட்டுக்கு எதிரான இந்த மாயைக் கோட்பாடு பார்ப்பனர்களுக்கு ஊக்கத்தைத் தந்தது. சிவனியமும் மாலியமும் தமிழகத்தில் வளர்த்த கடவுளை அரசனாகக் கருதி நடத்தும் ஆகம முறையோடு  வேத பாராயணங்கள் கோயிலினுள் நுழைந்தது.

.:  ஆகம வழிபாடும் சாதி வேற்றுமை சார்ந்ததுதானே?

Related imageRelated image.:  ஆம்! ஆனால் சமயக் குரவர்கள் உருவாக்கிய சிவன் கோயில்கள் எப்போது இன்றைய ஆகம வடிவம் பெற்றன என்பது ஆய வேண்டிய ஒன்று. இது பெரும்பாலும் கருவறையும் உள்சுற்றும் மதிலும் கோபுரமும் வெளிச்சுற்றும் என்ற வடிவம் பெற்ற பின், கருவறை பார்ப்பனர்க்கும் தேவரடியாருக்கும் மண்டபம் அரசனுக்கும் உயரதிகாரிகளுக்கும் கொடிமரத்துக்கு வெளியே உள்ள உள்சுற்று வாணிகர்களுக்கும் மதிளுக்கு வெளியிலுள்ள வெளிச்சுற்று சூத்திரருக்கும் அவருக்கும் கீழேயுள்ள அ(ல்)வருணர் எனப்படும் வருணமற்றோர் ஊருக்குள் நுழையாமல் தொலைவில் நின்று கோபுரத்தைப் பார்த்து வழிபடவும் என அமைந்தன. இது அரண்மனையைப் பொறுத்து மக்களின் வெவ்வேறு பிரிவினர் பாதுகாப்பு அடிப்படையில் நெருங்குவது குறித்த வரையறையின் அடிப்படையில் அமைந்தது என்று கூடச் சொல்லலாம்.

செ.:அப்படியானால் ஆகமக் கோயில்கள் என்பன சாதியின் அடிப்படையில் அமைந்தவைதானா?

.:  ஆமாம்! தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட சாதியத்தின் நான்கு நிலைக்களன்களில் ஊர் அமைப்புக்கு அடுத்தது இதுதான்.

.:  அப்படியானால் ஆகம வழிபாட்டுக்கு மாற்றான இன்னொரு முறையை வகுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
        
.:  ஆமாம். இன்றைய தெய்வங்களுக்கு மாறாக கதிரவன் போன்ற இயற்கை விசை ஒன்றைக் கடவுளாகக் கொண்டு அனைவரும் ஒரே மண்டபத்தில் கூடி ஒரே குரலில் பாடி அறநெறிகள் பேசி வழிபடும் வழிபாட்டிடங்களை அமைப்பது சாதி வேறுபாடுகளைக் களைவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று.

செ.:மீண்டும் தடம் மாறிப் போகிறீர்கள். இராமானுசரின் சாதி ஒழிப்பு முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்.

Related image.:  குலோத்துங்கன் காலத்தில் அரசனே தூண்டி விட்ட சாதி மோதல்களால் சிவனியக் கோயில்களின் பின்னணியில் தமிழகத்தில் மக்கள் வாழ்க்கையே நரகமாக மாறிவந்ததைக் கண்டு மாலியத்தை முன்னிறுத்தி சாதியொழிப்பு முயற்சியில் ஈடுபட்டவர் இராமானுசர். அவருடைய நடவடிக்கைகள் அரசு அதிகாரத்துக்கு எதிராக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த மூன்றாம் குலோத்துங்கன் அவரை நாடுகடத்தினான். அவர் குடகு மலையில் காவிரியின் தோற்றுவாயான தலைக் காவிரியிலிருந்து தன் சமயப் பரப்பலைத் தொடங்கி காவிரியின் தடத்தைப் பிடித்து வந்தார். வரும் வழியில் கோயில்களை அமைத்து சூத்திரர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பூணூல் அணிவித்து அக் கோயில்களில் பூசகர்களாக்கி தமிழ் வேதங்கள் என்று மாலியம் போற்றும் ஆழ்வார் பாடல்களைப் பாடி பூசை செய்யவிட்டார். சிவனியக் குரவர்களின் தேவாரப் பாடல்கள் கோயில் கருவறைகளில் நுழைய முடியாத நிலையில் மாலியக் கோயில்களின் கருவறைக்குள் மக்களின் மொழி நுழைந்தது அன்றைய நிலையில் ஒரு பெரும் புரட்சியாகும். பூனை தன் குட்டிகளைக் கவ்வித் தூக்கிச்  சென்று காப்பது போல் கடவுள் தன் அன்பர்களை, எச் சாதியரானாலும் தேடிச் சென்று அருள் செய்வான் என்ற “பூனைக் குட்டி”க் கோட்பாடு அவருடையது.

Related imageசெ.:பின்னர் என்ன நடந்தது?
       
.:  வேதாந்த தேசிகர் என்பவர் இராமானுசர் கூறியதற்கு எதிர்ப் பாட்டுப் பாடினார். குரங்குக் குட்டி தாயைப் பற்றிக்கொள்வது போல் பற்றிக்கொண்டால்தான் உய்வு உண்டு என்ற “குரங்குக் குட்டி” கோட்பாடு அவருடையது. பல பிறவிகளில் இறைத் தொண்டு புரிந்து பார்ப்பனப் பிறவி எடுத்தால்தான் இறைவனை அடைய முடியும் என்பது அவரது நிலைப்பாடு. அதனோடு இராமானுசர் செய்தது சமன்செய்யப்பட்டுவிட்டது. இப்போது இராமானுசரைப் பின்பற்றியவர்கள் தென்கலையினர் என்றும் தேசிகரைப் பின்பற்றியவர்கள் வடகலையினரென்றும் பிரிந்து நின்றனர். காஞ்சிபுரம், சீரங்கம் போன்ற கோயில்களில் இரு பிரிவினரும் தேரோட்டம் போன்ற திருவிழா நடவடிக்கைகளின் போது தெருவில் வன்முறை மோதல்களில் ஈடுபட்டதை அவ் வூர்களின் மூத்தோர் கூறக் கேட்டிருக்கிறேன். பின்னர் இச் சிக்கல் நயமன்றத்துக்குச் சென்றது.

      வடகலையினர் நெற்றியிலும் உடம்பிலும் அணியும் நாமம் மொட்டை நாமம் எனப்படும். ஆங்கில U நாமம் என்றும் இதைக் கூறுவர். தென்கலையினர் நாமம் பாத நாமம் எனப்படும். இதை ஆங்கில Y நாமம் என்றும் கூறுவர். இவர்களிடையில் மோதலுக்குக் காரணமே கோயில், கொடிமரம், கோபுரம், தேர், வாகனங்கள், யானை  போன்றவற்றில் எந்த நாமத்தைப் பயன்படுத்துவது என்பதே. பிற எல்லாவற்றிலும் முடிவு ஏற்பட்ட போது யானை குறித்து அவரவர் யானை வாங்கி அவரவர் நாமத்தைப் பொறித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு கூறப்பட்டதாம். தென்கலையினர் வடகலையினரை விட ஏழைகளாகையால் அவர்களால் யானை வாங்கி நாமம் போட முடியவில்லையாம். அதாவது நாயக்கர்கள், கன்னடர்கள் ஆட்சியில் இங்கு வந்திறங்கியவர்களும் பழைய பார்ப்பனர்களும் வடகலையினர். அரசு சார்ந்த அவர்களுக்கு பார்ப்பனரல்லா ஏழைச் சாதிகளிலிருந்து வந்தவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இன்றைக்கும் தென்கலை நாமத்தைத் தென்கலைப் பார்ப்பனர்களோடு நாயக்கர்கள், கோனார்கள் போன்றோரும் அணிவதைப் பார்க்கலாம். ஆனால் வடகலை நாமத்தைப் பார்ப்பனர் மட்டுமே அணிவர். இவ்வாறு இராமானுசரால் சாதி உயர்த்தம் பெற்றவர்களைப் பழைய பார்ப்பனர்கள் ஒதுக்கிவைத்துவிட்டது புரிகிறது. இவர்களோ தம் மூலச் சாதியினரைவிட உயர்ந்தவர் என்று அவர்களை ஒதுக்கலுக்கும் ஒடுக்கலுக்கும் ஆளாக்கியே வந்துள்ளனர்.

.:  இந்தச் “சீர்திருத்த” முயற்சிகளின் பின்னணியில் வேறு நலன்கள் மறைந்திருக்கின்றனவா?

Related image.:  கோயில் நிலங்களில் வாரத்துக்கு உழுத உழவர்கள், குழப்பமான அரசியல் காலங்களில் வாரத்தை ஒழுங்காக அளப்பதைத் தவிர்த்த சூழலில் அவர்களை அணைத்து மயக்கி வழிக்குக் கொண்டுவருவதற்கு இது பயன்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளு இலக்கியங்களில் இதைத் தெளிவாகக் காணலாம்.

செ.:பள்ளர்களை இழிவுபடுத்த வந்தவை பள்ளு இலக்கியங்கள் என்று அனைத்து ஆய்வாளர்களும் பள்ளர் மேம்பாட்டுக்குப் பாடுபடுவோராக அடையாளங் காட்டிக்கொள்வோரும் கூறிக்கொண்டிருக்க நீங்கள் தலைகீழ்ப் பாடம் படித்துக்கொண்டிருக்கிறீர்களே!

.:  குத்தகை உழவர்களான பள்ளர்கள் வாரத்தை ஒழுங்காக அளந்தாலும் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட பள்ளர் சாதியைச் சார்ந்த மன்னாடிகள் அதைக் கோயில்களுக்குச் செலுத்தாமல் ஏப்பம் விட்ட நிலையில் உழவர்களும் மன்னாடிகளுக்கு அளப்பதைத் தவிர்க்க முயன்றனர். இதனால் மன்னாடிகளுக்கும் பள்ளர்களுக்கும் முரண்பாடு முற்றிவந்த சூழலில் உழவர்களாகிய பள்ளர்களைப் புகழ்ந்து மயக்குவதற்காக இயற்றப்பட்டவை அவை.

.:  ஆக, சிற்றுடைமை வேளாண்மையான குத்தகை வேளாண்மையும் நிலவுச்சவரம்பால் செயற்கையாக உருவாக்கியிருக்கும் பண்ணைகளின் உருவாக்கத்துக்கு எதிரான ஆட்சியாளரின் கெடுபிடிகளும் பழைய சாதிய உறவுகளை மீறுவதில் தடையாக இருக்கிறது என்கிறீர்கள்.

.:  ஆம். ஆனால் தொழில் அடிப்படையிலான சாதிகள் பல நிலைகளில் கலைந்து தகர்ந்து வருகின்றன. நிலையான வருவாயோ குமுக மதிப்போ தராத மரபுத் தொழில்களில் தங்கள் பிள்ளைகள் முடங்கிப் போவதை விரும்பாத தொழில் சாதியினர் அவர்களை எத் தொழிலுக்கும் உதவாத, அரசு ஒட்டுண்ணிப் பணிகளைக் குறியாகக் கொண்ட “கல்வி”யை வழங்குகின்றனர். இரு தலைமுறைகளில் அவர்களுக்கு பிறரைப் போல் எளிதாக அரசுப் பணிகள் கிடைத்தன. இப்போது அதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் செய்த மரபுப் பணிகளை மிக மிக மெதுவாக அயல் தொழில்நுட்பத் துணையுடன் சாதி வரம்பை உடைத்து அனைவரும் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்த விரைவு போதாது. அதே வேளையில் திருமண உறவுகள்தாம் இன்று சாதியைப் பிடித்து வைத்திருக்கும் மூக்கணாங்கயிறாக உள்ளது.

செ.:சிறிது விளக்கமாகச் சொல்லுங்களேன்.

.:  நீங்களோ மற்றும் பலரோ நினைப்பது போல் ஒரு சாதியைச் சார்ந்த எந்தவோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவரும் தங்கள் விருப்பம் போல் மணம் முடித்து வைக்க முடியாது. ஒவ்வொரு சாதிக்குள்ளும் உட்பிரிவுகள் உள்ளன. அவ் வுட்பிரிவுகளைத் தாண்டி மணவுறவுகளைக் கொள்ள முடியாது. உட்பிரிவுகளுக்குள் கிளைகள், கூட்டங்கள், அல்லது வேறு பெயர்களால் அறியப்படும் பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒரே கிளையைச் சேர்ந்தவர்கள் அல்லது உடன்பிறப்புக் கிளைகள் எனப்படுபவற்றில் உள்ளவர்கள் திருமணத்தால் இணைய முடியாது. முறை மாப்பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுக்கவில்லை என்றால் பகரம்(பேரம்) பேசி அவனுக்கு ஈடு கொடுத்து அவனுரிமையைக் கழிக்க வேண்டும். பல சாதிகளில் ஈடு கொடுக்கும் இந்த நடைமுறை வெளிப்படத் தெரியாத சடங்குகளுக்குள் புதையுண்டு போய் முறை மாப்பிள்ளை உரிமை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையில் குறிப்பிடத்தக்க அளவு தொடர்கிறது.

செ.:ஏதாவது சாதியைக் குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்.

.:  நாடார்களில் ஐந்து பிரிவுகள் உண்டு. கருக்குமட்டை, மேனாட்டான், நட்டாத்தி, தோலாண்டி, பிழுக்கை என்பவை அவை. நெல்லை மாவட்டத்தில் இந்தப் பாகுபாட்டைக் கணக்கில் கொண்டே மணவுறவுகளை மேற்கொள்கின்றனர். வெளியிடங்களிலிருந்து நாடார் என்று சொல்லி குடியேறுவோரின் உண்மையான சாதி பற்றிய ஐயப்பாட்டிலிருந்து அவர்களை “வந்தட்டி வரத்தட்டி” என்ற சொல்லால் குறிப்பிட்டு தவிர்க்கிறார்கள். மற்றப்படி ஆறூர்கள் எனப்படும் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி, தேனி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயரின் முன்னெழுத்துக்களில் முதலெழுத்து இரு தரப்பினருக்கும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்வதில்லை. இம் முதலெழுத்து அவர்களின் முதல் தலைமுறைத் தந்தையை அல்லது குடும்பத் தெய்வத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம், அதனால் அவர்கள் உடன்பிறப்பு முறையுடையவர்களாக இருக்கலாம் என்பதால் இந்த நடைமுறை.   
    
      ஆனால் குமரி மாவட்ட நாடார்களிடையில் இந்தப் பிரிவுகள் பற்றி எதுவுமே தெரியாது. பிழுக்கைகளைக் கூட உட்செரித்துக்கொண்டார்கள். மூறை மாப்பிள்ளை – முறைப்பெண் திருமணம் ஏறக்குறைய வழக்கொழிந்துவிட்டது. ஐந்து தலைமூறைகள் சென்றால் உடன்பிறப்பு உறவுள்ளவர்களும் மணந்துகொள்ளலாம் என்று கூட கூறுவார்கள். இவர்களிடையில்தான் கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு மிகக் குறைவு என்று சொல்லலாம்.

செ.:நீங்கள் சொல்வது போல் சாதி உட்பிரிவுகள், மணமுறைக் கிளைகள், முறை மாப்பிள்ளை – முறைப்பெண் ஆகிய தடங்கல்களைக் கடந்துதான் கலப்பு மணங்கள் நடைபெற வேண்டும் என்பதாக நடப்புகள் இல்லையே. ஒடுக்கும் சாதி வெறியர்கள் கலக்கம் கொள்ளும் அளவுக்கு நிகழ்வுகள் உள்ளனவே!

.: சரியாகத்தான் கூறுகிறீர்கள். ஒடுக்கும் சாதியினரின் கலக்கத்தைக் கலங்கரை விளக்காக நின்று சாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் மருத்துவர் “ஐயா”வின் செயல் சாதி கடந்த மண உறவுகள் இவர்களின் பொறுமையைக் குலைக்கும் அளவுக்குச் சென்றுவிட்டதைக் காட்டுகிறது. ஆனால் அவரது இந்தச் செயல் தூய சாதி வெறியிலிருந்து உருவெடுத்ததாகத் தெரியவில்லை. எப்படியாவது தேர்தலில் வென்று கருணாநிதி குடும்பம் போல் தன் குடும்பமும் “மக்கள்” ஆட்சி வட்டத்துக்குள் நுழைந்துவிட வேண்டுமென்ற பதவி, பண வெறிகளுக்கு இதில் முகாமைப் பங்கு உண்டு. அத்துடன் தமிழக மக்களிடையில் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் சாதி சார்ந்த பகைமையை வளர்த்துவிடும் வல்லரசியத்தின் கையாளாக அவர் செயல்படுவதாகவும் கருத வேண்டியுள்ளது.

செ.:தாழ்த்தப்பட்ட சாதியினர் சிலருக்கு கட்சியில் பதவிகளைக் கொடுத்ததை வைத்துச் சொல்கிறீர்களா?

.:  ஆம். தொல்.திருமாவளவன் தேர்தல் களத்தில் நுழையாமல் இருந்திருந்தால் இவரது வாய்ப்புகள் இன்னும் மேம்பட்டிருக்கும்.

செ.:நான்கைந்து கட்சிகளால் வாக்குகள் உடையாமலிருந்திருந்தால் அ.தி.மு.க. இப்படி “அமோக” வெற்றி பெற்றிருக்க முடியாது.

.:  இது வேறு ஓர் அடிப்படைச் சிக்கலுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. பாராளுமன்ற முறை எனப்படும் போலி மக்களாட்சி பற்றியது இது. இப்பொழுதே நடு இரவைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. இது குறித்து எமது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்  வெளியிட்டுள்ள அறிக்கையைத் தருகிறேன் படித்துப் பாருங்கள். அலைந்து திரிந்து வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்து வரிசையில் காத்துநின்று கையில் கறையைச் சுமப்பது தவிர மக்களுக்கு எந்தப் பங்களிப்புமில்லாத இன்றைய பாராளுமன்ற முறையை அகற்றிவிட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆட்சியில் பங்கேற்கும் ஊராட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு மக்களாட்சியை இது முன்வைக்கிறது. இதில் வாக்குவங்கி அரசியலுக்கு இடம் கிடையாது. அதாவது, சாதி, சமய, மொழி, இன வேறுபாட்டை நிலைப்படுத்தவும் வலுப்படுத்தவும் செயற்படும் ஒரு முதன்மையான காரணி இதனால் அகலும்.

செ.:தேசிய ஒடுக்குமுறையின் நோக்கமே பொருளியல் சுரண்டல்தான் என்றும் அந்தச் சுரண்டலை நேரடியாகக் கண்டுணரும் பொருளியல் வகுப்புகளின் நலன்களை முன்னெடுத்து வைத்தால் அவை தங்கள் நலத்துக்காக தேசியத்தின் உள்ளிருக்கும் அக முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும். அவை தரும் தொடக்க விசையைப் பயன்படுத்தி அத் தடத்தில் இறுதி இலக்குவரை, அதாவது மக்களிடையில் பகைமை முரண்பாடற்ற, வெளிவிசைகளின் சுரண்டலிலிருந்த விடுபட்ட ஒரு தமிழகத்தை உருவாக்குவதுவரை தலைமை தாங்கி குமுகத்தைக் கொண்டு செல்ல வேண்டியது குமுகத்தின் புரட்சிகர விசைகளின் பணி என்கிறீர்கள், அப்படித்தானே?

.:  நம் உரையாடல் சரியான திசையில் சென்று இலக்கை எய்தியிருப்பது மிக மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த நடவடிக்கைகள் பற்றி நாம் விரைவில் சந்தித்துப் பேச வேண்டும்.

செ.:நான் வருகிறேன், வணக்கம்.
     
.:  வணக்கம்.
         
.:  வணக்கம்.
               

இப்போது நாம் கேட்ட உரையாடலிலிருந்து தமிழக வீழ்ச்சியின் முதன்மையான காரணிகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத் தேசிய ஒடுக்குமுறை ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் 1800 ஆண்டுகள் பழமையானது. அத் தேசிய உணர்ச்சியையும் எழுச்சியையும் வெளிவிசைகளும் உள்விசைகளும் திசைதிருப்பி மக்களை ஒருவரோடொருவர் மோதவிட்டுச் சிதைந்துவைத்திருக்கின்றன. அதே விசைகளும் மேலும் மேலும் புதுப்புது விசைகளும் அதே வகையான குழப்பங்களைப் புகுத்தியிருகிறார்கள். தேசியத்தின் மீது உண்மையான பரிவும் பற்றும் உள்ள சிலரும் தம் அறியாமையாலும் திசை மாறிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் கூடத் தங்களை அறியாமலே, தங்களுக்கு இயல்பான தெளிவையும் மீறி இக் குழப்பமூட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

            ஆனால் தமிழகம் என்றுமே தோற்றதில்லை. கடந்த 1800 ஆண்டுகளாக அது தன் அடையாளத்தையும் தேசிய ஓர்மையையும் கட்டிக்காத்துவந்துள்ளது. ஆனால் இன்று போல் அது தன் தேசியக் குறிக்கோளை ஐயந்திரிப்பின்றி வெளிப்படையாக அடையாளங்கண்டதில்லை. எனவே அத் தேசியக் குறிக்கோளை, அதற்கு உரிய கோட்பாட்டை வகுத்தும் அதனடிப்படையில் செயல்திட்டம் ஒன்றை வரையறுத்தும் அவற்றினடிப்படையில் இயக்கமொன்றைக் கட்டியும் எய்தும்  நாள் தொலைவிலில்லை.

0 மறுமொழிகள்: