4.4.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 42



30. காண வந்த காட்சியென்ன தோழர்களே!
கண்டுகொண்ட கோலமென்ன தோழர்ளே!
            இதோ நாம் நம் ஊருக்குள் வந்துவிட்டோம். அனைவரும் என் அறையில் இருக்கிறோம் பயணம் முடிந்து விட்டது. மன ஊர்திகளிலிருந்து இறங்குங்கள். நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுமுன் என்னென்ன பார்த்தோம், அவற்றின் பொருளென்ன என்று யாராவது கேட்டால் பகரம் சொல்லும் நிலையிருக்கிறீர்களா என்பதை எண்ணிப் பார்த்துக்கொள்வதற்கு நானும் உதவுகிறேன்.

            முதலாவதாக, நாற்கால் விலங்கிலிருந்து குரங்கு மாந்தனாக உயர்ந்தவன் தமிழனே! நெருப்பைக் கையாளத் தொடங்கியவனும் தமிழனே! எனவே வேள்வியின் வடிவில் நெருப்போம்பல் காணப்படும் இடங்கள் தமிழனுக்குப் புறம்பான நாகரிகங்கள் ஆகா. மனிதனின் அடிப்படை உணர்ச்சிகள், ஒன்றுக்கொன்று முரணான, தன்னைக் காத்தலும் தன் இனத்தைக் காத்தலும் ஆகிய உயிரச்சமும் காமமும்[1]. உயிரச்சத்தின் தூண்டலால் நாகரிகத்தில் ஒரு மேம்பாடு அடைந்ததும் அடுத்து ஆண் பெண் உறவுச் சிக்கல் தலை தூக்கியது. இவ்வாறு இரண்டும் மாறி மாறி நம் நாகரிகம் வளர்ந்துள்ளது. வரைமுறையற்ற புணர்ச்சியிலிருந்து தொடங்கி ஒருவனுக்கு ஒருத்தி என்னும் இன்றைய முறை வரை வந்துள்ளது.

தாய் என்ற ஒரு பெற்றோரை மட்டும் அறிந்திருந்த தொடக்க நிலையில் மலை உச்சியிலிருந்து கடற்கரை வரை 7 பெண்களின் வழிவந்த குக்குலங்கள் கலந்து, ஆனால் தத்தம் குக்குலத்துக்கு வெளியே உறவுகொள்ளாமல் வாழ்ந்து வந்தன. ஆனால் கடல் தந்த இடப்பெயர்ச்சி வாய்ப்பால் பிற பகுதிகளை விட வளர்ச்சியில் மேம்பட்டதால் வாழும் நிலம் சார்ந்த மண்ணின் மைந்தர்களைக் கொண்ட, குக்குலப் பிரிவுகளைக் கடந்த ஆட்சிப் பகுதியாக நெய்தல் நிலம் வெளிப்பட்டது. அந் நில அடையாளம் உருவாகக் காரணமான வருணனைத் தெய்வமாகக் கொண்டு அத் தெய்வப் பூசகர்கள் அந்நிலத்தை ஆண்டனர். தொடர்ந்து முறையே மருத, முல்லை, குறிஞ்சி நிலங்கள் இந்திரன், மாயோன், சேயோன் ஆகியோரைத் தெய்வமாகக் கொண்ட பூசகர்களின் ஆட்சியின் கீழ் வந்தன. எஞ்சிய பாலை நிலத்தின் தெய்வமாக தொடக்க கால தாய்த்தெய்வப் பூசகர்கள் ஆண்டனர்.   

            உணவு தேடும் வேளையில் போர்களும் அதன் விளைவாக உருவான பண்டமாற்றும் வாணிகமாக வளர்ந்து முதல் அரசுக்கு வித்திட்டது. உலகத்தின் முதன்முதல் அரசு முழுகிப் போன குமரிக் கண்டத்தில் தென்மதுரை எனப்படும் மாதுறையைத் தலைநகராகக் கொண்டு குமரி என்னும் பெண்ணால் தோற்றுவிக்கப்பட்டது. அவளது படிநிகராளியர் உலகமெல்லாம் குடியேறினர். உலகின் முதல் குடியேற்ற ஆட்சி தொடங்கியது. பாண்டியர் என இவள் மரபினர் வழங்கப்பட்டனர். பல்வேறு மக்கட் கூட்டங்களையும் ஒன்றிணைக்க மொழிக்கு முதல் இலக்கணம் காணப்பட்டது. அறிவியல் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட இப் புதிய மொழியால் செல்வாக்கிழந்தவர்கள் அரசுக்கு எதிர்ப்பை உருவாக்கினர்.

            இயற்கை ஆற்றல்களைப் பற்றிய அறிவின்மையால் மயக்கமடைந்து தடுமாறிய மக்களை வயப்படுத்தி மேலாளுமை செலுத்திய பூசகர்களின் செல்வாக்கிலிருந்து மக்களை மீட்க உலகில் முதன்முதல் மொழிக் கழகம் அமைக்கப்பட்டு மொழி வளர்க்கப்பட்டது. கணவன் மனைவியர் கூட்டுக் குடும்பங்களாக இருந்தமை மாறி ஆடவன் ஈட்டம் பெருகப் பெருக, தனிப் பெண்ணையும் தனி ஆடவனையும் கொண்ட குடும்பம் ஆண்பெண் உறவில் இறுதியாக அடைந்த முன்னேற்றம். வாணிகம் பெருகப் பெருக வெவ்வேறு பண்டங்களை விளைக்கும் பணிகள் தனித்தனியாகப் பிரிந்தன. அதே நோக்கத்துக்காக ஒரே தொழில் செய்வோர் குடும்பங்களுக்குள் மண உறவு கட்டுப்படுத்தப்பட்டது. முதன்முதல் சாதி என்ற தொழிலடிப்படையிலான பகுப்பு உருவானது.

            முதற் கடற்கோள் ஏற்பட்டதும் அரசு சிதைந்து வெளியார் தாக்குதலுக்கு நாடு ஆட்பட்டது. குடியேற்ற நாடுகள் விடுவித்துக் கொண்டன. தமிழக எல்லைக்குள் சேர, சோழ, பாண்டிய அரசுகள் தோன்றின. வேலின் துணைகொண்டு கடல் வாணிகம் மீண்டும் கைப்பற்றப்பட்டது. கடலுக்குத் தப்பியவர்கள் உலகின் நாலா புறமும் குடியேறிப் புதிய நாகரிகங்களை வளர்த்தனர். வடநாடு சென்றோர் அங்கும் புதிய அரசுகளை ஏற்படுத்த முனைந்து அங்கு ஏற்கனவே குமரிக் கண்டத்திலிருந்து குடியேறியிருந்தவர்களுடன் மோத, அதுவே இன்று ஆரியர் - திராவிடர் போர்ளாகக் காட்டப்படும் மோதல்கள் நிகழ்ந்தன. இரண்டாம் கடற்கோளுக்குப் பின் பாண்டிய அரசு வலுவிழந்தது. சோழ அரசு வேளாண்மையையும் அரசின் பொறுப்பின் கீழ்க் கொண்டுவந்தது இப்பொழுது அரசின் பணிகள் பன்முகப்பட்டுவிட்டதால் அரசனும் அவனைச் சார்ந்தோரும் மக்களிடமிருந்து விலகி உயர்ந்த இடத்தைப் பிடித்துக்கொண்டனர். வேத்தியல், பொதுவியல் என்ற பிரிவு தோன்றியது.

            இந்த மாற்றங்களுக்கிடையில் குமுகத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவால் பழைய பூசாரியரை மூலமாகக் கொண்டும் துறவியரைக் கொண்டும் அந்தணர் என்ற தொண்டர் வகுப்பு குமுகத்தில் எழுந்தது. கீழ் மட்டத்தில் மக்களையும் மன்னனையும் மகிழ்விக்கக் கூத்தர் என்ற வகுப்பு உருவானது. இப்போது அரசர், அந்தணர், வேளாளர், கூத்தர் என்ற நாற்பெரும் பிரிவுகளாகக் குமுகம் இயங்கியது. ஆயின் தமிழ்மொழிக்குப் புறம்பாக எதுவும் தலைதூக்க முடியவில்லை. யாரும் யாரையும் தாழ்த்தி வைக்கவில்லை. ஓரளவு சமமாகவே வாழ்ந்துவந்தனர்[2].

            இங்கே அரசர்க்கு மேலே தம் ஆட்சியை நிறுவப் பூசாரியர் கூட்டம் முயன்றதன் விளைவாகக் தென்காசியில் தேள் கொட்டினால் திருப்பதியில் நெறிகட்டிய கதையாக வட இந்தியாவில் சமற்கிருதம் வளர்ச்சியடைந்து நால் வண்ணத்தில் வண்ணத்துக்கொரு முறைமை வந்தது. இதற்கெதிர்ப்பாக அங்குச் அம்மணமும் புத்தமும் தோன்றின. விரட்டப்பட்ட பார்ப்பனியம் தெற்கே புகலிடம் தேடிக் காலூன்ற நினைத்தபோது இங்கும் அம்மணம் தோன்றி அதனை மடக்கியது. அன்றிலிருந்து இன்றுவரை பார்ப்பனியம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உயிர் காக்கக் கடும் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் உருவெளித் தோற்றம் தமிழ்நாட்டில் வெறும் மொழிப் போராட்டமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்ளுறையை அறியாதோர் இதனை மொழிப் பித்து என்று கருதிக் கடிந்துகொண்டிருக்கின்றனர்.

            அம்மணமோ தமிழக மக்களுக்கும் மூவேந்தர்களுக்கும் பகைமை மூட்ட வடக்கிலுள்ள அரசர்களின் ஒற்றமைப்பாகவே நுழைந்தது. தமிழர்களின் பண்டைப் பண்பாட்டின் அனைத்துக்கூறுகளையும் தடம் தெரியாமல் அழிப்பதை நோக்கமாகக் கொண்டே அது செயல்பட்டது.

புத்தமோ இலங்கைக் கயவாகுவின் ஒற்றர் படையாக உட்புகுந்து அவனுக்கு எதிராக சோழ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களைத் தூண்டி அழிம்பு வேலைகளை நிகழ்த்தி அதன் விளைவான பஞ்சத்தைப் பயன்படுத்தி மணிமேகலையைக் கொண்டு அரசனுக்கு எதிராக மக்களைத் தூண்டி இறுதியில் புகாரையே அழித்து அமைந்தது.           

            நாகம் அணிந்து, நெருப்பைக் கண்டு, குடும்ப அமைப்புக் கண்டு, கடல் கடந்து, நிலவை அறிந், பெரும் பொழுது(மழைக்காலம்) கண்டு, சூலம் கண்டு, ரவுரி கண்டு, தோலுரி கண்டு, உடுக்கை கண்டு, குளம் கண்டு, வேல் கண்டு, கோடரி கண்டு, சாத்தமைத்து, ஏர் கண்டு, எருது பற்றி, யானை பற்றி, துறவு கண்டு, அகம் - புறம் வகுத்து, வேம்பு கண்டு, காட்டெருமை வென்று, ஆனைந்து கண்டு அருஞ்செயல் ஆற்றிய ஆணும் பெண்ணுமாகியோர் ஒன்றும் பலவுமான தெய்வமாயினர். துறவு கண்டோரும் அகம் - புறம் வகுத்தோரும் முழுமுதற் கடவுள் கொள்கைக்கு வித்திட்டனர்.

            துறவு தோன்றியதன் விளைவே அகத்தியல் தோற்றம். இப்படிப் பார்த்தால் அகத்தியல் தவிர தமிழ் நாகரிகத்தில் பிற நாகரிகங்களைவிட உயர்ந்த கூறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லையே என்கிறீர்களா? ஏன் இல்லை? உண்டு. முதலாவதாக உலகின் மிகப் பெரிய நாகரிகங்கள் எனப்படுவற்றிலெல்லாம் ஆள்வோருக்கு ஒரு சட்டம் அடிமைகளுக்கு ஒரு சட்டம் என்று இருந்தது. குமரிக் கண்டத்தில் பூசகர்களின் மேலாளுமை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு ஊர்க் கோயில்கள் வரையில் ஊர்த் தலைவனுக்குப் பூசகன் கட்டுப்பட்டவனானான். அதன் தடயத்தை இன்றும் கூட தென் மாவட்ட ஊர்க் கோயில்களில் காண முடியும். ஆனால் இரண்டாம் கடற்கோளுக்குப் பின் இன்றைய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் நுழைந்த போது அவர்களை 13 நூற்றாண்டு காலம் எதிர்த்து தாக்குப்பிடித்து நின்ற பறையர்கள் இறுதியாக ஒடுக்கப்பட்ட நாளிலிருந்து சாதிய ஒடுக்குமுறைக்கான வரையறைகளை வகுத்து தமிழகம் தன்னை உலக அளவில் எங்குமில்லாத பள்ளத்தில் தள்ளிக்கொண்டது. உலகில் வேறெங்கேயும் விட மிக இழிந்ததான வண்ணச் சட்டம் மனுவால் இயற்றப்பட்டது. பிற இடங்களில் போரில் தலைப்பட்டோர் அடிமைகளாக்கப்பட இங்கு தன்னாட்டு மக்களே மிக இழிவாக அடிமைகளாக்கப்பட்டனர். மனுச் சட்டம் போன்று மாந்தக் குலத்துக்கு இழிவுதரும் ஒரு சட்டத்தை உலக வரலாற்றில் எங்குமே காண முடியாது.

            மனிதச் சிந்தனைகளில் சிறந்தவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாகப் போற்றப்படும் திருக்குறள் கூட சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றும் பார்ப்பான்தன் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்றும் தொழிலாலும் பிறப்பாலும் உயர்வு தாழ்வை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தமிழர்களின் குருதியில் சாதி கலந்துவிட்டது. இந்தக் கேட்டை இனங்கண்டு முதன்முதல் குரல் கொடுத்தவராக திருமூலர் உயர்ந்து நிற்கிறார்.

            அண்மை நூற்றாண்டுகளில் தம் சாதியின் இழிநிலையைப் போக்கவென்று களம் கண்ட இன்றைய குமரி மாவட்டத்தில் தோன்றிய அய்யா வைகுண்டர் எனப்படும் முத்துக்குட்டி அடிகளும் தன் சாதியின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இறங்கிய வள்ளலார் ஆகிய இராமலிங்கரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்டி வழங்கி அவர்களை இரப்பாளி ஆக்கும் உத்தியையே கையாண்டனர். அதேவேளை அவர்களுக்குப் பின்னர் கேரளத்தில் தோன்றிய நாராயணகுரு தன் சாதி மக்களுக்குக் கல்வியளிக்கத் தேவையான அடிப்படைகளை இட்டுச் சென்றார். அது அம் மக்களை உயர்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. இதில் குருவின் மாணவரான குமரன் ஆசானின் பணி அளப்பரியது. இங்கோ இத் தலைவர்களுக்கு வாய்த்த மாணவர்கள் தம் ஆசான்கள் முன்வைத்த செயல்திட்டத்தைப் பயன்படுத்தித் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கின்றனர். இவ்வாறு தமிழர்களுக்கிடையில் உருவாக்கப்பட்ட இரப்பாளி மனப்பான்மையைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தில் தரகு பெறுவதை முதன்மை நோக்கமாகவும் வாக்கு வங்கியை வலுப்படுத்திக்கொள்ளவும் இலவயம் என்று வழங்குபவற்றுக்குக் கையேந்தும் நிலைக்குத் தாழ்த்தி வைத்துள்ளனர்.

            ஆக, தமிழர்களின் குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட சாதியத்தையும் இரப்பாளி மனப்பான்மையையும் வடிகட்டி வெளியேற்றும் மிகக் கடினமான பணி நம் முன் காத்திருக்கிறது.    

            அடுத்தது பெண்ணுரிமை. மனுச் சட்டத்தின்படி ஒரு பெண்ணை எந்த ஆடவனும், பெண் விரும்பினாலும் விரும்பாவிடினும், அவள் கணவன் உடன்பட்டால் கூடலாம். அதே நேரத்தில் அவள் உடன்பட்டாலும் கணவன் உடன்படவில்லையானால் கூடிய ஆடவன் தண்டனையடைவான். பெண் ஓர் ஆடவனின் வெறும் சொத்தென்பதே இதன் பொருள். ஆனால் தமிழருக்கு இதைக் கேட்டாலே குமட்டும். இது போன்ற எண்ணமோ நிலையோ தமிழரிடையே என்றும் இருந்ததில்லை. மாறாகச் சிலப்பதிகாரம் கூறகிறபடிப் பார்த்தால், கோவலனைக் கண்ணகி தன் சொத்தாகவே கருதுகிறாள். தேவந்தி சுனையாடியும் தெய்வமேத்தியும் கணவனைத் திரும்பியழைக்கக் கேட்கும் போது பீடன்று எனவிருந்தாள் என்பது பலருக்குப் புதிராகவே இருந்தது. ஆயின் வேனிற்காதையில் கோவலன் தன்னைப் பிரிந்துசெல்ல நினைத்தபோதெல்லாம் மாதவி அவனைத் திரும்பப் பெற மேற்கொண்ட அரும்பெரும் முயற்சிகளை எல்லாம் கூறுவதன் வாயிலாகப் பேதைப் பெண் அவளிடமிருந்து நானாகக் கோவலனைப் பறிப்பது பீடன்று என்று கூறியதாகவே தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இளங்கோவடிகள் கோவலனைக் கண்ணகியின் ஓர் உடைமைப் பொருளாக்கிவிட்டார்.

            பெண்டிர்க்கு வீடுபேறு (அகத் தளையிலிருந்து விடுதலை) இல்லை என்கிறது மனுச் சட்டம். அதனை வேறுவிதமாக, பெண்களுக்குத் துறக்கமில்லை; துறவு பூண்ட கணவனுக்குப் பணிவிடை செய்து அதன் பயனாய் ஆணாகப் பிறந்து பின்னர்தான் துறக்கம் புக முடியும் என்று கூறுவர். அதாவது பெண்ணாகத் துறக்கம் புகமுடியாது. தந்தை கணவன், மைந்தன் இவர்கள் கட்டுக்குள்தான் பெண் இருக்க வேண்டும் என்றும் கூறும். இந்தக் கட்டுக்குள்ளிருந்து விடுபட முடியாது என்பதைத்தான் வீடுபேறு இல்லை என்றனரோ. ஆனால் தமிழர்களோ பெண் புறவாழ்விலும் ஈடுபடலாம் என்றும் துறக்கம் புகலாம் என்றும் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதைக் கண்ணகிக்கு வீரர்களுக்குரிய காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் என்ற நான்கு துறைகளையும் பாடியும் அவள் துறக்கம் புகுந்ததைக் காட்டியும் நிறுவியிருக்கிறார். இந்த இரண்டுமே தமிழர்களை எந்த நாகரித்தாரும் இன்றுகூட எட்டியிராத உயரத்துக்கு கொண்டு செல்லப் போதுமானவை.

            ஆனால் இவற்றைக் கூட இளங்கோவடிகளின் கனவுகள் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று கூட கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தவே ஊடகங்கள் முனைந்து நிற்கின்றன. அவற்றையும் மீறி இன்று உருவாகியுள்ள பருப்பொருள் சூழல்களைத் தவிர்க்க முடியாமல் பெண்களின் சுமைகள் ஆடவர்களால் பங்கிடப்படும் சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது.

            எனவே ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடும். தமிழர்களில் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையில் மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மணம் ஆகியவை, பெண்களுக்கு முன்னுரிமையுடன் வழக்கத்தில் உள்ளன. ஆனால் இன்று இவ் வகுப்பார்களில் ஆண்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உடலுழைப்பிலிருந்து விடுபட்டு ஒட்டுண்ணிப் பணிகளில் அமர்ந்துவிட்ட நிலையில் அங்கு பெண்கள் இவ் வுரிமைகளைக் கைவிட்டுவருகின்றனர். பெண்களும் அத்தகைய உயர் வருமானம் தரும் பணிகளில் அமர்ந்துவிட்ட நிலையில் அங்கு மணவிலக்கு மறுமண நடவடிக்கைகள் ஈடுபடுகின்றனர். ஆக ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு தமிழர்களில் பெரும்பாலானோர்க்கு உரியதல்ல.

            தமிழர்களிடம் சாதியும் இருந்ததில்லை, வேள்வி தமிழர்களிடம் இருந்ததில்லை, வேள்வி தமிழர் பண்பாட்டுக்குப் புறம்பானது என்று கூறி வரலாற்றிலம் அறிவியல் – தொழில்நுட்ப உருவாக்கங்களில் நமக்குரிய இடத்தையும் மக்களையும் இழக்கக் கூடாது என்று நாமெல்லாரும் தமிழ்ப் பற்றாளர்களைக் கேட்டுக்கொள்வோம். இன்றைய கருத்துகளை அளவுக்கோலாகக் கொண்டு முன்னாள் மரபுகளை அளந்து பார்ப்பது எப்படியிருக்கும் என்பதை ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் விளக்குகிறேன். அமெரிக்காவுக்கு வருகைபுரிந்த வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தாராம். ஒரு பள்ளிச் சிறுவனைப் பார்த்து, உங்கள் நாட்டில் பிறந்த பெரிய மனிதர்கள் யார் யார்? என்று கேட்டாராம். சிறுவன் கூறினானாம்: எங்கள் நாட்டில் குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன; பெரியவர்கள் பிறந்ததில்லை என்று. அதைப் போல்தான் நாகரிகத்தின் குழவிப் பருவத்தில் நடந்தவற்றை ஏற்றுக்கொள்வதில் இழுக்கொன்றுமில்லை.

            இந்தியாவை சிறப்பாகக் தமிழகத்தைப் பொறுத்த வரையில் மொழியானது கருத்துகளைத் தெரிவிக்கும் வெறும் கருவியல்ல; மாறாக ஓர் உரிமைப் படை, தொழிலடிப்படையில் அமைந்த சாதிகளைக் கொண்டு பார்த்தால் பார்ப்பனர்கள் பல சாதியரையும் விடச் சிறுபான்மையரே. ஆயின் பிற சாதியரெல்லாம் மொழிகளால் பிரிந்திருக்கவும் ஒவ்வொரு மொழியும் சமற்கிருத்ததால் அடிமைப்படுத்தப்பட்டிருக்கவும், சமற்கிருதத்தால் பிணைக்கப்பட்ட பார்ப்பனர்கள் எல்லாச் சாதியரைவிடவும் இன்று பெரும்பான்மையராகிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் மக்கள் பல சாதியராகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் சமற்கிருதத்தை விலக்கி நிற்கும் தமிழால் ஒன்றுபட்டிருப்பதால் பார்ப்பனர் இங்கே ஆட்சி செலுத்த முடியவில்லை. அவ்வப்போது சமற்கிருத்தத்தின் கை ஓங்கினாலும் இறுதியில் தமிழ் தன்னை மீட்டுக்கொண்டுள்ளதை வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளது. இது மொழியைச் சமற்கிரும் மட்டுமல்ல ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளின் ஊடுருவலிலிருந்து காப்பது எவ்வளவு முகாமையானதென்பதற்கு எதிர்காலத்துக்கு ஒரு பாடமாகும்.

            அதே வேளையில் சமற்கிருதம் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு குழூஉக்குறி மொழி என்பதை மனதில் வாங்கி உழைக்கும், படைக்கும் மக்கள் உருவாக்கிய அறிவியல் - தொழில்நுட்பப் படைப்புகளைத் திருடி சமற்கிருதத்தில் ஒட்டுண்ணிகள் மறைத்திருப்பவற்றை மீட்க வேண்டியது நம்முடைய மிகப்பெரும் பணி. அவ்வாறே தொன்மங்களில் புதைந்து கிடக்கும் நம் பண்டை வரலாற்றையும். இந்தத் திருட்டில் எந்தத் தொழிலிலும் ஈடுபட்டறியாத இந்த ஒட்டுண்ணிக் கூட்டம் தங்களது இயல்பான அறியாமையால் தப்பும் தவறுமாக மொழிபெயர்த்து வைத்திருப்பவற்றை இனம்கண்டு உண்மையான மூலச் செய்தியைத் தோண்டி எடுப்பது மிகக் கடினமான பணி.

            ஒவ்வொரு நாடும் தனக்குரிய முரண்படும் வகுப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அன்றும் இன்றும் இருக்கின்ற வகுப்புகள் யாவை? முன்பு பார்ப்பனர், அவர்கெதிரான அம்மண புத்தர்கள், அரசரும் வாணிகரும், மக்கள் என நான்கு முரண்பட்ட வகுப்புகள் இருந்தன. அவற்றில் பார்ப்பனர், பிற மதத்தினர் ஆகிய இரண்டு வகுப்புகளும் காலத்திற்கேற்ப பிற இரண்டு வகுப்புகளில் ஒன்றையோ இரண்டையோ சேர்த்துக் கொண்டு தம்முள் போரிட்டுக்கொண்டனர். முதலில் வடக்கிலும் பின்னர் தெற்கிலும் அம்மண, புத்த மதங்கள் மறைந்தன. வடக்கில் இன்ப வெறுப்பு மதங்களாகிய அவை இன்பச் சுவைக் கதைகளையும் ஆண் பெண் கலந்துறவாடும் விழாக்களையும் கொண்டும் அம் மதக் கூறுகளைத் தம்முட்கொண்டும் முறியடிக்கப்பட்டன. தெற்கே உள்நாட்டு வாணிகர்களின் தலைமையில் உருவான மொழிப்போர்க் காரணத்தால் அழிந்தன.

            பின்னர் பார்ப்பனர், ஆட்சியாளர், செல்வர், மக்கள் என நான்கு முரண்பட்ட வகுப்புகள் எஞ்சின. இவை ஒன்றொக்கொன்று மாறி மாறி அணி சேர்த்து வந்திருக்கின்றன. இது இன்றும் தொடர்கிறது.

Image result for வ.உ.சி            பார்ப்பனியம் என்பது பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல, உழைப்பு மட்டுமல்ல, பண்ட விளைப்பையும் பணித்துறைகளையும் ஆற்றுப் படுத்தும் சிறு முதலாளியர், விளைந்தவற்றை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வாணிகர்கள் என்ற மனித வாழ்வின் கையும் காலும் உடலும் நரம்பும் சதையும் ஆன, மக்களின் மிகப் பெரும்பான்மையரை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்திருக்கும் ஆளும் கூட்டத்தின் திமிர்தான் பார்ப்பனியம். அதிலும், வெளியிலிருந்து இந்த நாட்டைக் கைப்பற்றிய ஆங்கிலருக்கு மக்களை எல்லாம் அடிமைகளாக நடத்துவதற்கு நம்மிடமிருந்தே பொறுக்கி எடுத்த அரசூழியர் கும்பலுக்கு, மக்களுக்கு விடை சொல்லவேண்டிய கடப்பாடு இல்லாத நிலை நமக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் விடுதலையின் பின்னும் தொடர்வதால் இந்தக் கூட்டத்திடம்தான் உண்மையான பார்ப்பனியம் குடிகொண்டிருக்கிறது.   

            மக்களுக்கு உண்மையான விடுதலை வேண்டும். அதற்கு முதற்படியாக மக்களுக்குப் பொருளியல் உரிமைகள் வேண்டும். தங்கள் மூலதனத்தில் தங்கள் மண்ணில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு தாங்கள் வகுக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டும் பண்டங்களையும் பணிகளையும் முடித்துக்கொள்ளும் உரிமை வேண்டும். இன்று வல்லரசியத்தின் தலைமையில் இருக்கும் அமெரிக்கா நினைத்தால் உருசியா போன்ற வலிய நாட்டையும் பொருளியல் தடை என்று மிரட்ட முடிகிறது. ஏற்றுமதி – இறக்குமதி அடிப்படையில் அமைந்த இன்றைய உலகப் பொருளியல் கட்டமைப்பில் இது வலிமை மிக்க ஆயுதமாக இருக்கிறது.

            சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டு உலகப் போர்களின் முடிவில் பொருளியலிலும் படை வலிமையிலும் தன்னிகரற்றதாக வெளிப்பட்ட அமெரிக்காவும் அதறகடுத்த உருசியாவும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெயருக்கு அரசியல் “விடுதலை” பெற்ற நாடுகள் தங்கள் சொந்த வளங்களிலிருந்து தங்கள் பொருளியல்களை அமைத்துக்கொள்வதைத் தடுத்து உலக வங்கி, அனைத்துலகப் பணப்பண்டு ஆகியவற்றின் மூலம் தேவையற்ற ஏற்றுமதி இறக்குமதிகளைச்  செய்யவைத்து உலகின் மீளப்பெற முடியா எரிபொருள்களையும் இயற்கை வளங்களையும் அழித்து வருகின்றன. இன்று வலிமை குன்றிவிட்ட உருசியாவின் மீதே பொருளியல் தடைகளை விதிக்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

            ஏழை நாடுகளின் மிகப் பெரும்பான்மை மக்களில் உயர்படிப்புப் படித்தோரும் படியாதாரும் பணக்கார நாட்டவர்க்கு தங்கள் நாடுகளிலிருந்துகொண்டும் சட்டப்படியும் சட்டத்துக்குப் புறம்பாகவும் பணக்கார நாடுகளுக்குச் சென்றும் அடிமை செய்கின்றனர். ஏற்றுமதிக்கென்று பண்டம் விளைக்கும் தொழில்களில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவற்றை இறக்குமதி செய்வோருக்கு அடிமைத் தொழில் செய்வோர்தாமே. அதற்கு ஏழைநாடுகளின் ஆட்சியாளருக்குக் கைக்கூலி கொடுத்தும் பல்வேறு வகை மிரட்டல் உத்திகளாலும் அந் நாடுகளின் நாணய மதிப்பைக் குறைக்கின்றன. இதன் விளைவாக அம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பண்டங்கள் பறிபோவதோடு அவற்றை கொள்ளை மலிவாக பணக்கார நாட்டு மக்களால் பெற முடிகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு பணக்கார நாட்டினர் வீசியெறிந்துவிடும் தரமான பொருட்களை இங்கிருந்து பிழைக்கச் செல்வோர் பொறுக்கிப் பயன்படுத்துகின்றனர்.

            இந்தப் புத்தன் அடிமைத்தனத்திலிருந்து ஏழை நாடுகளின் மக்கள் போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. உலகின் பணக்கார நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் வெட்டவெளிக்கு வந்துவிட்ட இன்றுதான் இந்தப் போராட்டத்தைத் தொடங்க மிகப் பொருத்தமான நேரம்.

            வல்லரசியர்களின் கண்கண்ட தெய்வமான மோகன்தாசு கரம்சந்து காந்தி காட்டிய வழியில் மென்முறையில் அடிமை நாடுகளுக்கு “விடுதலை” வழங்கிய வல்லரசுகள் அந் நாடுகளின் வெவ்வேறு தேசிய மக்கள் காலங்காலமாக தமக்குள் குடுமிபிடிச் சண்டையில் ஈடுபட்டு தங்களின் கொள்ளைகளிருந்து அவர்களின் கவனம் திரும்பும் வகையில் விட்டுச்சென்றனர். எடுத்துக்காட்டாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா இன்று மீண்டும் மீண்டும் “மனித உரிமை மீறல்” குற்றச்சாட்டுத் தீர்மானங்களை முன் வைத்து பின்னர் அதுவே அவற்றை நீர்த்துப் போகச் செய்வதன் பின்னணியில் நடப்பதென்ன? குற்றவாளிகளான இந்திய, இலங்கை ஆட்சியாளர்களை மிரட்டித் தங்கள் வாணிகம் சார்ந்த, மூலப்பொருள் சார்ந்த, நாணய மதிப்பு சார்ந்த நலன்களைப் பெறுவதுதானே!

            எனவே ஏழை நாடுகளின் ஆட்சியாளர்களின் கீழ் நசுக்குண்டு கிடக்கும் பல்வேறு தேசிய மக்களும் மேலே கூறிய தற்சார்புப் பொருளியல் அடிப்படையிலான பொருளியல் விடுதலைக்கான போராட்டத்தை உடனே தொடங்க வேண்டும்.

            மொழி வளர வேண்டுமாயின் அம்மொழி பேசும் மக்கள் சொந்தத் தொழில்நுட்பங்களை வளர்க்க வேண்டும். மொழிபெயர்த்து மொழியைப் பேண வேண்டுமானால் ஏற்றுமதி சாராததாக, அயலவருக்கு எவ்வகையிலும் அடிமை செய்யத் தேவையில்லாத பொருளியல் கட்டமைப்பைப் பெற்றதாக அம் மொழியைப் பேசும் மக்களின் நாடு இருக்க வேண்டும். அதாவது ஒரு மொழியைப் பேசும் உயிரியாகிய மனிதன் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாக அம் மொழி விளங்கும் அரசியல் – பொருளியல் சூழல் இருக்க வேண்டும். அதை விட்டு இன்றைய சூழலில் தவிர்க்க முடியததாகிவிட்ட பிற மொழி அறிவை நாடிச் செல்லும் தமிழக மக்களைக் குறை சொல்வோரின் நாணயம் கேள்விக்கிடமானது, ஏனென்றால் இவர்கள் அனைவரின் மக்களும் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பதைத் தடுக்க விரும்புகிறார்களோ இல்லையோ தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் பிள்ளைகள் பணியாற்றும் பணக்கார நாடுகளுக்குத் தாங்கள் சென்றுவந்ததைப் பெருமையாகக் கருதுபவர்கள் என்பதும் உண்மை.

எனவே தமிழகத்தின் பொருளியல் விடுதலைக்குப் பாடுபடுவோம்! அதன் மூலம் தமிழ் மொழி தழைத்து வளர்வதற்கான நிலத்தைப் பண்படுத்துவோம்! அதற்கான போராட்டத்தில் மீண்டும் ஒன்றுகூடுவோம். இப்போதைக்கு வணக்கம்!


[1]     மனிதனாயினும் சரி விலங்காயினும் சரி புணர்ச்சியிலீடுபட்டிருக்கும் போது அவர்கள் தற்காப்புணர்வை இழக்கின்றர். அவ் வேளைகளில் அவர்களைக் கொல்வது எளிது. அதனால்தான் உயிர்ப் பன்மையத்தைக் காக்கும் நோக்கில் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விலங்குகளை வேட்டையாடத் தடை இருந்ததென்ற உண்மை புணர்ச்சியிலிருந்த மானைக் கொன்ற பாண்டு பெற்ற சாவத்தை இடும் முனிவர் வாயிலிருந்து வெளிப்படுகிறது. 13 அகவைக்கு உட்பட்டவர் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனை கிடையாது என்ற விதி ஆணிமாண்டவியர் வரலாற்றிலிருந்து வெளிப்படுகிறது (நளாயினி, தருமர் ஆகியோரின் கதைகள்). நம் பண்டை மரபில் இருந்த இது போன்ற பல அடிப்படை விதிகள் மகாபாரதத்தின் மூலம் வெளிப்படுகின்றன. மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கும் போர் குமரிக் கண்டத்தில் நடைபெற்றவற்றைத் தழுவியதே என்பது திரு.வெள்உவனோடு நான் இணைந்து எழுதிய பெருஞ்சோற்று உதியஞ்சேரல் என்ற கட்டுரையில் காணலாம். பார்க்க, இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல்.   
[2]     சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதையிலும் இந்திரவிழவூரெடுத்த காதையிலும் வருண பூதங்களை வழிபட்ட பின்னரே நிகழ்ச்சிகள் தொடங்குவதைக் காணலாம்.
23. குமுகியல் வித்தகர்களன்றோ நாம் - 11

0 மறுமொழிகள்: